ஈவ் இன்ஸ்லரின் ”சுவர்” கவிதை – அடையாளமாதல் மற்றும் இருப்பாதல் பற்றிய ஒரு வாசிப்பு.

பெருந்தேவியின் ”இன்ன பிற”-வில் அவரால் மொழிபெயர்த்து செய்யப்பட்ட கவிதை குறித்த ஒரு வாசிப்பே இப்பதிவு. கவிதையும் குறிப்பும் ”இன்ன பிற”-வில் இருந்து. முதலில் அதை வாசித்துவிடுங்கள்.

s-EVE-ENSLER-large ஈவ் இன்ஸ்லர்-ன் “நானொரு உணர்வுபூர்வமான பிறவி” I am an emotional creature (2010) என்கிற புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட ஒரு “தனிமொழி” (monologue) இது. அமெரிக்க பெண்ணிய எழுத்தாளரான அவரது “The Vagina Monologues” என்ற தலைப்பிடப்பட்ட நாடகம் புகழ்பெற்றது. உலகின் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டதும்கூட.

(சமீபத்தில் வாசித்ததில் என்னை மிகவும் பாதித்த கவிதை/மொழி இது, பகிர்ந்துகொள்வதில் ஆறுதலடைகிறேன்.)


சுவர்
ஜெருசலம், இஸ்ரேல்
என் தோழி அதீனா என்னை மேற்குக்கரைச் (West Bank) சுவரின்
அந்தப்பக்கத்துக்கு அழைத்துச் செல்கிறாள்.
அங்கே அது இருக்கும்விதத்தைப் பார்த்து ஆச்சரியமடைகிறேன்.
உயரமாக இருக்கிறது அது இன்னும்.
தாண்ட உங்களுக்கு ஹெலிகாப்டர் வேண்டும்.
கடினமான சிறுமைகொண்ட சிமெண்ட்டின் பிரிவுச்சக்தி, வீடுகள்,
நிலம், மற்றும் நண்பர்கள்
திரும்பப் போகிறேன்
நிறைய கதைகளைக் கேட்கிறேன்.
இந்தப்பக்கத்தில் தண்ணீர் இல்லை
கிணறுகள் இல்லை
மாதுளையோ அத்தியோ இல்லை
வேலைகள் இல்லை
வெளியேபோக வழியுமில்லை.
வெள்ளிக்கிழமைகளில் பாலஸ்தீனியப் பையன்களோடு
போராட்டம் செய்கிறேன்.
ஒரு இஸ்ரேலியச் சிறுமி இங்கே என்ன செய்கிறாள்
என்பது புரியவில்லை அவர்களுக்கு.

ரகசியமாக அது.
வீட்டில் ஒருவருக்கும் தெரியாது.
மாதங்களாக தொடர்கிறது.

சுவர் என்னை மாற்றுகிறது.
நான் என் கால்களைச் சவரம் செய்வதை நிறுத்துகிறேன்.
மாமிசம் உண்ணுவதை நிறுத்துகிறேன்.
அப்படியே ராணுவத்தில் சேர மறுக்கிறேன்.
என் பாட்டனாரின் வயதேறிய மென்முகத்தில்
அவரது உடைந்த இதயத்தைக் காண்கிறேன்.
திருப்பித்தரவில்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.
உண்மையான இஸ்ரேலியள் இல்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.
முன்பெல்லாம்போல என் தந்தை
என்னைப் பார்ப்பதில்லை.
அண்ணனோ உரத்துப் பேசுகிறான்
என்முகத்துக்கு முன்பாகப் பீற்றுகிறான்
இன்று ஒரு அரேபியனைக் கொன்றதாக.
இப்போதும் முடியாது என்கிறேன்.
எனக்கு உளச்சிக்கல்கள் இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள மறுக்கிறேன்.
துப்பாக்கிசுட நான் பழகமாட்டேன்.
சிறைக்குப் போகிறேன்.
ராணுவத்தின்/சிறையின் சீருடையை அணிய மறுக்கிறேன்.
தனிச்சிறையில் வைக்கப்படுகிறேன்
அது என்னை எந்த அளவுக்கு பயமுறுத்துகிறது என்பதைச் சொல்லவில்லை.
ஒவ்வொரு இரவும்
என் வயதொத்த ஒரு இளம்பெண், பதினெட்டுபோல வயதிருக்கும்,
என் செல்லில் உலாவுகிறாள்.
அவள்தலை மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது.
அவள் நிர்வாணமாக இருக்கிறாள். பசியோடு இருக்கிறாள்.
எனக்கு எதையோ தெரியப்படுத்த நினைக்கிறாள்.
அவளுக்குத் தொண்டை அடைக்கிறது.
எலும்பின் அவள் கைகள் 
சுவரைப் பிறாண்டுகின்றன.
அவள் ஒரு கனவா, இல்லை ஒரு நினைவா,
சொல்லத் தெரியவில்லை எனக்கு.
என்னை அவள் பீடிக்கிறாள்
அல்லது
விடுவிக்கிறாள்.

