பின்நவீனத்துவம் எனும்... பகுதி-3

நண்பர் மாயனுக்கு,
உங்கள் தொடர் விவாதத்திற்கு நன்றி.
முதலில் ஒரு தன்னிலை விளக்கம்.

1. நான் பின்நவீனத்தவத்தின் பிராண்ட மானேஜர் இல்லை. இதை நான் ஜாலிஜம்பரின் பின்னோட்ட முதல் வாக்கியத்திலேயே விளக்கிவிட்டேன். விவாதம் எனது புரிதலை ஒழுங்கு படுத்திக் கொள்ளவும்தான். இதன்பொருள், பதுங்கலோ அல்லது பின்வாங்குதலோ அல்ல.
2. நான் மார்கிசியத்தை நம்புபவன். எனது நோக்கம் பின்நவீனத்தவத்துடன் ஒரு ஆரோக்கியமான உரையாடலை நடத்துவதுதான். அதன்பொருட்டு அதனை வாசிப்பவன்.
3. பின்நவீனத்துவத்தைவிட எனது வாசிப்பின் மையம் பின் அமைப்பியல்தான்.ஆணால், பின் அமைப்பியல் இல்லாமல் பின்நவீனத்தவம் இல்லை. பின்நவீனத்தவம் இன்றி பின் அமைப்பியல் தனித்து செயல்படக்கூடியது. (விசுவின் வசனம்போல் இருக்கா?)
4. பின்நவீனத்தவம் ஒரு கோட்பாடு அல்ல, அது ஓரு ஆய்வுமுறையும் அல்ல. கூறியதுகூறல் என்றாலும், அது ஒரு சமூகம் அல்லது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல்.

இப்பொழுது துவங்கிய பிரச்சனைக்கு வருவோம்.

உங்களது அடிப்படையான கேள்விக்கு எனது பதிவில் விரிவான விளக்கம் இருக்கிறது. இருப்பினும்... உங்கள் சமாதானத்திற்காக..

//அமைப்பியல் வாதம், பின் நவீனத்துவம் இதையெல்லாம் எந்த Stream-ல சேர்க்கணும்? தத்துவவியலா? மொழியியலா? அறிவியலா?//

அமைப்பியல்வாதம் ஒரு ஆய்வுமுறை. அது எல்லாவற்றையும் ஆய்வதற்கான அடிப்படைகளை பேசுகிறது. அது தத்துவமோ? மொழியியலொ? அல்லது அறிவியலோ அல்ல. இது விவாதத்திற்கு அப்பாற்பட்டதால் அதனை விடுவோம்.

பின்நவீனத்தவம் என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். செவ்வியல் காலம், நவின காலம் போன்றவற்றை எந்த வகையில் சேர்ப்பீர்களோ அந்த வகைதான் பின்நவீனத்தவமும். நவீனத்துவம் என்றால் என்ன என்பது புரிந்தால்தான் பின்நவீனத்தவம் எங்கு இதனை உடைக்கிறது என்பது புரியும். அதைதான் மனிதமுதல்வாதம் குறித்த எனது குறிப்பு விளக்குகிறது.

நவீனத்தவத்தின் சிந்தனையை 5 வகையாக பிரிக்கலாம். 1. Humanism 2. Individualism 3. Rationalism 4. Secular Moralism 5. Progressive History or progress.

இந்த 5-ற்குள் எல்லாவித கோட்பாடுகள் இஸங்கள் நடைமுறைகளை அடக்கிவிடலாம். இந்த 5-யும் பின்நவீனத்துவம் மறுத்து,இதன் மையமாக உள்ள மனிதமுதல்வாதத்தை சிதைக்கிறது. மனிதனின் மையமான ஆத்மா அல்லது self என்கிற ஒன்றை தன்னிலை என்பதாகவும் அதன் உருவாக்கம் அதன் மையமற்ற தன்மை என்பதாக விளக்கிச் செல்கிறது. பின்நவினத்தவம் பின்அமைப்பியலின் பல்துதுறைச்சார்ந்த அறிதல்களைக் கொண்டது. அதனை விளக்கப் புகுவது என்பது ஒரு தனித் திட்டமாகும் (a seperate project) அதனை விடுகிறேன்.

//எனக்கு தெரிஞ்சு எழுத்தாளர்கள் மட்டும் தான் ஓவரா பின் நவீனத்துவத்தை பிடிச்சுக்கிட்டு தொங்கறாங்க...
ஏன் நவீனம்ன் என்கிற வார்த்தைக்கு நாவல்னு ஒரு அர்த்தம் இருக்கிறதாலய?..//

எழுத்தாளர்கள் என்ற யாரைக் கூறுகிறீர்கள். படைப்பாளிகளையா அல்லது பிற துறைச் சார்ந்த எழுத்தாளர்களையா? (விமர்சனம் துவங்கி பதிவுலகில் எழுதுபவர்வரை எழுத்தாளர்தான். எழுத்தை ஆள்பவர்கள் எல்லோரும்.) தொங்குறதுக்கு அது ஒன்னும் பார் இல்ல. புணிதமறைகள் துவங்கி சரோஜா தேவிவரை எல்லாம் மொழியால் எழுதப்படுவதுதான். எழுதாத தத்துவஞானியை காட்டமுடியுமா? எழுத்து என்பது பேச்சு என்கிற ஒலிமையவாதத்திலிருந்து விடுபட்டதுதான். உதாரணமாக ஒரு தத்தவஞானி பேசுவதை அல்லது பேசியதை பிறிதொருவர் எழுதி தொகுப்பதாகக் கொள்வோம். அப்படி தொகுக்கும்போது.. அவர் பேசியதை அப்படியே தொகுக்க முடியாது. காரணம், பேசும் தன்னிலை வேறு, எழுதும் தன்னிலை வேறு. எழுதும் தன்னிலையானது அதன் வரலாற்றுச் சூழலில் அது புரிந்து கொண்டவிதமாகவே அதனை எழுதும். அல்லது அதை வாசிக்கும் தன்னிலை தனது வரலாற்றுச்சூழலில் தான் புரிந்துகொண்டவிதமாகவே அதனை அர்ததப்படுத்தும். பேச்சு உடனடித்தன்மை வாய்ந்ததது. எழுத்து வலராற்றின் இயக்கத்தைக் கொண்டது. உதாரணமாக இராமயணம். விசாயரின் ராமாயணத்தை நாம் வாசிப்பதில்லை. தற்கால மொழிக்குள் உள்ள அர்த்தமாக்கம் அமைப்பில்தான் அதனை வாசிக்கிறோம். இராமயணப் பிரதியை நமக்கானதாக நாம் உருவாக்கிக் கொள்கிறோம்.

