”தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!”

தீராநதி செப்டம்பர் 2008 இதழில் வெளிவந்த எனது கன்னிவெடி புதைக்கப்பட்ட உடல்களும் கற்பித நிலங்களும். என்கிற கட்டுரை குறித்து வெளிவந்துள்ள ஒரு பின்னொட்டம்.

??????????? ???? said...
"எஸ். வையாபுரிப்பிள்ளை தொகுத்த சென்னைப் பல்கலைக்கழக நிகண்டில் தமிழன் என்பதற்கான வரையறையாக "பார்பனரல்லாதவரும் சூத்திரனல்லாதவரும்” என்று சொல்லப்பட்டள்ளது. "
You are wrong. This is what Tamil Lexcicon says:
4. தமிழன் tamiḻaṉ : (page 1757)
வசனநூல்.
தமிழன் tamiḻaṉ
, n. < id. 1. One whose mother-tongue is Tamil; தமிழைத் தாய்மொழி யாக உடையவன். 2. A Tamilian, as dist. fr. āriyaṉ; ஆரியனல்லாத தென்னாட்டான். ஆரியன் கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 744, 5). 3. Caste man, as dist. fr. paṟaiyaṉ; பறைய னொழிந்த
The last definition means Tamilian is a Caste Hindu as distinct from 'Paraiyan'. In other words the caste Hindus appropriated the Tamilian badge for themselves and excluded 'pariayans' even from that.
The Lexicon definitions is not a prescriptive one, but merely descriptive ones i.e. as used in literature or newspapers or daily life.

அதற்கு எனது பதில்.

உங்களது விரிவான சுட்டிக்காட்டுதலுக்கு நன்றி. எஸ். வையாபுரிப்  பிள்ளையின் இந்த வரையறைப்பற்றி சமீபத்தில் வெளிவந்துள்ள ”A Comparative Grammar of the Dravidian or South Indian Languages" என்கிற ராபர்ட் கால்டுவெல்லின் திராவிட ஒப்பிலக்கண நூலின் புதிய பதிப்பாக வெளிவந்துள்ள கவிதாசரணின் அறிமுகக் குறிப்பிலிருந்து இது எடுத்தாளப் பட்டுள்ளது. அப்பகுதி இங்கு..

கவிதாசரணிலிருந்து...

தமிழ்ச் சூத்திரர்கள் தங்களை மட்டுமே தமிழர்களாக நிறுவிக் கொண்டார்கள். பார்ப்பனர்களையோ தாழ்த்தப்பட்டவர்களையோ தமிழர்களாக அவர்கள் ஏற்கவில்லை என்னும் முறைகேட்டை கால்டுவெல் துல்லியமாக எடுத்து வைத்துத் தாழ்த்தப்பட்டவர்களும் தமிழர்களே என்று நிறுவுகிறார். அந்தப் பகுதியையும் அதன் நிறம் கசிந்த பல பகுதிகளையும் வெட்டியெறிந்துவிட்டே "தமிழர்கள்" அவர் நூலுக்கு மூன்றாவது பதிப்பைக் கொண்டு வருகிறார்கள். அவர் எடுத்துக் காட்டிய உண்மை மறைக்கப்பட்டுவிட்டதால், எப்போதும் போலவே வையாபுரிப் பிள்ளை தொகுத்த தமிழ் அகராதியில் "பார்ப்பானொழிந்த பறையனொழிந்த தமிழ் பேசுவோரே தமிழர்கள்" என்று குறிப்பிடும் பழைய முறையைப் பேணிக் கொண்டார்கள். இதை எதிர்த்து அண்மைக் காலங்களில் கிளர்ச்சி நடந்தது. உண்மையில் இந்தக் கிளர்ச்சி கால்டுவெல் காலந்தொட்டே நடந்திருக்க வேண்டும். அதை மறைத்த பெருமை இந்தச் சுரணையற்ற தமிழர்களையே சாரும்.

கவிதாசரண் ஆகஸ்டு-செப்படம்பர் 2008 ல் வெளிவந்த அப்பகுதி இங்கு முழுமையாக மீள்பதிவு செய்யப்படுகிறது.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை நடத்திய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் வெளியீட்டுக் கருத்தரங்கு விழா

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை நடத்திய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் வெளியீட்டுக் கருத்தரங்கு விழா

