மொழியும் அதிகாரமும் - ந. முருகேச பண்டியன்

மொழியும் நிலமும் என்கிற இந்நூல் 2003-ல் பதிபிக்கப்பட்டது. இது 1990-துவங்கி 2000-ம் வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இத்தொகுப்பு நண்பன் கானின் முயற்சியால் வெளியடப்பட்டது. இந்நூல் வெளிவந்தபோது சிறுபத்திரிக்கை ஒன்றில் எழுதப்பட்ட இந்த அறிமுகக் குறிப்பினை நண்பர் ஒருவர் அனுப்பி வைத்தார். அதுவே இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. வலைப்பதிவு நண்பர்கள் சிலர் இதன் பதிப்பகம் பற்றிய விபரங்களை கேட்டள்ளனர். அவர்களுக்கும் மற்றும் பொதுவாகவும் ஒரு அறிமுகமும் இதில் செய்யப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------

மொழியும் அதிகாரமும் - ந. முருகேச பண்டியன்

----------------------------------------------------------------

PICT1899





மொழியும் நிலமும் (கட்டுரைகள்) -ஜமாலன்

வெளியீடு: புதுமலர் பதிப்பகம்

176-10, வைகை தெரு,

ஈரோடு 638 004.

பக்: 240. விலை: ரூ. 100. (பதிப்பு: 2003)

விளிம்பு நிலையில் அரை நாடோடி வாழ்க்கை வாழும் இனத்தாரின் பஞ்சாயத்திற்குப் போயிருந்தேன், அங்கு செருப்பினால் இன்னொருவரை அடித்தவருக்கு ரூ. 2 அபராதம் விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் 'செருப்பால் அடிப்பேன்' என்று பிறரைத் திட்டுகிறவருக்கு ரூ. 250 அபராதம் என்று கேள்விப்பட்டேன். காரணம் கேட்டபோது, "ஒரு சொல் வெல்லும்: ஒரு சொல் கொல்லும்" என்று பதில் கிடைத்தது. புலவர் யார் மீதாவது 'அறம்' வைத்து பாட்டு இயற்றினால் சம்பந்தப்பட்டவர் இறந்துவிடுவார் என்பது நாட்டார் நம்பிக்கை. தமிழர்களுக்கு எப்பவும் மொழிமீது ஒருவிதமான பயம். மொழி வழியே புனையப்படும்போது மந்திரங்கள் அதியற்புதமான ஆற்றல் மிக்கவை என்ற நம்பிக்கை நிலவுகிறது. மொழியின் சாத்தியப்பாடுகள் யாவை? மொழியின் விநோதங்கள் என்ன? பல்வேறு கேள்விகள் புதிராக வெளிப்படுகின்றன. இந்நிலையில் மொழி பற்றிய விசாரணையைத் தொடங்க பின்நவீனத்துவக் கோட்பாடுகள் பெரிதும் உதவுகின்றன. கலவைத் தொடர்கள் மூலம் வாசகரை கதறடித்துக் கொண்டிருக்கும் தமிழ்ச் சூழழில், எளிய முறையில் கோட்பாடுகளை விவாதிக்கும் ஜமாலனின் 'மொழியும் நிலமும்' புத்தகம் அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான வரவு ஆகும்.

மார்க்சிய பின்னணியில் பின் நவீனத்துவக் கோட்பாட்டினை பயன்படுத்தி இலக்கியத்தினையும் சமூகத்தினையும் ஆராய்ந்நதிடும் இவரது விமர்சன அனுகுமுறை தனித்துவமானது. ஒரு பிரச்சனையின் பல்வேறு அம்சங்களையும் அலசி ஆராய்ந்து தீவிரமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் தமிழ் இலக்கியம்/சமூக விமர்சனஙகளுக்கு வளம் சேர்க்கின்றன.

தமிழர்களுக்கு எல்லாமே நம்பிக்கை சார்ந்தவை. மனித இருப்பு முதலாகப் பிரபஞ்சத்தின் பேரியக்கம் வரை, 'காப்ஸ்யுல்' வடிவில் விடைகள் தெளிவாக உள்ளன. யார் வேண்டுமானாலும் தத்தம் நோக்கத்தினுக்கேற்ப உருவேற்றிக் கொள்ளும் வகையில் தமிழ்ச் சூழல் மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள ஜமாலனின் கட்டுரைகள் தமிழரிடையே அதிர்வுகளை ஏற்படுத்துவதுடன், வறண்டு இறுகியிருக்கும் தமிழ் மனோபாவத்தில் ஊடுறுவ முயலுகின்றன.

