ரோஹித் தற்கொலையும் இடதுவாத நர்சரிகளும்
Posted வெள்ளி, ஜனவரி 22, 2016 in இந்துத்துவா, உடலரசியல், பாசிசம். பொலிட்டிக்கல், ரோஹித் வெமூலா by ஜமாலன்சாதிய அடையாளங்களைத் தாண்டிய தமிழ் அடையாளம் ஒன்றை நாம் ஏற்பதற்கான பொதுப் பண்பாட்டுவெளி ஏதும் இருப்பதாக கருதுகிறீர்களா?
Posted புதன், டிசம்பர் 14, 2011 in அடையாள அரசியல், உடலரசியல், கோட்பாடுகள், செம்மொழி, திராவிடம், தேசியம் by ஜமாலன்இக்கேள்வியின் அரசியல், தமிழ் அடையாளம் சாதிய அடையாளத்தை தாண்டியதல்ல அல்லது தமிழ் அடையாளமே சாதிய அடையாளம்தான் என்பது. தமிழ் என்ற இனம்சார் அடையாளத்தை சாதியம் என்ற குழுசார் அடையாளமாக மாற்றமுனையும் அரசியல் குறுக்கநிலை அல்லது அத்தகைய வேலைத்திட்டத்தின் பகுதியாக எழுந்துள்ள சிந்தனை. சாதியம் என்ற இனக்குழுசார் அடையாளத்தை, தமிழ் என்ற இனம்சார் அடையாளத்துடன் இணைத்து பார்ப்பது. சாதியம் இனக்குழுச் சமூகத்தின் குழுஅமைப்புகளை குறிக்க பிறந்த சொல்லாடல். தமிழ் “இனம்“ என்பதை குறிக்கும் நவீன முதலாளித்துவ வளர்ச்சியுடன் உருவான சொல்லாடல். சாதிய அடையாளம் இனக்குழு வரலாற்றின் உடலரசியல்நிலை, தமிழ் அடையாளம் முதலாளித்துவ சமூகத்தின் கற்பிதக் கருத்தாக்கமான இனவரலாற்றின் உணர்வரசியல்நிலை. இனஅடையாளம் என்பது அதிகாரப்போட்டியில், ஆதிக்க சக்தி தனக்கு பின்னால் மக்களை திரட்டமுனையும் கற்பிதக் கருத்தாக்கமே. முழுமையாக இனமாக வளர, வாழ, வழியற்ற சமூகஅமைப்பில் ஏற்கனவே இயங்கிவரும் சாதிய குழு அடையாளத்தில் உயர்சாதி தன்னை தமிழாக அடையாளப்படுத்திக் கொள்வது வரலாற்றின் ஒரு தவிர்க்கவியலா தீங்காக அமைந்துவிட்டது. தமிழ் என்பதில் தனிமனிதனை திரட்டமுடியாத ஆதிக்க சக்தி, சாதிய குழுக்களை தமிழ் என்பதற்குள் ஒழுங்கமைக்கிறது. தமிழ் அதனுடன் சேர்ந்த சைவ அடையாளமாக மாறிவிடுகிறது. அல்லது தமிழை உயர்சாதி சைவஅடையாளமாக வரலாற்றில் கதையாடச் செய்வதன்மூலம், சாதியமுறையை காத்துவரும் பார்ப்பனியம், தமிழ் என்பதை இந்துத்துவ மதவாதத்திற்குள் இருத்துவதற்கும், தமிழ் என்கிற கருத்துருவத்தை சாதிய அடையாளமாக குறுக்கிவைத்து செய்யும் அரசியலாகவும் உள்ளது. இந்துமதம் வரலாற்றில் தமிழ்மதமாக இல்லை என்பதால், சைவத்தின் வழியாக தமிழ் என்கிற கருத்துருவம் இந்துமதமாக மாற்றி வைக்கப்பட்டு உள்ளது. தமிழ் இந்துவாக, இந்துமதமாக, இந்து உணர்வாக புரிந்துகொள்ளும்படி செய்யப்படுகிறது. சமீபத்தில் தமிழ்தேசியம் பேசமுனையும் தலைவர்கள் பார்பனியர்களுடன் கைகோர்ப்பதும், மறத்தமிழனாக தன்னை அடையாளப்படுத்தும் சாதிகள், பார்ப்பனியர்களை அழைத்து ஜெயந்தி கொண்டாடுவதும் நடைபெறுகிறது. திராவிடம் என்பது தமிழ் என்பதற்கான மாற்றாக இருந்ததை அரசியல் நீக்கம் செய்து, தமிழை சாதியமாக மாற்றமுனையும் போக்கும் உருவாகி வருகிறது. தமிழ் என்பதற்குள் பார்ப்பனியர்களை அடக்க முடியும், திராவிடத்தில் முடியாது என்பதும் இந்த அடையாள அரசியல் விளையாட்டின் ஒரு விளைவு. ஆக, இக்கேள்வி மதவாத-சாதிய மனநிலையின் வெளிப்பாடாகவே வந்துள்ளது.
