தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” - தொடரும் உரையாடல் -2

எனது தீராநதிக் கட்டுரையான “கன்னிவெடி புதைக்கப்பட்ட உடல்களும் கற்பித நிலங்களும்.”  என்கிற கட்டுரைக்கு விஜி“ஸ் என்பவரால் முன்வைக்கப்ட்ட விவாதம் எனது முந்தைய பதிவான ”தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” வில் சொல்லப்பட்டது.  அப் பதிவிற்கான அவரின் நீண்ட பின்னொட்டத்தின் தொடர் உரையாடலுக்கான எனது பதில் நீண்டுவிட்டதாலும்,  பொது விவாத நோக்கிலும் "தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” - தொடரும் உரையாடல்". என்கிற தனிப்பதிவாக இடப்பட்டது.  அதற்கு அவரது தொடர உரையாடலாக முன்வைக்கப்பட்ட பின்னொட்டத்திற்கான பதில் இங்குத் தனிப்பதிவாக இடப்படுகிறது. ஒரே பதிவில் இந்த உரையாடலைத் தொடர்வதால் இது தனிப்பட்ட உரையாடலாக போய்விடும் என்பதால். இதனை பொதுத் தளத்திலான உரையாடலாக மாற்றவே தனிப்பதிவாக முன்வைக்கப்படுகிறது.

நண்பர் viji's ற்கு..

முதலில் நீங்கள் எனது கன்னிவெடி.. கட்டுரையை முறையாகப் படித்து புரிந்து கொண்டிருந்தால் இந்த அளவிற்கு தம் கட்டி பேசமாட்டீர்கள். காரணம் அக்கட்டுரையில் தேசியம் குறித்த பல உரையாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பதுடன் தேசியம் என்பதும் ஒரு கற்பிதமே என்பதையும் அது முன்வைக்கிறது. அதை முழுதாகப் படிக்காமல் அதில் உள்ள ஒரு வையாபுரிப்பிள்ளையின் குறிப்பை மேலோட்டமாக படித்துவிட்டு அது எந்த சூழலில் சொல்லப்பட்டுள்ளது என்றும் புரியாமல் வாதத்தை கிளப்பினீர்கள். இருந்தும் அது பொதுவாக தப்பாக புரிந்து கொள்ளப்பட ஏதுவாகாமல் அதை தொடர்ந்தேன் நான்.  இந்த உரையாடல் அந்த தளத்தை தாண்டி கால்டுவெல் பற்றியதாக வளர்ந்து செல்கிறது. உண்மையில் ஒருவித “காழ்ப்புணர்வு” அல்லது “தமிழ் மீதான எரிச்சலுமே” உங்கள் விவாதத்தில் இருக்கிறது. சம்பந்தமில்லாமல் கருணாநிதி பணமூட்டை அரசியல் என்பதிலிருந்து உங்கள் உள்ளே செலுத்தப்பட்டிருக்கும் தமிழின எரிச்சல் புகைவிடுவது தெரிகிறது. முதலில் உங்கள் முன் அனமானங்கள் அபிப்பராயங்களை விட்டுவிட்டு பேசப்படுவதை ஒட்டி பேச முயலுங்கள். நிற்க. 

//>நீங்கள் இந்த விவாதத்தை தொடங்க வேண்டியது கவிதாசரணில்தான்.

சரி, ஆவன செய்ய முயல்கிறேன்.. ஆனாலும் நீங்கள் சில கருத்துகளை முன்வைத்து சில கேள்விகளை கேட்பதால் சில பதில்களை சொல்லவேண்டுயுள்ளது.//

நன்றி பதில்களுக்கு.

//>இந்தியாவின் ஒரே மொழிக்குடும்பம் என்று கட்டமைக்கப்பட்ட மாக்ஸ்முல்லரின் கருத்தை மறுத்து

மாக்ஸ்முல்லர் சமஸ்கிருதத்தைப் பற்றி எழுதினாறே தவிற எல்லா இந்திய மொழிகளைப் பற்றி கருத்து கூறவில்லை.//

180px-Max_Muller நீங்கள் முதலில் ஒன்றை தெரிந்து கொள்வது நல்லது. எதையும் தெளிவாக படித்தவிட்டு எழுதுங்கள். இது ஒருவகை செலக்டிவ் அம்னீஷியாவாகிவிடக் கூடாது. மாக்ஸ்முல்லர் பற்றி நீங்கள் அதிகம் படிக்க வேண்டாம். விக்கிபீடியா போன்ற ஆன்-லைன் அகராதிகளைப் படித்தால் போதும். அவர் சமஸ்கிருதம் பற்றி மட்டும் எழுதவில்லை, ஆரியம்தான் உயர்ந்த இனம் ஐரோப்பிய மூல இனம் என்றும் சமஸ்கிருத மொழிதான் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் அடிப்படை என்றும் எழுதியவர். ஆரியன் என்கிற கருத்தாக்கத்தைக் கட்டமைத்தவர் அவர்தான். நீங்கள் உண்மையில் நோக வேண்டியது அவரைத்தான். இன்றைய எல்லா பார்ப்பன-ஆரிய மேலாண்மை அதை எதிர்த்த திராவிட-தமிழ் இனப் போராட்டம் எல்லாம் அந்த புள்ளியில் துவங்கியதுதான். ஆரிய இனம் என்கிற இனவாதக் கண்ணோட்டத்திற்கான விதை அவரால் போடப்பட்டதுதான். அதன் பக்கவிளைவுதான் மற்றதெல்லாம். சரி உங்கள் கருத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேனே கால்டுவெல்லும் திராவிட-மொழிக்குடும்பம் பற்றிதான் எழுதினார். சமஸ்கிருதம்-பற்றி எழுதவில்லை.

