விவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எதிர்கொள்ளலும் எதிர்கொல்லுதலும்.

வேளச்சேரி சம்பவம் குறித்து தோழர் அ. மார்க்ஸ், எம்.டி.எம், ஜெயமோகன் மற்றும் பல பதிவர்களும் முகநூலர்களும் எழுதி உள்ளனர். தமிழின் முக்கிய எழுத்தாளராக கருதப்படும் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய   (தமிழ் சினிமாக்களில் சிலர் கேள்வி கேட்டால் ஒரு பாட்டையே பாடி முடிப்பார்கள். குறிப்பாக டி ராஜேந்தர் படங்களில் இத்தகைய பாடல்கள் உண்டு.) கட்டுரைக்கு நண்பர் ராஜன்குறை டேக்-1, டேக்-2 மற்றும் டேக்-3 என்று தொடராக ஒரு மறுப்பு எழுதி உள்ளார். அம்மறுப்பை ஒட்டி எனக்கு ஏற்பட்ட சில கருத்துக்களை பகிரவே இப்பதிவு.

இலக்கியவாதி என்கிற எழுத்தாளன் எப்படி கொம்பு முளைத்த சாமியராக இருக்கிறான் என்றும், அவனை கொம்பு முளைக்காமல் திரியும் ஆட்டுக்கிடா களப்பணியாளர்கள், விமர்சகர்களிடம் ஒப்பிட்டு எப்படி நீ கேட்கப்போச்சு இந்த கேள்விய என்று ஒரு பெரிய பாட்டு பாடி உள்ளார் ஜெயமோகன். நான் இலக்கியவாதி அரசியலைக்கூட இலக்கியம் வழியாகத்தான் பேசுவேன் என்று கூறிவிட்டு அத்தோடு அடுத்து இந்த உண்மை என் மனசாட்சிய உறுத்தியவுடன் படைப்பாக உள்ளே கருவுற்று பிள்ளையாக பிறந்து பதிவில் தவழ்நது பின் அச்சில் அரங்கேறி வரும் அப்போ பார் என்று கூறி கட்டுரையை முடிப்பதே சரி. அதன் பிறகு கதை ஒன்று நீளமாக எதற்கு? எல்லாம் ஏகாம்பரேஸ்வரர் பலன்தான். என்ன இருந்தாலும் என்னை எப்படி எல்லாம் திட்டுவார்கள் பார் என் ரசிகனே என்று முன்னுணர்வுடன் தனது இலக்கிய ஆளுமையை நிலைநாட்டியிருப்பதுதான் முக்கியமான தொழில் ரகசியம். அதனால் நான் அதிகம் எழுதினாலும் அந்த “எலிப்பொறி” வாக்கியத்திற்குள் சிக்கி சின்னாபின்னமாகிவிடுவேன். எங்க எழுத்தாளர் “வசைபாடிகள்“ என்று முன்பே உன்னை சொல்லிவிட்டார் என்று ”துதிபாடிகள்” கூறிவிட்டால். எதற்கு வம்பு?

பன்முகப்பார்வை என்றால் மூன்று மறுபக்கத்தை (பாலுமகேந்திராவின் மறுபக்கத்தை மூன்றுமறை பார்ப்பதல்ல) பார்த்துவிட்டு பிறகு முதல் பக்கத்தை பார்ப்பதுதான் போலிருக்கிறது. ஒற்றைதிசைவழியில் ஒடுங்கித் திரியும் அற்ப களப்பணியாள அரசியல் விமர்சகளுக்கு எப்படி தெரியும். எண்திசைகளில் ஒரே வீச்சில் பார்த்து ஒரே வெட்டில் வீழ்த்தும் இலக்கிய பிரம்மரகசியம்.

ஜெயமோகன் அவர்கள் இப்படி முடிக்கிறார் ”இலக்கியத்தில் முழுமையான தர்க்கங்களுடன், உணர்ச்சிக் கூர்மையுடன் சொல்லப்பட்ட விஷயங்களையேகூட நம்முடைய பொத்தாம்பொது வாசகர்கள் அவர்கள் ஏற்கனவே பேசிக்கொண்டிருக்கும் ஒற்றைப்படை அரசியலை நோக்கி இழுத்துச்சென்று மடத்தனமாக விவாதிப்பதே இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.” உண்மையில் பொத்தாம் பொதவான வாசகர்கள் என்ன பேசுகிறார்கள் என்றால் ”திருடினார்கள் கொன்றார்கள். இப்படி கொன்றால்தான் புத்திவரும். இது ஒரு பாடமாகட்டும்” என்று திருவிளையாடல் சிவாஜி போன்றும் ஜெயமோகனின் இக்கட்டுரைப்போன்றும் வசனம் பேசித் திரிகிறார்கள். இந்த என்கவுண்டர் கொலையில் மத்தியதரவர்க்க மனோபாவத்தை அப்படியே பிரதிபலிக்கும் பன்முகப்பார்வையில் உண்மையின் ஒளிக்கீற்றை காணமுயலும் ஜெயமோகனின் முரண் இதுதான். பொதுக்கருத்தை இப்படி இலக்கிய தத்துவ உலகப்பின்புலத்தில் பட்டை தீட்டித் தருகிறார். அதனால் பொதுபுத்திக்கு தத்துவம் கிடைத்த குஷியில் ஆளாய் பறக்கிறார்கள் “ஆபத்பாந்தவர்களாக” அவரது ரசிகசிகமணிகள். இடைக்கிடையே இலக்கியவாதி பொதுபுத்தியில் உள்ளதை பேசுபவன் அல்ல என்றும் கூறிக்கொள்கிறார். என்னே இந்த முரண்? எல்லாம் இவரிடம் மோச்சமடைந்த அந்த மாடன்களுக்கே வெளிச்சம்.

ஜெயமோகன் அவர்களின் இப்பதில் வழக்கம்போல் கொஞ்சம் விமர்சனம், கொஞ்சம் வசை, கொஞ்சம் கதைகள்,  கொஞ்சம் தத்துவ பிழியல், நிறைய அறவொழுக்கம், நேரடியான அரசு ஆதரவு, நிறைய இலக்கியம், ரஷ்ய செவ்வியல் இலக்கியங்களின் அறப்பார்வை அடியோட்டமாக வெளித்தெறியாமல் துக்குனியோண்டு, அப்புறம் சுயம்புவான அனுபவம் இப்படி போகிறது. போகிறபோக்கில் ”மாநிலங்கள் தனி நாடுகளாகவே செயல்படும் இந்தியாவில்” என்ற பெரும் வருத்தம். ஒற்றை இந்தியாவை தத்துவ முடிச்சிக்கயிற்றால் கட்ட முடியாமல் போனதின் வருத்தம் போலிருக்கிறது. கட்டுரையில் ”அதாவது பிகாரி கொள்ளையர்களை தண்டிக்கவேண்டுமென்றால் சுட்டுக்கொலைசெய்யவேண்டும், வேறு எதுவுமே நடைமுறையில் சாத்தியமல்ல. இதுவே யதார்த்தம்”  என்ற உண்மையை இடையில் ஒரு பாராவில் சொல்லிவிட்டு இறுதி பாராவில் இலக்கிய நுண்ணர்வு வழியாக இனிதான் உண்மையை கண்டுபிடிப்பாராம். பார்ரா அநியாயத்த… சரி காத்திருப்போம் அந்த பேருண்மைக்காக. நிற்க.

ராஜன்குறை ”ஐயம் வலுப்பெற, வலுப்பெற சுட்டுக்கொன்றுவிட்டார்கள் என்ற அனுமானம் பிரத்யட்சமாகவே கருதப் படுகிறது.”  என்று தனது டேக்-3 ல் ஜெயமோகனை விமர்சித்து எழுதி உள்ளார். இந்த வாக்கியம் தர்க்கமுரணாக உள்ளது. கொன்றது பிரதட்சயம். சந்தேகம் அனுமானம் ஆகாது. அனுமானம் என்பதில் ஓரளவு தர்க்கவிதிமுறைகள் உள்ளது. புகை நெருப்பை அனுமானிக்க உதவும். அதனால் அனுமானம் ஒரு குறைந்தபட்ச உண்மைமேல் எழுப்பப்படுவது. இது சந்தேகம் மட்டுமே. சந்தேகம் உள்நோக்கம் கொண்டது. அனுமானத்தை திசைவழிப்படுத்துவது. எந்த அடிப்படைகளுமற்ற, அல்லது ஆதாரங்களை ஆராயாதா? அல்லது தர்க்க அடிப்படியில் அனுமானித்துக் கொள்ளாத சந்தேகம் மட்டுமே இச்சம்பவத்தின் அடிப்படை. ஒருவேளை ஜெயமோகனைப் போன்ற தத்துவநடைப் பகடியா இது. இல்லை வாக்கியத்தை நான்தான் தவறாக வாசிக்கிறேனா? எனது டிகோடர் (சிதைச்சங்கேதி) பிரச்சனையாக இருக்கலாம். போகட்டும்.

இந்திய தத்துவ சிந்தனையில் உள்ள அனுமானம், பிரதட்சயம், பிரமாணம் என்பதில் பிரமாணத்திற்கு பதிலாக தர்க்கம் என்பதை இணைத்து உள்ளார் ராஜன்குறை. தர்க்கம் என்பது சிந்தனையாக மற செய்யப்படும் தர்க்கித்தலே ஆகும். அதைதான் ஜெயமோகன் கட்டுரை தனது உள்முரண்களுடன் தர்க்கித்து  “உரிமையா? திருட்டா“ என்று எண்கவுண்டர் கொலைகளுக்கான ஆப்தவாக்கிய பிரமாணங்களை உருவாக்கி தள்ளுகிறது பேருண்மைகளாக. அனுமானத்தின் (அல்லது சந்தேகத்தின்) பேரில் நடந்த பிரதட்சயக் கொலைகளுக்கான பிரமாண (ஆப்தவாக்கிய) தயாரிப்பே அக்கட்டுரை. இலக்கிய எந்திரங்கள் தான் நம்பும் ”அற”வழிநின்று இயங்கத் துவங்கினால், விளைபொருள்கள் இப்படித்தான் ”திட்டு திட்டா”க வந்து விழும். தினவாழ்வின் ஒழுக்க நியதிகளை (மாரல்ஸ்) மானுட அறமாக (எத்திக்ஸ்) கருதிக்கொள்வதின் விளைவு இது. (எம்டிஎம் இது குறித்த குறிப்பு ஒன்றை தருகிறார் இங்கு.) திருட்டு தினவாழ்வு சார்ந்த சமூகப்பிரச்சனை. அதனை மானுட அறமாக மாற்றி பேசுவதினால் ஏற்படும் மயக்கமே இது. மனித உயிரும் உடலும் இயற்கையாக அன்றி செயற்கையாக கொல்லப்படுவது அறம் சார்ந்த பிரச்சனை. ஒழுக்க விதிகளை அறவிதிகளாக மாற்றி வைத்து, கொலை என்கிற அறமற்ற செயலை அறமாக முன்வைக்கிறது அதிகாரமும் அதன் அடிதாங்கிகளும். ஒழுக்கம் என்பது சமூகத்தின் சட்ட நடத்தை விதிகள்பாற்பட்டது. அறத்தை அப்படி சமூக சட்ட நடத்தை விதியாக சுருக்கிவிட முடியாது.

திருட்டு என்பது குறித்து சரியா தவறா? எதற்காக எந்த நோக்கத்தில் செய்யப்படுகிறது என்றெல்லாம் பல கேள்விகள் உள்ளன. வங்கிகளின் பணத்தை கோடிகளில் பெற்று பங்குசந்தையி்ல் விட்டு பலகோடிகள் லாபம் பண்ணும் பெருவணிக நிறுவனங்கள் செய்வது திருட்டு அல்ல என்பதும் வியபார அறம்தானே? சாதரண மனிதன் பசிக்காக திருடினால் அவனை கொல்வதும் அறம்தானே?? ஏனெனில் திருட்டு என்பது அறமாக மாற்றப்படுவதால் அறத்தின் பொருட்டு கொலை செய்வதும் சரிதானே???.

தமிழ் சமூகத்தில் சங்ககாலத்தில் களவு (ஆநிறைக்கவர்தல்) இருந்தது. ஒரு நாடு மற்ற நாட்டின்மீது படையெடுப்பது அவர்கள் சொத்தை களவெடுக்கத்தான். களவு என்பது போரில் அறமானதுதானே?. ஆகவே களவு (திருட்டு) போன்றவற்றை அறம் சார்ந்து பார்க்க முடியாது. தனிமனிதர்களை அடிப்படை அலகாக கொண்டுவிட்ட நமது சமூகத்தில் அது ஒழுக்கம் சார்ந்த ஒன்றே. அதனால் ஒழுக்கத்தை கற்க, சீர்திருத்த சிறைக்கூடம், நீதிமன்றம் பள்ளிக்கூடம் எல்லாம் உள்ளன. அதைமீறி அதை ஒரு அறப்பிரச்சனையாக மாற்றுவதன்மூலம் அதிகார நிறுவனங்களின் கொலையை நியாயப்படுத்துவதன் மூலம், அதற்கு உடந்தையாக பொதுபுத்தியில் உருவாகி உள்ள கருத்தை மீட்டுருவாக்கம் செய்வதன்மூலம ஒரு கொலைமனநிலையை, கொலைக்கான மனசாட்சியை உருவாக்கும் செயலையே செய்கின்றனர். வரலாற்றால் உள்ளிருத்தப்பட்ட மனித மனதின் வன்முறையை இப்படி “அறம்” பேசி நியாயப்படுத்துவதன்மூலம், பாசிச மன அமைப்பை கட்டும் பணியை இந்த இலக்கிய எழுத்தாளர்கள் மிகச்சிறப்பாக நிறைவேற்றுகிறார்கள். இப்படித்தான் எழுத்து எந்திரம் அதிகார வன்முறை எந்திரத்தைவிட கொடுரமானதாக மாறிவிடுகிறது.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று மனித உரிமை என்பதைவிட நீதித்துறை என்கிற இறையாண்மை சாதனம் ஒன்றை உருவாக்கி, எல்லாம் நீதிபபடி நடக்கும் என்று எழுதாவிதி ஒன்றை எழுதி வைத்து, அந்த நீதித்துறையையே நக்கலடிக்கும் விதமாக, அதனை சந்தேகித்து அதன் செயலை அவமதிக்கும் விதமாக நடத்தப்படுவதே என்கவுண்டர் (தமிழில் இதனை ”எதிர்கொள்ளல்” எனலாமா? அல்லது ”எதிர்கொல்லுதல்” எனலாமா). உண்மையில் நீதிமன்றத்தை அவமதித்தவர்கள் இவர்கள். எல்லா வழிகளிலும் அவர்களை பிடித்து நீதியின் முன் நிறுத்தமுடியும் என்ற நிலையில் இச்சம்பவம் நடத்தப்படுவது நீதித்துறை செயலற்றதாக ஆக்கப்படுவதன் வழியாக மக்களின் மனசாட்சியில் நீதிபரிபாலன அமைப்பை கேலிக்குரியதாகவும், வன்முறை எந்திரமான போலிஸ் இராணுவம் ஆகியவற்றின் துப்பாக்கியை நீதிதேவதையின் கையில் தராசுக்கு பதிலாக கொடுக்கும் பணியை செய்கிறார்கள். மக்களிடம் என்ன எதிர்வினை உருவாகுகிறது என்பதைக்கொண்டு நீதித்துறையை முடக்கி, எதேச்சதிகார ஆட்சியை நிர்ணயிக்கும் மனநிலையை கட்ட முனைகிறார்கள். பாசிச-காவல்-துறையின் காட்டாச்சிமுறையை வெளிப்படுத்தி மற்றவர்களை பயமுறுத்தி தனது பேரதிகாரத்தை காட்ட முயல்கிறார்கள்.

எல்லாவற்றிலும் கலாச்சார தேசியவாதம பேசும் தனது பாசக்கயிறால் இமயம் முதல் குமரிவரை பயணித்து கட்டி காக்கும் ”ஒற்றை-இந்தியர்கள்” இதில் பீகாரிகள் தமிழர்கள் என்று பிரித்து தங்கள் “அ(ர)றத்தை“ வைத்து தர்மசங்கடத்தில் ஆழ்ந்திருப்பது வினோதமே. உண்மையில் இவ்வளவு பெரிய கட்டுரை எதற்கு? உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். நியாயமான நீதிவிசாரணைக்கு உத்தரவிடவேண்டும். தப்பு யார் செய்தாலும் உப்பை தின்னு தண்ணீ குடிக்கட்டும் என்று இலக்கியரீதியான நடுநிலை அறம் பேசியிருந்தால்கூட முடிந்திருக்கும் கதை. அவர்களால் அப்படி பேசமுடியாது காரணம். இலககியம் என்பதை அறம்போதிக்கும் “மடப்“பள்ளியாக நினைத்தால் இப்படித்தான் இலக்கியம் உள்ளே பொங்கி பொங்கி “மடப்பள்ளி” பிரசாதமாக பிரவகிக்கும்.

இப்போ இந்த இலக்கியவாதிகளின் ஊற்றுக்கண் எந்த ”அறத்திலிருந்து” பீறிடுகிறது என்பது புரிந்திருக்கும். அது அதிகாரத்தின் அறம். அதிகாரத்தை உருவாக்கும் அறம். அதிகாரத்தை பங்கிட்டக்கொள்ளும் அறம். அதிகாரத்திற்கான மனசாட்சிகளை உருவாக்கும் அறம். மானுட அறத்தின் அடிப்படை ஒரு உயிர் மண்ணில் தழைத்து செழிப்பதற்கான சமூகத்தை உருவாக்குவதே. அச்சமூகத்தில் அச்சமற்ற வாழ்வதற்கான பாதுகாப்பை தருவதே. உயிர்களை கொன்று தனது அதிகார வாழ்வை நிலைநிறுத்திக் கொள்வது அல்ல. கொலைகளின் வழியாக ஒரு பேரச்சத்தை உயிர்களிடம் உருவாக்குவது அல்ல.

- ஜமாலன் 18-03-2012

கவிதையின் ‘நான்’ = கவிஞரின் ‘நான்’: கடிதமும் பதிலும்

எங்களின் “கவிதையின் ‘நான்’ = கவிஞரின் ‘நான்’” பதிவுக்குப் பதிலாக கவிஞர் லீனா மணிமேகலை ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதை அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் பகுதிகளாக பிரசுரித்து பதில் எழுதினோம். இப்போது அவரிடமிருந்து ஏப்ரல் 17ம் தேதியிட்ட இன்னொரு கடிதம் வந்திருக்கிறது. அதை இப்போது தனியாகவே பிரசுரிக்கிறோம், எங்கள் பதிலையும் எழுதியிருக்கிறோம்.இதற்குமேல் அவரது கவிதைகள் பற்றி எங்களுக்குக் கூற ஒன்றுமில்லை.

லீனா மணிமேகலையிடமிருந்து வந்த கடிதம் இதோ:

ஜமாலன் தோழரின் மெயில் படித்தேன்.

"பின்னாளில் நீரோவாக பிடில் வாசித்தோம் என்று எழுதி இந்த பிரச்சினையை சாம்ராஜ்யம் எரிந்த பிரச்சினையாக ஆக்கி, நம்மை விமர்சித்துவிடக்கூடாது பாருங்கள் அதுவும்தான். இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே“- என்கிற இம்சை அரசனின் குரல் கேட்கத்தான் செய்கிறது நமது ஆழ்மனதில். என்ன செய்ய?"

உங்கள் கட்டுரையின் இந்த கடைசி பாராவுக்கும் நம் உரையாடலுக்கான உங்கள் விழைவுக்குமான மன அமைப்பில் கடுமையான முரண் இருக்கிறது. அய்யய்யோ, வருங்காலத்தில் நம்மை விமர்சித்துவிடுவார்களே என்றெல்லாமா ஒரு பிரதியை அணுகமுடியும்? அப்புறம் ஒரு பிரதியை ஏன் எதிர்ப்பு வருகிறது என்ற கேள்வியின் வழி அணுகி விமர்சிக்கும் பாணி ஒருபுதுவித துப்பறியும் விமர்சன பாணியா என்ன?

பிரதியை யார் எதிர்த்தார்கள், ம.க.இ.கவும், இந்து மக்கள் கட்சியும்! சமூக ஒழுங்கை கட்டிக்காத்து படைப்பாளிகளை அரசாங்கத்துக்கு காட்டிக் கொடுப்பதில் ஒன்று சேர்ந்திருக்கும் இந்த அடிப்படைவாதிகள் ஏன் இந்தப் பிரதியை எதிர்க்கிறார்கள் என்பதை துப்பறிந்து புரிந்துக் கொள்ளும் மட்டத்திலா ஜமாலனும் பெருந்தேவியும் இருக்கிறீர்கள்.