- ஈவ் இன்ஸ்லர்

ஈழப் போராட்டத்துடன் தமிழ்சூழலுக்கு அறிமுகமான கதையாடல் வகைப்பட்ட கவிதை இது.  பொதுவாக, அரசியல் கவிதைகள் கதையாடல் வழியாகவே ஒரு தன்னெழுச்சி உணர்வை உருவாக்கக் கூடியவை. இவ்வகைக் கவிதைகள் பிரச்சாரமாக ஓங்கி ஒலிப்பதோ, தனது அரசியலை நேரடியாக வைப்பதோ இல்லை. ஒரு கதையாடலை பிரதியாக முன்வைத்துவிட்டு நகர்ந்துவிடும் கதைசொல்லி, பிரதியின் வாசல்களை திறந்து வைத்து விடுகிறாள். ஒவ்வொருவரும் ஒரு வாசல் வழியாக நுழையலாம். அப்படி ஒரு வாசல்தான் இது. மற்றபடி கோணார் உரை போடுவதாக கருதவேண்டியதில்லை. 

INCwall18பாலஸ்தீனிய ”தீவரவாதி”-களிடமிருந்து 'யூதர்களை பாதுகாப்பதற்காக' என்ற காரணத்தை சொல்லி, சர்வதேச விதிமுறைகளையும், மனித உரிமைகளையும், சர்வதேச நீதிமன்றத்தின் ஆணையையும் மீறி இஸ்ரேலிய அரசால் கட்டப்பட்ட மிக நீளமான சுவரே ”மேற்குகரை சுவர்”. சுமார் 650 கி.மி. நீளமும் (மேலதிக விபரங்கள் இங்கு) 25 அடி (8 மீட்டர்) உயரமும் உள்ள கான்கிரீட் சுவர். ஒரு நாட்டிற்குள் நடத்தப்பட்ட பாகப்பிரிவினை இது. இனவெறி சுவர் (Apartheid Wall) என்று பாலஸ்தீனியர்களாலும், பாதுகாப்பு சுவர் (Security Wall) என்று இஸ்ரேலியர்களாலும் அழைக்கப்படும் இச்சுவரை, சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட உலக-அமைதிக்கான அமைப்புகள் “சுவர்” என்ற சொல்லால் மட்டுமே கவனமாக அழைக்கின்றன. அதையே தலைப்பாகக் கொண்ட,  இக் கவிதை சொல்லாடல் அரசியலின் முதல் தடத்தை பதிக்கிறது. “சுவர்“(1) யூதர்களின் மத-இன-தொன்ம அடையாளத்துடன் உறவு கொண்ட வழிபாட்டு அடையாளமாகவும், வரலாற்று அடையாளமாகவும் மட்டுமின்றி ஒரு நில அடையாளாகவும் மாற்றப்பட்டுள்ளது கவனப்படுத்தப்பட்டுள்ளது கவிதையில். மதம், இனம் என்கிற கருத்துருவங்களால் பிரிக்கப்பட்ட பாலஸ்தீன்-இஸ்ரேல் வரலாற்றை, மேற்குக்கரையில் பிரிக்கப்பட்ட ஒரு சுவரை உருவகப்படுத்தி பேசுகிறது இக்கவிதை. 

