becoming-minor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
becoming-minor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

“மேலும்” விருதிற்கான ஏற்புரை.

நண்பர்களுக்கு வணக்கம்.

“மேலும்”-இதழ் வழங்கும் இவ்விருதைப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்விருதை வழங்கிய “மேலும்” அறக்கட்டளைக்கும், அதனை நடத்திவரும் மதிப்பிற்குரிய “மேலும்” ஆசிரியர் சிவசு மற்றும் மதிப்பிற்குரிய தமிழவன் அவர்களுக்கும் நன்றி. விருதுகள் நபர்களை அங்கீகரிப்பதில்லை அவர்களது பணியை மற்றும் எழுத்தை அங்கீகரிப்பவை. அந்தவகையில் எனது எழுத்திற்கும் விமர்சனமுறைமைக்கும் கிடைத்த அங்கீகாரம் இது.

இச்சந்தர்ப்பத்தில் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் சார்த்தர் தனக்கு வழுங்கப்பட்ட உலகின் மிகப்பெரும் விருதான நோபலை நிராகரிக்கும்போது கூறிய வாசகமே நினைவிற்கு வருகிறது. நோபல் பரிசை எனக்கு தந்து என்னை நிறுவனமாக்க முயல்கிறார்கள் என்பதே அது. இக்கருத்தில் அவர் பரிசு என்பதன் வழியாக நிறுவன மயப்படுத்தம் போக்கை நிராகரிப்பது முக்கியமானது. பெரும்பாலான பரிசுகள், விருதுகள் நிறுவனமயப்படுத்தும் தன்மையிலேயே தரப்படுகிறது. பரிசு யாரால் யாருக்கு தரப்படுகிறது அதன் நோக்கம் என்ன என்பதே முக்கியம். அவ்வகையில் நிறுவனமாக தன்னை ஆக்கிக் கொள்ளாத ”மேலும்” இதழின் பெயரில் நிறுவனங்களில் பங்களிக்காத பேரா. சிவசு அவர்களால் இவ்விருது வழுங்கப்படுகிறது. இவ்விருது நிறுவனங்களுக்கும், நிறுவன முறைமைகளுக்கும் எதிராக உள்ளவர்களையும், அதனை சாராதவர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது முக்கியம். சென்ற ஆண்டு விருதை அருமை நண்பர் எஸ். சண்முகம் பெற்றார். இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது எனது திறனாய்வுக்கும், விமர்சனத்திற்கும் கிடைத்திருக்கும் ஒரு மதிப்பீடு மற்றும் அங்கீகாரம்.

படைப்பாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் விருதுகளிலிருந்து விலக்காகி, திறனாய்வு மற்றும் விமர்சனத் துறையாளருக்கு வழங்கப்படுவதே இவ்விருதின் சிறப்பு எனலாம். திறனாய்வாளன் எத்தனை சமூகம் முக்கியத்துவம் வாய்ந்தவன் என்பதை எனது சிற்றேடு இதழ் நேர்காணலில் விளக்கி உள்ளேன். வாய்ப்புள்ள நண்பர்கள் அதை வாசித்தறியலாம். குறிப்பாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன். திறனாய்வாளன் என்பவன் சமுகத்தையும் படைப்பையும் இணைக்கவும், இணக்கவும் செய்பவன். பிரதிக்கும் வாசகனுக்கும் இடையில் பிரதியை சமூகவயப்படுத்துவதுடன் வாசகனையும் சமூகவயப்படுத்துகிறான். திறனாய்வு அற்ற சமூகம் இலக்கியத்தை எப்படி பண்டமாகவும், சுவைஞர்களை உட்கார வைக்கும் உணவு மேசையாகவும் மாற்றும் என்பதற்கு ஒரு உதாரணமே தற்போதைய தமிழ் சூழல் இலக்கிய நிலை என்றால் மிகையாகாது. திறனாய்வு இன்றி ஒரு சமூகம் தன்போக்கை உணரமுடியாது. அவ்வகையில் திறனாய்வாளனின், விமர்சகரின் பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லி என் பற்றியும் எனது எழுத்து பற்றியும் ஒரு சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன். 

“மேலும்” இதழில்தான் எனது எழுத்துப்பணியின் விமர்சன மற்றும் கோட்பாடு சார்ந்த எழுத்துமுறை துவங்கியது. எனது ”கவிதையும் சிதைவாக்கமும்” என்ற கட்டுரை “மேலும்” இதழில் வெளிவந்தபோது எனது எழுத்திற்கான அங்கீகாரமாகவும், எழுதுவதற்கான நம்பிக்கையாகவும் எனக்குள் உருவாகியது. காரணம் “மேலும்” இதழ் தமிழக அறிவார்ந்த சிந்தனை தளத்தில் ஒரு முக்கியமான நவீனமான சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்திய இதழ். தமிழ் சிந்தனையை அடுத்த தளத்திற்கு நகர்த்திய ஒரு போக்கே ”மேலும்” இதழ். தமிழில் 80-களுக்கு பிறகு அறிமுகமான புதிய விமர்சனமுறையை, சிந்தனை முறையை அதாவது அமைப்பியல் துவங்கிய பின் அமைப்பியல்வரையான சிந்தனைமுறையை தமிழில் நிகழ்த்திப் பார்த்த ஒரு ஆடுகளமே, ஒரு தளமே ”மேலும்” இதழ். அதில் எழுதிய சிந்தனையாளர்கள் குறிப்பாக தமிழவன், சிவசு, நாகார்ஜீனன், அ. மார்க்ஸ், எம்டிஎம், பிரேம் மற்றும் எஸ். சண்முகம் உள்ளிட்ட சிறுபத்திரிக்கை தொடர்புடைய சிந்தனைாளர்களும், பல்கலைக்கழகம் சார்ந்த அறிவுப்புலப் பேராசிரியர்களும்தான் இன்று தமிழ் சிந்தனையின் விமர்சன மரபை, கோட்பாட்டு சிந்தனை தளத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக உள்ளனர்.