எழுத்தாளர்கள்தான் இதைப்பிடித்து தொங்க முடியும். வேற யார் தொங்க வேண்டும் என்று எதிர்பார்க்கறீர்கள்? எல்லா மக்களுக்கும் புரியவேண்டும் என்பது ஒரு மாயையைதான். மக்கள் செயலூக்கமிக்கவர்கள் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆணால், தத்துவம் அவர்களை சென்றடைய வேண்டும். அது வகுப்புகள்மூலம் கோடிக்கான மக்களுக்கு புரியவைப்பதால் நடைபெறுவதி்ல்லை. பேச்சு வழக்கில் உருவாகும் பொதுபுத்தி வழியாகவே அல்லது மொழியின் வழியாகவே சென்றடையும். அவர்களது வாழ்தளத்தில் ஏற்படும் நெருக்கடிகள் அவற்றை மெயப்பிக்கும். இதைதான் மார்க்ஸ் தத்துவம் மக்களை சென்றடைந்தால் பெளதீக சக்தியாக உருவெடுக்கிறது என்றார். ஆக, முன்னனிகள்தான் (frontiers) மக்களை வழிநடத்த முடியும்.

//கோட்பாடுகள், கோட்பாடுகளை தகர்க்கும், கேள்விக்கு உட்படுத்தும், தகர்ப்பமைப்பு.. இவற்றை விளக்கி கொண்டிருக்கும் போதே, பாலின கட்டுமானம், பாலியல் கட்டுமானம், மனிதமுதல்வாதம், மொழி பற்றி விளக்க ஆரம்பித்து விட்டீர்கள்...எல்லாம் தனி தனியாக புரிகிறது... இவையெல்லாம் இணைந்து எப்படி ஒரு பின் நவீனத்துவ சூழலுக்கு நம்மை இட்டு செல்கினறன என்பதை தான் புரிந்து கொள்ள விழைகிறேன்.//

தகர்ப்பமைப்பிற்கான உதாரணமாகவே பாலினம், பாலியல் பற்றி விளக்கினேன். எளிமையாக சொல்வதென்றால்.. இயல்பாக உள்ளதாக நம்பப்படும் எந்த ஒன்றும் இயல்பானது அல்ல என்பதுதான். உதாரணமாக பாலினம் (gendar) என்பது ஒரு மொழியியல் கட்டுமானம் என்பதையே விளக்கியுள்ளேன். மொழிகுறித்த வாசிப்பே இவற்றை முழுமையாக புரிந்தகொள்ள உதவும். மொழயில்லாமல் இந்த உலகை நீங்கள் புரிந்துகொள்ள வேறு ஏதெனும் வழி இருக்கிறதா? என்பதை யோசியுங்கள். மொழிக்குள் வராத எந்த பொருளையும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. பார்க்காத ஒன்றை எப்படி கற்பனை செய்ய முடியாதோ? அப்படித்தான் மொழியில் இல்லாத ஒன்றைப்பற்றி உங்களால் சிந்திக்கவோ பேசவோ முடியாது. உலகின் இருப்பிற்கு மொழி அவசியம். இந்த மொழியை புரிந்து கொள்ள இலக்கணம் அவசியம். இலக்கணம் மொழி குறித்த ஒரு ஒழுங்கமைவு. ஆகவே இந்த உலகமும் ஒரு ஒழுங்கமைப்பாக நமக்கு தெரிகிறது. இலக்கணம் தெரியாத பாமர மனிதனும் வாக்கிய அமைப்பை இலக்கண முறைப்படி பேசாவிட்டால் அவனை மனப்பிறழ்ச்சியாளனாகவே இசச்சமூகம் கருதும். விளக்கம் போதுமானது என்று நினைக்கிறேன். (தொல்காப்பியம் குறித்து எனது கட்டுரை ஒன்றில் இதனை விளக்கியுள்ளேன். அது எனது மொழியும் நிலமும் என்கிற நூலில் உள்ளது. காலக்குறியிலும் வெளிவந்துள்ளது. படிப்பதற்கு ஆர்வம் இருந்தால் மின் அஞ்சலை தாருங்கள் PDF-ல் அனுப்பி வைக்கிறேன்.)

//காலம் செல்ல செல்ல இன்றைய பின் நவீனம் - கோட்பாடு(நீங்கள் சொல்லும் புரிதலில்) என்ற அளவில், மக்களின் இயல்பாக கொள்ளப்பட்டு கேள்விக்கு உட்படுத்தப்பட்டு தகர்ப்பமைப்பு ஆய்வுக்கு உட்ப்படுத்தப்படும்... Chain Reaction...//

படலாம். தற்சமயம் பின்நவினத்துவம் செத்துவிட்டதாக அறிவிப்புகளும் நூட்களும் வருகின்றன. உருவான சிந்தனை எதுவும் சாவதி்ல்லை. தவிரவும், பின்நவீனத்தவம் சாவதில் நமக்கு ஒன்றும் பெரிய இழப்பொ பாலூற்றி 16 கொண்டாடும் நிலையோ இல்லை. ஆணால், இப்படி கூறுபவர்கள் எதனை நிரூபிக்க முயலுகிறார்கள் என்பதுதான் முக்கியம். அதற்கான அரசியல்தான் பிரச்சனைக்குரியது. விவாதத்திற்கு வெளியே போகவேண்டாம்.

