குறிப்புரை 12. வரலாற்று உருவாக்க எந்திரங்கள்


Image result for babri masjid image

மொழி ஒரு கூட்டத்தின் பொது நினைவுகளை பெருக்குவதன் மூலம் வரலாற்றை உருவாக்கியும், மறத்தலின் மூலம் அழித்தும்  எழுதுகிறதுவரலாறு என்பது நினைவுகளின் வாக்கியத் தொடர்ச்சிகளாக உற்பத்தி செய்யப்படுவதே. தொடர்ச்சியற்ற வாக்கியத் தொடர்களை தங்களது பேச்சாக கொண்டவர்களை, பழைய சமூகம் மந்திரவாதி, சித்தர் என்று குறிநிலைப்படுத்தி உள்ளது. இவர்கள் வரலாற்றிற்கு வெளியேயான அதன் ஒழுங்கமைப்பை அச்சுறுத்தும் நினைவுகளைக் கொண்டவர்கள்.

நினைவுருவாக்கம், வரலாற்றுக் கதைகளை பதியவைப்பதுடன், ஒவ்வொரு காலத்திற்கும், அதிகாரமானது வரலாற்று நினைவை தனது மறுகதையாடல் மூலம் புதிய குறி அமைப்புகளுக்குள் புகுத்தி, அன்றைக்கான உடல்களை அரைத்து கலக்கும் அரசியலை நிகழ்த்தி விடுகிறது.  உனக்கு நம் சமூகத்தில் நடந்த அதிகார பெருமத வரலாற்று எந்திரத்தால் உடல்கள் அரைத்துக் கலக்கப்பட்ட ஒரு கதையைக் கூறுகிறேன் கேள்.

இந்திய வரலாறு ராமாயணம் என்கிற வண்ணத் தொலைக்காட்சி தொடர்மூலம் மதநினைவுடன் மீள்-உருவாக்கம் செய்யப்பட்டதின் விளைவாக பாபர்-மசூதி இடிக்கப்பட்ட கதைதான் அது. ராமாயணம் என்கிற பெருங்கதையாடல் அரசுத் தொலைக்காட்சியின் மூலம் prime-time’–ல் பரவலாக்கப்படுகிறது. இந்த ராமாயணத்தைப் பார்க்கச் செய்வதற்காக பல பத்திரிக்கைகள் உருவாக்கிய கதையாடல்கள் ஏராளம். இதற்காக அறுவை சிகிச்சைகள்கூட மாற்றி வைக்கப்பட்டன. ஒளி பரப்பப்படும், அந்த குறிப்பிட்ட நேரம் நாடே உறைந்து போன ஒரு அமைதிபோர்த் தயாரிப்புகளில் நிலவுவதைப்போன்று. ராமாயணத் தொடர் முடிந்த பிறகு, அதன் கதாபாத்திரங்கள், சமகால அரசியலுக்குள் வருகிறார்கள் தேர்தல் வேட்பாளர்களாக. பின், நாடெங்கும் கரசேவை’-க்கான கல் சேகரிப்பு இயக்கம். ‘பாரத வரலாறுமக்களிடம் பரவலாக்கப்பட்டு, கல்லின் வழியாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. சாதரண கல்ஒரு வலிமையான குறியீடாகி, ராமர் கோவில் கட்டப்படும் தேசியப் பணியில்மக்கள் அனைவரும் பங்குபெறவும், அதற்கான பொறுப்பை ஏற்கவும் மக்களது மனநிலையை தயார் செய்ய முயன்றது. இக்கற்கள்ஒவ்வொரு குடிமகனையும், பாரத வரலாற்றின்() கட்டிடக் கற்களாக, வரலாற்றுத் தன்னிலைகளாக மாற்றியது. இவ் ஊர்வலம் மூலம், தேசிய எல்லைப்பரப்பையும், ஒரு சுற்றுவட்டம் இடப்பட்டு, பல்வேற இன, மொழி, சிறு கலாச்சார அடையாளங்கள் பாரதவாசிஎன்கிற ஒற்றை குறிக்குள் சுருக்கப்படுகிறது.  இதன் இன்னொரு பலன் வலிமையாக ஆளப்படுவதற்கான தயாரிப்பு மக்களின் மனப்பரப்பிற்குள் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறாக நவீன-ராமயாணத்திற்கானஅல்லது, வரலாற்றின் திரும்பவரலுக்கானஅரங்கம் உருவாக்கப்பட்டது.