மொழியானது மனிதனுக்கு ஆறாவது புலன், அது சமூகத்தினைக் கட்டமைப்பதுடன், கடந்தகாலம் என்ற வரலாற்றினையும் ஏற்படுத்துகிறது. 'அர்த்தப்படுத்துதல்' மூலம் ஒவ்வொரு மொழியும் புதிர்த் தன்மையுடையதாகின்றது. ஒரு மொழிக்கு எழுதப்படும் இலக்கணத்தின் தேவை என்னவென்பது முக்கியமான கேள்வி. பண்டைத் தமிழின் இலக்கணம் பற்றி விளக்கிடும் 'தொல்காப்பியம்' குறித்து ஏற்கனவே தமிழவன், பிரேம்-ரமேஷ் பின் நவீனத்துவ நோக்கில் ஆராய்ந்துள்ளனர். அவர்களுடைய வழியில் பயணப்படும் ஜமாலன், இன்னும் ஆழமான நிலையில் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் நுட்பமாக ஆராய்ந்து தொல்காப்பியப் பிரதியை விசாரணைக்குட்படுத்தியுள்ளார். இலக்கணம் மூலம் பல்வேறு வட்டார மொழிகள், குறுமொழிகளை ஒருங்கிணைத்துப் பேரினச் சமூகம் தோற்றுவிக்கப்படுகின்றது. மொழியானது செறிந்த சமூகக் கட்டமைப்பின் அடித்தளம் என்ற புரிதலுடன் தொல்காப்பிம் ஆராயப்பட்டுள்ளது. "தொல்காப்பியமானது தமிழின் ஐந்திணை வாழ்விற்கு வரையறைகளும், இலக்கணங்களும் தொகுக்கும் போக்கில் ஒரு பொது அறிதலைக் கட்டமைக்கிறது. அல்லது சிறுசிறு குடிகளிடம் நிலவும் அறிதல்களை ஒருமுகப்பட்ட அறிதலுக்குள் தொகுக்கிறது" என்று மொழியைச் சமூக செயற்பாட்டின் தளமாக ஜமாலன் அறிமுகப்படுத்துகின்றார்.

பண்டைத் தமிழரின் மதமானது, ஊழ்வினை பற்றிய நம்பிக்கை, நாட்டார் தெய்வ வழிபாடு, வெறியாட்டம், நடுகல், சகுனம் பார்த்தல், இயற்கை வழிபாடு போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. பல்வேறு தொன்மங்கள், பழமரபுக் கதைகள் வடமொழி இலக்கியத்திலிருந்து தமிழ் மையப்படுத்தப்பட்டதன் விளைவாகத் தமிழரின் மதநம்பிக்கையானது வைதிகத்துடன் கலந்தது. இத்தகைய போக்கு காரணமாகத் தமிழக நில எல்லைகள், இந்தியப் பரப்புடன் உள்ளடக்கப்பட்டு, அதற்கேற்ப தமிழ்ப் பெருங்கதையாடல் தொடங்கப்பட்டது. தமிழ்க் கட்டுமானத்துடன் கலந்திடும் புதிய கலப்புகள், நாளடைவில் எல்லாவற்றையும் மாற்றி எழுதுவதற்கான களத்தினை உருவாக்கின. தமிழர்களின் மனவோட்டம் மறுகட்டமைப்பிற்கு உட்படுவது மெல்லத் தொடங்கியது. இத்தகைய மறுகட்டமைப்பினை நிறுவுவதே மொழியின் முக்கியச் செயற்பாடு. இச் செயற்பாட்டின் முதன்நிலை முயற்சியாகத்தான் தொல்காப்பிம் பிரதி உருவானதா? அல்லது தொல்காப்பியம் உருவாக்க விரும்பிய தமிழன் யார்? என்று அடிப்படையான கேள்வியை ஜமாலன் எழுப்புகின்றார். இதுவரை தமிழ்ப் பேராசிரியர்களால் தொல்காப்பியம் என்றாலே புனிதமானது எனவும் தமிழ் அடையாளத்துடன் தொடர்புடையது எனவும் முன்னிறுத்தப்பட்ட சொல்லாடல்கள் தருக்க நெறியில் மறுதலிக்கப்பட்டுள்ளன. ஏதாவது ஒரு அடையாளத்தினைத் தாங்கிக்கொண்டு விரைத்து நிற்கும் எல்லா மேன்மைகளையும் கவிழ்த்துப்போட வேண்டிய காலகட்டத்தில், தொல்காப்பியப் பிரதியும் விதிவிலக்கு அல்ல.

