கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெண்.

”அரசியல்சரி” நிலைப்பாட்டுக்கும் கவிதையாக அறிவிக்கப்பட்டிருக்கிற பிரதிக்கும் இடையே சில வார்த்தைகள்
கவிஞர் லீனா மணிமேகலையின் கவிதைத்தொகுப்பை, வலைத்தளத்தை தடைசெய்யக்கூறி இந்து மக்கள் கட்சியினர் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததற்கு எதிராக சென்னையில் ஏப்ரல் 15-ல் ஒரு கண்டனக்கூட்டம் நடக்க இருப்பதாக அறிகிறோம். தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களால் நடத்தப்பட இருக்கிறது இக்கூட்டம். இது சம்பந்தமாக எங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுகிறோம்.

லீனா மணிமேகலை இலக்கியம், கவிதை என்று ஒரு பிரதியை தமிழ் இலக்கியச்சூழலின் வாசிப்புக்கு முன்வைக்கும்போது, அப்பிரதியின் சொற்பிரயோகங்கள் பாடுபொருள்கள் ஆகியவற்றை இலக்கியம் என்கிற வகைமையில்தான் நாம் அணுகவேண்டும் என்று நம்புகிறோம். இதில் எழுத்தாளரின் நோக்கம் (அதிர்ச்சி மதிப்பீட்டை முன்வைத்து புகழ்பெற நினைப்பது என்று கருதப்படுபவை உட்பட) இலக்கியத்தைப் படைப்பதுதானா என்பதை மதிப்பிட  அளவுகோல் எதுவும் கிடையாது. ஒரு படைப்பாளி  எதற்காக இலக்கியம் படைக்கிறார் என்பது நுட்பமான வாசிப்பாளனுக்கும், விமர்சகனுக்கும் அசட்டுத்தனமான கேள்விகளாக மட்டுமே இருக்கமுடியும். தனது உள்நோக்கங்கள் வழி உருவாக்கப்படும் சில வலைப்பின்னல்கள் வழியாக ஒரு எழுத்தாளர்  ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடியும். ஒரு சமூக அமைப்பு ஒரு எழுத்தாளாரை மேலாக வைத்து கொண்டாடுவதும், நிராகரிப்பதும் இந்த வலைப்பின்னல் விளையாட்டில் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால், காலம் அந்த இடத்தை கேள்விக்கு உட்படுத்தும்போது, பின்னர் ஒரு நாள் வரலாறுகளின் ஆற்றங்கரையில் படைப்பின் ஆதார ”சுருதி” கண்டடையப்படும் என்று வேண்டுமானால்  நாம் ஆறுதல் அடையலாம்.

இலக்கியம், கவிதை என்கிற முகாந்தரத்தில் ஒரு பிரதி வாசிக்கக் கிடைக்கும்போது, அதை அப்படித்தான் வாசிக்கவேண்டுமே தவிர எழுத்தாளரின் தனிப்பட்ட, சொந்த மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கணக்கிலெடுத்து அப்பிரதியை  நிராகரிப்பது தவறு.   இதற்கு அர்த்தம், எழுத்தாளரின் வாழ்க்கையில் அவர் செய்ததாகக் கூறப்படும் அநீதிகள், ஏமாற்றல்கள் (அவை நடந்திருந்தால்) போன்றவை முக்கியமில்லை என்பதோ, அவரது பிரதியின் மேல்விழும் இலக்கிய முத்திரை இவற்றையெல்லாம் புனிதப்படுத்திவிடும் என்பதோ இல்லை.  அந்த சம்பவங்களை அதற்குத் தகுந்த நடைமுறைத் தீர்வு தருகிற தளங்களில், சம்பந்தப்பட்டவர்கள் அணுகித் தீர்வுகாணுதல் நன்மை பயக்கும் என்பது எங்கள் கருத்து. 

இதன்பொருள் இலக்கியமும், எழுத்தும் கண்டனத்துக்கு அப்பாற்பட்டவை என்பது அல்ல. கண்டிப்பதற்காக எழுத்தைக் குறிவைத்து காவல்துறையில் புகார் கொடுப்பது, எழுத்தாளரை தனிப்பட்ட முறையில் தாக்குவது போன்றவை மோசமான முன்னுதாரணங்கள் ஆகிவிடும். மேலும் கண்டனத்தை எதிர்கொள்வதாக செய்யப்படும் செயல்களிலும் (இக்கூட்டம் உட்பட) வேறுபிரச்சனைகள் உள்ளன என்பதையும் நாம் மறுக்கவியலாது. இச்சூழலில், இலக்கியத்துக்கு வெளியே செயல்படும் அரசியல் மதக் கட்சிகளுக்கோ நிறுவனங்களுக்கோ, இலக்கியம் என்று எழுதப்பட்டிருக்கும் பிரதியைக் குறித்து புகார் கொடுக்க தார்மீக உரிமை இல்லை என்பதைமட்டும் இங்கே பதிவு செய்கிறோம்.

நிற்க.

இந்த நேரத்தில், இணையத்தில் சர்ச்சைக்குள்ளான லீனா மணிமேகலையின் கவிதைகள் (பார்க்க, http://www.penniyam.com/2010/01/blog-post_5280.html)  பற்றி சிலவார்த்தைகள்:

நான் லீனா என்று தொடங்குகிறது முதல் கவிதை, இலங்கையில், இந்தியாவில் ஆரம்பித்து துருக்கியில் ஈராக்கில் வியட்நாமில் என்றெல்லாம் வன்கொடுமைப்படுத்தப்படுகிற பெண்கள் “நான் லீனா” என்கிற சுயம்-சுட்டும் (self-referential) பெயருக்கு கீழே கொண்டுவரப்படுகிறார்கள். இதன்மூலமாக இப்படி கொடுமைக்கு ஆளாகிற பெண்கள் எல்லாருக்குமான பிரதிநிதியாக லீனா என்கிற பெண் காட்டப்படுகிறார். முதல் கேள்வி, ஏன் லீனா என்கிற பெயர் மீனா என்றோ வேறொன்றாகவோ இருக்கக்கூடாது? எழுத்தாளர் தன் பெயரை கவிதைசொல்லியின் ’நானாக’ இப்படி கொண்டுவரும்போது, உலகத்தின் எல்லாக் கொடுமைப்படுத்தப்படும் பெண்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆசையை வெளிப்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. கவிதைசொல்லியின் ‘நானுக்கும்’ எழுத்தாளரின் ‘நானுக்குமான’ வித்யாசத்தை கவிதை அழித்துவிட்டது.  இந்த இரு நான்கள் ஒன்றா இரண்டா என்று தெரியாத அளவுக்கு—--பின்னிப்பிணைந்து கிடக்கும் இரண்டு பாம்புகள் ஒன்றா இரண்டா என்பது போல--தோற்றம் தருகிறபோது, எந்தத் தளத்திலிருந்து  ‘எழுத்தைப் பாருங்கள், எழுத்தாளரைப் பார்க்காதீர்கள்’ என்று நாம் சொல்லமுடியும்? பிரதிநிதித்துவ அரசியலில் (representational politics),  “நான்“ என்கிற எழுத்தாளரின் சுயம் அப்படியே தன்னடையாளத்துடன் நிற்கிறது இக்கவிதையில்.

