இலககிய விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலககிய விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசனின் கவிதைகள்– ஜமாலன்

இழந்த நிலத்தை தனது சொற்களில் பதியும் ஒரு கவிதை உத்தி பாலஸ்தீனியக் கவிஞர் மக்மூத் தார்வீஸிடம் வாசிக்க முடியும். 83-களில் வெளியாக தமிழீழக் கவிதைகளிலும், அவர்களது ஈழ நிலத்தை சொற்களால் தங்க்ள கவிதைகளில் பதியமிட்டார்கள். நிஜமான தனது மூதாதைக் குடிகள் வாழ்ந்த அதில் விளைந்த குருத்துக்களான நமது கண்முன், அந்நிலம் பறிக்கப்பட்டு, இல்லாமல் ஆக்கப்படும்போது, அந்நிலத்தை தனது படைப்புகள் வழியாக பிராதியாக்குதல் என்பது நிலத்தோடு பிணந்த ஒரு உடலின் கலகச் செயல்பாடு. அச்செயல்பாட்டை பாலஸ்தீனியக் கவிதைகளுக்குப்பின் தந்தவை ஈழக்கவிதைகள். தமிழில் அந்த தளத்தை, தனது நிலம் களவாடப்படுவதை, தான் துரத்தப்படுவதை, ஒரு அகதியாதல் மனநிலையில் பாடும் கவிதைகள் இல்லை என்றே சொல்லலாம்.
ஆய்வாளரும், ஆசிரியரும், கவிஞருமான நண்பர் ஏர். மகாராசன் அவர்களதுRelated image ”சொல் நிலம்” கவிதை நூலை அனுப்பியிருந்தார். அந்த தலைப்பு எனக்கு ஏற்படுத்திய பிம்பம், மேற்கண்ட, பாலஸ்தீன, ஈழக்கவிதைகளின் நினைவைக் கொண்டுவந்தன. தார்வீஸ் பற்றிய எனது கட்டுரை ஒன்றில் இதை விரிவாக விவரித்துள்ளேன். மகாராசனின் இக்கவிதைகள், நிலம் குறித்த ஏக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றாலும், அகதியாதல் என்ற விரட்டப்பட்ட மனநிலையில் தனது நிலத்தின் கனவுகளை, ஏக்கங்களை பதியவைக்கவில்லை. ஆனாலும், அதற்கான முதன் முயற்சியாக தன் நிலம், வயல், உழவு, மக்கள்நிலை, திணை என கவிதையாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
சிறிய நூல் என்றாலும் எளிமையான மொழியில் இயற்கையைப் பாடும், நேசிக்கும், மனித நேயத்தையும், அதற்கான ஒடுக்கப்பட்ட அரசியல் குரலையும் முன்வைக்கும் கவிதைகள். கூடுதலான அரசியல் உணர்வால் எழுதப்பட்ட உணர்ச்சி சார்ந்த கவிதைகள் என்பதால் அழகியல் வாசிப்பில் ஏற்படும் உணர்ச்சியாக மாறி வெளிப்படுவதாக உள்ளது.
”எல்லா நாளும்
பொழுதுகள் விடிந்தாலும்
இல்லாதவர் வாழ்வையே
கவ்விக் கொள்கிறது
இருள்.”
”நிழல் வனம்” என்ற தலைப்பில் இயற்கை, காடுகள் பற்றி எழுதப்பட்ட கவிதையில்..
“மனித
நிழல் போர்த்திய
நாடுதான்
வெயிலில்
வெந்து சாகிறது.
எட்டிய
காட்டுக்குள்ளிருக்கும்
மரங்களும் பூக்களும்
இப்போது
சிரித்துக் கொண்டிருக்கின்றன.”
தற்போதைய குரங்கணி நிகழ்வோடு இதனை ஒப்பிட்டு பார்க்கிறது வாசிப்பு. காடு நம்மை பார்த்து சிரிக்கிறது போலிருக்கிறது ”மரங்களோடு எரிந்தார்கள் மனிதர்களும்” என்று.
இவரது கவிதைகளில் சிலவரிகள் இயற்கை என்ற புலத்தை, தமிழ் என்ற திணைக்குடி நிலத்தோடு இணைத்து ஏங்கும் ஒரு தவிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. இயற்கை அழிவால் கூடுகள் சிதைந்த பறவைகளின் ஒப்பாரிக் குரல் கேட்பாரற்று ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த ஒப்பாரி ஒலி காட்சியாக மனதில் பதிகிறது இவரது கவிதை வரிகளில். ”ஒப்பாரி மகரந்தம்” என்ற ஒரு சொல்லாட்சி சுணாமி எனப்படும் ஆழிப்பேரலை பற்றிய கவிதை ஒன்றில். சூழ்கொண்டு துக்கத்தை பிரசவிக்கும் ஒரு மகரந்தப்பொடியாக மாறிய துயரத்தின் ஓலக்குரலை வெளிப்படுத்துவதாக உள்ளது.
”உரிமை பறிக்கும்
சாதித் திமிராய்
உயிர்கள் பறித்தது
கடல் திமிர்.”
என்று ஆழிப்பேரலை என்ற இயற்கை பேரிடருடன், சமூகப் பேரிடராக உள்ள சாதியத்தை இணைப்படுத்தி வாசிக்கிறார். இயற்கையும், சமூகமும் இல்லாதவனுக்கு பெருந்துயராக மாற்றப்பட்டுவிட்ட அவலத்தின் குரலாக ஒலிக்கிறது இவரது கவிதைகள்.
”வெண்மணி வயலின்
செந்நெல் மனிதர்கள்”
உடல் நிலமாகவும், நிலம் உடலாகவும் மாறுவதிலும், மாற்றுவதிலும் அதிகாரத்தின் ஆதிக்க வெறி எப்படி செயல்படுகிறது என்பதை இவரது பெரும்பாலான கவிதைகள் உணர்த்துவதாக உள்ளது. ”கூதிர் காலம்” என்ற கவிதை ஒரு சங்ககப்பாடல் காட்சியின் அக ஏக்கத்தை சொல்கிறது. ஒருவித பழமை ஏக்கம் என்பதுடன் இணைந்து இயற்கை நோக்கி திரும்புதலும், இழந்த நிலத்தை மீட்கும் திணைக்குடி மனமும் கவிதைகள் நெடுகிலும் ஒழுகியோடுகின்றன.
”செல்லாக்காசுகளின் ஒப்பாரி” என்ற கவிதை. பணமதிப்பிழப்பு என்ற மோடியின் செல்லாக்காசுத்திட்டத்தின் விளைவை சொல்லும் கவிதை.
”செல்லாமல் போனது
இழந்துபோன வாழ்வைப்
போர்த்திக் கிடக்கும்
சீவன்களும்தான்.”
என்று மனிதனே செல்லாக்காசாக மாற்றப்பட்டுவிட்ட அரசியல் அவலம் பற்றிய பதிவாக உள்ளது.
ராம்குமார் படுகொலையை சாதிய ஆணவப் படுகொலையாகவும், அதில் பார்ப்பனர், காவிகள், காவல்துறை உள்ளிட்டவற்றின் கூட்டதிகாரம் சாதிய முகத்தில் எப்படி ஒரு சாமாநியனைக் கொன்றது என்ற கருத்தை கவிதையாக முயன்றிருக்கிறார். கவிதையைவிட கருத்து ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோல; ”அறத்தீ மனிதர்கள்” என்ற கவிதையும் முல்லிவாய்க்கால் படுகொலையினால் சிதறுண்ட மனதின் வெளிப்பாடாக அரசியல் மீது காறி உமிழும் சொற்கோவையாக வெளிப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள நீர்-அரசியல் குறித்து பேசும் ”நீரின்றி அமையாது தமிழகம்” என்ற கவிதையின் இறுதிவரிகள் இன்றைய தமிழின அரசியலின் புள்ளியை சுட்டிச் சொல்கிறது இப்படி,
பூநூலால் கோா்க்கப்பட்ட
இந்திய வரைபடச் சாயங்களை
அவ்வப்போது
ஆறுகள் தான் அழிக்கின்றன.”
புரட்சிகரக் கவிமரபான இன்குலாப் கவிதைகளின உணர்ச்சிமிக்க சில வரிகளைப்போன்ற வரிகள், சொல்முறை சில கவிதைகளில் வெளிப்பாடு கொண்டுள்ளது. பழந்தமிழ் அறிவுடன், தமிழ் மரபிலும், தமிழின் அணியிலக்கன மறைபொருள் விளக்க உத்திமுறைகளான உள்ளுரை, உவமம், உருவகம், இறைச்சி போன்றவற்றைப் பயன்படுத்தி, கவிதை மொழியை ஒரு இணைமொழியாக்க உத்தியாக வெளிப்படுத்துவதற்கான மொழிப்புலம் கொண்ட மகராசன், மென்மேலம் சிறந்த கவிதைகளை எழுதமுடியும் என்பதை, கவிதை குறித்த அவரது அறிதலாக வெளிப்படும் கீழ்கண்ட வரிகள் சொல்லிச் செல்கின்றன.
”கவிதைகளில் இளைப்பாறுகின்றன
சுமைத்தாங்கிச் சொற்கள்”
”கவித்தனம் காட்டவே
எழுதி எழுதித் தீர்கின்றன
சொற்கள்.”
”ஈரம் கோதிய சொற்கள் தான்
வாழ்வின் தாகத்தை
இப்போது தணிக்கின்றன”
உணர்வுகள் கவிதைகளில் சொற்களாக மட்டுமே மிஞ்சாமல், அழகியல் சார்ந்த காட்சிகளாக எடுத்துரைக்கப்படும்போது வாசிப்பில் நினைவற்ற நிலையில் மொழித்துகளாக சேர்ந்துவிடும். கவிதையில் சொற்கள் இசைத்தன்மையுடன் இருக்க எதகைமோனை போன்ற உத்திகளை உருவாக்கியதன் பின்னணி என்பது இத்தகைய அழகுணர்ச்சியை இசைத்தலாக கவிதை வெளிப்படுத்தவும், வாசப்பில் அது இசைாயக மனதில் படியவுமே. மகராசனின் இகக்விதைகளில் அழகியல் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால், செய்நேர்த்திமிக்க கவிதைகளாக அவை வெளிப்படும் என்ற நம்பிக்கையை தரும் கவிதை தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
- ஜமாலன் 15-03-2018
நூல் குறிப்பு: ”சொல் நிலம்” – ஆசிரியர்: கவிஞர். மகாராசன் – டிச. 2017- பக். 88- ஆதி பதிப்பகம் – திருவண்ணாமலை - விலை: ரூ 100

“மேலும்” விருதிற்கான ஏற்புரை.

நண்பர்களுக்கு வணக்கம்.

“மேலும்”-இதழ் வழங்கும் இவ்விருதைப் பெறுவதில் உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்விருதை வழங்கிய “மேலும்” அறக்கட்டளைக்கும், அதனை நடத்திவரும் மதிப்பிற்குரிய “மேலும்” ஆசிரியர் சிவசு மற்றும் மதிப்பிற்குரிய தமிழவன் அவர்களுக்கும் நன்றி. விருதுகள் நபர்களை அங்கீகரிப்பதில்லை அவர்களது பணியை மற்றும் எழுத்தை அங்கீகரிப்பவை. அந்தவகையில் எனது எழுத்திற்கும் விமர்சனமுறைமைக்கும் கிடைத்த அங்கீகாரம் இது.

இச்சந்தர்ப்பத்தில் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் சார்த்தர் தனக்கு வழுங்கப்பட்ட உலகின் மிகப்பெரும் விருதான நோபலை நிராகரிக்கும்போது கூறிய வாசகமே நினைவிற்கு வருகிறது. நோபல் பரிசை எனக்கு தந்து என்னை நிறுவனமாக்க முயல்கிறார்கள் என்பதே அது. இக்கருத்தில் அவர் பரிசு என்பதன் வழியாக நிறுவன மயப்படுத்தம் போக்கை நிராகரிப்பது முக்கியமானது. பெரும்பாலான பரிசுகள், விருதுகள் நிறுவனமயப்படுத்தும் தன்மையிலேயே தரப்படுகிறது. பரிசு யாரால் யாருக்கு தரப்படுகிறது அதன் நோக்கம் என்ன என்பதே முக்கியம். அவ்வகையில் நிறுவனமாக தன்னை ஆக்கிக் கொள்ளாத ”மேலும்” இதழின் பெயரில் நிறுவனங்களில் பங்களிக்காத பேரா. சிவசு அவர்களால் இவ்விருது வழுங்கப்படுகிறது. இவ்விருது நிறுவனங்களுக்கும், நிறுவன முறைமைகளுக்கும் எதிராக உள்ளவர்களையும், அதனை சாராதவர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது முக்கியம். சென்ற ஆண்டு விருதை அருமை நண்பர் எஸ். சண்முகம் பெற்றார். இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது எனது திறனாய்வுக்கும், விமர்சனத்திற்கும் கிடைத்திருக்கும் ஒரு மதிப்பீடு மற்றும் அங்கீகாரம்.

படைப்பாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் விருதுகளிலிருந்து விலக்காகி, திறனாய்வு மற்றும் விமர்சனத் துறையாளருக்கு வழங்கப்படுவதே இவ்விருதின் சிறப்பு எனலாம். திறனாய்வாளன் எத்தனை சமூகம் முக்கியத்துவம் வாய்ந்தவன் என்பதை எனது சிற்றேடு இதழ் நேர்காணலில் விளக்கி உள்ளேன். வாய்ப்புள்ள நண்பர்கள் அதை வாசித்தறியலாம். குறிப்பாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன். திறனாய்வாளன் என்பவன் சமுகத்தையும் படைப்பையும் இணைக்கவும், இணக்கவும் செய்பவன். பிரதிக்கும் வாசகனுக்கும் இடையில் பிரதியை சமூகவயப்படுத்துவதுடன் வாசகனையும் சமூகவயப்படுத்துகிறான். திறனாய்வு அற்ற சமூகம் இலக்கியத்தை எப்படி பண்டமாகவும், சுவைஞர்களை உட்கார வைக்கும் உணவு மேசையாகவும் மாற்றும் என்பதற்கு ஒரு உதாரணமே தற்போதைய தமிழ் சூழல் இலக்கிய நிலை என்றால் மிகையாகாது. திறனாய்வு இன்றி ஒரு சமூகம் தன்போக்கை உணரமுடியாது. அவ்வகையில் திறனாய்வாளனின், விமர்சகரின் பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லி என் பற்றியும் எனது எழுத்து பற்றியும் ஒரு சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன். 

“மேலும்” இதழில்தான் எனது எழுத்துப்பணியின் விமர்சன மற்றும் கோட்பாடு சார்ந்த எழுத்துமுறை துவங்கியது. எனது ”கவிதையும் சிதைவாக்கமும்” என்ற கட்டுரை “மேலும்” இதழில் வெளிவந்தபோது எனது எழுத்திற்கான அங்கீகாரமாகவும், எழுதுவதற்கான நம்பிக்கையாகவும் எனக்குள் உருவாகியது. காரணம் “மேலும்” இதழ் தமிழக அறிவார்ந்த சிந்தனை தளத்தில் ஒரு முக்கியமான நவீனமான சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்திய இதழ். தமிழ் சிந்தனையை அடுத்த தளத்திற்கு நகர்த்திய ஒரு போக்கே ”மேலும்” இதழ். தமிழில் 80-களுக்கு பிறகு அறிமுகமான புதிய விமர்சனமுறையை, சிந்தனை முறையை அதாவது அமைப்பியல் துவங்கிய பின் அமைப்பியல்வரையான சிந்தனைமுறையை தமிழில் நிகழ்த்திப் பார்த்த ஒரு ஆடுகளமே, ஒரு தளமே ”மேலும்” இதழ். அதில் எழுதிய சிந்தனையாளர்கள் குறிப்பாக தமிழவன், சிவசு, நாகார்ஜீனன், அ. மார்க்ஸ், எம்டிஎம், பிரேம் மற்றும் எஸ். சண்முகம் உள்ளிட்ட சிறுபத்திரிக்கை தொடர்புடைய சிந்தனைாளர்களும், பல்கலைக்கழகம் சார்ந்த அறிவுப்புலப் பேராசிரியர்களும்தான் இன்று தமிழ் சிந்தனையின் விமர்சன மரபை, கோட்பாட்டு சிந்தனை தளத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக உள்ளனர்.

ஒரு சமூகத்தின் அறிவுப்புலத்தை, சிந்திக்கும் முறைமையை, உலகப்பார்வையை கட்டமைப்பது இத்தகைய சிறு சூழலைச் சார்ந்த சிந்தனைகளும், அதில் புழங்கும் அறிவுவுஜீவிகளுமே. உதாரணமாக சொல்லாடல், பணுவல், கட்டுடைப்பு, சிதைவாக்கம் உள்ளிட்ட பல வார்த்தைகள் இன்று வெகுசன ஊடகங்களில் மிகச்சாதரணமாக புழங்குவதைக் காணலாம். இத்தகைய புழக்கத்திற்கான இச்சொற்களை அன்று உருவாக்கிய ஒரு அறிவுத்தளமே “மேலும்” இதழ். ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கான ஒரு சொல்லாடல் புலத்தை வடிவமைப்பதும் அதை இயக்கத்திலும், ஆட்டத்திலும் வைப்பதே இலக்கியத்தின் பணி. அதாவது முந்தைய சொல்லாடலை இன்றைக்கான தகவமைப்பாக்கி இயல்பாக்கம் செய்வதே இலக்கியத்தின் பணி. பல்வேறு உலகை படைத்தளிப்பதன் மூலம், வாழ்வதற்கான பல திறப்புகளை, சாத்தியங்களை உருவாக்குவதே இலக்கியத்தின் பணி. அத்தகைய பணியை தமிழில் முன்னின்று நடத்திய ஒரு இயக்கமே “மேலும்” என்றால் மிகையாகாது. இத்தகைய சிறப்பு மிக்க ஒரு இயக்கம் வழங்கும் இந்த விருது என்னை இன்னும் பொறுப்பு மிக்க விமர்சகனாக மாற்றும். அந்தவகையில் இவ்விருதை ஏற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மௌனியின் செம்மங்குடி ஊர்தேடல் போல என்னைப்பற்றிய சிறு அறிமுகக்குறிப்பு. நான் தஞ்சைப்பகுதியில் உள்ள பாடல்பெற்ற சைவத்தலமான குடந்தை எனப்படும் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் ஊர் ஒருவகையான புராணங்கள், பழங்கதைகளில் நிரம்பிய ஊர் என்பதே எனது முதல் இலக்கிய ஆர்வத்திற்கான அடிப்படை. புகழ்பெற்ற நவக்கிரகங்களில் ஒன்றான ராகுஸ்தலமே எங்கள் ஊர். அதேபோல் பிரபலமான வைணவத்தலமான தென்திருப்பதி எனப்படும் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளதும் எங்கள் ஊரே. இவற்றை எல்லாம்விட சுந்தர காளியம்மன் வருட உலா மற்றும் எங்கள் ஊரின் ஐதீகமும். பழங்கதையுடன் உறவும் கொண்ட ஜெம்புமாலிராஜன் கதை நாடகமும் கொண்ட ஊர்.

