ஒளிரும் கல்லால் இருளும் வாழ்வு – “மிளிர் கல்” ஒரு அரசியல் வாசிப்பு

நண்பர் இரா. முருகவேல் அவர்களின் ”மிளிர்கல்” என்ற நாவலுக்கு அந்நாவல் வெளிவந்த புதிதில் அதன் பிடிஎப் வடிவை படித்தவிட்டு எழுதிய திறனாய்வு. நிழல் இதழில் வெளிவந்தது. இதனை புத்தகச் சந்தையை ஒட்டி பதிவில் வெளியிடலாம் என்ற எண்ணியபோது அந்நாவலுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. அதனால் வெளியிடுவதை தவிர்த்தேன். தற்போது நண்பர்களின் வாசிப்பிற்காக வெளியிடுகிறேன். 

மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் மனிதகுல வரலாற்றை அதன் சமூக உருவாக்கத்தை ஒரு புனைவுக் கதையாடலாக உருவாக்கிய ராகுல சாங்கிருத்யாயனின் ”வால்கா முதல் கங்கை வரை” புனைகதையாகவும் அதேநேரத்தில் மார்க்சிய பொருள்முதல்வாத அடிப்படையில் வரலாற்றை விவரிப்பதாகவும் எழுதப்பட்ட நாவல். அந்நாவலைப்போன்று சமணத் தத்துவத்தையும் வணிக வர்க்க பின்னணியின் எழுச்சியையும் அடிப்படையாகக் கொண்டு தமிழக நிலப்பரப்பை ஒரு வரலாற்றை கதையாக கட்டமைத்த சிலப்பதிகாரத்தையும், அதன் பாட்டுடைத் தலைவியான கண்ணகி என்ற பத்தினி தெய்வ பிம்பத்தையும் ஒரு ஆய்வுப் புனைவாக முன்வைப்பதே இரா. முருகவேல் எழுதியுள்ள ”மிளிர் கல்” என்கிற நாவல்.

சாங்கிருத்யாயன் நாவல் முற்றிலும் புனைகதையாக கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்நாவலோ கண்ணகியின் புகார் துவங்கி மதுரை வழியாக கொடுங்காலூர் போய் கடவுளாக மாறிய பயணத் தடத்தை ஆவணப்படமாக எடுக்க முனையும் ஜேஎன்யு (JNU) மாணவியான முல்லை என்கிற பத்திரிக்கையாளரையும், அவளது நண்பனான நவீன் என்கிற மூன்றாவது அணி எனப்படும் மார்க்சிய லெனினிய இயக்க செயல்பாட்டாளனது பயணத்தையும் புனைவாக சொல்லும் நாவல். அவர்களோடு இணைந்து செல்லும் வரலாற்று ஆய்வாளரான ஸ்ரீகுமார் என்பவரோடு நடைபெறும் உரையாடல்கள் வழியாக கண்ணகி கதை மீள்கட்டமைப்பு செய்யப்படுகிறது.

சங்க இலக்கியத்திற்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட சிலப்பதிகாரம் தமிழ் இனக்கருத்தியல் வளர்ச்சிக்கான அடிப்படையாக அமைந்தது என்பதே இன்றைய தமிழ் அரசியல் வரலாறு. இந்த வரலாற்றுப் பின்னணியில் முகிழ்த்த பெண்ணிய சிந்தனையில் கண்ணகி என்பவள், அதீத சக்திகொண்ட அதிகார எதிர்ப்பு பெண்ணாக பிம்பப் படுத்தப்பட்டதும் இந்நாவலுக்கான பின்புலமாக அமைகிறது. பாண்டிய அரசாட்சியை வீழ்த்தி மதுரையை எரித்து தனது அதிகாரத்தை நிறுவிய கண்ணகியின் கால் சிலம்பின் மாணிக்கப் பரல்கள் ரோம-கிரேக்க வணிகத்தை தமிழகத்தில் பரப்பியதையும், அந்த கற்களுக்காக மூவேந்தரிடம் நிகழ்ந்த போரும் போட்டியும் இக்கதையாடலின் உள்சரடாக நாவலில் வாசிக்கப்பட்டு உள்ளது.

சிலப்பதிகாரம் என்பது தமிழ் பண்பாட்டோடும் நிகழ்கால தமிழ் தேசிய அரசியலோடும் கொண்டு உள்ள உறவை ஆராயும் முகமாக கண்ணகியின் கால்தடத்தோடு நடந்து செல்கிறது இந்நாவல். சிலப்பதிகாரம் பற்றிய எத்தனையோ தொன்மங்கள், கதைகள், ஆராய்ச்சிகள், அரசியல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றை எல்லாம் உள்வாங்கி இந்நாவல் சிலப்பதிகாரம் ஏன் உருவாக்கப்பட்டது, கண்ணகி ஏன் தமிழ் பெண்மையின் குறியீட்டு பிம்பமாக மாறினால் என்பதை நுட்பமாக தனது உள்கட்டமைப்பில் வைத்து பேசுகிறது.

