“வர்க்கத் திரட்சிக்கு எது தடையாக இருக்கிறது?” - அம்பேத்கரை தொடர்ந்து சில விவாதக் குறிப்புகள்.

“வர்க்கத் திரட்சிக்கு எது தடையாக இருக்கிறது?” (http://www.keetru.com/rebel/ambedkar/52.php) – என்கிற பாபசாகேப் அண்ணல் அம்பேத்கரின் கட்டுரை வர்க்கத்திரட்சிக் குறித்த இந்தியச் சூழலின் குறிப்பான பண்பினை வெளிப்படுத்துகிறது। மார்க்சிய இயக்கங்கள் கவனிக்கத்தவறியதான ஒரு அம்சத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இதில் முன்வைக்கிறார்। அது பார்ப்பணீயம் இந்திய சமூகத்தில் ஊடுறுவியிருக்கும் தன்மைதான்। பார்ப்பணீயம் குறித்த ஒரு வரையறையையும் இதில் அண்ணல் அவர்களால் முன்வைக்கப்படுகிறது। அது பார்ப்பணீயம் என்பதே சமத்தவமின்மைதான். ஆக, பார்ப்பணீயம் அடிப்படை சனநாயகத்தன்மைக்கே எதிரானதாக உள்ளது. சமத்துவத்தை மறுதலிபப்பதல்ல, சமத்துவமின்மை என்பதுதான் பார்ப்பணீயத்தின் அடிப்படை இலக்கணம். இந்திய சமூகத்தின் புறத்திலிருந்து வந்த ஆரியன் இந்திய சமூகத்தின் அகத்திற்குள் பிராமணன் என்கிற அடையாளத்தைப் பெற்றதே இந்த சமத்துவமின்மை என்கிற கருத்தியலின் அடிப்படையில்தான்.

ஆக, பார்ப்பணீயம் இந்திய உயர் சமூக வாழ்க்கையாகவும் மற்ற வாழ்க்கைகளை நிராகரித்து ஒதுக்குவதாகவும் ஆன ஒரு படிநிலை அமைப்பாக பரிணமித்துள்ளது। அல்லது இந்தியப்பண்பாடு என்பது பார்ப்பணிய பண்பாடாகவும், இந்தியா என்பது பார்ப்பணர்களின் புண்ணிய பூமியாகவும் உருவமைக்கப்பட்டுள்ளது. இந்தியன் என்கிற அடையாளமே இந்த ஏற்றத்தாழ்வை உள்ளார்ந்து அறிந்துகொள்ளும் அல்லது உணர்ந்து மகிழ்வுறும் ஒன்றுதான். இந்தியாவின் ஆண்மீகம் கலாச்சாரம் எல்லாமே பார்ப்பணிய பண்பாடாகவே குறியமைக்கப்பட்டுள்ளது. இதர பண்பாடுகள் தங்களை கண்டடைந்து பார்ப்பணீயத்திலிருந்தது விடுபடுவதற்கான போராட்டமே இன்றைய இந்தியாவின் புறச்சூழலாக உள்ளது. இப்போராட்டத்தில் சாதி இந்துக்கள் என்கிற உயர்சாதி இந்துக்கள் காலணீய காலக்கட்டம் தொடங்கி இன்றவரை தங்களது இடத்தை உறுதி செய்துகொண்டதுடன், சமத்துவமின்மை என்கிற பார்ப்பணீயம் அவர்ளையும் தனக்குள் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இதிலிருந்து தனக்கு மறுக்கப்பட்டுள்ள அடையாளத்தைப் பெறுவதற்கே தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட இதர பண்பாட்டு குழக்கள் அல்லது சாதிகள் போராடவேண்டிய நிலையே உள்ளது.