ஒரு சமூகத்தின் அறிவுப்புலத்தை, சிந்திக்கும் முறைமையை, உலகப்பார்வையை கட்டமைப்பது இத்தகைய சிறு சூழலைச் சார்ந்த சிந்தனைகளும், அதில் புழங்கும் அறிவுவுஜீவிகளுமே. உதாரணமாக சொல்லாடல், பணுவல், கட்டுடைப்பு, சிதைவாக்கம் உள்ளிட்ட பல வார்த்தைகள் இன்று வெகுசன ஊடகங்களில் மிகச்சாதரணமாக புழங்குவதைக் காணலாம். இத்தகைய புழக்கத்திற்கான இச்சொற்களை அன்று உருவாக்கிய ஒரு அறிவுத்தளமே “மேலும்” இதழ். ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கான ஒரு சொல்லாடல் புலத்தை வடிவமைப்பதும் அதை இயக்கத்திலும், ஆட்டத்திலும் வைப்பதே இலக்கியத்தின் பணி. அதாவது முந்தைய சொல்லாடலை இன்றைக்கான தகவமைப்பாக்கி இயல்பாக்கம் செய்வதே இலக்கியத்தின் பணி. பல்வேறு உலகை படைத்தளிப்பதன் மூலம், வாழ்வதற்கான பல திறப்புகளை, சாத்தியங்களை உருவாக்குவதே இலக்கியத்தின் பணி. அத்தகைய பணியை தமிழில் முன்னின்று நடத்திய ஒரு இயக்கமே “மேலும்” என்றால் மிகையாகாது. இத்தகைய சிறப்பு மிக்க ஒரு இயக்கம் வழங்கும் இந்த விருது என்னை இன்னும் பொறுப்பு மிக்க விமர்சகனாக மாற்றும். அந்தவகையில் இவ்விருதை ஏற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மௌனியின் செம்மங்குடி ஊர்தேடல் போல என்னைப்பற்றிய சிறு அறிமுகக்குறிப்பு. நான் தஞ்சைப்பகுதியில் உள்ள பாடல்பெற்ற சைவத்தலமான குடந்தை எனப்படும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் ஊர் ஒருவகையான புராணங்கள், பழங்கதைகளில் நிரம்பிய ஊர் என்பதே எனது முதல் இலக்கிய ஆர்வத்திற்கான அடிப்படை. புகழ்பெற்ற நவக்கிரகங்களில் ஒன்றான ராகுஸ்தலமே எங்கள் ஊர். அதேபோல் பிரபலமான வைணவத்தலமான தென்திருப்பதி எனப்படும் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளதும் எங்கள் ஊரே. இவற்றை எல்லாம்விட சுந்தர காளியம்மன் வருட உலா மற்றும் எங்கள் ஊரின் ஐதீகமும். பழங்கதையுடன் உறவும் கொண்ட ஜெம்புமாலிராஜன் கதை நாடகமும் கொண்ட ஊர்.

நாடோடியாக முடியாதவகையில் தேசங்களில் கட்டுண்டுவிட்ட நாம், நாட்டில், மண்ணில் அடையாளம் காணப்படும் இடமான ஊர் என்பதே எழுத்தாளனின் கற்பனைக்கும், இலக்கிய உணர்விற்கும் அடிப்படையாக அமைந்து உள்ளது. ஒரு உடலின் முதல் நிலமயமாதல் அதாவது தெல்யுஸ் வார்த்தைகளில் சொன்னால் “டெர்ரிட்டேரியலைசேஷன்” என்பது ஊரே. அதனால்தான் தொல்காப்பியம் அய்ந்திணைகளின் வாழிடங்களை வெவ்வேறு பெயரில் அடையாளப்படுத்துகிறது. நெய்தல் நிலம் பட்டினம் என்றும், குறிஞ்சி நிலம் காடு என்றும், மருதநிலம் ஊர் என்றும். ஆக, மருதமயமாகிவட்ட மனித வாழிடங்கள் இன்று ஊர் என் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆக ஒரு உடலின் நிலமயமாதலான ஊர் என்பது மனித உடலின் முதல் நினைவாக உள்ளது.

இந்த அடிப்படையில் ஒருவகை ஊர்தேடல் நினைவு என்பதில் பழமைவாத ஏக்கம் இருப்பதை உணரலாம். இத்தகைய ஏக்கத்தை ஒருவகையான பின்நவீன உணர்வு சார்ந்ததாக சொல்லலாம். காரணம் பின்நவீனம் நவீனத்திற்கு முந்தையதைப்பற்றிய ஒரு ஏக்கத்தின் அடிப்படையில் நவீனத்தில் பழமையை மறு உருவாக்கம் செய்வதன் வழியாக நவீனத்துவத்தின் உண்மையை புனைவாக்கி காட்டிவிடுகிறது. இத்தகைய பழமையின் நவீன உருவாக்கம்தான் நவீன மனிதனை நவீனத்தின் அழுத்தத்தத்திலிருந்து விடுவிப்பதாக உள்ளது. நவீனத்துவத்தின் உணர்வடிப்படைகளாக பதற்றம், அந்நியமாதல், நிலைகொள்ளாமை, பேரெந்திர அச்சம், உயிர்நிலைக்கான ஏக்கம் எனலாம். இந்த உணர்வெல்லைகள்தான் நவீனத்துவம் பேசும் “பகுத்தறிவு” என்ற ஆன்மீகத்திற்கான அடிப்படையாக மாறி உள்ளது. நவீனத்துவ இலக்கியத்தின் தேடலும் கட்டமைப்பும் இதனை சுற்றியே பின்னப்பட்டு உள்ளன என்பது மிகைக் கூற்றாகாது. இந்த மன அழுத்தம் ஏற்படுத்தி உள்ள இலக்கிய உணர்வை ஒரு விளைாயட்டாக, ஆட்டமாக மாற்றிவைத்ததே பின்நவீன உணர்வு எனலாம்.

இப்பின்நவீன உணர்வின் ஒரு புற அடையாளமே சமீபத்தில் உருவாகிவரும் பல ‘மால்கள்’ மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள். இவற்றை கவனித்தால் இவை பழமையை மறுஉருவாக்கம் செய்வதை அறியலாம். இவற்றின் பின்னணி இத்தகைய ஒரு உணர்வாக்கத்தின் வெளிப்பாடே. நட்சத்திர ஓட்டல்களில் ஆர்கானிக் உணவும், சராசரி உணவைவிட ஆர்கானிக் உணவு அணுகுமுடியாத விலையில் நிலையில் இருப்பதும் இதன் பின்னணி எனலாம். ஆக தன்னுருவாக்கமாக எனது ஊர் அமைந்த கதை என்பது சுயவிமர்சனமாக எனது பழமை ஏக்கத்தின் வெளிப்பாடே என்பதை பதியவைக்க விரும்புகிறேன்.

