சாதிய அடையாளங்களைத் தாண்டிய தமிழ் அடையாளம் ஒன்றை நாம் ஏற்பதற்கான பொதுப் பண்பாட்டுவெளி ஏதும் இருப்பதாக கருதுகிறீர்களா?

இக்கேள்வியின் அரசியல், தமிழ் அடையாளம் சாதிய அடையாளத்தை தாண்டியதல்ல அல்லது தமிழ் அடையாளமே சாதிய அடையாளம்தான் என்பது. தமிழ் என்ற இனம்சார் அடையாளத்தை சாதியம் என்ற குழுசார் அடையாளமாக மாற்றமுனையும் அரசியல் குறுக்கநிலை அல்லது அத்தகைய வேலைத்திட்டத்தின் பகுதியாக எழுந்துள்ள சிந்தனை. சாதியம் என்ற இனக்குழுசார் அடையாளத்தை, தமிழ் என்ற இனம்சார் அடையாளத்துடன் இணைத்து பார்ப்பது. சாதியம் இனக்குழுச் சமூகத்தின் குழுஅமைப்புகளை குறிக்க பிறந்த சொல்லாடல். தமிழ் “இனம்“ என்பதை குறிக்கும் நவீன முதலாளித்துவ வளர்ச்சியுடன் உருவான சொல்லாடல். சாதிய அடையாளம் இனக்குழு வரலாற்றின் உடலரசியல்நிலை, தமிழ் அடையாளம் முதலாளித்துவ சமூகத்தின் கற்பிதக் கருத்தாக்கமான இனவரலாற்றின் உணர்வரசியல்நிலை. இனஅடையாளம் என்பது அதிகாரப்போட்டியில், ஆதிக்க சக்தி தனக்கு பின்னால் மக்களை திரட்டமுனையும் கற்பிதக் கருத்தாக்கமே. முழுமையாக இனமாக வளர, வாழ, வழியற்ற சமூகஅமைப்பில் ஏற்கனவே இயங்கிவரும் சாதிய குழு அடையாளத்தில் உயர்சாதி தன்னை தமிழாக அடையாளப்படுத்திக் கொள்வது வரலாற்றின் ஒரு தவிர்க்கவியலா தீங்காக அமைந்துவிட்டது. தமிழ் என்பதில் தனிமனிதனை திரட்டமுடியாத ஆதிக்க சக்தி, சாதிய குழுக்களை தமிழ் என்பதற்குள் ஒழுங்கமைக்கிறது. தமிழ் அதனுடன் சேர்ந்த சைவ அடையாளமாக மாறிவிடுகிறது. அல்லது தமிழை உயர்சாதி சைவஅடையாளமாக வரலாற்றில் கதையாடச் செய்வதன்மூலம், சாதியமுறையை காத்துவரும் பார்ப்பனியம், தமிழ் என்பதை இந்துத்துவ மதவாதத்திற்குள் இருத்துவதற்கும், தமிழ் என்கிற கருத்துருவத்தை சாதிய அடையாளமாக குறுக்கிவைத்து செய்யும் அரசியலாகவும் உள்ளது. இந்துமதம் வரலாற்றில் தமிழ்மதமாக இல்லை என்பதால், சைவத்தின் வழியாக தமிழ் என்கிற கருத்துருவம் இந்துமதமாக மாற்றி வைக்கப்பட்டு உள்ளது. தமிழ் இந்துவாக, இந்துமதமாக, இந்து உணர்வாக புரிந்துகொள்ளும்படி செய்யப்படுகிறது. சமீபத்தில் தமிழ்தேசியம் பேசமுனையும் தலைவர்கள் பார்பனியர்களுடன் கைகோர்ப்பதும், மறத்தமிழனாக தன்னை அடையாளப்படுத்தும் சாதிகள், பார்ப்பனியர்களை அழைத்து ஜெயந்தி கொண்டாடுவதும் நடைபெறுகிறது. திராவிடம் என்பது தமிழ் என்பதற்கான மாற்றாக இருந்ததை அரசியல் நீக்கம் செய்து, தமிழை சாதியமாக மாற்றமுனையும் போக்கும் உருவாகி வருகிறது. தமிழ் என்பதற்குள் பார்ப்பனியர்களை அடக்க முடியும், திராவிடத்தில் முடியாது என்பதும் இந்த அடையாள அரசியல் விளையாட்டின் ஒரு விளைவு. ஆக, இக்கேள்வி மதவாத-சாதிய மனநிலையின் வெளிப்பாடாகவே வந்துள்ளது.

