கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை அறிவித்த சார்ல்ஸ் டார்வின், மனதின் நுட்பத்தை கண்டறிவித்த உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட், பிரபஞ்ச ரகசியத்தின் புதிரை விடுவிப்பதற்கான சார்பியல் தத்துவத்தை அறிவித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின், இவர்களுக்கு நிகராக உலகின் சமூகவரலாறு பற்றிய அறிவியலை அறிவித்தவர் கார்ல் மார்க்ஸ். பிரபஞ்சம் அதில் வாழும் உயிர்கள், அதன் உயிரின வரலாறு, சமூகவரலாறு என ஒவ்வொரு தனிமனிதனின் உலகப்பார்வையை மாற்றியமைத்த முக்கிய சிந்தனையாளர்கள் இவர்கள்.
கார்ல் மார்க்ஸ் உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட பாட்டாளிகள், ஏழைகள் குறித்து தீவிரமாக சிந்தித்தவர். மனித உறவை ரொக்கப் பட்டுவாடா உறவாக முதலாளியம் மாற்றியமைத்ததுள்ளதை கண்ணடறிந்தவர். தனது தீவிர ஆய்வின்மூலம் பண்டம்/சரக்கு என்கிற முதலாளிய பொருளுற்பத்தியின் உயிர்நாடியை பகுப்பாய்வு செய்து அது மூலதனத்தை எப்படி ஓரிடத்தில் குவிக்கிறது என்ற தன்னிகரற்ற ஆய்வின்மூலம் மூலதனம் என்ற கம்யுனிஸ சிந்தனைக்கான ஆதாரநூலை முன்வைத்தவர்.
முதலாளியம் உழைப்பை அந்நியப்படுத்தி மனிதனை வெற்றாக மாற்றுகிறது என்பதையும், அது பாட்டாளிகளின் உழைப்பை சுரண்டி அவர்களது உபறியை உறிஞ்சி கொழிக்கிறது என்பதையும், சமனற்ற ஏற்றத்தாழ்வான பொருளுற்பத்தி முறையில் செயல்படுவதன் வழியாக அது தனக்குதானே சவக்கழியை தோண்டிக் கொள்ளும் என்பதையும் முரணியங்கியல் தர்க்கமுறையில் வெளிப்படுத்தி உலகின் எதிர்காலத்தை தீர்க்கதரிசனப்படுத்தியவர். முதலாளியம் உற்பத்தி செய்த பண்டங்களை விற்று உள்நாட்டு சந்தையை நிறைத்தபின், சந்தை தேடி அலைந்து அமேரிக்க, இந்திய, ஆப்பரிக்க கண்டங்களை கண்டுபிடித்த வரலாற்றையே கடல்வழிப்பயண வரலாறாக கூறுகிறது. இவ்வரலாற்றின், அதாவது காலனியத்தின், அறிவியலை தனது பொருளியில் பகுப்பாய்வில் வெளிப்படுத்தியவர் மார்க்ஸ். பொருளாதாராத்தின் அரசியலை வெளிப்படுத்தியவர். ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் முதலாளியப் பொருளியல் நலன் இருப்பதை கட்டுடைத்துக்காட்டிய சிந்தனைமுறையே மார்க்சியம்.
இதுவரையிலான தத்துவவாதிகள் உலகை விளக்கினார்கள் பிரச்சனை அதை எப்படி மாற்றுவது என்பதுதான் என்று கடவுள், இயற்கை பேராற்றல், அப்பாலை சக்தி உள்ளிட்ட கருத்தியலான நம்பிக்கைகளை சிதைவாக்கம் செய்து அதற்குள் உறைந்திருப்பது உழைப்பைச் சுரண்டும் முதலாளிய லாபவெறியே என்பதை வெளிப்படுத்திக் காட்டியவர். உலகை மனிதர்கள் இத்தகைய கருத்தியலால் தலைகீழாக உணர்கிறார்கள் என்றார். கருத்தியல் என்ற ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்தது அவரது தத்துவார்த்த சிந்தனையில் தனிச்சிறப்பான ஒன்றாகும். கருத்தியல் என்ற சிந்தனைவழியாக எப்படி ஒவ்வொரு மனித உடலும் தனக்குள் தவறான பிரக்ஞையைக் உலகப்பார்வையாகக் கொள்கிறது என்பதை விவரித்தவர்.
மாற்றம் ஒன்றைத்தவிர மாறாதது உலகில் இல்லை என்று உலகின் இயங்கு சக்தி மனித உழைப்பும் அதனால் மாறிக் கொண்டே இருக்கும் உலகம் என்பதையும் தனது சிந்தனைகள் வழி மெய்ப்பித்துக் காட்டியவர். தனது வாழ்வு முழுவதையும் உலகப் பாட்டாளி வர்க்கம், ஏழைகள் மற்றும் சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒடுக்கப்பட்ட மனிதர்கள்பற்றி மட்டுமே சிந்தித்தவர்.
