தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இனிக்
கூட்டணிகள் பற்றிய ஊகங்கள், கணக்கீடுகள், அறிவுரைகள். ஆலோசனைகள் என உள்ளுர் டீக்கடை பெஞ்சுகளில் துவங்கி உலகளாவிய தொலைக்காட்சி பெஞ்சுகள்
வரை தொடரும். யார் யாருடன்
சேரலாம், யார் யாருடன் சேரக்கூடாது, யார்
யாருடன் கூட்டணியமைப்பதால் யார் வெற்றி பெறுவார் யார் யாருடன் சேர்ந்தால் மற்றவர் தோல்வியடைவார்
உள்ளிட்ட கணக்கீடுகள் தினவாழ்வை நகர்த்த போதுமான உரையாடல் தளமாக அமைந்துவிடும்.
இந்தியா போன்ற உரிமைகள் மறுக்கப்பட்ட, ஏழ்மை அதிகம்
உள்ள நாட்டில் குடிமகன் என்ற உரிமையை நினைவூட்டும் நாள் என்பதால் தேர்தல் ஒருவகையான
தேசியத் திருவிழாவாக நிகழ்கிறது. அதிலும்பார்க்க ஜனநாயகம் என்ற
ஒன்றை மக்கள் அறியவும், அனுபவிக்கவும், உரிமையை உணரவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு அரசியல் நிகழ்வு. அதன் உள்ளுறைந்திருப்பதோ விளையாட்டில் கிடைக்கும் வெற்றித் தோல்வி மனோபாவமும்,
பந்தயம் கட்டி விளையாடும் சூதாட்டத்தில் உள்ள மகிழ்ச்சியுமே.
மேலும், ஒவ்வொரு அய்ந்தாண்டிற்கு ஒருமுறை
புதிய அரசியல் சக்திகளை உருவாக்கும் ஒரு எந்திரமாகவும் இத்திருவிழா செயல்படுகிறது.
சாமான்ய மனிதன் தேர்தலில் ஈடுபடும் குழுக்கள் வழியாக தன்னையொரு சார்பான அரசியல்
சக்தியாக உருவாக்கிக் கொள்கிறான். வாக்குரிமை பெறும் இளந்தலைமுறையினர் இப்படியாக
அரசியல் சக்தியாக வார்ப்பதற்கான ஒரு சடங்காக நிகழ்வதே இத்தேர்தல்.
ஒரு அரசாங்கத்தை அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை
மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், அது அவர்களது சமூக வாழ்வை அடுத்த அய்ந்தாண்டுகளுக்கு
பாதிக்கக்கூடிய ஒன்று என்ற ஓர்மையின்றிதான் வாக்களித்தல் நிகழ்கிறது. சமூகவாழ்வு என்பது ஒரு உடலுக்கு அது வாழும் சமூகத்தினால் தரப்படும் தினவாழ்வு
என்ற வாழ்க்கை. ஒரு மனித உடல் தினமும் என்ன பேசவேண்டும்?
எதைப்பற்றி சிந்திக்க வேண்டும்? எதை நோக்கி நகரவேண்டும்?
எதற்காக ஆசைப்படவேண்டும்? உள்ளிட்ட அனைத்தும் அன்றைய
அரசியலால், ஆதிக்கச் சக்கதிகளால், முதலாளிய
உறவுகளால் தீர்மாணிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு தேர்தலிலும்
வாக்களிக்கும் மக்கள் இந்த சமூக உறவால் தீர்மாணிக்கப்பட்ட நிலையில்தான் தனது வேட்பாளரை,
கட்சியை, அரசியலை தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஜனநாயக அரசியல் இந்த தேர்ந்தெடுக்கும் உரிமையை
வேளிப்படையாக வழங்கினாலும், உள்ளுக்குள் எதை தேர்ந்தெடுப்பது என்பதை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.
தேர்தலை அரசு நடத்தினாலும் (அரசாங்கம் தேர்தலை
நடத்துவதில்லை காரணம் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்குத்தான் தேர்தல் என்பதால் மக்கள்
நேரடியாக அரசை உணர்வது தேர்தலில்தான்) அதன் வாக்காளர்களை,
கட்சிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் அதிகார சக்திகளிடமே உள்ளது.
அல்லது அந்தந்த கட்சிகளின் பின்னால் அதற்கான அதிகார சக்திகள் மறைமூகமாகவும்,
பங்குதாரர்களாகவும், பயன்படுத்துபவர்களாகவும்,
இயக்குபவர்களாகவும் உள்ளனர்.
இத்தகைய மறைமுக சக்திகளின் கட்டுப்பாடுகள்
நிலவினாலும் ஜனநாயகம் என்கிற மக்கள் பிரிதிநித்துவ அரசியலில் தேர்தல் என்பது மட்டுமே
அடிப்படையான அரசியல் உரிமையாக உள்ளது என்பதை மறுத்துவிட முடியாது. உண்மையில் இது
மக்களைத்தான் பிரதிநிதித்துவப் படுத்துகிறதா? என்றால் இல்லை.
