பொதுப்புத்தியும் பெரியாரும்

பெரியாரின் 129-வது பிறந்தநாள் இன்று. இதனை பெரியார் கொண்டாடியிருப்பாரா? என்பது கேள்விக்குறியே. இருப்பினும் இதுபோன்ற நாட்கள் ஒரு வருடாந்திர கணக்கெடுப்பைப்போல பெரியாருடன் நமது உறவை கணக்கிட்டுக் கொள்வதற்கான ஒருநாள். பெரியாரியம் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளையும் அச்சிந்தனை எந்த அளவிற்கு சமூகத்திற்குள் ஊடுறவியிருக்கிறது என்பதையும் அலசுவதற்கு ஒரு நாள். நாம் அதனை எந்த அளவிற்கு உள்வாங்கியிருக்கிறோம் என்பதையும் சுயவிமர்சனமாக அலசுவதற்கும் இந்நாளை பயன்படுத்திக்கொள்வோம்.

இங்கு பெரியாரை நான் புரிந்துகொண்டவகையில் எனக்குள் மறுமுறை சொல்லிப்பார்க்கும் முயற்சியே இது.

பதிவுகளில் பெரியார் குறித்த விவாதங்கள்தான் அதிக அளவில் இடம் பெற்றதாக இருக்கிறது என்பது ஒரு மிகையான கூற்றாகாது. காரணம் பெரியாரின் சிந்தனைகள் அதன் ஆதரவாளர்களை விட எதிர்ப்பவர்களால்தான் ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. எதிர்ப்பவர்கள்தான் பெரும்பாண்மை என்பதும் கண்கூடு. பெரியார் ஒரு எதிர்மறையான சிந்தனையாளராக மட்டுமே பதிவுறுததப்பட்டிருக்கிறார். குறிப்பாக பிராமண எதிர்ப்பாளர் இந்து மத எதிர்ப்பாளர் என்பதாக. இவ்விரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்துகொள்ளக்கூடிய கருத்தாக்கங்கள்தான். இந்துமதம் என்கிற அமைப்பே பிராமண மேலாண்மையைக் கொண்ட ஒரு அமைப்புதான் என்பதை பெரியார்தான் வெளிப்படுத்திக்காட்டினார் வெகுசன தளத்தில்.

பெரியாரின் அடிப்படை சிந்தனை முறை என்பது தமிழக அல்லது திராவிட மக்களிடம் பதிவுறுத்தப்பட்டுள்ள பொதுபுத்தியை சுயசிந்தனை எனகிற தளத்திற்கு நகர்த்தியது. இதற்காக பகுத்தறிவு என்கிற ஒரு சுயசிந்தனைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுபுத்தி என்பது ஒரு மனிதன் உலகை புரிந்துகொள்ளவும் உலகுடன் உறவாடவும் ஆன மன அமைப்பு ஆகும். இப்பொதுபுத்தி பெரியாருக்கு முன்பே சித்தர்கள் தொடங்கி வள்ளாளர் வரை ஒரு பாரம்பரியமாக வளர்ந்தவந்தது. அவர்கள் இம்மன அமைப்புடன் தங்களையே ஒரு சோதனைக்களனாக மாற்றிக்கொன்டனர். கடவுளை மறுப்பதும், கடவுளை அடைவதும் தர்க்கரீதியாக ஒன்றுதான். கடவுள் நிலையை அல்லது மர்மமான மதச்சடங்குகள் மூலம் கடவுள் இடத்தை அடைய முடியுமெனில் கடவுளின் இருப்பு அங்கு அழிந்து வேறு ஒரு புதிய இருப்பாகிவிடுகிறது. கடவுள் என்கிற அளப்பற்ற சக்தி அடையக்கூடிய சக்தியாகிவிடுகிறது. கடவுள் என்கிற தனிச்சிறப்பான தன்மை சாதாரண தளத்திற்கு இறக்கப்படுகிறது. அதனால்தான் சித்தர்கள் ஒழுங்கமைக்கபட்ட மதச்சடங்குகளுக்கு வெளியே தங்களது இயக்கங்களை வடிவமைத்துக் கொன்டனர். வாழும் காலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் பிறகு மதங்களினால் உள்வாங்கப்பட்டு கடவள்நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்.