நாடோடியாக முடியாதவகையில் தேசங்களில் கட்டுண்டுவிட்ட நாம், நாட்டில், மண்ணில் அடையாளம் காணப்படும் இடமான ஊர் என்பதே எழுத்தாளனின் கற்பனைக்கும், இலக்கிய உணர்விற்கும் அடிப்படையாக அமைந்து உள்ளது. ஒரு உடலின் முதல் நிலமயமாதல் அதாவது தெல்யுஸ் வார்த்தைகளில் சொன்னால் “டெர்ரிட்டேரியலைசேஷன்” என்பது ஊரே. அதனால்தான் தொல்காப்பியம் அய்ந்திணைகளின் வாழிடங்களை வெவ்வேறு பெயரில் அடையாளப்படுத்துகிறது. நெய்தல் நிலம் பட்டினம் என்றும், குறிஞ்சி நிலம் காடு என்றும், மருதநிலம் ஊர் என்றும். ஆக, மருதமயமாகிவட்ட மனித வாழிடங்கள் இன்று ஊர் என் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆக ஒரு உடலின் நிலமயமாதலான ஊர் என்பது மனித உடலின் முதல் நினைவாக உள்ளது.

இந்த அடிப்படையில் ஒருவகை ஊர்தேடல் நினைவு என்பதில் பழமைவாத ஏக்கம் இருப்பதை உணரலாம். இத்தகைய ஏக்கத்தை ஒருவகையான பின்நவீன உணர்வு சார்ந்ததாக சொல்லலாம். காரணம் பின்நவீனம் நவீனத்திற்கு முந்தையதைப்பற்றிய ஒரு ஏக்கத்தின் அடிப்படையில் நவீனத்தில் பழமையை மறு உருவாக்கம் செய்வதன் வழியாக நவீனத்துவத்தின் உண்மையை புனைவாக்கி காட்டிவிடுகிறது. இத்தகைய பழமையின் நவீன உருவாக்கம்தான் நவீன மனிதனை நவீனத்தின் அழுத்தத்தத்திலிருந்து விடுவிப்பதாக உள்ளது. நவீனத்துவத்தின் உணர்வடிப்படைகளாக பதற்றம், அந்நியமாதல், நிலைகொள்ளாமை, பேரெந்திர அச்சம், உயிர்நிலைக்கான ஏக்கம் எனலாம். இந்த உணர்வெல்லைகள்தான் நவீனத்துவம் பேசும் “பகுத்தறிவு” என்ற ஆன்மீகத்திற்கான அடிப்படையாக மாறி உள்ளது. நவீனத்துவ இலக்கியத்தின் தேடலும் கட்டமைப்பும் இதனை சுற்றியே பின்னப்பட்டு உள்ளன என்பது மிகைக் கூற்றாகாது. இந்த மன அழுத்தம் ஏற்படுத்தி உள்ள இலக்கிய உணர்வை ஒரு விளைாயட்டாக, ஆட்டமாக மாற்றிவைத்ததே பின்நவீன உணர்வு எனலாம்.

இப்பின்நவீன உணர்வின் ஒரு புற அடையாளமே சமீபத்தில் உருவாகிவரும் பல ‘மால்கள்’ மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள். இவற்றை கவனித்தால் இவை பழமையை மறுஉருவாக்கம் செய்வதை அறியலாம். இவற்றின் பின்னணி இத்தகைய ஒரு உணர்வாக்கத்தின் வெளிப்பாடே. நட்சத்திர ஓட்டல்களில் ஆர்கானிக் உணவும், சராசரி உணவைவிட ஆர்கானிக் உணவு அணுகுமுடியாத விலையில் நிலையில் இருப்பதும் இதன் பின்னணி எனலாம். ஆக தன்னுருவாக்கமாக எனது ஊர் அமைந்த கதை என்பது சுயவிமர்சனமாக எனது பழமை ஏக்கத்தின் வெளிப்பாடே என்பதை பதியவைக்க விரும்புகிறேன்.

நான் எழுதத் துவங்கியது என்பது எனது சிறுவயதில் இருந்தே உருவான ஒன்று. சிறுவர் கதைகளில் துவங்கியது. இன்னும் சொல்லப்போனால் எனது அய்ந்தாம் வகுப்பில் துவங்கியது வாசிப்பும், நூலக பழக்கமும். நானே சிறுவர் இதழ்கள், கதைகள் கொண்ட ஒரு வாடகை நூலகம் வைத்து நடத்தினேன். அந்த காலத்தில் 75-களில் 5 காசுகள் துவங்கி 15 காசுகள் வரை உள்ள சிறுவர் கதைகள் வாங்கி அதை வாசிக்க 5 காசுகளுக்கு 3 புத்தகங்கள் என வாடகைக்கு விட்டு சிறநூலகம் நடத்தினேன். புத்தகங்கள் வாசிப்பதைவிட வாங்கி சேகரித்து அதை அடுக்கி பார்ப்பதே ஒரு ஆனந்தம் என்பதாக உருவாகிவிட்டது. இன்றுவரை வாசிக்க என வாங்கி சேர்த்த புத்தகங்கள் வாசித்ததைவிட அதிகமாகிவிட்டது.

எழுத்து என்பதற்கான அடிப்படை வாசிப்பும், வாசித்தவற்றைப்பற்றிய கற்பனைத்திறனும், சிந்திக்கும் பழக்கமும்தான். அதை தொடர்ந்து காப்பாற்றி வந்து உள்ளேன் என்பதே எனது இந்த ஐம்பது ஆண்டுகால வாழ்வில் மாறாத பழக்கமாகிவிட்டது. எனது ஒன்பதாம் வகுப்பில் வெகுசன வாசிப்பிலிருந்தும், வெகுசனபாணி கவிதை எழுத்துக்களிலிருந்தும் ஒரு பாயச்சலை உருவாக்கியது தமிழவனின் புதுக்கவிதை நாலு கட்டுரைகள் என்ற நூல்தான். அதன்பின் சீரிய இலக்கியத்திற்கு திரும்பி, தமிழவன் வழியாக அமைப்பியல் மற்றும் நாகார்ஜீனன், எம்டிஎம், பிரேம் வழியாக பின்நவீனம் அறிமுகமாகி, சக பயணியாக நண்பர் எஸ். சண்முகத்துடன் இந்த இலக்கியப் பயணம் தொடர்கிறது. நண்பர் ராமானுஜத்தின் தொடர்ந்த உரையாடல்கள் எனது எழுத்தை செழுமைப்படுத்தி வருபவை. தீராநதியில் தொடர்ந்து எழுத வாய்ப்பு தந்து எனது எழுத்தை பரவலாக்கியதில் நண்பர் கடற்கரய் பங்கு முக்கியமானது. எனது கல்லூரிக்கால நண்பர்கள் அரசு, ரவி சுப்ரமணியன், அமானுஷ்யன், கோமகன் மற்றும் என்னோடு சிறுபத்திரிக்கை நடத்திய நண்பர் ஆறுமுகம் மற்றும் பால்ய நண்பர்கள் மகேந்திரன், சிற்றரசு என அனைவருக்கும் எனது எழுத்து வளர்ச்சியில் ஒரு பங்கு உள்ளது என்பதை நன்றியோடு நினவு கூருகிறேன்.

எனது சிறுவயது எழுத்து இலக்கியத்தை கட்டமைத்ததில் சிறுவயது நண்பனாக இன்றுவரை என்னோடு உற்ற தோழமையாக இருந்து வரும் நண்பன் காலக்குறி ஆசிரியர் அ. ஜ. கான். எனது எழுத்திற்காகவே வறண்ட பாலைவனத்தில் காலக்குறி என்ற இதழை துவங்கி தொடர்ந்து எனது எழுத்தை அறிமுகப்படுத்தி வந்தான். எனது விமர்சன எழுத்தில் எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரத்தை உருவாக்கி தந்து, எனது எழுத்தை முழுமையாக வெளியிடுவதும், அதனால் கட்டுப்பாடின்றி எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் வாய்பை உருவாக்கி தந்து உள்ளான். இந்த வாய்ப்புதான் எனது எழுத்தின் ஒரு சுதந்திரபலமாக, சமரசம் செய்துகொள்ள வேண்டிய அவசியமற்றதாக உள்ளது. தனிப்பட்ட முறையில் கானிற்கு நான் நிறைய கடப்பாடு உள்ளவன் என்பதை நன்றியோடு பதிய விரும்புகிறேன்.

எனது எழுத்திற்கான வாய்ப்பையும், வளர்ச்சியையும் தந்த தமிழ்ச்சூழல் சிற்றிலக்கியங்கள், சிறு சூழல் அமைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

எனது இரண்டு நூல்கள் வெளிவந்து உள்ளது. மொழியும் நிலமும் என்ற தலைப்பிலும், நவீன தொன்மங்கள் நாடோடிக் குறிப்புகள் என்ற தலைப்பிலும். 90கள் தொடங்கி 2010 வரையிலான 20 ஆண்டு விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தொடர்ந்து இலக்கிய அரசியல் மற்றும் கோட்பாடுகள் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறேன். என் குறித்த எனது எழுத்து குறித்த விபரங்கள் சிற்றிதழில் வெளிவந்த எனது நேர்காணலில் விளக்கப்பட்டு உள்ளது. அதனால் கூறியது கூறலாக வேண்டாம் என அதை தவிர்க்கிறேன்.

இவ்விருதை பெறுவதற்கான எனது தகுதியைவிட எனது எழுத்தின் தகுதியை குறித்த எனது பார்வையை உங்களோடு இந்த ஏற்புரையில் பகிர்கிறேன். இலக்கியம், சமூகம், அரசியல் என்கிற ஒரு முப்பரிமாண அளவுகோலே எனது விமர்சனமுறையாக உருவாகி வந்து உள்ளது. நவீனத்துவம் மற்றும் பழமைவாதம் இரண்டிற்கும் எதிரான ஒரு விமர்சனத்தை தொடர்ந்து முன்வைத்து வருவது அவசியம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறேன். பகுத்தறிவின் வளர்ச்சி என்ற பெயரிலான நவீனத்துவவாதத்திற்கும், கற்பணார்த்த பழமைவாதத்திற்கும். ரசனைசார்ந்த நுகர்வு வாதத்திற்கும் எதிரானதாக எனது விமர்சனமுறையை அமைத்துக் கொண்டு உள்ளேன். சமூக விஞ்ஞானப்பார்வையான மார்க்சிய துவங்கி அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்தவம், பெண்ணியம், புதிய வரலாற்றுவாதம், சிதைவாக்கம் என் பல கோட்பாடுகளின் உள்ளோட்டத்தை விமர்சனமுறையில் அணுகி உருவாகி வந்ததே எனது பார்வை.

தற்போது எனது இலக்கிய அரசியல் என்றால் சிறபான்மையாதல் என்பதே. எப்பொழுதும் சிறுபான்மையாதல் என்பது ஒருவகையான ஜனநாயக இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கான வெகுமக்கள் அரசியல் எனலாம். சிறுபான்மை என்பது எண்ணிக்கை சார்ந்தது அல்ல. பன்மைத்துவம் சார்ந்தது. பெரும்பான்மை என்பதே ஓருமையானது. ஒற்றை சிந்தனையைக் கொண்டது. வன்முறையானது. யதார்த்தத்தில் பெரும்பான்மை எண்ணிக்கையில் சிறுபான்மையானது. சிறுபான்மை எண்ணிக்கையில் பெரும்பான்மையானது. காரணம் சிறுபான்மை என்பது பன்மை. அதனால் சிறுபான்மைகள் உண்டு. பெரும்பான்மைகள் கிடையாது. காரணம் பெரும்பான்மை என்பது ஒன்றுதான். பெரும்பான்மையை எதிர்ப்பதும் சூழலை உயிர்ப்புடன் வைப்பதும் சிறுபான்மைகளே.

சிறுபான்மையாக உள்ளவையே வளரும் தன்மைக் கொண்டது. பெரும்பான்மை என்பது வளர்ந்து தெவிட்டிய நிலையை அடைந்துவிட்ட ஒன்று. சிறுபான்மை பெரும்பான்மையாக வளர்வதற்கான இயக்க நிலையில் இருப்பது. அதுதான் சமூகபொதுபுத்திக்கு எதிரான பொராட்டத்தைக் கொண்டது. சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது. இத்தகைய சிறசூழல் அமைப்புகளே நுண் அளவிலான சமூக இயக்கத்தை நகர்த்துபவை. சமூக எந்திரத்தின் பற்சக்கரமாக இயங்குபவை. இவ்வமைப்புகள் சமூகத்தில் ஏற்படுத்தப்படும் நுண் அளவிலான மாற்றமே அடுத்துவரும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவது. அதனால் எப்போதும் சிறுசூழலுடன், சிறுபான்மைகளுடன் இருப்பதும் சிறுபான்மையாக உருவாகிக் கொண்டு இருப்பதுமே உயிர்ப்புடன் வாழவைப்பது.

அவ்வகையில் “மேலும்” உள்ளிட்ட சிறுபத்திரிக்கை மற்றும் சிறசூழல் அமைப்புகள் தொடர்ந்து இயக்கத்தில் இருப்பவை. சமூகத்தின் கலாச்சார அரசியலில் நுண்அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்கால சமூகத்தின் போக்கை நிர்ணயிப்பவை. அவற்றில் பங்கேற்பதும், அதன் கொளவரமும் முக்கியமானது என்பதே இந்த விருதை ஏற்பதற்கான எனது மனநிலை.

உலக வரலாற்றில் இலக்கியம் எப்போதம் சிறுபான்மையாக இருப்பதால்தான் அது உயிர்ப்புடன் உள்ளது. இந்த சமூகத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இலக்கியம் இல்லாமல் சமூகம் சாத்தியமில்லை. இலக்கியத்தை சமூகம் ஒதுக்கலாம். மதிப்பற்றதாக மாற்றி வைக்கலாம். ஆனால் இலக்கியம்தான் சமூகத்தை மதிப்புள்ளதாக மாற்றுகிறது. ஒரு இலக்கியம் சரியான சமூகத்தை கடடமைப்பதை கண்காணிப்பதும், அதை சரி செய்வதும் அதன் போக்கை மாற்றியமைப்பதும் அதை வாசிப்பாளனான மக்களிடம் கொண்டு சேர்ப்பதுமான பெரும்பணியே திறனாய்வாளர்களின் பணி. அவ்வகையில் திறனாய்வாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் விருது வழுங்கி சமூகத்தின் சரியான போக்கை கட்டமைப்பை உருவாக்கும் பணியில் “மேலும்” அறக்கட்டளை ஈடுபட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சமூகச்செயல்பாடு என்று கூறி நன்றியோடு எனது ஏற்புரையை முடிக்கிறேன்.

ஜமாலன் - 12-10-2014 (சிற்றேடு ஜனவரி-மார்ச்.2015)

ஒளிரும் கல்லால் இருளும் வாழ்வு – “மிளிர் கல்” ஒரு அரசியல் வாசிப்பு

நண்பர் இரா. முருகவேல் அவர்களின் ”மிளிர்கல்” என்ற நாவலுக்கு அந்நாவல் வெளிவந்த புதிதில் அதன் பிடிஎப் வடிவை படித்தவிட்டு எழுதிய திறனாய்வு. நிழல் இதழில் வெளிவந்தது. இதனை புத்தகச் சந்தையை ஒட்டி பதிவில் வெளியிடலாம் என்ற எண்ணியபோது அந்நாவலுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. அதனால் வெளியிடுவதை தவிர்த்தேன். தற்போது நண்பர்களின் வாசிப்பிற்காக வெளியிடுகிறேன். 

மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் மனிதகுல வரலாற்றை அதன் சமூக உருவாக்கத்தை ஒரு புனைவுக் கதையாடலாக உருவாக்கிய ராகுல சாங்கிருத்யாயனின் ”வால்கா முதல் கங்கை வரை” புனைகதையாகவும் அதேநேரத்தில் மார்க்சிய பொருள்முதல்வாத அடிப்படையில் வரலாற்றை விவரிப்பதாகவும் எழுதப்பட்ட நாவல். அந்நாவலைப்போன்று சமணத் தத்துவத்தையும் வணிக வர்க்க பின்னணியின் எழுச்சியையும் அடிப்படையாகக் கொண்டு தமிழக நிலப்பரப்பை ஒரு வரலாற்றை கதையாக கட்டமைத்த சிலப்பதிகாரத்தையும், அதன் பாட்டுடைத் தலைவியான கண்ணகி என்ற பத்தினி தெய்வ பிம்பத்தையும் ஒரு ஆய்வுப் புனைவாக முன்வைப்பதே இரா. முருகவேல் எழுதியுள்ள ”மிளிர் கல்” என்கிற நாவல்.

சாங்கிருத்யாயன் நாவல் முற்றிலும் புனைகதையாக கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்நாவலோ கண்ணகியின் புகார் துவங்கி மதுரை வழியாக கொடுங்காலூர் போய் கடவுளாக மாறிய பயணத் தடத்தை ஆவணப்படமாக எடுக்க முனையும் ஜேஎன்யு (JNU) மாணவியான முல்லை என்கிற பத்திரிக்கையாளரையும், அவளது நண்பனான நவீன் என்கிற மூன்றாவது அணி எனப்படும் மார்க்சிய லெனினிய இயக்க செயல்பாட்டாளனது பயணத்தையும் புனைவாக சொல்லும் நாவல். அவர்களோடு இணைந்து செல்லும் வரலாற்று ஆய்வாளரான ஸ்ரீகுமார் என்பவரோடு நடைபெறும் உரையாடல்கள் வழியாக கண்ணகி கதை மீள்கட்டமைப்பு செய்யப்படுகிறது.

சங்க இலக்கியத்திற்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட சிலப்பதிகாரம் தமிழ் இனக்கருத்தியல் வளர்ச்சிக்கான அடிப்படையாக அமைந்தது என்பதே இன்றைய தமிழ் அரசியல் வரலாறு. இந்த வரலாற்றுப் பின்னணியில் முகிழ்த்த பெண்ணிய சிந்தனையில் கண்ணகி என்பவள், அதீத சக்திகொண்ட அதிகார எதிர்ப்பு பெண்ணாக பிம்பப் படுத்தப்பட்டதும் இந்நாவலுக்கான பின்புலமாக அமைகிறது. பாண்டிய அரசாட்சியை வீழ்த்தி மதுரையை எரித்து தனது அதிகாரத்தை நிறுவிய கண்ணகியின் கால் சிலம்பின் மாணிக்கப் பரல்கள் ரோம-கிரேக்க வணிகத்தை தமிழகத்தில் பரப்பியதையும், அந்த கற்களுக்காக மூவேந்தரிடம் நிகழ்ந்த போரும் போட்டியும் இக்கதையாடலின் உள்சரடாக நாவலில் வாசிக்கப்பட்டு உள்ளது.

சிலப்பதிகாரம் என்பது தமிழ் பண்பாட்டோடும் நிகழ்கால தமிழ் தேசிய அரசியலோடும் கொண்டு உள்ள உறவை ஆராயும் முகமாக கண்ணகியின் கால்தடத்தோடு நடந்து செல்கிறது இந்நாவல். சிலப்பதிகாரம் பற்றிய எத்தனையோ தொன்மங்கள், கதைகள், ஆராய்ச்சிகள், அரசியல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றை எல்லாம் உள்வாங்கி இந்நாவல் சிலப்பதிகாரம் ஏன் உருவாக்கப்பட்டது, கண்ணகி ஏன் தமிழ் பெண்மையின் குறியீட்டு பிம்பமாக மாறினால் என்பதை நுட்பமாக தனது உள்கட்டமைப்பில் வைத்து பேசுகிறது.