150px-Caldwellஇராபர்ட் கால்டுவெல் 1875இல் இரண்டாம் பதிப்பாகத் திருத்தி வெளியிட்ட "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" (A comparative Grammar of the Dravidian or South Indian Languages) என்னும் நூல் 1913இல் பல்வேறு விடுபடல்களுடன் மூன்றாம் பதிப்பாக வெளியிடப்பட்டது. மூல நூல் மொழியியல், வரலாற்றியல், சமூகவியல் என முப்பரிமாணம் கொண்டது. அவற்றில் மொழியியலை மாத்திரம் தக்க வைத்துக்கொண்டதே மூன்றாம் பதிப்பு - ஆகவே, குறை பதிப்பு. இப்போது கால்டுவெல்லின் 1875ஆம் ஆண்டின் முழுமையான ஆங்கிலப் பதிப்பு கவிதாசரண் பதிப்பகம் மூலம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்நூலை முன்வைத்து 24.04.2008ஆம் நாள் காலை 10:30 மணி முதல் மாலை 5:30 வரை, சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத் துறை தன் பவளவிழாக் கலையரங்கில் கருத்தரங்கும் வெளியீடும் நடத்தியது. காலை நடந்த கருத்தரங்கிற்குத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் தலைமை ஏற்று நூலையும் அதன் மூலத்தை மீட்டெடுத்த பதிப்பையும் பற்றி விரிவான ஆய்வுரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து பேராசிரியர் மு.வேதசகாயகுமார், "கால்டுவெல் ஆய்வுகள்" பற்றி உரை நிகழ்த்தினார். இவர் கால்டுவெல் நூலைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருபவர். அவருடைய உரையும் அவ்வாறே. "கால்டுவெல் எழுதிய நூல்கள் ஏற்படுத்திய சர்ச்சைகள்' என்பதையே ஒரு தனி நூலாகக் கொண்டுவரலாம் எனும் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அவரது ஆய்வுரை அமைந்தது.
அடுத்து, அ.மங்கை, "காலனியமும் மொழி ஆய்வுகளும்" எனும் தலைப்பில் ஒப்பிலக்கணம் எழுதப்பட்ட சூழல், தேவை பற்றி அரிய தகவல்களுடன் விரிவாகப் பேசினார். அவருக்குப் பின்னர் "திராவிட மொழியியலும் கால்டுவெல்லும்" என்னும் பொருள் பற்றி இலக்கண மாதிரிகள் பலவற்றை மேற்கோள் காட்டி பேராசிரியை ந.கலைவாணி ஒரு வகுப்பறைப் பேராசிரியராகத் தகவல்கள் தந்தார்.
பிற்பகல் வ.கீதா, "காலனியமும் இனவியல் ஆய்வுகளும்" என்பது பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார். தமிழ், வடமொழி இரண்டும் பெண்மொழி, ஆண்மொழி என்று அழைக்கப்பட்டது பற்றிய தகவல்களோடு அ.மங்கையின் உரையைப் பலமுறை மேற்கோள் காட்டி இனவியல் முறைமைகளை விளக்கினார். அவரைத் தொடர்ந்து கவிதாசரண், "கால்டுவெல் நூல்பதிப்பு அரசியல்" பற்றி எடுத்துரைத்தார். கால்டுவெல் பறையர்களைப்பற்றி எழுதிய கட்டுரை மறைக்கப்பட்டதை வேதசகாயகுமார் முதன்முதலில் கவிதாசரண் இதழில் அம்பலப்படுத்தியதையும் அக்கட்டுரையே இந்நூல் கொண்டுவரக் காரணமென்றும், பழைய படியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் பொ.வேல்சாமி செய்த உதவியையும் நினைவு கூர்ந்தார். மூன்றாம் பதிப்பில் விடுபட்ட பகுதிகள் பற்றிக் குறிப்பிட்டு அவற்றுக்குப் பின்னுள்ள அரசியலை விரிவாகச் சொன்னார்.

கருத்தரங்க முடிவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலை வெளியிட்டு முதுபெருந் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் அரிய உரை நிகழ்த்தினார். பறையர்கள் பட்ட அவலங்களை உதாரணத்துடன் விளக்கினார். ஒரு வெளிநாட்டுக்காரர் இவ்வளவு பெருமுயற்சியும் நல்லெண்ணமும் கொண்டு மண்ணை, மக்களை, மொழியை ஆய்ந்திருப்பது வியப்புக்குரியது என்றார்.
தொடர்ந்து பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பேசினார். நூலில் கால்டுவெல் வாழ்க்கைக் குறிப்பை இணைத்திருந்தால் நன்றாயிருக்கும் என்றார். திராவிட இயல் இன்று பெரும் பரப்பையும் வீச்சையும் கொண்டு திகழ்வதைக் குறிப்பிட்டு, கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி வரலாறு போன்ற எல்லா நூல்களையும் ஆழ்ந்து ஆய்தல் வேண்டும் எனச் சொன்னார்.

மேடையில் கவிதாசரண்கள் நூலாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். கவிதாசரண் தன் ஏற்புரையில் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைக்கும் அதன் தலைவர் பேராசிரியர் வீ.அரசுவுக்கும் தன் மனமார்ந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார். பேராசிரியர் மணிகண்டன் தன் நன்றி நவிலலில் கால்டுவெல் நூல் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டதில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் விருப்பம் நிறைவேறியிருப்பதாகக் குறிப்பிட்டார். விழா மேடையில் முதுபெரும் தமிழ்மகனார் மா.சு.சம்பந்தனார் அவர்கள் நூல் பெற்றுச் சிறப்பு செய்தார்.

நூல் பற்றிச் சில கருத்துகள்:

1. "பார்ப்பானுக்கு அடிமையாய் இருந்தாலும் இருப்பேனே தவிர பறையனுக்குச் சகோதரனாய் இருக்க மாட்டேன்" என்னும் தமிழ்ச் சாதியின் வெறியுணர்வே தமிழின் தனித்துவத்தையும் மீறி அவர்களைப் பார்ப்பனத் தகைமைகளுக்கு முன்னுரிமையும் முதலிடமும் கொடுக்க வைத்துள்ளது. அதன் காரணமாகவே "பறையர் முதலான தாழ்த்தப்பட்டவர்கள் திராவிடர்கள்தாம்" என்னும் கால்டுவெல்லின் கட்டுரையை அவர் நூலிலிருந்தே உருவிப்போட்டுவிடத் துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.

