காகமும் ஊர்க்குருவியும் - மனுசங்கடா? நாங்க மனுசங்கடா?

தீண்டாமை நிலவுடமை செறிந்துள்ள தஞ்சையில் மட்wall between castesடுமல்ல மதுரை நெல்லை என்று தமிழகம் ஏன் இந்தியாவெங்கும் ஒரு சமூகத் தீங்காக உள்ளது.  மேலே உள்ள சுவர் சீன நெடுஞ்சுவரோ அல்லது ஜெர்மனியில் உடைத்தெறியப்பட்ட பெர்லின் சுவரோ அல்ல. நம்ம மதுரை உத்தப்புரத்தில் தலித்துகளையும் உயர் சாதியையும் பிரிக்க உயர் சாதி கட்டிய சுவரே. தலித்துகள் முகத்தில் விழிப்பதுக்கூட பாவம் என்று மனுவாதத்தையும் தாண்டிய கொடுமை இது. இச்சுவர்பற்றிய ஆதவன் தீட்சண்யாவால் எழுதப்பட்டுள்ள கட்டுரை கீற்று இணையதளத்தில் உள்ளது.  (நண்பர் கல்வெட்டு இதனை இங்கு மீள்பதிவு செய்துள்ளார்.) இது குறித்து இந்து பத்திரிக்கை 17-04-2008-ல் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்திக்கான வாசகர் கடிதங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை குறித்து 25-02-2008 நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. இச்செய்திகளில் வரும் தகவல்கள் மீண்டும் மீண்டும் தலித் மக்களை மனிதர்களாக மதிக்காத உயர்சாதி திமிரும், அவர்களுக்கு கர்மப்பலன் கூறி சொர்க்கத்திற்கு இடம் போட்டு வைக்கும் மனுவாதத்தின் அடிப்படையும் அதனை கட்டிக்காக்கும் இந்துத்துவா வியாதிகளும் (நன்றி கோவி.கண்ணன்) இந்த சாதிய புனித உடலை காப்பதில் தீவிரமாய் உள்ள பார்ப்பனிய கும்பலும் இந்திய சமூக அடிப்படையாக கட்டமைக்கப் பட்டுள்ளதை தெளிவுபடுத்தவதாக உள்ளன. தமிழகத்தில் தொடரும் இக்கொடுமைகள் பற்றிய ஆய்வுகள் பிரண்ட்லைனில் பேசப்பட்டுள்ளது. 

1950-ல் இந்திய அரசு தீண்டாமை என்பதை சட்டவிரோதமாக அறிவித்தது. 58 ஆண்டுகள் ஆகியும் நிலமை தனது மனச்சுவற்றின் ஒரு புறவடிவக் குறியீடாக சுவரெழுப்பி வெளிப்படுத்தும் கோர வடிவத்தை எடுத்துள்ளது. பார்ப்பனிய மன்னராட்சிக் காலங்களில்கூட இத்தகைய நடைமுறைகள் இருந்ததாக வரலாற்றில் படித்ததில்லை. இன்று தீண்டாமை என்பது மறைமுகமாக பல வடிவங்களை எடுத்தள்ளது. ஒரு காலத்தில் “தீண்டத்தகாதவர்கள்“ எச்சில் துப்பி நிலத்தை “தீட்டாக” ஆக்கிவிடக்கூடாது என கழுத்தில் கலயத்தை கட்டியும், பெண்கள் மேற்சட்டை அணிவதை தடைசெய்தும் பல வன்கொடுமைகளை நேரடியாக செய்துவந்த உயர்சாதியினர் இன்று 80-ற்கும் மேலான பல நடைமுறைகளை கையாளத் துவங்கியுள்ளனர். அவற்றின் உச்சகட்ட வடிவமே 500-மீட்டர் நீளமுள்ள இந்த தீண்டாமைப் பெருஞ்சுவர். சாதியத்தின் ஆணிவேராக விளங்கும் இந்த தீண்டாமை எனகிற வன்கொடுமையின் ஒரு அகங்கார வெளிப்பாடு இது.

ஆலன் டாண்டிஸ் என்கிற மானுடவியல் ஆய்வாளர் இத்தீண்டாமைக் குறித்து இந்திய நாட்டப் புறக்கதைகளின் அடிப்படையாகக் கொண்டு பிராய்டிய அடிப்படையில் ஆய்வு ஒன்றை செய்துள்ளார் தனது “Two Tales of Crow and Sparrow:A Freudian Folkloristic Essay on Caste and untouchability" என்கிற நூலில். அதில் “சாதியும், தீண்டாமையின் மூலம் மனித உடலினுள் உள்ளது” என்கிறார். தலையில் (வாயில்) பிறந்த பார்ப்பனர்கள் உயர்சாதி என்பது வாய் என்கிற உயிர்ப்புடன் சேர்ந்த புனிதக் குறியீடாகவும், காலில் பிறந்தவர்கள் தூய்மையற்ற நிலத்துடன் இணைவதால் சாவு மற்றும் குதம் மற்றும் மலத்துடன்  இணைந்த தூய்மையற்றதாகவும் குறியிடப்பட்டுள்ள ஒரு மனப்படிவு ஆகும் என்கிறார். அவர் காகம் மற்றும் ஊர்க்குருவி பற்றிய காஷ்மிர் முதல் கன்யாக்குமரி வரை நிலவி வரும் இரண்டு நாட்டார் வாய்மொழிக் கதைகளை எடுத்துக் கொண்டு இந்த ஆய்வை மானுடவியல் மற்றும் நாட்டுப்புறக்கதை ஆய்வியல் அடிப்படையில் செய்து வாசித்துக் காட்டியுள்ளார்.  இங்கு இதனை சுட்ட நேர்ந்தது வாய்மொழி மற்றும் குதவழி பண்புகள் (anal and oral traits) என்பது பிராய்டியம் முன்வைக்கும் மிகமுக்கிய குழந்தமை உளவியல் கருத்தாக்கங்கள் ஆகும். கால்வழியாக பிறந்தவர்களை தீண்டத்தகாதவர்களாகவும் முகம்வழியாகப் பிறந்தவர்களை உயர்ந்தவர்களாகவும் குறியிடும் மதவாதப் பிரதிகளை நாட்டார் கதையடிப்படையில் மீள்வாசிப்பது ஒரு முக்கிய கருதுகோளாகும். தீண்டாமை என்பது மலம் என்கிற “அசிங்கத்துடன்“ அதாவது தூய்மையற்றதானதாகவும் அதனால் அது புணிதமற்றதாகவும் ஆழ்மனதில் கட்டமைக்கப்பட்டவையே இந்த நாட்டார்கதைகள். இவ்வாய்வு பற்றி பிறிதொரு பதிவில் விளக்க முயல்வோம்.