அதீனா என்ற தோழியால் அழைத்துச் செல்லப்படும் கவிதையின் “நான்“ என்ற அடையாளம், இப்படிக் கூறுகிறது, அந்த பக்கச் சுவர் உயரமாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது என்று. அதாவது, இந்த பக்கச் சுவர் உயரமாக இல்லை என்பதுடன், இப்பக்கச் சுவருக்கு பழகிய நானாக உள்ளது என்பதே உட்பொருள். நிலத்தை அபகரித்தவனுக்கு சுவர் பாதுகாப்பு என்பதால் உயரம் குறைவானது, நிலம் அபகரிக்கப்பட்டவனுக்கு சுவர் தடுப்பு என்பதால் உயரமானது. ஒரே சுவரின் இருபுறப் பார்வைகளால்  உருவாகும் உயர வேறுபாடு முக்கியம். இந்த வேறுபாட்டை உணர்ந்த மாத்திரத்தில் “நான்“ இஸ்ரேலிய அடையாளத்திலிருந்து பாலஸ்தீனிய அடையாளத்திற்கு மாற்றமடைகிறது. 

”உயரமாக இருக்கிறது அது இன்னும்.
தாண்ட உங்களுக்கு ஹெலிகாப்டர் வேண்டும்.”

வாசிக்கும் நாம் தாண்ட ஹெலிகாப்டர் வேண்டுமெனில், கவிதையின் நான் எப்படி போனது என்கிற கேள்வி உள்ளது. அந்த நான் சுவருக்கு அப்பாலான அடையாளமாக மாறியதால், அதன் இருப்பும் சுவருக்கு அப்பாலானதாக உள்ளது.  இந்த சுவர் தாண்டல் அடையாளமாதல் எனும் மொழிச் செயலால் நடக்கிறது. அதாவது, கவிதையின் நான் தன்னடையாளத்தை அழிக்கிறது. அது மற்றமையாக மாற்றமடைகிறது. அதனை விவரிக்கும் விவரணைகள் வருகின்றன. அதன் தொடர்ச்சியாக,

ஒரு இஸ்ரேலியச் சிறுமி இங்கே என்ன செய்கிறாள்
என்பது புரியவில்லை அவர்களுக்கு

என்பதுவரை இந்த மற்றமையாகவே நான் செயல்படுகிறது. இங்கு சிறுமி என்கிற பெண்-அடையாளம் பெறும் நான், இனம் என்கிற மற்றொரு அடையாளத்தையும் பெறுகிறது. பெண் மற்றும் பாலஸ்தீனியவள் என்ற இரண்டு மற்றமைகளாக இங்கு அடையாளப்படுகிறது.

“இந்த ரகசிய செயல்பாடு பல மாதங்களாகத் தொடரப்படுவதன்” வழியாக, அதாவது, சுவருக்கு அப்பால் சென்று அங்கு நிகழும் செயல்களி்ல் பங்கு பெறுவதால், ஒடுக்கப்பட்ட இன-அடையாளமான பாலஸ்தீனிய அடையாளத்திலிருந்து பாலஸ்தீனிய “இருப்பு“-(2)க்கு மாற்றமடைகிறது. இதற்குபின் கவிதை ஒடுக்கப்பட்ட-இருப்பு அல்லது சிறுபான்மை-இருப்பு என்கிற வெளியிலேயே பயணிக்கிறது. கவிதையின் நுட்பம் இந்த தளமாற்றம்தான். இது பிரதிநிதித்துவ அரசியல் அல்ல என்பது முக்கியம். இக்கவிதையில் உள்ள நான் வழக்கமான கவிதைகளில் காணப்படும் ஒடுக்கப்பட்டவரின் பிரதிநிதியாக இல்லாமல், சூட்சமமாக ஒடுக்கப்பட்ட மற்றமையின் இருப்பாக மாறிவிடுகிறது. அடையாளமாதலில் இருந்து இருப்பாதலை நோக்கி நகரும் இந்த மாற்றம் முக்கியமானது.

