கற்றது தமிழ் கற்காதது........... ?

"நான் படித்தது தமிழ் வழிக்கல்வி, சுமார் இளநிலை வரையிலும் கூட தமிழில் தான் முழுதாக விரிவுரை செய்வார்கள், முதுகலையில் கூட குறிப்பிடத்தக்க அளவில் தமிழில் விரிவுரை இருக்கும். இந்த நிலையில் ஆங்கிலம் பேச வாய்ப்புகள் சிறிதானதால் என்னைப் போன்றவர்கள் வேலை வாங்க படும்பாடு, பெரும்பாடு." "கற்றது தமிழ்"- குறித்து இ.க. வள்ளியின் பதிவு இவ்வாறாக தொடங்குகிறது.

இப்பிரச்சனைகளை நானும் எதிர்கொண்டவன். நானும் இளம் அறிவியல்வரை தமிழ்.. முது அறிவியல் ஆங்கிலம் படித்தவன். ஆங்கிலம் தெரியாத அசடனாக.. சென்னையில் அலைக்கழிக்கப் பட்டவிதம்.. கோணங்கியின் மாயாண்டிக் கொத்தனின் ரசமட்டம் போல.. உள்ளுக்குள் நடுங்கும் அந்த தாழ்வு மனப்பான்மையின் அனுபவங்கள் சொல்லி மாளாதவை. IMRB என்கிற தனியார் நிறுவனத்தின் மேலாளர் நண்பர் நாகார்ஜீனனின் சகோதரர் என்பதால் அவரது பரிந்துரை மூலம் கிடைத்த முதல் வேலை data entry. சென்னை கன்னிமாரா நூலகத்திற்கு எதிர்புறம் அலுவலகம். அலுவலகத்தில் என்னைத்தவிர எல்லோரும் ஆணும் பெண்ணுமாக சரளமாக ஆங்கிலம் பேசும்போது தூக்கம் வராமல் இரவுகளில் வரும் nightmare கள் ரொம்பவும் கொடுமையானவை. எண்ணி முப்பது நாட்களில் சம்பளம் வாங்காமல் ஊருக்கே ஓடிப்போய் கரும்பு விவசாயம் பார்ப்பதே மேல் என இரண்டு ஆண்டுகள் ஊரிலேயே ஓட்டினேன் என்றால் அந்த நிலமை எப்படி என்று கற்பனை செய்து கொள்ளலாம்.

கிராமங்கள் மற்றும் பெருநகரங்களின் இந்த முரண்பாடு என்பது கிராம இளைஞர்கள் குறிப்பாக படித்தவர்கள் மத்தியில் ஒரு தீர்மானகரமான பங்கை ஆற்றி வருகின்றது. ஒருவகையில் ஆங்கிலம் மீதான ஒரு கனவாக, ஏக்கமாக இது கிராம மாணவர்களினை அலைக்கழித்து வருகிறது. இதன் ஒரு விளைவாக கல்வி நிறுவனங்கள் ஆங்கில வழிக்கல்வி எனப் பல்கிப்பெருகி பணங்கொழிக்கும் தொழிற்கூடங்களாக மாறிவிட்டன. ஆங்கிலம் உலகின் சன்னலாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சன்னலை அடைத்துக் கொண்டு இருட்டில் புழங்க முடியாது. அதேசமயம் சன்னல் மட்டும் போதும் என்று தாய்மொழி என்கிற கதவை அடைத்துவிடவும் முடியாது. பிரச்சனை, கதவை அடைத்துவிட்டு சன்னல்கள் (விஸ்ட்டாவரை வந்துவிட்ட விண்டோஸ் என்கிற சன்னல்களும் இதற்கு ஒரு உதாரணம்) வழியாக புழங்கும் ஒரு உலகமாக இன்றைய உலகம் மாறிவிட்டது. ஆனால் இந்த உலகத்தில்தான் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் ஆங்கிலம் மூலம் படித்து அதன் அறிவில் பேசியாக வேண்டி உள்ளது என்பது மற்றொரு கொடூரமான உண்மை.

