எழுதியதில் பிடித்தது

dream எனது முதல் அறிமுக பதிவு எழுதப்பட்டது 31-05-2007-ல். மொத்தம் 53 பதிவுகள். இவற்றில் எனக்கு பிடித்ததையும் அப்படி பிடித்ததற்கான காரணத்தையும் எழுதும் ஒரு வலை-விளையாட்டை துவக்கி அதற்குள் என்னையும் இணைத்துவிட்டார் நண்பர் கையேடு. வலைப்பதிவிற்கு வந்த இந்த 7 மாதங்களில் எனக்கு கிடைத்து பெரும்பேறு என்றால் ஒரு நட்பு வட்டம் உருவாகியுள்ளதுதான். பல துறைசார்ந்த பல சிந்தனைப்போக்கு கொண்ட நண்பர்கள். இந்நட்பு இவ்வட்டத்தையும் தாண்டிய ஒரு நட்பாக உறுதிப்படுமா? இல்லையா என்பதை காலம்தான் சொல்லும் என்றாலும்.. ஒரு அறிமுகம் ஏற்பட்டிருப்பதும் சிந்தனை அல்லது எழுத்து என வரும்போது அவர்களையும் உள்ளடக்கி சிந்திக்கும் ஒரு பழக்கமாக மாறி இருப்பதை மறுக்க முடியாது. இவ்வட்டம் வேறு எந்த ஊடகத்திலும் கிடைக்காத ஒன்று. பிற ஊடகங்கள் தொடர்பு என்பது வலைப்பதிவுபோல உடனுக்குடன் நடைபெறும் ஒரு நிகழ்வல்ல.

பதிவில் எனக்கு கிடைத்த முதல் நண்பர் பைத்தியக்காரன் துவங்கி சமீபத்திய சுந்தர் வரை பல நண்பர்கள். இதில் நான் பணிபுரியும் நாட்டிலேயே கிடைத்த ஒரு அனுக்கமான நண்பர் முபாரக். சென்ற மாதம் நான் அலுவலகப் பணியாக அவரது நகரத்திற்கு சென்றபோது ஒரு வாரக்காலம் அவருடன் பலவற்றை விவாதித்ததும் அவரது நட்பு இறுக்கமாகியதும் அவர் எனது இல்லத்திற்கு வந்து ஒருநாள் தங்கி விவாதித்து நகர்ந்த நேரங்களும் பதிவுலகம் தந்த அற்புதங்களில் ஒன்றுதான். நான் சந்தித்த முதல் பதிவரும் அவர்தான். மலேசிய பிரச்சனை வந்தபோது தொடர்நது என்னுடன் விவாதித்த நண்பர்கள் கோவி. கண்ணன் மற்றும் பாரி.அரசு ஆகியோர்கள். இத்தகைய வாய்ப்புகள் பதிவுலகம் தவிர வேறு எதிலும் சாத்தியமில்லை. பதிவுலகம் அக்கணமே உலகை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் அடையாளமற்ற ஒரு நாடோடி வெளிதான். உடனுக்குடன் பதிவுலக நண்பர்களுடன் பலவற்றையும் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பான தளம். இந்த சந்தர்ப்பத்தில் இதனை குறிப்பிடக் காரணம் உண்டு. எனது பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவு என்பதை இந்த நண்பர்களின் விவாதங்கள் புரிதல்கள் அடிப்படையிலலேயே தேர்ந்தெடுக்க முயல்கிறேன் நான்.