கவிதை வன்புணர்ச்சி விஷயத்தில் அறிவாளி ரோகியிலிருந்து தொடங்கி புரட்சிவேண்டுபவன் வணிகம் செய்பவன் மாலுமி விவசாயி ஈறாக இழுத்துப் பேசுகிறது.  எழுதப்பட்டிருக்கிற விதம் இவர்கள் எல்லாருமே இப்படித்தான் என்பதாக. “எவனா இருந்தா என்ன, ஆம்பிளை தானே” என்கிற தொனியே கவிதையின் தொனி. வன்புணர்ச்சி என்கிற அபாயத்தையும் நிகழ்வையும் தொடர்ந்து பெண்கள் எதிர்கொள்ளும் சூழல்கள், கட்டாயங்கள், உலகளாவிய முதலீட்டிய நுண் அதிகாரங்கள், அரசியல்கள் பற்றி எந்தப்புரிதலும் இல்லாமல், இவை அனைத்தையும் ’ஆம்பிளை’ என்கிற ஒரு பதத்துக்குள் இந்தத்தொனி இட்டுநிரப்புகிறது. வன்புணர்ச்சி என்பது ஆண்களின் விழைவால், விழைவு தருகிற குறிவிரைப்பால் மட்டுமே நடப்பதில்லை என்பதுதான் பாரிய உண்மை. எண்ணற்ற கொடுமைகளுக்கு பெண்களை ஆளாக்கின பல்வேறு அரசியல்களையும் போர்களையும் ஆணின் பாலியல்-விழைச்சில் அடக்கிவிட முடியுமா என்ன?

ஈழம், போஸ்னியா இன்னும் எண்ணற்ற நாடுகளில் பாலியல் வன்புணர்ச்சி என்பது போரின்,  அரசின்,  இறையாண்மை அரசியல்களின்  அதிகார ஆயுதமாகவே உள்ளது. மேலும், போரில் ஆண்-பெண்  உடல்கள் இரண்டும் கருவிகளாக மாற்றப்படுகின்றன. அதை ஒரு பெண் ஒடுக்கு முறையாக மட்டுமே சுருக்கிப் பார்த்து விட முடியாது.  ஆண்-பெண் உடல்களை போர்-எந்திரத்தின் விழைச்சாக, அதிகார விறுப்புறுதிக்கான கருவிகளாக ஆக்கப்பட்ட உடல்களாகவே பார்க்க முடியும்.  இத்தகைய பல்வேறு சூழ்நிலைகளின் பாலியல் வன்முறைகளை குடும்ப பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு சமனாக அல்லது அவை போல ஒன்றாக பார்த்துவிடமுடியாது.  இக்கவிதையில் வன்புணர்ச்சி என்கிற புள்ளியில் இவ்வித்யாசங்கள் பிரித்தறியப்படவில்லை.

மேலும் கவிதையில் பெண்கள் அனைவரும் தொடைகளின் இடைவழிக்காகவே, அதை ஆக்கிரமிப்பதன் மூலம் அச்சுறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அரசதிகாரம் பெண்ணுடலை கையாளும் அதே முறைகளைத்தான் புரட்சியாளர்களும், கலகக்காரர்களும் கையாளுகிறார்கள் என்பதும் பொதுபுத்தியின் “அறம்“ சார்ந்த பார்வைதான். அதாவது ஒரு உடலின் பாலியல் சார்ந்த இச்சை என்பது கீழானதாக, அதை செய்யும் உடல் புரட்சிபேசத் தகுதியற்றதாக சொல்லப்படுவதாகவும் இதை வாசிக்கலாம். தவிர, அரசு, எதிர்ப்பு, கலகம் இவை எல்லாவற்றிலும் அதிகாரம் செயல்படும் என்றாலும், இவற்றைச் சமன்படுத்துவதிலும் பிரச்சினைகள் உள்ளன.

வன்புணர்ச்சிக்கான ஒரு களமாக பெண்ணுடல் கட்டப்பட்டுள்ளது என்றால், களத்தில் ”விளையாடுவதற்கான” ஆணுடலும் தயாரிக்கப்பட வேண்டும் அல்லவா. அப்படி தயாரிக்கப்பட்ட ஆணுடல்கள் மட்டும் என்னவித நெகிழ்வை இச்சமூகத்தில் அனுபவித்துவிடப் போகிறது? ஆண்மை, பெண்மை என்கிற முரண்களின் அடிப்படையிலான சமூக, கலாச்சார ஒழுங்குவிதிகள் ஒட்டுமொத்த உடல்களில் பதிவுறுத்தப்படுகின்றன, இருமைக்கட்டமைப்பில் உடல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த  விதிகள்தான் இன்று எதிர்க்கப்படவேண்டியவை, வெளிப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டியவை. ஆனால் கவிதை விதிகளை நோகாமல் மேலோட்டமாக விளைவுகளை நோகிறது. 

வன்புணர்ந்து அதிகாரத்தைச் செலுத்தும் “ஆம்பிளை(களு)க்கு” எதிராக வன்புணர்த்தப் படுகிற எல்லாப் “பொம்பிளைகளின்” சார்பிலும் “நான் லீனா” நிற்கிறார் (கவிதையில், நிற்கிறது). ஆக, இந்தப் பெண்கள் எல்லாரும் அம்மா, அம்மம்மா, அத்தை சொல்லிக்கொடுத்தபடி யோனியை விரித்து வன்புணர்ச்சிக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதலைக் கவிதை தருகிறது. பாதிக்கப்பட்ட, படுகிற பெண்களின் எதிர்ப்புணர்வுக்கோ குறைந்தபட்சமாக அவர்களின் உடன்பாடின்மை என்பதற்கோ இடமே கவிதையில் இல்லை. உலகெங்கும் துயருறும் வன்புணரப்படுபவர்களின் பிரதிநிதியாக “நான் லீனா” Vs. உலகின் எல்லாவகை ஆண்களும் என்பதே கவிதையின் ஒன்லைனர். பல்வாசிப்புத் தளங்களைத் தராத, தக்கையான முரணை விதந்தோதுவதாலேயே இது கவிதையா என்று கேள்வி எழுகிறது.

லீனாவின் இரண்டாவது கவிதை, சே, பிடல், பெர்லின் சுவர், சோவியத், அமெரிக்கா போன்றவை, புணருகிற ’நான்’ உடலின் மார்பகம், அல்குல் போன்ற அங்கங்களின் பெயர்கள் அல்லது உருவகங்களாகின்றன. பல இடங்களில் அங்கம், பெயர்-உருவகத்துக்கு தொடர்புறவு இல்லை அல்லது வெறும் மோனை வலிந்து துருத்திக்கொண்டு நிற்கிறது (உதாரணம், ”மனம்பிறழ்ந்த குழந்தைபோல மம்மு குடித்தாய்” )  கவிதையில் சொல்லப்படும் “நீ“ அல்லது  எதிர் உடல், வெறும் பாலியல் புணர்ச்சி எந்திரமே. குறிப்பாய் மார்க்சிய புரட்சியாளனை இங்கு எதிர் உடலாக முதன்மைப்படுத்துவதன் வழியாக பாலியலில் “தூய்மைவாத” கருத்துகள் கொண்ட மார்க்சியர்களை (மார்க்சியர்களின் இத்தகைய பார்வைகளில் நமக்கு விமர்சனம் உண்டு என்றாலும்), பாலுறவுக்காகவே அலைபவர்களாகச் சித்தரிக்கிறது.