இக்கேள்வியில் சிக்கலான இரண்டு கருத்தாக்கங்கள் உள்ளன. ஒன்று அடையாளம் மற்றது பொதுப்பண்பாட்டுவெளி. அடையாளம் நவீனத்துவத்தின் கண்டுபிடிப்பு. சமூகத்தன்னிலைகளை வடிவமைப்பதற்கான அரசியல் சொல்லாடல். சாராம்சமானது, பிறப்படிப்படையிலானது, வம்சாவழியானது போன்ற மரச்சிந்தனை வரலாற்றின் அடிப்படையில் நிலையான தன்மை கொண்டதைப்போல காட்டப்பட்டாலும், அடையாளம் என்பது ஒரு மிதக்கும் குறிப்பான் எனலாம். அது எந்த சூழலில் எங்கு நிலைபெறும் என்பதை அதன் எதிர்மையே தீர்மானிக்கும். அவ்வகையில் மற்றமையின் எதிர்கொள்ளலில்தான் சாதியம், இனம், பால் போன்ற குறிப்பீட்டு அடையாளம் உருவாகுகிறது. ஆணற்ற இடத்தில் பெண் அடையாளம் செயல்பாடற்றது, தேவையுமற்றது. எனவே, அடையாளம் மற்றதை விலக்கி தன்னை கட்டுவதால் உருவாகுகிறது. இது எப்போதும் எதிர்மையை அழிப்பது அல்லது அடக்குவது என்கிற வன்முறை சார்ந்த ஒன்று. போர் எந்திரத்தின் கட்டமைப்பான இருமை எதிர்வில் உருவானது. அதனால் சாதிய மற்றும் தமிழ் அடையாளம் என்பது, வரலாற்றின் தேவைக்கு ஏற்ப செயல்படக்கூடிய அரசியல் சார்ந்தவை என்பதால் அதை தாண்டிய ஒரு பொதுபண்பாட்டுவெளி சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. அடையாள அரசியலின் எதிர்விளைவே பொதுப்பண்பாட்டுவெளி பற்றிய ஏக்கமாக உள்ளது. இதில் எது பொதுவானது? யாருக்கு பொதுவானது? பொது என்பதை தீர்மானிப்பது எது? என்கிற கேள்விகள் உள்ளன. அடையாளம் என்பது மற்றமைக்கு எதிராக நங்கூரமிடப்பட்ட மனித தன்னிலை என்பதால், அது தனி பொது என்கிற வெளியின் அவசியத்தை கோருவதன் வழியாக தொடர்ந்து அரசியல் விளையாட்டை நிகழ்த்துவதாக உள்ளது. தமிழ் அடையாளம் உயர்சாதிய ஆதிக்க சக்திகளால் அதன் அறிவு உற்பத்திக்கருவிகளால், சாதிய அடையாளத்தை தாண்டிய பொதுப்பண்பாட்டுவெளியாக கண்டுபிடித்து கட்டமைக்கப்பட்டதுதான். எனவே, பொதுஅடையாளம் சாத்தியமற்றது என்றால், பொதுப்பண்பாட்டுவெளியும் சாத்தியமற்றதே.

- ஜமாலன் (20-11-2011) jamalan.tamil@gmail.com

- உயிர்மை 100வது சிறப்பிதழ் டிச. 02 2011

ஜமாலன். Blogger இயக்குவது.