”த இந்து” மோடி மற்றும் அரசியல் நோயும் அறிகுறியும்.

பாரம்பரியமிக்க ஒரு பத்திரிக்கையான ஹிண்டு ஆங்கில நாளிதழ் “த இந்து“ என்ற தமிழ் நாளிதழை துவங்கி உள்ளது. தமிழிலும் “த ஹிண்டு” என்றே இருந்திருக்கலாம். காரணம் இந்து என்ற சொல்லும் ஹிண்டு என்ற சொல்லும் புழக்கத்தில் ஒன்றுபொல் இருந்தாலும் அவற்றின் அர்த்தங்கள் ஒன்று அல்ல. “த ஹிண்டு“ என்பது இந்தியாவை குறிப்பதற்கான ஒரு அராபியச் சொல். பொதுவாக ஹிந்துகுஷ் மலையடிவாரத்தை சேர்ந்த ஒரு தீபகற்பத்தை குறிப்பதற்கான சொல்லாக வெளியில் உள்ளவர்களால் குறிக்கப்பட்ட சொல். அல்புருனி என்கிற அரேபிய யாத்ரிகரால் முதன்முதலாக குறிக்கப்பட்டதாக படித்த நினைவு. ஆனால், இந்து என்பது ஒரு மதத்தை குறிக்கும் சொல். சமஸ்கிருத, தமிழ் சொல்வேறுபாடாக மட்டும் இதை கருத வேண்டியதில்லை. ஹிண்டு என்பது குறைந்தபட்சம் தமிழில் இந்து என்கிற ஒரு மதம் சார்ந்த சொல்லாக பாவிக்கப்படுவதை உடனடியாகவாவது தவிர்க்கும்.  

135-ஆண்டுகளுக்கு முன்பு தமிழரான அதாவது ஒரு தமிழரான முத்துசாமி அய்யருக்கு உயர்நீதிமன்ற நாற்காலியில் அமரும் வாய்ப்புக்கு எதிராக ஆங்கில நாளிதழ்களின் விமர்சனங்களை முறியடிக்க ஆரம்பிக்கப்பட்ட நாளிதழ் என்கிறது அதன் தலையங்கம்.  அப்படி ஒரு தேசிய கனவுடன் துவங்கிய “த ஹிண்டு“ இன்று “த இந்து“ என்ற சொல்லை தேர்ந்து “தமிழால் இணைவோம்“ என்கிற லோகோவை முன்வைத்து உள்ளது.  அதனால் “த இந்து“ என்ற பெயர் அதன் அரசியல் நேசத்தை காட்டும் ஒன்றாக அல்லது வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது.

செய்திகள் என்பது இன்று என்னவாக உள்ளது?அது இட்டு நிரப்புதல் மட்டுமல்ல ஒருவிதமான உண்மை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி ”சமூக மனசாட்சியை”உருவாக்குகிறது. அதனால் இத்தகைய செய்தி பத்திரிக்கைகள் வெறும் வியபார நோக்கங்களை மட்டும் கொண்டவை அல்ல. அதாவது 44 பக்க பத்திரிக்கை 4 ரூ என்பது மாத இறுதியில் எடைக்கு போட்டால் செலவழித்த தொகை அளிவிற்கோ அதில் பாதியோ கிடைத்துவிடும். அதனால் இவை தொலைக்காட்சிகள் கருணையொடு மக்களுக்கு எப்படி விளம்பரங்கள் இடையில் சில சினிமாக்கள் பாடல்கள் ”அறிவார்ந்த” விவாதங்கள், அரட்டைகள், சமையற் குறிப்புகள், நெடுந்தொடர்கள் என எண்ணற்றவற்றை அள்ளித்தெளிப்பதைப்போல, இந்த நாளிதழ்களும் விளம்பரங்களுக்கிடையில் செய்திகளை அள்ளித் தெளிக்கின்றன. அதனால் எதற்கு இத்தனை செய்திகள்? என்கிற கேள்வியே அபத்தமானது. காரணம் செய்திகள் உண்மைபோன்ற ஒன்றை சமூகத்தில் உருவாக்குபவை. அதாவது நிகழ்ச்சிகளை செய்திகளாக்குவதன் மூலம் உண்மை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துபவை. அதற்கான சொல்லாடல் களத்தை விரிவுபடுத்தி பரப்புபவை. அதனால் செய்திகள் எந்த அளவிற்கு பரப்பப்படுகிறதோ அந்த அளவிற்கு அவை மக்களிடம் தங்களது உண்மைகளை உருவாக்கி நிலை நிறுத்துகின்றன. செய்திகள் பற்றிய நடுநாயகமான நடுபக்க ஜெயமோகனின் கட்டுரை வழக்கம்போல் தன்னை வைத்து உலகை அளக்கும் தவப்பயனை அளிக்கும் ஒன்று. அவர் செய்தியாக எதை நம்பகிறாரோ அதை தேர்ந்தெடுப்பதற்கு பணிப்பது அல்லது அப்படி ஒரு கற்பித்தலை செய்கிறது. 