()இந்திய வரலாறுஎன்பது ஆங்கிலேயக் காலனி நினைவுகளையும், ‘பாரத வரலாறுஎன்பது இந்துப் பெருமத நினைவுகளையயும் கொண்டு எழுதப்பட்டவை.  இரண்டும் இரண்டு வேறுபட்ட சிந்தனை மற்றும் தொன்மங்களை அடிப்படையாகக் கொண்டவை. ‘இந்துக்களை, ஒரு அமைப்பிற்குள் கொண்டு வந்து, அவர்களை இராணுவமயமாக்கலுக்காக (militarization) இந்து தேசியவாதிகளால் புதிதாக பயன்படுத்தப்பட்ட ஒரு ஒழுங்குமுறையே (discipline) ‘வரலாறு’. இவர்களது இந்திய நாகரிகம்என்பது, பல காப்பிய கலாச்சாரதொன்மங்களால் கட்டமைக்கப்பட்டது. இவர்கள் எல்லாவற்றையும் வரலாற்றைக் கொண்டும், முடியாத இடங்களில் தொன்மங்களை/புராணங்களைக் கொண்டு நியாயப்படுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள். ‘வரலாறுஎன்பது காலனியத்தால் உருவாக்கப்பட்டது மட்டுமல்ல, காலனியக் கட்டுமானத்துடன் உறவுடையதாகும்என்பதை நினைவுகொள்வது அவசியம். (விரிவான விளக்கத்திற்கு Creating A Nationality (CAN)–Chapter III Page: 56-69 - Oxford India Paperbacks, 1997 – Ashis Nandy, Shikha Trivedy, Shail Mayaram & Achyut Yagnik.)

கடைசி காட்சியை அறங்கேற்றும் முகமாக, ரதயாத்திரை சோமநாதபுரத்தில் துவக்கப்பட்டது.  சோமநாதபுரம் என்றவுடன் நமக்கு இந்திய வரலாற்றுப் பாடத்திட்டத்தில் மிகச் சிறுவயது முதல் சொல்லப்பட்டு வந்திருக்கும், கஜனி முகம்மது என்கிற முஸ்லிம்அரசனால் பலமுறை படையெடுக்கப்பட்டு, அங்குள்ள கோவிலின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது நினைவிற்கு கொண்டுவரப்பட்டது(*). ரதயாத்திரையில் பயன்படுத்தப்பட்ட ரதத்தின்() சாரதி (‘தேரோட்டி’) ஒரு முஸ்லிம்’ (இவர் இந்துவாக இருந்து ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து, அதனால் முஸ்லிமாக மாறி திருமணம் செய்து கொண்டவர்.  ஆனால், ஒரு முஸ்லிம்என்பது மட்டுமே, பிரபலமாக்கப்பட்டது.)  இதற்கு பின் உள்ள சொல்லப்படாத கதை கஜனிஅல்லது முஸ்லிம்களால் ஏற்பட்ட அவமானத்திற்கான பழி உணர்ச்சி என்பதுதான். இதில் கவனத்தில் நிறுத்த வேண்டியவை,

1. ‘கஜனிமுகம்மதை முன்வைத்து அனைத்து பாமர முஸ்லிம்களையும், குற்ற உணர்வு உள்ளவர்களாக மாற்றுவது. இதன் நீட்சியாக, பாபர் மசூதி இடிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்வதற்கான முன்தயாரிப்பு செய்யப்படுகிறது.

2. இக் குற்ற உணர்வில் இருந்து விடுபட, அல்லது மன்னிப்புவழங்கும் முகமாக, ரதத்தை ஓட்டிய முஸ்லிமை’-ப்போல, எல்லா முஸ்லிம்களும் தங்களது  வரலாற்றுத் தவறைபாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவதன் மூலம் சரி செய்து கொள்வதற்கான வாய்பு வழங்கப்படுகிறது.