ஒரு கவிதையை கவிதையே இல்லை என்று விமர்சனம் செய்வது உங்கள் உரிமை.ஆனால் அந்த புள்ளிக்கு நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் வழி என்னை தொந்தரவு செய்கிறது.

எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனக்கு திருவில்லிபுத்தூர் அருகில், [ஊரின் பெயரை எடிட் செய்திருக்கிறோம்: ஜமாலன், பெருந்தேவி) என்ற கிராமம் தான் பூர்வீகம். கடுங்கோபம் வந்து எதிராளியை சபிக்கும் உணர்வுநிலைக்கு வரும்போது பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கி காட்டி பழிப்பார்கள். அப்படி ஒரு பழிப்பாகக் கூட இந்த கவிதையை நான் எழுதிப் பார்த்திருக்கலாம். ஒரு ஓலமாக கூட கவிதையை எழுதிப் பார்த்திருக்கலாம். வாசிப்பு ஒழுங்கு, பிரதி ஒழுங்கு, ஆசிரிய ஒழுங்கு, சொல்லுக்கான அமைதி, வடிவ அமைதி என்று கவிதைக்கான ஒழுங்கையெல்லாம் பின் பற்றுவதற்கு பெண்ணுக்கு மொழியா இருக்கிறது? இல்லை வரலாறு இருக்கிறதா? கச்சாவாகவும், துறுத்தலாகவும் மொழியை வைப்பதை அரசியலாகவே வைக்கிறேன். அதிர்ச்சி மதிப்பீடு, ஆபாசம் என்ற வார்த்தைகளெல்லாம் மதவாத வார்த்தைகள். அதை முற்றிலும் நிராகரிக்க விரும்புகிறேன்.

ஞானக்கூத்தன், ஆடுகளை உரித்து சைக்கிளில் இப்படி அப்பட்டமாக எடுத்து செல்ல வேண்டுமா? மறைத்துவைத்து செல்லலாமே? என்று சொன்னாராம். எங்களுக்கு ஆடு ஓடும்போது, அழகு, அடிபட்டால் வருத்தம், கண்ணீர் சிந்தி கட்டுக் கூட போடுவோம். ஆடுக்கு ஆபத்து வராமல் காவலுக்கு மூன்று நாய்களையும் வைப்போம். ஆனால் வெட்டினால் இறைச்சி தான்.

நான் இமோஷனல் இன்டெலிஜன்ஸில் நம்பிக்கை வைத்திருக்குமொரு முட்டாள் கவிஞர் தான். அப்படியிருக்கவே விரும்புகிறேன்.

அப்புறம் கூட்டத்தில், ம.க.இ.க கூலிப்படைத் தாக்குதலெல்லாம் முடித்து வெளியேறியபின், கே.ஏ.ஜி தோழர் ஒரு அருமையான விசயம் சொன்னார்.

"மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்து திருவாலவாய் அருள்
பெண்ணகத்து எழில் பேயமன் சாக்கியத்
தென்னர்க் கற்பழிக்கத் திருவுளமே"

தேவாரம், மூன்றாம் பதிகம், திருஞானசம்பந்தர், "திருவாலவாய்".

சமணப்பெண்களை பாலியல் வல்லுறவு கொள்ள சிவனின் அருளை வேண்டுகிறார்கள் நம்ம சைவர்கள்.

அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

எனது பன்னிரெண்டு வயதில் சோவியத் யூனியனுக்கு யங் பயணியராக சர்வதேச குழந்தைகள் முகாமிற்கு சென்றபோது சாஷா என்ற குழந்தை கம்யூனிஸ்ட் தோழனோடு நெருக்கமான தோழியானேன். புரட்சி மட்டும் தான் அவனின் கனவு, மூச்சு எல்லாம். அப்புறம் பிரஸ்திரோய்கா வந்தது, கிளாஸ்நாஸ்ட் வந்தது, கோர்பசேவ் கதவுகளை திறந்தார், சோவியத் உடைந்தது, அவனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு அவன் அமெரிக்காவில் ஏதோ பார்மேன் வேலையில் இருப்பதாக அறிந்தேன்.தொடர்பு கொண்டேன். புரட்சியைப் பற்றி அவனிடம் கேட்க வில்லை.

பெர்லின் திரைப்பட விழாவுக்கு என் தேவதைகள் ஆவணப்படத்தை திரையிட சென்றபோது ஒரு தோழி கிடைத்தாள்., கிழக்கிலிருந்து மேற்குக்கு சுவர் தாண்டி தன் உறவுகளைப் பார்க்க வருவதற்கு தன் கன்னிமையை ஒரு அதிகாரிக்கு பலியிட்டுவிட்டு வந்த கதையை எனக்கு சொன்ன போது உறைந்துபோனேன்.

என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

இந்தியாவில் 90 சதவிகிதத்திற்கு மேலான குழந்தைகள் திருமணத்தின் பெயரால் நடக்கும் எஸ்டாபிளிஷ்டு வல்லுறவுகளால் பிறந்தவை தான் என்று புள்ளிவிபரம் சொல்கிறது.

குழந்தை தொழிலாளி ஆவண நாவலின் நாயகி சீனா போராளிக்குழுவின் பெண்கள் பற்றிய என் எல்லா பிம்பத்தையும் உடைத்தவள்.

எவன் எதற்காக வல்லுறவு கொண்டால் தான் என்ன, வல்லுறவுக்குப் பிறகான பெண்ணுடலின் சிதைவு ஒன்றுதானே? ஒன்றை ஓங்கி சொல்லும் விருப்புறுதியில் அதீதத்திற்கு கவிதை இடம்கொடுக்க வில்லையென்றால் கவிதையை கைவிட வேண்டியது தான்.

இதெல்லாமும் உங்கள் மொழியும் நிலமும் நூலைப் படித்த காரணத்தினால் மட்டுமே எழுதுகிறேன். பெருந்தேவியின் கவிதைகளில் வரும் சமஸ்கிருதத்தையும், ஈஷிக்கொண்டு போன்ற பார்ப்பனியத்தை நிலைநிறுத்தும் சொற்களையும் தாண்டி அவரது பெருவாரியான கவிதைகளை நான் விரும்பி வாசித்திருப்பதாலும் கூட இதை நான் எழுதியிருக்கக் கூடும்.

ஜமாலன் தோழருக்கு, ஒரு குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு விமர்சிக்க முயலும்போது, ஒரு படைப்பாளியின் முழு படைப்பு வெளியையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் சொல்லாடலை முன் வைக்க வேண்டும் என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன?


*******
எங்கள் பதில்:

அன்புள்ள லீனா மணிமேகலை,

நீரோ மற்றும் புலிகேசி பாணி இறுதி வரிகள் ஒரு நெகிழ்வான எழுத்துமுறையாக இந்த விமர்சனத்தை மாற்றும் நோக்கில் எழுதப்பட்டதே. அல்லது, வரலாறு என்கிற ரயிலை தவறவிடாமல் தொற்றிக் கொள்ளலாம் என்கிற ஆதங்கம் என்றும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். என்ன கடைசிப்பெட்டியில் ஏறிக் கொள்ளும்படி ஆகிவிட்டது.  எங்களை யாரும் விமர்சித்து விடுவார்கள் என்பதற்காக பிரதியை அணுகவில்லை. பிரதியை யாரும் விமர்சிக்கவில்லையே என்பதால்தான் பதிவை எழுதினோம்.

//எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனக்கு திருவில்லிபுத்தூர் அருகில், [ஊரின் பெயரை எடிட் செய்திருக்கிறோம்: ஜமாலன், பெருந்தேவி) என்ற கிராமம் தான் பூர்வீகம். கடுங்கோபம் வந்து எதிராளியை சபிக்கும் உணர்வுநிலைக்கு வரும்போது பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கி காட்டி பழிப்பார்கள். அப்படி ஒரு பழிப்பாகக் கூட இந்த கவிதையை நான் எழுதிப் பார்த்திருக்கலாம். ஒரு ஓலமாக கூட கவிதையை எழுதிப் பார்த்திருக்கலாம்.//

இதைப் படித்தபின் வருந்தினோம். ஊரின் பெயரைப்போட்டு இதை நீங்கள் எழுதியிருக்கவேண்டிய தேவையில்லை.

பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கிக் காட்டுவது குறிப்பிட்ட சூழலில் வரும் அதீத கோபத்தில், ஆத்திரத்தில், எதிர்ப்பு உணர்ச்சியில் நடந்திருக்கலாம். அத்தகைய செயலில் அதிகாரத்தை subvert செய்கிற ஒரு தன்மை உள்ளது. அந்தச்செயலை decontexualize செய்து, உங்கள் கவிதைகளுக்கான “நியாயமாக” ஒரு குறிப்பிட்ட ஊர்ப்பெண்களின் “நடப்பாக,” அதை இணையப் பொதுவெளியில் நீங்கள் பேசியிருக்க வேண்டாம். உண்மையில், இந்த உங்களின் கருத்துக்காகவே இந்தக் கடிதத்தை எங்கள் பதிவில் வெளியிட நாங்கள் மிகவும் யோசித்தோம்.

நீங்கள் சொல்லியிருக்கிற பெண்களின் அப்படியொரு செயல் அந்தச்செயலுக்குச் சம்பந்தமான சூழலில் ஒரு உடனடித்தன்மை கொண்டது. மோசமான அனுபவத்தை (அதாவது அவள் மீதான வன்முறையை, அடக்குமுறையை) அவள் எதிர்கொள்ளும் விதமாக, எதிராளியை விரட்டுவதற்கான ஆயுதம் போன்றது. குறிப்பிட்ட சமூகச்சூழலில், அதைப் பற்றிய நேரடியான பதிவில்தான் அதைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், உங்கள் முதல் கவிதை பொதுப்படையாக எல்லாப்பெண்களையும் யோனி என்கிற ஒருவார்த்தையில் அடக்கிவிடுகிறது. உங்கள் இரண்டாவது கவிதையிலோ, ”பழிப்பு காட்டுவதன், ஓலமிடுவதன்” சூழல் என்பது மார்க்சியர்களைப் பற்றி பொதுப்படையான சித்தரிப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது.

தவிர, அந்தப்பெண்களைப் போலன்றி, உங்கள் கவிதைகளில் ”யோனி,” வன்முறையை passive ஆகவே எதிர்கொள்ளுகிறது. எதிர்ப்புணர்ச்சியின் தளங்கள் உங்கள் கவிதையின் பிரதியில் தென்படவில்லை என்பது பிரச்சினை. இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறோம்.

//வாசிப்பு ஒழுங்கு, பிரதி ஒழுங்கு, ஆசிரிய ஒழுங்கு, சொல்லுக்கான அமைதி, வடிவ அமைதி என்று கவிதைக்கான ஒழுங்கையெல்லாம் பின் பற்றுவதற்கு பெண்ணுக்கு மொழியா இருக்கிறது? இல்லை வரலாறு இருக்கிறதா? கச்சாவாகவும், துறுத்தலாகவும் மொழியை வைப்பதை அரசியலாகவே வைக்கிறேன். அதிர்ச்சி மதிப்பீடு, ஆபாசம் என்ற வார்த்தைகளெல்லாம் மதவாத வார்த்தைகள். அதை முற்றிலும் நிராகரிக்க விரும்புகிறேன்.//

பெண்ணுக்கு மொழியில்லை, வரலாறு இல்லை என்றால், சங்ககால பெண் கவிஞர்கள், ஔவையார், காரைக்கால் அம்மையார் துவங்கி ஆண்டாள், ஆவுடையக்காள் என உள்ள குரல்களை அவர்களது மொழியை என்னவென்று சொல்வது? Hermeneutics of recovery என்கிற சாத்தியங்களோடுதான் இருக்கின்றன பெண்களால் எழுதப்பட்டிருக்கிற எழுத்துகள்.

மேலும் “கச்சாவாகவும், துறுத்தலாகவும்” மொழியை முன்வைப்பது பற்றி நாங்கள் எங்குமே பேசவில்லை. உங்கள் கவிதைகளுக்கு விமரிசன வாசிப்புகளை எல்லாம் “இவர்கள் கச்சாவான வார்த்தைகளுக்கு எதிரிகள்” என்று ஒற்றைப்புள்ளியில் நீங்கள் சுருக்கி எளிமைப்படுத்துகிறீர்கள் என்றே கருதுகிறோம்.

//ஞானக்கூத்தன், ஆடுகளை உரித்து சைக்கிளில் இப்படி அப்பட்டமாக எடுத்து செல்ல வேண்டுமா? மறைத்துவைத்து செல்லலாமே? என்று சொன்னாராம். எங்களுக்கு ஆடு ஓடும்போது, அழகு, அடிபட்டால் வருத்தம், கண்ணீர் சிந்தி கட்டுக் கூட போடுவோம். ஆடுக்கு ஆபத்து வராமல் காவலுக்கு மூன்று நாய்களையும் வைப்போம். ஆனால் வெட்டினால் இறைச்சி தான்.

நான் இமோஷனல் இன்டெலிஜன்ஸில் நம்பிக்கை வைத்திருக்குமொரு முட்டாள் கவிஞர் தான். அப்படியிருக்கவே விரும்புகிறேன்.//

எதற்காக ஞானக்கூத்தனைப் பற்றிய இந்தச் ”செய்தி” இங்கே? மேலும், உங்களின் ”உணர்ச்சிவசப்பட்ட அறிவு” என்பதைப் பேசும்போது மற்றவர்களுக்கும் அதேபோன்ற “உணர்ச்சிவசப்பட்ட அறிவை” நீங்கள் மறுக்கமுடியாது.

//அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.//

நீங்கள் முன்வைத்திருக்கிற, சோவியத் கம்யுனிஸ்ட் தோழன், பெர்லின் தோழி சம்பந்தமான நிகழ்வுகள்...என்ன சொல்ல வருகிறீர்கள், சோவியத் கிளாஸ்நாஸ்ட், கோர்பச்சேவ் இவற்றுக்கும் ”புரட்சியாளர்கள்” ஒரு பெண் உடலை ஆணாதிக்க நிலையில் மட்டுமே அணுகி உங்கள் பாணியில் சொன்னால் “வல்லுறவு” கொள்வதற்கும் என்ன தொடர்பு, சோவியத்தின் சரிவிற்கும் ஒடுக்கப்பட்ட பெண்ணிய பாலியலுக்கும் என்ன தொடர்பு, இதெல்லாம் புரிபடவில்லை. இந்நிகழ்வுகளிலிருந்து நீங்கள் புரட்சிக்கான சித்தாத்தங்கள் தோற்றுவிட்டதாக எழுதினால்கூட ஒருவகையில் புரிந்துகொள்ளலாம். ஆனால் சோவியத்தின் வீழ்ச்சி, மார்க்சியம் இன்னபிற கோட்பாட்டு பிரச்சனைகளைப் பற்றியதல்ல உங்கள் கவிதைத்தளம். உடனே நான் கட்டுரை எழுதவில்லை என்று சொல்லமாட்டீர்கள் என நம்புகிறோம்.

எல்லை தாண்டும் ஒரு பெண் தனது கன்னிமையை அதிகாரியிடம் பலியிடுகிறாள் என்பது உறைந்து போகச் செய்யும் நிகழ்வுதான். இது போன்ற எண்ணற்ற கொடுமையான நிகழ்வுகள் நடந்துவருகின்றன இன்றைய உலகில். சரி, ஆனால், ஒரு பிரதியை வாசிக்கும்போது, கவிதைகளை ”எதற்காக” கவிஞர் எழுதியிருக்கிறார், அவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் ”பின்னணி” என்பதெல்லாம் பிரதியை வாசிப்பவருக்கு தெரிய எந்த சாத்தியமும் இல்லை. (நீங்கள் இதைப்பற்றி கட்டுரை எழுதினாலேயொழிய அல்லது துண்டறிக்கை கொடுத்தாலேயொழிய).

//என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

இந்தியாவில் 90 சதவிகிதத்திற்கு மேலான குழந்தைகள் திருமணத்தின் பெயரால் நடக்கும் எஸ்டாபிளிஷ்டு வல்லுறவுகளால் பிறந்தவை தான் என்று புள்ளிவிபரம் சொல்கிறது.//

இதை எல்லாம் எதற்காக சொல்கிறீர்கள்? இதற்கும் இந்த உரையாடலுக்கும் என்ன பொறுத்தப்பாடு உள்ளது? எங்கள் விமர்சனத்தை உணர்ச்சி வசப்படாமல் வாசித்துப் பாருங்கள். பாலியல், வல்லுறவு, ஆணாதிக்கம் இவை எல்லாம் நாங்கள் எங்கும் மறுக்கவுமில்லை. அதை மறுப்பது எங்கள் அரசியலும் இல்லை. நாங்கள் ”ஒழுக்கம்” பேணும் தூய்மைவாதிகளும் இல்லை.

//இதெல்லாமும் உங்கள் மொழியும் நிலமும் நூலைப் படித்த காரணத்தினால் மட்டுமே எழுதுகிறேன். பெருந்தேவியின் கவிதைகளில் வரும் சமஸ்கிருதத்தையும், ஈஷிக்கொண்டு போன்ற பார்ப்பனியத்தை நிலைநிறுத்தும் சொற்களையும் தாண்டி அவரது பெருவாரியான கவிதைகளை நான் விரும்பி வாசித்திருப்பதாலும் கூட இதை நான் எழுதியிருக்கக் கூடும்.//

ஞானக்கூத்தனை முன்பு சுட்டிக்காட்டியதிலும், பார்ப்பனியம் என்று இங்கு நீங்கள் எழுதுவதிலும், உரையாடலுக்குரிய பிரச்சனைகளை திசைதிருப்ப முயற்சிக்கிறீர்கள் என்றே நினைக்கத்தோன்றுகிறது. உங்கள் கவிதைகள் ஆண் பெண் என்று வலிந்து இருக்கும் இருமைக்கட்டமைப்புகளைத் தாண்டியதாக இல்லை என்றோம். இப்போதோ நீங்கள் அதன் தொடர்ச்சியாக பார்ப்பனியம்-பார்ப்பனிய எதிர்ப்பு என்பதாக வழக்கமாக சொல்லப்படும் பொதுபுத்தி சார்ந்த இருமைகளை முன்வைக்கிறீர்கள். பார்ப்பனியத்தின் கருத்தாடல்களை கேள்விக்குட்படுத்தும், எதிர்க்கும் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் புத்த, சமண, தாந்திரீக நூல்கள் ஒருபுறம் இருக்கட்டும். கவிதைப் பிரதியில் சமஸ்கிருத வார்த்தைகள் பார்பனியத்தை நிலைநிறுத்தும் என்றால், நீங்கள் உங்கள் கவிதைகளில் பயன்படுத்தும் காமம் துவங்கி கிரஹணம் போன்ற வார்த்தைகளை என்னவென்று சொல்வது? முக்கியமாக, உங்கள் கவிதைகளில் வருகிற “யோனி,” இது சம்ஸ்கிருத வார்த்தைதானே.

ஒரு கவிஞரின் (அவர் பெருந்தேவியாக இருக்கட்டும் அல்லது ஞானக்கூத்தனாக இருக்கட்டும்) கவிதையை, பிரதியில் கிடைக்கும், பின்னிப்பிணைந்த இன, மொழி, பால் என்கிற அடையாளக் கட்டமைப்புகளை அகழ்ந்து எடுத்து பேசுவதை ஒரு வாசிப்புப்பாணியாகக் கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு நீங்கள் பார்ப்பனியம், தமிழன், பெண், ஆண் என்கிற அடையாளங்களை வரையறுக்க வேண்டும். அந்த வரையறைகளைச் செய்தபின்பு தான் பிரதி, அர்த்தம், அதன் செயல்பாடுகள் இவற்றைப் பேச முடியும். அதைவிட்டுவிட்டு, போகிற போக்கில் வசதி கருதி, ஓரிரு வார்த்தைகளை எடுத்துவிடுவது, விமரிசனங்களை சரியான விதத்தில் எதிர்கொள்ள உங்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதையே காட்டுகிறது.

பெருந்தேவி
ஜமாலன்

//ஜமாலன் தோழருக்கு, ஒரு குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு விமர்சிக்க முயலும்போது, ஒரு படைப்பாளியின் முழு படைப்பு வெளியையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் சொல்லாடலை முன் வைக்க வேண்டும் என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன? //

இந்தக்கட்டுரை, உங்களின் இந்த இரு கவிதைகளுக்கான இந்துமக்கள் கட்சியின் புகார், அதற்காக உங்கள்சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் சம்பந்தமானது. ஆகவே, இவை தொடர்பாக விவாதத்தில் இருந்த உங்கள் இரு கவிதைகளையும் பற்றி எழுதினோம். மேலும், ஒருவர் பல படைப்புகளை படைக்கிறார். அவரது முதல் படைப்பும் அடுத்த படைப்பும் ஒன்றுபோலவே இருக்க வேண்டியது எப்படி சாத்தியம், படைப்பாளிக்கு என்று ஒரு சாராம்சம் இருக்கிறதா என்ன, இந்த படைப்பாளி என்றால் இதைதான் படைப்பார் என்று. அப்படி ஒரே மாதிரி படைத்தால் அது படைப்பு அல்ல, சரக்கு.

