திணைக் கோட்பாடும் புது விமர்சனமுறையும்

திணைப்பற்றி எனக்கு அவ்வளவு ஆழமாக தெரியாது. அப்புறம் எதுக்கு அதபத்தி எழுத வந்த என்று கேட்காதீர்கள். சும்மா நட்சத்திரம்னா நாலும் தெரியனும்ல அல்லது அப்படி தெரிஞ்சாமாதிரி காட்டிக்குனும்ல... அதுக்குத்தான்.

தமிழை நான் முறையாக படித்தவன் இல்லை. எனது துறை வேறு (இயற்பியல்). கல்லூரிக் காலங்களில் குடந்தைக் கல்லூரியில் கவிஞனாக தேர்வு செய்யப்பட்டு மற்ற கல்லூரிகளுக்கு போட்டிக்கு கலலூரி சார்பாக அனுப்பப்பட்டிருக்கிறேன். அதெல்லாம் மேத்தா பாணி உலகை புரட்டும் நெம்புகோல் கவிதைகள்தான். தஞ்சை சரபோஜி கல்லூரிக்கு நான் நெம்பகோலுடன் போய் இறங்கி புரட்டலாம் என்று பார்ததேன். ஒரு சகா கடப்பாறையுடன் வந்து என்னை நெம்பிவிட்டான். அப்புறம் வாராவாரம் கல்லூரி தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்தி்ல் எதாவது ஒரு பொருள்பற்றி பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். கலாப்ரியா கவிதைகளில் கானிபலிஸ தொண்மங்கள், பிம்பங்கள் அப்படி இப்படி என்று பயமுறுத்தும் கட்டுரைகள். தமிழ்துறைத் தலைவர் படிப்பதற்கு முன்பு கட்டுரை சமர்பித்து தணிக்கை செய்தே பேச அனுமதிப்பதாகக் கூறிவிட. விடைத்துக் கொண்டு வந்துவிட்டேன். இலக்கிய சுதந்திரமா? கொக்கா?

சவுதி வந்தபிறகு தமிழை முறையாக படிக்க முயன்றேன். முதலில் மங்களகரமாக கப்ஸா (சவுதியின் தேசிய உணவு நம்ம ஊரு கப்ஸா இல்ல) சாப்பிட்டுவிட்டு துவங்கினேன் தொல்காப்பியம். அதனை குறுக்கும் மறுக்குமாக உரையாசிரியர்கள் துணையுடன் படித்து பொருள்கொள்ள முனைந்தபோது. உருவான சிந்தனைகளை ஒரு கட்டுரையாக எழுதினேன். இலக்கண நூல்களின் அரசியல், அவை எப்படி ஒரு சமூகத்தை கட்டுகின்றன என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அக்கட்டுரை பல விவாதங்களுக்குள்ளானது. (நாம எழுதி நாலுபேரு பேசுலனா எப்படி?) ஏனென்றால், பல சிறு சிறு நிலங்களைத் (பன்னிரு நிலங்கள் பற்றிய குறிப்பு உள்ளது தொல்காப்பியத்தில்) தொகுத்து தொல்காப்பியம்தான் தமிழ் என்கிற அரசை, நாட்டை கட்டமைத்தது என்பதே எனது வாதம். அது போகட்டும். தொல்காப்பியம் படித்த பிறகு எனக்கு தமிழின் ஒரு தனித்தவமான விமர்சனமுறை திணைக்கோட்பாட்டில் இருப்பதையும் அதை ஏன் நவீன விமர்சனத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்கிற எண்ணமும் ஏற்பட்டது. அதற்கான முயற்சியே இவ்வெழுத்து. தமிழறியா என்போன்ற பாமரனும் புரியும் வண்ணம் இதனை எழுத முயல்கிறேன்.

