நூல் அறிமுகம் கலந்துரையாடல்
Posted திங்கள், ஜூன் 28, 2010 in அறிமுகம், அறிவிப்பு, தமிழவன், நவீன தொன்மங்கள், பதிவர் வட்டம் by ஜமாலன்கோலம் – வீடு தேடிவரும் சினிமா இயக்கம்
Posted செவ்வாய், ஆகஸ்ட் 11, 2009 in அறிவிப்பு, சினிமா, ஞாநி, பதிவர் வட்டம் by ஜமாலன்நண்பர்களுக்கு, எனக்கு வந்த மின்-அஞ்சலை இங்கு பதிவர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன். ஞாநி தமிழ் எழுத்தலகத்திலும், பத்திரிக்கை, நவீன நாடகம் மற்றும் ஊடகத் துறைகளில் நன்கு அறிமுகமானவர். அவரது நிர்வாகத்தில் துவங்கப்படும் இந்த இயக்கத்திற்கு உங்கள் பங்களிப்பை செய்யுமாறு கெட்டுக் கொள்கிறென்.
வாய்ப்புள்ள சென்னை பதிவர்கள் நேரில் சென்று கலந்துகொண்டு நிகழ்ச்சி பற்றி பதிவிட்டால் எங்களைப்போன்ற வெளிநாட்டில் வாழ்பவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாகும். கழித்துக் கட்டப்படவேண்டிய நுகர்வுப்பண்டமாக நசிந்து வரும் தமிழ் சினிமா என்கிற கனவுத்தொழிற்சாலையிலிருந்து காட்சிகாண் ஊடகத்தை, சினிமா என்கிற திரை இலக்கியத்தை உருவாக்க இதுபோன்ற முயற்சிகள் அவசியமானவை. தமிழர்கள் பலதுறைகளிலும் அடைந்துள்ள வீழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது இந்த சினிமா என்கிற திரைஊடகம் விற்பனை செய்த கனவுகள்தான். தமிழனின் ஆழ்மனதில் சினிமா புரிந்டதிருக்கும் அவலங்கள் சொல்லி மாளாதவை. சினிமாவின் ஒளிர்திரைக் கனவுகளை காசுகொடுத்து வாங்கி அது உருவாக்கிய நகல்போலி உலகில் வாழ்ந்து, வாழ்ந்து இன்று உண்மையான தமிழன் என்பவன் ஏதோ ஒரூ மூலப்பிரதியின் பெருகி் கொண்டிருக்கும் ஒரு நகலாக மாறி, இந்த நகலையே உண்மையாக நம்பி வாழ வைத்துக்கொண்டிருப்பது சினிமா. தமிழ் சினிமாவை கடைத்தேற்ற இதுபோன்ற முயற்சிகள் அவசியம். தோழர் ஞாநியின் இம்முயற்சியை வாழ்த்தி வரவேற்போம்.
| கோலம் - வீ அன்புடன் ஞாநி dear friend i look forward to you at the inauguration of kolam - direct to home cinema movement through DVD on august 13 evening. the tamil invite is attached herewith. gnani |
- ஜமாலன் ஆகஸ்ட் 11 2009
இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம்
Posted செவ்வாய், நவம்பர் 25, 2008 in அறிவிப்பு, ஈழம், நெருக்கடி, பதிவர் வட்டம் by ஜமாலன்தமிழீழப் பிரச்சனை உக்கிரமடைந்து கடும் போர் நிகழும் இச்சூழலில் தமிழகத்தில் நடந்தவரும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான பல போராட்டங்களில் தமிழகக் கவிஞர்கள் ஒன்றுகூடி நடத்தும் ஒப்பாரிப் போராட்டம் இது. இப்போராட்டம் குறித்து குறிப்பிடத் தகுந்த உடல்மொழிக் கவிதைகளை எழுதிவருபவரும், திரைப்படத்துறையில் மாற்றுத் திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டு வருபவருமான தோழர் லீணா மணிமேகலை இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு அஞ்சலி்ல் தெரிவித்திருந்தார். தமிழக் கவிஞர்களுக்கான ஒரு புதிய வலைப்பதிவும் உருவாக்கி உள்ளனர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான “ஒப்பாரிக் கவிதைகளை” எழுதி தங்களது ஆதரவையும் இலங்கை அரசின் இனப்போருக்கு எதிரான உணர்வையும் பதிய வைக்க எண்ணம் உள்ளவர்கள் இந்த வலைப்பதிவிலோ அல்லது கீழ்கண்ட தொலைபேசி எண்ணிலோ, அலைபேசி எண்ணிலோ, மின்-அஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.
கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் சமூக உணர்வை வெளிப்படுத்தும் இந்நிகழ்வில் எல்லோரும் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்பை செய்யுமாறு வேண்டுகிறேன். ஏற்கனவே தமிழக ஓவியர்கள் ஏற்பாடு செய்த போரட்டம் குறித்து நாகார்ஜீனன் அவர்கள் பதிவிட்டுள்ளார்.
சென்னையைச் செர்ந்த பதிவுலக நண்பர்கள் இதில் கலந்துகொண்டு இந்நிகழ்வு பற்றிய பதிவுகளில் எழுதினால் எங்களைப்போல அயல்தேசத்தில் இருப்பவர்களுக்கு அப்போராட்டத்தை தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். பதிவுகள் மாற்று ஊடகம் என்பதன் பொருள் இதுபோல் மைய ஊடகங்களால் புறக்கணிக்கப்ட்ட நிகழ்வுகளை பதியவைப்பதுதான். நண்பர்கள் இதுகுறித்து எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம்தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து ,
நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி, தொடர்புக்கு மின்னஞ்சல் : tamilpoets@gmail.com செல்பேசி : 9841043438, 9884120284, 9952089604 |
நண்பர் கென்னின் அறிவிப்பு இங்கு.
