பெரியார் தமிழின துரோகியா?

திருக்குறள் குறித்த பெரியாரின் கருத்தை தோழர் தமிழச்சி அவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். அதற்கு அரைபிளேடு எனற நணபர் தனது பதிவில் மறுப்பாக ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளார். அவ்விவாத பின்னோட்டமாக இது எழுதப்படுகிறது.

தமிழச்சியின் பெரியார் மூலக்கட்டுரை இணைப்பு: http://thamilachi.blogspot.com/2007/09/blog-post_5727.html

அரைபிளேடு அவர்களின் மறுப்பிற்கான இணைப்பு:
http://araiblade.blogspot.com/2007/09/blog-post_08.html

பெரியாரின் கருத்துக்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல। ஆணால், அவரை தமிழ் விரோதி என்று சொல்வது அதுவும் அவரது பக்தனாகவும் அவரது கொள்கைப் பற்றாளனாகவும் காட்டிக் கொண்டு கொஞ்சம் விஷமத்தனமானதுதான். தாய் தன் பிள்ளையை கண்டிப்பதைப் பொன்றதல்ல தமிழ் குறித்த பெரியாரின் இந்நிலைப்பாடு. தெளிவாக பெரியார் தனது கலகத்தன்மையை இங்கு வெளிப்படுத்துகிறார். நிறுவனமயப்படுத்தப்பட்ட எந்த ஒன்றும் கெட்டித்தட்டிப் போய் சமுக வளர்ச்சியை தடை செய்யவே செய்யும். இதுதான் விஞ்ஞானம் வரலாறு. பெரியாரைவிட கடவுளை மூடநம்பிக்கையை எதிர்த்த பெளத்தம் ஒரு நிறுவனமாகி என்று என்னவாகியது என்பதை வரலாறு நமக்கு காட்டித் தந்தள்ளது. அல்புருணி என்கிற அரேபிய யாத்ரிகன் ஆர்யபட்டர் போன்ற விஞ்ஞானிகள் பற்றி எழுதும்போது அற்புதமான விஞ்ஞான கருத்தோட்டங்களைக் கொண்டுள்ள இவர்கள் எல்லாவற்றையும் இறுதியில் கடவுள் என்கிற கண்ணுக்க தெரியாத ஒன்றிற்குள் அடக்கிவிடுகிறார்கள் என்றான். இந்திய சிந்தனைமுறையின் இந்த புள்ளியை பெரியார் சரியாக கண்டுணர்ந்தார். நாத்திகம் என்பது பெரியாருக்கு முன்பே இந்திய தத்துவ சிந்தனையில் உள்ள ஒன்று. அதன் அழிக்கப்பட்ட வரலாற்றை மீட்டு உலகாயுதமாக ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். கடவுள் தோன்றியபோது அதனை எதிர்ப்பவர்களும் தோன்றிவிட்டார்கள்.

ஆக, பகுத்தறிவிற்கு புறம்பான எந்த அபிமானங்களையும் உணர்வுகளையும் பெரியார் எதிர்த்தார். அதில் ஒன்றான பாஷாபிமானத்தையும் எதிர்த்தார். தனது பகுத்தறிவிற்கு உட்படாத எதையும் ஏற்காதே என்பதுதான் பெரியாரின் கொள்கை. சமுகத்தை பின்னோக்கி இழுக்கும் மத, சாதிய, பழம்பெருமைகளை, புராணங்களை அவர் இக்கண்ணோட்டத்துடனேயே அனுகினார். தனது கொள்கைகளே வழிபாட்டுக்குரியதாக மாறிவிடாதிருப்பதில் எச்சரிக்கையாக இருந்தார். சுயமரியாதை என்பதை ஒரு வாழ்வணுபவமாக மாற்ற முயன்றார். நமது உணர்வின் உடலின் ஒரு கூறாக அது மாற வேண்டும் என்பதுதான் பெரியாரின் கொள்கையாக நடைமுறையாக இருந்தது.

தமிழை அவர் எதிர்த்தார் என்று பெரியாரிடம் கேள்வி கெட்பதற்கு முன்பு. தமிழ் குறித்தும் நமது கண்ணோட்டத்தை நாமே கேள்விக் கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். தமிழ் என்பது மொழி மட்டுமல்ல அது ஒரு கருத்துருவம் (idelogy). கருத்துருவத்தின் மிக அடிப்படையான செயல் அது ஒரு உலக கண்ணோட்டம் என்பதுதான். இதன்பொருள் உலகை ஒரு மனிதன் பார்ப்பதற்கும் அல்லது மனித தன்னிலை (subject) உலகை அறிந்து கொள்ளவும் ஆன ஒரு கண்ணோட்டம். இத்தமிழ் கருத்துருவம் ஆங்கிலேய காலணீய காலத்தில் தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கங்கள்மூலமாக கட்டப்பட்டது. இக்கட்டமைப்பு இனவாததனமையுடன்தான் கட்டப்பட்டது. தமிழ் என்கிற கட்டமைப்பிற்குள் உள்ள இனவாதக்கூறு அடிப்படையில் எல்லா இனவாதக்கூறிலும் அடங்கியுள்ள பாசிசமாகவே வெளிப்படும. ஒரு தமிழன் உலகை தழிழ் என்கிற இனஅரசியலுடனும் தான் பார்க்கிறான் புரிந்த கொள்கிறான. இதுதான் தமிழ் இனவெறியாக மாறுகிறது. உரிமைகள் பறிக்கப்படும்போது தமிழினத்திற்காக குரல் கொடுப்பவன் அதுவே ஆதிக்கமாக மாறும்போது அதனை எதிர்ப்பதற்கும் தனது தன்னிலையை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இம்மனநிலையே பெரியார் தனது தொண்டர்களுக்கு வளர்க்க விரும்பிய மனநிலை. அதனால்தான் பெரியார் கூறினார் மதாபிமானம், பாஷாபிமானம், குலாபிமானம், தேசாபிமானம் எல்லாவற்றையும் ஒருவன் விட்டுவிட வேண்டும் என்றார். தமிழை பெரியார் ஒரு இன அசியலுக்கான பாசிசத்தன்மையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அதன் உன்னதங்களை போட்டு உடைத்தார். தமிழ் வழிபாட்டு மனோபாவத்தை தோலுரித்தார். அதனால்தான் மதச்சார்பற்றதாக முன்வைககப்படும் தமிழின் உன்னத காப்பியமான சிலப்பதிகாரம் உன்னத பொதுமறையான திருக்குறள் உன்னத இலக்கணமான தொல்காப்பியம் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார். இவற்றை போட்டடைப்பதன்மூலம் இவை நிராகரிக்கப்பட வேண்டியவை என்பதல்ல பொருள். இவற்றை உன்னதப்படுத்தப்படுவதின் அரசியல்தான் இதில் உள்ள பிரச்சனை.

சரி அடுத்து அரைபிளேடின் குறிப்பான பிரச்சனைக்கு வருவோம்। தமிழ் வழிபாட்டு மனோபாத்தை வெளிப்படுத்தும் அரைபிளேடிற்கு அவர் எடுத்துக் காட்டும் பெரியாரின் கூற்றகளே அவருக்கு பதில் கூறுவதுதான் இதில் முரண நகை. பெரியாரே அவருக்கு கீழ்கண்டவாறு பதில அளிக்கிறார்.