மக்கள் பிரதிநிதியாக உருவாக்கப்பட்ட அரசியல் தலைவர்களும் அவர்களது பின்னின்று
இயக்கும் சக்திகளையுமே. ஒர் உருவகமாகச் சொன்னால் அய்ந்தாண்டுகளுக்கு
ஒருமுறை அதிகாரம் என்கிற உறைவாளுக்கு உறையாக யார் இருப்பது என்பதை தேர்ந்தெடுப்பதே
தேர்தல்முறை. உறையுள் உள்ள வாளை தேர்ந்தெடுப்பது அல்ல.
அதிகாரம் என்கிற கத்திக்கான உறையை தேர்ந்தெடுப்பதே. உறைவாள் எப்பொழுதும் யாரைக் காக்க உருவாக்கப்பட்டதோ அந்த பணியை சரியாகச் செய்துகொண்டிருக்கும்.
வாளே அரசு. உறையே அரசாங்கம்.
இந்த உறையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை
சந்திக்கத்தான் அரசியல் கட்சிகள் மக்களை சந்திப்பதற்கு முன்பாக கூட்டணித் தலைவரை
சந்திக்கின்றன. கூட்டணி என்பது வெறும் எண்ணிக்கை சார்ந்த கூடுதல் அல்ல. அது
கட்சிசாராத பொதுவாக்காளர் மனநிலையை தீர்மாணிக்கும் ஒரு உளவியல் ஆயுதம். அதனால்தான்
இந்திய அரசியலில் தேர்தல் கூட்டணி என்பது எப்பொழுதும் கொள்கைக் கூட்டணியாக
இருப்பதில்லை. காரணம் அரசியலற்ற பொதுமக்கள் தன்னை பாதுகாக்கக் கூடியதான ஒரு
பாதுகாப்பு அமைப்பாக அரசாங்கத்தை உருவாக்க, வெற்றிபெறக்கூடிய கட்சி என்ற ஒரு
கருத்துநிலையை கவனிக்கிறார்கள். குடியாண்மை சார்ந்த மக்களின் குடிமைநிலையில்
இத்தகைய பாதுகாப்பும், தான் வாக்களிக்கும் கட்சி வெற்றிபெறவேண்டும் என்கிற பந்தய மகிழ்ச்சியுமே
தேர்தலில் பங்குபெறும் மக்களின் மனநிலை. அதனால் வெற்றிபெறக்கூடிய கூட்டணி என்பது
இந்த கட்சிசாரா அரசியலற்ற பொதுமக்களை குறிவைத்து உருவாக்கப்படுகிறது.
பொதுவாக இன்றைய அரசியல் கட்சிகளே
கொள்கைரீதியான கட்சிகள் அல்ல. எல்லா கட்சிகளுக்கும் வேறுபாடின்றி இருப்பது ஒரே
கொள்கைதான். அதிகாரம் பெறுவது, அள்ளிக் குவிப்பது, அடுத்த தேர்தலை சந்திக்க
குவித்ததில் கொஞ்சம் செலவழிப்பது. தங்களது கொள்ளையிட்ட பணத்தில் தேர்தல் வழியாக
மக்களையும் பங்காளியாக ஆக்கிவிடுவது. ஊழலை, கையூட்டுப் பெறுவதை, லஞ்சத்தை சாமானிய மக்களுக்கும்
பழக்குவதன்மூலம் ஊழலை தேசியமயமாக்குவது. ஊழலை எதிர்த்து பேசமுடியாத குற்ற உணர்விற்கு
மக்களை பழக்குவது. கறைபடிந்த மக்களை உருவாக்குவதன் வழியாக கறைபடிந்த
அரசியலை நியாயமானதாக்கிவிடுவது. அதன்மூலம் ஊழலை நிறுவனமயப்படுத்திவிடுவது.
இதுதான் இன்றைய தேர்தல் முறையின் ஆகப்பெறும் வளர்ச்சி.
அதாவது, அரசியல் உரிமையை விற்பனைப் பண்டமாக
மாற்றியுள்ளது இன்றைய தேர்தல்முறை. தினமும் உழைப்பை விற்பதைப்போல் அய்ந்தாண்டுகளுக்கு
ஒருமுறை உரிமையை விற்கிறார்கள். உழைப்பை விற்பது நேரடியாகவும்,
உரிமையை விற்பது மறைமுகமாகவும் நடத்தப்படுகிறது. தேர்தல் தற்பொழுது அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூடும் கிராம சந்தைபோல ஆகிவிட்டது.
