பார்ப்பனிய இந்திய தேசியம் உருவாக்கத்தின் தொடக்கப்புள்ளி: 1857

பார்ப்பனியம் இந்திய தேசியத்தை கட்டமைத்ததை பற்றிய இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டு முக்கியமான சில வரலாற்று தகவல்களை அறிமுகப்படுத்துகிறது. இஸ்லாமிய மதச்சார்பின்மை மரபை விரட்டிய 1857-க்குப் பிறகான தேசிய கட்டமைப்பை விளக்குகிறது. இந்திய வரலாற்றில் மெளனப்படுத்தப்பட்ட சில பகுதிகளை பேசுகிறது. இக்கட்டுரை தீராநதியில் வெளிவந்தது இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.

----------------------------------------------------------------------------------

பார்ப்பனிய இந்திய தேசியம் உருவாக்கத்தின் தொடக்கப்புள்ளி: 1857

- ராமாநுஜம்

----------------------------------------------------------------------------------

இது இரண்டு அங்க நாடகமாக உங்கள் முன் வைக்கப்படுகிறது. முதல் அங்கம் கிரேக்க துயர நாடக மரபில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அங்கம் சமஸ்கிருத நாடக மரபில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அங்கம்: 1

THE LAST MUGHAL by WILLIAM DALRYMPLE

1857ம் ஆண்டில் நடந்த இந்தியச் சிப்பாய்களின் எழுச்சியின் 150ம் ஆண்டு இவ்வருடம் கொண்டாடப்படுகிறது. இந்த சிப்பாய் எழுச்சியை வலதுசாரிகள் முதல் இடதுசாரிகள் வரை “முதல் சுதந்திரப்போர்“ என்று வருணிக்கின்றனர். "1857ம் ஆண்டு நடந்தது சிப்பாய் கலகம் அல்ல அது ஒரு தேசிய எழுச்சி“ என்று வருணிக்கிறார் கார்ல்மார்க்ஸ். இன்றுவரை அதை சிப்பாய்கள் கலகம் என்று வருணிக்கும் அயல்நாட்டு அறிஞர்களும் உண்டு. இந்த எழுச்சியை எந்தப் பார்வையில் இருந்து பார்த்தாலும் இந்தியத் துணைகண்ட வரலாற்றில் இது மிக முக்கிய நிகழ்வு என்பதில் ஐயமில்லை. சமீபத்தில் வந்த “கடைசி முகலாயர்“ என்ற புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் நம் சிந்தனையை ஆட்கொள்வது இந்த எழுச்சியில் ஜாதி மற்றும் மதத்தின் பங்கு என்னவென்ற கேள்விதான். இன்று உருவாகியுள்ள இந்திய தேசிய குணாம்சத்தைப் புரிந்து கொள்ள, 1857ல் நடந்ததை ஜாதிய மதவாத கோணத்தில் இருந்து பார்ப்பது மிக அவசியம் என்று தோன்றுகிறது. குறிப்பாக ஆவாத், பீகார், பனாரஸ் மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பாய்களாக இருந்தது, சடங்குகளை இமை பிசகாமல் பின்பற்றக்கூடிய மேல்ஜாதி இந்துக்கள் தான். மேல் ஜாதி இந்துக்களையே சிப்பாய்களாகத் தேர்ந்தெடுப்பது என்பது கிழக்கிந்திய கம்பெனியின் கொள்கையாகவே இருந்தது. (பக்கம் 136) சில படைப்பிரிவுளில் 80 சதவீதத்திற்கு மேல் மேல்ஜாதி இந்துக்கள்தான் சிப்பாய்களாக இருந்தார்கள். கிழக்கிந்திய கம்பெனி இந்த மேல் ஜாதி இந்துக்களின் சடங்குகளுக்கு மரியாதை கொடுத்து அவர்களை “மேன்மையானவர்கள்“ என்ற அங்கீகாரத்தை ஏற்படுத்தியது. அதாவது அவர்களுக்கான உணவு சமைக்கப்படும் முறை, அதை அவர்கள் உட்கொள்ளும் முறை என்று சகல சடங்குகளுக்கும் கவனமும், அங்கீகாரமும் கொடுக்கப்பட்டது. மேல் ஜாதி சிந்தனைக்கு ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்ட அங்கீகாரம், ஜாதிய சிந்தனையை வேறு ஒரு கருத்தாக்க நிலைக்குக் கொண்டு சென்றது. இந்த மாற்றத்தைத்தான் பல அறிஞர்கள் சமஸ்கிருத மயமாகுதல் என்று வர்ணிக்கிறார்கள். (பக்கம் 135) ஆனால் 1855 வாக்கில் கிழக்கிந்திய கம்பெனி கீழ் ஜாதியிலிருந்தும் சிப்பாய்களை தேர்ந்தெடுக்கத் தொடங்கியதால், 1857 வாக்கில் மேல் ஜாதி சிப்பாய்கள் சதவிதம் சற்றே சரிவைக் கண்டது. மேல்ஜாதி இந்துக்கள் மத்தியில் சிப்பாய் என்ற தொழில் அதன் அந்தஸ்தையும் சற்றே இழக்கத் தொடங்கியது. இந்த இறுக்கத்தோடு பொது சேவை சட்டம் நடைமுறைக்கு வந்து எல்லா சிப்பாய்களும் வெளிநாடுகளில் சேவை செய்யவேண்டும் என்பது கட்டாயமாக்கியது. மேல்ஜாதி மரபுப்படி கடலை கடப்பது தடைசெய்யப்பட்டது என்பதால், இந்த சட்டம் அவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அடுத்து போர்கால சலுகை ஊதியம் ரத்து, இலவச தபால் ரத்து ஆகிய சட்டங்களும் இவர்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியது. இவற்றோடு இரண்டாம் ஆங்கிலேய / பர்மா யுத்தத்தில் கடல்வழியாக ரங்கூனை அடையவேண்டும் என்று டல்ஹௌஸி பிரபுவால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேல் ஜாதி சிப்பாய்கள் ஜாதிய சிந்தனை அடிப்படையில் இந்த ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். இதன் விளைவாக இந்தச் சிப்பாய்கள் தரைமார்க்கமாகவே ரங்கூனை அல்லாமல் டாக்காவை அடையவேண்டுமென்று டல்ஹௌஸி பிரவு உத்தரவிட்டான். ஐந்து மாதத்திற்குள் ஏறக்குறைய அந்த படைப்பிரிவைச் சேர்ந்த பல சிப்பாய்கள் வழியிலேயே மரணமடைந்தார்கள். இந்த நிகழ்வும் கிழக்கிந்திய கம்பெனி சிப்பாய்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவை எல்லாவற்றிற்கும்மேலாக என்பீல்ட் ரெட்பீல்டு தோட்டாக்களில் பன்றி மற்றும் மாட்டுக்கொழுப்பு தடவவேண்டிய நிலை சிப்பாய்களுக்கு ஏற்பட்டது. இது ஒரு மாபெரும் எழுச்சியை தூண்டுவதற்கான சிறு பொறியாய் அமைந்தது.

கிழக்கிந்திய கம்பெனி எவ்வாறு துணை கண்ட நிலப்பரப்பை தன்வயப்படுத்தியது என்பதைப் பற்றி நமக்குப் போதுமான தகவல்கள் உண்டு. இந்த அத்து மீறல்களோடு கிருஸ்தவ பாதிரிமார்கள் இருண்ட குகைக்குள் கிடக்கும் துணை கண்ட மக்களின் ஆன்மாக்களை உண்மையை நோக்கியும் கடவுளை நோக்கியும் மீட்டெடுப்பது அவர்களது தார்மீகக் கடமையாகவும் மதக் கடமையாகவும் கருதினார்கள். இந்த மதக்கடமைக்கு கிழக்கிந்திய கம்பெனி துணை நின்றது. சிப்பாய்களை ஒன்று கூட்டி இந்து மதம் மற்றும் இஸ்லாமிய மதம் பற்றி தரக்குறைவாகப் பேசப்பட்டது. பாதிரிமார்களின் இந்த ஆணவச் செயல்களோடு, 1828ல் நடைமுறைக்கு வந்த நியாயமான சதி எதிர்ப்புச் சட்டமும், விதவை மறுமணச் சட்டமும் மேல்ஜாதி இந்துக்களிடையே பெரும் பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தின. இவற்றோடு அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து மதமாற்றம் செய்தாலும் பூர்வீகச் சொத்தில் பங்கு உண்டு என்று 1832ல் கொண்டுவரப்பட்ட சட்டம் இஸ்லாமிய "சரியாட்" சட்டத்திற்கு முற்றிலும் விநோதமாக இருந்ததால் இஸ்லாமியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பாதிரிமார்களின் அதீத நடவடிக்கைகளும் இந்தச் சட்டங்களும் சேர்ந்து மேல் ஜாதி இந்து மற்றும் உயர் குடி இஸ்லாமியர்களிடையே தங்களுடைய மதம் கிறிஸ்துவர்களால் திட்டமிட்டு அழிக்கப்படப்போகிறது என்ற அச்சத்தையும், கலக்கத்தையும் தோற்றுவித்தது. ஆக 1857 எழுச்சியானது ஒரு விவசாயப் பிரச்சனையாகவும், ஜாதிய கட்டமைப்பு மற்றும் மதநம்பிக்கைகள் மீதான தாக்குதலாகவும் கருத்தியல் அடிப்படையில் உருவானது என்று சொல்லலாம். மேலே கூறியவற்றிலிருந்து நாம் இரண்டு சிந்தனைகளை முன்வைக்கலாம்.

1. கிழக்கிந்தியச் சிப்பாய்கள் மேல்ஜாதியினரின் ஆதிக்கத்துக்குப் பதிலாக கீழ்ஜாதியினரின் ஆதிக்கத்தில் இருந்திருந்தால் 1857ல் நடந்த எழுச்சியின் குணாம்சம் என்னவாக இருந்திருக்கும். நம்மால் இதற்கு பதில் சொல்ல முடியாது ஆனால் அப்படி நடந்திருக்குமாயின் இந்தியத் துணை கண்டத்தின் வரலாறும் இந்தியத் தேசியத்தின் குணாம்சமும் இன்றைய தன்மையிலிருந்து முற்றிலும் வேறாக இருப்பதற்கான சாத்தியங்களைக் கொண்டிருந்திருக்கும் என்று மட்டும் சொல்லலாம்.