பின் அமைப்பியலை(பின்நவீனத்தவ கோட்பாடு என்கிற அர்தத்தில்) தாண்டிச் செல்லக்கூடிய தெல்லஸ்-கொத்தாரி என்கிற இரு பிரஞ்சு சிந்தனையாளர்களின் கொட்பாடுகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மொழியின் அடிப்படையான உருவக அமைப்புகளையே மாற்றி, அடுத்த தளத்திற்கு எடுத்த செல்கிறார்கள். ஆக, நமது சூழலில் நாம் இன்னும் இந்த விவாத தளத்தைவிட்டு இன்னும் நகரவில்லை. காரணம், இவை புரிந்தால்தான் அடுத்த கட்ட சிந்தனைகளும் புரியும்.

//இப்போதுள்ள உலகமயமாக்கலின் வீச்சு இல்லாவிட்டாலும் சிறு சிறு சமுதாயதுக்குள் சிறிய அளவில், கட்டுடைப்புகள், பின் அமைப்பியல் அலசல்கள் இருந்தே இருக்க வேண்டும்...
பின் நவீனத்துவம் எங்களுக்கு சொந்தமானது என்று 1968-க்கு பிறகு வந்த நாம் எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?.....//

நண்பரே.. மிண்டும் மீண்டும் பழைய கேள்விகளையே மாற்றி மாற்றி கேட்கிறீர்கள். பின்நவீனத்தவம் ஒரு அலசல்முறை அல்ல. இரண்டாம் உலக்பபோருக்கு பிந்தைய சமூகமே பின்நவீனத்துவ சமூகமாக வரையறுக்கப்படுகிறது.

பிரடரிக் ஜேம்ஸனின் சில கருத்துக்களை விளக்குகிறேன். முதலாளித்தவத்தின் ஒரு குறிப்பிட்ட வகையான பண்பாட்டு உருவாக்கமே நவீனத்தவம் மற்றம் பின்நவீனத்தவம் என்பது. இங்கு மார்க்சீயம் முன்வைக்கும் சமூகம் என்கிற கட்டமைப்பு பற்றிய புரிதல் அவசியம். சமூகம் என்பது பொருளியல் அடித்தளம் மற்றம் பண்பாடு உள்ளிட்ட இதர அமைப்புகளைக் கொண்ட மேற்கட்டுமானம் என்கிற அமைப்பைக் கொண்டது. அதாவது பொருளியல் அடித்தளத்தின் மேல்தான் எந்த ஒருபண்பாட்டு அமைப்பும் நிற்கமுடியும். அல்லது பண்பாட்டு அமைப்பு என்பது பொருளியல் அடித்தளத்தால்தான் உருவாக்கப்படுகிறது. முதலாளியம் 3 முக்கிய கட்டங்களில் தனது குறிப்பான பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டது. 1. சந்தை முதலாளியம் (market capitalism) - 18 துவங்கி 19-ஆம் நூற்றாண்டு இறுதிவரை - இக்காலகட்டத்தில் உருவான தொழில் நுட்பங்கள் அதாவது நீராவி எஞ்சின் போன்ற எந்திரங்கள் அதற்கான அழகியலாக உருவாக்கிக் கொண்டதே யதார்த்தவாதம். 2. எதேச்சதிகார முதலாளியம் (monopoly capitaliam)-இது 19-ஆம் நூற்றாண்டின் இறதியிலிருந்து இரண்டாம் உலகப்போர்வரை- இது மின் ஆற்றல் சார்ந்த தொழிற்நுட்பச் சாதனங்களை உருவாக்கியது. இது நவீனகாலம் என்கிற modernism காலமாகும். 3. பண்ணாட்டு அல்லது நுகர்வு முதலாளியம் (multinational or consumer capitalism) - இது தற்காலம். இது மின்னணுவியல் மற்றும் உட்கருவியல் (eloctronics and nuclear technology) சார்ந்த தொழில்நுட்ப காலகட்டம். இதுவே பி்ன்நவீனத்துவ காலம்.
//---கட்டுடைத்தல் என்பது ஒரு தனி கூறு, பின்னவினத்துவம் என்பது தனிக்கூறு கட்டுடைப்பது தான் பின்னவினதுவம் என்று நம்பும் மக்கள் இருக்கும் இங்கே எப்படி உண்மையான பின் நவினத்துவம் வரும்?---//

இது முற்றிலும் சரியே. பின்நவினத்தவம் மொத்தத்துவ (totality) சிந்தனைகளை மறுக்கிறது. ஒழுங்கமைப்புகளை மறுக்கிறது. உலகம் முழுவதற்குமான சிந்தனைகளை மொத்தத்துவத்தை கொண்ட எல்லாவற்றையும் பெருங்கதையாடல் என்றும், அதற்கு பதிலாக சிறுகதையாடல்களை அதாவது small practice, local events ஆகியவற்றைக் கொண்டதாக கட்டமைக்க வேண்டும் என்கிறது. இவை விவாதத்திற்கு உரியவை. இதனை நாவல் சிறுகதை என்கிற பெரிய சிறிய என்கிற அளவடிப்படையில் புரிந்தகொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
//வவ்வாலார் ஜாலி ஜம்பரின் பதிவில் கூறிய அதே குழப்பம் தான் எனக்கும்...
தகர்ப்பமைப்பிற்கும், பின் நவீனத்துவத்திற்கும் உள்ள நேரடி தொடர்பு என்ன... அல்லது ஒன்றினால் ஒன்று ஆக்க படுகிறதா? ஆமாம் என்றால் எந்த ஒன்றினால் எந்த ஒன்று ஆக்க படுகிறது?...//