2. பறையர் முதலானவர்கள் பார்ப்பனர் முதலான உயர்சாதியினரின் முறையற்ற பாலுறவால் "நடத்தை கெட்டவர்கள் பெற்றுப்போட்ட குழந்தைகள்" என்பதாக ஐரோப்பியர்கள், பார்ப்பனர்கள், உயர்சாதித் தமிழர்கள் போன்றோரால் இழிவாக வைத்து எண்ணப்பட்டிருந்த காலம் அது. இது ஆய்வு ரீதியாகவோ நடைமுறை அறிவிலோ மெய்ப்பிக்கப்பட முடியாத கட்டற்ற மனத்தின் ஆகப்பெரும் பொய்ப்புனைவு என்பதைக் கால்டுவெல் ஐயத்திற்கிடமின்றி நிறுவுகிறார். இந்தப் பொய்யிலும்கூட ஒரு விஷயம் பாருங்கள்: வல்லுறவு கொண்ட பொறுக்கிகள் மேல்குலத்தவர்களாம். வல்லுறவுக்காட்பட்ட பெண்கள் பெற்றுப்போட்ட குழந்தைகள் சாதி கெட்டவர்களாம். இந்தச் சடங்குத்தனமான வகைப்பாட்டை நம்புகிறவர்கள்தாம் மேன்மக்கள் எனில் மேன்மையின் கீழ்மை எவ்வளவு கோரமானது அதைத்தான் கால்டுவெல் வலுவாக நிறுவுகிறார். அதைச் சகித்துக்கொள்ள மறுத்தவர்கள்தாம் அவர் நூலைச் சிதைத்தவர்கள்.

3. மாதவியின்பால் கோவலன் "விடுதல்அறியா விருப்பினன்" ஆயினன் என்பார் இளங்கோவடிகள். தமிழின் மேல் கால்டுவெல்லின் நேசமும் அப்படிப்பட்டதுதான். 53 ஆண்டுக்காலம் தமிழோடு வாழ்ந்து தமிழ் மண்ணில் அடக்கமானவர். கோவலன் மாதவியை நேசித்தாலும் அவனது ஆவியில் கலந்தவள் கண்ணகி மட்டும்தான். கால்டுவெல்லுக்கும் அப்படித்தான். ஆயினும் அவரது விளைச்சல் தமிழ் மண்ணோடுதான்- கோவலன் மாதவியிடம் பெற்றாற்போல.

4. மலையாளத்தைத் தமிழின் சகோதரி என்பதைவிடப் புதல்வி என்றே சொல்லலாம் என்பது கால்டுவெல்லின் எண்ணம். மொழி ரீதியாக அதற்கொரு சான்று சொல்கிறார். தமிழில் கிழக்கு, மேற்கு என்று திசைகளைச் சொல்கிறோம். கிழக்கு என்றால் கீழே, தாழ்வாக (கிழங்கு என்றால் நிலத்தின் "கீழ்" விளைவது) என்னும் பொருள் தருவது. அதுபோல மேற்கு என்பது மேல்நோக்கி, மேடாக என்றாகிறது. தமிழ்நாட்டுக்கு மேற்கு நோக்கிச் செல்லும்போது ஏறுமுகமாக, மலைநோக்கியும், கிழக்கு நோக்கிச் செல்லும்போது இறங்குமுகமாக, கடலை நோக்கியும் அமைகிறது. ஆகவே இவை காரணப் பெயர்கள். மலையாளத்திலும் திசைகளுக்கு இதே பெயர்கள்தாம். ஆனால் கேரளத்தில் கிழக்குத் திசை ஏறுமுகமாகவும், மேற்குத்திசை கடலை நோக்கி இறங்குமுகமாகவும் நிலப்பரப்பைக் கொண்டது. எனவே, அங்கே இத்திசைகள் இடுகுறிப் பெயர்களாக, தமிழ்ப் பெயர்களை உள்வாங்கிக் கொண்டனவாக உள்ளன. அதாவது அவர்கள் தமிழர்கள், தமிழ்நாட்டிலிருந்து நகர்ந்து சென்றவர்கள் என்பதாக முடிவுக்கு வரலாம். நம்பூதிரிகள் "நாங்கள் "படுஞ்ஞாயிறு" என்றுதான் மேற்கை அழைக்கிறோம்" என்று சொன்னபோது "அடடே, அது இன்னும் நல்ல தமிழாயிற்றே" என்கிறார் கால்டுவெல். இதுபோன்று பல சாத்தியப்பாடுகளையும் அவர் மொழிகளூடாக ஆராய்கிறார்.

5. கால்டுவெல் தொல்காப்பியத்தை அறிந்திருந்தார் என்பது இன்றுவரை இருட்டடிப்புச் செய்யப்பட்டே வருகிறது. 07-05-2007இல் இரவு 11.30 மணியளவில் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ்மொழி பற்றிய நிகழ்ச்சியில் கால்டுவெல் தொல்காப்பியத்தை அறிந்திருக்கவில்லை என்றே "தமிழறிந்த" மூன்று பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். அனால் உண்மை என்னவெனில் அவர் தொல்காப்பியத்தை அறிந்திருந்தார் என்பதுதான். தொல்காப்பியத்தில் "என்மனார் புலவர்" எனப்படுவது தொன்மையை நிலைநாட்டும் பொருட்டு என்பதாகிறது. ஆனால் "என்மனார்" என்பதற்கு மாற்றாக "என்பர்" என்று சொன்னாலே அது தொன்மையைச் சுட்டக்கூடியதுதான் என்கிறார் கால்டுவெல்.

6. கால்டுவெல்லுக்கு முன்பே "திராவிடம்", "திராவிட மொழிகள்" என்னும் சொற்கள் புழக்கத்திலிருந்தன. கால்டுவெல் செய்ததெல்லாம் அக்கருத்துகளைத் தொகுத்து, ஆழமும் விரிவும் கொண்டதாக்கி, தமிழின் செம்மொழித் தகுதியை ஐயத்திற்கிடமின்றி நிறுவியதுதான். உண்மையில் கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலை அடியாதாரமாகக் கொண்டுதான் செம்மொழித் தமிழின் கருத்தியல் களம் பரந்து விரிகிறது. இன்னும் சொல்லப்போனால் கால்டுவெல் பொருளாழப்படுத்திய "திராவிடம்"தான் தமிழகத்தை ஒரு நூறாண்டுக் காலம் குலுக்கிக்கொண்டிருக்கிறது, ஒரு நாற்பதாண்டுக் காலம் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. இது கால்டுவெல்லின் நாமறிந்த முகம். அவருக்கு இன்னொரு முகமும் உண்டு. வெகு தீவிரமான தெளிவான சமூக முகம். அந்த முகம் 1913க்குப் பிறகு முற்றாக மறைக்கப்பட்டுவிட்டது.

