"தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" 'தமிழா இன உணர்வுகொள்" போன்ற வாக்கியங்கள் தமிழக அரசியல் சூழலில் உருவாக்கிப் பெருக்கப் பட்டப்படியே இருக்கின்றன. தமிழீழப் போர் துவங்கிய பின் இவ் வாக்கியங்களின் பெருக்கமும் பரவலாக்கமும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விரவியது. தமிழீழச் சுழலில் இவ்வாக்கியங்களின் அர்த்தமும் தமிழ்ச் சுழலில் இவ் வாக்கியங்களின் அர்த்தமும் வெவ்வேறானவை என்பதுடன் வெவ்வேறான தன்னிலைக் கட்டமைப்புகளைச் செய்யக் கூடியவையாக உள்ளன. நாம் இவ்வாக்கியங்களின் பொருளை தமிழ்ச்சூழலில் துவங்கி புரிந்துகொள்ள முனைவதின் வழியாக தமிழீழச் சுழலில் என்னவாக ஆகியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முனையலாம்.
இவ்வாக்கியங்கள் முன்வைக்கும் பிரச்சனை தமிழகத்திற்குள் இருந்துகொண்டு தமிழனை மனதளவில் மட்டமானவனாகவும் இரண்டாந்தரமாகவும் கருதும் ஒரு மனப்போக்கை உணரும்படி செய்ய முனைகிறது. ஒரு இனவாதத்திற்கு பதிலாக மற்றொரு இனவாதத்தை முன்வைக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. சிறந்த தமிழறிஞர்களில் ஒருவரான எஸ். வையாபுரிப்பிள்ளை தொகுத்த சென்னைப் பல்கலைக்கழக நிகண்டில் தமிழன் என்பதற்கான வரையறையாக "பார்பனரல்லாதவரும் சூத்திரனல்லாதவரும்” என்று சொல்லப்பட்டள்ளது. இவ்வாறாக, தமிழன் என்று ஒருவரை வரையறுக்கும்போது அல்லது வரையறை உருவாக்கும்போது ஒதுக்கப்படுவதற்கான அல்லது நிராகரிப்பதற்கான விதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அல்லது “நான் தமிழன்தான்“ என்று ஒருவர் கூறுவதன் பொருள் அவரளவில் அவர் தமிழன் இல்லை என்பதை உணர்ந்துள்ளார் என்பதுதான். அல்லது அவரை பிறராக்குவதற்கான நிலையில் தனது அடையாளமாக அதனை சொல்ல நிர்பந்திக்கப்படுகிறார். அல்லது தமிழன் என்கிற வரையறைக்குள் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள முனைகிறார். ஆக, வரையறை எப்பொழுது தேவை என்றால் ஒரு உடல் தனது இருப்பை அல்லது அடையாளத்தை நிலைப்படுத்திக் கொள்ளும்போதோ, அல்லது நிலவும் அடையாளத்தை விரிவாக்கவோ அல்லது சுருக்கவோ வேண்டிய தேவை எழும்போதோதான்.
தமிழ் என்கிற வரலாற்று நினைவின் அடிப்படையில் வரையப்பட்ட தமிழகம் என்கிற புவிப்பரப்பானது தமிழ் என்கிற இனத்துடன் இணைந்திருப்பதால், ”தமிழன்” என்பது அடிப்படையில் தமிழ்நிலம் பற்றிய நினைவைக்கொண்ட ஒரு சொல்லாடலே. இச்சொல்லாடலினால் இயக்கப்படும் தமிழினம் என்பதிலிருந்தே மேற்சொன்ன பிரபலமான வாக்கியங்கள் வெளிப்பட்டு, இன்றைய தமிழக அரசியலை தீர்மாணித்தவையாகவும், தீர்மாணிப்பவையாகவும் இருக்கின்றன என்பதில் இருகருத்து இருக்க வாய்ப்பில்லை.
தமிழ்தேசிய இனமுரண்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தமிழ் தேசியம் என்கிற அறிவுக் குவியத்துடன் அல்லது கருத்தியலுடன் இவ்வாக்கியம் பரவலாக்கப்பட்டது. இவ்வாக்கியம் அனுமானிக்கும் 2 விடயங்கள் 1. தமிழன் என்று சொல்பவரை தீர்மாணிப்பது. அல்லது தமிழன்பற்றிய அல்லது தமிழ் தேசியம் பற்றிய ஒரு வரையறையைக் கொண்டதாக உள்ளது. 2. தமிழன் என்கிற தமிழ்தேசியக் குடிமகனை பிறரான அல்லது பெருந்தேசியமான ஒன்று ஒடுக்குகிறது என்பதும் இக்கூற்றின் வழி முன்வைக்கப்படுகிறது. தமிழன் என்கிற சொல்லின் பெருமிதத்தை கட்டமைக்கும் இவ்வாக்கியம் தமிழ்தேசிய இனத்தினை மரியாதைக்குரியதாக தலைநிமிர்ந்து பெருமிதம் கொள்ளச் செய்வது தமிழன் என்கிற இனமேலாண்மை நிலையே என்பதை சொல்கிறது. வேறுவிதமாகச் சொன்னால் '”தமிழனை“ நினைவூட்டுவதன் வழியாக தமிழ்தேசியத்தை மீளாக்கம் செய்ய முயல்கிறது. தமிழ் என்கிற கருத்துருவத்தின் தோற்றத்துடனும், தமிழ் என்கிற தேசிய இனத்தின் கட்டமைப்புடனும் தொடர்புகொண்ட ஒரு வாக்கியம் அல்ல இது என்றாலும், தமிழ் தேசிய இனம் தன்னை அதிகாரமாக மாற்றிக் கொள்வதற்கான ஒரு குறிப்பான சொல்லாடல்களமாக அமைந்த வாக்கியம் இது.
தமிழ் என்ற சொல் குறிக்கும் அர்த்தம் இவ்வாக்கியத்திற்கு முன்பு எதுவாக இருந்திருந்தாலும் இவ்வாக்கியத்திற்குப் பிறகு இனமாகவும், அம்மொழி பேசும் மக்களின் தன்மானத்தின், சுயமரியாதையின், வாழ்வாதாரத்தின் அடிப்படையாக மாறிவிட்டது. இனியும், தமிழ் என்பது ஒரு மொழிமட்டுமல்ல அது ஒரு உணர்வு என்பதாக கட்டமைத்துள்ளது. துன்பத்தை உணர்வதைப்போல, இன்பத்தை உணர்வதைப்போல தமிழையும் உணரவேண்டும். அதாவது 'செந்தமிழ்நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே" என்பதைப்போல இனிமையானதாக, சுவையானதாக உணரவேண்டும் என்பதே இதன் அடிப்படை.