//தொல்காப்பியன் மாபெரும் துரோகி தொல்காப்பியன் ஆரியக்கூலி। ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. //

இது ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்ட கூற்று। தொல்காப்பியரின் அறிதல்முறை வடமொழிவழிவந்தது. ஒரு உதாரணம், மெய்ப்பாடுகள் தமிழில் எட்டுதான். சமஷ்கிருதத்தில் 9 அதாவது நவரசா என்பார்கள். சூத்திரம் என்கிற பாவடிவம் தமிழில் இல்லை. தொல்காப்பியர் இலக்கணம் சூத்திர வடிவிலானது. தொல்காப்பியம் வடமொழிச் சொற்களை தமிழின் சொல்பிரிவில் ஒன்றாக முன்வைக்கிறது. தொல்காப்பியம் தனது இலக்கண விதிமுறைகள் மூலம் தமிழ் நிலத்தை எப்படி எல்லைகளை வரையறத்து கட்டமைத்தது என்பதும் தமிழ உயர்வழக்கு மொழியாக எப்படி படித்தரப்படுததியது என்பது குறித்து எனது "மொழியும் நிலமும்"என்கிற நூலில் விரிவான கட்டுரை ஒன்று உள்ளது. நிற்க.

தமிழ் என்பது காகலாகாலத்திற்கும் மாறாத ஒரு வஸ்து அல்ல. காலந்தோறம் மாறுவதே மொழி பெரியார் தமிழை கறை படிந்த மொழியாக பார்த்தார். அதுதான் உண்மை. தமிழ்மொழி வடமொழி கலப்பானது. அக் கறை படிந்த மொழியால் எந்தவித உணர்வையும் வெளிப்படுத்த முடியாது. அது இனத்தூய்மையின அடிப்படையில் தூய்மைப்படுத்தப்பட்டு ஒரு தமிழ்கருத்துருவமாக கட்டப்பட்டதை பெரியார் கண்முன் கண்டவர்.
திருக்குறள் ஒரு உயர்ந்த நூல்தான். அதற்காக அதுகூறும் எல்லா பிற்போக்கு கருத்துக்களையும் ஏற்க முடியுமா? திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் ஒரு கேடயமாக்கிக் கொண்டு பெரியாரைத் தாக்கத் துணிகிறார்கள் இன்று. இவ்விரு நூல்களும் ஒரு பெண்ணிய வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டால் இதன் உன்னதங்கள் பெண் உடலை எப்படி ஒரு ஆணிய துய்ப்புக் களமாக உருவமைக்கிறது என்பது வெளிப்படும். இப்படி ஒரு பகுத்தறிவற்ற பக்தியை இலக்கியங்கள் மீது ஆய்வு அற்ற முறையில் கொள்வதைதான் பெரியார் எதிர்த்தார். பெரியார் பெண்ணியநிலையில் இவற்றை எதிர்கொண்டதன் வெளிப்பாடே இவை.

சிலப்பதிகாரம் அறம்சார்ந்த இலக்கிம் (ஒரு பின்னோட்டக்காரர் சிரிப்பு சிரிப்பா வருது என்ற தனது அரிய கண்டுபிடிப்பை முன்வைத்தள்ளார் அவருக்காக) என்பதால், யதார்த்தில் அது எதை குறிநிலைப்படுத்துகிறது என்பதுதான் முக்கியம்। கற்பு நிலைபற்றி தமிழில் புராண அருந்ததிக்கு நிகராக கதைக்கும் ஒரு இலக்கியம். அதைதான் பெரியார் பிரச்சனைபடுத்துகிறார். பெண் ஊமையாக ஒரு பதுமையாக கணவனின் ஒரு துணை உறுப்புபோல இருப்பதை அதை நமது பாரம்பரியம் என்று கண்ணகியைக் காட்டி கொண்டாடுவதை அவர் எதிர்த்தார். சிலப்பதிகாரம் நடந்தேறிய காலகட்டத்தில் ஆரிய கலப்பு என்பது தீவிரமாக இருந்தது என்பதும் தமிழ் திருமணமுறை ஆரிய திருமணமுறையாக சிலப்பதிகாரத்தில்தான் சொல்லப்படுகிறது முதன்முதலில். அதனால் அதன் ஆரிய கலப்பினத்தன்மை இங்கு விவாதத்திற்கு உரியதாக பெரியாரால் மாற்றப்படுகிறது.

பெரியார் கூற்றுகள் காலம்-இடம் சார்ந்தவை। அவற்றை உயிரை பிரித்து விட்டு பிணத்தை வைத்துக் கொண்டு பேசுவதைப்போல பேசக்கூடாது। கும்மி என்ற பெயரில் எல்லா பூணைகளும் சாக்கைவிட்டு தாவிக் குதிக்க வைத்தவிட்ட அரைபிளேடுக்கு ஒரு பரிசுதான் அளிக்க வேண்டும். பெரியாரை ஒரு இந்துமத எதிர்ப்பாளராகவும், நாத்திகராகவும், பிராமண துவேஷியாகவும் கட்டமைத்து அவரை சமூக அசைவியக்கத்திலிருந்து புறந்தள்ளிவிட்டு வெறும் சிலையாகவும் வணக்த்திற்குரியவராகவும் இன்று மாற்றப்பட்டுவிட்டார். பெரியாரின் பல பரிமாணங்களை ஒற்றைப்பரிமாணமாகச் சுருக்கிவிட்ட நிலையே இது. பெரியார் என்பது தமிழ் என்கிற மொண்ணை சமூகத்தை உலுக்கிப் பார்க்க வந்த ஒரு மாபெரும் நிகழ்வு. தமிழ் என்கிற உணர்வை தனித்தமிழ் இயக்கத்தினரைவிட பரவலாக உருவாக்கியவர் பெரியார். இதுதான் இன்றைய வரலாறு. பெரியார் குறித்த எத்தகைய தீவிர விமர்சனத்திலும் இவ்வரலாற்றை நாம் மறுத்துவிடமுடியாது.

//இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?//

எப்படி பெரியார் மிகச்சரியாக அரைபிளேடு போன்ற தமிழுக்காக உயிர் விடுபவர்களை கணித்திருக்கிறார் பாருங்கள்। மொழி இனம் நாடு தேசம் போன்றவை எல்லாம் கற்பிதங்கள்தான் அவற்றிகாக உயிர் விடுவதாக உதார் விடுவது "டூமச்" என்பதுடன் அது கடவுள் நம்பிக்கையைவிட பெரும் மூட நம்பிக்கை.

இப்பொழுது விவாதிப்பவர்களையே இது குறிநிலைப்படுத்துகிறது। வெளித் தோற்றத்தில் தழிழ் பற்று என்றும் உள்ளே சிண்டு முடியும் சாணக்கியத்தனமும் நடைபெறுவதைதான் பெரியார் "தேவடியாத்தனம்" (தடித்த வார்த்தை என்னுடையது அல்ல பெரியாருடையது) எனபதாக குறிப்பிடுகிறார்.

//போதாக்குறைக்கு ‘பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் ‘நாங்கள் பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், ‘தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறி விடுவோம்’ என்று சொல்கிறார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது?//

தெளிவாகவே இருக்கிறது. நண்பருக்கு இது புரிந்திருக்கும். தனது தொண்டர்களையே பக்தர்களாக்கும் மந்தைதனம் பெரியார் எதிர்த்த ஒன்று. அதனால்தான் அவர் தமிழையும் எதிர்த்தார்.
முத்தாய்ப்பாக பெரியார் கூறும் கீழ்கண்ட ஒரு வரி போதும் இந்த விவாதத்திற்கான பதில்।

//நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள்। அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது. //