2. சிப்பாய் எழுச்சியில் பங்கெடுத்துக்கொண்ட பெரும்பாலான சிப்பாய்கள் உயர்ஜாதி இந்துக்களாக இருந்தும் ஏன் முகலாயப் பேரரசரான பகதூர் ஷா ஜாபர் விடம் போய் நிற்க வேண்டி வந்தது. (எது இத்தகைய செயலைச் சாத்தியப்படுத்தியது என்று புரிந்து கொள்ள, இந்த புத்தகத்தை திரு. அத்வானியும், திரு. வாஜ்பாயும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்)

இரண்டாவது கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் நாம் முகலாயப் பேரரசின் கடைசி அரசரான பகதூர்ஷாவின் மதச்சார்பின்மை பற்றி தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது. பாடபுத்தகத்தில் முகலாயப் பேரரசின் கடைசி மன்னன் பகதூர் ஷா என்று படித்ததைத் தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை. ஆனால் பகதூர் ஷா ஒரு கவித்துவ உள்ளம் கொண்ட கவிஞனாகவும் மதசார்பற்றவனாகவும் சூஃபி ஞானியாகவும் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றவனாகவும் தன் நம்பிக்கைகளைப் பேரரசன் என்ற அதிகாரத்தின் முலம் செயல்படுத்த முடியாதவனாகவும். ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைக் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருத்தவனாகவும்... இப்படி படிக்கும்போது கிரேக்க துயர நாடகத்தின் கதாபாத்திரமாகவே நம்முன் விரிகிறான். இந்துக்களைக் காப்பாற்றுபவனாகவும், தீவிரவாத இஸ்லாமியர்களின் கோரிக்கைகளுக்கும் உணர்வுளுக்கும் பலியாக விரும்பாமல் அவர்களிடம் மத்தியஸ்தனாகவே தன்னுடைய பங்கு அமையவேண்டும் என்று பிரக்ஞைபூர்வமாகவே ஜாபர் கருதினான் (பக்கம் 80)

ஓர் சமயம் ஓர் இந்து ஜாபரின் பிரதம மந்திரியான ஹப்பிம் ஹஸன்உல்லாகான் மூலமாக முசல்மானாக மாறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது அந்த இந்துவை அரண்மனையில் இருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டான். (பக்கம் 81) மற்றொரு சமயத்தில் 200 க்கு மேற்பட்ட முசல்மான்கள் அரண்மனைக்கு முன் கூடி ஈது பண்டிகை அன்று பசுவதை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது முசல்மான்களின் மதம் பசுவதையை வேண்டி நிற்கவில்லை என்று பதில் தந்தான். (பக்கம் 81) சுன்னி பிரிவைச் சேர்ந்த ஜாபர் ஷியா பிரிவினரின் பண்டிகையான முகரத்தை அரண்மனையில் கொண்டாடியபோது (சுன்னி ஷா வாலியுல்லாக்கான் பார்வையில் இது மாபெரும் குற்றம்) ஜாபர் ஷியா பிரிவுக்கு மாற்றம் கொள்கிறார் என்ற வதந்தி பரப்பப்பட்டது. இந்த வதந்தியின் அடிப்படையில் டெல்லியைச் சேர்ந்த பல உலேமாக்கள் பேரரசரைச் சந்தித்து இந்த வதந்தி உண்மை என்றால் அவரை ஒதுக்கிவைக்கவும் அவரது ஆட்சி அதிகாரமற்றது என்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின் போது பிரகடனம் செய்யவும் தயாராக இருந்ததாக மிரட்டினார்கள். இதில் துர்திஷ்டம் என்ன வென்றால் 1850 வாக்கில், ஜாபர் பின்பற்றிய சூஃபி மரபு என்பது காலாவதியானதாகவும் உபயோகமற்றதாகவும் மாறிப்போனது. உலேமாக்களின் அதிகாரம் வலுப்பெற்று திகழ்ந்தது. கிருஸ்துவ மதத்தைப் பரப்பும் வெறியில் உள்ள பாதிரிமார்களின் பார்வையில் இஸ்லாமுக்கு மாறிய ஆங்கிலேயர்கள் எவ்வளவு கீழ்த்தரமாகப் பார்க்கப்பட்டார்களோ அதே பார்வையில்தான் உலேமாக்களால் ஜாபர் பார்க்கப்பட்டார். (டெல்லி உலேமாக்களின் அடிப்படை வாதத்தை உயர்த்திப் பிடித்ததில் பஞ்சாப்பைச் சேர்ந்த இஸ்லாமிய வர்த்தகர்களுக்கு பெரும் பங்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியக் கூலிப்படைகளால் தான் எழுச்சியுடன் சிப்பாய்கள் நசுக்கப்பட்டார்கள் என்பது சுவாரஸ்யமான தகவல்) ஜாபரின் அரண்மனை மருத்துவரான சாமன்லால் கிருஸ்துவ மதத்திற்கு மாறியபோது உலேமாக்கள் அவரை அரண்மைனையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் ஜாபர் மருத்துவரின் மதநம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விசயம் என்றும் அதில் அவர் அவமானப்பட ஏதும் இல்லை என்றும் பதில் தந்து அவரை அரண்மனையில் இருந்து நீக்க மறுத்தார். (திரு. அத்வானியிடம் இதைப் பற்றி கேட்டால் பாபர் மசூதியை இடிக்கும் நோக்கோடு அவர் மேற்கொண்ட டொயோட்டா வண்டியை (ரத யாத்திரை) ஓட்டியவர் ஒரு முசல்மான்தான் என்று பெருமைகொள்ள வாய்ப்புண்டு)

மேலே சொல்லப்பட்ட எல்லா காரணங்களையும் மீறி

என் வழிபாட்டின் நோக்கம்
புலர் உணர்வுகளுக்கு அப்பால் உள்ளது.
திசைக்காட்டியில் காபாவைக் காணக்கூடியவன் பற்றி
சொல்வதற்கு ஏதும் இல்லை.
என்று எழுதிய காலிப் என்ற மிகப்பெரிய கவிஞன் ஜாபர் அரண்மனையில் இருந்தான். (பக்கம் 79)

சொர்க்கத்தில் அந்திசாயும் பொழுதில் குரானில் சொல்லப்பட்டிருக்கும் தூய்மையான மதுவை உண்பது உண்மைதான் ஆனால் குடிகார கும்பலின் அசாதாரணமான சத்தங்களுக்கு இடையே மது மயக்கத்தில் நண்பர்களோடு நீண்ட நடை சொர்க்கத்தில் எப்படி போக முடியும்? போதைஏறிய மழைக்கால மேகங்களை அங்கு எங்கு காணமுடியும்? இலையுதிர்காலம் இல்லாதபோது கார்காலம் எப்படித் தோன்ற முடியும்? அங்கு எப்போதும் அழகிய தேவதைகளைக் காணமுடியுமா? பிரிவின் துயரமும் சேர்க்கையின் குது£கலமும் அங்கு சாத்தியமா? முத்தம் கொடுக்கும் தருணத்தில் ஓடிப்போகும் பெண்களை அங்குக் காண முடியுமா? (பக்கம் 79/80) என்று எழுதிய காலிப்பும், இந்தக் கவிஞனைத் தன் அரண்மனையில் வைத்திருந்த ஜாபரும் எத்தகைய கவித்துவ உள்ளம் கொண்டவர்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம். (இந்த மரபில் இருந்து வந்தவன் தான் சாதத் ஹசன் மண்ட்டோவா? அதனால் தான், காலிப்பிற்குப் பிறகு கவிதை இல்லை, மண்டோவிற்குப் பிறகு சிறுகதை இல்லை என்று மண்ட்டோ எழுதினானா?). மதம் பற்றியும் கடவுள் பற்றியும் ஜாபர் அவையில் எத்தகைய சிந்தனை போக்கு நிலவியது என்பதற்கு காலிப் மட்டுமே சாட்சியாக போதும். (நம் சங்கக் கவிதைகளில் காணக்கூடிய நேரடித்தன்மையை காலிப்பின் கவிதைகளில் காணமுடிகிறது). இதன் தொடர்ச்சியாக இஸ்லாமியப் பள்ளியான மதரஸா அன்று எத்தகைய நிலையில் இருந்தது என்று அறிந்து கொள்ளும் போது, ஒரு இந்துவின் பொது புத்தியில் இஸ்லாமியர்கள் பற்றிய பார்வை எப்படி சாத்தியமானது என்று யோசிக்க வேண்டியுள்ளது. இந்து மதத்தின் சீர்திருத்தச் சிந்தனையாளரான இராஜாராம்மோகன்ராய், இஸ்லாமிய பள்ளியான மதரஸாவில் படித்த மாணவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. (பக்கம் 81) ஓர் ஆங்கிலேய அதிகாரி, "உலகில் உள்ள எந்த சமூகத்தினரை எடுத்துக்கொண்டாலும் இந்தியாவில் உள்ள முகமதியர்களின் வாழ்க்கையில் கல்வி இணைந்து உள்ளது போல் எங்கும் காணமுடியாது என்கிறார். (பக்கம் 95) அவரே மேலும், "20 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு அலுவலர் அவருடைய மகன்களுக்கு ஒரு பிரதம மந்திரி தன்னுடைய மகன்களுக்குக் கொடுக்கும் கல்விக்கு ஈடான கல்வியைக் கொடுக்கிறார். நம்முடைய கல்லூரிகளில் கிரேக்கம் மற்றும் லத்தீன் மூலம் நாம் கற்பதை எல்லாம் இவர்கள் அரபி மற்றும் பாரசீகம் மூலம் கற்கிறார்கள். அதாவது இலக்கணம், தத்துவம், தர்க்கம்... (இவர்கள்) சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ப்ளாட்டோ... பற்றி சகஜமாக பேசுகிறார்கள். இந்தியாவில் விநோதம் என்னவெற்றால், வாழ்க்கையில் எந்த மொழி மிக அதிகமாக உபயோகிக்கப்படுகிறதோ அதில்தான் இவர்கள் பாடம் கற்கிறார்கள்" என்றும் சொல்கிறார். டெல்லி மதரஸா கல்வி என்பது மிக தொலை தூரத்தில் இருந்தும் கூட மாணவர்களைக் கவர்ந்தது. ஜாபர் ஒரு கவிதைப் புத்தகத்தைத் தொகுத்து வெளியிடுகிறார் அதில் அவருடைய கவிதை முதல் ஒரு கூலித் தொழிலாளியின் கவிதை வரை சேர்க்கப்பட்டுள்ளது.