//>“கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பம் என்பதற்கான ஆதாரங்களை தனது நூலில் தொகுத்ததே மிகப்பெரும் பங்களிப்பாகும்“. இதில் என்ன வேடிக்கை உங்களுக்கு?

என் வேடிக்கை அதல்ல. தமிழ் கலாசார, அரசியல் வளர்சிக்கே கால்ட்வெல்தான் வித்திட்டார், அவர்தான் ரட்சகன் என்ற துதிபாடல் பஜனைதான் வேடிக்கை. //

உண்மைதான் இதில் மறுப்பதற்கொ வேடிக்கை விளையாட்டிற்கோ என்ன உள்ளது? கால்டுவெல்தான் தமிழ் என்கிற குறிப்பாக திராவிடம் என்கிற கருத்தாக்கத்தை கட்டமைத்தவர். அவர்தான் தமிழ் மற்றும் திராவிடத்தின் ரட்சகர் தமிழ் இனமானத்தையும் திராவிடத்தைம் முன்வைக்கும் அரசியல் போக்கிற்கு. தமிழும் தமிழ் அரசியலும் வேறு வேறு அல்ல. தமிழ் ஒரு மொழி என்ற நிலையைத்தாண்டி அது அரசியல் கருத்துருவமாக ஆகிவிட்டபின்.. தமிழ் வேறு தமிழினம் வேறு என்பதாக பேசமுடியாது. அதாவது “தமிழ் வாழ்க! தமிழன் ஒழிக!“ என்பது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலான கோஷமே தவிர பயனுள்ள வாதமாகாது. துதிபாடுதல் பஜனை போன்றவற்றை தமிழன் கற்றுக்கொண்ட பின் அதை திரும்ப நடைமுறைப்படுத்துவதில் தப்பென்ன? அதை கற்றுத் தந்ததால்தான் இந்த பிரச்சனைகளே. ஆங்கிலேயருக்கு துதிபாடியவர்களைப் பார்த்து தமிழனும் துதிப்பாடக் கற்றுக்கொண்டான்.

//>சிந்துவெளி நாகரீகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக உள்ளது.

இதெல்லாம் ஒரு யூகம், ஸ்பெகுலேசனே தவிர, திட்டவட்டமாக யாராலும் சிந்து நாகரீகத்தைப் பற்றி பேசமுடியவில்லை. முப்பது வருடம் ஆய்வுக்கப்புரம், 1998லேயே ஐராவதம் மகாதேவன், சிந்து எழுத்துகள் யாராலும் இண்டர்ப்ரெட் செய்யவில்லை; அவர் சாகும் வரை நிலமை அப்படி இருக்கலாம் என்கிறார். தமிழர்கள் தன்மானத்திற்கு ஏன் இப்படிப்ட்ட ஸ்பெகுலேசன்க்ளும், 19ம் நூற்றாண்டு மொழியியல்களும். அவை தேவையே அல்ல.. மொழியியல், தொல்லியல் ஆய்வுகளை, அதன் நிபுணர்கள் பரிசீலித்து கொள்ளட்டும்.//

நல்லா காட்டுறாங்கடா படத்த. ஒடுக்கப்பட்ட இனம் தனது அடையாள அரசியலை நிலைநிறுத்த வரலாற்றை தேடுதல் என்பது அவசியம். ஒடுக்குபவர்களுக்கும் வரலாற்றை தனதாக்கி ஆண்டுக் கொண்டிருக்கும் ஆண்டைகள் வேண்டுமானால் வரலாற்றை விட்டுவிடலாம். அடிமைகளுக்கு வரலாறு தேவை. அப்பொழுதுதான் ஆண்டைகள் எப்படி வரலாற்றை திரித்து தங்களை ஆண்டு வருகிறார்கள் என்பது புரியும். இந்த ஸ்பெக்குலேஷன் ஊகம் எல்லாம்.. மூலவர்களாக தங்களைக்க் கட்டமைத்துக் கொண்டவர்கள் வழிகாட்டியதுதான். ஏன்? சிந்துவெளி நாகரீகத்தை ஒரு ஆரிய நாகரீகமாகவும், ஆரியர்கள் அல்லது பிராமணர்களின் புர்வஜென்ம புமியாக இந்தியா அதாவது “பாரத்“ இருப்பதாகவும் வரலாற்றை முன் வைப்பவர்களிடம் இதனை நீங்கள் சொல்ல வேண்டும். நிபுணர்கள் வேறு தமிழர்கள் வேறா? என்ன சொல்ல வருகிறிர்கள்? நிபுணர்கள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்களா? ஒரு இனத்தின் வரலாற்றை மொழியை நிபுணர்கள்தான் கட்டமைக்கிறார்கள். அதனால் பிரச்சனை பாமரர்களிடம் இல்லை உண்டு கொழிக்கும் வர்க்கத்திற்கு துணைப்போகும் கருத்தியலை கட்டமைக்கும் நிபுணர்களிடம்தான் உள்ளது.  