நான் எழுதத் துவங்கியது என்பது எனது சிறுவயதில் இருந்தே உருவான ஒன்று. சிறுவர் கதைகளில் துவங்கியது. இன்னும் சொல்லப்போனால் எனது அய்ந்தாம் வகுப்பில் துவங்கியது வாசிப்பும், நூலக பழக்கமும். நானே சிறுவர் இதழ்கள், கதைகள் கொண்ட ஒரு வாடகை நூலகம் வைத்து நடத்தினேன். அந்த காலத்தில் 75-களில் 5 காசுகள் துவங்கி 15 காசுகள் வரை உள்ள சிறுவர் கதைகள் வாங்கி அதை வாசிக்க 5 காசுகளுக்கு 3 புத்தகங்கள் என வாடகைக்கு விட்டு சிறநூலகம் நடத்தினேன். புத்தகங்கள் வாசிப்பதைவிட வாங்கி சேகரித்து அதை அடுக்கி பார்ப்பதே ஒரு ஆனந்தம் என்பதாக உருவாகிவிட்டது. இன்றுவரை வாசிக்க என வாங்கி சேர்த்த புத்தகங்கள் வாசித்ததைவிட அதிகமாகிவிட்டது.

எழுத்து என்பதற்கான அடிப்படை வாசிப்பும், வாசித்தவற்றைப்பற்றிய கற்பனைத்திறனும், சிந்திக்கும் பழக்கமும்தான். அதை தொடர்ந்து காப்பாற்றி வந்து உள்ளேன் என்பதே எனது இந்த ஐம்பது ஆண்டுகால வாழ்வில் மாறாத பழக்கமாகிவிட்டது. எனது ஒன்பதாம் வகுப்பில் வெகுசன வாசிப்பிலிருந்தும், வெகுசனபாணி கவிதை எழுத்துக்களிலிருந்தும் ஒரு பாயச்சலை உருவாக்கியது தமிழவனின் புதுக்கவிதை நாலு கட்டுரைகள் என்ற நூல்தான். அதன்பின் சீரிய இலக்கியத்திற்கு திரும்பி, தமிழவன் வழியாக அமைப்பியல் மற்றும் நாகார்ஜீனன், எம்டிஎம், பிரேம் வழியாக பின்நவீனம் அறிமுகமாகி, சக பயணியாக நண்பர் எஸ். சண்முகத்துடன் இந்த இலக்கியப் பயணம் தொடர்கிறது. நண்பர் ராமானுஜத்தின் தொடர்ந்த உரையாடல்கள் எனது எழுத்தை செழுமைப்படுத்தி வருபவை. தீராநதியில் தொடர்ந்து எழுத வாய்ப்பு தந்து எனது எழுத்தை பரவலாக்கியதில் நண்பர் கடற்கரய் பங்கு முக்கியமானது. எனது கல்லூரிக்கால நண்பர்கள் அரசு, ரவி சுப்ரமணியன், அமானுஷ்யன், கோமகன் மற்றும் என்னோடு சிறுபத்திரிக்கை நடத்திய நண்பர் ஆறுமுகம் மற்றும் பால்ய நண்பர்கள் மகேந்திரன், சிற்றரசு என அனைவருக்கும் எனது எழுத்து வளர்ச்சியில் ஒரு பங்கு உள்ளது என்பதை நன்றியோடு நினவு கூருகிறேன்.

எனது சிறுவயது எழுத்து இலக்கியத்தை கட்டமைத்ததில் சிறுவயது நண்பனாக இன்றுவரை என்னோடு உற்ற தோழமையாக இருந்து வரும் நண்பன் காலக்குறி ஆசிரியர் அ. ஜ. கான். எனது எழுத்திற்காகவே வறண்ட பாலைவனத்தில் காலக்குறி என்ற இதழை துவங்கி தொடர்ந்து எனது எழுத்தை அறிமுகப்படுத்தி வந்தான். எனது விமர்சன எழுத்தில் எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரத்தை உருவாக்கி தந்து, எனது எழுத்தை முழுமையாக வெளியிடுவதும், அதனால் கட்டுப்பாடின்றி எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் வாய்பை உருவாக்கி தந்து உள்ளான். இந்த வாய்ப்புதான் எனது எழுத்தின் ஒரு சுதந்திரபலமாக, சமரசம் செய்துகொள்ள வேண்டிய அவசியமற்றதாக உள்ளது. தனிப்பட்ட முறையில் கானிற்கு நான் நிறைய கடப்பாடு உள்ளவன் என்பதை நன்றியோடு பதிய விரும்புகிறேன்.

எனது எழுத்திற்கான வாய்ப்பையும், வளர்ச்சியையும் தந்த தமிழ்ச்சூழல் சிற்றிலக்கியங்கள், சிறு சூழல் அமைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

எனது இரண்டு நூல்கள் வெளிவந்து உள்ளது. மொழியும் நிலமும் என்ற தலைப்பிலும், நவீன தொன்மங்கள் நாடோடிக் குறிப்புகள் என்ற தலைப்பிலும். 90கள் தொடங்கி 2010 வரையிலான 20 ஆண்டு விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தொடர்ந்து இலக்கிய அரசியல் மற்றும் கோட்பாடுகள் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறேன். என் குறித்த எனது எழுத்து குறித்த விபரங்கள் சிற்றிதழில் வெளிவந்த எனது நேர்காணலில் விளக்கப்பட்டு உள்ளது. அதனால் கூறியது கூறலாக வேண்டாம் என அதை தவிர்க்கிறேன்.

இவ்விருதை பெறுவதற்கான எனது தகுதியைவிட எனது எழுத்தின் தகுதியை குறித்த எனது பார்வையை உங்களோடு இந்த ஏற்புரையில் பகிர்கிறேன். இலக்கியம், சமூகம், அரசியல் என்கிற ஒரு முப்பரிமாண அளவுகோலே எனது விமர்சனமுறையாக உருவாகி வந்து உள்ளது. நவீனத்துவம் மற்றும் பழமைவாதம் இரண்டிற்கும் எதிரான ஒரு விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருவது அவசியம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறேன். பகுத்தறிவின் வளர்ச்சி என்ற பெயரிலான நவீனத்துவவாதத்திற்கும், கற்பணார்த்த பழமைவாதத்திற்கும். ரசனைசார்ந்த நுகர்வு வாதத்திற்கும் எதிரானதாக எனது விமர்சனமுறையை அமைத்துக் கொண்டு உள்ளேன். சமூக விஞ்ஞானப்பார்வையான மார்க்சிய துவங்கி அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்தவம், பெண்ணியம், புதிய வரலாற்றுவாதம், சிதைவாக்கம் என் பல கோட்பாடுகளின் உள்ளோட்டத்தை விமர்சனமுறையில் அணுகி உருவாகி வந்ததே எனது பார்வை.