அன்புடன்
ஜமாலன்

கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெண்.

”அரசியல்சரி” நிலைப்பாட்டுக்கும் கவிதையாக அறிவிக்கப்பட்டிருக்கிற பிரதிக்கும் இடையே சில வார்த்தைகள்
கவிஞர் லீனா மணிமேகலையின் கவிதைத்தொகுப்பை, வலைத்தளத்தை தடைசெய்யக்கூறி இந்து மக்கள் கட்சியினர் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததற்கு எதிராக சென்னையில் ஏப்ரல் 15-ல் ஒரு கண்டனக்கூட்டம் நடக்க இருப்பதாக அறிகிறோம். தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களால் நடத்தப்பட இருக்கிறது இக்கூட்டம். இது சம்பந்தமாக எங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுகிறோம்.

லீனா மணிமேகலை இலக்கியம், கவிதை என்று ஒரு பிரதியை தமிழ் இலக்கியச்சூழலின் வாசிப்புக்கு முன்வைக்கும்போது, அப்பிரதியின் சொற்பிரயோகங்கள் பாடுபொருள்கள் ஆகியவற்றை இலக்கியம் என்கிற வகைமையில்தான் நாம் அணுகவேண்டும் என்று நம்புகிறோம். இதில் எழுத்தாளரின் நோக்கம் (அதிர்ச்சி மதிப்பீட்டை முன்வைத்து புகழ்பெற நினைப்பது என்று கருதப்படுபவை உட்பட) இலக்கியத்தைப் படைப்பதுதானா என்பதை மதிப்பிட  அளவுகோல் எதுவும் கிடையாது. ஒரு படைப்பாளி  எதற்காக இலக்கியம் படைக்கிறார் என்பது நுட்பமான வாசிப்பாளனுக்கும், விமர்சகனுக்கும் அசட்டுத்தனமான கேள்விகளாக மட்டுமே இருக்கமுடியும். தனது உள்நோக்கங்கள் வழி உருவாக்கப்படும் சில வலைப்பின்னல்கள் வழியாக ஒரு எழுத்தாளர்  ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடியும். ஒரு சமூக அமைப்பு ஒரு எழுத்தாளாரை மேலாக வைத்து கொண்டாடுவதும், நிராகரிப்பதும் இந்த வலைப்பின்னல் விளையாட்டில் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால், காலம் அந்த இடத்தை கேள்விக்கு உட்படுத்தும்போது, பின்னர் ஒரு நாள் வரலாறுகளின் ஆற்றங்கரையில் படைப்பின் ஆதார ”சுருதி” கண்டடையப்படும் என்று வேண்டுமானால்  நாம் ஆறுதல் அடையலாம்.

இலக்கியம், கவிதை என்கிற முகாந்தரத்தில் ஒரு பிரதி வாசிக்கக் கிடைக்கும்போது, அதை அப்படித்தான் வாசிக்கவேண்டுமே தவிர எழுத்தாளரின் தனிப்பட்ட, சொந்த மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கணக்கிலெடுத்து அப்பிரதியை  நிராகரிப்பது தவறு.   இதற்கு அர்த்தம், எழுத்தாளரின் வாழ்க்கையில் அவர் செய்ததாகக் கூறப்படும் அநீதிகள், ஏமாற்றல்கள் (அவை நடந்திருந்தால்) போன்றவை முக்கியமில்லை என்பதோ, அவரது பிரதியின் மேல்விழும் இலக்கிய முத்திரை இவற்றையெல்லாம் புனிதப்படுத்திவிடும் என்பதோ இல்லை.  அந்த சம்பவங்களை அதற்குத் தகுந்த நடைமுறைத் தீர்வு தருகிற தளங்களில், சம்பந்தப்பட்டவர்கள் அணுகித் தீர்வுகாணுதல் நன்மை பயக்கும் என்பது எங்கள் கருத்து. 

இதன்பொருள் இலக்கியமும், எழுத்தும் கண்டனத்துக்கு அப்பாற்பட்டவை என்பது அல்ல. கண்டிப்பதற்காக எழுத்தைக் குறிவைத்து காவல்துறையில் புகார் கொடுப்பது, எழுத்தாளரை தனிப்பட்ட முறையில் தாக்குவது போன்றவை மோசமான முன்னுதாரணங்கள் ஆகிவிடும். மேலும் கண்டனத்தை எதிர்கொள்வதாக செய்யப்படும் செயல்களிலும் (இக்கூட்டம் உட்பட) வேறுபிரச்சனைகள் உள்ளன என்பதையும் நாம் மறுக்கவியலாது. இச்சூழலில், இலக்கியத்துக்கு வெளியே செயல்படும் அரசியல் மதக் கட்சிகளுக்கோ நிறுவனங்களுக்கோ, இலக்கியம் என்று எழுதப்பட்டிருக்கும் பிரதியைக் குறித்து புகார் கொடுக்க தார்மீக உரிமை இல்லை என்பதைமட்டும் இங்கே பதிவு செய்கிறோம்.

நிற்க.

இந்த நேரத்தில், இணையத்தில் சர்ச்சைக்குள்ளான லீனா மணிமேகலையின் கவிதைகள் (பார்க்க, http://www.penniyam.com/2010/01/blog-post_5280.html)  பற்றி சிலவார்த்தைகள்:

நான் லீனா என்று தொடங்குகிறது முதல் கவிதை, இலங்கையில், இந்தியாவில் ஆரம்பித்து துருக்கியில் ஈராக்கில் வியட்நாமில் என்றெல்லாம் வன்கொடுமைப்படுத்தப்படுகிற பெண்கள் “நான் லீனா” என்கிற சுயம்-சுட்டும் (self-referential) பெயருக்கு கீழே கொண்டுவரப்படுகிறார்கள். இதன்மூலமாக இப்படி கொடுமைக்கு ஆளாகிற பெண்கள் எல்லாருக்குமான பிரதிநிதியாக லீனா என்கிற பெண் காட்டப்படுகிறார். முதல் கேள்வி, ஏன் லீனா என்கிற பெயர் மீனா என்றோ வேறொன்றாகவோ இருக்கக்கூடாது? எழுத்தாளர் தன் பெயரை கவிதைசொல்லியின் ’நானாக’ இப்படி கொண்டுவரும்போது, உலகத்தின் எல்லாக் கொடுமைப்படுத்தப்படும் பெண்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆசையை வெளிப்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. கவிதைசொல்லியின் ‘நானுக்கும்’ எழுத்தாளரின் ‘நானுக்குமான’ வித்யாசத்தை கவிதை அழித்துவிட்டது.  இந்த இரு நான்கள் ஒன்றா இரண்டா என்று தெரியாத அளவுக்கு—--பின்னிப்பிணைந்து கிடக்கும் இரண்டு பாம்புகள் ஒன்றா இரண்டா என்பது போல--தோற்றம் தருகிறபோது, எந்தத் தளத்திலிருந்து  ‘எழுத்தைப் பாருங்கள், எழுத்தாளரைப் பார்க்காதீர்கள்’ என்று நாம் சொல்லமுடியும்? பிரதிநிதித்துவ அரசியலில் (representational politics),  “நான்“ என்கிற எழுத்தாளரின் சுயம் அப்படியே தன்னடையாளத்துடன் நிற்கிறது இக்கவிதையில்.

கவிதை வன்புணர்ச்சி விஷயத்தில் அறிவாளி ரோகியிலிருந்து தொடங்கி புரட்சிவேண்டுபவன் வணிகம் செய்பவன் மாலுமி விவசாயி ஈறாக இழுத்துப் பேசுகிறது.  எழுதப்பட்டிருக்கிற விதம் இவர்கள் எல்லாருமே இப்படித்தான் என்பதாக. “எவனா இருந்தா என்ன, ஆம்பிளை தானே” என்கிற தொனியே கவிதையின் தொனி. வன்புணர்ச்சி என்கிற அபாயத்தையும் நிகழ்வையும் தொடர்ந்து பெண்கள் எதிர்கொள்ளும் சூழல்கள், கட்டாயங்கள், உலகளாவிய முதலீட்டிய நுண் அதிகாரங்கள், அரசியல்கள் பற்றி எந்தப்புரிதலும் இல்லாமல், இவை அனைத்தையும் ’ஆம்பிளை’ என்கிற ஒரு பதத்துக்குள் இந்தத்தொனி இட்டுநிரப்புகிறது. வன்புணர்ச்சி என்பது ஆண்களின் விழைவால், விழைவு தருகிற குறிவிரைப்பால் மட்டுமே நடப்பதில்லை என்பதுதான் பாரிய உண்மை. எண்ணற்ற கொடுமைகளுக்கு பெண்களை ஆளாக்கின பல்வேறு அரசியல்களையும் போர்களையும் ஆணின் பாலியல்-விழைச்சில் அடக்கிவிட முடியுமா என்ன?

ஈழம், போஸ்னியா இன்னும் எண்ணற்ற நாடுகளில் பாலியல் வன்புணர்ச்சி என்பது போரின்,  அரசின்,  இறையாண்மை அரசியல்களின்  அதிகார ஆயுதமாகவே உள்ளது. மேலும், போரில் ஆண்-பெண்  உடல்கள் இரண்டும் கருவிகளாக மாற்றப்படுகின்றன. அதை ஒரு பெண் ஒடுக்கு முறையாக மட்டுமே சுருக்கிப் பார்த்து விட முடியாது.  ஆண்-பெண் உடல்களை போர்-எந்திரத்தின் விழைச்சாக, அதிகார விறுப்புறுதிக்கான கருவிகளாக ஆக்கப்பட்ட உடல்களாகவே பார்க்க முடியும்.  இத்தகைய பல்வேறு சூழ்நிலைகளின் பாலியல் வன்முறைகளை குடும்ப பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு சமனாக அல்லது அவை போல ஒன்றாக பார்த்துவிடமுடியாது.  இக்கவிதையில் வன்புணர்ச்சி என்கிற புள்ளியில் இவ்வித்யாசங்கள் பிரித்தறியப்படவில்லை.

மேலும் கவிதையில் பெண்கள் அனைவரும் தொடைகளின் இடைவழிக்காகவே, அதை ஆக்கிரமிப்பதன் மூலம் அச்சுறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அரசதிகாரம் பெண்ணுடலை கையாளும் அதே முறைகளைத்தான் புரட்சியாளர்களும், கலகக்காரர்களும் கையாளுகிறார்கள் என்பதும் பொதுபுத்தியின் “அறம்“ சார்ந்த பார்வைதான். அதாவது ஒரு உடலின் பாலியல் சார்ந்த இச்சை என்பது கீழானதாக, அதை செய்யும் உடல் புரட்சிபேசத் தகுதியற்றதாக சொல்லப்படுவதாகவும் இதை வாசிக்கலாம். தவிர, அரசு, எதிர்ப்பு, கலகம் இவை எல்லாவற்றிலும் அதிகாரம் செயல்படும் என்றாலும், இவற்றைச் சமன்படுத்துவதிலும் பிரச்சினைகள் உள்ளன.

வன்புணர்ச்சிக்கான ஒரு களமாக பெண்ணுடல் கட்டப்பட்டுள்ளது என்றால், களத்தில் ”விளையாடுவதற்கான” ஆணுடலும் தயாரிக்கப்பட வேண்டும் அல்லவா. அப்படி தயாரிக்கப்பட்ட ஆணுடல்கள் மட்டும் என்னவித நெகிழ்வை இச்சமூகத்தில் அனுபவித்துவிடப் போகிறது? ஆண்மை, பெண்மை என்கிற முரண்களின் அடிப்படையிலான சமூக, கலாச்சார ஒழுங்குவிதிகள் ஒட்டுமொத்த உடல்களில் பதிவுறுத்தப்படுகின்றன, இருமைக்கட்டமைப்பில் உடல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த  விதிகள்தான் இன்று எதிர்க்கப்படவேண்டியவை, வெளிப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டியவை. ஆனால் கவிதை விதிகளை நோகாமல் மேலோட்டமாக விளைவுகளை நோகிறது. 

வன்புணர்ந்து அதிகாரத்தைச் செலுத்தும் “ஆம்பிளை(களு)க்கு” எதிராக வன்புணர்த்தப் படுகிற எல்லாப் “பொம்பிளைகளின்” சார்பிலும் “நான் லீனா” நிற்கிறார் (கவிதையில், நிற்கிறது). ஆக, இந்தப் பெண்கள் எல்லாரும் அம்மா, அம்மம்மா, அத்தை சொல்லிக்கொடுத்தபடி யோனியை விரித்து வன்புணர்ச்சிக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதலைக் கவிதை தருகிறது. பாதிக்கப்பட்ட, படுகிற பெண்களின் எதிர்ப்புணர்வுக்கோ குறைந்தபட்சமாக அவர்களின் உடன்பாடின்மை என்பதற்கோ இடமே கவிதையில் இல்லை. உலகெங்கும் துயருறும் வன்புணரப்படுபவர்களின் பிரதிநிதியாக “நான் லீனா” Vs. உலகின் எல்லாவகை ஆண்களும் என்பதே கவிதையின் ஒன்லைனர். பல்வாசிப்புத் தளங்களைத் தராத, தக்கையான முரணை விதந்தோதுவதாலேயே இது கவிதையா என்று கேள்வி எழுகிறது.

லீனாவின் இரண்டாவது கவிதை, சே, பிடல், பெர்லின் சுவர், சோவியத், அமெரிக்கா போன்றவை, புணருகிற ’நான்’ உடலின் மார்பகம், அல்குல் போன்ற அங்கங்களின் பெயர்கள் அல்லது உருவகங்களாகின்றன. பல இடங்களில் அங்கம், பெயர்-உருவகத்துக்கு தொடர்புறவு இல்லை அல்லது வெறும் மோனை வலிந்து துருத்திக்கொண்டு நிற்கிறது (உதாரணம், ”மனம்பிறழ்ந்த குழந்தைபோல மம்மு குடித்தாய்” )  கவிதையில் சொல்லப்படும் “நீ“ அல்லது  எதிர் உடல், வெறும் பாலியல் புணர்ச்சி எந்திரமே. குறிப்பாய் மார்க்சிய புரட்சியாளனை இங்கு எதிர் உடலாக முதன்மைப்படுத்துவதன் வழியாக பாலியலில் “தூய்மைவாத” கருத்துகள் கொண்ட மார்க்சியர்களை (மார்க்சியர்களின் இத்தகைய பார்வைகளில் நமக்கு விமர்சனம் உண்டு என்றாலும்), பாலுறவுக்காகவே அலைபவர்களாகச் சித்தரிக்கிறது.

எத்தகைய ஆண் புரட்சியாளன் அல்லது மார்க்சியவாதியாக இருந்தாலும்,  பாலியலில் அல்லது சக பெண்ணுடலை அணுகும்போது அவனும் சராசரி மனிதனாக மாறிவிடுகிறான் என்பதை இக்கவிதை வழக்கமான அறக்க்கண்ணோட்ட சட்டகத்துக்குள் வைக்கிறது.   கவிதைவரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் புரட்சி பற்றிய “புனித கவிழ்ப்பு“ “அறக்கவிழ்ப்பு“ போன்ற கவிழ்ப்புச் சொல்லாடல்களால் ஆளப்பட்டிருப்பதைப்போல தோன்றும். உண்மையில், கவிதையின் உள்தர்க்கம் என்பது என்ன புரட்சி பேசுகிறாய், ஒரு அதி-யோனியின் புணர்ச்சிக்கு முன் இதெல்லாம் உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான். இப்படிச் சொல்வதன் வழியாக, பாலியல் செயல்பாட்டைப் பற்றி பொதுவாக சமூகமனம் கொண்டுள்ள கீழ்மை மதீப்பீடே உள்ளுரையாக உள்ளது. பாலியல் அல்லது புணர்ச்சி குறித்த இந்தக் ”கீழ்மை” மதிப்பீடு கடவுள் துவங்கி இன்னபிற பிம்பங்களின் மீது சுமத்தப்படும்போது இவற்றைத் தாங்கிப்பிடிப்பவர்களின்  எரிச்சலுக்கும் காரணமாக அமைகிறது என்பதைச் சொல்ல அவசியமே இல்லை.

சரி, இந்த பிரச்சினைகள் குறித்து பெரும் பத்திரிக்கைகள் துவங்கி பதிவுலகம் வரை பல மாதங்களாகப் பேசப்பட்டுவரும் நிலையில் இப்பொழுது இதனை முன்வைப்பதன் தேவை என்ன என்கிற கேள்வி உங்களைப்போலவே எங்களுக்கும் தோன்றியதுதான். நாங்கள் அவதானித்தவரை இப்பிரச்சனையில் பேசப்பட்டவை எல்லாம் கவிஞர் லீனா மணிமேகலையை தனிப்பட்ட முறையில் தாக்குவது அல்லது போற்றுவது என்ற அளவிலேயே நின்றுபோனதே தவிர மொழி அர்த்தமாதல் குறித்த விவாதம்  நடக்கவில்லை. இலக்கியம் சார்ந்த உரையாடலை முன்வைத்து இவ்வரிகளை அணுகவேண்டும். அதேநேரத்தில் ஒரு கவிஞருக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக நமது குரலை பதியவைப்பதும் அவசியம் என்று கருதியே இதனை எழுதினோம்.

பின்னாளில் நீரோவாக பிடில் வாசித்தோம் என்று எழுதி இந்த பிரச்சினையை சாம்ராஜ்யம் எரிந்த பிரச்சினையாக ஆக்கி, நம்மை விமர்சித்துவிடக்கூடாது பாருங்கள் அதுவும்தான். இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே“- என்கிற இம்சை அரசனின் குரல் கேட்கத்தான் செய்கிறது நமது ஆழ்மனதில். என்ன செய்ய?

அன்புடன்

பெருந்தேவி
ஜமாலன்

ஜெயமோகனின் “எனது இந்தியா” பற்றி அ. மார்க்ஸ்

image

நகைச்சுவை என்கிற பெயரில் தமிழ்ச் செல்வன் தொடங்கி விக்ரமாதித்தன் வரை சமகாலத் தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் கேலி செய்து எழுதியுள்ள ஜெயமோகனின் கட்டுரையைச் சென்ற `தீராநதி' (அக்.2008) இதழில் பார்த்தேன். சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் மீது அவரது காழ்ப்பு சற்றுக் கூடுதலாகவே வெளிப்பட்டுள்ளது! அதிரடியாக எதாவது சொல்லி, எழுதி தன் மீது கவனத்தை ஈர்ப்பதில் ஜெயமோகன் கில்லாடி. கிட்டத்தட்ட இதே நேரத்தில் தனது `ப்ளாக்'கில் பாசிச எதிர்ப்புணர்வுடன் எழுதும் தமிழ் எழுத்தாளர்களைக் கேவலப்படுத்தி அவர் எழுதிய கட்டுரை ஒன்றும் (`எனது இந்தியா') எனது கவனத்திற்கு வந்தது. கவன ஈர்ப்பிற்காக அரை நிர்வாணத்துடன் அந்தர்பல்டி அடிக்கவும் தயங்காத ஜெயமோகனின் வலையில் நான் விழ விரும்பாதபோதும், சங்க இலக்கியம் முதல் இந்தியத் தத்துவம் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதக் கூடியவர் என்ற பெயருடன் எல்லாவற்றினூடாகவும் மனித வெறுப்பை, சமூக அநீதிகளைக் கொண்டாடும் அவரது மன நிலையைத் தோலுரிப்பது அவசியம் என்பதால் இதை எழுதுகிறேன்.

மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, இந்தியச் சமூகத்தில் பன்மைத் தன்மையை ஒழித்துக்கட்ட வெறுப்பு அரசியல் செய்யும் பாசிஸ்டுகளின் பத்திரிகைகளில் வர வேண்டிய கட்டுரை அது. அவரது நூல்களை வாங்கி விற்கும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வாங்கி இலவசமாக விநியோகிக்கும் தொழிலதிபர்கள் இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்யக் கூடும்.

