அனைவருக்குமான அறிவியல் மற்றும் எனது அறிவியல் தமிழ் கல்வி

“Data banks are the encyclopedia of tomorrow; they are ‘NATURE’ for postmodern men and women” -  Lyotard.

நண்பர் கையேடு அனைவருக்குமான அறிவியல் என்று ஒரு பதிவு துவக்கி, மிகத் தயக்கத்திற்கு பிறகு இப்பொழுது அதனை பதிவிடத் துவங்கியுள்ளார்.  அறிவியலை எளிய தமிழில் அறிமுகப்படுத்துவதற்கான பதிவு.  அறிவியல் மாணவர்கள்,  ஆய்வாளர்கள், அறிவியல் சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்கள் என பதிவுலகில் நிறைய பதிவர்கள் உள்ளனர். அவர்கள் எல்லாம் இதில் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்.  அறிவியலை தமிழில் அறிமுகம் செய்வதும், அறிவியல் கலைக்களஞ்சியங்கள் உருவாக்குதலும், தமிழ்-விக்கியில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதும், வருங்காலத் தலைமுறைக்கு அறிவியலை கொண்டு சேர்த்த பெரும்பணியை செய்ததாக இருக்கும்.  தமிழ் சமூகத்தை நவீனப்படுத்துவதற்கு இத்தகைய முயற்சிகள் ஒரு குறைந்நதபட்ச செயல்திட்டமாக அமையும்.


இது குறித்து கையேடும் நானும் சிலமுறை உரையாடி உள்ளோம். அறிவியல் ஆய்வு மாணவராக உள்ள அவர் தமிழில் அறிவியல் அடிப்படைகளை, அதன் வளர்ச்சியை அறிமுகப்படுத்துவதற்கு பொருத்தமானவர்.  ஆர்வம் உள்ள நண்பர்களைக் கொண்டுக் கூட்டுப்பதிவாக இதனை செய்யலாம் என்ற எண்ணம் இருந்தது.  முதலில், கையேடு  முன்முயற்சி எடுத்து அறிமுகமாக சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.   என்னைப்போன்ற சோம்பேறிகளைச் சேர்த்துக் கொண்டு கூட்டுப்பதிவாக இயங்குவதைவிட.. அவர் தனியாக முயன்றிருப்பதும் சரியானதுதான்.  தமிழ் அறிவியல் சிந்தனைக் குறித்த பதிவு எங்களது பொதுவான ஏக்கம் என்றே சொல்லலாம். நண்பர் அதில் முன்முயற்சி எடுத்துள்ளதைப் பாராட்டலாம்.

நானும் அறிவியல் படித்த மாணவன் என்றவகையில் அறிவியலில் எனக்கு அளப்பறிய ஆர்வம் உண்டு.  செயல்பாடுதான் வழக்கம்போல் ஒன்றுமில்லை. அந்த ஆர்வக்கோளாறால் சில அறிவியல் கட்டுரைகளும் எழுதியதுண்டு. அதை பதிவிட துணிச்சல் இல்லை. காரணம் பதிவுலகில் உள்ள அறிவியல் தெரிந்த ஆய்வாளர்கள் இருப்பதால் ஏற்பட்ட பயம்தான்.  சிந்தனை என்பது மொழிச்செயல்பாடு என்றவகையில், தாய்மொழியில் அறிவியல் சிந்தனைகளை பயில்வது, சுயசிந்தனைகளை வளர்க்கும். அறிவியல் தமிழின் வளர்ச்சியின்மையால், ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க முடிந்த அவஸ்தைகள் என்று  நான் அறிவியல் படித்த கதைதான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

நான் இளம் அறவியல் இயற்பியல் வரை தமிழில்தான் படித்தேன். தமிழ்வழிக்கல்வி. பெயர்தான். புத்தகங்கள் தேர்விற்கு படிப்பது எல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள்தான்.  ஓருமுறை எக்மோர் அருகில் உள்ள தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனத்தில் போய் தேடினன். பல புத்தகங்கள் மறுபதிப்புக் கூட செய்யப்படவில்லை. வெப்பவியலும், வெப்ப இயங்கியலும்  என்பதை தமிழில் வாசிப்பதைவிட ஆங்கிலத்தில் Heat and Termodynamics என்று வாசிப்பது எளிமையாக ஆக்கப்பட்டுள்ளது. தமிழ-அறிவியல் கலைச் சொற்கள் மற்றும் அவற்றின் புழக்கமும் குறைவு. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்  கலைச்சொல் உருவாக்கத்திற்கென தனித்துறை உருவாக்கி  கவனம் செலுத்திவருவது மகிழ்ச்சியான விடயம்.  தமிழில் அடிப்படை புத்தகங்கள்கூட கொண்டுவரப்படவில்லை என்பது, ”தமிழ் என் மூச்சு” என்பவர்கள் கவனிக்க வேண்டிய விடயம். போகட்டும்... அறிவியல் பதிவில் அரசியல் வேண்டாம்.

முது அறிவியல் என்பதில் தமிழ்வழியே கிடையாது. அதனால் படிப்பவர்களுக்கு தமிழ் வலிதான் அதிகம். ஆச்சர்யம் என்னவென்றால் படித்த 20 மாணவர்களில் நான் ஒருவன்தான் தமிழ்வழிக் கல்வி மாணவன். ஆனாலும், சிரமத்திற்கு இடையில் படிப்பைக் காப்பாற்றிக் கொண்டேன். ஆங்கிலம்தான் தெரியாது.. கொஞ்சம் அறிவியல் தெரியும் என்பதால்.. பிழைத்தேன். எனக்கு வாய்த்த பல ஆசிரியர்கள் ஒரு காரணம். குறிப்பாய் ஐன்ஸ்டின், பௌலி, டார்வின், ஹைசன்பர்க், ஸ்டிரோடிஞ்சர் என கனவுக் கதாநாயகர்கள் வழிநடத்திய கற்பனை உலகம் மற்றொருக் காரணம்.   இதனை எழுதிக் கொண்டிருக்கும்போது, எனது ஊர் மற்றும் கல்வி படிப்பு என எங்கோ பல நினைவுகளுக்குள் கொண்டு சேர்க்கிறது. இவை, எனது ஆசிரியர்கள் அனைவரையும் நினைவிற்கு கொண்டு வந்துவிட்டது. 