இது புரிதல் குழப்பமே தவிர வேறு இல்லை. உதாரணமாக, மனிதனின் மையமாக ஆத்மா என்பதை இதுவரையிலான தத்துவங்கள் சொல்லி வந்துள்ளன. தகர்ப்பமைப்பு இந்த சொல்லாடலின் முரணை முன் கொண்டு வருகிறது. அதாவது, ஆத்மா என்பது உடலை ஒடுக்கி உள்ளிருத்துகிறது. அல்லது ஆத்மா பற்றிய பேச்சு உடல்பற்றிய பேச்சை மறுத்ததே உருவாகுகிறது. தனது தீவிர தர்க்கத்தால் இம்முரணை தலைகீழாக்கி ஆத்மா என்பதை உடல் பற்றிய பேச்சின் மூலம் தகர்க்கிறது. இப்படியாக, மனிதனின் மையமாக கருதிவந்த ஆத்மா சிதைக்கப்படுகிறது. இவ்வாறு மையம் அழக்கப்பட்ட மனித நிலையே பின்நவினத்தவநிலையாக முன்வைக்கப்படுகிறது.


//முற்றும் துறந்தவன் என்றுயாருமே கிடையாது....முற்றும் துறந்தவன் என்றுசொல்லி கொள்ளும் முனிவன் கூடமுக்தி மேல் மோகம் கொண்டிருப்பான்..//

இதைதான் புத்தரை உதாரணம் காட்டி சின்னப்புள்ளத்தனமால இருக்கு என்ற எழுதியிருந்தேன். விடமாட்டிங்க போலிருக்கு. இதில் வரும் முக்தி என்பதை பின்நவீனத்தவ வார்த்தையில் கூறினால் பெருங்கதையாடல் என்பது இதுதாதன். கணந்தோறும் வாழ்வதே பின் நவீனத்தவம். இப்படி முக்தி என்று முற்றம் துறந்து (சொர்ணமாலிகா துவங்கி கோவில் பூட்டுவரை துறப்பதல்ல) இறதிநாளிற்காக வாழ்வதல்ல.

//Pseudo-Post Modernism பற்றி கூறிய வவ்வாலாரை சீரியசான ஆள் என்று சுகுணா திவாகர் கூறினாரே?அது கூட ஒரு சமுதாய அமைப்பியல் உருவாக்கிய கூற்று..பிரதி.. அதையும் கட்டவிழ்க்கும் முறையில் மையமற்றதாக செய்து புதிய ஒழுங்கை முன் வைத்தால் நானும் பின் நவீனத்துவ சூழலுக்கு வந்து விட்டேன் என்று அர்த்தமா?//

இந்த ஆட்டத்திற்கு நான் வரல. போலியான பின்நவீனத்தவம் என்று கூறும் வவ்வாலார் (அது என்னா சார் வள்ளலார் மாதிரி) சரியான பின்நவீனத்தவத்தை விவரிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பின்நவீனத்துவ பிணம் இதுதான் எனக்காட்டுவது சரியா? எனத் தெரியவில்லை.

"வித்தியாசம் அதிகமில்லை
நான் கவிதை எழுதுகிறேன்.
என்மகன் -
தீப்பெட்டி சேகரிக்கறான்."
- விகரமாதித்யன்.

மாயன்சார் அப்படி என்ன ஆர்வம் என்னை வம்பில் மாட்டிவிட...
-ஜமாலன் (17-10-2007 மதியம் 12:09 சவுதி நேரம்.

12 comments:

ஜமாலன் சொன்னது…

தொடர்ச்சியான விவாதத்திற்கு நன்றி.

மாயன் சொன்னது…

ஜமாலன் சார்.. முதலில் உங்கள் பொறுமைக்கும், நேரத்துக்கும் என் நன்றிகள் பல...

நிறைய ஹோம் ஒர்க் பண்ணி தான் விவாத விஷயங்களை எடுத்து வைக்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது.. கேள்வி கேட்பவர் நிலையை விட பதில சொல்பவர் நிலை கடினமானது என்பதை மனதில் கொண்டு தொடர்கிறேன்...

//நான் பின்நவீனத்தவத்தின் பிராண்ட மானேஜர் இல்லை.//

நானும் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்யலாம் என்று கூகிளை சுற்றி வந்ததில் ஒன்று மட்டும் புரிந்தது.. பலர் பிராண்டு ஓனர் போல பேசும் போது நீங்கள், சுகுணா எல்லாம் பிராண்டு மேனேஜர் போல பேசினாலும் தப்பில்லை என்றே படுகிறது...
:-)

பின்நவீனத்தவம் என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல்..

பின்-அமைப்பியல் என்ற ஆய்வுமுறையை அடிப்படையாக கொண்டு பின் நவீனத்துவ சூழல் அமைகிறது...

நவீனத்துவத்தின் சிந்தனைகளை பின் நவீன்த்துவம் மறுக்கிறது... OK..

எந்த ஒரு அமைப்பிலும் மையத்தை சிதைப்பது தகர்ப்பமைப்பு முறை.. அவ்வாறு தகர்ப்பமைப்பு மூலம் மையமிழக்க செய்யப்பட்ட நிலை பின் நவீனத்துவ நிலை...

லக்கி... அடிவானத்துல எங்கயோ ஒரு கீத்து தெரியறாப்பல இருக்கு... செக் பண்ணி சொல்லுங்க... ரொம்ப வருத்தப்பட்டீங்களே?