தன்னார்வ அமைப்புக்கள் வெளியிடும் பத்திரிகைகள் இந்திய எதிர்ப்பைக் கண் மூடித்தனமாக வெளிப்படுத்துவதாகத் தொடங்கும் ஜெ.மோ விரைவில் `சமரசம்' `விடிவெள்ளி' முதலான முஸ்லிம் இதழ்கள், ஜமாத்-ஏ-இஸ்லாமி முதலான முஸ்லிம் அமைப்புகள், அருந்ததிராய் போன்ற சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒன்றாக்கி வெளிநாட்டிலிருந்து கூலி பெற்று இயங்குபவர்களாகவும், மத அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர்களாகவும் சித்திரிக்கிறார். தன்னார்வ அமைப்புக்களை இடதுசாரிகளும் விமர்சிக்கிறார்கள், இந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறார்கள். கூடவே முஸ்லிம் இதழ்களையும் இலக்காக்குவதிலிருந்து ஜெ.மோ யார் என்பது விளங்கி விடுகிறது.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான அருந்ததி ராயின் சமீபத்திய கட்டுரை ஒன்றை `அலசுகிறார்' ஜெ.மோ. முஸ்லிம் வெறுப்பு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கடை விரிக்கும் ஜெ.மோ, மிக அடிப்படையான அரசியல் உண்மைகளையும் கூட அறியாத ஞானசூன்யம் என்பதை வரிக்கு வரி வெளிப்படுத்தி விடுகிறார்.

1947-ல் தொடங்கி காஷ்மீர மக்களின் குரலை ஒடுக்குவது, ஆண்டு தோறும் பத்தாயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் மீது படுகொலைகள், சித்திரவதைகள், கற்பழிப்புகள் நிகழ்த்துவது ஆகியவற்றைச் செய்கிற இந்திய அரசைக் கண்டிக்கும் அருந்ததிராயை `வெளிநாட்டு ஏஜன்ட்' என்கிற அளவில் இழி மொழிகளால் அவதூறு செய்கிறது ஜெ.மோவின் கட்டுரை. இரண்டு வாரங்களுக்கு முன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நான்கு நாட்கள் தங்கி நிலைமையை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அந்த நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் ஒரு விடுதியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தோம் நாங்கள். வெளியில் சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒவ்வொரு ஐந்து காஷ்மீரிக்கும் ஒரு இந்தியப் படைவீரர் என்கிற அளவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் எட்டு லட்சம் வீரர்கள், யாரை வேண்டுமானாலும் கைது செய்ய, சுட்டுக் கொல்ல முழு அதிகாரம் அளிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், பழத் தோட்டங்கள் எல்லாம் இன்று இராணுவக் குடியிருப்புகள். உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த 18 ஆண்டுகளில் ஒரு லட்சம் காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் இன்று அனாதைகள் விடுதிகளில். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படியே 2000-2002 ஆண்டுகளில் மட்டும் `காணாமலடிக்கப்பட்டவர்களின்' எண்ணிக்கை 3784. மனித உரிமை அமைப்புகள் இன்னும் பலமடங்கு அதிகமாக இந்த எண்ணிக்கையைச் சொல்கின்றன. பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள், எந்தச் சட்ட உரிமைகளும் இல்லாத `அரை விதவைகள்' அதாவது காணாமலடிக்கப்பட்டவர்களின் மனைவிகள்: இதுதான் இன்றைய காஷ்மீர்.

எங்கு நோக்கினும் இராணுவ `கேம்ப்'கள். சாலையில் ஒரு இராணுவ வீரனைப் பார்த்தால், நீங்கள் செல்லும் வாகனத்தின் `ஹெட் லைட்'டை அணைத்து உள் விளக்கைப் போட வேண்டும். இல்லாவிட்டால் சுடுவார்கள்.

நான் சொல்கிற எதுவும் ஜெ. மோவுடையதைப் போல ஆதாரமற்ற அவதூறுகளல்ல. வெளிவர உள்ள எனது நூலில் அத்தனைக்கும் ஆதாரங்களுள்ளன. எந்தப் பொது மேடையிலும் அவருடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன்.

``அமர்நாத் குகைக் கோயில் சார்ந்து எழுந்த கிளர்ச்சியை ஒட்டி காஷ்மீரில் உருவான எதிர்க்கிளர்ச்சியை மாபெரும் மக்கள் புரட்சியாக நேரில் சென்று கண்டு ஆனந்த பரவசத்துடன் எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்'' - ஜெ.மோ.

பள்ளத்தாக்கிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவுகள் உட்படச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, கொய்த ஆப்பிள் பழங்களை அழுகடித்துப் பொருளாதாரத் தடைவிதித்த இந்துத்துவ வன்முறை (தன்னெழுட்சியாக) எழுந்த கிளர்ச்சியாம். தமது நிலத்தைச் சட்ட விரோதமாக, மக்களின் சம்மதமின்றி ஆலய நிர்வாகத்திற்கு மாற்றியதை சுற்றுச் சூழல் நோக்கிலிருந்தும், உரிமைகள் அடிப்படையிலும் எதிர்த்த காஷ்மீர் மக்களின் செயற்பாடுகள் மக்கள் புரட்சி இல்லையாம்.

அமர்நாத் பற்றி தினசரி இதழ்களைக் கூட ஒழுங்காகப் படிக்காத அறிவுச் சோம்பேறிகளுக்கு என்ன தெரியும்? யாரும் எளிதில் செல்ல இயலாத `கிளேசியர்' பகுதியொன்றில் குகைக்குள் இருந்த `பனிலிங்கத்தை'க் கண்டுபிடித்தது ஒரு முஸ்லிம் ஆட்டிடையர் (1860). விக்கிரக ஆராதனையில் நம்பிக்கையற்றவர்களாக இருந்த போதும் அந்தச் செய்தியை இந்துச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்ட முஸ்லிம் ஆட்டிடையர்கள் (`மாலிக்'கள்), கடந்த 150 ஆண்டுகளாக அதைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்தனர். ஆண்டு தோறும் வரும் யாத்ரிகர்களுக்கு எல்லாவிதமான வசதிகளையும் செய்து தருதல், மிகப் பெரிய உணவுச் சாலைகளை  அமைத்து உணவு வடித்துத் தருதல் எல்லாம் முஸ்லிம்கள் தான். ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் வரை செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்களின் விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு, இன்று உண்டு. காஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது.

இந்த ஆண்டு இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நான்கு லட்சம் யாத்ரிகர்கள் வந்துபோயுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் கூட ஒரு சிறு தீங்கும் விளைவிக்கவில்லை. மாறாக வழக்கமான அத்தனை விருந்தோம்பல்களும் நடைபெற்றன. இந்து யாத்ரிகர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஜம்முவிலிருந்து கொண்டு இந்துத்துவ அமைப்புக்கள் மேற்கொண்ட `கிளர்ச்சியை' ஒட்டி 30 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உண்டா, இல்லையா?

காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் விரிவாக்க ஆக்ரமிப்பு இந்துக் குடியேற்றங்களைச் செய்யும் வடிவிலானதல்ல. மாறாக எல்லாவிதமான நிறுவனங்களின் மீதுமிருந்த காஷ்மீர மக்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்பட்டது. இதனுடைய ஒரு உச்ச கட்டம்தான் அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) உருவாக்கப்பட்டதும், 100 ஏக்கர் நிலம் கையளிக்கப்பட்டதும். பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்ட அறிஞர் சின்ஹாவின் சதித்திட்டம் அது. ஒவ்வொரு ஆண்டும் உருப்பெறும் அந்தப் பனிலிங்கத்தின் ஆயுள் இரண்டு வாரங்கள் மட்டுமே. பின் அது உருகி `லிட்டர்' மற்றும் `ஜீலம்' நதிகளில் கரைந்தோடிவிடும். படிப்படியாக யாத்ரிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, யாத்திரைக் காலத்தை இரண்டு வாரங்களிலிருந்து இரண்டு மாதமாக அதிகரித்தது, பனி லிங்கத்தின் இடத்தில் நிரந்தரமாக ஒரு பளிங்கு லிங்கத்தை அமைக்கும் சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்ச கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும், ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்ரீகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டிடங்கள் உருவாக்குவதும். கடந்த 18 ஆண்டுகளில் உபரியாக எட்டு லட்சம் இராணுவத்தினரைச் சுமந்து அழிந்துள்ள காஷ்மீரின் இயற்கை வளங்கள் நிரந்தரமாக அழித்து விடும் எனச் சுற்றுச் சூழலாளர்கள் சொல்லியிருப்பது தெரியுமா ஜெ.மோக்களுக்கு.

``அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்று குவித்து அடித்துத் துரத்திய பின்னர்தான் அவர்களின் (காஷ்மீரிகளின்) போராட்டம் தொடங்கியது'' -ஜெ.மோ.

ஜெ.மோவின் வெறுப்பு அரசியலின் உச்சகட்ட வெளிப்பாடு இது. அவரது ஞானசூன்யத்திற்கான அப்பட்டமான சாட்சியம் இது. பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.

பிரிவினைக் கலவரங்களின்போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம். கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும். காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார். 1990-களில் ஆளுநர் ஜெக்மோகனின் (ஜெய மோகனுக்கும் ஜெக்மோகனுக்கும் மூளையில், சிந்தனை முறையில் எந்தப் பெரிய வித்தியாசமும் கிடையாது) ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள்தான் இன்று அகதிகளாக உள்ள பண்டிட்கள். இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...

காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை. இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள். காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல. அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். இம்முறை நான் பண்டிட்களின் பிரதிநிதியாக குமார் வாஞ்சு என்பவரையும் சந்தித்துப் பேசினேன்.

``காஷ்மீர் மக்கள் தேடுவது சுதந்திரத்தை அல்ல. பாகிஸ்தானோடு இணைவது மட்டுமே என்பது வெளிப்படை'' - ஜெ.மோ.

இதுவும் உண்மையறியாமையின் விளைவான பிதற்றலே. சையத் அலி ஷா கீலானி போன்றவர்கள் பாகிஸ்தானுடன் இணைதல் என்கிற கருத்தை முன் வைத்தபோதிலும் சுதந்திர காஷ்மீர் (`ஆஸாதி') என்கிற கோரிக்கையை முன் வைப்பவர்களே அங்கு அதிகம். அமர்நாத் பிரச்சினைக்குப் பின் இன்று அங்கு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தீவிரவாதம் பின்னுக்குச் சென்று அமைதி வழியிலான மக்கள் எழுச்சியாக அது மாற்றமடைந்துள்ளது. அதையொட்டியே அக்டோபர் 6-ல் அறிவிக்கப்பட்ட லால் சவுக் பேரணி. இதை நேரில் காண்பதும் எங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்திய அரசின் கொடுங்கரங்கள் இந்த எழுச்சியை கொடூரமாக ஒடுக்கியதைத்தான் நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது. இன்று உருவாகியுள்ள `காஷ்மீர் ஒருங்கிணைப்புக் குழுவில்' பிரிந்திருந்த ஹூரியத் அமைப்புகள் தவிர, பார்கவுன்சில், வணிகப் பேரவை எனப் பல தரப்பு சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர். பெரியவர் கீலானியையும் எங்கள் குழு சந்தித்து உரையாடியது. அவரது கருத்தும் மாறியுள்ளது. பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தோம். பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சீக்கிய சமூகத்தினர் எல்லோருடனும் உரையாடினோம். இன்று காஷ்மீர மக்களின் ஒரே கோரிக்கை `ஆஸாதி. தான் பாகிஸ்தானுடன் இணைப்பு அல்ல.

பாகிஸ்தானை ஒரு தாலிபானிய அரசு எனவும், இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளும் இல்லாத சர்வாதிகார அமைப்பு எனவும் ஜெ.மோ குறிப்பிடுகிறார். இதுவும் அப்பட்டமான அறியாமையின் விளைவே. இது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும் பாகிஸ்தான் தன்னை ஒரு முஸ்லிம் அரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதில்லை. ஜின்னா முஸ்லிம்களுக்கான ஒரு நாட்டைத்தான் கோரினாரே ஒழிய இஸ்லாமிய அரசு ஒன்றையல்ல. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், ஜனநாயகத்திற்குப் பொருந்தாத நிலப் பிரபுத்துவ மதிப்பீடுகளினடிப்படையிலான அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே நடைபெற்ற ஜனநாயகத்திற்கான பேரெழுச்சியையும், போராட்டங்களையும் நாம் கவனிக்க வேண்டும். இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டதையும் மனங்கொள்ள வேண்டும். வழக்குரைஞர் அமைப்புக்கள், நீதிமன்றங்கள் ஆகியன இந்தியாவைக் காட்டிலும் அங்கே போர்க்குணத்துடனும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன. அதன் விளைவே நீதிமன்றங்களின் மீதான முஷரெப்பின் தாக்குதல். அதன் பலன்களை இன்று அவர் சந்தித்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது.

ஒப்பீட்டளவில் அகக்கட்டுமானங்கள், சாலை வசதிகள் முதலியன அங்கு அதிகம். இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்' கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல. பாகிஸ்தானில் பல மட்டங்களில் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மதத்தவருக்கு அவர்கள் வேண்டாமென்று சொன்ன வரை இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்ததும் ஜெயமோகனுக்குத் தெரியுமா?

ஏதோ பாகிஸ்தானில் பாலும் தேனும் ஓடுவதாகவும், ஜனநாயகம் செழித்திருப்பதாகவும் நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். அமெரிக்க விசுவாசத்திலாகட்டும், சொந்த மக்களை ஒடுக்குவதிலாகட்டும் இந்திய அரசுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல பாகிஸ்தான்.

காஷ்மீர் பிரச்சினையை, 1. பாகிஸ்தானின் தூண்டுதல், 2. `ஜிஹாதி' பயங்கரவாதம், 3. தேசப் பிரிவினையின் எச்ச சொச்சம் ஆகியவற்றின் விளைவு என்பதாக மட்டுமே முன்னிறுத்தி காஷ்மீர மக்களின் சுய நிர்ணய உரிமை, சுதந்திர வேட்கை என்கிற அம்சத்தை மூடி மறைப்பது இந்திய ராஜ தந்திரத்தின் சதித் திட்டங்களில் ஒன்று. இந்தச் சதியைத் தோலுரித்து அவர்களின் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்திக் காட்டுவதே அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களின் கடமையாகிறது. ஒரு எழுத்தாளனின் கடமை அதுதானே. வாழுங் காலத்தின் சமூக அநீதிகைளக் கண்டு கொதித்து சம காலத்தையே நிராகரிப்பவன்தானே எழுத்தாளன். டால்ஸ்டாய் முதல் ஆஸ்கார் வைல்ட் வரை அப்படித்தானே வாழ்ந்துள்ளனர். எழுத்துக்கள் காலத்தைக் கடந்து நிற்கவில்லை என்பதன் பொருளும் இதுதானே.

பாகிஸ்தான் தூண்டுதல், பயங்கரவாதப் பிரச்சினை எல்லாவற்றையும் மறைத்து அதை ஒரு சுதந்திர வேட்கையாகச் சொன்னதைச் சுட்டிக் காட்டி அதற்காகவே அருந்ததியை `குருவி மண்டை' எனவும், கூலிக்கு  எழுதுபவர் எனவும் இழிவு செய்கிறார் ஜெ.மோ. ஒரு எழுத்தாளனின் மண்டைக்குள் சம கால ராஜதந்திரியின் மூளை அமைந்துள்ளதெப்படி? ஜெ.மோ. ஒரு வினோதப் பிராணிதான்.

ஒன்றைச் சொல்லியாக வேண்டும். உலகெங்கிலும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களுக்கும், காஷ்மீரி மக்களின் போராட்டத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. காஷ்மீர மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரித்தான் போராடிக் கொண்டுள்ளனர். காஷ்மீரி மக்களின் விருப்பைக் கேட்டு அதன்படி முடிவெடுப்பது என்கிற வாக்குறுதியை இந்திய அரசு ஐ.நா. அவையின் முன் அளித்தது. இந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்காகவும், அரசியல் துரோகங்களை எதிர்த்துமே காஷ்மீரிகள் இன்று போராடிக் கொண்டுள்ளனர்.

இன்று காஷ்மீர மக்கள் அமைதி வழியை நோக்கித் திரும்பியுள்ளனர். ஒற்றைக் கோரிக்கையுடன் ஒருங்கிணைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து காஷ்மீரத்திற்குச் சுதந்திரம் என்பதன் இன்னொரு பக்கம் காஷ்மீரத்திலிருந்து இந்தியாவிற்கும் சுதந்திரம் என்பதே. காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படும் போதே இந்திய மண்ணில் பயங்கரவாதம் முடிவுக்கு வரத் தொடங்கும். தினந்தோறும் இந்த அம்சத்தில் செலவிடப்படும் ரூ.500 கோடியையும் இந்திய மக்களின் நலனுக்குச் செலவிட இயலும்.

ஜெயமோகன் கக்கியுள்ள இதர விஷக் கருத்துக்களைச் சுருக்கம் கருதி விட்டு விடுகிறேன். இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அஃப்சல் குருவின் மனைவி குடியரசுத் தலைவரைச் சென்று மிரட்டினாராம்.  ``இந்தியச் சமூகம் அளிக்கும் வாய்ப்புக்கள்'' மூலம் முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் முன்னேறி வருகிறார்களாம் (பார்க்க : சச்சர் அறிக்கை); உலகப் பரப்பில் வாழும் முஸ்லிம் சமூகங்களை ஆங்காங்கு புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளாக மாற்றுகின்றனவாம் முஸ்லிம் அமைப்புகள் (எத்தனை கொடூரச் சித்திரிப்பு பாருங்கள்); மாற்று தேசியங்களை மத நோக்கில் அழிக்க முஸ்லிம்களுக்குத் தயக்கம் இருக்காதாம்.

``காரணம், இஸ்லாம் என்பது ஒரு தேசிய கற்பிதம் - ஒரு தேசிய கற்பிதம் - ஒரு மதமோ வாழ்க்கை முறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய அற்புதங்களை ஏற்காது'' - ஜெ.மோ.

ஜெயமோகனுக்கு இஸ்லாம் பற்றியும் ஒன்றும் தெரியாது என்று மட்டுமே மேற்குறித்த வாசகங்களிலிருந்து நாம் புரிந்து கொள்கிறோம். இஸ்லாமின் `தேசியம்' என்கிற கருத்தாக்கமே கிடையாது. `உம்மா' - சமூகம், நம்பிக்கையாளர்களின் கூட்டமைப்பு என்பதற்கே அங்கு முக்கியத்துவம். பிற நம்பிக்கையாளர்களுடன் சமூக இணக்கத்தை அது மறுத்ததில்லை. காஷ்மீர மக்கள் அதற்கொரு நடைமுறை எடுத்துக்காட்டு.

சமூக அநீதிகளுக்கு எதிராக நிற்கும் தமிழ் எழுத்தாளர்களைப் பெயர் குறித்து ஏசுகிறார் ஜெ.மோ. மாவோயிஸ்டுகளுக்கு சீனாவிலிருந்து நிதி வருகிறதாம். ``ஆங்கில இதழ்களின் ஞாயிறு இணைப்பில்'' வரும் கட்டுரைகளைப் பார்த்து தமிழில் எழுதுகிறவர்களாம் இத்தகைய அறிவுஜீவிகள். இப்படிச் சொல்வதற்கு ஜெயமோகனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பதை, ``மனச்சாட்சியுள்ள வாசகர்கள்'' யோசிக்க வேண்டும். தமிழில் வெளிவந்த நூற்களையே ஈயடிச்சான் காப்பி அடித்து பொ. வேல்சாமி போன்றவர்களிடம் மாட்டிக் கொண்டு குடும்ப சகிதமாக அவமானப்பட்டவர் ஜெ.மோ. இவர் ஆங்கில இதழ்களைப் பார்த்து கட்டுரை எழுதுவதில்லை என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இவர் ஆங்கிலத்தில் எதையும் படிப்பதில்லை. மலையாளத்தில் வரும்வரை அவர் காத்திருப்பார்.

``தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச் சூழலில், முத்திரை குத்தப்பட்டு, வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்ற போதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே `வெல்க பாரதம்' '' எனக் கட்டுரையை முடிக்கிறார் ஜெ.மோ. அவரது கட்டுரையை முழுமையாகப் படித்துப் பாருங்கள் - முத்திரையை வேறு யாரும் அவர் மீது குத்த வேண்டுமா என்பது விளங்கும். முத்திரை குத்துவதற்கு அவர் முதுகில் இடமில்லை. அவரது உடல் முழுவதும் காவி முத்திரை படிந்துள்ளதற்கு இந்தக் கட்டுரையே சாட்சி.

