இக்கட்டுரை மேலும் 1991 இதழில் வெளிவந்தது. “மொழியும் நிலமும்” (2003) நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. கவிதை பற்றிய தொடர்கட்டுரைகளின் புரிதலுக்காக இங்கு வெளியிடப்படுகிறது. இருபது வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்று இதில் பல கருத்துக்களில் விமர்சனங்கள், மாறுபாடுகள் இருந்தாலும், அடிப்படைகளில் பாரிய மாற்றம் இல்லை என்பதால், பழைய புகைப்படம் தரும் நினைவுடன மீள்பதிவு செய்யப்படுகிறது.
நான் கவிதையைப்பற்றிப் பேசப்போகிறேன். கவிதையைப் பேசுவது ஒரு மதவாதி கடவுளைப் பேசுவது போல் - என்கிற மேற்கோளைக்கொண்டு பேச்சைத்துவங்குவோம்.
கவிதை மனித உழைப்பிலிருந்து விளைந்தது[1] - என்கிற மார்க்சிய ”உண்மையை” அறிவோம். கவிதை மனித உழைப்பின் பிறிதொரு விளைவான மொழியினை மூலப் பொருளாகக் கொண்டு விளைந்த ஒரு செயலபாடாகும் என்பதால், மொழி குறித்த நமது சிந்தனைகளைப் படிப்போம்.
1
மனிதனின் அடிப்படை அலகாகிய உடல், இயங்குதல் மூலம் பெற்ற இயக்க ஆற்றலை (mechanical energy) ஒலி ஆற்றலாக (sound energy) மாற்றுகிறது- என்பது ஒரு விஞ்ஞான உண்மை. இதன்படி மனித உடலின் இயக்கம் – இருகூறுகளைக் கொண்டிருக்கிறது. 1. உடலின் தசைசார்ந்த இயக்கம் 2. இயக்கம் வெளிப்படுத்தும் சப்தம். இவை மனித உடலுக்கு மட்டுமே கிடைத்த சிறப்பு வினையாகக் கொள்ள முடியாது. என்றாலும் வெறுமையாய் உருவாகிய இப்பிரபஞ்சத்தை இவ்வினையின் மூலமே மனித உடலானது, தன்னை மையமாகக் கொண்ட ஒரு மனிதவியல் பிரபஞ்சத்தை (humanized universe) கட்டியமைத்துள்ளது. இதனை சாத்தியமாக்கிட மனித உடல் கண்ட தொழில்நுட்பமே மொழி.
மனித உடலானது, தனது தசை சார்ந்த உடலியக்கம் மற்றும் இயக்கம் எழுப்பிய சப்தத்தின் மூலம் – தான் எதிர்கொண்ட பொருளுடன் வினைபுரிந்து அதனைத் தனது இருப்பிற்குள் கொண்டுவர முனைகிறது. “தானேயான பொருளை” –“தனேக்கேயான பொருளாக”- மாற்றியமைக்க முனைகிறது. அதற்கான காரணிகளாக உடலியக்கம், சப்தம் – ஆகியவற்றைக் கொள்கிறது. இவற்றால், தான் எதிர்கொண்ட, தனது இருப்பிற்கு அப்பால் உள்ள, தன்னை அச்சுறுத்தும் பொருளை (ஏதோ ஒன்றை) தனக்கேயான, தனது இருப்பிற்குள்ளான பொருளாக மாற்றியமைக்கிறது. இம்மாற்றமே சைகைகள் அல்லது உடலியக்கம், சப்த ஒழுங்கு அல்லது பெயரிடுதல் – என்பதாகச் செயல்படுகிறது. தான் எதிர்கொண்ட பொருளைத் தனது உடலியக்கம் மூலம் குறித்தோ அல்லது பெயரிட்டோ தனது மூளையின் நினைவுப்பதிவக அமைப்பில்[2] (memory storage unit) பதியவைக்கிறது. இவ்வாறு பதியவைக்கப்பட்ட பல பெயரிடுதல்கள் அல்லது குறித்தல்களே மனித உடலின் முதல் தொழில்நுட்ப வளர்ச்சியாக மொழியை உருவாக்குகின்றன.
