கோபி கிருஷ்ணனின் கதையுலகம் அல்லது நரம்புநோய் பற்றிய கதையாடல்கள்.

நண்பர் அய்யனார் அவர்களின் கோபி.கிருஷ்ணன் பற்றிய பதிவை படித்து பின்னோட்டம் இடச் சென்று வழக்கம்போல அது நீண்டு அய்யனாரின் இடத்தை ஆக்ரமிக்க விரும்பாமல் தனிப்பதிவாக இடப்படுகிறது.
கோபி பற்றி நீ்ண்ட நாளாக யாரிடமாவது பகிர்ந்துகொள்ள கொண்டிருந்த ஆவலே இங்கு எழுத்தாகிறது. எனது ஒரு சில கட்டுரைகளில் தமிழ் சிறுகதைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் கோபி பற்றி எழுதி உள்ளேன். கோணங்கியுடன் புதுமைபித்தனின் கபாடபுரம் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அதற்குள் ஒருவன் நுழைந்துவிட்டு வெளியேறினால் அவன் வேறு மனிதனாகிவிடுவான் என்றார். உண்மைதான் அதேபோல் ஒருமுறை கோபியின் உலகத்தில் பிரவேசித்த விட்டு நீங்கள் வெளியே வரும்போது உங்களது நுன்னுணர்வுகளை பர்த்து நீங்களே புரிந்து கொள்ளவும் உங்களால் வெளிப்படுத்த வாக்கியமற்ற மொழியற்ற சில உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்த மொழியும் வாக்கியமும் வந்துவிடும். உங்களை நீங்களே உளவியல் ஆய்வு செய்து கொள்ள வைக்கும் ஒரு உலகம் அது. இந்தவகை ரசவாதம்தான் சிறந்த படைப்பின் ஒரு இலக்கணமாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். படைப்பிற்குள் நுழையும் வாசகன் வாசித்து வெளியேறும்போது புதிய உணர்வுள்ளவனாக மாறிவிடுகிறான். இவ்வாறாக படைப்பு ஆசிரியனை மட்டுமல்ல வாசகனையும் கொன்றுவிடுகிறது. சிறந்த படைப்பு மீண்டும் வாசகனை உயிர்ப்பிக்கிறது. மற்றவை பிண வாழ்வை மீட்டுறுவாக்கம் செய்கிறது அவ்வளவே. சரி மீண்டும் கோபிக்கு வருவோம்.