இவவுண்மை தரும் கண்ணோட்டத்திலிருந்து 'கற்றது தமிழ்'-குறித்த எனது கருத்தாடலை கட்டமைக்க முயல்கிறேன். காரணம், தமிழ்வழிக்கல்வி பயில்பவர்களும், தமிழ் படித்தவர்களும் சமூகத்தில் குறிப்பாக தமிழ்ச்சமூகத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதான ஒரு தோற்றம் ஆங்கிலக் கல்வி படித்தவர்கள் மத்தியில் இருக்கிறதா என்பது ஒரு சமூக-உளவியல் ஆய்வு. ஆனால், தமிழ் கல்விப் படித்தவர்கள் மத்தியில் இது ஒரு தாழ்வு மனப்பான்மையாக கட்டப்பட்டிருப்பது ஒரு சமூக-உளவியல் உண்மை. இதற்கு தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலேயக் காலனி கல்விமுறைத் துவங்கி இன்றைய ஊடகங்கள்வரை ஒரு காரணமாக அமைந்துள்ளது. உருவத்தில் இந்தியனாய் உள்ளத்தில் வெள்ளையனாய் இருப்பதுதான் மெக்காலே கல்விமுறையின் அடிப்படை என்பது பலராலும் சொல்லப்பட்டுள்ள ஒரு உண்மை. இவ்வுண்மை தற்சமயம் ஒரு தீவிர நிலையை அடைந்திருக்கிறது. இந்த வெள்ளையன் சுதந்திரம் தரப்பட்டதாகச் சொல்லப்பட்ட இந்த அறுபது ஆண்டுகளில் ஆங்கிலேயனிலிருந்து மேற்கத்தியன் மற்றும் அமெரிக்கனாக மாறியுள்ளான் என்பதுதான் அது. இதனை நிரூபிக்கும் வண்ணம் இன்று பெருநகரங்களில் உருவாகியிருக்கும் BPO, call center and IT oriented firms ஆகியவை பன்னாட்டு முதலாளியத்தின் சுரண்டலுக்கான ஒரு நிதர்சனமாக ஆக்கி உள்ளன. இதனை ஒரு பேசுபொருளாக எடுத்துக் கொண்டு நாயகனின் தற்கொலை நாடகத்துடன் துவங்குகிறது இப்படம்.

இவ்விமர்சனம் அல்லது கருத்துகள் தெளிவற்ற திருட்டு வீசீடி-யில் அரைகுறையாக புரிந்து கொள்ளப்பட்ட வசனங்களை அடிப்படையாகக் கொண்டது. காரணம், சவுதி அரேபியாவில் திரை அரங்குகளோ, திரைப்படமோ கிடையாது. இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட திருட்டு வீசீடிக்கள் மட்டுமே பார்க்கக் கிடைக்கும். அதனால் தமிழ் படங்கள் குறித்து நான் விரிவாக எதுவும் பேசுவதில்லை. திரைப்படம் என்கிற சினிமாவே ஒரு பின்நவீனத்துவத்தின் கலைவடிவம்தான் என்கிறார்கள் அதனைத் தீவிரமாக ஆய்வு செய்த அறிஞர்கள். சினிமாவின் ஒவ்வொரு “ஷாட்“-டும் ஒரு சொல்லாகவும், அதன் தொடர்ச்சி ஒரு வாக்கியமாகவும் அமைந்த மொழியாகக் கருதி காட்சிகளின் குறியீடுகளை வாசிக்கும் முறையியலாகும். அம்முறையியலுக்கான முயற்சி இல்லை இது. அது தமிழ்படமாக இருந்தாலும் ஸப்டைட்டில் உள்ள ஒரிஜினல் டிவிடி-களில் மட்டுமே சாத்தியம். அதனால், கற்றது தமிழ் பார்த்தவுடன் அதைப்பற்றி எழுதும் எண்ணம் ஏற்பட்டதால் இது எழுதப்படுகிறது.