`தேசபக்தி பாவமென்றாகி விட்ட சூழல்' என அவர் சமூகச் சுரணையுள்ள எழுத்துக்களைக் குறிப்பிடுகிறார். உண்மைதான். தேசபக்தியைப் பாவமென்று மட்டுமல்ல, கொடூரம், அயோக்கியத்தனம், vicious என்றெல்லாம் பெரியார் ஈ.வெரா மட்டுமல்ல, டால்ஸ்டாய் உள்ளிட்ட மனிதரை நேசித்த, சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் அவ்வளவுபேரும், ஆம் அவ்வளவு பேரும் சொல்லித்தான் உள்ளனர்.

ஜெயமோகனைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு `தேசபக்தி', `தேசியம்' ஆகியன குறித்தும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்போம்.

குறிப்பு : ஜெ.மோ போன்றவர்களுக்காக ஒரு தகவல்: காஷ்மீர் பயணம் முழுக்க முழுக்கச் சொந்தச் செலவில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவர் செலவு ரூ.19,200/-. (அடுத்த இதழில் முடியும்..)

- அ.மார்க்ஸ்                                                  நன்றி- தீராநதி-01-11-2008

குறிப்பு- தீராநதியில் அ. மார்க்ஸ் அவர்களால் எழுதப்பட்ட இக்கட்டுரை இங்க பதிவ வாசகர்கள் பரவலாக அறியும் பொருட்டு மறபதிவு செய்யப்படுகிறது.

டவுசர் கிழியும் டாலர் அரசியல் - 2

நண்பர்களுக்கு எனது முந்தைய பதிவான டவுசர் கிழியும் டாலர் அரசியலும் குப்பை கூட்டுபவர்களும் -அமேரிக்க பொருளாதார நெருக்கடி. யின் நோக்கம் பொருளாதார நெருக்கடி குறித்து ஒரு பயனுள்ள விவாதமாக தொடர வேண்டும் என்பதே.  ஆனால், வழக்கம்போல் பின்னொட்டங்கள் தனிமனிதப் பிரச்சனை மற்றும் மார்க்சிய. எதிர்-மார்க்சிய கருத்தாக்கங்கள் பற்றியதாக மாறிச் செல்கிறது. மார்க்சியம்-எதிர்மார்க்சிய உரையாடல் நடத்தப்பட வேண்டிய தளம் வேறு. தவிரவும் இத்தகைய உரையாடல்கள் உலக அளவில் நடந்துகொண்டிருப்பவை. அவற்றை நடத்த விரும்பும் நண்பர்கள் ஆதாரத்துடன் மூலக்கட்டுரைகளையும் அல்லது தங்களது சுயமான புரிதல்களையும், கருத்துக்களையும் முன்வைப்பதன் மூலமே பயனுள்ள வகையில் இதனை புரிந்து எடுத்துச் செல்லமுடியும். தனிமனித தாக்குதல் இல்லாமல் முன்-அனுமானங்கள், காழ்ப்புணர்சிகள் இல்லாமல் ஆரோக்கியமான உரையாடலாக அவை அமையவேண்டும். இந்த இதழ் உயிரோசையில் தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான இந்திராபார்த்த சாரதி  கார்ல்மார்க்ஸும் வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சியும் என்று தனது பார்வையை முன்வைத்துள்ளார். அதில் முக்கியப்படுத்தும் மார்க்சிய நிலைப்பாடு என்பது முதலாளியம் தனது உள் நெருக்கடிகளால் சிதைவை சந்திக்கும் என்பதை இன்றைய பொருளாதார நெருக்கடி முன்கொண்டு வந்துள்ளதை சுட்டிக் காட்டுகிறார். 

மார்க்சின் உபரிமதிப்பு பற்றியக் கொட்பாடு விஞ்ஞானபுர்வமற்றது என்று சொல்லும் நண்பர் அதியமான் அதற்கான ஆதாரங்களையும் தனது சிந்தனைகளையும் தமிழில் முன்வைத்தால் பரவலாகப் புரிந்துகொள்ள ஏதுவாகும். மார்க்சியத்தை சகலோரோக நிவாரணியாகக் கான்பதும், மார்க்சியம் காலாவதி அடைந்துவிட்டது என்பதும் அடிப்படையில் சாரம்சவாத தன்மைக்கொண்ட பார்வைகள்தான். இவை இரண்டுமே மார்க்சிய வார்த்தையில் கூறினால் இயங்கியலை மறுப்பவை. சமூக வளர்ச்சிக்கு கேடானவை. மார்க்சியம் என்பது சமூகவளர்ச்சிக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் ஒரு இயங்கியல் பார்வையைக் கொண்டது. அப்படி இது இயங்குவதால்தான் இன்றுவரை உயிர்ப்புள்ள ஒரு சிந்தனைமுறையாக உள்ளது. 

உரையாடலில் பங்குபெற்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

அன்புடன்

ஜமாலன்.

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” - தொடரும் உரையாடல் -2

எனது தீராநதிக் கட்டுரையான “கன்னிவெடி புதைக்கப்பட்ட உடல்களும் கற்பித நிலங்களும்.”  என்கிற கட்டுரைக்கு விஜி“ஸ் என்பவரால் முன்வைக்கப்ட்ட விவாதம் எனது முந்தைய பதிவான ”தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” வில் சொல்லப்பட்டது.  அப் பதிவிற்கான அவரின் நீண்ட பின்னொட்டத்தின் தொடர் உரையாடலுக்கான எனது பதில் நீண்டுவிட்டதாலும்,  பொது விவாத நோக்கிலும் "தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” - தொடரும் உரையாடல்". என்கிற தனிப்பதிவாக இடப்பட்டது.  அதற்கு அவரது தொடர உரையாடலாக முன்வைக்கப்பட்ட பின்னொட்டத்திற்கான பதில் இங்குத் தனிப்பதிவாக இடப்படுகிறது. ஒரே பதிவில் இந்த உரையாடலைத் தொடர்வதால் இது தனிப்பட்ட உரையாடலாக போய்விடும் என்பதால். இதனை பொதுத் தளத்திலான உரையாடலாக மாற்றவே தனிப்பதிவாக முன்வைக்கப்படுகிறது.

நண்பர் viji's ற்கு..

முதலில் நீங்கள் எனது கன்னிவெடி.. கட்டுரையை முறையாகப் படித்து புரிந்து கொண்டிருந்தால் இந்த அளவிற்கு தம் கட்டி பேசமாட்டீர்கள். காரணம் அக்கட்டுரையில் தேசியம் குறித்த பல உரையாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பதுடன் தேசியம் என்பதும் ஒரு கற்பிதமே என்பதையும் அது முன்வைக்கிறது. அதை முழுதாகப் படிக்காமல் அதில் உள்ள ஒரு வையாபுரிப்பிள்ளையின் குறிப்பை மேலோட்டமாக படித்துவிட்டு அது எந்த சூழலில் சொல்லப்பட்டுள்ளது என்றும் புரியாமல் வாதத்தை கிளப்பினீர்கள். இருந்தும் அது பொதுவாக தப்பாக புரிந்து கொள்ளப்பட ஏதுவாகாமல் அதை தொடர்ந்தேன் நான்.  இந்த உரையாடல் அந்த தளத்தை தாண்டி கால்டுவெல் பற்றியதாக வளர்ந்து செல்கிறது. உண்மையில் ஒருவித “காழ்ப்புணர்வு” அல்லது “தமிழ் மீதான எரிச்சலுமே” உங்கள் விவாதத்தில் இருக்கிறது. சம்பந்தமில்லாமல் கருணாநிதி பணமூட்டை அரசியல் என்பதிலிருந்து உங்கள் உள்ளே செலுத்தப்பட்டிருக்கும் தமிழின எரிச்சல் புகைவிடுவது தெரிகிறது. முதலில் உங்கள் முன் அனமானங்கள் அபிப்பராயங்களை விட்டுவிட்டு பேசப்படுவதை ஒட்டி பேச முயலுங்கள். நிற்க. 

//>நீங்கள் இந்த விவாதத்தை தொடங்க வேண்டியது கவிதாசரணில்தான்.

சரி, ஆவன செய்ய முயல்கிறேன்.. ஆனாலும் நீங்கள் சில கருத்துகளை முன்வைத்து சில கேள்விகளை கேட்பதால் சில பதில்களை சொல்லவேண்டுயுள்ளது.//

நன்றி பதில்களுக்கு.

//>இந்தியாவின் ஒரே மொழிக்குடும்பம் என்று கட்டமைக்கப்பட்ட மாக்ஸ்முல்லரின் கருத்தை மறுத்து

மாக்ஸ்முல்லர் சமஸ்கிருதத்தைப் பற்றி எழுதினாறே தவிற எல்லா இந்திய மொழிகளைப் பற்றி கருத்து கூறவில்லை.//

180px-Max_Muller நீங்கள் முதலில் ஒன்றை தெரிந்து கொள்வது நல்லது. எதையும் தெளிவாக படித்தவிட்டு எழுதுங்கள். இது ஒருவகை செலக்டிவ் அம்னீஷியாவாகிவிடக் கூடாது. மாக்ஸ்முல்லர் பற்றி நீங்கள் அதிகம் படிக்க வேண்டாம். விக்கிபீடியா போன்ற ஆன்-லைன் அகராதிகளைப் படித்தால் போதும். அவர் சமஸ்கிருதம் பற்றி மட்டும் எழுதவில்லை, ஆரியம்தான் உயர்ந்த இனம் ஐரோப்பிய மூல இனம் என்றும் சமஸ்கிருத மொழிதான் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் அடிப்படை என்றும் எழுதியவர். ஆரியன் என்கிற கருத்தாக்கத்தைக் கட்டமைத்தவர் அவர்தான். நீங்கள் உண்மையில் நோக வேண்டியது அவரைத்தான். இன்றைய எல்லா பார்ப்பன-ஆரிய மேலாண்மை அதை எதிர்த்த திராவிட-தமிழ் இனப் போராட்டம் எல்லாம் அந்த புள்ளியில் துவங்கியதுதான். ஆரிய இனம் என்கிற இனவாதக் கண்ணோட்டத்திற்கான விதை அவரால் போடப்பட்டதுதான். அதன் பக்கவிளைவுதான் மற்றதெல்லாம். சரி உங்கள் கருத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேனே கால்டுவெல்லும் திராவிட-மொழிக்குடும்பம் பற்றிதான் எழுதினார். சமஸ்கிருதம்-பற்றி எழுதவில்லை.

//>“கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பம் என்பதற்கான ஆதாரங்களை தனது நூலில் தொகுத்ததே மிகப்பெரும் பங்களிப்பாகும்“. இதில் என்ன வேடிக்கை உங்களுக்கு?

என் வேடிக்கை அதல்ல. தமிழ் கலாசார, அரசியல் வளர்சிக்கே கால்ட்வெல்தான் வித்திட்டார், அவர்தான் ரட்சகன் என்ற துதிபாடல் பஜனைதான் வேடிக்கை. //

உண்மைதான் இதில் மறுப்பதற்கொ வேடிக்கை விளையாட்டிற்கோ என்ன உள்ளது? கால்டுவெல்தான் தமிழ் என்கிற குறிப்பாக திராவிடம் என்கிற கருத்தாக்கத்தை கட்டமைத்தவர். அவர்தான் தமிழ் மற்றும் திராவிடத்தின் ரட்சகர் தமிழ் இனமானத்தையும் திராவிடத்தைம் முன்வைக்கும் அரசியல் போக்கிற்கு. தமிழும் தமிழ் அரசியலும் வேறு வேறு அல்ல. தமிழ் ஒரு மொழி என்ற நிலையைத்தாண்டி அது அரசியல் கருத்துருவமாக ஆகிவிட்டபின்.. தமிழ் வேறு தமிழினம் வேறு என்பதாக பேசமுடியாது. அதாவது “தமிழ் வாழ்க! தமிழன் ஒழிக!“ என்பது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலான கோஷமே தவிர பயனுள்ள வாதமாகாது. துதிபாடுதல் பஜனை போன்றவற்றை தமிழன் கற்றுக்கொண்ட பின் அதை திரும்ப நடைமுறைப்படுத்துவதில் தப்பென்ன? அதை கற்றுத் தந்ததால்தான் இந்த பிரச்சனைகளே. ஆங்கிலேயருக்கு துதிபாடியவர்களைப் பார்த்து தமிழனும் துதிப்பாடக் கற்றுக்கொண்டான்.

//>சிந்துவெளி நாகரீகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக உள்ளது.

இதெல்லாம் ஒரு யூகம், ஸ்பெகுலேசனே தவிர, திட்டவட்டமாக யாராலும் சிந்து நாகரீகத்தைப் பற்றி பேசமுடியவில்லை. முப்பது வருடம் ஆய்வுக்கப்புரம், 1998லேயே ஐராவதம் மகாதேவன், சிந்து எழுத்துகள் யாராலும் இண்டர்ப்ரெட் செய்யவில்லை; அவர் சாகும் வரை நிலமை அப்படி இருக்கலாம் என்கிறார். தமிழர்கள் தன்மானத்திற்கு ஏன் இப்படிப்ட்ட ஸ்பெகுலேசன்க்ளும், 19ம் நூற்றாண்டு மொழியியல்களும். அவை தேவையே அல்ல.. மொழியியல், தொல்லியல் ஆய்வுகளை, அதன் நிபுணர்கள் பரிசீலித்து கொள்ளட்டும்.//

நல்லா காட்டுறாங்கடா படத்த. ஒடுக்கப்பட்ட இனம் தனது அடையாள அரசியலை நிலைநிறுத்த வரலாற்றை தேடுதல் என்பது அவசியம். ஒடுக்குபவர்களுக்கும் வரலாற்றை தனதாக்கி ஆண்டுக் கொண்டிருக்கும் ஆண்டைகள் வேண்டுமானால் வரலாற்றை விட்டுவிடலாம். அடிமைகளுக்கு வரலாறு தேவை. அப்பொழுதுதான் ஆண்டைகள் எப்படி வரலாற்றை திரித்து தங்களை ஆண்டு வருகிறார்கள் என்பது புரியும். இந்த ஸ்பெக்குலேஷன் ஊகம் எல்லாம்.. மூலவர்களாக தங்களைக்க் கட்டமைத்துக் கொண்டவர்கள் வழிகாட்டியதுதான். ஏன்? சிந்துவெளி நாகரீகத்தை ஒரு ஆரிய நாகரீகமாகவும், ஆரியர்கள் அல்லது பிராமணர்களின் புர்வஜென்ம புமியாக இந்தியா அதாவது “பாரத்“ இருப்பதாகவும் வரலாற்றை முன் வைப்பவர்களிடம் இதனை நீங்கள் சொல்ல வேண்டும். நிபுணர்கள் வேறு தமிழர்கள் வேறா? என்ன சொல்ல வருகிறிர்கள்? நிபுணர்கள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்களா? ஒரு இனத்தின் வரலாற்றை மொழியை நிபுணர்கள்தான் கட்டமைக்கிறார்கள். அதனால் பிரச்சனை பாமரர்களிடம் இல்லை உண்டு கொழிக்கும் வர்க்கத்திற்கு துணைப்போகும் கருத்தியலை கட்டமைக்கும் நிபுணர்களிடம்தான் உள்ளது.  

//>அப்படி எனில் கிழக்குலகச் சிந்தனைகள் பற்றி பல வால்யும்கள் மாக்ஸ் முல்லர் போட்டிருக்காவிட்டால் நமது “உன்னதங்கள்” எல்லாம் ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி குண்டு சட்டியில் ஓட்டிய “குதிரை” (சிந்துவெளிக்குதிரை அல்ல) ஆகியிருக்கும்

மாக்ஸ்முல்லர் இந்தியக் கலாசத்திற்கு அளித்த கொடை ஒன்ருமில்லை. அவர் ஒரு வரி எழுதாமல் இருந்தாலும் இந்திய கலாசரம் தன் போக்கில் போய்கொண்டுதான் இருக்கும்.. இன்னொன்று, அவர் இந்தியாவிற்க்கு வரவில்லை, ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி ஒடினார் என்பது கற்பனை.//

என்ன இது? புசணிக்காயைக் கூட சோற்றில் மறைக்கலாம் புதத்தை மறைக்க முடியுமா? மாக்ஸ்முல்லர் ஒரு தனிச்சிறப்பான அறிவாற்றல் உள்ள மேதை. அவர் ஜெர்மன் தாய்மொழி என்றாலும் சமஸ்கிருதம், அரபி மற்றும் பாரசீக மொழிகளைக் கற்றுத் தேர்ந்நதவர். மிகப்பெரிய கீழ்திசைவியல் ஆய்வாளர். 50 - தொகுப்புகளாக கீழ்த்திசை “புனித“ சிந்தனைகளை மொழி பெயர்த்து வெளியிட்டவர். இந்தியாவை அதன் பாரம்பரிய “புனிதம்“ என்று சொல்லித் திரியும் வேதகால “பொற்கால“த்தை உலகிற்கு உணர்த்தியவர் மட்டுமல்ல அதன்மூலம் இந்தியாவிலேயே ஆரிய மேண்மை மற்றும் மேலாண்மை பற்றிய கருத்தாக்கத்தைக் கட்டமைத்தவர். “அழித்த கொடை ஒன்றுமில்லை“ என்பதிலேயே நீங்கள் மாக்ஸமுல்லர் பற்றிக் கொண்டிருக்கும் அறிவாற்றல் விளங்குகிறது. யார் எழுதாவிட்டாலம் உலகம் தன்போக்கில் போய்க் கொண்டிருக்கும் என்கிற சாராம்சவாத கருத்தியலை எடுத்து வராதீர்கள். அது அடிப்படையில் தவறான கருத்து. ஏனென்றால் கதைகளும், தொண்மங்களும், புராணங்களும் மற்றும் இலக்கிய, வரலாற்று, விஞஞான ஆவணங்களும் இல்லாமல் உலகம் இல்லை. மொழிதான் உலகை படைக்கிறது. இதை நான் சொல்லவில்லை சைவசித்தாந்தம்கூட “நாதரூப“ உலகம் என்பதன் பிண்ணனி இதுதான். உலகம் “ஆகுக“ என்கிற சொல்லால் படைக்கப்பட்டதாக குரான் கூறுகிறது. வார்த்தை மாம்சமானது என்பது பைபிளின் வாக்கு. இப்படி.. உலகம் சொற்காளால் அதனால் பின்னப்பட்ட கதைகளால் ஆனது. அதனால் ஆய்வுகளும் அறிக்கைகளும் இல்லாமல் உலகம் என்பது இல்லை. இதுகுறித்து விரிவாக பேசுவது இங்கு உசிதமல்ல. குறிப்பாக காலனியக் கட்டுமானம் என்பதும் மேற்குலகம், கிழக்குலகம் என்பதும் ஆய்வகள் மற்றும் பிரதிகள் வழியாக கட்டமைக்கப்பட்டதே. அதனால் கால்டுவெல் எப்படி பஜனைப்பாட திராவிடர்களுக்கு ஒரு கடவுளோ அப்படி மாக்ஸ்முல்லர் ஆரிய பஜனைப்பாடிகளக்கு ஒரு கடவுள். போகிற போக்கி்ல் அந்த மாமேதைகளை தூக்கி எறிந்துவிட முடியாது.

அப்பறம் விவாதத்தை சரியாக படித்தால் தெரியும்  “ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி ஒடினார்“ என்று நான் சொல்லவில்லை. அங்கு குறிப்பிடுவது மாக்ஸ்முல்லரை அல்ல இந்தியா உலகிற்கே வழிகாட்டி உன்னதக் கலாச்சாரத்தைக் கொண்டது என்று தலித் வாயில் சாணிப்பால் புகட்டி தனது மனித நேயத்தை பண்பாட்டை பறைசாற்றிக் கொண்டிருக்கும் “இந்திய உன்னத பண்பாட்டு பஜனைக் கொஷ்டிகளைத்தான்“ சொன்னேன். மாக்ஸ்முல்லர் இல்லாவிட்டால் உலகளவில் இந்த உன்னத உடுக்கையடிகள் இல்லாமலே போயிருக்கும். கொஞ்சம் தெளிவாக அதைப் படியுங்கள்.

//>தமிழ் என்கிற இனக்கட்டுமானம் ஒரு காலனிய அரசியல் கட்டுமானம் என்பதுடன் அதற்கு ஆரிய பார்ப்னீய மேலாண்மையை எதிர்த்து விழிப்புக்கொண்ட ஒரு வரலாற்றுத் தேவை இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியுமா?