ஒவ்வொரு பள்ளியிலும் எனது கல்வியை கவனித்துக்கொண்ட ஆசிரியர்கள். என்னை ஊக்கப்படுத்தி தனிக்கவனம் செலுத்திய ஆசிரியர்கள்.  2-ஆம் வகுப்பில் தொடைகளைத் திருகி கணக்கு சொல்லித்தந்த “செவிட்டு சார்”, சுப்பையா சார், ஜான்சி டீச்சர் துவங்கி மேல்நிலைப் பள்ளியில் உன்னிப்பாக கவனித்து கணிதம் சொல்லித்தந்த வெங்கட்ராமன் சார், இயற்பியலை நடனம் ஆடியப்பாடியே துகள், வெளி, பிரபஞ்சம் என  கற்பனைகளை மனக்கண்ணில் உருவாக்கிய சேதுராமலிங்கம் சார். கல்லூரியில் இயற்பியல் விதிகளை மண்டைக்குள் தள்ளுவதற்காக தொண்டை வரள கற்பித்த ஆசிரியர்கள். குறிப்பாக இயற்பியல் படிப்பதற்கு அசாத்திய கற்பனைத் திறன் வேண்டும். 

சான்றாக, பெருவெடிப்பு கொள்கைப்படி பிரபஞ்சம் பெருவெடிப்பில்தான் உருவாகுகிறது என்றால், பெருவெடிப்பு எங்கு நிகழ்ந்தது? என்று கேட்க முடியாது. எங்கு என்கிற இடம் பெருவெடிப்பிற்குள்தான வருகிறது. பெருவெடிப்பிற்கு வெளி என்று ஒன்று கிடையாது. பெருவெடிப்பிற்குள்தான் வெளி. அதாவது உள்ளேதான் வெளி. இதை கற்பனை செய்ய நமது மனமோ, மூளையோ சாத்தியமற்றதுதானே. இங்குதான் God does not play dice என்று ஐன்ஸ்டின் சொன்னதின் விளக்கம் புரியும். இயற்கையின் ஒழுங்கு அத்துனை அற்புதமானது. அது விளையாட்டு அல்ல. என்ன செய்யலாம் கையையும் காலையும் உதைத்து பரக்க பரக்க விழித்துதான் இதனை சொல்ல முடியும். அதன் பிறகும் தலை சுத்தினால் ஒன்றும் செய்ய முடியாது.  இயற்பியல் புரிவதே கடினம் என்பதால் எங்கள் ஆசிரியர்கள் ஒருவித ஆட்டத்துடனும் சைகைகளுடனும்தான் கற்பித்தார்கள்.  இயற்பியல் எண்களை எழுத்தாக மாற்றும் ஒரு அறிவியல் என்பதால், கணிதம் அதன் அடிப்படையானது.  அதனால்தானோ என்னவோ,  எல்லா பள்ளிகளிலும் கணித ஆசிரியருடன் ஒரு நட்பு ஏற்பட்டுவிடுகிறது. 

இயற்பியல்-கணித சிந்தனைக்கு ஒரு சின்ன கதை உண்டு. ஒரு குடுவையில் 20 இருப்புக் குண்டுகள் உள்ளது. பௌதீக தராசைப் பயன்படுத்தி ஒரு இருப்பு குண்டின் எடையை  அளந்து சொல்லவும் என்றால். முதலில் பௌதிக தராசை தயார் செய்துகொண்டு, அளந்து கீழ்கண்ட சமன்பாட்டின்படி விடை சொல்லலாம்-

[(குடுவை+20 இருப்பு குண்டின் எடை) – குடுவையின் எடை] / 20 = 1 இருப்பு குண்டின் எடை

இதே கணக்கை ஒரு மளிகை கடை நடத்தும் அல்லது சாதரணமான ஒருவரிடம் கேட்டால். ஒரு இருப்பு குண்டை எடைபோட்டு நேரடியாக சொல்லிவிடுவார். இது அறிவியல்-கணிதவியல் சிந்தனையில் உள்ள சிக்கல். கழுத்தை சுத்தி காதை தொடுவது. கணித-அறிவியல் சிந்தனை என்பது abstraction-ஐ அடிப்டையாகக் கொண்டது. இது அறிவியல் பற்றி எழுதுவதிலும் சிக்கலாக மாறிவிடுகிறது.

பொதுவாக, பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்கள் இல்லை.  ஊரும் பள்ளியும் ஆசிரியர்களும் தெருப்பிள்ளைகளும்தான்.  பறவைகளைப்போல பெற்றோரிடமிருந்து எச்சமாக விழந்து விடுகிறோம் தெருப்புழுதிக்குள். அப்பறம் யாரோ ஊற்றிய தண்ணியில், தானாக வளர்கிறோம். கனிகளுக்காக காத்திருக்கு்ம் பெற்றோர். ஊரும், மக்களும் நம்மிடம் எதை எதிர் நோக்குகிறார்கள்.  எல்லாம் எதையாவது நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதுகூட நமது கற்பிதம்தான். உலகம் ஏதுமற்றிதிலிருந்து உருவாகி ஏதுமற்றதை நோக்கித்தான் போகிறது. இடையில்தான் இத்தனை சிக்கல்கள். இல்லை என்பதற்குள்ளும் இல்லை என்றொரு சொல்லோ சப்தமோ இருக்கத்தானே செய்கிறது. காரண-காரியங்கள் பற்றிய வெதாந்த-சித்தாந்த விளையாட்டுகள் நம்மை காரணங்களில் நங்கூரமிட்டு காரியங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறது. இது நவீனத்துவத்தின் குழந்தையான பகுத்தறிவிற்கும் பொருந்தும். அறவியல் பதிவு தத்துவத்தை தள்ளிவைப்போம்.