இக்கேள்வியில் சிக்கலான இரண்டு கருத்தாக்கங்கள் உள்ளன. ஒன்று அடையாளம் மற்றது பொதுப்பண்பாட்டுவெளி. அடையாளம் நவீனத்துவத்தின் கண்டுபிடிப்பு. சமூகத்தன்னிலைகளை வடிவமைப்பதற்கான அரசியல் சொல்லாடல். சாராம்சமானது, பிறப்படிப்படையிலானது, வம்சாவழியானது போன்ற மரச்சிந்தனை வரலாற்றின் அடிப்படையில் நிலையான தன்மை கொண்டதைப்போல காட்டப்பட்டாலும், அடையாளம் என்பது ஒரு மிதக்கும் குறிப்பான் எனலாம். அது எந்த சூழலில் எங்கு நிலைபெறும் என்பதை அதன் எதிர்மையே தீர்மானிக்கும். அவ்வகையில் மற்றமையின் எதிர்கொள்ளலில்தான் சாதியம், இனம், பால் போன்ற குறிப்பீட்டு அடையாளம் உருவாகுகிறது. ஆணற்ற இடத்தில் பெண் அடையாளம் செயல்பாடற்றது, தேவையுமற்றது. எனவே, அடையாளம் மற்றதை விலக்கி தன்னை கட்டுவதால் உருவாகுகிறது. இது எப்போதும் எதிர்மையை அழிப்பது அல்லது அடக்குவது என்கிற வன்முறை சார்ந்த ஒன்று. போர் எந்திரத்தின் கட்டமைப்பான இருமை எதிர்வில் உருவானது. அதனால் சாதிய மற்றும் தமிழ் அடையாளம் என்பது, வரலாற்றின் தேவைக்கு ஏற்ப செயல்படக்கூடிய அரசியல் சார்ந்தவை என்பதால் அதை தாண்டிய ஒரு பொதுபண்பாட்டுவெளி சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. அடையாள அரசியலின் எதிர்விளைவே பொதுப்பண்பாட்டுவெளி பற்றிய ஏக்கமாக உள்ளது. இதில் எது பொதுவானது? யாருக்கு பொதுவானது? பொது என்பதை தீர்மானிப்பது எது? என்கிற கேள்விகள் உள்ளன. அடையாளம் என்பது மற்றமைக்கு எதிராக நங்கூரமிடப்பட்ட மனித தன்னிலை என்பதால், அது தனி பொது என்கிற வெளியின் அவசியத்தை கோருவதன் வழியாக தொடர்ந்து அரசியல் விளையாட்டை நிகழ்த்துவதாக உள்ளது. தமிழ் அடையாளம் உயர்சாதிய ஆதிக்க சக்திகளால் அதன் அறிவு உற்பத்திக்கருவிகளால், சாதிய அடையாளத்தை தாண்டிய பொதுப்பண்பாட்டுவெளியாக கண்டுபிடித்து கட்டமைக்கப்பட்டதுதான். எனவே, பொதுஅடையாளம் சாத்தியமற்றது என்றால், பொதுப்பண்பாட்டுவெளியும் சாத்தியமற்றதே.
- ஜமாலன் (20-11-2011) jamalan.tamil@gmail.com
- உயிர்மை 100வது சிறப்பிதழ் டிச. 02 2011
ராமர் எனும் நவீன தொன்மம்.
Posted சனி, அக்டோபர் 02, 2010 in அயோத்தி, உடலரசியல், வரலாறு by ஜமாலன்1 முட்டாள் தினமும் 361 அறிவாளிகள் தினமும்.