தற்போது எனது இலக்கிய அரசியல் என்றால் சிறபான்மையாதல் என்பதே. எப்பொழுதும் சிறுபான்மையாதல் என்பது ஒருவகையான ஜனநாயக இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கான வெகுமக்கள் அரசியல் எனலாம். சிறுபான்மை என்பது எண்ணிக்கை சார்ந்தது அல்ல. பன்மைத்துவம் சார்ந்தது. பெரும்பான்மை என்பதே ஓருமையானது. ஒற்றை சிந்தனையைக் கொண்டது. வன்முறையானது. யதார்த்தத்தில் பெரும்பான்மை எண்ணிக்கையில் சிறுபான்மையானது. சிறுபான்மை எண்ணிக்கையில் பெரும்பான்மையானது. காரணம் சிறுபான்மை என்பது பன்மை. அதனால் சிறுபான்மைகள் உண்டு. பெரும்பான்மைகள் கிடையாது. காரணம் பெரும்பான்மை என்பது ஒன்றுதான். பெரும்பான்மையை எதிர்ப்பதும் சூழலை உயிர்ப்புடன் வைப்பதும் சிறுபான்மைகளே.

சிறுபான்மையாக உள்ளவையே வளரும் தன்மைக் கொண்டது. பெரும்பான்மை என்பது வளர்ந்து தெவிட்டிய நிலையை அடைந்துவிட்ட ஒன்று. சிறுபான்மை பெரும்பான்மையாக வளர்வதற்கான இயக்க நிலையில் இருப்பது. அதுதான் சமூகபொதுபுத்திக்கு எதிரான பொராட்டத்தைக் கொண்டது. சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது. இத்தகைய சிறசூழல் அமைப்புகளே நுண் அளவிலான சமூக இயக்கத்தை நகர்த்துபவை. சமூக எந்திரத்தின் பற்சக்கரமாக இயங்குபவை. இவ்வமைப்புகள் சமூகத்தில் ஏற்படுத்தப்படும் நுண் அளவிலான மாற்றமே அடுத்துவரும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது. அதனால் எப்போதும் சிறுசூழலுடன், சிறுபான்மைகளுடன் இருப்பதும் சிறுபான்மையாக உருவாகிக் கொண்டு இருப்பதுமே உயிர்ப்புடன் வாழவைப்பது.

அவ்வகையில் “மேலும்” உள்ளிட்ட சிறுபத்திரிக்கை மற்றும் சிறசூழல் அமைப்புகள் தொடர்ந்து இயக்கத்தில் இருப்பவை. சமூகத்தின் கலாச்சார அரசியலில் நுண்அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்கால சமூகத்தின் போக்கை நிர்ணயிப்பவை. அவற்றில் பங்கேற்பதும், அதன் கொளவரமும் முக்கியமானது என்பதே இந்த விருதை ஏற்பதற்கான எனது மனநிலை.

உலக வரலாற்றில் இலக்கியம் எப்போதம் சிறுபான்மையாக இருப்பதால்தான் அது உயிர்ப்புடன் உள்ளது. இந்த சமூகத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இலக்கியம் இல்லாமல் சமூகம் சாத்தியமில்லை. இலக்கியத்தை சமூகம் ஒதுக்கலாம். மதிப்பற்றதாக மாற்றி வைக்கலாம். ஆனால் இலக்கியம்தான் சமூகத்தை மதிப்புள்ளதாக மாற்றுகிறது. ஒரு இலக்கியம் சரியான சமூகத்தை கடடமைப்பதை கண்காணிப்பதும், அதை சரி செய்வதும் அதன் போக்கை மாற்றியமைப்பதும் அதை வாசிப்பாளனான மக்களிடம் கொண்டு சேர்ப்பதுமான பெரும்பணியே திறனாய்வாளர்களின் பணி. அவ்வகையில் திறனாய்வாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் விருது வழுங்கி சமூகத்தின் சரியான போக்கை கட்டமைப்பை உருவாக்கும் பணியில் “மேலும்” அறக்கட்டளை ஈடுபட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சமூகச்செயல்பாடு என்று கூறி நன்றியோடு எனது ஏற்புரையை முடிக்கிறேன்.

ஜமாலன் - 12-10-2014 (சிற்றேடு ஜனவரி-மார்ச்.2015)

ஈவ் இன்ஸ்லரின் ”சுவர்” கவிதை – அடையாளமாதல் மற்றும் இருப்பாதல் பற்றிய ஒரு வாசிப்பு.

பெருந்தேவியின் ”இன்ன பிற”-வில் அவரால் மொழிபெயர்த்து செய்யப்பட்ட கவிதை குறித்த ஒரு வாசிப்பே இப்பதிவு. கவிதையும் குறிப்பும் ”இன்ன பிற”-வில் இருந்து. முதலில் அதை வாசித்துவிடுங்கள்.

s-EVE-ENSLER-large ஈவ் இன்ஸ்லர்-ன் “நானொரு உணர்வுபூர்வமான பிறவி” I am an emotional creature (2010) என்கிற புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட ஒரு “தனிமொழி” (monologue) இது. அமெரிக்க பெண்ணிய எழுத்தாளரான அவரது “The Vagina Monologues” என்ற தலைப்பிடப்பட்ட நாடகம் புகழ்பெற்றது. உலகின் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டதும்கூட.

(சமீபத்தில் வாசித்ததில் என்னை மிகவும் பாதித்த கவிதை/மொழி இது, பகிர்ந்துகொள்வதில் ஆறுதலடைகிறேன்.)


சுவர்
ஜெருசலம், இஸ்ரேல்
என் தோழி அதீனா என்னை மேற்குக்கரைச் (West Bank) சுவரின்
அந்தப்பக்கத்துக்கு அழைத்துச் செல்கிறாள்.
அங்கே அது இருக்கும்விதத்தைப் பார்த்து ஆச்சரியமடைகிறேன்.
உயரமாக இருக்கிறது அது இன்னும்.
தாண்ட உங்களுக்கு ஹெலிகாப்டர் வேண்டும்.
கடினமான சிறுமைகொண்ட சிமெண்ட்டின் பிரிவுச்சக்தி, வீடுகள்,
நிலம், மற்றும் நண்பர்கள்
திரும்பப் போகிறேன்
நிறைய கதைகளைக் கேட்கிறேன்.
இந்தப்பக்கத்தில் தண்ணீர் இல்லை
கிணறுகள் இல்லை
மாதுளையோ அத்தியோ இல்லை
வேலைகள் இல்லை
வெளியேபோக வழியுமில்லை.
வெள்ளிக்கிழமைகளில் பாலஸ்தீனியப் பையன்களோடு
போராட்டம் செய்கிறேன்.
ஒரு இஸ்ரேலியச் சிறுமி இங்கே என்ன செய்கிறாள்
என்பது புரியவில்லை அவர்களுக்கு.

