சமீபத்திய தேர்தல் முடிவுகள் வழியாக மோடி அலை வீசுகிறது என்பதாக
ஊடகங்கள் துவங்கி சமூக வலைத்தளமான முகநூல், டுவிட்டர் உள்ளிட்டவற்றில் பல அலசல்கள்,
விவாதங்கள் எழுதப்பட்டு வருகிறது. இப்படி எழுதும் அனைவரும் ஒன்றை நன்றாக அறிந்தவர்கள்.
அது காங்கிரஸ் எதிர்ப்பு என்பதுதான். காரணம், காங்கிரஸின் ஆட்சி ஏற்படுத்திய விளைவுகள்
எல்லோரும் அறிந்ததே. மக்களிடம் அதிருப்தியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது
கடந்த காங்கிரஸ் ஆட்சி. இந்த பின்னணியில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் எதிர்ப்பலை சுணாமி
போன்று வீசிக்கொண்டிருக்கிறது. இதை அந்த கட்சியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள
சோனியா காந்தியே சொல்லி உள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மீதான மக்கள் அதிருப்தியை
பிரதிபலிப்பதாக. ஆக, எல்லோருக்கும் தெரிந்த
உள்ளங்கை நெல்லிக்கனி காங்கிரஸ் எதிர்ப்பலை வீசுகிறது என்பது. ஆனால் இந்த பூசணிக்காயை
சோற்றில் மறைப்பதைப்போல மோடியின் அலை வீசுகிறது என்று எழுதுகிறார்கள். மோடியின் அலை
ஏன் டெல்லியில் வீசவில்லை. இதே பிரச்சாரத்தை அங்கும் அவர் செய்தார்தானே.
இந்திய தேர்தலில் அலைவீச்சு என்பது இதுவரை எதிர்மறையாவே நிகழ்ந்து
உள்ளது. இந்திராவின் எமர்ஜென்சி, ராஜிவ் கொலை போன்றவற்றில் அலை என்பது பிரதமர் யார்
என்று அறியாமலே வீசியது நினைவில் இருக்கலாம் அரசியல் பார்வையாளர்களுக்கு. அந்த இரண்டு
அலையிலும், எந்த தனிநபர் அலையும் வீசவில்லை. அலை என்பது ஒரு தனிமனிதனை முன்வைத்து வீசுவது
என்பதே மாயை. இந்தியாவின் மிகப்பெரும் அரசியல் தலைவர்கள் யாருக்காகவும் இதுவரை அலைவீசியதாக
தெரியவில்லை. அதனால் தலைவர்கள், தனிமனிதர்களை நம்பி எந்த ஒரு அலையும் வீசுமா? என்பது
கேள்விக்குறியே. இந்தியா முழுவதும் எம்ர்ஜென்சி
அலைவீசியபோது தமிழகத்தில் எம்ஜியார் அலைவீசியது நினைவில் இருக்கலாம். ஆக, அப்படியே
அலைவீசினாலும், இந்தியா முழுவதும் அது அடித்து செல்லும் என்று சொல்லமுடியாது. ராஜிவ்
இறந்தபோது அவரது இறப்புக்கு முன்பைவிட இறப்புக்குப்பின் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில்
அதிக இடங்களை காங்கிரஸ் பெற்றது என்பதை எப்படி புரிந்துகொள்வது. ராஜிவ் இறந்ததால்,
அதை ராஜிவ் இல்லை என்ற அலையால் காங்கிரஸ் வெற்றிபெற்றது என்று சொல்லமுடியுமா? அலை என்பது
ஒரு நிகழ்வினால் ஏற்படும் சலனத்தால் உருவாகும் ஒன்று. ஒரு தனிமனிதரின் தலைகீழ் பிரச்சாரங்களால்
(அதுவும் தப்பு தப்பான பிரச்சாரத்தால்) உருவாக முடியுமா?
மோடியை பிஜேபி இறக்கியிருப்பதே, அதனிடம் சரியான ஒரு பாரம்பரிய
தலமை இல்லை என்பதையே காட்டுகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி மோடியை முன்வைக்க
இரண்டு காரணம். 1. காங்கிரஸீக்கு எதிராக வீசும்
இந்த பேரலையில் மீன் பிடித்தால்தான் உண்டு.