Posted வியாழன், ஏப்ரல் 01, 2010 in அறிமுகம், அறிவிப்பு, இஸ்லாமிய அடிப்படைவாதம், உடலரசியல், காந்தி, குடிக்கலாச்சாரம், தமிழ் ஈழம், திறனாய்வு, நவீன தொன்மங்கள், Islamic Feminsm by ஜமாலன்ஏப்ரல்-1. பெரும்பாலான நாடுகளில் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் போல, அன்னையர்தினம் போல.. இது முட்டாள்களுக்கான தினமல்ல, நம்மை நாமே முட்டாளாக்கக்கூடிய பல அனுபவங்களை உருவாக்கி, சக மனிதர்களுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதற்கான தினம் என்று கூறலாம். அல்லது 361 நாட்கள் அறிவாளிகளாக கழித்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் நமது முட்டாள்தனத்தை, எண்ணிப்பார்த்து மனமுவந்த ஒரு நாளையாவது முட்டாளாக கழிப்பதற்கான நாள் எனலாம்.
முட்டாள்கள் என்று யாரும் இல்லை, ஆனால் முட்டாள்தனங்கள் உண்டு. அது எல்லோருக்குமான ஒரு அனுபவம் அல்லது ஒரு நிகழ்வு. பள்ளிகளில் படிக்கும் காலங்களில் “ஏப்ரல் பூலா“-க ஒருவரை ஆக்க பல திட்டங்கள் போடுவோம். முடியாதபட்சத்தில், ஒருவர் சட்டையில் ஒருவர் இங்க் அடித்துக் கொள்வோம். அறிவு தோற்கும் இடங்களை ஆயதம்தானே கைப்பற்றும். இது வரலாறு. மாற்றமுடியுமா? ஏப்ரல்-1ற்கு என்றே பிரத்யேகமான ஒரு பழைய் கந்தல் சட்டையை பாதுகாத்து வைத்து போட்டுச் செல்வோம். அன்றுதான் ஒரு வகுப்பில், ஒரு பள்ளியில், ஒரு வீட்டில், ஒருவனுக்குள்ளேயே எத்தனை குழுக்கள் உள்ளன என்று அறிந்து கொள்ள முடியும். அது ஒரு போர்தான். அதற்காக 3 நாட்களுக்கு முன்பே காட்டாமணக்கு பால் எடுத்து பாட்டிலில் சேகரித்து, அதனை இங்கில் கலந்து அடிப்போம். அப்பொழுதுதான் கறை போகாது என்று. எங்கள் ஊரில் இன்று காட்டாமணக்கே அழிந்துவிட்டது. பல இளம் தாவரவியல் விஞ்ஞானிகள அத அன்று உருவாக்கிக் கொண்டிருந்தது. மருத்துவக் குணம் கொண்ட அந்த செடிக்கு பதிலாக, நெய்வேலி காட்டாமணி எனப்படும் பார்த்தீனியம் என்கிற ஒருவகை விஷச்செடி பரவிவி்ட்டது. அரசு மானியமாக தந்த உரங்கள் மற்றும், விதைநெல்களுடன் கலந்து அந்நிய நாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்பட்டது அச்செடி. பசுமைபுரட்சி என்றால் விவசாயிகளை அழிப்பது, வெண்மைப் புரட்சி என்றால் பசுமாடுகளை அழிப்பது, என்பதுதானே அரசாங்க அகராதியில் உள்ள பொருள். அச்செடி பார்ப்பதற்கே, அதன் செயற்கை தன்மையுடன்தான் இருக்கும். விளைநிலங்களை தரிசுகளாக மாற்றியதில் யூகலிப்டசைப்போல அச்செடிக்கும் முக்கிய பங்கு உண்டு. நமது சூழலை விஷமாக்கிய அரசியல் அது. சரி.. நாம் பதிவிற்கு வருவோம்.
ஏப்ரல்-1 முட்டாள்கள் தினமட்டுமல்ல வேறு சில சிறப்புகளும் உண்டு. 2004 ஏப்ரல் 1-ல்தான் நாம் பதிவு எழுதிக்கொண்டிருப்பதற்கு காரணமான கூகுல் குழுமம் ஜி-மெயிலை அறிமுகப்படுத்தியது பரிச்சார்த்தமாக. முடடாள் தினத்தை வலைக்கும் ஏற்றிய பெருமை என்கிற உள்ளர்த்தம் ஒன்று உள்ளதோ இதில். 2001 ஏப்ரல்-1 ல் நெதர்லாண்ட் உலகில் முதல் தேசமாக ஓரினத்-திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரித்து.
