பின்நவீனத்துவம் எனும் பேரண்டபட்சி

மரத்தின் கீழ் உறங்கிய மதுராபுரி மன்னனுக்கு பட்ஷி பாஷைகள் தெரியும் என்ற அறியாததால் அண்டரண்ட பட்சிகள் கூறத் துவங்கின... இவ்வாறாக... கதைகள்தான் உலகை படைக்கின்றன. தனது முயற்சியல் சறறும் மனம் தளராத விக்ரமாதித்தன் மண்டை வெடிக்கும் மரண பயத்துடன் தனது தோளில் வேதாளத்தை தூக்கித் திரிந்தபடி அது சொல்லும் கதையைக் கேட்கத்துவங்கினான். தனது கழுத்திற்கு நேராக நீட்டப்பட்ட வாளுடன் தனது சாவைத் தள்ளிப்போட 1001-அரேபியக்கதைகளை சொல்லத்துவங்கினாள் ஷகர்சாதி. இப்படியாக எத்தனையோ கதையாடல்கள் சாவிற்கு எதிரான சாட்சிகளாக இவ்வுலகு பற்றி விவரித்தன அவற்றில் ஒரு கதையாடலே பின்நவீனத்தவம் என்பது.

பின்நவீனத்துவம் என்பது ஒரு சித்தாந்தமோ அல்லது வரையறுக்கப்பட்ட கோட்பாடோ அல்ல. வரையறைகளையும் சேர்த்து மறுப்பதால் இன்னும் வரையறுக்கப்படாத நிலையே உள்ளது. அது ஒரு மையமிழந்த சமுகம் பற்றிய வர்ணணையே. பின்நவீனத்துவம் என்பது ஒரு ஆய்வுமுறையும் அல்ல (தயவுசெய்து நான் படித்தவரை என்பதை வரிக்கு வரி சேர்த்துக் கொள்ளவும். பிறகு பின்நவீனத்துவ பிராண்டு மேனேஜர்களிடம் வாங்கி கட்டிக் கொள்ள முடியாது.) அதற்கென கோட்பாட்டு பார்வை இருந்தால் மட்டுமே அதனை ஆய்வுமுறையாக பயன்படுத்த முடியும். பின்நவீனத்தவத்தின் கோட்பாட்டு பார்வையாக "இன்றைய உலகு நவீனகாலம் உருவாக்கிய பல நவீன தொன்மங்களால் கட்டப்பட்டுள்ளது" என்பதைச் சொல்லலாம்.


உதாரணமாக பெரியாரியம். அது பிரதியை பகுத்தறிவு அடிப்படையில் அலசும் ஒரு ஆய்வுமுறையை நமக்குத் தருகிறது. மார்க்சியம் - பிரதியை சமூகத்தின் வர்க்க அடிப்படையில் ஆய்வு செய்யச் சொல்கிறது. அமைப்பியல்- பிரதியின் உள் இயங்கும் பல அமைப்பு மையங்களை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வுமுறை. இது மார்க்சியம் பெரியாரியம் அம்பேத்காரியம் உட்பட எல்லா கோட்பாடுகளையும் ஒரு அமைப்பு ஒழுங்காக கருதி பிரதிக்குள் அப்பார்வைகள் எப்படி அமைஉருகின்றன என்பதை ஆய்வு செய்வதாகும்.