இத்தகைய ஒரு பின்னணியில் தான் கிழக்கிந்தியக் கம்பெனியின் பெரும்பாலான மேல்ஜாதி இந்துச் சிப்பாய்கள் முகலாயப் பேரரசரான பகதூர் ஷாவின் தலைமையை வேண்டி டெல்லி நோக்கிக் கிளம்பினார்கள். (நிலப்பிரபுத்துவ சுயமோகத்தில் உள்ள இந்துத்துவ சக்திகளால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாது.)
டெல்லியை அடைந்த இந்தியச் சிப்பாய்களும் டெல்லியில் இருந்த இஸ்லாமியச் சிப்பாய்களும் (தீவிரவாத இஸ்லாமைப் போதித்தவர்கள் உட்பட) இந்த எழுச்சிக்கு ஜாபர் தலைமை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். வாழ்நாள் முழுக்கக் கவிதைகளிலும், ஆடம்பர வாழ்க்கையில் மட்டுமே காலங்களை கழித்ததோடு, வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு யுத்த களத்தைக்கூட கண்டிராத அந்த 80 வயது கிழவனை தலைமை தாங்க பலவந்தமாக சம்மதிக்கவைத்தார்கள். இதற்குப் பிறகு நடந்ததை நாம் 1947ல் அரங்கேற்றப்பட்ட மதக்கலவரத்தோடும் 2002ல் குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளோடும் நினைவுகூர வேண்டும். இந்துச் சிப்பாய்களும், இஸ்லாமியச் சிப்பாய்களும். ஆங்கிலேய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஈவு இரக்கம் இன்றிக் கொன்றுக் குவித்தார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியின் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான எழுச்சியா அல்லது ஜாதி மற்றும் மதத்தைக் காப்பாற்றுவதற்கான எழுச்சியா என்று யோசிக்கவைக்கும் அளவுக்கு நிராயுதபாணியான ஆங்கிலேயர்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். பேராசிரியர் இர்பான் ஹபிர் மதம் சார்ந்த அடையாளத்தில் இயங்கும் ஒரு சமூகம், அதன் வடிவத்தில்தானே காலனிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தன்னை வெளிப்படுத்த முடியும் என்று கேட்கிறார். மதம் அடையாளத்துள் ஒன்றாகத் திகழ்வது தவறில்லைதான் ஆனால் எதற்காக என்ற கேள்வியும் நாம் கேட்க வேண்டியுள்ளது. ஒற்றைப்பரிமாண அதிகாரத்திற்குள் இறுகிக்கொண்டிருக்கும் ஜாதியமைப்பின் தூய்மையைக் காப்பாற்றவும், பிற்போக்கான மத அடிப்படைவாதத்தை உயர்த்திபிடிக்க மட்டும் அல்லாமல் பல்வேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களால் துன்பப்பட்டிருந்தாலும் இவ்விரண்டின் பங்கை நாம் மறுதலிக்க முடியாது.

இந்த எழுச்சியின் போதும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ஆங்கிலேயர்கள் தாக்கப்படவில்லை. கிருஸ்துவ மதத்திற்கு மாறிய முசல்மான்களும் இந்துக்களும் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சிப்பாய்களின் இந்த எழுச்சிக்கு சரியான தலைமையும் யுத்த தந்திரமும் இருந்திருந்தால் கிழக்கிந்திய கம்பெனி மிகப்பெரிய தோல்வியைக் கண்டிருக்கும். வகாபிகளின் அடிப்படை மதவாதம் எதுவாக இருந்தாலும் இந்த எழுச்சியில் அவர்கள் ஆற்றிய பங்கு மரியாதைக்குரியது. எழுச்சியில் பங்கெடுத்த சிப்பாய்களின் வருணிக்க இயலாத தியாகங்களுக்கு இடையே கிழக்கிந்திய கம்பெனியின் சீக்கிய கூலிப்படைகளால் இந்த எழுச்சியும் முறியடிக்கப்பட்டது. இதில் மிக மிக முக்கியமான விஷயம் பல ஆங்கிலேயப் பெண்மனிகள் கொல்லப்பட்டாலும் ஒரே ஒரு ஆங்கிலேயப் பெண்மணிகூட பாலியல் பலாத்காரத்துக்குப் பழியாகவில்லை ஆனால் உலகநாடுகளுக்கு இடையே ஆங்கிலேய அரசு திரும்பத் திரும்ப அவர்களுடைய பெண்கள் காட்டுமிராண்டித்தனமாய்ச் சூறையாடப்பட்டார்கள் என்ற செய்தியைப் பரப்பியது. கைப்பற்றப்பட்ட டெல்லியில் ஆங்கிலேயர்களின் பழிக்குப் பழி தாக்குதல் என்பது எல்லா வரம்புளையும்மீறி அரங்கேற்றப்பட்டது. டெல்லி மாநகர் என்ற நகரமே உலக வரைபடத்தில் இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு அழிக்கப்பட்டது. இன்று நாம் காணும் செங்கோட்டை என்பது 1857ல் இருந்ததில் ஒரு கால் பகுதிதான் என்பது பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. மற்ற பகுதிகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது. டெல்லி நகரத்து மக்கள் மதவேறுபாடு இல்லாமல் ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆங்கிலேயரோடு உறவை ஏற்படுத்திக்கொண்ட சில இந்து கந்து வட்டிகாரர்களைத் தவிர மற்ற அனைவரும் ஈவு இரக்கம் இன்றி தாக்கப்பட்டார்கள். அவர்களுடைய சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. குழந்தைகளும் பெண்களும் வயோதிகர்களும் இருக்க இடமின்றி வெட்டவெளிக்கு விரட்டப்பட்டார்கள். (மூன்று வருடம் கழித்து டெல்லிக்குள் நுழைய அனுமதி கேட்டு ஆங்கிலேயப் பேரரசிடம் இஸ்லாமியர்கள் மனு கொடுத்தார்கள் என்றால் நிலைமையின் துயரத்தை நம்மால் உணர முடியும்) இன்று நமக்கு எஞ்சியுள்ள டெல்லி என்பது அந்த நகரத்தின் அழகில் மனதைப் பறிகொடுத்து அதை எவ்வளவு காப்பாற்ற முடியுமோ அவ்வளவையும் காப்பாற்ற முயற்சித்த சில ஆங்கிலேயர்கள்தான் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

உயிரோடு இருந்தவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். அப்படி அழைக்கப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். விசாரணைக்கு அழைக்கப்பட்ட காலிப் விசாரனையின்போது, "நீ முசல்மானா?“ என்று கேட்கப்பட்டதற்கு, "பாதி“ என்று பதில் தந்தான். "இதற்கு என்ன அர்த்தம்?“ என்று விசாரணை அதிகாரி வினாவிய போது, "நான் மது அருந்துவேன். ஆனால் பன்றிக்கறி திங்கமாட்டேன்“ என்று பதில் தந்தான். "டெல்லிக் கோட்டையை ஆங்கிலேயர்கள் பிடித்த பிறகு நீ ஏன் அறிவித்த பொது இடத்தில் ஆஜராகவில்லை“ என்று கேட்கப்பட்டதற்கு, "என்னுடைய அந்தஸ்திற்கு என்னை அழைத்து வர நான்கு பல்லக்கு தூக்கிகள் தேவைப்படுகிறார்கள். ஆனால் அந்த நால்வருமே என்னை தனியே விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அதனால்தான் வரமுடியவில்லை“ என்று பதில் தந்தான். (காலிப் உயிர் பிழைத்ததற்க்குக் காரணம் ஒரு முறை இங்கிலாந்து அரசியை அவன் புகழ்ந்து எழுதிய கவிதையினால்தான்) காலிப் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில், "நான் அனுபவிக்காத வேதனை ஏதேனும் உண்டா? மரணத்தின் வேதனை, பிரிவின் வேதனை, வருமானத்தில் இழப்பு, கண்ணியத்தின் இழப்பு இவற்றோடு செங்கோட்டையில் நடந்த துயரமான சம்பவங்கள். என்னுடைய பல டெல்லி நண்பர்கள் கொல்லப்பட்டார்கள்... நான் எவ்வாறு அவர்களை மறப்பேன். எவ்வாறு நான் அவர்களைத் திரும்பக் கொண்டுவர இயலும்... உறவினர்கள் நண்பர்கள், மாணவர்கள், காதலர்கள் - இப்போது எல்லோரும் போய்விட்டார்கள். ஒரு நண்பனுக்காகவோ, ஒரு உறவினருக்காகவோ துயரப்படுவது என்பதே மிக மிகக் கடினமானது. என் நிலையை நினைத்துப்பார். நான் பலருக்காகத் துயரப்படவேண்டும். ஐயோ கடவுளே! என்னுடைய பல நண்பர்களை உறவினர்களை இழந்துவிட்டேன். நான் இப்போது இறந்தால் எனக்காகத் துயரப்பட ஒரு ஆன்மாகூட இல்லையே“ என்று தன் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளான்.