உலகின் மிகச்சிறந்த அற்புத உணர்வு எது என்றால் நமது குழந்தைமைக்கு நாம் திரும்பிச் செல்வதுதான்.  உலகின் ஆகப்பெரும் புரட்சிகரச் சிந்தனைகளை பசியிலும், பட்டினியிலும், பிள்ளைகள் பிறந்தபோது பாலும், இறந்தபோது சவப்பெட்டியும் வாங்ககூட காசில்லாத நிலையிலும் எழுதிக்கொண்டிருந்த மாபெரும் சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ் கூட “கிரேக்க புராணங்கள் இனிமையாக இருப்பதற்கு காரணம், அவை இலக்கியத்தின் குழந்தைப் பருவத்தி்ல் உருவாகியதுதான்” என்று சொன்னதாக படித்த நினைவு.  குழந்தைமையின் ஒரே லட்சியம் இனிமை மட்டும்தான். நாம் இப்பவும் இனிமை என்று உணர்வது குழந்தைமையி்ல் உருவான இனிமையின் ஒரு நினைவுத்தடம்தான். நமது இதிகாசங்கள், புராணங்களின் இனிமையைக் கூட அப்படி சொல்லலாம். ஆனால், அவற்றை மதங்கள் களவாடி தங்களது அறத்தை போதிப்பதற்கானதாக மாற்றியதில்தான் சிக்கல்கள் துவங்குகிறது என எண்ணத் தூண்டுகிறது.

எனது அறிவியல் ஆர்வத்திற்கு இன்னொரு காரணம்,  ஜமால் முகமது கல்லூரி எஸ். சுப்புரத்தினம் என்கிற “எக்சென்டிரிக்“ ஆசிரியர்தான்.  டென்சார் கால்குலசை தனது பஸ் டிக்கட்டின் பின்புறத்தில் எழுதிக்கொண்டு வந்து 1 மணிநேரம் பாடம் நடத்துபவர். ஆங்கிலத்தில் நடத்திக் கொண்டிருக்கும்போதே குவாண்டம் மெக்கானிக்ஸை 5 நிமிடம் தமிழில் சரளமாக விளக்கிவிட்டு, என்ன சார் நாவலர் நெடுங்செழியன் மாதிரி இருக்கா என்று கிண்டலாக சொல்வார். டீ-பிராக்லி கடவுள் சார். எவனக்கு சார் வரும் அலையையும், துகளையும் இணைத்து சிந்திக்க என்பார். ஆற்றல் அலையா துகளா என்கிற ருசிகரமான ஒரு சர்ச்சை இயற்பியலில் உண்டு. ஹைசன்பர்க் எல்லாம் கையெடுத்து கும்புடனும் சார் என்பார். நிச்சயமின்மைக் கோட்பாடு என்று தத்துவம் சார்ந்த ஒரு இயற்பியல் கருத்தாக்கத்தை முன்வைத்தவர்.  ஒருகாலத்தில் தத்துவம், அறிவியல், கணிதம் எல்லாம் தத்துவம் என்ற ஒற்றைத் துறையாகத்தான் இருந்தது. அப்புறம்தான் மேற்-திசை உலகின் பகுப்பாய்வு முறை உருவாகி, இவற்றை  பெட்டி பெட்டியாக பிரித்து, தத்துவம் என்கிற ரயில் இன்ஜீனுடன் இணைத்து வைத்தது. பெட்டிக்குள் இருப்பவனுக்கு இன்ஜீன் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதனால் பெரும்பாலான அறிவியல் ஆய்வாளர்கள் தத்துவத்தை பார்ப்பதில்லை. சமூக உணர்வும் இருப்பதில்லை.

நமது எஸ். எஸ். எனறு அழைக்கப்படும் சுப்பபுரத்தினம் சார் கதைக்கு வருவோம். அவருக்கு வயது 58 அல்லது 59 இருக்கும்.  அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் ஓய்வுப் பெறப்போகிறவர். என்னை “வாங்க சார்“.. காப்பி சாப்பிடப் போகலாம் என்று தோளில் கைபோட்டு அழைத்துச் செல்வார்.   எல்லோரையும் சார் என்றுதான் அழைப்பார். அது சாதரணமாக புழக்கத்தில் உள்ள ஒரு நட்புச் சொல் அவ்வளவே. எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.  மற்ற 19 மாணவர்களும்.. நல்ல கூட்டணி என்பார்கள். அவர்கள் பார்வையில் இருவருமே தலை சீவாத.. சோல்னாப் பை என இருப்பது வெறு என்ன உருவகத்தை தந்துவிடப்போகிறது பைத்தியம் என்பதைத் தவிர. 1985-களில் “சோல்னாப்பையர்கள்“ என்கிற ஒரு சிறப்பான பதமே புழங்கியது தமிழ் அறிவுத்தளத்தில்.   அதன் உள்ளர்த்தம் என்பது “பைத்தியங்கள்“ என்பதுதான். நானும் அப்போ தமிழ் சிறுபத்திரிக்கை மோஸ்தரில் ஜிப்பா, சோல்னாப்பை எனத் திரிந்தவன்தானே. அதிலும் மாணவப் புரட்சியாளன் என்ற கற்பனையில் திளைத்தவனுக்கு, ஜோல்னாப் பை இல்லை என்றால் எப்படி?

ஒரு டீ ஆர்டர் பண்ணி 1 மணிநேரம் டீக்கடையில் உட்கார்ந்து இலக்கியம் அலசுவது என்பதுதான் அப்போதைய போக்கு.  பெரும்பாலும் சென்னை திருவல்லிக்கேணி டீக்கடைகளில் இரண்டு மூன்று சிறுபத்திரிக்கை இலக்கியவாதிகளையோ அல்லது புரட்சிகர மார்க்சியவாதிகளையோ  காணலாம் அந்த நாட்களில். இப்பொழுதோ டீக்கடையின் இடத்தை பார்கள் கைப்பற்ற, இலக்கிய வம்புகளும் சண்டைகளும் சகஜமாகிவிட்டது. நமது நண்பர் ஒருவர் கூறியதைப்போல மது இறைவனின் பானம். அதை திருடிக் குடித்தால். நாமும் இறைவன்தானே. அப்பறம் எதிரில் உள்ளவனை எதற்கு  மதிக்க வேண்டும் என்பதால் இருக்குமோ? எதிர் கருத்து சொன்னால் ஆட்களை ஆட்டோவில் அனுப்பும் “அற்புத“ கலாச்சாரம் வேறு உருவாகி உள்ளது. இல்லாவிட்டால் இருட்டில் அழைத்துபோய் மூக்கை உடைக்கும் கலாச்சாரமும் உள்ளது. முன்பெல்லாம் தலைமறைவு புரட்சியாளர்கள்தான் முகவரி சொல்ல மாட்டார்கள். இப்போ பிரபலங்களே முகவரி மறைப்பதும், முகவரிகளை மறைக்காமல் தருபவர்கள் இப்படி அடிபட்டு பிரபலமாவதும் நடக்கிறது. அரசியல் பதிவில் கலாச்சாரம் வேண்டாம்.