ஆக பொதுப்புத்திக்கு எதிரான இயக்கம் என்பது சமூக மாற்றத்தின் அடிப்படையாக இருக்கிறது. ஆணால் பெரியார் இப் பொதுபுத்திக்கு எதிரான தனது இயக்கத்தை மக்களின் தினவாழ்வின் எல்லாக் கூறுகளிடமும் விரவலாக்கினார். இதன்மூலம் ஒரு புதிய உலகை மக்களிடம் திறந்து காட்டினார் என்றால் மிகையாகாது. தினவாழ்வின் ஒவ்வொரு கூறிலும் பெரியாரின் பாதிப்பு நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இயங்கிக் கொண்டிருப்பதுதான் பெரியாரின் தனிப்பெரும் சாதனை எனலாம். இன்று கடவள் பற்றிய அல்லது மதம் பற்றிய எந்த சிந்தனையும் பெரியாருடன் ஒரு உரையாடலை நிகழ்த்தவேண்டிய ஒரு தவிர்க்கவியலா நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.

பெரியார் தனது செயல்களில் தெளிவுடன் இருந்தார். புரட்சி மற்றும் சமூக மாற்றம் என்கிற எல்லோருக்குமான விடுதலை இவ்வுலக துயரங்களிலிருந்து மீட்சி மோட்சம் போன்ற பெருங்கதையாடல்கள் குறித்த தெளிவு அவருக்கு இருந்தது. அதனால் தனது பணியை சமுக சீர்திருத்தம், சுயமரியாதை, பெண்விடுதலை, சாதீய எதிர்ப்பு, முடநம்பிக்கை எதிர்ப்பு என்கிற தளததிற்குள் சுருக்கிக்கொண்டார். அதனால் பெரியாரின் அரசியல் இயக்கம் நுண் அளவிலானது. அது எந்த மாற்றையும் முன்வைக்கவில்லை. மனிதனின் தன்னிலை மாற்றம் குறித்தே சிந்தித்தது. தமிழக அல்லது இந்திய மனிதனுக்கு ஆதிக்கச் சக்திகளால் கட்டமைக்கப்ட்டுள்ள மதம், சாதி, ஆண் என்கிற அடையாளத் தன்னிலைகளை கேள்விக்கு உட்படுத்தியது.
பெண் உடல் என்பது ஒரு வாரிசு உருவாக்க எந்திரமாக கட்டமைக்கப்பட்டதை அம்பலப்படுத்திக் கிழித்துப்போட்டது. ஒரு பெண் தனது கருவை ஆளும் உரிமை உள்ளவள் என்பதை சொல்லியது. ஒரு ஆண் உடல் சாதீய மதக் கருத்தியலால் சுயமரியாதையற்றதாக கட்டமைக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்திக் காட்டியது. சாதி என்பது எப்படி ஒரு மனித தன்னிலையை ஆதிக்க வெறிமிக்கதாக ஆக்குகிறது என்பதை அம்பலப்படுத்தியது. மதம், சாதி, மொழி, இனம், பாலினம், தேசியம், சுதேசியம், நாட்டுபப்ற்று போன்ற எல்லா அதிகார மையங்களையும் கேள்விக்குட்படுத்தியது. மனிதனின் அடிப்படை உரிமை சுயமரியாதை என்பதை உத்தரவாதப்படுத்தக் கோரியது. மனித உடலின் குறைந்தபட்ச நிபந்தனையாக சுயமரியாதையை முன்வைத்ததுதான் பெரியாரியத்தின் ஆகப்பெரும் சாதனை எனலாம்.

பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக உயர்சாதி இந்துக்களின் ஆதிக்கத்தை பிரதிநிதத்துவப்படுத்திய ஒரு தேசிய முதலாளிய இயக்க குரலே பெரியாரியம் எனகிற மார்க்சிய வர்க்க ஆய்வை மறுக்கமுடியாது என்றாலும், ஒருகட்டத்தி்ல் அவ்வுயர்வர்க்கம் அரசதிகாரம் கோரியபோது அதனை மறத்து தனது சுயமரியாதைக் கோட்பாட்டில் உறுதியாக நின்றது பெரியாரியத்தின் மற்றொரு வெற்றி எனலாம்.

11 comments:

கே.என்.சிவராமன் சொன்னது…

//மனித உடலின் குறைந்தபட்ச நிபந்தனையாக சுயமரியாதையை முன்வைத்ததுதான் பெரியாரியத்தின் ஆகப்பெரும் சாதனை எனலாம்.//

முற்றிலும் உண்மை ஜமாலன். இந்த இடத்தில் வெளிநாட்டில் (ஜெர்மன் என நினைக்கிறேன்) பெரியார் கலந்து கொண்ட நிர்வாண கிளப் நினைவுக்கு வருகிறது. அந்தக் காலத்தில் நினைத்து பார்க்க முடியாத புரட்சி இது. இந்தப் பின்னூட்டத்தில் இதை எழுத தயக்கமாக இருக்கிறது. தவறான புரிதலுக்கு வழி வகுத்து விடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் பதற்றத்துடன் தத்தளிப்பதிலிருந்தே இதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

காரணம், சொற்கள் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றன. நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லுக்குமான அர்த்தமும், அந்த அர்த்தம் உணர்த்தும் குறியீடும் எப்போதுமே ஆதிக்கத்தின் உடைமையாகதான் இருக்கிறது. இந்த உண்மையே பொது புத்தியின் அடிப்படை அலகாவும் அமைகிறது. அதனால்தான் சொல்லாடலின் அரசியல் மாற்று சொற்களுக்கான அவசியத்தை காலம்தோறும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. இப்படி பிறக்கும் மாற்று சொற்களும் நாளாவட்டத்தில் ஆதிக்கத்தின் சொத்தாகி விடும் அபாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை. என்றாடலும் ஆதிக்கத்தை வேரோடு அழிக்க மாற்று சொல்லாடல் அவசியம்.

சொல்லாடல்களின் இந்த அரசியல் புரிதலோடு பெரியார் பயன்படுத்திய, உச்சரித்த, அழுத்தம் கொடுத்த சொற்களை அணுகும்போது அவை திறக்கும் கதவுகள் விசாலமானவை. நம்மையே நமக்கு இனம் காட்டுபவை. உணர வைப்பவை. கரைய வைப்பவை. தெளிய வைப்பவை.

இந்தவகையில் ஒரு எதிர் குறியீட்டு நிகழ்வாகத்தான் நிர்வாண கிளப்பில் பெரியார் கலந்து கொண்டார். அதற்கு அத்தாட்சியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

//கடவுளை மறுப்பதும், கடவுளை அடைவதும் தர்க்கரீதியாக ஒன்றுதான்.//

ஒட்டுமொத்தமான தத்துவங்களின் சாராம்சமும் இதுதான். பவுத்தம் ஓயாமல் சொன்ன சூனியவாதம் இந்த இடத்தில்தான் சேருகிறது அல்லது ஆரம்பிக்கிறது அல்லது பிரிகிறது அல்லது அழிகிறது அல்லது...

மிக அழுத்தமான பதிவு ஜமாலன்.

thiru சொன்னது…

//
Anonymous said...
பதிப்பிக்க வேண்டாம்.