உணர்வு ஒருவரது வாழ்நிலையை தீர்மாணிப்பதில்லை, வாழ்நிலையே உணர்வை தீரமாணிக்கிறது என்று புற உலகும் அதன் பொருளாயுத உறவுகளுமே மனித உணர்வை, சிந்தனையை தீர்மாணிக்கிறது என்பதை தனது சிந்தனைகளின் விதையாக முன்வைத்தவர். சிந்தனையும், உணர்வும் யதார்த்தத்தை படைத்துக் காட்டுகிறது என்கிற அகநோக்கிலான கருத்துமுதல்வாதத்தை அடித்து நொறுக்கி, வாழும் சூழல்தான் ஒருவரது உணர்வை, சிந்தனையை தீர்மாணிக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டினார். சமூகப்புரட்சி அதன் உள்ளார்ந்த பொருளியல் முரண்களால் தீர்மாணிக்கப்படுகிறது என்ற அவரது கருத்தாக்கம் ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளின் புரட்சிகர வரலாற்றால் நிரூபிக்கப்பட்டது.
மார்க்ஸின் வாழ்க்கை முட்செடிகள் நிறைந்த ஒருவேளை உணவிற்கும் வழியற்றதான வறுமை நிறைந்த வாழ்க்கை மட்டுமல்ல தொடர்ந்து ஓரிடத்தில் தங்கமுடியாது அதிகாரத்தால் தடைசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நாடோடி வாழ்க்கை. உலக வறுமையைப்போக்க சொந்த வாழ்வை வறுமையாக்கிக் கொண்டவர். அவரது மனைவி ஜென்னி மார்க்ஸ் தனது குழந்தை ஒன்று இறந்தபோது நண்பர் ஒருவருக்கு கடிதம் எழுதினார் ”இப்பிள்ளை பிறந்தபோது தொட்டில் வாங்க பணம் இல்லை இறந்தபோதோ சவப்பெட்டி வாங்க பணம் இல்லை” என்று. இத்தனைக்கும் ஜென்னி மார்க்ஸ் ஜெர்மானிய பிரஷ்ய அரசாங்கத்தில் அமைச்சகத்தில் பணிபுரிந்தவரின் மகள். பிறப்பிலேயே செல்வந்தர். மார்க்ஸ் மீது கொண்ட காதலில் தனது கணவரின் அனைத்து துயரங்களையும் ஏற்று அவரோடு தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். மார்க்சியம் என்கிற கார்ல் மார்க்சின் தத்துவ சிந்தனையின் உருவாக்கத்திற்கு ஜென்னி மார்க்சின் அளப்பறிய தியாகம் முக்கியமானது. மார்க்ஸை அவரது சுதந்திர சிந்தனையோடு இறுதிவரை வறுமையில் போராடிக் காத்தவர் ஜென்னி.
மார்க்ஸின் அளப்பறிய சிந்தனைவளத்தைக் கண்டுணர்ந்து இறுதிவரை தனது நட்பின் வழியாக அவரது எழுத்துக்களுக்கு பலமாகவும், அவரது குடும்ப வறுமைக்கு உதவியாளராகவும் இருந்து மார்க்சியத்தை உருவாக்கிய ஏங்கல்ஸ் நட்பிற்கு ஒரு இலக்கணமாக இருந்தவர். மார்க்சிய சிந்தனையில் குடும்பம், அரசு, பெண்நிலை, அறிவியல், மதம் போன்ற கருத்தியல்கள் குறித்த பகுப்பாய்வை மார்க்சிய வழியில் நின்று எழுதிக்காட்டி அச்சிந்தனைமுறையை வளப்படுத்தியவர் ஏங்கல்ஸ். மார்க்சிய சிந்தனை என்பது இவ்விரட்டையர்களின் ஒரு பிரிக்கவியலா கலவையில் உருவான சிந்தனையே.
மார்க்சியம் என்பது இன்று உலகளாவிய ஒரு சிந்தனையாக சமூக மொழியில் சிந்தனையில் ஆழ்தளத்தில் இறங்கியுள்ளது. இன்றைய உலகின் எந்த மாற்றுச் சிந்தனையும் அல்லது புதிய சிந்தனையும் மார்க்சியத்துடன் ஒரு உரையாடல் இன்றி தன்னை முன்னகர்த்த முடியாது. மார்க்சியம் ஒரு அரசியல் நனவிலியாக, சமூக நனவிலியாக மாறியுள்ளது. அதனோடு நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ளாமல் எந்த சிந்தனையும் சாத்தியமில்லை. காரணம் மார்க்சியம் உலக மாற்றம், சமூக மாற்றம் என்பதை தனது அடிநாதமாகக் கொண்ட ஒரு சிந்தனைமுறை. புதியதொரு வாழ்வை அதற்கான சாத்தியங்களை திறந்துகாட்டிய சிந்தனைமுறை.