எனக்கு புரிந்த வகையில், திணைக்கோட்பாடு என்பது சூழலும், அது குறித்த உணர்வுகளையும் இணைக்கும் முதல், கரு, உரிப் பொருள்களைக் கொண்ட ஒரு அர்த்தமாக்கும் அமைப்பு. முதல் பொருளான நிலம் (இடம்), காலம் (பொழுது) ஆகியவற்றிற்குள் உள்ள 'கரு' -ப்பொருள்களை மொழிக்கு 'உரி'-த்தான பொருட்களாக ஆக்கி, அதனை ஒட்டி சமூக வழக்குகளை (ஒழுக்கத்தை) உருவமைக்க முயலும் ஒன்று. அதாவது, ஒரு குறிப்பிட்ட நிலத்திற்கு என ஒரு குறிப்பிட்ட உணர்வுகளை (கூடல், இரங்கல் இப்படி...)யும், அவ்வுணர்வுகளுக்கான காலம், தடப்வெப்ப சூழல் ஆகியவற்றையும், அதனை வெளிப்படுத்தக்கூடிய பொருள்களையும் கொண்ட ஒரு ஆய்வுமுறை. இம்முறையில்,ஒரு குறிப்பிட்ட உணர்வுநிலைக்கு மாறான உணர்வுநிலைக்கு படைப்பின் உள்தளம் மாறுவதை, படைப்பில் எதிர்கொள்ளும் பொருளைக் கொண்டு தடம் உணரலாம். அதாவது, பிரிவைச் சொல்வதான ஒரு படைப்பின் மெல்தளம் இயங்கும்போது, ஆசிரியனின் அறிதலற்ற நிலையில், புணர்ச்சிக்கான கருப்பொருள்கள் எதிர் கொள்ளப்பட்டால், அதன் உள்தளம் (படைப்பின் நினைவிலி தளம், அதாவது ஆழ்தளம்), பாலியில் அல்லது புணர்ச்சி பற்றியதான வேட்கையில் அமைந்திருப்பதாக அதனை சுட்டலாம். இச்சூழலில், திணைக்கோட்பாட்டையே, நவீன தமிழ் நிலத்திற்குத்தக புத்தாக்கம் செய்ய வேண்டிய தேவை எழலாம். அதாவது ஐந்திணை நிலங்களைப்போல ஆறாம்திணையாக வலையும் வலைசார்ந்த இடமும் என தற்போதைய வலை உலக தமிழிற்கு விரிவுபடுத்துவதுபோல்.

ஒவ்வொரு பொருளும், நீர் முதல் நிலம் வரை, பூ முதல் மிருகம் வரை, ஒரு குறிப்பிட்ட உணர்வுநிலைக்குள் குறிநிலைப் படுத்தப்பட்டுள்ளதால், படைப்பில் எதிர்கொள்ளப்படும் பொருட்களைக் கொண்டு, படைப்பின் உள்ளார்ந்து இயங்கும் உணர்வு தளத்தை அனுகமுடியும். அல்லது, பூஃக்கோவின் ஒப்புமை அடிப்படையில். இத் திணைக் கோட்பாட்டைக் கொண்ட சமூகத்தின் அறிதல்முறை வளர்ச்சியை அறியலாம். இது தமிழின் சுயமான அறிதல்முறையை வளர்த்தெடுக்க உதவும். அல்லது இம்முறையில் படைப்பை ஆய்வு செய்து பார்க்கும்போது, படைப்பிற்குள் அகழ்ந்து, படைப்பை வேறு அர்த்தத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

தொல்காப்பியம் முன்வைக்கும் இறைச்சி என்கிற கோட்பாடு, இத்திணைக்கோட்பாட்டின் மையமான அர்த்தமாக்கும் அமைப்பாகும். அதாவது வடமொழியில் 'த்வனி' எனப்படுவதற்கு இணையான ஒரு கருத்தாகும். இறைச்சி என்பது அதாவது, ஒருவன் களவில், அதாவது காதலி்ல் ஈடுபடும்போது, பிரிதல் திணைக்குரிய கருப்பொருளை எதிர்கொண்டுவிட்டால், அவனது காதல் பிரியும் தருணம் வந்துவிட்டது என்று குறிப்பால் உணர்த்தப்படுவதாகப் பொருள் கொள்ளப்படும்.

உதாரணமாக பிரிதலின் அதாவது பாலையின் கருப்பொருள் பறவையான பருந்து. களவில் உள்ள தலைவன் பருந்தை எதிர்கொண்டாலோ அல்லது பருந்து குறித்த பேச்சோ வந்துவிட்டால் அவன் பிரிவதற்கான தருணம் வந்துவிட்டது என்று பொருள். அல்லது தோழியானவள் பருந்தை தனது பேச்சின் மூலம் தலைவனுக்கு குறிப்புணர்த்துவாள். அவன் பிரிய வேண்டிய தருணத்தை உணர்த்த. தற்சமயம் புறநானூறு, அகநானூறு கைவசம் இல்லாததால், உதாரணங்களுடன் சுட்ட இயலவில்லை. உரையில்லாத இணைய நூலகங்கள் மூலம் அதனை புரிவதும் சிரமம். (உரையுள்ள இணையச் சுட்டிகள் பதிவுலக நண்பர்கள் தநதால் நன்றாக இருக்கும்.) இந்த திணைக்கோட்பாட்டை ஒரு அட்டவணைப்படுத்தினால். நிலங்களுடன் இவை எவ்வாறு குறியீட்டு மொழில் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை புரிந்து கொள்ளமுடியும். (அட்டவணை XL Sheet-ஆக இருப்பதால் இங்கு எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. பதிவுலக நண்பர்கள் எப்படி என்று கூறினால் அதனை குறிப்புடன் தனிப்பதிவாக வெளியிடலாம். ) இது சூழலியல் குறித்த பழந்தமிழரின் அறிவை நமக்கு காட்டுவதாக இருக்கும்.

-ஜமாலன் (25-10-2007)

10 comments:

Jyovram Sundar சொன்னது…

புரிவது சற்று சிரமமாக இருக்கிறது (பேசு பொருள் பற்றிய எனது பயிற்சியின்மையே காரணம்).