ஆங்கிலேயர் வெற்றிக்குப் பிறகு இன்று சதாம் ஹூசேன் தூக்கிலிடப்பட்டது போலவே ஜாபர் நாடு கடத்தப்பட்டார். இது ஒன்றும் பெரிய துயரம் இல்லைதான். (அவரே துயரப்படவில்லை. ஒரு சூஃபி ஞானியைப் போல் அவர் தன் முன் உள்ள வாழ்க்கையைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார். சிறு குழந்தையைப் போல டெல்லிமாநகரத்தை விட்டு முதல் முறையாக வெளியே வந்து கப்பல், ரயில் போன்றவற்றைப் பார்த்து சந்தோஷப்பட்டார். உயிரோடு இருக்கும் அவருடைய ஒரே மகன் ஆங்கிலக்கல்வி படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார்.) ஆனால் எத்தகைய மரபு இந்த மண்ணிலிருந்து நாடு கடத்தப்பட்டது என்பதுதான் துயரமான விஷயம். சிப்பாய்களின் எழுச்சியின் போது தன்னுடைய மாளிகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று 52 ஆங்கிலேயர்களைத் தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்தார். சிப்பாய்கள் இவர்களைக் கண்டுபிடித்து எல்லோரையும் வெளியே இழுத்து வந்தார்கள். சிப்பாய்களின் இந்தச் செய்கையால் ஜாபர் திகைத்துப்போய் நின்றார். பிறகு சிப்பாய்கள் என்ன செய்ய உத்தேசித்துள்ளார்கள் என்பதை உணர்ந்த உடன் சிப்பாய்களை இந்து மற்றும் முசல்மான் என்று தனித்தனியே நிற்க உத்தரவிட்டார். பிறகு இரு சாரார்களிடமும். நிராயுதபாணியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளைக் கொள்வதற்கு உங்கள் மதம் அனுமதி தருகிறதா என்று அவரவர் மதகுருமார்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு வேண்டினார். "இவர்கள் கொல்லப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது“ என்றார். சிப்பாய்களின் மனம் இரங்கா நிலையைக் கண்டு ஜாபர் அழத்தொடங்கினார். அப்பாவிகளான இவர்களுடைய உயிரைப் பறிக்கவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார். "எச்சரிக்கையாய் இருங்கள் இந்த கொடூரமானச் செயலைச் செய்து முடித்தால் கடவுளின் சாபம் நம் எல்லோர்மீதும் விழும். இந்த நிராயுதபாணிகளை எதற்காக கொல்லவேண்டும்“ என்று கெஞ்சினார். ஆனால் அவர்கள் கொல்லப்பட்டார்கள். இத்தகைய மரபுதான் ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டது. காலித்தின் கண்ணீர் மட்டுமே இங்கு மிஞ்சியிருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட முசல்மான்களின் சொத்துக்கள் எல்லாம் ஏலத்தில் விடப்பட்டன. இதை மொத்தமாக இந்து மற்றும் ஜைன மத கந்துவட்டிக் காரர்கள் ஏலத்தில் எடுத்தார்கள். டெல்லியில் ரொக்கப்பணம் இதுபோன்ற கந்துவட்டிக்காரர்களிடம் மட்டும்தான் இருந்தது. பதேபூரி மஸ்ஜித் மற்றும் ஜீனத் உள் மஸ்ஜித் கூட இவர்களால் ஏலத்தில் எடுக்கப்பட்டவை. 1857 எழுச்சியின் பின்விளைவு என்பது டெல்லி இஸ்லாமியர்களின் பொருளாதாரம் இந்து மற்றும் ஜைன கந்துவட்டிக்காரர்களின் கைக்கு மாறியது. மிகச்சிறந்த கல்வியைச் சாத்தியப்படுத்திய மதரஸா பள்ளிகள் அழிக்கப்பட்டன. அதிகாரம் கிழக்கிந்தியக் கம்பெனியிலிருந்து நேரிடையாக இங்கிலாந்து மகாராணிக்கு மாற்றப்பட்டது. காலிப்பின் கவிதை இந்த அட்டூழியத்தில் காணாமல் போனது. டெல்லியில் ஆங்கிலேயர் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையை உலகிற்கு நியாயப்படுத்தும் செயலாக இஸ்லாமிய மதத்தையும் முசல்மான்களையும் பிற்போக்குவாதிகள் என்றும் படிப்பறிவு இல்லாத முட்டாள்கள் என்றும் மத அடையாளத்தை மட்டுமே போற்றுகிறவர்கள் என்றும் நையாண்டிச் சித்திரத்தைத் தோற்றுவித்தார்கள். (பக்கம் 477) பொருளாதாரத்தில் புதிய சாத்தியங்களைத் தங்கள் வயப்படுத்த முயற்சித்த மேல்ஜாதி இந்துக்கள் ஆங்கிலேயர்களோடு கூட்டுச் சேர்ந்தனர். இவர்கள் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய இஸ்லாமியர்கள் பற்றிய இந்த நையாண்டிச் சித்திரத்தை தங்களுக்குச் சாதகமாகச் பயன்படுத்திக்கொண்டனர். இந்த நையாண்டிச் சித்திரத்தின் கருத்தாக்கம் இன்று வரை ஒரு இந்துவின் பொது புத்தியில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு எதிர்வினையாக இஸ்லாமியர்களிடையே இரண்டுவிதமான சிந்தனைப்போக்கு தோன்றியது. ஒருசாரார் மேற்கத்திய கல்வி முறையின் அவசியத்தை வற்புறுத்தினர். அதுவே இன்று நாம் காணும் அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் மற்றொரு சாரார் (முகலாயப் பேரரசை இஸ்லாமியப் பேரரசாகக் கருத மறுத்தவர்கள்) தூய்மையான இஸ்லாமிய வேர்களைத் தேடி மதஅடிப்படைவாத மதரஸாக்களை உருவாக்கினார்கள். இவர்களின் முயற்சியே இன்று நாம் காணும் தாலிபான் தீவிரவாதிகள் என்கிறார் நூலின் ஆசிரியர்.

"இந்து இஸ்லாமியக் கலாச்சாரத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது. அதை இனி யாராலும் சரிசெய்யமுடியாது" என்று காலிப் எழுதியது போல் ஒரு மாபெரும் மதச்சார்பற்ற கலாச்சாரம் ஒழிக்கப்பட்டது.

அங்கம்: 2

CASTES OF MIND by Nicholas B.Dirks

1857க்குப் பிறகு இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதி கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்திலிருந்து இங்கிலாந்து மகாராணியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதன் விளைவாக இரண்டு முக்கிய விளைவுகள் உருவானது.

1. தீவிரவாதப் பாதிரிமார்களின் செய்கையை மறு பரிசீலனை செய்து இந்தியத் துணை கண்ட மக்களின் சமூக வாழ்வு, மதம் மற்றும் ஜாதிய விஷயங்களில் எவ்விதக் குறுக்கீடுகளும் செய்யமாட்டோம் என்றும் எல்லா மதநம்பிக்கைகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும் என்றும் நவம்பர் 1, 1858ல் விக்டோரியா மகாராணி தன் பிரகடனத்தை வெளிப்படுத்தினார்.

2. 1857ன் எழுச்சிக்கு அடிப்படையான காரணம் துணை கண்ட மக்களின் சமூக வாழ்வு, மதம், நம்பிக்கை, ஜாதிய அமைப்பு ஆகியவை பற்றி போதுமான அறிவு ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இல்லாததே முக்கிய காரணம் என்ற தீர்மானத்திற்கு வருகிறார்கள். இதைச் சரி செய்வதற்குத் துணைக் கண்ட சமுக வாழ்வினைப் பயில வேண்டும் என்ற தீர்மானம் வலுப்பெறுகிறது.

மேற்சொல்லப்பட்ட இரண்டு விஷயங்களும் ஒன்றோடு ஒன்று இழைந்து காலனிய ஆட்சியின் தீவிரத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது எனலாம். கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகார வட்டத்திற்கு வெளியே இருந்த மதம்/ஜாதி பற்றிய பாதிரிமார்களின் அனுபவம் காலனிய அதிகாரத்தின் சிந்தனையாக அரசியல் தளத்திற்கு நகர்த்தப்படுகிறது. அதாவது 1857ன் நிகழ்வுகள் ஆங்கிலேயருக்கும் இந்தியருக்கும் உள்ள மதரீதியான வேறுபாடு என்பது - மதநம்பிக்கைகளில் தலையிடுவது மற்றும் கலாச்சார அறியாமையின் அபாயத்தை அது உணர்த்தியிருந்த போதிலும், அரசியல் ரீதியான வேறுபாடாகக் கட்டமைக்கப்படுகிறது (பக்கம் 129)


1857க்குப் பிறகு இந்தியாவில் உள்ள ஜாதிய அமைப்பு பற்றித் தீவிரமாக ஆராயப்படுகிறது. 1858ல் மாக்ஸ் முல்லர் எழுதும்போது, "சிப்பாய் கலகத்திற்கான காரணத்தை முன்வைக்கும்போது ஜாதியச் சிந்தனையே பிரதான காரணமாக முன்வைக்கப்படுகிறது. இந்த ஒரு காரணமே ஒரு சிலரால் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது வேறு சிலரால் இதன் பங்கு மிகவும் குறைத்து மதிப்பிடப்படுகிறது’ என்கிறார். (பக்கம் 131) மேலும் எழுச்சியின் விளைவாய் அதாவது ஒரு சில குழுவினரின் இந்த நடவடிக்கையால் மொத்த இந்தியர்களையும் பொறுப்பாக்கும் அசாதாரண சூழல் மீது கவலைகொண்டு, அதுவும் எல்லா விளக்கங்களும் ஜாதியே அடிப்படையானது என்று முன்வைக்கும் காரணத்தை கண்டு தற்கால ஜாதிய வெளிப்பாடு என்பது புராதன இந்து மதத்திலிருந்து எவ்வளவு து£ரம் விலகியுள்ளது என்று எடுத்துரைக்கத் தொடங்கினார். வேதங்கள் அடிப்படையில் - அதுவே இந்து மதத்திற்கு ஆதாரமானது என்று ஏற்றுக்கொண்டு தற்காலத்தில் காணப்படும் ஜாதிய சிந்தனைகள் பண்டைய இந்து மரபில் இல்லை என்று விளக்கம் கொடுக்கிறார். (பக்கம் 132) இந்தப் பார்வை பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதற்குக் காரணம் 1857 எழுச்சிக்கு ஜாதிய அமைப்பே மூல காரணம் என்ற முடிவும் ஜாதிய அமைப்பே மதமாற்றத்திற்கு பெரிய தடையாக இருப்பதாக தீவிரவாத பாதிரிமார்களின் கருத்தாக்கமே அடிப்படையாக அமைகிறது. ஆங்கிலேயப் பாதிரிமார்களின் மொழி, சமூகம், கலாச்சார நடவடிக்கைகளில் இந்த நோக்கத்தை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார் டிரிக்ஸ். மாக்ஸ்முல்லர் மேலும், "இந்நாள்வரை மதமாற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பது ஜாதிய அமைப்புதான் என்று நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் வரும் காலங்களில் தனி நபர்களாக மட்டும் அல்லாமல் மொத்த இந்திய சமூகமே மதமாற்றம் கொள்ள இதுவே பெரும் உதவியாக இருக்கும்’“ என்கிறார். (பக்கம் 133) (மாக்ஸ் முல்லரின் இந்த அவதானிப்பு என்பது மிக சுவாரஸ்யமானது என்றுதான் சொல்ல வேண்டும்) அதே சமயத்தில், "ஜாதிய ஒழிப்பு நடவடிக்கை என்பது உயிர்த்துடிப்புள்ள ஒரு சமூக அமைப்பின் மீது நடத்தப்படும் மிக அபாயகரமான அறுவைசிகிச்சை“ என்றும் எச்சரிக்கிறார்.