7. கால்டுவெல் மட்டும் இந்த நூலை எழுதாமல் இருந்திருந்தால் இன்றைய இந்தியப் பெருவெளியில் தமிழ்ச் சமூகம் என்னவாக இருந்திருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது. சிந்துவெளி நாகரிகம் தமிழ்ச் சமூகத்தினுடையது என்று சொல்வதுகூட எளிதாய் இருந்திருக்க முடியாது. இந்திய ஒற்றைத் தேசியத்தில் தமிழ்ச் சமூகம் ஆகக் கீழான தலித் சமூகமாக மிதிபட்டு நசுங்கிப் போயிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய அரசியல் களத்தில் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்தைத் தலைநிமிர்ந்து செம்மாந்து நிற்க வைத்த பெருமை கால்டுவெல்லையே சாரும். "வெள்ளையின மக்களே மேன்மை யானவர்கள், கறுப்பினத்தார் கீழானவர்கள்" என்னும் சமஸ்கிருதக் கோட்பாட்டை அடித்து நொறுக்கியவர் கால்டுவெல். சமஸ்கிருதம் இந்தியாவுக்குள் நுழையுமுன்பே தமிழுக்குக் கடன்பட்டது என்பதைத் தர்க்கபூர்வமாக நிறுவிக்காட்டியவர் அவர்.

8. தமிழ்ச் சமூகம் ஒருவகையில் ஆரிய சமூகத்தைவிடவும் குரூரமானது என்பதைக் கால்டுவெல்லைக் கொண்டே நம்மால் மெய்ப்பிக்க முடியும். தமிழ்ச் சமூகம் தன் தலை நிமிர்வுக்கான கால்டுவெல்லின் ஒரு முகத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டது. அவருடைய இன்னொரு முகம் பறையர்கள் முதலான தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களே - வெள்ளாளர்களின் சகோதரர்களே என்று உறுதிபட மெய்ப்பித்துக் காட்டிய முகம். அந்த முகத்தைத்தான் அவர் மறைவுக்குப் பின் ஆதிக்கத் தமிழ்ச் சாதிகள் முற்றாக மறைத்துவிட்டன- ஒளித்து வைத்துவிட்டன. இன்றைய தமிழ் மக்களுக்கு, ஏன் அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களுக்கும்கூட கால்டுவெல்லின் அந்த முகம் முற்றாகத் தெரியாது. தெரிந்துகொள்ள முயலவே இல்லை. அதை வெளிக் கொண்டுவரும் முயற்சியாகத்தான் கால்டுவெல் ஒப்பிலக்கணம் முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

9. தமிழ்ச் சூத்திரர்கள் தங்களை மட்டுமே தமிழர்களாக நிறுவிக் கொண்டார்கள். பார்ப்பனர்களையோ தாழ்த்தப்பட்டவர்களையோ தமிழர்களாக அவர்கள் ஏற்கவில்லை என்னும் முறைகேட்டை கால்டுவெல் துல்லியமாக எடுத்து வைத்துத் தாழ்த்தப்பட்டவர்களும் தமிழர்களே என்று நிறுவுகிறார். அந்தப் பகுதியையும் அதன் நிறம் கசிந்த பல பகுதிகளையும் வெட்டியெறிந்துவிட்டே "தமிழர்கள்" அவர் நூலுக்கு மூன்றாவது பதிப்பைக் கொண்டு வருகிறார்கள். அவர் எடுத்துக் காட்டிய உண்மை மறைக்கப்பட்டுவிட்டதால், எப்போதும் போலவே வையாபுரிப் பிள்ளை தொகுத்த தமிழ் அகராதியில் "பார்ப்பானொழிந்த பறையனொழிந்த தமிழ் பேசுவோரே தமிழர்கள்" என்று குறிப்பிடும் பழைய முறையைப் பேணிக் கொண்டார்கள். இதை எதிர்த்து அண்மைக் காலங்களில் கிளர்ச்சி நடந்தது. உண்மையில் இந்தக் கிளர்ச்சி கால்டுவெல் காலந்தொட்டே நடந்திருக்க வேண்டும். அதை மறைத்த பெருமை இந்தச் சுரணையற்ற தமிழர்களையே சாரும்.

10. இதன் இன்னொரு தொடர் நிகழ்வாகக் கால்டுவெல் கூடுதல் தகவல் தருகிறார். தலித்துகளும் தங்களுக்குக் கீழாகத் தலித்துகளைப் பேணி வந்தார்கள் என்பதே அந்தத் தகவல். அதாவது பறையர்கள் தங்களை விடத் தாழ்ந்தவர்களாக செருப்பு தைப்பவர்கள், துணி வெளுப்பவர்கள் போன்றோரை ஒதுக்கி வைத்தனர் என்கிறார். ஆக, இந்தியாவில் ஒவ்வொருவனும் தனக்கொரு தலித்தை உருவாக்கிக் கொள்வதையே குறியாகக் கொண்டிருக்கிறான் என்றாகிறது. இது வர்க்கப் பிரச்சினையின் உள் மடிப்புகளில் படிந்திருக்கும் செல்லரிப்புச் சிதிலம். இந்த உள்வட்டச் சிதிலங்களைக் களையாமல் தலித்தியம் வெல்வதெப்போது?