அவர்தான் எனது புராஜக்ட் கைடும்கூட. சக மாணவர்கள் எல்லாம் டீவி துவங்கி.. எலக்ட்ரானிக் உபகரணங்கள் செய்து கொண்டிருக்க.. அவர் மட்டும் திருச்சி பாலக்கரையில் உள்ள குதிரை வண்டிக்காரர்களிடம் போய் குதிரை மூத்திரம் வாங்கிட்டு வாங்க சார். NMR ஸ்பெக்ட்ராஸ்கோப்பியைக் (உபகரணம் பற்றி இங்கு வி்க்கியில்  வாசிக்கலாம்)  கொண்டு அதில் உள்ள கிளைசின் மூலக்கூறு வடிவத்தை வரையலாம் என்றார். நாங்கள் 3 பேர். ஒருவர் சேலம், மற்றொருவர் கருர், நான் கும்பகோணம். குதிரை மூத்திரம் ரெடி. ஸ்பெக்ட்ராஸ்கோப்பிக்கு எங்கு போவது? அது சென்னை ஐஐடியில் மட்டும்தான் உள்ளது. அதற்கும் அவர் ஒரு வழி தந்தார். அவரது மாணவி ஒருவர், பவானியோ பத்மாவோ என்பதாக பெயர்-நினைவு, ஐஐடியில் லேப்பில் பணிபுரிகிறார். அவருக்கும் துறைத்தலைவருக்கும் ஒரு கடிதம் தந்தார். நாங்கள் மூவரும் சென்னை ஐஐடியின் முன்பு 3-குதிரை மூத்திர பாட்டில்களுடன் ஒன்று கூடி.. அக்கடிதத்தின் வழியாக லேபை அடைந்து... ஒருவழியாக அந்த சோதனைகளை முடித்து வரைபடங்களை வாங்கிக் கொண்டு வெளியேறியபோது மாலை 5 மணி. 

படங்களைக்கொண்டு அம்மூலக்கூறின் வடிவத்தை ஒருவழியாக வரவழைத்துவிட்டோம்.  ஆய்வுகளிலும் முடிவுகளிலும் சிக்கல் இல்லை. அந்த புராஜக்ட் ரிப்போர்ட் எழுதுவதில்தான் சிக்கல். ஆங்கிலத்தில் எழுத வேண்டும். வழக்கம்போல் பல ஆங்கிலப் புத்தகங்கள் படித்து ரெப்ரென்ஸ் ஸ்டெடி எல்லாம் செய்து குறிப்புகளும் ரெடி. ஆங்கிலத்தில் எழுதுவது.. கணிப்பொறியில் அச்சடித்து பைண்டிங் செய்வது என.. அதை தயாரிப்பதற்கு பட்டபாடுதான் அதிகம். காரணம் ஆங்கிலத்தில் ரிப்போர்ட் எழுதும் அளவிற்கு.. எனக்கு ஆங்கில அறிவு போதாது என்பதால்.. நான் தமிழில் எழுதியும் சொல்லியும் எனது நண்பன் கான்-தான் அதை எழுதினான். அவனக்கு உள்ள சிக்கல் டெக்னிகல் வார்த்தைகள். காரணம் அவனுக்கு அறிவியல் என்றாலே அலர்ஜி மட்டுமல்ல, அவன் ஒரு பொருளாதார மாணவன். பி.ஏ.கிருஷ்ணனின் வரிகளான  ‘கணிதம் என்பது பாவப்பட்ட மனிதர்களின்மீது செலுத்தப்படும் பயங்கரவாதம்’ என்கிற நண்பர் ஆபீதின் ரகம் அவன். என்ன சென்னை வாசி என்பதால் ஆங்கிலம் அவனுக்கு சிக்கல் இல்லை.

என்னைப்போல காளியாட்டம், நாடகம், சிவன்கோவில், உப்பியலியப்பன் கோவில், அக்ரஹாரம், மார்கழிக் காலையில் பரங்கிப்பூ வைத்து கோலம்போடும் இளம் பெண்களை பார்க்கவென சேக்கிழார் வாரவழிப்பாட்டுக் குழுவுடன் பஜனைபாடிக் கொண்டு போவது, காலையில் எழுந்து குளத்தங்கரைக்கு ரகசியமாக திருடப்பட்ட பீடிகள் சகிதம் போவது, மாலையில் பனந்தோப்பிற்குப் போவது, இரவுகளில் தென்னை மரத்தில் கள் திருடி குடிப்பது என அலையும் நூறுசதமான கிராமத்தானுக்கு சென்னையே அதிர்ச்சியான விஷயம்.  கோணங்கியின் ரசமட்டம் போல் சென்னை என்பது முதலில் பார்க்கும்போது மனதிற்குள் ஏற்படுத்தும் நடுக்கம் அச்சமூட்டக்கூடியது. இதில் ஆங்கிலம் என்பது நள்ளிரவிலும் பய முறுத்தும் கொள்ளிவாய்ப் பிசாசுதான். 

கிராமமும் நகரமும் இரண்டு தனித்த தீவுகள், தனித்த குடிமக்களைக் கொண்ட நிலவெளிகள்தான்.  நகரங்களின் உருவாக்கம் நாகரீகத்தின் சின்னமாக கருதப்படுகிறது. உண்மையில் நகரங்கள் அழிவின் பல உட்கூறுகளைக் கொண்டவைதான். அவை முதலில் மனிதத்தை அழிக்கிறது. நாகரீகம் என்பதே அழிவின்மீதும், ஏற்றத்தாழ்வின் மீதும்தானே கட்டப்படுகிறது. நாகரீகத்தின் புறவடிவம்தானே நகரம் என்பது. ”நகரம் என்ற புலத்தை ஒருவிதத் திணை என்று கொண்டால் அதன் அழிவு என்ற சாத்தியமான உள்ளுறையின் விரிவாக்கம்தான் கொள்ளைநோய்.” என்பதை காம்யுவின் “கொள்ளை நோய்” நாவலைக் கொண்டு விவரிக்கிறார் நாகார்ஜீனன். அறிவியல் பதிவில் வரலாறு வேண்டாம்.