இவற்றின் மூலம் இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறும் அதன் எதிர்காலமும் மிகப்பெரிய அளவில் காலனிய சிந்தனை மரபில் கட்டமைக்கப்படுவது தொடங்கிவிட்டது என்று சொல்லலாம், இந்தியத் துணை கண்டத்தின் வரலாறு, சமயம், இலக்கியம் இவற்றைப்பற்றியான காலனியச் சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்தது சமஸ்கிருதப் பிரதிகளே என்பது குறிப்பிடத்தக்கது. சமஸ்கிருதப் பிரதிகளைப் புரிந்துக் கொள்வதற்கு சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பனர்களின் உதவியை ஆங்கிலேயர்கள் நாடவேண்டியிருந்தது. இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு பார்ப்பனர்களின் சிந்தனை ஊடாக ஆங்கிலேயர்கள் பார்க்கத்தொடங்கினார்கள் என்று சொல்லலாம். பார்ப்பனர்கள் கொடுத்த பிரதிக்கான விளக்கத்தின் அடிப்படையிலேயே இந்தியச் சமூகம் பற்றிய கதையாடல் தொடங்கப்பட்டது. இந்தக் கதையாடலே காலனிய ஆதிக்கத்தின் இந்தியத் துணைக் கண்ட வரலாறாகவும் இந்தியத் தேசியத்தின் பண்பாகவும் ஆங்கிலேயர்களாலும், காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மூலமாக உயர்ஜாதி இந்துக்கள் மூலமாகவும் கட்டமைக்கப்பட்டது. நாம் இதற்கு ஓர் நல்ல உதாரணத்தை முன்வைக்க முடியும். கும்பமேளா பற்றி நேரு எழுதும் போது அது காலத்தைக் கண்டறிய முடியாத புராதன காலத்தில் இருந்து நிகழ்த்தப்படுகிறது என்கிறார். ஆனால் ஓர் அறிஞர் சமீபத்தில் இன்று நாம் காணும் கும்பமேளா என்பது 1857க்குப் பிறகே உருவானது என்று விளக்கம் கொடுக்கிறார். (ளிutறீஷீஷீளீ - 29/01/07) ஆனாலும் 1500 வருடங்களாக பார்ப்பனர்கள் கட்டமைக்க முயற்சித்த ஒற்றைப்பரிமாண அதிகார அமைப்பு ஆங்கிலேயரின் உதவியால் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டது என்று சொல்லலாம். இதன் விளைவாக 1947ல் இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு தேசங்கள் உருவாகவேண்டிய நிர்ப்பந்தமும் அதன் தொடர்ச்சியாய் அரங்கேற்றப்பட்ட கோரமான மதக்கலவரங்களையும் நாம் முன்வைக்கலாம். பார்ப்பனச் சிந்தனையில் நிலப்பிரப்புத்துவ சுய மோகமும் ஒற்றைப்பரிமாண அதிகாரமும் இந்த மதக்கலவரங்களைச் சாத்தியப்படுத்தியது என்று சொல்லலாம். 1947ல் நடந்த மத வன்முறைகளில் பெரும் பகுதி வங்காளத்திலும் பஞ்சாபிலும் தான் நடந்தது. அன்றைய பஞ்சாபில் இஸ்லாமியர்களே பெரும்பான்மை மக்களாக இருந்தார்கள். ஆனால் சீக்கிய மதத்தை இந்து மதத்தின் ஒரு பகுதியாகவே பார்த்த இந்த நிலப்பிரபுத்துவ சுய மோகம் பஞ்சாப்பைப் பிரித்தாக வேண்டும் என்று நிர்பந்தித்தது. இதன் விளைவாய் பஞ்சாப்பில் ரத்த ஆறு ஓடியது. அதுபோலவே வங்காளத்தின் மேற்குப் பகுதி இந்துக்களாலும் பொருளாதாரத்தின் அடிப்படைகளையும் கொண்டு இருந்தது. கிழக்கு வங்கம் பொருளாதாரத்தில் பின் தங்கியும் இஸ்லாமியர்களாலும் நிரம்பியிருந்தது. வங்கத்தை கலாச்சார அடிப்படையில் பார்க்க மறுத்து ஜாதியமத அடிப்படையில் பார்த்ததால் வங்கம் பிரிக்கப்பட்டது. அங்கும் இரத்த ஆறு ஓடியது. வங்கம் மற்றும் பஞ்சாபை இரண்டாகப் பிரிப்பதில் உள்ள அபாயத்தை உணர்ந்து அதைத் தடுக்க முயற்சித்தவர்களில் ஜின்னா முக்கியமானவர் ஆவார்.

ஷிtணீஸீறீமீஹ் கீஷீறீஜீமீக்ஷீt எழுதிய ஷிலீணீனீமீயீuறீ திறீவீரீலீt என்ற புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

இந்த சமஸ்கிருத மயமாக்குதலுக்கு எதிராக நடந்த எதிர்ப்புச் சிந்தனைகளில் தமிழ்நாட்டில் நடந்தது மிகமுக்கியமானது. அதை முன்னின்று நடத்தியவர் டாக்டர் கால்டுவெல். 1838ல் இந்தியாவிற்கு வந்த கால்டுவெல் பின்னாளில் மதமாற்ற பிரச்சாரகராக உருமாற்றம் கண்டார். கீழ்ஜாதி இந்துக்களும் தீண்டப்படாதவர்கள் மட்டுமே மதம் மாறுகிறார்கள் பார்ப்பனர்கள் எவரையும் மதமாற்றம் செய்ய முடியவில்லை என்பதைக் குறையாக கருதுகிறார். படித்தவர்கள் கிருஸ்தவ மதத்திற்கு வருவது பயன்தரும் என்பதே அவருடைய நோக்கம். கீழ்ஜாதி இந்துக்களும் தீண்டப்படாதவர்களும் ஏன் மதமாற்றத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது பற்றி சில சுவாரஸ்யமான காரணங்களை முன்வைக்கிறார். ஏன் பார்ப்பனர்களை மதமாற்றம் செய்ய முடியவில்லை என்று விளக்கும் போது, ‘அவர்களுக்கு மதநம்பிக்கையைக் காட்டிலும் சடங்குகளின் மீதான நம்பிக்கையே பிரதானமாக உள்ளது’ என்கிறார். (பக்கம் 137) கால்டுவெல் சாணார்களுக்கு மத்தியில் வேலை பார்த்த அனுபவத்தின் அடிப்படையில் சாணார்கள் தனிநபராகவோ அல்லது குடும்பமாகவோ அல்லாமல் ஒரு குழுவாகவே மதமாற்றத்திற்கு முன்வருகிறார்கள் என்கிறார். அதே சமயத்தில் சாணார்களின் இறை நம்பிக்கைக்கும் பாப்பனர்களின் வழிபாட்டு முறைக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்ற தீர்மானத்திற்கு வருகிறார். இவ்விரண்டு வழிபாட்டு முறைகளும் ஆரியம் - திராவிடம் என்று அன்றைய காலத்தில் பிரதானப்படுத்தப்பட்ட இனவேறுபாட்டுச் சிந்தனையில் அவற்றை ஏற்றுக்கொள்கிறார். அதாவது ஆரிய திராவிடக் கலப்புச் சிந்தனையை அவர் மறுக்காதபோதும்.

இவருடைய அனுபவங்களை வைத்து இவர் சாணார்கள் பற்றி எழுதிய புத்தகத்திற்குச் சாணார்கள் மத்தியில் இருந்து பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்த எதிர்ப்புக்குக் காரணம் சாணார்களுக்கும் பார்ப்பனிய மரபுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கால்டுவெல் எடுத்துரைத்ததுதான். அதாவது இவர் யாருக்கு ஆதரவாக இந்த புத்தகத்தை எழுதினாரோ அவர்களாலேயே அந்தப் புத்தகம் எதிர்க்கப்பட்டது. பின்னாளில் கால்டுவெல்லின் எல்லா சிந்தனைகளிலும் இதன் தாக்கம் மிக ஆழமாகப் பதிந்துள்ளது என்கிறார் டிரிக்ஸ். மதமாற்றத்திற்கு ஜாதியே தடையாக இருக்கிறது என்பதால் எல்லா பாதிரிமார்களும் ஜாதியை எதிர்ப்பது போலவே கால்டுவெல்லும் ஜாதியை எதிர்த்தார். அச்சமயத்தில் முன்வைக்கப்பட்ட ஆரியக் கோட்பாட்டை (குறிப்பாக மாக்ஸ் முல்லர்) ஏற்று ஆரியர் வருகைக்கு முந்தைய திராவிடம் என்ற கட்டமைப்பைப் பற்றி முன்வைக்கிறார். ஆரிய எதிர்ப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பு ஒற்றை இலக்கு நோக்கிய ஜாதிய எதிர்ப்பு என்பது ஜாதிய அமைப்பின் பன்முகப்பட்ட அதிகாரத் தன்மையை மறுதலிப்பதாகும் என்கிறார் டிரிக்ஸ். இதற்கு அவர் கொடுக்கும் உதாரணம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த கள்ளர்கள் மத்தியிலான அவரது ஆய்வு. கள்ளர்கள் விஜயநகர பேரரசர் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் என்கிறார். நெருக்கமான சமூக அமைப்பும் வீரமரபைப் போற்றும் கலாச்சாரமும் போர்த்தந்திரங்களில் சிறந்த அனுபவமும் பல சமூகத்தினரை பாதுகாப்பு வேண்டி இவர்களிடம் கொண்டுவந்தது. பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த கள்ளர்களுக்கு கிழக்கிந்தியக் கம்பெனி தென்னகத்தில் பரவுவதைத் தடுத்து நிறுத்தியதில் பெரும் பங்கு உண்டு. ஆனால் தெற்கே நகர்ந்தால் கள்ளர்கள் பார்ப்பன கலாச்சார வட்டத்திற்கு வெளியே வைக்கப்பட்டார்கள். பழைய தமிழ் இலக்கியங்கள் கள்ளர்களை அதன் பொருள் கொண்டே வருணித்தது. ஆங்கிலேய அரசு அவர்களைக் குற்றப்பரம்பரை என்ற முத்திரை குத்தியது. ஆனால் அதே கள்ளர்கள்தான் புதுக்கோட்டையை அரசாண்டார்கள். (பக்கம் 66)