குறிப்பாக, இவ்வாக்கியம் வெளிப்படும் சூழலை இவ்வாறு அனுமானிக்கலாம. யாரோ தமிழன் தலைகுனிந்திருப்பதை பார்த்துதான் இதனை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்க வேண்டும். உண்மை நிலையும் அதுதானா? என்கிற வரலாற்றுச் சூழலைப்பார்த்தால் ஏற்படும் கேள்விகள் இவைதான். ஏன் இந்த தலைக்குனிவு? இது தானே ஏற்பட்டதா? இல்லை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா? அல்லது தமிழன் தலைகுனிந்திருப்பதை சொன்னால்தான் தலைநிமிர்த்த ஒரு தலைவர் தேவைப்படும் என்பதாலா? தமிழன் தன்னை தமிழனாக உணரவில்லை அப்படியே உணாந்து கொண்டாலும் தன்னை ஒரு உள்ளடக்கப்பட்ட ஒரு இனமாக உணர்கிறான் என்கிற அடிப்படை யூகத்திலிருந்தே இவ்வாசகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை சொல்வதன் மூலம் பெரிமிதமாக தலைநிமிர வேண்டும் என்கிற எண்ண ஓட்டத்தின் வெளி்ப்பாடே. ஒரு இனம் வரலாற்றுப்போக்கில் தன்னை கண்ணடடைவதும், கட்டமைத்துக் கொள்வதற்கான முயற்சியின் அடிப்படையில் வரும் வாசகங்கள் இவை. இதன் மற்றொருக்கூறு தமிழன் என்று யாரை சொல்வது என்பது? அல்லது தமிழன் என்கிற இனஉடலை அல்லது இனமனிதனை எப்படி வரையறுப்பது? இது தமிழ் என்கிற அடையாளம் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல. தமிழ் இனம், தமிழ் தேசியம், தமிழன் என்கிற கருத்துருவம் சார்ந்த சொல்லாடல்களின் பிரச்சனை. அதாவது. இவை எல்லாம் இனம் சார்ந்த பிரச்சனை என்பதால் இனம் குறித்து பொதுவான கோட்பாட்டு அடிப்படைகளை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
வரலாறு ஒரு உடலினை நிலமயமாக்கும் (territorialized) செயலுடன் துவங்குகிறது. ஒரு உடல் பிறக்கும்போது ஒரு உயிரி என்ற அளவில் ஏதுமற்றதாக உள்ளது. அது முதன்முதலாக தாயுடன், தந்தையுடன், குடும்பத்துடன் இணைத்து அடையாளப்படுத்தப்படும்போது அது தனது பிறப்பு சார்ந்த குடும்பத்தின் நிலத்துடன் பிணைக்கப்படுகிறது. எனவேதான இனம் என்பது பிறப்புடனும், நிலத்துடன் இணைந்த ஒரு அடையாளமாக உள்ளது. அல்லது பிறப்புடனும், நிலத்துடனும் இணைந்து ஒரு அடையாளமே இனம் எனப்படுகிறது. இவ்வாறாக, தாய்நாடு என்பது தனது இனம்சார்ந்த ஒரு உணர்வாக மாறிவிடுகிறது. ஒருவகையில் வரலாறு என்பது இப்படித்தான் இன அடையாளங்கள் நிலத்துடன் பிணைக்கப்பட்டு வளர்ந்து பல பூகோளப் பரப்புகளைப் பற்றியதாக உள்ளது.
ஆக, இனம் என்கிறக் கருத்தாக்கம் நவீன சமூகத்துடன் அல்லது முதலாளித்துவ சமூகத்துவத்தின் வரலாற்று எழுதுதலுடன் துவங்குகிறது. இந்த எழுதுதல் என்பது ஒரு தனிமனித உடலின் மீது முதலாளித்துவ பண்பாட்டு கருவிகளால் மற்றும் அதன் முகவர்களைக் கொண்ட பல நிறுவனங்களால் எழுதப்படுகிறது. பண்டைய செவ்வியல் சமூகங்களில் இருந்த பல்வேறு அரசாட்சிகள் பிரஞ்சுப் புரட்சியின் விளைவாக உருவான முதலாளித்துவ அரசுகளால் வீழத்துவங்கின. 1789-ற்குப்பிறகான பிரஞ்சு அரசுதான் பிரஞ்சு மக்களை உருவாக்கியது என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். பிரஞ்சு பேசும் மக்களை ஒருங்கிணைத்த பிரஞ்சு தேசியம் 1880-ல் பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு பிரஞ்சுக்காரனும் 'கட்டாய இராணுவசேவை" (conscription) செய்யவேண்டும் என்ற சட்டத்தின் மூலம் பிரஞ்சு தேசியவாதமாகவும் பிரஞ்சு என்கிற மக்கள் அடையாளமாக மாறுகிறது. ஆக, தேசியம் என்பதும் தேசம் என்பதும் அதிகார உருவாக்கத்தின் நவீன அரசு உருவாக்கத்தின் விளைவே. அதிலும் தமிழ் என்கிற தேசிய இனம் உருவானது ஆங்கிலேய காலனீய ஆதிக்கத்திற்கு எதிர்ப்பாக உருவான இந்திய தேசியத்திற்குப் பிறகே. குறிப்பாக பெரியாரின் திராவிடத் தேசியம் என்கிற கருத்தாக்கத்தின் ஒரு மையவிசையாக உருவானதே தமிழ் தேசியம்.
தேசியம் என்பது இனம் என்கிற கற்பிதத்தினை அடிப்படையாகக் கொண்டது. இனம் ஒரு மொழிபேசும் மக்கள்கூட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ஓரு குறிப்பிட்ட மொழிபேசும் மக்கள்கூட்டம் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புடன் இணைந்து வாழ்ந்து வருகிறது. ஆக. தேசியம் என்பது நிலத்துடன் பிணைந்துள்ளது. ஒரு நிலப்பரப்பில் வாழும் ஒரே மொழிபேசும் மக்கள்கூட்டம் தனது இனம் சார்ந்தவர்கள் அனைவரையும், மிகச்சிறிய ஒரு நிலப்பரப்பாக இருந்தாலும்கூட, எந்தவகையிலும் பார்ப்பது சாத்தியமற்றது, அவர்களைப்பற்றி கேட்பதும்கூட சாத்தியமற்றது, தனது எண்ணத்தில் மட்டுமே தனது இனத்துடன் கூடி வாழ்தல் சாத்தியம் என்பதால்தான் ஒரு இனத்தை சேர்ந்தவன் என்கிற உணர்வே கற்பனையானதாக இருக்கிறது. எனவே, இனம் என்பதே அடிப்படையில் ஒரு அரசியல் கற்பிதம் என்கிறார் பெணடிக்ட் ஆண்டர்ஸன் தனது ”Imagined Communities: Reflections on the Origin and Spread of Nationalism” என்கிற நூலில். அதாவது, இயல்பாக இயங்கிவரும் ஒரு மக்கள் கூட்டத்தின்மீது இந்த இனம் என்கிற கற்பிதம் மேற்பொருத்தப்படுகிறது.
இந்த கற்பித தேசியம் உருவாக ஒரு மொழி என்பது அடிப்படையாக அமைந்துள்ளது. அல்லது மொழிதான் இந்த மக்கள்கூட்டததை ஒரு இன அடிப்படைக்குள் கொண்டுவருகிறது. இந்த தேசிய இயக்கம் அரசாட்சிமுறை என்கிற கடவுள் ஆசிபெற்ற புனித ஆட்சிமுறைகளை ஒழித்தது. குறிப்பாக, முதலாளித்துவ சமூகத்தின் கீழ் இருந்த அச்சு எந்திரம் உருவாக்கிய புத்தகங்கள், பிரதிகள், செய்திப் பத்திரிக்கைகள் ஆகியவற்றின் மூலம் பரவலாக்கப்பட்ட மொழி மற்றும் அறிவின் வழியாகவே ஒரு மக்கள் கூட்டமானது ஒரு மூலையிலிருந்து பிறிதொருமூலையில் உள்ள தனது இன உடலுடன் கற்பனையாக தொடர்பு கொள்ள முடிகிறது. இத்தொடர்பின் வழியாக தன்னை ஒரு இனமாக உணர்கிறது, தனக்கான அடையாளத்தை உணர்கிறது என்கிறார் ஆண்டர்ஸன்.
ஒரு நிலப்பரப்பில் உள்ள பல வழக்குமொழிகளும் (local dialects) அச்சு -முதலாளித்தவம் (print-capitalism) முன்வைக்கும் மொழிவழியாகவே தனது இனம்சார்ந்த பிறரை புரிந்துகொள்ள முடிகிறது. இதன்வழியாக ஒரு பொது மொழிக்களம் அல்லது சொல்லாடல்களம் உருவாக்கப்படுகிறது. முதல் ஐரோப்பிய அரசுகள் 'தேசிய - அச்சு - மொழிகள்" வழியாகவே உருவானது என்கிறார் ஆண்டர்ஸன். ஒரே நிலப்பரப்பில் வசிக்காதபோதும் ஒரு இனம் தன்னை இந்த அச்சு - ஊடக - மொழி மூலம் ஒரு இனமாக உணர்கிறது. சான்றாக தமிழக நிலப்பரப்பிற்கு வெளியே வசித்தாலும் தன்னை தமிழனாக உணர இந்த மொழி அவசியப்படுகிறது. ஈழத்தமிழர்களின் பேச்சு மொழியும், அச்சுமொழியும் இந்த வேறுபாட்டை உணர்த்தும். அச்சு மொழி என்பது இரண்டு தமிழருக்கும் ஒன்றாக இருப்பதை அவதானித்தால் இதனை புரிந்து கொள்ளமுடியும். ஈழத்தமிழரின் தினவாழ்வின் பண்பாட்டுக்கூறுகள் தமிழகத்தைவிட கேரளாவுடன் அதிகம் ஒப்புமை உடையதாக இருப்பதை ஆய்வாளர்கள் முன்வைப்பதை இதனுடன் இணைத்துக் காணலாம். ஆக ஈழத்தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்குமான இணைவு என்பது தமிழ் என்கிற மொழிவழியாகவே சாத்தியமாகி உள்ளது. ஏன் தமிழகத்தில் உள்ள பல வட்டார வழக்கு மொழிகளும் அரசால் முறைப்படுத்தப்பட்ட அச்சு - ஊடக - தமிழ் மொழியாக ஒழுங்கமைக்கப்பட்ட மொழியால்தான் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒரு இனமாக உணர்கிறோம் என்பது கண்கூடு.