ஒருவழியாக புராஜக்ட் முடிந்து பரிட்சை முடிந்து வெளியேறிவிட்டோம். அப்புறம் ஒரு நாள் சுப்புரத்தினம் சாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. உங்களுக்காக திருச்சி இந்து கல்லூரியில் எம்.பில். சொல்லிவைத்திருக்கேன் சார். வாங்க, கிளப்ஸ்-கார்டன் கோயெப்பிசியன்ட் பற்றி என்னிடம் முடியாத ஒரு ஆய்வு உள்ளது. அதை நீங்கள் தொடரலாம் சார் என்று. எனக்கு இருந்த வேறு பல சிக்கல்களால் ஊர்விட்ட ஊர் போய், ஓடி ஆடி திரும்பிவந்து அக்கடிதத்தை நான் படித்துக் கொண்டிருந்தபோது அட்மிஷன் முடிந்து புதிய கல்வியாண்டு ஆரம்பமாகி  விட்டிருந்தது.  என் நண்பர்கள் சிலர் படிப்பபை தொடர்ந்து கல்விப் பணியாற்றி சமூகத்தை கடைத்தேற்றிக் கொண்டிருக்கலாம். என்னைப்போல யாரேனும், இந்த வறண்ட பாலையில் வந்து வாழ்க்கையை (அப்படி ஒன்னு இருக்கா? என்ற கேள்வியை விட்டுவிடலாம்) அடகுவைத்து. படிப்பிற்கு சம்பந்தமில்லாத ஒரு துறையில் பணியாற்றி, மனைவி-மக்களுடன் கடிதம், தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்-அஞ்சல், உரையாடிகளில் என வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

அனைவருக்குமான அறிவியல் என்று எழுதப்போய் சுயபுராணத்தை கடைவிரித்திட்ட காரணத்தினால் பின்குறிப்பாகவாவது இதை சொல்லி வைக்கலாம்.

தமிழில் அறிவியல் பற்றிய புத்தகங்களில் எனது நினைவில் உள்ள சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன். தமிழில்  80-களில் வெளிவந்த கலைக்கதிர் மற்றொரு விஞ்ஞானப் பத்திரிக்கை (பெயர் நினைவில் இல்லை) இந்த பணிகளை செய்தன. கலைக்கதிர்-காரர்கள் தமிழில் விஞ்ஞானக் கலைக்களஞ்சியம்கூட வெளியிட்டுள்ளனர் பல தொகுதிகளாக. விஞ்ஞான விளக்கம் என்று மற்றொரு தொகுதிகளாக நூட்கள் வந்துள்ளன. தமிழ்-அறிவியல் என்பது தொகுக்கப்படாமலேயே உள்ளது. அறையைத் தாண்டி சிந்திக்கும் விஞ்ஞானிகள், விஞ்ஞான ஆர்வலர்கள் இணைந்துதான் தமிழில் இத்துறைசார்ந்த நூட்களை தொகுப்பதும், பரவலாக்குவதும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். யோசிப்போம்..  ஊர்கூடித்தானே தேர் இழுக்க வேண்டும்.

பதிவைத்துவக்கிய லியோதார்த் குறிப்பின்படி.. நாம் இவ்வாறாக அறிவியல்தான் எதிர்காலத்தின் நம்பிக்கை என்கிற சில தொல்கதைகளை உருவாக்கி வைத்தால்தான், எதிர்கால பின்-நவீனத்துவ ஆண்களும் பெண்களும் “இயல்பானதாக” இதனை எண்ணி ஏற்றுக்கொள்வார்கள், கடந்தகாலத்தின் உண்மையாகவும் நிகழ்காலத்தின் யதார்த்தமாகவும் எதிர்காலத்தின் நம்பிக்கையாகவும்.

அன்புடன்
ஜமாலன் – 27-04-2010

22 comments:

vasu சொன்னது…

ஜமாலன்,
அழகாக உங்கள் அனுபவத்தை எழுதியிருக்கிறீர்கள். genetic engineering/Paricle Physics போன்ற துறைகள் எங்கோ வளர்ந்து பல புதிய ஆங்கில சொற்கள் வந்துள்ளது. இதற்கு ஈடான கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கவேண்டியது உடனடி தேவை.80களில் கலைக்கதிர் போல் யுனெஸ்கோ கூரியர் என்ற இதழிலும் பல அருமையான அறிவியல் கட்டுரைகள் வந்துள்ளது.இதற்கு மணவை முஸ்தபா ஆசிரியர் என்று நினைவு.இப்போது வருகிறதா என்று தெரியவில்லை. தமிழில் அறிவியலுக்காக பிரத்தேயக இதழ் இல்லாததது குறையே.

ஜமாலன் சொன்னது…

நன்றி வாசு

//genetic engineering/Paricle Physics போன்ற துறைகள் எங்கோ வளர்ந்து பல புதிய ஆங்கில சொற்கள் வந்துள்ளது. இதற்கு ஈடான கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கவேண்டியது உடனடி தேவை.//

ஆம். பல்கலைக் கழகங்கள்தான் இதற்கான முன் முயற்சி எடுக்கவேண்டும். செம்மொழி்க்கு மாநாடு நடத்துவதுடன், தமிழ் அறிவியல் குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழ் செம்மொழி மையம் என்கிற அரசு நிறுவனம் ஒன்று உள்ளதே? அதில் என்ன செய்கிறார்கள்?

எளிமையாக அறியவியலை குழந்தைகளுக்கு சொல்வதற்கான ஜப்பானைப் போன்ற படக்கதைகள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் என அரசு கவனம் செலுத்தினால் நலம். நான் இயற்பியல் என்று எழுதியிருந்தாலும், அறிவியலின் சகல துறைகளிலும் கவனம் செலுத்துவதாகவே பொருள் கொள்வது நலம்.

