1 முட்டாள் தினமும் 361 அறிவாளிகள் தினமும்.

ஏப்ரல்-1. பெரும்பாலான நாடுகளில் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  காதலர் தினம் போல, அன்னையர்தினம் போல.. இது முட்டாள்களுக்கான தினமல்ல, நம்மை நாமே முட்டாளாக்கக்கூடிய பல அனுபவங்களை உருவாக்கி, சக மனிதர்களுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதற்கான தினம் என்று கூறலாம். அல்லது 361 நாட்கள் அறிவாளிகளாக கழித்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் நமது முட்டாள்தனத்தை, எண்ணிப்பார்த்து மனமுவந்த ஒரு நாளையாவது முட்டாளாக கழிப்பதற்கான நாள் எனலாம்.

முட்டாள்கள் என்று யாரும் இல்லை, ஆனால் முட்டாள்தனங்கள் உண்டு.  அது எல்லோருக்குமான ஒரு அனுபவம் அல்லது ஒரு நிகழ்வு. பள்ளிகளில் படிக்கும் காலங்களில் “ஏப்ரல் பூலா“-க ஒருவரை ஆக்க பல திட்டங்கள் போடுவோம். முடியாதபட்சத்தில், ஒருவர் சட்டையில் ஒருவர் இங்க் அடித்துக் கொள்வோம். அறிவு தோற்கும் இடங்களை ஆயதம்தானே கைப்பற்றும். இது வரலாறு. மாற்றமுடியுமா? ஏப்ரல்-1ற்கு என்றே பிரத்யேகமான ஒரு பழைய் கந்தல் சட்டையை பாதுகாத்து வைத்து போட்டுச் செல்வோம். அன்றுதான் ஒரு வகுப்பில், ஒரு பள்ளியில், ஒரு வீட்டில், ஒருவனுக்குள்ளேயே எத்தனை குழுக்கள் உள்ளன என்று அறிந்து கொள்ள முடியும். அது ஒரு போர்தான். அதற்காக 3 நாட்களுக்கு முன்பே காட்டாமணக்கு பால் எடுத்து பாட்டிலில் சேகரித்து, அதனை இங்கில் கலந்து அடிப்போம்.  அப்பொழுதுதான் கறை போகாது என்று. எங்கள் ஊரில் இன்று காட்டாமணக்கே அழிந்துவிட்டது. பல இளம் தாவரவியல் விஞ்ஞானிகள அத அன்று உருவாக்கிக் கொண்டிருந்தது. மருத்துவக் குணம் கொண்ட அந்த செடிக்கு பதிலாக, நெய்வேலி காட்டாமணி எனப்படும் பார்த்தீனியம் என்கிற ஒருவகை விஷச்செடி பரவிவி்ட்டது. அரசு மானியமாக தந்த உரங்கள் மற்றும், விதைநெல்களுடன் கலந்து அந்நிய நாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்பட்டது அச்செடி. பசுமைபுரட்சி என்றால் விவசாயிகளை அழிப்பது, வெண்மைப் புரட்சி என்றால் பசுமாடுகளை அழிப்பது, என்பதுதானே  அரசாங்க அகராதியில் உள்ள பொருள். அச்செடி பார்ப்பதற்கே, அதன் செயற்கை தன்மையுடன்தான் இருக்கும். விளைநிலங்களை தரிசுகளாக மாற்றியதில் யூகலிப்டசைப்போல அச்செடிக்கும் முக்கிய பங்கு உண்டு. நமது சூழலை விஷமாக்கிய அரசியல் அது. சரி.. நாம் பதிவிற்கு வருவோம்.

ஏப்ரல்-1 முட்டாள்கள் தினமட்டுமல்ல வேறு சில சிறப்புகளும் உண்டு. 2004 ஏப்ரல் 1-ல்தான் நாம் பதிவு எழுதிக்கொண்டிருப்பதற்கு காரணமான கூகுல் குழுமம் ஜி-மெயிலை அறிமுகப்படுத்தியது பரிச்சார்த்தமாக. முடடாள் தினத்தை வலைக்கும் ஏற்றிய பெருமை என்கிற உள்ளர்த்தம் ஒன்று உள்ளதோ இதில். 2001 ஏப்ரல்-1 ல் நெதர்லாண்ட் உலகில் முதல் தேசமாக ஓரினத்-திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரித்து.