அமைப்பியல்வாதம் உலகலாவிய அனைத்து சிந்தனை முறைகளிலும் உள்ள அமைப்பை கண்டு அறிவித்தது. அதாவது எந்த ஒன்றையும் ஒரு அமைப்பிற்குள் வைத்துதான் மனித மனம் புரிந்து கொள்ள முடியும். அர்த்தம் என்பது அமைப்பிற்குள் அமையும் உறவின் வழியாகவே உருவாகுகிறது என்கிறது அமைப்பியல். இவ்வுறவு வித்தியாசங்களின் வழியே கட்டமைக்கப்படுகிறது. சான்றாக, மரம் என்பது மரம் அல்லாத பிற பொருட்களின் உடன் உருவாகும் வித்தியாசத்தால்தான் அர்த்தமாகிறது. (இந்த பிற என்பதையே லக்கான் ஒரு கோட்பாடாக வளர்த்தெடுக்கிறார்) அதாவது மரம் என்பது செடி அல்ல, சட்டை அல்ல, போன்ற இன்னபிற உலகலாவிய அனைத்து பொருட்களுடன் இல்லை என்கிற எதிர்மறை உறவைக் கொள்வதன்மூலமே உருவாகுகிறது. அல்லது மரம் என்பது மற்ற பொருட்களுடன் கொள்ளும் வித்தியாசமான உறவில்தான் அதனை தனித்து நம்மால் உணரமுடியும். இச்சொல்லின் அர்த்தம் இந்த வித்தியாசத்தின் அடிப்படையில் அது அமையும் அமைப்பிற்குள்தான் அர்த்தமாகிறது. அதாவது இச்சொல் மரம் என்கிற மரத்தையும் குறிக்கும் அதே வேளையில் மரச்சாமான்கள் செய்யும் மூலப்பொருள் துவங்கி, இலக்கிய குறியீடுகளில் "மரமாய் நின்றான்" என்பதான எண்ணற்ற அர்த்த சாத்தியங்களையும் கொண்டது. அடிப்படையில் மரம் என்பது ஒரு குறியாக உள்ளது. இது மனித மூளையில் நிகழும் குறித்தல் என்கிற செயல்பாடால் அர்த்தமாகிறது. (இது விரிவாக அடுத்த தனிப்பதிவில்) . ஆக, மொழியியல் வழியாக உருவான இச்சிந்தனை மனித மூளை என்கிற அமைப்பில், மொழி ஒரு பிரத்யேக செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது அல்லது மொழி என்பது மூளையின் ஒரு உருப்பமைவாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டியது ஐம்புலன்களைப்போல மொழி என்பதை ஆறாவது புலனாக கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்டக் கருத்து. இச்சிந்தனை முறைகளுக்கு மொழியியல் கொள்கை அதுவும் சசூர் என்கிற ஸ்வீடிஸ் மொழியியலாளரால் முன்வைக்கப்பட்ட அமைப்பு மொழியியலே அடிப்படை. ஆக, அமைப்பியம் எல்லாவற்றிற்கும் அமைப்பு என்கிற ஒரு மையத்தை கண்டு அறிவித்தது.

பின் அமைப்பியம் என்பது அமைப்பியம் முன்வைத்து உலகலாவிய அமைப்புகள் என்பதன்மீதான விமர்சனமாகத் துவங்கி... இவ்வமைப்புகள் அதிகாரத்தின் மையமாக இருப்பதாக அறிவித்தன. இம்மையங்களை சிதைப்பது, அழிப்பது அல்லது மறுப்பது என்பதன் வாயிலாக மையமற்ற சிந்தனையை முன்வைத்தன. இம்மையமற்ற சிந்தனை பல அறிவுத் துறைகளிலும் கிளைத்து பரவியது.

அக்கிளைகள் அதிகாரம் பற்றிய சொல்லாடல் ஆய்வாக பூஃககோவிடமும், அதிகாரம் கட்டமைக்கும் தன்னிலைகள் பற்றிய ஆய்வாக லக்கானிடமும், சிதைவாக்கம் அல்லது கட்டுடைப்பு அல்லது கட்டவிழ்ப்பு அல்லது தகர்ப்பமைப்பு (deconstruction என்பதற்கு இத்தனை வார்த்தைகள் தமிழில் ஏன் என்றால் அதன் ஆய்வு முறையை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்தான்) என்பதாக தெரிதாவிடமும், வாசகமைய விமர்சனமுறையாக ரோலான் பார்த்திடமும் கிளைத்தன. மார்க்சிய அடிப்படையில் அமைப்பியலை பின் அமைப்பியல் தளத்திற்கு நகர்த்தியவர் பூஃக்கொவின் பேராசியராக இருந்த லூயி அல்தூஸர் ஆவர்.