//80களில் கலைக்கதிர் போல் யுனெஸ்கோ கூரியர் என்ற இதழிலும் பல அருமையான அறிவியல் கட்டுரைகள் வந்துள்ளது.இதற்கு மணவை முஸ்தபா ஆசிரியர் என்று நினைவு.இப்போது வருகிறதா என்று தெரியவில்லை.//

ஆம் வாசு நினைவூட்டினீர்கள். கூரியர் இப்பொழுதும் வருகிறது என்றுதான் நினைக்கிறேன். சோவியத் புத்தகங்கள் தமிழில் என்.சி.பி.ஹெச்-சால் வெளிவந்தது அந்தக்காலத்தில்.

//தமிழில் அறிவியலுக்காக பிரத்தேயக இதழ் இல்லாததது குறையே.//

ஆம். ஆனால் தமிழில் உங்கள் ரசிகன் எங்கள் ரசிகன் விஜய் ரசிகன்... இப்படி சமீபத்திய அனுஸ்கா ரசிகன் வரை வண்ணவண்ண இதழ்கள் உள்ளன. அறிவியல் இதழ்கள்தான் இல்லை. அரசு இதுபோன்ற கல்விசார் இதழ்களை ஊக்கப்படுத்தும் விதமாக எதாவது உதவிகள், மானியங்கள் வழங்கலாம். தமிழி்ல் பெயர் வைத்தால் சினிமாவிற்கு வரிவிலக்கு என்பதைபோல தமிழ் இதழ்களில் கல்விச் சிந்தனைகளை ஊக்கப்படுத்தலாம். அடுத்த தேர்தலுக்கு தலைக்கு 1000 சம்பாரிக்கும் நேரத்திற்கு இடையில் இதையும் சிந்தித்தால் நலம்.

நாகார்ஜுனன் சொன்னது…

ரசித்துப் படித்தேன். இயல்பியல் ஆய்வில், எழுத்தில் இனியாவது ஈடுபடலாமே..

ஜமாலன் சொன்னது…

நன்றி நாகார்ஜீனன்

//இயல்பியல் ஆய்வில், எழுத்தில் இனியாவது ஈடுபடலாமே..//

இன்ஷா அல்லா :)

(இதன் பொருள் இங்கு அல்லாவின் அருளால் ஆறுமாதத்திற்கு தள்ளிப்போடலாம் என்பதுதான். :))

Perundevi சொன்னது…

//ரசித்துப் படித்தேன். இயல்பியல் ஆய்வில், எழுத்தில் இனியாவது ஈடுபடலாமே.. //

”இனியாவது” ....ஹாஹா

ஜமாலன், வாசு சொல்லுவதைப் போல அறிவியல் கலைச்சொல்லாக்கங்களைக் குறித்து யோசிப்பது முக்கியம்.
அப்புறம், “எளிமையான அறிவியல்” பி.எஸ்.சி-யில் எனக்குக் கிடைத்ததேயில்லை. ஆனால், உங்கள் வாத்தியார்களைப் போலவே அண்ணாமலைப்பல்கலையில் எனக்குச் சில வாத்தியார்கள் இருந்தார்கள்....(குறிப்பாக டி. ஆர் சார், குருமூர்த்தி சார் போன்றவர்கள்) உதிர்ந்தேவிட்ட பல்கலை நினைவுகள் இதைப் படித்தவுடன் துளிர்க்கின்றன. நன்றி....

இளங்கோ-டிசே சொன்னது…

ஜ‌மால‌ன், உங்க‌ள் அனுப‌வ‌ங்க‌ளின் வ‌ழி, த‌மிழில் அறிவிய‌ல் க‌ற்பிக்க‌ப்ப‌ட‌வேண்டும் என்கின்ற‌ பெருவிருப்பு இக்க‌ட்டுரையில் அழ‌காக‌ விரிகின்ற‌து.
....
ஈழ‌த்தில் ‍ -நான் அங்கு ப‌டிக்காவிட்டாலும்- உய‌ர்த‌ர‌ம்வ‌ரை (த‌மிழ்நாட்டு +1, +2) பெள‌தீக‌விய‌ல் (இய‌ற்பிய‌ல்) இர‌சாய‌ன‌விய‌ல் உட்ப‌ட‌ க‌ணித‌ம் த‌மிழில் க‌ற்பிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஆங்கில‌த்தில் 50/60 க‌ளில் க‌ற்பிக்க‌ப்ப‌ட்ட‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்த‌ ப‌ல‌ பாட‌ங்க‌ளை த‌மிழில் மாற்றும்போது ஏற்ப‌ட்ட‌ சவால்க‌ளையும், க‌ட‌ந்துவ‌ந்த‌தையும் அண்மையில் க‌விஞ‌ர் இ.முருகைய‌னின் நினைவுக்கூட்ட‌த்தில் சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌கிர்ந்துகொண்ட‌து நினைவுக்கு வ‌ருகின்ற‌து. ஆங்கில‌த்திலிருந்து த‌மிழுக்கு முத‌ன் முத‌லில் பாட‌த் திட்ட‌ங்க‌ளை மாற்றிய‌போது -பின்னாளில் த‌மிழ்த்தேசிய‌ம் பேசிய‌ த‌மிழ‌ர‌சுக்க‌ட்சியில் இருந்த‌ ப‌ல‌ர் கூட‌ -எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்ற‌ன‌ர் என்ப‌தும் க‌வனிக்க‌த்த‌து. முருகைய‌ன் பாட‌த்திட்ட‌க் குழுவில் முக்கிய‌மான‌ ஒருவ‌ராக‌ப் ப‌ங்காற்றிய‌வ‌ர். த‌மிழில் அறிவிய‌ல் இய‌ன்றால் முடியும் என்ப‌த‌ற்காய் இவ‌ற்றைக் குறிப்பிடுகிறேன்.

ஜமாலன் சொன்னது…

நன்றி பெருந்தேவி..

//”இனியாவது” ....ஹாஹா//

என்ன கிண்டலா? ”தள்ளாத வயதிலும் பொல்லாத புலியெனப் பாய்ந்துவிடும்” கட்டபொம்மன் நாங்கள் நினைவிருக்கட்டும். )))

//ஜமாலன், வாசு சொல்லுவதைப் போல அறிவியல் கலைச்சொல்லாக்கங்களைக் குறித்து யோசிப்பது முக்கியம். //

நிச்சயமாக. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். “அதனால் வீழ்ந்தோம், இதனால் வீழ்ந்தோம்“ என்று எதிர்-அரசியலை எழுதி காலங்கழிக்காமல்.. நம்மால் நாம் வீழாமல் காக்க இத்துறைகளை வளப்படுத்தவது அவசியம்.

