தமிழ்கவிதையின் மூன்று பண்புகளும் “இன்றைய” கவிதைகளும்.

Anbin wrapper பாலம் பதிப்பகம் 02-11-2011 சென்னையில் நடத்திய முபீன் சாதிகாவின் ”அன்பின் ஆறாமொழி” கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவில் நூலை மதிப்பிற்குரிய எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களிடம் பெற்றுக்கொண்டு பேசுவதற்காக எழுதிய குறிப்பு. ஆனால் முழுமையாக இதனை பேசமுடியவில்லை என்றாலும் முக்கியமானவற்றை பேசமுடிந்தது. இந்திரா பார்த்தசாரதி அவர்களை முதன்முறையாக பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. பார்த்தவுடன் அவர் கேட்ட கேள்வி ”நீங்களும் கும்பகோணமா” என்பதுதான். அவரும் கும்பகோணம் என்பது எனக்கு அன்றுதான் தெரியும். கும்பகோணம் என்பது படைப்பிலக்கிய எழுத்தாளர்களின் பல மையங்களில் ஒன்றாக இருந்தது. தமிழில் தோன்றிய நவீன இலக்கியத்தில் பங்களித்த ந. பிச்சமூர்த்தி, மௌனி, கு.ப.ரா., எம். வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன் இவர்களுடன் இந்திரா பார்த்தசாரதியும்.

கவிதைகள் பற்றிய நிறைய சர்ச்சைகள் காலங்காலமாக உள்ளது. அதில் எது கவிதை? கவிதையை எப்படி வரையறுப்பது? கவித்துவம் என்றால் என்ன? என்பதுபோன்ற கேள்விகள் உள்ளன. கவிதைகளை புதுக்கவிதை, நவீனக்கவிதை என பிரித்துணரலாம் என்பதுபோன்ற கருத்தாக்கங்களை முன்பே லீனாமணிமேகலைக்கு எழுதிய வெளிவராத முன்னுரையில் எழுதி உள்ளேன். பெருந்தேவியின் ”உலோகருசி”க்கு எழுதிய பின்னுரையில் கவிதையின் நவீன பின்நவீன பண்புகள் நோக்கிய நகர்ச்சியை விவரித்து உள்ளேன். தற்பொழுது கவிதை பற்றிய மற்றொரு விவரிப்பாக முபீன் சாதிகாவின் கவிதைகள் முன்னுரையில் சிலவற்றை எழுதி உள்ளேன். 90-களில் வெளிவந்த எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்களை ஆசிரியர் குழுவில் கொண்ட "மேலும்" இதழில் கவிதையும் சிதைவாக்கமும் என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையும், கவிதா இண்டியாவில் “கவிதையின் உயிர்வேதிச்சமன்பாடு என்ற சிறிய குறிப்பும் எழுதி உள்ளேன். கவிதை பற்றிய இவற்றை இங்கு தொகுத்துக்கூறக் காரணம், கவிதை பற்றிய சில கருத்தாக்கங்களை சமீபத்தில் படித்தபோது எனக்கே ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்திக்கும் பொருட்டே.

இனி பேச்சை கேட்கலாம்...

நண்பர்களே...

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுவதில் மகிழ்ச்சியடைகிறேன். முபீன் அவர்களின் கவிதைகள் குறித்த எனது கருத்தை, அறிமுகத்தை அவரது நூலில் முன்னுரையாக எழுதிவிட்டேன் என்பதால் இவ்வறிமுக உரைக்கு அழைத்தபோது தயங்கினேன். முன்னுரை எழுதியிருப்பதால் அறிமுக உரையை மற்றொருவர் நிகழ்த்துவதே சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. ஏனோ என்னை நூலை பெற்றுக்கொண்டு அறிமுக உரை ஆற்றும்படி பாலம் பதிப்பக நண்பர் அரவிந் அப்பாதுரை தன் விருப்பத்தை வெளியிட்டபோது அதை தவிர்க்க முடியவி்ல்லை.

நான் முபீன் அவர்களின் கவிதைகளை பற்றி அதிகம் பேசப்போவதில்லை. அதை என் முன்னுரையில் நீங்கள் வாசித்துவிடலாம். அதில் புரியாமல் ஒருவித மொழிநடையில் இக்கவிதைகள் எழுதப்பட்டதற்கான காரணத்தையும், சில கவிதைகளை எனக்கு தெரிந்தவகையில் வாசித்தும் காட்டி உள்ளேன். அதனால் அவரது கவிதை பற்றிய அறிமுகத்தைவிட அவரைப்பற்றி நான் அறிந்தவற்றை பகிர்வதும், பொதுவாக கவிதைகள் பற்றியதுமாக எனது பேச்சை அமைத்துக் கொள்கிறேன்.