தமிழீழம் குறித்து எனது பழைய பதிவு. யாழ்நகரமும் தமிழனின் தினவாழ்வும்
-குறிப்பும் அறிவிப்பும் ஜமாலன். 25-11-2008
படங்கள்.
தமிழர்கள கொண்று லாரியில் வாரிச்செல்லும் காட்சி. இறந்துபோன சகோதரனுக்கு கிளிநொச்சிக்கு வெளியில் உள்ள அமரர்கள் இடுகாட்டில் அஞ்சலி செலுத்தும் தமிழ்பெண்.
அரைடவுசர்களும் ஆதிக்க கருத்தியலும்....
Posted வியாழன், ஜூன் 05, 2008 in கோட்பாடுகள், பதிவர் வட்டம், புள்ளியல், விவாதம் by ஜமாலன்“எண்ணப்பட்ட உடல்களும் எழதப்பட்ட கதைகளும்” என்கிற தீராநதிக் கட்டுரை இரண்டு பகுதிகளாக பதிவில் வெளியிடப் பட்டுள்ளது. (கட்டுரையை படிக்க பகுதி-1 பகுதி-2 இங்கு செல்லவும்) அதற்கான உரையாடலை மேலெடுத்துச் செல்லம் வண்ணம் நண்பர் பாரி. அரசு இன்று புள்ளியியல் ஒரு அரசியல் வகையினம் - (ஜமாலனுக்கு மட்டுமல்ல...) என்று ஒரு பதிவு போட்டுள்ளார். அதற்கான விளக்கமாக எனது பின்னொட்டம் பொதுவான விளக்கமாக இருப்பதால் இங்கு தனிப்பதிவாக இடப்படுகிறது. மெற்கண்ட கட்டுரைகளை படித்தவிட்டும் தொடரலாம்.
புள்ளியல் குறித்த உரையாடலைத் துவங்கியதால், எனது சில மேல் விளக்கங்களை இங்கு தருகிறேன். எனது பகுதி-1 கட்டுரையில் புள்ளியல் மட்டுமின்றி எல்லா அறிவுத்துறையுமே அரசியல் தன்மை கொண்டவையே என்பதை நண்பர் “பெரியார் விமர்சகர்“ உடன் ஆன எனது பின்னொட்ட உரையாடலில் விளக்கியுள்ளேன். அதனால் மேலதிகமாக அதைப்பற்றிப் பேசவேண்டாம். குறிப்பாக ஒன்று அறிவியல் துறைகள் உருவான வரலாறு முக்கியமானது. அவை மனிதர்களை பண்பாட்டுரீதியாக கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை சார்ந்தவையே. அவற்றில் மனிதர்களுக்கு இருக்கும் சாதகமான அம்சங்களுடன் இத்தகைய பாதக அம்சங்களும் உள்ளது. புள்ளிவிபரம் அல்லது புள்ளியல் என்பது தரவுகளின் பொதுமைப்படுத்துதல் என்பதை கொண்டிருப்பதால் அது மற்றவற்றைவிட ஒரு ஆளுகை தொழில்நுட்பமாக இருக்கிறது என்பதே எனது கட்டுரையின் மையமான உரையாடல். புள்ளியல் பொய்யா? உண்மையா? என்பது எனது தேடல் அல்ல. என்வரையில் அது அவசியமும் அல்ல. உண்மை தேடுதல் என்பது மதவாதிகளின் வேலை என்று நினைப்பவன் நான். அடிப்படையில் நான் மதவாதி அல்ல. மனிதர்கள் மகிழ்வுடன் வாழ புனைவுகள் அல்லது பொய்கள்தான் சாத்தியமெனில் அதை சொல்லவும் எழுதவுமானதே எனது அரசியல். பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்க்க நன்மை பயக்குமெனில் (குறள் நினைவிலிருந்து எழுதப்படுகிறது - தவறெனில் சுட்டலாம்). அவ்வளவுதான்.
//இப்படியே எல்லாவற்றின் அரசியல் பின்னணி பார்க்கபோனால் இந்திய துணைக்கண்டத்தை பற்றிய ஐரோப்பிய ஆய்வுகள் அனைத்தும் பொய்யானவை என்று இன்றைக்கு அரை டவுசர் ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் சொல்வது உண்மையா?//
ஐரோப்பிய ஆய்வுகள் பற்றியதல்ல எனது உரையாடல். குறிப்பாக மேல்திசை மற்றும் கீழ்திசைக் கட்டமைவு என்பது குறித்து பேசினால் இது குறித்து ஆழமாக உரையாடலாம். அதற்குள் நான் போகவில்லை. உண்மையில் ஐரோப்பிய ஆய்வுகள்தான் ஆர்.எஸ்.எஸ். உருவானதற்கான கோட்பாட்டுப் பின்புலத்தை தந்தவை. அவர்கள் கூறுவது மிகவும் சுருக்கப்பட்ட தங்களுக்கு பாதகமான அம்சங்கள் பற்றியே. குறிப்பாக சாதி, ஆரிய-திராவிட வேறுபாடு ஆகியவற்றைப் பற்றிய கருத்தாக்கங்களில் ஐரோப்பிய கண்டுபிடிப்பு என்று புசி மெழுகுவார்கள். தேசம் என்கிற கோட்பாடே ஐரோப்பிய கோட்பாடுதான். அதை ஏன் தூக்கிப் பிடிக்கிறார்கள்? பாரதம், அகண்ட பாரதம், பண்பாட்டு தேசியம் என்றெல்லாம் கூறுவதே ஐரோப்பிய கண்ணோட்டம்தான். சாவர்க்கர், ஜின்னா போன்றவர்கள் இந்த ஐரோப்பிய கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே தேசம் பற்றியக் கோட்பாட்டை முன்வைத்தனர். காந்தியை கொன்றவன்கூட நவீன இந்தியா பற்றித்தான் பேசினான். அதற்கு காந்தி தடை என்று பார்த்தான். அணுகுண்டு வலிமையான இநதியா என்பது என்னவகைக் கண்ணோட்டம்?