இந்நாவலில் மூன்று கதை அடுக்குகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து செல்கிறது. இப்பிணைப்பை ஒரு புனைவாக்காமல் உரையாடல்கள் வழியாக மட்டுமே கட்டியிருப்பது நாவலை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை போன்ற வடிவத்திற்கு நகர்த்துகிறது. சிலப்பதிகாரம் உருவான ஒரு சமூக அடுக்கும், அதன்மேல் உருவாகி வந்து உள்ள இன்றைய நவீன சமூக அடுக்கும், அன்றும் இன்றும் மாறாமல் மக்களை, மூலவளங்களை கொள்ளையிடுவதற்காக பழங்குடிகளை ஒடுக்கி துரத்தியடிக்கும் அதிகார வேட்டையின் மாறாத அடுக்கும் என்ற இந்த மூன்று அடுக்குகளும் இந்நாவலின் பிணைந்தபடி செல்கிறது.

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற நூலை வாசிப்பவர்கள் அது ஒரு சுய வாக்குமூலமாக வெளிப்பட்ட ஆய்வுநூல் என்றாலும் அது எப்படி உண்மைகள் புனையப்படும் அரசியலைப் பற்றிய ஒரு வாசிப்புணர்வை ஏற்படுத்துகிறதோ அப்படி ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது இந்நாவல். அந்த நூலை தமிழ் சமூகத்தின் அதிகார அமைப்பிற்குள் வைத்து தளமாற்றம் செய்திருப்பதே இந்நாவல் என்றால் மிகையாகாது.

இயல்பானது, இயற்கையானது என பொதுபுத்தியில் உருவாக்கப்படும் “உண்மைகள்” எப்படி சமூக யதார்த்தம் மற்றும் புறநிலைகளால் கட்டமைக்கப்பட்டு ”உண்மையாக” தோற்றம் கொள்ளச் செய்யப்படுகிறது என்பதை ஒரு புனைவாக ஆக்க முனைகிறது இந்நாவல். அறிவு அதிகாரத்தோடு இணைவதன் வழியாக எப்படி இத்தகைய உண்மைகளை உற்பத்தி செய்கிறது என்பதே இந்நாவல் எடுத்துரைக்க முனையும் கதையாடலாகும்.

ஆனால் இதில் முழுவெற்றியை இந்நாவல் அடையமுடியாமல் ஆகியிருப்பது ஆசிரியரின் ”உண்மை” பற்றிய மரபான புரிதலடிப்படையில் தரவுகள், ஆதாரங்களை எடுத்துக் காட்டுதல் என்ற ரீதியில் பல இடங்களில் உருவாக்கப்பட்ட உரையாடல்களே. இத்தகைய உரையாடல்களை புனைவாக்க முனைவதில்தான் நாவலின் இலக்கியத்தரமும், புனைவாற்றலும் வெளிப்படும். அவற்றை நேரடி உரையாடலாக தருவதில் வாசிப்பவருக்கு அது புனைவின்பத்தை தருவதில்லை. முற்றிலுமாக இந்த நாவலை ஒரு புனைவாகவே மாற்றி எழுத முடியாதபடி இந்த உண்மைகள் பற்றிய அச்சமும், நிரூபணமும் ஆசிரியரை பல இடங்களில் புனைவிலிருந்து தடம் மாறச் செய்து உள்ளது.

உண்மைக்கான நிரூபணங்களை வேண்டி நிற்பது முதலாளித்துவ பகுத்தறிவு என்ற அறிவுசார் மரபின் ஒரு விளைவே. காரணம் நிரூபணம் என்பது முதலாளித்துவத்துடன் வளர்ந்த அறிவியல் என்கிற கருத்தாக்கத்துடன் உறவு கொண்டது. இது ஒருவகை காலனியத்தால் இங்கு கட்டமைக்கபட்ட பார்வை. இப்பார்வையே யதார்த்தவாத நேர்கோட்டு நாவலின் அடிப்படையை உருவாக்குவது. இதிலிருந்து விலகி முதலாளியம் உருவாக்கி உள்ள யதார்த்தத்தை, உண்மையை கட்டுடைத்து, சிதைத்து காட்டுவது இன்றைய புனைவிலக்கியத்தின் முக்கியச் செயல்பாடாகும்.

புனைவு என்பது உண்மையை தேடுவதோ, உண்மையை புனைந்துரைப்பதோ அல்ல. உண்மை என்கிற புனைவை, புனைவாக்கி காட்டுவதே. எழுத்துருக்களான பாத்திரங்கள் உண்மைகளாக அன்றி புனைவுகளாகவே நிற்பதன்வழி, ”உண்மைகள்” என்கிற அதிகாரத்தின் புனைவை அம்பலப்படுத்துவதும் சிதைத்து அழிப்பதுமே புனைவிலக்கியத்தின் குறிப்பாக ”முற்போக்காக” சொல்லப்படும் புனைவிலக்கியத்தின் அடிப்படை.

உலக நாவல் இலக்கியத்தை உருவாக்கிய மிகைல் செர்வாண்டிஸின் ’டான் குவிக்சோட்’ என்கிற புனைவிலக்கியம், 18-ஆம் நூற்றாண்டு நவீனத்துவ உருவாக்கம் எப்படி வரலாறு என்கிற ’உண்மை’யின்மீதும், அதன் உயர்குடி கதநாயக வழிபாட்டின் மீதும் கட்டப்படுகிறது என்பதை கிழித்துபோட்ட ஒரு பேரிலக்கியம். முதலாளியம் இப்படி பண்டைய வரலாற்றினை பகுத்தறிவு சொல்லாடலால் கட்டமைத்து நவினவரலாறாக்கி அதை ஒரு அறிவுசார் விஞ்ஞானமாக மாற்றி தன்னை கட்டமைத்துக் கொள்ளமுயல்வதை அந்த நாவல் தடம் கண்டு புனைவாக்கியது. வரலாற்றை அதி புனைவாகவும். அது எப்படி ஒரு கோமாளித்தனமான உருவாக்கமும் ஆன தன்னுருவாக்க புனைவு என்பதை வெளிப்படுத்தியது. முதுலாளியம் உருவாக்கிய இன்றைய இயல் உலகு பற்றிய பரோனியாவை தடம்காட்டிய முதல் நாவல் அது.

அதன்பின் உருவான யதார்த்தவாத நாவல் இலக்கியம் என்பது புனைவை உண்மையாக மாற்றியது. புறநிலையை துல்லியமாக்கிய புகைப்பட யதார்த்தவாதமாக புனைவிலக்கியத்தை மாற்றியது. இப்படியாக பல முதலாளியம் உருவாக்கிய புனைவு உலகை, உலக உண்மைகளை, பல உலக யதார்த்தங்களை நாவல்கள் உருவாக்கின. குடிகளை நாடாக்கியது காப்பியங்கள் குறிப்பாக சிலப்பதிகாரம் போன்றவை என்றால், நாடுகளை தேசியமாக்கியவை நாவல்களே. ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தைக் கட்டமைப்பதில் நாவல் இலக்கியத்தின் பங்கு முக்கியமானது. நாவல் புனைவுகள் உண்மைகளை உருவாக்குபவை. அல்லது உண்மையை நோக்கியதான பாய்வைக் கொண்டவையாக காட்டப்படுபவை.

17-ஆம் நூற்றாணடிற்குப் பிறகான உலகம் முதலாளியம் கட்டமைத்த உலகம். அதை இயல்பாக ஏற்பது ஒருவகை முதலாளிய பரோனியா. அந்தப் பரோனியாவிலிருந்து விலகாமல் உலகை ஊடுறுவிப் புரிவது கடினம். இந்த ஊடுறுவலை உருவாக்குவதே நவீன நாவல்களின், புனைவிலக்கியங்களின் முக்கிய பணியாகும். அதனால் உண்மைகளாக ஏற்க்கப்பட்ட, இயல்பாக்கப்பட்ட யதார்த்ங்களை சிதைத்து ஊடுறுவிச் செல்லும் புனைவுகளே முற்போக்கான திசைவழிக் கொண்டவை. உண்மைக்கும், பொதுபுத்திக்கும் எதிரான கலகமாக, கட்டுடைப்பாக புனைவிலக்கியம் செயல்பட வேண்டும்.

உண்மை இல்லை, ஆனால் உண்மைகள் உண்டு. பல உண்மைகள் இருப்பதால் ஒன்று உண்மையாக மற்றதை பொய்யாக்கும், புனைவாக்கும், மறைக்கும் விளையாட்டு அதிகாரத்தால் இயக்கப்படுகிறது. இவ்வாறு பல உண்மைகளை மறைத்து ஒவ்வொரு சமூக அமைப்பும் ஒரு ஒற்றை உண்மையை நோக்கியதாகவும் அல்லது பேருண்மை ஒன்றை நோக்கியதாகவும் கட்டப்படுகிறது. இத்தகைய உண்மைகளை சிதைத்து அதன் புனைவுக் கட்டமைப்பை வெளிப்படுத்துவதே இலக்கியப் புனைவின் முக்கிய செயல்பாடாகும். அந்தவகையில் தமிழ் சமூகத்தை நம்ப வைக்கப்பட்டுள்ள சிலப்பதிகாரம் பற்றிய உண்மைகளை, அதன் ஆதாரங்களைத் தேடிப்போகும் பயணத்தின் வழி அது ஒரு அதிகாரவர்க்கப் புனைவு என்பதாக கட்டவிழ்க்க முயல்கிறது இந்நாவல்.

ஒரு உண்மையை வாசிப்பாளனிடம் அல்லது மக்களிடம் நேரடியாக எடுத்துரைப்பது என்பது அறிவு என்கிற மூளை சார்ந்த புலன் பதிவோடு முடிந்துவிடும் ஒன்று. ஆனால் அதே உண்மையை ஒரு புனைவாக்கி இலக்கியமாக்கினால், அது வாசிப்பாளனை அல்லது மக்களை ஐம்புலன்களின் பதிவால், மூளையில் ஊடாட்டமாகி, மூளையின் பல பொறியமைவு செயல்களால் உடலின் ஒரு தன்னுணர்வற்ற செயலாக வெளிப்படுகிறது. இலக்கியம் உணர்வை, பிரக்ஞையை. தன்னுணர்வை உணர்வற்றதாக மாற்றி உடற்செயலாக்கி விடுகிறது. உடலின் செயலில் மட்டுமே அதன் தடத்தை உணர முடியும். ஒரு உடலை கட்டமைப்பது என்ற இச்செயலை இலக்கியங்கள் காலங்காகலமாக இப்படித்தான் செய்துவருகின்றன. கண்ணகியின் உடலை தமிழ் சமூகத்தின் பெண் உடல்களில் மையமாக பதியவும், படியவும் வைக்கப்பட்டுள்ளது சிலப்பதிகாரத்தின் வழி. தமிழ் பெண் உடல் கட்டமைப்பை அகழ்ந்தாள் உள்ளே கண்ணகியின் பேருடல் இருப்பதை காண முடியும். அது கற்பாக, பத்தினியாக தமிழ்தன்மையாக ஒவ்வொரு பெண் உடலுக்குள்ளும் வடிவமைந்து உள்ளது.

இலக்கியம் எழுதப்பட்டதாக மட்டுமின்றி பேசப்பட்டதாகவும், நாட்டார் தொன்மங்களாகவும் இருந்து தொடர்ந்து மனித உடலை மறுகட்டமைப்பு செய்துவருகின்றன. அதனால்தான் புனைவுகள், புராணங்கள், தொன்மங்கள் வழி மதங்கள் மக்களிடம் பரவி அவர்களை பற்றிப் பிடித்து உள்ளது. புராணங்கள் கடவுளை தன்வயப்படுத்தும் கதையாடலாகவும், தொண்மங்கள் இயற்கையை தன்வயப்படுத்தும் கதையாடலாகவும் உருவாகி வந்தவையே. புற உலகை நேரடியாக எடுத்துரைப்பது “உண்மை” என்ற தோற்றத்தையும், புனைவாக எடுத்துரைப்பது ”கற்பனை” என்ற தோற்றத்தையும் தருவது இந்த தன்வயப்படுத்தலின் ஒருவினையே. மனித உடல் கடவுள், இயற்கை, பேரண்டம் என தனது புற உலகை தன்வயப்படுத்தி, தனது அதிகார எல்லைக்குள் சங்கேதப்படுத்திக் கொள்வதற்கான ஒரு செயல்பாடே புனைவுகள். இப்புனைவுகளின் உடல் பாதிக்கும் உணர்வுகள் அறிவால் வாக்கியங்களாக கட்டமைக்கப்படும்போது அது உண்மைகளாக வடிவம் கொள்கின்றன.

ஆக, நேர் எடுத்துரைப்பிற்கும் இலக்கிய புனைவு எடுத்துரைப்பிற்கும் உள்ள இந்த வேறுபாடு முக்கியமானது. இதை வேறுவிதமாக கூறினால் ஒவ்வொரு சமூகத்தையும் கட்டமைப்பது அந்த சமூகத்தின் முந்தைய இலக்கிய புனைவாக்கங்களே. அவை உருவாக்கும் உண்மைகளும், பேருண்மைகளுமே. எனவேதான் அதிகாரத்தின் ஒரு கட்டமைவாகவும், அதேசமயம் அதிகாரத்தை கட்டுடைப்பதாகவும் இலக்கியம் செயல்படுகிறது. இலக்கியம் உருவாக்கும் புனைவு புதிய அக, புற பரப்புகளை உருவாக்கும் வல்லமை கொண்டது. இதற்கு சிறந்த உதாரணம் குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தை சொல்லலாம்.

சிலப்பதிகாரத்திற்கு தமிழில் அப்படி என்ன ஒரு முக்கியத்துவம் என்பதை புரிந்துகொள்ளாமல் இந்நாவலை அனுகமுடியாது என்பதால் அதைபற்றிய ஒரு சுருக்க விவரணையை கடந்தபின் நாவலுக்குள் செல்லலாம். சிலப்பதிகாரம் தமிழகம் என்கிற நிலப்பரப்பை இலக்கிய பிரதிக்குள் வரைந்து தந்த முதல் காப்பியம். மூவேந்தர்கள் ஆண்ட மூன்று நிலப்பரப்புகளையும், அதன் நகர்புற வரலாற்றின் வழி ஒருங்கிணைத்த ஒரு கதையாடல். ஒரு சமூகத்தை கட்டமைப்பதில் இலக்கியப் பிரதியின் பங்கை முதலில் செயல்படுத்திய ஒரு காப்பியம். மூவேந்தர்களின் தலைநகர்களில் பயணித்த இக்காப்பியம் அரசர், தெய்வம் போன்ற வழமையான காப்பிய நாயகர்களை விடுத்து ஒரு சராசரி குடிமகளை, குடிமகனை காப்பிய நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது உலகமயமாதலைப்போல நகர்மயமாதல் என்பதற்கான புனைவுப்பரப்பை உருவாக்கிய காப்பியம். அன்றைய பழங்குடிகள் நிறைந்த இன்றைய தமிழகத்தை, மூவேந்தர்கள் என்கிற பெருநில மன்னர்களின் ஒரு குடைக்கு கீழ் கொண்டுவந்த சமூக அசைவியக்கத்திற்கான ஒரு அறநெறியை உருவாக்கிய காப்பியம். அதாவது பழங்குடிகளை நகர்மய அரசுகள் தன்வயப்படுத்திய கதையே சிலப்பதிகாரம். பழங்குடிகளின் நாட்டார் தெய்வமான கண்ணகியை காளியாக்கி பெருமத அமைப்பிற்குள் உள்வயப்படுத்திய காப்பியம். இக்காப்பியத்தின் உருவாக்கம், உருவாக்கியவர் பற்றிய கதையாடல்கள் கூர்மையாக கவனிக்கப்பட வேண்டியவை.

தமிழ் என்கிற நவீன கருத்துருவாக்கத்தில் சிலப்பதிகாரம் ஒரு மையமான பிரதியாகும். தமிழ்நாடு என்கிற நிலலப்பரப்பை உருவாக்க மூவேந்தர்களின் நிலங்களை ஒருமித்த தமிழ் அடையாளத்திற்குள் கொண்டுவந்த ஒரு காப்பியம். இக்காப்பியம் மகாபாரதம் எப்படி இந்திய நிலப்பரப்பில் பல சிற்றினங்களை ஒருங்கிணைத்து ஒரு பேரரசு உருவாக்கத்தை நிகழ்த்தியதோ அதைப்போன்றதொரு தமிழக அரசு உருவாக்கத்திற்கான பழங்குடிகளை ஒருங்கிணைக்கும் கதையாடலே இக்காப்பியம். இக்காப்பியம் பற்றி பல நூறு ஆய்வுகள் வந்து உள்ளன. இதன் இலக்கியச் சிறப்பு, கவித்துவ மாண்பு மற்றும் அன்றைய தமிழர் வாழ்வியலைச் சொல்வது உள்ளிட்ட பலவும் இந்த காப்பியத்திற்கான ஆய்வுப்பொருளாக இருந்து வந்து உள்ளது. தமிழகத்தில் திராவிடக் கருத்தியலும் அதன் அரசியலும் எழுச்சி பெற்றபோது தமிழ் என்கிற கருத்துருவத்தை துலக்கப்படுத்திய ஒரு பண்பாட்டு ஆவணமாக மீள்கண்டு பிடிப்பு செய்யப்பட்டது இக்காப்பியம். கண்ணகி என்கிற காப்பியத்தின் பிம்பம் தமிழ்தாய் பிம்பத்திற்கான ஒரு அகவடிவமாக மாற்றப்பட்டது. கண்ணகியும் அவளது கற்பு நெறியும் தமிழ் பெண் உடல் கட்டமைவிற்கான மையமாக மாறியது.

பெரியாரால் விமர்சிக்கப்பட்ட இக்காப்பியம், ம.போ.சி போன்றவர்களால் தமிழ் தேசிய உருவாக்கத்திற்கான அடிப்படையாக முன்வைக்கப்பட்டது. கருணாநிதியால் திரைக்கதையாக்கப்பட்டு பூம்புகார் என்கிற திரைப்படமாக்கப்பட்டது. கண்ணகிக்கு சிலை வைப்பதும், அதை அப்புறப்படுத்துவதுமான ஒரு அரசியல் விளையாட்டும் நிகழ்த்தப்பட்டது. இப்படி பல அரசியல் சமூகவியல் கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக வாசிக்கப்பட்ட இக்காப்பியத்தை இந்நாவல் இடதுசாரி மார்க்சிய அடிப்படையில் வாசிக்க முயல்கிறது என்பதே இந்நாவலின் தனிச்சிறப்பு.