//>அப்படி எனில் கிழக்குலகச் சிந்தனைகள் பற்றி பல வால்யும்கள் மாக்ஸ் முல்லர் போட்டிருக்காவிட்டால் நமது “உன்னதங்கள்” எல்லாம் ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி குண்டு சட்டியில் ஓட்டிய “குதிரை” (சிந்துவெளிக்குதிரை அல்ல) ஆகியிருக்கும்

மாக்ஸ்முல்லர் இந்தியக் கலாசத்திற்கு அளித்த கொடை ஒன்ருமில்லை. அவர் ஒரு வரி எழுதாமல் இருந்தாலும் இந்திய கலாசரம் தன் போக்கில் போய்கொண்டுதான் இருக்கும்.. இன்னொன்று, அவர் இந்தியாவிற்க்கு வரவில்லை, ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி ஒடினார் என்பது கற்பனை.//

என்ன இது? புசணிக்காயைக் கூட சோற்றில் மறைக்கலாம் புதத்தை மறைக்க முடியுமா? மாக்ஸ்முல்லர் ஒரு தனிச்சிறப்பான அறிவாற்றல் உள்ள மேதை. அவர் ஜெர்மன் தாய்மொழி என்றாலும் சமஸ்கிருதம், அரபி மற்றும் பாரசீக மொழிகளைக் கற்றுத் தேர்ந்நதவர். மிகப்பெரிய கீழ்திசைவியல் ஆய்வாளர். 50 - தொகுப்புகளாக கீழ்த்திசை “புனித“ சிந்தனைகளை மொழி பெயர்த்து வெளியிட்டவர். இந்தியாவை அதன் பாரம்பரிய “புனிதம்“ என்று சொல்லித் திரியும் வேதகால “பொற்கால“த்தை உலகிற்கு உணர்த்தியவர் மட்டுமல்ல அதன்மூலம் இந்தியாவிலேயே ஆரிய மேண்மை மற்றும் மேலாண்மை பற்றிய கருத்தாக்கத்தைக் கட்டமைத்தவர். “அழித்த கொடை ஒன்றுமில்லை“ என்பதிலேயே நீங்கள் மாக்ஸமுல்லர் பற்றிக் கொண்டிருக்கும் அறிவாற்றல் விளங்குகிறது. யார் எழுதாவிட்டாலம் உலகம் தன்போக்கில் போய்க் கொண்டிருக்கும் என்கிற சாராம்சவாத கருத்தியலை எடுத்து வராதீர்கள். அது அடிப்படையில் தவறான கருத்து. ஏனென்றால் கதைகளும், தொண்மங்களும், புராணங்களும் மற்றும் இலக்கிய, வரலாற்று, விஞஞான ஆவணங்களும் இல்லாமல் உலகம் இல்லை. மொழிதான் உலகை படைக்கிறது. இதை நான் சொல்லவில்லை சைவசித்தாந்தம்கூட “நாதரூப“ உலகம் என்பதன் பிண்ணனி இதுதான். உலகம் “ஆகுக“ என்கிற சொல்லால் படைக்கப்பட்டதாக குரான் கூறுகிறது. வார்த்தை மாம்சமானது என்பது பைபிளின் வாக்கு. இப்படி.. உலகம் சொற்காளால் அதனால் பின்னப்பட்ட கதைகளால் ஆனது. அதனால் ஆய்வுகளும் அறிக்கைகளும் இல்லாமல் உலகம் என்பது இல்லை. இதுகுறித்து விரிவாக பேசுவது இங்கு உசிதமல்ல. குறிப்பாக காலனியக் கட்டுமானம் என்பதும் மேற்குலகம், கிழக்குலகம் என்பதும் ஆய்வகள் மற்றும் பிரதிகள் வழியாக கட்டமைக்கப்பட்டதே. அதனால் கால்டுவெல் எப்படி பஜனைப்பாட திராவிடர்களுக்கு ஒரு கடவுளோ அப்படி மாக்ஸ்முல்லர் ஆரிய பஜனைப்பாடிகளக்கு ஒரு கடவுள். போகிற போக்கி்ல் அந்த மாமேதைகளை தூக்கி எறிந்துவிட முடியாது.

அப்பறம் விவாதத்தை சரியாக படித்தால் தெரியும்  “ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி ஒடினார்“ என்று நான் சொல்லவில்லை. அங்கு குறிப்பிடுவது மாக்ஸ்முல்லரை அல்ல இந்தியா உலகிற்கே வழிகாட்டி உன்னதக் கலாச்சாரத்தைக் கொண்டது என்று தலித் வாயில் சாணிப்பால் புகட்டி தனது மனித நேயத்தை பண்பாட்டை பறைசாற்றிக் கொண்டிருக்கும் “இந்திய உன்னத பண்பாட்டு பஜனைக் கொஷ்டிகளைத்தான்“ சொன்னேன். மாக்ஸ்முல்லர் இல்லாவிட்டால் உலகளவில் இந்த உன்னத உடுக்கையடிகள் இல்லாமலே போயிருக்கும். கொஞ்சம் தெளிவாக அதைப் படியுங்கள்.

//>தமிழ் என்கிற இனக்கட்டுமானம் ஒரு காலனிய அரசியல் கட்டுமானம் என்பதுடன் அதற்கு ஆரிய பார்ப்னீய மேலாண்மையை எதிர்த்து விழிப்புக்கொண்ட ஒரு வரலாற்றுத் தேவை இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியுமா?

மறுக்க முடியும். சிலப்பதிகாரம் முதலிய காப்பிய காலங்களில் கூட தமிழ் என்ற இனக்கட்டுமானம் இருந்தது. ஆனால் ஆரிய பார்ப்னீய மேலாண்மைக்கு எதிரானது அல்ல.//