இனம் என்கிற கண்ணோட்டமே ஐரோப்பிய வகைதான். ஆக, மனிதர்களை உயர்வு தாழ்வு கருதும் ஐரோப்பிய இனவாதம் இந்திய சாதியமைப்புடன் ஊடுகலந்து உருவானதே நான் பேசிய கட்டுரையின் சாரம். இதன்பொருள் ஐரொப்பிய ஆய்வை மறுப்பதோ அல்லது இந்திய மரபை தூக்கிப்பிடிப்பதோ அல்ல. அரை டவுசர்கள் (சாகா சீருடையை நீங்கள் குறிப்பதாக கொள்கிறேன்.) தங்களுக்கு அல்லது உயர்சாதி பார்ப்பன ஆர்ய வர்த்தம் என்கிற அகண்டபாரத ஆதிக்க நிலத்தை அடைவதற்காக தேவைப்பட்டால் தங்கள் எதிரிகளாக கருதம் முகமது நபியையும் ஏசுவையும் கூட தூக்கிப் பிடிப்பார்கள். அதனால் அவர்களது வாதத்தை மேலோட்டமாக பார்க்க்ககூடாது. இப்படி எழுதுவதன் மூலம் அவர்களது இரட்டைமுக அரசியல் கருத்தாக்கத்திற்கு நாமே பலியாகிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வுத் தேவை.
//இன்றைக்கு மேற்கோள் (உசாத்துணை) நூற்களாகவும், ஆய்வு ஆதாரங்களாவும் காட்டுபடுவை மிக பெரும்பான்மையானவை ஐரோப்பியர்களின் வழி வந்தவை! அப்படியானால் இவையெல்லாம் ஐரோப்பிய அரசியல் வகையினமா?//
ஆம். ஐரொப்பிய அரசியல் வகையினம்தான். இதில் என்ன முரண்பாடு? நமது ஆழ்மனதில் உள்ள ஐரோப்பிய வழிவந்தவை எல்லாம் தவறானவை என்கிற புரிதலையே இவ்வாக்கியங்கள் சுட்டுகின்றன. முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஐரோப்பா அல்லது குறிப்பாக பிரித்தானியர்கள் ஏன் நமது சமூகங்களை ஆய்வு செய்வேண்டும். பொழுது போக்காகவா? அந்த ஆய்வுத் துறைகளை அவர்கள் பல மில்லியன்கள் செலவு செய்து உருவாக்குகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சமீப காலங்களில் நீங்கள் அறிந்திருக்கக் கூடும். தன்னார்வக் குழுக்கள் மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் போர்ட் பவுண்டேஷன் போன்ற அந்நிய நிறுவனங்கள் மில்லியன்கள் செலவழித்து இந்திய சமூகம் பற்றிய வேர்மட்ட கள ஆய்வகளை செய்வதும் வாய்ப்புள்ள இடங்களில் பல சிறுசிறு அமைப்புகளை கட்டமைப்பதும் புரட்சிகர இயக்கங்கள் பின்னால் இளைஞர்கள செல்வதை தடுப்பதுமான செயல்பாடுகள் நடைபெற்று வருவது பரவலாக அறியப்பட்டதே.
ஆக, ஐரோப்பிய ஆய்வுகள் வழியாகத்தான் இன்றைக்கான அரசியல் சொல்லாடல் களங்கள் உருவாகி இயங்கிக் கொண்டுள்ளன. சங்க காலத்தில் தமிழன் இருந்தானா? அல்லது 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு மனிதன்தான் இருந்தானா? தமிழன் என்கிற அடையாளமும் மனிதன் என்கிற அடையாளமும் முதலாளித்தவத்தின் வளர்ச்சிக்காக உருவமைந்த கருத்தாக்கங்கள். நாம் எவ்வளவுதான் பேசினாலும் தமிழன் என்கிற இனவகைக்குள் தமிழ்தேசிய முதலாளித்தவ நலன் இருப்பதை மறுக்க முடியுமா? இதன் பொருள் அதற்கு முன்பு இருந்தவர்கள் மனிதர்கள் அல்லது தமிழர்கள் அல்ல என்பதல்ல. அந்த உடல்களின் அடையாளம் மனிதன் அல்லது தமிழன் என்கிற அடையாளம் அல்ல என்பதுதான். பண்ணைகளில் நிலங்களில் கட்டுண்டு இருந்த அடிமைகளை விடுவித்தால்தான் சதந்திர கூலித் தொழிலாளிகள் கிடைப்பார்கள். இதைதான் முதலாளித்தவ புரட்சி என்றும் அடிமைகளை விடுதலை செய்த மாபெரும் கலகம் என்றும் அர்ப்பரிக்கப்படுவதின் பின்புலம். எல்லாம் கடவுள் அருள் என்றில்லாமல் மனிதன் பகுத்தறிந்தால்தான் எந்திரங்களில் உழைக்கத் தயங்கமாட்டான். ஆக, முதலாளியம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாட்டை முன்வைத்தது என்றால் தொழில் போட்டிக்கான சுதந்திரம், தொழிலாளிகளை கூலிக்கு அமர்த்தவதற்கான சமத்தவம், சக முதலாளிகளுடன் சகோதரத்தவம் என்றுதான் பொருள். அதனால் ஐரோப்பிய அரசியல் வகையினமா? இந்திய வகையினமா? என்பதல்ல பிரச்சனை. அரசியல் என்ன? என்பதே பிரச்சனை.