எத்தகைய ஆண் புரட்சியாளன் அல்லது மார்க்சியவாதியாக இருந்தாலும்,  பாலியலில் அல்லது சக பெண்ணுடலை அணுகும்போது அவனும் சராசரி மனிதனாக மாறிவிடுகிறான் என்பதை இக்கவிதை வழக்கமான அறக்க்கண்ணோட்ட சட்டகத்துக்குள் வைக்கிறது.   கவிதைவரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் புரட்சி பற்றிய “புனித கவிழ்ப்பு“ “அறக்கவிழ்ப்பு“ போன்ற கவிழ்ப்புச் சொல்லாடல்களால் ஆளப்பட்டிருப்பதைப்போல தோன்றும். உண்மையில், கவிதையின் உள்தர்க்கம் என்பது என்ன புரட்சி பேசுகிறாய், ஒரு அதி-யோனியின் புணர்ச்சிக்கு முன் இதெல்லாம் உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான். இப்படிச் சொல்வதன் வழியாக, பாலியல் செயல்பாட்டைப் பற்றி பொதுவாக சமூகமனம் கொண்டுள்ள கீழ்மை மதீப்பீடே உள்ளுரையாக உள்ளது. பாலியல் அல்லது புணர்ச்சி குறித்த இந்தக் ”கீழ்மை” மதிப்பீடு கடவுள் துவங்கி இன்னபிற பிம்பங்களின் மீது சுமத்தப்படும்போது இவற்றைத் தாங்கிப்பிடிப்பவர்களின்  எரிச்சலுக்கும் காரணமாக அமைகிறது என்பதைச் சொல்ல அவசியமே இல்லை.

சரி, இந்த பிரச்சினைகள் குறித்து பெரும் பத்திரிக்கைகள் துவங்கி பதிவுலகம் வரை பல மாதங்களாகப் பேசப்பட்டுவரும் நிலையில் இப்பொழுது இதனை முன்வைப்பதன் தேவை என்ன என்கிற கேள்வி உங்களைப்போலவே எங்களுக்கும் தோன்றியதுதான். நாங்கள் அவதானித்தவரை இப்பிரச்சனையில் பேசப்பட்டவை எல்லாம் கவிஞர் லீனா மணிமேகலையை தனிப்பட்ட முறையில் தாக்குவது அல்லது போற்றுவது என்ற அளவிலேயே நின்றுபோனதே தவிர மொழி அர்த்தமாதல் குறித்த விவாதம்  நடக்கவில்லை. இலக்கியம் சார்ந்த உரையாடலை முன்வைத்து இவ்வரிகளை அணுகவேண்டும். அதேநேரத்தில் ஒரு கவிஞருக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக நமது குரலை பதியவைப்பதும் அவசியம் என்று கருதியே இதனை எழுதினோம்.

பின்னாளில் நீரோவாக பிடில் வாசித்தோம் என்று எழுதி இந்த பிரச்சினையை சாம்ராஜ்யம் எரிந்த பிரச்சினையாக ஆக்கி, நம்மை விமர்சித்துவிடக்கூடாது பாருங்கள் அதுவும்தான். இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே“- என்கிற இம்சை அரசனின் குரல் கேட்கத்தான் செய்கிறது நமது ஆழ்மனதில். என்ன செய்ய?

அன்புடன்

பெருந்தேவி
ஜமாலன்

15 comments:

வினவு சொன்னது…

அன்புள்ள பெருந்தேவி,ஜமாலன்
அல்லது
அன்புள்ள ஜமாலன், பெருந்தேவி

//”அரசியல்சரி” நிலைப்பாட்டுக்கும் கவிதையாக அறிவிக்கப்பட்டிருக்கிற பிரதிக்கும் இடையே சில வார்த்தைகள்//

அறிவிக்கப்பட்ட கவிதைக்கும் பின்னேயும், அரசியல் சரி நிலைப்பாட்டிற்கு பின்னேயும், இரண்டுக்கும் இடையே இருக்கும் 'நடுநிலைமை'(எனக்குத் தெரிந்து நடுநிலை என்ற ஒன்றை எங்கேயும் கேள்விப்பட்டதில்லை அல்லது உணர்ந்து கொண்டதில்லை) தரப்புக்கு பின்னேயும் இருப்பது அரசியல்தான்.இப்படி தான் என்று போட்டு பேசுவது 'நிலைப்பாட்டுவாதிகளுக்கு'வழக்கம்தான் என்பதைக்கூட நீங்கள் ஆராயலாம்.

//ஒரு படைப்பாளி எதற்காக இலக்கியம் படைக்கிறார் என்பது நுட்பமான வாசிப்பாளனுக்கும், விமர்சகனுக்கும் அசட்டுத்தனமான கேள்விகளாக மட்டுமே இருக்கமுடியும்.//

//இலக்கியம், கவிதை என்கிற முகாந்தரத்தில் ஒரு பிரதி வாசிக்கக் கிடைக்கும்போது, அதை அப்படித்தான் வாசிக்கவேண்டுமே தவிர எழுத்தாளரின் தனிப்பட்ட, சொந்த மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கணக்கிலெடுத்து அப்பிரதியை நிராகரிப்பது தவறு. //

//ஈழம், போஸ்னியா இன்னும் எண்ணற்ற நாடுகளில் பாலியல் வன்புணர்ச்சி என்பது போரின், அரசின், இறையாண்மை அரசியல்களின் அதிகார ஆயுதமாகவே உள்ளது.//

//தவிர, அரசு, எதிர்ப்பு, கலகம் இவை எல்லாவற்றிலும் அதிகாரம் செயல்படும் என்றாலும், இவற்றைச் சமன்படுத்துவதிலும் பிரச்சினைகள் உள்ளன. //

//ஆண்மை, பெண்மை என்கிற முரண்களின் அடிப்படையிலான சமூக, கலாச்சார ஒழுங்குவிதிகள் ஒட்டுமொத்த உடல்களில் பதிவுறுத்தப்படுகின்றன, இருமைக்கட்டமைப்பில் உடல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த விதிகள்தான் இன்று எதிர்க்கப்படவேண்டியவை, வெளிப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டியவை. ஆனால் கவிதை விதிகளை நோகாமல் மேலோட்டமாக விளைவுகளை நோகிறது. //