82-ல் நான் +2 படித்த காலத்தில் கணையாழியின் தீவர வாசகன். அப்பொழுது கணையாழி அறிவித்த குறுநாவல் போட்டியில், தேர்ந்தெடுக்கப்பட்ட குறுநாவல்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அப்படி வந்ததுதான் ஜெயமோகனின் 'கிளிக்காலம்' மற்றும் கோபியின் 'உணர்வுகள் உபாதைகள்' அல்லது 'ஒவ்வாத உணர்வுகள்'. இந்த குழப்பத்திற்கு காரணம் கோபியின் எல்லா எழுத்துக்களிலும் நாவல் போன்ற ஒரு தொடர்ச்சி உண்டு என்பதால். கதை என்பது தத்துவத்தின் சாரத்திற்க்கானது என்கிற மெளனி போன்று ஒரு உளவியல் சாரத்திற்கான வெளிப்பாடே அவரது கதைகள். மெளனியின் கதைகளில் பாத்திரங்கள் என்பது ஒரே தன்மையில் உலாவரும் வெவ்வேறுக் கதைக்களங்களில். கோபியின் கதைகளில் வெவ்வேறு மனிதர்களின் பல்வேறுவகை உளவியல் எதிர்வினைகள் கதைகளாகின்றன. அதனால் கதைகளை பெயரடிப்படையில் நினைவு கொள்வது கடினம். (கையில் புத்தகங்கள் இல்லை என்பதால் ஒப்பிட்டு பர்ர்க்கவும் வாய்ப்பில்லை. அய்யனார் போன்றவர்கள் திருத்தினால்தான் உண்டு). கோபிக்கு கிடைத்த உளவியல் பணிவாய்ப்பு பல கேஸ் ஸ்டெடிகள் அவரது எழுத்தை பூரணப்படுத்தின என்றால் மிகையாகாது.
எனக்கு தெரிந்து தமிழில் மனதை அதன் ஆழ்தளத்தில் சென்று வாசித்த கதை இவரது கதை தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. காரணம் வாசிக்கும்போதே நமது உள் மனதின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும் வெளிப்படுத்தவும் ஒரு சில வாக்கியங்களை தந்து விடும் அக்கதைகள். உளவியலி்ன் நுட்பங்களை அற்புதமாக்கிய கதையுலகம் அவருடையவை. மத்தியதர வர்க்க அவலம் அவரது கதையுலகம் என்பதெல்லாம் மேலோட்டமானதுதான். மனதை அதன் நுட்பத்தை புரிந்துகொள்ள நம்முன் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பிரதியே அவருடையவை. ஏனோ அந்த தளத்தில் ஆய்வுகள் செய்யப்படவில்லை. கோபி குறித்து எழுதினால் அது ஒரு தனி ஆய்வாக போய்க்கொண்டே இருக்கும்.
82-ற்கு பின் நான் சந்திக்க ஆசைப்பட்ட முதல் எழுத்தாளர் என்றால் அது அவர்தான். அதன்பின் அவரை 90-களில் அமரந்தா வீட்டில்தான் சந்தித்தேன். அவ்வருட புத்தக கண்காட்சிக்கு பின் நாங்கள் அப்படியே குழுவாக அமரந்தாவின் வீட்டிற்கு வந்துவிட்டோம். முதலில் அவரைப் பார்த்தபோது ஒரு தலைமறைவு புரட்சிகர இயக்கத்தின் தோழர்களைப் போல நடுத்தர வயதில் கலைந்த தலையுடன் வேட்டி சட்டை என மிகச் சாதரணமாக இருந்தார். (இப்படி எழுதும் போது எனக்கு கோபி குறித்து இருந்த மிகை பிம்பம் வெளிப்படுவதை உணர முடிகிறது.) ஒருமுறை கவிஞர் இன்குலாப் வீட்டில் சந்தித்த தோழர் பெண்ணாடம் கலியப் பெருமாளை (சிறையிலிருந்து தனது ஆயுள் தண்டனை முடிந்து அவர் விடுதலை ஆகியிருந்த நேரம்.) நினைவூட்டியது அவரது தோற்றம். அவர் அச்சமயம் மனரீதியாக பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருந்தார். அவரும் அவருடன் பணியாற்றிய நண்பர் ஒருவர் வந்திருந்தார். அந் நண்பர் ஒரு கஞ்சாவை புகைத்தபடி ஒதுங்கி உட்கார்ந்து கொண்டார். (நான் ஒருமுறை கஞ்சா குடித்தவிட்டு பட்ட அனுபவமே ஒரு தனிப்பதிவாக போட வேண்டும். திருச்சி தகரக்கொட்டகை அனுபவம்போல.)

இரவு முழுவதும் நான் பிரேம் மாலதி கோபி ஆகியோர் பேசிக் கொண்டிருந்தோம். அவரது கதைகள் பற்றிய அபிப்பிராயங்களை சிலாகித்து நான் கூறிய போதுகூட அவர் அதனை சாதரணமாகவே உள்வாங்கிக் கொண்டிருந்தார். இரவு 1 மணிக்கு மாலதி படுக்க சென்றபின் நானும் பிரேம் கோபி மட்டும். பலமுறை அவரை படுக்க சொன்னபோதும்கூட இல்லை என எங்கள் பேச்சைக் கேட்பதற்க்காகவே உடகார்ந்திருப்பதைப்போல உட்கார்ந்திருந்தார். அதிகமாக அவர் பேசியது ஓரிரு வார்த்தைகள்தான். நள்ளிரவில் டீக்கடைவரை நடந்துபோய் டீ சாப்பிட்டு வந்து தொடர்ந்த போதும்கூட முகத்தில் எங்களது பேச்சிற்கு ஏற்ப மாறும் உணர்வுகளைத் தவிர அவர் எதுவுமே பேசவில்லை. குடந்தை, பாண்டி என எங்கு பிரெமுடன் பேசத்துவங்கினாலும் நள்ளிரவு டீக்கடையில் ஒன்று அல்லது இரண்டுமுறை சென்று டீ அருந்திவிட்டு காலை 6 மணிக்குப் படுப்பதே எங்கள் வழக்கமாக இருந்ததை இப்பொழுது நினைத்துக் கொள்கிறேன். (இதற்காக ஏற்கனவே தமிழ்நதி அவர்கள் வருத்தப் பட்டுள்ளார் அவரது பின்னோட்டமொன்றில்.) அன்றும் காலை 6 மணி அளவில் படுத்து மறுநாள் மதியம் எழுந்தபோது. அவர் போய்விட்டதாக கூறினார்கள்.