எனவே, மனித உடலானது தான் எதிர்கொண்ட பொருட்களைக குறியிட்டு, பெயரிட்டதன் மூலம், பொருட்களின் மீதான விரிவான அதிகாரக் களத்தைக் கட்டமைக்கிறது. இந்நிகழ்வின் எதிர்வினையாக மொழியும், மொழிசார்ந்த சொல்லாடல்களும் மனித இருப்பை நிர்ணயிப்பதாக உருமாறுகின்றன. இந்நிலையில் பொருட்களின் ‘தானேயான அம்சம்‘ இருப்பழிந்து ‘தனக்கேயான அம்சம்‘ பெயர் அல்லது குறியீடு மட்டுமே எஞ்சுகிறது. ‘மரம்‘ என்ற பொருளைக் குறிக்க உருவான ‘மரம்‘ என்ற சொல், ‘மரம்‘ – என்ற சப்தம் குறிப்பதே மரம் – என்ற பொருள் என்பதாக மாற்றியமைக்கப்படுகிறது. ‘மரம்‘ என்கிற சொல் இல்லாவிட்டாலும், மரம் – என்கிற பொருள் இருக்கும். ஆனால் அதன் இருப்பு மனித பிரபஞ்சத்திற்குள் இருக்காது. அதனால் மரம் சார்ந்த கருத்துக்கள், புனைவுகள், அறிவுகள் – உருவாகி இருக்காது. மரம் குறித்த இவ்வறிவு இல்லாதபோது மரம் – மனித உடலின் வெளிக்குள் இயக்கமற்றதாக, இருத்தலற்றதாக இருக்கும். எனவே, பொருளின் மீதான அதிகாரக்களம் அறிவுருவாக்கத்தின் மூலமாக கருத்துக்களின் அதிகாரகக்களமாக விரிவடைகிறது. மனித உடல் தான் எதிரிகொண்ட பொருளின் அச்சத்துடன், தான் உருவாக்கிய கருத்துக்களின் அச்சமும் சேர்ந்து இரட்டை ஒடுக்குதலுக்கு உட்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இவ்வொடுக்குதலின் சாத்தியப்பாட்டிற்குள்ளேயே ‘மனிதன்‘ – என்கிற கருத்துப் புனைவு மனித உடலைக் குறிப்பதாகப் புனையப்பட்டுள்ள்து. இதனையே நாம் மனிதன் கைக்கொண்ட தொழில்நுட்பமான மொழி பிறகு மனிதனையே கட்டமைப்பதானது என்கிறோம்.
(தொடரும்..)
[1] கவிதையின் தோற்றம் குறித்த பிரிட்டிஸ் மார்க்சிய அறிஞரான ஜார்ஜ் தாம்சனின் “மனித சமூக சாரம்“ (Human Essence) என்ற நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
[2] Memory Storage Unit என்கிற computer-ன் உள் அமப்புகளில் ஒன்றையே `நினைவுப் பதிவக அமைப்பு‘ என்று கூறியுள்ளேன். இவ்வமைப்பானது நாம் எவ்வெவற்றை நினைவில் பதியவைக்க விரும்பி எழுதுகிறோமோ அவற்றைப் பதியைவைத்துக் கொள்ளும். நமது தேவைக்கு ஏற்ப அந்நினைவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதே அமைப்பே நியூரான்களைக் கொண்டு மூளையில் பதிக்கப்படுகிறது மனித உடலில்.
- ஜமாலன் (மேலும். 1991)




4 comments:
ஒரு சிறிய கேள்வி, ஜமாலன். உங்கள் வரி: "‘மரம்‘ என்கிற சொல் இல்லாவிட்டாலும், மரம் – என்கிற பொருள் இருக்கும். ஆனால் அதன் இருப்பு மனித பிரபஞ்சத்திற்குள் இருக்காது."
புகழ்பெற்ற ராபின்ஸன் க்ரூஸோவை எடுத்துக் கொள்வோம். ஒத்தையனாக தீவில் அவன் எதிர்கொள்ளும் ஒரு புதிய தாவரத்திற்கு அவன் பெயரிட வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் அதுனுடன் அவன் தினசரி இயக்கம் கொள்ளலாம். எனவே பெயரிடப்படாத ஒன்று மனித பிரபஞ்சத்தினுள் வராது என்று இப்பொழுதும் நீங்கள் நினைக்கிறார்களா? ஏற்கனவே உங்கள் கட்டுரை ஒன்றில் காணப்பட்ட மொழி முதல் வாதத்தை நான் சுட்டியிருந்தேன் என்று நினைவிருக்கிறது. உரையாடலற்று உங்கள் படைப்புகள் இருக்கக் கூடாது என்ற நோக்கிலும் நான் இந்தக் கேள்வியை எழுப்புகிறேன்.