மொழியானது அடிப்படையில் அதிகாரத்தன்மையுடையது. மொழியின் வழியாக நிறுவப்படும் நிறுவனங்கள் அதிகாரத்தின் மையங்களாக விளங்குகின்றன. அதிகாரம் ஒவவொரு உடலிலும் பாய்ந்து பாசிசத்தின் வேர்களைப் பரப்புகின்றது. அதிகாரங்களுக்கிடையிலான மோதல் இன, மத, மொழி, சாதிப் பேராட்டங்களாக வடிவெடுக்கின்றன. இந்தியாவில் மொழியானது மதத்தின் பெயரால், பாசிச வடிவமெடுத்து, அதிகாரத்தின் குவிமையமாகிவிட்டது. மொழி, மத ரீதியில் புனித உடல்களைக் கட்டியமைப்புதாகக் கூறி, பாசிச உடல்களைக் கட்டியமைக்கிறது. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக்கிடந்த பிரதேசத்திலிருந்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தோன்றின என்று எளிதாகச் சொல்லாடலை வடிவமைத்திருக்கலாம். ஆனால், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது என்ற புனைவு மொழியானது, தொடாந்து இரு நாடுகளிலும் பாசிச உடல்களைத் தயாரிக்கின்றது. இதற்கு எதிரான கலகமே இன்றைய அவசரத் தேவையாக இருக்கின்றது என்று வலியுறுத்தும் ஜமாலனின் அரசியல் பார்வை தொலைநோக்குடையது.

இலக்கியத்தின் ரசனைவயப்பட்ட நிலையில் அனுபவித்து நலம் பாராட்டுவதனையே விமர்சனம் என்று கருதிடும் பொதுப்புத்தி தமிழில் உள்ளது. அழகியல் வயப்பட்ட பார்வை என்று பிரதியினை அப்பழுக்கற்றதாகக் கருதி, புனிதப்படுத்தும் போக்கு, ஒரு வகையில் அதிகாரத்துடன் தொடர்புடையது. இத்தகைய அழகியல், நாட்டார் கலைகள், விளிம்புநிலை மக்களின் பண்பாட்டு மீது செலுத்தும் மூர்க்கமான வன்முறை என்பது ஆழ்ந்த பரிசீலனைக்குரியது. தேவரடியார் ஆடினால் 'சதிர்' என்ற இழிவாகக் கருதப்படும் கலை, உயர்ஜாதிப் பெண்கள் ஆடினால் 'பரதம்' என்று புனிதப்படுத்தப்படுகின்றது. எனவே இலக்கியப் பிரதியனை அழகியல் ரீதயில் அனுகுதல் என்பது பொருத்தமற்றது என்ற ஜமாலனின் வாதம் ஏற்புடையதகாகவே உள்ளது.

யதார்த்தம் என்பது மொழி விளையாட்டின்மூலம் எற்படுத்தப்படும் புனைவு. அது வாசிப்பில் ஒருவகையான மயக்கத்தினைத் தரக்கூடியது. இதனால் வாசகன், மொழியின் வழியே கட்டமைக்கப்பட்டஒழுங்கமைவிற்குள் சிக்கிக் கொள்கின்றான். இலக்கியத்தில் ஒற்றைப் போக்கு மட்டும் சாத்தியம் என்ற நிலைப்பாடு உருவாக்கப்படுகிறது. இதனால் அதிகார கட்டமைவிற்குள் வாசகன் சிக்கும் நிலையேற்படுகிறது. தமிழின் தொடக்க கால நாவலான கமலாம்பாள் சரித்திரம் அருமையான இலக்கியப் பிரதியென்று தொடர்ந்து விமர்சகர்களால் போற்றப்படுகின்றது.

புராணக் கதைமாந்தர் போல லட்சியமயப்படுத்தப்பட்ட் பாத்திரங்கள், வைதீக மதத்தின் தத்தவத்தினை உள்ளடக்கிய கதைப்போக்கு என்று நாவலானது ஒற்றை மையக் கதையடலை வாசகருக்குப் போதிக்கிறது. இந்நாவல் வேதாந்தப் போக்குக் காரணமாகச சிறப்பிக்கப்பட்டமையினால், தமிழின் மரபு வழிப்பட்ட கதையாடல் சிதைக்கப்பட்டுவிட்டது. இதனால் 'யதார்த்தம்'என்ற ஒற்றைப் போக்கிலிருந்து தமிழ் கதையாடல் விலகிட ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்காலம் கடந்து விட்டது. நாவலின் மூலம் அறம் காக்கும் உடல்களும், தூய்மையான உடல்களும் முன்னிலைப்படுத்துவது, வாசகரின் பன்முகத் தேடலினைச் சிதைத்துப் பாசிசத்தினை ஏற்கும் உடல்களைத் தயாரிப்பதற்கான களமாகி விடுகின்றது.