இந்நாவலில் மூன்று கதை அடுக்குகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து செல்கிறது. இப்பிணைப்பை ஒரு புனைவாக்காமல் உரையாடல்கள் வழியாக மட்டுமே கட்டியிருப்பது நாவலை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை போன்ற வடிவத்திற்கு நகர்த்துகிறது. சிலப்பதிகாரம் உருவான ஒரு சமூக அடுக்கும், அதன்மேல் உருவாகி வந்து உள்ள இன்றைய நவீன சமூக அடுக்கும், அன்றும் இன்றும் மாறாமல் மக்களை, மூலவளங்களை கொள்ளையிடுவதற்காக பழங்குடிகளை ஒடுக்கி துரத்தியடிக்கும் அதிகார வேட்டையின் மாறாத அடுக்கும் என்ற இந்த மூன்று அடுக்குகளும் இந்நாவலின் பிணைந்தபடி செல்கிறது.

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற நூலை வாசிப்பவர்கள் அது ஒரு சுய வாக்குமூலமாக வெளிப்பட்ட ஆய்வுநூல் என்றாலும் அது எப்படி உண்மைகள் புனையப்படும் அரசியலைப் பற்றிய ஒரு வாசிப்புணர்வை ஏற்படுத்துகிறதோ அப்படி ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது இந்நாவல். அந்த நூலை தமிழ் சமூகத்தின் அதிகார அமைப்பிற்குள் வைத்து தளமாற்றம் செய்திருப்பதே இந்நாவல் என்றால் மிகையாகாது.

இயல்பானது, இயற்கையானது என பொதுபுத்தியில் உருவாக்கப்படும் “உண்மைகள்” எப்படி சமூக யதார்த்தம் மற்றும் புறநிலைகளால் கட்டமைக்கப்பட்டு ”உண்மையாக” தோற்றம் கொள்ளச் செய்யப்படுகிறது என்பதை ஒரு புனைவாக ஆக்க முனைகிறது இந்நாவல். அறிவு அதிகாரத்தோடு இணைவதன் வழியாக எப்படி இத்தகைய உண்மைகளை உற்பத்தி செய்கிறது என்பதே இந்நாவல் எடுத்துரைக்க முனையும் கதையாடலாகும்.

ஆனால் இதில் முழுவெற்றியை இந்நாவல் அடையமுடியாமல் ஆகியிருப்பது ஆசிரியரின் ”உண்மை” பற்றிய மரபான புரிதலடிப்படையில் தரவுகள், ஆதாரங்களை எடுத்துக் காட்டுதல் என்ற ரீதியில் பல இடங்களில் உருவாக்கப்பட்ட உரையாடல்களே. இத்தகைய உரையாடல்களை புனைவாக்க முனைவதில்தான் நாவலின் இலக்கியத்தரமும், புனைவாற்றலும் வெளிப்படும். அவற்றை நேரடி உரையாடலாக தருவதில் வாசிப்பவருக்கு அது புனைவின்பத்தை தருவதில்லை. முற்றிலுமாக இந்த நாவலை ஒரு புனைவாகவே மாற்றி எழுத முடியாதபடி இந்த உண்மைகள் பற்றிய அச்சமும், நிரூபணமும் ஆசிரியரை பல இடங்களில் புனைவிலிருந்து தடம் மாறச் செய்து உள்ளது.

உண்மைக்கான நிரூபணங்களை வேண்டி நிற்பது முதலாளித்துவ பகுத்தறிவு என்ற அறிவுசார் மரபின் ஒரு விளைவே. காரணம் நிரூபணம் என்பது முதலாளித்துவத்துடன் வளர்ந்த அறிவியல் என்கிற கருத்தாக்கத்துடன் உறவு கொண்டது. இது ஒருவகை காலனியத்தால் இங்கு கட்டமைக்கபட்ட பார்வை. இப்பார்வையே யதார்த்தவாத நேர்கோட்டு நாவலின் அடிப்படையை உருவாக்குவது. இதிலிருந்து விலகி முதலாளியம் உருவாக்கி உள்ள யதார்த்தத்தை, உண்மையை கட்டுடைத்து, சிதைத்து காட்டுவது இன்றைய புனைவிலக்கியத்தின் முக்கியச் செயல்பாடாகும்.