இந்த கற்பித தேசியத்துடன் எட்வர்ட் சைத்தால் அவரது கீழ்திசைவியல் (orientalism) கருத்தாக்கத்துடன் முன்வைக்கப்பட்ட ”கற்பித புவியியல்” (imagined geographies) என்கிற ஒன்றையும் இணைத்துக் காண்பது அவசியம். இங்கு கற்பிதம் என்பது படைப்பூக்கமிக்க கற்பனைதானே தவிர, வெற்றுக் கற்பனையோ அல்லது பொய் அல்லது மாயை என்கிற அடிப்படையைக் கொண்டதோ அல்ல. இன்றைய புவிசார் அரசியலின் ஒரு விளைவே இந்த கற்பித புவியில். பிம்பங்கள், பிரதிகள் அல்லது சொல்லாடல்கள் மூலம் உருவாக்கப்படும் ஒரு கற்பித வெளியான இது, அதிகாரத்தால் கட்டுப்படுத்தப்படும் பகுதியாக உள்ளது. சான்றாக, பின்தங்கிய, நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் என உருவகப்படுத்திக் காட்டப்படும் பிம்பங்கள், பிரதிகள், ஆய்வுகள், செய்திகள் வழியாக கட்டமைக்கப்படும் இஸ்லாமிய உலகங்கள் பற்றிய கற்பிதங்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் கற்பித பூகோளப் பரப்புகளான ஆப்கான், ஈராக் மீதான அமேரிக்க படையெடுப்பு இதனால்தான் நியாயப் படுத்தப்படுகிறது. புவிசார் அரசியலுடன் தொடர்புள்ள இந்த பூகோளப் பரப்புகளின் யதார்த்த நிலமைகளைவிட கட்டமைக்கப்பட்ட நிலமைகளே இன்றைய யதார்த்தமாக்கப்பட்டுள்ளது. அமேரிக்க படையெடுத்த ஆப்கான், ஈராக் போன்றவை அமேரிக்கா உருவாக்கிய கற்பிதமான ஒரு பூகோளப் பரப்புகளே. அந்நாடுகளை அழிப்பதன் வழியாக ஜனநாயகத்தையும், நாகரீகத்தையும் உருவாக்குவதாக உலகெங்கிலும் நம்ப வைக்கப்படுகிறது. அதாவது அமேரிக்கா ஒரு புதிய பூகோளப்பரப்பை தனது கற்பிதத்தின் அடிப்படையில் இஸ்லாமிய உலகங்களின் மத்தியில் தனக்கு எடுபிடியாக அமைக்க முயல்கிறது. இதன் பக்கவிளைவாக இஸ்லாமிய தற்கொலைப் பயங்கரவாதம் என்பது வளரத் துவங்குகிறது. தனது உடலை தனது நிலத்தின் ஒரு கற்பித புவியியல் பரப்பாக உணரும் இத்தன்னிலை தனது உடலுக்குள் வெடிகளைப் புதைத்துக் கொள்வதறகான மனநிலையைப் பெறுகிறது.
ஆக, தேசம் மற்றும் தேசியம் என்கிற கற்பிதச் சொல்லாடல்கள் அடிப்படையில் கட்டமைக்கப்ட்ட மக்கள் கூட்டமே இனம் என்பது. இந்த இனம் என்பது ஒரு மொழி பேசும் கூட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இனம் என்பது முதலாளித்துவ சமூக உருவாக்கத்துடன் ஒரு இணை அறிவுப் பரப்பின் காரணியாக உருவாகுகிறது. ஆக, தேசம் என்பதும் தேசியம் என்பதும் ஒரு முதலாளித்துவ கற்பிதம். மன்னராட்சி முறைகளுக்கு எதிராக முதலாளித்துவம் ஒரு தேச எல்லையை அல்லது சந்தையை உருவாக்க மக்களை ஒன்றுபடுத்தும் ஒரு காரணியாக இந்த இனம் என்பது கட்டமைக்கப்படுகிறது. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகங்களில் தேசம் கிடையாது. நாடுகள் அல்லது குடிகள் அல்லது கணங்களின் கூட்டமைப்பும் அதனை ஆளும் அரசாட்சிமுறையுமே இருந்தது. அவை தேசம் என்கிற இலக்கணத்திற்குள் வராது. இனம் ஒரு கற்பிதம் எனும்போது, உயிரும், உணர்வுமான ஒரு இனம், சான்றாக தமிழினம் என்பது ஒரு கற்பனை என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. தமிழினம் என்பது வரலாற்றுவகையில் கட்டமைந்த ஒரு சமூக-அரசியல் விளைபொருள் என்பதாகவே பொருள்கொள்ள வேண்டும். அல்லது "மேற்றிசை-இனவாத தேசியச் சொல்லாடலால்" பொருள்கொள்ளப்படும் ஒரு அரசியல் வகைத்திணை என்பதாகவே புரிந்துகொள்ளவேண்டும்.
மெலும், தேசம் என்பதற்கான வரையறைகளில் தேசியங்கள் குறித்த வரையறைகள் உள்ளன. தேசியம் என்கிற கற்பிதத்திற்கான மூல அலகுகள் மொழி, இனம், நாடு என்கிற வகைத் தினைகளே. நாடுகளை தேசங்களாக மாற்றியது முதலாளியம். அதற்காக அது மேற்கண்ட வகைத் தினைகளை ஒழுங்கமைக்கிறது. அதன் அடிப்படையில் தேசங்களை கட்டி எழுப்பியது, இதன் உள்ளார்ந்த தர்க்கம் என்பது ஒரே மொழிபேசும் ஒரு மக்கள் கூட்டம் என்பதான வரையறை ஒன்று உருவாக்கப்பட்டது. அவர்களை இனமாக வரையறுத்து, அவர்களுக்கான வரலாறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அகழ்வாய்வுகள், மானுடவியல் ஆய்வுகள், தொல்பொருள் ஆய்வுகள், நிலப்படங்கள் உருவாக்குதல் என்பதாக பல அறிவுத் துறைகள் உருவாக்கி இயக்கப்பட்டன. அதற்கு முதலாளிய அரசுகள் பெரும் அளவில் நிதி உதவிகளை செய்தது. தேசங்கள் கட்டமைத்தல் என்கிற முதலாளித்துவத்தின் நவீனமயமாக்கல் என்கிற திட்டத்தின் ஒரு பகுதி 1950-களில் முடிந்ததையொட்டி சர்வதேசியம் என்கிற ஒரு அமைப்பும் அதைச் சார்ந்த சொல்லாடல்களங்களும் கட்டமைக்கப்பட்டன. அதற்கு முன்பே சர்வதேசியவாதத்தை முன்வைத்தது மார்க்சியம் என்றாலும், அது முன்வைத்த சர்வதேசியவாதமும் இன்றைய சர்வதேசியவாதமும் ஒரே அடிப்படைகளைக் கொண்டதல்ல. மார்கசியம் முன்வைத்தது பாட்டாளிவர்க்க சர்வதேசியம் என்றால் இன்றைய தேச அரசுகளின் சர்வதேசியம் ஏகாதிபத்திய பன்னாட்டு மூலதன சர்வதேசியம் ஆகும். இன்று உலகமயமாக்கல் என்கிற சொல்லாடல்வழி கட்டமைக்கப்படும் சர்வதேசியத்திற்கான அடிப்படையே 1950-களில் கட்டமைக்கப்பட்ட சர்வதேசியமாகும்.