//எழுத்தாளர்கள்தான் இதைப்பிடித்து தொங்க முடியும். வேற யார் தொங்க வேண்டும் என்று எதிர்பார்க்கறீர்கள்?//

பின் நவீனத்துவ சூழல் எழுத்தாளர்களுக்கு மட்டும் தானா?.. எழுத்து எனப்படும் கலை வடிவத்திற்கு மட்டும் தான் பின் நவீனத்துவ சிந்தனைகள் சொந்தமா.. நான் கேட்க வந்தது இதை தான்...

நான் பொதுப்படையாக கேட்டதினால் தவறான அர்த்தம் ஏற்பட்டு விட்டது...

//பேச்சு வழக்கில் உருவாகும் பொதுபுத்தி வழியாகவே அல்லது மொழியின் வழியாகவே சென்றடையும்.//

இதை எனது முந்தைய பதிவுகளில் நான் கூறியிருக்கிறேன் ஜமாலன் சார்...(அது இந்த புரியாத இசங்களை சாடுவதற்காக என்பது வேறுபுறம்)....

ஒரு பின் நவீனத்துவ சூழல் என்பதை புரிந்து கொள்ளவே இத்தனை விவாதங்கள் தேவைப்படும் என்றால்.. பேச்சு வழக்கில் உருவாக்கும் பொது புத்தி வழியாக இது மக்களை சென்றடைவது எப்படி.. சரி தலைப்புக்கு சம்மந்தம் இல்லாத கேள்வி...

ஏனோ என் விவாதம் மற்றும் கேள்விகள் ஆழம் குறைந்ததாக எனக்கே தோன்றுவதால், நீங்கள் இன்று குறிப்பிட்டிருக்கும் விடயங்களை மேலும் கருத்தூன்றி படித்து நாளை சில கேள்விகளோடு வருகிறேன்..

//அது என்னா சார் வள்ளலார் மாதிரி)//

ஏன் ஆற்காட்டார்.. நாவலர்.. வாஞ்சியார்.. வளசையார்.. என்றெல்லாம் இருக்கும் போது.. வவ்வாலார் இருக்க கூடாதா?

//…… பற்றி கூறிய வவ்வாலாரை சீரியசான ஆள் என்று சுகுணா திவாகர் கூறினாரே?//

விவாததுக்காக தான் கேட்டேன்.. ஒருவர் சீரியசான ஆளா இல்லையா என்பதை அவர் பேசும் விடயங்களை வைத்து மக்கள் முடிவு செய்வது என்பதும் மனிதமுதல்வாதம், மொழியினால் உண்டாக்கப்பட்ட கட்டுமானம் போன்ற விஷயங்களோடு தொடர்புடையதா என்று கேட்கிறேன்... வம்பெல்லாம் செய்யவில்லை..

//இது முற்றிலும் சரியே. பின்நவினத்தவம் மொத்தத்துவ (டொடலிட்ய்) சிந்தனைகளை மறுக்கிறது. ஒழுங்கமைப்புகளை மறுக்கிறது. உலகம் முழுவதற்குமான சிந்தனைகளை மொத்தத்துவத்தை கொண்ட எல்லாவற்றையும் பெருங்கதையாடல் என்றும், அதற்கு பதிலாக சிறுகதையாடல்களை அதாவது ச்மல்ல் ப்ரக்டிகெ, லொகல் எவென்ட்ச் ஆகியவற்றைக் கொண்டதாக கட்டமைக்க வேண்டும் என்கிறது. //

//இவையெல்லாம் ஐரோப்பிய சிந்தனை என்று நீங்கள் ஜல்லியடிக்க முடியாது. காரணம், வெள்ளையர் ஆதிக்கம் அல்லது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உருவானதற்கு பிறகு உலகம் என்பது ஒரு பொதுமைப்படத்தலுக்கு வந்துவிட்டது. அதனை உலகமயமாக்கல் என்பது தீவிரப்படுத்திவிட்டது. உலகச்சிந்தனைகளின் பாதிப்புகள் இல்லாமல் எந்த ஒரு தனிமனிதனும் இல்லை. அதிலும் குறிப்பாக கணிப்பொறி யுகத்தில் அறிவு என்பது மிகச்சாதரணமாகப் பெற்றுக் கொள்ளும் ஒரு கடைவிரிப்பாக கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடையும் நிலையை அடைந்துள்ளது. அறிவின் தன்மை அதை அடையும் முறை ஆகியவை முற்றிலும் மாறியிருப்பதை நிங்கள் உணரலாம். பின்நவீனத்துவம் என்பது கனிப்பொறிக் காலக்கட்டத்தின் ஒரு கொட்பாட்டு வர்ணனை என்றுகூடக் கூறலாம்.//

இந்த கூற்றுகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது... முதலாவது உலகம் முழுவதற்குமான டோட்டாலிட்டியை பின் நவீனத்துவம் மறுப்பதாகவும், இரண்டாவதில் பின் நவீனத்துவம் உலகமயக்கலின் தாக்கத்தினால் உண்டானது என்பதாய் உள்ளது..

ஜமாலன் சொன்னது…

//நிறைய ஹோம் ஒர்க் பண்ணி தான் விவாத விஷயங்களை எடுத்து வைக்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது.. //

தற்சமயம் கைவசம் என்னிடம் எந்த நூல்களும் இல்லை. ஆணால், 1997-2000 வாக்கில் நான் படித்த குறிப்புகளிலிருந்தும், நினைவுகளிலிருந்தும் எழுதுவதால்தான்.. முன் எச்சரிக்கையாக சில எலிப்பொறி வாசகங்களை எழத வேண்டி உள்ளது. இணையத்தில் சுற்றுவதற்கு நேரமில்லை என்பதும் மற்றொரு காரணம்.

//லக்கி... அடிவானத்துல எங்கயோ ஒரு கீத்து தெரியறாப்பல இருக்கு... //

இதில் லக்கி எங்கிருந்து வந்தார்?????