அதன்பின் காலக்குறியுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். கதைகளும் வந்ததாக நினைவு. மிக நீண்ட நாள் கழித்தே எனக்கு தெரியும் அவர் இறந்துபோனது. அய்யனார் பதிவில்தான் தேதியைப் பார்க்கிறேன். அய்யனார் எழுதுகிறார் "மே 10,2003 ல் தன் இறுதி சடங்கிற்கான பணத்தைக்கூட சேர்த்து வைத்துக் கொள்ள முடியாமல் / தன் குடும்பத்தினருக்கு தந்திடாமல் இறந்துபோன தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாளன் கோபி கிருஷ்ணன்." புதுமைப்பித்தன் ஒரு கதையில் எழுதுவார் எழுத்தாளனைப் பட்டினிப்போட்டு கொன்ற தேசமல்லவா என்று. அது புதுமை பித்தன் பாரதிபோல கோபிக்கும் பொறுந்தும்.

மேலம் அய்யனார் எழதுகிறார் "கோபி கிருஷ்ணனின் வாழ்வையும் எழுத்தையும் தனித்தனியே பார்க்க முடியவில்லை வாழ்வே எழுத்தாகவும் எழுத்தே வாழ்வாகவும் கொண்ட சொற்பமான மனிதர்களுள் கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்.அதிகமான மனவழுத்தம் காரணமாக பலமுறை தற்கொலைக்கு முயன்றவர்.தொடர்ந்து சாப்பிட்டு வந்த உளநல மருந்துகள் ஏற்படுத்திய பலகீனம் காரணமாக் நோய்மையுற்று இறந்தார்.ஆத்மாநாமினுடையது போன்ற வெளிப்படையான தற்கொலை இல்லையெனினும் இதுவும் ஒருவித மறைமுக தற்கொலையாகவே அவரது நெருக்கமானவர்களால் சொல்லப்படுகிறது." இந்த வரிகள் அவர் குறித்த ஒரு சரியான மதிப்பீட்டை வழங்குகிறது. ஆத்மநாம் தற்கொலை செய்து கொண்டபோது ஏற்பட்ட மன உளைச்சலை தந்தது கோபியின் இறப்பு செய்தியும். கலைஞர்களை கொல்லும் இந்த சமூகத்தின் கொடூரம் மிகப் பயங்கரமானது.
இறுதியாக அய்யனார் எழுதுகிறார் "பிரதியூடான வாசிப்புகளை புதுமைப்பித்தன் வரை நிகழ்த்திக் காட்டிய மார்க்ஸ் உள்ளிட்ட அறிவுஜீவிகள் கோபி கிருஷ்ணனை எப்படி அனுகுகிறார்கள் எனத் தெரியவில்லை." இவ்வாசகம் கொஞ்சம் அதிகப்படி என்று நினைக்கிறேன். மார்க்ஸ் புதுமைபித்தன் குறித்து எதிர்மறையான அனுகுமுறையைக் கொண்டவர் அல்லது அவரது வாசிப்பு அரசியல் சார்ந்த வாசிப்பு என்பது ஏற்கனவே பேசப்பட்ட ஒன்றுதான். உங்களைப்போல எனக்கும் தெரியவில்லை அவர் கோபி குறித்த என்ன எழுதியிருக்கிறார் என்று.

கோபி கிருஷ்ணனின் படைப்புலகம் நமக்கு காட்டும் மனித மனத்தின் நுன்னுணர்வுச் செயல்பாடுகள் மனம் குறித்த புதிய உளவியல் உண்மைகளைத் தரக்கூடியவை. வாழ்வின் அவலச்சுவை என்பதையே இலக்கியமாக்கிய ஒரு உன்னத படைப்பாளி அவர். நாயை மையமாக வைத்து அவர் எழுதிய கதை ஒன்றில். மிருகங்களுடன் மனிதமனம் கொள்ளும் உறவு துவங்கி பேய்பிடித்தல் போன்ற உளவியல் மன அழுத்தங்கள் மற்றம் அலுவலர்களின் உளச் செயல்பாடு உளவியலின் பாதுகாப்பு செயலியக்கம் (defence mechanism) பற்றிய கதையாடல் என எவ்வளவோ உளவியல் கூறுகளைப் பேசிய கதைக்களம் அவருடையது. நவீன சமூகத்தை நரம்ப நோய்கொண்ட சமூகம் என்று வர்ணித்த பிராய்டின் வாசகங்களே நினைவிற்கு வருகிறது. தமிழில் நாங்கள் எல்லாம் ஒழுங்கானவர்கள் என்று கூறிக்கொண்டு மனநோயாளிகளை மருத்துவ மனைகளிலும், படைப்புத் துறைகளிலும் வைத்து விளிம்பிற்கு தள்ளியிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் நரம்பு நோயை தனது தனிமையான மரணத்தின் மூலமும் ஒரு உடல்சார்ந்த எதிர்ப்பாக வெளிப்படுத்தியவர்தான் கோபி கிருஷ்ணன் என்றால் மிகையாகாது.
-ஜமாலன்
(20-11-2007 காலை 10:30)