இந்த தேச-அரசு திட்டத்தின் விளைவான இந்திய தேசியம் உருவான கதையை சுருக்கமாகப் புரிந்துகொள்ள முயல்வோம். 17-ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவம் தனது சந்தைகளை விரிவுபடுத்தும் நோக்கில் நாடுகளை கண்டடையும் பணிகள் துவக்கப்பட்டன. காலனீயம் உருவானது. இக்காலனியத்தை உருவாக்கிய வெள்ளை ஏகாதிபத்தியம், காலனீய மக்களை ஆள்வதற்கான ஆளுகை தொழில்நுட்பத்தை (governmentality) அறிவதற்கான முயற்சியில், தன்னை ஒரு இனமாக கண்டு கட்டமைத்துக் கொண்டது. பிறகு, வரலாற்று உருவாகக்ததிலும் தனது தொழில்நுட்ப அறிவாலும் தன்னை உயர் இனமாக வடிவமைத்துக் கொள்வதற்கான ஒரு அறிவுத் துறையாகவே இந்த ஆராய்ச்சிகளை துவக்கி, காலனிய மக்களின் இனவரைவியலை தனது ஆய்வாளர்களைக் கொண்டு உருவாக்கியது. இதன் எதிர்விளைவாக காலனீய நாடுகள், தங்கள் இனங்களை ஒருங்கிணைத்து தன்னை ஒரு இனமாகக் கட்டமைத்துக் கொண்டன. வரலாற்றில் தங்களை இனமாக அறிந்து கொண்டபின், தனது பழங்கதைகளை, நம்பிக்கைகளை, பண்பாட்டை எல்லாம் புதிய இனவரலாற்றுவாத அடிப்படையில் எழுதிக் கொண்டன. அதாவது, நவீன சமூகத்தின் அறிவைக் கட்டுப்படுத்தம் மற்றும் வழிநடத்தும் “இனவரலாற்றுவாத“ சொல்லாடல் வழியாக உலகம் அறிந்துகொள்ளப்பட்டது. வரலாற்றுப் பெருமிதம் என்பது ஒரு அடிப்படை அளவுகோலாகவும் அதிலும் பார்க்க, அரசியிலின் ஒரு முக்கிய தீர்மானகரமான அளவுகோலாகவும் மாறியது. இனங்களின் நினைவிலி மனப்புலத்தை கட்டமைப்பதாகவும், தன்னை ஒரு இனமாக உணர்வதே 'காதில் பாய்ந்தோடும் இன்பத் தேனாகி' இனிப்பதாக மாறியது. இனமாக உணர்தல் என்பது இதமான உணர்வாக மாறியது. அது ஒருவகை பாதுகாப்புணர்வாகச் செயல்படுகிறது என்பது மிகைக்கூற்றாகாது.
இந்தியா என்கிற பல்-தேசிய அமைப்பில் இந்த வரலாறு என்பது இரண்டு கட்டங்களில் நடந்தேறியது. முதல்கட்டத்தில் காலனிய எதிர்ப்புப்போரில் தன்னை வலிமையாகத் திரட்டிக்கொள்ள இந்தியா என்கிற ஒற்றை தேசியம் கட்டமைக்கப்பட்டது. ”வேறுபாடுகளில் ஒற்றுமை” என்கிற இத்தேசியத்தில் மொழி என்பது இரண்டாம்பட்சமாகவும் நிலம் என்பது முதன்மையானதாகவும் இருந்தது. இந்த நிலம் மொழியால் வரையறுக்கப்படாத மதங்கள் மற்றும் பண்டைய வரலாற்று நினைவுகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டது. அதாவது ஒருவகை 'பண்பாட்டு தேசியவாதம்' என்பதற்கான பான்-இந்தியக் கூறுகளைக் கொண்டதாக இது இருந்தது. காலனிய எதிர்ப்புப்போர் என்பதன் அடிப்படையில் நிகழந்த இந்த 'இந்திய தேசியம்" என்கிற கருத்துருவம், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, இரண்டாவது கட்டத்தை அடைகிறது. அதாவது இந்திய தேசியம் என்பது பெருந்தேசியமாக வலிமையான நடுவண் அரசைக் கொண்ட ஆதிக்கமாக மாறி தங்களது தனித்தன்மைகள் அழிக்கப்பட்டுவிடும் அபாயத்தை உணர்ந்த தனித்த தேசிய இனங்கள் தங்கள் வரலாற்றை தேடத்துவங்கி தங்களை இனமாக கட்டமைத்துக் கொண்டன. தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் கட்டமைப்புகளும், அரசதிகாரமும் இந்த புள்ளியில்தான் துவங்கின.
மனித இனம் என்பது மரம் போன்று வேரும், தண்டும், கிளையும், இலையும், பூவும், காயும், கனியுமானது என்பதான ஒரு உருவகமே வரலாறு என்கிற இச்சிந்தனை முறையின் அடிப்படையாக அமைந்தது. கிளையை புரிந்துகொள்ள வேரைத் தேடிச் செல்வதும், வேரின் ஆழத்தைக் கொண்டு எவ்வளவு பழமையானது என்பதை அறிந்து வாழத்தகுதி அதற்கே அதிகமாக உள்ளது என்பதான ஒரு முறையியல் இந்த சிந்தனைக்குள் இயக்கமடைவதைக் காணமுடியும். சுருக்கமாகச் சொன்னால் இந்த மரச்சிந்தனையடிப்படையான வேர்தேடி அரசியலின் விளைவே இன்றைய உலகலாவிய அனைத்து ஒடுக்குமுறைகள், அதிகாரங்கள், போர்கள், வன்முறைகளுக்கு காரணம் என்பது சொல்லாமலேயே விளங்கும். சான்றாக, மேற்சொன்ன தற்கொலை பயங்கரவாதம் (suicide terrorism ) என்கிற நிகழ்வு பெரும்பாலும் நவீன ஜனநாயக அரசுகளின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போரின் ஒரு வெளிப்பாட்டு வடிவமாகவே நிகழ்ந்து வருகிறது. 1980-2005-ற்குள் 315 தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளதாக அமேரிக்க அரசியல் விஞ்ஞானியான ராபர்ட் பேப் பதிந்துள்ளார். இதில் 82-சதமானம் சுதந்திரம் வேண்டி நடத்தப்பட்ட பாலஸ்தீன், குர்திஷ், தமிழீழம், சேச்சன்யா மற்றும் காஷ்மீர் பிரிவினைச் சார்ந்தவை. மற்றவை அந்நிய ஆக்ரமிப்பிற்கு எதிரான தேசிய அரசுகளின் சார்பாக நடத்தப்பட்டது என்கிறார். குறிப்பாக இத் தற்கொலைத் தாக்கதல்களினை வழிநடத்தும் தலையாய கடமைகளில் ஒன்றாக தேசியவிடுதலை என்பது உள்ளது என்கிறார். (The Strategic Logic of Suicide Terrorism - ROBERT A. PAPE - The University of Chicago)
அமேரிக்க சுதந்திரப்பிரகடனமும், பிரஞ்சு மனித உரிமை சாசனமும் மனித உடலை குடிமகன்களாக அறிவித்து, தேசியத்தின் அல்லது தேசியவிடுதலையின் காலகட்டத்தை துவக்கி வைத்தன. உலகெங்கிலும் முடியாச்சிமுறை ஒழிந்து குடியாட்சிகளின் சகாப்தம் துவங்கியது. தேசுஅரசுகளின் உருவாக்கம் துவங்கியது. கடந்த இரு நூற்றாண்டுகளில் பிரிந்தும், இணைந்தும் உருவான 191 புதிய தேசங்களும் அரசுகளும் சர்வதேசத்தை உருவாக்கின. தேசிய-அரசுகள் என்கிற பிரச்சனை கடந்த அரை நூற்றாண்டில் உள்நாட்டுப் போர்களாக வெடித்து வருகிறது. பாலஸ்தீனம் துவங்கி இலங்கை மற்றும் ஜார்ஜியாவரை இது நிகழ்ந்து வருகிறது. சர்வதேச அமைதிக்கான ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த (International Peace Research Institute, Oslo (PRIO)) நில்ஸ் பீட்டர் கிளடிஸ்ட் (Nils Petter Gleditsch )-ன் ஆய்வுப்படி 1946-2000 -த்திற்கு இடையில் 184 போர்கள் இறையாண்மையை காக்கும் அரசுகளின் பெயரால் நடந்துள்ளது. இவற்றில் பாதிக்கும் மேலானவை (51.6 சதமானம்) தேச-அரசுகளின் (nation-state) பிரிந்து போதல் அல்லது மற்ற நாட்டுடன் இணைதல் என்பதான பிரச்சனைகளே என்கிறது இவ்வாய்வுகள். (quoted from Philip G. Roeder: Where Nation-States Come From - 2007, Princeton University Press.)