//எழுத்து எனப்படும் கலை வடிவத்திற்கு மட்டும் தான் பின் நவீனத்துவ சிந்தனைகள் சொந்தமா..//

பின்நவீனத்தவம் உருவானது முதன்முதலில் பயன்பட்டது கட்டிடக்கலையில்தான். பிறகு சிற்பம், ஓவியம் என வளர்ந்து பிறகு அது கண்காட்சிகள் வழியாக மையமற்றதான சிற்ப கண்காட்சிகள், ஓவியங்கள் மூலம் பரவியது. இறதியில்தான் அதனை பின் அமைப்பியல் சிந்தனைகளுடன் இணைத்து ஒரு பின்நவீனத்தும் என்கிற சமூகநிலையாக முன்வைத்தனர்.

//புரியாத இசங்களை சாடுவதற்காக //

புரியாத இசங்கள் என்பது உங்களக்கு மட்டுமா? அல்லது உருவாக்கியவருக்குமா? மக்களுக்கு புரியாது என்று சொல்வது ஒருவித மயக்க நிலைதான் அல்லது அதிகார மணோபாவம்தான். அதாவது தன்னை எல்லா மக்களின் பிரதிநிதியாக கருதிக் கொள்ளும் போக்கு. எல்லா மக்களுக்கும் புரியுக்கூடியாதன ஒன்ற உலகில் சாத்தியமே இல்லை. இதைதான் பெருங்கதையாடல்கள் செய்கின்றன. நமது அடையாளத்தில் அல்லது நாம் யாருடைய பிரதிநிதி என்பதில் தெளிவுடன் இருந்தால், நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிவினருக்கு ஏற்படையுதா? இல்லையா? என்கிற அரசியலாக இச்சொல்லாடல் மாறும்.

//பேச்சு வழக்கில் உருவாக்கும் பொது புத்தி வழியாக இது மக்களை சென்றடைவது எப்படி.. //

இது பேசப்பட வேண்டிய ஒன்றுதான். உதாரணமாக பாட்டாளி வர்க்கம் என்கிற சொல்லாடலை எடுத்தக் கொள்வோம். இது மார்க்சியத்திற்கு முந்தைய காலங்களில் இல்லை அல்லது இன்றைய அர்த்தத்தில இருக்க வாய்ப்பில்லை. இன்று அச்சொல் ஒரு புரட்சிகர தொழிலாளி வர்க்கத்தை குறிக்கும் சொல்லாடலாக உள்ளது. பாட்டாளி என்ற சொல்லை புரிந்துகொள்ள மார்க்சியம் தெரிந்திருக்க வேண்டிய அவசிமில்லைதானே. இப்படித்தான், பெரியாரியம் உருவாக்கிய சுயமரியாதை, தன்மானம் போன்ற வார்த்தைகளும். கோட்பாடு என்பது சூத்திரங்கள் அல்ல. அவை சிந்திக்கும் ஒரு முறையியல்தான். மக்களிடம் சூத்திரங்கள் பரவ வேண்டியதில்லை. ஆணால், முறையியல் மக்களிடம் புறச்சூழலின் அழுத்தத்தால் தானகவே சென்றடையும். ஏனென்றால் மக்கள் உணர்வகளிலிருந்து வாழ்க்கையை பெறுவதில்லை. வாழ்க்கையிலிருந்துதான் உணர்வுகளை அடைகிறார்கள்.

//வவ்வாலார் இருக்க கூடாதா?//

தப்பில்லை.

//ஒருவர் சீரியசான ஆளா இல்லையா என்பதை அவர் பேசும் விடயங்களை வைத்து மக்கள் முடிவு செய்வது என்பதும் மனிதமுதல்வாதம், மொழியினால் உண்டாக்கப்பட்ட கட்டுமானம் போன்ற விஷயங்களோடு தொடர்புடையதா //

இது விவாதிக்கும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சனை இல்லை. முதலில் சீரியஸான விஷயம், சீரியஸல்லாத விஷயம் என்கிற பிரிவினை என்பது ஒருவரின் புரிதல் சார்ந்த பிரச்சனை. புரிதல் என்பது மொழிக் கட்டுமானம்தான். ஏன் சுகுணா அப்படி கூறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.
பொதுவாக எனக்கு உள்குத்தெல்லாம் கண்டுபிடிக்கும் அளவிற்கோ அல்லது ஒருவர் என்னை நக்கலடிக்கிறாறா? அல்லது சீண்டிப்பார்க்கிறாரா? போன்ற நுட்பதிட்பங்கள் எல்லாம் அறியாதவன் நான். அதனால்.. நீங்கள் என்னை வைத்து காமெடி கீமடி எதுவும் பண்ணலைய..

மேற்கண்ட வாசகங்களை வாசிக்கும்போது வரிகளுக்கு இடையிலான இடைவெளிகள் உருவாக்கும் அர்த்தங்களை தவிர்த்து விடுங்கள்.

//இந்த கூற்றுகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது... முதலாவது உலகம் முழுவதற்குமான டோட்டாலிட்டியை பின் நவீனத்துவம் மறுப்பதாகவும், இரண்டாவதில் பின் நவீனத்துவம் உலகமயக்கலின் தாக்கத்தினால் உண்டானது என்பதாய் உள்ளது//

இதில் ஒரு முரண்பாடும் இல்லை. உலகம் முழுவதற்குமான டோட்டாலிட்டி என்பது சிந்தனை அல்லது கோட்பாடு. உலகமயமாக்கலின் தாக்கத்தினால் உருவான இந்த டொட்டாலிட்டி என்கிற சிந்தனையை மறுப்பதற்காக உருவானது பின்நவீனத்துவம்.

