ரகசியமாக அது.
ஈவ் இன்ஸ்லரின் ”சுவர்” கவிதை – அடையாளமாதல் மற்றும் இருப்பாதல் பற்றிய ஒரு வாசிப்பு.
Posted வியாழன், ஏப்ரல் 29, 2010 in அடையாள அரசியல், ஈவ் இன்ஸ்லர், திறனாய்வு, வளைகுடா அரசியல், becoming-minor, becoming-minority, Eve Ensler by ஜமாலன்ரகசியமாக அது.
அனைவருக்குமான அறிவியல் மற்றும் எனது அறிவியல் தமிழ் கல்வி
Posted செவ்வாய், ஏப்ரல் 27, 2010 in அறிமுகம், அறிவியல், அனுபவம், கதையாடல், நாகர்ஜீனன், மற்ற பதிவுகள் by ஜமாலன்இது குறித்து கையேடும் நானும் சிலமுறை உரையாடி உள்ளோம். அறிவியல் ஆய்வு மாணவராக உள்ள அவர் தமிழில் அறிவியல் அடிப்படைகளை, அதன் வளர்ச்சியை அறிமுகப்படுத்துவதற்கு பொருத்தமானவர். ஆர்வம் உள்ள நண்பர்களைக் கொண்டுக் கூட்டுப்பதிவாக இதனை செய்யலாம் என்ற எண்ணம் இருந்தது. முதலில், கையேடு முன்முயற்சி எடுத்து அறிமுகமாக சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். என்னைப்போன்ற சோம்பேறிகளைச் சேர்த்துக் கொண்டு கூட்டுப்பதிவாக இயங்குவதைவிட.. அவர் தனியாக முயன்றிருப்பதும் சரியானதுதான். தமிழ் அறிவியல் சிந்தனைக் குறித்த பதிவு எங்களது பொதுவான ஏக்கம் என்றே சொல்லலாம். நண்பர் அதில் முன்முயற்சி எடுத்துள்ளதைப் பாராட்டலாம்.
சான்றாக, பெருவெடிப்பு கொள்கைப்படி பிரபஞ்சம் பெருவெடிப்பில்தான் உருவாகுகிறது என்றால், பெருவெடிப்பு எங்கு நிகழ்ந்தது? என்று கேட்க முடியாது. எங்கு என்கிற இடம் பெருவெடிப்பிற்குள்தான வருகிறது. பெருவெடிப்பிற்கு வெளி என்று ஒன்று கிடையாது. பெருவெடிப்பிற்குள்தான் வெளி. அதாவது உள்ளேதான் வெளி. இதை கற்பனை செய்ய நமது மனமோ, மூளையோ சாத்தியமற்றதுதானே. இங்குதான் God does not play dice என்று ஐன்ஸ்டின் சொன்னதின் விளக்கம் புரியும். இயற்கையின் ஒழுங்கு அத்துனை அற்புதமானது. அது விளையாட்டு அல்ல. என்ன செய்யலாம் கையையும் காலையும் உதைத்து பரக்க பரக்க விழித்துதான் இதனை சொல்ல முடியும். அதன் பிறகும் தலை சுத்தினால் ஒன்றும் செய்ய முடியாது. இயற்பியல் புரிவதே கடினம் என்பதால் எங்கள் ஆசிரியர்கள் ஒருவித ஆட்டத்துடனும் சைகைகளுடனும்தான் கற்பித்தார்கள். இயற்பியல் எண்களை எழுத்தாக மாற்றும் ஒரு அறிவியல் என்பதால், கணிதம் அதன் அடிப்படையானது. அதனால்தானோ என்னவோ, எல்லா பள்ளிகளிலும் கணித ஆசிரியருடன் ஒரு நட்பு ஏற்பட்டுவிடுகிறது.