தலைப்பில் உள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா என்பது கவிஞர் இன்குலாப் அவர்களால் கீழ்வென்மணியில் 47 தலித்துகளை உயிருடன் கொழுத்திய நிலவுடமை பயங்கரத்தினை கண்டு கொதித்து எழுதப்பட்ட பாடலின் தலைப்பு. அப்பாடல் 80-களில் தமிழக நக்சல்பாரி மற்றும் மார்க்சிய-லெனினிய இயக்கங்களின் மந்திரப்பாடலாக இருந்தது. அப்பாடலை பாடி பல இரவுகள் எங்கள் மாணவர் சங்க கலைக்குழு பல கிராமப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளது. அப்பொழுது நேரடி அனுபவங்களாக கிடைத்த தீண்டாமைக் கொடுமைகள் எண்ணற்றவை. அவை பற்றிய ஆழியுரனின் சாதி சூழ் உலகு!! என்கிற பதிவில் எனது பின்னோட்டம் ....

ஒரத்தநாடு பகுதிகளில் 85-ல் எனது மாணவப் பருவத்த்தில் ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் எங்களது மாணவர் சங்கம் சார்பாக 10 முதல் 15 நாட்களுக்கு village campaign என்கிற கிராம பிரச்சாரத்திற்கு போவோம். அந்த வருடம் ஒரத்தநாட்டு தோழர்களின் ஏற்பாடால்.. நாங்கள் பாப்பாநாடு, கண்ணந்தங்குடி துவங்கி மேலையூர் கீழையூர் ஆம்லாப்பட்டு (எனது நினைவு சரியாக இருந்தால்.. களப்பால் குப்புவின் சமாதி உள்ள அக்கிராமத்தில் அவரது சமாதி முன்பு வீரவணக்கப் பாடல்கள் பாடியுள்ளோம்.) என சுற்றி பிரச்சாரம் செய்திருக்கிறோம். பெரும்பாலும் தங்குவது தலித் தோழர்கள் வீட்டில் அல்லது பொது இடமான கோவில் சமூகக் கூடங்களில். சாப்பாடு கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒவ்வொரு நபராக அழைத்துச் சென்ற உங்கள் வீட்டில் உள்ளதை சாப்பிடத் தாருங்கள் என பார்க்க வந்தவர்களிடம் அறிவித்து விடுவோம். அவர்களும் நாங்கள் 10 முதல் 15 பேர்கள் என்பதால் ஒவ்வொருவராக அழைத்துச் சென்று விடுவார்கள். இரவு விளக்கு கம்பங்களில் அல்லது அரிக்கேன் விளக்கின் ஒளியில் அரசியல் வகுப்புகள், பட்டி மன்றம் நடத்துவோம்.

ஒருமுறை ஒரு கிராமத்திற்கு பிரச்சாரம் செய்யப்போகும்போது (எங்கள் தோழர்களில் பெரும்பாலும் தலித்துகள் என்றாலும் தலித்தல்லாதோரும் இருந்தனார்.)அங்கிருந்த இடைநிலைச்சாதியினர் ஊருக்குள் எங்களை விடாமல் வாயிலிலேயே வழிமறித்து விட்டனர். எங்களை அழைத்த தோழர் அவர் அந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் அனுமதிக்கவில்லை. காரணம் தலித்தகளிடம் தங்கி அவர்களுக்கு ஆதரவாக கூலிப்பிரச்சனையில் நாங்கள் பிரச்சாரம் செய்ததே.  அன்று அங்கு பல பகுதிகளில் இரட்டைக் குவளைமுறை இருந்ததை தோழர்கள் அழைத்துப் போய் காட்டியுள்ளார்கள். ஒவ்வொருநாள் மாலையிலும் ஒரு கிராமம் விட்டு மற்றறொரு கிராமத்திற்கு பயணம். நடந்துதான். பாப்பாநாட்டிலிருந்து கண்ணந்தங்குடிக்கும். கண்ணந்தங்கடியிலிருந்து மேலையூர் இப்படி. பல கிராம பெயர்கள் நினைவில் இல்லை. ஆனால், சாதியம் என்பது கீழைத் தஞ்சை பகுதியில் அதிலும் கள்ளர்கள் மற்றம் தலித் முரண்கள் நிறைந்தே காணப்படுவதை அனுபபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக எங்களை சாப்பிட அழைத்தச் செல்பவர்கள் பெரும்பாலும் தலித்துகள்தான். சாதி தெரியாத எங்களை அழைத்துச் செல்ல அந்த இடைநிலை சாதியினருக்கு மனம் ஒப்பவில்லை போலும்.

தீண்டாமை ஒரு பாவச்செயல் என்றார் காந்தி. அதனை புனிதமான செயலாக பாவிக்கின்றன இன்றைய சாதிகள். தெல்லஸ்-கொத்தாரி கூறும் “becoming minor' (சிறுபான்மையாக இருத்தல்) என்பதைப்போல “becoming untouchable“ (தீண்டத்தகாதவராக இருத்தல்) என்பதை விடுதலைக்கான வாழ்நிலையாக மாற்றி, உயர் சாதியினரை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி அவர்களின் இருத்தலையும் மாற்ற வேண்டும் போலிருக்கிறது. லெனின் கூறியதுபோல “ அரசியல் என்பது இரத்தம் சிந்தும் யுத்தம்“-தான் போலிருக்கிறது. எவன் ஒருவன் தன்னைத் “தீண்டத்தகாதவனாக“ உணர்கிறானோ அவனே இன்றைய சாதிகளை எதிர்த்து போரிடமுடியும் என்று தோன்றுகிறது. அதனால்தான் காந்தி தன்னை ஒரு சூத்திரனாக அறிவித்துக் கொண்டார் போலிருக்கிறது.

- ஜமாலன்.(29-04-2008)

22 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

//நம்ம மதுரை உத்தப்புரத்தில் தலித்துகளையும் உயர் சாதியையும் பிரிக்க உயர் சாதி கட்டிய சுவரே. //

ஜமாலன் அய்யர்,

பெரியார் பூமியிலேயே இப்படி நடக்கிறதென்றால் இந்திய பா'ரத' தேசத்தில் இன்னும் என்னவெல்லாம் நடந்தேறிவருகிறதோ ?

இதைப் படித்த உடனேயே உடைத்து நொருக்குவதற்கு தமிழகத்தில் எவருக்குமே வீரமே இல்லையா ?
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//இதைப் படித்த உடனேயே உடைத்து நொருக்குவதற்கு தமிழகத்தில் எவருக்குமே வீரமே இல்லையா ?
:(//

இந்த செய்தி செய்தி ஊடகத்தில் வந்த உடனேயே, அந்த சுவற்றை உடைத்து நொறுக்குவதற்கு தமிழகத்தில் எவருக்குமே வீரமே இல்லையா - என்று திருத்திவாசிக்கவும்.

கையேடு சொன்னது…

தமிழகத்தின் ஒரு கிராமத்தில் வெளிப்படையாகத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது ஒரு சுவர்.

இன்னும் கற்களால் எழுப்பப்படாத வலிமையான சுவர்கள் தமிழகமெங்கும் குறுக்கும் நெடுக்குமாக வாழ்தளத்தைக் குறுக்கிக்கொண்டேயிருக்கின்றன.

யாத்ரீகன் சொன்னது…

Hasn't the tamilnadu government taken any steps against this yet ?! this is shame to everyone in this state for letting this happen .. what are the government bodies of that locality doing ? are they going to tell they never knew this ?!?!