உலகமயமாக்கல் என்கிற பொருளாதாரக்காரணியை விட்டுவிட்டு பிரச்சனையை கல்வி முறையினூடாகவும் மொழியினூடாகவும் காண்கிறது இப்படம். இயக்குநருக்கு இவை குறித்து ஒரு திட்டவட்டமான பார்வை இல்லை. அப்படியே அது அவருக்கு இருந்தாலும் அது படத்தில் அவரது குரலாகப் பேசப்படவில்லை. படம் முழுவதும் சொல்லுதலின் வழியாகவே நமக்கு காட்சிப்படுத்தப் படுகிறது. அதனால் சொல்பவனின் தன்னிலையாக்கம் இதன் மைய சரடாக உள்ளதால், இயக்குநர் பர்வையை கதையாடல் மறுத்து விடுகிறது. படம் பார்வையாளனின் கோணத்திலிருந்து உருவாகி ஓடத் துவங்குகிறது. ஆனால், படத்திற்குள் பன்னாட்டு முதலாளியத்தின் விளைவாக உருவாகும் சமூக அமைதி இன்மை பற்றிய பார்வை அவரையும் மீறி சமூகத்தின் குரலாக பதிவாகிவிட்டது. IT call center கள் மூலமாகவும், நுகர்வுப்பண்பாட்டின் மூலமாகவும், 2,000 மற்றும் 2,00,000 சம்பள வித்தியாசம் மற்றும் சேறடிக்கும் IT professional கார் மூலமாகவும். இந்த வேறுபாடு என்பது மலைக்கும் மடுவிற்குமானது. ஆனால் இருவரும் புழங்கும் நுகர்வும் உலகமும் ஒன்றுதான்.

இவ்வுலகிற்கு எதிராக என்ன செய்யமுடியும்? கல்லெடுத்து கார் கண்ணாடியை உடைக்கலாம் அல்லது தர்க்கமற்ற முறையில் ஒழுங்குகள் எல்லாவற்றையும் குலைக்கும் வண்ணம் கொலை செய்யலாம் அல்லது தனது பாலியல் இச்சைகளை பாத்ரூமில் வடிகாலாக்கிக் கொள்ளலாம் (தமிழ் படத்தில் முதன் முறையாக இது ஒரு வசனமாகியுள்ளது). இவை எல்லாம் சேர்ந்து மனப்பிறழ்ச்சியாளனாக அடையாளப்படுத்தலாம். இவ்வளவும் செய்தவன் ஏன் அவற்றை ஒப்புதல் வாக்குமூலமாகத் தருகிறான்? அவனுக்கு பாவ மன்னிப்பு வழங்க கடவுளோ மதமோ இல்லை. இருப்பது தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான நவீன மதமான தொலைக்காட்சி என்கிற ஊடகம்தான். காரணம் தொலைக்காட்சி யதார்த்ததை பிரதிபலிப்பதில்லை. மாறாக, தொலைக்காட்சி உண்மை என்று நம்பப்படுகிற ஒரு உலகை உருவாக்கிக் காட்டுகிறது. அதாவது இது ஒரு simulation எனலாம்.

உண்மையில் எந்த ஒரு ஊடகமும் யதார்த்தத்தை பிரதிபலிக்கவே முடியாது. காரணம் யதார்த்தம் என்கிற ஒன்று பிரதிக்குள் நுழையும்போது அது பிரதிக்கான யதார்த்தம் ஆகிவிடுமே ஒழிய இயல்பான யதார்த்தமாக இருக்காது. அவை காட்டுவது அதன் வெளிக்குள் கட்டமைக்கப்பட்ட ஒரு யதார்தத்தைதான். சாதரணமாக, உண்மையாக நம்பப்படும் புகைப்படக்கலை கூட யதார்த்தத்தைக் காட்டுவது கிடையாது. அதிலும் புகைப்படம் எடுப்பவரின் தேர்வு பரப்பு என்கிற ஒன்று இருக்கிறது. அதற்கான அரசியலை அப்புகைப்படம் பேசத்தான் செய்யும். ஆக, தொலைக்காட்சி வழியாக தனது பாவமன்னிப்பை கோரும் அவன் தனது காதலியை விபச்சாரியாகக் கண்டு அவளிடம் தஞ்சமடைந்து தன்னை புனிதப்படுத்திக்கொள்ள முனைகிறான். பார்வையாளனை ஒரு பாதிரியாராக ஆக்கும் முயற்சியே இது எனலாம்.