சமகால ஆய்வுகள், ஆய்வாளர்கள் பற்றிய குறிப்புடன் உருவாக்கப்பட்ட இந்நாவல், சமகால நபர்களையும் சந்திப்பதைப் பற்றி பேசுகிறது. இந்நாவலின் நாயகி முல்லை காஞ்சனை சீனிவாசன் என்கிற சமகால ஆவணப்பட இயக்குநர் பற்றியும், க. பஞ்சாங்கம் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் பற்றியும் பேசுகிறது. ஒருவகையான யதார்த்தவகை நாவல் போன்ற தோற்றத்தை தர முயன்றாலும் நாவலின் கதைவடிவம் ஒரு ஆய்வுக்கட்டுரைக்கான தன்மையிலேயே பல இடங்களில் நகர்கிறது. தான் சார்ந்த பழங்குடிகளின் அழிவுக்கு எதிராக நீதிகேட்டு நின்ற ஒரு பெண்வடிவை, வளர்ந்து வந்த வணிக சமூகமும், அதன் மதமான சமணமும் உள்வாங்கி இந்து பெருமத அமைப்பிற்குள்ளான கடவுளாக உருமாற்றிய கதையே சிலப்பதிகாரம்.

இலக்கியத்தின் அரசியலை வாசிப்பவருக்கு இந்நாவல் பல ஆழமான தகவல்களை ஆய்வுக்கான கூறுகளைத் தருகிறது என்றாலும், அரசியலை இலக்கியமாக வாசிக்கும் முயற்சியில் அரசியல் தூக்கலாகி இலக்கியம் உள்ளடக்கப்பட்டு உள்ளது. ஆனபோதிலும், அரசியலை இலக்கியமாக வாசிக்க முயன்ற இந்நாவல் இடதுசாரி இலக்கியத்தில் ஒரு முக்கியமான நாவலே. இன்றைய முதலாண்மை நிறுவனங்கள் எப்படி அறிவுத்துறையை பயன்படுத்தி தங்கள் வலைப்பின்னலை உருவாக்குகின்றன என்பதை சொல்லும் இந்நாவல், சிலப்பதிகாரம் என்ற பனுவலே அன்றைய தமிழக நகர்புற அரசதிகாரம் பழங்குடிகளை தனது அதிகார எல்லைக்குள் கொண்டுவர உருவாக்கப்பட்டது என்கிற வாசிப்பை முன்வைக்கிறது.

கண்ணகி என்கிற பழங்குடிகளிடம் உருவான ஒரு பெண் பிம்பம் நகர அரசு அதிகாரத்திற்கு எதிராக நகரை எரித்து அந்த அரசின் அதிகாரத்தை அழித்த கதையை, மேல்நிலையாக்கம் செய்து தமிழின் மேல்சாதி பாத்திரமாக்கி குறிப்பாக வணிக வர்க்கப் பாத்திரமாக்கி சிலப்பதிகாரம் என்கிற கதையாடல் கட்டமைக்கப்படுகிறது. அதாவது ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட கீழு்நிலையாக்கப்பட்ட பழங்குடிகளின் ஆற்றல்மிக்க பிம்பமாக, அவர்களின் நம்பிக்கையின் கடவுளாக, அதிகாரதிற்கு எதிரான ஒரு அழித்தொழிக்கும் பிம்பமாக இருந்த கண்ணகி ”வண்ணச்சீறடி மண்மகள் அறிந்நதிலள்” என்ற பத்தினி தேவமங்கையாக மாற்றப்பட்டு சிலப்பதிகாரத்தில் மேல்நிலையாக்கம் செய்யப்படுவதை தனது பயணத்தின் வழியாக உரையாடல்களின் வழி வெளிப்படுத்துகிறது இந்நாவல். பல வரலாற்றுத் தரவுகள் மற்றும் ஆய்வுகள் வழி இந்த முடிவை வந்தடையும் இந்நாவல் புறவடிவமாக கண்ணகி பற்றிய ஒரு ஆவணப்படம் எடுப்பதாக முல்லை என்ற பெண்ணின் வழி துவங்குகிறது.

கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி பயணித்த பாதையில் ஆய்வாளர் ஸ்ரீகுமார், இடதுசாரி நக்சல்பாரி இயக்க ஆதரவாளன் நவீன் மற்றும் ஆவணப்படம் எடுக்க விரும்பும் பத்திரிக்கையாளரான முல்லை பயணிப்பதே இந்நாவல். இந்த மூன்றுபேர் தேர்வு என்பது ஒருவகையான நவீன சிலப்பதிகாரத்தின் வடிவத்தை தருவதாக உள்ளது. அல்லது ஆசிரியரின் படைப்புச் சட்டகத்தில் இந்த மேற்பொருந்துதல் நிகழ்ந்திருக்கிறது. பண்டைய தமிழகத்தில் நிலவிய மிளிர் கல் எனப்படும் ஒளிவீசும் தன்மைக்கொண்ட மாணிக்கம், மரகதம், பவளம் உள்ளிட்ட பல கற்களின் வியபாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் கம்பம் பகுதியில் இத்தகைய கல்கள் அதிகம் கிடைக்கலாம் என்ற ஆய்வின் அடிப்படையில், சிலப்பதிகார சிலம்பின் மாணிக்கப் பரல்கள் என்பது இந்நாவலின் மற்றொரு கதை உருவாக்க மையமாக உள்ளது.

இந்த மிளிர் கல்களுக்காவே அன்றைய மூவேந்தர்கள் போர் புரிந்தும், மதங்களை பரப்பியும் பழங்குடிகளை அழித்தும், அப்புறப்படுத்தியும் தங்கள் அரசதிகாரத்தை நிறுவியதைப்போல, இன்றைய பகாசுர பண்ணாட்டு முதலாண்மை நிறுவனங்கள் காடுகளை அழித்தும், பழங்குடிகளை அழித்தும் அப்புறப்படுத்தியும் நாட்டு வளத்தை சுரண்டுவதை வெளிப்படுத்துகிறது இந்நாவல். இந்த கல்களை தேடி அடைவதற்காக வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுகளை ஊக்குவிக்கவும் அவற்றிற்கு நிதி உதவி அளிப்பதும் அதற்காக பல அரசுசாரா தொண்டு நிறுவனங்களை, ஆய்வகங்களை, ஆய்வு அமைப்புகளை உருவாக்குவதும், உபயம் (ஸ்பான்ஸர்) செய்வதும் நடக்கிறது. பல்கலைக்கழகங்கள் வழியாக ஊக்குவிக்கப்படும், நிதி அளிக்கப்படும் இத்தகைய ஆய்வுகள் வழி பண்ணாட்டு நிறுவனங்கள் ஒரு நாட்டின் மூலவளத்தை அறிந்து அவற்றை தனது முதலாண்மை நிறுவனங்கள் வழி சுரண்டிக் கொழிக்கின்றன. அறிவின் வழியாக அதிகாரம் கட்டமைவதை நிகழ்த்திக் காட்டகிறது.

இந்நாவலில் ஜே.கே. டைமண்ட்ஸ் என்ற நிறுவனம் இப்படி ஸ்ரீகுமார் என்கிற ஆய்வாளருக்கு உதவுவதாக கூறி அவரது அறிவை தனது கல்தேடும் செயலுக்கு பயன்படுத்துகிறது. உள்ளுரில் உள்ள முதலாளிகள் இதற்கு எதிராக அந்த குமாரை கடத்தி முதலாண்மை நிறுவனங்களிடம் பேரம் செய்து கொள்கிறார்கள். இவ்வாறாக ஒரு தரகு அதிகார வர்க்கம் தேசியமுதலாளித்துவத்தை ஒழித்து உருவாகுகிறது என்பதை சுட்டுகிறது இந்நாவல். நுண்ணளவில் சிறியதாக நிகழ்த்திக் காட்டப்படும் இப்புனைவு, பெரிய அளவில் நிகழும் உலகமயமாதலை, பண்டைய நகர்மயமாதல் என்கிற அரசு உருவாக்கத்துடன் இணைத்து விவரிக்கிறது.

கல்தேடும் பயணத்தில் ஆய்வுமுடிவுகள் கல் கிடைக்கும் இடத்தை ஊகித்தவுடன், அங்கிருக்கும் மூன்றாவது அணியான மா.லெ இயக்கத்தினர் வேட்டையாடப் படுகின்றனர். மக்களிடம் இயக்கங்களை கட்டி பண்ணாட்டு நிறுவனத்திற்கு எதிராக செயல்பட முடியாதவகையில் முதலில் சமூக உணர்வ கொண்ட புரட்சிகர இயக்கங்கள் அங்கு வேட்டையாடப்படுவதை நுட்பமாக வெளிப்படுத்திக் காட்டுகிறது இந்நாவல். அரசு திட்மிட்டு எப்படி தனது ஒடுக்குதல் வலையை விரிக்கிறது என்பதையும், அது எப்படி பண்ணாட்டு நிறுவனங்களுக்க சாதகமான சூழலை உருவாக்குகிறது என்பதையும் சொல்கிறது. அதிகாரத்தோடு அறிவுத்துறை இணைந்து இந்த திட்டமிடலின்வழி பண்ணாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மூலவளம் கொண்ட நாடுகளை மாற்றுவதை இநநாவலின் கதையாடல் விவரித்து செல்கிறது. ஒடிசாவில் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் எப்படி மூலவளக் கொள்ளைக்காக மாவோயிஸ்டுகளை அழிக்கிறதோ அப்படி கல் கிடைக்கலாம் என்கிற கம்பம் பகுதி ம.லே. இயக்கத்தினர் கைது செய்து இயக்கம் முடக்கப்படுகிறது.

பூம்புகாரில் துவங்கும் நாவல், அங்குள்ள மீனவர்கள் நிலை பற்றியும் தற்போதைய அரசியலில் அவர்கள் புறக்கணிக்கப்படுவதையும் சொல்கிறது. தமிழக அரசுகள் வரலாற்றின்மீது நின்று தங்கள் அரசியலை கட்டமைத்தாலும், வரலாற்றை பாதுகாக்க முடியாத தொல்பொருளியல் நிலையை விமர்சிக்கும் வண்ணம் காட்சிகள் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

பூம்புகாரில் விடுதியில் தங்கி உள்ள முல்லையிடம் பேசம் ஒரு பெண் பற்றிய மாயத்தன்மை புனைவின் ஒரு முக்கியமான இடம். அந்த பகுதியை வளர்த்து இறுதியில் கொடுங்கலூரில் முல்லையை காப்பாற்றும் பெண்வரை வளர்த்திருப்பதை நாவல் நெடுகிலும் ஒரு மாயத்தன்மைக் கொண்ட தொடரலாக வளர்த்திருந்தால் நாவல் செளுமையான புனைவாக மாறியிருக்கலாம். நாவலில் அகம் என்கிற ஒன்றே இல்லாமல் எல்லாம் புறவெளியில் நடக்கும் சித்தரிப்புகளாவே அமைக்கப்பட்டிருக்கிறது. நுன்னுணர்வுகள் விழிப்படையாத ஒருவகை புறவயமான எழுத்துருக்களாக பின்னப்பட்டுள்ள பாத்திரங்கள், புறநிலைபற்றிய உரையாடல்களில் செலுத்தும் கவனம் சிலப்பாதிகாரம் முன்வைக்கும் அகவெளி சித்தரிப்புகளை முற்றிலுமாக விலக்கிவிட்டது.

விளிம்பநிலை மக்களின் வாழ்வை மையத்தில் கொண்டு சேர்த்த ஒரு பிரதியியல் அரசியல் செயல்பாட்டையும், ஆய்வுகள் எப்படி அறிவுருவாக்கமாக மாறி உண்மைகளை உருவாக்குகிறது என்பதையும், அரசு என்கிற நிறுவனம் பண்ணாட்டு நிறுவனங்களின் ஏவலாளாக மாறி மக்களை எப்படி கொள்ளையிடுகிறது என்பதையும் விவரிக்கும் இந்நாவல் பாத்திரங்களோடு பயணிக்கும் உணர்வை வாசிப்பவரிடம் உருவாக்கிவிடுகிறது. ஒரு புனைவாக வாசிப்பின்பத்தை தவறவிட்டாலும் அறிவார்ந்த தளத்தில் புனைவாக கட்டப்பட்ட பல உண்மைகளை கட்டுடைத்து காட்டி உள்ளது என்றவகையில் இந்நாவல் இடதுசாரி முற்போக்கு இலக்கியத்தில் ஒரு முன்னகர்வை சாதித்து உள்ளது.

- ஜமாலன் – jamalan.tamil@gmail.com (14-07-2014)

இலக்கியமும் எளக்கியமும் தமிழின் புதிய ”லாம்” களும் “ம்”களும் - புதிய அறிவுக்கட்டடடடப்பட்ட அஸ்திவாரங்கள்

imagesநண்பர் சுரேஷ் கண்ணன் அவர்கள் முகநூலில் கீழ்கண்ட நிலைத்தகவலை பதிவு செய்து உள்ளார். அது குறித்த எனது கருத்து கீழே...

”பின்நவீனத்துவ படைப்புகளுக்கென்று பிரத்யேகமான குணக்கூறுகள் உள்ளன. ஒரு நாவலில் ' ஒழி,பழி,குழி, மழி,கிழி' என்ற வார்த்தைகள் மாத்திரமே பத்து பக்கங்களுக்கு வந்தால் அந்த கலகத்தன்மைக்காகவே அதை பின்நவீனத்துவ நாவல் என வகைமைப்படுத்தலாம்' என்றார் நண்பரொருவர்...

உதாரணமாக...

குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி
குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி குழி

என்று ஒரு நாவலில் வந்திருந்தால் சம்பளப் பாக்கிக்காக டிடிபி ஆப்பரேட்டர் பழிவாங்கியிருப்பாரோ என்று தவறான யூகம் கொள்ளாமல் அது பின்நவீனத்துவ நாவல் எனறு உறுதியாக சொல்லி விடலாம் என்கிறார்.
***
1941-ல் சபாபதி என்றொரு திரைப்படம் வந்தது. 'இருப்புப்பாதை வியாசம்' என்கிற கட்டுரையை குறும்புக்கார மாணவனான சபாபதி, ரயிலின் சப்தங்களையே தொடர்ச்சியாக 18 பக்கங்களுக்கு "குப் குப்..குப்..குப்... என்று எழுதியிருப்பான்.


ரயில் பாலத்தைக் கடக்கும் போது வரும் 'கடகடகட பட படபட' என்கிற நுண்ணிய வேறுபாடும் அந்த 18 பக்கங்களில் உண்டு.
***
எனக்கென்னமோ தமிழின் முதல் பின்நவீனத்துவப் பிரதி அந்த 18 பக்கங்களாகத்தான் இருக்கும் என தோன்றுகிறது.
http://www.youtube.com/watch?v=Qxs94r_J7-U
அவரது நிலைத்தகவல்  https://www.facebook.com/suresh.kannan.1806
************************************

இப்படியெல்லாம் பின்நவீனத்துவத்தை சொல்லித் தந்த அந்த பேராசானின் காலை காட்ட சொல்லுங்கள். தொட்டு கும்பிடனும். எந்த ஒன்றையும் யாரும் ஒழுங்காக படிப்பதில்லை. வார்த்தைகளை வைத்து ஜல்லியடிப்பது என்பதுதான் பின்நவீனத்துவம் என்று 20 ஆண்டுகளாக தமிழில் புரிந்துகொண்டுள்ள அபத்தம் அபாரமானது. தமிழ் மூளையின் விசேஷ குணாம்சங்களில் ஒன்று புதுமைபித்தன் கூறியதைப்போல.. ”தமிழ் குரங்குதான் முதல் குரங்கு என்பது.”  இந்த பழம்பெருமை எந்த புதிய ஒன்றையும் மூளைக்குள் நுழையவிடாது.  வரலாற்று ஆலமரத்தை அணைத்துக் கொண்டு தூங்கிவிடுவதில் அளப்பறிய ஆனந்தத்தை அடையும் தமிழ் அரசியல். ஆதார் கார்டுகளையும், ரேஷன் கார்டுகளையும் உற்பத்தி செய்யும் தமிழ் மெகா நாவல் இலக்கியம்.  வாசகன் தங்கி கண்ணீர்விடவும், கட்டி அழவும், உணர்ச்சிப் பெருக்கில் நனையவும் ஆன வாசக குடியிருப்புகளை வரைந்து தள்ளும் ரியல்-எஸ்டேட் எளக்கிய எழுத்தாளர்கள் என நிரம்பி வழியும் தமிழ் இலக்கியச் சூழல்.


நகங்களை அழகாக வெட்டி வழவழப்பாக ஆக்கிக்கொள்வதை முதல் நிபந்தனையாகக் கொண்டு உருவாகி உள்ள பதிப்பக-எழுத்தாள-வாசக உறவு. சொறிந்துகொள்வதில் ஒரு போட்டி வைத்தால் அதில் இவர்களே பெரும் பரிசுகளை தட்டிச் செல்வார்கள். தமிழ் இலக்கியம் கட்டக்கடைசியில் சொறிதலிதம் என்கிற இஸத்தை கண்டடைந்து உள்ளது தனது எண்ணற்ற பண முதலீட்டு வியபாரத்தில் சிக்கி.


தமிழின் உயர்ந்தபட்ச இலக்கியத்தர அளவுகோல் கல்கி, சுஜாதா மற்றும் பாலகுமாரன் என்கிற நிலைக்கு இலக்கிய உலகம் இறக்கப்பட்டு உள்ளது. சுஜாதா, பாலகுமாரன் வெகுசன எழுத்துக்களை தமிழில் உருவாக்கிய இரண்டு இலக்கிய எந்திரங்கள்.  அவர்களது தேவை வெகுசனத் தளத்திலானது.  அதை இலக்கிய தளத்திற்கு நகர்த்திவிட்டனர். அதன் மெகா உற்பத்தி நிறைந்து வழியும் இடமாகிவிட்டது தற்போதைய இலக்கிய உலகம். பாலகுமாரனின் அவதாரமாகிப்போன இலக்கிய மம்ம நாயனார்கள் நிறைந்துவிட்டனர். எண்ணற்ற நாவல்கள் வெளிப்படுவது அதன் ஒரு விளைவுதான். பாலகுமாரனின் அறத்தை ஒருவரும், காமத்தை பிறிதொருவரும், நெகிழும் மனிதர்களை மற்றொருவரும்  தங்கள் எழுத்துக்களின் வழி உச்சநிலைக்கு கொண்டு சென்று உள்ளனர். கல்கியும், சாண்டியல்யனும் மீண்டும் பிறப்பது அவசியமாகி உள்ளது. அது வெகுசனதளத்தில் தேவையானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இலக்கிய உலகில் அதன் பணி என்ன? என்பதே கேள்வி. இலக்கியத்தின் சரிவு இங்குதான் துவங்கியது. இன்று அது எண்ணற்ற பாலகுமாரன், சுஜாதாக்கள், கல்கி, சாண்டில்யன்களை இணையவெளி எங்கும் இலக்கியவாதிகளாக அவதாரமெடுக்க செய்து உள்ளது. இவர்கள் சொம்புடன் அலைந்து திரியும் அவலம்தான் தாங்க முடியவில்லை.


