லிங்கா எனும் பண்பாட்டு தேசியம்.

ஒரு வழியாக லிங்கா பார்த்தாகிவிட்டது. எல்லாம் kickass புண்ணியத்தில்தான். (தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பாள நண்பர்கள்  இதை பதம் பிரித்து மொழிபெயர்த்து விடாதீர்கள்.) இதில்தான் பின்நவீனம் உள்ளிட்ட பல புத்தகங்கள், உலகப்படங்கள், அருமையான பல ஆவணப்படங்கள் எல்லாம் பதிவிறக்கம் செய்து பார்க்க முடிகிறது. (இன்னும் இதை இங்குள்ள அரசு தடை செய்யவில்லை.)

படத்தில் என்னை பிரம்மிக்க வைத்தது கே. எஸ். ரவிக்குமாரின் அபாரமான மூளைத்திறன்தான். ரஜனி என்கிற பிம்பத்தையும், தமிழக ரசிகர்களின் நாடித் துடிப்பையும் துல்லியமாக உணர்ந்து சந்தைப்படுத்த தெரிந்த அந்த திறன். இவர்போன்ற கதை-சமைக்க தெரிந்தவர்கள் ரஜனி போன்றவர்களுக்கு வாய்த்திருப்பது லாபம். ஆனால் சினிமா பற்றிய சீரியஸான எண்ணம் கொண்டவர்களுக்கு இது துர்லபம். தமிழ் சினிமா மெல்ல மெல்ல நகர்ந்து ஏதோ ஒரு போக்கை பிடித்து சினிமா என்று ஒன்று எடுக்க முனைந்ததை, ஒரே அடியில் வீழ்த்தி சந்தையை சமநிலைப்படுத்தி வியபாரிகளை வளர்க்க தெரிந்திருக்கிறது இவருக்கு.

மறைந்துவிட்ட கதாநாயகனுக்கும் சாகாவரம் தந்துவிடக்கூடிய பிரம்மா ரவிக்குமார்தான் என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை. செண்டிமெண்டலான சில பொருட்களை வைத்துக்கொண்டு அதை மாற்றாமல் கதை பண்ணுவது என்பது அத்தனை எளிதல்ல.

அது என்ன செண்டிமெண்டலான (மெண்டலான  என்று தனியாகப் படித்தால் அது உங்கள் கோளாறு) பொருட்கள்.

1. பாம்பு (அண்ணாமலை-சந்திரமுகி)

2. நணபர்களாக இரண்டு அல்லக்கைகள் (பெரும்பாலும் கவுண்டமனி செந்தில் காம்பினேஷனில் கவுண்டமணி இடத்தை ரஜனி செய்வதுதான் ரசிகர்கள் குழந்தைகளுக்கு நகைச்சுவையாகத் தெரிகிறது. அதான் லூட்டியடித்தல்.)

3. தாடி (பாட்சா-படையப்பா)

4. மப்ளர்-சால்வை-துண்டு (பாபா-படையப்பா-அண்ணாமலை)

5. வெள்ளிக்கிழமை வெளியீடு (இது பொதுவாக தமிழ் சினிமாவிற்கான வௌயீட்டு வியபார செண்டிமெண்ட் வெள்ளிக்கிழமை படம் வெளியானால் வெள்ளிவிழா என்ற நம்பிக்கை)

6. கோவில் (இது இல்லாத ரஜனி படமே இல்லை எனலாம்.)

7. குறிப்பாக லிங்கம் (அருணாச்சலம்)

8. ஸ்கூல் பேக் (ராஜாதி ராஜா – படையப்பா)

9 பலூன்கள் (சந்தரமுகி)

10. உடலை சாய்த்தபடி மாடிப்படியில் இறங்கி வருதல் (நல்லவனுக்கு நல்லவன், படையப்பா)

11. ருத்ராட்சம் (அருணாச்சலம்)

12. பைக் (இருசக்கர வாகனம் - பாபா) 

13. அறிமுகப்பாடலில் கண்டிப்பாக எஸ்பிபி (பாபாவில் சங்கர் மகாதேவன் பாடி படம் படுத்துவிட்டபின் எஸ்பிபி யை மறப்பதில்லை.)