முபீன் சாதிகாவை ஒரு பெயராக அறிந்தது 93-ல் வந்த ''மேலும்'' இதழில்தான். அந்த இதழில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றின் தலைப்புதான் அவர் தனித்து பெயராக பதிவாகியது என நினைக்கிறேன். அந்த தலைப்பு இதுதான் ‘”20-07-'93-லிருந்து 20-08-'93 வரை சிந்திக்கப்பட்ட பெண் உண்மைகள்:ஒரு கறுப்பு மை பேனாவிலிருந்து” இந்த தலைப்பே அவர் ஒரு வித்தியாசமான எழுத்தாளர் என்பதை காட்டியது. மையத்திலிருந்த விலகிய ஒரு பரப்பில் சிந்திப்பவர் என்பதை காட்டியது. இயல்பான எழுத்து முறையற்றவர் என்பதைக் காட்டியது. இயல்பு-இயல்பின்மை பற்றிய அரசியல் விரிவாகப் பேசப்பட வேண்டியது. அது ஒரு புறமிருக்கட்டும். காரணம், எது இயல்பு எது இயல்பற்றது என்பதெல்லாம் சமூகமும், அதன் அதிகார கருத்துருவங்களும், அதன் சொல்லாடல் களங்களும் தீர்மானிப்பது. ஒரு சமூகத்தில் மந்திரவாதியும், மற்றொரு சமூகத்தில் விஞ்ஞானிகளும் இயல்பற்றவர்களாகவே கருதப்படுகின்றனர். அவ்வகையில் இவரது எழுத்து இயல்பற்ற ஒன்று. அதாவது, மையத்தில் தன்னை இருக்கிக்கொள்ளும் பரோனியா இல்லாத ஒருவகை எழுத்து இவருடையது.