இறதியாக அரைபிளேடு அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம் இவ்வளவு தெளிவாக தேடிப்பிடித்து பெரியாரின் 'தமிழ்விரோத' கருத்துக்களை தொகுத்தமைக்கு. பெரியார் தமிழ் என்கிற இதைவிடப் பெரிய தவளைக் கூச்சல்களை எல்லாம் ஒற்றை ஆளாய் நின்று எதிர்த்து சமாளித்தவர். எல்லாப் புணிதங்களையும் அது மொழியாகட்டும் அல்லது அண்ணன், அம்மா, தந்தை என்கிற பந்தங்களாகட்டும் அல்லது ஆண்டான் என்கிற சமுக நிலையாகட்டும் எல்லாவற்றையும் பெரியார் தலைகீழாகப் போட்டுடைத்தார். பெரியார் கன்னடியர்களுக்காக பெரும் சேவையோ அல்லது மேற்கண்ட விவாதத்தைப்போல மறைமுக பற்றுதல்களையோ காட்டிவிடவில்லை.
இறுதியாக, பெரியாரை தமிழ்விரோதியாக காட்டலாம் அது ஒன்றும் தேசத்துரோகச் செயல் அல்ல. அத்தைகய துரோகிகள்தான் இன்று சகல சம்பத்துக்களுடன் பரிவாரம் சூள அனைத்து துறைகளிலும் கோலோச்சிக் கொண்டு இருக்கிறார்கள். பெரியார் தமிழினத்திற்கு எதிராக திராவிட இனக் கருத்தாக்கத்தை கொண்டு வந்ததாக கூறுவது ஒரு வரலாற்றுத்தவறு. தமிழ்நாடு என்பது பெரியார் காலத்தில் இல்லை. அன்று இருந்த மெடராஸ் பிரசிடன்ஸி என்பது இன்றைய நான்கு திராவிட மாநிலங்களை உள்ளடக்கியதுதான். மலையாளத்தில் நிகழ்ந்த இழிநிலைக்கும் அவர் குரல் கொடுத்தவர் என்பது அரைபிளேடிற்கு மறந்திருக்காது. மீண்டும் கூறியதுகூறல் என்றாலும் பெரியார் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு அதில் விமர்சனங்கள் உண்டு அது சேற்றை வாரி இறைப்பதாக இருக்க்ககூடாது.
- அன்புடன்
ஜமாலன்.

24 comments:

பெயரில்லா சொன்னது…

ஜமாலன் திறம்படச் சொல்லியிருக்கின்றீர்கள். அரை பிளேடின் பதிவு தன் தேவைக்காகப் பெரியாரின் தமிழைப் பயன்படுத்தியுள்ளது. அவ்வளவுதான். தமிழுக்குப் பதிலாகவும் பெரியாருக்கு மாற்றாகவும் அரை பிளேடுக்கு உவப்பானவற்றினைப் போட்டு ஒரு பதிவு இடுங்கள். அரைபிளேடுகளின் உணர்வுக்கூர்மையை அறிவீர்கள்.

பெயரில்லா சொன்னது…

பெரியாரை தலைவன் என்று கூறிக்கொள்வதும், பக்தன் எனக் கூறிக்கொள்வதும் கூட மூட நம்பிக்கைதான். இதையும் அவரே சொல்லி இருக்கின்றார். பதிவுலகை பொறுத்தவரையில் கடவுளை ஆராதிப்பவர்கள் எல்லாம் "நல்ல" வார்த்தையார் பெரியார் பக்தர்களால் அர்ச்சிக்கப்படுவார்கள். இந்த பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட மறுத்தாலும் என் நிலைப்பாடு இதுவே.

சுரேஸ்,
சென்னை.

அரை பிளேடு சொன்னது…

அன்புள்ள ஜமாலன்...

தங்கள் பதிவுக்கும் ஆராக்கியமான விவாதத்திற்கும் நன்றி.

///அவரை தமிழ் விரோதி என்று சொல்வது அதுவும் அவரது பக்தனாகவும் அவரது கொள்கைப் பற்றாளனாகவும் காட்டிக் கொண்டு கொஞ்சம் விஷமத்தனமானதுதான்///

இந்த நூற்றாண்டில் தமிழகம் கண்ட, தமிழனின் வரலாற்றையே திருப்பி போட்ட தலைவர் பெரியார் என்பதிலும் அதற்காக நன்றிக்கடன் பட்ட தமிழர்களின் நான் ஒருவன் என்பதும் எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன். மேலும் பெரியாரின் மற்ற கொள்கைகளோடு ஒப்பும் என்னால் தமிழனாக பெரியாரின் தமிழ் எதிர்க்கருத்துக்களை ஒப்ப முடியாது என்பதையே பதிவு செய்திருக்கிறேன்.

மொழி அபிமானம் என்பது எவ்வண்ணம் பகுத்தறிவிற்கு புறம்பானதாக இருக்க முடியும்.

//இத்தமிழ் கருத்துருவம் ஆங்கிலேய காலணீய காலத்தில் தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கங்கள்மூலமாக கட்டப்பட்டது. இக்கட்டமைப்பு இனவாததனமையுடன்தான் கட்டப்பட்டது.//

ஆங்கிலேயனுக்கு தனித்தமிழை கட்டமைப்பதால் என்ன லாபம் ஐயா :).
தமிழ் என்று சொல்வது இனவாதம் எனில் திராவிடன் என்று சொல்வது இனவாதம் இல்லையா ? சமூக அவலங்கள் கலைவதற்காக பெரியார் திராவிடம் என்பதை ஆரியத்திற்கு மாற்றாக நிறுவினார். ஒரு இனமோ மொழியோ தன் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் போது தன் அடையாளங்களை இழந்து எவ்வாறு குரல் கொடுக்க முடியும்.

பெரியாரின் பிறகொள்கைகளை மேற்கொண்ட திராவிட கழகத்தார் தமிழ் குறித்த அவரது கொள்கைகளை பெருமளவு ஏற்கவில்லை.

அண்ணாவால் முன்னெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தமிழை பெருமளவு முன்னிறுத்தியது.

கண்ணகிக்கு தமிழின் அடையாளமாய் சிலை வைத்தது. கலைஞர் அவர்கள் குறளோவியமும், தொல்காப்பியப் பூங்காவும் தீட்டி திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் அழகு பார்த்தார்.

மொழியின் மீது பற்று என்பது பாசிசத்தன்மையன்று. பாசத்தன்மையே என்பதை உணருங்கள்.

"பெரியார் தமிழின துரோகியா ?" என்பது தங்கள் தலைப்பெனில் கண்டனங்கள்... தமிழினத்திற்கு பெருந்தொண்டாற்றிய பெரியார் சிறிதளவிலேயே தமிழ் விரோதத்தை கடைப்பிடித்தார் என்பதும்.. (அவரது மொத்ததமிழ் விரோத கருத்தும் என்பதிவிலேயே அடங்கிவிட்டது என்று கருதுகிறேன்) பின் நாளில் தாமே அதிலிருந்து பெரிதும் மாறுபட்டு தமிழ் எழுத்துருக்களுக்காக பாடுபட்டார் என்பதும் வரலாறு.

பெரியாரின் கருத்துருவாக்கங்கள் மெல்ல மெல் உருப்பெற்று தகவமைந்தவையே. தமிழ் சார்ந்த அவரது சிந்தைகள் பிற்காலத்தில் மாறியமைந்தது என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல் அவரது சித்தாந்தங்களை காலத்திற்கேற்றாற் போல் தகவமைத்து ஏற்பதே சரியானதாக இருக்கும்.
பெரியாரின் தமிழ்விரோதக் கருத்துக்களை அவை வெளியான காலகட்டத்தோடு பொருத்தி பார்த்தே நீக்கி விட வேண்டியிருக்கின்றது என்பதை தொடர்விவாதங்களினாலும் தொடர்வாசிப்பாலும் அறிகிறேன்.

மற்று எனக்கு தமிழ்ப்பற்றுதான் இருக்கிறதேயன்றி தமிழ் வழிபாட்டு மனோநிலையன்று. தாங்களுடையது எவ்வாறு பெரியார் வழிபாட்டு மனோநிலையன்றி பற்று மட்டுமோ அதே போல்தான் என் தமிழ்ப்பற்றும்.


"எல்லாவற்றையும் சந்தேகி - கார்ல் மார்க்ஸ்" தங்கள் பதிவிலுள்ள நல்ல வரிகள். அதைத்தான் நான் செய்தேன்.