14. கோமாளி-சீரியஸான ஊர்க்காவலன் (இரட்டைகள் என்ற தத்துவத்தின் அடிப்படை எதிர்முரணான ஆக்டிவிஸம்)

15. அரசியலுக்கு வருவதான அறிவிப்பும் அதற்கான வசனங்களும். (இது அண்ணாமலையாக இருந்தாலும் லிங்கேணஸ்வரனாக இருந்தாலும் வசனம் வைக்கப்பட வேண்டும்.)

இத்தகைய பொருட்களை (அதாவது சினிமா மொழியில் பிராப்பர்ட்டி என்பார்கள்) வைத்துக்கொண்டு ஒரு கதையை தற்காலத்திற்கு ஏற்ப உப்பு புளி காரம் போட்டு சமைத்துக் கொடுக்க வேண்டும் என்றால் அந்த நளமகராஜனாலேயே முடியாது. கே. எஸ். ரவிக்குமாரால் முடியும் என்பதை நிருபிப்பதுதான் லிங்கா. இதான் அவரது அபிரிதமான மூளைத்திறன். ஜிகிர்தண்டா போல வெட்டி ஒட்டி இசை வசனம் மாற்றி பட நாயகனை வில்லனாக கோமாளியாக அசால்ட் குமாரை அழுகுனி குமாராக ஆக்க முடியும் சினிமாவால். சினிமா ஒரு சிருஷ்டி என்பதை புரிவது அவசியம். ஆனால் தமிழில் சினிமா என்பது மேற்சொன்ன செண்டிமெண்டல் உதரிப்பாகங்களை இணைத்து உருவாக்கப்படும் ஒரு சரக்கு, பண்டம்.

சரக்கு வழிபாடு பற்றி கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் விரிவாக பேசுகிறார். மக்கள் ஒரு பொருளை நிலையானதாக்கி, அதன்மீது தனது கற்பனைகளை கட்டமைத்து, அதன் உள்ளார்ந்து உள்ள பொருளியல் உறவுகளை அறியாமல், அதை வழிபடும் ஒருவகை மதம் சார்ந்த மனோவியலின் முதலாளிய வெளிப்பாடு. அந்த சரக்கை தயாரித்து அதற்கு பாலையும் பலூனையும் கொட்டி வழிபட வைப்பது என்றால் அது ரவிக்குமார் போன்ற பிரம்மவித்தை தெரிந்தவர்களால்தான் முடியும். ஒரு உள்ளீடற்ற நாயகனை வரலாற்று நாயகனாக மாற்ற முடியும் என்பதை தொடர்ந்து தமிழ் இயக்குநர்கள் நிருபித்துக் கொண்டுதான் உள்ளனர்.

மக்களிடம் நிலவிவரும் முல்லைப் பெரியார் அணைபற்றிய பொது புத்தி கதையில், ஒரு திரிக்கப்பட்ட வரலாற்றை திணிப்பதும், அதன் வழியாக தமிழின் இனமானக் காவலனாக ஒரு பிம்பத்தை கட்டமைப்பதும், அந்த பிம்பம் இந்தியன் என்கிற பெருந்தேசியத்தை முன்வைப்பதும், அதற்கு ஏற்ப தற்போதைய அரசியல் சூழல் கணிந்திருப்பதும் என்பதாக காவியடிக்கப்பட்ட தமிழ் தேசிய உணர்வை இந்திய தேசியத்தின் காவியில் கலப்பதற்கு வெறும் வியபார மூளை மட்டும் போறாது. அதைதாண்டிய ஒரு அரசியல் அவதானிப்பு தேவை. அந்த அவதானிப்பு கான்சியஸாக திட்டமிட்டு வரவேண்டிய அவசியமில்லை. கதையை சமைக்கும்போது அதில் வரும் சமூக போக்கின் சூடு மற்றும் சுவைகளில் அது தானாக விரவிவிடும். அப்படித்தான் லிங்கா பெயர் துவங்கி மரகத லிங்கம் வரை தனது அரசியலை நுண் தளத்தில் சரியாக செய்கிறது.