சரி கட்டுரைக்கு வருவோம். அந்த கட்டுரையும் முற்றிலும் புதியதளத்தில் செய்யப்பட்ட விமர்சனம். அன்று உருவாகிவந்த பெண்ணிய சிந்தனையை வேறொரு தளத்தில் அந்த கட்டுரை பேசியது. அந்த கட்டுரையில்தான் எனக்கு தெரிந்து தமிழில் பெண் எழுத்தாளர் ஒருவர், (பெண் எழுத்தாளர்கள் என்கிற வகைத்திணை பற்றிய சர்ச்சைகள் ஒருபுறம் உள்ளன அப்படி ஒரு வகைத்திணையை பேசமுடியுமா என்பது குறித்து அது ஒரு புறம் இருக்கட்டும்) ஆண்குறி, லிங்கம், யோனி போன்ற சொற்களை பிரயோகித்து ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது என நினைக்கிறேன். அம்பையின் சிறுகதை ஒன்றை போர்ஹெஸ் கதை ஒன்றுடன் ஒப்பிட்டு லத்தீன் அமேரிக்க மற்றும் ஆசிய பெண்ணியத்தின் தனித்தன்மைகளை வலியுறுத்திய ஒரு கட்டுரை அது. அது அதிர்ச்சி மதிப்பிற்கான ஆண்குறியொ, யோனியோ அல்ல. அக்கட்டுரை அன்றைய என் வாசிப்பு ஆர்வத்தில் அதிர்ச்சியானதாகவும், அதேநேரத்தில் அந்த எழுத்தாளரை கவனிக்கவும் செய்தது. அதன் பின் அவரது எழுத்துக்களை நான் எங்கும் எதிர்கொள்ளவில்லை. அவர் 'முன்றில்' போன்ற பத்திரிக்கைகளில் எழுதி உள்ளார். ஆனால் நான் வெளிநாட்டில் இருந்ததால் பார்க்க கிடைக்கவில்லை. சமீபத்தில் 'முன்றில்' தொகுப்பில்கூட அவரது கட்டுரை வெளிவந்துள்ளது. அவர் அநேகமாக தமிழ், குறிப்பாக பெண் எழுத்தாளர்களின் “அழகான மனைவி அன்பான குழந்தை இருந்தாலே பேரின்பமே””-குள் நுழைந்து எங்கோ சமைத்துபோட்டு முறைவாசலில் அடைபட்டுவிட்டார் என நினைத்தேன். பெண்களுக்கு அடுக்களைகளை தந்தவிட்டு ஆண்கள் அணுஉலைகள் தயாரிப்பதில் ஈடுபடும் ஒரு அரசமைப்பிற்குள் அதிகார அமைப்பிற்குள்தானே நாம் வாழ்கிறோம் என்பதால் பெண் எழுத்தாளர்களின் நிலை இப்படித்தான் ஆகிப்போகிறது. குடும்பம் மட்டுமின்றி சமூகமும், குறிப்பாக எழுத்திலக்கிய சூழலும்கூட அவர்களுக்கு பிரச்சனைக்குரிய ஒன்றாகவே உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நண்பர்களிடம் பேச்சு வரும்போது அவரை குறிப்பிட்டு அந்த கட்டுரையை பற்றி பேசுவது வழக்கம். பின் அவரை நான் சந்தித்தது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் வலி என்கிற ஒரு வலி சுழன்றுக்கொண்டிருக்கும் கவிதையில்தான். வலி சிறிது சிறிதாக பெருகுவதை வடிவரீதியாக வரைபடமாக சொல்லும் கவிதை அது. இவரது கவிதைகள் கட்பலம் சார்ந்தவை என்பதால், எழுத்தில் அதன் வடிவத்தில் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. அதன் பிறகு அவரை மின்-அஞ்சலில் தொடர்புகொண்டு அவரா இவர் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். கவிதைகள்தான் அவரது வெளிப்பாட்டிற்கான தளமாக அவர் தேர்ந்தெடுத்துள்ளதை பற்றி சொன்னார். உண்மையில் அவரது கவிதைகளைவிட கட்டுரைகளில் அதிகம் எனக்கு ஈடுபாடு உண்டு என்பதால் தொடர்ந்து கட்டுரை எழுதும்படி அவரிடம் வலியுறுத்தினேன். அதன்பின், அவர் பிளாக்கில் மற்றும் 'மந்திரச்சிமிழ்' இதழில் சில கட்டுரைகள் எழுதி உள்ளார். அக்கட்டுரைகளிலும் அவரது மொழி என்பது வித்தியாசமாகவே அமைந்துள்ளதை அதை வாசிப்பவர்கள் அறியலாம். ஒவ்வொரு கட்டுரையும் ஒருவித எழுத்துபாணியை பின்பற்றி, அதையும் ஒரு படைப்பிற்கான உந்துதலுடன் எழுதுகிறார். எப்போதும் சொல்வதை விட சொல்லாமல் மறைப்பதையே அடிப்படையானதாக கொள்கிறது இவரது எழுத்து. உதாரணமாக இவரது தெல்யுசின் சிந்தனைகளை அடியொற்றி எழுதப்பட்ட பேரெந்திர உடல்கள் பற்றிய ஒரு கட்டுரை, ஆண் பெண் என்கிற பாலின உடல்கள் எப்படி பேரெந்திரங்களாக மாறி சமூகத்தின் பல உடல்களை இயக்கமடைய வைக்கிறது என்பதை விவரிக்கிறது. மற்றொரு கட்டுரை காட்டுக்குள்ளே நாட்டுக்குள்ளே என்பது. அக்கட்டுரையில் வீரப்பன் பற்றி நாம் அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றை பேசுவதாக உள்ளது. தமிழ் தொலைக்காட்சியின் தோற்றம் மற்றும் பரவலாக்கத்துடன் வீரப்பன் என்கிற பிம்பம் எப்படி கட்டமைக்கப்பட்டது, அது எப்படி அரசும் அதிகாரமும் தொலைக்காட்சியடிப்படையில் செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டன, பிரஞ்சு மார்க்சியரான பூர்தியே சொல்வதைப்பால சுயமோகக் கண்ணாடியான (நார்சிசக் கண்ணாடியான) தொலைக்காட்சி எப்படி தினவாழ்வின் தன்னை உணரும் கண்ணாடியாக மாறி உள்ளது என்பதை நுட்பமாக சொல்லும் கட்டுரை. இப்படி சற்றே ஆழ்ந்து படிக்க வேண்டிய ஒரு எழுத்துமுறை இவருடையது. கோட்பாடுகள், அரசியல் துவங்கி எண்ணற்ற நவீன புனைவிலக்கியங்களை படித்திருப்பதால் இவருக்கு எழுத்து என்பதே ஒரு புனைவுசெயல்பாடாக உள்ளது. அதனால், கட்டுரைகள்கூட படிக்க சிக்கலான ஒரு மொழியை கொண்டதாக அமைந்துவிடுகிறது.