தமிழ் மூளையின் விசேஷ அமைப்பு எந்த ஒன்றையும் தனது பழமைவாதத்தை தண்டி ஏற்காது என நினைக்கிறேன். அதனால்தான் பு.பி. கபாடபுரம் எழுதினார். தமிழின் முதல் பின்நவீன பாலிம்செஸ்ட் சிறுகதை அது. அந்த கதையை ஒரு பெரும் நாவலாக விரிக்க முடியும். அந்த கதையில் இன்று அரசியல் பண்ணும் தமிழ் தேசியர்கள் உட்பட வந்து போவார்கள்.  அந்த கதையின் விசேஷம் தமிழின் வரலாற்றை ஒரு அழித்தெழுதப்பட்ட புனைவாக எழுதி வைத்து உள்ளதுதான்.   கோணங்கி கூறியதைப்போல கபாடபுரத்தில் ஒருவன் நுழைந்து வெளிவந்தபின் அவன் முற்றிலும் வேறொரு மனிதனாக மாறிவிடுவான். இதைக்கூட சரியாக வாசிப்பதில்லை நம் ஆட்கள். சிற்பியின் நரகம், நாரத ராமாயணம், பிரம்ம ராஸஸ், கட்டிலை விட்டிறங்கா கதை, வேதாளம் சொன்ன கதை... (பெயர்கள் நினைவில் எழுதப்படுகிறது.) இப்படி பலவடிவங்களில் எழுதிப்பார்க்கப்பட்ட புதுமை பித்தன் கதைகள் எல்லாம் பின்நவீன எழுத்து சொல்லும் மொழிவிளையாட்டைக் கொண்டவைதான்.


இந்துத்துவாவை, ராமயாணத்தை காந்தியை இந்திய சுதந்திரப்போரை மணுதர்மத்தை சாதியத்தை தமிழில் புதமை பித்தனின் நாரதராமயணம் அளவிற்கு வலுவாக கிண்டலடித்த ஒரு அரசியல் பிரதி வேறொன்றில்லை. தமிழின் பழகிய உணர்வுநிலையின் போலித்தனத்தை நுட்பமாக கிழித்தெறியும் ஜி. நாகராஜன் போன்றவர்கள் எழுத்தெல்லாம்தான் நவீனத்துவ உணர்வை முன்வைத்தவை. பின் நவீனத்துவம் என்பது ஒரு பின்-மனித சிந்தனை (post-human thought). மனிதன் என்கிற நவீனத்துவ கண்டுபிடிப்பிலிருந்தும், அதனால் உருவாகி உள்ள அழிவுகள், வன்முறையிலிருந்து, மனித மையவாத சிந்தனையிலிருந்து விலகி செல்லும் சிந்தனை. அது ஏதோ கிலி, பலி.. என்ற வார்த்தைகளின் தொங்கி கொணடிருப்பதில்லை.


குழந்தையின் அழுகையை வெறும் சத்தமாக உணர்ந்து அர்த்தமற்றது என்று முடிவெடுத்தால், எல்லாக் குழந்தையும் பசியில் செத்த மடிவதை தவிர வேறு வழியில்லை. சத்தம் ஒழுங்குபடுத்தி அர்த்தமாகிறது என்பதால், அர்த்தமற்ற சத்தம் என்பதை அதாவது நமக்கு புரியாததை, வெறும் சத்தமாக ஒதுக்க முயல்கிறோம். அதன் உணர்வு புரிவதில்லை.  அர்த்தம் என்பது ஒரு சமூக ஒழுங்கு என்பதால், அந்த ஒழுங்கை அதிகாரத்தை ஏற்பதே இதன் அடிப்படை. இப்படி சொல்வதால் மேலே குறித்த உங்கள் நக்கலான சப்தங்களின் அடுக்கை ஏற்கிறென் என்பதல்ல பொருள். இப்படி பலரும் பின்நவீன எழுத்து போலியை உருவாக்குவதே பிரச்சனை. அதை வைத்து அந்த சிந்தனைமீது சேற்றை வாறியிறைப்பது என்பது இப்போது எல்லோருக்கும் வசதியாக உள்ளது.


காரணம் இன்று இலக்கியம் என்பது வெகுசன எழுத்திற்கான பத்திரிக்கை எழுத்திற்கான பயிற்சிக்கூடமாக சான்றிதழ் வழங்கும் பட்டறையாக மாற்றப்பட்டு உள்ளது. இதுதான் தமிழில் முகநூலின் நான்காண்டு கால சாதனை. இலக்கியவாதி குமுதம் விகடனில் இடம் பிடிப்பதே உயர் லட்சியமாக மாறிவிட்ட காலமிது. கேட்டால் இலக்கியத்தின் எல்லைக் கோட்டை பின்நவீனத்தவம் அழித்துவிட்டது என்பார்கள். அதற்கு மட்டும் பின்நவீனத்துவம் முட்டுக் கொடுத்துக் கொள்வார்கள். தமிழில் தனது திறமையற்ற எழுத்தை அடைப்பதற்கான ஒரு குமிழாக பின்நவீனத்துவம் பயன்படுகிறது என்பதே யதார்த்தம்.


உண்மையில் பின்நவீனம் முன்வைக்கும் எந்த இலக்கிய எழுத்தையும் யாரும் படிப்பதில்லை. ஏன் காப்காவின் நாயகன் பெயரற்ற ஆங்கில எழத்து K ஆக உள்ளான்? சில நேரங்களில் வெறும் சப்தங்களை வெளியிடும் மொழியற்றவனாக உள்ளான்? என்பதெல்லாம் வாசிக்கப்படுவதோ உள்வாங்கப்படுவதோ இல்லை. இலக்கியம் என்பது முன்னேறிச் செல்வதற்கான படிகட்டாக மாறிவிட்டது. அதன் அதிகபட்ச எல்லை பாப்பலராக மாறுவது. பெரும்பத்திரிக்கையில் எழுதுவது. 10000 பிரதிகள் விற்கும் குப்பையை இலக்கிய கோபரமாக கட்டமைப்பது. இதெற்கெல்லாம்தான் பின்நவீனத்துவம் முன்வைத்த மைய உடைப்பு, புனித உடைப்புதான் காரணம் எனக் கூறிக்கொள்வது.  இலக்கியத்திற்கான மதிப்பீட்டை மற்றைய சிந்தனைகளைவிட பின்நவீனத்துவம் மிகவும் கொதிநிலையான சமூக உணர்வு மற்றும் அறிவுத்தளத்தில் முன்வைக்கிறது.  வாசிப்பாளனை விழிப்புகொள்ள தன்னோடு சேர்ந்து எழுத சிந்திக்க வைக்கிறது. மனிதன் மனிதனாக மையம் கொண்ட அனைத்தையும் விமர்சிக்கிறது. ஒரு புதிய மொழி விளையாட்டை முன்வைக்கிறது. அதன் அரசியல் பற்றிய பல விமர்சனங்கள் உள்ளபோதும், இலக்கியத்தில் அதன் செயல்பாடு முக்கியமானதே. 


இங்கு பின்நவீனத்துவம் என்பது என்னவென்றே புரியாமல் வார்த்தைகளை வைத்து ஒரு புறம் மிரட்டுவதும், மற்றொரு புறம் அதை வைத்து நக்கலடிப்பதும்தான் நடக்கிறது. பின்நவீனத்துவம் என்ன என்பதை விளக்கவோ, விளங்கிக்கொள்ளவோ யாரும் முயற்சிப்பதில்லை. நவீனத்துவமே புரியாத தமிழ் உலகில் பின்நவீனத்துவம் புரிவதும் கஸ்டம்தான்.  தமிழ் இணையத்தில் குறிப்பாக முகநூலில் நீர்த்துப்போன வார்த்தை இலக்கியத்தைப் போல பின்நவீனத்துவமும் ஒன்று.


இந்த புத்தகச் சந்தையிலாவது வாங்கி நண்பர்கள் பின்நவீனத்தை புரிந்து கொள்ள குறைந்தபட்சம் தமிழில் வந்துள்ள இந்து புத்தகங்களையாவது படிப்பது நலம்.


1. கோபிசந்த நாரங் எழுதியுள்ள பின்நவினத்துவம், கீழைக்காவயியல் பற்றிய மொழிபெயர்ப்புநூல். (ஜெமோவால் பரிந்துரைக்கப்பட்ட நூலும் கூட.) - சாகித்ய அகாதமி வெளியிடு.


2. பின்நவீனத்துவம் - ஆக்ஸ்போர்ட் தத்துவநூல் வரிசை மொழிபெயர்ப்பு பிரேம். அடையாளம் பதிப்பகம்.


3. பின்அமைப்பியலும் குறியியலும் - எம. டி. முத்துக்குமாரசாமி - பதிப்பகம் நினைவில் இல்லை. அவுட் ஆஃப் ஸ்டாக் ஆக இருக்கலாம்.  (நூல் பெயர் நினைவில் எழுதப்படுகிறது. தவறு இருக்கலாம்.)


4. எம். ஜி சுரேஷின் - குறுநூல் அறிமுகவரிசை 6 சிறு புத்தகங்கள் - அடையாளம் பதிப்பகம்.

5. க. பூரணசந்திரன் எழுதிய பின்நவீனத்தவ அறிமுக நூல் - பதிப்பகம் நினைவில் இல்லை.


6. அமைப்பியலும் அதன் பிறகும் - தமிழவன் - அடையாளம் பதிப்பகம்.

 
இவற்றை படித்தால் பின்நவீனத்துவம் பற்றிய இப்படி ஒரு அடிப்படையற்ற கேலி வெளிப்படாது என நம்புகிறேன். :) :)


பின்குறிப்பு - மார்க்சிய தோழர்களோடு இது குறித்து உரையாடும் மனநிலையில் நான் இல்லை.  இது அவர்களுக்கான பதிவு இல்லை. பின்நவீனத்துவத்தை வைத்து ஜல்லியடிப்பவர்கள் உரையாடலாம்.

- ஜமாலன் 19-01-2014 jamalan.tamil@gmail.com

யதார்த்த மாயை அல்லது மாயையின் யதார்த்தம் அரங்கநாதன் கதைகள் ஒரு வாசிப்பு. – பகுதி:3

பகுதி –1

பகுதி - 2

நகரம் என்பது ஒரு களமாக அல்லது இடமாக இல்லாமல் ஒரு குறிப்பிட்டவகை கால-வெளிப் பண்பாக உள்ளது. அல்லது இந்நகரத்தில் இருக்கும் மனிதர்கள் முற்றிலும் வரலாறு அற்ற அடிப்படைகள் அற்ற உதிரிகளாக, ஏதொ ஒரு வயிற்று பிழைப்பில் வாழ்பவர்களாக, தன்னலம் மட்டுமேகொண்டதால் சகமனித உறவற்றவர்களாக உள்ளனர். தங்கள் ஊருக்கு திரும்பும் எண்ணம் கொண்டவர்கள் அல்ல. கிராமத்தில் குடும்பத்தைவிட்டு வெளியெற்றப்பட்டவர்கள், வெளியேறியவர்கள், கலப்புத்திருமணம் செய்தவர்கள். இவர்கள் தங்களை சமூகவயமாக்கிக் கொள்வது நகரத்தில்தான். நகர் என்ற புலத்தில் அடையாளமற்று இயங்கமுடிகிறது. அரணை, வெள்ளைக் கண்ணாடி, அறிமுகம், பூசலார், ஆதல், ஜங்ஷன், அலுப்பு, மீதி, பெருநகர்த் தடம், பொய், அமையாது உலகு, தாங்கல், ஒரு வாக்குமூலம், தேட்டை, பூங்குன்றனே காரணம், தில்லைவாழ் அந்தணன் – இக்கதைகள் நகரத்தை களமாகவும், நகரமாதலை புலமாகவும் கொண்ட கதைகள். நகரத்தை எப்படி எதிர்கொள்வது, அதற்குள் தன்னை எப்படி ஒரு துகளாக எப்படி மாற்றிக்கொள்வது என்பதே இக்கதைகளின் அடிப்படை. ”அரணை” என்கிற கதையில், நகர்வாழ்வில், வாடைகைக் குடியிருப்பின் பிரச்சனைப்பாடுகளில் நசியும் ஒருவன் அரணையாகுதலே கதையாடல். அரணயைாகுதல் என்பது மறத்தலும், மறத்தலால் ஏற்படும் இருத்தலுமே. இக்கதையில் அரணை என்கிற சொல்லை தலைப்பாக மட்டுமே கொண்டுவிட்டு கதைநெடுகிலும் அது என்பதாக எடுத்துரைக்கப்படுகிறது. நகர்புறமயமாதல் என்பது ஒருவகையில் அரணையாகுதலே என்று இதனை வாசிக்கலாம். ”ஆதல்” என்ற கதையிலும், நகர்மயமாதல் என்பதில், இரண்டு வேறுபட்ட களங்களில் சகுனத்திற்காக வரும் இரு சிறுவர்கள் இறந்து போகிறார்கள். இங்கு வரும் காட்சி உத்தி, வேறு மொழி பேசும் நிலத்திலும், சாதல் ஒன்றுதான் என்பதையும், செம்பருத்தி இரண்டு இடங்களிலும் சிவப்பாகவே பூக்கிறது என்கிறது கதையாடல். ”வெள்ளைக் கண்ணாடி”யில் மருத்துவத்துறையோடு தன்னை தகவமைத்துக்கொள்ள முடியாமையை சொல்லும்போதே, மருத்துவம் வியபாரமாகி உள்ளதை சொல்லிவிடுகிறது. ”அறிமுகத்தில்” நகரத்தின் நரம்போடும் ஸ்டேஷனில் பேச்சே ஒரு மனிதனின் அறிமுமகமாக மாறி தனது மகனின் வேலைவிஷயமாக துப்பு கிடைப்பதும், அதை மற்றவரிடம் மூச்சுவிடக்கூடாது என எண்ணுவதுமான நடுத்தரவர்க்க மனிதனை ஒரு பிச்சைக்காரனாக்குதலாக மாற்றிவிடுகிறது. இப்படி ஆதல் என்பது மாசிலன் ஆதல் என்பதாக இல்லாமல் மாசுகளுடன் ஆதலாக மாறுதலே நகர்ப்புலத்தின் மனித துகள்கனின் இயக்கமாக உள்ளது. இந்த நகர்சார் கதைகளில் எல்லாம் மனித விழுமியம் என்பது அவலமாகவும், ஒருவித எதிர்மன உணர்வாகவும் நடித்துக் காட்டப்பட்டுள்ளது.

மாயமாதல் என்பது ஒருவித சைவசித்தாந்தத்தை நிகழ்த்திப்பார்க்கும் புலமாக உள்ளது. இங்கு மனிதர்கள் தத்துவத்தின் துகள்களாக இயக்கம் கொள்கின்றன். முருகன் என்கிற கடவுளும் குறிஞ்சி நிலமும் ஒரு பொதுப்பிம்பமாக இயங்கும் புலங்கள் இது. ஒருவகையில் இதனை அசலான தமிழ்மரபுக்கதையாடல் எனலாம். இத்தகைய கதையாடல்களில். சென்னை போன்ற பெருநகரில்கூட மலையை அடிப்படையாகக் கொண்ட கதையாடலே சாத்தியமாகி உள்ளது. திருநீர் மலை மற்றும் திரிசூல மலைகள்கூட இந்த குறிஞ்சி என்கிற பிம்பத்தை பின்னணியாகக் கொண்டே உருவாகிவிடுகிறது இவரது கதைகளில். இப்புலத்தில் சமகால அரசியலான பெரியாரின் பகுத்தறிவும் நாத்திகமும் பின்னுக்கு தள்ளப்படுவதும், சில இடங்களில் ஒருவிதமான எதிர்ப்பாக பதியவைப்பதும் நடக்கிறது. இங்கு சித்தாந்தத்தின் மாயத்துகளுக்கு எதிர் துகளாக பெரியாரின் பகுத்தறிவு முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் “ஒற்றுமை” என்ற கதையில் மதவாதத்திற்கு எதிராக இந்த பகுத்தறிவுவாதம் முன்வைக்கப்படுகிறது. திருநீர்மலை என்ற கதையில் கருப்பண்ண பெருமாளாக பெயர் மாற்றப்பட்டதுவரை, பெருமரபுக்கு எதிரான சிறுமரபுக் கதையாடல் முன்வைக்கப்படுகிறது. மாயம் அல்லது பூடகமான அறிவால் புரிந்துகொள்ளமுடியாத உணரமுடிந்த விஷயங்களாக உள்ளவற்றை சிறுமரபோடு இணைத்து, அம்மரபிற்கு சைவச்சித்தாந்தம் என்கிற தென்னிந்திய பெருமரைபை முன்வைப்பதுதான் இவ்வகைக் கதையாடல்களின் அடிப்படையாக உள்ளது. மேலோட்டமான வாசிப்பில் இக்கதைகளை பகுத்தறிவிற்கு புறம்பானவை என்பதாக ஒதுக்கிவிடமுடியும். ஆனால், அதற்குள் உள்ள நுட்பமான செய்தி, வாழ்வின் மர்மங்களாக விரித்து வைக்கப்பட்டவற்றை அறிவதற்கான ஒரு முயற்சி என்பதே முக்கியம். தரிசனம் என்ற கதையில் இந்த மாயாவாதம் ஜேகேவை வயல்வெளிகளில் ”இல்லை இல்லை” என்று வெண்முடி பறக்க கனவில் நடக்க வைக்கிறது. மேற்கத்திய பிராய்டும், கீழைத்தேய ஜேகேவும் உரையாடும் கதையாடல் இது. இங்கு தரிசனமாவது சாவு அழகானது, அதனால் தொடர்ச்சிகளை துண்டிப்பது, அதை அனுபவிக்க எண்ணுவது என்பதே.

மைலாப்பூர் என்கிற இக்கதை முற்றிலும் நவீனத்தன்மைகொண்ட கதையாக எழுதப்பட்டு உள்ளது. சுனாமி போன்ற ஒரு இயற்கை பேரிடரால் அழிந்துவிட்ட மைலாப்பூரில் நடக்கும் முத்துக்கருப்பன் காயத்ரி உரையாடல். மிக எளிமையான உரையாடலில் எழுதப்பட்டிருந்தாலும் இக்கதை வாசிப்பின் வழியாக ஒரு அமானுஷ்யத்தன்மையை வழங்கிவிடுகிறது. புதுமைபித்தனின் காஞ்சனைக் கதைப்போன்று. இது சிவ சக்தி உரையாடலாகவும், உலகின் நிலையற்ற தன்மையை, ஊழிக்கூத்தை அடியமைப்பாகவும், மேலமைப்பாக ஆண் பெண் என்கிற இரு சாதாரண மனிதர்களின் எதிர்கொள்ளல் உரையாடலாக எழுதப்பட்டு உள்ளது. வழக்கமாக கதை தலைப்பு கதைக்குள் வராமல் எழுதும் அரங்கநாதனின் உத்தியடிப்டையில் இதன் தலைப்பான மைலாப்பூர் அந்த கதையின் ஊரை நமக்கு சொல்வதாகிறது. சென்னையின் சுனாமி தாக்குதலை முன் அனுமானித்துவிட்ட இக்கதை, ஊர் என்பது என்ன என்ற கேள்வியை முன்வைத்துவிட்டு நகர்கிறது. மாயப்புலத்திற்குள் இரண்டு துகள்களாக சிவ-சக்தி ஊடாட்டம் நிகழ்வதின் ஒரு ‘சிமிலேட்டேட்’ புலமாக இருப்பதே இக்கதைப்புலம். அசலம் என்ற கதையில் ராமன் வருகிறான். புதுமைப்பித்தனின் கந்தசாமிப்பிள்ளையைக் காணவந்த கடவுளைப்போல. இந்த ராமன் புதுமைபித்தனின் நாரத ராமாயணத்திலிருந்து வந்த ராமன். இந்துத்துவா முன்வைக்கும் ராமன் அல்ல. குப்பத்து மக்களின் மதமாற்றம் பற்றி பேசும் ராமன், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துவது என்பது இக்கதையின் ஒரு முக்கிய அரசியல் சரடு எனலாம். குப்பத்து மக்களை இப்படி தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருப்பதே இறக்கி வைக்கப்படாத பெருஞ்சுமை என்பதாக செல்லும் கதையாடல், இவரது பல தலித் அரசியல் சார்ந்த கதையாடல்களில் (மகத்தான ஜலதாரை, உவரி, மண்டேலாவை நேசிக்கிறேன், ஞானக்கூத்து, காடன்மலை, பனை, ஒரு நாஞ்சில் வட்டாரக் கதை, மீட்சி, மூடு, வரைந்து பெய்யும், மனத்துக்கண்) முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குரலாக கடவுளின் குரலாக ஒலிக்கிறது. காந்தி முனவைத்த ஹரிஜனங்கள் என்கிற ஹரியின் புதல்வர்கள் என்கிற பிம்பத்தின் பிரதிமையாக ராமன் வந்துபோவதாக எழுதப்பட்டு உள்ளது.