//புள்ளியியல் இல்லையேல் வணிகம் என்பதே சாத்தியமற்றது என்கிறது இன்றைய கார்ப்பரேட் உலகம்! வணிக புள்ளியியல் எந்த வகை அரசியல்?//
தொழில் மற்றும் வணிகசார் நிர்வாகங்களில் சொல்லப்படும் ஒரு கதையை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ஒரு செருப்பு தயாரிக்கும் நிறுவனம் தனது இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை ஒரு தீவிற்கு அனுப்பி அங்கு செருப்பு விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய சொன்னதாம். அந்த தீவில் யாருமே செருப்பே அணிவதில்லை. முதல் பிரதிநிதி கூறினானாம் அந்த தீவில் யாருமே செருப்பு அணிவதில்லை என்பதால் அங்கு விற்பனை செய்வது சாத்தியமில்லை என்று. இரண்டாவது பிரதிநிதி கூறினானாம் நமது விற்பனைக்கு அருமையான ஒரு இடம் அது. அங்கு யாருமே செருப்பு அணிவதில்லை அதனால் முதலில் நாம் விற்பனை துவங்குவதற்கு முன்பாக... செருப்பின் பயன்பாட்டை விளக்கி அதை அணிவதற்கான ஒரு பண்பாட்டு கட்டமைப்பை உருவாக்கி விட்டால் பிறகு நமது செருப்புகள் மாபெரும் விற்பனை புள்ளிகளை எட்டும் என்றானாம். இக்கதை ஐரோப்பாவின் ஆய்வு ஏன் என்பதை நமக்கு விளக்கும்.
உலக அழகியாக இந்தியப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் மிஸ்.. போட்டிகள் கிராம அளவில் நடந்ததும் அதன்பின் ஒப்பனை (மேக்கப்) அழகு சாதனப் பொருள்கள் விற்பனை அதிகரித்ததையும் அந்த வகைப் போட்டிகளுக்கு இத்தகைய நிறுவனங்கள் உதவிகள் செய்வதையும் இதனுடன் இணைத்துப் பாருங்கள். அப்புறம் புள்ளிவிபரம் என்பதில் மேற்சொன்ன கதை இரண்டு வேறபட்ட கண்ணோட்டங்களை விளக்கும். இப்படி வணிக புள்ளிவிபரங்கள் என்பது மேலோட்டமாக எண்கள்தான் ஆனால், அதனுள் ஒரு பண்பாட்டு அரசியல் கட்டமைப்பு உள்ளது. வணிகப் புள்ளி விபரங்கள் பற்றிய ஆய்வு என்பது தனியானது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சி நிகழ்வதற்கான சாத்தயங்களைப்பற்றி அனுமானிக்கம் நிகழ்தகவுக் கொட்பாடு (probability theory) என்பது அந்த நிகழ்ச்சி நிகழ்வதற்கான சாத்தயங்களை நிகழ்விற்கு முன்பே சொல்வதின் வழியாக நிகழ்வை வகைப்படுத்தி ஒரு புரிதல் எல்லைக்குள் சுருக்குகிறது அல்லது அந்நிகழ்வின் இயல்பை பாதிக்கிறது என்பதை மட்டும் இங்கு சொல்லிக் கொள்கிறேன். மற்றொன்று இதனுடன் தொடர்புடைய ஒன்று.. பெப்சி அல்லது கோக் நிறுவனத்தினரிடம் எதிர்காலத்தில் உங்களது போட்டியாளர் யார்? என்று கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் “தண்ணீர்“ என்பதுதான். இதன்பொருள். எதிர்காலத்தில் குடிநீர் என்பதே பெப்சியும் கோக்கும்தான். இப்படி போட்டியானை கபளிகரம் செய்வதற்க்குத்தான் இந்த புள்ளிவிபரங்கள் பயன்படுகின்றன. உலகை குடிநீரற்ற உலகாகவும், குடிநீர் என்றால் அவர்களிடம்தான் பெறவேண்டும் என்பதை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கும் அபாயத்தை நாம் தினசரி அனுபவங்களில் பார்க்கிறோம். இந்தவகை கட்டமைப்புகளுக்கு வணிகப் புள்ளியல்கள்தான் துணை போகின்றன என்பது கண்கூடு.
//அப்புறம் இந்த மனித உடல்களை எண்ணுதல் பணியை இந்தியாவில் என்னுடைய அறிவுக்கு எட்டியவரை உள்ளாட்சி மன்றங்கள் பிறப்பு, இறப்பு அடிப்படையிலும்..., குடிமை வழங்கல் பிரிவு குடும்ப அட்டை வழியாகவும், இந்திய புள்ளியியல் துறை மக்கள் தொகை கணக்கெடுப்பு வழியாகவும், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் வழியாகவும், இந்திய குடிமை மற்றும் இமிக்ரேசன் துறை கடவுச்சீட்டு வழியாகவும்... எண்ணிக்கிட்டேயிருக்காங்க... ஆனா யாருக்கிட்டேயாவது முழுமையான தரவுகள் இருக்கா என்று யாருக்கும் தெரியாது!//
இப்படி பகுதி பகுதியாக எண்ணிளால் எப்படி முழுமையான தரவுகள் இருக்கும்? :)
இங்கு ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். இந்தியாவில் இடஒதுக்கீடு பிரச்சனை வரம்போது எல்லாம் உச்ச நீதிமன்றம் எழுப்பும் ஒரு கேள்வி “உங்களிடம் முழுமையான சாதிவாரிப் பட்டியல் உள்ளதா? எதை அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு தருவது? ” என்பதுதான். 1936-ல் பிரித்தானிய அரசு எடுத்தது அதன்பின் 2001-ல் எடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பிற்குப் பிறகு சாதிவாரி புள்ளி விபரங்கள் எடுக்கப்படவில்லை. இதற்கான முயற்சியை ஏன் எந்த அரசும் எடுக்கவில்லை? இங்கு அரசாங்கத்தில் ஒரு திருமாவளவனோ அல்லது கே.ஆர். நாரயணணோ தலைமையாக வரலாம். ஆணால் உயர்சாதி கருத்தியலால் கட்டப்பட்டுள்ள அரசை என்ன செய்வது? எனது கட்டுரை சாதியம் என்கிற கருத்தாக்கம் எப்படி எண்ணுதல் வழியாக அமைப்பாக பிரித்தானிய அரசால் மாற்றப்பட்டது என்பதும் இதற்குள் இனவாத தன்மை ஏற்கனவே நிலவிய பார்ப்பன வர்ணத் தன்மையுடன் இணைந்ததையும்தான் பேசுபொருளாக கொள்கிறது.