இப்படம் வழக்கம்போல் ஆசிரியனின் அனுபவம் என்பதான துணைப் பிரதியி்ன் வழியாக வாசிக்கப்பட வேண்டும் என்கிற ஊடகங்களின் நிர்பந்தத்தை தவிர்த்துப் பார்த்தால்.. பிரதியானது அதன் தர்க்க அடிப்படையில் அனுகப்பட வேண்டும் என்பதே சரியானது. பொதுவாக விமர்சனம் என்பது முன் அனுமானங்களால் கட்டுப்படுவதில்லை. ஆனால், மொழிக்கே உரிய பிரசன்னம் என்கிற முன்இருப்பு இருக்கவே செய்கிறது. அதனால் பிரதியானது மொழியின் அனுமானங்களால் கட்டப்படுகிறது. அதனால்தான் பிரதியானது பல அனுமானங்களைக் கொண்ட பல வாசல்களை திறந்து விடுகிறது. எனவே, பிரதியை வெளியிலிருந்து அணுகுவதை தவிர்த்தால் அதில் அடையாளம் காணும் தன்மை நிகழாது. அதாவது, அவனை அல்லது பிரதி பேசும் நாயகனை நல்லவன் கெட்டவன் இன்னபிற போன்ற இயல்பான அடையாள அரசியலுக்குள் அழைத்து வரமாட்டோம். அதாவது பிரதிக்குள் வரும் நாயகன் ஒரு மனப்பிறழ்ச்சியாளன். படத்தை ஒரு மனப்பிறழ்ச்சியாளனின் பார்வை நிலையிருந்து வாசித்தால் இக்குழப்பங்கள் வராது. மனப்பிறழ்ச்சியை நோயாக மாற்றி இருப்பது ஆதிக்கத்தின் நுண்அரசியல் ஆகும். அதனை மற்றொரு மனித நிலையாகக் கருதினால், இப்பிறழ்ச்சி என்பது சமூக அழுத்தங்களின் விளைவு. இத்தகைய உணர்வுதான் நாயகன் கொள்ளும் பொறாமை என்பதும்.

இன்றைய IT பண்பாடு குறித்து கூர்மையான சமூக விமர்சனங்கள் வரத்துவங்கியிருக்கின்றன. அதனை இப்படம் சமூகரீதியாக இல்லாமல் தனிமனிதப்பிரச்சனையாக அனுகுகிறது. என்றாலும்.. இது இதரப் பிரிவினரை ஒருவகை மனப்பிறழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் என்கிற உண்மையையும் சமூகத்தில் ஒரு அமைதியின்மையுயும் இவை உருவாக்கும் என்பதாக இப்பிரதி முன் அனுமானிக்கிறது. மற்றவையெல்லாம் இந்த அடிப்படைக்காக கட்டமைக்கப்பட்டவையே. மனப்பிறழ்ச்சியாளனின் சிந்தனை தெளிவற்றதாக இருக்கும் யூகம்கூட இன்று கட்டமைக்கப்பட்டிருக்கும் மனச்சிதைவாளர்கள் குறித்த சொல்லாடலில் இருந்தே வருகிறது. அவர்கள் பிறழ்ந்து இருப்பதால்தான் நாம் ஒழுங்காக இருப்பதாக கற்பிதம் செய்து கொள்கிறோம்.

ஒரு மையத்தைப்பற்றிய மனப்பிறழ்ச்சி என்பதை பாரனோயா என்பார்கள். இவன் பாரோனாய்டுவகை நாயகன். அந்நியன் நாயகன் சாதியவெறி என்கிற மையம் கொண்டவன். இவன் தனது தமிழ் கற்றலை மையமாகக் கொண்டவன். குணா தொண்மத்தாயை மையமாகக் கொண்டவன், ஆளவந்தான் கெட்ட தாயை மையமாகக் கொண்டவன், காதல் கொண்டேன் நாயகன் தனக்கு மறுக்கப்பட்ட உடலை மையமாகக் கொண்டவன் இப்படியாக தமிழ் சினிமாக் கதையாடல் பல பாரோனியாக்களை பேசியதுதான். இப்பாரோனியாவை சிறந்த சிந்தனையாளர்கள் துவங்கி புரட்சியாளர்கள் வரை விரிவுபடுத்தலாம். மையமுள்ள சிந்தனைக்காக தன்னை இழக்கும் உடல்களின் சிந்தனைவகையையே பாரோனாய்டு வகை எனலாம்.