தமிழ் என்கிற இனக்கட்டுமானம் காலனியக் காலத்தையது. இனம் என்பதே காலனிய ஒடுக்கமுறைக் கருவிதான். இதனை மாங்கு மாங்கு என்று எனது கன்னிவெடிகள் கட்டுரையில் எழுதி உள்ளேன். விடியவிடிய கதைக்கேட்டு விடிஞ்சதும் “சீதைக்கு ராமன் சித்தப்பன்“ என்கிற கதையாக உள்ளது. சங்ககாலத்தில் தமிழ் என்கிற இனம் (இன்றைய மொழியில்) இருந்தது. ஆனால் அது தன்னை இனமாக உணரவில்லை. ஒரு குடியாக உணர்ந்தது. அதேபோல் சிலப்பதிகாரம் காலத்திலும் தமிழ் என்கிற இனம் இருந்தது. அது அரசர்களின் குடிமக்களாக இருந்தது. அதற்கு இனம் என்கிற உணர்வு வகையாகாது. அடுத்து களப்பிரர்கள் காலத்தில்தான் பௌத்த பிக்குவான புசிதபாதர் என்பவர் மதுரையில் “திராவிடச் சங்கம்“ என்கிற ஒன்றை உருவாக்குகிறார். நீங்கள் கூறிய சிலப்பதிகாரம் உள்ளிட்ட பேரிலக்கியங்கள் அக்காலத்தில் தோன்றியதுதான்.  (தமிழக பண்பாடும் வரலாறும்- கே.கே. பிள்ளை பாருங்கள்.) அக்காலத்தில் ஆரிய-பார்ப்பனிய மேலாண்மை இருந்ததையும் அதற்கு எதிராக சமண, புத்தமத எழுச்சியும் அதனை ஆதரித்த அரசுமே களப்பிரர்கள். ஆக ஆரிய மேலாணமையை எதிர்த்து களப்பிரர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்ததையும் அதன்பின் வந்த சைவ வைணவ எழுச்சிகள் களப்பிரர்கள் ஆட்சியை அகற்றியதையும், அதன்பின் தோன்றிய மூவேந்த பேரரசுகள் சைவ வைணவச் சார்புப் பேரரசுகளாக இருந்ததும் வரலாறு. ஆக, ஆரிய மேலாதிக்கம் என்பதை உணர்ந்து எதிர்க்கும் நிலை களப்பிரர்கள் காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அது இன்றை இனம் என்கிற கருத்தில் செயல்படவில்லை. மதம் என்கிற வடிவில் செயல்பட்டது. மதம் என்பது உலக பற்றிய நிலவுடமைச் சொல்லாடல் என்றால் இனம் என்பது முதலாளித்துவச் சொல்லாடல். இதன்பொருள் ஆரிய மேலாண்மையை எதிர்ப்பதற்கான வடிவம் என்பது அந்ததந்த காலத்து கருத்தியல்களால் கட்டப்பட்ட சொல்லாடல்கள் வழியேதான் சாத்தியமாகும். இதுவும் விரிவாகப் பேசப்படவேண்டிய ஒன்று. போகட்டும். நீங்கள் கூறவருவதன் சாரம் இதுதான் ”நான் உதச்சிக்கினே இருக்கேன் நீ வாங்கிகினே இரு”, எல்லாம் ஒன்றாக ஒத்துப்போவோம் என்பதுதான். இதுதான் பல ஆண்டுகளாக செய்யப்படும் திராவிட தமிழின தலித் மற்றும் பெண்கள் ஆதிவாசிகள் மீதான கலாச்சாரா ஒடுக்குமறையாக ஆரிய-பார்ப்பனிய மேலாண்மையால் செய்யப்பட்டு வருகிறது.

//ஆங்கில, மேற்கத்திய சிந்தனை முறைபடி – அதுவும் 19ம் நூறாண்டு சிந்தனைப் படி, இந்தியா போன்ற அடிமை நாடுகள் தங்களால் சுய அரசாங்கம் செய்ய முடியாதவை; ஏனெனில் அடிமைநாடுகளில் நடக்கும் (ஆரிய-திராவிட)இன சுரண்டல்களை தடுக்கவே கடவுள் ஆங்கிலேயர்களை அதிகார வர்கமாக அனுப்பினான். அதனால் நீங்கள் சொல்லும் சரித்திர தேவை இந்தியர்களுக்கு வந்தது அல்ல; ஆங்கிலேய அதிகார வர்கத்துக்கு வந்தது//

உண்மைதான் ஆங்கிலேயர்களின் தேவைதான் இந்திய வரலாற்றை இப்படி எழதியது. இதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. கடவுள் ஆங்கிலேயர்கள அனுப்பியதாக சொல்வதை ஒரு பெரும்போக்கான பாமரக் கருத்துநிலையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இன்று ஆங்கிலேயர்கள் கட்டமைத்த வரலாறு என்பதில் உள்ள சிக்கலே ஆரிய-மேலண்மைக் கருத்தியல் அடிப்படையிலேயே இந்த வரலாறு கட்டப்பட்டுள்ளது என்பதுதான். அதனால் ஒரு மாற்று வரலாறு அல்லது மாற்றுக் குரல் என்பது அவசியம். என்றாலும், ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறும் ஒடுக்குபவர்களின் வரலாறும் ஒன்று அல்ல. ஒடுக்கபவன் அதாவது ஆரிய-மேலாண்மை என்கிற ஒரு வரலாற்றுப் பெருமிதத்தை நிலைநாட்டி அதை இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையாக மாற்றிவிட்டான். இந்நிலையில் ஆங்கிலேயர்கள் கட்டமைத்திருந்தாலம், ஒடுக்கப்பட்டவனுக்கு இந்த வரலாறு அவசியப்படுகிறது. ஏனென்றால் இந்த “உட்டாலக்கடி“ பெருமிதத்தை அழித்தொழிக்க ஒரு மாற்றுப் பெருமிதம் தேவை. மனித உயிர் மற்றும் உடல் வெறுமையில் இருப்பது சாத்தயமில்லை. ஏதெனும் ஒன்றுடன் குறிப்பாக நிலத்துடன் அல்லது பண்பாட்டுடன் இணைவதன் மூலம்தான் தனது இருப்பை உணரமுடியும். அதனால் திராவிட-தமிழ் என்கிற பண்பாட்டு உருவாக்கமும் ஆரிய-பார்ப்பனிய பண்பாட்டு உருவாக்கமும் சமமானது அல்ல. ஒன்று ஆக்க நிலையிலும் மற்றது அழிவ நிலையிலும் செயல்படுபவை. ஆக, ஆங்கிலேயம் கட்டமைத்த வரலாறு என்று சொல்வது ஒருவகை பார்ப்பனத் தந்திரமே ஒழிய பரந்துபட்ட மக்களுக்கானது அல்ல.  ஆங்கிலேய அதிகார வர்க்கம் தனது இடத்தில் உயர்சாதி மற்றும் பார்ப்பன அதிகார வர்க்கத்தை வைத்துவிட்டுப் போய்விட்டது என்ன செய்வது? அதனால் போராட்டம் தொடர்கிறது. அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆங்கிலேயர்களே பரவாயில்லை என்று கூறியதன் பின்னணி இதுதான்.