//குறிப்பாய் மார்க்சிய புரட்சியாளனை இங்கு எதிர் உடலாக முதன்மைப்படுத்துவதன் வழியாக பாலியலில் “தூய்மைவாத” கருத்துகள் கொண்ட மார்க்சியர்களை (மார்க்சியர்களின் இத்தகைய பார்வைகளில் நமக்கு விமர்சனம் உண்டு என்றாலும்), பாலுறவுக்காகவே அலைபவர்களாகச் சித்தரிக்கிறது. //

//நாங்கள் அவதானித்தவரை இப்பிரச்சனையில் பேசப்பட்டவை எல்லாம் கவிஞர் லீனா மணிமேகலையை தனிப்பட்ட முறையில் தாக்குவது அல்லது போற்றுவது என்ற அளவிலேயே நின்றுபோனதே தவிர மொழி அர்த்தமாதல் குறித்த விவாதம் நடக்கவில்லை. இலக்கியம் சார்ந்த உரையாடலை முன்வைத்து இவ்வரிகளை அணுகவேண்டும். //

நண்பர்களே, மேற்கண்ட உங்கள் மேற்கொள்களின் மொழிவிளையாட்டை நான் உணர்ந்த வரையில் "இடையே சில வார்த்தைகள்" என்ற பிரகடனத்தை தரிசிக்க இயலவில்லை.

தான் மனச்சோர்வுறும் சமயங்களில் ஜமாலனனின் கட்டுரை உற்சாகத்தை டன் கணக்கில் வாரி வழங்குவதாக மகிழ்வற்று கொண்டாடிய சீமாட்டி லீனா இனி தான் மொழிவிளையாட்டில் இல்லை என்பதை நினைத்து வருந்துவார். பாவம்.

லீனா எப்படி கவிதை எழுதவேண்டும் என்றும், நிலைப்பாட்டுவாதிகள் எப்படி தவறாக விமரிசனம் செய்திருக்கிறார்கள் என்பதையும் குறித்து சற்றே அலூப்பூட்டும் விதத்தில் வகுப்பு எடுத்திருக்கிறீர்கள். இதனால் உங்களை பேராசிரியர்கள் என்று சுட்டியதாக தவறாக எடுக்க வேண்டாம்.

ஆயினும் மேற்கண்ட மேற்கோள்களின் வழி நீங்கள் லீனாவைக் கைவிவிடவில்லை என்பதையும் நிலைப்பாட்டுவாதிகளை குறுக்கு விசாரணை செய்யவேண்டிய லா பாயிண்டுகளையும் அர்த்தம் குமைகின்ற மொழியில் எடுத்தியிம்பிருப்பதால்..............

மொழி விளையாட்டிற்கும், வாழ்வின் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கும் இடையில் எது பிரதானமானது, எது இரண்டாம் பட்சமானது, என்ற 'அலுப்பூட்டும்' மார்க்சிய இயங்கியலில் எழுதுவதற்கு ஆவலாக உள்ளோம். எப்போது என்பது தெரியவில்லை. நேரம்தான் என்றால் ஏற்பீர்களா?

மற்றபடி எல்லோரையும் ஒரே போல விமரிசிப்பதாக நீங்களும் எங்களைக் கருதமாட்டீர்கள் என்ற தோழமையுடன்

வினவு

ஜமாலன் சொன்னது…

VASU to me
show details 2:54 pm

dear jamalan
in response to your article on leena's issue, i tried to post my comment but could not do it due to some error message apperaing. However i sent my comment to perundevi site.
following are my comments:-

ஜமாலன்/பெருந்தேவி,

பிரதியை பார்க்காமல், ஹேஷ்யங்கள்/செவி வழிச்செய்திகள் (சில உண்மையாகவும் இருக்கலாம்) அடிப்படையாக இலக்கியத்தை அணுகி எழுதிய ஆசிரியனைக்கும் பிரதிக்கும், நீதிபதி அங்கி அணிந்து தீர்ப்பு அளிப்பது மோசமான செயல். திருடர்கள்,வேசியர்கள், அல்லது பெரும் செல்வந்தர்கள்/மேட்டுக்குடியினர் அபாரமான இலக்கியங்களை படைத்துள்ளார்கள். ஆக இலக்கியம் என்று வரும்போது ஆபாசம்,யதார்த்தம்,உண்மை,புனிதம் என்ற எந்த கருதுகோளிலும் பிரதியை அடைக்க முடியாது. இயக்கம் சார்ந்தவர்களுக்கு, (அது இடதுசாரியாக இருந்தாலும்,வலது சாரியாக இருந்தாலும்) மேற்சொன்ன கருதுகோளில் அதீத பற்றுதலும் நம்பிக்கயும் உண்டு என்பதை இச்சம்பவம் ஒரு உதாரணம்.அதாவது இரு சாரிகளும் (வலது/இடது) ஒரே புள்ளியில் நின்று பிரதியையும் மற்றும் எழுதியவரையும் வசைபாடியது.ஏனெனில் இயக்கம் சார்பானவர்களுக்கு பிரதியில் பிம்பம் கட்டமைக்க சில தேவைகள் இருக்கினறன்.அது பிரதியில் புனித லெனினாக இருக்கலாம் அல்லது புனித ராமராக இருக்கலாம்.ஆனால் இலக்கிய பிரதியை இம்மாதிரியான எந்த கண்ணியிலும் அடைக்கமுடியாது. william burroughs, genet, batelle, என்று சொல்லிக்கொண்டு போகலாம். இப்போது தமிழ் பெண்ணிய கவிதைகளுக்கு திரும்புவோம். தமிழில் activism feminism இருக்கிறது. ஆனால் துரஷ்டவசமாக intellectual feminism இல்லை.ஆண்மைய சூழலில் ஆண்களால் உற்பத்திசெய்யப்படும் வார்த்தைகளால் கட்டைமைக்கப்பட்ட கவிதைகள் தாக்குதலுக்கு உள்ளாவது வியப்பில்லை. யோனி, சுன்னி போன்ற வார்த்தைகள் தனக்கு மட்டுமே சொந்தம், ஏனெனில் இவ்வார்த்தகளை நானே உற்பத்தி செய்தேன் இதை எதிர்பாலார் உச்சரிக்கவும்/உபயோக படுத்த தடை செய்கிறான். குறிப்பாக பிரதியில். ஆக உடல் அரசியல் பேசும் பெண்ணியவாதிகள் தமக்கென்று புதிய மொழியில் படைப்புகளை வெளியிட‌ வேண்டும். இதை மேற்கில் லூசி இரிகாரி போன்றவர்கள் வலியுறுத்துகிறார்கள். இதற்கு உதாரணம் ஆண்டாளின் திருப்பவை. மேலோட்டமாக பார்த்தால் பக்தி இலக்கியம், தமிழவன் ஆய்வு செய்த பாணியில் அணுகினால erotic literature. இன்னும் ஒரு உதாரணம் தருகிறேன். தன் உறுப்பை போற்றி எழுதிய கவிதை வரிகள் (narcisiச்ம் இதைப்பற்றி பிறகு விவரமாக எழுதுகிறென்) மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட மொழிக்கிடங்கிற்குள் அடங்கிவிட்டன.அதாவது யோனி,அல்குல்,பிறப்புறுப்பு,etc..ஆனால் தமிழில் சந்திரநாடி என்ற அபாரமான சொல் பெண் பிறப்புறுப்பை குறிக்கிறது. ஆக நான் பார்த்த வரையில் சமீபத்திய பெண் கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகள் கலகப்பிரதிகளாக இருக்கின்றன. இதை நான் வரவேற்கிரேன். ஆனால் இது ஏற்கனவே சொன்னது போல் activism feminism. கலகப்பிரதிக்கு முன்னோடிகள் ஹெலன் சீக்ஸீ, கேத்தே ஏக்கர். இம்மதிரியான பிரதிகளுக்கு எதிர்ப்பு வருவது சகஜமே.ஆனால் லூசி இரிகாரி,தெரிதா போன்ற கோட்பாடுகளை தமிழ் மொழியில் பெண்ணியவாதிகள் ஆய்வு பூர்வமாக அணுகி intellectual feminism என்ற தளத்திற்கு உரையாடலை நகர்த்த வேண்டும். (இந்த மறு மொழியை ஜமாலன் தளத்தில் என்னால் வெளியியமுடியவில்லை. ஏதோ error வருகிறது)