இம் மையமற்ற தன்மை அவனது உடல்வாதைகளை கொலைநிகழ்த்துதலின் இதமாக பதிலீடு செய்கிறது. இதனால் இக்கொலைகள், கொலைக்காக அதன் அழகியல் உணர்விற்காக அந்த நோய்தன்மைக்காக செய்யப்படுகிறது. ஆக, படத்தின் மையம் தர்க்கமற்ற முறையில் அவன் செய்யும் கொலைகள். அவனே சொன்னால் ஒழிய.. கண்டு கொள்ளமுடியாத, கண்டுபிடிக்க முடியாத கொலைகள். தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட எந்த கொலையையும் துப்பறிந்துவிட முடியும். தர்க்கமற்ற கொலைகளை துப்பறிவது சாத்தியமற்றது. இதன்மூலம் அதிகார அமைப்பின் குற்றம் பற்றிய தாக்கவிதிகளை கேள்விக்கு உட்படுத்துகிறான். அதனால்தான் காவல் ஆய்வாளரின் கொலை என்பது தீவரவாதிகளின் செயலாக நம்பும் அதிகார அமைப்பின் எளிமையான தர்க்க கட்டமைப்பு இவனது சிக்கல்வாய்ந்த நடைமுறையால் சிதைவுக்கு ஆளாகிறது. இதனை ஒரு மையமான கவனக் குவிப்பாக இப்பிரதி செய்யவில்லை. கொலைகளில் துவங்கி கொலைபற்றிய கதையாடலாக இப்பிரதி நகர்ந்திருந்தால் இப்படத்தின் தன்மையே மாறியிருக்கும். சந்தை விதிகளால் ஆளப்படும் தமிழ் சினிமாவில் இதுவே அதிகம்தான்.

இக்கொலைகளும் தர்க்கமற்ற முறையில் தனது மனதிற்கு உட்பட்ட நியாங்களின் அடிப்படையில் கூட அல்ல தனது மனதின் இதத்திற்காக செய்யப்படுகிறது. இது கொலை நிகழ்த்துதலின் அரசியலாக/அழகியலாக காட்சிப்படுத்தப்படுவதை உள்ளார்ந்து வியாபித்திருக்கும் மனித மனதின் வன்முறைக்கான மற்றும் கொலைக்கான உடலை சிதைக்கும் பாசிச மனத்தினை வெளிக் கொண்டு வருவதாக உள்ளது. இயக்குநரின் பார்வைக்கு எதிரான மனநிலையில் இப்படம் சஞ்சரிக்கிறது. நாயகனை அவனது செயல்களை இயக்குநரால் நியாயப்படுத்த முடியாத நிலையாகும் இது. அதாவது தமிழ் படித்தவனின் பிரச்சனையாக சொல்லமுயன்ற கதை அதன் தளத்தில் நிலை கொள்ளாமல் வேறு திசைநோக்கிப் பயணிக்கத் துவங்குகிறது. பிரதி இயக்குநரை வழிநடத்திச் செல்கிறது. வலிந்து ஒரு முடிவை பாவமன்னிப்பு வடிவில் வழங்கி இவ்விருவரையும் காவலர்கள் சுற்றி வளைப்பதில் குணாவின் உச்சத்தை நினைவூட்டினாலும்.. முடிவில் இருட்டிற்குள் செல்வதான.. நாயைக் காப்பாற்றுவதான முடிவாக அது திறந்து விடப்பட்டுள்ளது. அதாவது குழந்தமைக்கு திரும்புதல் என்கிற நடக்கவியலா ஏக்கத்துடன் படம் முடிகிறது.

மற்றபடி படம் என்பது பின்நவீனத்துவ மனநிலைகளில் ஒன்றான பழமைக்கான ஏக்கம் (nostalgia) என்பதை தனது கதைகூறலின் மூலம் கிராம காட்சியாகவும் மலைகள் பசுமையான இயற்கை சிறுபிராய காதல் என்பதாக அடிக்கடி நினைவூட்டிக் கொண்டு இறுக்கிறது. இந்த ஏக்கம் எப்படி கொலைக்கான மனநிலையாக மாறுகிறது என்பது உளவியல் சார்ந்த ஒரு ஆய்வு. இதற்காக சிறுவயது முதல் அவன் காணும் பல விபத்துகள் வழியாகவும் வழக்கமான அனாதையாதல், எதுவும் கிடைக்காத புறக்கணிப்பின் ஏக்கம்... இப்படியான நியாயப்படுத்தல்கள் இன்னும் தமிழ் சினிமாவின் சந்தை விதித்த கதையாடலை தாண்டாததையே காட்டுகிறது. சாவுணர்ச்சி என்பது அவனது இயல்புணர்வுபோலக் காட்டப்படுகிறது. படம் தற்கொலையில் தொடங்குவதன் பிண்ணனி இதுதான்.