//பெரியாரின் 129-வது நினைவுநாள் இன்று. இதனை பெரியார் கொண்டாடியிருப்பாரா? என்பது கேள்விக்குறியே.//

நினைவுநாள் ???
//

நினைவு நாளல்ல.

பிறந்தநாள் என்பதை குறிப்பிடுகிறார் அனானி! பிழையை திருத்திவிடுங்கள்.

//பெரியாரின் அடிப்படை சிந்தனை முறை என்பது தமிழக அல்லது திராவிட மக்களிடம் பதிவுறுத்தப்பட்டுள்ள பொதுபுத்தியை சுயசிந்தனை எனகிற தளத்திற்கு நகர்த்தியது. இதற்காக பகுத்தறிவு என்கிற ஒரு சுயசிந்தனைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.//

ஆழமான பார்வை ஜமாலன்!

முத்துகுமரன் சொன்னது…

இன்று பெரியாரின் பிறந்த தினம். நினைவுதினம் இல்லை. நினைவுதினம் டிசம்பர் 24.

ஜமாலன் சொன்னது…

நண்பர் பைத்தியக்காரன் சுட்டியிருக்கும் கருத்துக்கள் புதியவை. பெரியார் குறித்து அறிந்துகொள்ள இப்படி நிறைய இருக்கிறது. எனது படிப்பும் அறிதலும் ஆரம்பநிலைதான்.. பெரியார் என்பது பேரகமாக (superego) கட்டமைக்கப்பட்டு ஒரு பிம்ப வழிபாட்டிற்கு சென்று இறுதியில் விமர்சனகர்கள் எல்லாம் எழுத பயப்படும் சூழ்நிலைக்கு அளாகிவிடக்கூடாது. பெரியார் ஒரு திறந்த புத்தகம் மட்டுமல்ல வாசிக்க வாசிக்க பன்முக அர்த்தங்களைத் தரக்கூடிய புத்தகம்.


நாகார்ஜுனரின் பெளத்த சூனியவாதம் என்பது பின் அமைப்பியல் சிந்தனையான தகர்ப்பமைப்புடன் (deconstruction)கொண்டிருக்கும் அபாரமான ஒற்றுமைகள் அறிஞர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்திய தத்துவ சிந்தனையில் ஒரு பேரகம் இந்த நாகார்ஜுனர். அது பிறிதொரு பதிவிற்கான பெரும் கட்டுரையாகிவிடும்.

நன்றி.

ஜமாலன் சொன்னது…

அணாணி, திரு, முத்துக்குமரனுக்கு நன்றி. தவறு திருத்தப்பட்டது.

நன்றி.

செல்வநாயகி சொன்னது…

நல்ல பதிவு ஜமாலன். நன்றி.

ஜமாலன் சொன்னது…

வணக்கம் செல்வநாயகி..

பின்னொட்டத்திற்கு நன்றி.

sridhar சொன்னது…

// அதனால்தான் சித்தர்கள் ஒழுங்கமைக்கபட்ட மதச்சடங்குகளுக்கு வெளியே தங்களது இயக்கங்களை வடிவமைத்துக் கொன்றனர்.//

கட்டுரை அருமை ஜமாலன். சிறிய எழுத்துப்பிழை தான். ஆனால் பல வித தவறான அர்த்தங்களை தரும் அபாயம் கொண்டதாகி விடுகிறது.

ஜமாலன் சொன்னது…

பெயரில்லா sridhar கூறியது...

நன்றி ஸ்ரீதர்... திருத்தப்பட்டுவிட்டது.

மஜீத் சொன்னது…

மிக அழுத்தமான கட்டுரை.
சிவராமன் அவர்களின் பின்னூட்டமும் அத்தகையதே...

பெரியார் வாசிக்க வாசிக்க பன்முக அர்த்தங்களைத் தரக்கூடிய திறந்த புத்தகம் - முற்றிலும் சரியான கூற்று.

ஜமாலன் சொன்னது…

மஜீத்.. கருத்துரைக்கு நன்றி..

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.