3. முஸ்லிம் அனைவரும் ஒரேவகை உணர்வுகளில் இல்லை என இரண்டாக பிரிக்கும், அதாவது, முஸ்லிம் மற்றும் இந்து-முஸ்லிம் என்பதாக, அரசியல் தந்திரம் செயல்படுத்தப் பட்டது.  இதுவேமுஸ்லிம்கள் தங்களது கடவுளாக ராமனை ஏற்றுக் கொள்ள வேண்டும்என்கிற கூற்றாக வடிவம் பெற்றது. இதன்மூலம் ராமன் - இந்திய தேசியத்தின் கடவுளாக மாற்றப்படுகிறான்().

(*)  கஜணி முகம்மதுவின் சோமநாதபுர படையெடுப்பு பற்றி ரொமிலா தாப்பர் முன்வைக்கும் வரலாற்றுத் தகவல்கள் வரலாற்று உருவாக்கத்தில் கதையாடலின் (narrations) அரசியலை வெளிப்படுத்துகிறது.  இப்படையெடுப்பு குறித்து ஐந்துவகை கதையாடல்கள் உள்ளன என்கிறார் தாப்பர். 

1. துருக்கிய-பார்சிய கதையாடல் - தென்மேற்கு ஆசிய வரலாற்றில் அரேபிய - பார்சிய அதிகார உருவாக்கம், இஸ்லாத்துடன் உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டே உருவாகுகிறது.  கஜனி முகம்மதுவின் சோமநாதபுர படையெடுப்பு, பார்சிய கதையாடலில், கஜனியை ஒரு இஸ்லாமிய வீரனாக’ (champion of Islam) காட்டுவதன் மூலம், அரேபிய இஸ்லாமின் மீது ஆதிக்கம் வகிக்கும் வாய்ப்பை அளிக்கிறது.  அதாவது, குரானில் சொல்லப்பட்ட அரேபிய சமூகத்திற்கு முந்தைய லாட் (Lat), உஸ்ஸா (Uzza) மற்றும் மனாத் (Manat) என்கிற மூண்று கடவுள் சிலைகள் உடைக்கப்பட வேண்டியவையாக இஸ்லாமை உருவாக்கிய முகம்மதுவால் முன்வைக்கப்பட்டன.  அவற்றில் இரண்டு முகம்மது காலத்திலேயே உடைக்கப்பட்டது.  பிறிதொன்றான மனாத் (சோமனாத் என்பதை Su-Manat மனாத்தின் இடம் என்கிற அரபி சொல்லாக கூறப்படுகிறது. இது லிங்க வடிவை ஒத்ததாக சொல்லப்படுகிறது.) சோமநாத புரத்தில் இருப்பதாக நம்பப்பட்டு அதனை உடைக்கும் ஒரு புனிதப் போராக வர்ணிக்கப்படுகிறது.  இதன் மூலம் பார்சி-துருக்கிய ஆதிக்கம் இஸ்லாதத்திற்குள் நிறுவப்படுவதற்கான முயற்சியை உணரலாம்.  தென்மேற்கு ஆசியாவில், அரேபிய, துருக்கிய, பாரசீக வரலாறு என்பது இஸ்லாமின் வளர்ச்சி வீழ்ச்சியுடனே தொடர்பு கொண்டதாக இருந்ததை, அவ்வரலாற்றை படிப்பவர்கள் காண முடியும் (பார்க்க தென்மேற்கு ஆசிய வரலாறு’- . அசதுல்லா-.பா.நி.).

2. ஜைன/சைவ முரண்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கதையாடல்.  சிவனைவிட மகாவீரர் சக்தி வாய்ந்தவர் என்பதால் அவரது சிலைகள் உடைக்கப்பட வில்லை என்பதைப்போல இப்பிரச்சனையை ஜைன/சைவ முரணாக விளக்குகின்றன.