ஆரியர்களின் வருகையால் இந்தியத் துணைக் கண்டம் பெரும் நன்மையைக் கண்டது என்று மாக்ஸ் முல்லர் முன்வைத்தபோது அது பார்ப்பனர்களின் ஒற்றைப் பரிமாண அதிகாரத்தை ஏற்றுக்கொண்டவர்களால் வரவேற்கப்பட்டது. ஆனால் கால்டுவெல் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் ஆரிய சிந்தனைக்கு எதிராக முன்வைக்கிறார். இக்குறிப்பிட்ட எதிர்வினையைக் கால்டுவெல் எக்காரணத்திற்காகச் செய்திருந்தாலும் அவர் இதைச் செய்யாமல் இருந்திருந்தால் தமிழகத்தின் அரசியல் வெளிப்பாடு எவ்வாறு இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்ப்பது சங்கடப்படவேண்டிய ஒன்று. ஆனால் அதே சமயத்தில் கால்டுவெல்லின் ஆரிய எதிர்ப்பு தமிழகத்தில் அரசியல் தளத்தில் ஜாதிய எதிர்ப்பு என்பது ஆங்கிலேயருக்குப் பதிலாக பார்ப்பனர்கள், நவீனத்துவத்துக்குப் பதிலாக ஆரிய மரபு, ஆங்கிலத்துக்குப் பதிலாக சமஸ்கிருதம் - இந்தி, ஐரோப்பாவுக்குப் பதிலாக வட இந்தியா ஆகிய முரண் தளங்களில் இயங்கியது. (பக்கம் 143) என்கிறார் டிரிக்ஸ். இன்று வரை இந்திய அளவிலும் தமிழகத்திலும் இந்த இரண்டு நிலைப்பாடுகளும் பல்வேறு தளங்களில் செயல்பட்டுக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. சமஸ்கிருதப் பிரதிகளின் அடிப்படையில் இந்தியத் தேசியம் கட்டமைக்கப்பட்டது போலவே தமிழ்மொழி அடிப்படையில் தமிழ்த்தேசம் பற்றிய சிந்தனை கட்டமைக்கப்பட்டதோடு அது சமஸ்கிருத தேசியத்திற்கு எதிரான வலுவான சிந்தனையாகவும் திகழ்ந்தது. 1857 எழுச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் இங்கேயுள்ள சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான செயல்பாடு என்பது மதம், ஜாதி என்ற அடிப்படையில் இருந்தே தோற்றம் கொண்டது. ஒற்றைப்பரிமாண ஜாதிய அதிகாரம் என்பது ஆங்கிலேய / பார்ப்பனர்கள் கூட்டால் சமஸ்கிருதப் பிரதியிலிருந்து (அதாவது அன்று நிலவிய ஸ்தூலமான எதார்த்த நிலையில் இருந்து அல்லாமல்) கட்டமைக்கப்பட்டது என்று சொல்லலாம்.

அரங்கிற்கு வெளியே...

கிறிஸ்டோபர் கால்டுவெலுடன் ஒரு உரையாடல்

ராமாநுஜம் : பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய "தவறு“ மனிதனின் மூளை சிறு மூளை பெரு மூளை என்று பிரிந்ததுதான் என்கிறார் ஆதர் கோஸ்ட்லர் இந்தத் தவறு மட்டும் நிகழவில்லை என்றால் முரண்கள் அற்று முரண்கள் ஊடாக ஒருமையைத் தரிசிக்கும் பார்வையற்று ஒரு மரம் போல, விலங்கு போல, பறவை போல இந்தப் பிரபஞ்சத்தின் கோடானு கோடி உயிரினங்களில் ஒன்றாக இந்த மனிதன் வாழ்ந்திருக்க முடியும்.

கிறிஸ்டோபர் கால்டுவெல் : இந்த முரண் தான் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் தோற்றுவிக்கிறது. ஒரு தனி மனிதனின், சமூகத்தின் கடந்த காலம் தான் ஆழ்மனதின் வெளிப்பாடாகப் பரிமாணம் கொள்கிறது. நிகழ்காலம் தான் பிரக்ஞையாக வெளிப்படுகிறது. இவ்விரண்டிற்குமான முரண் என்பது "சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நடத்தமுடியாத திருமணம் போன்றது“ என்கிறார் ஃபிராய்டு கடந்த காலத்தைப் போற்றுவது குழந்தைப்பருவத்திற்கான ஏக்கம் என்றும், விமர்சனம் அற்று நிகழ்காலத்தை ஏற்பது பழகியதை போற்றுவது என்றும் நிகழ்காலத்தையும் இறந்த காலத்தையும் ஒன்றுக்கு ஒன்று முரணாக வைப்பது இருமைவாதம் என்றும் ஃபிராய்டு விளக்கம் கொடுக்கிறார். மார்க்சிய சிந்தனைப்படி இறந்தகாலத்தை நிகழ்காலத்தோடு இணைப்பதன் மூலம் நாம் கடந்த காலத்தையும் மாற்றத்திற்குள்ளாக்க முடியும் அதுவே எதிர்காலத்தை நோக்கிய பிரக்ஞைபூர்வமான சிந்தனை. அதாவது சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் நிச்சயம் திருமணம் செய்து வைக்க முடியும்.

12 comments:

வவ்வால் சொன்னது…

ஜமாலன்,

இந்த கட்டுரையை தாங்கள் எழுதி இருந்தால், எதன் தரவுகளின் அடிப்படையில் என்றாலும்,வரலாற்று பிழைகளுடன் எழுதப்பட்டுள்ளது என்றே சொல்வேன்,

ராஜா ராம் மோகன் ராய் , பிராம்மனராக பிறந்து ஆரிய சமாஜாம் எல்லாம் உருவாக்கியவர் , அவர் 1831 இல் இங்கிலாந்த்க்கு கடல் கடந்தே போனார், அங்கேயே இறந்தார் 1833 இல், அவர் சமாதி இன்றளவும் அங்கே தான் இருக்கு.

அப்படி இருக்கையில் 1857 இல் நடந்த சிப்பாய் கலகத்திற்கு கடல் கடந்து வீரர்கள் செல்ல வேண்டும் என்று சொன்ன சட்டம் காரணம் என்பது எப்படி பொருந்தும்.

1831 இல் இங்கிலாந்திற்கு சென்ற முதல் இந்தியர் ராஜா ராம் மோஹன் ராய் தான் அதன் பின்னர் பலரும் போய் இருக்கலாம்.

எனவே கடல் தாண்டுவதை பெரிய விஷயமாக கருத இடம் இல்லை.

நீங்கள் டல்ஹவுசி செய்ததாக சொல்லி சில பல ஆண்டுகள் ஜம்ப் அடித்துள்ளீர்கள், ஆனால் அவர் பதவிக்கு வந்ததே 1848 ல் தான்.. அவரால் அவருக்கு முன்னர் நடந்த சம்பவங்களுக்கு எல்லாம் எப்படி பொறுப்பாக முடியும்?

சதுக்க பூதம் சொன்னது…

//ராஜா ராம் மோகன் ராய் , பிராம்மனராக பிறந்து ஆரிய சமாஜாம் எல்லாம் உருவாக்கியவர் , அவர் 1831 இல் இங்கிலாந்த்க்கு கடல் கடந்தே போனார், அங்கேயே இறந்தார் 1833 இல், அவர் சமாதி இன்றளவும் அங்கே தான் இருக்கு.//

It might be true for Rajaram mohanrai. It is the fact that castiest hindus are not open to go abroad. If you see Ghandhi's life, he got resistance from relatives while going to UK for studies

ஜமாலன் சொன்னது…

வவ்வால் said...

வாங்க வவ்வால். நீண்ட நாடகளாகிவிட்டது இந்த பக்கம் வந்து. முதலில் உங்களது அதிவேக வாசிப்புத்திறன் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டது. காரணம் நான் போஸ்ட் செய்துவிட்டு தமிழ்மணம்போய் சுஜாத குறித்து வரும் பதிவுகளை மேய்ந்தவிட்டு நண்பர் ரத்ணேஷ் பதிவில் ஒரு அஞ்சலி குறிப்பு அடித்துக் கொண்டிருக்கும்போதே.. உங்கள் பின்னோட்டம் ஜிமெயிலில் பிளாஷ் ஆகியது. அவ்வளவு சீக்கிரம் படித்துவிட்டு கச்சிதமாக இரண்டு புள்ளிகளை பிடித்துள்ளீர்கள். நிற்க.

//இந்த கட்டுரையை தாங்கள் எழுதி இருந்தால், எதன் தரவுகளின் அடிப்படையில் என்றாலும்,வரலாற்று பிழைகளுடன் எழுதப்பட்டுள்ளது என்றே சொல்வேன், //

நான் எழுதவில்லை. நணபர் ராமாநுஜம் தீராநதியில் எழுதியது 6 அல்லது 7 மாதங்களுக்கு முந்தையது. இது நூல்கள் அடிப்படையிலான வாசிப்பு குறிப்புகள். எழுதியவர்கள் என்னைப்போன்ற நுனிப்புல் மேய்பவர்கள் அல்ல. ஒருவேளை நான் இதை எழுதியிருந்தால் வரலாற்றுப்பிழை வர வாய்ப்புண்டு. எழுதியது நானில்லை அதனால் வரலாற்றுப் பிழை என்று சட்டென்று முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.