இப்படம் சமுதாயத்தின் உள்ளொடுங்கியிருக்கும் ஒரு குரலின் வெளிப்பாடு. தேவையற்ற எந்த ஒன்றும் சமுதாயத்தில் வெளிப்பட சாத்தியமில்லை. பிரச்சனை இதனை சமுதாயம் எப்படி எதிர்கொள்ளும் என்பதுதான். இப்படம் தமிழ் பற்றியது அல்ல. தமிழ் என்பது ஒரு கருவி. மையமான முரணாக முன்வைப்பது இன்றைய பண்ணாட்டு முதலாளியச் சூழல் எப்படி ஒரு அடையாளமற்ற தன்னிலையைக் கட்டமைக்க முனைகிறது என்பதை சொல்வதுதான். இயக்குநர் எப்படியெல்லாம் தமிழ் படித்து கஷ்டப்பட்டதாக தனது நேர்காணலில் கூறுவது, அவர் சொல்லவிரும்புவதை பிறரை ஏற்கச் செய்ய முனையும் ஒரு துணைப்பிரதியாகும். அல்லது படத்தை அவர் அர்த்தப்படுத்த முனையும்விதம் அது. படம் அவர் விரும்பிய தமிழ்சார்பு மனநிலைக்கு எதிரானதாக மாறிவிடுகிறது என்பதே இதில் வருந்ததக்க விஷயம். இப்படம் தமிழை முன்வைத்து இன்றைய பண்ணாட்டு முதலாளியத்தின் பக்க விளைவாக உருவாகும் எதிர்மனிதன் பற்றிய கதையாடலாக உள்ளது.

படத்தை மற்றொரு முறை பார்த்தால் அல்லது தெளிவான பிரதியில் பார்த்தால் எனது இக்கருத்துகள்கூட மாறலாம். அப்படி மாறினால்.. இதை பிறிதொரு பதிவாக இடலாம். மகளுக்கு பள்ளியின் அறிவியல் கண்காட்சிக்கு chart வரைவது போன்ற வேறு வேலையே இல்லை எனும் பட்சத்தில்.

-ஜமாலன் (05-11-2007 மாலை 04:05)

குறிப்பு- எண்ணற்ற எழுத்துப் பிழைகளை பொறுப்புடன் படித்து திருத்தம் கூறிய நண்பர் சரவணன் அவர்களுக்கு நன்றி.

7 Comments:

கோவி.கண்ணன் said...

ஜமா,

ரொம்ப நீளமான பதிவாக இருக்கு...முச்சு வாங்குது பாதி படித்தவரை நல்லா வந்திருக்கு. யதார்த்தம்.

மீதி அப்பறம் படிச்சுட்டு ... வருவேன்

ஜமாலன் said...

நன்றி கோவி...

சுருக்கமாகவுவும் தெளிவாகவும் எழுதவேண்டும் என்பது ஒரு பெரிய பயிற்சி.. சீக்கிரத்தில் அதற்கு முயல்கிறேன். எழுத்து மையத்தைவிட்டு அங்குகுமிங்குமாக அலைவதுதான் இதற்கு காரணம். இதனை பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதளை சரி செய்ய முயற்சிக்கிறேன்.

நட்பார்ந்த உங்கள் கருத்துக்கு நன்றிகள் பல..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மிக விரிவான அருமையான பதிவு. நன்றி ஜமாலன். இவ்வ‌ள‌வு விஷ‌ய‌ங்க‌ளைக் க‌வ‌ர் செய்ய‌ வேண்டுமானால் இதைவிட‌ சுருக்க‌மாக‌ எழுத‌ முடியாதுதான்.