அதாவது, சிதைவாக்கம் என்பது செவ்வியல் பிரதிக்குள் மையமாக இயங்கும் ஒரு முரணில் ஆதிக்கம் வகிக்கும் ஒருகூறு பிறிதொரு கூறை வெளிப்படுத்தாமல் அதாவது பிரசன்னப்படுத்தாமல் ஒடுக்கிவைக்கும். ஆதிக்க கூறை தலைகீழாக்குவதன் மூலம் ஓடுக்கப்பட்ட கூறுக்கான வெளியை திறந்துவிடுவது. இது பிரதியின் மையமான அர்த்தத்தை பிரச்சனைப்படுத்திவிடும். அதாவது பிரதி தனது மைய அர்தத்தை இழந்துவிடும். பிரதியை சிதைத்து மறு ஆக்கம் செய்வதுதான் சிதைவாக்கம் அல்லது தகர்ப்பமைப்பு என்பது.

பிரதி என்றவுடன் எழுதப்பட்ட இலக்கியவகைமை மட்டுமல்ல. எல்லாமே பிரதிதான் என்பதுவே பின் அமைப்பியலின் நிலைப்பாடு. மனிதன் என்கிற கருத்தாக்கம்கூடஒரு பிரதிதான் என்கிறார் பூஃக்கோ. மனிதன் என்பது கூட 19ஆம் நூற்றாண்டு என்கிற செவ்வியல்கால கண்டுபிடிப்பு என்கிறார். இதன்பொருள் செவ்வியல் காலம் என்கிற 19-ஆம்நூற்றாண்டிற்கு முன்பு மனிதன் என்கிற பொதுமைப் படுத்தப்பட்ட கருத்தாக்கம் இல்லை. அதற்கு பகரமாக மனித உடல்களை குறிக்கும் பல சொல்லாடல்கள் இருந்தன. உதாரணமாக அடிமை, ஆண்டான் அல்லது சாதிய அடையாளப் பெயர் இன்னபிற...

மனிதன் என்பவனது உடலில் அவனது தன்னிலை (சஃப்ஜெக்ட்) எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது. ஒரு உடலானது ஆதிக்கத்தை ஏற்கும் அல்லது எதிர்க்கும் உடலாக எப்படி கட்டமைகிறது அதன் தன்னிலை உருவாக்கச் செய்ல்பாடுகள் எப்படி இயக்கமடைகின்றன என்பதை லக்கான் பிராய்டியத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கிறார். இவரின் கூற்றப்படி மனித உடலின் ஆழ்மனம் என்பது ஒரு மொழியைப்போல கட்டமைக்கப்பட்டுள்ளது. நாம் சிந்திப்பதும் அல்லது உணர்வுதும் ஒரு மொழியில் நிகழ்வாக அல்லது ஒரு உள் பேச்சாக நமக்குள் நடைபெறுவதை நாம் அனுபவபூர்வமாக உணரமுடியும்.

இப் பின் அமைப்பியல் முறையியலை அதாவது மையமிழப்பை அல்லது மையமழிப்பை பின்நவீனத்துவ விமர்சகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனைப் பயன்படுத்தி சமூகத்தின் மையமிழந்த தன்மையை முன் கொண்டு வருகிறார்கள். பின்நவீனத்துவ படைப்புகள் இம்மையமிழந்த சமூக அவலம் பற்றிய விவரணைகளை வெளிக் கொண்டுவருகிறது.