புதுமைப்பித்தனின் 'சிற்பியின் நரகம்' 'நாரத ராமாயணம்', மெளனியின் சிறுகதைகள் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரைகளில், மூலப் பிரதிகள் நுட்பமாகக் கட்டுடைக்கப்பட்டுள்ளன, பிரதி ஆக்கத்தில் புதைந்துள்ள நுட்பமான அம்சங்களை விளக்குவதில் ஜமாலனின் கோட்பாட்டு அறிவு வெளிப்பட்டுள்ளது. இலக்கியப் பிரதிகளைக் கட்டுடைக்கும் பணியை இன்னும் விரிவான தளத்தில் ஜமாலன் தொடர்ந்து செய்திட வேண்டும். ஏனெனில் அதற்கான தேவை தமிழில் உள்ளது.

'மத அடிப்படைவாதம்' குறித்து விரிவாக ஜமாலன் எழுதியுள்ள கட்டுரை முக்கியமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. 'மதவாதம் பற்றி ஊடகங்களினால் வடிவமைக்கப்படும் பொதுப் புத்திக்கு எதிராக விழிப்பு அடைய வேண்டிய நேரமிது. இந்து/இந்தியா/இந்துத்துவா என்று மையப்படுத்தப்படும் அரசியல் சூழலில், மத நம்பிக்கையற்ற முஸ்லிம்களுக்குக்கூட பெரும் பிரச்சினை எதிர்நோக்கியுள்ளது. பரஸ்பர அவநம்பிக்கை, பதற்றம், கையறுநிலை, கண்காணிப்பிற்குள்ளாவது காரணமாக முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுங்கும் நிலையேற்பட்டுள்ளது. அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் அதிகார பீடங்கள் கிறிஸ்தவ மதத்துடன் உற்சாகமாகக் கைகோர்த்துள்ளன. அரேபிய நாடுகளில் ஜனநாயகம் துளியும் வளர்ந்த விடாமல் தடுத்திடுவதற்காக அரசியலில் மதவாதச் சக்திகளைத் திட்டமிட்டு வளர்த்துவிட்டுக் கொண்டிருக்கும் அமேரிக்க ஏகாதிபத்தியம் இன்னொருபுறம் 'முஸ்லிம் மத அடிப்படைவாதம்' என்று சொல்லாடலைக் கட்டியமைக்கின்றது. அமேரிக்காவின் இரட்டை வேடமானது, அரேபிய நாடுகளிலுள்ள எண்ணெய் வளத்தினைச் சுரண்டுவதற்காகத்தான். இதனால் ஆப்கானிஸ்தான், ஈராக் என்று பட்டியல் தொடர்கிறது. தமிழ்ச் சிறுபத்திரிக்கை உலகில் 'மத அடிப்படைவாதம்' குறித்து நிலவும் கருத்தியலுக்கு மறுதலையாக ஜமாலனின் கட்டுரை உள்ளது. அரசியலை அடிப்படையாகக் கொண்டு மதரீதியில் அதிகாரம் ஏற்படுத்தும் விளைவுகளை நுணுக்கமாக விளக்கியுள்ளது கட்டுரை.

இன்று உலகமயமாக்கலின் கோர விளைவுகள் ஒருபுறம், உலகத்துச் சண்டியரான அமேரிக்கா திட்டமிட்டு ஏற்படுத்தும் போர்கள் இன்னொருபுறம்... இத்தகைய சூழலில், 'தூய இலக்கியவாதி' என்று யாரும் ஒதுங்கிவிட இயலாது. நெருக்கடிகள் மிகுந்திடும் காகலகட்டத்தில் வாழ்வின் ஒவ்வொரு புள்ளியிலும் நுண் அரசியல் ஏற்படுத்திவரும் தாக்கங்களை மார்க்சியம், பின் நவீனத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் ஜமாலன் விளக்கியவற்றைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இரு மாறுபட்ட கோட்பாடுகளிலிருந்து வேண்டியவற்றை மட்டும் எடுத்துப் பல்வேறு விஷயங்கள் ஆராயப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகிறது. அவற்றில் ஜமாலனின் ஆழ்ந்த புலமையும் சுய சிந்தனையும் வெளிப்பட்டுள்ளன. தமிழில் நவீன இலக்கியத்தினையும், இலக்கிய விமர்சனத்தினையும் அடுத்த தளத்திற்கு நகர்த்திட முயலும்/விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் இந்தப் புத்தகத்தினை வாசித்து விவாதத்தினை தொடங்கிட வேண்டும். ஏனெனில் இது அடிப்படையில் வாசிப்பினை மட்டுமல்லாமல், செயலூக்கம் மிக்க நடைமுறையினையே கோருகின்றது.

-ந. முருகேச பாண்டியன்.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.