INCwall9j ”சுவர் என்னை மாற்றுகிறது” என்பதற்குப்பிறகு எல்லா நிகழ்வுகளும் மற்றமையின் இருப்பிலிருந்து விவரிப்பதாக மாறிவிடுகிறது. குரலில் நுட்பமான மாற்றங்கள் ஏற்படுவதை கவிதை மொழியில் உணரலாம். அதாவது ஆதிக்கத்தை மறுப்பது என்பதாக குரல் இறுக்கமானதாக மாற்றமடைகிறது. இங்கு கவிதையின் “நான்“ தனது மற்றமை இருப்பையே தனது தன்னிலையாக உணர்கிறது. இந்த “நான்“ என்கிற யூத தன்னிலைக் கட்டமைவிற்கான அரசு, மதம் மற்றும் இராணுவம் சார்ந்த சடங்குகளை நிறுத்திக் கொள்ள முனைகிறது,

”நான் என் கால்களைச் சவரம் செய்வதை நிறுத்துகிறேன்.
மாமிசம் உண்ணுவதை நிறுத்துகிறேன்.
அப்படியே ராணுவத்தில் சேர மறுக்கிறேன்.”

இவ்வரிகளில் உள்ள சவரம் செய்தல், மாமிசம் உண்ணாமை இவற்றிற்கான கலாச்சார சங்கேதங்கள் நமக்கு புரிபடவில்லை. ஒருவேளை இவ்வரிகளில் இராணுவ ஒழுங்கமைப்பிற்கான சடங்குகளான வலு, நேர்த்தி என்பதை மறுப்பதற்கான குறிப்பாக இருக்கலாம்.

இதற்கு பிறகு, கவிதை பல நுட்பமான வரலாற்றை உள்ளடக்கி எழுதிச் செல்கிறது. இதனுள் இயங்கும் அமைப்பு, உருவாக்கும் வரலாற்றுக் காரணிகள் பற்றிய புரிதல்தான் முக்கியம் எனக் கருதுகிறேன். இக்கவிதையில் சுவர் துவங்கி கவிதைக்குள் வரும் பாலஸ்தீனப் புரட்சியாளர்கள், தாத்தா, அப்பா மற்றும் அண்ணன் என்கிற ஆணடையாளங்கள் வரலாற்றின் இயக்க சக்தியாக காட்டப்படுகிறது. வரலாறு என்பது ஆண்களுக்காக கண்டடையப்பட்ட ஆணிய கதைசொல்லல் என்பதை சொல்வதைப்போல உள்ளது.

இதற்கு பிந்தைய வரிகள் யூத வரலாற்றின் 3 முக்கியக் காலகட்டங்களை குறிப்பதாகப் படுகிறது. யூதர்கள் மோசஸ் காலத்தில் எகிப்திலிருந்து இன்றைய இஸ்ரேல்/பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியேறி, அங்கிருந்து ரோமப்பேரரசால் துரத்தப்பட்டு புலம்பெயர்ந்த காலகட்டம். அதன் குரலாக இருப்பவர் தாத்தா. இழந்துபோன நிலம் பற்றிய உடைந்த இதயங்களைக் கொண்டவராக,  அந்த தலைமுறையின் சொல்லொண்ணா வேதனைகளை உடையவராக உள்ள அவரது இதயத்தை பரிவுடன் காண்கிறாள். அவரோடு அவளுக்கு உரையாட முடிகிறது. இஸ்ரேல் என்கிற நாடு உருவாக்கப்பட்டதிற்கான அடிப்படையான உரையாடல் இது.

”என் பாட்டனாரின் வயதேறிய மென்முகத்தில்
அவரது உடைந்த இதயத்தைக் காண்கிறேன்.
திருப்பித்தரவில்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.
உண்மையான இஸ்ரேலியள் இல்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம். ”