17 comments:

Ayyanar Viswanath சொன்னது…

ஜமாலன்

அதிகம் பேசப்படதவைகளைப் பற்றிய பேசும் ஆவலின் நீட்டிப்புதான் கோபி கிருஷ்ணன்.. அது சுந்தர் டிசே போன்ற சொற்பமான நபர்களோடு மட்டுமில்லமல் ஜமாலன் வரை நீண்டிருப்பது மகிழ்வைத் தருகிறது..

கோபி கிருஷ்ணனைப் பற்றிய தகவலாகத்தான் அக்கட்டுரை இருந்தது..உங்களின் இந்த பகிர்வுகள் மேலும் அக்கதையாடல்களுக்கு வலிமை சேர்க்கிறது.அடுத்த வாரத்தில் கோபி கிருஷ்ணனின் படைப்புகளைப் பற்றி விரிவாய் எழுதும் திட்டமுமிருக்கிறது...

பேசப்படாதவைகளை தொடர்ந்து பேசுவோம்..நன்றி..

ஜமாலன் சொன்னது…

//சுந்தர் டிசே போன்ற சொற்பமான நபர்களோடு மட்டுமில்லமல் ஜமாலன் வரை நீண்டிருப்பது மகிழ்வைத் தருகிறது//

முடிவே பன்னீட்டீங்களா?

//அடுத்த வாரத்தில் கோபி கிருஷ்ணனின் படைப்புகளைப் பற்றி விரிவாய் எழுதும் திட்டமுமிருக்கிறது//

காத்திருக்கிறேன். நன்றி.

மஞ்சூர் ராசா சொன்னது…

கோபிகிருஷ்ணனின் கதைகளைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இதுவரை படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நேற்று முத்தமிழ் குழுமத்தில் அய்யனார் எழுதிய கட்டுரையை படித்து அவர் பதிவில் மேலும் விவரம் இருக்கும் என அங்கு சென்றுபார்த்து அதன் மூலம் உங்களது பதிவையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்களும் நண்பர் அய்யனாரும் விவரித்திருப்பதை படிக்கையில் நான் இவரை எவ்வாறு தவறவிட்டேன் என யோசிக்கிறேன். விரைவில் இவரது படைப்புகளை வாங்கி படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்.

நீங்கள் சொல்வது போல இலக்கியவாதிகளின் மறுப்பக்கம் எப்பொழுதும் கொடுமையான ஒரு உலகை சார்ந்ததாகத்தான் இருக்கிறது போலும்.

சமீபத்தில் சென்னையில் ஒரு எழுத்தாளரை பார்க்கும் போதும் அவரது குடும்ப வாழ்க்கையை பற்றி தெரிந்துக்கொண்டபோதும் புதுமைப்பித்தன் எழுதியது தான் நினைவுக்கு வந்தது.

ஜமாலன் சொன்னது…

வாங்க மஞ்சூர் ராசா

//நேற்று முத்தமிழ் குழுமத்தில் அய்யனார் எழுதிய கட்டுரையை படித்து அவர் பதிவில் மேலும் விவரம் இருக்கும் என அங்கு சென்றுபார்த்து அதன் மூலம் உங்களது பதிவையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.//

முத்தமிழ்குழுமம் பற்றிய விபரங்கள் அல்லது இணைப்புச் சுட்டிகள் தரமுடியுமா?

பின்ணோட்டத்திற்கு நன்றி.

மஞ்சூர் ராசா சொன்னது…

http://groups.google.com/group/muththamiz

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நீங்கள் சொல்லியிருப்பது போல் உளவியல் சிக்கல்களை கோபி அளவிற்கு தமிழில் எழுதியவர்கள் யாருமில்லை.

பிறந்த நாளன்று கோயில் சென்று வந்த குறுநாவல், மகளின் பள்ளிக்கூட விழாவிற்குச் சென்று வந்த கதை, தூயோனில் உள்ள தன்னைவிட மிகவும் வயது சிறியவளான பெண்ணுடன் ஏற்படும் உணர்வுகள், (வண்ணநிலவனின் பெண் பாத்திரங்கள் போல கோபியின் கதைகளிலும் பெண் பாத்திரங்கள் விசேஷமானவர்கள்) டேபிள் டென்னிஸ், இடாகினி... யோசித்துப் பார்க்கும்போது அவரது எழுத்துக்கள் ஒவ்வொன்றாக மனதில் அலை மோதுகின்றன.