//அப்புறம், “எளிமையான அறிவியல்” பி.எஸ்.சி-யில் எனக்குக் கிடைத்ததேயில்லை.//

தற்காலத்தில் அறிவின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக கல்விக்கூடங்கள் மாறி வருகின்றன. நம்ம காலத்திலே மட்டுமல்ல இக்காலத்திலும் இதான் நிலமை என்று நினைக்கிறேன்.

//ஆனால், உங்கள் வாத்தியார்களைப் போலவே அண்ணாமலைப்பல்கலையில் எனக்குச் சில வாத்தியார்கள் இருந்தார்கள்....(குறிப்பாக டி. ஆர் சார், குருமூர்த்தி சார் போன்றவர்கள்) உதிர்ந்தேவிட்ட பல்கலை நினைவுகள் இதைப் படித்தவுடன் துளிர்க்கின்றன. நன்றி....//

துளிர்ப்பதை தண்ணீர் ஊற்றி சன்னல் ஓரமாக வையுங்கள்.. அது தானாக வளரட்டும். ))

நம்மை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லும் பதிவுதான் இது. உலகைப்புரட்டும் நெம்பகோல்களைவிட அமைதியாக இவர்கள் செய்யும் புரட்சி கவனிக்கப்படுவதேயில்லை.

ஜமாலன் சொன்னது…

நன்றி டிசே

//ஈழ‌த்தில் ‍ -நான் அங்கு ப‌டிக்காவிட்டாலும்- உய‌ர்த‌ர‌ம்வ‌ரை (த‌மிழ்நாட்டு +1, +2) பெள‌தீக‌விய‌ல் (இய‌ற்பிய‌ல்) இர‌சாய‌ன‌விய‌ல் உட்ப‌ட‌ க‌ணித‌ம் த‌மிழில் க‌ற்பிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌.//

தமிழ்நாட்டிலும்கூட தமிழ்வழிக் கல்வியும் கற்பித்தலும் இளம்-பட்டப்படிப்புவரை உள்ளது. கல்லூரி அளவில் படிப்பதற்கான தமிழ் புத்தகங்கள்தான் அதிகம் இல்லை.

//ஆங்கில‌த்திலிருந்து த‌மிழுக்கு முத‌ன் முத‌லில் பாட‌த் திட்ட‌ங்க‌ளை மாற்றிய‌போது -பின்னாளில் த‌மிழ்த்தேசிய‌ம் பேசிய‌ த‌மிழ‌ர‌சுக்க‌ட்சியில் இருந்த‌ ப‌ல‌ர் கூட‌ -எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்ற‌ன‌ர் என்ப‌தும் க‌வனிக்க‌த்த‌து.//

அப்படியா? இது ஒரு முக்கிய வரலாற்றுத் தகவல்தான். செந்தமிழ் நாடு சிலருக்கு மட்டுமே இன்பத்தேனை பாய்ச்சுகிறது என்பதுதான் கொடுமை.

//முருகைய‌ன் பாட‌த்திட்ட‌க் குழுவில் முக்கிய‌மான‌ ஒருவ‌ராக‌ப் ப‌ங்காற்றிய‌வ‌ர். த‌மிழில் அறிவிய‌ல் இய‌ன்றால் முடியும் என்ப‌த‌ற்காய் இவ‌ற்றைக் குறிப்பிடுகிறேன்.//

ஈழத்தமிழர்கள் இவ்விஷயங்களில் தமிழ் நாட்டினரைவிட முன்னணியில்தான் உள்ளனர். நூலகத் திட்டத்தில் தமிழ் அறிவியல் போதனைக்கான பாட புத்தகங்கள் நிறையக் காணக்கிடைக்கிறது. தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் சில அடிப்படை புத்தகங்களை வௌயிட்டுள்ளது. கலைச்சொல் மற்ற விஷயங்களில் ஒரு தரப்படுத்துதல் இல்லை என்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை பயன்படுத்தும் நிலைதான் உள்ளது.

அறிவியலை தமிழில் சிந்திப்பதற்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும். அதுவே தமிழ்-அறிவியல் என்று நாம் பேசுவதின் அடிப்படை.

கையேடு சொன்னது…

சுவாரஸ்யமான இடுகையினூடே அனைவருக்கும் அறிவியல் வலைப்பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க ஜமாலன்.

கணிதத்தைப் பொருத்தவரை திரு.ஆபிதீன் அவரின் கருத்துதான் எனதும்.

அதிலும், மதிய உணவுக்குப் பின் உடனடியாக ஒரு அரிச்சுவடியோடு வந்து கிளப்ஸ் கார்டன் காரணிகளைப் பற்றி பலகை முழுதும் எழுதித் தள்ளுவார் எங்கள் ஆசிரியர்.

அந்த நோட்டுகளை இப்போது பார்த்தால் கூட சிரிப்பு வரும். பக்கங்கள் நிரம்பி மேசையிலெல்லாம் வழிந்திருக்கும் குவாண்டம் இயற்பியல்.
அவ்வளவு உறக்கத்தில் எழுதப்பட்டவை அவை.. :)

திரும்பிப் பார்த்தல் சுகம்தாங்க ஜமாலன்.

ஜமாலன் சொன்னது…

நன்றி கையேடு

//திரும்பிப் பார்த்தல் சுகம்தாங்க//

:)

ஆபிதீன் சொன்னது…

//‘கணிதம் என்பது பாவப்பட்ட மனிதர்களின்மீது செலுத்தப்படும் பயங்கரவாதம்’// அன்பு ஜமாலன், அது பி.ஏ.கிருஷ்ணனின் வரிகள். நான் உண்மையிலேயே பாவம். இதை நேற்றே - open IDஇல்- பின்னூட்டமிட்டேன். ஏனோ இடம் பெறவில்லை. இன்று Google கணக்கு மூலம். இப்போதாவது கணக்கு உதவுகிறதா என்று பார்க்கலாம்!

- ஆபிதீன் -

ரௌத்ரன் சொன்னது…

ரகளையான பதிவு...