மறுக்க முடியும். சிலப்பதிகாரம் முதலிய காப்பிய காலங்களில் கூட தமிழ் என்ற இனக்கட்டுமானம் இருந்தது. ஆனால் ஆரிய பார்ப்னீய மேலாண்மைக்கு எதிரானது அல்ல.//

தமிழ் என்கிற இனக்கட்டுமானம் காலனியக் காலத்தையது. இனம் என்பதே காலனிய ஒடுக்கமுறைக் கருவிதான். இதனை மாங்கு மாங்கு என்று எனது கன்னிவெடிகள் கட்டுரையில் எழுதி உள்ளேன். விடியவிடிய கதைக்கேட்டு விடிஞ்சதும் “சீதைக்கு ராமன் சித்தப்பன்“ என்கிற கதையாக உள்ளது. சங்ககாலத்தில் தமிழ் என்கிற இனம் (இன்றைய மொழியில்) இருந்தது. ஆனால் அது தன்னை இனமாக உணரவில்லை. ஒரு குடியாக உணர்ந்தது. அதேபோல் சிலப்பதிகாரம் காலத்திலும் தமிழ் என்கிற இனம் இருந்தது. அது அரசர்களின் குடிமக்களாக இருந்தது. அதற்கு இனம் என்கிற உணர்வு வகையாகாது. அடுத்து களப்பிரர்கள் காலத்தில்தான் பௌத்த பிக்குவான புசிதபாதர் என்பவர் மதுரையில் “திராவிடச் சங்கம்“ என்கிற ஒன்றை உருவாக்குகிறார். நீங்கள் கூறிய சிலப்பதிகாரம் உள்ளிட்ட பேரிலக்கியங்கள் அக்காலத்தில் தோன்றியதுதான்.  (தமிழக பண்பாடும் வரலாறும்- கே.கே. பிள்ளை பாருங்கள்.) அக்காலத்தில் ஆரிய-பார்ப்பனிய மேலாண்மை இருந்ததையும் அதற்கு எதிராக சமண, புத்தமத எழுச்சியும் அதனை ஆதரித்த அரசுமே களப்பிரர்கள். ஆக ஆரிய மேலாணமையை எதிர்த்து களப்பிரர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்ததையும் அதன்பின் வந்த சைவ வைணவ எழுச்சிகள் களப்பிரர்கள் ஆட்சியை அகற்றியதையும், அதன்பின் தோன்றிய மூவேந்த பேரரசுகள் சைவ வைணவச் சார்புப் பேரரசுகளாக இருந்ததும் வரலாறு. ஆக, ஆரிய மேலாதிக்கம் என்பதை உணர்ந்து எதிர்க்கும் நிலை களப்பிரர்கள் காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அது இன்றை இனம் என்கிற கருத்தில் செயல்படவில்லை. மதம் என்கிற வடிவில் செயல்பட்டது. மதம் என்பது உலக பற்றிய நிலவுடமைச் சொல்லாடல் என்றால் இனம் என்பது முதலாளித்துவச் சொல்லாடல். இதன்பொருள் ஆரிய மேலாண்மையை எதிர்ப்பதற்கான வடிவம் என்பது அந்ததந்த காலத்து கருத்தியல்களால் கட்டப்பட்ட சொல்லாடல்கள் வழியேதான் சாத்தியமாகும். இதுவும் விரிவாகப் பேசப்படவேண்டிய ஒன்று. போகட்டும். நீங்கள் கூறவருவதன் சாரம் இதுதான் ”நான் உதச்சிக்கினே இருக்கேன் நீ வாங்கிகினே இரு”, எல்லாம் ஒன்றாக ஒத்துப்போவோம் என்பதுதான். இதுதான் பல ஆண்டுகளாக செய்யப்படும் திராவிட தமிழின தலித் மற்றும் பெண்கள் ஆதிவாசிகள் மீதான கலாச்சாரா ஒடுக்குமறையாக ஆரிய-பார்ப்பனிய மேலாண்மையால் செய்யப்பட்டு வருகிறது.

//ஆங்கில, மேற்கத்திய சிந்தனை முறைபடி – அதுவும் 19ம் நூறாண்டு சிந்தனைப் படி, இந்தியா போன்ற அடிமை நாடுகள் தங்களால் சுய அரசாங்கம் செய்ய முடியாதவை; ஏனெனில் அடிமைநாடுகளில் நடக்கும் (ஆரிய-திராவிட)இன சுரண்டல்களை தடுக்கவே கடவுள் ஆங்கிலேயர்களை அதிகார வர்கமாக அனுப்பினான். அதனால் நீங்கள் சொல்லும் சரித்திர தேவை இந்தியர்களுக்கு வந்தது அல்ல; ஆங்கிலேய அதிகார வர்கத்துக்கு வந்தது//

உண்மைதான் ஆங்கிலேயர்களின் தேவைதான் இந்திய வரலாற்றை இப்படி எழதியது. இதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. கடவுள் ஆங்கிலேயர்கள அனுப்பியதாக சொல்வதை ஒரு பெரும்போக்கான பாமரக் கருத்துநிலையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இன்று ஆங்கிலேயர்கள் கட்டமைத்த வரலாறு என்பதில் உள்ள சிக்கலே ஆரிய-மேலண்மைக் கருத்தியல் அடிப்படையிலேயே இந்த வரலாறு கட்டப்பட்டுள்ளது என்பதுதான். அதனால் ஒரு மாற்று வரலாறு அல்லது மாற்றுக் குரல் என்பது அவசியம். என்றாலும், ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறும் ஒடுக்குபவர்களின் வரலாறும் ஒன்று அல்ல. ஒடுக்கபவன் அதாவது ஆரிய-மேலாண்மை என்கிற ஒரு வரலாற்றுப் பெருமிதத்தை நிலைநாட்டி அதை இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையாக மாற்றிவிட்டான். இந்நிலையில் ஆங்கிலேயர்கள் கட்டமைத்திருந்தாலம், ஒடுக்கப்பட்டவனுக்கு இந்த வரலாறு அவசியப்படுகிறது. ஏனென்றால் இந்த “உட்டாலக்கடி“ பெருமிதத்தை அழித்தொழிக்க ஒரு மாற்றுப் பெருமிதம் தேவை. மனித உயிர் மற்றும் உடல் வெறுமையில் இருப்பது சாத்தயமில்லை. ஏதெனும் ஒன்றுடன் குறிப்பாக நிலத்துடன் அல்லது பண்பாட்டுடன் இணைவதன் மூலம்தான் தனது இருப்பை உணரமுடியும். அதனால் திராவிட-தமிழ் என்கிற பண்பாட்டு உருவாக்கமும் ஆரிய-பார்ப்பனிய பண்பாட்டு உருவாக்கமும் சமமானது அல்ல. ஒன்று ஆக்க நிலையிலும் மற்றது அழிவ நிலையிலும் செயல்படுபவை. ஆக, ஆங்கிலேயம் கட்டமைத்த வரலாறு என்று சொல்வது ஒருவகை பார்ப்பனத் தந்திரமே ஒழிய பரந்துபட்ட மக்களுக்கானது அல்ல.  ஆங்கிலேய அதிகார வர்க்கம் தனது இடத்தில் உயர்சாதி மற்றும் பார்ப்பன அதிகார வர்க்கத்தை வைத்துவிட்டுப் போய்விட்டது என்ன செய்வது? அதனால் போராட்டம் தொடர்கிறது. அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆங்கிலேயர்களே பரவாயில்லை என்று கூறியதன் பின்னணி இதுதான்.

நவின இந்திய வரலாறு எப்படி கட்டப்பட்டது என்பதை இந்தப் பதிவுகளைப் படியுங்கள் நெரமிருந்தால். நண்பர் ராமானுஜத்தின் இந்தியவரலாறு பற்றிய உரையாடல் இங்கு உள்ளது. எனது வரலாற்று உருவாக்க எநதிரம். ராமன் எனும் நவின தொன்மம் இங்கு உள்ளது. இவை வரலாற்று உருவாக்கம் பற்றிய புரிதலைத் தரலாம். குறைந்த பட்சம் எனது பார்வையையாவது உங்களுக்குச் சொல்லலாம்.


//> நீங்கள் கால்டுவெல்லை மறுக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக திராவிட மொழிக்குடும்பம் என்கிற கருத்தாக்கமே தவறு அப்படி ஒன்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்

நீங்கள் பெரிய தவறு புரிகிறீர்கள். கால்ட்வெல் எதோ எழுதிவிட்டு போனார். அதை மறுக்க நான் யார். மொழியியல் அடிப்படையில் நான் திராவிட மொழிக் குடும்பம் ஒன்றுள்ளது என்பதை ஏற்கிறேன். ஆனால் அதனால் தமிழ் சமுதாயத்திற்க்கு எதோ பெரிய சுபிட்சம் ஏற்பட்டுள்ளது என்பது உளரல், கால்ட்வெல் பஜனை மடத்தனம்.அதைத்தான் சொல்கிறேன்.//

கால்டுவேல் ஏதொ எழுதிவிட்டுப் போனார் என்பதிலேயே உங்களது வெறுப்பு வெளிப்படுகிறது. யாரும் கால்டுவெலை மறுக்க வேண்டிக் காத்திருக்கவில்லை. நீங்கள் கங்கணம் கட்யதால் அதை எழுதினேன். கால்டுவேலை மறுப்பது என்பது அவரது கருத்தாக்கத்தை அழித்தொழிப்பதன் மூலமே சாத்தியம். பரவாயில்லை உங்கள் பெருந்தன்மைக்கு ஒரு பாராட்டு குறைந்தபட்சம் திராவிட-மொழிக்குடும்பம் ஒன்று இருப்பதை அங்கீகரித்ததற்கு. மறுபடியும் மறுபடியும் கிளிப்பிள்ளை மாதரி சொன்னதையெ சொன்னால் எப்படி? தமிழ்சமூகம் என்கிற கட்டுமானத்திற்கு கால்டுவெல் பிரதி ஒரு அடிப்படை. அதுதான் அதன் முக்கியத்தவம். அதுதான் தமிழர்களின் தன்மானத்திற்கான அடிப்படை. மக்களக்கு சுபிட்சம் ஏற்பட ஒரேவழி.. உயரசாதி-பார்ப்பன மணோபாவத்தை விட்டு எல்லாம் சமம் எனகிற சமத்துவ சிந்தனைக்கு வந்து பிறகு மலம் அள்ளுதல் துவங்கி அத்தனை வேலைகளையும் பொதுவாக்கி அதை ஒரு பொதுத் தொழிலாக மாற்றினால் வரும் “சுபிட்சம்”. கால்டுவெல் பஜனை மடத்தனமாக இருந்துவிட்டுப் போகட்டுமே.. அறிவாளிகள் அதை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும். 

//உதாரணமாக, ஒரு இலங்கியல் விஞ்ஞானி, புலி, பூனை, மற்றும் பல விலங்குகள் அவற்றின் நடை, எலும்புகள், மூளை வளர்ச்சி, வால் நீளம் ஆகியவற்றை கோள் காட்டி , அந்த விலங்குகள் ஒரு `விலங்குக் குடும்பம்` என்கிறார். அந்த விஞ்ஞான தீர்ப்பினால் அவ்விலங்குகளுக்கு எதாவது நன்மை உண்டா? உங்கள் லாஜிக் அதைப்போல் உள்ளது//

அப்படியா சொல்லவே இல்ல. சின்ப்புள்ளத்தனமா நான் தான் கொஞ்சம் ஒவரா உளறிட்டனோ. கண்டபிடிச்சிட்டாங்கய்யா? கண்டபிடிச்சிட்டாங்க? என்ன சொல்லி சமாளிக்கலாம். ம். ஆண்டவன் மேல பாரத்த போட்ட ஒரு பீஸ போட்டு உடுவோம். (வடிவேலுக்குரலில் வாசியுங்கள்.)

மனிதன் ஒரு பண்பட்ட மிருகம். மிருகத்திற்கு தன்னுணர்வ என்கிற 6-வது புலன் இல்லை. இதெல்லாம் தெரியாத ஒரு விலங்கியல் விஞ்ஞானி விஞ்ஞானி இல்லை கசாப்புக் கடைக்காரன். மொழி என்பது விலங்கிலிருந்து தன்னை வித்தியாசப்படுத்தி உயர்வகைப் பாலூட்டியான மனிதன் வளர்த்துக் கொண்டுள்ள ஒரு ஆற்றல். அல்லது அது ஒரு உடலின் புலனுருப்புப் போன்றது. மொழிதான் மனிதனை கட்டமைத்துள்ளது. மொழி இல்லையேல் மனிதன் இல்லை. அவன் ஒரு விலங்கினமாகவே இருந்திருப்பான். இதன்பொருள் மனிதன் விலங்கைவிட உயர்ந்தவன் என்பதல்ல. மனிதன் ஒரு மற்றொருவகையினம் அல்லது பரிணாமத்தின் உயர்வகை விலங்கு என்று வைத்தக் கொள்ளுங்களேன். அதனால் மொழிக்குடும்பம் மட்டுமல்ல.. பேசப்படும், எழுதப்படும், காணப்டும், கேட்கப்படும், உணரப்படும் எதுவும் மனிதனுக்கு நன்மை பயப்பவையே. நன்மை என்றவுடன் 3 வேளை உண்டு கழித்து மணைவிகளை “உண்டாக்கி“ கழிக்கும் பயன்பாடுகள் இதில் நேரடியாக இல்லை. ஆனால், மனிதன் உயரிவாழ்தல் என்பதும் தன்னை அர்த்தப்படுத்திக் கொள்வதும் இந்த மொழிகளால்தான். உண்ணவும், உண்டாக்கவும்கூட மொழி அவசியப்படுகிறது. இல்லாவிட்டால் விலங்ககளைப்போல பொறுக்கியோ அல்லது வேட்டையாடியோ உண்ணவும், குடும்பம் போன்ற அமைப்புகள் இல்லாமல் யாருடனும் கூடி உண்டாக்கதலும் நடைமுறையாக இருந்திருக்கும். மனிதன் மொழியை அடைந்தவுடன் தன்னை அதற்கு உட்படத்திக் கொள்கிறான். இதுவும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியதே. குறிப்பாக திராவிட-மொழிக்குடும்பம் என்பதுதான் தமிழனை கட்டமைத்துள்ளது ஒரு இனமாக என்பதையே இத்துடன் 100-வது முறையாக சொல்கிறேன். திரும்பவும் அதையே சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தமிழனுக்கு திராவிட மொழிக்குடும்பம் ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய நன்மை ஆரிய-சமஸ்கிருத-பார்ப்னிய மேலாண்மையை எதிர்த்து தன்னை தமிழனாக முன்வைக்கம் ஒரு மிகப்பெரிய விடுதலைப் பரப்பை தன்னம்பிக்கையை தன்மானத்தை சுயமரியாதைய ஏற்படுத்தி உள்ளது. தமிழன் தன்னை ஆள்வதற்கான தன்னிலையை கட்டமைத்தது. தமிழனின் அறிவுப்பரப்பை வரலாற்றை தனது பெருமிதத்தை நிலைநாட்டியுள்ளது. இவைதான் தமிழன் உண்ணவும், உண்டாக்கவுமான உணர்வுகளை தந்துள்ளது. இல்லாவிட்டால் வேதம் கேட்டு காதில் ஈயத்தை ஊற்றிக்கொள்ளும் செவிடர்களாக தான் சார்ந்த பெண்ணுடலை பார்ப்பனுக்கு தந்துவிட்டு தண்டனையாக பார்ப்னுக்கு சவுக்கடியும், பார்ப்பன பெண்ணுடலை தான் அனுபவித்துவிட்டால் அவனது ஆண்குறியை அறுப்பதுமான சமததவமற்ற ஒரு “வஞ்சனையான வஞசகமான சமூக நீதிக்கு” அடிமையாகி இருந்திருப்பார்கள். இதெல்லாம் பேச நிறைய உள்ளது. மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.     

//> சமஸ்கிருதம் இந்தியாவிற்குள் நுழைந்தது என்பதை மறுக்க மாடடீர்கள் என நினைக்கிறேன்.

இந்தியாவில் பல மொழிகள் பல காலங்களில் நுழைந்தன. ஆரிய , திராவிட, திபெத்திய, ஆஸ்திரோ-ஆசிய, இன்னும் இனம் தெரியாத மொழிக் குடும்பங்கள் கிமு 8000 முதல் கிமு 3000 வரை நுழைந்தன தமிழ்நாட்டில் தொன்தமிழ் 2700 ஆண்டுகள் முன்னால் நுழைந்தது//

அதக்கு என்ன இப்போ? இந்தியாவின் புர்வீகம் பற்றியதல்ல இந்த உரையாடல். இது உங்கள் வரலாற்று அறிவின் அசாத்தியத்தை காட்டுகிறது. இடையில் தமிழ் நுழைந்தது என்பதன் மூலம் தாங்கள் கட்டமைக்க விரும்பபு கருத்து புரிகிறது. நுழைந்தது அல்ல பிரச்சனை மற்ற எந்த திபேத்திய. ஆஸ்திரேலிய இன்ன பிற மொழிகளும் தமிழனை, பெண்களை, சூத்திரர்களை மற்றும் தலித்துகளை  அடிமையாகவும் தான் மட்டுமே வாழப்பிறந்தவர்களாகவும் உலகில் தனது பாஷையே தேவ பாஷையாகவும் சொல்லி பிறரை ஆப்படிக்க முயலவில்லை. அதனால் திராவிட-மொழிக் குடும்பம் என்கிற கருத்தாக்கமும் ஆரிய-சமஸ்கிருதம் என்கிற இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்கிற கருத்தாக்கமும் அரசியல் சமநிலைக் கொண்டதல்ல. ஒன்று உயிர்வாழ முயல்வது மற்றது பிற உயிரை அழிப்பது.

//> அதனால் எல்லாவற்றையும் விதந்தோந்தி ஏற்பதும் கண்மூடி நிராகரிப்பதும் என்வரையில் சரியான நிலைப்பாடு இல்லை.

துதி மனப்பான்மையை கண்னை மூடி நிராகரிக்கிரேன். எவ்வித பஜனாவளிகளையும், அது தமிழ்நாட்டு `பகுத்தறிவி`லிருந்து, உற்பத்தியானாலும், கருணநிதி போன்ற திராவிட பணமூட்டைகள் ஆசிபெற்றாலும் மறுக்கிறேன்.//

வாங்க சார். இப்பத்தான் நீங்கள் மனம் திறந்து உரையாடுகிறீர்கள். அருமை. இத இத இததான் நான் எதிர்பார்த்தேன். “பகுத்தறிவு“ எனகிற ஒவ்வாமையும், கருணாநிதி என்கிற அச்சமூட்டும் கனவும் (nightmare) உங்களை ஆட்டிப்படைக்கிறது அழைக்கழிக்கிறது. அதைபேசும் தருணம் இதுவல்ல. உங்களது பிரச்சனை கால்டுவெல்லோ, தமிழினமோ, கருத்தியலோ அல்ல கருணாநிதியும் அவரது பணமூட்டையும்தான்.  நாளை கருணாநிதி மஞ்சள் துண்டை மாற்றி காவித்துண்டுடன் சமஸ்கிருதம் தேவபாஸை என்று அறிவித்து அனைத்து பார்ப்னர்களுக்கும் பழைய பொற்காலத்தை முன்வைத்தாலும் நீங்கள் கருணாநிதி என்கிற காழ்ப்புணர்சியில் அதை மறுக்கலாம். மெய்பொருள் காண்பதல்ல அறிவு... யார் சொன்னான் என்பதே அறிவு. அதிலும் கருணாநிதியா ”கண்ணுல காட்டப்படாது” என்றால் என்ன செய்வது? இவ்வளவு நேரப்பேச்சும் வெட்டியாக விழலுக்கு இரைத்த நீர்தானோ? கருணாநிதியே தனது தமிழுணர்வை மறந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போலிருக்கிறது. தமிழையும் தமிழனையும் மற்றும் கருணாநிதியையும் பகுத்தறிவையும் வாழ வைத்துக் கொண்டிருப்பது நாங்களல்ல நீங்கள்தான் என்பது உங்களுக்குப் புரியும்போது இந்த உரையாடல் வேறு தளத்தில் உங்களுக்குப் அர்த்தம் தரலாம். அதுவரை இப்படி உரையாடி களைப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?

பதில் என்ற பெயரில் எதாவது புதிய பிரச்சனையுடன் வாருங்கள் நண்பரே.. சொன்னதையே வேறு வேறு வாக்கியங்களில் சொல்வதால் நமது உரையாடல் அலுப்புட்டும் திண்ணைப்பேச்சாக அல்லது வெட்டிக்கதையாக ஆகிவிடும்.
நன்றி.. தொடர் உரையாடலுக்கு.

அன்புடன்
ஜமாலன்.

”தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” - தொடரும் உரையாடல்.

எனது தீராநதிக்கட்டுரையான “கன்னிவெடி புதைக்கப்பட்ட உடல்களும் கற்பித நிலங்களும்.”  என்கிற கட்டுரைக்கு விஜி“ஸ் என்பவரால் முன்வைக்கப்ட்ட விவாதம் எனது முந்தைய பதிவான ”தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” வில் சொல்லப்பட்டது. அப்பதிவிற்கான அவரின் நீண்ட பின்னொட்டத்தின் தொடர் உரையாடலுக்கான எனது பதில் நீண்டுவிட்டதாலும்,  பொது விவாத நோக்கிலும் இங்கு தனிப்பதிவாக இடப்படுகிறது.