கையேடு சொன்னது…

திரு. ஜமாலன் அவர்களுக்கு,
25-02-2008 இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது என்ற சுட்டி அப்பத்திரிகையின் பக்கத்திற்கு அழைத்துச் செல்லவில்லை. அப்பத்திரிக்கைச் செய்தியை மூலமாக வைத்து எழுதப்பட்ட வலைப்பக்கத்திற்குச் செல்கிறது.

அதற்கான தக்க மாற்றத்தைக் கட்டுரையிலோ அல்லது சுட்டியிலோ, தங்கள் வசதிக்கேற்ப செய்துவிடுங்கள்.

K.R.அதியமான் சொன்னது…

இந்த கிராமத்து நிகழ்வுகள் 'பார்பனியம்' தானா ? உயர் ஜாதி மக்களின் வன்கொடுமைகளுக்கும் அதே பெயர் சரியா ? சாதியம் என்ற சொல்லாடலே சரியாகும்.
ந‌க‌ர்புர‌ங்களில் அதிக‌ம் வ‌சிக்கும் பார்ப‌ன‌ர்க‌ளின் வாழ்க்கை முறைக‌ளும், கொள்கைக‌ளும், இந்த‌ கிராம‌த்து நிக‌ழ்வுக‌ளுக்கு இனையாகுமா என்ன‌ ?

தறுதலை சொன்னது…

பொருளாதாரத்திலும், கல்வியிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் இப்பகுதிகளில் சாதியக் கொடுமைகள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன.

இதற்கு பிராமணர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இடைநிலை சாதியினருக்கு இருக்கும் கொட்டைதாங்கும் மனப்பான்மையே முக்கிய காரணம். "நான் மேலே இருப்பவனுக்கு தாங்குகிறேன். எனவே எனக்கு நீ தாங்கு" என்பதுதான் இடைநில சாதியினரின் அனுகுமுறை.

--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

பெயரில்லா சொன்னது…

எதற்கெடுத்தாலும் பார்பனியம், மனுநீதி என்று எழுதுவது பாஷனாகிவிட்டது.தீண்டாமைக்
கொடுமைகளை அரசு தன் அதிகாரத்தினைக் கொண்டு ஒடுக்க
முடியும்.வன்கொடுமை தடுப்புச்
சட்டத்தின் கீழ் கொடுமை இழைப்போருக்கு தண்ட
அபராதம் உட்பட தண்டனைகளை
தர முடியும். அதைச் செய்யாமல்
தடுப்பது எது?. வீரமணிக்களும்,
ராமதாஸ்களும்,திருமாவளவன்களும்
எங்கே போனார்கள்.
பெரியாரின் சீடர்கள் நடத்தும்
ஆட்சியில் இதை எதிர்த்து அரசு
செய்தது என்ன் - மின்சார இணைப்பினை துண்டித்ததுதான்.
பாரத தேசத்தில்தான் பெரியார்
பூமியும் இருக்கிறது என்பதை
கோவி.கண்ணன் பெரியாரியர்
தெரிந்து கொள்ளட்டும்.ஆனால்
பெரியார் பூமியில் நிலம்
வைத்திருக்கும் தலித்களின்
எண்ணிக்கை விகிதம் குறைவு.
ஏன் என்றால் கோவி.கண்ணன்
பெரியாரியர் சாதிகளின் நில
ஆதிக்கத்தை பெரியார் சீடர்கள்
நொறுக்கவில்லை.
கோவி.கண்ணன் தலித் முரசு,
கோடாங்கி போன்றவற்றை
படித்தால் உண்மை தெரியும்.

ஜமாலன் சொன்னது…

K.R.அதியமான். 13230870032840655763 said...

//இந்த கிராமத்து நிகழ்வுகள் 'பார்பனியம்' தானா ? உயர் ஜாதி மக்களின் வன்கொடுமைகளுக்கும் அதே பெயர் சரியா ? சாதியம் என்ற சொல்லாடலே சரியாகும். ந‌க‌ர்புர‌ங்களில் அதிக‌ம் வ‌சிக்கும் பார்ப‌ன‌ர்க‌ளின் வாழ்க்கை முறைக‌ளும், கொள்கைக‌ளும், இந்த‌ கிராம‌த்து நிக‌ழ்வுக‌ளுக்கு இனையாகுமா என்ன‌ ?//

நண்பருக்கு நான் பதிவெழுதும்போது இதனை யோசித்தேன். சாதியம் என்பது பார்ப்பனீயத்தின் ஒரு வடிவமாக உள்ளது. சாதிகளின் தோற்றம் பற்றிய ஆய்வில் அதனை பார்ப்பனீயர்கள் தோற்றுவித்தார்கள் என்பதில் எனக்கு முழுமையான கருத்து உடன்பாடில்லை. அது ஒரு ஆய்விற்கான புள்ளியாகவே கருதுகிறேன். ஆனால் சாதியத்தை காத்து வருவது மனுவாதம்தான். அதையே இங்கு பார்ப்பனீயமாக குறிக்கிறேன். சமத்துமின்மை என்பதே பார்ப்பனீயத்தின் அடிப்படை என்கிறார் அம்பேத்கர்.

இது குறித்த எனது பதிவு - http://jamalantamil.blogspot.com/2007/08/blog-post_26.html.

தீண்டாமை என்பதும் பார்ப்பனீயத்தின் ஒரு வடிவமே. பார்ப்பனீயம் என்பது ஒரு கருத்தியலே. இதனை நீங்கள் பார்ப்பனசாதி சார்ந்த நிகழ்வாக பார்க்க வேண்டாம். சாதீயம் என்பது இதற்க ஒரு மாற்றச் சொல்லாக பழுக்கத்தில் பாவிக்கப்படுவதில்லை என்பதால் அவ்வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பதிவு உயர்சாதியினருக்கு எதிரானதாகவே எழுதப்பட்டுள்ளது. ஒருபடிமேலாக பார்ப்ன ஆட்சிகளில் கூட இந்த கொடுமை நிகழவில்லை என்பதும் எழுதப்பட்டுள்ளது.

”பார்ப்பனிய மன்னராட்சிக் காலங்களில்கூட இத்தகைய நடைமுறைகள் இருந்ததாக வரலாற்றில் படித்ததில்லை.” இது பதிவ வாசகங்கள்.

நன்றி

ஜமாலன் சொன்னது…

நன்றி தருதலை

ஜமாலன் சொன்னது…

Anonymous said...