3. சமஸ்கிருத கல்வெட்டுகள் சோமநாதபுரம் கோவில் தாக்கி அழிக்கப்பட்டதைப் பற்றி அதிகமாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்புகளைக் கொண்டிருக்கவில்லை. 12-ஆம் நூற்றாண்டில் அக்கோவிலுக்கு செல்லும் யாத்ரீகர்களை தாக்குவதும், திருடுவதும் அருகில் இருந்த இந்து மன்னர்களால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது.  சோமநாதபுரத்தில் மசூதி ஒன்று கட்டப்படுவதற்காக, அங்கு குடியேறியிருந்த அரேபிய முஸ்லிம்களுக்கு நிலம் ஒன்று விற்கப்பட்டதற்கான பத்திரம் அன்றே அரேபி-சமஸ்கிருதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து, சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த துருக்கிய சுல்தான்களுக்கு எதிராக, சோமநாதபுரத்தைச் சேர்ந்து அரேபிய முஸ்லிம்களும் போராடி உள்ளனர். அப்போராட்டத்தில் இறந்து போன பரித் என்கிற முஸ்லிமின் நினைவாக ஒரு கல்வெட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

4. பிரிட்டிஷ் House of Comman-ல் இப்பிரச்சனை இந்து-முஸ்லிம் பிரச்சனையாக விவாதிக்கப்பட்டு, இந்துக்களின் உணர்வுற்கு மதிப்பளிப்பதாக கூறி கொள்ளையடிக்கப்பட்டதாக நம்பப்பட்ட இரண்டு சோமநாதபுரம் வாயிற்கதவுகளை, ஆங்கிலேயப்படை பாரசீகத்திலிருந்து மீட்டு வந்தது. ஆனால், அவ்விரண்டு கதவுகளும், இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதில்லை (அது எகிப்திய வேலைப்பாடுகளைக் கொண்டிருப்பதால்) என நிரூபணம் ஆனவுடன், ஆக்ராவில் ஒரு கோட்டைக்குள் அதனை தூக்கிப்போட்டுவிட்டனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியமே முதன் முதலாக இந்த பிரச்சனையின் வகுபுவாத விதையை ஊன்றி, நீருற்றி வளர்த்தது. 

5. K.M. முன்சி என்பவரால் முன்வைக்கப்பட்ட இந்துக்களின் ஆழ் மனதிற்குள்ளான அவமான உணர்வுதுடைத்தெறியப்படவேண்டும் என்பதான வகுபுவாத கதையாடல். இது விரிவாக பேசப்பட வேண்டியது.  (Somanatha and Mahmud - Romila Thapar - Frontline, April 23, 1999)

ஆக, ஒரு வரலாற்று நிகழ்வு என்பது பல்வேறு கதையாடல்மூலம் அரசியல் நிகழ்வுகளாக மாற்றப்பட்டு, மக்களினத்தின் வாழ்வுடன் பங்கு பெறுவதாகிறது.  ஒவ்வொரு சமூகமும், வரலாற்றை வாசிப்பதன் மூலம், தனதுகால அரசியல் வரலாற்றாக அதனை மாற்றிவிடுகிறது.  கஜனி முகமதுவின் சோமநாதபுர படையெடுப்பு இந்திய வகுபுவாத சக்திகளின் கையில் நிகழ்கால வரலாறாக மாற்றப்பட்டுள்ளது.  அது முன்சி கூறியதுபோல இந்துக்களின் ஆழ்மனதில் ஒருவகை அவமான உணர்வாகஇறக்கப்பட்டதாக கூறி அதனை கிளறிவிடுவதாக இன்றைக்கான அரசியல் நிகழ்வுகள் வரலாற்றை உருவாக்கிக் கொண்டுள்ளன.

() ராமாயணத்தில் ராமருக்கு ரதம் இல்லை.  ராவணன் மட்டுமே, ரதம் போன்ற முன்னேறிய போர்த் தொழில்நுட்பங்

களைக் கொண்டிருந்தான் (வால்மீகி மற்றும் துளிசிதாஸ் ராமயணம் - quoted from CAN பக். 40). கிருக்ஷ்ணர் மட்டுமே ரதம் வைத்திருந்தவர். குறிப்பாய் மகாபாரத கிருக்ஷ்ணர் (-1).  ரத யாத்திரைக்கான ரதமும், கிருக்ஷ்ண ரதம் போன்றே (இது மகாபாரதத் டி.வி.த் தொடாில் வரும் ரத அமைப்பை ஒட்டியது. பரவலாக, கிருக்ஷ்ண ரதமாக படங்களில் பார்க்க கூடியது), விலை உயர்ந்த பழைய மாடல் அமேரிக்க செவர்லெட்காரின் மீது (இது, சுதேசியம், விதேசியம் இணைந்த ஒரு கலவை ரதம்), அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது ராம-கிருக்ஷ்ணக் கலாச்சாரம் இணைந்த ஒன்று (CAN பக்.40).