நண்பர் viji's ற்கு..

நீங்கள் இந்த விவாதத்தை INFORMATION_IS_POWERதொடங்கவெண்டியது கவிதாசரணில்தான். அதன் சுட்டி எனது பதிவில் தந்துள்ளேன். அவர்களுக்கு அஞ்சல் அனுப்பி இதனை நீங்கள் விவாதிக்கலாம். எனது ”கண்ணிவெடிக்” கட்டுரையில்.. தமிழன் பற்றிய வரையறையை ஆய்வளாரும் முனைவருமான எஸ். வையாபுரிப் பிள்ளையை முன்வைத்துப் பேசி உள்ளேன். அதனால் கால்டுவெல் பற்றிய பதிவை மீள எனது பதிவில் இடவேண்டி வந்தது. நீங்கள் என்னடாவென்றால் என்னை ஒரு “ஆழ்ந்த அகன்ற” தமிழ் ஆய்வாளனாக கருதி விவாதத்தை தொடங்குகிறீர்கள். இருப்பினும் பொன் வைக்கும் இடத்தில் புவாவாது வைக்க முயல்கிறேன்.

//"உண்மையில் கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலை அடியாதாரமாகக் கொண்டுதான் செம்மொழித் தமிழின் கருத்தியல் களம் பரந்து விரிகிறது"

There is little connection between a the classical Tamil literaure or the knowledge of it and the comparitive linguistic studies. Even in the absense of comparitive language studies, Tamil literature stands on it's own.

Caldwell was the first man to synthesize the amount of knowledge gathered by mid 19th century. His scholorship shows the possibilities and limitations of 19th century linguistics. But to glorify Caldwell or his work as a historical figure who uplifted the status of Tamils or Tamil borders on the ridiculous//

ஒப்பிலக்கியம் என்பது பிரதிகள் மீதான ஒரு அரசியல் செயல்பாடு. இச்செயல்பாடு இந்திய காலனிய அமைப்பிற்கு பின் பரவலாகியது. இந்த கால்டுவெலின் நூல் சமஸ்கிருதம்தான் இந்தியாவின் ஒரே மொழிக்குடும்பம் என்று கட்டமைக்கப்பட்ட மாக்ஸ்முல்லரின் கருத்தை மறுத்து திராவிட மொழிகள் என்கிற தனித்ததொரு மொழிக்குடும்பம் சமஸ்கிருத துணையின்றி உள்ளதை எடுத்துக்காட்டியது.  ஆரிய திராவிட முரணை கட்டமைத்த இக்கூற்று ஆரிய மேலண்மைக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்கியது என்பது முக்கியம். தமிழ் இலக்கியம் பற்றி இங்கு யாரும் பேசவில்லை. நீங்களாக இலக்கியம் ஒப்பிலக்கணம் இல்லாமல் உயர்ந்து நிற்கும் என்று இலக்கியத்தைக் கொண்டு வந்து மொழி விவாதத்தில் முடிபோடுகிறீர்கள். உண்மையில் ஒப்பிலக்கியம் என்பது தமிழ் இலக்கியப் பெருமிதம் பற்றியது அல்ல. அது திராவிட மொழிக்குடும்பம் பற்றிய ஒரு கண்டுபிடித்தலை முன்வைத்தது. அல்லது டிராட்ஸ்மென் கூறுவதுபோல “கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பம் என்பதற்கான ஆதாரங்களை தனது நூலில் தொகுத்ததே மிகப்பெரும் பங்களிப்பாகும்“. இதில் என்ன வேடிக்கை உங்களுக்கு? தமிழ் என்கிற கருத்துருவத்தை அல்லது திராவிடம் என்கிற கருத்துருவத்தை கண்டடைந்து அதற்கான நில எல்லைகளை திராவிட மொழிக்குடும்பம் என்று காட்டித் தந்தது அவரது ஆய்வுதான். இது தமிழ் பற்றிய அடிப்படையான விஷயம்.

ஒருவேளை கால்டுவேல் இல்லாவிட்டால் வேறு ஒருவர் அதை செய்திருக்கக்கூடும். உண்மையில் இந்த திராவிடக் கருத்தாக்கத்தை முதன்முதலில் முன்வைத்தவர் சென்னை மாகாண ஆட்சியாளராக இருந்த எல்லிஸ் என்பவர்தான் (சென்னை எல்லீஸ் சாலை அவர் பெயரால்தான் உள்ளது.) இது குறித்து விரிவாக டிராட்ஸ்மெனின் சமீபத்திய நூலான, ஒரே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிடப்பட்ட “திராவிடச்சான்று“ (காலச்சுவடு வெளியீடு) பேசுகிறது. வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

மேலும் கால்டுவெல் பற்றி படிக்க.  

http://www.sangam.org/articles/view2/?uid=1033
http://www.tamilnation.org/heritage/muller.htm

//"கால்டுவெல் மட்டும் இந்த நூலை எழுதாமல் இருந்திருந்தால் இன்றைய இந்தியப் பெருவெளியில் தமிழ்ச் சமூகம் என்னவாக இருந்திருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது"

Whether Caldwell lived or not would have made no difference on the status of Tamil. Tamil lives or dies by the use or the nonuse by each generation. Tamil is no more developed than Malayalam or Hindi or Punjabi as of today since there are no good books especially in Science in Tamil. Till such time there are original research papers in Tamil or original thoughts published in Tamil, Tamil is no more developed today than it was in the time Caldwell//

என்ன பிரச்சனை உங்களது பிரச்சனை? தமிழ் என்கிற தண்ணுணர்வை தந்தது தமிழ் என்கிற கருத்துருவம்தான். அந்த கருத்துருவத்தை உருவாக்கியது கால்டுவெல்லிற்கு முக்கிய பங்கு உண்டு. நிச்சயமாக கால்ட்வெலின் இந்த கண்டுபிடிப்பு இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் என்கிற உணர்வே அற்றும் தமிழ் ஒரு தனித்துவமிக்க மொழியாக இல்லாமல் அழிந்துபட்டிருக்கலாம், அல்லது இதைவிடவும் உன்னத நிலையை அடைந்திருக்கலாம். பிரச்சனை அது அல்ல. கால்டுவெல் வந்தபின் தமிழ்நிலை என்ன என்பதுதான்? மலையாளம் இதர மொழிகளில் வளர்ச்சி உள்ளது என்பது அவர்கள் வெளியிடும் புத்தக எண்ணிக்கைகளை வைத்து அளவிடப்படுவதில்லை. தமிழில் விஞ்ஞான சிந்தனை வளரவில்லை என்பது ஒரு வாதம் அல்ல.  விஞ்ஞான சிந்தனை வளர்ந்த நல்ல புத்தகங்கள வெளியிட்டு விட்டதால் அந்த மொழிகள் எந்த அளவிற்கு வளர்ந்து செம்மொழியாகி உள்ளது என்று கூற முடியுமா? மலையாளம் என்பது தமிழின் சேய்மொழிதான் என்பதும் அதற்குள் சமஸ்கிருதம் என்பது பாதிக்கு பாதி தமிழுடன் கலந்தும் உள்ளது என்பதும் ஆய்வாளர்கள் காட்டும் முடிவு. அறிவை உருவாக்குவது மட்டுமல்ல உருவான அறிவைக்கொண்டு வாழ்க்கையை இடையீடு செய்வதும்தான் அறிவின் பணி. அதனால் கால்டுவெல் வெளிவந்துவிட்ட ஒரு யதார்த்தம். அதனை எதிர்கொண்டுதான் வேண்டும்.

தமிழில் நல்ல நூட்கள் வரவில்லை என்பது ஒரு அடிப்படையான நழுவல். விஞ்ஞான சிந்தனை வளரவி்ல்லை என்பதும் அப்படியே. அதற்கு பல சமூகக் காரணங்கள் உள்ளது. குறிப்பாக ஆரிய மேலாண்மையை எதிர்த்து கேள்வி கேட்ட தன்மானம் மிக்கதாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது தமிழ் சமூகம். (இந்தவகை அடையாள அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், இன்றைய அரசியல் அவசியம் கருதி அதை முன்வைக்க வேண்டி உள்ளது.) தமிழ் கால்டுவெல் காலத்திற்குப்பிறகு வளரவேயில்லை என்றால் முதலில் இரண்டு காலத் தமிழையும் ஒப்பிட்டு வளராததை ஆதாரத்துடன் சொன்னால் புரிந்து கொள்ள நலமாக இருக்கும். தமிழ் வளரவில்லை என்கிற சவளைப் பிள்ளைவாதம் எல்லாம் இப்பொழுது எடுபடாது. ஆகச்சிறந்த பல இலக்கியங்கள், உலகச் சிந்தனைகள் தமிழில் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. முதலில் கால்டுவெல் காலத்து அறைக்குள் உடகார்ந்து கொண்டில்லாமல் சன்னலையாவது (windows - google search and blogs) திறந்து பாருங்கள். 

//"சிந்துவெளி நாகரிகம் தமிழ்ச் சமூகத்தினுடையது என்று சொல்வதுகூட எளிதாய் இருந்திருக்க முடியாது"

Nobody except rabid Tamil fanatics accepts that Sindhu Nagarigam was Tamil.//

இந்தக் குதிரைக்கதை எல்லாத்தையும் ஓட்டியாச்சு முன்பே. தமிழ் பானடிக்ஸ் பற்றிய ஆரிய பானடிக்ஸ்களின் காய்ப்பு எரிச்சல் எல்லாம் இந்த சிந்துவெளி குதிரைக் கதையில் அம்பலப்பட்டு அந்தோ கதியானதைப் பற்றி பல பதிவுகளும் கட்டுரைகளும் வந்துவிட்டது. கதவை திறங்கள் காற்று வரட்டும். சிந்துவெளி நாகரீகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக உள்ளது. அதேசமயம் அது ஆரிய-வேதகால நாகரீகத்தைச் சேர்ந்தது அல்ல என்பதும் பெருவாரியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகம் எதைச் சேர்ந்தது என்பது வேர்தேடி அரசியல் சார்ந்ததாக உள்ளது. அதன் வெளிப்பாடுதான் கவிதாசரணின் கூற்றும் அதை எதிர்த்து வந்துள்ள உங்கள் கூற்றும். சிந்துவெளி நாகரீகம் யாரைச் சேர்ந்தது என்பதன் வழியாக பெறப்படும் பெருமிதங்கள் மற்றொரு வரலாற்று வன்முறைக்கான விதையைக் கொண்டவைதான்.

//"இந்திய ஒற்றைத் தேசியத்தில் தமிழ்ச் சமூகம் ஆகக் கீழான தலித் சமூகமாக மிதிபட்டு நசுங்கிப் போயிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது"

Utter rubbish//

இது ரப்பிஸ்தான். தலித்துகளை காலில் போட்டு மிதிப்பதை 3000 ஆண்டுகளாக ஒரு மதக் கடமையாக ஒரு மனுக் கடைமையாகச் செய்து வருவது ரப்பிஸ் இல்லை. இதுதான் ரப்பிஸ்??? தலித்துகளை மிதிப்பதைப்போல தமிழ் சமூகத்தை ஒடுக்கவும் அதனை வளரவிடாத இனப்பிரச்சனையும் இல்லை என்கிறீர்களா? தமிழ் இனத்தின் வாழ்வுரிமைக்கான ஜனநாயகக் கோரிக்கை இல்லையா? அது அங்கீகரிக்கப்பட் வேண்டாமா?

//" இன்றைய அரசியல் களத்தில் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்தைத் தலைநிமிர்ந்து செம்மாந்து நிற்க வைத்த பெருமை கால்டுவெல்லையே சாரும். "

This is utterly false. If all the achivements of Tamils over the last 150 years can be traced to a book written by a foreigner in a foreign language for the benefit of his fellow countryman, then there is nothing more demeaning for Tamils. This is a patent nonsense.//

அய்யா என்ன புரிதலில் இதை எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை. நீங்கள் ஆங்கிலேயர் இல்லை ஆனாலும் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். அப்பிடியிருக்க இந்த  நூல் அந்நியரான ஒருவரால் ஆங்கிலத்தில் வந்ததால் இதனை பின்பற்றுவது தவறாக தெரிகிறதா? அப்படி எனில் கிழக்குலகச் சிந்தனைகள் பற்றி பல வால்யும்கள் மாக்ஸ் முல்லர் போட்டிருக்காவிட்டால் நமது “உன்னதங்கள்” எல்லாம் ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி குண்டு சட்டியில் ஓட்டிய “குதிரை” (சிந்துவெளிக்குதிரை அல்ல) ஆகியிருக்கும். இத்தகைய சிந்தனைகள் உலக அளவிலானவை. ஆங்கிலேயக் காலனிய அரசியலுடன் இந்த “உலகலாவிய“ காப்புரிமை என்பது உறவு கொண்டது. இன்று ஆங்கிலேயக் காலனியம் கட்டமைத்த பார்வையின்றி உலகைப் பார்ப்பதும், புரிந்து கொள்வதும் அதீத அரசியல் புரிதலின்றி சாத்தியமில்லை. பின்காலனியச் சிந்தனைகள் இதன் மீதுதான் தங்களது கவனத்தைக் குவிக்கின்றன. தமிழ் என்கிற இனக்கட்டுமானம் ஒரு காலனிய அரசியல் கட்டுமானம் என்பதுடன் அதற்கு ஆரிய பார்ப்னீய மேலாண்மையை எதிர்த்து விழிப்புக்கொண்ட ஒரு வரலாற்றுத் தேவை இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியுமா?

//" "வெள்ளையின மக்களே மேன்மை யானவர்கள், கறுப்பினத்தார் கீழானவர்கள்" என்னும் சமஸ்கிருதக் கோட்பாட்டை அடித்து நொறுக்கியவர் கால்டுவெல். "

After tracing all the Tamils history to a white man writing in a white man's language for the benefit of other white men, the above statement is ironic and contradictory.//

என்ன சொல்ல வருகிறிர்கள்? வெள்ளையினத்தவரான கால்டுவெல் எழுதியதால் அது வெள்ளையினத்தவருக்கும் சாதகமானதாக உள்ளது என்பதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் அது இங்கு நிலவிய சமஸ்கிருத மேலாண்மைக் கோட்பாட்டை அடித்து நொறுக்கியத என்பது உண்மை. பிரச்சனை அது சரியா தவறா என்பது அரசியல் சார்ந்தது. ஒருவேளை ஆரிய-திராவிட முரண் என்பதை நிராகரிக்கும் மனிதேநேயமிக்கவராக நாம் இருந்தால், உடனடியாக தலித் உள்ளிட்ட அனைவரையும் தமிழ் போன்ற இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட மொழிகளையும், நாகரீகத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஆதிவாசிகளையும் அதிகாரத்திற்கு கொணடு வந்து நாம் பார்த்து இனபுறுபவராக இருக்க வேண்டும்.  அப்படி இருந்தால் கால்டுவெலும் தேவையில்லை தமிழ் இனஉணர்வும் தேவையில்லை. அது சாத்தியமில்லை எனும் போது இவை எல்லாம் அவசியமானவைதான். இப்படி ஒரு நிலையை அங்கீகரிக்கவே நமக்கு இத்தனை மனத்தடைகளும், சங்கடங்களும் உள்ளபோது எப்படி தமிழினம் தனது தன்மானத்தை விடும். வெள்ளைக்காரர் என்றவகையில் அவர் எழுதியதில் அவருக்கு ஒரு அரசியல் உள்நோக்கம் இருந்திருக்கலாம், அதைவிடவும் அப்பிரதி தமிழக அரசியலில் ஒரு பங்களிப்பை செய்துள்ளது. நீங்கள் கால்டுவெல்லை மறுக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக திராவிட மொழிக்குடும்பம் என்கிற கருத்தாக்கமே தவறு அப்படி ஒன்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.  இஙகு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், இனம் பற்றிய எனது கருத்தை கண்ணிவெடிகள் பற்றிய எனது கட்டுரையில் படித்திருப்பீர்கள். 

//"சமஸ்கிருதம் இந்தியாவுக்குள் நுழையுமுன்பே தமிழுக்குக் கடன்பட்டது என்பதைத் தர்க்கபூர்வமாக நிறுவிக்காட்டியவர் அவர்"

This is a plain lie. He considers such a possibility as one of the hypotheses. He is not sure of the prehistory of languages. He was only an amatuer in linguistics and he was not a historian or archeologist by inclination. Caldwell does not make wild claims in his book.

Caldwell Bhajanai may suit the dravidian politicians, but it won't give them any extra knowledge. The Dravidian bajanai of Caldwell has not given them any mastery of language or sciences can be seen from the fact that THERE IS NO TAMIL TRANSLATION OF CALDWELL'S BOOK. The only things dravidians can do is bajanai.//

இந்த பஜனை யார் செய்கிறார்கள்? ஆரிய மேண்மை என்கிற 3000 ஆண்டுகால பஜனைக்கு பதிலாக, பாவம் தமிழர்கள் சம்மா 150 ஆண்டுகள் செய்தவுடன் ஏனிந்த கொலைவெறி? நீங்கள் கவிதாசரண் கூறுவதை மறுக்க முதலில் கால்டுவெல் படித்து அப்படி நிரூபித்துக் காட்டப்படவில்லை என்பதை சொன்னால் என்னைப்போல பமரர்களுக்கும் புரியும். சமஸ்கிருதம் இந்தியாவிற்குள் நுழைந்தது என்பதை மறுக்க மாடடீர்கள் என நினைக்கிறேன். (செமட்டிக் மதமான யுதர்களுக்கும் பிராமணர்களுக்கும் தொடர்பு உள்ளது என்றும் இருவருக்கும் மூலம் ஒன்றுதான் என்றும் கூறும் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். எனது கட்டுரையில் குறிப்பு உள்ளது.) அப்படி நுழையும்முன் தமிழ் அல்லது தமிழின் மூல மொழி அல்லது திராவிட மொழி என்பது இருந்திருக்கும்.  வேண்டாம் ஏதொ ஒரு மொழி இருந்திருக்கும். ஏன் வேதத்தி்ல் தஸ்யுக்கள் எனப்படும் கருப்பர்கள் ஏதோ எழுதுவதாக ஒரு சுலோகம் சொல்கிறதாம் எங்கோ படித்த நினைவு. எனவே வேதமொழியான சமஸ்கிருதம் வாய்மொழியாகவும், கருப்பர்கள் மொழி எழுத்து மொழியாகவும் இங்கு இருந்திருக்கிறது. அதனால் மொழி என்பது ஒன்றுடன் ஒன்று கலந்தும் இணைந்தும் விலக்கியுமே இயங்கக் கூடியது. தூய மொழி என்பது ஒரு பாசிசக்கனவு. எப்படி தூய இனம் என்பது பாசிசவடிவமோ அப்படித்தான் இதுவும். தூய மற்றும் ஒழங்கு என்பதே பாசிசத்திற்கான முன் ஒட்டுத்தான். பன்மையும் கலவையும்தான் எல்லாம்.

ஆகையினால் நண்பரே.. ஆரிய-திராவிட முரண் என்பது ஒரு காலனியக் கட்டுமானம் என்பதும்.. கால்டுவெலின் இந்த நூலே “மறவர்கள்“ மற்றும் தமிழர்களை ஆங்கில இராணுவத்தில் இணைப்பதற்கான ஆய்வாகத் துவங்கியதே என்றும் சில குறிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக திருநெல்வேலி பற்றிய கால்டுவெல்லின் ஆய்வு நூல். கால்டுவெல் நூல் தமிழில் இதுவரை வெளிவரவில்லை என்பது ஒரு முக்கியமான அவலநிலைதான். அதற்கான காரணங்களழல் ஒன்று பல்கலைக்கழகஙகள்கூட முன்மஙற்சி எடுக்கவில்லை என்பதுதான். இதுவே தமிழினம் கருத்தியல் அளவில் ஒடுக்கப்ட்டுள்ளதற்கான சான்றாக கொள்ளலாம். அதாவது அந்தநூலை வெளியிடுவதில் ஆதிக்கம் வகிக்கும் சாதியினரக்கோ அல்லது அதிகார வர்க்த்திற்கோ ஏதொ பிரச்சனை இருக்கலாம். 800-பக்க நூலை முழுமையாக மொழி பெயர்த்து வெளியிடுவது என்பது இன உணர்வள்ள சின்ன நிறுவனங்களால் சாத்தியமா? என்பதும் இதனுடன் இணைத்துப் பார்கப்பட வேண்டியதாக உள்ளது. ஆனால் டிராட்ஸ்மெனின் “திராவிடச்சான்று“ பேராசிரியர் இரதம. சுந்தரம் மொழிாயர்ப்பில் தமிழில் வந்துள்ளது காலச்சவடு பதிப்பக வெளியீடாக.