மற்றபடி.. தாவுதீர (நன்றி லக்கிலுக்) அரைடவுசர்களை கிழிப்பதோ அல்லது அவர்களுக்கு நீள்கால்சராய் தைப்பதோ எனது பணி அல்ல. :) :) :)
நீண்ட உரையாடலுக்கு நன்றி.
அன்புடன்
ஜமாலன். (05-06-2008)
பச்சைமரத்தில் பதியும் பதிவர்கள்
Posted புதன், ஏப்ரல் 02, 2008 in பதிவர் வட்டம், பொதுவானவை, விவாதம் by ஜமாலன்நண்பர் நாகார்ஜினன் தனது இரண்டுமாத கால பதிவு அனுபவங்கள் குறித்து இரண்டு பதிவுகளில் பேசியுள்ளார். அதில் பதிவில் நடந்தவரும் பிரபு ராஜதுறை மற்றும் வெங்கட் ஆகியவர்களின் பின்னொட்டப்பெட்டிக் குறித்த விவாதம் ஒன்றை சுட்டிக்காட்டி தானும் பின்னொட்ட பெட்டியை திறப்பதாக சொல்லியுள்ளார். அந்த விவாதத்தில் வெங்கட்டிற்கு இடப்போன பின்னொட்டம் வளர்ந்து பதிவாகிறது இங்கு.
இது ஒரு பயனுள்ள விவாதம். மீண்டும் மீண்டும் பேசப்படும் பதிலவுலகமா? பத்திரிக்கை உலகமா? என்கிற விவாதமாக இருப்பதால் இது குறித்து வெங்கட் கட்டுரையை முன்வைத்து வெட்டியும் ஒட்டியம் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்
1. வெங்கட்டின் பின்னோட்டத்தில் பத்ரி மற்றும் சிரில் அலக்ஸ் கூறுவதுபோல மின்னஞ்சல் மற்றும் பின்னோட்ட பெட்டியில் பெரிய வேறுபாடுகள் இல்லை. என்ன மின்னஞ்சலில் கொஞ்சம் வேலை அதிகம், பலரும் பின்னோட்டம் இடமாட்டார்கள். போகிற போக்கில் எதையாவது போடமுடியாது என்பதைத்தவிர இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. உண்மையில் உரையாட விரும்புபவர்கள் மின் அஞ்சல் செய்வதன் மூலம் காத்திரமான உரையாடலை துவக்கலாம். “பெருசு“ என்று நீங்கள் கூறுபவர்கள் மின் அஞ்சலை திறந்துதான் வைத்துள்ளனர்.
2. செத்த மரத்திற்கும், தினமும் தண்ணீர் ஊற்றும் உயிர்ப்புள்ள மரத்திற்கும் வித்தியாசங்கள் நிறைய, என்றாலும், பத்தி எழுத்தைப் பொறுத்தவரை வெங்கட் சில நியாயமான வாதங்களை வைத்துள்ளார். அதே நேரம் இலக்கிய வகைப்பட்ட எழுத்தையும் இதழியல் வகைப்பட்ட எழுத்தையும் பிரித்து பார்ப்பது அவசியம். அவற்றில் உயர்வு தாழ்வு பார்க்கமுடியாது. எழுத்து என்பதற்கு மதிப்பீடுகள் வாசக தளத்திலும் எழுதப்படும் தளத்திலும் உண்டு. அம்மதிப்பீடுகளி்ல் உயர்வு தாழ்வு கற்பிப்பவை அரசியல் சார்ந்தது. ஞாநியின் எழுத்தும் ஜெயமோகன் எழுத்தும் ஒன்றல்ல. ஒவ்வொன்றும் அதனளவில் சரியானதே. அதற்கான அரசியல் குணாம்சங்களைக் கொண்டவை. அவர்கள் எழுதுவது சிறந்தது என்றோ பதிவுகளில் எழுதுவதோ தவறு என்றோ பார்க்க முடியாது.