ஒரு டீ ஆர்டர் பண்ணி 1 மணிநேரம் டீக்கடையில் உட்கார்ந்து இலக்கியம் அலசுவது என்பதுதான் அப்போதைய போக்கு. பெரும்பாலும் சென்னை திருவல்லிக்கேணி டீக்கடைகளில் இரண்டு மூன்று சிறுபத்திரிக்கை இலக்கியவாதிகளையோ அல்லது புரட்சிகர மார்க்சியவாதிகளையோ காணலாம் அந்த நாட்களில். இப்பொழுதோ டீக்கடையின் இடத்தை பார்கள் கைப்பற்ற, இலக்கிய வம்புகளும் சண்டைகளும் சகஜமாகிவிட்டது. நமது நண்பர் ஒருவர் கூறியதைப்போல மது இறைவனின் பானம். அதை திருடிக் குடித்தால். நாமும் இறைவன்தானே. அப்பறம் எதிரில் உள்ளவனை எதற்கு மதிக்க வேண்டும் என்பதால் இருக்குமோ? எதிர் கருத்து சொன்னால் ஆட்களை ஆட்டோவில் அனுப்பும் “அற்புத“ கலாச்சாரம் வேறு உருவாகி உள்ளது. இல்லாவிட்டால் இருட்டில் அழைத்துபோய் மூக்கை உடைக்கும் கலாச்சாரமும் உள்ளது. முன்பெல்லாம் தலைமறைவு புரட்சியாளர்கள்தான் முகவரி சொல்ல மாட்டார்கள். இப்போ பிரபலங்களே முகவரி மறைப்பதும், முகவரிகளை மறைக்காமல் தருபவர்கள் இப்படி அடிபட்டு பிரபலமாவதும் நடக்கிறது. அரசியல் பதிவில் கலாச்சாரம் வேண்டாம்.
கிராமமும் நகரமும் இரண்டு தனித்த தீவுகள், தனித்த குடிமக்களைக் கொண்ட நிலவெளிகள்தான். நகரங்களின் உருவாக்கம் நாகரீகத்தின் சின்னமாக கருதப்படுகிறது. உண்மையில் நகரங்கள் அழிவின் பல உட்கூறுகளைக் கொண்டவைதான். அவை முதலில் மனிதத்தை அழிக்கிறது. நாகரீகம் என்பதே அழிவின்மீதும், ஏற்றத்தாழ்வின் மீதும்தானே கட்டப்படுகிறது. நாகரீகத்தின் புறவடிவம்தானே நகரம் என்பது. ”நகரம் என்ற புலத்தை ஒருவிதத் திணை என்று கொண்டால் அதன் அழிவு என்ற சாத்தியமான உள்ளுறையின் விரிவாக்கம்தான் கொள்ளைநோய்.” என்பதை காம்யுவின் “கொள்ளை நோய்” நாவலைக் கொண்டு விவரிக்கிறார் நாகார்ஜீனன். அறிவியல் பதிவில் வரலாறு வேண்டாம்.
ஜமாலன் – 27-04-2010
கவிதையின் ‘நான்’ = கவிஞரின் ‘நான்’: கடிதமும் பதிலும்
Posted செவ்வாய், ஏப்ரல் 20, 2010 in அறிவிப்பு, அனுபவம், கவிதைகள், விவாதம் by ஜமாலன்பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் மணிவிழா
Posted சனி, ஏப்ரல் 17, 2010 in அறிவிப்பு, சென்னை பல்கலைக்கழகம், தமிழ் கணினி, தேய்வசுந்தரம் by ஜமாலன்
தமிழ் கணினிக்கு பங்காற்றியவரும், தமிழ் அறிஞரும், தமிழ்மொழித்துறை தலைவராக சென்னைப் பல்கழைக் கழகத்தில் பணிபுரிபவருமான பேராசியர் ந. தெய்வசுந்தரம் அவர்களுக்கு மணிவிழா. பேராசிரியர் அவர்களை 1985-ல் சிலமுறை அவரது துறை அலுவலகத்தில் சென்னை பல்கழைக்கழகத்தில் சந்தித்திருக்கிறேன். பொதுவான தமிழ் மொழி ஆர்வத்தில் இலக்கிய பற்றி அறிந்துகொள்ள அவரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இன்று என்னை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு பேராசிரியருக்கு அவை முக்கியமான சந்திப்புகள் இல்லை என்றாலும், என்னால் அவை மறக்க முடியாத சந்திப்புகள் என்பதை நினைவுகூர்கிறேன்.மதிப்பிற்குரியீர்....
வணக்கம்....
பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் மணிவிழா 19.04.2010 அன்று மாலை 6.00 மணியளவில் சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். தாங்கள் தவறாது வருகைதருமாறு வேண்டுகிறேன். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினால் ndsmanivizha@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
நன்றி.
அன்புடன்முனைவர் ப. குமார்சென்னைப் பல்கலைக்கழகம்
கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெண்.