இதுவரையிலான மனிதனை உய்விக்க வந்ததாகக் கூறிக் கொண்ட தத்துவங்கள் துவங்கி மனிதவிடுதலைக் குறித்து நவீன உலகில் கதைத்த இஸங்கள்வரை எல்லாம் மனித நிலைபாடுகள் குறித்த பொதுவான மையங்களைக் கொண்டு பேசப்பட்ட கதையாடல்களே. இக்கதையாடல்களை பெருங்கதையாடல்கள் என்கிறார்கள் பின் நவீனத்துவவாதிகள். இனி சாத்தியமானது இம்மையமிழந்த மனிதனின் அல்லது இவ்வுலகின் சிறுகதையாடல்களே என்கிறார்கள். இதன் நீட்சி இனி ஆதிக்கத்திற்கு எதிரான உலகலாவிய பெரும் போராட்டங்கள் புரட்சிகள் சாத்தியமில்லை localized போராட்டங்களே அல்லது கலகங்களே சாத்தியம் என்பதாகும். பெருங்கதையாடல்கள் உருவாக்கும் புரட்சி அல்லது சமூக மாற்றங்கள் மீண்டும் ஒரு அதிகார மையமாக மாறி மனித குலத்திற்கு பெரும் அழிவைக் கொண்டுவரும் என்பதே. மார்கசியரான சமீர் அமீன் போன்றவர்கள் பின்நவீனத்தவம் என்பது உலக நிதிமூலதனக்குவியல் மற்றும் உலகமயமாக்கலின் விளைவால் வெளிப்படும் ஒரு கோட்பாடே. இது இயல்பிலேயே எதிர்புரட்சி தன்மை வாய்ந்தது என்கிறார்கள். உலகை நவீனத் தொண்மம் என்கிற புனைவடிப்படையில் பார்க்கும் பின்நவீனத்திற்கும் இந்திய சங்கர அத்வைத மாயாவாதத்திற்கும் குவாண்டம் எநத்திரவியலின் ஹைஷன்பஃர்க் நிச்சயமின்மைக் கோட்பாட்டிற்கும் (uncertinity principal) இடையில் ஒரு ஒற்றுமை இருப்பதை அறிய முடியும். இதனை இதன் கொண்டு எப்படி பார்ப்பது என்பது அவரவர்கண் விடப்படுகிறது. நிற்க.

தமிழில் கோணங்கியன் நாவல்கள் (பாழி மற்றும் பிதிரா) , சிறுகதைகள் (உப்புக் கத்தியல் மறையும் சிறுத்தைகள், பொம்மைகள் உடைபடும் நகரம்) இத்தகைய மையமற்ற மொழிப்புனைவுகளை பல மரபான மொழித் தொண்ம அமைப்புகளுடன் வெளிப்படுத்துகிறது. இது சில நேரங்களில் புரிதலுக்கு மிகவும் சிக்கலானதாகவும் வாசகனின் அறிவு மட்டத்தை கேள்விக்கு உட்படுத்துவதாகவும் இருப்பதால் தமிழ்சூழலில் இவரது எழுத்துக்கள் குறித்த பதிவுகள் விமர்சனங்கள் அரிதாக இருப்பதைக் காணலாம். அய்யனார் போன்ற பதிவுலக எழுத்தாளர்கள் இம்மையமிழந்த மொழிநடைக்கான முயற்சியை செய்கிறார்கள். அவரை முழுமையாக படித்த பிறகே அதைப்பற்றி பேசமுடியும். புரியாமை என்பது கோட்பாட்டின் சிக்கலுடனும் உள்ள ஒரு பண்பு என்பதையும் மறந்துவிடலாகாது. அதே சமயம் எழுத்தாளனின் புரிதலும் புரியமையை உருவாக்கிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்கண்ட எழுத்துக்கள் எவ்வகை என்பது தனியான ஆய்விற்கு உரியது.

இக்குறிப்புகள் எளிமை கருதி சுருக்கமாக கூறப்பட்டவை, விரிவாக பேச இதில் எண்ணற்ற விஷயங்கள் இருப்பதாகக் கூறியபடி தனது கதைகளை கூறி முடித்த அண்டரண்ட பட்சி... பேரண்டமும் வியாபிக்கும் தனது இறக்கைகளை விரித்தபடி பறக்கத்துவங்கியது. கனவுபோலவே இதனைக் கேட்ட மதுராபுரி மன்னன் பரக்க பரக்க விழித்தபடி எழுந்து அமர்ந்தான, இதனைப்படிக்கும் ஒரு வாசகனைப்போல...

ரொம்ப தலைசுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல...

குறிப்பு: ஜாலிஜம்பர் என்கிற பதிவரின் பின்நவீனத்தவம் பற்றிய பதிவிற்க்கு 19-10-2007 அன்று இடப்பட்ட பின்னோட்டம் இங்கு சற்றே விரிவாக்கி மறு பிரசுரம் செய்யப்படுகிறது.