/இவவுண்மை தரும் கண்ணோட்டத்திலிருந்து 'கற்றது தமிழ்'-குறித்த எனது கருத்தாடலை கட்டமைக்க முயல்கிறேன்/

கட்டமைக்கப்பட்ட கருத்தாடல்களைக் கலைத்துப் போட்டு விளையாடுவது தானே பின் அமைப்பியல் சார்ந்த செயல்பாடாக இருக்க முடியும்.??

ஜமாலன் said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

//கட்டமைக்கப்பட்ட கருத்தாடல்களைக் கலைத்துப் போட்டு விளையாடுவது தானே பின் அமைப்பியல் சார்ந்த செயல்பாடாக இருக்க முடியும்.??//

சரியாக பிடித்துவிட்டீர்கள். கருத்தாடலை கட்டமைப்பது நமது வேலையல்ல.. இது பழகிய எழுத்து நடையின் விளைவு. உண்மையில் கருத்தாடலைக் கலைத்துப் போடுவதுதான் சரி. இவ்விமர்சனமும் அதையே செய்வதாகத்தான் நினைக்கிறேன். நன்றி சுட்டியமைக்கு.

Madhu said...

Search in தமிழ் http://www.yanthram.com/ta/

சரவணன் said...

தாமதமாக இன்றுதான் படித்தேன் இந்த இடுகையை. நான் மறுமொழியாக சொல்லவந்தது, உங்கள் இடுகையில் காணப்படும் எழுத்துப்பிழைகள்/இலக்கணப்பிழைகள் உறுத்தலாக அமைந்து கட்டுரையை உள்வாங்க இடைஞ்சலாக இருப்பது பற்றியே. தமிழில் பிழை திருத்தி வசதிகள் இல்லாத நிலையில் நாம் தான் கவனம் எடுத்து ஒரு முறைக்கு இரு முறையாகப் படித்து அல்லது வேறு ஒருவரை வாசிக்கக் கேட்டு, பிழைகளைத் திருத்தி வெளியிட வேண்டும். வெளியிட்ட பின்னும் இச்செயலைத் தொடரும் வசதியும் (அச்சு ஊடகம் போலன்றி) இருக்கிறதே!

மொக்கைப் பதிவு இன்னா நானும் கண்டுக்காம போய்க்கினே இருந்திருப்பேன்...மேட்டரு கொஞ்சம் சீரியஸ் பாரு தல... கொஞ்சமா சாம்பிள் காட்றேன்..

நாகார்ஜீணனின் = நாகார்ஜுனனின்
சகோதார் = சகோதரர்
அலுகவலகத்தில் = அலுவலகத்தில்
30 நாட்கள் = 30 நாட்களில்
மத்தியல் = மத்தியில்
வருகின்றன = வருகிறது (ஒருமை)
அங்கில = ஆங்கில
ஒரு...தொழிற்கூடங்களாக = ஒருமை/பண்மை மயக்கம்

சன்னல்மட்டும் = சன்னல் மட்டும்
புழங்கம் = புழங்கும்
ஆணால் = ஆனால்
பிரச்சனகளையும் = பிரச்சனைகளையும்
தமிழ் சமூகத்தில் = தமிழ்ச்சமூகத்தில்
இருக்கிறதா? என்பது = தேவையற்ற ? குறி

காலணி = காலனி [காலணி=செருப்பு]
பண்ணாட்டு = பன்னாட்டு
'இதனை நிரூபிக்கும்...' = இந்த வாக்கியம் பொருள் காண இயலாதது.
பார்க்க கிடைக்கும் = ஒற்றுப்பிழை
தமிழ்படங்கள் = தமிழ் படங்கள்/தமிழ்ப்படங்கள்

அதனை தீவிரமாக = ஒற்றுப்பிழை
ஒவ்வொரு காட்சியும் = ஷாட்டும்
அமைதியின்மைப்பற்றியப் பார்வை = அமைதி இன்மை பற்றிய பார்வை


முயற்ச்சி = முயற்சி
கற்றது தமிழ் = கற்றது தமிழ்
மொழியுனூடாகவும் = மொழியினூடாகவும்
இயக்கநர் = இயக்குநர்
என்ன செய்யமுடியும் = விடுபட்ட'?' குறி