Posted புதன், ஏப்ரல் 14, 2010 in அறிவிப்பு, இலக்கியம், கவிதைகள், விவாதம் by ஜமாலன்லீனா மணிமேகலை இலக்கியம், கவிதை என்று ஒரு பிரதியை தமிழ் இலக்கியச்சூழலின் வாசிப்புக்கு முன்வைக்கும்போது, அப்பிரதியின் சொற்பிரயோகங்கள் பாடுபொருள்கள் ஆகியவற்றை இலக்கியம் என்கிற வகைமையில்தான் நாம் அணுகவேண்டும் என்று நம்புகிறோம். இதில் எழுத்தாளரின் நோக்கம் (அதிர்ச்சி மதிப்பீட்டை முன்வைத்து புகழ்பெற நினைப்பது என்று கருதப்படுபவை உட்பட) இலக்கியத்தைப் படைப்பதுதானா என்பதை மதிப்பிட அளவுகோல் எதுவும் கிடையாது. ஒரு படைப்பாளி எதற்காக இலக்கியம் படைக்கிறார் என்பது நுட்பமான வாசிப்பாளனுக்கும், விமர்சகனுக்கும் அசட்டுத்தனமான கேள்விகளாக மட்டுமே இருக்கமுடியும். தனது உள்நோக்கங்கள் வழி உருவாக்கப்படும் சில வலைப்பின்னல்கள் வழியாக ஒரு எழுத்தாளர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடியும். ஒரு சமூக அமைப்பு ஒரு எழுத்தாளாரை மேலாக வைத்து கொண்டாடுவதும், நிராகரிப்பதும் இந்த வலைப்பின்னல் விளையாட்டில் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால், காலம் அந்த இடத்தை கேள்விக்கு உட்படுத்தும்போது, பின்னர் ஒரு நாள் வரலாறுகளின் ஆற்றங்கரையில் படைப்பின் ஆதார ”சுருதி” கண்டடையப்படும் என்று வேண்டுமானால் நாம் ஆறுதல் அடையலாம்.
இலக்கியம், கவிதை என்கிற முகாந்தரத்தில் ஒரு பிரதி வாசிக்கக் கிடைக்கும்போது, அதை அப்படித்தான் வாசிக்கவேண்டுமே தவிர எழுத்தாளரின் தனிப்பட்ட, சொந்த மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கணக்கிலெடுத்து அப்பிரதியை நிராகரிப்பது தவறு. இதற்கு அர்த்தம், எழுத்தாளரின் வாழ்க்கையில் அவர் செய்ததாகக் கூறப்படும் அநீதிகள், ஏமாற்றல்கள் (அவை நடந்திருந்தால்) போன்றவை முக்கியமில்லை என்பதோ, அவரது பிரதியின் மேல்விழும் இலக்கிய முத்திரை இவற்றையெல்லாம் புனிதப்படுத்திவிடும் என்பதோ இல்லை. அந்த சம்பவங்களை அதற்குத் தகுந்த நடைமுறைத் தீர்வு தருகிற தளங்களில், சம்பந்தப்பட்டவர்கள் அணுகித் தீர்வுகாணுதல் நன்மை பயக்கும் என்பது எங்கள் கருத்து.
இதன்பொருள் இலக்கியமும், எழுத்தும் கண்டனத்துக்கு அப்பாற்பட்டவை என்பது அல்ல. கண்டிப்பதற்காக எழுத்தைக் குறிவைத்து காவல்துறையில் புகார் கொடுப்பது, எழுத்தாளரை தனிப்பட்ட முறையில் தாக்குவது போன்றவை மோசமான முன்னுதாரணங்கள் ஆகிவிடும். மேலும் கண்டனத்தை எதிர்கொள்வதாக செய்யப்படும் செயல்களிலும் (இக்கூட்டம் உட்பட) வேறுபிரச்சனைகள் உள்ளன என்பதையும் நாம் மறுக்கவியலாது. இச்சூழலில், இலக்கியத்துக்கு வெளியே செயல்படும் அரசியல் மதக் கட்சிகளுக்கோ நிறுவனங்களுக்கோ, இலக்கியம் என்று எழுதப்பட்டிருக்கும் பிரதியைக் குறித்து புகார் கொடுக்க தார்மீக உரிமை இல்லை என்பதைமட்டும் இங்கே பதிவு செய்கிறோம்.
நிற்க.