ரகசியமாக அது.
வீட்டில் ஒருவருக்கும் தெரியாது.
மாதங்களாக தொடர்கிறது.

சுவர் என்னை மாற்றுகிறது.
நான் என் கால்களைச் சவரம் செய்வதை நிறுத்துகிறேன்.
மாமிசம் உண்ணுவதை நிறுத்துகிறேன்.
அப்படியே ராணுவத்தில் சேர மறுக்கிறேன்.
என் பாட்டனாரின் வயதேறிய மென்முகத்தில்
அவரது உடைந்த இதயத்தைக் காண்கிறேன்.
திருப்பித்தரவில்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.
உண்மையான இஸ்ரேலியள் இல்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.
முன்பெல்லாம்போல என் தந்தை
என்னைப் பார்ப்பதில்லை.
அண்ணனோ உரத்துப் பேசுகிறான்
என்முகத்துக்கு முன்பாகப் பீற்றுகிறான்
இன்று ஒரு அரேபியனைக் கொன்றதாக.
இப்போதும் முடியாது என்கிறேன்.
எனக்கு உளச்சிக்கல்கள் இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள மறுக்கிறேன்.
துப்பாக்கிசுட நான் பழகமாட்டேன்.
சிறைக்குப் போகிறேன்.
ராணுவத்தின்/சிறையின் சீருடையை அணிய மறுக்கிறேன்.
தனிச்சிறையில் வைக்கப்படுகிறேன்
அது என்னை எந்த அளவுக்கு பயமுறுத்துகிறது என்பதைச் சொல்லவில்லை.
ஒவ்வொரு இரவும்
என் வயதொத்த ஒரு இளம்பெண், பதினெட்டுபோல வயதிருக்கும்,
என் செல்லில் உலாவுகிறாள்.
அவள்தலை மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது.
அவள் நிர்வாணமாக இருக்கிறாள். பசியோடு இருக்கிறாள்.
எனக்கு எதையோ தெரியப்படுத்த நினைக்கிறாள்.
அவளுக்குத் தொண்டை அடைக்கிறது.
எலும்பின் அவள் கைகள் 
சுவரைப் பிறாண்டுகின்றன.
அவள் ஒரு கனவா, இல்லை ஒரு நினைவா,
சொல்லத் தெரியவில்லை எனக்கு.
என்னை அவள் பீடிக்கிறாள்
அல்லது
விடுவிக்கிறாள்.

- ஈவ் இன்ஸ்லர்

ஈழப் போராட்டத்துடன் தமிழ்சூழலுக்கு அறிமுகமான கதையாடல் வகைப்பட்ட கவிதை இது.  பொதுவாக, அரசியல் கவிதைகள் கதையாடல் வழியாகவே ஒரு தன்னெழுச்சி உணர்வை உருவாக்கக் கூடியவை. இவ்வகைக் கவிதைகள் பிரச்சாரமாக ஓங்கி ஒலிப்பதோ, தனது அரசியலை நேரடியாக வைப்பதோ இல்லை. ஒரு கதையாடலை பிரதியாக முன்வைத்துவிட்டு நகர்ந்துவிடும் கதைசொல்லி, பிரதியின் வாசல்களை திறந்து வைத்து விடுகிறாள். ஒவ்வொருவரும் ஒரு வாசல் வழியாக நுழையலாம். அப்படி ஒரு வாசல்தான் இது. மற்றபடி கோணார் உரை போடுவதாக கருதவேண்டியதில்லை. 

INCwall18பாலஸ்தீனிய ”தீவரவாதி”-களிடமிருந்து 'யூதர்களை பாதுகாப்பதற்காக' என்ற காரணத்தை சொல்லி, சர்வதேச விதிமுறைகளையும், மனித உரிமைகளையும், சர்வதேச நீதிமன்றத்தின் ஆணையையும் மீறி இஸ்ரேலிய அரசால் கட்டப்பட்ட மிக நீளமான சுவரே ”மேற்குகரை சுவர்”. சுமார் 650 கி.மி. நீளமும் (மேலதிக விபரங்கள் இங்கு) 25 அடி (8 மீட்டர்) உயரமும் உள்ள கான்கிரீட் சுவர். ஒரு நாட்டிற்குள் நடத்தப்பட்ட பாகப்பிரிவினை இது. இனவெறி சுவர் (Apartheid Wall) என்று பாலஸ்தீனியர்களாலும், பாதுகாப்பு சுவர் (Security Wall) என்று இஸ்ரேலியர்களாலும் அழைக்கப்படும் இச்சுவரை, சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட உலக-அமைதிக்கான அமைப்புகள் “சுவர்” என்ற சொல்லால் மட்டுமே கவனமாக அழைக்கின்றன. அதையே தலைப்பாகக் கொண்ட,  இக் கவிதை சொல்லாடல் அரசியலின் முதல் தடத்தை பதிக்கிறது. “சுவர்“(1) யூதர்களின் மத-இன-தொன்ம அடையாளத்துடன் உறவு கொண்ட வழிபாட்டு அடையாளமாகவும், வரலாற்று அடையாளமாகவும் மட்டுமின்றி ஒரு நில அடையாளாகவும் மாற்றப்பட்டுள்ளது கவனப்படுத்தப்பட்டுள்ளது கவிதையில். மதம், இனம் என்கிற கருத்துருவங்களால் பிரிக்கப்பட்ட பாலஸ்தீன்-இஸ்ரேல் வரலாற்றை, மேற்குக்கரையில் பிரிக்கப்பட்ட ஒரு சுவரை உருவகப்படுத்தி பேசுகிறது இக்கவிதை. 