புனைவு என்பது உண்மையை தேடுவதோ, உண்மையை புனைந்துரைப்பதோ அல்ல. உண்மை என்கிற புனைவை, புனைவாக்கி காட்டுவதே. எழுத்துருக்களான பாத்திரங்கள் உண்மைகளாக அன்றி புனைவுகளாகவே நிற்பதன்வழி, ”உண்மைகள்” என்கிற அதிகாரத்தின் புனைவை அம்பலப்படுத்துவதும் சிதைத்து அழிப்பதுமே புனைவிலக்கியத்தின் குறிப்பாக ”முற்போக்காக” சொல்லப்படும் புனைவிலக்கியத்தின் அடிப்படை.

உலக நாவல் இலக்கியத்தை உருவாக்கிய மிகைல் செர்வாண்டிஸின் ’டான் குவிக்சோட்’ என்கிற புனைவிலக்கியம், 18-ஆம் நூற்றாண்டு நவீனத்துவ உருவாக்கம் எப்படி வரலாறு என்கிற ’உண்மை’யின்மீதும், அதன் உயர்குடி கதநாயக வழிபாட்டின் மீதும் கட்டப்படுகிறது என்பதை கிழித்துபோட்ட ஒரு பேரிலக்கியம். முதலாளியம் இப்படி பண்டைய வரலாற்றினை பகுத்தறிவு சொல்லாடலால் கட்டமைத்து நவினவரலாறாக்கி அதை ஒரு அறிவுசார் விஞ்ஞானமாக மாற்றி தன்னை கட்டமைத்துக் கொள்ளமுயல்வதை அந்த நாவல் தடம் கண்டு புனைவாக்கியது. வரலாற்றை அதி புனைவாகவும். அது எப்படி ஒரு கோமாளித்தனமான உருவாக்கமும் ஆன தன்னுருவாக்க புனைவு என்பதை வெளிப்படுத்தியது. முதுலாளியம் உருவாக்கிய இன்றைய இயல் உலகு பற்றிய பரோனியாவை தடம்காட்டிய முதல் நாவல் அது.

அதன்பின் உருவான யதார்த்தவாத நாவல் இலக்கியம் என்பது புனைவை உண்மையாக மாற்றியது. புறநிலையை துல்லியமாக்கிய புகைப்பட யதார்த்தவாதமாக புனைவிலக்கியத்தை மாற்றியது. இப்படியாக பல முதலாளியம் உருவாக்கிய புனைவு உலகை, உலக உண்மைகளை, பல உலக யதார்த்தங்களை நாவல்கள் உருவாக்கின. குடிகளை நாடாக்கியது காப்பியங்கள் குறிப்பாக சிலப்பதிகாரம் போன்றவை என்றால், நாடுகளை தேசியமாக்கியவை நாவல்களே. ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தைக் கட்டமைப்பதில் நாவல் இலக்கியத்தின் பங்கு முக்கியமானது. நாவல் புனைவுகள் உண்மைகளை உருவாக்குபவை. அல்லது உண்மையை நோக்கியதான பாய்வைக் கொண்டவையாக காட்டப்படுபவை.

17-ஆம் நூற்றாணடிற்குப் பிறகான உலகம் முதலாளியம் கட்டமைத்த உலகம். அதை இயல்பாக ஏற்பது ஒருவகை முதலாளிய பரோனியா. அந்தப் பரோனியாவிலிருந்து விலகாமல் உலகை ஊடுறுவிப் புரிவது கடினம். இந்த ஊடுறுவலை உருவாக்குவதே நவீன நாவல்களின், புனைவிலக்கியங்களின் முக்கிய பணியாகும். அதனால் உண்மைகளாக ஏற்க்கப்பட்ட, இயல்பாக்கப்பட்ட யதார்த்ங்களை சிதைத்து ஊடுறுவிச் செல்லும் புனைவுகளே முற்போக்கான திசைவழிக் கொண்டவை. உண்மைக்கும், பொதுபுத்திக்கும் எதிரான கலகமாக, கட்டுடைப்பாக புனைவிலக்கியம் செயல்பட வேண்டும்.