இந்த வரிகளின் வழியாக அவள் பாலஸ்தீனிய அடையாளத்திற்குள் இருப்பதை கவிதையில் உள்ளவர்கள் புரிந்துகொள்கின்றனர். அதாவது ஒடுக்கப்பட்ட தன்னிலையாக அவள் மாறிவிட்டிருக்கிறாள். இது ஒருவகை ”சிறுபான்மை இருப்பாதல் (becoming-minor)” என்கிற நிலை. சிறுபான்மை இருப்பாதல் என்பது எண்ணிக்கை சார்ந்த சிறுபான்மை அல்ல. எந்த ஒரு அமைப்பிலும் ஆதிக்கத்தினால் ஒடுக்கப்படும் சிறுபான்மையாக இருத்தல். அப்படி இருப்பதின் வழியாகவே பாசிசமாதலில் இருந்த ஒரு தன்னிலை தன்னை தப்ப வைத்துக் கொள்ளமுடியும். கவிதையின் “நான்“ யூத பாசிசமயமாதலில் இருந்து தப்பவே தன்னை சிறுபான்மையாக ஆக்கிக் கொள்கிறது.  கவிதையில் சொல்லப்படும் “திருப்பித் தரவில்லை“ என்ற வரி, இஸ்ரேலியர்களுக்கு நிகழ்த்தப்பட்ட வரலாற்றுக் கொடூரத்தை, அதாவது அவர்களது பூர்வீக நிலத்தை திருப்பித் தரவில்லை என்பதாக பொருள்கொள்ளமுடியும். ஆக, அவள் இஸ்ரேலிய அடையாளத்திற்கு வெளியே நிறுத்தப்படுகிறாள். அதாவது அவளுக்கு அவர்களது மண் பாலஸ்தினிய-அரபிகளின் அபகரிப்பாக சொல்லப்படுகிறது.

“முன்பெல்லாம்போல என் தந்தை
என்னைப் பார்ப்பதில்லை.”

இங்கு தந்தை என்பவன் இரண்டாவது காலகட்டத்தின் அதாவது இஸ்ரேலியர்கள் புலம்பெயர்ந்த நிலையில் உள்ளவன் என்பதால், அவளை புறக்கணிக்கிறான். இந்த தந்தைதான் “தாய் நாட்“-டை உருவாக்குபவன். இந்த தந்தையுடன் அவளுக்கு உரையாடல் சாத்தியமற்றதாகிவிடுகிறது. அவள் புறக்கணிக்கப்படுகிறாள்.

”அண்ணனோ உரத்துப் பேசுகிறான்
என்முகத்துக்கு முன்பாகப் பீற்றுகிறான்
இன்று ஒரு அரேபியனைக் கொன்றதாக.”

அண்ணன் இஸ்ரேல் உருவாகிய பிறகானவன் என்பதால் முழுக்க இராணுவமாக இருக்கிறான். கொலை என்பது அவனிடம் மறமாக வெளிப்படுகிறது. ஆதிக்க இனத்திற்கான அறமாக மாற்றப்படுகிறது. இங்கு வரலாற்றில் நிகழ்ந்த வன்முறை முறைப்படுத்தப்பட்ட அதிகார எதிர்-வன்முறையாக தொன்மக் கதையாடல்கள் வழியாக மாறியுள்ளது. கவிதையில் உள்ள சொல்லாட்சியானது பிரதியின் ஆழ்தளத்தில் உள்ள அரசியலை வெளிப்படுத்திக் காட்டுகிறது. முதல் பகுதியில் அவளுக்கு பாலஸ்தீனியனாக உள்ள புரட்சியாளர்கள்.. அண்ணனால் அரேபியனாக எடுத்துரைக்கப் படுகிறார்கள். முறைப்படுத்தப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தால் பாலஸ்தீனியர்கள் என்கிற வார்த்தை பிரதியில் இங்கு அரேபியனாக  மாற்றீடு செய்யப்படுகிறது. பாலஸ்தீனியப் பிரச்சனை என்பது நிலம், நாடு அதன் இறையாண்மை என்பதிலிருந்து, இனம்-மதம் என்பதற்குள் அடக்கப்பட்டுவிடுகிறது. அதாவது

'வெள்ளிக்கிழமைகளில் பாலஸ்தீனியப் பையன்களோடு
போராட்டம் செய்கிறேன்"

என்று முன்பு இஸ்ரேலிய-தன்னிலையாக  கவிதையில் துவங்கிய “நான்“ போராடியதை சொன்ன பிரதியானது, சுவரின் மூலம் அடைந்த மாற்றத்தால், அண்ணனின் யூத-இனவாத(ஜியோனிச) குரலை அம்பலப்படுத்திவிடுகிறது. இந்த வரிகளில் உள்ள வெள்ளிக்கிழமைகளில் என்கிற சொல்லின் தேர்வு நுட்பமானது. இஸ்லாம் மதம் முன்வைத்த புனிதநாள்.  இது பாலஸ்தீனிய புரட்சியாளர்களின் மதம் சார்ந்த உணர்வை வெளிப்படுத்தும் சொல் மட்டுமின்றி அப்பையன்களுடன் போராட்டம் செய்வதற்கான நாட் தேர்வாக சொல்லப்படுவது  அதன் மத தன்மை குறித்த ஒருவகை விமர்சனம் எனலாம். பாலஸ்தீனிய இனப்பிரச்சனை, சர்வதேச மற்றும் இஸ்லாமிய சமூகங்களால் ஒரு மதப்பிரச்சனையாக குறுக்கப்பட்டுவிட்டதன் ஒரு அடையாளம்தான் கவிதையில் சொல்லப்படும் வெள்ளிக்கிழமைப் போராட்டம் எனலாம்.