11. தமிழ்ச் சமூகம் இடங்கை, வலங்கை என்று இரண்டாகப் பிரிந்து மோதிக்கொண்டது என்பதைக் கால்டுவெல்லும் குறிப்பிடுகிறார். "இடங்கை" என்றால் மாற்றத்தைக் கோருவது. "வலங்கை" என்பது இருப்பதைத் தக்கவைத்துக்கொள்வது. இதன் உலகளாவிய நவீனப் பெயர்கள்தாம் இடதுசாரி, வலதுசாரி என்பதை அறிய நமக்கு வியப்பு ஏற்படுகிறது. பறையர்கள் எப்போதும் வலங்கையர்களாகவும், பள்ளர்கள் இடங்கையர்களாகவும், "நீயா, நானா? யார் பெரியவர்?" என்னும் மோதலைத் தொடர்ந்தனர் என்கிறார். இன்றைக்கும் அந்த மோதல் தொடர்கிறதெனில் தலித்துகளுக்கு எப்போது விடுதலை வரும்? பறையர்கள் வலங்கையர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டதிலிருந்து அவர்களின் தூர்ந்துபோன பின் வரலாற்றை ஒருவாறு யூகிக்க முடிகிறது.

12. தென்னிந்தியா முழுதுமுள்ள பெருநகரக் கண்டோன்மென்டுகளிலும் சந்தைகளிலும் பெருவாரியாகத் தமிழைக் கேட்கலாம் என்கிறார் கால்டுவெல். இப்படித் தமிழை ஒலிக்கச் செய்தவர்கள் படைப் பிரிவுகளிலும் வெள்ளையர் மனைகளிலும் பணியமர்த்தப்பட்ட, சிப்பாய்களாயிருந்த பறையர்கள்தாம். அண்மையில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து இது பற்றிய கூடுதல் விவரங்களும் கிடைக்கின்றன. சாதிக் கொடுமைகளுக்கு அஞ்சி படைப் பிரிவில் இருந்த பறையர்கள் தங்கள் குடும்பத்தையும் தங்களோடே அமர்த்திக் கொள்வார்கள் என்றும், இன்னும்கூடத் தமிழ் அவ்வாறு புழங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். இப்படிப்பட்டதொரு கொடும் தள்ளிவைப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கென்றே கால்டுவெல் எழுதிய "பறையர்கள் திராவிடர்களே, தோடர்களும் திராவிடர்களே" என்னும் பகுதிகளையும், திராவிடர்கள் "மலையிறங்கி வந்து அருள்வாக்கு சொல்லி மீண்டும் மலையேறும் தெய்வ வழிபாட்டினர்" - வேறு வகையில் சொன்னால்- பேய் வழிபாட்டினர் என்னும் உண்மைகளையும் முற்றாகக் களைந்துவிட்டுத் தங்களுக்குப் பிடித்த மாதிரி நூலைச் சிதைத்து வெளியிட்டுக் கொண்டனர்.

13. திராவிட மொழிகளில் தமிழ் தவிர மற்றவை சமஸ்கிருதத்தோடு ரசாயணக் கலவைக்கு உட்பட்டுவிட்டதையும் தமிழ் மட்டும் விதிவிலக்காய் இருப்பதையும் கால்டுவெல் சுட்டுகிறார். ஒரு மொழியின் எழுத்துப் பயன்பாட்டை அல்லது இலக்கியத்தை யார் வசப்படுத்துகிறார்களோ அவர்கள் அந்த மொழியைத் தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என்கிறார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பார்ப்பனர்களே முதல் இலக்கியத்தைப் படைத்தார்கள். ஆகவே அவை சமஸ்கிருதமயமாயின. ஆனால் தமிழில் மூல இலக்கியங்கள் பார்ப்பனர்களுக்கு முன்பே தமிழர்களாலேயே படைக்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து வந்த பார்ப்பனர்களின் பங்களிப்பு மூல இலக்கியங்களை மீறியதாக இயங்க முடியவில்லை என்கிறார். வள்ளுவர் திருக்குறளை இயற்றினார். அதற்குப் பரிமேலழகர் உரை எழுதினார். இதை "பறையராகக் கருதப்படும் வள்ளுவர் எழுதிய குறளுக்குப் பார்ப்பனராகிய பரிமேலழகர் உரையெழுதும்படியாகத்தான் பார்ப்பனியத் தாக்கம் தமிழை வந்தடைந்தது" என்கிறார். அதாவது முயன்றால் தனித் தமிழ் சாத்தியமே என்பது அவர் கண்டுணர்த்தும் உண்மை. உரை எழுதுவது ஒன்றும் பொருள் விளங்க வைப்பதற்கல்ல. குறைந்த பட்சம் சந்துபொந்துகளிலாவது தங்கள் வர்ணாசிரமக் கருத்துகளைப் புகுத்துவதற்குத்தான்.
ஒன்றை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். மொழி என்ற அளவில் சமஸ்கிருதம் வளமானது என்பதில் ஐயமில்லை. தமிழின் இறையாண்மையை மதிக்கும் எனில், அதைத் தமிழின் அரிய நட்பு மொழியாக ஏற்பது தமிழுக்கு உகந்ததுதான். ஆனால் பாம்புக்கு ஒழுக்கம் கடிவாயில் நஞ்சை உமிழ்வதுதானே? சமஸ்கிருதம் தொடுவாயிலும் நஞ்சுமிழும் நற்கருணைப் பாம்பு.

நன்றி கீற்று.காம் மற்றும் கவிதாசரண்.