3. பதிவுகள் வெறும் பத்தி எழுத்தை மட்டும் கொண்டதாக அதாவது தகவல் அடிப்படையிலானவையாக மட்டும் இல்லை. பத்தி எழுத்து என்பது தகவல் அடிப்படைகளில் அல்லது நிகழ்வுகள் அடிப்படையில் பேசப்படுவது. அதில் கோட்பாட்டு தத்துவங்கள் அதிகம் பேசப்படுவதில்லை. அனால் அதை தாண்டிய எழுத்து என்பதாக நாம் அறியும் “செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்” எழுத்துக்களில் அரசியல், தத்துவம், ஆன்மீகம் இலக்கியம் என பலவகை எழுத்துக்கள் அவற்றின் கோட்பாட்டு தர்க்க அடிப்படையில் உள்ளன. அவை இதழியல் சாராதவை அல்லது இலக்கியம் சார்ந்தவை. சாரு, ஜெயமோகன், எஸ்ரா மற்றும் நாகார்ஜினன் போன்ற எழுத்தாளார்கள் செத்த மரங்களில் செதுக்கிக் கொண்டிருப்பவர்கள் அல்ல. அவர்களது எழுத்தும் பத்தி எழுத்தும் ஒன்றல்ல. அவற்றில் இலக்கியம் அரசியல் ஆன்மீகம் எனப் பலவற்றைப்பற்றிய உரையாடல்கள், குறிப்புகள் உள்ளன. அவற்றிற்கு பெருக்கச் (generative) செயல்பாடு உள்ளது. அதனால் அவற்றை பத்தி எழுத்துக்களின் மட்டத்தில் மட்டுமே நிறுத்திப் பார்க்க முடியாது. இதன் பொருள் பத்தி எழுத்து தரம் குறைந்தவை என்பதல்ல அதன் நோக்கம் வாசகத் தளம் வேறு. பத்தி எழுத்துக்கள் உடனடித் தன்மை வாய்ந்தவை. அவற்றின் ஆய்வுத்தன்மையும் குறைவு. அனால் நம்பகத் தன்மை அதிகம். கூடுதலாக அவை புனைவு அல்ல, உண்மையாகவோ அதற்க்கு நெருக்கமானதாகவோ நம்பப்படும் இதழியல்வகை எழுத்துக்கள்.
4. பிரபு ராஜதுறை முன்வைக்கும் ஆங்கில வார்த்தைகளை கூடுமானவரை தவிர்ப்பது என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. பதிவுகள் அந்தவகையில் தமிழிற்கு பெரும் பங்காற்றியுள்ளதை யாரும் மறுத்தவிடமுடியாது. பதிவுகளை குறைத்து மதிப்பிடமுடியாது என்பதுடன் வெங்கட்டின் வாதமே பத்திரிக்கை எழுத்தை ஒரு உயர்ந்த மதிப்பிட்டில் வைத்துதான் எழுதப்பட்டுள்ளது. அல்லது பதிவுலக எழுத்தை உரைப்பதற்கான உரைகல்லாக அந்த எழுத்துக்களில்தான் போய் அளவிட்டுப் பார்க்ககப்படுகிறது. அவரது பதிவின் முன் அனுமானமே அந்த அடிப்படையில்தான் எழுதப்பட்டுள்ளது.
5. ஆக, எப்படி வெங்கட் முன்வைக்கும் பின்னோட்ட பெட்டி என்பது நமது உரிமையோ அதேபோல் மின்னஞ்சலை மட்டும் முன்வைப்பது அவர்களது உரிமை. அதை நாம் கீழிறக்கம் செய்து பார்க்க முடியாது. அவர்களை “பழமையில் ஊறிப்போன படைப்பாளிகளாலும், விமர்சகர்களாலும்“ என்று எழுதுவதன் மூலம் நாம் அடைய விரும்பம் அடையாளம் பதிவுலகம் நவீன சிந்தனையின் பிரதிநிதி என்பதா? இணையத்தில் படித்துவிட்டு ஒரே வாரத்தில் அவர்கள் எழுதினால்.. அடுத்த நிமிடமே நாம் பதிவில் எழுதுகிறோம். இரண்டிலுமே எழுதுபவரின் புரிதல்தான் பிரச்சனையே ஒழிய எப்படி என்பதில் இல்லை. ஒரு வசதி பதிவில் எழுதினால் தட்டிக் கேட்கலாம் உடனடியாக. தற்சமயம் பத்திரிக்கையில் எழுதினாலும் பதிவில் தட்டிக் கேட்கலாம் என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளது என்பதால் இதில் பின்னோட்டம் என்பது ஒரு பிரச்சனையே இல்லை. சமீபத்தில் ஜெயமோகனை பதிவுகளும் பத்திரிக்கைகளும் ஒன்று சோ்ந்து காய்ச்சி எடுத்தது நினைவிருக்கலாம்.
6. சான்றாக, ஜெயமோகன் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். அதில் பத்திரிக்கை என்ன செய்தது? பதிவுலகம் என்ன செய்தது? என்பதை பார்த்தால் இப்பேச்சுக்களின் வழியாக கட்டப்படும் விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். ஒரு எழுத்தாளனின் 'தான்' குறித்த அரசியல் கோட்பாடுகளிலிருந்து, ஊடகங்களின் எல்லைகள் அவை கட்டமைக்கும் கருத்துக்களம், கருத்து சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் வரை இதற்குள் வெவ்வேறு வடிவங்களில் பேசப்பட்டன. பகடி, அங்கதம், நையாண்டி, நகைச்சுவை அவற்றின் கோட்பாடுகள் உளவியல் அரசியல் ஆழ்மன தணிக்கை என இன்னும் ஆழமாக உள்ளே செல்ல வேண்டிய பல தளங்கள் இவற்றில் மிச்சமிருந்தாலும் இதனை மேலோட்டமாக ஒட்டியும் வெட்டியும் சென்றுள்ளன இந்த பதிவுலக உரையாடல்கள். இனி தமிழ் எழுத்தாளன் புதிதாக உருவாகி வந்துள்ள வித்தியாசமான இந்த பதிவுலக வாசக வட்டத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய நிலை உருவாகி உள்ளது. இனி