//ராஜா ராம் மோகன் ராய் , பிராம்மனராக பிறந்து ஆரிய சமாஜாம் எல்லாம் உருவாக்கியவர் , அவர் 1831 இல் இங்கிலாந்த்க்கு கடல் கடந்தே போனார், அங்கேயே இறந்தார் 1833 இல், அவர் சமாதி இன்றளவும் அங்கே தான் இருக்கு.
அப்படி இருக்கையில் 1857 இல் நடந்த சிப்பாய் கலகத்திற்கு கடல் கடந்து வீரர்கள் செல்ல வேண்டும் என்று சொன்ன சட்டம் காரணம் என்பது எப்படி பொருந்தும்.

1831 இல் இங்கிலாந்திற்கு சென்ற முதல் இந்தியர் ராஜா ராம் மோஹன் ராய் தான் அதன் பின்னர் பலரும் போய் இருக்கலாம்.

எனவே கடல் தாண்டுவதை பெரிய விஷயமாக கருத இடம் இல்லை.//

தாங்கள் கூறவரும் கருத்து. ராம் மோகன் ராய் பற்றிய மேற்கண்ட எந்த குறிப்பும் கட்டுரையி்ல் இல்லை. அவர் பற்றி குறிப்பிடப்படுவது அவர் இஸலாமிய மதர்சாவில் படித்தவர் என்பதுதான். கூடுதல் தகவல் அவர் பெர்சி அரபி ஹீப்ரூ போன்ற மொழிகளையும் படித்தவர். அவரது காலத்தில் அவர் பன்மொழி படித்த ஒர மேதையாக மட்டுமின்றி சிறந்த வாசிப்பாளராக இருந்தார். மதார்சாக்கள் கல்வியில் முக்கியமான பங்கை ஆற்றின என்பதற்கான சான்றாகவே இது சொல்லப்படுகிறது. சரி போகட்டும். பிரச்சனை கடல்கடந்து போதல் என்பது. 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் என்பது காலையில் முடிவெடுத்து மாலையில் நடைபெற்ற ஒன்றல்ல. கிழக்கிந்திய் கம்பெனியின் இராணுத்தில் இருந்து இந்தியர்கள் மத்தியில் கடல்கடந்து செல்ல மறுத்த அவர்கள நடந்த பர்மாவிற்கு அழைத்து சென்றதில் நிகழ்ந்த கொடுமை அவர்களது எதிர்ப்புணர்விற்கு ஒரு காரணம். இப்படியாக நடந்த பல் சம்பவங்களின் ஒரு கிளைமாக்ஸ் விளைவுதான் 1857சிப்பாய் கலகம். இதில் என்ன முரண்பாடு உள்ளது. கடல்தாண்டி போனது ராம் மோகன் ராய்தான் என்பதிலும் முரணபாடு இல்லை. காரணம் அடிப்படையில் அவர் ஒரு சீர்திரத்தவாதி என்கிற முறையில் கடல்கடந்து செல்வது அவரது நிலைபாட்டின் அடிப்படையில் சாரியே. இந்த மதம் குறிப்பாக மணுதர்மம் அல்லது பிராமண தாமம் என்பது கடல் கடந்து செல்வதை தடை செய்தது. இதற்கு மாணுடவியல் காணரங்கள் உள்ளது. ஒரு இனத்தை சிதறாமல் நிலைநிறுத்த அந்த குழுவிற்கான தேவையை இது நிறைவு செய்கிறது. தமிழில் தொல்காப்பியம் கடல்கடந்து செல்வதை பெண்களுக்கு மட்டும் தடை செய்கிறது. அதனால் கடல் கடந்து செல்லுதல் என்பது ஒரு சராசரி சனாதன இந்துவிற்கு மதரீதியான பிச்சனையாக உள்ளது என்பதே கட்டுரை தரும் விளக்கம். அதனால் அன்று யாருமே கடல்கடந்து செல்லவில்லை என்று அர்த்தம் அல்ல. ஒரு சிப்பாயின் நிலையும் ராம்மோகன் ராயின் நிலையும் ஒன்றல்ல. அவரது வாழ்நிலை படிப்பு வர்கக்ப் பிண்ணனி சராசரி சிப்பாயுக்கு இல்லை. இதன்பொருள் கடல்கடந்த செல்லுதல் என்பது எற்த ஒரு லட்சியமோ பயனோ அற்ற நிலையில் ஒரு சட்ட திணிப்பே. அதனை எதிர்க்க ஒரு கருத்தியல் தேவை அது மதமாக இருந்தது என்பதுதான்.

//நீங்கள் டல்ஹவுசி செய்ததாக சொல்லி சில பல ஆண்டுகள் ஜம்ப் அடித்துள்ளீர்கள், ஆனால் அவர் பதவிக்கு வந்ததே 1848 ல் தான்.. அவரால் அவருக்கு முன்னர் நடந்த சம்பவங்களுக்கு எல்லாம் எப்படி பொறுப்பாக முடியும்?//

கட்டுரை தலைப்பபு 1857- என்பதால் அதற்கு முந்தைய அல்லது பிந்தைய வரலாற்றுக் குறிப்புகளை எழுத வேண்டாம் என்கிறீர்களா? டல்ஹெளசியை பொறுப்பாக்குவது நோக்கமல்ல. அவரது அந்த கொள்கை அதை நடைமுறைப் படுத்தியவிதம் ஒரு தூண்டலாக இருந்தது என்பதே குறிக்கப்பட்டுள்ளது. சிப்பாய் கலகம் என்பது பல வருடங்களின் பகை உணர்வு வளர்ந்து வெளிப்பட்டது 1857-ல்.

ஜமாலன் சொன்னது…

சதுக்க பூதம் said...

//ராஜா ராம் மோகன் ராய் , பிராம்மனராக பிறந்து ஆரிய சமாஜாம் எல்லாம் உருவாக்கியவர் , அவர் 1831 இல் இங்கிலாந்த்க்கு கடல் கடந்தே போனார், அங்கேயே இறந்தார் 1833 இல், அவர் சமாதி இன்றளவும் அங்கே தான் இருக்கு.//

//It might be true for Rajaram mohanrai. It is the fact that castiest hindus are not open to go abroad. If you see Ghandhi's life, he got resistance from relatives while going to UK for studies
//

வாங்க சதுக்கபூதம். என்ன சொல்ல வருகிறீர்கள்?????

காந்தியும் கடல்கடந்த போனார். அவர்கள் எல்லாம் மதத்தின் இந்த நிலைபாடை உணர்வபூர்வமாக எதிர்த்தார்கள். சாதாரண ஒரு இந்து அல்லது இஸ்லாமியரின் நிலை என்ன? என்பதை யோசித்துப் பார்த்தால் கடல்கடந்து சென்று எவனுக்காகவோ சேவை என உயிரை விடமுடியுமா? அப்படித்தான் டல்ஹெசியின் கட்டாயத்தால் உயிரை விட்டார்கள். அதனால் கடல்கடந்து செல்வது என்பதை அவர்கள் மதக் குற்றமாகவே பார்த்தார்கள்.

TBCD சொன்னது…

1857 கலகத்தை இந்திய எழுச்சியாகவே கட்டமைத்து வந்துள்ளார்கள்.

அது ஒரு சங்கிலி நிழவு என்று சுட்டுகிறது இந்தப் கட்டுரை.

அறியாத பல தகவல்கள்...நன்று..

நல்லொதொரு கட்டுரையயை விவாததிற்கு தந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்த சுட்டியில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைப் பற்றிய குறிப்புகளிலும், சாதியம் என்பது பார்ப்பன பார்வைகளில் பார்க்கப்பட்டதுக் குறித்துன், பார்ப்பனர்களின் ஆதிக்கம் எப்படி வந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்புடையது என்று நான் நினைக்கிறேன்.

http://www.britishempire.co.uk/article/castesystem.htm

பாருங்க..இதையும் ஒரு பார்வை.

பெயரில்லா சொன்னது…

1857 குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன.தீராநதி பிப் 2008
இதழில் மார்க்ஸ் அவை குறித்து எழுதியிருக்கிறார்.அவர் குறிப்பிடாத
பலவும் உள்ளன (உ-ம் பீப்ளிஸ் டெமாகரஸியில் வந்த தொடர் கட்டுரைகள்). இவற்றையெல்லாம்
வாசித்து ராமானுஜம் எதாவது எழுதியிருக்கிறாரா. பார்பனிய இந்திய
தேசியம் என்று ஒரு தலைப்பு கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு ஜல்லியடிக்கலாம்.
ஆனால் தேசியம், தேசம் குறித்த
புரிதல்கள், அணுகுமுறைகள்
மாறமலே இருந்து வந்துள்ளனவா?
தேசியம் என்ற கருத்தாக்கம் எங்கிருந்து பெறப்பட்டது.
இதற்கும் ஆரிய்/திராவிட என்ற
சொல்லாடல்களுக்கும் என்ன
தொடர்பு என்பதையெல்லாம்
விவாதிக்க வேண்டாமா.
இரண்டு நூல்களை படித்து விட்டு
இதையெல்லாம் புரிந்து கொண்ட மாதிரி எழுதிவிட முடியுமா.

வவ்வால் சொன்னது…

ஜமாலன்,
//முதலில் உங்களது அதிவேக வாசிப்புத்திறன் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டது. //

அட உண்மையாகவே நான் பொறுமையாக தாங்க படிச்சேன், அதுக்கே விக்கில போய் ராஜா ராம் மோகன் ராய் பற்றிலாம் கொஞ்சம் படித்துவிட்டு வந்தே பின்னூட்டம் போட்டேன்.

ஆண்டு வரிசையில் வரலாற்று நிகழ்வுகள் பற்றி லேசா தெரியும், ஆனா சரியா எந்த ஆண்டுனு சொல்ல வராது, எனவே தான் என் ஊகம் சரியானு விக்கில படிச்சேன்.