நண்பர் வாசுவிற்காக இதனை இங்கு வெளியிடுகிறேன்.

ஜமாலன் சொன்னது…

(email sent by Leena Manimekalai to Jamalan and Perundevi. It is published in parts, since the "comment" section at the blog does not accept more than certain number of characters)

கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெண்.
”அரசியல்சரி” நிலைப்பாட்டுக்கும் கவிதையாக அறிவிக்கப்பட்டிருக்கிற பிரதிக்கும் இடையே சில வார்த்தைகள்
கவிஞர் லீனா மணிமேகலையின்
கவிதைத்தொகுப்பை, வலைத்தளத்தை தடைசெய்யக்கூறி இந்து மக்கள் கட்சியினர் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததற்கு எதிராக சென்னையில் ஏப்ரல் 15-ல் ஒரு கண்டனக்கூட்டம் நடக்க இருப்பதாக அறிகிறோம். தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களால் நடத்தப்பட இருக்கிறது இக்கூட்டம். இது சம்பந்தமாக எங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுகிறோம்.

Fair enough.

லீனா மணிமேகலை இலக்கியம், கவிதை என்று ஒரு பிரதியை தமிழ் இலக்கியச்சூழலின் வாசிப்புக்கு முன்வைக்கும்போது, அப்பிரதியின் சொற்பிரயோகங்கள் பாடுபொருள்கள் ஆகியவற்றை இலக்கியம் என்கிற வகைமையில்தான் நாம் அணுகவேண்டும் என்று நம்புகிறோம். இதில் எழுத்தாளரின் நோக்கம் (அதிர்ச்சி மதிப்பீட்டை முன்வைத்து புகழ்பெற நினைப்பது என்று கருதப்படுபவை உட்பட) இலக்கியத்தைப் படைப்பதுதானா என்பதை மதிப்பிட அளவுகோல் எதுவும் கிடையாது. ஒரு படைப்பாளி எதற்காக இலக்கியம் படைக்கிறார் என்பது நுட்பமான வாசிப்பாளனுக்கும், விமர்சகனுக்கும் அசட்டுத்தனமான கேள்விகளாக மட்டுமே இருக்கமுடியும். தனது உள்நோக்கங்கள் வழி உருவாக்கப்படும் சில வலைப்பின்னல்கள் வழியாக ஒரு எழுத்தாளர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடியும். ஒரு சமூக அமைப்பு ஒரு எழுத்தாளாரை மேலாக வைத்து கொண்டாடுவதும், நிராகரிப்பதும் இந்த வலைப்பின்னல் விளையாட்டில் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால், காலம் அந்த இடத்தை கேள்விக்கு உட்படுத்தும்போது, பின்னர் ஒரு நாள் வரலாறுகளின் ஆற்றங்கரையில் படைப்பின் ஆதார ”சுருதி” கண்டடையப்படும் என்று வேண்டுமானால் நாம் ஆறுதல் அடையலாம்.

Acceptable. Except the mention about writing the poem to attract immediate attention and win instant fame by means of the poem. Though the critics leave it to the future to determine the sincerity or otherwise of the poem, it is clear that they have slipped in this comment with a certain aim and that their opinion is the same.

இலக்கியம், கவிதை என்கிற முகாந்தரத்தில் ஒரு பிரதி வாசிக்கக் கிடைக்கும்போது, அதை அப்படித்தான் வாசிக்கவேண்டுமே தவிர எழுத்தாளரின் தனிப்பட்ட, சொந்த மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கணக்கிலெடுத்து அப்பிரதியை நிராகரிப்பது தவறு. இதற்கு அர்த்தம், எழுத்தாளரின் வாழ்க்கையில் அவர் செய்ததாகக் கூறப்படும் அநீதிகள், ஏமாற்றல்கள் (அவை நடந்திருந்தால்) போன்றவை முக்கியமில்லை என்பதோ, அவரது பிரதியின் மேல்விழும் இலக்கிய முத்திரை இவற்றையெல்லாம் புனிதப்படுத்திவிடும் என்பதோ இல்லை. அந்த சம்பவங்களை அதற்குத் தகுந்த நடைமுறைத் தீர்வு தருகிற தளங்களில், சம்பந்தப்பட்டவர்கள் அணுகித் தீர்வுகாணுதல் நன்மை பயக்கும் என்பது எங்கள் கருத்து.
இதன்பொருள் இலக்கியமும், எழுத்தும் கண்டனத்துக்கு அப்பாற்பட்டவை என்பது அல்ல. கண்டிப்பதற்காக எழுத்தைக் குறிவைப்பது மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும். மேலும் கண்டனத்தை எதிர்கொள்வதாக செய்யப்படும் செயல்களிலும் (இக்கூட்டம் உட்பட) வேறுபிரச்சனைகள் உள்ளன என்பதையும் நாம் மறுக்கவியலாது. இச்சூழலில், இலக்கியத்துக்கு வெளியே செயல்படும் அரசியல் மதக் கட்சிகளுக்கோ நிறுவனங்களுக்கோ, இலக்கியம் என்று எழுதப்பட்டிருக்கும் பிரதியைக் குறித்து புகார் கொடுக்க தார்மீக உரிமை இல்லை என்பதைமட்டும் இங்கே பதிவு செய்கிறோம்.

Accepted.

ஜமாலன் சொன்னது…

ஈழம், போஸ்னியா இன்னும் எண்ணற்ற நாடுகளில் பாலியல் வன்புணர்ச்சி என்பது போரின், அரசின், இறையாண்மை அரசியல்களின் அதிகார ஆயுதமாகவே உள்ளது. மேலும், போரில் ஆண்-பெண் உடல்கள் இரண்டும் கருவிகளாக மாற்றப்படுகின்றன. அதை ஒரு பெண் ஒடுக்கு முறையாக மட்டுமே சுருக்கிப் பார்த்து விட முடியாது. ஆண்-பெண் உடல்களை போர்-எந்திரத்தின் விழைச்சாக, அதிகார விறுப்புறுதிக்கான கருவிகளாக ஆக்கப்பட்ட உடல்களாகவே பார்க்க முடியும். இத்தகைய பல்வேறு சூழ்நிலைகளின் பாலியல் வன்முறைகளை குடும்ப பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு சமனாக அல்லது அவை போல ஒன்றாக பார்த்துவிடமுடியாது. இக்கவிதையில் வன்புணர்ச்சி என்கிற புள்ளியில் இவ்வித்யாசங்கள் பிரித்தறியப்படவில்லை.