“தி இந்து“ வந்திருப்பது இரண்டு காரணங்களுக்காக என்பது பத்திரிக்கையின் முதல் நாளிலேயே தெரிகிறது. இரண்டு அரசியல் தலைவர்கள் மோடி, ஜெயலலிதா மட்டுமே இதில் பிராதானமாக குவி மையப்படுத்தப்படுகிறார்கள். முதல் மையமயான 22 பக்கங்களில் மோடி பற்றிய பிரலாபங்களும், காங்கிரஸ் எதிரப்பும். குறிப்பாக 12-ம் பக்கம். முழு பக்கமும் எப்படியாவது மோடியை பிரதமராக்கிவிடும் கங்கணத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. கங்கம் ஸ்டைல்போல இது கங்கணம் ஸ்டைல் போலிருக்கிறது. அதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாகிறது. ஒன்று மோடி, மற்றது ”தேசபக்தி”யாகப் பரப்பப்படும் இராணுவவாதம். அதில் உள்ள அனைத்து செய்திகளும் அப்படித்தான் அடுக்கப்பட்டு உள்ளது. அதாவது பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறல். அதன் அருகில் இரண்டாவது முறையாக அக்னி-5 பரிசோதனை வெற்றி. 5000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை. வாசிப்பவன் உடனடியாக பாகிஸ்தான் பயம், இந்திய வீரசாஸம் இரண்டிலும் சமநிலை அடைவது. 

அதன் மேலே மோடியின் இலக்கு, அத்வானியின் அத்தியாய முடிவு, மோடியின் புதிய அத்தியயம் துவக்கம், (உண்மையில் எதற்கு அத்வானி மோடியை எதிர்க்கிறார் என்பது பற்றிய எந்த புலணாய்வு புடலங்காய்களையும் இந்த பத்திரிக்கைகள் செய்ததாக தெரியவில்லை. மோடி என்கிற கோட்டை பெரிதாக்க அத்வானி என்கிற கோட்டை சிறிதாக்குகிறார்கள். ராஜதந்திரி அப்படி இப்படி என்று அத்வானி பற்றி செய்யப்பட்ட ஊடக பில்டப்புகள் எல்லாம் என்னவாயிற்று?) காங்கிரஸ் ஒரு செயலற்ற கட்சி என்பதை உணர்த்தும் வண்ணம் 4 செய்திகள். பிரதம வேட்பாளர் ராகுல் காந்தி இயற்கை தேர்வு- இப்படி ஒரு தலைப்பு. இதன்பொருள் காங்கிரஸ் கட்சி தனது பிரதம வேட்பாளரைக்கூட தேர்ந்தெடுக்கும் அதிகாரமற்றது என்பது. செயற்கை தேர்வு, இயற்கை தேர்வு என்று அரசியல் பரிணாமத்தில் மனிதநிலை அடையப்படாததைக் குறிக்கிறார்கள் போலிருக்கிறது. அடுத்த பக்கத்தில் வலுவான ஆளே பிரதமராக வேண்டும் என இராணுவ அதிகாரியுடன் மோடியின் படம். இப்படி மோடி நேரடியாக ஒரு இராணுவ ஆட்சியின் தளபதிபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.  வலுவான பாராளுமன்றம் அமைவதைப்பற்றிய வடிவேலு காமடிதான் நினைவிற்கு வருகிறது. 