//எதற்கெடுத்தாலும் பார்பனியம், மனுநீதி என்று எழுதுவது பாஷனாகிவிட்டது.//

இதற்கு மேலே விளக்கம் சொல்லிவிட்டேன் என்று கருதுகிறேன். பார்ப்பனியம் மனுநீதி என்று எழுதுவதற்க காரணம், அவைதான் இந்தியாவின் ஆதிக்கம் செலுத்தும் பிரதிகளாக உள்ளன. அவை மனித மனங்களை சாதிபார்க்கும், தீண்டாமை பார்க்கும் ஒன்றாக கட்டமைத்துள்ளன. 3000-வருட வேர்களைக் கொண்ட அந்த ஆல மரங்களை வெட்ட 60 ஆண்டு காலமாகத்தான் கோடாரிகளாக பெரியாரியம் மற்றும் அம்பேத்கரியம் உள்ளது. அதே சமயம் இன்று உயர்சாதியினர் தங்களை ஒரு நவபார்ப்பனராக கருதிக்கொள்ளும் கருத்தியலுக்கு உட்பட்டு இயங்கிவருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. பார்ப்பனியம் என்பது இந்த நவபார்ப்பனியத்தையும் உள்ளடக்கியதுதான். சங்கர் தனது முதல்வன் படத்தில் சாதிகளை ஒழிக்க இந்த வர்ண தர்ம முறையை இட ஒதுக்கீட்டுமுறை மூலம் அறிமுகப்படுத்தவார். எண்ணற்ற சாதிகளை நான்கு சாதிகளாக மாற்றுதல் என்பதாக. சங்கர் பார்ப்பனரா? அவர் இதை முன்வைப்பதன் நோக்கம் என்ன? இதைதான் நவபார்ப்பனியம் என்கிறோம். சங்கர் போன்றவர்களுக்கும், ரஜனி போன்ற வர்களுக்கும் ஊடகங்கள் தரும் முக்கியத்துவத்தின் அரசியல் இதுதான்.

//தீண்டாமைக் கொடுமைகளை அரசு தன் அதிகாரத்தினைக் கொண்டு ஒடுக்க முடியும்.வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கொடுமை இழைப்போருக்கு தண்ட அபராதம் உட்பட தண்டனைகளை தர முடியும். அதைச் செய்யாமல் தடுப்பது எது?. வீரமணிக்களும், ராமதாஸ்களும்,திருமாவளவன்களும்
எங்கே போனார்கள். பெரியாரின் சீடர்கள் நடத்தும்
ஆட்சியில் இதை எதிர்த்து அரசு செய்தது என்ன் - மின்சார இணைப்பினை துண்டித்ததுதான்.//

நண்பரே அரசு என்பது மக்களின் நலத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. வெகுசனங்கள் கிளர்ந்தெழாமல் சமூக ஒழுங்கை காப்பதும், அவர்களை ஆள்வதும்தான் அரசு. சான்றாக, இன்றைய பண்ணாட்டு முதலாளியம் அமைதியான முறையில் மக்கள் எதிர்ப்பில்லாமல் இங்கு இயங்கவதற்கான பாதுகப்பு எந்திரமே அரசு.

சாதியம் மற்றும் தீண்டாமை போன்ற கொடுமைகளை எதிர்த்து அரசு சட்டம் இயற்றியிருப்பதே அம்பேத்கர் பெரியார் போன்றவர்களின் தீவர இயக்கத்தாலும் நடவடிக்கைகளாலும்தான். நீங்கள் கூறிய மற்றவர்கள எல்லாம் ஓட்டிற்காக அரசியல் செய்பவர்கள். இவர்கள் ஒரு அழுத்தக் குழவாக மட்டுமே செயல்பட முடியும். அதற்குமேல் அவர்களை எதிர்பார்க்க முடியாது. அதை அவர்கள் சரியாகவும் செய்து வருகிறார்கள்.

//பாரத தேசத்தில்தான் பெரியார் பூமியும் இருக்கிறது என்பதை
கோவி.கண்ணன் பெரியாரியர் தெரிந்து கொள்ளட்டும்.ஆனால்
பெரியார் பூமியில் நிலம் வைத்திருக்கும் தலித்களின் எண்ணிக்கை விகிதம் குறைவு. ஏன் என்றால் கோவி.கண்ணன்
பெரியாரியர் சாதிகளின் நில ஆதிக்கத்தை பெரியார் சீடர்கள்
நொறுக்கவில்லை. கோவி.கண்ணன் தலித் முரசு, கோடாங்கி போன்றவற்றை படித்தால் உண்மை தெரியும். //

இதில் ஒரு உண்மை உள்ளது. ஆனால் நீங்கள் உருவாக்கம் சித்திரம் அளவிற்கு இல்லை. பெரியார் பூமி என்கிற பதம் முற்றிலுமாக இன்று தமிழகத்துக்குப் பொருந்துமா? என்பது கேள்விக்குறியே. இன்று தமிழக்த்தில் சாதியரீதியான ஆதிக்கம் பார்ப்பனர்களைவிட அதிகமாக உயர்சாதிகளால் நடத்தப்படுகிறது. தலித்துகள் நிலமற்றவர்களாக உள்ளனர். அல்லது அந்த விகிதம் தாங்கள் கூறுவதுபோல குறைவுதான். இவை எல்லாம் பார்ப்னீயக் கருத்தியல் ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட பயன்படாது. காரணம் பார்ப்பனியம் என்பது ஒரு புனிதமான தூய்மையான உடலாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த லட்சிய உடலை அடைவதற்கான வேட்கைதான் எல்லா சாதிகளையும் வழி நடத்துகிறது. அந்த இலட்சிய உடலை மதங்களும் வேதங்களும் அதை ஒட்டிய எண்ணற்ற புனிதப் பிரதிகளும் இதிகாசங்களும் மேலும் மேலும் இந்திய சமூகத்தின் மையத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றன. அந்த உடலை அடைவதந்கான வேட்கையை காத்துவருகின்றன என்பதைவிட அவற்றை மறுஉற்பத்தி செய்து பரவலாக்கி வருகின்றன. எனவேதான் சாதிய எதிர்ப்பு என்பது மத மற்றும் பார்ப்பனிய மற்றும் மனுவாத எதிர்ப்பாக இருப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. இது விரிவான உரையாடலைக் கொண்ட ஒன்று. இங்கு சுருக்கமாகவே தந்துள்ளேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நாகார்ஜுனன் சொன்னது…

1. காந்தி, பெரியார், அம்பேத்கர் பூமியிலா? - என்பதெல்லாம் உணர்வுமட்டத்தில் நின்று விடுகின்றன. இந்த தீவிரப்பிரச்னை தொடர்பான அறிவுத்திரட்டல் முதலில் வேண்டும்.

2. அறிவுத்திரட்டலில் முதலில் நிறையக் கள ஆய்வு தேவை. சில, ஏற்கனவே நடந்த, நடக்கிற கள ஆய்வுகள் பல, அவற்றை மாதிரியாக
எடுத்துக்கொள்ளலாம். கள ஆய்வு கணிசமாக நடந்த பிறகு, ஒடுக்குமுறை வடிவஙகளின் மாதிரிகளை வகைப்படுத்தி, அவை மூலமாகக் கோட்பாட்டுக்குப் போகலாம் - அப்போது யாருக்கு எங்கே எவ்வளவு பங்கு என்பது தானாகத் தெரிந்துவிடும். மேலும், சில இடங்களில் இந்தத் தீமைச்செயல் புதிதாகவோ, புதிய வடிவத்திலோ பரவுகிறதா என்பதும் தெரியும்.