உண்மை இல்லை, ஆனால் உண்மைகள் உண்டு. பல உண்மைகள் இருப்பதால் ஒன்று உண்மையாக மற்றதை பொய்யாக்கும், புனைவாக்கும், மறைக்கும் விளையாட்டு அதிகாரத்தால் இயக்கப்படுகிறது. இவ்வாறு பல உண்மைகளை மறைத்து ஒவ்வொரு சமூக அமைப்பும் ஒரு ஒற்றை உண்மையை நோக்கியதாகவும் அல்லது பேருண்மை ஒன்றை நோக்கியதாகவும் கட்டப்படுகிறது. இத்தகைய உண்மைகளை சிதைத்து அதன் புனைவுக் கட்டமைப்பை வெளிப்படுத்துவதே இலக்கியப் புனைவின் முக்கிய செயல்பாடாகும். அந்தவகையில் தமிழ் சமூகத்தை நம்ப வைக்கப்பட்டுள்ள சிலப்பதிகாரம் பற்றிய உண்மைகளை, அதன் ஆதாரங்களைத் தேடிப்போகும் பயணத்தின் வழி அது ஒரு அதிகாரவர்க்கப் புனைவு என்பதாக கட்டவிழ்க்க முயல்கிறது இந்நாவல்.

ஒரு உண்மையை வாசிப்பாளனிடம் அல்லது மக்களிடம் நேரடியாக எடுத்துரைப்பது என்பது அறிவு என்கிற மூளை சார்ந்த புலன் பதிவோடு முடிந்துவிடும் ஒன்று. ஆனால் அதே உண்மையை ஒரு புனைவாக்கி இலக்கியமாக்கினால், அது வாசிப்பாளனை அல்லது மக்களை ஐம்புலன்களின் பதிவால், மூளையில் ஊடாட்டமாகி, மூளையின் பல பொறியமைவு செயல்களால் உடலின் ஒரு தன்னுணர்வற்ற செயலாக வெளிப்படுகிறது. இலக்கியம் உணர்வை, பிரக்ஞையை. தன்னுணர்வை உணர்வற்றதாக மாற்றி உடற்செயலாக்கி விடுகிறது. உடலின் செயலில் மட்டுமே அதன் தடத்தை உணர முடியும். ஒரு உடலை கட்டமைப்பது என்ற இச்செயலை இலக்கியங்கள் காலங்காகலமாக இப்படித்தான் செய்துவருகின்றன. கண்ணகியின் உடலை தமிழ் சமூகத்தின் பெண் உடல்களில் மையமாக பதியவும், படியவும் வைக்கப்பட்டுள்ளது சிலப்பதிகாரத்தின் வழி. தமிழ் பெண் உடல் கட்டமைப்பை அகழ்ந்தாள் உள்ளே கண்ணகியின் பேருடல் இருப்பதை காண முடியும். அது கற்பாக, பத்தினியாக தமிழ்தன்மையாக ஒவ்வொரு பெண் உடலுக்குள்ளும் வடிவமைந்து உள்ளது.

இலக்கியம் எழுதப்பட்டதாக மட்டுமின்றி பேசப்பட்டதாகவும், நாட்டார் தொன்மங்களாகவும் இருந்து தொடர்ந்து மனித உடலை மறுகட்டமைப்பு செய்துவருகின்றன. அதனால்தான் புனைவுகள், புராணங்கள், தொன்மங்கள் வழி மதங்கள் மக்களிடம் பரவி அவர்களை பற்றிப் பிடித்து உள்ளது. புராணங்கள் கடவுளை தன்வயப்படுத்தும் கதையாடலாகவும், தொண்மங்கள் இயற்கையை தன்வயப்படுத்தும் கதையாடலாகவும் உருவாகி வந்தவையே. புற உலகை நேரடியாக எடுத்துரைப்பது “உண்மை” என்ற தோற்றத்தையும், புனைவாக எடுத்துரைப்பது ”கற்பனை” என்ற தோற்றத்தையும் தருவது இந்த தன்வயப்படுத்தலின் ஒருவினையே. மனித உடல் கடவுள், இயற்கை, பேரண்டம் என தனது புற உலகை தன்வயப்படுத்தி, தனது அதிகார எல்லைக்குள் சங்கேதப்படுத்திக் கொள்வதற்கான ஒரு செயல்பாடே புனைவுகள். இப்புனைவுகளின் உடல் பாதிக்கும் உணர்வுகள் அறிவால் வாக்கியங்களாக கட்டமைக்கப்படும்போது அது உண்மைகளாக வடிவம் கொள்கின்றன.

ஆக, நேர் எடுத்துரைப்பிற்கும் இலக்கிய புனைவு எடுத்துரைப்பிற்கும் உள்ள இந்த வேறுபாடு முக்கியமானது. இதை வேறுவிதமாக கூறினால் ஒவ்வொரு சமூகத்தையும் கட்டமைப்பது அந்த சமூகத்தின் முந்தைய இலக்கிய புனைவாக்கங்களே. அவை உருவாக்கும் உண்மைகளும், பேருண்மைகளுமே. எனவேதான் அதிகாரத்தின் ஒரு கட்டமைவாகவும், அதேசமயம் அதிகாரத்தை கட்டுடைப்பதாகவும் இலக்கியம் செயல்படுகிறது. இலக்கியம் உருவாக்கும் புனைவு புதிய அக, புற பரப்புகளை உருவாக்கும் வல்லமை கொண்டது. இதற்கு சிறந்த உதாரணம் குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தை சொல்லலாம்.

