பாலைப்பயணம்

அலைபுரளும் மணற்கடலில்
கரைகாணா மனக்கடல் -
தலை சாயக்க இயலுதில்லை.

அடிவயிற்று பூனை மயிரெனு
ஆழத்தில் ஓடி மறையும் சாலை.

வெம்மையின் கொந்தளிப்பூ
பயணம் தொடர்கிறது பாலையில்.

நிர்மல வானில்-
மருவற்ற தேகம்.
மணல் வெயில் தின்ன -
மனம் கவிதை தின்னது.

காகிதத்தில் எழுதி-
காகிதத்தைப் பெற்று
காகிதத்தை தின்று
காகிதத்தில் வாழும் உலகு.

கலவி கலைந்த பெண உடலாய்.
காற்றின் நடனம்
கலைத்துப் போட்ட
மணலின் கனவுகள் -
குவித்தும் குழிந்தும்
அலைஅலையாய் கிடக்கிறது.

வெம்மையில் குளித்து
விரிந்தலையும் கூந்தலுடன்
ஈர உடலை காய வைக்கும் -
எட்டிய வெளியில்
தொடர்புகளும் அற்று
ஒற்றையாய் நிற்கும் மின்கம்பி.

தடம் அழிய, அழிய சலிக்காது -
நீர்ப்பையின் சுமை தாளாது...
சூள்கொண்ட மேகமென
கால்புதைய நகரும்
ஒட்டகங்கள்.

தடையற்ற கேள்விகளும்,
விடையற்ற பதில்களுமாக
முடிவற்ற இடம் நோக்கி-
தடமற்ற நகரும் பயணம்...

நீர்த்திரை கிழிந்து
நிறம் கலங்கிய உருக்களின்
வெளிக்கோடுகள்
வெளிறிப்போய் -
காத்திருக்கிறேன்.

மனதிற்குள் உளியின் சத்தம்.
சிலையில் மிஞ்சிய
சேதாரங்களா -
இந்த வாழ்க்கை...?

(03-12-1999)
(ரியாத் - கோபர் பஸ் பிரயாணத்தில் எழுதியது)

1 comments:

நர்மதா சொன்னது…

//மனதிற்குள் உளியின் சத்தம்.
சிலையில் மிஞ்சிய
சேதாரங்களா -
இந்த வாழ்க்கை...?//

இந்தக் கேள்வி ஒவ்வொருவருடைய அனுபவங்கள் கனவுகள் வேதனைகள் என்று பலதாலும் அலசப்பட்டு முடிவில் பொருந்தும் கேள்வி போல் உள்ளது.

//தடம் அழிய, அழிய சலிக்காது -
நீர்ப்பையின் சுமை தாளாது...
சூள்கொண்ட மேகமென
கால்புதைய நகரும்
ஒட்டகங்கள்.

தடையற்ற கேள்விகளும்,
விடையற்ற பதில்களுமாக
முடிவற்ற இடம் நோக்கி-
தடமற்ற நகரும் பயணம்...//

பாலைவனத்தில் பயணம் செய்யும் ஒரு ஒட்டகம் உணர்வுடன் கண்முன்னே காட்சியாய் விரிகின்றது.

ஜமாலன். Blogger இயக்குவது.