@Rajan Kurai Krishnan நன்றி.
மொழிமுதல்வாத கண்ணோட்டத்தில் எனக்கு இப்போது விமர்சனங்கள் உண்டு. என்றாலும், உங்கள் கேள்விக்கு இப்படி உரையாடிப் பார்க்க விழைகிறேன். ராபின்சன் க்ருஸோவிற்கு மொழியே தேவையில்லை. அவனுக்கு அவனை மையப்படுத்திய பிரபஞ்சம் என்கிற ஒன்று நிபந்தனையுமில்லை. மற்றமை என்கிற ஒன்றும் இல்லை. அதன்மீது அதிகார செலுத்தவேண்டிய அவசியமுமில்லை. அவற்றில் ஒன்றாக அவன் இருக்கிறான். பிறகு எதற்கு பெயரிடுதல்? தனித்துவிடப்பட்ட தீவில் ராபின்ஷன் குருஷோவிற்கு அந்த பெயர்கூட தேவையில்லை. கதைசொல்லியின் ஒரு எழுத்துரு (வேர்ட் பீயிங்) என்பதால் அந்த பெயரில் சொல்கிறோம். கதைசொல்லி மனித பிரபஞ்சத்தில் அக்கதையை எழுதுவதால். ராபின்சன் அந்த தாவரங்களில் அல்லது அங்கு உள்ள மற்றவற்றில் ஒன்றுதான். அவனை மனிதனாக நாம்தான் கருதிக்கொள்ள வேண்டி உள்ளது. காரணம் நாம் மனிதர்களாக இருப்பதால். அவன் எப்போ இந்த பெயரிடுதல் சிக்கலுக்கு ஆளாவான் என்றால் மற்றொரு மனிதனை சந்திக்கும்போதுதான். சமூகவயத்தின் அடிப்படையாக மற்றும் அடிப்படைகளில் ஒன்றாக பெயரிடுதல் உள்ளது. பெயரிடப்படாத ஒன்று பிரபஞ்சத்தில் உண்டு, மனித பிரபஞ்சத்திற்குள் இருப்பதில்லை. மற்றொருவகையில் “பிரபஞ்சமே“ மனித பெயரிடுதல்தான் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுதான் அங்கு நான் சொல்லவந்திருப்பது. அது முந்தைய எனது கட்டுரையில் தெளிவாக இல்லை.
மீண்டும் நன்றி.
ஜமாலன், பெயரிடப்படாத ஒன்று மனிதப் பிரபஞ்சத்தில் இல்லை என்ற கருதுகோளைத்தான் நான் மொழி முதல் வாதம் என மறுக்கிறேன். வார்த்தை என்பது குறிவகைகளில் ஒன்றுதான். மொழியற்ற குறிகள் என்பது மனிதப் பிரபஞ்சம் சார்ந்தவைதான் என்று சுட்டவே இந்தக் கேள்வியை எழுப்பினேன். நீங்கள் வேறு மனிதர்களை எதிர்கொள்ளாத ராபின்சன் குரூசோவிற்கும், பிற தாவரங்களுக்கும் வேறுபாடு இல்லை என்று சொல்வதிலிருந்து மிகவும் தீவரமாக மொழிப்பிரபஞ்சத்தை நம்புகிறீர்கள் என்று தோன்றுகிறது. இது ஒரு சசூரிய மயக்கம் என்றே நான் கருதுகிறேன். தமிழவனுடனான உரையாடலில் தீராநதியில் நான் எழுதிய "இயங்கியல், அமைப்பியல், தேசம்" கட்டுரையில் சசூருக்கும், பர்ஸுக்குமான (தெரிதாவுக்குமான) அடிப்படை வேறுபாட்டை சுட்டிக்காட்டியிருந்தேன். இது விரிக்கில் பெருகும் என்பதால் இந்த இடையீட்டை இந்த அளவில் நிறூத்திக் கொண்டு பிறிதொரு சமயம் தொடரலாம் என்று நினைக்கிறேன். நன்றி.
@ராஜன்குறை நன்றி
என்ன இப்படி தாக்கினால் என்ன செய்வது? ஹா ஹா. இருந்தாலும் உரையாடிப் பார்த்தால் எனக்கு தெளிவு கிட்டலாம் என்பதால். சில கருத்துக்கள்.