நவின இந்திய வரலாறு எப்படி கட்டப்பட்டது என்பதை இந்தப் பதிவுகளைப் படியுங்கள் நெரமிருந்தால். நண்பர் ராமானுஜத்தின் இந்தியவரலாறு பற்றிய உரையாடல் இங்கு உள்ளது. எனது வரலாற்று உருவாக்க எநதிரம். ராமன் எனும் நவின தொன்மம் இங்கு உள்ளது. இவை வரலாற்று உருவாக்கம் பற்றிய புரிதலைத் தரலாம். குறைந்த பட்சம் எனது பார்வையையாவது உங்களுக்குச் சொல்லலாம்.


//> நீங்கள் கால்டுவெல்லை மறுக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக திராவிட மொழிக்குடும்பம் என்கிற கருத்தாக்கமே தவறு அப்படி ஒன்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்

நீங்கள் பெரிய தவறு புரிகிறீர்கள். கால்ட்வெல் எதோ எழுதிவிட்டு போனார். அதை மறுக்க நான் யார். மொழியியல் அடிப்படையில் நான் திராவிட மொழிக் குடும்பம் ஒன்றுள்ளது என்பதை ஏற்கிறேன். ஆனால் அதனால் தமிழ் சமுதாயத்திற்க்கு எதோ பெரிய சுபிட்சம் ஏற்பட்டுள்ளது என்பது உளரல், கால்ட்வெல் பஜனை மடத்தனம்.அதைத்தான் சொல்கிறேன்.//

கால்டுவேல் ஏதொ எழுதிவிட்டுப் போனார் என்பதிலேயே உங்களது வெறுப்பு வெளிப்படுகிறது. யாரும் கால்டுவெலை மறுக்க வேண்டிக் காத்திருக்கவில்லை. நீங்கள் கங்கணம் கட்யதால் அதை எழுதினேன். கால்டுவேலை மறுப்பது என்பது அவரது கருத்தாக்கத்தை அழித்தொழிப்பதன் மூலமே சாத்தியம். பரவாயில்லை உங்கள் பெருந்தன்மைக்கு ஒரு பாராட்டு குறைந்தபட்சம் திராவிட-மொழிக்குடும்பம் ஒன்று இருப்பதை அங்கீகரித்ததற்கு. மறுபடியும் மறுபடியும் கிளிப்பிள்ளை மாதரி சொன்னதையெ சொன்னால் எப்படி? தமிழ்சமூகம் என்கிற கட்டுமானத்திற்கு கால்டுவெல் பிரதி ஒரு அடிப்படை. அதுதான் அதன் முக்கியத்தவம். அதுதான் தமிழர்களின் தன்மானத்திற்கான அடிப்படை. மக்களக்கு சுபிட்சம் ஏற்பட ஒரேவழி.. உயரசாதி-பார்ப்பன மணோபாவத்தை விட்டு எல்லாம் சமம் எனகிற சமத்துவ சிந்தனைக்கு வந்து பிறகு மலம் அள்ளுதல் துவங்கி அத்தனை வேலைகளையும் பொதுவாக்கி அதை ஒரு பொதுத் தொழிலாக மாற்றினால் வரும் “சுபிட்சம்”. கால்டுவெல் பஜனை மடத்தனமாக இருந்துவிட்டுப் போகட்டுமே.. அறிவாளிகள் அதை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும். 

//உதாரணமாக, ஒரு இலங்கியல் விஞ்ஞானி, புலி, பூனை, மற்றும் பல விலங்குகள் அவற்றின் நடை, எலும்புகள், மூளை வளர்ச்சி, வால் நீளம் ஆகியவற்றை கோள் காட்டி , அந்த விலங்குகள் ஒரு `விலங்குக் குடும்பம்` என்கிறார். அந்த விஞ்ஞான தீர்ப்பினால் அவ்விலங்குகளுக்கு எதாவது நன்மை உண்டா? உங்கள் லாஜிக் அதைப்போல் உள்ளது//

அப்படியா சொல்லவே இல்ல. சின்ப்புள்ளத்தனமா நான் தான் கொஞ்சம் ஒவரா உளறிட்டனோ. கண்டபிடிச்சிட்டாங்கய்யா? கண்டபிடிச்சிட்டாங்க? என்ன சொல்லி சமாளிக்கலாம். ம். ஆண்டவன் மேல பாரத்த போட்ட ஒரு பீஸ போட்டு உடுவோம். (வடிவேலுக்குரலில் வாசியுங்கள்.)