அம்பேத்கர் அவர்கள் முன்வைக்கும் மற்றுமொரு முக்கிய கருத்து இந்தியாவில் தெளிவான வர்க்கப்பிரிவினையோ அல்லது வர்க்க உருவாக்கமோ நிகழவில்லை। இந்திய தொழில் முதலாளித்தவம் துவக்கம் முதலேயே ஒரு தரகுத்தன்மையுடன் ஆங்கிலேய முதலாளித்துவத்தை அண்டிப் பிழைக்கும் தன்மையில்தான் உருவாகியது। இத்துடன் இந்திய காலணீயக் கட்டுமானத்தில் தனிச்சிறப்பான ஒரு வர்க்கம் இந்தியாவில் உருவாகியது. அது ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய தரகுத்தன்மையான தொழில் முதலாளித்துவம் மற்றம் இந்திய நிலவுடமைவர்க்கத்திற்கும் ஏற்பட்ட கள்ள உறவில் உருவான ஒரு கள்ளக் குழந்தையாகும். அது மெக்காலேயின் அடிமைக் கல்வியைக் கற்று உருவத்தில் கருப்பனாகவும் உள்ளத்தில் வெள்ளையனாகவும் உள்ள மத்தியதர வர்க்கமாகும். இந்தியாவின் பெரும்பாண்மையாகவோ அல்லது சிறபாண்மையகவோ இல்லாத இவ்வர்க்கம் இந்திய சமூக வளர்ச்சியை கீழ் நோக்கி இழுக்கும் ஒரு தொங்குசதையாக உள்ளது. இதனை மார்கசீய அடிப்படையில் ஒரு வர்க்கமாக கூற இயலாது என்றாலும், இது ஒரு எதிர் பரட்சிகர சக்தியாகவே தோற்றம் கொள்கிறது. இதனை ஒரு குட்டி முதலாளிய வர்க்கமாக கணிக்க முடியுமா? என்பது விவாதத்திற்கு உரியதே? இம்மத்தியதர வர்க்கம்தான் “பணக்கார வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற தெளிவான பிரிவினை - இந்தியாவில் ஏற்படவே இல்லை” என்று அம்பேத்கர் கூறுவதை செயல்படுத்திக் கொண்டிருப்பது.

இதன் உடடனடிவிளைவாக பாட்டாளிவர்க்கம் என்கிற ஒரு மக்கள்திரள் உருவாகாமல் மத, இன, சாதிய அடையாளத்தடன்கூடிய ஒரு தொழிலாளர் வர்க்கம் உருவாகியது। இது தனது வர்க்க அடையாளத்தைவிட மத, சாதிய அடையாளத்திலேயே தனது வாழ்தளத்திற்கான அல்லது மகிழ்விற்கான உந்தங்களைப் பெற்றது। பார்ப்பணீயம் தொழில்களில் உயர்வு தாழ்வை கற்பித்தது மட்டுமின்றி தொழிலை அடிப்படையாகக் கொண்ட வர்ண வேறுபாட்டை பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றியமைத்தது। இதைதான் பார்ப்பணீயத்தின் வெற்றி என்பதாக அம்பேத்கர் அவர்கள் தனது "பார்ப்ணீயத்தின் வெற்றி" என்கிற நூலில் அறிவிக்கிறார்। மணுதர்மம் இதற்காகவே பிராமணர்களால் திருத்தி எழுதப்பட்டதையும் அந்நூலில் ஆதார பூர்வமாக சுட்டிக்காட்டுகிறார்।