இந்த நேரத்தில், இணையத்தில் சர்ச்சைக்குள்ளான லீனா மணிமேகலையின் கவிதைகள் (பார்க்க, http://www.penniyam.com/2010/01/blog-post_5280.html) பற்றி சிலவார்த்தைகள்:
நான் லீனா என்று தொடங்குகிறது முதல் கவிதை, இலங்கையில், இந்தியாவில் ஆரம்பித்து துருக்கியில் ஈராக்கில் வியட்நாமில் என்றெல்லாம் வன்கொடுமைப்படுத்தப்படுகிற பெண்கள் “நான் லீனா” என்கிற சுயம்-சுட்டும் (self-referential) பெயருக்கு கீழே கொண்டுவரப்படுகிறார்கள். இதன்மூலமாக இப்படி கொடுமைக்கு ஆளாகிற பெண்கள் எல்லாருக்குமான பிரதிநிதியாக லீனா என்கிற பெண் காட்டப்படுகிறார். முதல் கேள்வி, ஏன் லீனா என்கிற பெயர் மீனா என்றோ வேறொன்றாகவோ இருக்கக்கூடாது? எழுத்தாளர் தன் பெயரை கவிதைசொல்லியின் ’நானாக’ இப்படி கொண்டுவரும்போது, உலகத்தின் எல்லாக் கொடுமைப்படுத்தப்படும் பெண்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆசையை வெளிப்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. கவிதைசொல்லியின் ‘நானுக்கும்’ எழுத்தாளரின் ‘நானுக்குமான’ வித்யாசத்தை கவிதை அழித்துவிட்டது. இந்த இரு நான்கள் ஒன்றா இரண்டா என்று தெரியாத அளவுக்கு—--பின்னிப்பிணைந்து கிடக்கும் இரண்டு பாம்புகள் ஒன்றா இரண்டா என்பது போல--தோற்றம் தருகிறபோது, எந்தத் தளத்திலிருந்து ‘எழுத்தைப் பாருங்கள், எழுத்தாளரைப் பார்க்காதீர்கள்’ என்று நாம் சொல்லமுடியும்? பிரதிநிதித்துவ அரசியலில் (representational politics), “நான்“ என்கிற எழுத்தாளரின் சுயம் அப்படியே தன்னடையாளத்துடன் நிற்கிறது இக்கவிதையில்.
கவிதை வன்புணர்ச்சி விஷயத்தில் அறிவாளி ரோகியிலிருந்து தொடங்கி புரட்சிவேண்டுபவன் வணிகம் செய்பவன் மாலுமி விவசாயி ஈறாக இழுத்துப் பேசுகிறது. எழுதப்பட்டிருக்கிற விதம் இவர்கள் எல்லாருமே இப்படித்தான் என்பதாக. “எவனா இருந்தா என்ன, ஆம்பிளை தானே” என்கிற தொனியே கவிதையின் தொனி. வன்புணர்ச்சி என்கிற அபாயத்தையும் நிகழ்வையும் தொடர்ந்து பெண்கள் எதிர்கொள்ளும் சூழல்கள், கட்டாயங்கள், உலகளாவிய முதலீட்டிய நுண் அதிகாரங்கள், அரசியல்கள் பற்றி எந்தப்புரிதலும் இல்லாமல், இவை அனைத்தையும் ’ஆம்பிளை’ என்கிற ஒரு பதத்துக்குள் இந்தத்தொனி இட்டுநிரப்புகிறது. வன்புணர்ச்சி என்பது ஆண்களின் விழைவால், விழைவு தருகிற குறிவிரைப்பால் மட்டுமே நடப்பதில்லை என்பதுதான் பாரிய உண்மை. எண்ணற்ற கொடுமைகளுக்கு பெண்களை ஆளாக்கின பல்வேறு அரசியல்களையும் போர்களையும் ஆணின் பாலியல்-விழைச்சில் அடக்கிவிட முடியுமா என்ன?
ஈழம், போஸ்னியா இன்னும் எண்ணற்ற நாடுகளில் பாலியல் வன்புணர்ச்சி என்பது போரின், அரசின், இறையாண்மை அரசியல்களின் அதிகார ஆயுதமாகவே உள்ளது. மேலும், போரில் ஆண்-பெண் உடல்கள் இரண்டும் கருவிகளாக மாற்றப்படுகின்றன. அதை ஒரு பெண் ஒடுக்கு முறையாக மட்டுமே சுருக்கிப் பார்த்து விட முடியாது. ஆண்-பெண் உடல்களை போர்-எந்திரத்தின் விழைச்சாக, அதிகார விறுப்புறுதிக்கான கருவிகளாக ஆக்கப்பட்ட உடல்களாகவே பார்க்க முடியும். இத்தகைய பல்வேறு சூழ்நிலைகளின் பாலியல் வன்முறைகளை குடும்ப பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு சமனாக அல்லது அவை போல ஒன்றாக பார்த்துவிடமுடியாது. இக்கவிதையில் வன்புணர்ச்சி என்கிற புள்ளியில் இவ்வித்யாசங்கள் பிரித்தறியப்படவில்லை.