எனது பதிவின் நோக்கம் பெரியார் உணர்வாளர்களிடம் தவறான தமிழ் விரோதப்போக்கு வேண்டாம் என்று முன்னெடுத்துச்செல்லவே.


தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

அன்புடன் அரைபிளேடு.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜமாலன்,

நீங்கள் நெடிய விளக்கத்துடன் எழுதீ இருப்பதை நான் கவனிக்கவில்லை. என்பங்குக்கு நானும் தந்தைப் பெரியார் தமிழ் விரோதியா ? வேறு சில ஆய்வுகளுடன் எழுதிவிட்டேன்.

:)))

ஜமாலன் சொன்னது…

நன்றி பின்னொட்டத்திற்கு

சுரேஸ் அணாணி மற்றும் மொக்கை அரை பிளேடுகள் கோவி. கண்ணன் ஆகியொருக்கு

ஜமாலன் சொன்னது…

நண்பர் அரைபிளேடிற்கு,

1. மொழி அபிமானம் வேறு மொழி வெறி வேறு. அண்ணாவும் தி.மு.க.-வும் தங்களை தமிழ் கருத்துருவத்துடன் அடையாளப்படுத்திக் கொண்டதும்கூட பெரியாரின் தழிழ் குறித்த விமர்சனத்திற்கு ஒரு காரணம் எனலாம். பெரியார் தமிழ் கருத்துருவத்துடன் அடையாளப்படுபவர்கள் எதை அறுவடை செய்யப் போகிறார்கள் என்பதை உணர்ந்தே இருந்தார். தமிழனின் தமிழ் பற்று எம.ஜி.ஆரிலும் ஜெயலலிதாவிலும் ரஜனியிலும் போய் முடிந்திருப்பது எதனால் என்பதை யோசித்தால் பெரியார் தமிழை எதிர்த்த பிண்ணனி புரியும். விழிப்புணர்ச்சியற்ற தமிழ் பற்றின்விளைவே இது.

2. தமிழ் கருத்துருவத்தை ஆங்கிலேயர் நேரடியாக கட்டவில்லை. எனது பதிவில் அதற்குள் ஆழமாக போகவில்லை. தனித்தமிழ் இயக்கம் என்றுதான் கூறியுள்ளேன். அதன் அரசியலுக்குள் நுழைவது மற்றொரு விவாதமாகிவிடும். மொழியும் நாடும் இணைவது எப்படி? தேசம் என்றால் என்ன? தேசியம் என்கிற கருத்துருவம் எப்படி உருவாக்கப்பட்டது? அதில் ஆங்கிலேய காலணீய ஆய்வாளர்களின் பங்கு என்ன? பெரியாரின் காலணீயச் சார்புநிலையின் அரசியல் என்ன? என்பதெலல்லாம் தமிழ்தேசியக்கட்டுமானம் குறித்த பின்காலணீய ஆய்வுடன் தொடர்புடையது. அதனை பின்னோட்ம் கருதி இங்கு விடுவோம்.
3. திராவிடம் என்கிற கருத்தாக்கம் ஆரியத்திற்கு மாற்றாக பெரியாரால் முன்வைக்கப்படவில்லை. அதை முன்வைத்தவர் கால்டுவெல் என்கிற ஆங்கிலேய தமிழ் அறிஞர். ஆரிய உயர்தன்மையையும் சமஸ்கிருத மேலாண்மையும் குறித்த கருத்தாக்கங்கள் எந்த பிராமணரும் ஆய்வின் அடிப்படையில் இங்கு முன்வைக்கவில்லை. அதை முன்வைத்தவர் ஜெர்மானிய கீழைத்தேய அறிஞரான மாக்ஸ்முல்லர் தான். இதனுள்ளும் ஒரு காலணீய மேலண்மை அரசியல் உள்ளது.

வண்ணநிலவனின் ஒரு கவிதை வரி "எல்லாம விலை குறித்தனவே" அதை மாற்றி "எல்லாம் அரசியல் குறித்தனவே" என்பதே நமது நிலைபாடு.

டைல்பீஸ்... நண்பருக்கு தங்களின் தமிழ்பற்றையோ எல்லாவற்றையும் சந்தேகிப்பதையோ நான் குறைத்து மதிப்பிடவோ குறை சொல்லவோ இல்லை. எல்லாவற்றிற்குள்ளும் ஒரு அரசியல் இருக்கிறது. தங்களது நிலைபாடுகள் தங்களுக்கு எதிரான அரசியலுக்கு பல்லுக்கு தூக்கிவிடும் அபாயத்தையே முன் எச்சரிக்கையாக வைக்கிறேன். ஏலவே உங்கள் பின்னோட்டங்களை வாசித்தால் பரியம் யார் யார் பல்லக்க தூக்கியுள்ளனர் என்று. மேலும் விரிவாக விவாதிப்பதற்கு நாம் எல்லோருமே நம்மை தயார்படுத்திக் கொள்வோம். "ததாஸ்து"

RATHNESH சொன்னது…

நூறு சதவீதம் தங்களுடைய //பெரியார் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு அதில் விமர்சனங்கள் உண்டு அது சேற்றை வாரி இறைப்பதாக இருக்க்ககூடாது// வாக்கியங்களுக்கு ஒப்புதல் மரியாதையுடன், தெளிவு வேண்டி நான் தங்களிடம் கேட்க விழைவன:
1.//பெரியார் கூற்றுகள் காலம்-இடம் சார்ந்தவை// திருக்குறளின் சில பகுதிகள் (காலம் இடம் சார்ந்ததாக அவை இருந்திருக்கலாம்) இன்றைய கால சிந்தனைக்கு ஒத்து வரவில்லை என்பதற்காக மொத்தத் திருக்குறளையும் பெரியார் ஒதுக்கச் சொன்னதை நியாயப் படுத்துகிறீர்களே, அதே அளவுகோல் பெரியாருக்கும் பொருந்தி வராதா? பெரியார் கூற்றுகள் காலம்-இடம் சார்ந்தவை என்றால் பிறகு ஏன் அவருடைய கருத்துக்களைக் காலம் கடந்தும் பிடித்துத் தொங்க வேண்டும்? தமிழ் குறித்த பெரியாரின் கருத்துக்கள் அனைத்தும் விலக்கப்பட வேண்டியவையே என்று ஒப்புக் கொள்கிறீர்களா? கலகக்காரராக அடையாளம் நிலைப்பதற்காகவே அவர் முரணான பல விஷயங்களைக் கையாண்டிருப்பதாகத் தோன்றுகிறது. தமிழ் மொழி பற்றிய அவருடைய கருத்துக்கள் அப்படிப்பட்ட இனத்தைச் சேர்ந்தவை தானோ? ஏனென்றால் தமிழைத் தாக்கி இவ்வளவு பேசியவர் எழுதியவர் தமிழை சிலாகித்து எங்காவது (பிற்காலத்திலுமே) பேசியதாகவோ எழுதியதாகவோ தெரியவில்லையே.

2. மதம் சம்பந்தமான பெரியாரின் கொள்கைகளும் அவர் மேற்கொண்ட தடாலடி நடவடிக்கைகளும் ஏன் இந்து மதம் சார்ந்ததாக மட்டுமே இருந்தன? மற்ற மதங்களில் கண்டனத்துக்குரிய பகுத்தறிவுக்கு ஒப்பாத விஷயங்களே இல்லையா?

3. //தனது கொள்கைகளே வழிபாட்டுக்குரியதாக மாறிவிடாதிருப்பதில் எச்சரிக்கையாக இருந்தார். சுயமரியாதை என்பதை ஒரு வாழ்வணுபவமாக மாற்ற முயன்றார். நமது உணர்வின் உடலின் ஒரு கூறாக அது மாற வேண்டும் என்பதுதான் பெரியாரின் கொள்கையாக நடைமுறையாக இருந்தது// இது அவருடைய மற்ற கொள்கைகளுக்கும் பொருந்தாதா? அவருடைய இரண்டாவது திருமணம் பெண்ணியத்துக்குப் பெருமை சேர்த்த விஷயம் தானா?