மோடியை தேர்ந்தெடுத்தது ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பு என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில் கடந்த ஓராண்டுகளாக ஊடகங்கள் பெருமுயற்சி எடுக்கின்றன. உண்மையில் மோடியை பிரதம வேட்பாளாராக தேர்ந்தெடுத்தது “த டைம்ஸ“ பத்திரிக்கைதான். அதாவது உலக முதலாளித்துவத்தின், அதாவது முதலாண்மை நிறுவனங்களால் (கார்ப்பரேட்டுகளினால்) தேர்ந்தெடுக்கப்பட்டவரே மோடி. அதை அரசியல் சாகசமாக மாற்றிக்காட்டுவதற்குதான் பா.ஜ.க. உள்ளிட்டஅதன் தாய் சேய் அமைப்புகளின் பல நாடகங்கள். அதற்கு ஊடக பிராபல்யங்கள் வேறு. ஆக, “த இந்து” தமிழில் மோடியின் அரசியலை பரவலாக்குவதற்கான முனைப்பை காட்டுவதையே இந்த முதல்நாள் இதழ் உணர்த்துகிறது. முதல் இதழில் எழுதிய அதே நிருபர்களும், ஆசரியர்களும், கட்டுரையாளர்களும்தான் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதால் பேரளவில் இதில் மாற்றம் வர வாய்ப்பில்லை. 

அடுத்து, “முதல்நாள் இன்று“ என்கிற இலவச இணைப்பு. அது தமிழக அரசின் குறிப்பாக “அம்மா“ - வின் சாதனைகளை அதிமுக கட்சி பத்திரிக்கைக்கும் அதிகமாக  எழுதிக் குவித்து உள்ளது. உள்பக்கத்தில் சோ ஜெவை சந்திக்கிறார். அதிலும் பிஜேபி-அதிமுக கூட்டணி மோடியை வைத்து நடைபெறலாம் என்பதான ஊகங்களை தெளிக்கிறது. ஆக, இப்படி முன்னும் பின்னுமாக ஒரு குறிப்பிட்ட அரசியலை யைமப்படுத்தி இயங்கும் தோற்றம் ஏற்படுகிறது.

”மண் மணக்குது” என்கிற இணைப்பிலும் மணப்பது சென்னையின் சாதனை பற்றிய அம்மா புராணமே. ஆக, இந்த முதல்நாளை தனது நனவாகும் நூற்றாண்டு கனவின் முதல்காட்சியாக ஆக்கி காட்டி உள்ளது. பெரிய யானை சின்ன யானையை அழைத்து செல்லும் ஒரு தகவலியல் குறியீட்டு கார்டுன் வேறு.  ஆக, இதில் மோடி மற்றும் ஜெ புராணம் என்பது இந்த பயணம் மத்தியில் மோடி-ஜே கூட்டணி ஆட்சிக்கான கனவு என்பதையும் சொல்லாமல் சொல்கிறது. 

இப்போ நடுநிலமை என்பதும், அரசியல் செய்திகளை தரும் ஒரு பாரம்பரிய பத்திரிக்கையின் நிலையும் என்ன என்பதும் புரிந்திருக்கும். ஆக, “த இந்து“ என்பது ஒரு அறிகுறிதான். உண்மையான நோய் சமூகத்தின் உள்ளே அரசு, அரசாங்கம், தனியார், கார்பரேட், உலகமயம் என்கிற எல்லாவற்றினுள்ளும் புரையோடிப்போய் உள்ளது என்பதே.  இதற்கு எந்த அரசியலும், கட்சிகளும், கருத்தியல்களும் மாறுபட்டதில்லை. இந்துத்துவா என்கிற கருத்தியல் எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது என்பதே. இனி தேர்தல் முடிவுகள் வரும்வரை நாம் வாழப்போகும் இந்த செய்திகள் உலகம் என்பது ஒன்றே ஒன்றுதான்.  அது மோடி பிராதமராக வேண்டும் என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை. அதற்கான ஒரு செய்திகள் நகல்போலி உலகை கட்டமைக்க முயல்வதே “த இந்து“ என்கிற இந்த தினசரி நமக்கு சொல்லும் செய்தி.  தெரிந்தோ தெரியாமலோ “த இந்து“ அந்த நகல்போலி உருவாக்க வலைக்குள் சிக்கி உள்ளது என்பதே வருந்ததக்க விஷயம்.