இவரை வாசிக்க துவங்கியபோது, ஏன் இவரிடம் இப்படி ஒரு மொழி வடிவமாகிறது என்பதே எனக்கு முன் இருந்த சவால் என்று சொல்லலாம். வெறும் மொழிச்சிக்கலாக அதை நிராகரிக்க முடியாதவகையில், அம்மொழியில் ஒரு ஈர்ப்பு இருந்தது. அந்த ஈர்ப்பே அவரை வாசிக்கும் ஆர்வத்தை அதிகமாக்கி, இறுதியில் அது ஒரு ரசமான விளையாட்டாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அதன் தொடர்ச்சியே அவருக்கு நான் எழுதிய முன்னுரை. அவரது கவிதைகள் எப்படி ஒரு மொழிவிளையாட்டாக உள்ளது என்பதை விவரிக்க முயற்சித்து உள்ளேன் அம்முன்னுரையில். அவரது ஆங்கிலக் கவிதைகள் கூட இத்தகைய விளையாட்டுகள் அடிப்படையிலேயே எழுதப்பட்டு உள்ளது.

முன்னுரைக்காக இவரது கவிதைகளை வாசித்தபோது எனக்கு ஏற்பட்ட சிக்கல் அடிப்படையில் ஒரு அரசியல் சார்ந்த வாசிப்பாளன் என்றவகையில் இக்கவிதைகளின் அரசியல் என்ன என்பதை புரிந்துகொள்ள முயன்றதே. உண்மையில் இன்றைய அரசியலாக அறியப்பட்ட பொதுநோக்கிலான அரசியல் இல்லை இக்கவிதைகளில். மக்கள் சார்ந்த அரசியலோ, அல்லது அதிகாரம் சார்ந்த அரசியலோ இல்லை. உண்மையில் இன்றைய நிலையை அதன் அரசியலையோ சமூவியலையோ வரலாறையோ இக்கவிதைகள் சொல்லவில்லை. சங்ககாலக் கவிதைகள் நமக்கு சங்ககாலம் பற்றிய ஒரு சித்திரத்தை தருவதைப்போல, நிலத்தை பிரதி செய்யவில்லை இக்கவிதைகள். நிலமற்ற வெளி பற்றியதான கவிதைகள் இவை. சரி நிலமற்ற வெளியிலான கவிதைகள் என்றால் தத்துவம் சார்ந்தவையா என்றால், அப்படியும் இதனை சொல்லிவிட முடியாது. அப்படி என்றால் இக்கவிதைகள் எப்படி புரிந்து கொள்வது, வகைப்படுத்துவது அல்லது நமக்குள் அல்லது நமக்கான பிரதியாக எதை உருவாக்கி கொள்வது என்பதான சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கல் தமிழ்கவிதைகள் பற்றிய ஒரு குறிப்பிடத்தக்க சிந்தனையை உருவாக்கியது எனக்கு.

சமீபத்தில் நான் வாசித்த டெல்யுஸ்-கத்தாரியின் What is Philosophy என்கிற நூலில், சிந்தனைமுறை பற்றி விவரிக்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் அப்பக்ட் (affect தமிழில் அதை பாதிப்பு என்கிற பழக்கமான சொல்லையே பயன்படுத்துகிறேன்) என்கிற ஒன்றை வைத்து சிலவற்றை உங்களுடன் பகிர்கிறேன் இந்த கவிதை பற்றிய பேச்சை ஒட்டி. தமிழ்கவிதைகளை 3 முக்கிய மனக்கூறாக அல்லது உடற்கூறாக வகைப்படுத்தி அறியலாம். மனக்கூறு என்பதை அடைப்புக்குறிக்குள் சொல்கிறேன். உடல் மனம் என்கிற பிரிவினை உண்டா சாத்தியமா போன்ற நவீனத்துவ பின்-நவீனத்துவ கேள்விகள் உள்ளன என்பதை மட்டும் பதியவைத்துக்கொள்வோம். இப்போ தமிழ்கவிதையின் 3 உடற்கூறுகள் என்ன என்று பார்க்கலாம். அது உணர்வு, உணர்ச்சி, பாதிப்பு எனலாம். அதாவது ஆங்கிலத்தில் feeling, emotion and affect என்பார்கள்*. தமிழில் உணர்வுகள் கவிதையாகி உள்ளது. உணர்ச்சிகள் கவிதையாகி உள்ளது. பாதிப்புகள் கவிதையாகி உள்ளது. முதலிரண்டு எண்ணற்ற கவிதைகளாக உற்பத்தி செய்து பெருக்கித் தள்ளப்படுகிறது. அதாது 100 தமிழ்கவிதைகளை எடுத்தால் அதில் முக்காலவாசிக் கவிதைகள் இத்தகைய உணர்வு மற்றும் உணர்ச்சி சார்ந்த கவிதைகள்தான். (விளையாட்டாகச்சொன்னால் தமிழ் மக்கள்தொகையைவிட கவிஞர்கள் எண்ணிக்கை அதிகம். கவிதை எழுதுவதுதான் கடினம் ஏனோ எல்லோரும் கவிதைதான் எழுதுகிறார்கள்.) காரணம் கவிதை என்பது அது வெளிப்படும் மொழியைவிட அதை வெளிப்படுத்தும் உடலின் அதை வாசிக்கும் உடலின் உணர்வு மற்றும் உணர்ச்சியை எந்த அளவிற்கு எழுச்சிகொள்ள செய்கிறது அல்லது தூண்டுகிறது என்பதை பொறுத்தே அமைகிறது என்கிற கவிதை பற்றிய ஒரு அங்கீகரிக்கபட்ட வரையறை உள்ளது. பாதிப்பு என்கிற தன்மையைக்கொண்ட கவிதைகள் என்பது முற்றிலும் உணர்வுகளைவிட, உணர்ச்சிகளைவிட சொல்பவருக்கும் வாசிப்பவருக்கும் இடையிலான ஒரு அறிவார்ந்த உரையாடலை உருவாக்கி, அதன் வழியாக ஒரு பாதிப்பை நிகழத்துகிறது. அல்லது கவிதை காட்சியாவதன் வழியாக புலனில் பதிந்து, பிரக்ஞையற்ற நிலையில் உடலில் பாதிப்பை உருவாக்குவதாக உள்ளது.