இறுதியாக, 4.விளக்கு மூளியாக இருக்கிறதே என்று கத்திக் கொண்டிருந்தவனிடம் இருந்து விலகி அவனுடைய தீக்குச்சியையே வாங்கி (நான் தீக்குச்சி என்று சொல்வது மக்கள் ஆதரவு), விளக்கினை ஏற்றி (ஆட்சிப் பொறுப்பு) கொஞ்சம் வெளிச்சமும் கொண்டு வந்தவர்களையா (பெண்களுக்கு சொத்துரிமை, அரிஜனங்களும் அர்ச்சகர், சுயமரியாதைத் திருமணச் சட்டம்) // "பெரியாரை தமிழ்விரோதியாக காட்டலாம் அது ஒன்றும் தேசத்துரோகச் செயல் அல்ல. அத்தைகய துரோகிகள்தான் இன்று சகல சம்பத்துக்களுடன் பரிவாரம் சூள அனைத்து துறைகளிலும் கோலோச்சிக் கொண்டு இருக்கிறார்கள்"// என்று குறிப்பிடுகிறீர்கள்?

RATHNESH

ஜமாலன் சொன்னது…

நண்பர் அரைபிளேடிற்கு

//"பெரியார் தமிழின துரோகியா ?" என்பது தங்கள் தலைப்பெனில் கண்டனங்கள்..//

எதற்கு கண்டனம் என்ற புரியவில்லை? விரோதி என்று துவங்கி.. திராவிடக் கருத்தை முன்வைத்து தமிழுக்கு அவர் துரோகம் செய்துவிட்டதான தொணிப்பு தங்கள் பதிவி்ல் இருந்ததே இத்தலைப்பிடக் காரணம்.

ஜமாலன் சொன்னது…

மொட்டை பிளேடிற்கு
//தமிழுக்குப் பதிலாகவும் பெரியாருக்கு மாற்றாகவும் அரை பிளேடுக்கு உவப்பானவற்றினைப் போட்டு ஒரு பதிவு இடுங்கள். அரைபிளேடுகளின் //

அப்படி ஒரு பதிவை தாங்கள் இடுவததானே? இது என்ன கல்லெறிதலா? பழமா? கல்லா? என்ற பார்க்கலாம் என்று.. சாணைப்பிடித்தால்தான் சரிவரும் போலிருக்கிறது..

முத்துகுமரன் சொன்னது…

//பெரியார் தமிழ் என்கிற இதைவிடப் பெரிய தவளைக் கூச்சல்களை எல்லாம் ஒற்றை ஆளாய் நின்று எதிர்த்து சமாளித்தவர். எல்லாப் புணிதங்களையும் அது மொழியாகட்டும் அல்லது அண்ணன், அம்மா, தந்தை என்கிற பந்தங்களாகட்டும் அல்லது ஆண்டான் என்கிற சமுக நிலையாகட்டும் எல்லாவற்றையும் பெரியார் தலைகீழாகப் போட்டுடைத்தார்.//

மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் ஜமாலன். பெரியாரைப் பற்றிய விவாதங்களை, அவை அவதூறுகளாயினும் வரவேற்கத்தக்கவையே. அந்த அவதூறுகளே உண்மைகளை சொல்லுவதற்கு வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறது.அதன் மூலம் பெரியார் இன்னும் பலரை சென்றடைகிறாரரென்பதும் அவரின் கருத்துகள் மக்களிடையே சென்று சேர்வதற்கு வாய்ப்பாக அமைவதாலும் இது போன்ற அவதூறுகளும் நன்மைக்கே.

பெரியாரை அவர் எழுத்தைக் கொண்டே மடக்குவதாக எண்ணுபவர்களுக்கு எப்போதும் வெற்றி கிடைப்பதில்லை. மறைபொருளாக வைத்து கொண்டு யாரையும் அவர் ஏமாற்றவில்லை. தன் கருத்துகளை தெளிவுபட சொல்லியே சென்றிருக்கிறார்.

ஒரு படைப்பின் கலைநயத்தை மட்டும் காணாமல், அதன் அரசியலையும் நுணிக்கமாகப் பார்த்தவர் பெரியார். அழகாக இருக்கிறது என்பதற்காக நஞ்சு கலந்த வெண்மையான பாலை எவரும் அருந்துவார்களா?? அதுபோலத்தான் பெரியாரின் விமர்சனமும். பாலைக் குறை சொல்லவில்ல. அதில் கலந்துவுட்ட நஞ்சையே அவர் கடுமையாக எதிர்க்கிறார். புரிந்தவர் பேசுவதில்லை. புரியாதவன் புலம்புவதை நிறுத்துவதும் இல்லை


விரிவான,ஆழமான கருத்துசெறிவு மிகுந்த பதிவைத் தந்தமைக்கு நன்றி திரு ஜமாலன்

ஜமாலன் சொன்னது…

சுரேஸ் என்கிற அணாணிக்கு.

//பதிவுலகை பொறுத்தவரையில் கடவுளை ஆராதிப்பவர்கள் எல்லாம் "நல்ல" வார்த்தையார் பெரியார் பக்தர்களால் அர்ச்சிக்கப்படுவார்கள்.//

மிகவும் வருத்தப்பட்டு எழுதியிருக்கிறீர்கள். அர்ச்சிப்பவர்களை விடுங்கள் நமக்கு தேவை ஆரோக்கியமான கருத்தாடல்தான். கடவுளை ஆராதிப்பது தனிமனித உரிமை அதில் தலையிட மற்றவர்க்கு உரிமையில்லை என்பதுதான் நமது நிலைபாடு. தனது கருத்தை வைக்கவோ அல்லது மாற்றுக் கருத்தால் எரிச்சலடைவதோதான் இந்தவகை அர்ச்சனைக்கு காரணம். சுயவிமர்சனம் என்பதே எழுத்துலக்கதின் அடிப்படை அறம் என்பதே எனது கொள்கை. நன்றி விவாதத்தில் கலந்து கொண்டமைக்கு.

ஜமாலன் சொன்னது…

rathnesh க்கு...

தங்களது நீண்ட தெளிவறிய விரும்பி இடப்பட்ட பின்னோட்டத்திற்கு முதலில் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

1. கால-இடம் சார்ந்தவை என்பதன் பொருள் சார்பியலானது என்பதுதான். சான்றாக "கம்பி நீட்டுதல்" என்று ஒரு இரும்பு பட்டறையில் கூறுவதற்கும் போது இடங்களில் கூறுவதற்கும் உள்ள வேறுபாடுதான் கால இடம் சார்ந்தது என்பது. பெரியாரின் கருத்துக்கள் திருவள்ளுவரின் கருத்துக்கள் ஏன் உங்களின் கருத்துக்கள்கூட காலம் இடம் சார்ந்தவைதான். இந்த இடத்தில் தமிழுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள், உங்கள் மற்றொரு பதிவில் தமிழ் பற்றியும் அதன் உணர்வு பற்றியும் அங்கலாய்த்துள்ளீர்கள். இதுதான் கால-இடம் சார்ந்தது என்பது. பெரியார் திருவள்ளுவரை முற்றிலுமாக ஒதுக்கியவரில்லை. தவிரவும் அதிர்ச்சி மதிப்பிற்காக அல்லது அவர் தனது கலகத்தன்மை வெளிப்பாட்டிற்காக அதை கூறியிருந்தாலும் கலகம் என்பது அப்படித்தான். அதில் தர்க்கம் இருக்காது. நீ எதை உயர்த்துகிறாயோ அதை நான் தாழ்த்துவேன். அது எனது பாசத்திற்கும் நேசத்திற்கு உரியது என்றாலும். முடிவு கலகத்தின் விளைவு என்ன என்பதுதான். பெரியார் தமிழ் மீது வைத்த கருத்துகள் கலகத்தன்மையுடன் வெளிப்பட்டதால் தமிழ் என்கிற பெயரால் பாசிச சக்திகள் வளர்வதை அது தடை செய்தது. வெகுசன ஜனநாயக அரசியலுக்கு தமிழை கீழிறக்கியது. விவாதத்தை முழுமையாக படியுங்கள். பெரியாரி்ன் தமிழ் தொண்டுகள் பற்றி தமிழன் என்கிற ஒரு பதிவாளர் அரைபிளேடிற்கு பின்னோட்டமி்ட்டுள்ளார். ஒரு சின்ன சாம்பிள்... திறக்குறளுக்கு மாநாடு நடத்தியவர் பெரியார். பெரியாரை பிடித்து யாரும் தொங்குவதில்லை அவரது எதிரிகளாக தங்களைக் கருதிக் கொண்டவர்களைத்தவிர.