புரியாத எழுத்தை இரண்டு விதமாகப் பிரிப்பார் சுரா. ஒன்று சோர்வைத் தருவது; இன்னொன்று ஆர்வத்தைத் தூண்டுவது. உங்களது எழுத்து இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தது.

அழ்ந்து க‌ற்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ங்க‌ளை அனாய‌ச‌மாக‌ எழுதிச் செல்கிறீர்க‌ள். புத்த‌க‌மாக‌ இருந்தால் ஆற‌ அம‌ர‌ ப‌டிக்க‌ வ‌ச‌தியாக‌ இருக்கும்.

வித்யா கலைவாணி சொன்னது…

இந்த வாரம் முழுவதும் அருமையான பதிவுகள்.
///தற்சமயம் புறநானூறு, அகநானூறு கைவசம் இல்லாததால், உதாரணங்களுடன் சுட்ட இயலவில்லை.///
PDF பைலாக மாற்றி வெளியிடலாமே!
(:::உரை இல்லாதது தான். மக்கள் வசதிக்காக
புறநானூறு
http://www.tamil.net/projectmadurai/pub/pm0057/pm0057.pdf
அகநானூறு
http://www.tamil.net/projectmadurai/pub/pm0229/pm0229.pdf )

கையேடு சொன்னது…

தமிழறியாப் பாமரனுள் ஒருவனான எனக்கு, புரிதலுக்கான புதிய வழித்தடத்தைக் காட்டியிருக்கிறீர்கள் - நன்றி

ஜமாலன் சொன்னது…

Jyovram Sundar said...

//புரிவது சற்று சிரமமாக இருக்கிறது (பேசு பொருள் பற்றிய எனது பயிற்சியின்மையே காரணம்).//

இதுதான் புரிந்துகொள்வதற்கான முதற்படி..

//புரியாத எழுத்தை இரண்டு விதமாகப் பிரிப்பார் சுரா. ஒன்று சோர்வைத் தருவது; இன்னொன்று ஆர்வத்தைத் தூண்டுவது. உங்களது எழுத்து இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தது.//

நன்றி. புரியவில்லை என்று புறந்தள்ளாமல் புரிய நீங்கள் முயற்சிப்பது. மகிழ்ச்சியாக இருக்கிறது.

//புத்த‌க‌மாக‌ இருந்தால் ஆற‌ அம‌ர‌ ப‌டிக்க‌ வ‌ச‌தியாக‌ இருக்கும்.//

எனது புத்தகம் ஒன்று உள்ளது "மொழியும் நிலமும்" . பதிவில் வெளியிடுபவை அனைத்தும் வெளிவராதவை.

நன்றி பின்னோட்டத்திற்கு.

ஜமாலன் சொன்னது…

வித்யா கலைவாணி said...

வாங்க சகோதரி.. நன்றி.

//இந்த வாரம் முழுவதும் அருமையான பதிவுகள்.//

மகிழ்ச்சி.

//PDF பைலாக மாற்றி வெளியிடலாமே!//

பதிவில் இதை எப்படி இணைப்பது என்கிற தெழில்நுட்பம் தெரிந்தால் சொல்லுஙகள்.

இணைப்புகள் தந்துள்ளமைக்கு நன்றி..
பார்த்துவிட்டு எழுதுகிறேன.

ஜமாலன் சொன்னது…

கையேடு said...

//தமிழறியாப் பாமரனுள் ஒருவனான எனக்கு, புரிதலுக்கான புதிய வழித்தடத்தைக் காட்டியிருக்கிறீர்கள் - நன்றி//

நன்றி கையேடு அவர்களே...

கையேடு சொன்னது…

குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். தலைப்பில் "கொ"ட்பாடு என்று தட்டச்சுப் பிழையுள்ளது.

ஜமாலன் சொன்னது…

கையேடு said...

நன்றி கையேடு. திருத்தப்பட்டது. தவறுகளைச் சுட்டிக்காட்ட இத்தனை பணிவும் தயக்கமும் வேண்டாம்.

வித்யா கலைவாணி சொன்னது…

//பதிவில் இதை எப்படி இணைப்பது என்கிற தெழில்நுட்பம் தெரிந்தால் சொல்லுஙகள். ///
எனக்கு Excel பைலாக அனுப்புங்கள். அதை PDF பைலாக மாற்றி இணையத்தில் இட்டு தொடுப்பை அனுப்புகிறேன். அதன் மூலம் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம்.

ஜமாலன் சொன்னது…

வித்யா கலைவாணி said...

//எனக்கு Excel பைலாக அனுப்புங்கள். அதை PDF பைலாக மாற்றி இணையத்தில் இட்டு தொடுப்பை அனுப்புகிறேன். அதன் மூலம் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம்//

நன்றி...
என்னால் PDF- பண்ணிவட இயலும். பதிவில் இணைப்பதற்கான முறை மட்டும் சொன்னால் போதும். அல்லது உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்...

ஜமாலன். Blogger இயக்குவது.