இங்கு வர்ணக் கோட்பாட்டின் தொழில்அடிப்படை மற்றும் பிறப்பு அடிப்படை ஆகியவற்றின் வேறுபாட்டை புரிந்து கொள்வது அவசியம்। தொழில் அடிப்படை என்பது ஒரு திறந்த அமைப்பு। யார் வேண்டுமானாலும் அத் தொழிலைச் செய்யலாம்। தொழில் நுட்பம் குறித்த அறிவுப் பயிற்ச்சியுடன் இது உறவு கொண்டது। ஒருவன் யாருக்கு பிறந்தான் என்பதைவிட என்ன செய்வான் என்பதே அடிப்படையாகும்। ஒருவனது தொழிலே அவனது வர்ணமாகும்। அல்லது ஒருவன் சூத்திரானக மாறலாம் அல்லது பிராமணனாக மாறலாம், அவனுக்கு அந்த வர்ணத்தின் தொழில் பிரிவினை தெரிந்திருக்க வேண்டும். பிறப்பு அடிப்படை என்பது இவை எல்லாவற்றையும் மறுக்கிறது. ஒருவன் எவனுக்கு பிறந்தானோ அவனது வர்ணமே அவனது அடையாளமாக தீர்மானமாகிறது. அவனது தனித்திறமைகள் அடிப்படையில் அவனது தொழில் இருப்பதில்லை. பிறப்பின் உரிமையாக அது உள்ளது. தொழில் திறமை அல்லது தொழிலே ஒரு அறிவுச் சொத்துரிமையாகச் செயல்படுகிறது. இது தனிச் சொத்தல்ல ஒரு குழுவினருக்கான சொத்தாக உள்ளது. இச்சொத்தின் மதிப்பை தீர்மாணிப்பது இதன் விளைவோ அல்லது விளைபொருளோ அல்ல. மாறாக, சில கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகைள் அதற்கான ஆதரங்களான வேதங்கள் இவற்றினடிப்படையில் இது மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக பூசை செய்தலை விட உழைப்பும் நேரமும் சக்தியும் அதிகம் கொண்ட விவசாயக் கூலி உழைப்போ அல்லது மலம் அள்ளும் உழைப்போ மதிப்பு குறைவானதாக மதிப்பிடப்படுகிறது. இம்மதிப்பு உழைப்பை அளவிட்டோ அல்லது விளைபொருளினை அளவிட்டோ வருவதற்க மாறாக சில கற்பிதம் செய்யப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாகி உள்ளது. உழைப்பு மற்றும் உடலின் சக்தி வேலை நேரம் அதன் ஆபத்தான தன்மை ஆகியவற்றைக்கொண்டு மதிப்பிட்டால் மலம் அள்ளுதல் என்பது மிக உயர்ந்த பொருள் மதிப்புக் கூடிய ஒன்று. ஆணால், அதனை குறைவான கூலியும் கருத்தியல்ரீதியில் இழிவானதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. (ஆதவன் தீட்சண்யாவின் கதை ஒன்று இத்தொழில் குறித்த குறியீட்டுரீதியலான கதையாடலை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கிறது. தகவல் தொழில் நுட்பத்தை மலம் அள்ளும் பணியுடன் குறியீட்டு நிலையில் இணைத்து சாதீய படிமுறையை மேல்-கீழாக கவிழ்க்கிறது. http://www.keetru.com/visai/jul07/aadhavan.php). ஆக, இந்திய சமூகத்தின் உழைப்பை மதிப்பிட பொருளியல் அளவுகோலைவிட பண்பாடு மற்றம் மதங்களின் அளவுகோலே பங்களித்து வருகிறது. இதைதான் அம்பேத்கர் “புறச்சூழல்களின் சாதக நிலை” பொருளாதார வல்லுனர்கள் கவனத்தில் கொள்ளாததைச் சுட்டிக்காட்டுகிறார். உழைப்பை மதிப்பிட மார்க்ஸ் கூறிய உபரி மதிப்புடன் இந்த பண்பாட்டு சமத்துவமின்மை என்கிற மதிப்பையும் கணக்கிட வேண்டும்। இதனை பார்ப்பணீய மதிப்பு என்று சுருக்கமாக குறிப்போம்। இது உடல் உழைப்புடன் எதிர்மறை உறவைக் கொண்டது। அதாவது உடல் உழைப்புக் குறைய குறைய பார்ப்பணிய மதிப்பு என்பது அதிகரிக்கிறது। கூலி உடல் உழைப்பினால் மட்டும் நிர்ணயிக்கப் படுவதில்லை। இப்பார்ப்பணீய மதிப்பும் அதனை தீர்மாணிக்கிறது.

அடுத்து வர்ணம் எப்படியாக சாதியாக உருவானது குறித்து அம்பேத்கரினை தொடர்ந்து காண்போம்.

(அடுத்த பகுதி தொடரும்)

குறிப்பு: இக்கருத்துக்கள் விவாத நோக்கில் முன்வைக்கப்படுகின்றன॥ வர்க்கம் குறித்த விவாதத்தை இங்கிருந்து தொடர உங்களை வரவேற்கிறேன்...

4 comments:

அசுரன் சொன்னது…

Good one.

carefull about Spelling mistakes

//பின்காலணீயம் //

Asuran

மாசிலா சொன்னது…

உங்கள் பதிவு கருத்து செரிந்ததாய் நன்றாக இருக்கிறது. இதை விவாதிக்க அளவுக்கு எனக்கு ஞானம் கிடையாது.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

மொழியும் நிலமும் சொன்னது…

நண்பர்கள் அசுரன் மாசிலா...

கருத்துகளுக்கு நன்றி.. எழுத்துப் பிழைகளை குறைக்க முயற்ச்சிக்கிறேன்..

வளர்மதி சொன்னது…

இந்தியத் துணைக்கண்டச் சூழலில் வர்க்கம் - சாதி இவற்றுக்கிடையிலான உறவுகள் குறித்து பல வருடங்களுக்கும் முன்னர் எழுதிய கட்டுரை இது: http://vinaiaanathogai.blogspot.com/2007/08/1.html

வர்க்கம் குறித்த விவாதம் வரவேற்றுள்ளதால் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விழைந்தேன்.

நன்றிகள்.

ஜமாலன். Blogger இயக்குவது.