2. //மதம் சம்பந்தமான பெரியாரின் கொள்கைகளும் அவர் மேற்கொண்ட தடாலடி நடவடிக்கைகளும் ஏன் இந்து மதம் சார்ந்ததாக மட்டுமே இருந்தன? மற்ற மதங்களில் கண்டனத்துக்குரிய பகுத்தறிவுக்கு ஒப்பாத விஷயங்களே இல்லையா?//

இக்கேள்விக்கு பெரியாரே பதில் கூறியுள்ளார். பெரியரை முழுமையாக படியுங்கள். தவிரவும் நடைபெறும் விவாதத்துடன் இது தொடர்பற்ற கருத்து. இருப்பினும் தெளிவறிய தந்தேன் ஒரு குறிப்பு. மதங்கள் எல்லாமே பகுத்தறிவற்றவைதான். இந்துமதம் பெரும்பாண்மை மக்களால் பின்பற்றப்படுவது ஒரு காரணம். பெரியார் இந்துக் குடும்பத்தில் பிறந்து இந்து அடையாளமிட்டிருப்பது மற்றொரு காரணம். அவர் மற்ற மதங்களைப்பற்றி பேசினால் முதலில் அவர் மதத்தைப்பற்றி அவர் பேசட்டும் என்று இதே ரத்ணேஷ் (உச்ரிப்பு சரியா? நண்பரே)கூட வீரவேசமாக மறுப்புக் கூறலாம் என்பதாலும் இருக்கும். முதலில் மதம் பற்றி கடவுள் அல்லது சாதி மொழி இனம் என எதை விமர்சிப்பதாக இருந்தாலும் முதலில் தனது அடையாளத்தை துறப்பதுதான் அடிப்படை அறம்.பெரியர் இந்த அறத்தை பின்பற்றினார். ஏனென்றால் தனது வாழ்வையே ஒரு கலகமாக்கிக் கொண்ட ஒரு கலகக்காரர் அவர்.

3. //அவருடைய இரண்டாவது திருமணம் பெண்ணியத்துக்குப் பெருமை சேர்த்த விஷயம் தானா?//

ஆகோ வாரும் பிள்ளாய் விமர்சகா?? நானும் என்னமோ நினச்சேன் சும்மா மடக்கிப்புட்டீரே.. பேஷ் பேஷ். இரண்டாவது திருமணம் பெண்ணியத்திற்கு எதிரானது என்று தாங்கள் எந்த பள்ளியில் பயின்றீர்களோ அடியேன் அறியேன். பெண்ணியத்திற்கும் திருமணத்திற்கும் என்ன உறவு என்றே தெரியவில்லை. திருமணத்தை ஒரு அடக்குமுறை எந்திரமாக பார்ப்பதே பெண்ணியம். பெரியார் இதனை பெண் பற்றிய தனது கருத்துக்களில் தெளிவாகவே சொல்லியுள்ளார். போகட்டும். தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம். இரண்டாவது திருமணம் என்பது ஒரு தனிநபரின் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனை. அதற்காக கவலைப்பட வேண்டியவர் மணியம்மையும் பெரியாரும்தான். ரத்ணேஷோ நானோ அல்ல.வாழ்க்கை துணைநலம் என்கிற வள்ளுவ அறம் கூறும் துணைநலம்தான் மணியம்மை-பெரியாரின் திருமணம். இதில் உடல் இட்சை என்பது இரண்டாம் பட்சம்தான். (நல்லவேளை வயாகரா அப்பொழுது இல்லை. அதையும் பெரியாரிடம் தேடி ஓரு கூட்டம் இன்றுவரை அதே வேளையாக அலைந்து கொண்டிருக்கும்) ஒருவர் எத்தனை திருமணம் செய்து கொள்வது எத்தனை பெண்ணுடன் உறவு கொள்வது எத்தனை முறை மலஜலம் கழிப்பது என்பதெல்லாம் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனை. அதற்கெல்லாம் ஜமுக்காளம் விரிக்காமல் தண்ணி சொம்பு இல்லாமல் ஆலமரத்தடியில் அமர்ந்து எல்லா மதங்களும் பஞ்சாயத்து பன்னனுவதால்தான் பெரியார் அதனை எதிர்த்தார். மதங்களின் அதிகப்பட்ச பணியே இத்தகைய "விளக்குப்பிடி" வேளைகள்தான். அதாவது கண்காணிப்பு எந்திரமாக செயல்படுவதுதான் என்பதை பாமரத் தமிழில் சொன்னேன். நிற்க.

4. //இறுதியாக, 4.விளக்கு மூளியாக இருக்கிறதே என்று கத்திக் கொண்டிருந்தவனிடம் இருந்து விலகி அவனுடைய தீக்குச்சியையே வாங்கி (நான் தீக்குச்சி என்று சொல்வது மக்கள் ஆதரவு), விளக்கினை ஏற்றி (ஆட்சிப் பொறுப்பு) கொஞ்சம் வெளிச்சமும் கொண்டு வந்தவர்களையா (பெண்களுக்கு சொத்துரிமை, அரிஜனங்களும் அர்ச்சகர், சுயமரியாதைத் திருமணச் சட்டம்) // "பெரியாரை தமிழ்விரோதியாக காட்டலாம் அது ஒன்றும் தேசத்துரோகச் செயல் அல்ல. அத்தைகய துரோகிகள்தான் இன்று சகல சம்பத்துக்களுடன் பரிவாரம் சூள அனைத்து துறைகளிலும் கோலோச்சிக் கொண்டு இருக்கிறார்கள்"// என்று குறிப்பிடுகிறீர்கள்?//

சரியான புள்ளிக்கு வந்துவிட்டீர்கள். உங்களுக்கு நான் என்ன கூறவருகிறேன் என்பது நன்றாக புரிந்துவிட்டது. சும்மா (மெட்ராஸ் பாஸையில) "அப்பா-டக்கர்" வேலதான இது. இந்த வரிகள் ஏற்படுத்திய உணர்வுந்தம்தான் மேற்கண்ட உங்களது அறிதலுக்கான குறிப்பு என்பதை புரிந்துகொள்ளாத அஷமஞ்சமா? நான். மகிழ்ச்சிதான்.

பரவாயில்லை //பெண்களுக்கு சொத்துரிமை, அரிஜனங்களும் அர்ச்சகர், சுயமரியாதைத் திருமணச் சட்டம்// இவற்றை திராவிடக் கட்சிகளின் சிறிய வெளிச்சம் என்று பெரிய மனதுபண்ணி ஒத்துக் கொண்டுள்ளீர்கள். நன்றி.