உலகில் தேசம் இனம், மதம், சாதி, பால் என்பவை மனிதன் மற்றும் வரலாறு கட்டமைக்கும் மனிதமைய சாராம்சவாதத்தை அடிப்படையாகக் கொண்டவை. மனிதனின் பெருந்துயரங்களுக்கு காரணமாக உள்ள இப்பல்வேறு அடையாளங்களின் கூறுபாடுகளிலிருந்து, மனிதனை ஒடுக்கப்பட்டவன், ஒடுக்குபவன் என்கிற சாராம்சமற்ற, வலைப்பின்னல்களில் உருவாகும் இணைந்தும், கலைந்தும் போகக்கூடிய நெகிழ்ச்சியான ஒரு அடையாளமாக மார்க்சியர்களால் முன்வைக்கப்பட்டதே “பாட்டாளி வர்க்கம்”. அது பிறப்பை அடிப்படையாகக்கொண்ட ஒரு அடையாளம் அல்ல. எளிமையாக ஏற்கவும், விலகவுமான ஒரு அடையாளம். வரலாற்றில் ஒரு புதிய மக்கள் தொகுதியை உருவாக்கிய அடையாளம். அதற்குள் மனித குலத்தோற்றத்திலிருந்து உருவாகிவந்ததான வரலாற்றுக் கதையாடலின் தொடர்ச்சியோ, அல்லது மனித உடலுக்குள் தங்கி உள்ளதாக சொல்லப்படும் மூலப்படிம உணர்வின் சாராம்சப் பண்போ இல்லை.
மார்க்ஸ் கூறினார் “மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விரும்பும்படியெல்லாம் அதை உருவாக்குவதில்லை. அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட ‘சூழ்நிலைமை‘களில் அதை உருவாக்குவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக எதிர்கொள்ளும், கடந்த காலத்திலிருந்து கைமாற்றித் தரப்பட்ட, குறிப்பிட்ட ‘சூழ்நிலைமை‘களில்தான் அதை உருவாக்குகிறார்கள். இறந்துபோன தலைமுறையினரின் மரபு, உயிருள்ளவர்களின் மூளையை ஒரு அமுக்கு பேய்போல அமுக்கிக் கொண்டிருக்கும்.”
பாட்டாளி வர்க்க அடையாளம் என்பது மார்க்ஸ் மரபு என்கிற பழங்கதைகளை உருவகப்படுத்தி சொன்னதைப்போல, ஒரு அமுக்குப்பேய் அடையாளம் அல்ல. அது ஒருவர் உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் தன்னிலை சார்ந்த அடையாளம். அதாவது, பாட்டாளிவர்க்க அடையாளத்தில் சாராம்சம் இல்லை, இருப்பு அல்லது இருத்தல் மட்டுமே உள்ளது. நீங்கள் உணர்வுபூர்வமாக இயங்கும் சூழல் மற்றும் உங்கள் வாழ்நிலையில் அல்லது நீங்கள் இயங்கும் வலைப்பின்னல் அமைப்பில் தங்கியுள்ள ஒரு அடையாளம்.
உலகத் தொழிலாளிவர்க்கம் என்பது பிழைப்புவாத, தொழிற்சங்கவாத, கூலி-வாத சிந்தனைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு பல அரசியல், சாதி, மத, இன அடையாளங்களுக்குள் இறுகி இன்று ஒற்றுமையற்று எண்ணற்ற குழுக்களாக பகைகொண்ட அமைப்புகளாக மாறிவிட்டது. சமூகப் பொருளாதாரப் புரட்சியின் தலைமைச் சக்தியாக மார்க்ஸால் கணிக்கப்பட்ட பாட்டாளிவர்க்கம் இன்று தன்னை ஒரு சராசரி பிழைப்புவாத வர்க்கமாக மாற்றிக்கொண்டுவிட்டது. ஆனால், “மரம் ஓய்வை நாடினாலும் காற்று விடுவதில்லை“ என்பதைப்போல.. இன்றைய கடுமையான பொருளாதார நெருக்கடி மீ்ண்டும் பாட்டாளிவர்க்கத்தை ஒற்றுமைக்கு கொண்டு செல்லும். புரட்சி, விடுதலை என்பது மார்க்சியம் கண்ட ‘உன்னதக் கனவா‘? அல்லது பின்நவீனத்துவவாதியான லியோதார்த் கூறியதுபோல ‘உன்னதக் கதையாடலா‘ (Grand Narration)? என்பதை வரலாறு வெளிப்படுத்தும்.