பின் குறிப்பு - இம்முறை சென்னைப் பயணத்தின்போது எனது நீண்டநாள் ஆவல்களில் ஒன்றான பேராசிரிரியர் கார்லோஸ் (தமிழவன்) அவர்களை சந்திப்பதற்கான வாய்ப்ப கிடைத்தது. சென்னை பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அவரை நானும் நண்பர் நாகார்ஜீனனும் சந்தித்து 2 நாட்கள் உரையாடிய அரிய வாய்ப்பு அது. நண்பர் நாகார்ஜீனன் அவர்களை சந்தித்து சுமார் 12 அல்லது 13 ஆண்டுகள் இருக்கலாம். அந்த இரண்டுநாள் பல உரையாடல்கள் பயனுள்ள விதத்தில் இருந்தது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்துறைத் தலைவராக உள்ள பேராசிரியர் வீ. அரசுவையும் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் இந் நூலைப்பற்றி சொன்னார். உடனடியாக கவிதாசரனை தொடர்பு கொண்டு நூலை கேட்டபோது அன்று மாலை தனது உடல் நலம் சரியில்லாத நிலையிலும் அந்த நூலை எங்களுக்கு எடுத்து வந்து தந்த கவிதாசரனின் ஆர்வமும் அந்நூலின் பரவாலாக்கத்திற்கு அவர் எடுக்கும் முயற்சியும் உண்மையில் நெகிழ்ச்சியுட்டுவதாக இருந்தது. கடின உழைப்பிற்கு பிறகு அந்த நூலை முழுமையாக அவர் வெளிக் கொண்டுவந்துள்ளார். ஒரு பல்கலைக்கழகமோ அல்லது தமிழ் செம்மொழி மையமோ செய்யவேண்டிய ஒரு அரிய பணியை அவர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இராபர்ட் கால்டுவெல்லின் இந்நூலின் பழைய பதிப்பை ஆர்வமுள்ளவர்கள் இங்கு அழுத்திப் படித்துக் கொள்ளலாம்.

-குறிப்பும் மீள்பதிவும் ஜமாலன்.

10 comments:

RATHNESH சொன்னது…

பொருள் பொதிந்த நல்ல கட்டுரை ஜமாலன் சார். பொறுமையாக இரண்டு முறை படித்தேன். நிறைய சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது.

பதிவின் தலைப்பு குறித்து: "எங்களுக்கு மேற்கோள் காட்ட ஒன்று கிடைத்தால் போதுமே. காரண அர்த்தம் எல்லாம் எதற்கு? இத்தனை நாள் அர்த்தம் தெரிந்தா இதனைச் சொல்லித் திரிந்தோம்?


//ஒரு பல்கலைக்கழகமோ அல்லது தமிழ் செம்மொழி மையமோ செய்யவேண்டிய ஒரு அரிய பணியை அவர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.//

அவர் போன்றோரை வெளிச்சம் போட்டுக் காட்டும் உங்களைப் போன்றோரின் பணியும் தொடர வேண்டும்.

வாழ்த்துக்கள்.

உங்கள் தீராநதி கட்டுரை பற்றி இப்போது தான் அறிகிறேன். அடுத்து அங்கு தான் போகிறேன்.

ஜமாலன் சொன்னது…

RATHNESH said...

வாங்க ரத்ணேஷ். நீண்ட நாட்களாகிவிட்டது நாம் உரையாடி. உங்கள் பதிவுகள் அத்துனையும் எனது ரீடரில் உள்ளது. சில பணிகளால் பதிவுகளை வாசிப்பதே அரிதாகி வருகிறது. சீக்கிரத்தில் ஒரே நாளில் 7 பதிவகள போட்டு அசத்தியதைப்போல ஒரு அசத்தலை எதிர் நோக்குகிறேன்.

//பதிவின் தலைப்பு குறித்து: "எங்களுக்கு மேற்கோள் காட்ட ஒன்று கிடைத்தால் போதுமே. காரண அர்த்தம் எல்லாம் எதற்கு? இத்தனை நாள் அர்த்தம் தெரிந்தா இதனைச் சொல்லித் திரிந்தோம்?//

இதுல ஒன்னும் உள்குத்து இல்லையே.

//அவர் போன்றோரை வெளிச்சம் போட்டுக் காட்டும் உங்களைப் போன்றோரின் பணியும் தொடர வேண்டும்.//

உங்களது ஊக்கப்படுத்தலுக்கு நன்றி.

//உங்கள் தீராநதி கட்டுரை பற்றி இப்போது தான் அறிகிறேன். அடுத்து அங்கு தான் போகிறேன்.//

உங்களது மேலான கருத்துக்கள எதிர்நோக்குகிறேன்.

அன்புடன்
ஜமாலன்.

குமரன் (Kumaran) சொன்னது…

ஜமாலன்,

ஆய்வுகள், உரை எழுதுதல், பதிப்பித்தல் போன்ற நல்ல காரியங்களில் எல்லாமும் காலம் காலமாக அவரவர் சொந்த நலன்களும் அரசியலும் எப்படி எப்படி எல்லாம் விளையாடியிருக்கிறது என்று படிக்கப் படிக்கப் புரிந்து கொள்ள முடிகிறது. கால்டுவெல்லார் சொன்னவற்றில் தமக்கு ஏற்ற பகுதியை மட்டும் வளர்த்தெடுத்ததும் வேண்டாத பகுதியை வெட்டியதும் ஒரு சாராரின் அரசியல் என்றால் 'பார்ப்பனரைத் தவிர்த்து மற்றவர் மட்டுமே தமிழர்கள்' என்று வரையறுக்கும் கால்டுவெல்லாரின் 'மத மாற்ற' நோக்குடன் கூடிய ஆய்வுகளும் வேறு வகை அரசியல்.