ஹாஷ்யம் சுவராஷ்யம் (வடமொழயில் நான் கொஞ்சம் வீக்) என்பதால் இம்மறுப்பு இப்படியாக இருக்கிறது. மற்றபடி யாரையும் புண்படுத்தவோ அல்லது பண்படுத்தவோ இது எழுதப்படவில்லை. அதெல்லாம் பூங்காக்களில் புல் கொத்தும் பணியாளருக்கும் ரொட்டிக்கடையில் பண் மேக்கருக்கும்தான் வரும்.

நன்றி
அன்புடன்
ஜமாலன்.

ஜமாலன் சொன்னது…

//ஒருவர் எத்தனை திருமணம் செய்து கொள்வது எத்தனை பெண்ணுடன் உறவு கொள்வது எத்தனை முறை மலஜலம் கழிப்பது என்பதெல்லாம் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனை. அதற்கெல்லாம் ஜமுக்காளம்//

இவ்வாசகத்தில் எத்தனை பெண்ணுடன் என்பதுடன் எத்தனை ஆணுடனும் என்பதையும் சேர்த்துக் கொள்ளவும். அதற்காக ஒருமுறை மல்லுகட்டமுடியாது.

RATHNESH சொன்னது…

தாங்கள் அளித்துள்ள விளக்கங்களுக்கு நன்றி. நான் எந்த இடத்திலும் தமிழுக்கு வக்காலத்து வாங்கவில்லை; பெரியாரிடம் முரண் இருப்பதாக எனக்குத் தோன்றிய இடங்களைச் சுட்டிக் காட்டி விளக்கம் கேட்டேன். அதனால் தான் தமிழ் குறித்த கருத்து மட்டுமின்றி, அவருடைய ஒவ்வாத வயதுத் திருமணத்தில் இருக்கும் முரண் குறித்தும் (அதற்கான தங்கள் பதிலில் உள்ள வார்த்தைகளைத் தாங்களே இன்னொரு முறை படித்துப் பார்த்து தனி மனித ஒழுக்கம் சமூக ஒப்புதலுக்கு அப்பாற்பட்டதென்று சொல்ல வருகிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்), குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சாடுகின்ற முரண் குறித்தும் (அது பற்றிய தங்கள் விளக்கம் பாசாங்காக இருக்கிறது; தன்னுடைய மதத்தைச் சரி செய்யக் கிளம்பியவர் அது முடியும் வரை மற்ற மதத்தைப் பற்றி வாயே திறக்க மாட்டேன் என்று இருந்தது முரணே என்பது என் எண்ணம். அது மாறும் வகையிலான விளக்கம் தங்களிடமிருந்து வரவில்லை) கூடக் கேட்டேன். என்னுடைய கேள்விகளில் இருந்தது அறிந்து கொள்ளும் நோக்கம் மட்டுமே. தங்கள் கற்பனைகளைத் தவிர்த்திருந்தால் தங்களுக்கு இருக்கும் பெரியார் குறித்த ஆழ்ந்த படிப்பறிவுக்கு இன்னும் சரியான பதில்களைச் சொல்லி இருக்கலாம். ஆன்மீகம் குறித்த என்னுடைய சில நேர்மையான கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் என்னை பெரியார் ஆளென்று முத்திரை குத்தி ஒதுக்கிய சில பிரசங்கிகளின் சாயலை தங்களுடைய பதிலிலும் காண முடிந்தது. நன்றி.

வரவனையான் சொன்னது…

//உரிமைகள் பறிக்கப்படும்போது தமிழினத்திற்காக குரல் கொடுப்பவன் அதுவே ஆதிக்கமாக மாறும்போது அதனை எதிர்ப்பதற்கும் தனது தன்னிலையை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இம்மனநிலையே பெரியார் தனது தொண்டர்களுக்கு வளர்க்க விரும்பிய மனநிலை.//

அற்புதம் ஜாமலன் அய்யாவை ஆகச்சரியாய் புரிந்துகொண்டுள்ளீகள். சரியான விளக்கம். சம்மந்தபட்டவர்களுக்கு மட்டுமல்ல இது. தொடருங்கள்.

ஜமாலன் சொன்னது…

ரத்ணேஷ் அவர்களக்கு..

பெரியாரின் திருமணத்தில் முரண் இருப்பதாக பார்ப்பது என்பது அவரது நிலைபாடு சார்ந்த பார்வை. தனிமனித ஒழுக்கம் என்பதை ஒரு சமூகம் அறுதியிட வேண்டுமென்றால் அச்சமூகம் ஏற்றத்தாழ்வற்ற, பேதமற்ற, பாகுபாடற்ற ஒரு சமூகமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத ஒரு சமூகம் நிர்ணயித்திருக்கும் ஒழுக்கவிதிகள் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான ஒடுக்குமுறையாகத்தான் இருக்கும். சமூக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்பவர்கள் தனிமனித ஒழக்கத்தை சமூக ஒப்பந்தத்திற்கு ஏற்ப பேண வேண்டியது அவசியம். ஆணால் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரக்கூடியவர்கள் அல்லது முன்னொடிகள் ஒத்துவராத ஒழுக்க விதிகளை மீறுதல் என்பது அவர்களது கொள்கை மற்றும் நடைமுறைச் சார்ந்த பிரச்சனை. ராமாணுஜரின் கோவில் நுழைவுப் போராட்டடம்கூட சமூக ஒப்பந்தத்தை மீறும் செயல்தான். இந்து மதத்தின் தாந்ரீகம் என்கிற பிரிவு சமூக நடைமுறைகளுக்கு எதிராக பல நடைமுறைகளை செயல்படத்திப் பார்த்தார்கள். அவற்றின் தர்க்கரீதியான பொறுத்தங்கள சமூமூக அவசியங்களை பார்க்க வேண்டும். கண்மூடித்தனமாக அவற்றை விமர்சிக்க முடியுமா? இப்படியாக இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. ஆக, ஒழுக்க விதிகளை மீறுவதுதான் பெரியாரின் நோக்கம் இதனை சரியாகவே நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

அடுத்து பிறமதம் குறித்து பெரியார் விமர்சிக்காதது பற்றிய எனது விளக்கத்தில் நீங்கள் சுட்டிக்காட்டிய தொனி இருக்கிறது. பெரியார் மற்ற மதங்களை விமர்சிக்கவில்லை என்பதால் பிற மதங்களை ஏற்றுக் கொண்டுவிட்டார் என்பது அர்த்தமில்லை என்பதுடன் பிறமதவாதிகளும் அதற்காக பெரியாரை ஏற்றுக் கொள்வதும் இல்லை. பெரியார் மதம் கடவுள் குறித்து தனது கருத்துக்களை பொதுவாகத்தான் அதாவதத எந்த மதச்சார்புமின்றி முன் வைத்துள்ளார். அதுவே எல்லா மதங்களுக்கும் பொறுந்தும். இந்துமதம் குறித்த அவர் மேலதிகமாக பேசியது அதன் உடனடி விளைவு மற்றும் கேட்பவருக்கு புரிவது என்பதையும் உள்ளடக்கியது. இஸ்லாமியர்களின் குரான்மீதான நம்பிக்கை என்பதும் வேதங்களின் மீதான இந்துக்களின் நம்பிக்கை என்பதும் அடிப்படையில் ஒன்றுதான். இரண்டுமே ஆராய்ச்சி அறிவுக்க அப்பாற்பட்டவை என்பதுதான் அவரது நிலைப்பாடு. அதற்காக பெரியார் தனியாக ஒவ்வொருமதம் குறித்தும் கடவுள்கள் குறித்தும் விளக்கிக் கொண்டிருக்க வெண்டியதில்லை.