3. இந்த இடத்தில் ஆதவன், விடுதலைச்சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம் ஆகியோரின் களப்பணிகளைப் பாராட்ட வேண்டும். அதே நேரம் இவர்கள் மாத்திரமே
கள ஆய்வுகளைச செய்ய முடியும் என்று விட்டுவிடக்கூடாது. எழுத்தாளர்கள்,ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பத்திரிகை நண்பர்கள் என எல்லோரும் தமக்கு முடிந்த இடத்தில் தலா ஒரு கள ஆய்வையாவது செய்யலாம். ஒரு பிரச்னை முடிந்து அடுத்த பிரச்னை வரும்வரையில் வாளாவிருக்கத் தேவையில்லை.

5. தொடக்கமாக, தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இத்தகைய ஒடுக்குமுறை வடிவங்கள் இயக்கத்தில் உள்ளன என்பதற்கான ஒரு mapping செய்யலாம். அதை ஒரு dynamic mapping-ஆகப் பிறகு மாற்றலாம்.

6. கோட்பாடுகளைத் தாண்டி பொதுவாக பல தரப்பும் இந்தத்தீமையை உணர்வதால் இதில் ஒரளவு நட்புடன் செயல்படலாம்,
எல்லாத்தரப்பிலும் உள்ள நட்புச்சக்திகளைத் திரட்டித்தான் இந்தத்தீமையை ஒழிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

நாகார்ஜுனன்

பெயரில்லா சொன்னது…

"நண்பரே அரசு என்பது மக்களின் நலத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. வெகுசனங்கள் கிளர்ந்தெழாமல் சமூக ஒழுங்கை காப்பதும், அவர்களை ஆள்வதும்தான் அரசு. சான்றாக, இன்றைய பண்ணாட்டு முதலாளியம் அமைதியான முறையில் மக்கள் எதிர்ப்பில்லாமல் இங்கு இயங்கவதற்கான பாதுகப்பு எந்திரமே அரசு.
"
பெரியாருக்கு இந்த கருத்து இருந்ததா?
அம்பேத்கர் அரசை இப்படிப் புரிந்து
கொண்டாரா. அரசு குறித்த உங்கள்
புரிதல் ஒரு பழைமையான புரிதல்.
இன்று அரசை வெறும் வர்க்க
கண்ணோட்டத்தில் அணுக முடியாது.
”சாதியம் மற்றும் தீண்டாமை போன்ற கொடுமைகளை எதிர்த்து அரசு சட்டம் இயற்றியிருப்பதே அம்பேத்கர் பெரியார் போன்றவர்களின் தீவர இயக்கத்தாலும் நடவடிக்கைகளாலும்தான்”
வன்கொடுமைச் சட்டம் கொண்டுவர
பெரியாரிய இயக்கங்கள் எதுவும்
செய்யவில்லை.இளையபெருமாள்
கமிட்டிதான் இதைப் பரிந்துரைத்தது.
அரசியல் சட்டம் தீண்டாமையை
சட்ட விரோதம் என்று அறிவித்தது.
1950 களில் பல வ்ழக்குகளில் பொது
இடங்களில் அனைவருக்கும் உரிமை
உண்டு என்பது உறுதி செய்யப்பட்டது.
அதில் பெரியாருக்கு எந்தப் பங்கும்
இல்லை.அவர் அரசியல் சட்டத்தை
நிராகரித்தவர்.

மனுவாதம் என்று கருதுவதில் உள்ள
சிக்கல்கள் பல.தீண்டாமை உட்பட
பல கொடுமைகளை செய்பவர்கள்
மனு சொன்னார் என்பதற்காக
செய்யவில்லை. தங்கள் ஆதிக்கத்தினை, மேலாண்மையை
நிறுவ, தொடர்ந்து தக்கவைக்க
செய்கிறார்கள். கிறித்துவ ரெட்டியார்கள் மனுவைப்
படித்து இதையெல்லாம்
செய்கிறார்கள் என்றா
கூறுவீர்கள். ஆதிக்கத்தினை,
மேலாண்மையை எப்படி
ஒழிப்பது, சமத்துவத்தை
நிலைநாட்டுவது எப்படி
என்றுதான் யோசிக்க வேண்டும்.
அரசு கடுமையாக செயல்பட்டால்
அதன் விளைவுகள் காரணமாக
தொடர்ந்து வன்கொடுமைகள்
செய்வது குறையும்.மேலும்
உற்பத்தி சக்தி உறவுகளில்
மாற்றம் கொண்டு வரப்பட
வேண்டும், சமூக உறவுகளிலும்
மாற்றம் கொண்டுவரப் பட
வேண்டும்.ஒரு பதினைந்து
ஊர்களில் கடுமையாக தண்டித்து
அரசு நடவடிக்கை எடுத்தால்
பயம் காரணமாக முதலில்
சில மாற்றங்கள் வரும்.

ஜமாலன் சொன்னது…

நாகார்ஜுனன் said...

விரிவான பின்னோட்டத்திற்கு நன்றி. உங்களது ஆக்கபூர்வமான செயல்திட்டம் பிரச்சனைகளின் வேர்மட்ட அளவிலான களஆய்விற்கும் புரிதலுக்கும் வழிவகுக்க கூடியவை. உண்மைதான் எல்லாத்தரப்பு நட்புச்சக்திகளையும் திரட்டித்தான் இப்பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

பெயரில்லா சொன்னது…

"உண்மைதான் எல்லாத்தரப்பு நட்புச்சக்திகளையும் திரட்டித்தான் இப்பிரச்சனைகளை தீர்க்க முடியும்".

ஆதவன் தீட்சண்யா,பெரியாரிய இயக்கங்களின் சொல்லடல்கள்
இதற்கு தடையாக உள்ளன.
எல்லாத் தரப்பு நட்புசக்திகள்
என்பதை அவர்கள் ஏற்பார்களா.
ஆதவன் தீட்சண்யாவை பொறுத்தவரை நாகார்ஜுனன்
நட்பு சக்தியல்ல என்பது அவரது
கீற்று பேட்டியைப் படித்தாலே
தெரியும்.

ஜமாலன் சொன்னது…

Anonymous said...

விரிவான பின்னோட்டத்திற்கும் தொடர் விவாதத்திற்கும் நன்றி நண்பரே.

//பெரியாருக்கு இந்த கருத்து இருந்ததா? அம்பேத்கர் அரசை இப்படிப் புரிந்து கொண்டாரா. அரசு குறித்த உங்கள் புரிதல் ஒரு பழைமையான புரிதல். இன்று அரசை வெறும் வர்க்க கண்ணோட்டத்தில் அணுக முடியாது.//

முதலில் எனது கண்ணோட்டம் வெறும் வர்க்க அடிப்படையிலானது மட்டுமல்ல. அரசு என்பது இரண்டுக் கூறுகளைக் கொண்டது. ஒன்று வன்முறையாக ஆயுதம் தரித்த அமைப்புகள் வழி மக்களை ஒடுக்குவது. அதுதான் மரபான மார்க்சியப் பார்வை. மற்றது மக்களை கருத்தியல் கொண்டு ஆள்வது. அத்தகைய கருத்தியல் அரசு எந்திரமாக இந்தியாவில் இயங்குவது வர்ண மற்றும் சாதியக் கருத்தியலே.