தேசிய - அரசுகளின் தோற்றம் பற்றிய இந்த மரவகைச்சிந்தனைமுறைக் குறித்து பேசுவதால், இவற்றின் அடிப்படையாக உள்ள பொருளியல் நலன்களை, சுரண்டல்களை மறுக்கிறோம் என்று பொருளல்ல. பொருளியல் நலன்களுக்காக இந்த வரலாறுகள் எப்படி கட்டமைக்கப்படுகின்றன? உலகெங்கும் சுதந்திரம். அமைதி, சகோதரத்துவம் என்கிற பெயரால் ஜனநாயகத்தை மையமாகக்கொண்ட தேசிய அரசுகளை கட்டமைப்பதின் வழியாக குடியாண்மை சமூகத்தை (civil society) உருவாக்கும் முயற்சியில் அவை செய்யும் தீவிர ஆயுத வியபாரத்தையும், இவை உணர்த்துகிறது. இம்மரவகைச் சிந்தனையின் அடிப்படையில் காலனிய காலகட்டத்தில் எல்லா மக்களதும் சொந்த தற்சார்பான வரலாறுகள் கதைகள் மையமான வரலாற்றுக் கதையாடல்களுக்குள் கொண்டுவந்து முறைப்படுத்தப் பட்டன. புரிந்துகோள்ள முடியாத பழங்கால நம்பி்க்கைகளை பகுத்தறிவின் துணைகொண்டு அளந்து வெட்டியும் ஒட்டியும் ஒரு புரிதலுக்கள் அல்லது ஓரமைவாக்க அறிதலுக்கள் கொண்டுவந்தன.
இவ்வாறு, கட்டமைக்கப்பட்ட இனங்களே இன்று இந்தியாவில் உள்ள இனங்கள். இந்த கட்டமைப்பிற்கான அடிப்படைகளாக நாடுகளின் எல்லைகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு, மொழி அடிப்படையிலான வகைபாடுகள் என உடல்கள் பிரித்து கண்காணிக்கப்பட்டு எண்ணி எண்களாக புள்ளி விபரங்களாக மாற்றப்பட்டன. ஒவ்வொரு மொழிக் கூட்டத்தினதும் வேர் தேடிய வரலாறுகள் நடைபெற்றன. இப்படி கண்டடையப்பட்ட வரலாறுதான் 'கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன்தோண்டிய மூத்தக்குடியான' தமிழக்குடியின் வரலாறும்.
இந்திய சுதந்திரத்திற்கு்பிறகு 1948-ல் அமைக்கப்பட்ட தார் கமிஷன் (Dar Commission) வலிமையான அதிகாரம் குவிக்கப்பட்ட நடுவன் அரசு உருவாக்கப்பட வேண்டும் என்றும், அத்துடன் மொழிப்பெரும்பாண்மைக்கொண்ட மாநிலங்களை பிரிப்பதன் மூலம் நிர்வாகத்தை பிரித்து வெடித்துச் சிதறிவிடும் போக்கைக் கொண்ட மொழிவாரி மாநில சச்சரவுகளுக்கு தீர்வு ஏற்படுத்தலாம். மேலும், தேசிய உணர்வை வலுப்படுத்துவதன் மூலம் இந்திய தேசத்தை கட்டமைக்கலாம் என்று பரிந்துரைத்தது. (Reorganisation of States in India - Mahendra Prasad Singh, Economic & Political Weekly - March 15, 2008). இப்பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்திய மொழிவாரி தேசியங்களின் அடிப்படையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இவற்றிலிருந்து, இந்திய தேசியத்திற்குள் மத தேசியம் (religious nationalism) மற்றும் இன தேசியம் (ethnic nationalism) என்ற இரண்டுவகையான தேசியம் இயக்கமடைவதை அவதானிக்கலாம். இவை இரண்டும் இந்திய கூட்டமைப்பில் உள்முரணாகவும் ஒன்றை ஒன்று எதிர்ப்பதாகவும், பல நேரங்களில் ஈடுசெய்து கொள்வதாகவும் உள்ளது. இந்தியா மத தேசியத்தை முன்னிறுத்த, தமிழகம் போன்ற தனித்ததான பிராந்திய தேசியங்கள் இனதேசியத்தை முன்வைப்பதாக உள்ளன. மத தேசியம் முன்வைக்கும் இந்திய தேசிய விசவாசமே தேசப்பற்று என்கிற வடிவத்தை எடுக்கிறது. இந்தியாவில் ஐரோப்பிய சமூகங்களைப்போல குடியாண்மை தேசியம் (civic nationalism) என்பது வளராமல் மதவாத தேசியம் போன்ற ஒன்று (இதனை மத-தேசியம் என்று குறிக்கலாம்) வளர்நது வந்துள்ளது. இது இந்திய தேசியத்தின் ஒரு தனிச்சிறப்பான குணமாக கொள்ளலாம். காரணம், ஐரோப்பியாவில் நடந்த போர்களில் ஈடுபட்ட இரு பிரிவினரும் தங்களது கிறித்தவ மதப்பிரிவுகளின் அடிப்படையில் எதிரில் உள்ளவருடன் போரிட மறுத்தபோது, -பாரதக் கிருஷண பரமாத்மாப்போல- அதிகாரம் தேசியக் குடிமகன் என்பவன் மதத்தைவிட நாட்டை, தனது இனத்தை, அதற்கான அரசை நேசிக்க வேண்டும் என்பதான விதிமுறையை கட்டமைத்தது. தேசியம் என்பதன் அடிப்படையில் உள்ள இந்த மதச்சார்பின்மை, இந்திய தேசியத்தில் பெயரளவில் மட்டுமே பின்பற்றப்படுவதையும், இந்த மததேசியத்தையே “பண்பாட்டு தேசியமாக” இந்துத்துவா சக்திகள் முன்வைப்பதையும் அவதானிக்கலாம்.
இந்திய தேசியம் பற்றி பேசும்போது, இந்துத்துவா முன்வைக்கும் "பண்பாட்டு தேசியம்" குறித்தும் விளங்கிக் கொள்வது அவசியம். அடிப்படையில் இது இனதேசியத்தை மறுத்து அங்கு ஒற்றைத்தன்மையான மதம் சார்ந்த குறிப்பாக உயர்சாதி பார்ப்பனியத்தின் வேதக்கலாச்சாரத்தை முன்வைப்பதை உணரலாம். இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை மறுப்பதும், இத்தேசிய இனங்கள் எல்லாம் இந்து மதம் என்கிற பார்ப்பனிய மேலாண்மை வேதமதத்தின் ஒற்றைப் பண்பாட்டை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்பதான இந்துமத மேலாதிக்கப் பண்பாடு முன்வைக்கப்படுகிறது. இந்த "இந்துப்பண்பாடு்" அடிப்படையில் இந்தியா என்கிற தேசம் முழுமைக்குமானதா? என்பதும் குறிப்பாக இந்துமதம் என்கிற அமைப்பிற்குள்ளே அடையாளப்படுத்தப்படும் பல சாதிகளின் பண்பாட்டையும் உள்ளடக்கியதா? தலித்போன்ற விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பண்பாட்டையும் உள்ளடக்கியதா? என்பதும் விவாதத்திற்குரிய முக்கிய புள்ளிகள். தேசியம் என்ற சொல்லை குழப்பியடிக்கும் இக்கூற்றை புரிந்து கொள்ளவே இதனை இங்கு சொல்ல வேண்டியதாக உள்ளது.