மேலும் கவிதையில் பெண்கள் அனைவரும் தொடைகளின் இடைவழிக்காகவே, அதை ஆக்கிரமிப்பதன் மூலம் அச்சுறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அரசதிகாரம் பெண்ணுடலை கையாளும் அதே முறைகளைத்தான் புரட்சியாளர்களும், கலகக்காரர்களும் கையாளுகிறார்கள் என்பதும் பொதுபுத்தியின் “அறம்“ சார்ந்த பார்வைதான். அதாவது ஒரு உடலின் பாலியல் சார்ந்த இச்சை என்பது கீழானதாக, அதை செய்யும் உடல் புரட்சிபேசத் தகுதியற்றதாக சொல்லப்படுவதாகவும் இதை வாசிக்கலாம். தவிர, அரசு, எதிர்ப்பு, கலகம் இவை எல்லாவற்றிலும் அதிகாரம் செயல்படும் என்றாலும், இவற்றைச் சமன்படுத்துவதிலும் பிரச்சினைகள் உள்ளன.
வன்புணர்ச்சிக்கான ஒரு களமாக பெண்ணுடல் கட்டப்பட்டுள்ளது என்றால், களத்தில் ”விளையாடுவதற்கான” ஆணுடலும் தயாரிக்கப்பட வேண்டும் அல்லவா. அப்படி தயாரிக்கப்பட்ட ஆணுடல்கள் மட்டும் என்னவித நெகிழ்வை இச்சமூகத்தில் அனுபவித்துவிடப் போகிறது? ஆண்மை, பெண்மை என்கிற முரண்களின் அடிப்படையிலான சமூக, கலாச்சார ஒழுங்குவிதிகள் ஒட்டுமொத்த உடல்களில் பதிவுறுத்தப்படுகின்றன, இருமைக்கட்டமைப்பில் உடல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த விதிகள்தான் இன்று எதிர்க்கப்படவேண்டியவை, வெளிப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டியவை. ஆனால் கவிதை விதிகளை நோகாமல் மேலோட்டமாக விளைவுகளை நோகிறது.
வன்புணர்ந்து அதிகாரத்தைச் செலுத்தும் “ஆம்பிளை(களு)க்கு” எதிராக வன்புணர்த்தப் படுகிற எல்லாப் “பொம்பிளைகளின்” சார்பிலும் “நான் லீனா” நிற்கிறார் (கவிதையில், நிற்கிறது). ஆக, இந்தப் பெண்கள் எல்லாரும் அம்மா, அம்மம்மா, அத்தை சொல்லிக்கொடுத்தபடி யோனியை விரித்து வன்புணர்ச்சிக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதலைக் கவிதை தருகிறது. பாதிக்கப்பட்ட, படுகிற பெண்களின் எதிர்ப்புணர்வுக்கோ குறைந்தபட்சமாக அவர்களின் உடன்பாடின்மை என்பதற்கோ இடமே கவிதையில் இல்லை. உலகெங்கும் துயருறும் வன்புணரப்படுபவர்களின் பிரதிநிதியாக “நான் லீனா” Vs. உலகின் எல்லாவகை ஆண்களும் என்பதே கவிதையின் ஒன்லைனர். பல்வாசிப்புத் தளங்களைத் தராத, தக்கையான முரணை விதந்தோதுவதாலேயே இது கவிதையா என்று கேள்வி எழுகிறது.