பாதிப்பை சுருக்கமாக சொல்லி விளக்கமுடியாது. இந்த 3 வார்த்தைகளின் வேறுபாட்டை சுருக்கமாக புரிந்து கொள்வது இதை தெளிவுபடுத்தும். காரணம் முபீன் சாதிகாவின் கவிதைகளை புரிந்து கொள்ள இந்த பாதிப்பு என்பதை புரிவது அவசியம். பாதிப்பு என்பது உணர்வு சார்ந்தது அல்ல. அது ஒரு உடல்-நிலை மாற்றம். அதாவது, உணர்வு என்பது ஒரு உடலுக்குள் ஏற்படுத்தும் ஒரு புலன் எழுச்சி அதாவது சென்சேஷன். முன்னரே நடந்த அனுபவத்தால் பெயரிடப்பட்ட ஒன்று. அதாவது ஒரு உடலின் தனிப்பட்ட வரலாற்றுடன் தொடர்புடையது. ஏற்கனவே ஏற்பட்ட தனது சூழலில் அனுபவங்களில் பெயிரிடப்பட்ட ஒன்றே உணர்வு. உணர்வு என்பது மொழி மற்றும் அனுபவத்துடன் உறவு கொண்டது. ஒரு குழந்தைக்கு உணர்வு என்பது இருப்பதில்லை. காரணம் அதற்கு மொழியில்லை, வரலாறு இல்லை. அதனால் உணர்வு என்பதை அதன் பெற்றோர்தான் புரிந்துகொள்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு குழந்தையின் உணர்விற்கும், ஒருவிதமாக பெற்றவர்கள் செயல்படுகிறார்கள். ஆக, உணர்வு என்பதை ஒரு நினைவிலி செயல்பாடாக கொள்ளலாம். தனிப்பட்ட உணர்வு மற்றும் தனிமனித அகவெழுச்சி சார்ந்த கவிதைகள் இந்தவகையினம் எனலாம்.

உணர்ச்சி என்பது சமூகவயப்படுத்தப்பட்டு வெளிப்பாடு கொள்ளும் உணர்வு எனலாம். அதாவது சமூகத் தேவைக்கு ஏற்ப ஒரு உடல்கொள்ளும் உணர்வு எனலாம். ஒரேவகை உணர்வு ஒவ்வொரு சமூக குழவிற்கு ஏற்ப வேறுபட்ட உணர்ச்சியாக வெளிப்படலாம். அந்தவகையில் உணர்ச்சி என்பது சமூகவயமானதாக உள்ளது. உணர்ச்சி என்பது நினைவு மனம் சார்ந்த செயல்பாடு. சமூக உணர்ச்சியை பிரதிபலிக்கும் சமூகவயம் சார்ந்த கவிதைகள் இத்தகைய வகையினமாக கொள்ளலாம். முந்தைய கவிதை பர்சனல் செண்டிமெண்டல் லேயரில் வெளிப்பட்டால் இத்தகைய கவிதைகள் சமூக செண்டிமெண்டுகளை அல்லது குழு செண்டிமெண்டுகளை அடிப்படையாகக் கொண்டவை.