கடந்த 2 நூற்றாண்டுகளை தேசியவாதத்தின் நூற்றாண்டுகள் எனலாம். இவற்றின் அடிப்படையிலான யூகம் வரலாறு என்பது வளர்ச்சியை நோக்கியது. முன்னேற்றமே மனித குல நோக்கம் என்பதான ஒரு நவீன தொண்மம் கட்டமைக்கப்பட்டது. இம்முன்னேற்றத்தின் அடிப்படையான கதையாடலாக இன்றைய சமூகமே நாகரிகமான வளர்ந்த சமூகம் என்பதாகவும் ஆதி மனிதனை அடிமுட்டாள் என்றும் நம்மை அறிவாளி என்றும் கூறிக் கொள்ளும் ஒரு உலகப்பார்வை பொதுபுத்தியாக கட்டமைக்கப்பட்டது. முன்னேற்றம், வளர்ச்சிப் போன்ற கருத்தாக்கங்கள் பொதுவான சொல்லாடல்களாக மாறியது. இது, உலக அரசியலை, வாழ்வை, தனிமனிதனை தீர்மானிக்கும் ஒரு அறிவுக்குவியமாக மாறியது. சக மனிதன் மீது பரிவும் அன்பும் செலுத்துவது ஒரு அடிப்படை அறமாக போதிக்கப்பட்டது. இதன் எதிர்நிலையில் மனிதர்களுக்கிடையேயான வேறுபாடு் என்பது அழிக்கப்படாமல், அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்பதான கோட்பாடாக வடிவமைக்கப்பட்டது. தனிமனிதன் என்பவன் கண்டு அறிவிக்கப்பட்டான். இவன் ஒரு மொழியை இனத்தை நாட்டை பிரதிநிதித்துவம் செய்யும் குடிமகனாக மாற்றப்பட்டான். இவனது உடல் மற்றும் மன உபாதைகள் அத்தனையும் அறிவியலாக மாற்றப்பட்டன. சிலவேளை அவை ஆன்மீகமாக அறியப்பட்டன.
மனிதர்கள் நிறத்தால், மொழியால், பண்பாட்டால், வரலாற்றால் மூதாதையார்களால், ஒருபடித்தானவர்கள் என்பதான ஒரு ஒருமை வாதமே இதன் அடிப்படை. இதிலிருந்தே தேசியம் என்கிற கருத்துருவம் கட்டமைக்கப்பட்டது. சிறு சிறு குடிகளாக அறியப்பட்ட தனிமனித உடல்கள் முதலாளித்தவ இறையாண்மை எனகிற அரசமைப்பு தத்துவத்தால் குடிமகன்களாக மாற்றப்படுகிறார்கள். குடிமகன் என்பவன் ஒரு தேச அடையாளத்தைக்கொண்டவனாக கட்டமைக்கப்படுகிறான். அவனது எழுதாச் சட்டமாக அரசின் இறையாண்மையை ஏற்று அதற்கு அடிபணிந்து அதனை காப்பதை தனது கடமையாக கருதுகிறான்.
ஜனநாயக அரசியலுடன் அல்லது அரசுடன் ஒரு தனி உடல் சட்டரீதியாக இணைப்பதன் வழியாக குடிமகனாக ஆக்கப்படுகிறது. ஒரு தனிமனிதன் குடிமகனாக மாறுவதால், குடியாண்மை சமூகத்திற்கான சில முக்கிய கடமைகளை செய்வபவனாக மாறுகிறான். வரிகட்டுதல், உள்நாட்டு பாதுகாப்பிற்காக அழைக்கப்படும்போது இராணுவசேவை செய்தல்.தனது நாட்டை உள் மற்றும் வெளி ஆபத்துகளில் இருந்து பாதுகாத்தல், தனது சார்பாக ஒருவரை அரசாங்கத்திற்கு தேர்ந்தெடுத்தல், அரசுக்கும் தான் சார்ந்த இனத்திற்கும் விசுவாசமாக இருத்தல் ஆகியன குடிமகனின் கடமைகளாகும். குடிமகனாதல் என்கிற நிகழ்வு குறித்த நடைமுறைச்சித்திரம் இதுதான் என்றாலும், குடிமகனாதல் என்பது எவ்வாறு நிகழ்கிறது என்பதை கொஞ்சம் ஆழ்ந்து அவதானிப்பது அவசியம்.
கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாட்டில் மனிதர்கள் அரசியல் அல்லது சமூக உயரிகளாகவும் (bios) அதேநேரத்தில் தனது இயல்வாழ்க்கைக்கான உயிர் தொகுதியைச் சேர்ந்த உடலியல்-உயரிகளாகவும் (zoe) இருக்கிறார்கள் என்றார். இந்த இருமைவாதம் குடிமகன் மற்றும் மனிதன் என்கிற இரண்டு தன்னிலை வடிவங்களை அடிப்படையாகக் கொண்டது என்று இதனை வளர்த்தெடுக்கிறார் தற்காலத்திய இத்தாலிய தத்துவ இயலாளரான ஜியார்ஜியோ அகம்பன். ஒவ்வொரு உடலிற்குள்ளும் உள்ள உயிர்த்தல் மற்றும் வாழ்தல் குறித்த இருமையின் விளைவாக வாழ்தலுக்காக ஒரு உயிர் தனது உயிராற்றலை அரசியலுக்கு அல்லது தனது குடியாண்மைச் சமூகத்திற்கு அல்லது தனது இனத்திற்கு செலவழிப்பதற்கான ஒரு ஆளுகை தொழில்நுட்பமே குடிமக்களாதல் எனலாம். ஒரு உடல் குடிமகனாக மாறுவதன் மூலம் ஆளப்படும் தன்னிலையாக மாற்றம் பெறுகிறது. ஒரு அதிகார அமைப்பு ஒரு உடலை ஆள்வதற்காக அவ்வுடலின் உயிராற்றலை தனது ஆட்சியின் இறையாண்மைக்காக முதலீடு செய்யும் செயலாகவே இந்த குடிமகனாதல் என்கிற செயல் நடைபெறுகிறது. மனிதனுக்கு உரிமைகள் கிடையாது அது குடிமகன்களுக்கு மட்டுமே உண்டு என்பது இறையாண்மை. உயிரிகள் என்ற அடிப்படையில் மனிதர்களுக்கு சுதந்திரம் உண்டு என்பது உயிரரசியல். மனித சுதந்திரத்தை தனது ஆளுகை தொழில்நுட்பத்தால் கட்டுப்படுத்தவதே இறையாண்மையின் அடிப்படை செயல்பாடாகும்.
மேற்றிசை மரபான இறையாண்மை மேய்ச்சல் சமூகத்தின் அடிப்படையில் உருவானது என்றும் யூத - கிறித்துவ ”மேய்ப்பன்-மந்தை“ விளையாட்டு அமைப்பைக் கொண்டது என்றும் கூறுகிறார் மிஷேல் பூஃக்கோ. மேய்ப்பனின் அதிகாரமானது நிலத்தின் மீது இருப்பதில்லை, மந்தைகளின் மீதே. இறையாண்மையின் முக்கியமான கவனம் மக்கள் மீதே நிலத்தின்மீது அல்ல. மந்தையின் இருப்பு மேய்ப்பனின் செயல்பாட்டிலே இருப்பதைப்போல அரசாங்கத்தின் சட்டரீதியான ஆளுகையினாலேயே குடிமக்களின் இருப்பு என்பது உள்ளது. மேய்ப்பன் என்பவன் உயர்ந்த நிலையில் உள்ளவன் என்பதால் அவன் மந்தையின் அனுமதியைப் பெறவோ அதன் ஒப்புதல் அடிப்படையிலேயோ மேய்க்க வேண்டிய அவசியமில்லை. மக்களை ஆள மக்களின் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை. மேய்ப்பனின் அதிகாரம் என்பது ஒரு கடமையாக தெரியக்கூடியதே தவிர அது அதிகாரமாகத் தெரிவதில்லை. இந்த கடமைதான் அரசின் குடிமக்களின் நலவாழ்விற்கான கடமையாக வடிவம் கொள்கிறது. உண்மையில் அந்த நலவாழ்வு என்பது தீர்மாணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்கான அதிகாரமாக செயல்படுவதே. “நவீன தேசஅரசகளின் அடிப்படையான இறையாண்மை என்பது உயிராற்றலுடன் (biopower) தொடர்புகொண்டதாக இருக்கும் உயிரரசியல் (biopolitical) சமூகங்களில் அரசியல் அதிகாரம் என்பது முற்றிலும் நிர்வாக அதிகாரமாகவே செயல்படுகிறது, அதாவது அதிகாரம் நிபுணர்கள் (the experts) மற்றும் வாழ்க்கையை பொருள்விளக்கம் செய்பவர்களின் (interpreters of life) கைகளில் இருக்கும்” என்கிறார் பூஃக்கோ. (The Unrequited Love of Power: Biopolitical Investment and the Refusal of Care - Sergei Prozorov, Petrozavodsk State University.)