த இந்து பற்றி விக்கி இங்கு


வலுவான பாராளுமன்றம் அமைய வடிவேலுவின் யோசனை http://www.youtube.com/watch?v=c0e7bNew_oU

தமிழ்தேசியவாதிகள் கவனத்திற்கு இதில் அதிக அதிகாரம் பெறுவதற்கான ஆலோசனையும் உள்ளது.

- ஜமாலன். 16-09-2013
    

2 comments:

வவ்வால் சொன்னது…

ஜமாலன்,

// “த ஹிண்டு“ என்பது இந்தியாவை குறிப்பதற்கான ஒரு அராபியச் சொல். பொதுவாக ஹிந்துகுஷ் மலையடிவாரத்தை சேர்ந்த ஒரு தீபகற்பத்தை குறிப்பதற்கான சொல்லாக வெளியில் உள்ளவர்களால் குறிக்கப்பட்ட சொல். அல்புருனி என்கிற அரேபிய யாத்ரிகரால் முதன்முதலாக குறிக்கப்பட்டதாக படித்த நினைவு. ஆனால், இந்து என்பது ஒரு மதத்தை குறிக்கும் சொல். சமஸ்கிருத, தமிழ் சொல்வேறுபாடாக மட்டும் இதை கருத வேண்டியதில்லை.//

ஹிண்டு,இந்து இரண்டும் ஒரே பொருளில் இடத்தைத்தான் குறிக்கும்,இந்து என்பது மதத்தை தமிழில் குறிக்கும்னு தமிழரானவர்கள் மட்டுமே வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

இன்னும் சொல்லப்போனால் இந்து/ஹிந்து என்ற மதமே இல்லை :-))

அல்பருனிலாம் பொறக்கும் முன்னரே ஹிந்துகுஷ் என்றப்பெயர் வந்தாச்சு. ஹிரோடட்டஸ் நூலிலேயே சிந்து நதி,இந்தியா என்பதற்கான குறிப்புகள் உள்ளது.

மெகஸ்தனிஸ் "இன்டிகா" என்ற நூலை 2000 சொச்ச ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிட்டார்.

குஷான வம்சத்தினர் சிந்து நதியின் கரையோரத்தில் வசிப்பவர்களை கொன்று ஆட்சியைப்பிடித்தார்கள்,அவர்கள் அம்மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் ஹிந்துகுஷ் மலை என்றப்பெயர். இது ஒருக்காரணப்பெயர் குஷாண் (கோஷான்/கோஷர்)
என்றால் தலையை வெட்டுவது/கொலை செய்வது. ஹிந்துக்குஷ் என்றால் சிந்து நதி பாயும் இடத்தை சேர்ந்த கொலைக்காரர்கள்(slayers of indus valley people),அல்லது அம்மலையை சிந்து சமவெளியினர் கடந்தால் கொல்லப்படலாம் என்ற,அச்சம் இருக்கலாம்.அதை வைத்து மலைக்கும் பெயர்.

குஷாணர்கள் பஷ்தூன் மக்களின் முன்னோடிகள், நன்கு தெரிந்த குஷாண அரசன் கனிஷ்கர். அவர்காலத்தில் தான் அப்பெயர் வந்திருக்கக்கூடும். கிரேக்க/ரோமானிய இதிகாசத்தில் காகஸ் மலை என்றே இருக்கும்.

# செய்திகள் நோக்கமெல்லாம் நீங்க சொன்னாப்போலத்தான் இருக்கு, தி இந்துனு தமிழில் எழுதிக்கிட்டு ,தமிழால் இணைவோம்னு கேப்ஷன் போட்டிருப்பதே செமக்காமெடி. தி இந்து என்ற பெயர் தான் வணிக அடையாளம்னு தமிழுக்கும் அப்படியே வச்ச வியாபார மூளையை என்னானு பாராட்ட அவ்வ்!

ஜமாலன் சொன்னது…

நன்றி வவ்வால். உங்கள் தகவல்கள் முக்கியமானவை.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.