வீடுபேறு என்ற கதை ஒரு முக்கியமான கதையாக விமர்சகர்களால் அடையாளம் காட்டப்பெற்ற கதை. தனது தாய் தூக்கில் தொங்கி இறந்த அறையைக்காண வருபவர் கதைநெடுகிலும், அந்த வீட்டின் தற்போதைய குடியிருப்பவரான முத்துக்கருப்பனுடன் உரையாடிவிட்டு ஊரை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியில் அந்த அறையை பார்க்காமல் போய்விடுகிறார். கதை அவர் ஏன் பார்க்காமல் போகிறார்? என்ற கேள்வியை வாசிப்பவரிடம் விட்டுவிட்டு முடிந்துவிடுகிறது. தாய் என்கிற தான்சார்ந்த உறவு தாய்மை என்கிற சமூகம் சார்ந்த உறவாக வளர்வதே இக்கதையாடல். தாய் என்பவளிடம் சமூகத்தின் தாய்மையை உதாரக்குணத்தை காண்பதே வீடுபேறு என்பதை சொல்லாமல் சொல்லும் கதையாடல். கதைப்புலம் என்பது மோட்சம் என்பது தாயிலிருந்து தாய்மையை அடைவதே. உலகெங்கிலும் தாய்மையை கண்டுவிட்டபின் தாயை காணவேண்டியதில்லை என்பதே. உயிரியல் தாய்மையிலிருந்து கலாச்சாரத் தாய்மைக்கு நகரும் வீடுடுபேற்றை அடைந்ததால் அவர் தாயின் அறையை காணாமலே சென்றுவிடுகிறார் போலும்.

உவரி, செட்டி வளாகம், ஜேம்ஸ் டீனும் செண்பகராமன் புதூர்க்காரரும், துக்கிரி போன்ற கதைகள் உலக வரலாறு மற்றும் உலகத்திரைப்படங்கள் வெட்டிச் செல்லும் கதையாடல்கள். துக்கிரி என்பது ஓமன் என்கிற படத்தின் தீச்சகுனமாக வரும், தலையில் உருவாகும் ஆறு என்கிற எண்ணை, கீழைத்தேய எண்கணித சோதிடத்துடன் இணைத்து பேசுகிறது. ஒருவிதமான அமானுஷ்யம், சோதிடம் போன்று பகுத்தறிவிற்கு புறம்பானவை என்பது உலகப்பொதுவான மனித அமைவு சார்ந்தவை என்பதான ஒரு வாசிப்பை தரும் கதைகள்.

அழல்குட்டம் புறநானூற்றின் ”மறந்தன்ன் கொல்லோ” என்கிற கூடலூர் கிழாரின் பாடலை கதையாக மாற்றி எழுதப்பட்டு உள்ளது. இக்கதையில் கூடலூர்கிழாரே ஒரு பாத்திரமாக வருகிறார். புறநானூற்றுப்பாடலில் சேரமான் இரும்பொறை, பங்குனியில் வீழும் நட்சத்திரத்தினால் ஒரு வாரத்தில் இறந்து போய்விடுவதை சொல்லும் பாடல். கூடலூர்கிழார் ஒரு வானியல் நிபுணராக இருந்த்தையும், அவரால் பாடப்பெற்ற இப்பாடலில் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்துபடுவதை எச்சரிப்பதையும, முத்துக்கருப்பனின் சோதிட அறிவுடன் இணைத்து பேசுகிறது இக்கதை. சேரமன்னனாக முத்துக்கருப்பனை வைத்து எழுதப்பட்ட ஒரு புனைவு. இது ஒருவிதமான பழம்மரபின் புராணிகத்தை நவீன எழுத்தில் வைத்து பார்க்கும் கதையாடல்.

அன்று இரவு மூவர் உறங்கவில்லை என்கிற புதுமைபித்தனின் அகலிகை கதையின் வாசகத்துடன் எழுதப்பட்டு உள்ள கச்சிப்பேடு, காஞ்சிபுரம் உருவான வரலாற்றை ஒருவித அழித்தெழுதும் பிரதியாக (பாலிம்செஸ்ட்டாக) எழுதி பார்க்கப்பட்ட கதை. புதுமைபித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையை நினைவுட்டினாலும், கதையில் முருகன் மாங்கனியுடன் வந்து சித்தம் தெளிவிக்கிறான். முற்றிலும் காதல், துணையாதல், கணவனாதல் போன்றவற்றை வைத்து தத்துவ உரையாடலாக எழுதிப்பார்க்கப்பட்ட கதை.

செட்டிவளாகம் இவரது கதைகளில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒன்று. காரணம் அமேரிக்காவில் மருத்துவம் படித்து மருத்துவரான முத்துக்கருப்ப செட்டியாரை, ஆபத்தான தருணங்களில் முருகனின் வாகனமான மயில் வந்து காக்கிறது. மனித-மிருக உரையாடலை மனித-கடவுள் உரையாடலாக மாற்றி வைக்கும் கதையாடல். அமேரிக்காவில் அவரை கொல்வதற்கான இனவெறி தாக்குதல் நிகழ, அதிலிருந்து தப்ப ஒரு டெலிபோன் பூத்தில் ஒழிந்திருக்கும் அவரை, மயில் மூலம் அறிந்த ஒரு வெள்ளையினமாது காக்கிறார். அவரை அவளே திருமணமும் செய்துகொள்கிறார். இப்படி அவரது மரணத்திற்கான தருணங்களில் எல்லாம் அந்த மயில் வந்துவிடும் ஒருவித பாரா-சைக்காலாஜிக்கல் அதாவது புலன்மீறிய உளவியல் சார்ந்த ஒரு தோற்றமாயை வந்து போகிறது. இங்கு உடலும் மனமும் ஒன்றாகிய நிலையில் உருவாகும் அதீத புலனின் ஆட்படலால், புலன்மீறியதான ஒருநிலை கதையில் பேசப்படுகிறது. இதனை கடவுள் பக்தி எனலாம் அல்லது காஸ்மிக் விசை ஈர்ப்பு எனலாம். ஆனாலும், அது செட்டிவளாகத்தை தாண்டவில்லை என்பதே இக்கதையாடல். அதவாது, தமிழ் குறிஞ்சிநிலக் கடவுளை தாண்டவில்லை என்பதும், புலன் உணர்வு என்பதும், உடலின் இயக்க புலத்தை சார்ந்தே அமைவதை சொல்கிறது. அவரை மயில் வந்து அறிவறுத்தியிருக்கலாம் அல்லது அறிவறுத்தும் அனைத்தும் அவருக்கு மயலாக தோற்றம் தருலாம். முத்துக்கருப்பனாகிய தமிழ் உடல் என்பது இந்த எல்லைகளை தாண்டமுடியாததாக உள்ளது என்பதே. அல்லது சைவ-உடலே தமிழ்உடலாதலாக முன்வைக்கப்படும் கதை.

வளர்ந்துவரும் இந்துத்துவ பயங்கரவாதத்தை நேரடியாக முன்வைத்து எழுதப்பட்ட கதைகள் ரோபோ, ஒற்றுமை, எலி. தமிழில் இத்தகைய கதைப்பதிவுகள் அபூர்வமானவை என்றே தோன்றுகிறது. இந்துத்துவம் என்பது எப்படி பெருமத-பெருந்தேசிய உணர்வை அடிப்படையாகக் கொண்டு சிறுதெய்வங்களை, சிறுதேசியங்களை ஒடுக்குகிறது என்பதை வெளிப்படுத்தும் கதைகள். “பாசாங்குகள் புத்திசாலித்தனமாக – நெறிமுறைகளாக – மாற்றப்படுகிறதே – அது வன்முறையின் ஆரம்பமென்று எண்ணினார் முத்துக்கருப்பன்.” (பக். 176) எனக்கூறும் எலி கதையில் எலி சிறுபான்மையினருக்கான ஒரு குறியீடாகவும், எலியே கணேசனின் வாகனம் என்பதால் விநாயக சதுர்த்தி எப்படி வடநாட்டிலிருந்து இறக்குமதியாகி இங்கு பெரும் கலவரங்களை உருவாக்குவதாக உள்ளது என்பதை சொல்கிறது. ரோபோ கதையில் ஒருவிதமான ஆர்.எஸ்.எஸ். சாகா போன்ற ஒரு பயிற்சி நிலையத்தில் இணைகிறான் முத்துக்கருப்பன். மதவாத எந்திரங்களாக (ரோபோக்களாக) மனிதர்களை கருத்தியல்-குளோனிங் செய்து தள்ளும் அந்த நிறுவனத்தில் வேதம் சார்ந்த, மந்திரங்கள் சார்ந்த வழிபாட்டால், சிறுதெய்வ அம்மன் வழிபாடு, கிராமங்களின் சாமியாடுதல் போன்றவை நிரகரிக்கப்படுவதையும், அதிலிருந்து சிறுதெய்வ மரபுகொண்ட இடைச்சாதி மற்றும் தலித்துகள் வெளியேறுவதே விடுதலை என்பதை சொல்லுவதாக இதனை வாசிக்கலாம். சிறுதெய்வமான அம்மனை இணைப்பதன் வழி இந்துத்துவத்தில் கருணையை உருவாக்கிவிட முடியாது என்பதையும் கடவுளரின் வேதமயமாக்கல் என்கிற மேல்நிலையாக்கத்தையும் பல கதைகளில் எள்ளலாகவும், எதிர்ப்பாகவும் முன் வைக்கப்பட்டு உள்ளது இக்கதையாடல்களில். தற்போதைய அரசியல் சூழலில் இது தமிழில் வந்த சிறுகதைகளில் முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று.

சித்தி என்ற கதை ஓட்டபந்தய வீரனை முன்வைத்து எழுதப்பட்டாலும், கதையாடலின் மையம் ‘காரியமே முக்கியம் விளைவு அல்ல’ என்கிற கீதை உபதேசமே. விளையாட்டு என்பதை இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டது கவனிக்க வேண்டிய அம்சம். காரணம் வெற்றி தோல்வி அடிப்படையில் நிர்ணயிணிக்கப்படுவது உண்மையில் விளையாட்டு அல்ல. சித்தி என்கிற சித்தியடைதல் என்பது விளையாடிக்கொண்டிருப்பதில்தான் உள்ளது. அதன் வெற்றி தோல்வியில் அல்ல. இதனை கிரிக்கெட் போன்ற தேசவெறி ஊட்டும் இன்றைய ஆட்டத்தில் உருவாக்கப்படும் வன்முறையான மனோவியலோடு ஒப்பிட்டு பார்க்கலாம். தேசப்பற்று என்பது விளையாட்டின் வெற்றி தோல்வி உணர்வுடன் தேசவெறியாக மாற்றப்பட்டு உள்ளது என்பதை, இந்திய பாரம்பரியமாக பெருமிதப்படும் கீதையின் உபதேசம் கொண்டு எதிர்கொள்கிறது இக்கதையாடல். உண்மையில் கீதையைக்கூட பின்பற்றாத ஒரு அதிகாரமே இங்கு கீதையை பிரச்சாரம் செய்கிறது என்கிற கருத்தாக்கமாக இதை வாசிக்கலாம்.

பிராமணர்களின் அதிகார உருவாக்கத்தை பதியவைக்கும் இரவச்சம், ஒரு நாஞ்சில் வட்டாரக் கதை, ஆற்றோடு போயிற்று ஆகிய கதைகள் ஒரு புதிய அரசியல் பதிவை உருவாக்குவதாக உள்ளது. இரவச்சம் கதையில் ஒருகாலத்தில் பிராமணர்களுக்கு உணவளித்தவர்களாக இருந்த கிராமத்தினர் (கதையில் தேவர்கள்), நவீனகாலத்தின் குறிப்பாக காலனியத்திற்கு பிறகு, பிராமணர்கள் கிராமத்தினருக்கு உணவளிக்கும் முறையாக மாறிய சத்துணவ பற்றிய பதிவே அது. இது ஒரு நிகழ்கால அரசியல் நிகழ்வை வரலாற்றில் வைத்து பார்க்கிறது. நகரம் பிராமணர்களை அதிகார வர்க்கமாக உள்வாங்கியவிதமும், கிராமத்து ஆதிக்க சக்திகள் கொசு மருந்தடித்தல் போன்ற சாதரண உடல்-உழைப்பு பணிகளுக்கு மாறிவிட்ட தலைகீழ் நிலையை சொல்லிச் செல்லும் கதை. இரவச்சம் என்கிற இந்த சொல்லாட்சிக்கான விளக்கத்தை இக்கதையாடல் நாலடியாரிலிருந்தும், திருக்குறளில் இருந்தும் பெற்றிருக்கலாம். இரப்பதற்கு அஞ்சுதல் அறமாக முன்வைக்கப்படுகிறது இச்செய்யுள்களில். ஆனால், இரப்பதை சட்டமாக மாற்றியுள்ளது இன்றைய அரசுகள் என்கிற விமர்சனம் இதில் தொனிக்கிறது. கதையில் முத்துக்கருப்பதேவர் பணியிலிருந்து நீக்கப்படுவதற்கான காரணம் சொல்லப்படுவதில்லை மர்மமாக விடப்படுகிறது. அந்த இடைவெளியில் நாம் இந்த வரலாற்றை பொருத்தி வாசிக்கும்படி விடப்பட்டு உள்ளது. பிரகதீஷ்வரன், கிராமத்தில் தனது தந்தையை கோவிலின் அன்னதானத்தில் உணவருந்த அழைத்து செல்கிறான் முதல் பகுதியில். இரண்டாவது பகுதியில் அவன் மாவட்ட ஆட்சியராகி சென்னையில் வேதபாடசாலையில் உரையாற்றுகிறான். கிராமத்தில் உணவளித்த முத்துக்கருப்ப தேவரின் பரம்பரை நகரத்தில் கொசுமருந்து அடிக்கிறது. இந்த முரண் வாசகங்களாக மாறி வேலை போய்விடுவதை மர்மமாக்கிவிடுகிறது கதை. வரலாற்றின் இருண்மை இப்படித்தான் பல மௌனங்களைக் கொண்டது என்பதைப்போல. இக்கதையின் எதிர்பிரதியாக எழுதப்பட்ட கதையே ஒரு நாஞ்சில் வட்டாரக்கதை. இக்கதையில் நிலமை தலைகீழாகிறது. பார்ப்பனர் மகன் தோல்வியடைகிறான், வண்ணானின் மகன் வெற்றியடைகிறான். இக்கதை முற்றிலும் எள்ளல் உணர்வை வெளிப்படுத்தும் வண்ணம் எழுதப்பட்டு உள்ளது.

ஆற்றோடு போயிற்று கதை நேரடியாக சைவமத-வைணவ மதமுரண்பாட்டை வெளிப்படுத்துகிற ஒரு கதையாடல். சைவக்குரவர்களின் பழஞ்சுவடிகள் ஆற்றை எதிர்த்து வந்ததைப்போல வைணவ சூத்திரங்களால் முடியாமல் போகிறது என்கிறது கதையாடல். வரலாற்றில் இது ஒருவித பழிவாங்கும் பரோனியா மனநிலை எனலாம். இக்கதையாடலில் அம்மனநிலையே முன்வைக்கப்படுகிறது. பொதுவாக சைவமதச்சார்பின் அடிப்படையில் இயங்கும் இவ்வாசிரியரின் பல கதையாடல்களில் இது ஒரு உச்சம் எனலாம். பல கதைகளில் மர்மமாக விடப்பட்ட பகுதிகளில் இந்த சைவமதச் சார்பு மனநிலை ஒருவகையாக மறைவாக்கமாக செயல்படுகிறது.

இக்கதைகள் முதல் வாசிப்பில் மேலோட்டமாகவே தெரியும், இரண்டாவது வாசிப்பில்தான் ஆழப்படும் பல நுட்பமான சொற்கள் வாக்கியங்கள் பேச்சுகள் நிகழ்ச்சிகள் என கட்டமைக்கப்பட்டு உள்ளது. கதையை எழுதும்போதே வாசித்துவிடும் வாசகராக மாறிவிடுகிறார் இதன் ஆசிரியர். அதனால் அவரது நிலைக்கு வாசகனை தேடுகிறார் (கச்சிப்பேடு). அந்த வாசகன் அவரைப்போல தத்தவ நுட்பங்கள் கொண்டவனாக இருந்தால் அவரோடு பயணிக்க முடியும்.

இஸ்லாமியர்கள் என்றால் செய்கு தம்பி பாவலர் போன்ற சூஃபி சார்ந்த வழிப்பாட்டுமுறையே இக்கதைகளில் ஏற்கப்பட்டுள்ளது. தலித்துகள், ஆதிவாசிகள் போன்ற சிறுபான்மையினரை பற்றிய குறிப்பிடத்தக்க கதையாடல்கள் உள்ளன. அவை எல்லாம் அன்பால் அவர்களை அரவணைப்பதற்கான அதிகாரத்தை பேசுவதாக உள்ளது. அவர்கள்மீதான கிராமத்தையே கொளுத்துதல் உள்ளிட்ட மனிதநேயமற்ற ஒடுக்கமுறைகளுக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழும் தன்மானத்தை சாபமாக பதியவைத்து உள்ளது குறிப்பிடத்தகுந்த அம்சம். குறிப்பாக “வரைந்துபெய்யும்“ கதையில் தலித்துகளின் சாபமாக ஒரு கிராமம் விவசாயம் குன்றி வளமிழந்து போவதை தொன்மமாக மாற்றி சொல்கிறது. கிறித்துவர்கள் பற்றிய பார்வையில், மதமாற்றம் என்பது அங்கங்கே தொடப்படுகிறது. அத்தகைய மாற்றங்கள் இன்றைய இந்துமதவாத ஏற்றத்தாழ்வுகளின் பின்னணியில்தான் நடைபெறுகிறது என்பதையும், அத்தகைய மாற்றங்களை ஏற்பது அவசியமானது தவிர்க்க முடியாதது என்பதையும் சொல்கிறது.