வரலாறு என்பதை மனிதன் உருவாக்குவதில்லை. அது ஒரு அமைப்பின் கட்டமைப்பு. அதாவது சூழலின் தேர்வு. மனிதன் சூழலால் தீர்மாணிக்ப்பட்டு, சூழலால் கட்டுப்படுத்தப்பட்டு வரலாற்று இயக்கத்திற்குள் இழுத்துச் செல்லப்படுகிறான். மனிதர்கள் வரலாற்றை உருவாக்குவதில்லை. சமூக வரலாறுதான் மனிதர்களை உருவாக்குகிறது. எப்பொழுதும் மனித உடலானது சமூக வரலாற்றிற்குள் விதைக்கப்படுகிறது. சமூக வரலாற்றிற்குள் வளர்கிறது.
முதலாளித்துவம் தனக்கான தேசஅரசை உருவாக்க பாட்டாளி வர்க்கம் என்பதற்கு எதிராக இனம் என்கிற கருத்தாடலை தனது வரலாற்றுக் கதையாடல்கள் மூலம் பெருக்கியப்படியே உள்ளது. இனம் என்பதை பிறப்பின் அடையாளமாக மாற்றுகிறது. அதற்கு ஒரு மூலப்படிம உணர்வு இருப்பதாக கதைகளை எடுத்துரைக்கிறது. அதற்கு வரலாறு என்கிற ஆணிவேர் ஆதார அடிப்படையிலான ஒரு அறிவியல் சார்ந்த பகுத்தறிவு விளக்கம் சொல்கிறது. மனிதனை அழிக்கும் வரலாற்றைவிட, மனித குலத்தை வாழவைக்கும் தொன்மங்கள் மேலானவையே. ஏனென்றால் தொன்மங்கள் அழித்ததைவிட வரலாறு அழித்தவை ஏராளம். அதனால்தான் தொன்மங்களை காட்டுமிராண்டிகளின் கதையாடல் என்கிறது. அறிவியல்பூர்வமாக, பகுத்தறிவின் அடிப்படையில் மனிதர்களை அவர்களது உடலை எண்ணி அளந்து அறுதியிட்டு இனம் என்பதாக பிரிக்கிறது. அதற்கு மொழியை மூலமாக ஆக்குகிறது. காரணம் மொழிதான் உலகை படைக்கிறது என்பதை நம்மைவிட அதிகாரம் மிகச்சிறப்பாக புரிந்துகொண்டுள்ளது. மொழியற்ற உடலால் இந்த உலகை உணரமுடியாது என்பதால் மொழிகளை பெருக்கி தனது ஊடகங்கள் வழியாக பரவலாக்கிக் கொண்டேயுள்ளது.
ஆக, மொழி, இனம் போன்ற கூறுகளை சாராம்சமாக ஆக்குவதன்மூலம் மனிதர்களின் மண்டைக்குள் மரபு என்கிற வரலாற்றை ஒரு அமுக்குப்பேயாக உட்கார வைத்துள்ளது. இது இன்றைய புதிய வரலாற்றுவாதத்தினை முன் அனுமானிக்கும் ஒரு வாசகம் எனலாம். மார்க்ஸ் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை இதுபோன்ற எண்ணற்ற வாசகங்கள் வலியுறுத்துகின்றது.
மார்க்ஸ்க்கு திரும்புதல் என்பது சமீபத்திய உலகளாவிய பொருளியல் நெருக்கடியின்போது உலகளவில் உருவான ஒரு கருத்தாக்கம். மீண்டும் உலகச்சிந்தனை மார்க்ஸியத்திற்கு திரும்பும் நிலை நோக்கி சமூக முரண் உந்தித்தள்ளுகிறது. நிதமூலதன ஆதிக்கத்திற்குள் சிக்கிவிட்ட இன்றை கார்ப்ரேட் என்கிற உலகமுதலாண்மை முதலாளித்துவம் தனது உள்நெருக்கடிகளில் சிக்கி வங்கிகள் திவாலாகி, கடன் அட்டை மற்றும் வங்கிக்கடன் பொருளாதார வலைப்பின்னலுக்குள் மனிதர்களையும், அரசுகளையும் சிக்கவைத்துள்ளது. தனது கார்பரேட்மயத்தை கிராமங்கள்வரை விரிவாக்கியுள்ளது. இதுதான் உலகமுதலாளியத்தின் முரண் முற்றும் நிலை. அல்லது மார்க்ஸ்-ஏங்கல்ஸ் தீர்க்கத்தரிசனமாக கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையில் அறிவித்த முதலாளியம் தனக்கான சவக்குழியை தோண்டிக்கொள்ளும் என்பதற்கான துவக்கம் எனலாம்.
- ஜமாலன் (jamalan.tamil@gmail.com) 13-03-2016. மின்னம்பலம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை
0 comments:
கருத்துரையிடுக