மனிதன் ஒரு பண்பட்ட மிருகம். மிருகத்திற்கு தன்னுணர்வ என்கிற 6-வது புலன் இல்லை. இதெல்லாம் தெரியாத ஒரு விலங்கியல் விஞ்ஞானி விஞ்ஞானி இல்லை கசாப்புக் கடைக்காரன். மொழி என்பது விலங்கிலிருந்து தன்னை வித்தியாசப்படுத்தி உயர்வகைப் பாலூட்டியான மனிதன் வளர்த்துக் கொண்டுள்ள ஒரு ஆற்றல். அல்லது அது ஒரு உடலின் புலனுருப்புப் போன்றது. மொழிதான் மனிதனை கட்டமைத்துள்ளது. மொழி இல்லையேல் மனிதன் இல்லை. அவன் ஒரு விலங்கினமாகவே இருந்திருப்பான். இதன்பொருள் மனிதன் விலங்கைவிட உயர்ந்தவன் என்பதல்ல. மனிதன் ஒரு மற்றொருவகையினம் அல்லது பரிணாமத்தின் உயர்வகை விலங்கு என்று வைத்தக் கொள்ளுங்களேன். அதனால் மொழிக்குடும்பம் மட்டுமல்ல.. பேசப்படும், எழுதப்படும், காணப்டும், கேட்கப்படும், உணரப்படும் எதுவும் மனிதனுக்கு நன்மை பயப்பவையே. நன்மை என்றவுடன் 3 வேளை உண்டு கழித்து மணைவிகளை “உண்டாக்கி“ கழிக்கும் பயன்பாடுகள் இதில் நேரடியாக இல்லை. ஆனால், மனிதன் உயரிவாழ்தல் என்பதும் தன்னை அர்த்தப்படுத்திக் கொள்வதும் இந்த மொழிகளால்தான். உண்ணவும், உண்டாக்கவும்கூட மொழி அவசியப்படுகிறது. இல்லாவிட்டால் விலங்ககளைப்போல பொறுக்கியோ அல்லது வேட்டையாடியோ உண்ணவும், குடும்பம் போன்ற அமைப்புகள் இல்லாமல் யாருடனும் கூடி உண்டாக்கதலும் நடைமுறையாக இருந்திருக்கும். மனிதன் மொழியை அடைந்தவுடன் தன்னை அதற்கு உட்படத்திக் கொள்கிறான். இதுவும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியதே. குறிப்பாக திராவிட-மொழிக்குடும்பம் என்பதுதான் தமிழனை கட்டமைத்துள்ளது ஒரு இனமாக என்பதையே இத்துடன் 100-வது முறையாக சொல்கிறேன். திரும்பவும் அதையே சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தமிழனுக்கு திராவிட மொழிக்குடும்பம் ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய நன்மை ஆரிய-சமஸ்கிருத-பார்ப்னிய மேலாண்மையை எதிர்த்து தன்னை தமிழனாக முன்வைக்கம் ஒரு மிகப்பெரிய விடுதலைப் பரப்பை தன்னம்பிக்கையை தன்மானத்தை சுயமரியாதைய ஏற்படுத்தி உள்ளது. தமிழன் தன்னை ஆள்வதற்கான தன்னிலையை கட்டமைத்தது. தமிழனின் அறிவுப்பரப்பை வரலாற்றை தனது பெருமிதத்தை நிலைநாட்டியுள்ளது. இவைதான் தமிழன் உண்ணவும், உண்டாக்கவுமான உணர்வுகளை தந்துள்ளது. இல்லாவிட்டால் வேதம் கேட்டு காதில் ஈயத்தை ஊற்றிக்கொள்ளும் செவிடர்களாக தான் சார்ந்த பெண்ணுடலை பார்ப்பனுக்கு தந்துவிட்டு தண்டனையாக பார்ப்னுக்கு சவுக்கடியும், பார்ப்பன பெண்ணுடலை தான் அனுபவித்துவிட்டால் அவனது ஆண்குறியை அறுப்பதுமான சமததவமற்ற ஒரு “வஞ்சனையான வஞசகமான சமூக நீதிக்கு” அடிமையாகி இருந்திருப்பார்கள். இதெல்லாம் பேச நிறைய உள்ளது. மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.     

//> சமஸ்கிருதம் இந்தியாவிற்குள் நுழைந்தது என்பதை மறுக்க மாடடீர்கள் என நினைக்கிறேன்.

இந்தியாவில் பல மொழிகள் பல காலங்களில் நுழைந்தன. ஆரிய , திராவிட, திபெத்திய, ஆஸ்திரோ-ஆசிய, இன்னும் இனம் தெரியாத மொழிக் குடும்பங்கள் கிமு 8000 முதல் கிமு 3000 வரை நுழைந்தன தமிழ்நாட்டில் தொன்தமிழ் 2700 ஆண்டுகள் முன்னால் நுழைந்தது//

அதக்கு என்ன இப்போ? இந்தியாவின் புர்வீகம் பற்றியதல்ல இந்த உரையாடல். இது உங்கள் வரலாற்று அறிவின் அசாத்தியத்தை காட்டுகிறது. இடையில் தமிழ் நுழைந்தது என்பதன் மூலம் தாங்கள் கட்டமைக்க விரும்பபு கருத்து புரிகிறது. நுழைந்தது அல்ல பிரச்சனை மற்ற எந்த திபேத்திய. ஆஸ்திரேலிய இன்ன பிற மொழிகளும் தமிழனை, பெண்களை, சூத்திரர்களை மற்றும் தலித்துகளை  அடிமையாகவும் தான் மட்டுமே வாழப்பிறந்தவர்களாகவும் உலகில் தனது பாஷையே தேவ பாஷையாகவும் சொல்லி பிறரை ஆப்படிக்க முயலவில்லை. அதனால் திராவிட-மொழிக் குடும்பம் என்கிற கருத்தாக்கமும் ஆரிய-சமஸ்கிருதம் என்கிற இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்கிற கருத்தாக்கமும் அரசியல் சமநிலைக் கொண்டதல்ல. ஒன்று உயிர்வாழ முயல்வது மற்றது பிற உயிரை அழிப்பது.