எல்லாவற்றையும்விட முக்கியமானது, சதாம் உசேனின்  ராஜதந்திரியாக இயங்கிய  அமேரிக்காவின் இரட்டை-உளவாளி ஒருவரின் சங்கேதப் பெயர் April Fool. இவர் அமேரிக்க படை வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்த உள்ளது என்கிற தவறான தகவல் தந்து, ஈராக்கிய படைகளை வடக்கிலும் மேற்கிலும் நகரச் செய்துவிட்டு, குவைத் வழியாக அமேரிக்கபடை நுழைந்ததே பாக்தாத்தை பிடிப்பதற்கு வசதியாகிவிட்டது.  ஈராக் படைபிரிவின் தலைவர்களை தவறான தகவல்களில் குழப்பியது அந்த அமேரிக்க அதிகாரிதான். 

மேலதிக தகவலுக்கு-

 • American 'double agent' sold Baghdad false war plans, Telegraph.co.uk, August 2, 2004
 • Agent April Fool tricked Saddam, TimesOnline, August 1, 2004

  இப்படியாக பல சிறப்புகளைக் கொண்ட “முட்டாள்கள் தினமான“ இன்று எனது புத்தக அறிமுகக் குறிப்பை வெளியிடுவது பொருத்தமே. 

  மொழியும் நிலமும் 2003-ல் வெளிவந்தது. ஏழு ஆண்டுகளுக்குப் cover-front-01பிறகு இரண்டாவது தொகுப்பு வெளிவருகிறது.

     •             
     •              இனவாதம் என்கிற
                   விஷப்பற்களால்
                   அழித்தொழிக்கப்பட்ட 
                   ஈழத்தமிழர்களுக்கு...

  அர்ப்பணிக்கப்பட்ட இந்நூலின் பின்னட்டையில் வெளியிடப்பட்டுள்ள அறிமுகக் குறிப்பை பதிவில் நூலறிமுகமாக வெளியிடுகிறேன். இதை வாசித்தபின் புத்தகம் வாங்கும் எண்ணத்தை கைவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. எழுதியவரும், பதிப்பகத்தாருமே பொறுப்பு.

   

  தனிமனிதன் என்கிற அலகை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கcover-back-01ப்பட்டது நவீன சமூகம்.  இச்சமூகம் உருவாகும் செயல்போக்கில் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணற்ற கதையாடல்களால் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே நவீனதொன்மங்கள்.  பண்டைய சிந்தனைகளை தொன்மம் என்று அடையாளப்படுத்தியதன் மூலம், அச்சமூகங்களை முற்றிலும் அறிவிற்கு புறம்பான உணர்ச்சிமிக்க மனித உடல்களாக குறியிட்ட இந்நாகரீக சமூகம் தன்னை உறுதி செய்துகொண்டு பேரமைப்பாக விரவியிருப்பது அறிவுசார் தொழில் நுட்பம், வளர்ச்சி, அறிவியல், பகுத்தறிவு என்கிற நவீன தொன்மங்களின் கதைவெளிகளில்தான். இக் கதைவெளிகளை சிதைத்துப் பார்க்க முயன்றிருக்கிறது இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். உடலரசியல், பெண்ணியம், கலை இலக்கியம், அரசியல், திரை இலக்கியம் மற்றும் ஈழம் என்கிற பிரிவுகளில் தொகுக்கப்பட்ட இக்கட்டுரைகள் இத்தகைய தொண்மக் கதையாடல்களை பன்முகப் பரப்பில் விசாரணைக்கு உட்படுத்துகின்றன. காந்தி, புள்ளியல், நீலப்படங்கள், குடி, இஸ்லாமியப் பெண்ணியம், தமிழில் வெளிவந்த புதியவகை நாவல்கள், மண்டோவின் கதைவெளி, பயங்கரவாதம், கிரிக்கெட், மதவாதம், இனவாதம், குடிமகனாதல், தமிழ் ஈழம், ஈரானியத் திரைபடங்கள் துவங்கி தமிழின் வெகுசனப் படங்கள்வரை இவ்விசாரணையை நிகழ்த்திச் செல்கின்ற இக்கட்டுரைகள், உடல்கள் மனிதர்களாகி, மனிதர்கள் குடிமகன்களாக ஆன கதைகளை வெவ்வேறு பரப்புகளில் வைத்து உரையாடுகின்றன..... 