பாலியில் = பாலியல்
பாதரூமில் = பாத்ரூமில்
(மேலும் இச்சைகளை வடிகாலாக்க முடியாது!)
கடவுளோ மதமோ இல்லை = முற்றுப்புள்ளி தேவை.
ஒழியே = ஒழிய

சாதரண = சாதாரணமாக
புகைப்படக்கலைக்கூட = புகைப்படக்கலை கூட
(கலைக்கூடம்= gallery)
அவளுடன் = அவளிடம்
புணிதப்படுத்திக் கொள்ள = புனிதப்படுத்திக்கொள்ள

முயற்சியெ = முயற்சியே
அனுகுவதை = அணுகுவதை
பரோணியா = பாரனோயா என்பதே சரி

குணா, ஆளவந்தான், காதல் கொண்டேன் = குணா, ஆளவந்தான், காதல் கொண்டேன்

குழந்தமைக்கு = குழந்தைமைக்கு
நுண்அரசியல் = நுண் அரசியல்/நுண்ணரசியல்

அரசியலாக அல்லது அழகியலாக = இரண்டும் ஒன்றா?
'இது கொலை நிகழ்த்துதலின்...' = வாக்கிய அமைதியற்று அர்த்தம் கொள்ள இயலாததாக உள்ளது.

பதலீடு = பதிலீடு
அணாதையாதல் =அனாதையாதல்
சந்தைவிதித்த = சந்தை விதித்த
உள்ளொடங்கியிருக்கும் = உள்ளொடுங்கியிருக்கும்
தமிழ்பற்றியது =தமிழ் பற்றியது
அடையாளமற் = அடையாளமற்ற

தன்னிலையை கட்டமைக்க = ஒற்றுப்பிழை
கஷ்ட்டப்பட்டதாக = கஷ்டப்பட்டதாக

மற்றொருமுறைப் பார்த்தால் = மற்றொரு முறை பார்த்தால்
இக்கருத்துக்கள்கூட=இக்கருத்துகள்கூட
வேறுவேலையே = வேறு வேலையே

காப்பி எடிட்டிங் சார்ந்தவை:
(Nostalgia) =(nostalgia)
2 ஆண்டுகள் = இரண்டு ஆண்டுகள்

30 நாட்கள், வீசீடி-யில், வீசீடிக்கள், டிவிடி-களில், 60-ஆண்டுகளில், 30 நாட்கள் = hyphenation standard காணப்படவில்லை.

நிறுத்தக்குறியிடுவதிலுள்ள பிழைகள் ஒன்றிரண்டைத் தவிர மற்றவற்றை மேலே சுட்டிக்காட்டவில்லை.

ஜமாலன், சராசரியானவர்களைப்போல இதெல்லாம் பெரிய விஷயமா என்று கேட்கவோ, அடிக்க வரவோ மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்

அன்புடன்,
சரவணன்

ஜமாலன் said...

வாங்க சரவணன்

மிக்க நன்றி. உங்களது பொறுமை என்னை அசர வைக்கிறது. அவசரம் மற்றும் எழுத்துப்பிழை அறியாமையால் வருவது. உங்களைப்போல ஒரு ஆளைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். பல நண்பர்கள் சுட்டியுள்ளனர். நீங்கள்தான் முன்முயற்சி எடுத்து இதனை விரிவாக சொல்லியுள்ளீர்கள்.

கண்டிப்பாக ஒன்றிற்கு இரண்டு முறை படித்துதான் போடுகிறேன். என்றாலும் கருத்தின் ஓட்டத்தில் பிழை கண்களில் தென்படுவதில்லை. வாசிப்பு கண்களால் செய்யப்படுவதில்லை, மனதால் என்பதால் ஏற்படும் பிழைகள். தட்டச்சுப் பிழகைளை சொல்கிறேன். எழத்துப்பிழை எனது அறிவின்மைதான் (னவா? ணவா?).

குறைந்த பட்சம் இப்பதிவை திருத்திவிடுகிறேன். மேலும் இது ஒரு நல்ல பயிற்சிதான்.

உங்கள் மெயில் ஐடி தாருங்களேன். குறைந்தபட்சம் இத்தகைய சந்தேகங்களை சரி செய்துகொள்ள உதவும். ஐடியை வெளியிடமாட்டேன்.

நன்றி.