எழுத்தாள ஆழ்மனம் பதிவுலக வாசகனையும் தனது உரையாடலுக்குள் உள்ளடக்கி அவனது கண்காணிப்பு தணிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு எழுத்துச் சூழலை இந்த உரையாடல் திறந்து விட்டுள்ளது. இதோடு ஜெயமோகன் குறிப்பிடுவதைப்போல ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் கையாளும் வெகுசன அரசியல்தளம் பற்றிய கவனமும் இந்த எழுத்தாளனை கட்டமைக்கும் கூறாக மாறியுள்ளது. நுட்பமாக பார்த்தால் இந்த உரையாடல் பெரும்பத்திரிக்கை/சிறு பத்திரிக்கை வெகுசன எழுத்து/இலக்கிய எழுத்து அல்லது கனமான எழுத்து போன்ற வகைத்திணைகளின் முரண்களின் அடிப்படையில் கட்டப்பட்டிருப்பதை காணலாம். ஜெயமோகனின் இப்பிரச்சனைக் குறித்த பதிவுகள் அனைத்திலும் இரண்டு முக்கிய அரசியல் கருத்தாக்கங்கள் நுண்ணளவில் விழிப்புற்று போராடின. அது ஒரு 'பண்பாட்டு போராக'வே நிகழ்ந்தது. அதில் ஜெயமோகனை ஆதரிப்பவர்கள் யார் என்பதும் அவரை எதிர்க்க வேண்டிய தேவை என்ன என்பதையும்கூட இவை சொல்லிக் காட்டியுள்ளன. பரந்துபட்ட மக்களுக்கு புரியாததை எழுதுவதாக வைக்கப்படும் வாதத்தையும் அதில் கண்டோம். உண்மையில், எழுத்தின் அல்லது இத்தகைய கனமான இலக்கியத்தின் பணி ரசிகர்களை உருவாக்குவதல்ல வாசகனை உருவாக்குவதுதான். மக்கள் எல்லோரையும் கடைத்தேற்றுவதல்ல மாறாக மக்களை மேம்படுத்தும் முன்னணிகளை உருவாக்குவதுதான். பதிவுகள் பத்திரிக்கைகளைவிட குறைவான வாசகப் பரப்பையே கொண்டுள்ளன. அதேசமயம் பொது வாசகத் தளத்தைவிட சற்றே வலிமையானதாக உள்ளது. அறிவின் அதிகாரத்தைக் கொண்டதாக உள்ளது. ஆனந்த விகடனைவிட அதிக துயரத்தை ஜெயமோகனுக்கு பதிவுலகம் தந்துள்ளது. அதிகமான அதிகாரத்தை இந்த பதிவெழுத்துக்கள் செலுத்தியுள்ளன. அதிக உரிமையையும் எடுத்துக் கொண்டுள்ளன. இவை தனிமனித தாக்குதலையோ அல்லது குழு நலன்களையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அதேசமயம் தன்னை வெளிப்படுத்தி தனக்கான ஒரு அடையாளத்தை கட்டமைத்துக் கொள்வதாகவும் பதிவுலகம் இப்பிரச்சனையை அனுகியுள்ளது. ஆக, ஜெயமோகன் பின்னோட்ட பெட்டியை இணைக்கவில்லை என்பதற்காக அவரது எழுத்துக்கள் பதிவுலக விமர்சனத்திலிருந்து தப்பிவிட்டதா?
7. பின்னோட்டப்பெட்டி இல்லாவிட்டாலும் நம்மைப்போல தனிப்பதிவாக பொட்டு அதனை கண்டிக்கும் வசதி உள்ளது. பிறகு எதற்காக அவர்களை “செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்“ என்று அழைக்க வேண்டும். செத்த மரத்தில்தான் சிற்பம் செதுக்க முடியும். உயிருள்ள மரத்தில் (சுயபுலம்பல்களைக் கொண்ட பதிவுகளைப்போல) முதிராத காதலர்கள் பெயர்தான் செதுக்கமுடியும் என்பதாக இந்த தலைப்பை விமர்சிக்க முடியும். பிரச்சனை சில முன்முடிவுகளுடன் எழுதப்படுவதின் விளைவே இது என்பதைச் சொல்லத்தான்.
8. பதிவுகளை உயர்த்துவதன் மூலம் பத்திரிக்கைகளை குறைவாக மதிப்பிட முடியுமா? பதிவர்களை ஜனநாயகவாதிகளாக சித்தரிக்கும் இந்தபோக்கு சரியா? உண்மையில் பதிவுகளின் மதிப்பீடுகள் அப்படித்தான் வெளிப்படுகிறதா? பதிவுலக சண்டைகள் பத்திரிக்கை சண்டைகளைவிட பிரபலம். அப்புறம் போலிப்பிரச்சனைகள். ஆக, நிறைகுறை இரண்டிலும் உள்ளது. சாதகமானதை நமக்கு சாத்தியமானதாக எடுத்தக்கொள்வதே சரியானது. தவிரவும் அவர்கள் பின்னோட்ட பெட்டியை போடாததால் விமர்சனத்தை சந்திக்கும் திராணியற்றவர்கள் என்பது பல ஆயிரம் ஆண்டுகால எழுத்து சரித்திரத்தையே மறந்துபோனதாகிவிடும். பதிவுகளுக்கு முன்பே எழுத்தும் பத்திரிக்கையும் உண்டு. அதில் இந்த எழுத்தாளர்களும் எழுதிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். உண்மையில் பதிவுலகம் என்பதும் தற்காதலின் மற்றொரு அதீத வடிவமே. அதற்கு இந்த எழுத்தாளர்கள் தங்கள் வாசகப்பரப்பை விரிப்பதுடன் அவனுடன் ஒரு உயிரோட்டமுள்ள தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளவே பதிவுகளில் எழுதுகிறார்கள். அதைவிட்டு இங்கும் அவர்கள் திரண்டு வந்து விட்டதாக எண்ணிக் கொள்வது “ஆலையில்லாத ஊரில் இழுப்பைப் பூ சக்கரை“ என்கிற மணோபாவத்தை வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கும்.
வால்பகுதியாக (டைல்பீஸ் என்பதை இப்படிச் சொல்லலாமா?) ஒரு சின்ன கலந்துரையாடல்.