இங்கு நான் சுட்டியது. பண்ணாட்டு மற்றும் பெரு மூலதனத்திற்கான பாதுகாப்பாக இயங்குவதை நந்திகிராம் துவங்கி பல சம்பவங்களில் பார்த்தோம். அரசு என்பது தனக்கு சாதகமானதாக இருந்தால் மட்டுமே வன்முறையை பிரயோகிக்கிறது. அல்லது பண்ணாட்டு முதலாளியத்தலோ அல்லது பெருமுதலாளிய வர்க்கத்திற்கோ சாதகநிலை எடுக்கும்போது அதாவது போட்டி முதலாளியமாக அரசு மற்றொரு முதலாளிமேல் நடவடிக்கை எடுக்கும். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. ராஜீவிற்கு எதிராக வி.பி.சிங் . எழுச்சி என்பது பாம்பே டையிங் விமல் போட்டியின் விளைவு என்பதும் அதன் ஓரங்கமாகத் துவங்கிய நாடகமே போர்பரஸ் பீரங்கி ஊழல் அம்பலம் என்பதெல்லாம் தெரிந்த பழைய கதைதான். அந்த அம்பலத்திற்கான சூத்ரதாரிகளான அருண்ஷோரி இன்று இந்துத்தவாவிற்குள் சரணடைந்திருப்பதும் இதில் ஆழ்ந்து நோக்கத்தக்கது. போகட்டும். அந்த பழங்கதைக்குள் நாம் போக வேண்டாம்.

இப்பிரச்சனையில் அரசு ஒரு நிமிடத்தில் சுவற்றை இடிக்க முடியும். அரசுக்குத் தேவை இச்சுவர் உருவாக்கும் கருத்தயில் அதிகாரமும், அரசு தன்னை ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்வதற்கான வாய்ப்புமே. அதனால் அரசு நிகனத்தால் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் சாதி போன்ற கருத்தியல் கொடுமைகள் ஒழியும் என்பது ஒருவகை கற்பனாவாதமே. இந்த அரசுகள் அதை நினைக்காது என்பதுதான் உண்மை. அரசு (state) என்பதும் அரசாங்கம் (government) என்பதும் வேறு வேறு என்பது உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

//”சாதியம் மற்றும் தீண்டாமை போன்ற கொடுமைகளை எதிர்த்து அரசு சட்டம் இயற்றியிருப்பதே அம்பேத்கர் பெரியார் போன்றவர்களின் தீவர இயக்கத்தாலும் நடவடிக்கைகளாலும்தான்”
வன்கொடுமைச் சட்டம் கொண்டுவர பெரியாரிய இயக்கங்கள் எதுவும் செய்யவில்லை. இளையபெருமாள் கமிட்டிதான் இதைப் பரிந்துரைத்தது. அரசியல் சட்டம் தீண்டாமையை சட்ட விரோதம் என்று அறிவித்தது. 1950 களில் பல வ்ழக்குகளில் பொது இடங்களில் அனைவருக்கும் உரிமை உண்டு என்பது உறுதி செய்யப்பட்டது. அதில் பெரியாருக்கு எந்தப் பங்கும் இல்லை.அவர் அரசியல் சட்டத்தை நிராகரித்தவர்.//

நண்பரே பெரியாரின் மற்றும் அம்பேத்கரின் சாதனை என்ன? என்பது முக்கியம். பெரியார் மற்றும் அம்பேத்கர் இன்று போடப்டும் சட்டங்களுக்கெல்லாம் நேரடியான காரணம் அல்ல. அப்படி இரக்கவும் முடியாது. ஆனால் அவர்கள் ஏற்படுத்திய தன்னுணர்வே இவற்றை சாதித்தது. பெரியாரோ அல்லது அம்பேத்கரோ இல்லாவிட்டால் இந்த வகை உணர்வு (பிரக்ஞை) வந்திருக்குமா? சாதிய கட்டுமானம், வர்ணபேதம், சனாதன அடிப்படை மற்றும் மனுவாதம் ஆகியவற்றை கேள்விகேட்டு அதனை மக்கள் சமூகத்தில் இறக்கி ஒரு எதிர் கருத்தியலை உருவாக்கியவர்கள். அவர்கள் எத்தனை சமரசம் செயதிருந்தாலும், அரசிற்கு ஆதரவாக செயல்பட்டிருந்தாலும் இந்த உணர்வை ஏற்படுத்தி வரலாற்றை இடையீடு செய்ததுதான் அவர்களது மிகப்பெரும் சாதனை. அதன் விளைவுகள்தான் எல்லாம். இன்று அவர்களை மீறிப்பொவதற்குக்கூட அவர்களே காரணமாக இருந்துள்ளனர் என்பதுதான் முக்கியம். சாதியம் என்கிற சொல்லாடலை பிரித்தானியர்தான் கட்டமைத்தனர் என்றாலும் அதற்குள் உள்ள ஒடுக்குமுறை வடிவங்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் தன்னுணர்வு பெறச் செய்தவர்கள் இவர்கள்தான். பெரியார் அரசியல் சட்டத்தை நிராகாரித்ததுக்கூட அதன் உயர்சாதி தன்மையால்தான்.

//மனுவாதம் என்று கருதுவதில் உள்ள சிக்கல்கள் பல.தீண்டாமை உட்பட பல கொடுமைகளை செய்பவர்கள் மனு சொன்னார் என்பதற்காக செய்யவில்லை. தங்கள் ஆதிக்கத்தினை, மேலாண்மையை நிறுவ, தொடர்ந்து தக்கவைக்க செய்கிறார்கள். கிறித்துவ ரெட்டியார்கள் மனுவைப் படித்து இதையெல்லாம் செய்கிறார்கள் என்றா கூறுவீர்கள். //

நான் மேலே கூறிய பெரியார், அம்பேத்கர் போன்ற வரலாற்று முக்கியத்துவம் மனுவிற்கும் உண்டு. அவர்தான் இந்த கட்டமைப்பை உருவாக்கி பார்ப்பனியரை உயர் வர்ணமாக அதாவது மேல் வர்ணமாக மாற்றியவர். இது குறித்து அம்பேத்கர் பற்றிய எனது பதிவு ஒன்றில் விவாதித்துள்ளேன். வாய்ப்பிருந்தால் பாருங்கள். (http://jamalantamil.blogspot.com/2007/08/blog-post_26.html) இங்கு மனுவாதம் என்பது இந்துமத சாதிகளுக்கு மட்டும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது அல்ல. அது ஒரு இந்தியவகை சிந்தனைமுறை. மனித உடலில் தீண்டாமை பார்ப்பது, அகமண முறையை ஏற்பது, குழவிலிருந்து விலக்கம், வர்ணக் கலப்பிற்கான தண்டனை, குறிப்பிட்ட பிரிவினரை அறிவு பெறாமல் செய்வதற்கான முடக்கம், பெண்களை மனத உயிராக கருதாத நிலை என்பதாக இன்று இந்திய மனங்களின் ஆழ்மனப் பிரக்ஞையாக இருப்பது மனுவாதமே. அதனை எந்த மதங்களாலும் சாய்க்க முடியவில்லை என்பதுதான் அதன் வெற்றியும் பலமும். இன்று பார்ப்பனியம் நேரடியாக ஒடுக்கமுறையில் ஈடுபடும் அளவிற்கு வலுவில்லாமல் இருக்கலாம். காரணம் ”இந்திய பார்ப்பனியம்” என்பது ”NRI பார்ப்னியமாக”த்தான் உள்ளது. அதன் பலம் இதுதான். அதுதான் உயர்சாதியினரை ஒரு பார்ப்பனரைப்போல உணரவும் செய்யவும் வைக்கிறது. இந்திய உடல்களின் அடைய வேண்டிய லட்சியப்படுத்தப்பட்ட தூய்மையான புணத உடல்களாக உள்ள ”பார்ப்பனனாதல்” (bramanization)என்பதே ஆழ்மன வேட்கையாக இன்றைய இந்திய உடல்களுக்குள் செயல்படுகிறது.