சிலப்பதிகாரத்திற்கு தமிழில் அப்படி என்ன ஒரு முக்கியத்துவம் என்பதை புரிந்துகொள்ளாமல் இந்நாவலை அனுகமுடியாது என்பதால் அதைபற்றிய ஒரு சுருக்க விவரணையை கடந்தபின் நாவலுக்குள் செல்லலாம். சிலப்பதிகாரம் தமிழகம் என்கிற நிலப்பரப்பை இலக்கிய பிரதிக்குள் வரைந்து தந்த முதல் காப்பியம். மூவேந்தர்கள் ஆண்ட மூன்று நிலப்பரப்புகளையும், அதன் நகர்புற வரலாற்றின் வழி ஒருங்கிணைத்த ஒரு கதையாடல். ஒரு சமூகத்தை கட்டமைப்பதில் இலக்கியப் பிரதியின் பங்கை முதலில் செயல்படுத்திய ஒரு காப்பியம். மூவேந்தர்களின் தலைநகர்களில் பயணித்த இக்காப்பியம் அரசர், தெய்வம் போன்ற வழமையான காப்பிய நாயகர்களை விடுத்து ஒரு சராசரி குடிமகளை, குடிமகனை காப்பிய நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது உலகமயமாதலைப்போல நகர்மயமாதல் என்பதற்கான புனைவுப்பரப்பை உருவாக்கிய காப்பியம். அன்றைய பழங்குடிகள் நிறைந்த இன்றைய தமிழகத்தை, மூவேந்தர்கள் என்கிற பெருநில மன்னர்களின் ஒரு குடைக்கு கீழ் கொண்டுவந்த சமூக அசைவியக்கத்திற்கான ஒரு அறநெறியை உருவாக்கிய காப்பியம். அதாவது பழங்குடிகளை நகர்மய அரசுகள் தன்வயப்படுத்திய கதையே சிலப்பதிகாரம். பழங்குடிகளின் நாட்டார் தெய்வமான கண்ணகியை காளியாக்கி பெருமத அமைப்பிற்குள் உள்வயப்படுத்திய காப்பியம். இக்காப்பியத்தின் உருவாக்கம், உருவாக்கியவர் பற்றிய கதையாடல்கள் கூர்மையாக கவனிக்கப்பட வேண்டியவை.

தமிழ் என்கிற நவீன கருத்துருவாக்கத்தில் சிலப்பதிகாரம் ஒரு மையமான பிரதியாகும். தமிழ்நாடு என்கிற நிலலப்பரப்பை உருவாக்க மூவேந்தர்களின் நிலங்களை ஒருமித்த தமிழ் அடையாளத்திற்குள் கொண்டுவந்த ஒரு காப்பியம். இக்காப்பியம் மகாபாரதம் எப்படி இந்திய நிலப்பரப்பில் பல சிற்றினங்களை ஒருங்கிணைத்து ஒரு பேரரசு உருவாக்கத்தை நிகழ்த்தியதோ அதைப்போன்றதொரு தமிழக அரசு உருவாக்கத்திற்கான பழங்குடிகளை ஒருங்கிணைக்கும் கதையாடலே இக்காப்பியம். இக்காப்பியம் பற்றி பல நூறு ஆய்வுகள் வந்து உள்ளன. இதன் இலக்கியச் சிறப்பு, கவித்துவ மாண்பு மற்றும் அன்றைய தமிழர் வாழ்வியலைச் சொல்வது உள்ளிட்ட பலவும் இந்த காப்பியத்திற்கான ஆய்வுப்பொருளாக இருந்து வந்து உள்ளது. தமிழகத்தில் திராவிடக் கருத்தியலும் அதன் அரசியலும் எழுச்சி பெற்றபோது தமிழ் என்கிற கருத்துருவத்தை துலக்கப்படுத்திய ஒரு பண்பாட்டு ஆவணமாக மீள்கண்டு பிடிப்பு செய்யப்பட்டது இக்காப்பியம். கண்ணகி என்கிற காப்பியத்தின் பிம்பம் தமிழ்தாய் பிம்பத்திற்கான ஒரு அகவடிவமாக மாற்றப்பட்டது. கண்ணகியும் அவளது கற்பு நெறியும் தமிழ் பெண் உடல் கட்டமைவிற்கான மையமாக மாறியது.