ஆனால், பாதிப்பு என்பது பிரக்ஞையற்ற (நான் கான்சியஸ், அன்கான்சியஸ் அல்ல) உணர்வற்றதாக ஏற்படும் அனுபவம் சார்ந்தது. அது வடிவமாகவோ அல்லது அமைப்பாகவோ உருவாகாத ஒரு கணநேரத்தில் உடலிற்குள் உடலுறுப்பிற்குள் ஏற்படுத்தும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. பிரக்ஞைக்கும், பிரக்ஞைக்கு வெளியே நிகழ்வது. அதான் பாதிப்பு என்பது. அது மொழிசார்ந்தோ, பெயரிடப்பட்டதோ அல்ல. அது உடல்சார்ந்ததாக மாறிவிடுகிறது. பாதிப்பை அடிப்படையாகக் கொண்ட கவிதைகள், வாசிப்பவரின் பிரக்ஞையற்ற நிலையில் அவரது உடலியல் மாற்றமாக பதிவாகிவிடுகிறது. இப்படி தமிழ்க் கவிதைகளில் பாதிப்பிற்கான கவிதை சாத்தியம் உள்ள பல கவிதைகளை வாசித்தறிவது ஒரு தனி விமர்சனத் திட்டமாக செய்யப்பட வேண்டிய பணி. காரணம் பாதிப்பு பற்றி மிக முக்கியத்துவம் வாய்ந்த சிந்தனைகளை டெல்யுஸ் கத்தாரி என்கிற இரண்டு பிரஞ்சு சிந்தனையாளர்கள் முன்வைத்து உள்ளனர். அதாவது ஒரு உடல் உணர்வை உணர்ந்துகொள்வதன் மூலம், தனது உறுப்பின் செயலாக மாற்றிக் கொள்வதே பாதிப்பு எனலாம். பாதிப்பு என்பது உணர்வு-நிலை அல்ல ஒரு உடல்-நிலை. பாதிப்பு என்பதுதான் இலக்கியங்களின் ஒரு அடிப்படை. அதனால்தான் சங்ககாலம் முதல் இலக்கியங்கள் நமது உடலில் எண்ணற்ற உணர்வுகளை பிரக்ஞையற்ற நிலையில் கட்டமைத்து உள்ளது. காதல் போர் என்கிற உணர்வுகள் நமது உடலில் இப்படித்தான் இறக்கப்பட்டு உள்ளன. இலக்கியம் அறியாத பாமர உடல்கள்கூட இத்தகைய பாதிப்பைக் கொண்டு உள்ளது. தமிழ் உடலின் அல்லது இன்றைய உடல்களின் உருவாக்கத்தில் இலக்கியத்தின் பணி என்பது இதே. ஆக, பாதிப்பை உருவாக்க முனையும் கவிதைகள் வாசிப்பவரைவிட எழுதுபவரை அதிகம் பாதிக்கக்கூடியதாக உள்ளது. இதைதான் படைப்பின் பித்துநிலை என்கிறோம். இந்நிலையில் மொழி என்பது படைப்பில் படைப்பாளியின் பாதிப்பை பதியவைக்க உக்கிரமாக முனைகிறது. பிரக்யைற்ற நிலையில் படைப்பாளியிடம் மொழி கட்டற்றதாக வெளிப்பாடு கொள்கிறது. அப்படிப்பட்ட ஒரு பாதிப்பு சார்ந்த கவிதை வெளிப்பாடாகவே முபீனின் கவிதைகள் உள்ளது.

அதன் அரசியல் என்பது, மொழி ஏற்படுத்தும் உடலியல் பாதிப்புகள் மற்றும் சமூக பாதிப்புகளைக் கொண்டதாக வெளிப்பாடுகொள்கிறது. ஒருவகையில் இக்கவிதைகள் புழங்கிவரும் அல்லது சமூகவயமாகிவிட்ட உடலின் கட்டுமானத்தை அதன் புலன் பதிவுகளை நிராகரிப்பதன் வழியாக, வேறொரு புலன் அனுபவத்தை முன்வைக்க முனைகிறது. ஒருவகையான குழந்தமை விளையாட்டாக, காட்சிகளின் விளையாட்டாக இப்படி சில பல விளையாட்டுகளைக் கொண்டதாக உள்ளது. அவ்வகையில் இக்கவிதைகள் தனது தனித்தன்மையை கொண்டதாக உள்ளது. முற்றிலும் புழங்கும் உணர்வுகள் உடல் சார்ந்த அனுபவங்களை பகடி செய்வதாகவும், வேறு புதிய புலன் அனுபவங்களை கோருவதாகவும் உள்ளது. அந்தவகையில் ஒருவகை உயிரரசியல் சார்ந்த கவிதைகள் இவை எனலாம்.