அன்புடன்
ஜமாலன்
(09-10-2007 மதியம் 12:46 சவுதி நேரம்)

5 comments:

கே.என்.சிவராமன் சொன்னது…

வியாசன் சொல்லச் சொல்ல கீ போர்டில் எழுத்துக்களை தட்டிக் கொண்டே வந்த விநாயகனின் விரல்கள் சோர்வடைந்தன. உடனே தன் தந்தத்தை உடைத்து வார்த்தைகளை அடிக்க ஆரம்பித்தான். உற்பத்தியான வார்த்தைகள் ஸ்கிரீன் முழுக்க நிரம்பிய தருணத்தில், சார்வாகனனின் மூச்சுக் காற்றில் வார்த்தைகள் பொசுங்க ஆரம்பித்தன.

மிரட்சியுடன் சார்வாகனனை ஏறிட்ட விநாயகன் அதிர்ந்தான். சார்வாகனனின் கண்களை அவனால் பார்க்க முடியவில்லை. சார்வாகனன் அணிந்திருந்த 3டி (டெத் ஆஃப் தி ஆர்த்தர், டிஸ்கோர்ஸ், டி கன்ஸ்ட்ரக்ஷன்) கண்ணாடி விநாயகனை பார்த்து புன்னகைத்தது... தனக்கொரு கண்ணாடி வேண்டி விநாயகன் தவித்த நொடியில், வியாசன் கரைந்தான்...

மொழியும், நிலமுமாக பேரண்ட பட்சி பறக்க ஆரம்பித்தது... தனக்கொரு வியாசனை தேடி விநாயகன் அலைந்து கொண்டிருக்கிறான்...

சாலிசம்பர் சொன்னது…

பதிவிற்கு நன்றி ஜமாலன்.உங்கள் பரிந்துரையின் படியே பிரேம்-ரமேஷின் "பேச்சு-மற்பேச்சு,பின் நவீனத்துவத்தை நோக்கி" என்னும் நூலை வாங்கி படித்துக் கொண்டிருக்கிறேன்.

சுந்தர ராமசாமி,நகுலன்,ஜெயமோகன் போன்றவர்களை நவீன எழுத்தாளர்களாக கருதுகின்றனர்.இவர்களையெல்லாம் படிக்காமல் பின் நவீனத்துக்கு வரவே கூடாது என்பது எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது.

ஜமாலன் சொன்னது…

பைத்தியக்காரனின் எழத்துநடை அருமை. 3D விளக்கமும் அருமை. விசாயன் கிடைக்க விநாயகன் அருள்புரியட்டும்.

ஜமாலன் சொன்னது…

நண்பர் ஜாலிஜம்பருக்கு...

படிக்கத்துவங்கியதற்கு வாழ்த்துக்கள். ஒரே ஒரு கருத்து மட்டும்:

//சுந்தர ராமசாமி,நகுலன்,ஜெயமோகன் போன்றவர்களை நவீன எழுத்தாளர்களாக கருதுகின்றனர்.இவர்களையெல்லாம் படிக்காமல் பின் நவீனத்துக்கு வரவே கூடாது என்பது எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது//