I am not writing a scientific essay on rape. It is accepted that women are the first victims of male soldiers in the aftermath of a war. One cannot escape by stating that both men and women are 'victims' of the war-machine. It is not the same. We talk of war as a male exercise as most other things in life are. Women have perfunctory roles to play in this grand design perpetuated by males. And, ultimately, they are the victims. Even in the case of households, many studies have shown that most of the consensual that we speak of is nothing but rape. These are all issued hotl discussed in the feminist world. It will be very childish for the critics to raise such objections in the light of all this.

Let no one have the misunderstanding that it is my idea that all sex going on is male oppression. There are many males and females and transgenders who do this beautifully in their lives. But, the fact remains that as a politica stand one should see primarily as a form of putting the male stamp on the woman.

மேலும் கவிதையில் பெண்கள் அனைவரும் தொடைகளின் இடைவழிக்காகவே, அதை ஆக்கிரமிப்பதன் மூலம் அச்சுறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அரசதிகாரம் பெண்ணுடலை கையாளும் அதே முறைகளைத்தான் புரட்சியாளர்களும், கலகக்காரர்களும் கையாளுகிறார்கள் என்பதும் பொதுபுத்தியின் “அறம்“ சார்ந்த பார்வைதான். அதாவது ஒரு உடலின் பாலியல் சார்ந்த இச்சை என்பது கீழானதாக, அதை செய்யும் உடல் புரட்சிபேசத் தகுதியற்றதாக சொல்லப்படுவதாகவும் இதை வாசிக்கலாம். தவிர, அரசு, எதிர்ப்பு, கலகம் இவை எல்லாவற்றிலும் அதிகாரம் செயல்படும் என்றாலும், இவற்றைச் சமன்படுத்துவதிலும் பிரச்சினைகள் உள்ளன.

Already replied above.

வன்புணர்ச்சிக்கான ஒரு களமாக பெண்ணுடல் கட்டப்பட்டுள்ளது என்றால், களத்தில் ”விளையாடுவதற்கான” ஆணுடலும் தயாரிக்கப்பட வேண்டும் அல்லவா. அப்படி தயாரிக்கப்பட்ட ஆணுடல்கள் மட்டும் என்னவித நெகிழ்வை இச்சமூகத்தில் அனுபவித்துவிடப் போகிறது? ஆண்மை, பெண்மை என்கிற முரண்களின் அடிப்படையிலான சமூக, கலாச்சார ஒழுங்குவிதிகள் ஒட்டுமொத்த உடல்களில் பதிவுறுத்தப்படுகின்றன, இருமைக்கட்டமைப்பில் உடல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த விதிகள்தான் இன்று எதிர்க்கப்படவேண்டியவை, வெளிப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டியவை. ஆனால் கவிதை விதிகளை நோகாமல் மேலோட்டமாக விளைவுகளை நோகிறது.

It iIs said that if female bodies are meant for being oppressed, male bodies have to be necessarily constructed to play the game. The whole point of feminism or whatever it represents or what is known as the struggle of females against their oppression is that this was the original oppressor-oppressed divide in the world. Despite all efforts, this divide still exists. We are not discussing individual cases here. It is not that if we think of this divide we cannot have a fruitful relationship with men. Like there are cruel (masculinized) women in this world, there are also kind (feminized) men too. This fact is not the subject matter of the poem.

ஜமாலன் சொன்னது…

வன்புணர்ந்து அதிகாரத்தைச் செலுத்தும் “ஆம்பிளை(களு)க்கு” எதிராக வன்புணர்த்தப் படுகிற எல்லாப் “பொம்பிளைகளின்” சார்பிலும் “நான் லீனா” நிற்கிறார் (கவிதையில், நிற்கிறது). ஆக, இந்தப் பெண்கள் எல்லாரும் அம்மா, அம்மம்மா, அத்தை சொல்லிக்கொடுத்தபடி யோனியை விரித்து வன்புணர்ச்சிக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதலைக் கவிதை தருகிறது. பாதிக்கப்பட்ட, படுகிற பெண்களின் எதிர்ப்புணர்வுக்கோ குறைந்தபட்சமாக அவர்களின் உடன்பாடின்மை என்பதற்கோ இடமே கவிதையில் இல்லை.

Yes, because the world created by the oppressor is such. No woman can escape from it.

உலகெங்கும் துயருறும் வன்புணரப்படுபவர்களின் பிரதிநிதியாக “நான் லீனா” Vs. உலகின் எல்லாவகை ஆண்களும் என்பதே கவிதையின் ஒன்லைனர்.

This issue of 'Me, Leena' has been explained. Lets read it as 'Me, _____"

பல்வாசிப்புத் தளங்களைத் தராத, தக்கையான முரணை விதந்தோதுவதாலேயே இது கவிதையா என்று கேள்வி எழுகிறது.

This poem is open to many interpretations as the arguments themselves show.

லீனாவின் இரண்டாவது கவிதை, சே, பிடல், பெர்லின் சுவர், சோவியத், அமெரிக்கா போன்றவை, புணருகிற ’நான்’ உடலின் மார்பகம், அல்குல் போன்ற அங்கங்களின் பெயர்கள் அல்லது உருவகங்களாகின்றன. பல இடங்களில் அங்கம், பெயர்-உருவகத்துக்கு தொடர்புறவு இல்லை அல்லது வெறும் மோனை வலிந்து துருத்திக்கொண்டு நிற்கிறது (உதாரணம், ”மனம்பிறழ்ந்த குழந்தைபோல மம்மு குடித்தாய்” ) கவிதையில் சொல்லப்படும் “நீ“ அல்லது எதிர் உடல், வெறும் பாலியல் புணர்ச்சி எந்திரமே. குறிப்பாய் மார்க்சிய புரட்சியாளனை இங்கு எதிர் உடலாக முதன்மைப்படுத்துவதன் வழியாக பாலியலில் “தூய்மைவாத” கருத்துகள் கொண்ட மார்க்சியர்களை (மார்க்சியர்களின் இத்தகைய பார்வைகளில் நமக்கு விமர்சனம் உண்டு என்றாலும்), பாலுறவுக்காகவே அலைபவர்களாகச் சித்தரிக்கிறது.

It is well known that the Marxists, despite, the treatises by Engels on private property and family, have not bothered to pursue any revolutionary thinking in these lines. The family, not only was destroyed, but became strengthened. This is so everywhere. Women have become pretty mascots all over the communist world, one example being China during the Olympic Games. The women who thought socialism would be their natural ally have been disappointed. This is the basic idea of this poem.

