நசுக்கப்பட்ட நமது வரலாறு.

நசுக்கப்பட்ட நமது வரலாறு.
யுகங்களுக்கு முன்பு ஜன்ம பூமிகளின் வரலாறு இல்லை.
இவையெல்லாம் நேற்றுத்தான் நடந்தது.
நீயும், நானுமாய் உருவாக்கிய நமக்கான வரலாறாய்.

மிட்டாய் இனிப்பால் நினைவூட்டப்பட்ட
ஆரம்பப்பள்ளி சுதந்திர தினத்தில்-
குன்றுமுலைக் குமரியம்மன் கோயில் பிரகாரங்களில்...
அகற்றப்பட்டுக் கிடந்த புத்தபிக்குகளின் விக்ரகங்களுக்கு
வாழைப்பழம் வைத்து மகிழ்ந்நதபோது -

குளத்து மேட்டின் மரத்தடி லிங்கத்தி்ல்
கால்வைத்து மரமேறி விளையாடியபோது
தர்காவின் சுவரேறிக் குதித்து
மாங்காய் திருடித் தின்றபோது.

எட்டுக்கைகளுடன் கோரைப்பற்கள் வழிய
கையில் கத்தியுடன் காளியாடுவதை பார்த்து பயந்து
கூட்டத்தில் விரல் தேடி பற்றிக் கொண்டபோது

ஓணான் வாயில் புகையிலை தினித்து -
அதன் தள்ளாட்டத்தை ரசித்தபோது -
நேற்றுப்போலத்தான் இருக்கிறது
நீயும் நானும உருவாக்கிய நமக்கான வரலாறு.

அன்று போலல்ல இன்று...

உன் மனசைப்போல வெள்ளைச்சீருடையில்
காவி அழுக்கேற்றப்பட்டுவிட்டது,
சூலங்கள் பதிந்த உன் பார்வையில்
ஓணானாய் திரிகிறேன நான்.
வேதாதங்கள் சொருகப்பட்ட உனது மூளைக்கு
என் பேச்சு புரிபடாது என்ன செயய?
ஒரு நண்பனைப்பொலத்தான்
சொல்ல இருக்கிறது எல்லாம்.

பாசத்துடன் அண்ணனாய் பாவித்த நம் தங்கைகளில்
இன்று என் தங்கை மட்டும்
வேல்கம்பின் கூர்முனையால் கிழித்தெறியப்பட்டிருக்கிறாள்.

கனவுகளைச் சொல்லி நிலாச்சோறு ஊட்டிய அம்மாக்களில்
இன்று என் அம்மா மட்டும் முக்காடிடப்பட்டதால்
முந்தனை உருவி எரியப்பட்டிருக்கிறாள்.

வளர்ச்சிக்கான பாடங்களை
பொறுப்புடன் சொல்லித்தந்த தந்தைமார்களில்
இன்று என் தந்தை மட்டும்
நாயின் வாலில் சரவெடி கட்டி விரட்டி ரசித்ததைப்போல
தெருநெடுக விரட்டப்பட்டிருக்கிறார்.

கன்னிப் பொங்கலின்போது அக்காமார்களுடன்
ஆற்றங்கரையில் நாம் கட்டிய கோயில்கள்
இப்படி இடித்துச் சரிக்கத்தானா?

இருப்பின் வலியுணர்த்தும் நிமிடங்களுடன்
துயர் நிரம்பிய வாழ்வை பகிர்ந்த நட்பு
கடவுளின் பெயரால் கற்பழிக்கப்படுவதை
என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

நம் அசுத்தக்காற்றை சுவாசித்து
நமக்காய் உயிரியம் தயாரித்த தாவரங்களுக்கு
நாம் சுமையாகத் தெரியாதபோது -
பன்னெடுங்காலமாய் சுமந்த நட்பின் சுமை தெரியாது
என் மூச்சுக்காற்று உனக்கு
சுமையென சொல்லப்பட்டிருக்கிறது.

நண்பா! நமது பழியுணர்ச்சியால்
நம்மை மட்டுமல்ல நம் இனிய வாழ்வையும்
அவர்கள் கொன்றுகொண்டிருக்கிறார்கள்.

எங்கும் இருக்கத்தான் செய்கின்றனர் அவர்களைப்போல
காற்றுமண்டலத்தை களங்கப்படுத்திக் கொண்டு
வாக்குச் சீட்டுகளின் முத்திரை மைக்காய்
இரத்தம் சேகரித்துக் கொண்டு.

மரத்துப்போன வறண்ட வேதாந்தங்களால்
காயடிக்கப்பட்ட கடவுள் மனங்களைத் தவிர்த்து
நண்பா! இன்றும் உன்னுடன்
கைகோர்த்து திரிவதைக் காணத்தான்
உயிர்ப்புடன் இருக்கின்றன எல்லாம்
நாம் சுற்றித்திரிந்த ஊரைப்பொலவே.

-ஜமாலன்
29-04-1993.
(பாபர் மசூதி தகர்ப்பிற்கு பிறகான கலவரங்களின் பாதிப்பில் எழுதப்பட்து. காலககுறி ஜுன் -94-ல் வெளியிடப்பட்டது.)
Share |
ஜமாலன். Blogger இயக்குவது.