//தங்கள் கற்பனைகளைத் தவிர்த்திருந்தால் தங்களுக்கு இருக்கும் பெரியார் குறித்த ஆழ்ந்த படிப்பறிவுக்கு இன்னும் சரியான பதில்களைச் சொல்லி இருக்கலாம்.//

எனக்கு கற்பனைகள் எதுவும் இல்லை. விவாதம் என்பது வறச்சியாக இல்லாமல் இருப்பதற்காக எழுதப்பட்டவையே அவை. உங்களை வருத்தப்படுத்தியருந்தால் அதற்காக வருந்துகிறேன். தவிரவும் நான் பெரியார் குறித்த ஆழ்ந்த வாசிப்பாளனோ பெரியாரை கரைத்தக் குடித்தவனோ அல்ல. விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என் அறிவு எல்லைக்கு உட்பட்டவை என்கிற ரீதியில் எழதப்பட்டவைதான் அவை.

தங்களை விலக்கும் முகமாக எதையும் எழுதும் எண்ணம் எனக்கு இல்லை. எல்லாவற்றிற்குமான இருப்பின் நியாயங்களையும் அதற்கான தர்கங்களையும் புரிந்தகொள்ள முயல்கிறேன் அவ்வளவே. எதைப்பற்றியும் மதிப்பிடுவதும் அதற்காக நீதியளிப்பதும் எனக்கு உடன்பாடானதல்ல என்பதை இங்கு தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அறிவு என்பதும் ஒரு ஆதிக்கம்தான் என்கிற கருத்தும் எனக்கு உண்டு. தங்களது பொறுமைக்கு நன்றி.

ஜமாலன் சொன்னது…

ரத்ணேஷ், நாம் என்ன பேசுகிறோம் என்பதில் இல்லை நம் அரசியல் எதை பேசாமல் தவிர்க்கிறோம் என்பதில்தான் உள்ளது. நமக்குள் செயல்படும் கண்காணிப்பு நமது எழுத்தை எங்கெல்லாம் தணிக்கை செய்கிறது என்பதை படிப்பதுதான் விமர்சனமும்கூட..
நன்றி

ஜமாலன் சொன்னது…

முத்துகுமரனுக்கு..

//ஒரு படைப்பின் கலைநயத்தை மட்டும் காணாமல், அதன் அரசியலையும் நுணிக்கமாகப் பார்த்தவர் பெரியார்//

பெரியார் குறித்த அருமையான ஒரு கருத்தை இங்கு முன்வைத்துள்ளீர்கள். கலையின் அரசியல் குறித்த இப்பெரியாரிய பார்வை வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

ஜமாலன் சொன்னது…

வரவனையான் என்கிற இவ்வார நடசத்திரரம் இங்கும் ஜொலித்து விட்டுப் போயிருக்கிறது. நன்றி.

பாசிசம் குறித்த உங்கள் படிப்பை பதிவிடலாமே?

RATHNESH சொன்னது…

படித்தல், புரிதல், சிந்தித்தல், தேடல் போன்றவற்றில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டி இருக்கிறீர்கள்; எனக்கு ஊட்டி இருக்கிறீர்கள் என்கிற நன்றி உணர்வினை வெளிப்படுத்திக் கொள்கிறேன். தொடரும் பதிவுகளில் சந்திப்போம்.
RATHNESH

டி.அருள் எழிலன் சொன்னது…

ஜமாலன் பெரியார் பற்றிய உங்கள் பதிவு நல்ல விஷயம்..பெரியாரை ஒரு போதும் ஒற்றை நோக்கிலிருந்து புரிந்து கொள்வது கடினம்.பெரியாரை தமிழ் மொழி விஷயத்தில் விமர்சிப்ப்வர்கள்(சிலர் அதையும் தாண்டி சேறடிக்கிறார்கள்)அவரது "பற்றற்ற அரசியலை"புரிந்து கொள்ள தவறுகிறார்கள் என தோன்றுகிறது...""தமிழ் சைவத்தாலும் வைணவத்தாலும் கறை பட்ட மொழி"என்றார் தந்தை பெரியார்.உண்மைதானே தமிழை தூய்மைப் படுத்துவது இன்று சாத்தியமா?அதுபோலவே நாடு இனம் தொடர்பான அவரது பார்வைகளும் அது வரை பேசப்பட்ட தமிழ் இலக்கியங்களையும் அவர் புரட்டிப் போட்டார்...

திராவிடர் என்கிற இன அடையாளத்தை துறந்து தமிழ் இனம் என பேசினால் பார்ப்பனர்கள் நம்மை உண்டு செரித்து விடுவார்கள் என்றூதான் இப்போது எனக்கு தோன்றுகிறது.
மொழி என்பது ஒரு சமூகத்தின் உற்பத்தி உறவுக்கான ஒரு கருவி இல்லையா?அப்படியானல் தமிழ் தமிழர்களின் உற்பத்தி மொழி அப்படித்தானே?தமிழர்கள் உற்பத்தியில் எந்த நிலையில் இருக்கிறார்கள்.சந்தை பொருளாதாரம் அவர்களது பூர்வ மொழியான தமிழுக்கு என்ன முக்கியத்துவத்தை கொடுக்கிறது...என விரிவாக பேசப்பட வேண்டிய நேரம்..ஆனால் என்னை பொறுத்த வரையில் நானும் மொழி ஆர்வம் உள்ளவந்தான்..தமிழை தவிறா வேறூ மொழி தெரியாதவன்....மாவட்ட வாரியாக தமிழ் ஆர்வலர்களின் பட்டியலை எடுத்து பர்த்தால் அந்தந்த மாவட்டத்தின் ஆதிக்க சாதியினர்தான் தமிழ் அமைப்புகளில் தமிழ் ஆர்வலர்களாக இருக்கிறார்கள்....மொழியை பற்றிய மொண்ணையான அணுகுமுறை..கதர்ச்சட்டை தூயதமிழ் என்கிற பெயரில் போட்டு வறுத்தெடுப்பது..ஆனால் கண்டதேவியில்...வடம் இழுக்க உரிமை கோரி தலித மக்கள் திரண்டால் அமைதியாக ஒதுங்கி கொள்வது.பொதுவாக சாதி வேண்டாம்''யாதும் ஊரே யாவரும் கேளீர்"என பேசுவது இப்படி நிறைய கூறலாம்....

"தன் சொந்த இனமான தமிழ் மக்களை தமிழ் முதலாளிகளே சுரண்ட அனுமதிக்க வேண்டும்"என்கிறா கெட்ட பூர்ஷ்வாத்தனத்தின் மிச்ச்மாகத்தான் இன்னும் பலர் தமிழ் உணர்வு பேசுகிறார்கள்..பெரியார் மொழி இனம் என அனைத்திலுமே பெரு மரபை கொண்டாடியதில்லை......

ஜமாலன் சொன்னது…

அந்நியனுக்கு..

பதிவை போன்றெ கருத்துக்களும் வித்தியாசமாக உள்ளது. மார்கிசய அடிப்படையில் மொழி குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது.. தொடாந்து இக்கருத்துக்களை முன்னெடுப்போம்..
உங்கள் கருத்துக்கள் விரிவாக எழதப்பட வேண்டியவை.
ஆழந்த கருத்தடங்கிய உங்கள் பின்னோட்டத்திற்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

//திராவிடர் என்கிற இன அடையாளத்தை துறந்து தமிழ் இனம் என பேசினால் பார்ப்பனர்கள் நம்மை உண்டு செரித்து விடுவார்கள் என்றூதான் இப்போது எனக்கு தோன்றுகிறது.//

அன்னியன் அய்யா,

நீங்க சொல்றது கரெக்ட் அய்யா.ஏன்னாக்க நீங்க ஒரு வெஜிடெபிள் தானே?

பாலா

ஜமாலன் சொன்னது…

அணாணிக்கு.

நாங்கள் வெஜிடபிள்தான்.. அதாவது வெங்காயம். ஆணால் நீங்கள் நான்-வெஜிடபிள் ஆகிப்போனதுதான் வரலாற்றின் சோகம். மூவாயிரம் ஆண்டகளாக எத்தனை பேரை உண்டு செரித்திருக்கீறிர்கள்.

வருகைக்கு நன்றி.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.