(-1) மகாபாரத கிருக்ஷ்ணக் கலாச்சாரம், 19-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு உருவாக்கப்பட்ட ஒன்று.  கிருக்ஷ்ணர், மகாபாரதத்தின் (கீதையின் கிருக்ஷ்ணர்) மூலமும், பாகவத புராணங்கள் (கோபிகா கிருக்ஷ்ணர் - யாதவரின் கடவுள்) மூலமும் அறியப்படும், இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்கள் இருப்பதாக அறிஞர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. கிருக்ஷ்ணர் 19-ஆம் நூற்றாண்டில் சிறுதெய்வ வழிபாட்டிலிருந்து பெருந்தெய்வ வழிபாட்டிற்கு மாற்றப்படுகிறார். (ஐராவதி கார்வே- யுகாந்தா, P.T.S. அய்யங்கார் - History of Tamils, டி.டி. கொசாம்பி பண்டைய இந்தியா மற்றும் Creating a Nationality.) இதில் பக்தி கலாச்சாரம் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளது எனலாம்.

() இந்தியாவின் சில மாநிலங்களில் 1920-வரை இந்து-முஸ்லிம் இருவரும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டால் ஜெய் ராம்ஜி  என்றும், 1991-வரை ஜெய் ராம்ஜி கி’, ‘ஜெய் சீதா ராம்  என்றும் வணங்கிக் கொள்ளும் பழக்கம் இருந்து வந்துள்ளது. (CAN, பக்.-4) ‘ராமன் இந்திய மக்களால் புருஷோத்தம்என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவன் என்றும், கவிஞர் முகமது இக்பாலால் Immam-e-Hind’ (இந்திய இமாம்) எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் என்றும், வைக்ஷ்ணவரின் வணக்கத்திற்கு உரியவராக, அவதாரமாகக் கருதப்படும் ராமன், வைக்ஷ்ணவர்களால், 300-400 ஆண்டுகளாக, ‘ராம் ஜென்மஸ்தான் மந்திர்என்ற பெயரில் அயோத்தியில் வேறு கோவில் ஒன்றில் வணங்கப்பட்டு வருவதாகவும், இந்த இயக்கம் வைக்ஷ்ணவர்கள் அல்லாத, ராம வணக்கத்திற்கு எதிராக முன்பு பேசிவந்த ஆரிய சமாஜ் மற்றும் தாந்ரீகர்களால் வழி நடத்தப்படும், அரசியல் ஆசைகொண்ட இயக்கம்என்பதாக சையத் சகாபுதீனால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது (CAN,பக்.-40). அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் கோவிலில் பூசை நடத்தும் தலைமை அர்ச்சகர் லால்தாஸ் கூறியவை சிந்திக்கத்தக்கவை – ‘சைவர்கள் ராமனை ஒரு அரசன் என்கிற மனிதனாக கருதுபவர்கள், ஆனால், வைக்ஷ்ணவர்கள் ராமனை பிரம்மமாகக் கருதுபவர்கள்’(CAN, பக்.-47) (பிரம்மத்திற்கு பிறப்பிடம் கிடையாது) ‘இந்தக் கோவிலில் நடக்கும் உண்மைகளைத் தெரிந்து கொண்டால், நீங்கள் நாத்திகராக மாறிவிடுவீர்கள்’ (CAN, பக்.-49). மத நம்பிக்கைகளைவிட அரசியலே பிரதானமாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார் லால்தாஸ் பல்வேறு உதாரணங்களால். (இவர் 1993-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்(CAN முன்னுரை பக்.-x)). இஸ்லாமிய அடிப்படைவாத மற்றும் இந்து மீட்புவாத அரசியலின் விளைவே பாபர் மசூதி தகர்ப்பு ஆகும்.