//ஜமாலன், பெயரிடப்படாத ஒன்று மனிதப் பிரபஞ்சத்தில் இல்லை என்ற கருதுகோளைத்தான் நான் மொழி முதல் வாதம் என மறுக்கிறேன். வார்த்தை என்பது குறிவகைகளில் ஒன்றுதான். மொழியற்ற குறிகள் என்பது மனிதப் பிரபஞ்சம் சார்ந்தவைதான் என்று சுட்டவே இந்தக் கேள்வியை எழுப்பினேன்.//
மொழிமுதல்வாதம் என்கிற சொல்லாட்சியில் எனக்கு உடன்பாடில்லை. பொதுவாக முதல்வாதம் என்கிற கண்ணோட்டங்கள் “முத்திரை அரசியல்“ சார்ந்தவை. மொழியற்ற குறிகள் சொல்லப்படாதவரை அல்லது ஒரு அர்த்தமாக்கும் அமைப்பு இல்லாதவரை சமூக இருப்பற்றவை. தனிமனித உடலில் எண்ணற்ற மொழி மற்றும் மொழிமீறிய சாத்தியங்கள் இருக்கலாம். அது சமூகவயமாகாவிட்டால் மனிதபிரபஞ்சத்தில் இருப்பற்றதாகவே இருக்கும் என்பதே எனது நிலைபாடு. “கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்” என்பது ஒரு மரபான நிலைபாடுதான். மனிதபிரபஞ்சம் என்பதே மனித மொழியின் விளைபொருள்தான். மனிதன் என்கிற பெயரிடுதல் உட்பட. மொழியற்ற குறிகள் தனிமனித-பிரபஞ்ச உறவில் சாத்தியமாகலாம். அதில் எனக்கு முரண்பாடில்லை. சமூக அமைப்பில் அது சாத்தியமில்லை என்பதே நிலைபாடு.
//நீங்கள் வேறு மனிதர்களை எதிர்கொள்ளாத ராபின்சன் குரூசோவிற்கும், பிற தாவரங்களுக்கும் வேறுபாடு இல்லை என்று சொல்வதிலிருந்து மிகவும் தீவரமாக மொழிப்பிரபஞ்சத்தை நம்புகிறீர்கள் என்று தோன்றுகிறது. இது ஒரு சசூரிய மயக்கம் என்றே நான் கருதுகிறேன்.//
மொழிபிரபஞ்சம் என்று நான் எங்கும் சொல்லவில்லையே. ஆம் ராபின்சன் குருஷேவிற்கு தாவரத்திற்கும் வேறுபாடு கற்பித்து, அதை எடுத்து சொல்ல ஒரு அமைப்பு சமூகமாக தெவைப்படுகிறது என்பதே நான் சொல்லவருவது. இதன் பொருள் ராபின்சன் குருஷே மரத்துடன் அல்லது பிரபஞ்சத்துடன் உறவு கொள்வதற்கு மொழி தேவை இல்லை என்கிற உங்கள் நிலைபாடுதான். அவன் தனித்ததொரு உடல் என்றவகையில். இது உண்மையில் மொழியை நிராகரிக்கும் நிலைபாடுதான். இது எப்படி மொழிமுதல்வாதமாகும். சசூரிய மயக்கமாகும் என்று எனக்கு புரியவி்ல்லை. மொழியிலிருந்து இந்த பிரபஞ்சத்தை நாம் விரித்துக்கொள்கிறோம் என்பதுதான் அடிப்படை சிக்கலாக மாறியுள்ளது என்பதே எனது நிலைபாடு.
//தமிழவனுடனான உரையாடலில் தீராநதியில் நான் எழுதிய "இயங்கியல், அமைப்பியல், தேசம்" கட்டுரையில் சசூருக்கும், பர்ஸுக்குமான (தெரிதாவுக்குமான) அடிப்படை வேறுபாட்டை சுட்டிக்காட்டியிருந்தேன். இது விரிக்கில் பெருகும் என்பதால் இந்த இடையீட்டை இந்த அளவில் நிறூத்திக் கொண்டு பிறிதொரு சமயம் தொடரலாம் என்று நினைக்கிறேன். நன்றி//
முன்பு வாசித்துள்ளேன். இங்கு நீங்கள் குறிப்பிட்ட தொடர்பில் வாசிக்கவில்லை. மீண்டும் வாசிக்கிறேன். நிச்சயமாக இது குறித்து விரிவான உரையாடல் அவசியம். பிறிதொரு சமயத்தில் தொடரலாம்.
நன்றி உங்கள் பொறுமைக்கும் உரையாடலுக்கும்.
கருத்துரையிடுக