செவ்வியல் காலத்தில் அரசு-குடிமக்கள் உறவு மக்களிடையே படிநிலை அமைப்பை உருவாக்கி பிரித்து வைத்தது. 1. கிரேக்கம் நகர-அரசு உறவின் வழியாக மேட்டிமையினர் (patricians), பணியாளர்கள் (plebeians), மற்றும் அடிமைகள் என பிரித்தது. 2. ஐரோப்பிய நிலவுடமை அமைப்பானது பிரபுக்கள், விவசாயிகள் மற்றும் அடிமைகளை என பிரித்தது. 3. பண்டைய இந்திய சாதிய அமைப்பு சட்டரீதியான சடங்குகளின் அடிப்படையில் சுத்தம் மற்றும் தீட்டானவர்கள் என பிரித்தது. 4. இனஒதுக்கலைக் கொண்ட ஆப்பிரிக்கா இனம் மற்றும் நிற அடிப்படையில் பிரித்தது. இப்பிரிவுகளில் ஆதிக்கம் செய்பவரும் ஆதிக்கத்திற்கு உட்படுபவர்களும் சமமற்றவராக பிரித்து வைக்கப்பட்டனர். (Citizenship, Nationality and Ethnicity in the Context of Globalization: Situating Australia- Prof.T.K.Oommen - Jawaharlal Nehru University New Delhi) ஆனால், நவீன சமூகம் குடியாண்மை சமூகம் என்கிற வடிவில் குடிமகன்களை உருவாக்கி, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்“ என்கிற விதியால் பூஃக்கோ கூறுவதைப்போல மன்னர்களில் தலையை வெட்டிவிட்டு அங்கு சட்டத்தின் ஆட்சியை வைத்துள்ளது (Foucault, Governmentality, and Critique - Thomas Lemke ). அரசனின் உடலும் நவீன சட்ட ஆட்சியின் தலையும் கொண்ட அதிகார அமைப்பாக உள்ளது. ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் மனதை, தன்னிலையை கட்டமைக்கும் ஆளுகைத் தொழில்நுட்பத்தின் (Governmentality = Govern + Mentality) வழியாக இறையாண்மை அடிப்படையில் உயிர்களின் ஆற்றலை கட்டுப்படுத்துவதும். கண்காணிப்பதுமான ஒரு ஆதிக்க-ஆளுகை நிலையை உருவாக்கியுள்ளது.
நவீன அரசுகளின் இறையாண்மை என்பது மக்களைப் பாதுகாக்கும் கண்ணிற்குத் தெரியாத வாளாக சுழன்று நலவாழ்வின்மீதான அக்கறையை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. மனித உடல்களை குடிமகன்களாக்கி தனது ஆதிக்கத்திற்குள் வைத்திருப்பது தெரியாமல், சுய-ஆளகைக்கு உட்பட்ட தன்னிலைகளாக கட்டமைத்துள்ளது. அரசும், சட்டமும் இக்குடிமக்களின் தினவாழ்விற்கான உயிராற்றலை (bio-power) தனது கட்டுக்குள் வைத்துள்ளது. தனிமனிதனின் உயிராற்றலும் குடியரிமைச் சமூகத்தின் இறையாண்மையும் ஒன்றை ஒன்று பதலீடு செய்துகொண்டுள்ளன. அரசாங்கம் மனித உடலின் உயராற்றலை ஒழுங்கமைப்பதன் வழியாக மக்கள் கூட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மனித உடலை ஆயுதமாக்கும் ”தற்கொலை பயங்கரவாதம்” என்பது உடலின் உயிராற்றலை அரசு தனது ஆதிக்க விளையாட்டிற்குள் வைத்திருப்பதின் வெளிப்பாடே. அதிகாரத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து விளையாட தனது உடலைத் தவிர ஏதுமற்றதான ஒருநிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சுருக்கமாக, மேற்சொன்ன இந்திய சாதீய அமைப்பில் பார்ப்பனிய ஆதிக்கம் குடிமக்களை
தீர்மானிப்பதாக இருந்து வந்ததையும் அதனை எதிர்த்து பல இயக்கங்கள் வரலாற்றில் தோன்றி மறைந்திருப்பதையும் இணைத்துப் பார்க்கலாம். இந்திய தேசிய உருவாக்கத்தில் பார்ப்பனியத் தலமை என்பது ஒரு தீரமானகரமான பங்கு வகித்ததையும் அதனால் இந்தியாவில் ஒரு குடியான்மை தேசியமும் அல்லது அனைவரும் சமம் என்பதான ஒரு குடியாண்மை சமுகமும் (civil society) உருவாகமலேயே போய்விட்டது எனலாம். இதை உணர்ந்த பெரியார் திராவிட தேசியத்தை முன்வைத்ததையும், அதில் ஊக்கம் பெற்றே தமிழ்தேசியம் உருவானதையும் அது தமி்ழ் உடல்களைக் கட்டமைத்ததையும் கவனத்தில் கொள்ளலாம். இவ்வாறாக, “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்கிற வாசகம், தமிழ் உடல்களைக் கட்டமைத்ததை தமிழீழப் போரில் தினமும் செய்திகளாக கெட்டு வருகிறோம். தமிழ் உடலின் உயிராற்றல், தமிழ் தேசத்திற்காக, தமிழ் இனம் என்கிற கற்பிதக் கருத்தாக்கத்தின் வழியாக ஒரு ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. இன்று ஈழத்தில் தமிழ்நிலம் என்பது கன்னிவெடிகள் புதைக்கப்பட்ட தமிழ் உடல்களாக பதலீடாகி உள்ளது. ஆதிக்கத்திற்கான இனத்தன்னிலைகளை கட்டமைத்ததன் வழியாக அதிகாரம் தனது இறையாண்மையைக் குடிமக்கள் வழியாக காத்து வருவதன் உள்ளார்ந்துள்ள உயிரரசியல் (bio-politics) வெளிப்பாடே வெற்றிக்காக, மேன்மைக்காக, மறுமைக்காக, சொர்க்கத்திற்காக மரணத்தை தழுவும் தற்கொலை விளையாட்டுகள்.
-ஜமாலன். jamalan.tamil@gmail.com தீராநதி-செப்டம்பர்-2008




8 comments:
காத்திரமான கட்டுரைக்கு நன்றி (இன்னொரு முறையும் படிக்கவேண்டும்!).
font sizeஐ பெரிதாக்க முடியுமா எனப்பாருங்கள். வாசிக்கச் சிரமமாயிருக்கிறது.
நன்றி சுந்தர்.
font sizeஐ பெரிதாக்கிவிட்டேன்.
"இன்று ஈழத்தில் தமிழ்நிலம் என்பது கன்னிவெடிகள் புதைக்கப்பட்ட தமிழ் உடல்களாக பதலீடாகி உள்ளது. ஆதிக்கத்திற்கான இனத்தன்னிலைகளை கட்டமைத்ததன் வழியாக அதிகாரம் தனது இறையாண்மையைக் குடிமக்கள் வழியாக காத்து வருவதன் உள்ளார்ந்துள்ள உயிரரசியல் (bio-politics) வெளிப்பாடே..."