அம்பேத்கர், மாவோ மற்றும் பெரியார் போன்ற முக்கிய சிந்தனைபோக்குகள் துவங்கி பின்நவீனத்துவம், வளைகுடா பொருளியல் நிலமை, மருத்துவத்துறை, பெண் என்கிற பாலின கட்டமைப்பு, பெண் பாலியல், திருமணம் குறித்து சில கோட்பாடுகள், புதுமைபித்தனின் காஞ்சனை மற்றும் ஆற்றங்கரைப் பிள்ளளையார், தமிழின் திணைக்கோட்பாடு, கோபி கிருஷணனின் கதையுலகம், ஆபிதினின் நையாண்டி என பதிவுகள் பல புள்ளிகளில் தொடர்பற்றதாக எழுதப்பட்டிருப்பதை காணமுடிகிறது. பந்து மற்றும் ஈழம் குறித்த பதிவுகள் உடனடித்தன்மைகொண்டு ஒரு எதிர்விளைவாக எழுதப்பட்டவை. இவை தவிர்த்து திரைப்படங்கள் குறித்து ஹே ராம், கற்றது தமிழ், கல்லூரி மற்றும் அந்நியன் குறித்த பதிவுகளில் ஒரு சில மாற்றுப் பார்வைகளை பகிர்ந்துகொள்ள முடிந்தது்.

சரி. தலைப்பிற்கு வருவோம். பதிவுகளில் எழுதியவற்றில் எனக்கு பிடித்தது "பெண் ஆண்களுக்கு கலவரம் ஊட்டக்கூடியவளாக இருக்கிறாள்" - ஒரு சொல்லாடல் ஆய்வு." என்கிற இப்பதிவே. எனது பதிவுகளில் எழுதப்பட்டவை எல்லாம் எனக்கு பிடிததே எழுதப்படுகிறது என்றாலும் இதனை தனித்துக் குறிப்பிடக்காரணம் இதில் பெண்ணியம் மார்க்சியம் ஆகிய இரண்டு துறைகளின் சொல்லாடலை ஒருங்கிணைக்கும் அதே வேளையில் பெண் குறித்த இந்திய தத்துவ கருத்தாக்கம் துவங்கி தேசிய விடுதலை வழியாக இவ்வாய்வு நீண்டு செல்வதும் ஒரு காரணம். இது ஒரு விளையாட்டாக இருப்பதால் ஒன்றை சொல்வதற்காகவும் இதனை சொல்வதாகவும் கொள்ளலாம்.

விளையாட்டு விதிப்படி மற்ற 3 பதிவரிடம் இந்த தொடர் ஓட்ட ஒளி தீபத்தை தரவேண்டும். தேடிக்கொண்டிருக்கிறேன்......

அன்புடன்

ஜமாலன் 21-01-2008 இரவு 02:03.

6 comments:

SurveySan சொன்னது…

recorded here
http://surveysan.blogspot.com/2008/01/2007.html

கோவி.கண்ணன் சொன்னது…

உங்கள் இடுகைகள் அனைத்துமே தரமிக்கவை, குறைந்த அளவே எழுதினாலும், நீங்கள் பேசும் பொருளும், எடுத்துவைக்கும் கருத்துக்களும் ஆழமானவை, உங்கள் எழுத்தனுபவம் உங்கள் கட்டுரைகளில் நன்றாகவே எதிரொளிக்கிறது. உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் போது வியப்படைகிறேன்.

பாராட்டுக்கள் !

ஜமாலன் சொன்னது…

நன்றி பதித்துக்கொண்ட சர்வேய்சன் மற்றும் கோவி. கண்ணனுக்கு.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

உங்களுடைய பெரும்பான்மை பதிவுகளை நான் இன்னும் வாசிக்கவில்லை! வாசித்தவற்றில் உடல் அரசியல் குறித்த பதிவுகள் மிகவும் என்னை பாதித்தவை. எனக்குள் பல்பரிமாண அதிர்வுகளை உருவாக்கியது.

நன்றி

ஆடுமாடு சொன்னது…

தங்கள் படைப்புகளை தாங்களே எடைபோட்டு எடுப்பது சிக்கலான விஷயம்தான். இருந்தாலும் நீங்கள் இசுலாமிய அடிப்படைவாதம் குறித்த விசாரணையையும் இதில் சேர்த்திருக்கலாம்.
நன்றி

ஜமாலன் சொன்னது…

நன்றி பாரி.அரசு, ஆடுமாடு.

இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்டுரை ஏற்கனவே பத்திரிக்கையில் வெளியாகி எனது நூலிலும் இடம் பெற்றுள்ளது. இவை பதிவுகளுக்காக எழுதப்பட்டவை மட்டுமே.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.