வரலாற்று பிழை என்று சொல்லாவிட்டாலும் லேசாக நீங்கள் சொன்ன கடல் கடக்க சொன்னதால் ஏற்பட்ட எதிர் விளைவு என்பது சிப்பாய் கலகத்திற்கு அடிப்படை என்று சொல்லும் அளவிற்கு வலுவானதாக இல்லை.

25 ஆண்டுகள் இடைவெளி இருக்கு எனவே அதற்குள் கடல் கடப்பதை ஓரளவுக்கு மக்கள் புரிந்து வைத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

வெள்ளையர் படையில் பிராம்மண சிப்பாய்களுக்கு தனியாக சமையல், வழிப்பாடு, மதச்சின்னம் அணிய அனுமதி என்று பல சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தது, அவை எல்லாம் பிறகு பொதுவாக ஆக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியும் ஒரு காரணம்.அப்புறம் அந்த துப்பாக்கி சமாச்சாரம்.கிளர்ச்சிக்கு பல காரணங்கள் இருப்பதென்பது சரியே, துப்பாக்கி சமாச்சாரத்தில் வெடித்துவிட்டது!

அந்த சமயத்தில் மங்கள் பாண்டே குடிப்போதையில் அல்லது பாங்கு என்ற ஒன்றை சாப்பிட்டு வந்த போதையால் தகராறு செய்ததே சண்டை மூளக்காரணம், மற்ற வீரர்களுக்கும் வெறுப்பு இருந்ததால் அந்த சமயத்தில் எதிர்க்க திரண்டு விட்டார்கள்.

வேலூர் சிப்பாய்க்கலவரம் குறித்து படித்தால் தெரியும் வீரர்கள் நோக்கமற்று சண்டை போட்டது.வேலூர்க்கோட்டையை கைப்பற்றியதும், அங்குள்ள செல்வத்தை பங்கிட்டுக்கொள்வதில் தகராறு, பின்னர் குடித்துவிட்டு ஜாலியாக இருந்துள்ளார்கள், கோட்டைக்கதவை கூட மூடவில்லை, சென்னையில் இருந்து அடுத்த நாள் வந்த படை இதனால் எளிதாக உள்ளே வந்து கிளர்ச்சி செய்த வீரர்களை கைது செய்தது.போகிறப்போக்கில் வேலூர்க்கோட்டையில் டிப்பு சுல்தான் கொடியை ஏற்றி வைத்து , திப்புவின் வாரிசுகளுக்கும் ஆப்பு வைத்தது தான் மிச்சம்.

//இந்தக் கவிஞனைத் தன் அரண்மனையில் வைத்திருந்த ஜாபரும் எத்தகைய கவித்துவ உள்ளம் கொண்டவர்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.//

பகதூர் ஷா ஜாபர் கசல் பாடல்கள் எல்லாம் எழுதி இருக்கிறார். பி.பி.ஸ்ரீனிவாஸ் அப்பாடல்களை பாடி ஆல்பமாக வெளியிட்டுள்ளார், சில பாடல்களைக்கேட்டுள்ளேன்.எனக்கு பாடல்களைக்கேட்ட பிறகும் சந்தேகம் அந்த மன்னரா இவர் என்று,நீங்கள் சொல்வதை பார்த்த பின்பு உண்மைலேயே அவர் கவித்துவமானவர் தான் போல.

ஜமாலன் சொன்னது…

TBCD said...

//இந்த சுட்டியில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைப் பற்றிய குறிப்புகளிலும், சாதியம் என்பது பார்ப்பன பார்வைகளில் பார்க்கப்பட்டதுக் குறித்துன், பார்ப்பனர்களின் ஆதிக்கம் எப்படி வந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்புடையது என்று நான் நினைக்கிறேன்.

http://www.britishempire.co.uk/article/castesystem.htm

பாருங்க..இதையும் ஒரு பார்வை.//

உங்களது வாசிப்பு நன்றாக உள்ளது. உங்கள் சுட்டியையும் பார்க்கிறேன். கட்டுரையில் பேசப்படாத ஒன்று.இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் பிரிட்டீஸ் மற்றும் உயர்சாதி அதிகாரவர்க்கம் செய்த அரசியல் முக்கியமான புள்ளி இன்றுவரை இந்திய சாதி அமைப்பு வலுவடைந்ததற்கு. அது வேறு விவாதம்.

அருண்மொழி சொன்னது…

//எனவே கடல் தாண்டுவதை பெரிய விஷயமாக கருத இடம் இல்லை.//

//If you see Ghandhi's life, he got resistance from relatives while going to UK for studies//

இதோ இதுவும் நான் கூற நினைத்தது தான்

எனவே ராஜா ராம் மோகன் ராய் ஒரு விதிவிலக்கு. அவர் சென்றார் என்பதாலேயே நாம் எதையும் பொது படுத்த முடியாது என்பது என் கருத்து

//இந்த மதம் குறிப்பாக மணுதர்மம் அல்லது பிராமண தாமம் என்பது கடல் கடந்து செல்வதை தடை செய்தது. //

அது 1857. 21ஆம் நூற்றாண்டிலேயே பிராமணர் கடல் தாண்டி போவது தவறு என்று ஒருவர் வழக்கு போட்டாரே. மறந்து விட்டதா

ஜமாலன் சொன்னது…

Anonymous said...

//1857 குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன.தீராநதி பிப் 2008
இதழில் மார்க்ஸ் அவை குறித்து எழுதியிருக்கிறார்.அவர் குறிப்பிடாத
பலவும் உள்ளன (உ-ம் பீப்ளிஸ் டெமாகரஸியில் வந்த தொடர் கட்டுரைகள்). இவற்றையெல்லாம்
வாசித்து ராமானுஜம் எதாவது எழுதியிருக்கிறாரா. //

அணாணி ஐயா தாங்கள் என்ன கூற வர்கிறீர்கள். EPW கூட ஒரு சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது. அதற்கு என்ன? அதையெல்லாம் படித்துவிட்டு மற்றவரிடம் எதிர்பார்க்காதீர்கள் நீங்கள் எழுதுங்களேன். நாங்களும் தெரிந்து கொள்கிறொம். கட்டுரைக்குள் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதிலிருந்து தவங்குங்கங்கள்.

//பார்பனிய இந்திய
தேசியம் என்று ஒரு தலைப்பு கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு ஜல்லியடிக்கலாம்.

எப்படி இப்ப நீங்கள் அனானியாக வந்து அடிப்பதுபோல் வந்து அடிக்கவா? ஜல்லி அடிப்பதற்கு பல் பதிவுகள் உள்ளது. அங்கு போய் உங்கள் அணாமத்தேயக் கருத்தக்களை சொல்லுங்கள். இதில் மாற்றுக் கருத்தோ விவாதமோ இருந்தால் எழுதுங்கள். அது புரிதலை விரிவுப்படுத்தும்.அதே நேரத்தில் எங்களது கருத்துக்கள் தவறெனில் சரி செய்துகொள்ள உதவும்.

//ஆனால் தேசியம், தேசம் குறித்த
புரிதல்கள், அணுகுமுறைகள்
மாறமலே இருந்து வந்துள்ளனவா?//

முதலில் தேசியம் என்பதும் தேசம் என்பது ஒற்றைக் கருத்துருவம் அல்ல. அது இன்றைய இந்துதத்துவா சொல்லம் பண்பாட்டுதேசியம் வரை பல வடிவங்களில் கோட்பாடுகளில் வளாந்து வந்தள்ளது. அதற்கு என்ன இப்ப?

//தேசியம் என்ற கருத்தாக்கம் எங்கிருந்து பெறப்பட்டது.
இதற்கும் ஆரிய்/திராவிட என்ற
சொல்லாடல்களுக்கும் என்ன
தொடர்பு என்பதையெல்லாம்
விவாதிக்க வேண்டாமா.//

ஒரே கட்டுரையில் எல்லாவற்றையும் எழுதுவது சாத்தியமில்லை.ஆரிய திராவிட சொல்லாடலுக்கும் தேசியத்திற்கும் உள்ள உறவு இந்துத்துவாவ சொல்லும் இநதிய தேசியம் என்கிற கலாச்சார தேசியவாதத்திற்கும் தனித்தமிழ் இயக்கம் வழியாக உருவாகி வந்துள்ள தமிழ் தேசியத்திற்கும் உள்ள உறவுதான். சொல்ல வந்ததை நேரடியாக சொல்லுங்கள்?

//இரண்டு நூல்களை படித்து விட்டு
இதையெல்லாம் புரிந்து கொண்ட மாதிரி எழுதிவிட முடியுமா.//

புரிந்தகொண்டமாதிரி எழுதவில்லை. புரிதலுக்கான விளக்கமகவே எழுதப்பட்டுள்ளது. தவிரவும் எல்லாமும் புரிந்துகொண்டுதான் எழுத வேண்டும் என்றால் எதையும் எழுத முடியாது. பின்னொட்டம் மட்டும்தான் போட்டுக் கொண்டிருக்க முடியும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜமாலன் சொன்னது…

வாங்க அருண்மொழி கருத்தக்கு நன்றி.

//அது 1857. 21ஆம் நூற்றாண்டிலேயே பிராமணர் கடல் தாண்டி போவது தவறு என்று ஒருவர் வழக்கு போட்டாரே. மறந்து விட்டதா//

யார் அது? கொஞ்சம் தெளிவாகத்தான் சொல்லுங்களேன்.

ஜமாலன் சொன்னது…

//பகதூர் ஷா ஜாபர் கசல் பாடல்கள் எல்லாம் எழுதி இருக்கிறார். பி.பி.ஸ்ரீனிவாஸ் அப்பாடல்களை பாடி ஆல்பமாக வெளியிட்டுள்ளார், சில பாடல்களைக் கேட்டுள்ளேன். எனக்கு பாடல்களைக்கேட்ட பிறகும் சந்தேகம் அந்த மன்னரா இவர் என்று,நீங்கள் சொல்வதை பார்த்த பின்பு உண்மைலேயே அவர் கவித்துவமானவர் தான் போல.//

நன்றி வவ்வால் உங்கள் புரிதலுக்கும் இந்த புதிய தகவலுக்கு்ம்.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.