லீனாவின் இரண்டாவது கவிதை, சே, பிடல், பெர்லின் சுவர், சோவியத், அமெரிக்கா போன்றவை, புணருகிற ’நான்’ உடலின் மார்பகம், அல்குல் போன்ற அங்கங்களின் பெயர்கள் அல்லது உருவகங்களாகின்றன. பல இடங்களில் அங்கம், பெயர்-உருவகத்துக்கு தொடர்புறவு இல்லை அல்லது வெறும் மோனை வலிந்து துருத்திக்கொண்டு நிற்கிறது (உதாரணம், ”மனம்பிறழ்ந்த குழந்தைபோல மம்மு குடித்தாய்” ) கவிதையில் சொல்லப்படும் “நீ“ அல்லது எதிர் உடல், வெறும் பாலியல் புணர்ச்சி எந்திரமே. குறிப்பாய் மார்க்சிய புரட்சியாளனை இங்கு எதிர் உடலாக முதன்மைப்படுத்துவதன் வழியாக பாலியலில் “தூய்மைவாத” கருத்துகள் கொண்ட மார்க்சியர்களை (மார்க்சியர்களின் இத்தகைய பார்வைகளில் நமக்கு விமர்சனம் உண்டு என்றாலும்), பாலுறவுக்காகவே அலைபவர்களாகச் சித்தரிக்கிறது.
எத்தகைய ஆண் புரட்சியாளன் அல்லது மார்க்சியவாதியாக இருந்தாலும், பாலியலில் அல்லது சக பெண்ணுடலை அணுகும்போது அவனும் சராசரி மனிதனாக மாறிவிடுகிறான் என்பதை இக்கவிதை வழக்கமான அறக்க்கண்ணோட்ட சட்டகத்துக்குள் வைக்கிறது. கவிதைவரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் புரட்சி பற்றிய “புனித கவிழ்ப்பு“ “அறக்கவிழ்ப்பு“ போன்ற கவிழ்ப்புச் சொல்லாடல்களால் ஆளப்பட்டிருப்பதைப்போல தோன்றும். உண்மையில், கவிதையின் உள்தர்க்கம் என்பது என்ன புரட்சி பேசுகிறாய், ஒரு அதி-யோனியின் புணர்ச்சிக்கு முன் இதெல்லாம் உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான். இப்படிச் சொல்வதன் வழியாக, பாலியல் செயல்பாட்டைப் பற்றி பொதுவாக சமூகமனம் கொண்டுள்ள கீழ்மை மதீப்பீடே உள்ளுரையாக உள்ளது. பாலியல் அல்லது புணர்ச்சி குறித்த இந்தக் ”கீழ்மை” மதிப்பீடு கடவுள் துவங்கி இன்னபிற பிம்பங்களின் மீது சுமத்தப்படும்போது இவற்றைத் தாங்கிப்பிடிப்பவர்களின் எரிச்சலுக்கும் காரணமாக அமைகிறது என்பதைச் சொல்ல அவசியமே இல்லை.
சரி, இந்த பிரச்சினைகள் குறித்து பெரும் பத்திரிக்கைகள் துவங்கி பதிவுலகம் வரை பல மாதங்களாகப் பேசப்பட்டுவரும் நிலையில் இப்பொழுது இதனை முன்வைப்பதன் தேவை என்ன என்கிற கேள்வி உங்களைப்போலவே எங்களுக்கும் தோன்றியதுதான். நாங்கள் அவதானித்தவரை இப்பிரச்சனையில் பேசப்பட்டவை எல்லாம் கவிஞர் லீனா மணிமேகலையை தனிப்பட்ட முறையில் தாக்குவது அல்லது போற்றுவது என்ற அளவிலேயே நின்றுபோனதே தவிர மொழி அர்த்தமாதல் குறித்த விவாதம் நடக்கவில்லை. இலக்கியம் சார்ந்த உரையாடலை முன்வைத்து இவ்வரிகளை அணுகவேண்டும். அதேநேரத்தில் ஒரு கவிஞருக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக நமது குரலை பதியவைப்பதும் அவசியம் என்று கருதியே இதனை எழுதினோம்.
பின்னாளில் நீரோவாக பிடில் வாசித்தோம் என்று எழுதி இந்த பிரச்சினையை சாம்ராஜ்யம் எரிந்த பிரச்சினையாக ஆக்கி, நம்மை விமர்சித்துவிடக்கூடாது பாருங்கள் அதுவும்தான். இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே“- என்கிற இம்சை அரசனின் குரல் கேட்கத்தான் செய்கிறது நமது ஆழ்மனதில். என்ன செய்ய?
அன்புடன்
பெருந்தேவி
ஜமாலன்
1 முட்டாள் தினமும் 361 அறிவாளிகள் தினமும்.