ஜமாலன் சொன்னது…

எத்தகைய ஆண் புரட்சியாளன் அல்லது மார்க்சியவாதியாக இருந்தாலும், பாலியலில் அல்லது சக பெண்ணுடலை அணுகும்போது அவனும் சராசரி மனிதனாக மாறிவிடுகிறான் என்பதை இக்கவிதை வழக்கமான அறக்க்கண்ணோட்ட சட்டகத்துக்குள் வைக்கிறது. கவிதைவரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் புரட்சி பற்றிய “புனித கவிழ்ப்பு“ “அறக்கவிழ்ப்பு“ போன்ற கவிழ்ப்புச் சொல்லாடல்களால் ஆளப்பட்டிருப்பதைப்போல தோன்றும். உண்மையில், கவிதையின் உள்தர்க்கம் என்பது என்ன புரட்சி பேசுகிறாய், ஒரு அதி-யோனியின் புணர்ச்சிக்கு முன் இதெல்லாம் உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான். இப்படிச் சொல்வதன் வழியாக, பாலியல் செயல்பாட்டைப் பற்றி பொதுவாக சமூகமனம் கொண்டுள்ள கீழ்மை மதீப்பீடே உள்ளுரையாக உள்ளது. பாலியல் அல்லது புணர்ச்சி குறித்த இந்தக் ”கீழ்மை” மதிப்பீடு கடவுள் துவங்கி இன்னபிற பிம்பங்களின் மீது சுமத்தப்படும்போது இவற்றைத் தாங்கிப்பிடிப்பவர்களின் எரிச்சலுக்கும் காரணமாக அமைகிறது என்பதைச் சொல்ல அவசியமே இல்லை.

How can it be assumed from the poem that i am also treating sex as a second-grade activity like how the society takes it? This is strange. This is a male-oriented argument. It is because of its oppressive nature that men (read 'Society') treat sex as a degrading activity. The concept of the super-vagina also stems from the basic male fear of the vagina which is expressed in many ways including rape.

சரி, இந்த பிரச்சினைகள் குறித்து பெரும் பத்திரிக்கைகள் துவங்கி பதிவுலகம் வரை பல மாதங்களாகப் பேசப்பட்டுவரும் நிலையில் இப்பொழுது இதனை முன்வைப்பதன் தேவை என்ன என்கிற கேள்வி உங்களைப்போலவே எங்களுக்கும் தோன்றியதுதான். நாங்கள் அவதானித்தவரை இப்பிரச்சனையில் பேசப்பட்டவை எல்லாம் கவிஞர் லீனா மணிமேகலையை தனிப்பட்ட முறையில் தாக்குவது அல்லது போற்றுவது என்ற அளவிலேயே நின்றுபோனதே தவிர மொழி அர்த்தமாதல் குறித்த விவாதம் நடக்கவில்லை. இலக்கியம் சார்ந்த உரையாடலை முன்வைத்து இவ்வரிகளை அணுகவேண்டும். அதேநேரத்தில் ஒரு கவிஞருக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக நமது குரலை பதியவைப்பதும் அவசியம் என்று கருதியே இதனை எழுதினோம்.

The criticism is well accepted and is necessary. I have put forward my arguments forcefully. I believe that whatever my beliefs are at present, they have come out in my poems in a poetic way and not a polemical way. I wanted to portray a kind of scream against this oppression from an extreme point of view to the extent that I was willing to be termed offensive. What this has caused in my personal life is indescribable and has only strengthened my view expressed in the poems.

ஜமாலன் சொன்னது…

வாசுவின் பின்னூட்டத்துக்குப் பின் வெளியிட்டிருப்பது லீனா மணிமேகலையின் கடிதத்திலிருந்து. லீனாவின் எதிர்வினைகள் ஆங்கிலத்தில்.

ஜமாலன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜமாலன் சொன்னது…

அன்புள்ள வினவு..

பின்னோட்டத்திற்கு நன்றி. நாங்கள் ”நடுநிலை”யிலிருந்து பேசுவதாக எங்கும் சொல்லவில்லை. நடுநிலை போன்றவற்றில் எங்களுக்கும் நம்பிக்கை இல்லை. நடுநிலை என்பதும் ஒரு நிலைதான் என்பதை அறிவோம். ”இடையே” என்பது நடைபெறும் விவாதங்களில் ஒரு குறுக்கீடு செய்வது, அவ்வளவே.

லீனா கவிதை எப்படி எழுதவேண்டும் என்பது பற்றியதல்ல இப்பதிவு. எழுதிய கவிதை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியது. மேலும் “அரசியல்சரி நிலைப்பாடு” என்பது ஒருவர் கொண்டுள்ள கட்சி, கருத்தியல் அரசியல் அடிப்படையில் எழுத்தை விமரிசிப்பதை குறிப்பது மட்டுமல்ல, “அரசியல் சரித்தன்மை“ காரணத்துக்காக பெண் எழுதினார் என்பதற்காகவே அதனை விமர்சிக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாடும்தான்.

//மொழி விளையாட்டிற்கும், வாழ்வின் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கும் இடையில் எது பிரதானமானது, எது இரண்டாம் பட்சமானது, என்ற 'அலுப்பூட்டும்' மார்க்சிய இயங்கியலில் எழுதுவதற்கு ஆவலாக உள்ளோம். //
எழுதுங்கள். வாசிக்கிறோம்.

அன்புடன்

பெருந்தேவி
ஜமாலன்

ஜமாலன் சொன்னது…

அன்புள்ள வாசு,

பின்னூட்டத்துக்கு நன்றி.

//இயக்கம் சார்பானவர்களுக்கு பிரதியில் பிம்பம் கட்டமைக்க சில தேவைகள் இருக்கினறன்.அது பிரதியில் புனித லெனினாக இருக்கலாம் அல்லது புனித ராமராக இருக்கலாம்.ஆனால் இலக்கிய பிரதியை இம்மாதிரியான எந்த கண்ணியிலும் அடைக்கமுடியாது. william burroughs, genet, batelle, என்று சொல்லிக்கொண்டு போகலாம். இப்போது தமிழ் பெண்ணிய கவிதைகளுக்கு திரும்புவோம்.//

சரிதான்.

//ஆண்மைய சூழலில் ஆண்களால் உற்பத்திசெய்யப்படும் வார்த்தைகளால் கட்டைமைக்கப்பட்ட கவிதைகள் தாக்குதலுக்கு உள்ளாவது வியப்பில்லை. யோனி, சுன்னி போன்ற வார்த்தைகள் தனக்கு மட்டுமே சொந்தம், ஏனெனில் இவ்வார்த்தகளை நானே உற்பத்தி செய்தேன் இதை எதிர்பாலார் உச்சரிக்கவும்/உபயோக படுத்த தடை செய்கிறான். குறிப்பாக பிரதியில். ஆக உடல் அரசியல் பேசும் பெண்ணியவாதிகள் தமக்கென்று புதிய மொழியில் படைப்புகளை வெளியிட‌ வேண்டும். //

இவ் வார்த்தைகளை பொதுவெளியில் ஆண்கள் பயன்படுத்துவத்தையும்கூட சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் உண்மை. இது எதிர்பாலர் உச்சரிப்பதால் எழும் பிரச்சனையாகமட்டும் பார்க்க முடியாது. இது பொதுவாக சமூகத்தின் பாலியல் பற்றிய புரிதலில் இருந்து வருகிறது. மேலும், இவ்வார்த்தைகளை பிரதியில் பயன்படுத்துவது பற்றியும் எங்கும் நாங்கள் விமர்சிக்கவில்லை.