(வெங்கட்- வாதம் இந்த வண்ணத்தில் உள்ளது.)
"இன்று அச்சு ஊடகங்களில் எழுதுபவர்கள் பலரும் விஷயதானத்திற்கு இணையத்தையே முற்றாக நம்பியிருக்கிறார்கள். வலைக்குறிப்புகளும் இணைய சஞ்சிகைகளும் இவர்கள் எழுதுபனவற்றுக்கு அடிப்படையாக இருப்பதை அடையாளம் காணமுடிகிறது.”
- இணையம் என்பது பொதுவானது. அதன் பிரதிநிதியாக நாம் நம்மை கருதிக்கொள்ள முடியாது. இணையம் பரவலானது என்பதுடன் அனுக எளிமையானது என்பதாலும்தான்.
”ஆனால் அச்சிலேறுபவை எல்லாம் இணைய உலகில் வ(வா)சிக்கும் பலரையும் சென்றடைவதை இவர்கள் அறிவதில்லை.”
- அச்சில் ஏறுபவை எல்லாம் இணையத்திற்கும் பதிவிற்கும் எதிரானவை அல்ல. அவர்களும் பதிவுகளை எல்லாம் வாசிக்கிறார்கள். அப்படி வாசிக்க வேண்டும் என்பதும் அவர்களது அங்கீகாரம் தேடுவதும் பதிவர்களிடம் உள்ள ஒரு ஆசைதானே.
”இந்த வாசகர்களின் உலகம் வேறு, இங்கே பிம்பங்கள் தொழப்படுவதில்லை. அது எழுத்தாளர்-வாசகர் என்ற இடைக்கோடு அழிந்துபோன வேற்று உலகம் என்பதைப் பழமையில் ஊறிய படைப்பாளிகள் அறிவதில்லை.”
- பதிவுலகம் மற்றொரு பிம்ப உற்பத்தித் தொழிற்கூடம்தானே ஒழிய இங்கு எந்த பிம்பமும் அழிக்கப்படுவதில்லை. பிம்பப் பால்வினை நோய் பீதிக்கப்படாமல் சீரோ-டிகிரியில் எழுத்து சாத்தியமா?
”மேல் நின்று உபதேசிப்பது இங்கே எடுபடாது; எதுவுமே சக-விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையல்ல. கறாரான விமர்சனங்கள் முன்வரும்பொழுது அவர்களால் அந்த வீச்சை எதிர்கொள்ள முடிவதில்லை.”
- மேல்நின்று உபதேசிப்பதாக ஒரு எழுத்தாளனை அனுகுவதால்தான் பிரச்சனை. கறாரான விமர்சனம் என்பதே தவறான ஒரு அனுகுமுறை. எழுத்துக்களுடன் உரையாடலாம், மறுக்கலாம், அழிக்கலாம். விமர்சனம் என்ற பெயரில் நடைபெறும் தனிமனித தாக்குதல்தான் பிரச்சனை. அந்த சந்தர்ப்பத்தில் ஒரு எழுத்தாளர் அல்லது பதிவர் என்ன சொல்வார். Artaud கூறியதுதான் “are you critic? suck my cock". எழுதுபவர் தனது உலகம் சிறியது என்பதை உணர்ந்தால் போதும். அதேபோல் விமர்சிப்பவரும்.
”மறுபுறத்தில் இவ்வூடகத்தில் கிடைக்கும் பல வசதிகள் அவர்களைத் தொடந்து கவர்ந்திழுத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் இவர்களில் பலரும் மறுபிறவி எடுத்து வலைப்பதிய வருகிறார்கள். இந்த முறை அதீத கவனத்துடன் மறுவினைக்கான வாசலை மூடிவிட்டுத்தான் தங்கள் கடையை விரிக்கிறார்கள்..."”
இதற்கு பதில் நாகார்ஜினன் கூறியுள்ளார்.
ஒரு விஷயம் - என் எழுத்துக்கு இணையத்தை மாத்திரம் நான் நம்புவதில்லை. புத்தகங்கள் எப்போதும் உண்டு. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நான் முக்கியமாகக் கருதும் அறிவியல்-இலக்கிய-தத்துவ-வரலாற்றுப் பிரச்னைப்பாடுகள் என் சிந்தனையில் எப்போதும் இடம்பெறும்.
இருந்தாலும் இணையம் என்பது வேறுவகை வடிவம் என்பதால் வெங்கட் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. “பெரிய எழுத்தாளர்களுக்கு” வெங்கட் விட்டிருப்பது நிச்சயம் ஒரு சவால்தான். ஒரு பரிசோதனையாக அதை ஏற்கிறேன்!
என் தளத்தில் பின்னூட்டங்களை இன்றிலிருந்து அனுமதிக்கிறேன் - விரைவில் அதற்கான மாற்றங்கள் செய்யப்படும். அடுத்த ஒரு மாதம்வரை என் இணைய தளத்தின் பின்னூட்டப்பெட்டி திறந்திருக்கும். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.
அதேவேளை நேற்றுக் கூறியது போல “சூப்பர்!”, “பிச்சிட்டீங்க…”, “பயனுள்ள பதிவு”, “புரியலே”, “post-modernism ஒழிக” போன்ற வகை எழுத்துக்களை வரவழைத்து, போட்டு, நன்றிதெரிவிக்க விருப்பமில்லை; போடவில்லை என்றால் “கருத்து-சுதந்திரத்தை மறுக்கிறீர்களா?” என்ற வம்பை வாங்க வேண்டாமே என்பதால்தான் பின்னூட்டங்கள் இதுவரை இடம்பெறவில்லை. தவிர வேறு காரணங்கள் இல்லை!
-ஜமாலன் - 02-04-2008