சந்தைப் பெருளாதாரத்தில் எல்லாம் பண்டமயமாகியுள்ளது. அதில் வாக்கும் ஒன்று. அதிக விலை தரும் அரசியல் கட்சியே
அதிக பண்டத்தை வாங்கமுடியும் என்பது எழுதாவிதியாக உள்ளது. வாக்கிற்கு
வழங்கப்படும் பணம் திரும்ப வெற்றிபெற்ற கட்சியின் அரசாங்கத்தால் பல ஊழல்களின் வழிப்
பெறப்படுகிறது. இது ஒரு மீள்சுற்று.
இந்த அரசியல் உரிமைப் பண்ட விற்பனையில்
புழங்கும் பணப்புழக்கத்தை அரசே தேர்தல் ஆணையம் மூலமாக கட்டுப்படுத்தும் அளவிற்கு
இந்திய தேர்தல்முறை அபார வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதே தேர்தல்களின்
சுயாட்சித் தன்மையை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. அரசியல் கட்சிகளின்
பெருமுதலாளிகளின் கள்ளப்பணத்தை (கருப்பு என்பதை இதுபோன்ற கீழ்மைகளுக்கு
பயன்படுத்துவதை தவிர்ப்பது ஒரு நிறஅரசியல் நிலைபாடு என்பதால் கள்ளப்பணம் என்று
சொல்வதே சரியானது.) நல்லப்பணமாக (அதாவது வெள்ளை என்பதே நல்லது என்பதும் அதே நிறஅரசியல்
நிலைபாடு சார்ந்ததே) மாற்றுவதன் வழியாக கள்ளப்பணம் என்கிற தேசவிரோத செயலில் மக்களை
ஈடுபடுத்தி ஒட்டுமொத்த மக்களையும் தேசவிரோதியாக மாற்றுகிறது.
இதைதவிர சிறியகட்சிகள் மற்றும் சாதியக்கட்சிகள்
பெருங்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலுக்கு முன்பே அடுத்த அய்ந்தாண்டுகள்
கட்சி நடத்துவதற்கான பொருளியல் பலத்தைப் பெறுகின்றன. அதாவது கள்ளப்பணத்தை பெட்டிகள்வழி
(சூட்கேஸ்கள்) பகிர்ந்து கொள்வது. சீட்டுபேரமும், ஓட்டுபேரமும் அடிப்படையில்
பணமதிப்பில் நிகழ்த்தப்படுவதே கூட்டணிகளின் அரசியல். சாதியக் கட்சிகளின் தலைவர்கள்
தங்கள் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டே தங்களின் பேரமதிப்பை பெறுகிறார்கள்.
ஆக, கள்ளப்பணத்தின் சுற்றுவட்டத்தை
அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை உருவாக்குவதே இன்றைய தேர்தல்முறையின் அடிப்படையாக
மாறியுள்ளது. கள்ளப்பணம்-நல்லப்பணம்-கள்ளப்பணம் என்ற முடிவற்ற தொடர் விளையாட்டே
இதில் நிகழ்வது. கள்ளப்பணத்திற்கும் நல்லப்பணத்திற்கும் இடையில் உள்ள முக்கிய
வேறுபாடே, அது அரசாங்கத்தின் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு, சட்டவிதிமுறைகளை மீறி
அல்லது அதை ஏமாற்றிச் சேர்த்த பணம் என்பதே. ஆக, அரசாங்கத்தை ஏய்த்தவர்கள்தான்
அரசாங்கத்தை அமைக்க இந்த திருவிழாவை கோலாகலமாக்குகிறார்கள். வழக்கம்போல்
ஆடுகளத்தில் மக்கள் ஆட்டக்காய்களாக உள்ளனர். இதுதான் இந்த ஆட்டத்தில் மிகவும்
சுவராஸ்யம் தரக்கூடியது.
மக்கள் கட்சிகளாக, குழுக்களாக, சாதிகளாக
திரள்வதன் வழியாக உருவாகும் அரசியல் நிறுவனங்களாக கட்சிகள் மாறியுள்ளன. கட்சி
என்பது வர்க்க உணர்வுபெற்ற முன்னணிப்படை என்றார் லெனின். பாட்டாளிகள்,
உழைப்பாளிகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க உணர்வுப்பெற்ற முன்னணிப்
படைகளைத் தவிர மற்ற ஒடுக்கும் வர்க்கத்தின் முன்னணிப்படைகள் களத்தில் நின்று
அதிகாரத்தைப்பெற நடத்தப்படும் தேர்தல் திருவிழாவில் கவனிக்க வேண்டிய ஒன்றுதான் இந்த
கூட்டணிகள். வெற்றிப் பெருவதற்கான வாய்ப்புள்ள கட்சிகளை கவிழ்ப்பதற்கும் தோல்வியடையக்கூடிய
கட்சிகளை வெற்றிப்பெறச் செய்வதற்கும்கூட கூட்டணிகள் உருவாக்கப்படுகிறது. இது ஒரு
புது அரசியல்பாணி அல்லது புதுவகை தேர்தல் அரசியல் ஆடுகள விளையாட்டு.