இவ்வாறாக, முஸ்லிம் எதிர்பு என்கிற கருத்து வலயத்தைஉருவாக்குவதன் மூலம், முஸ்லிம்கள் குறித்து ஒரு சொல்லாடல்களத்தை கட்டமைக்கிறது. இச்சொல்லாடலில், இந்திய முஸ்லிம்கள் பிறர்களாக (others)() மாற்றப்படுகிறார்கள். அவர்களது, இந்திய மண்ணுடன் ஆன அனைத்து வரலாற்று நினைவுகளையும், அவர்கள் அல்லாத பிறரின் நினைவிலிருந்து ஒட்டுமொத்தமாக அழித்து வேறு ஒரு வரலாறு, ‘புண்ணிய பூமிஎன்கிற நிலப்பரப்பினைக் கொண்டதாக எழுதப்படுகிறது. இப்புண்ணிய பூமியின் ஆத்மாவாகவும், இதன் அரசமைப்பிற்குள் ஆட்சி செலுத்தும் மன்னனின் உடலாகவும் ராமன் மாற்றப்படுகிறான். இந்த ராமன், பல்வேறு ராமயணங்கள் முன்வைக்கும் ராமன் அல்ல. இந்திய மதவாத சக்திகளால், TV-ன் prime time-ல் வந்து உலவிய ஒளிர்திரை ராமன், என்பதுதான் முக்கியம். இது வெறும் தகவல்தொடர்பு சாதனத்தின் வெற்றி மட்டுமல்ல, வரலாற்று நினைவை மறு உருவாக்கம் செய்வதும், அதனை அழித்து புதிய வரலாற்றை எழுதுவதும், அதற்கான பரப்பாக பாமர உடல்-தளங்களும், மன-தளங்களும் உருவமைக்கப்பட்டதுமே.

() இந்த பிறர்களாக மாற்றப்படுவதற்கான ஒரு தன்னிலையாக்கம், வரலாற்றின் வழியாக, ஒரு குறிப்பிட்ட மண்ணிற்கு சொந்தம்Xசொந்தமின்மை அல்லது உள்ளே இருப்பவர்கள் (பூர்வீகம்), வெளியில் இருந்து வந்தவர்கள் (குடியேறிகள்) என்பதாக மக்களினம் அவர்களது மொழி, இன, மத, கலாச்சாரத் தனித்தன்மைகள் வழியாக அடையாளப்படுத்தப்படுகிறது. வரலாறு எழுதவேண்டிய தேவையே, ஒரு நிலப்பகுதிக்கு உள்ளேXவெளியே என்கிற இரட்டை முரண்களின் (binary) (அதாவது Same X Other) வழியாகத்தான் எழுகிறது.  வரலாறு என்பது ஒரே வகையான (Same) மக்கள் கூட்டத்தையும், அம்மக்களை ஒரு வரலாற்றுத் தன்னிலைக்குள் அடைப்பதன் மூலம், நிலத்தை மையமானதாகவும் கொண்டே அமைகிறது. இந்திய வரலாறு குறிப்பாக இந்துத்துவா (-1) வரலாறுமுஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் சிறுமத, சிறு கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் கூட்டத்தை பிறர்களாக மாற்றப்படுவதன் மூலமே எழுதப்பட முடியும்.  இந்துத்துவாஎன்பது முஸ்லிம் மற்றும் சிறுபாண்மையினரை மட்டுமின்றி எல்லாவித தொல்குடி மற்றும் சிறு கலாச்சாரங்கள், சிறு மதங்கள், சிறு மொழிகள் ஆகியவற்றினையும் கூட வெளித்தள்ளக் கூடியதாக உள்ளது.  இலங்கை சிங்கள பேரினவாத வரலாறு என்பதும், இப்படித்தான், தமிழர்களை வெளியிலிருந்த வந்த இந்திய வம்சா வழியினர்என்கிற பிறர்’-களாக மாற்றி போினவாத அரசியலாக வடிவெடுத்தது.

(-1) இந்துத்துவா என்பது பிரிட்டீஷ் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்து மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட, இந்து மத மேலாண்மையைக் கொண்ட இந்தியா என்பது பாரதம் என்ற ஒரு பாரம்பரிய நிலப்பரப்பு என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட வாதம்.  இந்து மதம் என்பதே இந்திய என்ற நிலப்பரப்பிற்கான மதம் என்றும், இந்தியா என்பது பல் தேசியங்கள் கொண்டதல்ல மாறாக, இந்து என்ற கலாச்சாரத்தால் ஒருங்கிணகை்கப்பட்ட நிலம் என்றும், இந்திய தேசியம் என்பது ஒரு காலாச்சார தேசியம் என்றும் முன்வைக்கும் ஒரு கோட்பாடு.