அதீனா என்ற தோழியால் அழைத்துச் செல்லப்படும் கவிதையின் “நான்“ என்ற அடையாளம், இப்படிக் கூறுகிறது, அந்த பக்கச் சுவர் உயரமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது என்று. அதாவது, இந்த பக்கச் சுவர் உயரமாக இல்லை என்பதுடன், இப்பக்கச் சுவருக்கு பழகிய நானாக உள்ளது என்பதே உட்பொருள். நிலத்தை அபகரித்தவனுக்கு சுவர் பாதுகாப்பு என்பதால் உயரம் குறைவானது, நிலம் அபகரிக்கப்பட்டவனுக்கு சுவர் தடுப்பு என்பதால் உயரமானது. ஒரே சுவரின் இருபுறப் பார்வைகளால்  உருவாகும் உயர வேறுபாடு முக்கியம். இந்த வேறுபாட்டை உணர்ந்த மாத்திரத்தில் “நான்“ இஸ்ரேலிய அடையாளத்திலிருந்து பாலஸ்தீனிய அடையாளத்திற்கு மாற்றமடைகிறது. 

”உயரமாக இருக்கிறது அது இன்னும்.
தாண்ட உங்களுக்கு ஹெலிகாப்டர் வேண்டும்.”

வாசிக்கும் நாம் தாண்ட ஹெலிகாப்டர் வேண்டுமெனில், கவிதையின் நான் எப்படி போனது என்கிற கேள்வி உள்ளது. அந்த நான் சுவருக்கு அப்பாலான அடையாளமாக மாறியதால், அதன் இருப்பும் சுவருக்கு அப்பாலானதாக உள்ளது.  இந்த சுவர் தாண்டல் அடையாளமாதல் எனும் மொழிச் செயலால் நடக்கிறது. அதாவது, கவிதையின் நான் தன்னடையாளத்தை அழிக்கிறது. அது மற்றமையாக மாற்றமடைகிறது. அதனை விவரிக்கும் விவரணைகள் வருகின்றன. அதன் தொடர்ச்சியாக,

ஒரு இஸ்ரேலியச் சிறுமி இங்கே என்ன செய்கிறாள்
என்பது புரியவில்லை அவர்களுக்கு

என்பதுவரை இந்த மற்றமையாகவே நான் செயல்படுகிறது. இங்கு சிறுமி என்கிற பெண்-அடையாளம் பெறும் நான், இனம் என்கிற மற்றொரு அடையாளத்தையும் பெறுகிறது. பெண் மற்றும் பாலஸ்தீனியவள் என்ற இரண்டு மற்றமைகளாக இங்கு அடையாளப்படுகிறது.

“இந்த ரகசிய செயல்பாடு பல மாதங்களாகத் தொடரப்படுவதன்” வழியாக, அதாவது, சுவருக்கு அப்பால் சென்று அங்கு நிகழும் செயல்களி்ல் பங்கு பெறுவதால், ஒடுக்கப்பட்ட இன-அடையாளமான பாலஸ்தீனிய அடையாளத்திலிருந்து பாலஸ்தீனிய “இருப்பு“-(2)க்கு மாற்றமடைகிறது. இதற்குபின் கவிதை ஒடுக்கப்பட்ட-இருப்பு அல்லது சிறுபான்மை-இருப்பு என்கிற வெளியிலேயே பயணிக்கிறது. கவிதையின் நுட்பம் இந்த தளமாற்றம்தான். இது பிரதிநிதித்துவ அரசியல் அல்ல என்பது முக்கியம். இக்கவிதையில் உள்ள நான் வழக்கமான கவிதைகளில் காணப்படும் ஒடுக்கப்பட்டவரின் பிரதிநிதியாக இல்லாமல், சூட்சமமாக ஒடுக்கப்பட்ட மற்றமையின் இருப்பாக மாறிவிடுகிறது. அடையாளமாதலில் இருந்து இருப்பாதலை நோக்கி நகரும் இந்த மாற்றம் முக்கியமானது.

INCwall9j ”சுவர் என்னை மாற்றுகிறது” என்பதற்குப்பிறகு எல்லா நிகழ்வுகளும் மற்றமையின் இருப்பிலிருந்து விவரிப்பதாக மாறிவிடுகிறது. குரலில் நுட்பமான மாற்றங்கள் ஏற்படுவதை கவிதை மொழியில் உணரலாம். அதாவது ஆதிக்கத்தை மறுப்பது என்பதாக குரல் இறுக்கமானதாக மாற்றமடைகிறது. இங்கு கவிதையின் “நான்“ தனது மற்றமை இருப்பையே தனது தன்னிலையாக உணர்கிறது. இந்த “நான்“ என்கிற யூத தன்னிலைக் கட்டமைவிற்கான அரசு, மதம் மற்றும் இராணுவம் சார்ந்த சடங்குகளை நிறுத்திக் கொள்ள முனைகிறது,

”நான் என் கால்களைச் சவரம் செய்வதை நிறுத்துகிறேன்.
மாமிசம் உண்ணுவதை நிறுத்துகிறேன்.
அப்படியே ராணுவத்தில் சேர மறுக்கிறேன்.”

இவ்வரிகளில் உள்ள சவரம் செய்தல், மாமிசம் உண்ணாமை இவற்றிற்கான கலாச்சார சங்கேதங்கள் நமக்கு புரிபடவில்லை. ஒருவேளை இவ்வரிகளில் இராணுவ ஒழுங்கமைப்பிற்கான சடங்குகளான வலு, நேர்த்தி என்பதை மறுப்பதற்கான குறிப்பாக இருக்கலாம்.

இதற்கு பிறகு, கவிதை பல நுட்பமான வரலாற்றை உள்ளடக்கி எழுதிச் செல்கிறது. இதனுள் இயங்கும் அமைப்பு, உருவாக்கும் வரலாற்றுக் காரணிகள் பற்றிய புரிதல்தான் முக்கியம் எனக் கருதுகிறேன். இக்கவிதையில் சுவர் துவங்கி கவிதைக்குள் வரும் பாலஸ்தீனப் புரட்சியாளர்கள், தாத்தா, அப்பா மற்றும் அண்ணன் என்கிற ஆணடையாளங்கள் வரலாற்றின் இயக்க சக்தியாக காட்டப்படுகிறது. வரலாறு என்பது ஆண்களுக்காக கண்டடையப்பட்ட ஆணிய கதைசொல்லல் என்பதை சொல்வதைப்போல உள்ளது.