//> அதனால் எல்லாவற்றையும் விதந்தோந்தி ஏற்பதும் கண்மூடி நிராகரிப்பதும் என்வரையில் சரியான நிலைப்பாடு இல்லை.

துதி மனப்பான்மையை கண்னை மூடி நிராகரிக்கிரேன். எவ்வித பஜனாவளிகளையும், அது தமிழ்நாட்டு `பகுத்தறிவி`லிருந்து, உற்பத்தியானாலும், கருணநிதி போன்ற திராவிட பணமூட்டைகள் ஆசிபெற்றாலும் மறுக்கிறேன்.//

வாங்க சார். இப்பத்தான் நீங்கள் மனம் திறந்து உரையாடுகிறீர்கள். அருமை. இத இத இததான் நான் எதிர்பார்த்தேன். “பகுத்தறிவு“ எனகிற ஒவ்வாமையும், கருணாநிதி என்கிற அச்சமூட்டும் கனவும் (nightmare) உங்களை ஆட்டிப்படைக்கிறது அழைக்கழிக்கிறது. அதைபேசும் தருணம் இதுவல்ல. உங்களது பிரச்சனை கால்டுவெல்லோ, தமிழினமோ, கருத்தியலோ அல்ல கருணாநிதியும் அவரது பணமூட்டையும்தான்.  நாளை கருணாநிதி மஞ்சள் துண்டை மாற்றி காவித்துண்டுடன் சமஸ்கிருதம் தேவபாஸை என்று அறிவித்து அனைத்து பார்ப்னர்களுக்கும் பழைய பொற்காலத்தை முன்வைத்தாலும் நீங்கள் கருணாநிதி என்கிற காழ்ப்புணர்சியில் அதை மறுக்கலாம். மெய்பொருள் காண்பதல்ல அறிவு... யார் சொன்னான் என்பதே அறிவு. அதிலும் கருணாநிதியா ”கண்ணுல காட்டப்படாது” என்றால் என்ன செய்வது? இவ்வளவு நேரப்பேச்சும் வெட்டியாக விழலுக்கு இரைத்த நீர்தானோ? கருணாநிதியே தனது தமிழுணர்வை மறந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போலிருக்கிறது. தமிழையும் தமிழனையும் மற்றும் கருணாநிதியையும் பகுத்தறிவையும் வாழ வைத்துக் கொண்டிருப்பது நாங்களல்ல நீங்கள்தான் என்பது உங்களுக்குப் புரியும்போது இந்த உரையாடல் வேறு தளத்தில் உங்களுக்குப் அர்த்தம் தரலாம். அதுவரை இப்படி உரையாடி களைப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?

பதில் என்ற பெயரில் எதாவது புதிய பிரச்சனையுடன் வாருங்கள் நண்பரே.. சொன்னதையே வேறு வேறு வாக்கியங்களில் சொல்வதால் நமது உரையாடல் அலுப்புட்டும் திண்ணைப்பேச்சாக அல்லது வெட்டிக்கதையாக ஆகிவிடும்.
நன்றி.. தொடர் உரையாடலுக்கு.

அன்புடன்
ஜமாலன்.

6 comments:

saki சொன்னது…

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா தொடரும் உரையாடல்கள்/ உரையாடல்களுக்கான பதில் நன்றாக இருக்கிறது .

வன்பாக்கம் விஜயராகவன் சொன்னது…

ஜமாலன்

நான் மடலை அதிகமாக்க விரும்பவில்லை. அதனால் சில பாயிண்டுகளை மற்றுமே விவாதித்தேன். என் சுருக்க நோக்கில் எழுதப்பட்டவை இன்னும் பெரிய அளவில் அலசப்பட்டுள்ளது. அது போகட்டும். என் கரு வாதங்களின் வெளியிலுள்ள கருத்துகளை தவறாக புரிந்தால், அப்படியே இருக்கட்டும். வாதங்களை இன்னும் tangetial ஆக ஆக்க விருப்பமில்லை. உங்கள் எல்லா புரிவதையும் சரியாக்குவது என் வேலையல்ல.

அதிகார வர்கங்களின், பண திமிங்கிலங்களின் `திராவிடம்`; என்ற தூபங்களில் எவ்வளவு மயங்கி உள்ளீர்கள் என சொல்கிறது உங்கள் மறுப்பு; இந்தியாவிலேயே மேல் பத்து பணக்கார குடும்பங்களில் ஒன்று கருணநிதி குடும்பம். அதன் சொத்தளவு 20,000-50000 கோடி ரூபாய்களில் மதிப்பிடப்படுகிரது. அவர் முன்வைக்கும் திராவிட கருத்தாக்கத்தின் ஒரு தூண் கால்ட்வெல். அதனால்தான் ஆளும் வர்கங்கள் கால்ட்வெல் துதியை முன்வைக்கிறன. அதைப் புரிந்து கொள்ளாமல் `சம்பந்தமில்லாமல் கருணாநிதி பணமூட்டை அரசியல் என்பதிலிருந்து` என்றெழுதுகிறீர்கள்.