Posted வியாழன், ஏப்ரல் 01, 2010 in அறிமுகம், அறிவிப்பு, இஸ்லாமிய அடிப்படைவாதம், உடலரசியல், காந்தி, குடிக்கலாச்சாரம், தமிழ் ஈழம், திறனாய்வு, நவீன தொன்மங்கள், Islamic Feminsm by ஜமாலன்ஏப்ரல்-1. பெரும்பாலான நாடுகளில் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் போல, அன்னையர்தினம் போல.. இது முட்டாள்களுக்கான தினமல்ல, நம்மை நாமே முட்டாளாக்கக்கூடிய பல அனுபவங்களை உருவாக்கி, சக மனிதர்களுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதற்கான தினம் என்று கூறலாம். அல்லது 361 நாட்கள் அறிவாளிகளாக கழித்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் நமது முட்டாள்தனத்தை, எண்ணிப்பார்த்து மனமுவந்த ஒரு நாளையாவது முட்டாளாக கழிப்பதற்கான நாள் எனலாம்.
முட்டாள்கள் என்று யாரும் இல்லை, ஆனால் முட்டாள்தனங்கள் உண்டு. அது எல்லோருக்குமான ஒரு அனுபவம் அல்லது ஒரு நிகழ்வு. பள்ளிகளில் படிக்கும் காலங்களில் “ஏப்ரல் பூலா“-க ஒருவரை ஆக்க பல திட்டங்கள் போடுவோம். முடியாதபட்சத்தில், ஒருவர் சட்டையில் ஒருவர் இங்க் அடித்துக் கொள்வோம். அறிவு தோற்கும் இடங்களை ஆயதம்தானே கைப்பற்றும். இது வரலாறு. மாற்றமுடியுமா? ஏப்ரல்-1ற்கு என்றே பிரத்யேகமான ஒரு பழைய் கந்தல் சட்டையை பாதுகாத்து வைத்து போட்டுச் செல்வோம். அன்றுதான் ஒரு வகுப்பில், ஒரு பள்ளியில், ஒரு வீட்டில், ஒருவனுக்குள்ளேயே எத்தனை குழுக்கள் உள்ளன என்று அறிந்து கொள்ள முடியும். அது ஒரு போர்தான். அதற்காக 3 நாட்களுக்கு முன்பே காட்டாமணக்கு பால் எடுத்து பாட்டிலில் சேகரித்து, அதனை இங்கில் கலந்து அடிப்போம். அப்பொழுதுதான் கறை போகாது என்று. எங்கள் ஊரில் இன்று காட்டாமணக்கே அழிந்துவிட்டது. பல இளம் தாவரவியல் விஞ்ஞானிகள அத அன்று உருவாக்கிக் கொண்டிருந்தது. மருத்துவக் குணம் கொண்ட அந்த செடிக்கு பதிலாக, நெய்வேலி காட்டாமணி எனப்படும் பார்த்தீனியம் என்கிற ஒருவகை விஷச்செடி பரவிவி்ட்டது. அரசு மானியமாக தந்த உரங்கள் மற்றும், விதைநெல்களுடன் கலந்து அந்நிய நாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்பட்டது அச்செடி. பசுமைபுரட்சி என்றால் விவசாயிகளை அழிப்பது, வெண்மைப் புரட்சி என்றால் பசுமாடுகளை அழிப்பது, என்பதுதானே அரசாங்க அகராதியில் உள்ள பொருள். அச்செடி பார்ப்பதற்கே, அதன் செயற்கை தன்மையுடன்தான் இருக்கும். விளைநிலங்களை தரிசுகளாக மாற்றியதில் யூகலிப்டசைப்போல அச்செடிக்கும் முக்கிய பங்கு உண்டு. நமது சூழலை விஷமாக்கிய அரசியல் அது. சரி.. நாம் பதிவிற்கு வருவோம்.
ஏப்ரல்-1 முட்டாள்கள் தினமட்டுமல்ல வேறு சில சிறப்புகளும் உண்டு. 2004 ஏப்ரல் 1-ல்தான் நாம் பதிவு எழுதிக்கொண்டிருப்பதற்கு காரணமான கூகுல் குழுமம் ஜி-மெயிலை அறிமுகப்படுத்தியது பரிச்சார்த்தமாக. முடடாள் தினத்தை வலைக்கும் ஏற்றிய பெருமை என்கிற உள்ளர்த்தம் ஒன்று உள்ளதோ இதில். 2001 ஏப்ரல்-1 ல் நெதர்லாண்ட் உலகில் முதல் தேசமாக ஓரினத்-திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரித்து.