இதன் மற்றொரு பரிமாணம், தொலைக்காட்சி ராமாயணம் ராமனைவிட சீதையை பிரதானப்படுத்தியதன் மூலம், இந்திய பெண்களை மரபுரீதியாக மறுவரையறைக்கு உட்படுத்தியது.  அயோத்தி என்கிற புண்ணிய பூமி’-யின் புகழை நினைவூட்டும் ராமாயணம் ஒரு பக்கம், ‘ராமன்’ ‘சீதை’-க்கு எதிராக பிரச்சாரம் செய்தும், ‘சீதைM.P.-ஆனதை தடுக்க இயலாமல் போனது மறுபக்கம். இதில் சீதையாக நடித்த நடிகை, தான் சீதையாக நடிக்க ஆரம்பித்த பிறகு வெளிப்படையாக புகைபிடிக்க முடியாமல் வருத்தப்பட்டதும், போகுமிடமெல்லாம், அவர் வணக்குத்திற்கு உரியவராக மதிக்கப்பட்டதும், வேறுகதை.  (N.T.R.-ன் தாிசனத்திற்கு காத்திருந்த மக்கள் கூட்டத்தையும், M.G.R.-ன் doubles’-ஐ படத்தில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் ஏற்றுக்கொண்டு, அவரை கிராம தேவதையாக வணங்கி வழிப்பட்டது இப்படி நவீன தொன்மங்களின் புனைவியல் பரப்பை பற்றியது பிறிதொரு ஆய்வாகும்).

JNU (Jawharlal Nehru University, Delhi)-யைச் சேர்ந்த இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்று அறிஞர்கள், ‘இன்றைய அயோத்தியும், இராமயண அயோத்தியும் ஒன்றல்ல, அங்கு ராமர் கோவில் இருந்ததற்கான சான்று எதுவும் இல்லைஎன்று கூட்டறிக்கை விட்ட பிறகும் (‘The Political Abuse of History (1989 & 1992, JNU). (மேலும், இராமர் கோவில் இடிபக்கப்பட்டதாக கூறி முன்வைக்கப்பட்ட தொல்லியல் பொருட்களையும், ஆவணங்களையும் பரிசோதித்து, ‘மசூதிக்கு கீழே இடிக்கப்பட்ட கோவிலுக்கான எந்த தடயமும் இல்லைஎன முடிவினை வெளியிட்டுள்ளார் பேராசிரியர் D. Mandal என்கிற தொல்பொருள் ஆய்வாளர். (Ayodhya – Archaeology After Demolition’, Orient Longman, 1994)) இந்தியாவின் வெகுஜன ஆதரவைப் பெற்று பாபர் மசூதி தகர்பு ஒரு மக்கள்-எழுச்சியாக() மாற்றப்பட்ட கதையானது, தொன்மங்களால், கதைகளால், நினைவுகளில் எழுதப்பட்டுள்ள வரலாறுதான்() என்பதை உணர்த்துகிறது. மொத்த இந்திய முஸ்லிம் வரலாற்றையும், அந்த ஒற்றை நிகழ்விற்குள் அடைத்து, முஸ்லிம் அல்லாத பிறரிடம் முஸ்லிம் எதிர்ப்புஎன்கிற வினைத்திறப்புச் சொல்இவ்வாறுதான் மறு கட்டமைபு செய்யப்பட்டது.  வரலாறு என்பது, ஆவணக்காப்பகங்களில் இல்லை, அது ஒவ்வொரு உடலுக்குள்ளும் நினைவாக செறிந்துள்ளது. அதன் வழியாகவே உடலரசியல் என்பதன் இயக்கம் நடைபெறுகிறது என்பதையே இவை நமக்கு காட்டுகிறது.

- இது 1995-98 இடைப்பட்ட காலங்களில் எழுதிய உடலரசியல் என்ற கட்டுரையின் ஒரு பகுதி.  
Share |
ஜமாலன். Blogger இயக்குவது.