இதில் வரும் முத்துக்கருப்பன் – சாமியாடி மகன் – பல சாதி அடையாளம் கொண்டவன் – மத்தியதர வர்க்கத்தவன் – ஓய்வு பெற்றவன் – காதலன் - கணவன்- சாமியார் என பல அடையாளங்களில் வருகிறான். அடையாளம் என்று குறிப்பிடக்காரணம் அவன் எல்லா அடையாளங்களிலும் சைவசித்தாந்தியாகவே இருக்கிறான் என்பதால். தேவராக, தலித்தாக, பார்ப்பனராக, சாமியாடியாக எப்படி கதையில் வந்தாலும், சைவத்தை மட்டும் அவனால் விடமுடியாத ‘ஒரு விடாது கருப்பாக’ தொடர்கிறது அது. இதனால் அவன் பெயரால் ஒருவனா வேறு வேறா? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.

பெரும்பாலான கதைகள் பகுதிகளாக சிதைக்கப்பட்டு இரண்டு வேறுபட்ட காலங்களில் வெளிப்படுவதாக அமைக்கப்பட்டு உள்ளது, (கதைகள் பட்டினத்து சாமி தீவட்டி, துக்கிரி, தில்லைவாழ் அந்தணன்) இவை காரணங்கள் பற்றிய கேள்வியை வாசிப்பாளரின் மனதில் எழுப்பவே என எண்ணத் தோன்றுகிறது. முதல் பகுதியில் சாதரணமாக உள்ளவன் இரண்டாவது பகுதியில் அதிகாரமாக வளர்ந்துவிடுகிறான். முதலும் முடிவும் உள்ள இக்கதைகளில் நடுப்பகுதி என்கிற வளர்ச்சிப்பகுதி மௌனிக்கப்படுகிறது. அல்லது அந்த வளர்ச்சிப்பகுதியை மற்றொரு கதைவழி கொண்டுகூட்டி பொருள் கொண்டுவிடலாம்.

இக்கதையாடல்கள் யதார்த்தம் மற்றும் நடப்பியல் வேறுபாடுகளை ஒருவிமாக புரிந்தோ புரியாமலோ எழுதப்பட்டு உள்ளது எனலாம். யதார்த்தம் என்பது சொல்லாடல் உற்பத்தி – நடப்பியல் என்பது யதார்த்த அமைப்பிற்குள்ளான நடவடிக்கைகள் அல்லது இயல்பாக உணரக்கூடியது. சைவமதம் உருவாக்கிய உலகே யதார்த்த புலமாகவும், அதில் இயங்கும் தினவாழ்வின் துகள்களாக மனிதர்கள் இயங்குவதுமே இக்கதையாடல்கள். அவ்வகையில் இக்கதையாடல்கள் பன்முக புலங்களில் பன்முக மனிதர்களை சைவம் உருவாக்கிய சடத்தின் ஒருமையாக முன்வைக்கிறது. அதனால்தான் முத்துக்கருப்பன் பல வடிவங்களில், உருக்களில் கதைகளில் வந்து மறைந்தபடி உள்ளான். முத்துக்கருப்பன் பல ஆளுமைகள் கொண்டவன் இல்லை. பல வடிவங்கள் கொண்டவன் சைவம் என்கிற ஒற்றை ஆளுமை கொண்டவன் என்பதே இக்கதைகள் சொல்பவையாக உள்ளது. தமிழ் மரபு என்று சைவத்தை முன்வைத்த எழுதப்பட்ட இக்கதையாடல்கள், பெரியாரியத்திற்கு தமிழவன் சொல்வதைப்போல ஒரு சவாலை முன்வைத்து உள்ளது. பகுத்தறிவால் மரபுகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டால், வாழ்வின் பூடகத்தளங்களின் அதன் மர்மத்தை அது தரும் இன்பத்தை என்ன செய்யப்போகிறோம்? என்பதே அது. இது மற்றொரு விரிவான ஆய்விற்கு உரியது என்று சொல்லி முடிக்கலாம்.

- ஜமாலன் 23-10-2012 (jamalan.tamil@gmail.com)

இக்கட்டுரை காக்கைச்சிறகினிலே (மே-2013) இதழிலும், சிற்றேடு (ஜீலை செம்படம்பர் இணைப்பு) இதழ்களிலும் வெளிவந்து உள்ளது.

யதார்த்த மாயை அல்லது மாயையின் யதார்த்தம் அரங்கநாதன் கதைகள் ஒரு வாசிப்பு. – பகுதி:2

பகுதி –1

சமூகத்தின் மீதும், அதன் அரசியல் மற்றும் அதிகார அமைப்பின்மீதும், சமகால வாழ்வின் அரசியல் நெறிமுறைகள் மீதும், கலாச்சார நடைமுறைகள் மீதும் குறிப்பாக சமூகம் என்கிற ஒரு பொது அமைப்பின் மீதும் தாங்கமுடியாத ஒவ்வாமையை வெளிப்படுத்தி, தனது படைப்பு என்பது கலையின் உன்னத சிகரம்தான், தன்னுணர்வு அற்ற வெளிப்பாடுதான், அதற்கு சமூகத்தை மாற்றும் நோக்கமோ, பிரச்சாரம் செய்வதோ, உபதேசம் அளிப்பதோ பணியல்ல என்று செவ்வியல்-கால கடவுளின் இடத்தை நவீன-கால படைப்பாசிரியன் பெற்றுவிட துடிப்பதை மறைத்து கூறியபோதிலும், பிரதி நெசவில் தனக்கான சமூக குரலை, அரசியலை, சார்புநிலையை, அதற்கான தத்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. இலக்கிய படைப்பாளிகள் எப்போதும் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த விமர்சனங்களின் மீது ஒருவகை ”ஒவ்வாமை” கொண்டவர்களாக உள்ளனர் என்பதால் விரிவாக இதனை சொல்லவேண்டி உள்ளது.

ஆக, படைப்பாசிரியனை பிரதியின் நெசவில் கண்டுகொள்வது வாசகனின் அல்லது விமர்சகனின் தவிர்க்க இயலாத செயல்பாடாகும். “படைப்பை பார் பாடைப்பாளியை பார்க்காதே“ என்பது படைப்பாசிரியனின் மரணத்தை அறிவித்து விட்டு தப்பிச் சென்றுவிடும் ஒன்றாக ஆகிவிடாது. படைப்பாசிரியன் படைப்பிற்கு வெளியில் இல்லை, படைப்பிற்குள்தான் இருக்கிறான் எனும்போது மா. அரங்கநாதனின் இக்கதைகளில் படைப்பாசிரியனை அல்லது கதைப்புலத்தில் தோன்றி மறைந்து திருவிளையாடும் முத்துக்கருப்பனைக் கண்டடைவதன் வழியாக அவரது கதைகளின் சமூக-அரசியலை புரிந்துகொள்ள முயலலாம். இதன்பொருள் மா. அரங்கநாதனின் கலை உன்னத வெளிப்பாடுகள், சிறுகதை நுட்பங்கள், செய்நேர்த்திகள், நுண்விபரங்கள், வடிவஉத்திகள் எல்லாம் க.நா.சு, சா. கந்தசாமி, அசோகமித்திரன், தமிழவன் உள்ளிட்ட தமிழின் சிறந்த விமர்சகர்கள் மற்றும் படைப்பாளிகளால், ருத்ரையா[i] போன்ற தமிழின் குறிப்பிடத்தகுந்த கலை இயக்குநராலும் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதால், சொல்லப்படாத மற்றொரு கோணத்தில் கதைகளை வாசிக்க முயற்சிப்போம்.

இவரது கதைகள் மிகை உணர்ச்சிகள் அற்றவை. சிறுகதைக்கான ஆரம்பம்-உச்சம்-முடிவு அல்லது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஏற்படும் திருப்புமுனை போன்ற வழக்கமான அம்சங்களும் குறைவு. யதார்த்த கதையாடல்களாக சொல்லப்பட்டவற்றில் கற்பணார்த்தம் குறைந்த இயல்புநவிற்சி என்பதை உத்தியாகக் கொண்ட நடப்பியல் சார்ந்த கதைகளே பெரும்பாலானவை. பாத்திரங்களின் வார்ப்பில்கூட அதன் இயல்தன்மைக்கு மேலாக எந்த ஆசிரியத்துவத்தின் சுமைகளும் ஏற்றப்படுவதில்லை. பெரும்பாலான கதைகள் நேர்க்கோட்டுக் கதையாடலைக் கொண்டவை. ஒரேவிதமான உத்தியடிப்படையில் சென்னைக்கு குடியேறும் தென்தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் பிரச்சனைப்பாடுகளை மையமாக்கொண்டவை, மதம் மற்றும் சாதிமாறிய திருமணங்கள் (சிறிய புஷ்பத்தின் நாணம், ஜங்ஷன், எங்கேயோ போதல், ஞானக்கூத்து, பயணம், விடுதலைப்போரில் அப்பரின் பங்கு) கிராமங்களை விட்டு வெளியேறுதல், கிராமங்களின் சாதிய இறுக்கம், தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்ட தலித்துகள் சார்ந்தவை, தத்துவங்களைப்பேசும் மாயத்தன்மைக்கொண்டவை (கண்ணோட்டம், அம்மே நாராயணி, முதற்தீ எரிந்த காடு, ஒரு பிற்பகல் நேரம்) ஜாதகங்கள் அடிப்படையிலான பகுத்தறிவிற்கு எதிரானவை (தொலைவிலுணர்தல், அழல் குட்டம், துக்கிரி), இலக்கிய-பூடகத்தன்மை கொண்டவை எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில கதைகளும் உள்ளன. இவ்வாறு, குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒருசில கதைகளில் (மைலாப்பூர், அழல் குட்டம், மோனலிசாவும் ஒரு கருப்புக் குட்டியும், அசலம், உவரி, கச்சிப்பேடு, செட்டி வளாகம், ஜேம்ஸ் டீனும் செண்பகராமன் புதூர்க்காரரும், ஆற்றோடு போயிற்று, தாங்கல்) நவீனத்திற்கு பிந்தையதான கூறுகளையும் காணமுடிகிறது.

இவரது கதைகள் இரண்டு களங்களுக்குள் இயங்குபவையாக, அக்களங்களால் உற்பத்தி் செய்யப்பட்ட பதிவுகளாக உள்ளன. ஒன்று நகரவாழ்வை முன்வைத்து உருவான நவீனத்துவக் களம். இன்றைய நகரங்கள் உருவாக காரணமான மத்தியதரவர்க்க வாழ்வின் பல இடர்பாடுகள், நகரில் தகவமைப்பதற்கான பிரச்சனைபாடுகள், நகரை தனக்குள் இடப்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகள், நகரை தனக்கான இயங்குபுலமாக வரைந்துகொள்வதற்கான எத்தனங்கள் எனலாம். இங்கு நகரத்திற்குள் ஒரு குடும்பத்தை இடப்படுத்தும் தன்மையைவிட, ஒரு தனிமனிதனாக நகரை எதிர்கொள்வது மையமான பிரச்சனையாக உள்ளது. ஒரு தனித்த உடல் நகரம் என்ற அங்ககத்திற்குள் தன்னை இருத்த முனைவதும், தனது புலன்களை நகரின் புலன்களாக மாற்ற முனைவதுமே. கதைகளில் குடும்பம், மனைவி குழந்தை என்கிற நிறுவனம்சார்ந்த உறவுகள் அதிகம் இல்லை. எல்லாம் ஒரு தனிமனிதனாக பதியவைக்கப்பட்ட மன உணர்வுகளே. ஆக, மத்தியதரவரக்க மனசாட்சியை உருவாக்கும் நவீனத்துவ சொல்லாடலால் உற்பத்திச் செய்யப்பட்ட கதைகள் இவை எனலாம்.

இரண்டாவது, கீழ்திசை மரபுகளாக அறியப்பட்ட கடவுள் நம்பிக்கை, சைவம், சித்தாந்தம், வேதாந்தம் உள்ளிட்டவற்றை விசாரணை செய்யும் மற்றும் விசாரமாக சஞ்சரிக்கும் கதைகள். இத்தகைய கதைகளை தனது உரை ஒன்றில் மிகச்சரியாக அடையாளம் காட்டுகிறார் தமிழின் குறிப்பிடத்தகுந்த விமர்சன முன்னொடியான க. நா. சு அவர்கள். அவரது விரிவான உரையை இங்கு அப்படியே தருகிறேன் உரையாடலை முன்வைத்து செல்ல.

”தன்னுடைய பர்சனாலிட்டியை பாதித்துக் கொள்வதற்காகவோ, தனக்குள்ளேயே ஒரு முக்கியம் ஏற்படுத்திக் கொள்வதற்காகவோ சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று பொதுவாகச் சொல்லலாம். ஆனால் வாசகன் எதிர்கொண்டு, இந்த கதையைப் படிக்கிற வாசகன் மனதில் தன்னைப் பற்றி, அதாவது அந்த வாசகனைப் பற்றி ஓர் உருவத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று சொல்லவேண்டும். இதை மிகவும் சிறப்பாக சமீப காலத்தில் செய்திருப்பவர் என்று லத்தின் அமெரிக்காவில் உள்ள ‘ஜார்ஜ் லூயி போர்ஹே’ என்ற ஓர் ஆசிரியரைப் பற்றி, அவர் ஓர் அறிவுதளத்தில் நின்று எழுதுகிறார் என்கிற அளவில் சொல்லுகிறார்கள். அவருக்கு உலகம் பூராவும் புகழ் பரவியிருக்கிறது என்பது உண்மை. ஆனால் தமிழில் இருக்கிற ரசனை என்னவென்றால் ஓரளவிற்கு தமிழரிடையே கூட தரமான சிறுகதைகள் என்றால் பாராட்டப்படுவதில்லை என்ற ஒரு வழக்கம் ஏற்பட்டுவிட்டது. அரங்கநாதன் எழுதியிருக்கிற கதைகள் போர்ஹே எழுதிய கதைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து மோனாலிசா, நசிகேதனும் யமனும் – அப்புறம் இன்னொரு தலைப்பு – இந்த மாதிரி எல்லாம் பார்க்கும் போது ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து, நமது பண்பாட்டின் பல அம்சங்களை நாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு இவர் எழுதியிருக்கிறார் என்று மிகவும் நன்றாகத் தெரிகிறது.[ii]

“முத்துக்கருப்பன் எண்பது“ என்கிற தொகுப்பிற்கு தமிழவன் எழுதிய முன்னுரையிலும், மா. அரங்கநாதன் கதைகளை வாசிக்கும்போது போர்ஹே கதைகள் நினைவிற்கு வருவதை சுட்டிக்காட்டுகிறார்[iii].

போர்ஹேவுடன் மா. அரங்நாதனை ஒப்பிடுவது நம் நோக்கமல்ல. ஒப்பீடு என்பது அடிப்படையில் நீதியியல் சார்ந்த மதிப்பீட்டு சொல்லாடல். அதனால், போர்ஹேவின் சாத்தியங்களை தமிழில் இவர் முயன்றிருப்பது என்று சொல்லப்படுவதை, கீழ்திசை கதைசார் உத்தியுடன் போர்ஹே கொண்டிருந்த உறவோடு அடையாளப்படுத்தியே காணமுடியம். போர்ஹேவின் கதைதளங்கள் பன்முகத்தன்மை வாய்ந்தவை என்றால், அது ஒருவித உலகப்பொதுவான சமூகக்கதையாடலாக அல்லது நவீன சமூகத்தில் ஒரு கதைபரப்பிற்கான தொன்மமாக்கலை செய்கிறது. அவரது கதைகளில் உலகின் பல தொன்மங்கள், வரலாறுகள், இலக்கிய நுட்பங்கள், தத்துவங்கள் ஆகியவை நவீன கதைவடிவம் எடுத்து வெளிப்பாடு கொள்வதைக் காணலாம். காரணம், போர்ஹே கீழ்திசை கதைசொல்லும் மரபை தனது உத்தியாக எடுத்துக்கொண்டு சமகால வரலாறு அரசியல் ஆகியவற்றை ஊடாடச் செய்தவர். அவரது கலைக்களஞ்சிய அறிவும், அரேபிய இரவுகள் உள்ளிட்ட அவர் வாசித்த கீழ்திசைக் கதைமரபுகளும் அவரது எழுத்தின் வழியாக நவீன தொன்மங்களை படைத்தன எனலாம்.

ஆனால், தமிழில் இக்கீழ்திசை மரபு என்பது நவீன சிறுகதை உத்திகளில் மிகவும் குறைவாகவே வெளிப்பட்டு உள்ளது. அதாவது போர்ஹேவின் சிறுகதைகளில் tale எனப்படும் கதைகட்டுதல் என்பது முக்கியமானது. ஆனால் நவீன சிறுகதைகளில் யதார்த்த்தவாதமும், இயல்புவாதமும் ஓங்கியதால், கதைகட்டுதல்களை விட்டு நடப்பியல் சித்தரிப்புகளையும் சம்பவங்களையும் கொண்டு வரலாறு மற்றும் சமூக பதிவுகளான story எனப்படும் Hi-story சார்ந்த கதையாடல்களே ஆதிக்கம் வகிக்கத் துவங்கின. இன்புறுப் புனைவுகளைக் (பேண்டஸி வகை) கொண்ட கதைகளைவிட, நடப்பியலை முன்வைக்கும் சம்பவக்கூறுகளே கதைகளாயின. அவ்வகையில் மா. அரங்கநாதனின் கதைதளங்கள் இவ்விரண்டு தளங்களில் இயங்கினாலும். அதிகம் கதைகட்டுதல்(‘டேல்’)களைவிட தன்வரலாற்றுப் பதிவுகளான கதை(ஸ்டோரி)களைக் கொண்டவையாக உள்ளன எனலாம்.

அரங்கநாதனின் கதைத்தளங்களைவிட கதைப்புலங்கள் நுட்பமாக கவனிக்கத்தக்கவையாக உள்ளன. அதாவது களம் என்பது இடத்தை குறிக்கிறது என்றால் புலம் என்பது கால-வெளியைக் குறிப்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலவெளியில் அல்லது புலத்தில் இயங்கும் மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட வகையாக ஆதல் என்பதே இக்தையாடல்களின் உத்தியாக உள்ளது. அதாவது ”ஆதல்” என்பது ஒரு தத்துவார்த்த உத்தியாக வெளிப்படுகிறது பெரும்பாலான கதைகளில். முத்துகருப்பன் ஒவ்வொரு கதையிலும் ஒன்றாக தோன்றி ஒன்றாக ஆதலே இந்த உத்தியின் அடிப்படையாக உள்ளது. ஆதல் என்பதை அதுவாக ஆதல் என்பதன்மூலம், மற்றொன்றாக ஆகாதிருத்தல் என்கிற தத்துவமாக மாறுகிறது. எல்லாம் மற்றதாக ஆதல் மூலமே மற்றதை இல்லாததாக்க முடியும். அதுவாக “ஆதல்“ “அதை“யும் “இதை“யும் இல்லாதாக்கிவிடும் என்பதே. தன்னை ஒரு சித்தாந்தியாக பல கதைகளில் பல களங்களில் பல தோற்றங்களில் முன்வைக்க முனையும் முத்துக்கருப்பன், இந்த உத்தி வழியாக சித்தாந்தம் பேசும் வேதாந்தியாகிவிடும்[iv] நிலை உருவாகிவிடுவதை கதையின் உள்ளார்ந்த அமைப்பில் வாசிக்க முடிகிறது.