இதற்கு பிந்தைய வரிகள் யூத வரலாற்றின் 3 முக்கியக் காலகட்டங்களை குறிப்பதாகப் படுகிறது. யூதர்கள் மோசஸ் காலத்தில் எகிப்திலிருந்து இன்றைய இஸ்ரேல்/பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியேறி, அங்கிருந்து ரோமப்பேரரசால் துரத்தப்பட்டு புலம்பெயர்ந்த காலகட்டம். அதன் குரலாக இருப்பவர் தாத்தா. இழந்துபோன நிலம் பற்றிய உடைந்த இதயங்களைக் கொண்டவராக,  அந்த தலைமுறையின் சொல்லொண்ணா வேதனைகளை உடையவராக உள்ள அவரது இதயத்தை பரிவுடன் காண்கிறாள். அவரோடு அவளுக்கு உரையாட முடிகிறது. இஸ்ரேல் என்கிற நாடு உருவாக்கப்பட்டதிற்கான அடிப்படையான உரையாடல் இது.

”என் பாட்டனாரின் வயதேறிய மென்முகத்தில்
அவரது உடைந்த இதயத்தைக் காண்கிறேன்.
திருப்பித்தரவில்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.
உண்மையான இஸ்ரேலியள் இல்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம். ”

இந்த வரிகளின் வழியாக அவள் பாலஸ்தீனிய அடையாளத்திற்குள் இருப்பதை கவிதையில் உள்ளவர்கள் புரிந்துகொள்கின்றனர். அதாவது ஒடுக்கப்பட்ட தன்னிலையாக அவள் மாறிவிட்டிருக்கிறாள். இது ஒருவகை ”சிறுபான்மை இருப்பாதல் (becoming-minor)” என்கிற நிலை. சிறுபான்மை இருப்பாதல் என்பது எண்ணிக்கை சார்ந்த சிறுபான்மை அல்ல. எந்த ஒரு அமைப்பிலும் ஆதிக்கத்தினால் ஒடுக்கப்படும் சிறுபான்மையாக இருத்தல். அப்படி இருப்பதின் வழியாகவே பாசிசமாதலில் இருந்த ஒரு தன்னிலை தன்னை தப்ப வைத்துக் கொள்ளமுடியும். கவிதையின் “நான்“ யூத பாசிசமயமாதலில் இருந்து தப்பவே தன்னை சிறுபான்மையாக ஆக்கிக் கொள்கிறது.  கவிதையில் சொல்லப்படும் “திருப்பித் தரவில்லை“ என்ற வரி, இஸ்ரேலியர்களுக்கு நிகழ்த்தப்பட்ட வரலாற்றுக் கொடூரத்தை, அதாவது அவர்களது பூர்வீக நிலத்தை திருப்பித் தரவில்லை என்பதாக பொருள்கொள்ளமுடியும். ஆக, அவள் இஸ்ரேலிய அடையாளத்திற்கு வெளியே நிறுத்தப்படுகிறாள். அதாவது அவளுக்கு அவர்களது மண் பாலஸ்தினிய-அரபிகளின் அபகரிப்பாக சொல்லப்படுகிறது.

“முன்பெல்லாம்போல என் தந்தை
என்னைப் பார்ப்பதில்லை.”

இங்கு தந்தை என்பவன் இரண்டாவது காலகட்டத்தின் அதாவது இஸ்ரேலியர்கள் புலம்பெயர்ந்த நிலையில் உள்ளவன் என்பதால், அவளை புறக்கணிக்கிறான். இந்த தந்தைதான் “தாய் நாட்“-டை உருவாக்குபவன். இந்த தந்தையுடன் அவளுக்கு உரையாடல் சாத்தியமற்றதாகிவிடுகிறது. அவள் புறக்கணிக்கப்படுகிறாள்.

”அண்ணனோ உரத்துப் பேசுகிறான்
என்முகத்துக்கு முன்பாகப் பீற்றுகிறான்
இன்று ஒரு அரேபியனைக் கொன்றதாக.”

அண்ணன் இஸ்ரேல் உருவாகிய பிறகானவன் என்பதால் முழுக்க இராணுவமாக இருக்கிறான். கொலை என்பது அவனிடம் மறமாக வெளிப்படுகிறது. ஆதிக்க இனத்திற்கான அறமாக மாற்றப்படுகிறது. இங்கு வரலாற்றில் நிகழ்ந்த வன்முறை முறைப்படுத்தப்பட்ட அதிகார எதிர்-வன்முறையாக தொன்மக் கதையாடல்கள் வழியாக மாறியுள்ளது. கவிதையில் உள்ள சொல்லாட்சியானது பிரதியின் ஆழ்தளத்தில் உள்ள அரசியலை வெளிப்படுத்திக் காட்டுகிறது. முதல் பகுதியில் அவளுக்கு பாலஸ்தீனியனாக உள்ள புரட்சியாளர்கள்.. அண்ணனால் அரேபியனாக எடுத்துரைக்கப் படுகிறார்கள். முறைப்படுத்தப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தால் பாலஸ்தீனியர்கள் என்கிற வார்த்தை பிரதியில் இங்கு அரேபியனாக  மாற்றீடு செய்யப்படுகிறது. பாலஸ்தீனியப் பிரச்சனை என்பது நிலம், நாடு அதன் இறையாண்மை என்பதிலிருந்து, இனம்-மதம் என்பதற்குள் அடக்கப்பட்டுவிடுகிறது. அதாவது

'வெள்ளிக்கிழமைகளில் பாலஸ்தீனியப் பையன்களோடு
போராட்டம் செய்கிறேன்"

என்று முன்பு இஸ்ரேலிய-தன்னிலையாக  கவிதையில் துவங்கிய “நான்“ போராடியதை சொன்ன பிரதியானது, சுவரின் மூலம் அடைந்த மாற்றத்தால், அண்ணனின் யூத-இனவாத(ஜியோனிச) குரலை அம்பலப்படுத்திவிடுகிறது. இந்த வரிகளில் உள்ள வெள்ளிக்கிழமைகளில் என்கிற சொல்லின் தேர்வு நுட்பமானது. இஸ்லாம் மதம் முன்வைத்த புனிதநாள்.  இது பாலஸ்தீனிய புரட்சியாளர்களின் மதம் சார்ந்த உணர்வை வெளிப்படுத்தும் சொல் மட்டுமின்றி அப்பையன்களுடன் போராட்டம் செய்வதற்கான நாட் தேர்வாக சொல்லப்படுவது  அதன் மத தன்மை குறித்த ஒருவகை விமர்சனம் எனலாம். பாலஸ்தீனிய இனப்பிரச்சனை, சர்வதேச மற்றும் இஸ்லாமிய சமூகங்களால் ஒரு மதப்பிரச்சனையாக குறுக்கப்பட்டுவிட்டதன் ஒரு அடையாளம்தான் கவிதையில் சொல்லப்படும் வெள்ளிக்கிழமைப் போராட்டம் எனலாம்.