இலங்கையில் இனத்தின் பெயரிலான தற்கொலைப் பயங்கரவாதத்தினை அதிகாரத்தின் அரசியலாக வாசிப்புச் செய்து நான் வாசித்த (இலங்கையரல்லாத ஒருவரின்) முதல் பிரதி இதுதான்.
அருமையான இக்கட்டுரைக்கு மிக்க நன்றி ஜமாலன் அவர்களே
அசரீரி said...
//இலங்கையில் இனத்தின் பெயரிலான தற்கொலைப் பயங்கரவாதத்தினை அதிகாரத்தின் அரசியலாக வாசிப்புச் செய்து நான் வாசித்த (இலங்கையரல்லாத ஒருவரின்) முதல் பிரதி இதுதான்.//
எனது கட்டுரை இனத்தின் மதத்தின் மற்ற எதன் பேராலும் நடைபெறும் எல்லாத் தற்கொலை பயங்கரவாதங்களையும் பற்றியதே. குறிப்பாக பாலஸ்தீனத் தற்கொலைப்படை முதல் ஈழத்தற்கொலைத் தாக்குதல்வரை இதற்குள் அடங்கும். இன்று மனித உடல் ஒரு நிலத்தின நீட்சியாக மாற்றப்பட்டுள்ளதையும் பல கருத்தியல்களால் வழிநடத்தப்படுவதையும் முன்வைப்பதே எனது கட்டுரையின் அடிப்படை. கற்பிதங்கள் என்கிற கருத்தியலின் வழிகாட்டுதலே இன்றைய உடல்கள ஆள்கின்றன என்கிற கசப்பான உண்மைதான் எனது கட்டுரையின் பேசுபொருள். மற்றபடி போராட்டங்களின் அரசியல் நிலைபாடு பற்றியதல்ல. தவிரவும் இத்தகைய தற்கொலைப் படைகளை அமைத்ததில் ஏகாதிபத்தியங்களின் பங்கு முக்கியமானது என்பதையும் சொல்வதே.
தங்கள் கருத்துக்கு நன்றி.
"எஸ். வையாபுரிப்பிள்ளை தொகுத்த சென்னைப் பல்கலைக்கழக நிகண்டில் தமிழன் என்பதற்கான வரையறையாக "பார்பனரல்லாதவரும் சூத்திரனல்லாதவரும்” என்று சொல்லப்பட்டள்ளது. "
You are wrong. This is what Tamil Lexcicon says:
4. தமிழன் tamiḻaṉ : (page 1757)
வசனநூல்.
தமிழன் tamiḻaṉ
, n. < id. 1. One whose mother-tongue is Tamil; தமிழைத் தாய்மொழி யாக உடையவன். 2. A Tamilian, as dist. fr. āriyaṉ; ஆரியனல்லாத தென்னாட்டான். ஆரியன் கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 744, 5). 3. Caste man, as dist. fr. paṟaiyaṉ; பறைய னொழிந்த
The last definition means Tamilian is a Caste Hindu as distinct from 'Paraiyan'. In other words the caste Hindus appropriated the Tamilian badge for themselves and excluded 'pariayans' even from that.
The Lexicon definitions is not a prescriptive one, but merely descriptive ones i.e. as used in literature or newspapers or daily life.
??????????? ???? said...
வாங்க விஜி்ஸ்... உங்க புரபைலில் உள்ள பெயர்தான்.. இங்கு கேள்விக்கறியாகவே டிஸ்பிலே ஆகியுள்ளது.
//You are wrong. This is what Tamil Lexcicon says:
4. தமிழன் tamiḻaṉ : (page 1757)
வசனநூல்.
தமிழன் tamiḻaṉ
, n. < id. 1. One whose mother-tongue is Tamil; தமிழைத் தாய்மொழி யாக உடையவன். 2. A Tamilian, as dist. fr. āriyaṉ; ஆரியனல்லாத தென்னாட்டான். ஆரியன் கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 744, 5). 3. Caste man, as dist. fr. paṟaiyaṉ; பறைய னொழிந்த
The last definition means Tamilian is a Caste Hindu as distinct from 'Paraiyan'. In other words the caste Hindus appropriated the Tamilian badge for themselves and excluded 'pariayans' even from that.
The Lexicon definitions is not a prescriptive one, but merely descriptive ones i.e. as used in literature or newspapers or daily life.
//
உங்களது விரிவான சுட்டிக்காட்டுதலுக்கு மீண்டும் நன்றி. எஸ். வையாபுரிப்பிள்ளையின் இந்த வரையறைப்பற்றி சமீபத்தில் வெளிவந்துள்ள ”A Comaprative Grammer of the Darividan" என்கிற ராபர்ட் கால்டுவெல்லின் திராவிட ஒப்பிலக்கணநூலின் புதிய பதிப்பாக வெளிவந்துள்ள கவிதசரணின் அறிமுகக்குறிப்பிலிருந்து இது எடுத்தாளப்பட்டுள்ளது. அப்பகுதி இங்கு..
கவிதாசரணிலிருந்து...
தமிழ்ச் சூத்திரர்கள் தங்களை மட்டுமே தமிழர்களாக நிறுவிக் கொண்டார்கள். பார்ப்பனர்களையோ தாழ்த்தப்பட்டவர்களையோ தமிழர்களாக அவர்கள் ஏற்கவில்லை என்னும் முறைகேட்டை கால்டுவெல் துல்லியமாக எடுத்து வைத்துத் தாழ்த்தப்பட்டவர்களும் தமிழர்களே என்று நிறுவுகிறார். அந்தப் பகுதியையும் அதன் நிறம் கசிந்த பல பகுதிகளையும் வெட்டியெறிந்துவிட்டே "தமிழர்கள்" அவர் நூலுக்கு மூன்றாவது பதிப்பைக் கொண்டு வருகிறார்கள். அவர் எடுத்துக் காட்டிய உண்மை மறைக்கப்பட்டுவிட்டதால், எப்போதும் போலவே வையாபுரிப் பிள்ளை தொகுத்த தமிழ் அகராதியில் "பார்ப்பானொழிந்த பறையனொழிந்த தமிழ் பேசுவோரே தமிழர்கள்" என்று குறிப்பிடும் பழைய முறையைப் பேணிக் கொண்டார்கள். இதை எதிர்த்து அண்மைக் காலங்களில் கிளர்ச்சி நடந்தது. உண்மையில் இந்தக் கிளர்ச்சி கால்டுவெல் காலந்தொட்டே நடந்திருக்க வேண்டும். அதை மறைத்த பெருமை இந்தச் சுரணையற்ற தமிழர்களையே சாரும்.
மேலும் படிக்க.. http://www.keetru.com/kavithaasaran/aug08/book_release.php
அம்மாடியோ!
ஜமாலன் சார். முதல் வாசிப்பில் ஒண்ணுமே புரியவில்லை. அசரீரி சாருக்கு நீங்கள் தந்துள்ள பதில் பின்னூட்டத்தைப் படித்தபிறகு இரண்டாம் வாசிப்பில் கொஞ்சூஊஊண்டு புரியற மாதிரி இருக்குது.
உங்களுக்கு நேரம் ஒத்துழைத்தால் இதனைக் கொஞ்சம் எளிமைப்படுத்தி இன்னொரு கட்டுரை பதிவாகப் போடுங்கள். நிஜமாகவே நான் உட்பட பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
RATHNESH said...
//உங்களுக்கு நேரம் ஒத்துழைத்தால் இதனைக் கொஞ்சம் எளிமைப்படுத்தி இன்னொரு கட்டுரை பதிவாகப் போடுங்கள். நிஜமாகவே நான் உட்பட பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.//
வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக செய்கிறேன். கட்டுரையில் தேசியம் என்கிற சொல்லாடல் எப்படி கட்டமைக்கப்பட்டது என்பதையும் அதன் நமது சூழலுடன் ஆனப் பொறுத்தப்பாடும்தான் கட்டுரையின் பேசுபொருள்.
கருத்துரையிடுக