இவ்விளையாட்டில் முதன்மை அணி, இரண்டாம்
அணி என்பதாக பல அணிகள் உருவாக்கப்படுகிறது. அதாவது விளையாட்டுகளில் வெல்ல தனது
அணியை முதன்மைச் சுற்றிற்கு கொண்டுவர தனக்கு சாதகமான அணிகளை உருவாக்கும் உத்தி
இதிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கூட்டணி உத்தி இரண்டுவகையானது ஒன்று
கலையும் கூட்டணி மற்றது கலக்கும் கூட்டணி. மற்ற எல்லாக் கூட்டணிகளும் தேர்தலுக்கு முன்னும்
பின்னும் தொண்டர் கூட்டத்தை கலைக்காமல் தன் பின்னால் கூட்டிச் சென்றுவிடக்கூடிய
வெறும் தேர்தல் கூட்டணிகள்தான். ஆனால், பா.ஜ.க. கூட்டணி என்பது ஒரு ஆக்டோபஸ்
கூட்டணி. அதாவது கலையும் கூட்டணியல்ல, கலக்கும் கூட்டணி. தனது கூட்டணி கட்சிகளின்
தொண்டர்களை அப்படியே உறிந்துவிடும் அக்கட்சி. ஒவ்வொரு கூட்டணிக்கு பின்னும்
அக்கட்சி தமிழகத்தில் அதிக வாக்குகளைப் பெறுவதை ஆராய்ந்தால் இந்த உண்மை
புரியக்கூடும்.
காரணம் ப.ஜ.க. கூட்டணி தேர்தல் கூட்டணி
அல்ல. தேர்தல்களில் கூட்டணி வைப்பதன்மூலம் மாநிலக்கட்சிகளின் வேர்க்கால்மட்ட
மதஉணர்வுக்கொண்ட கட்சித் தொண்டர்களை அப்படியே கபளீகரம் செய்துவிடும் ஒரு ஆக்டோபஸ் இயக்கம்
பா.ஜ.க. காரணம் அதன் கருத்தியலும் பொய்யான பரப்புரைகளும், எற்படுத்தும் ஆசைகளும்,
உருவாக்கும் வேட்கைகளும் அதற்கு தீணி போடும் விதமுமாக அக்கட்சி தனது அடித்தளத்தை
பரப்பிவிடுகிறது. அதனால்தான் அது வெற்றி தோல்விபற்றிய கவலையில்லாமல் எல்லா
கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்கிறது. இரண்டு சீட்டுகள் மட்டுமே கொண்டிருந்த
பா.ஜ.க. பின் ஜனதாதளக் கூட்டணியில் 85 இடங்கள் பெற்றது. தொடர்ந்து இன்றுவரை கூட்டணிகள்
அமைப்பதும் அதன் பின் தனது சீட்டு எண்ணிக்கையை அதிகரிப்பதுமாக இருக்கிறது. அதோடு
கூட்டணி வைத்த கட்சிகள் அதன்பின் தங்கள் பலத்தை இழந்து நிற்பதும் இதோடு இணைந்து
நோக்கத்தக்கது. இது இந்துத்துவத்தை வேர்க்கால் மட்டத்தில் கொண்டு செல்வதற்கான அதன்
உத்தியே தவிர தேர்தல் மற்றும் ஜனநாயகம் போன்ற அமைப்புகளில் அக்கட்சிக்
கொண்டிருக்கும் நிலைப்பாடு அனைவரும் அறிந்ததே.
பா.ஜ.க. மற்றக்கட்சிகளைப்போன்ற ஒரு அரசயில்கட்சி அல்ல. அதனால்
பா.ஜ.க. கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல, தனது இந்துத்துவ தொண்டர்களை தேடும் கூட்டணி
திரட்டும் கூட்டணி என்பதால் அதோடு கூட்டணி அமைக்கும் கட்சிகள் எச்சரிக்கை கொள்வது
அவசியம். ஊரில் ஒரு கதைசொல்வார்கள். ”நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டுவருகிறேன்
இருவரும் ஊதி ஊதி தின்போம்” என்று. இப்போது அரசியோடு யார் வருவார்கள் என உமியுடன்
காத்திருக்கிறது என்ற எச்சரிக்கையை கையில் ஒன்றிரண்டு அரிசி வைத்துள்ள கட்சிகள்
கவனத்தில் கொள்வது நல்லது.
-ஜமாலன் (06-03-2016) - மின்னம்பலம் இணைய இதழில் வெளிவந்தது.
x
0 comments:
கருத்துரையிடுக