பிறகு தன்னினத்திற்குள்ளேயே மற்றமையாக இருப்பவள் உளச்சிக்கல் உள்ளவளாகவும், தண்டிக்கப்பட வேண்டியவளாகவும் கருதப்படுகிறாள். தனிமைப்படுத்தப் படுகிறாள். வரலாறு விளிம்புகளை இப்படித்தான் உருவாக்குகிறது. கட்டாய இராணுவமாக்கலை மறுத்ததால், சிறைக்குள் அடைக்கப்பட்ட அவள், இங்கு மற்றமை என்கிற பாலஸ்தீனிய பெண்ணிருப்பாக முழுமையாக்கம் பெறுகிறாள். இதற்கு பிந்தைய கவிதை வரிகளை உணர்வுகளால்தான் புரிந்துகொள்ளமுடியும். இறுதியில் நான்-மற்றமை என்கிற எதிர்-இருப்புகளை சிதைத்து, கவிதை மொழி, பிரதியை துவங்கியபோது வந்த அதீனா என்கிற பாலஸ்தீன தோழியாகவே கவிதை சொல்லியாகிய நானை உருமாற்றிவிடுகிறது. தனிமைச்சிறையில் உள்ள அவள், அவளுக்கே அந்நியமாக மாறி, ஒடுக்கப்படுகிறாள். கவிதை மொழி இங்கு மனச்சிதைவின் மொழியாகிவிடுகிறது. வேறு என்ன செய்யமுடியும், மழிக்கப்பட்ட தலையுடன், நிர்வாணமாக, சிறைச்சுவரை பிராண்டுவதை தவிர.
 
Eve_Enslerஅதாவது, கவிதைக்குள் செயல்படும் நான் இப்படியாக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதியாக இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களது இருப்பாக மாறிவிடுகிறது. கவிதை எழுதியவர் அமேரிக்க-யூதர் என்பதை மறக்கடித்துவிட்டு, ஒரு இஸ்ரேலியப் பெண் என்பதாக துவங்கி, அவள் தன்னை ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியவளாக மாற்றிக் கொள்கிறாள். அதாவது சிறுபான்மை-இருப்பாதல் என்கிற நிலையை அடைகிறாள்.  “ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண், ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்தவளை பீடிக்கிறாள் அல்லது விடுவிக்கிறாள்“. இங்கு சுதந்திரம் விடுதலை என்பதெல்லாம் வேறு பொருள்கொள்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைதான் ஒடுக்குபவர்களையும் விடுவிக்கும் என்கிற இந்த செய்திதான் முக்கியம். வேறுவிதமாகச் சொன்னால், ஒடுக்குபவன், ஒடுக்கப்பட்டவன் என்கிற பிரிவனை தகர்க்கப்பட்டால்தான், மனிதவாழ்தல் என்பது அர்த்தம் உள்ளதாக இருக்கும்.

பின்குறிப்பு - யூதராக பிறந்த ஈவ் இன்ஸ்லர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை உலகெங்கிலும் கவிதைகள், நாடகங்கள் வழியாக ஒலித்துக் கொண்டிருப்பவர். ஒரு யூதராக பாலஸ்தீனியர்களது ஒடுக்கமுறைக்கு எதிராக எழுதப்பட்டிருக்கிறது இக்கவிதை. பிரதிகளை விட்டுவிட்டு எழுதியவரின் அடையாளங்களை தேடும் நமது இலக்கியப் பார்வைக்கு சவாலாகவும், மாற்றாகவும் உள்ளது.

குறிப்புகள்

1. சுவர் (மேலதிக விபரங்களை இங்கு படிக்கலாம்) என்பது யூதர்களின் ஒரு தொன்ம-wailing_wall_crowd  வரலாற்று-நம்பிக்கையாகும். கி்.பி. 70-ல் ரோமானியர்கள் யூதர்களின் எழுச்சியை அடக்கி இடித்து தள்ளிய  சாலமன் மன்னால் கட்டப்பட்ட யூதர்களின் புனித ஆலயத்தில், இடிபாடுகளுக்கிடையே மிஞ்சிய ஒரு சுவர்.   இந்த சுவர் இஸ்லாமியர்களுக்கா? யூதர்களுக்கா? எனபதில் பெரும்போரே நிகழ்ந்தது.  காரணம், முகமது நபி முதலில் இந்த ஆலயத்தை மையமாகக் கொண்ட - அல் குத்ஸ் என்பதை இறை ஆலயமாக நோக்கித் தொழுது கொண்டிருந்தார். அவரது மெஹராஜ் எனப்படும் வானியல் பயணம், மெக்காவில் துவங்கி வெண்மைநிற இறகு முளைத்த புர்ஹா என்கிற குதிரை இந்த இடத்தில் முதலில் அவரை இறக்கியது. இங்கு அல்லாவை தொழுதுவிட்டு, அதன் பின்னே 7 வானங்களைத்தாண்டி அல்லாவை சந்தித்து இஸ்லாமிய 5 நேர வழிபாடு மற்றும் 30 நோன்பு போன்றவற்றை பெற்று வந்ததாக இஸ்லாமிய நம்பிக்கை. அதனால் இஸ்லாமியர்களுக்கு காபாவிற்கு பிறகான ஒரு புனிதத் தலமாக இது உள்ளது. ஆனால், இச் சுவரை யூதர்கள் அவர்களது கடவுளின் இருப்பிடமாக புனிதத்திலும் புனிதமாக கருதுகிறார்கள். இடிபாடுகளில் மிஞ்சிய இச்சுவர் அவர்களது இடிந்துபோன வரலாற்று அடையாளமாக இருப்பதாலும், இதில் யூதர்கள் தங்களது பிரார்த்தனைகளை முன்வைத்து அழுது வழிபட்டதாலும், இது Wailing Wall  என அழைக்கப்படுகிறது.

2. இருத்தல், இருப்பு என்பது இருத்தலியல் வாதம் முன்வைக்கும் existence என்கிற புரிதலில் இங்கு பயன்படுத்தவில்லை.  becoming-minor என்கிற கோட்பாட்டு அடிப்படையில் becoming என்பதற்கு இருப்பு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. Being, Existence போன்ற சொற்களுக்கு இருத்தல், இருப்பு  என்கிற தமிழ் சொல்லை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்த நாகார்ஜீனனின் இந்தப் பதிவில் உள்ள விவாதத்தை வாசித்தறியலாம்.

- ஜமாலன் 28-04-2010.
Share |
ஜமாலன். Blogger இயக்குவது.