சினிமா ஒரு வேட்கை நிறைவு பிம்பத்தை கட்டமைப்பதன் வழியாக நாயகனை வழிபடுவதும், அவனது அரசியலை ஏற்பதும், அதற்காக தர்க்கிப்பதும், அதை பின்பற்றுவதும், அதில் வெறிகொள்வதுமாக வேதித் தனிமங்களை உடலின் நுண்புழைகள் வழியாக உள்ளிறக்கி விடுகிறது.  சினிமாவிற்கு தேவை உடல் மட்டும்தான். மனசு அல்ல. உங்களது சிந்தனையை சினிமாதான் சிந்திக்கிறது. உங்களது உடலை சினிமாதான் வழிநடத்துகிறது.

ரஜனி நாயகியை காப்பாற்ற (இடையில் ஊரையும் அணைக்கட்டையும் காப்பாற்ற வேண்டும்.  எத்தன…. ஒரு தனிமனிதனாக 3 மணிநேரத்தில் அந்த திரைக்குள் அவர் காப்பாற்றுவார்.) பைக்கில் புறப்பட்ட நொடியில் காமிரா கட் செய்து, கட் செய்து காட்டும் காட்சியில் முக்கியமானது அவர் தனது இராணுவத்தனமான பூட்ஸ் காலால் பைக்கின் கீரை அனாசியமாக தட்டுவது. இக்காட்சி மட்டும் ஒரு நொடிக்குள் இரண்டு வெவ்வேறு இடங்களில் காட்டப்படும். கதாநாயகி அலற இங்க கால்கள் கீரை தட்டும். இத்தகைய சில நொடி பிம்பங்கள் உருவாக்கும் உள்ளுணர்ச்சிகள் அதிகம். அதுதான் ரஜனி என்கிற ஆண்மையின் பிம்பமாக மனதில் பதிகிறது. ரஜனி என்கிற பிம்பத்தின் அத்தனை ஆண்மையும் அந்த சில நொடி கீர் போடுதலில் எண்ணற்ற பார்வையாளர்களின் ரசிகர்களின் மனதில் உறைகிறது. அப்புறம் அப்புறம் என்ன நம்ம ரோட்ல வீட்லு காட்ல என கீர் போட வேண்டியதுதான் பாக்கி. படத்தில் இப்படி திட்டமிட்ட எண்ணற்ற காட்சிகளை வகைப்பிறித்தறியலாம். இது ஒரு சோறுதான். இப்படி சட்டி நிறைய ஆக்கி வைத்து உள்ளார்கள்.

முல்லைப் பெரியாறு அணைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் உண்டா என்றால் ரவிக்குமார் இல்லை என்பார். பார்வையாளன் அந்த சம்பந்தத்தை தனது மூளையில் பதித்துக்கொண்டால் போதும்தானே. ரஜனி அணைக்காக மக்களைத்திரட்ட இந்திய தேசியக் கொடியை பிடித்து இந்தியண்டா என்ற கரகர குரலில் கர்ஜி்ப்பதும், அரசியல் கட்சிகள் குறிப்பாக தேசியம் பேசும் ப.ஜ.க. போன்ற கட்சியின் கர்ஜனையும் ஒன்றாக கலந்தவிடும் பார்வையாளனுக்கு அது போதுமே. வரலாறாவது மண்ணாங் கட்டியாவது.