கலை, விஞ்ஞானம், தத்துவம் என்கிற மூன்று சிந்தனைவடிவங்களோடு தொடர்புடையது அப்பஃகட் (பாதிப்பு), பெர்சப்ட் (அறிதல்) மற்றும் கான்சப்ட் (கருத்தாக்கம்) என்கிறார்கள் டெல்யுஸ்-கத்தாரி. அந்தவகையில் கலை என்பது பாதிப்பை அடிப்படையாகக்கொண்டது. பாதிப்பு என்பது உடல்நிலையில் ஏற்படும் மாற்றம். கலை சொல்வதோ உணர்வதோ அறிவதோ அல்ல பாதிப்பது. இலக்கியம் நத்தையின் உணர்வு உறுப்பு செயல்பாடு அல்ல. அது ஒரு உடலின் உணர்வுகளை புதியதாக, புலன்களை புதியதாக பழக்குவதற்கான ஒரு பயிற்சிக்கூடம். எண்ணற்ற நுகர்வு படைப்புகள் சூழ்ந்து, நமது உணர்வுகளை திரும்ப திரும்ப செண்டிமெண்டல் லேயரில் தள்ளிக்கொண்டிருக்கும் இச்சூழலில், இநத போக்கை தடுத்து நிறுத்தும் வண்ணம், ஒருவித ஸ்கிஸோ மனநிலையும், நாடோடித்தன்மையும் கொண்ட இலக்கிய உருவாக்கம் தேவைப்படுகிறது. அதாவது, தமிழ் இலக்கியத்தில் பாதிப்பை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்கள் உருவாக்கப்பட வேண்டிய ஒரு காலத்தில் இருப்பதை சொல்லி, முபீன் மொழியில் சங்ககாலத்தை விட்டு எங்ககாலத்தில் வந்து எதிர்கால உடல்களில் பாதிப்பை ஏற்படுத்துக்கூடிய எண்ணற்ற படைப்புகள படைக்கவேண்டும் என்று கூறி அமர்கிறேன்.

நன்றி வணக்கம்.

ஜமாலன் – 02-11-2011

குறிப்பு - http://journal.media-culture.org.au/0512/03-shouse.php இக்கட்டுரையில் இம்மூன்றைப்பற்றி விரிவாக பேசப்பட்டு உள்ளது.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான அலசல்.

"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

Perundevi சொன்னது…

நல்ல உரை, ஜமாலன். பகிர்ந்ததற்கு நன்றி. பொதுவாக தமிழ்ச்சூழலில் கவிதை பற்றிய சொல்லாடல், கருத்தாக்கங்கள், கோட்பாடுகளைப் பற்றி எவ்விதப் புரிதலுமின்றி உடனடி அதிர்ச்சி (நுகர்வு) மதிப்பீட்டுக்காக வைக்கப்படும் கூற்றுகளின், தீர்ப்புகளின் (இன்றைய கவிதை கொண்டாட்ட வாழ்வை உருவாக்குகிறது என்பதுபோல) களமாகவே இன்றளவும் இருக்கிறது.
இத்தகையதொரு சூழலில் காத்திரமாக மட்டுமன்றி, சுயசந்தேகத்தின்வழி திறப்புகளோடும் முற்றுப்பெறாத கேள்விகளோடும் உங்கள் வாசிப்பை முன்வைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

முபீனின் 1993 ”மேலும்” கட்டுரை இப்போதும் நினைவில் இருக்கிறது. தமிழில் லக்கானை முன்வைத்துப்பேசிய வெகுசிலரில் அவரும் ஒருவர். அவரது அன்பின் ஆறாமொழி ஜனவரியில் கையில் கிடைக்குமென்று நம்புகிறேன். புத்தகத் தலைப்பு பிடித்திருந்தது எனக்கு: ஆறாமொழி என்பதே மொழியின் கொதிநிலை அல்லவா? (ஆற்றாமொழி என்கிற அர்த்தத்தை உள்ளீடாகக் கொண்டிருந்தாலும்)
ஒரே ஒரு கேள்வி: பாதிப்பு என்பதை உடல்-உணர்வு என்ற இருமைப்பிரிவினையில் கொள்ளவேண்டுமா? தமிழின் மெய்ப்பாடுக்கோட்பாடு இந்த இரண்டையும் இணைக்கும் புள்ளியைத் தரும். மேலும் இங்கிருந்து ஜூலியா கிறிஸ்தவாவின் குறிப்பொழுங்குக்கும் (semiotic order, மொழிபெயர்ப்புக்கு நன்றி எம்.டி.எம்) நகரமுடியும்.