உலகமயமாக்கல் என்பது ஏகாதிபத்தியத்தின் குறிப்பாக அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் நிதிமூலதன ஆதிக்கத்திற்குள் உலகை கொண்டுவருவதுதான். அதற்காக உலகை ஒரு புவிசார்-கிராமமாக மாற்றுகிறது. தொழில்நுட்ப வலைப்பின்னலை உருவாக்குகிறது. உலகை தனது கண்ணகாணிப்பிற்குள் கொண்டுவருகிறது. அதுவின்றி ஒரு அணுவும் அசையாது என்கிற நிலையை உருவாக்ககிறது. அதற்காக global terrarisam என்கிற உலக பயங்கரவாதத்தை உருவாக்கி வளர்ப்பது முதல் மத அடிப்படைவாதங்களை வளர்ப்பது, எய்ட்ஸ், ஆண்தராக்ஸ் போன்ற உயிர்கொல்லி ஆயுதங்களை பரவவிடுவது ஆகிய மனிதவிரோத கொடுமைகளை செய்துவருகிறது. இதற்காக உலகை ஒற்றை அமைப்பாக மாற்றுவதே அதன் குறிக்கோள். அதற்காக, உலகப் பொதுவான மனிதன் என்கிற கட்டுமானத்தை உருவாக்குகிறது. இதற்கு எதிரானதே பின்நவினத்தும்.

நண்பருக்கு, தாங்கள் மேலதிகமாக புரிந்துகொள்ள இத்தகைய புதிய சிந்தனைகளை படிப்பது அவசியம். அவற்றை பின்பற்றுவதா? இல்லையா என்பதை தீர்மாணிக்கப்போவது உங்கள் வாசிப்புதானே ஒழிய.. விருப்போ வெறுப்போ அல்ல.

நன்றி.

மாயன் சொன்னது…

ஜமாலன் சார் நன்றி... ஆனால் இது முற்றுப்பெற்ற விவாதமாய் எனக்கு படவில்லை... நிச்சயம் வேறு சமயம் தொடருவோம்.. தாங்கள் கூறியது போல், மேலதிக புரிதலுக்கு புதிய சிந்தனைகளை படிக்க விழைகிறேன்...

மொழி - நிலம் குறித்த ஆய்வுக்கட்டுரையை படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்... நிச்சயம் எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்...

ஜமாலன் சொன்னது…

//முற்றுப்பெற்ற விவாதமாய் எனக்கு படவில்லை... நிச்சயம் வேறு சமயம் தொடருவோம்.//

நன்றி. தாங்ள்கூறியது சரியே. நிச்சயம் தொடர்வோம். வாய்ப்பிருந்தால் தமிழவனின் ஸ்டரக்சரலிஸம், தமிழும் குறியியலும் வாங்கி படியுங்கள். இவை உதவிகரமாக இருக்கும்.

தொடர்வோம்... பிறகு.

சாலிசம்பர் சொன்னது…

//இது மார்க்சியம் பெரியார் அம்பேத்காரியம் உட்பட எல்லா கோட்பாடுகளையும் ஒரு அமைப்பு ஒழுங்காக கருதி பிரதிக்குள் அப்பார்வைகள் எப்படி அமைஉருகின்றன என்பதை ஆய்வு செய்வதாகும். //

ஜமாலன்,இந்த வரிகள் பின்நவீனத்துவம் பற்றிய எனது பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது தான்.கிட்டத்தட்ட இதே தான் பிரேம்-ரமேஷின் நூலிலும் இருந்தது.நானும் மார்க்சிய சிந்தனைப்போக்கு உள்ளவன் என்பதால்
பின்நவீன சிந்தனைப் போக்கை மேலும் அறிந்து கொள்ள இயல்பாகவே ஆர்வம் மேலோங்குகிறது.

இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் மட்டும் தான் தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவர்களாக அறியப்படுகிறார்களா?

இதை கேட்க காரணம் பைத்தியக்காரனின் ஒரு பின்னூட்டம்.வெளிநாடுகளில் மார்க்சியத்திற்கு எதிரான போக்குள்ளவர்களும் பின்நவீனத்துவர்களாக அறியப்படுகிறார்கள்.

தமிழ்ச்சூழலில் வலதுசாரி பின்நவீனர்கள்
என்று யாரையேனும் குறிப்பிடமுடியுமா?

தங்களது மொழியும்,நிலமும் மின்வடிவம் எனக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ravim2k1@yahoo.co.in

ஜமாலன் சொன்னது…

//இதை கேட்க காரணம் பைத்தியக்காரனின் ஒரு பின்னூட்டம்.வெளிநாடுகளில் மார்க்சியத்திற்கு எதிரான போக்குள்ளவர்களும் பின்நவீனத்துவர்களாக அறியப்படுகிறார்கள்.//

உண்மைதான். பின்நவீனத்துவம் என்பது மையமற்ற ஒரு நிலைப்பாடு. அல்லது தனது தன்னிலையை மையமற்றதாக ஆக்கிக்கொள்வது அல்லது படைப்புகளை அவ்விதம் உருவாக்குவது. அதனால்,மார்க்சியத்தை ஏற்காதவர்கள்கூட பின்நவீனத்துவ நிலைப்பாடை அதாவது படைப்பாக்க உத்தியாக பயன்படுத்தலாம். தாங்கள் கூறியதுபோல் அது ஒரு வலதுசாரிப்போக்குதான்.