மைசூர் மகாராஜா, மதுரை கலக்டர், சென்னையில் ஜேப்படித் திருடன், மாட்டுபண்ணைவைத்து பால்கறக்கும் சமையல்காரன், இங்கிலாந்தில் ஐசிஎஸ் படித்தவர், சிவில் இன்ஜீனியர் இப்படி ஒரு வரிசையை ஒரே நடிகரை சிலுவைபோல் சுமக்க வைத்து பாவத்தை கழுவ ரவிக்குமார் ஒருவரால்தான் முடியும். கட்டிலுக்கு அடியில் பெண்ணாக மனஉவகை கொண்டு திருடனிடம் அதிலும் படித்த டீவியில் பணிபுரியம் ஹைஃபை நாயகி அவரிடம் சில்மிஷம் செய்வதெல்லாம் பேசினால் நிறைய எழுத வேண்டும்.

சரி இந்த கதை போலிசெய்துகாட்டும் முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பற்றிய வரலாறு சினிமாவில் உண்மையாக காட்டப்பட வேணடுமா? இப்படி கேள்வி கேட்பது அபத்தம். காரணம் சினிமா உண்மையும் அல்ல பொய்யும் அல்ல அது சினிமா. அது உண்மைபோல காட்டப்படும் பொய் அல்லது பொய்போல காட்டப்படும் உண்மை. நாம் உண்மை பொய் என்ற இருமைகளை மீறி சிந்திக்கமுடியாத எளிமைப்படுத்தப்பட்ட சிந்தனையில் இருத்தி வைக்கப்பட்டு உள்ளோம். சினிமா உண்மைக்கும் பொய்க்கும் இடையில் உள்ள மற்றொரு யதார்த்தம். அந்த யதார்த்தம் உண்மையைவிடவும் பொய்யைவிடவும் வலிமையானது. அதனால்தான் சினிமா தொடர்ந்து நம்மை தொந்தரவு செய்கிறது. லிங்கா போன்ற படங்கள் வரும்போதும் கொண்டாடப்படும்போதும் பெருங்கவலையும் பேரச்சமும் சூழ்கிறது. ஒரு நாயகனை எந்த அளவிற்கு அவனே சலித்தும் புளித்தும் போகும் அளவிற்கு உயர்த்தி உருவாக்க முடியுமோ அந்த அளவிற்கு இதில் உயர்த்தப்பட்டு உள்ளது.

ரோலான் பர்த் எந்த ஒரு சொல்லுதலுக்குள்ளும் (நேரேட்டிவ்) ஐந்துவிதமான சொல்முறைச் சங்கேதங்கள் (Narrative codes) இருக்கும் என்று தனது S/Z என்ற நூலில் விவரிக்கிறார். அதில் ஐந்தாவது சங்கேதம் கலாச்சார சங்கேதம். அதாவது பண்பாட்டு சங்கேதம். இதுதான் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஆதிக்கம் செய்யும் சங்கேதம். தொடர்ந்து வாழும் மக்களின் பண்பாட்டை அடையாளப்படுத்திக்காட்டி உறுதிப்படுத்தும் ஒன்று. லிங்கா அப்படி உறுதிப்படுத்தும் பண்பாடு… இந்தியா எனப்படும் ஒற்றைத் தேசியத்தின் பண்பாடு. அதாவது இன்றைய அரசியலில் சொன்னால் பண்பாட்டு தேசியம். இது யார் யாருக்காக முன்வைக்கிறார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

லிங்கா பார்த்தபின் மனதில் தாங்கவியலாத சோர்வும், துயரமும், துக்கமும் வருவது எனக்கு மட்டும்தானா என்றும் தெரியவில்லை. ஈஸ்வரா….  

- ஜமாலன். (14-12-2014)

2 comments:

manjoorraja சொன்னது…

அதான் நேத்தே எழுதினேனே!.... எல்லாம் கலந்த கலவை. நீங்களும் அதே உணர்வுடன் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஜமாலன் சொன்னது…

ஆச்சர்யமோ அதிசயமோ படும் அளவிற்கு அதில் ஒன்றுமில்லை. ரஜனி பலூன் இல்லாமல் பறக்கிறார் ஜாக்கிசான் போல என்பதைத் தவிர.

ஜமாலன். Blogger இயக்குவது.