//ஆதிக்கத்தினை, மேலாண்மையை எப்படி ஒழிப்பது, சமத்துவத்தை நிலைநாட்டுவது எப்படி என்றுதான் யோசிக்க வேண்டும். அரசு கடுமையாக செயல்பட்டால் அதன் விளைவுகள் காரணமாகதொடர்ந்து வன்கொடுமைகள் செய்வது குறையும்.மேலும் உற்பத்தி சக்தி உறவுகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும், சமூக உறவுகளிலும் மாற்றம் கொண்டுவரப் பட வேண்டும்.ஒரு பதினைந்து ஊர்களில் கடுமையாக தண்டித்து அரசு நடவடிக்கை எடுத்தால் பயம் காரணமாக முதலில் சில மாற்றங்கள் வரும்.//

உங்கள் ஆலோசனை ஒரு தற்காலிகத் தீர்வு என்றவகையில் ஏற்கக்கூடியதே. பதிவின் நோக்கமும் அதுவே. உற்பதி்சக்திகளில் மாற்றம் என்பது ஒரு வர்க்கப்புரட்சியன் மூலமே சாத்தியம். உடனே உடோப்பியா என்றும் கற்பனாவாதம் என்றும் தோழர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றும் சில ”செயல் மற்றும் செயல்படாததுகள்” கத்தும். நான் வம்புக்கு போக விரும்பவில்லை. உங்கள் புரிதலுக்கு நன்றி.

அன்புடன்
ஜமாலன்.

K.R.அதியமான் சொன்னது…

///பண்ணாட்டு மற்றும் பெரு மூலதனத்திற்கான பாதுகாப்பாக இயங்குவதை நந்திகிராம் துவங்கி பல சம்பவங்களில் பார்த்தோம். அரசு என்பது தனக்கு சாதகமானதாக இருந்தால் மட்டுமே வன்முறையை பிரயோகிக்கிறது. அல்லது பண்ணாட்டு முதலாளியத்தலோ அல்லது பெருமுதலாளிய வர்க்கத்திற்கோ சாதகநிலை எடுக்கும்போது அதாவது போட்டி முதலாளியமாக அரசு மற்றொரு முதலாளிமேல் நடவடிக்கை எடுக்கும். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. ராஜீவிற்கு எதிராக வி.பி.சிங் . எழுச்சி என்பது பாம்பே டையிங் விமல் போட்டியின் விளைவு என்பதும் அதன் ஓரங்கமாகத் துவங்கிய நாடகமே போர்பரஸ் பீரங்கி ஊழல் அம்பலம் என்பதெல்லாம் தெரிந்த பழைய கதைதான். /////

This is not genuine free market.
The basis of capitalism is 'right to property' as a fundamental right. What happened in Nandiragm is violation of all basic rights (esp right to property).
and until 1990s we had crony capitalism (licnese, permit raajiyam) in the name of democratic socialism and statism.
The fight beteen RIL and Bombay dyeing was a symptom of such cronyisim and now it is largely not possible. there is a direct cor-relation between economic freedom and corruption :

http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html

K.R.அதியமான் சொன்னது…

நண்பர் ஜமாலன்,

பார்பனியம் எனப‌து பார்பனர்களின் நெறிமுறைகள் மட்டும்தான், பார்பனரல்லாதவருக்கும் பார்பனீயத்திற்க்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று பலரும் நம்புகின்றனர். ப‌திவ‌ர்க‌ளின் பொது புத்தியில் இது ப‌திந்துள்ள‌து போல் தோன்றுகிற‌து.
பார்ப‌னீய‌ எதிர்ப்பிற்க்கும், பார்ப‌ன‌ரை வெறுப்ப‌திற்க்கும் உள்ள‌ வேறுபாடு புரியாத‌
அரைகுறைக‌ள் ப‌ல‌ரும் இங்கு உள்ள‌ன‌ர். துவேச‌மும், குரோத‌மும் தான் அதிக‌ம் தென்ப‌டுகின்ற‌ன.

எல்லோரும் உங்க‌ளைப் போல் க‌ண்ணிய‌மாக‌, ஆழ‌மாக‌, ந‌டுனிலைமையோடு எழுத‌ முனைந்தால் பிர‌ச்ச‌னை இல்லை..

இந்த கிராமத்து விசிய‌த்தில், பார்ப‌னீய‌ம் என்ற‌ வார்த்தைக்கு ப‌தில் 'தேவ‌ரீயம்' என்ற‌ வார்த்தை பொருத்த‌மாக‌ இருக்கும். (அல்ல‌து க‌வுண்ட‌ரீய‌ம், வ‌ன்னிய‌ரீய‌ம்)

பெயரில்லா சொன்னது…

//இந்த கிராமத்து விசிய‌த்தில், பார்ப‌னீய‌ம் என்ற‌ வார்த்தைக்கு ப‌தில் 'தேவ‌ரீயம்' என்ற‌ வார்த்தை பொருத்த‌மாக‌ இருக்கும். (அல்ல‌து க‌வுண்ட‌ரீய‌ம், வ‌ன்னிய‌ரீய‌ம்)//
அப்படி போடுங்க அறுவாளை!
- குட்டி கண்ணன்

நாகார்ஜுனன் சொன்னது…

ஜமாலன்,

வரலாற்றில் ஹிந்துமதம் என்றோ அதற்கான மூல நூல் என்றோ அடையாளம் இல்லாதிருந்த போதும் இவை இரண்டும் - காலனியக்காலத்துக்கு முன்பே ஓரளவும் காலனியக்காலத்தில் மற்றும் தேசியக் காலகட்டத்தில் நிரம்பவும் அதற்குப் பிறகு இன்னும் வலுவாகவும் - பூதங்களாகக் கட்டமைக்கப்பெற்றன. இவை இன்று எதார்த்தமாகி மிரட்டுகின்றன.
இவ்விதமாக, இல்லாத மூல நூலைத் தேடிக்கட்டமைக்கிற முயற்சியான ஹிந்துத்வம், சமுதாயத்தில் தன்-பிறர் அழிவுக்காய் மீண்டும் ஆள்திரட்டி வருகிறது. மத்திய தர வர்க்கத்தின் மத-தேச-ஆன்மீக 'ந்ல்லெண்ணக்' கட்டமைப்பைச் சுரண்டிக் கொழுப்பது இதன் வளர்ச்சி-உத்தி.