பிறகு தன்னினத்திற்குள்ளேயே மற்றமையாக இருப்பவள் உளச்சிக்கல் உள்ளவளாகவும், தண்டிக்கப்பட வேண்டியவளாகவும் கருதப்படுகிறாள். தனிமைப்படுத்தப் படுகிறாள். வரலாறு விளிம்புகளை இப்படித்தான் உருவாக்குகிறது. கட்டாய இராணுவமாக்கலை மறுத்ததால், சிறைக்குள் அடைக்கப்பட்ட அவள், இங்கு மற்றமை என்கிற பாலஸ்தீனிய பெண்ணிருப்பாக முழுமையாக்கம் பெறுகிறாள். இதற்கு பிந்தைய கவிதை வரிகளை உணர்வுகளால்தான் புரிந்துகொள்ளமுடியும். இறுதியில் நான்-மற்றமை என்கிற எதிர்-இருப்புகளை சிதைத்து, கவிதை மொழி, பிரதியை துவங்கியபோது வந்த அதீனா என்கிற பாலஸ்தீன தோழியாகவே கவிதை சொல்லியாகிய நானை உருமாற்றிவிடுகிறது. தனிமைச்சிறையில் உள்ள அவள், அவளுக்கே அந்நியமாக மாறி, ஒடுக்கப்படுகிறாள். கவிதை மொழி இங்கு மனச்சிதைவின் மொழியாகிவிடுகிறது. வேறு என்ன செய்யமுடியும், மழிக்கப்பட்ட தலையுடன், நிர்வாணமாக, சிறைச்சுவரை பிராண்டுவதை தவிர.
 
Eve_Enslerஅதாவது, கவிதைக்குள் செயல்படும் நான் இப்படியாக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதியாக இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களது இருப்பாக மாறிவிடுகிறது. கவிதை எழுதியவர் அமேரிக்க-யூதர் என்பதை மறக்கடித்துவிட்டு, ஒரு இஸ்ரேலியப் பெண் என்பதாக துவங்கி, அவள் தன்னை ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியவளாக மாற்றிக் கொள்கிறாள். அதாவது சிறுபான்மை-இருப்பாதல் என்கிற நிலையை அடைகிறாள்.  “ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண், ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்தவளை பீடிக்கிறாள் அல்லது விடுவிக்கிறாள்“. இங்கு சுதந்திரம் விடுதலை என்பதெல்லாம் வேறு பொருள்கொள்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைதான் ஒடுக்குபவர்களையும் விடுவிக்கும் என்கிற இந்த செய்திதான் முக்கியம். வேறுவிதமாகச் சொன்னால், ஒடுக்குபவன், ஒடுக்கப்பட்டவன் என்கிற பிரிவனை தகர்க்கப்பட்டால்தான், மனிதவாழ்தல் என்பது அர்த்தம் உள்ளதாக இருக்கும்.

பின்குறிப்பு - யூதராக பிறந்த ஈவ் இன்ஸ்லர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை உலகெங்கிலும் கவிதைகள், நாடகங்கள் வழியாக ஒலித்துக் கொண்டிருப்பவர். ஒரு யூதராக பாலஸ்தீனியர்களது ஒடுக்கமுறைக்கு எதிராக எழுதப்பட்டிருக்கிறது இக்கவிதை. பிரதிகளை விட்டுவிட்டு எழுதியவரின் அடையாளங்களை தேடும் நமது இலக்கியப் பார்வைக்கு சவாலாகவும், மாற்றாகவும் உள்ளது.