“active feminism,” “intellectual feminism” என்று தமிழ்ச்சூழலில் நீங்கள் குறிப்பிடுபவை பற்றி விரிவாக விவாதிக்கவேண்டும், இது இப்போது இங்கே சாத்தியமில்லை. மேலும் “active feminism” என்று பேசும்போது அதை முன்வைக்கும் கவிதைக்கும் மற்றவகை பிரதிகளுக்குமான (உதாரணமாக துண்டறிக்கை போன்றவை) வேறுபாடு இருக்கிறதா, இருந்தால் அவை என்ன என்பதையும் பேசவேண்டும்.
இங்கே லீனாவின் கவிதைகளைப் பொறுத்தவரை எங்கள் விமரிசனம் அது discursive layers-யை தரவில்லை என்பதுதான். ஹெலன் சிக்ஸு, கேத்தே ஏகர் போன்றவர்களின் “கலகப்பிரதிகளின்” முக்கிய குணாம்சம் அவை கொண்டுள்ள பலவாசிப்புத்தளத்தின் இயங்கும் மொழியும், உடலை, உறுப்புகளை மொழியால் சுட்டும்போதே அர்த்தச்செயல்பாட்டை தொடர்ந்து பிரச்சினைக்குள்ளாக்குவதும்தான். உங்களுக்கு லீனா மணிமேகலையின் கவிதைகள் கேத்தே ஏகர், ஹெலன் சிக்ஸு-வின் பிரதிகள் போன்று தோன்றலாம். தெரிதாக்கடவுள் உங்களின் இத்தகைய எண்ணத்தை மாற்றி ஒருவேளை காப்பாற்றவும்கூடும். :-)

அன்புடன்,
ஜமாலன்
பெருந்தேவி

vasu சொன்னது…

போன மறுமொழியில் நான் எந்த குறிப்பிட்ட கவிதையையும் பற்றி பேசவில்லை. இச்சம்பவத்தின் என் பார்வையையும் மற்றும் தமிழ் பெண்ணிய கவிதைகளையும் பற்றிய என்னுடைய புரிதலை முன்வைத்தேன். ஆனால் பெண்ணிய படைப்புகள் புதிய மொழியில் எழுதவேண்டும் என்ற கருத்தை நீங்கள் கவனிக்கவில்லை போலிருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசலாம். மற்றபடி Saint Derrida என்று கோவிலோ/பிம்பமோ கட்டுவதற்கு தமிழ் இலக்கியம் இயக்கமல்லவே. நீங்களே வேறு கோட்பாட்டை முன்வைத்து தெரிதாவையும் என்னையும் சேர்ந்து உடைக்கலாம்,நிராகரிக்கலாம்.இம்மாதிரியான எந்த பிம்பங்களுக்கும்/குழுவுக்கும் மற்றும் எந்த அடையாள அரசியலிலும் என்னை பொறுத்திக்கொள்ள விரும்பவில்லை.

பெயரில்லா சொன்னது…

'The whole point of feminism or whatever it represents or what is known as the struggle of females against their oppression is that this was the original oppressor-oppressed divide in the world. Despite all efforts, this divide still exists. We are not discussing individual cases here. It is not that if we think of this divide we cannot have a fruitful relationship with men. Like there are cruel (masculinized) women in this world, there are also kind (feminized) men too.'

Leena's understanding is flawed as she simply essentializes male/masculine = bad;bad=male/masculine.
I think the best way to learn about feminism is to ignore what has been written in Tamil and read in English only.I would not have written this had the post by Jamalan and Perundevi been with a wider understanding of feminism and literature.

பெயரில்லா சொன்னது…

'இச்சூழலில், இலக்கியத்துக்கு வெளியே செயல்படும் அரசியல் மதக் கட்சிகளுக்கோ நிறுவனங்களுக்கோ, இலக்கியம் என்று எழுதப்பட்டிருக்கும் பிரதியைக் குறித்து புகார் கொடுக்க தார்மீக உரிமை இல்லை என்பதைமட்டும் இங்கே பதிவு செய்கிறோம்'

Why?.If a poem can criticise something or someone to complain against it is also an expression of the right to express views.Once it is public domain for reading by all a text can be interpreted, ridculed, and may be banned if that ban is legal and is done after observing a due process that has sanction of the law.Basically the poem or poet cannot claim immnunity from law or criticism because the law that gives the writer the freedom to write also gives others the right to criticise.

ஜமாலன் சொன்னது…

பின்னோட்டத்திற்கு நன்றி அதியமான்.

பதிவிற்கு தொடர்பற்றதான சர்ச்சை என்பதால் உங்கள் கருத்து மட்டுறுத்தப்பட்டுள்ளது. புரிந்துகொள்வீர்கள் என்று கருதுகிறேன்.

நன்றி.

ஜமாலன்

ஜமாலன் சொன்னது…

அன்புள்ள லீனா,

உங்கள் கருத்துகளை நீங்கள் பின்னூட்டமாக வெளியிடவில்லை என்றாலும், எங்களது இருவரது அஞ்சலுக்கும் கடிதமாக அனுப்பியதால், அவற்றைப் பின்னூட்டமாக வெளியிட்டுள்ளோம்.

உங்கள் கவிதைகளின் சாரமாக நீங்கள் எந்த வாதத்தை முன்வைக்கிறீர்களோ அதே வாதத்தைதான் எங்கள் விமர்சனமாக நாங்கள் முன்வைத்துள்ளோம். ஆண்-பெண் என்பவற்றை இருமை-எதிர்வுகளாக, ஒடுக்குபவர்-ஒடுக்கப்படுபவர் என்று கருப்பு-வெள்ளையான அணுகுமுறைகள் இன்றைக்கான பன்முக சமூக அமைப்பை, பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கு பயன்படக்கூடியவை அல்ல என்று கருதுகிறோம். இருமை முரண்களை எதிர்ப்பது என்பது நீங்கள் எளிமைப்படுத்தி புரிந்துகொண்டிருக்கிற வகையில், ”சில பெண்கள் ஆண்களைப் போல cruel ஆக இருக்கிறார்கள்” என்பதாக அல்ல. இருமைகளைக் கட்டமைக்கும் அடிப்படை ஆதிக்கக் கருத்தியல் விதிகளிலிருந்து பெறப்படுகிறது என்பதுதான். இதைத் தெளிவாகவே சொல்லியிருக்கிறோம்.
நன்றி.

அன்புடன்
பெருந்தேவி
ஜமாலன்

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.