ஜமாலன் சொன்னது…

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

ஜமாலன் சொன்னது…

விரிவான கருத்துக்கு நன்றி பெருந்தேவி. அலுவலகம் முடிந்து கிளம்புவதால், பதில் இரவு எழுதகிறேன்.

ஜமாலன் சொன்னது…

@Perundevi //ஒரே ஒரு கேள்வி: பாதிப்பு என்பதை உடல்-உணர்வு என்ற இருமைப்பிரிவினையில் கொள்ளவேண்டுமா? தமிழின் மெய்ப்பாடுக்கோட்பாடு இந்த இரண்டையும் இணைக்கும் புள்ளியைத் தரும். மேலும் இங்கிருந்து ஜூலியா கிறிஸ்தவாவின் குறிப்பொழுங்குக்கும் (semiotic order, மொழிபெயர்ப்புக்கு நன்றி எம்.டி.எம்) நகரமுடியும்.//

பாதிப்பு என்பதை உடல்-உணர்வு என்ந இருமைப்பிரிவில் கொள்ளமுடியாது. எனது பேச்சில் இதை விளக்கியுள்ளேன். ஒருவேளை தெளிவாக இல்லை என நினைக்கிறேன். பாதிப்பு என்பதே இப்படி பிரிக்கமுடியாத ஒன்றாக உள்ளதுதான். உடல்-நிலையாக மாறிவிடுவது. உணர்வாக இல்லாமல். தட்டச்சு, டிரைவிங் போன்றவை எப்படி உடல்நிலையாக அத்தனை புலன்களும் அதோடு இயைந்த ஒன்றாக மாறிவிட்டிருக்கிறதோ அப்படி ஒன்றாக மாறிவிடுவதையே பாதிப்பு என்பதாக விளக்கி உள்ளேன். அதனை விரிவாக எழுதினால் தெளிவுபடுத்தமுடியும். நீங்கள் சுட்டியுள்ள மெய்ப்பாடுக்கோட்பாடு என்பதோடு இதனை இணைத்தும் நோக்கலாம். கிறிஸ்தவா பற்றிய எம்.டி.எம். மின் கட்டுரை நலல் தருணத்தில் எழுதி வெளிவந்து உள்ளது. கவிதை பற்றிய முக்கியமானக் கட்டுரை அது.

Mubeen Sadhika சொன்னது…

திரு.ஜமாலன்
என் நூலுக்கு முன்னுரை எழுதி நூல் அறிமுகமும் செய்து அதை உங்கள் பதிவில் போட்டதற்கு முதலில் மிக்க நன்றி.

உங்கள் கவிதை பற்றிய கருத்து அருமை. உண்மையில் கவிதை பற்றிய ஆய்வு இன்னும் பல நிலைகளைத் தாண்டவேண்டியிருக்கிறது. உங்கள் முயற்சி குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

பாதிப்பு பற்றி சொல்லப்பட்ட கருத்தில் புலன் சார்ந்த பெயர்வாக ஒரு படைப்பை வர்ணிப்பது தாக்கம் ஏற்படுத்தும் கருத்து.

என் கட்டுரைகள் பற்றி இன்றளவும் நினைவு வைத்துக் கொண்டதற்கு நன்றி பெருந்தேவி. ஜனவரியில் சந்திக்கலாம். என் கவிதை தொகுப்பின் தலைப்பைப் பற்றி சொன்ன கருத்திற்கும் நன்றி.

நன்றி ஜமாலன்.

Mubeen Sadhika சொன்னது…

திரு.ஜமாலன்
என் நூலுக்கு நூல் அறிமுகமும் செய்து அதை உங்கள் பதிவில் போட்டதற்கு முதலில் மிக்க நன்றி.

உங்கள் கவிதை பற்றிய கருத்து அருமை. உண்மையில் கவிதை பற்றிய ஆய்வு இன்னும் பல நிலைகளைத் தாண்டவேண்டியிருக்கிறது. உங்கள் முயற்சி குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

பாதிப்பு பற்றி சொல்லப்பட்ட கருத்தில் புலன் சார்ந்த பெயர்வாக ஒரு படைப்பை வர்ணிப்பது தாக்கம் ஏற்படுத்தும் கருத்து.

என் கட்டுரைகள் பற்றி இன்றளவும் நினைவு வைத்துக் கொண்டதற்கு நன்றி பெருந்தேவி. ஜனவரியில் சந்திக்கலாம். என் கவிதை தொகுப்பின் தலைப்பைப் பற்றி சொன்ன கருத்திற்கும் நன்றி.

நன்றி ஜமாலன்.

ஜமாலன் சொன்னது…

@முபீன் சாதிகா உங்கள் கருத்துரைக்கு நன்றி.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.