குறிப்புகள்

1. சுவர் (மேலதிக விபரங்களை இங்கு படிக்கலாம்) என்பது யூதர்களின் ஒரு தொன்ம-wailing_wall_crowd  வரலாற்று-நம்பிக்கையாகும். கி்.பி. 70-ல் ரோமானியர்கள் யூதர்களின் எழுச்சியை அடக்கி இடித்து தள்ளிய  சாலமன் மன்னால் கட்டப்பட்ட யூதர்களின் புனித ஆலயத்தில், இடிபாடுகளுக்கிடையே மிஞ்சிய ஒரு சுவர்.   இந்த சுவர் இஸ்லாமியர்களுக்கா? யூதர்களுக்கா? எனபதில் பெரும்போரே நிகழ்ந்தது.  காரணம், முகமது நபி முதலில் இந்த ஆலயத்தை மையமாகக் கொண்ட - அல் குத்ஸ் என்பதை இறை ஆலயமாக நோக்கித் தொழுது கொண்டிருந்தார். அவரது மெஹராஜ் எனப்படும் வானியல் பயணம், மெக்காவில் துவங்கி வெண்மைநிற இறகு முளைத்த புர்ஹா என்கிற குதிரை இந்த இடத்தில் முதலில் அவரை இறக்கியது. இங்கு அல்லாவை தொழுதுவிட்டு, அதன் பின்னே 7 வானங்களைத்தாண்டி அல்லாவை சந்தித்து இஸ்லாமிய 5 நேர வழிபாடு மற்றும் 30 நோன்பு போன்றவற்றை பெற்று வந்ததாக இஸ்லாமிய நம்பிக்கை. அதனால் இஸ்லாமியர்களுக்கு காபாவிற்கு பிறகான ஒரு புனிதத் தலமாக இது உள்ளது. ஆனால், இச் சுவரை யூதர்கள் அவர்களது கடவுளின் இருப்பிடமாக புனிதத்திலும் புனிதமாக கருதுகிறார்கள். இடிபாடுகளில் மிஞ்சிய இச்சுவர் அவர்களது இடிந்துபோன வரலாற்று அடையாளமாக இருப்பதாலும், இதில் யூதர்கள் தங்களது பிரார்த்தனைகளை முன்வைத்து அழுது வழிபட்டதாலும், இது Wailing Wall  என அழைக்கப்படுகிறது.

2. இருத்தல், இருப்பு என்பது இருத்தலியல் வாதம் முன்வைக்கும் existence என்கிற புரிதலில் இங்கு பயன்படுத்தவில்லை.  becoming-minor என்கிற கோட்பாட்டு அடிப்படையில் becoming என்பதற்கு இருப்பு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. Being, Existence போன்ற சொற்களுக்கு இருத்தல், இருப்பு  என்கிற தமிழ் சொல்லை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்த நாகார்ஜீனனின் இந்தப் பதிவில் உள்ள விவாதத்தை வாசித்தறியலாம்.

- ஜமாலன் 28-04-2010.

2 comments:

ஆர்.அபிலாஷ் சொன்னது…

மிக கூர்மையான பதிவு ஜமாலன். இப்படி அலகலகாக கவிதை அலசப்பட்ட ஒரு பதிவு படித்து நெடுநாளாகிறது. உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது.

ஜமாலன் சொன்னது…

நன்றி அபிலாஷ்

உங்கள் கருத்து மிகவும் உற்சாகம் தருவதாக உள்ளது. இத்தகைய இலக்கிய அலசல்களுக்கு மதிப்பற்றதான ஒரு மௌனம்.. எழுதும் ஆர்வத்தை கொல்வதாக உள்ளது. தமிழில் இத்தகைய மௌனம் கொன்ற இலக்கியவாதிகள்.. கூச்சலில் குளிர்காயும் இலக்கியவாதிகளைவிட அதிகம் என்று தோன்றுகிறது. இப்படி சொல்வதால் கண்டுகொள்ளாமல், அல்லது தெரியாமல் போன் உயர்ந்த இலக்கியவாதிகளில் ஒருவனாக என்னைக் கருதிக்கொள்வதாகக் கருதவேண்டாம். ஒரு கருத்திற்காக சொன்னேன்.

உங்கள் கருத்து இத்தகைய எழுத்தார்வத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது.

ஜமாலன். Blogger இயக்குவது.