பெரியாரால் விமர்சிக்கப்பட்ட இக்காப்பியம், ம.போ.சி போன்றவர்களால் தமிழ் தேசிய உருவாக்கத்திற்கான அடிப்படையாக முன்வைக்கப்பட்டது. கருணாநிதியால் திரைக்கதையாக்கப்பட்டு பூம்புகார் என்கிற திரைப்படமாக்கப்பட்டது. கண்ணகிக்கு சிலை வைப்பதும், அதை அப்புறப்படுத்துவதுமான ஒரு அரசியல் விளையாட்டும் நிகழ்த்தப்பட்டது. இப்படி பல அரசியல் சமூகவியல் கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக வாசிக்கப்பட்ட இக்காப்பியத்தை இந்நாவல் இடதுசாரி மார்க்சிய அடிப்படையில் வாசிக்க முயல்கிறது என்பதே இந்நாவலின் தனிச்சிறப்பு.

சமகால ஆய்வுகள், ஆய்வாளர்கள் பற்றிய குறிப்புடன் உருவாக்கப்பட்ட இந்நாவல், சமகால நபர்களையும் சந்திப்பதைப் பற்றி பேசுகிறது. இந்நாவலின் நாயகி முல்லை காஞ்சனை சீனிவாசன் என்கிற சமகால ஆவணப்பட இயக்குநர் பற்றியும், க. பஞ்சாங்கம் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் பற்றியும் பேசுகிறது. ஒருவகையான யதார்த்தவகை நாவல் போன்ற தோற்றத்தை தர முயன்றாலும் நாவலின் கதைவடிவம் ஒரு ஆய்வுக்கட்டுரைக்கான தன்மையிலேயே பல இடங்களில் நகர்கிறது. தான் சார்ந்த பழங்குடிகளின் அழிவுக்கு எதிராக நீதிகேட்டு நின்ற ஒரு பெண்வடிவை, வளர்ந்து வந்த வணிக சமூகமும், அதன் மதமான சமணமும் உள்வாங்கி இந்து பெருமத அமைப்பிற்குள்ளான கடவுளாக உருமாற்றிய கதையே சிலப்பதிகாரம்.

இலக்கியத்தின் அரசியலை வாசிப்பவருக்கு இந்நாவல் பல ஆழமான தகவல்களை ஆய்வுக்கான கூறுகளைத் தருகிறது என்றாலும், அரசியலை இலக்கியமாக வாசிக்கும் முயற்சியில் அரசியல் தூக்கலாகி இலக்கியம் உள்ளடக்கப்பட்டு உள்ளது. ஆனபோதிலும், அரசியலை இலக்கியமாக வாசிக்க முயன்ற இந்நாவல் இடதுசாரி இலக்கியத்தில் ஒரு முக்கியமான நாவலே. இன்றைய முதலாண்மை நிறுவனங்கள் எப்படி அறிவுத்துறையை பயன்படுத்தி தங்கள் வலைப்பின்னலை உருவாக்குகின்றன என்பதை சொல்லும் இந்நாவல், சிலப்பதிகாரம் என்ற பனுவலே அன்றைய தமிழக நகர்புற அரசதிகாரம் பழங்குடிகளை தனது அதிகார எல்லைக்குள் கொண்டுவர உருவாக்கப்பட்டது என்கிற வாசிப்பை முன்வைக்கிறது.

கண்ணகி என்கிற பழங்குடிகளிடம் உருவான ஒரு பெண் பிம்பம் நகர அரசு அதிகாரத்திற்கு எதிராக நகரை எரித்து அந்த அரசின் அதிகாரத்தை அழித்த கதையை, மேல்நிலையாக்கம் செய்து தமிழின் மேல்சாதி பாத்திரமாக்கி குறிப்பாக வணிக வர்க்கப் பாத்திரமாக்கி சிலப்பதிகாரம் என்கிற கதையாடல் கட்டமைக்கப்படுகிறது. அதாவது ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட கீழு்நிலையாக்கப்பட்ட பழங்குடிகளின் ஆற்றல்மிக்க பிம்பமாக, அவர்களின் நம்பிக்கையின் கடவுளாக, அதிகாரதிற்கு எதிரான ஒரு அழித்தொழிக்கும் பிம்பமாக இருந்த கண்ணகி ”வண்ணச்சீறடி மண்மகள் அறிந்நதிலள்” என்ற பத்தினி தேவமங்கையாக மாற்றப்பட்டு சிலப்பதிகாரத்தில் மேல்நிலையாக்கம் செய்யப்படுவதை தனது பயணத்தின் வழியாக உரையாடல்களின் வழி வெளிப்படுத்துகிறது இந்நாவல். பல வரலாற்றுத் தரவுகள் மற்றும் ஆய்வுகள் வழி இந்த முடிவை வந்தடையும் இந்நாவல் புறவடிவமாக கண்ணகி பற்றிய ஒரு ஆவணப்படம் எடுப்பதாக முல்லை என்ற பெண்ணின் வழி துவங்குகிறது.

கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி பயணித்த பாதையில் ஆய்வாளர் ஸ்ரீகுமார், இடதுசாரி நக்சல்பாரி இயக்க ஆதரவாளன் நவீன் மற்றும் ஆவணப்படம் எடுக்க விரும்பும் பத்திரிக்கையாளரான முல்லை பயணிப்பதே இந்நாவல். இந்த மூன்றுபேர் தேர்வு என்பது ஒருவகையான நவீன சிலப்பதிகாரத்தின் வடிவத்தை தருவதாக உள்ளது. அல்லது ஆசிரியரின் படைப்புச் சட்டகத்தில் இந்த மேற்பொருந்துதல் நிகழ்ந்திருக்கிறது. பண்டைய தமிழகத்தில் நிலவிய மிளிர் கல் எனப்படும் ஒளிவீசும் தன்மைக்கொண்ட மாணிக்கம், மரகதம், பவளம் உள்ளிட்ட பல கற்களின் வியபாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் கம்பம் பகுதியில் இத்தகைய கல்கள் அதிகம் கிடைக்கலாம் என்ற ஆய்வின் அடிப்படையில், சிலப்பதிகார சிலம்பின் மாணிக்கப் பரல்கள் என்பது இந்நாவலின் மற்றொரு கதை உருவாக்க மையமாக உள்ளது.

இந்த மிளிர் கல்களுக்காவே அன்றைய மூவேந்தர்கள் போர் புரிந்தும், மதங்களை பரப்பியும் பழங்குடிகளை அழித்தும், அப்புறப்படுத்தியும் தங்கள் அரசதிகாரத்தை நிறுவியதைப்போல, இன்றைய பகாசுர பண்ணாட்டு முதலாண்மை நிறுவனங்கள் காடுகளை அழித்தும், பழங்குடிகளை அழித்தும் அப்புறப்படுத்தியும் நாட்டு வளத்தை சுரண்டுவதை வெளிப்படுத்துகிறது இந்நாவல். இந்த கல்களை தேடி அடைவதற்காக வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுகளை ஊக்குவிக்கவும் அவற்றிற்கு நிதி உதவி அளிப்பதும் அதற்காக பல அரசுசாரா தொண்டு நிறுவனங்களை, ஆய்வகங்களை, ஆய்வு அமைப்புகளை உருவாக்குவதும், உபயம் (ஸ்பான்ஸர்) செய்வதும் நடக்கிறது. பல்கலைக்கழகங்கள் வழியாக ஊக்குவிக்கப்படும், நிதி அளிக்கப்படும் இத்தகைய ஆய்வுகள் வழி பண்ணாட்டு நிறுவனங்கள் ஒரு நாட்டின் மூலவளத்தை அறிந்து அவற்றை தனது முதலாண்மை நிறுவனங்கள் வழி சுரண்டிக் கொழிக்கின்றன. அறிவின் வழியாக அதிகாரம் கட்டமைவதை நிகழ்த்திக் காட்டகிறது.

இந்நாவலில் ஜே.கே. டைமண்ட்ஸ் என்ற நிறுவனம் இப்படி ஸ்ரீகுமார் என்கிற ஆய்வாளருக்கு உதவுவதாக கூறி அவரது அறிவை தனது கல்தேடும் செயலுக்கு பயன்படுத்துகிறது. உள்ளுரில் உள்ள முதலாளிகள் இதற்கு எதிராக அந்த குமாரை கடத்தி முதலாண்மை நிறுவனங்களிடம் பேரம் செய்து கொள்கிறார்கள். இவ்வாறாக ஒரு தரகு அதிகார வர்க்கம் தேசியமுதலாளித்துவத்தை ஒழித்து உருவாகுகிறது என்பதை சுட்டுகிறது இந்நாவல். நுண்ணளவில் சிறியதாக நிகழ்த்திக் காட்டப்படும் இப்புனைவு, பெரிய அளவில் நிகழும் உலகமயமாதலை, பண்டைய நகர்மயமாதல் என்கிற அரசு உருவாக்கத்துடன் இணைத்து விவரிக்கிறது.