இதில் கால்ட்வெல் உண்மையா பொய்யா என்பது ஒரு சிறிய பாகம். கால்ட்வெல் 1860 ல் ஒரு அமெச்சுர் மொழியிலாளர். அச்சமயத்தில் தான் மேற்கத்திய மெய்யியல் எழுந்து, விழுந்து, தத்தி தத்தி இந்திய மொழியகளை ஆராய்ந்து வந்தது. அதனால் கால்ட்வெல் (அல்லது மாக்ஸ் ம்யூல்லரின்) தவறுகளை மன்னித்து விடலாம். மோட்டார் வண்டியின் செயல் நிலை 1910ல் எப்படி இருந்த்தோ, அப்படித்தான் மொழியியலின் செயல்நிலை 1860ல்.

ஆனால் கால்ட்வெல்லை தலை மேல் வைத்து துதிக்கும் , தமிழ்நாடிலுள்ள அரசியல் , கலசார போக்கைத்தான் கண்டிக்கிறேன். அதற்கு கால்ட்வெல் கொஞ்சம் கூட அருகதை அற்றவர். அதுதான் என் வாதத்தின் கரு. அதனால்தான் எனக்கு அரசியல், கலாசார போக்கின் மீது காழ்ப்பு.. இதைப் புரிந்தால் சரி - என் நேரம் வீணாக வில்லை.

ஜமாலன் சொன்னது…

saki said...

//தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா தொடரும் உரையாடல்கள்/ உரையாடல்களுக்கான பதில் நன்றாக இருக்கிறது .//

நன்றி சகி...

ஜமாலன் சொன்னது…

நண்பர் விஜி'ஸ்..

உங்கள் புரிதலுக்கு நன்றி. கருணாநிதியின் அரசியல் குறித்தது அல்ல இவ்வுரையாடல். நானும் இதனை நீட்டிக்க விரும்பவில்லை. ஆரிய - திராவிட மாயையில் சிக்கிக்கொள்ளும் பக்குவமற்ற அரசியல் புரிதல் எனக்கு இல்லை.

நமது புரிதல்கள் எல்லாவற்றையும் ஒருவருக்கோருவர் சரியாக்கிக் கொள்வதும் சாத்தியமில்லை. கருணாநிதியை வைத்து நீங்கள் கால்டவெல் பற்றிய முடிவிற்கு வருவது அத்தனை ஏற்புடைய வழிமுறையாகத் தெரியவில்லை. ராமகோபாலனும் பிஜேபியும் ஆரிய உன்னதம் பேசுவதை வைத்து மாக்ஸ்முல்லரை குறைகூற முடியாது.

அதேநேரத்தில் கருணாநிதியின் குடும்பம் இந்திய பணக்காரர்களில் ஒருவராக அதாவது சன் குழுமத்தை கூறுகிறீர்கள் என நினக்கிறேன்... இருப்பது உலகறிந்த விடயம். நமது உரையாடல் மைய நீரோட்ட அரசியல் சார்ந்தது அல்ல. கோட்பாடுகள் அதன் அரசியல் பின்புலங்கள் சார்ந்தவை.

மற்றபடி.. உங்களது உரையாடல் செழுமையாக முன் வைக்கப்பட்டுள்ளது. விரிவாக தற்சமயம் எழுத இயலவில்லை. இங்கு வார விடுமுறை என்பதால் இணையத்தில் அதிகம் செவழிக்க இயலுவதில்லை. அலுவலக நேரம்தான் இணையஉலாவலுக்கு இங்கு ஏற்ற நேரம். :)

பிறகு விரிவாக பேசலாம்.

நன்றி.

குமரன் (Kumaran) சொன்னது…

உங்களுக்கு கொஞ்சம் பொறுமை அதிகமோ? இல்லாவிட்டால் இப்படியெல்லாம் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதில், எப்படியும் மறுபக்கம் நாம் சொல்வதைப் புரிந்து கொள்ளாது என்று தெரிந்திருந்தும் சொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு சுவை உண்டாகிவிட்டதா?

நாம் ஒரு தளத்திலும் எதிரில் நின்று உரையாடுபவர் வேறொரு தளத்திலும் இருந்து கொண்டு மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தால் அயர்ச்சி தான் ஏற்படுகிறது எனக்கு.

ஜமாலன் சொன்னது…

குமரன் (Kumaran) said...

நன்றி நண்பர் குமரன்.

//உங்களுக்கு கொஞ்சம் பொறுமை அதிகமோ? இல்லாவிட்டால் இப்படியெல்லாம் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதில், எப்படியும் மறுபக்கம் நாம் சொல்வதைப் புரிந்து கொள்ளாது என்று தெரிந்திருந்தும் சொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு சுவை உண்டாகிவிட்டதா? //

அப்படி எல்லாம் இல்லை. இது பொதுவாக பலருக்கும் போகட்டுமே என்றுதான். உரையாடல் என்பது வெற்றித் தோல்விக்கானது அல்ல. எதிரில் இருப்பவரைவிட் அது நமக்கான தெளிவை அதிகப்படுத்தகிறது. இருப்பினும் சொன்னதையே சொல்லும் அலுப்புட்டும் உரையாடலாக சிலது இப்படி அமைந்துவிடுகிறது என்ன செய்வது? அடிப்படையில் நான் பெறுமைசாலி இல்லை. நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்.

//நாம் ஒரு தளத்திலும் எதிரில் நின்று உரையாடுபவர் வேறொரு தளத்திலும் இருந்து கொண்டு மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தால் அயர்ச்சி தான் ஏற்படுகிறது எனக்கு.//

உண்மைதான். எனக்கும் அதே.. இறுப்பினும் இதை எல்லாம் ஒரு பயிற்ச்சியாக எடுத்துக்கொள்ள வேணடியதுதான்.

அன்புடன்
ஜமாலன்.

ஜமாலன். Blogger இயக்குவது.