அதனால் எல்லாவற்றையும் விதந்தோந்தி ஏற்பதும் கண்மூடி நிராகரிப்பதும் என்வரையில் சரியான நிலைப்பாடு இல்லை. எனக்கும் இனம், மொழி, மதம், பாலினம் போன்ற எல்லா அடையாளத் தன்னிலைகள்மீதும் உடன்பாடில்லைதான், அதற்காக அவை முன்வைக்கும் ஜனநாயகக் கோரி்க்கைகளை நிராகரித்துவிட முடியாது. தமிழினம் ஒடுக்கப்படும்போது அதற்கான இனக்கோரி்க்கையை முன்வைப்பதில் அதன் அடையாள அரசியல் வரலாற்றுப் பெருமிதம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.  ஆரியமேலாண்மை அல்லது ஆரியமேண்மை என்பது வரலாற்றில் முன்வைக்கப்பட்ட ஒரு அவலம் என்பதை உணர்வதின் வழியாகவே தமிழினம், திராவிடம். தலித்தியம் போன்ற கருத்தாக்கங்களின் அறிகுறிகளை நீக்க முடியும். அதைவிட்டு யார் முன்னாடி என்கிற பழம்பெருமை பேசவதில் யாருக்கும் பயனில்லை.

//(My Vista machine does not take in Murasu fonts, so I cannot write in Tamil now) //

நீங்கள் NHM Writer என்று ஒரு தமிழ் எழுதி உள்ளது. அதை முயற்சித்துப் பாருங்கள் விஸ்டாவில் வேலை செய்யலாம். அப்பப்ப தமிழும் கொஞசம் பொழச்சிப் போட்டுமே.. :)

நன்றி உங்களது நீண்ட விவாதத்திற்கு.

அன்புடன்
ஜமாலன்.

சுகுணாவின் உடனடி கேள்விகளும் எனது தாமதமான பதில்களும்.

நண்பர் சுகுணா நான் விடுமுறையில் இந்தியா  சென்றிருந்தபோது என்னிடம் கேட்டகேள்விகளுக்கு உடனடியாக பதில அளிக்க இயலாத buddeathசூழல். திட்டமிட்ட வேலைகள் நண்பர்கள் சந்திப்பு அப்புறம் துக்க விசாரிப்பு திருமண விசாரிப்பு விருந்துகள் நண்பர்களின் பார்ட்டிகள் என 30 நாட்கள் காற்றில் கரைந்ததே போய்விட்டதால் இணையப்பக்கம் வர இயலவில்லை. இடையில் நண்பர் பைத்தியக்காரன் போனில் சுகுணா கேள்விகள் கேட்டிருப்பதைச் சொன்னார். அவரை நேரில் சந்திப்பதற்கு நேரம் வாய்க்காமல் சொநத அலுவல்கள் அதிகமாகிவிட்டது கொஞ்சம் வருத்தமளிக்கும் செயல்தான். 

கேள்விகளுக்கான பதில்கள்.

1. ராமானுஜத்தின் 'காந்தியின் உடல் அரசியல்' விமர்சனக்கட்டுரையில் (தீராநதி)சமணம் இந்துமதத்தின் ஓரங்கமாகவே மாறிப்போனதையும் அதற்கான கூறுகள் அதன் இயல்பிலேயே அமைந்துள்ளதையும் மாற்றத்தை ஏற்காத அதன் தன்மை குறித்தும் விளக்கிக் காந்தியைச் சமணமரபில் பொருத்தி நீங்கள் கூறுவது சரியானது என்றே கருதுகிறேன். அதேபோல் பெரியாரைப் பவுத்தமரபில் பொருத்திச் சொல்ல இயலுமா?

முதலில் மரபு என்பது குறித்த எனது புரிதலை விளக்கி விடுகிறேன். மரபு என்பது வழங்கிவந்த ஒரு பண்டைய சிந்தனைமுறையை அல்லது வழக்கத்தை பின்பற்றுல் என்ற அடிபபடையில் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை பேணுவதாகும். அந்தவகையில் காந்தியை சமணமரபாக பார்ப்பதன் பின்னணி அவர் அந்த மரபை பேனும் ஒரு குடும்பத்தில் பிறந்தார் என்பது மட்டுமின்றி அவரது ஆழ்மனக் கட்டமைப்பில் சமணம் என்பது ஒரு நினைவிலியாக இருந்து செய்லபட்டது என்ற வகையிலும். ஆனால், பெரியார் பவத்த சிந்தனைகள் பலவற்றை எடுத்துக் கொண்டார் என்றாலும், முழுமையாக பவத்த மரபை சேர்ந்தவராக கருதமுடியாது என்பதே எனது நிலைப்பாடு. பவுத்தம் ஒற்றை மரபைக் கொண்டதல்ல. காரணம், பவுத்தம் பல பிரிவுகளைக் கொண்ட ஒன்று. பொதுவானதாக கருதப்படும் பவுத்த மரபுக் கூறுகளான பார்ப்பனீய மேலாண்மை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, வேத மறுப்பு, சமத்தவமின்மைக்கு எதிராக எல்லோரும் சமம் என்பதான அடிப்படை குடியுரிமையை அளித்தல், பெண்களை ஒரு சக உயரியாக கருதி அவர்களை விளிம்பிலிருந்த மையத்திற்கு கொண்டு வந்து அவர்கள் உரிமைகளைப் பேனுதல் குறிப்பாக ஒரு பழங்குடி ஜனநாயகதன்மையிலான குடியாண்மைச் சமூகத்தை (civil society) உருவாக்குதல் போன்றவற்றில் பவுத்த மரபினை பெரியாரிடம் அடையாம் காணலாம். சமூகத்தின் பொதுப்புத்திக்கு எதிரான போராட்டத்தில் பெரியாரை பவுத்த மரபில் வைத்துப்பார்க்கலாம்.

அதே சமயம் பவுத்தம் முன்வைத்த துக்கம் பற்றிய கருத்தாக்கங்கள், எண்ம நன்னடத்தை விதிகள், நான்கு பெரும் உண்மைகள் மற்றும் மும்மணிகள் எனப்படும் புத்தநிலை என்கிற இறுதி விடுதலை என்கிற முற்றிலுமான விழிப்புநிலை, தர்மம் என்கிற நடைமுறை வாழ்விற்கான போதனைகள், சங்கம் என்கிற வாழ்ந்துகாட்டும் கூட்டமைப்பு முறை ஆகியவற்றை கொண்ட மரபை பெரியாரிடம் அடையாளம் காணமுடியாது. பவுத்தம் ஒரு வாழ்க்கைமுறையை முன்வைத்தது. அது பார்ப்பனீயம் கட்டமைத்துள்ள வாழ்க்கை, அதற்கான உடல் எல்லாவற்றையும் மறுத்து ஒதுக்கியது. மாற்று வாழ்க்கைமுறையை முன்வைத்தது. புத்த அறிதல்முறையும் பெரியாரின் பகுத்தறிதல் முறையும் ஒன்றல்ல. இதன்பொருள் இரண்டும் எதிரானது என்பதல்ல. பெரியாரின் பகுத்தறிவு என்பது இங்கர்சால் துவங்கி வந்த மறமலர்ச்சிக்கால பகுத்தறிவாகும். புத்த அறிதல் என்பது பொருளை அதன் வெறுமையில் அல்லது இயல்பில் அல்லது பார்ப்பவனின் வேட்கை, விருப்பம், ஆசையற்ற நிலையில் புரிந்து கொள்வதற்கான முயற்சியே. புத்தரின் பாதை மத்திமப்பாதை. பொருளுக்கும், புலனுக்கும் உள்ள உறவில் பொருளையோ, புலனையோ முதன்மைப்படுத்தாமல் இரண்டிற்கும் இடையலான உறவில் நிற்பது.

பவுத்தமரபில் மூன்று காரணிகளை நாம் அடையாளப்படுத்தலாம். 1. பவுத்த அரசியல் 2. பவுத்த தத்தவம் 3. பவுத்த நடைமுறை மற்றும் வாழ்க்கை.  இம்மரபில் பெரியாரின் மரபு பவுத்த அரசியல் மரபாகும். மற்ற கூறுகள் பவுத்தம் மதமாக மாறக் காரணமாக பவுத்த மற்றும் பார்ப்பன தத்தவவாதிகளால் விளக்கம் செய்யப்பட்டக் கூறுகள்.  பெரியாரின் கலகத்தன்மைக்கு இந்த தத்துவார்த்தக் கூறுகள் பயனற்றவையே. ஆனால், பவுத்தத்தின் மையமான சிந்தனை என்பது அது முன்வைத்த உலகைப் புரிந்த கொள்வதற்கான அறிதல்முறையும், மனித உடலை ஒரு அதீத விழிப்பு நிலைக்கு கொண்டு சென்று விடுவிப்பது அல்லது நிர்வானத்தை அடைவது என்பதுதான்.  பவுத்தத்தை மதமாக மாற்றியதில் பார்ப்பனிய சக்திகளுக்கு இருந்த பங்கு குறிப்பிடத்தக்கது. அத்வைதம் பேசிய சங்கரரே பவுத்த மரபில் பலவற்றையும் எடுத்துக்கொண்ட ஒரு மறைமுக பவுத்தரே ஆவார். மடம் என்கிற வடிவமே பவுத்த சங்கங்களிலிருந்து எடுக்கப்பட்ட மதம் பரப்பும் நிறுவன வடிவமே. பவுத்தம் குறித்து விரிவாக இங்கு விவாதிக்க வேண்டியதில்லை. பதிவுலகில் அது குறித்து நண்பர் பைத்தியக்காரனின் பதிவு ஒன்றில் விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெரியார் பவுத்த அரசியல் மரபைச் செர்ந்தவர் என்று அடையாளப்டுத்த முடியும். பவுத்தம் குறித்து பெரியாரின் கருத்துக்களை இங்கு படித்து தெரிந்து கொள்ளலாம். பவுத்தம் மதமாக மாற்றப்பட்டதை இதில் பெரியார் வன்மையாக கண்டிக்கிறார். அது ஒரு பார்ப்பனிய சதிவேலை என்பதை முன்வைக்கிறார். அலோசியஸ் அவர்களால் எழுதப்பட்ட பவுத்தமும் பெரியாரும் என்கிற சிறு ஆஙகிலநூல் ஒன்று உள்ளது. அதைப்படித்தபின் இது குறித்து விரிவாக பதிவிடுகிறேன்.   

2. தலித்திலக்கியத்தைப் போல் ஏன் சிறுபான்மையினர் இலக்கியம் என்ற வகையினம் உருவாக முடியவில்லை? முஸ்லிம் இலக்கியம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறித்து...

இக்கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. இதுபோன்ற இலக்கிய வரலாறு சம்பந்தமான கேள்விகள் ஆய்வாளர்களிடம் கேட்கப்பட வேண்டியவை. எனது வாசிப்பு மிகவும் குறைவானது என்பதால் இதில் ஒரு காத்திரமான கருத்தை என்னால் சொல்ல இயலாது. சிறுபான்மையினர் இலக்கியம் என்கிற வடிவில் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய இலக்கியம் என்று அடையாளப்படுத்தப்பட்ட சில இலக்கியங்கள் இருக்கலாம். இதில் எனக்குள்ள சிக்கல். ஒரு இஸ்லாமியர் எழுதுவதால் அதனை இஸ்லாமிய இலக்கியம் என்று அறுதியிட முடியாது என்பதே. தன்னை இஸ்லாமியான உணர்ந்து இஸ்லாமிய வாழ்வை பதியவைக்கவோ அதன் சிக்கல்களைச் சொல்லவோஆன ஒரு இலக்கியம் தமிழில் இருப்பதை அறிந்த கொள்ளும் அளவிற்கு எனக்கு விரிவான வாசிப்பு இல்லை.

இஸ்லாமியர்கள் இலக்கியம் என்பது சீறாப்புராணத்திலிருந்து துவங்கி குணங்குடியார் போன்ற சூஃபி மரபினரால் எழுதப்பட்டுள்ளது. அதேபோல் சித்தி ஜினைதா என்பவரால் ஒரு 1928-ல் ஒரு நாவல் எழதப்பட்டள்ளது. முதல் இஸ்லாமிய பெண் நாவலாசிரியர் இவர். இவருக்க தமிழறிஞர் உ.வே. சாமிநாதைய்யர் மதிப்புரை ஒன்று எழதி உள்ளார்.  இந்நாவல்கூட இஸ்லாமிய வாழ்வியல் பற்றியதல்ல. இஸ்லாமிர்கள் எழுதியுள்ள இலக்கியங்கள் உள்ளது. இஸ்லாமியர்களைப்பற்றிய இஸ்லாமிய இலக்கியம் என்பது அரிதானதாவே உள்ளது. தோப்பில் முகமது மிரானின் ”கடலோரக் கிராமத்தின் கதை” ஒடு்க்கப்பட்ட இஸ்லாமியரின் மீனவ வாழ்வைச் சொல்லும் கதை. சமீபத்தில் வந்த சல்மா அவர்களின் ”இரண்டாம் சாமங்களின் கதை” மத்தியதரவர்க்க இஸ்லாமியர்களின் நவீன வாழ்வியல் பிரச்சனைகளையும், குறிப்பா இஸ்லாமிய பெண்களின் பாலியல் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகிறது.  இந்திய இஸ்லாமியர்களுக்கு என்று தனியான பாலியல் பிரச்சனை என்று ஒன்று இல்லை என்றாலும் இந்நாவல் அதுகுறித்த ஒரு உரையாடலை முன்வைக்கிறது. இந்நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக உலக கவனத்தை பெறும்படி செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து இஸ்லாமிய வாழ்வியல் பற்றி சொல்லும் இலக்கியங்கள் எனது அறிமுக எல்லைக்குள் இல்லை. கவிதைகளில் இஸ்லாமியப் பிரச்சனைகளைப் பேசும் ஹெச்.ஜி. ரசூல் சில குறிப்பிடத்தக்க கவிதைகளைப் படைத்துள்ளார். நண்பர் ஆபிதீன் இஸ்லாமிய வாழ்வியல் குறித்து நுட்பமான விஷயங்களை பகடியுடன் முன்வைத்துள்ளார் தனது கதைகளில். கவிஞர் நாகூர்ரூமி மற்றும் அபி ஆகியொர் சூஃபி மரபின் மறைபொருள் படிமங்களை தஙகளது கவிதைகளில் பயிற்சித்தவர்கள். இன்குலாப், மேத்தா, அப்புதுல் ரகுமான் மற்றும் தமிழன்பன் கவிதைகளை இஸ்லாமிய இலக்கிய வகைமைக்குள் வைத்துப்பார்க்க முடியாது. நிஜந்தன், கீரனூர் ஜாகிர்ராஜா போன்றவர்களின் படைப்புகள் நான் படித்தில்லை. எனக்குத் தெரியாத பல இஸ்லாமிய இலக்கிங்கள் இருக்கலாம்.  அதனால் இதில் மேலதிக கருத்து சொல்ல வாய்க்கவில்லை. வாய்ப்புகளைப் பொறுத்தவரை வெளிச்சமாக ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. இஸ்லாமியர்கள் பரவலாக படிகத் துவங்கியதே சமீப காலங்களில்தானே.

3. ஆங்கிலம் தெரிந்தால்தான் பின்நவீனத்தைப் புரிந்துகொள்ள இயலுமா?

என்னவச்சி காமெடி கீமெடி பன்னலியே. காரணம் இந்த கேள்விகள் பின்நவீனத்தவம் படித்தவர்களிடம் கேட்கவேண்டும். நான் ”அங்கொட்டுக் கொஞ்சம் இங்கிட்டுக் கொஞ்சம்னு” படிச்சிருக்கேன். பெரும்பாலும் எனது வாசிப்பு தமிழில்தான். பின்நவீனத்தவத்தை புரிந்துகொள்ள புரிதல் திறன்தான்தேவையே தவிர ஆங்கிலம் தேவை இல்லை. ஆனால், பின்நவீனத்தவம் பற்றி தமிழில் வந்துள்ள நூல்கள் குறைவு. அவற்றிலும் நேரடி மொழிபெயர்ப்புகள் குறைவு. அடையாளம் வெளியிட்டுள்ள சில மொழிபெயர்ப்பு நூல்கள், அச்சில் உள்ள நண்பர் பிரேமின் பின்நவீனத்தவம் பற்றிய ஒரு மொழி பெயர்ப்புநூல் (சென்ற மாதம்வரை வெளிவரவில்லை) ஆகியன ஆங்கில நூல்களை நேரடி தமிழில் தந்துள்ளன.  தவிர சாகித்ய அகாடமியின் ஒரு பெருநூல் உருதிலிருந்து தமிழில் நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கோபிசந்த் நாரங் என்பவரின் அந்நூல் அமைப்பியல் துவங்கி பின் அமைப்பியல் பின்நவீனத்தவம் மற்றும் மார்கிசியத்துடன் ஆன உரையாடல் இப்படியாக சமீபத்திய பிரடரிக் ஜேம்சன்வரை அறிமுகப்படுத்துகிறது தமிழில். நூல் பெயர் “அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றம் கீழைக்காவியஇயல்” என நினைக்கிறேன், நினைவில் இல்லை.  சில கருத்தாக்கங்கள் புரிந்துகொள்ள ஆங்கிலப் பரிச்சயம் தேவைப்படலாம். தமிழில் சில வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கும் ஆங்கிலம் தேவைப்படலாம். அதே நேரத்தில் ஆங்கிலம் தெரிந்ததால் மட்டுமெ ஒன்றை அல்லது பின்நவீனத்துவத்தை புரிந்து கொண்டுவிடலாம் என சொல்லமுடியாது. மொழி என்பது பிம்பமாக, படிமமாக இருப்பதால் புரிதல் என்பது பரிச்சயம் சார்ந்தே வருகிறது. சில பின்நவீனத்துவ வார்த்தைகளை சிலநேரம் ஆங்கிலத்திலேயே புரிந்துகொள்ள முடியாது என்பது வேறு? உதாரணமாக habitués என்பது போத்ரியாரால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு கருத்தாக்கம். இதனை தமிழில் எப்படி சொல்வது என்பத சிக்கலான விஷயம்தான். இப்படி சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது.

 
4. 'சாரு தன் பக்கத்தில் என் வலைப்பூ பற்றிக் குறிப்பிட்டதால் 10 கோடி ஹிட்ஸ் வந்தன' என்று புல்லரிக்கும் பதிவர்கள் குறித்து...

இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல. 10 கோடி ஹிட்ஸ் வருமா? தமிழர்களே 7 கொடியைத்தான் தொடுகிறார்கள். உலக அளவில் ஓட்டளிப்பதுபோல எல்லாத் தமிழனும் படித்தே தீருவேன் என்று மூச்சு விடுவதுபோல ஒரு கடமையாக செய்தால்கூட 10 கோடி ஹிட்டு வருமா? இதில் என்ன புல்லரிப்பு. சுருளிராஜன் கூறுவதுபொல ”போர்வை இருந்தா போட்டு மூட சொல்லுங்க மாடு கீடு மேஞ்சிறப்போவது.” தவிரவும் இந்தமாதிரியான முடிச்சுக் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். நான் ரொம்ப நல்லவன்...... :)

கேள்வி கேட்டது அன்று நல்ல (??????) பதிலும் கிடைத்தது என்ற பழைய பாட்டைப்போல பதில் சொல்ல வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி.

தொடர்ந்து சாட்டில் இன்று காலை வரைவந்து பதில் கேட்டு அதை படித்தே தீருவேன் என்று தீவிரமாக உள்ள நண்பர் பாரி. அரசின் கொலைவெறித் தாக்குதலுக்கு பதிலாக அவரிடம் 4 கேள்விகள். 1 கேள்வி அவருக்கு சாய்ஸ்.

1. ஆரிய திராவிட முரணின் அரசியல் பின்னணி என்ன?

2. தமிழ் தேசியம் என்கிற கருத்தாக்கம் தமிழர்கள் வாழ்வில் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது?

3. தொடர்ந்து இடஒதுக்கீட்டை பார்ப்பனியம் எதிர்ப்பது ஏன்?

4.  தமிழ்மக்களின் சினிமா மோகத்தை விலக்க உங்களது ஆலோசனைகள் என்ன?

5. சமீபத்தில் நீங்கள் படித்த நூல் பற்றி சொல்லமுடியுமா?

இனி அவர் பார்த்துப்பார் யாரிடம் கேட்பது என்று.

நன்றி.

image: புத்தரின் மரணம் பற்றிய ஓவியம்.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.