எந்த ஒருநூலின் சமுதாய-வரலாற்று இயக்கத்தை விமர்சிப்பது வேறு, அதை (இல்லாத) மதத்தின் (இல்லாத) மூல நூலாகக் கற்பிதம் செய்வது வேறு. ஆக, கீதையுடன் பேசலாம், அத்வைதத்தை அணுகலாம், மனுவை விரோதிக்கலாம், புராணங்களை, தொன்மங்களை மாற்றி எழுதலாம்.
ஆனால் அவை மூல நூல்கள் அல்ல. 'மூல நூல்' பொறியில் ஹிந்துத்வ-எதிர்ப்பு சக்திகள் சிக்கத்தேவையில்லை என்பது முக்கியம். இப்படிச்செய்தால் நட்புசக்திகளை எளிதில் அடையாளம் காணலாம்.

ஆக, இந்தியப் புவிப்பரப்பின் - ஏன் எந்த ஒரு பரப்பின் - கலை-தத்துவ-விவாதப் பின்னணியைக் கைவிடத் தேவையில்லை என்பது என் முடிவு. ஆக, ஹிந்துத்வ-எதிர்ப்பு என்பது கலை-தத்துவ-விவாதப் பின்னணி விரிவடைவதால் ஊக்கம் பெற வேண்டும் என்கிறேன்.

நாகார்ஜுனன்

ஜமாலன் சொன்னது…

K.R.அதியமான். 13230870032840655763 said...

நண்பர் அதியமான்,

//பார்பனியம் எனப‌து பார்பனர்களின் நெறிமுறைகள் மட்டும்தான், பார்பனரல்லாதவருக்கும் பார்பனீயத்திற்க்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று பலரும் நம்புகின்றனர். ப‌திவ‌ர்க‌ளின் பொது புத்தியில் இது ப‌திந்துள்ள‌து போல் தோன்றுகிற‌து.
பார்ப‌னீய‌ எதிர்ப்பிற்க்கும், பார்ப‌ன‌ரை வெறுப்ப‌திற்க்கும் உள்ள‌ வேறுபாடு புரியாத‌ அரைகுறைக‌ள் ப‌ல‌ரும் இங்கு உள்ள‌ன‌ர். துவேச‌மும், குரோத‌மும் தான் அதிக‌ம் தென்ப‌டுகின்ற‌ன.

எல்லோரும் உங்க‌ளைப் போல் க‌ண்ணிய‌மாக‌, ஆழ‌மாக‌, ந‌டுனிலைமையோடு எழுத‌ முனைந்தால் பிர‌ச்ச‌னை இல்லை..//

புரிதலுக்கு நன்றி. இந்த பொதுபுத்தி மாற்றியமைக்கப்பட வேண்டியது தொடர்ச்சியான ஒரு இயக்கத்தின் மூலமும் பிரச்சாரத்தின் மூலமுமே சாத்தியம்.

//இந்த கிராமத்து விசிய‌த்தில், பார்ப‌னீய‌ம் என்ற‌ வார்த்தைக்கு ப‌தில் 'தேவ‌ரீயம்' என்ற‌ வார்த்தை பொருத்த‌மாக‌ இருக்கும். (அல்ல‌து க‌வுண்ட‌ரீய‌ம், வ‌ன்னிய‌ரீய‌ம்)//

???????? உயர்சாதியாக கருதிக் கொண்டிருக்கும் நணபர்கள் யோசிக்க வேண்டிய ஒன்று ?????

ஜமாலன் சொன்னது…

நாகார்ஜுனன் said...

நண்பர் நாகார்ஜீனன்,

//வரலாற்றில் ஹிந்துமதம் என்றோ அதற்கான மூல நூல் என்றோ அடையாளம் இல்லாதிருந்த போதும் இவை இரண்டும் - காலனியக்காலத்துக்கு முன்பே ஓரளவும் காலனியக்காலத்தில் மற்றும் தேசியக் காலகட்டத்தில் நிரம்பவும் அதற்குப் பிறகு இன்னும் வலுவாகவும் - பூதங்களாகக் கட்டமைக்கப்பெற்றன. இவை இன்று எதார்த்தமாகி மிரட்டுகின்றன.
இவ்விதமாக, இல்லாத மூல நூலைத் தேடிக்கட்டமைக்கிற முயற்சியான ஹிந்துத்வம், சமுதாயத்தில் தன்-பிறர் அழிவுக்காய் மீண்டும் ஆள்திரட்டி வருகிறது. மத்திய தர வர்க்கத்தின் மத-தேச-ஆன்மீக 'ந்ல்லெண்ணக்' கட்டமைப்பைச் சுரண்டிக் கொழுப்பது இதன் வளர்ச்சி-உத்தி.

எந்த ஒருநூலின் சமுதாய-வரலாற்று இயக்கத்தை விமர்சிப்பது வேறு, அதை (இல்லாத) மதத்தின் (இல்லாத) மூல நூலாகக் கற்பிதம் செய்வது வேறு. ஆக, கீதையுடன் பேசலாம், அத்வைதத்தை அணுகலாம், மனுவை விரோதிக்கலாம், புராணங்களை, தொன்மங்களை மாற்றி எழுதலாம்.
ஆனால் அவை மூல நூல்கள் அல்ல. 'மூல நூல்' பொறியில் ஹிந்துத்வ-எதிர்ப்பு சக்திகள் சிக்கத்தேவையில்லை என்பது முக்கியம். இப்படிச்செய்தால் நட்புசக்திகளை எளிதில் அடையாளம் காணலாம்.//

உங்கள் கருத்துக்களில் முழு உடன்பாடு உண்டு. விதையாக முன்வைக்கப்பட்டுள்ள உங்கள் கருத்தின் நுட்பம் உங்களது எழுத்தாற்றலுக்கும், தீவிர வாசிப்பிற்கும், சமூக அனுபவத்திற்கும் சரியான சாட்சியாக உள்ளது. உண்மைதான் அவர்கள் வைக்கும் பொறியில் சிக்காமல் நுட்பமாக நாம் எழுத வேண்டிய அவசியம் உள்ளது. சில நேரங்களில் உணர்வு சிந்தனையை பின் தள்ளித்தான் விடுகிறது. அதற்கான பக்கவம் இன்னும் முழுமையடையவில்லை.

//ஆக, இந்தியப் புவிப்பரப்பின் - ஏன் எந்த ஒரு பரப்பின் - கலை-தத்துவ-விவாதப் பின்னணியைக் கைவிடத் தேவையில்லை என்பது என் முடிவு. ஆக, ஹிந்துத்வ-எதிர்ப்பு என்பது கலை-தத்துவ-விவாதப் பின்னணி விரிவடைவதால் ஊக்கம் பெற வேண்டும் என்கிறேன்.//

இதுதான் இன்றைக்கான அரசியலாக இருக்கும். கலை-தத்துவ-விவாதப்-பின்னனி விரிவடைந்து ஒரு நுட்பமான அறிவார்ந்த சமூகத்தை அடைவதற்கான வளர்ச்சிப் பாதையில் நிச்சயமாக நாம் ஊக்கம் பெற்றே ஆக வேண்டும்.

நன்றி விரிவான கருத்தாடலுக்கு.

அன்புடன்
ஜமாலன்.

ஜமாலன். Blogger இயக்குவது.