//தமிழ்ச்சூழலில் வலதுசாரி பின்நவீனர்கள் என்று யாரையேனும் குறிப்பிடமுடியுமா?//

தமிழ்ச்சூழலைவிட்டு விலகி இருப்பதால் தற்கால நிலமைகள் தெரியவில்லை. தற்பொழுது வரும் சிறுபத்திரிக்கை துவங்கி புதிய புத்தகங்கள்வரை எதையும் பெறவும் படிக்கவும் வாய்ப்பற்ற சூழல் என்பதால், என்னால் இக்கேள்விக்கு தற்சமயம் பதில் அளிக்க வாயப்பில்லை. நான் கடைசியா படித்த பிரேம்-ரமேஷின் நாவல் "புதைக்கப்பட்ட மனிதர்களும் எழுதப்பட்டபிரதிகளும்" நாவல். அதற்கு ஒரு நீண்ட விமர்சனமும் காலக்குறியில் எழுதி உள்ளேன். தற்போதைய அவர்களது பின்நவீனத்துவம் நூல் என்னிடம் இல்லை. சென்ற ஆகஸ்டில் சென்னை வந்தபோது புக்லேண்டில் அப்பிரதியும் கிடைக்கவி்லலை. நண்பர் பிரேம் டில்லியிருந்து பாண்டி வந்திருந்தார் அவரை பார்க்க பாண்டி வரும்படி கேட்டிருந்தார். என்னால் போக இயலவில்லை. விடுமுறை 1 மாதகாலம் என்பதால் நேரம் கிடைக்கவில்லை. அவரைப்பார்த்திருந்தால் ஒருவேளை இந்நூல் எனக்கு கிடைத்திருக்கும். தற்போதைய நிலமைகள் குறித்த ஒரு அவர்வழியாக தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இங்கு தபாலில் வரவழைப்பதும் சாத்தியமில்லை. அதனால் இச்சூழல் குறித்து என்னால் விளக்க மேலதிகமாக முடியவில்லை.

மார்கசியத்தை ஒரு மொத்தத்துவ சிந்தனையாகத்தான் பின்நவீனத்துவாதிகள் (லயோடார்ட்) பார்க்கிறார்கள். ஒருசில மார்க்சியர்களும் பின்நவீனத்தவ நிலைப்பாட்டை மார்கிசய நோக்கில் ஆய்வு செய்கிறார்கள் (பிரடரிக் ஜேம்சன்). உரையாடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பின்நவீனத்துவத்தை தாண்டிச் செல்லும் இரட்டையர்களான தெல்யூஸும் க்வத்தாரியும் மார்க்சியத்தை 'வரலாற்றை உய்விக்க வந்த "தலைமைச்சங்கேதம்" (மாஸ்டர் கோட்) '-என்கின்றனர். இவர்கள் லிபிடோ என்கிற பாலியல் ஆற்றலை காமவேட்கை (காதல்-அகம்-சுயம் சார்ந்தது) மற்றும் வர்க்கபோராட்டம் (போர்-புறம்-அரசியல் சார்ந்தது) என்கிற இரு தளங்களில் இணைந்து செயல்படும் செயல்பாடாக முன்வக்கின்றனர். ஏற்கனவே தமிழில் இப்பிரிவினை இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். (இதனை முதலில் பிறந்தது தமிழ் குரங்குதான் என்கிற ரீதியில் புரிந்துகொள்ளக்கூடாது.) இவையும் தொடர் உரையாடலில் இருக்கும் ஒரு கருத்தாக்கமே. மார்க்சிய அடிப்படைகளைத் துவங்கி இவர்களை வந்தடைவதான ஒரு வாசிப்பு அவசியம் என்பதே எனது நிலைப்பாடு.

தொடர் பின்னோட்டங்களுக்கும் விவாதத்திற்கும் நன்றி. கட்டுரை தங்களுக்கு மின் அஞ்சல் செய்யப்ட்டுவிட்டது.

அன்புடன்
ஜமாலன்.

பெயரில்லா சொன்னது…

ஜமாலன், உங்களது மொழியும்,நிலமும் நூலின் மின்வடிவத்தை எனது மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைக்கமுடியுமா?
dj_tamilan25@yahoo.ca

நன்றி

ஜமாலன் சொன்னது…

DJ said...

//ஜமாலன், உங்களது மொழியும்,நிலமும் நூலின் மின்வடிவத்தை எனது மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைக்கமுடியுமா?//

நண்பருக்கு.. இந்த நூல் மின் அஞ்சல் வடிவில் என்னிடம இல்லை. சில கட்டுரைகள் உள்ளன. அவற்றை அனுப்பி வைக்கிறேன். காரணம்... பல கையெழுத்துப்படியாக நேரடியாக DTP செய்து நண்பன் காண் எனக்கு தெரியாமலே ஒரு சர்ப்ரைஸ் என நூலை வெளியிட்டு அதனை gift packing ஆக ஏர்போர்ட்டில் தந்து வீட்டில் போய் பிரித்து பார்க்கும்படி கூறினான். அது ஆச்சர்யமான அனுபவம். அதனால் அதனை மின்வடிவமாக என்னால் பெற இயலவில்லை. என்னிடம் உடல் அரசியல் பற்றிய அந்நூலில் வெளியான குறிப்புகள் மின்வடிவில் PDF உள்ளது. அதனை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். Subscribe மூலம் நீங்கள் பதிவில் வரும் புதிய எழுத்தக்களைப் பெறலாம். இன்று விடுமுறை என்பதால் நாளை அனுப்பி வைக்கிறேன்.

தொடர் வாசிப்பிற்கு நன்றி.

Salman Akram சொன்னது…

உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளன......எனது ஈ மெயில் ற்கு உங்களது நூல்களை அனுப்ப முடியுமா ...1987.abdullah@gmail.com

Salman Akram சொன்னது…

உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளன......எனது ஈ மெயில் ற்கு உங்களது நூல்களை அனுப்ப முடியுமா ...1987.abdullah@gmail.com

ஜமாலன் சொன்னது…

Salman Akram "உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளன......எனது ஈ மெயில் ற்கு உங்களது நூல்களை அனுப்ப முடியுமா ...1987.abdullah@gmail.com"

கருத்திற்கு நன்றி. எனது நூல்கள் பிடிஎப்பில் இல்லை. ஒரு சில கட்டுரைகள் மட்டுமே உள்ளது. அதுவும் பழைய எழுத்துருவில் உள்ளவை.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.