எல்லாவற்றையும்விட முக்கியமானது, சதாம் உசேனின் ராஜதந்திரியாக இயங்கிய அமேரிக்காவின் இரட்டை-உளவாளி ஒருவரின் சங்கேதப் பெயர் April Fool. இவர் அமேரிக்க படை வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்த உள்ளது என்கிற தவறான தகவல் தந்து, ஈராக்கிய படைகளை வடக்கிலும் மேற்கிலும் நகரச் செய்துவிட்டு, குவைத் வழியாக அமேரிக்கபடை நுழைந்ததே பாக்தாத்தை பிடிப்பதற்கு வசதியாகிவிட்டது. ஈராக் படைபிரிவின் தலைவர்களை தவறான தகவல்களில் குழப்பியது அந்த அமேரிக்க அதிகாரிதான்.
மேலதிக தகவலுக்கு-
இப்படியாக பல சிறப்புகளைக் கொண்ட “முட்டாள்கள் தினமான“ இன்று எனது புத்தக அறிமுகக் குறிப்பை வெளியிடுவது பொருத்தமே.
மொழியும் நிலமும் 2003-ல் வெளிவந்தது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு வெளிவருகிறது.
- இனவாதம் என்கிற
விஷப்பற்களால்
அழித்தொழிக்கப்பட்ட
ஈழத்தமிழர்களுக்கு...
அர்ப்பணிக்கப்பட்ட இந்நூலின் பின்னட்டையில் வெளியிடப்பட்டுள்ள அறிமுகக் குறிப்பை பதிவில் நூலறிமுகமாக வெளியிடுகிறேன். இதை வாசித்தபின் புத்தகம் வாங்கும் எண்ணத்தை கைவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. எழுதியவரும், பதிப்பகத்தாருமே பொறுப்பு.
தனிமனிதன் என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது நவீன சமூகம். இச்சமூகம் உருவாகும் செயல்போக்கில் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணற்ற கதையாடல்களால் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே நவீனதொன்மங்கள். பண்டைய சிந்தனைகளை தொன்மம் என்று அடையாளப்படுத்தியதன் மூலம், அச்சமூகங்களை முற்றிலும் அறிவிற்கு புறம்பான உணர்ச்சிமிக்க மனித உடல்களாக குறியிட்ட இந்நாகரீக சமூகம் தன்னை உறுதி செய்துகொண்டு பேரமைப்பாக விரவியிருப்பது அறிவுசார் தொழில் நுட்பம், வளர்ச்சி, அறிவியல், பகுத்தறிவு என்கிற நவீன தொன்மங்களின் கதைவெளிகளில்தான். இக் கதைவெளிகளை சிதைத்துப் பார்க்க முயன்றிருக்கிறது இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். உடலரசியல், பெண்ணியம், கலை இலக்கியம், அரசியல், திரை இலக்கியம் மற்றும் ஈழம் என்கிற பிரிவுகளில் தொகுக்கப்பட்ட இக்கட்டுரைகள் இத்தகைய தொண்மக் கதையாடல்களை பன்முகப் பரப்பில் விசாரணைக்கு உட்படுத்துகின்றன. காந்தி, புள்ளியல், நீலப்படங்கள், குடி, இஸ்லாமியப் பெண்ணியம், தமிழில் வெளிவந்த புதியவகை நாவல்கள், மண்டோவின் கதைவெளி, பயங்கரவாதம், கிரிக்கெட், மதவாதம், இனவாதம், குடிமகனாதல், தமிழ் ஈழம், ஈரானியத் திரைபடங்கள் துவங்கி தமிழின் வெகுசனப் படங்கள்வரை இவ்விசாரணையை நிகழ்த்திச் செல்கின்ற இக்கட்டுரைகள், உடல்கள் மனிதர்களாகி, மனிதர்கள் குடிமகன்களாக ஆன கதைகளை வெவ்வேறு பரப்புகளில் வைத்து உரையாடுகின்றன.....
வெளியீடு
புலம்
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
திருவல்லிக்கேணி
சென்னை - 600 005
தொலைபேசி - 0091-44-4556 7517
மின்னஞ்சல்: pulam2008@gmail.com
விலை ரூ 300 - பக்கம் 432
சில நண்பர்கள் இணையத்தில் கிடைக்குமா என்று கேட்டுள்ளனர். தகவல் கிடைத்தவுடன் மற்றொரு “முட்டாள்தினப் பதிவு” போட்டுவிடலாம். இந்த பதிவின் முட்டாள்தனமான தலைப்பைப்போல….))
நன்றி
ஜமாலன். (01-04-2010)