  வெளியீடு

  புலம்
  332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
  திருவல்லிக்கேணி
  சென்னை - 600 005
  தொலைபேசி - 0091-44-4556 7517

  மின்னஞ்சல்: pulam2008@gmail.com

  விலை ரூ 300 -  பக்கம் 432

  சில நண்பர்கள் இணையத்தில் கிடைக்குமா என்று கேட்டுள்ளனர். தகவல் கிடைத்தவுடன் மற்றொரு “முட்டாள்தினப் பதிவு” போட்டுவிடலாம். இந்த பதிவின் முட்டாள்தனமான தலைப்பைப்போல….))

  நன்றி

  ஜமாலன். (01-04-2010)

 • 20 comments:

  கோவி.கண்ணன் சொன்னது…

  ஏப்ரல் 1....சிறுவயது நிகழ்வுகளை வெளிக் கொணர்ந்து பசுமையான நினைவுகளை நினைவு கூறச் செய்ததற்கு நன்றி !

  நூல் வெளியீடு செய்தமைக்கு பாராட்டுகள்.

  எனக்கு ஒன்று வேண்டும்....ஊருக்குப் போகும் போது தான் வாங்க முடியும்.

  vasu சொன்னது…

  நண்பர் ஜமலானுக்கு,
  போன வாரமே என்னிடம் உங்கள் புத்தகம் வந்தது. புத்தக production டாலி ஒவிய அட்டைப்படத்துடன் பிரமாதமாக வந்துள்ளது. குடிக்கலாச்சாரம் பற்றிய கட்டுரையை ஆதாம்/ஏவாளோடு ஆராய்ந்து எழுதியது தமிழில் முக்கிய ஆய்வுக்கட்டுரையாகும்.முழுவதும் படித்துவிட்டு விரிவாக பேசுகிறேன்.
  vasu

  அருண்மொழிவர்மன் சொன்னது…

  இணையம் மூலமாகவோ அல்லது மணிஓடர் மூலமோ கிடைக்குமானால் தயவு செய்து உடனே சொல்லுங்கள்.

  புத்தகம் அதிகம் பேரை சென்றடைய வாழ்த்துக்கள்

  ஆபிதீன் சொன்னது…

  வாழ்த்துக்கள் ஜமாலன்

  ஜமாலன் சொன்னது…

  நன்றி கோவியார்... நம்ம எல்லாம் ஒரே மாவட்டம் என்பதால் இந்த பழக்கங்கள் ஒரேமாதிரியகாத்தானே இருக்கும். இன்னும் சில குட்டைப்பாவடை நினைவுகள் மற்றும் ஜரினா என பலவும் நமக்கு ஒன்று போல உள்ளது. ))

  சிங்கையில் கிடைக்குமா என்பதை பதிப்பாளரிடம் கேட்டு சொல்கிறேன்.

  ஜமாலன் சொன்னது…

  நண்பர் வாசுவிற்கு...

  புத்தகம் நன்றாக வந்துள்ளது (வடிவத்தில்தான்) என்கிற உங்கள் கருத்து மகிழச்சியாக உள்ளது. காரணம் நான் பார்க்கவில்லை இன்னும்.

  ஆதாம்-ஏவால் போன்ற தொன்மக் கதையாடல்களை மட்டுமல்ல பலவற்றையும் மறுவாசிப்பு செய்வது அவசியம். கொசாம்பியின் “மாயையும் யதார்த்தமும்“ என்கிற நூல் இந்திய புரணாணிகத் தொன்மங்களை மறுவாசிப்பு செய்கிறது. “அசட்டக்“ தொன்மத்தை வைத்து பேசும் உங்கள் கல்குதிரை கட்டுரையும் அப்படித்தான்.

  விரிவாக, வாய்ப்புள்ளபோது எழுதுங்கள்.

  ஜமாலன் சொன்னது…

  நன்றி அருண்மொழிவர்மன்

  //இணையம் மூலமாகவோ அல்லது மணிஓடர் மூலமோ கிடைக்குமானால் தயவு செய்து உடனே சொல்லுங்கள்.//

  கண்டிப்பாக. இந்தியா என்றால் மணி-ஆர்டரில் கிடைக்கும். நீங்கள் எங்கு உள்ளீர்கள்? என்று அஞ்சல் அனுப்புங்கள். நான் அங்கு கிடைப்பதற்கான வாய்ப்பை சொல்கிறேன்.