ஹாஸ்யம் அமர்க்களம்.ரொம்ப ரசிச்சு வாசிச்சேன் :)))

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

அருமையான நடை ஜமாலன்,
கையேடுவின் முயற்சிக்கு வாழ்த்துக்களும்... உங்களின் அறிமுக பதிவிற்கு நன்றியும்.

//அதனால் பெரும்பாலான அறிவியல் ஆய்வாளர்கள் தத்துவத்தை பார்ப்பதில்லை. சமூக உணர்வும் இருப்பதில்லை.//

இது பெரும்பான்மை உண்மையாக இருக்கலாம்... ஆனால் கணினியில் Object Oriented Programming என்பது பொருள் முதல் வாத சிந்தனையிலிருந்தே பெறப்பட்டுள்ளது.

நடைமுறையில் அறிவியல் ஆய்வாளர்கள் முதலாளித்துவ வணிக உலகத்தை சார்ந்தே நிற்க வேண்டியுள்ளது.

ஜாவா வின் தந்தை எனப்படும் James Gosling தத்துவத்தில் ஈடுப்பாடுக்கொண்டவர்... சன் மைக்ரோ சிஸ்டம் இருக்கும் வரை தாக்குபிடித்தார். சன், ஆரக்கிள் உடன் இணைந்தவுடன் 2 மாதங்கள் கூட முதலாளித்தவத்தை தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறிவிட்டார்.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

உங்களுடைய வழக்கமான எழுத்து நடையிலிருந்து வித்தியாசப்பட்ட எழுத்து நடை இது. மிகப் பிடித்திருக்கிறது.

ஜமாலன் சொன்னது…

நன்றி ஆபிதின்...

//அது பி.ஏ.கிருஷ்ணனின் வரிகள். நான் உண்மையிலேயே பாவம்.//

திருத்திட்டேன். கணித பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதால் பாவம்தான் நீ்ங்கள். :)

//இதை நேற்றே - open IDஇல்- பின்னூட்டமிட்டேன். ஏனோ இடம் பெறவில்லை. இன்று Google கணக்கு மூலம். இப்போதாவது கணக்கு உதவுகிறதா என்று பார்க்கலாம்!//

கணக்கு உதவியதா? இப்பவாச்சும்.

ஜமாலன் சொன்னது…

நன்றி ரௌத்ரன்.

ஜமாலன் சொன்னது…

நன்றி பாரி.அரசு

//நடைமுறையில் அறிவியல் ஆய்வாளர்கள் முதலாளித்துவ வணிக உலகத்தை சார்ந்தே நிற்க வேண்டியுள்ளது.//

உண்மைதான். அறிவியலுக்கும் முதலாளிக்கும் உள்ள உறவு தந்தை-மகன்-பேரன் போன்ற உறவை உடையது. கொடுத்து கொடுத்து வாங்கிக் கொள்வார்கள்.

//ஜாவா வின் தந்தை எனப்படும் James Gosling தத்துவத்தில் ஈடுப்பாடுக்கொண்டவர்... சன் மைக்ரோ சிஸ்டம் இருக்கும் வரை தாக்குபிடித்தார். சன், ஆரக்கிள் உடன் இணைந்தவுடன் 2 மாதங்கள் கூட முதலாளித்தவத்தை தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறிவிட்டார்.//

தகவலுக்கு நன்றி.மனம் திருந்திய மைந்தரைப்போல் வெளியேறிவிடடார் போலிருக்கிறது. வெறுவழியில்லை. முதலாளித்துவ எந்திர விழைச்சுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பது கடினம்.

ஜமாலன் சொன்னது…

நன்றி சுந்தர்.

நற்கீரன் சொன்னது…

வணக்கம். சற்றுக் காலம் தாழ்த்தியே இந்தப் பதிவைப் படிக்கிறேன். அறிவியல் தமிழை வளர்ப்பதற்கு, ஊர் கூடி தேர் இழுப்பதற்கான ஒரு நல்ல கூட்டுருவாக்கத் தளம் தமிழ் விக்கியூடகங்கள் (http://ta.wikipedia.org/) ஆகும். இங்கு ஏற்கனவே ஆயிரக் கணக்கான தரமான அறிவியல் கட்டுரைகள் கூட்டாக எழுதப்படுள்ளன. கணிதம், இயற்பியல், உயிரியல், மருத்துவம் என்று பல துறைகளும் விரிவு பெற்றுவருகின்றன. கலைச்சொற்களை பயன்படுத்தல், சீர்படுத்தல், புதிதாக ஆக்கல் என பல பணிகள் அது தொடர்பாகவும் நடைபெறுகிறது. நீங்களும் உங்கள் நன்பர்களும் சிறிது சிறிதாக பங்களிப்புகள் நல்கினால் தமிழ் விக்கியின் வளர்சியை வேகப்படுத்தலாம். இணையத்தில் அறிவியல் தமிழ் உள்ளடக்கத்தை வேகமாக உருவக்காலாம். நன்றி.

ஜமாலன் சொன்னது…

நன்றி நற்கீரன்

நான் ஏற்கனவே விக்கியில் உறுப்பினராகி சில இலக்கிய ஆசரிரியர்கள் அறிமுகம் செய்து உள்ளேன். நீங்கள் கூறியபடி பல நண்பர்களிடம் முன்பே சொல்லி விக்கியில் பங்களிப்பு செய்ய சொல்லி உள்ளேன். நானும் கொஞ்சம் அதற்கென நேரம் ஒதுக்கி செய்ய முயற்சிக்கிறென். கண்டிப்பாக.. எனக்கு விக்கியில் எனக்கு தெரிந்தவற்றை ஆழமாக அறிமுகப்படுத்தும் எண்ணம் உண்டு. உங்கள் கருத்திற்கு நன்றி.

சர்வோத்தமன் சடகோபன் சொன்னது…

ஜமாலன் , கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது.தமிழில் அறிவியல் மற்றும் தத்துவத்திற்கான ஒரு இதழ் உருவாக வேண்டும்.அதற்கான வெற்றிடம் உள்ளது.
சர்வோத்தமன்.

ஜமாலன் சொன்னது…

நன்றி சர்வோத்தமன். உண்மைதான். கண்டிப்பாக ஒரு தமிழ் அறிவியல் பத்திரிக்கை உருவாக்க வேண்டும் தமிழில்.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.