இது ஒரு சரியான முடிவல்ல. தவிரவும், பின்நவீனத்துவத்திற்கும் இந்த எழுத்தாளர்களுக்கும் உள்ள உறவு பற்றி எனக்குத் தெரியவில்லை. நான் நீங்கள் கூறிய ரமேஷ்=பிரேம் நூலைப்படித்ததில்லை. சு.ரா.-வின் எழுத்தக்கள் குறைந்தபட்சம் நவீனத்துவம் சார்ந்தவையா? என்பதே விவாதித்திற்கு உரியது. அவரது எழுத்துக்கள் அவை சாதித்தவைற்றைக்காட்டிலும் அல்லது அவற்றின் தகதிக்கு மேலும் பிரபலமாக போற்றி தூக்கி உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது உயர்சாதி அரசியல் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஜெயமோகன் நாவலான விஷ்ணுபுரம் = ஜெயகாந்தனின் ஜெயஜெய சங்கரா + கல்கியன் பொன்னியன் செல்வன் கலந்த ஒரு காப்பியக் கலவை. பலபகுதிகள் குதிரை யானை பற்றிய கலைக்களஞ்சியக் கருத்துகளாக விவரிக்கப்பட்டிருப்பது அலுப்பூட்டக் கூடியது என்றாலும்.. படிக்க ஆர்வத்தை தூண்டும் நாவல்தான். அதற்கும் பின்நவினத்துவத்திற்கும் உள்ள உறவு பற்றி தெரியவில்லை. ஜெயமோகன் வாசகனை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லாத ஒரு மையத்தவ எழத்து. சு.ரா.வும் அப்படித்தான். வாசகனை தன்னைப்பின்பற்றிச் செல்ல நிர்பந்திக்கும் அல்லது அவ்வாறு உள்ளிழுக்கும் எழுத்துக்கள். இவை பின்நவீனத்தவத்திற்கு ஏற்புடையவை அல்ல. நகுலன் ஒரு மையமற்ற புனைவை படைத்தவர் என்று அவரது நகுலனின் டைரிக்குறிப்பு படிக்கத்துங்கி என்னால் உள்வாங்க முடியவில்லை. அதனால் நகுலன் நான் படித்ததில்லை. அது எனது புரிதல் குறைபாடாகக் கூட இருக்கலாம். இருப்பினும் நீங்கள் எல்லாவற்றையும் வாசிப்பது அவசியமானதுதான். வாசிப்பிற்கு எல்லையோ வரையறையோ இல்லை. ஆணால் முறைப்படுத்தி வாசிப்பதும் அதனை சரியான முறையில் உள்வாங்குவதுமே முக்கியம். வாசிப்பு ஒரு அற்புத உலகை உங்களுக்கு காட்டும். தொடர்வோம் இவ்வுரையாட்லை வாய்ப்புக் கிடைக்கும்போது. வாழ்த்துக்கள்.

மாயன் சொன்னது…

பின் அமைப்பியல் முறையியலை- அதாவது ஒரு அமைப்பு சார்ந்த கோட்ப்பாட்டின் மையமிழப்பை அல்லது மையமழிப்பை பயன்படுத்தி சமூகத்தின் மையமிழந்த தன்மையை அவலங்களை வெளிக்கொணருத்லை தான் பின் நவீனத்துவம் என்கிறீர்கள்...

இப்படி தெளிவா முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல?

அப்போ இது இந்துயிஸத்துக்கும்,பெரியாரியத்துக்கும், மார்க்ஸியத்துக்கும் எல்லாத்துக்குமே பொருந்தும் இல்லையா?
ஏன்னா இவை எல்லாமே அமைப்பியியலால் அலசப்படக்கூடிய அமைப்பு ஒழுங்குகள்...

எப்போ நம்மால பின் நவீனத்துவத்துக்கும் ஒரு கோட்பாடு வகுத்து (சுற்றிக்கொண்டு) விளக்க முடிஞ்சுதோ அப்போ அதுவும் ஒரு அமைப்பு ஒழுங்கு ஆயிடுச்சு.(நீங்க தான் விளக்கியிருக்கீங்க..)

அப்போ அதுக்கும் ஒரு மையம் அமைஞ்சுடுச்சு, அமைப்பியலால் அலசப்பட கூடிய ஒரு அமைப்பு ஒழுங்காவும் மாறிடுச்சு. கட்டுடைத்தல், மையமிழப்பு எல்லாம் இதுக்கும் உண்டு... அதாவது இதுவே ஒரு பின் அமைப்பு முறையியலாயிடும்.. பின் நவீனத்துவதுக்கு இப்போ சொன்ன எந்த இயல்பும் இதுக்கு இல்லாம போயிடும்...(Cease To Exist) இது ஒரு Chain Reaction மாதிரின்னு நினைக்கிறேன்..

இதுக்கும் The Big Bang Theoryக்கும் தான் தொடர்பு இருக்கும்னு எனக்கு தோணுது.. எதுக்கும் விஜயக்காந்த் சாரை ஒரு வார்த்தை கேட்டுப்போம்...

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.