  //புத்தகம் அதிகம் பேரை சென்றடைய வாழ்த்துக்கள்//

  நீங்கள் எனது “மண்டோ கடிதங்கள்“ புத்தக முன்னுரைப் பற்றி எழுதியது நினைவிற்கு வருகிறது.
  நன்றி நண்பரே.

  ஜமாலன் சொன்னது…

  ஆபிதீன்
  //வாழ்த்துக்கள் ஜமாலன்//

  என்ன ஞானா? (ஞானா என்றால் சூஃபியிஜ ஞானம் பெற்றவர் என்பதற்காக சொன்னேன்... நாகூர் நானா இல்லை.) வாழ்த்தோட விட்டுட்டிய.. இது உங்கள் அற்புதமான நையாண்டிகளில் ஒன்று இல்லையே இது. ))) நீங்களும் நாங்கோரி உறுப்பினர்தானே.. அதான் கேட்டேன்.

  நன்றி.

  ஆடுமாடு சொன்னது…

  இன்னும் வாங்கலை. ஞாயிறு வாங்கிவிடுவேன் என நினைக்கிறேன்./ வாசித்துவிட்டு சொல்கிறேன்.

  வாழ்த்துகள்ஜி.

  gulf-tamilan சொன்னது…

  வாழ்த்துக்கள்!!!

  ஜமாலன் சொன்னது…

  நன்றி நண்பர் ஆடுமாடு

  //இன்னும் வாங்கலை. ஞாயிறு வாங்கிவிடுவேன் என நினைக்கிறேன்./ வாசித்துவிட்டு சொல்கிறேன்.//

  கண்டிப்பாக உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

  //வாழ்த்துகள்ஜி.//

  அதென்ன நண்பரே... ஜி. திட்டுவது என்றால் தமிழில் திட்டங்கள் நண்பரே... )))

  ஜமாலன் சொன்னது…

  gulf-tamilan கூறியது...

  வாழ்த்துக்கள்!!!

  - நன்றி.

  கையேடு சொன்னது…

  வணக்கங்க ஜமாலன்,

  புத்தக வெளியீட்டிற்கான வாழ்த்துகள். ஊருக்குச் செல்லும் போது வாசிக்கிறேன்.

  புது டெம்ப்ளேட்டும் நல்லா இருக்கு.

  அது என்ன, மீதம் 361 நாள் கணக்கு. புரியவில்லை. இதுவும் முட்டாள் தினத்துக்காக சேர்த்த எண்ணா. :)

  ஜமாலன் சொன்னது…

  கையேடு கூறியது...

  //புத்தக வெளியீட்டிற்கான வாழ்த்துகள். ஊருக்குச் செல்லும் போது வாசிக்கிறேன்.

  புது டெம்ப்ளேட்டும் நல்லா இருக்கு.//

  நன்றி. வாசித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

  //அது என்ன, மீதம் 361 நாள் கணக்கு. புரியவில்லை. இதுவும் முட்டாள் தினத்துக்காக சேர்த்த எண்ணா. :)//

  யாராவது கேட்பார்கள் என்று நினைத்தேன். நீங்கள் அதை சரியாக கவனித்து கேட்டுவிட்டீர்கள். அந்த விடுபட்ட 3 ல் ஒரு நாள் கேட்பவரின் பிறந்தநாள் எனறு சொல்லலாம் என்று இருந்தேன். )))

  கையேடு சொன்னது…

  //அந்த விடுபட்ட 3 ல் ஒரு நாள் கேட்பவரின் பிறந்தநாள் எனறு சொல்லலாம் என்று இருந்தேன். ))) //

  ஆஹா.. இது super.

  மாயன் சொன்னது…

  ஜமாலன் சார்.. வாழ்த்துக்கள்

  ஜமாலன் சொன்னது…

  நன்றி நண்பர் மாயன்...

  www.bogy.in சொன்னது…

  தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  www.bogy.in சொன்னது…

  தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ஜமாலன் சொன்னது…

  நண்பர்களுக்கு நூலை இணையத்தில் பெற இந்த சுட்டியை சொடுக்கவும்..

  http://www.udumalai.com/?prd=நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்&page=products&id=7729

  ஜமாலன். Blogger இயக்குவது.