(…. இன்னும் வரும்..)

- ஜமாலன் 23-10-2012 (jamalan.tamil@gmail.com)

இக்கட்டுரை காக்கைச்சிறகினிலே (மே-2013) இதழிலும், சிற்றேடு (ஜீலை செம்படம்பர் இணைப்பு) இதழ்களிலும் வெளிவந்து உள்ளது. கட்டுரையின் நீளம் கருதி பகுதியாக வெளியிடப்படுகிறது.

குறிப்புகள்.


[i] http://www.maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=115:2012-01-12-07-14-17&catid=17:2012-01-11-07-14-11&Itemid=36

[ii] http://www.maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=116&Itemid=41

[iii] பக்கம் VIII - முத்துக்கருப்பன் எண்பது – மா. அரங்கநாதன் – காவ்யா 2011.

[iv] சித்தாந்தம், வேதாந்தம் இரண்டும் இருவேறுபட்ட செல்நெறிகளாக இருப்பதால், வேதத்தையும் அதன அந்தமான உப-நிஷத்தையும் அடிப்படையாகக்கொண்ட தத்துவுமான வேதாந்தமே இங்கு குறிக்கப்படுகிறது.

*****************

யதார்த்த மாயை அல்லது மாயையின் யதார்த்தம் அரங்கநாதன் கதைகள் ஒரு வாசிப்பு. – பகுதி:1

தமிழ்ச்சிறுகதையில் புதுமைப்பித்தன், மௌனி என்ற இரு எழுத்தியக்கங்களுக்கு பிந்தைய காலத்தில் உருவான சிறுகதைப் போக்குகளில் ஒன்று மா. அரங்கநாதன் கதைகள். எழுத்தாளன் காரணராகவும், எழுத்து ஆசிரியனின் தனிச்சொத்தாகவும் மாறிவிட்ட இன்றைய நவீன சமூகத்தில், இக்கதைகளை மா. அரங்கநாதன் என்கிற இலக்கிய ஆசிரியரின் படைப்பாக்கமாக கருதுவதும், அதன் ஆழ, அகலங்கள் மற்றும் நீள, உயரங்களை அந்த ஆசிரியரை வைத்து மதிப்பிடுவதும் இயல்பானதாக கருதப்படுகிறது. கதைகளின் வழி படைப்பாசிரியனை[i] மதிப்பிடுவதற்கு மாறாக, ஆசிரியன்வழி கதையை மதிப்பிடும் போக்கு முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. இது 17-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு உருவான சொத்துரிமை மற்றும் காப்புரிமை சார்ந்து உருவானதே. செவ்வியல்கால சமூகங்களில் தனிப்பட்ட படைப்பாசிரியன் எந்த ஒரு படைப்பின் உரிமையாளனாகவும் இருந்திருக்கவில்லை. ஆனால், நவீனசமூகம் படைப்பை ஆசிரியனின் உரிமையாக மாற்றிவிட்டது. அந்த உரிமை படைப்பாசிரியனின் பரிசாகவும், தண்டனையாகவும் மாறிவிட்டது. அதனால் ஆசிரியனை தனது சொல்லாடல்கள் வழி கட்டுப்படுத்துவதாகியது. அதாவது ஆசிரியனை செவ்வியல்-சமூக அங்கத்திலிருந்து விடுவித்தது, அதேநேரம் நவீன அரசு உருவாக்கிய கருத்தியல் மற்றும் சொல்லாடல்களம் வழியாக நவீன-சமூகம் என்கிற பேரமைப்பின் அங்கமாக மாற்றியது.

இந்நிகழ்வை பிரஞ்சு சிந்தனையாளர் மிஷல் பூக்கோ தனது ”படைப்பாசிரியன் என்றால் என்ன?”[ii] என்ற கட்டுரையில் விரிவாக விவாதிக்கிறார். ”படைப்பாசிரியன்” என்ற குறிச்சொல் கருத்துக்களின் வரலாற்றில், அறிவு, இலக்கியம், தத்துவம் மற்றும் அறிவியல் என்று தனித்துவமாக்கப்பட்டதோடு உருவான ஒன்று என்கிறார். இப்படி எழுத்தை சொத்தாக கருதி படைப்பாசிரியனின் உரிமையாக மாற்றியதன்மூலம், அந்த படைப்பாசிரியனை அதிகாரம் தன்வயப்படுத்திக் கொள்கிறது. அவனை தனது கண்காணிப்பிற்குள் நிறுத்திவிடுகிறது. அவனை அந்தகால சொல்லாடல் வெளிதாண்டி எழுதமுடியாமல் செய்துவிடுகிறது என்கிறார். படைப்பாசிரியனை அக்காலத்தின் சரித்திரவிளைவாக மாற்றிவிடுகிறது என்கிறார்.

அப்படி என்றால் உண்மையில் ஒரு படைப்பில் படைப்பாசிரியனின் பங்குதான் என்ன? படைப்பாசிரியன் தொல்குடி மாந்த்ரீகன் போல “சந்நதம்“ வந்து “தான்“ பிறழ்ந்த நிலையில், மொழி அவன் வழியாக வந்து கதையை எழுதிவிட்டுப் போகிறதா? சமூகஜீவியான ஒரு படைப்பாசிரியன் வெறும் ஊடகம் மட்டுமா? அவனது ரத்தமும் சதையுமான வாழ்விற்கும் அவனது எழுத்திற்கும் தொடர்பில்லையா? பிரஞ்சு சிந்தனையாளர் ரோலான் பார்த் சொன்னதைப்போல படைப்பாசிரியன் உண்மையில் இறந்துதான் போய்விட்டானா? படைப்பு என்பதை பிரதியாக மட்டுமே அணுக வேண்டுமா? பூக்கோ சுட்டிக்காட்டுவதைப்போல படைப்பாசிரியன் என்பவன் அந்தகால சொல்லாடலினால் கட்டுப்படுத்தப்பட்டு வரலாற்றிற்குள் நின்று மட்டுமே வாசிக்க முடியுமா? அல்லது இரத்தமும் சதையுமான எழுத்தாளனின் ஒரு ”மாற்று-தான்” (ஆல்டர்-ஈகோ) தானா?

”முத்துக்கருப்பன் எண்பது” (முத்துக்கருப்பன் என்பது… என்கிற தலைப்பு பொருத்தமானதாக இருந்திருக்கும்) என்கிற மா. அரங்கநாதனின் எண்பது கதைகளையும் ஒருசேர வாசிக்கும்போது எழும் கேள்விகளே இவை. மா. அரங்கநாதனின் எழுத்தாளர் என்கிற மாற்று-தானின் ஒரு மாற்று-தானாக வருகிறது இக்கதைகளில் முத்துக்கருப்பன் என்கிற பெயரடையாளம். மகாபாரதத்தை எழுதிய (அல்லது தொகுத்த) வியாசர், அவரே அதில் ஒரு பிரதான பாத்திரமாக (கௌரவர்கள், பாண்டவர்கள் எல்லோருக்கும் உயிரியல் தந்தையாக) கதையாடலை நிகழத்தியதைப்போல, இதில் முத்துக்கருப்பன் என்கிற பெயரடையாளம் கொண்ட பாத்திரம் ஒவ்வொரு கதையிலும் ஒருவிதமாக வெளிப்பட்டு நிற்கிறது. இது ஒரு உத்திசார்ந்த நுட்பம் என்றபோதிலும், இதற்குள் இந்த படைப்பாசிரியன் என்கிற கருத்தாக்கம் முத்துக்கருப்பன் வழியாக தனது இருப்பை பிரதிக்குள் காட்டியபடியே உள்ளது. முத்துக்கருப்பன் குறைந்தது ஒரு பெயர்ப்பலகையாக (கதை தேட்டை) வந்து அக்கதையாடலின் பிதுரார்ஜிதமாகவாவது இருப்பை வெளிப்படுத்தும் வண்ணம் கதையின் உத்திகள் பின்னப்பட்டு உள்ளன. ஆக, படைப்பாசிரியனின் இருப்பு என்பதுதான், இக்கதையாடலின் மையசரடாக இருப்பதால், ஒருவகையில் முத்துக்கருப்பனின் பலரூபங்களின் வெளிப்பாடாக அமையும் ஒருவகை சைவமதம் முன்வைக்கும் “திருவிளையாடல்” இறை-தத்துவமே இதன் அடிப்படையாக உள்ளது எனலாம்.

அவதாரம் என்பது வைணவ மதத்தின் இறை-வெளிப்பாட்டு-உத்தி என்றால், திருவிளையாடல் என்பது சைவமதத்தின் இறை-வெளிப்பாட்டு-உத்தி. சைவசித்தாங்களினால் இக்கதையாடல்கள் வழிநடத்தப்படுவதற்கான ஒரு வடிவ உத்தியே இந்த முத்துக்கருப்பன். அல்லது பிரபஞ்ச தோற்றம் என்பது சித்தினால் மாயை வழி உருவாக்கப்பட்ட சடத்தின் பலவடிவமும் அதன் அலகிலா விளையாட்டும் என்கிற மாயாவாதத்தின் செயல் உத்தியாக இக்கதையாடல்களை வாசிக்கலாம். அதாவது ஒருமை பன்மையாகிறது. ஒருவகையில் ஒருமையும் பன்மையும் ஒன்றுதான். ஒருமையை பன்மையாக பார்ப்பது மாயை. மாயை ஒரு ஆற்றல். அந்த ஆற்றலினால் பன்மையான இந்த உலகை, மறைப்பால் (மலத்தால்) இருமையாக்குவதில் உள்ள தத்துவத்தை மறுப்பது அவசியமாகிறது இக்கதையாடல்களுக்கு. இது சைவ தத்துவமரபின் மையசரடு என்றுகூட சொல்லலாம். இருமை என்பது பன்மை அல்ல. அதனால் இருமையான உலக யதார்த்தம் என்பதை மறுதலிக்கும் இக்கதையாடல்கள் நன்மை-தீமை என்கிற நவீனத்துவ இருமை விளையாட்டிலிருந்து விலகி நின்று பார்ப்பதாக உள்ளது. காரணமற்ற உலகின் காரணங்களை காணமுனைகிறது. அதாவது காரணத்தை மறுக்கவேண்டிய காரணத்தை கண்டடைய முனையும் கதையாடல்கள். அக்காரணராக தோன்றி மறையும் எழுத்துருவே முத்துக்கருப்பன்.

அரங்கநாதன் தனது படைப்புகள் பற்றிய ஒரு வாக்குமூலமாக நகுலனின் ”நான் எழுதி முடித்த பின்பே எனக்கு என்ன எழுதினேன்னு தெரியும்.” என்ற வாசகத்தை தனது செவ்விகளில் குறிப்பிடுகிறார். இதை அவரது இலக்கிய கோட்பாடாகக்கூடக் கொள்ளலாம். காரணம், அதே செவ்வியில் கூறுகிறார் ”காரண காரியங்களோடு இருக்கும் எந்தப் பொருளும் நிலைப்பது கிடையாது. அன்பு என்று நாம் உணர்வதிலே நோக்கமோ எந்தவித காரண காரியங்களோ இல்லை.” (இது “அஞ்சலி“ கதையில் முத்துக்கருப்பனின் விமர்சனக்கட்டுரையில் ஒரு வாசகமாக எழுதப்பட்டு உள்ளது.) இதனை அவரது சித்தாந்தம் அல்லது தத்துவம் அல்லது நவீனமொழியில் சொன்னால் உலகக் கண்ணோட்டம் எனலாம். அதாவது படைப்பு ஒரு ஆழ்மன வெளிப்பாடு, அது நினைவற்றநிலையில் நிகழும் ஒன்று என்பதே. அதற்கு காரண காரியங்கள் இல்லை. அதை படைப்பாசிரியனின் “தான்“ என்கிற நினைவுநிலையிலான ஒரு உடலின் சமூக வாழ்வு கட்டுப்படுத்தாது. எனவே, சமூகத்தில் புழங்கும் ஒரு எழுத்தாளனை, ஒரு படைப்பின் படைப்பாசிரியனாக கருதிவிட முடியாது. அல்லது படைப்பு என்பது காரணங்கள் நோங்கங்கள் அற்றது என்பதே. ஆனால், படைப்பு ஒரு எழுத்தாளனை படைப்பாசிரியனாக உற்பத்தி செய்வதன் மூலம்தான் பிரதியாகிறது.

அதாவது ஒரு இலக்கிய படைப்பாசிரியன் படைப்பில் தோன்றி படைப்பில் வாழ்ந்து படைப்போடு மறைகிறான். அல்லது படைப்பாசிரியன் படைப்பிற்கு முன்னும் பின்னும் படைப்பாசிரியனாக இருப்பதில்லை. படைப்பில் மிஞ்சுவது பிரதியே. பிரதியில் படைப்பாசிரியன் மறையும் இடத்தில் வாசகன் வெளிப்படுகிறான். வாசகன் தன்னுருவாக்க வினையாக பிரதியை கட்டுகிறான். அதற்கு எழுத்தாளனின் உயிரியல் சார்ந்த சமூக வாழ்க்கை எந்த உதவியும் செய்வதில்லை. அதாவது படைப்பாசிரியன் யார் என்று அறியாமலே ஒரு படைப்பை வாசிக்க முடியும் எனும்போது, படைப்பாசிரியனின் வாழ்வு பற்றிய விபரங்களும், வினைபாடுகளும் வாசகனுக்கு தேவையற்றது என்பதே. ஆனால், படைப்பாசிரியன் படைப்பிற்கு வெளியில்தான் இல்லை. படைப்பிற்குள் அவன் உயிர்ப்புடன் உள்ளானா? இல்லையா? என்பதை வாசிப்பாளன் கண்டடைவான். படைப்பாசிரியன் நினைவற்றநிலையில் படைக்கலாம், ஆனால் வாசிப்பாளன் சமூகநினைவுடன்தான் வாசிக்கிறான். அல்லது வாசிப்பாளன் படைப்பாளனை உற்பத்தி செய்வது பிரதியின் ஒரு வாசிப்பு செயல்பாடாக ஆகிறது. வாசிப்பு அப்படைப்பாளனை பிரதிக்குள் உயிர்ப்பிக்கிறது. அதாவது, காரணமற்ற படைப்பு காரணமாவது வாசிப்பில். அரங்கநாதனால் காரணமற்று படைக்கப்பட்ட இவை ஒரு காரணத்தின் பொருட்டே வாசிக்கப்படுகிறது என்பதை சொல்லவே இந்த நீண்ட உசாவல்.

சங்கப்பாடல்களின் எந்த படைப்பாசிரியரையும் நமக்கு தெரியாது. படைப்பாசிரியரை நாம்தான் உருவாக்குகிறோம் அவரது பிரதியிலிருந்து. சான்றாக காக்கை பாடினியார் என்ற பெயர் நாம் பிரதியிலிருந்து உற்பத்தி செய்த படைப்பாசிரியரின் பெயர்தானே தவிர அப்பிரதியை எழுதியவரின் பெயரல்ல. ஆக, பிரதிக்குரிய படைப்பாசிரியனின் பெயர் என்பது தனிச்சொத்தை அடிப்படையாகக்கொண்ட முதலாளியத்தின் விளைவாக உருவானதே. இங்கு எழும் கேள்வி படைப்பாசிரியனாக உள்ள ஒரு எழுத்தாளனின் சமூக வாழ்வு படைப்பில் அல்லது பிரதியில் என்ன வகிபாகத்தை வகிக்கிறது என்பதே? இதற்கான பதிலை மொழிக்கும் படைப்பிற்குமான உறவிலிருந்தே பெறமுடியும். ஒரு படைப்பை கட்டுவது மொழி என்றால், மொழியை கட்டுவது சமூகம். ஆக, சமூகம் மொழியாக படைப்பாசிரியனின் ஆழ்மனமாக கட்டமைந்து உள்ளது எனலாம். படைப்பாசிரியனும், வாசகனும், பிரதியும், சமூகமும் தொடர்புறுவது மொழிவழியாகவே. சமூகவயமாகிவிட்ட மொழியால் வெளிப்படுத்தப்படும் படைப்பானது, படைப்பாசிரியனின் ஆழ்மனக்கட்டுமானத்தின் வழியாக வெளிப்படுகிறது. அதாவது பிரதி என்பது சமூகம், படைப்பாசிரியன், வாசகன் என்கிற மொழி-நெசவில் நெய்யப்படும் பொருளே. இதன்பொருள், ஒவ்வொரு சமூகத்திலும் பிரதி ஒவ்வொருவிதமாக நெய்யப்படும். பிரதி என்பது முற்றுமுழுதான பொருள் அல்ல. செயலில் உருவாகும் இயக்கத்தில் இருக்கும் ஒன்று. ஆக, பிரதியை கட்டுவதும் கலைப்பதும் வாசிப்பே.

(…. இன்னும் வரும்..)

- ஜமாலன் 23-10-2012 (jamalan.tamil@gmail.com)

இக்கட்டுரை காக்கைச்சிறகினிலே (மே-2013) இதழிலும், சிற்றேடு (ஜீலை செம்படம்பர் இணைப்பு) இதழ்களிலும் வெளிவந்து உள்ளது. கட்டுரையின் நீளம் கருதி பகுதியாக வெளியிடப்படுகிறது.

குறிப்புகள்.


[i] Author என்ற ஆங்கிலச்சொல்லிற்கு இணையாக தமிழில் ஆசிரியன் என்ற சொல் புழக்கத்தில் உள்ளது என்றாலும், அது அதற்கான சரியான சொல்லாட்சியாக கருதமுடியவில்லை என்பதால், படைப்பாசிரியன் என்ற சொல்லை அதற்கு பகரமாக பாவிக்கிறேன் கட்டுரை நெடுகிலும்.

[ii] பூக்கோ ”படைப்பாசிரியன்” என்று பயன்படுத்தும் சொல் அந்தந்த கால வரலாற்றின் ஒரு குறிப்பிட்டவகை சொல்லாடலை உருவாக்கிவிடுபவர்களையும் குறிப்பதாக உள்ளது. உதாரணமாக பிராய்ட் மற்றும் மார்க்ஸ் போன்றவர்களை சொல்லலாம். இவர்களை சொல்லாடலை உற்பத்தி செய்யும் ஆசிரியர்கள் என்கிறார். ஆனால், இலக்கிய படைப்பாசிரியன் என்பவன் அக்கால வரலாற்று சொல்லாடலால் கட்டுப்படுத்தப்படுகிறான் என்கிறார். படைப்பாசிரியன் என்பதைவிட படைப்பாசிரியத்துவ செயல்பாடு ("author function") என்பதை முக்கியப்படுத்துகிறார். எல்லா பிரதிகளையும் ஒன்றுபொல் வாசிக்கமுடியாது செய்வது இந்த செயல்பாடே. விரிவாக அறிய மூலக்கட்டுரையை வாசிக்கவும். What is an author? – Michal Foucault.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.