எல்லாவற்றையும்விட முக்கியமானது, சதாம் உசேனின் ராஜதந்திரியாக இயங்கிய அமேரிக்காவின் இரட்டை-உளவாளி ஒருவரின் சங்கேதப் பெயர் April Fool. இவர் அமேரிக்க படை வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்த உள்ளது என்கிற தவறான தகவல் தந்து, ஈராக்கிய படைகளை வடக்கிலும் மேற்கிலும் நகரச் செய்துவிட்டு, குவைத் வழியாக அமேரிக்கபடை நுழைந்ததே பாக்தாத்தை பிடிப்பதற்கு வசதியாகிவிட்டது. ஈராக் படைபிரிவின் தலைவர்களை தவறான தகவல்களில் குழப்பியது அந்த அமேரிக்க அதிகாரிதான்.
மேலதிக தகவலுக்கு-
இப்படியாக பல சிறப்புகளைக் கொண்ட “முட்டாள்கள் தினமான“ இன்று எனது புத்தக அறிமுகக் குறிப்பை வெளியிடுவது பொருத்தமே.
மொழியும் நிலமும் 2003-ல் வெளிவந்தது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு வெளிவருகிறது.
- இனவாதம் என்கிற
விஷப்பற்களால்
அழித்தொழிக்கப்பட்ட
ஈழத்தமிழர்களுக்கு...
அர்ப்பணிக்கப்பட்ட இந்நூலின் பின்னட்டையில் வெளியிடப்பட்டுள்ள அறிமுகக் குறிப்பை பதிவில் நூலறிமுகமாக வெளியிடுகிறேன். இதை வாசித்தபின் புத்தகம் வாங்கும் எண்ணத்தை கைவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. எழுதியவரும், பதிப்பகத்தாருமே பொறுப்பு.
தனிமனிதன் என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது நவீன சமூகம். இச்சமூகம் உருவாகும் செயல்போக்கில் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணற்ற கதையாடல்களால் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே நவீனதொன்மங்கள். பண்டைய சிந்தனைகளை தொன்மம் என்று அடையாளப்படுத்தியதன் மூலம், அச்சமூகங்களை முற்றிலும் அறிவிற்கு புறம்பான உணர்ச்சிமிக்க மனித உடல்களாக குறியிட்ட இந்நாகரீக சமூகம் தன்னை உறுதி செய்துகொண்டு பேரமைப்பாக விரவியிருப்பது அறிவுசார் தொழில் நுட்பம், வளர்ச்சி, அறிவியல், பகுத்தறிவு என்கிற நவீன தொன்மங்களின் கதைவெளிகளில்தான். இக் கதைவெளிகளை சிதைத்துப் பார்க்க முயன்றிருக்கிறது இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். உடலரசியல், பெண்ணியம், கலை இலக்கியம், அரசியல், திரை இலக்கியம் மற்றும் ஈழம் என்கிற பிரிவுகளில் தொகுக்கப்பட்ட இக்கட்டுரைகள் இத்தகைய தொண்மக் கதையாடல்களை பன்முகப் பரப்பில் விசாரணைக்கு உட்படுத்துகின்றன. காந்தி, புள்ளியல், நீலப்படங்கள், குடி, இஸ்லாமியப் பெண்ணியம், தமிழில் வெளிவந்த புதியவகை நாவல்கள், மண்டோவின் கதைவெளி, பயங்கரவாதம், கிரிக்கெட், மதவாதம், இனவாதம், குடிமகனாதல், தமிழ் ஈழம், ஈரானியத் திரைபடங்கள் துவங்கி தமிழின் வெகுசனப் படங்கள்வரை இவ்விசாரணையை நிகழ்த்திச் செல்கின்ற இக்கட்டுரைகள், உடல்கள் மனிதர்களாகி, மனிதர்கள் குடிமகன்களாக ஆன கதைகளை வெவ்வேறு பரப்புகளில் வைத்து உரையாடுகின்றன.....
வெளியீடு
புலம்
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
திருவல்லிக்கேணி
சென்னை - 600 005
தொலைபேசி - 0091-44-4556 7517
மின்னஞ்சல்: pulam2008@gmail.com
விலை ரூ 300 - பக்கம் 432
சில நண்பர்கள் இணையத்தில் கிடைக்குமா என்று கேட்டுள்ளனர். தகவல் கிடைத்தவுடன் மற்றொரு “முட்டாள்தினப் பதிவு” போட்டுவிடலாம். இந்த பதிவின் முட்டாள்தனமான தலைப்பைப்போல….))
நன்றி
ஜமாலன். (01-04-2010)