இப்படி ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான அரசியலால் தான் அனைத்தும் இயங்குகின்றன போலும். அந்த அரசியலைக் கட்டுடைக்கும் காலம் வரும் வரை அந்த அரசியலின் செல்வாக்கு செலாவணியாகிறது. கட்டுடைக்கப்பட்ட பின்னரும் தற்காலத்தவரின் தன்னலத்தைச் சார்ந்த அரசியலுக்கு ஏற்ப அவற்றைத் தொடர்ந்து பேணுவதும் நடக்கிறது. இல்லையா?

இயன்றால் இந்த இடுகையைப் படித்துப் பாருங்கள். http://koodal1.blogspot.com/2008/08/blog-post_496.html

TBCD சொன்னது…

ஒரு பின்னுட்டத்தின் விளைவாக ஒரு அருமையான தகவல் களஞ்சியமே வெளியே தலைக்காட்டியிருக்கிறது...கால்டுவெலின் ஆய்வு மறைக்கப்பட்டது என்பது புதிய செய்தி...

பாராட்டுக்கள், நன்றிகள், வாழ்த்துக்கள்...!!

ஃஃஃஃஃஃ

இதுப் போன்ற மறைந்திருக்கும் அல்லது மறைத்துவைக்கட்ட உண்மைகளில் எத்தனை தெரியுமோ, அத்தனையும் எழுதுங்க...இது தெரிந்திருக்கலாம் என்று நினைத்து ஒன்றையும் விட்டுவிடாதீர்கள்....

வன்பாக்கம் விஜயராகவன் சொன்னது…

"உண்மையில் கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலை அடியாதாரமாகக் கொண்டுதான் செம்மொழித் தமிழின் கருத்தியல் களம் பரந்து விரிகிறது"

There is little connection between a the classical Tamil literaure or the knowledge of it and the comparitive linguistic studies. Even in the absense of comparitive language studies, Tamil literature stands on it's own.

Caldwell was the first man to synthesize the amount of knowledge gathered by mid 19th century. His scholorship shows the possibilities and limitations of 19th century linguistics. But to glorify Caldwell or his work as a historical figure who uplifted the status of Tamils or Tamil borders on the ridiculous

"கால்டுவெல் மட்டும் இந்த நூலை எழுதாமல் இருந்திருந்தால் இன்றைய இந்தியப் பெருவெளியில் தமிழ்ச் சமூகம் என்னவாக இருந்திருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது"

Whether Caldwell lived or not would have made no difference on the status of Tamil. Tamil lives or dies by the use or the nonuse by each generation. Tamil is no more developed than Malayalam or Hindi or Punjabi as of today since there are no good books especially in Science in Tamil. Till such time there are original research papers in Tamil or original thoughts published in Tamil, Tamil is no more developed today than it was in the time Caldwell

"சிந்துவெளி நாகரிகம் தமிழ்ச் சமூகத்தினுடையது என்று சொல்வதுகூட எளிதாய் இருந்திருக்க முடியாது"

Nobody except rabid Tamil fanatics accepts that Sindhu Nagarigam was Tamil.

"இந்திய ஒற்றைத் தேசியத்தில் தமிழ்ச் சமூகம் ஆகக் கீழான தலித் சமூகமாக மிதிபட்டு நசுங்கிப் போயிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது"

Utter rubbish


" இன்றைய அரசியல் களத்தில் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்தைத் தலைநிமிர்ந்து செம்மாந்து நிற்க வைத்த பெருமை கால்டுவெல்லையே சாரும். "

This is utterly false. If all the achivements of Tamils over the last 150 years can be traced to a book written by a foreigner in a foreign language for the benefit of his fellow countryman, then there is nothing more demeaning for Tamils. This is a patent nonsense.

" "வெள்ளையின மக்களே மேன்மை யானவர்கள், கறுப்பினத்தார் கீழானவர்கள்" என்னும் சமஸ்கிருதக் கோட்பாட்டை அடித்து நொறுக்கியவர் கால்டுவெல். "

After tracing all the Tamils history to a white man writing in a white man's language for the benefit of other white men, the above statement is ironic and contradictory.

"சமஸ்கிருதம் இந்தியாவுக்குள் நுழையுமுன்பே தமிழுக்குக் கடன்பட்டது என்பதைத் தர்க்கபூர்வமாக நிறுவிக்காட்டியவர் அவர்"


This is a plain lie. He considers such a possibility as one of the hypotheses. He is not sure of the prehistory of languages. He was only an amatuer in linguistics and he was not a historian or archeologist by inclination. Caldwell does not make wild claims in his book.


Caldwell Bhajanai may suit the dravidian politicians, but it won't give them any extra knowledge. The Dravidian bajanai of Caldwell has not given them any mastery of language or sciences can be seen from the fact that THERE IS NO TAMIL TRANSLATION OF CALDWELL'S BOOK. The only things dravidians can do is bajanai.

(My Vista machine does not take in Murasu fonts, so I cannot write in Tamil now)

ஜமாலன் சொன்னது…

குமரன் (Kumaran) said...

வாங்க குமரன். நீண்டநாட்களாகிவிட்டது.

//ஆய்வுகள், உரை எழுதுதல், பதிப்பித்தல் போன்ற நல்ல காரியங்களில் எல்லாமும் காலம் காலமாக அவரவர் சொந்த நலன்களும் அரசியலும் எப்படி எப்படி எல்லாம் விளையாடியிருக்கிறது என்று படிக்கப் படிக்கப் புரிந்து கொள்ள முடிகிறது.//

எல்லாக் காலங்களிலும் இது நடைபெறுகிறது.