ஜாலகுமாரன்களைக் கொண்டாடும் ஒரு சமூகத்திற்கு கோபியை நெருங்க முடியாமல் போனதில் வியப்பொன்றுமில்லை.

அய்யனார் மற்றும் உங்கள் பதிவுகள் கோபியின் எழுத்துக்களைப் பற்றிய நினைவுகளைக் கிளறிவிட்டன. நன்றி...

ஜமாலன் சொன்னது…

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

வாங்க சுந்தர்..

//ஜாலகுமாரன்களைக் கொண்டாடும் ஒரு சமூகத்திற்கு கோபியை நெருங்க முடியாமல் போனதில் வியப்பொன்றுமில்லை.//

என்னங்க ஜாலக்குமாரனின் ஜலக்கீரீடங்களில் மனம்பறிக் கொடுத்த கூட்டம் ஒன்று இன்றும் இருக்கிறது. புதிய பதிவெல்லாம் போட்டு ஜாலம் தமிழ்மணத்திலும் மணக்கிறது. ஜாக்கிரதை.

நன்றி.

RATHNESH சொன்னது…

உங்களுடைய பதிவு, கோபி கிருஷ்ணன் குறித்த ஆர்வத்தை வெகுவாகவே தூண்டி இருக்கிறது. எப்படி என் பார்வை இவ்வளவு அற்புதமான எழுத்தாளரைத் தவற விட்டது என்கிற ஆதங்கம் எழுகிறது. அடுத்த தமிழக விஜயத்தின் போது இவருடைய படைப்புகளின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

ஜமாலன் சொன்னது…

RATHNESH said...

//உங்களுடைய பதிவு, கோபி கிருஷ்ணன் குறித்த ஆர்வத்தை வெகுவாகவே தூண்டி இருக்கிறது.//

நன்றி.

//எப்படி என் பார்வை இவ்வளவு அற்புதமான எழுத்தாளரைத் தவற விட்டது என்கிற ஆதங்கம் எழுகிறது.//

பரவலாக கோபி பற்றி அதிகம் சிறுபத்திரிக்கைகள்கூட பேசுவதில்லை. அதான் காரணம்.

பெயரில்லா சொன்னது…

after his death there were some articles on his life and works in
Thinnai.See them also.

ஜமாலன் சொன்னது…

Anonymous said...

//after his death there were some articles on his life and works in
Thinnai.See them also.//

thanks and we need link if possible please....

பெயரில்லா சொன்னது…

some links (for post in your other blog)
http://www.aesthetics-online.org/ideas/freeland.html
http://www.imprint.co.uk/jcs/
http://www.bbc.co.uk/radio4/reith2003/
http://mixingmemory.blogspot.com/2005/01/cognitive-science-of-art-ramachandrans.html
http://ocw.mit.edu/OcwWeb/Science--Technology--and-Society/STS-066Brains-and-Culture--Love--Lies---NeurotransmittersFall2002/Calendar/

See also the works of Jospeh Dumit
(do a google search for Dumit and MIT)
Let me stop as these will give you enough food for thought.
Finally there is Ken Wilber who tries to integrate so many fields
in his works. Do a google search
and you will find lot of info. on his works

பெயரில்லா சொன்னது…

http://www.mindhacks.com/blog/2006/06/cognitive_science_po.html

Do a search in Thinnai for Gopi krishnan.You can do an unicode search in Thinnai.

தமிழ்நதி சொன்னது…

'பேசப்படாதவைகளைப் பேசும் எவரும் பேசப்படுவார்கள்'என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். கோபி கிருஷ்ணனைப் படிக்கும் ஆவலைத் தங்கள் கட்டுரை தந்திருக்கிறது நன்றி.

ஜமாலன் சொன்னது…

வாங்க தமீழ்நதி

நன்றி.

Vassan சொன்னது…

" Firefox'' - l padikka mudiya villai

ஜமாலன் சொன்னது…

வாங்க வாசன் நன்றி.

நான் Fairfox பயன்படுத்தியதில்லை. ஒரு சோதணை முயற்சியாக windows xp or vista ல் செய்து பார்த்துவிட்டு இதன் தொழில்நுட்ப பிரச்சனையை தீர்க்க முயல்வோம். fairfox is more compatible xp than linux. இது குறித்து தொழில்நுட்பம் தெரிந்த நண்பர்கள் உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஜமாலன். Blogger இயக்குவது.