கல்தேடும் பயணத்தில் ஆய்வுமுடிவுகள் கல் கிடைக்கும் இடத்தை ஊகித்தவுடன், அங்கிருக்கும் மூன்றாவது அணியான மா.லெ இயக்கத்தினர் வேட்டையாடப் படுகின்றனர். மக்களிடம் இயக்கங்களை கட்டி பண்ணாட்டு நிறுவனத்திற்கு எதிராக செயல்பட முடியாதவகையில் முதலில் சமூக உணர்வ கொண்ட புரட்சிகர இயக்கங்கள் அங்கு வேட்டையாடப்படுவதை நுட்பமாக வெளிப்படுத்திக் காட்டுகிறது இந்நாவல். அரசு திட்மிட்டு எப்படி தனது ஒடுக்குதல் வலையை விரிக்கிறது என்பதையும், அது எப்படி பண்ணாட்டு நிறுவனங்களுக்க சாதகமான சூழலை உருவாக்குகிறது என்பதையும் சொல்கிறது. அதிகாரத்தோடு அறிவுத்துறை இணைந்து இந்த திட்டமிடலின்வழி பண்ணாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மூலவளம் கொண்ட நாடுகளை மாற்றுவதை இநநாவலின் கதையாடல் விவரித்து செல்கிறது. ஒடிசாவில் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் எப்படி மூலவளக் கொள்ளைக்காக மாவோயிஸ்டுகளை அழிக்கிறதோ அப்படி கல் கிடைக்கலாம் என்கிற கம்பம் பகுதி ம.லே. இயக்கத்தினர் கைது செய்து இயக்கம் முடக்கப்படுகிறது.

பூம்புகாரில் துவங்கும் நாவல், அங்குள்ள மீனவர்கள் நிலை பற்றியும் தற்போதைய அரசியலில் அவர்கள் புறக்கணிக்கப்படுவதையும் சொல்கிறது. தமிழக அரசுகள் வரலாற்றின்மீது நின்று தங்கள் அரசியலை கட்டமைத்தாலும், வரலாற்றை பாதுகாக்க முடியாத தொல்பொருளியல் நிலையை விமர்சிக்கும் வண்ணம் காட்சிகள் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

பூம்புகாரில் விடுதியில் தங்கி உள்ள முல்லையிடம் பேசம் ஒரு பெண் பற்றிய மாயத்தன்மை புனைவின் ஒரு முக்கியமான இடம். அந்த பகுதியை வளர்த்து இறுதியில் கொடுங்கலூரில் முல்லையை காப்பாற்றும் பெண்வரை வளர்த்திருப்பதை நாவல் நெடுகிலும் ஒரு மாயத்தன்மைக் கொண்ட தொடரலாக வளர்த்திருந்தால் நாவல் செளுமையான புனைவாக மாறியிருக்கலாம். நாவலில் அகம் என்கிற ஒன்றே இல்லாமல் எல்லாம் புறவெளியில் நடக்கும் சித்தரிப்புகளாவே அமைக்கப்பட்டிருக்கிறது. நுன்னுணர்வுகள் விழிப்படையாத ஒருவகை புறவயமான எழுத்துருக்களாக பின்னப்பட்டுள்ள பாத்திரங்கள், புறநிலைபற்றிய உரையாடல்களில் செலுத்தும் கவனம் சிலப்பாதிகாரம் முன்வைக்கும் அகவெளி சித்தரிப்புகளை முற்றிலுமாக விலக்கிவிட்டது.

விளிம்பநிலை மக்களின் வாழ்வை மையத்தில் கொண்டு சேர்த்த ஒரு பிரதியியல் அரசியல் செயல்பாட்டையும், ஆய்வுகள் எப்படி அறிவுருவாக்கமாக மாறி உண்மைகளை உருவாக்குகிறது என்பதையும், அரசு என்கிற நிறுவனம் பண்ணாட்டு நிறுவனங்களின் ஏவலாளாக மாறி மக்களை எப்படி கொள்ளையிடுகிறது என்பதையும் விவரிக்கும் இந்நாவல் பாத்திரங்களோடு பயணிக்கும் உணர்வை வாசிப்பவரிடம் உருவாக்கிவிடுகிறது. ஒரு புனைவாக வாசிப்பின்பத்தை தவறவிட்டாலும் அறிவார்ந்த தளத்தில் புனைவாக கட்டப்பட்ட பல உண்மைகளை கட்டுடைத்து காட்டி உள்ளது என்றவகையில் இந்நாவல் இடதுசாரி முற்போக்கு இலக்கியத்தில் ஒரு முன்னகர்வை சாதித்து உள்ளது.

- ஜமாலன் – jamalan.tamil@gmail.com (14-07-2014)

ஜமாலன். Blogger இயக்குவது.