//கால்டுவெல்லார் சொன்னவற்றில் தமக்கு ஏற்ற பகுதியை மட்டும் வளர்த்தெடுத்ததும் வேண்டாத பகுதியை வெட்டியதும் ஒரு சாராரின் அரசியல் என்றால் 'பார்ப்பனரைத் தவிர்த்து மற்றவர் மட்டுமே தமிழர்கள்' என்று வரையறுக்கும் கால்டுவெல்லாரின் 'மத மாற்ற' நோக்குடன் கூடிய ஆய்வுகளும் வேறு வகை அரசியல். //

உண்மைதான் ஆரிய திராவிட அரசியலுக்கான மூலம் உருவாக அறிந்தோ அறியாமலோ கால்டுவெல்லும் ஒரு காரணம் என்பது அரசியல்ரீதியாக நொக்க வேண்டிய ஒரு புள்ளிதான். பார்ப்பனரைத்தவிர மற்றவர்கள் தமிழர்கள் என்கிற வரையறை கால்டுவெல்லால் சொல்லப்பட்டதாக எனக்குத் தெரிந்து இல்லை. அந்த வரையறை தமிழறிஞர் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையுடையது.

//கட்டுடைக்கப்பட்ட பின்னரும் தற்காலத்தவரின் தன்னலத்தைச் சார்ந்த அரசியலுக்கு ஏற்ப அவற்றைத் தொடர்ந்து பேணுவதும் நடக்கிறது. இல்லையா? //

அரசியல் என்பதே தன்னலம் அல்லது குழுநலம் பேணுவதுதான். அதனால் தந்நலம் பேணுதல் இருக்கும்வரை அரசியலும் இருக்கத்தான் செய்யும். கட்டுடைப்பதும் அரசியல்தான் அதன் பின் அதனை பின்பற்றுவதும் அரசியல்தான். நவின சமூகத்தில் அரசியல் கடவுளைப் போல “சர்வவியாபகமானது”.

//இயன்றால் இந்த இடுகையைப் படித்துப் பாருங்கள். http://koodal1.blogspot.com/2008/08/blog-post_496.html//

உங்கள் உரையாசிரியர் இடுகைக்கு விரிவான பின்னோட்டம் இட்டுள்ளேன். பார்க்க.

நன்றி.

ஜமாலன் சொன்னது…

TBCD said...

என்ன தம்பி tbcd நீண்ட நாட்களாக ஆளைக் காணோம். மறந்திட்டியலோன்னு நினச்சேன். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர்ரீங்க.. நன்றி. :)

//இதுப் போன்ற மறைந்திருக்கும் அல்லது மறைத்துவைக்கட்ட உண்மைகளில் எத்தனை தெரியுமோ, அத்தனையும் எழுதுங்க...இது தெரிந்திருக்கலாம் என்று நினைத்து ஒன்றையும் விட்டுவிடாதீர்கள்....//

அப்படி எல்லாம் தேடிப்போய் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த ஆய்வுப்பணி எல்லாம் செய்ய வாய்க்கவில்லை இன்னும். இதுபோன்று ஆங்காங்கு படிப்பதை வெளியிட்டுள்ளேன். அவ்வளவே. கணடிப்பாக இனி இப்படிப்பட்ட ஆய்வுகள் எங்கேனும் படித்தால் வெளியிடுகிறேன்.

நன்றி.

ஜமாலன் சொன்னது…

viji's ன் விவாதத்திற்கான பதில்கள் தனிப்பதிவாக இடப்பட்டுள்ளது. பார்க்கவும், http://jamalantamil.blogspot.com/2008/09/blog-post_24.html#links

அன்புடன்
ஜமாலன்.

Unknown சொன்னது…

அற்புதமான கட்டுரை எதையோ தேடி இதைப்பிடித்தேன்.கால்டுவேல் பற்றிய இந்த அறிமுகம் எனக்கு புதிது, இன்னும் பெரும்பாலான தமிழருக்கு புதிதுதானதாக இருக்கும்.தமிழின் வரலாறு இப்படி மறைக்கப்படுவதும் அதனை தங்களைப்போன்றவர்களும் கவிதாசரண் போன்றவர்களும் கொண்டு வருவதுமான நிகழ்வுகள் நிகழ்வதே தெரியாமல் ஒரு பக்கம் தமிழ் சமூகம் தனது ஆணிவேரே தெரியாமல் போலி மொழி அமைப்புகளில் நேரங்களை இழந்துகொண்டிருப்பது நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. தங்களின் இந்த சேவைக்காக மிகுந்த நன்றியுடையவனாகிறேன்

ஜமாலன் சொன்னது…

Dhavaneri said...

//அற்புதமான கட்டுரை எதையோ தேடி இதைப்பிடித்தேன்.கால்டுவேல் பற்றிய இந்த அறிமுகம் எனக்கு புதிது, இன்னும் பெரும்பாலான தமிழருக்கு புதிதுதானதாக இருக்கும்.தமிழின் வரலாறு இப்படி மறைக்கப்படுவதும் அதனை தங்களைப்போன்றவர்களும் கவிதாசரண் போன்றவர்களும் கொண்டு வருவதுமான நிகழ்வுகள் நிகழ்வதே தெரியாமல் ஒரு பக்கம் தமிழ் சமூகம் தனது ஆணிவேரே தெரியாமல் போலி மொழி அமைப்புகளில் நேரங்களை இழந்துகொண்டிருப்பது நினைக்கும்போது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. தங்களின் இந்த சேவைக்காக மிகுந்த நன்றியுடையவனாகிறேன்//

நன்றி நண்பரே.. கால்டுவெல்லை மீளக் கொண்டுவந்த கவிதசரண் அவர்களுக்கே நாம் நன்றி சொல்லவேண்டும்.

ஜமாலன். Blogger இயக்குவது.