2. காங்கிரஸிடம் சரியான தலைமையோ, பிரதம வேட்பாளரோ இல்லை என்பதால், ஓரளவு பிரபலமான
(இதுகூட ஊடகங்கள் ஊதிப்பெருக்கி உருவானதே) மோடியை முன்வைக்கின்றன. அதனால் வளர்ச்சி
மாயையை உருவாக்கிய கார்பரேட் தயவுபெற்ற மோடி சரியானவர் என்று கணிக்கின்றன. இதன்மூலம்,
பிரதம வேட்பாளரை களத்தில் நிறுத்தி முண்டா தட்டும் மல்யுத்த அரசியலை செய்ய முனைகிறது
பிஜேபி. எது எப்படி இருந்தாலும், இது பிஜேபிக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்பதால்
தங்களது ரஜகததுரகபதாதிகளுடன் (ரஜம், கதம் எல்லாமே ஊடகங்கள்தான்.. அரசியல் மெய் உலகிலிருந்து
நகர்ந்து ஊடகங்களின் மெய்நிகர் உலகில்தான் நடக்கிறது.) களம் இறங்கி உள்ளனர். அதற்கான
ஒரு முன்னோட்டமாக இந்த தேர்தலை வர்ணித்துக் கொள்கின்றன. காங்கிரஸ் எதிர்ப்பலை என்பதை
மறைத்து மோடி அலை என்பதாக கூறுவதால், உண்மையில் தென்னிந்தியாவில் அவர்கள் பெறப்போவது
எதிரமறை விளைவைதான். இன்றைய அரசியல் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலே. அதை சரியாக பயன்படுத்தாமல்
மோடியை அளவிற்கதிகமாக முன்வைப்பதன்மூலம், தனது ஆதரவு தளங்களை இழப்பதற்கே கொண்டு செல்லும்.
பிஜேபி காங்கிரஸ் எதிர்ப்பு ஆட்சியை அமைக்க விரும்புகிறதா? அல்லது மோடியை பிரதமராக்குவதுதான்
அதன் நோக்கமா? என்பது பற்றிய தெளிவே இல்லை.
அதனால்தான் இந்த தேர்தலை
காங்கிரஸீக்க எதிரானதாக பார்க்காமல் மோடி அலையாக பார்ப்பது என்பது, ஒரு தேசிய அளவிலான
கருத்தையோ தலைமையோ உருவாக்காது. அது பிஜேபியின் தனிமனித வழிபாடு அரசியலின் ஒரு மிகைநடிப்பால்
உருவாகும் சலிப்பையே உருவாக்கும். இன்று அவர்களது நோக்கம் காங்கிரஸ் எதிர்ப்பா? அல்லது
மோடி விசுவசமா? என்று தெளிவுப்படுத்த வேண்டும்.
அடுத்து ஆம் ஆத்மி வெற்றிபற்றி
பேசும் நண்பர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். முதலில் அது காங்கிரஸ் வாக்குகளைதான்
பிரித்ததுள்ளது என்பதை. இதன்மூலம்
அது தனது பிஜேபி விசுவாசத்தைக் காட்டி உள்ளது என்றும் கருத வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ்
வலுவாக உள்ளதாக நம்பப்படும் இடங்களில் இதுபோன்ற கட்சிகள் தேர்தலில் பங்குபெற்று, வாக்குகளை
பிரிப்பது என்பது சாதரண வாக்கு-கணக்கு அரசியலில் சகஜமானது. ஆம்-ஆத்மி இரண்டு புதிய வாக்காளர்களை கவர்ந்து உள்ளது.
குறிப்பாக நகர்ப்புற படித்த இளைஞர்களை. அல்லது காங்கிரஸ் மற்றும் பிஜேபியிற்கு வாக்களிக்க விரும்பாதவர்களின் வாக்காளர்களை. இந்திய அளவில் வர இருக்கும் தேர்தலில் இந்த வாக்குகள் கணிசமாக உள்ளன. ஆனால் அந்த வாக்குகளைப்பெறும்
ஒரு தேசியக்கட்சியும் இன்று இல்லை. காங்கிரஸ் மற்றும் பிஜேபி என்பது "Deep
and Devil sea" என்பார்கள். மேலே பூதம், கிழே ஆழ்கடல் நடுவில் தொங்கும் இந்திய
மக்கள். இரண்டு
கட்சிகளும் ஒரே கொள்கை நோக்கம் செயல்பாடுகளைக் கொண்டவை. ஒன்று வெளிப்படையாக பேசுகிறது.
மற்றது மௌனம் சாதித்து அதை செயல்படுத்துகிறது.
காரணம் இரண்டும் கார்பரேட் என்கிற முதலாண்மை நிறுவனங்களின் நலனை மையமாகக் கொண்டே
இயங்குகின்றன. அவற்றின் போட்டி தொழில்போட்டியைப் போன்றதே தவிர அதில் பெரிய மக்கள்நல
அரசியல் எதுவுமில்லை. இவ்விரண்டின் மீதும் நம்பிக்கை இழந்த மக்களுக்கு தற்காலிக ஆறுதல் தரக்கூட ஒரு 3-வது அமைப்பு இல்லை என்பதுதான்
சோகக்கதை.
இந்திய அரசியலின் மிகப்பெரும்
கேடும் தோல்வியும் இடதுசாரிகளின் வீழ்ச்சியும் சரிவும்தான். இடதுசாரி இயக்கம் இத்தகைய
நிலையை அடைவதற்கான திட்டம் சுதந்திர போராட்டத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது. அதன்
விளைவே இன்று மக்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். அதாவது
இந்திய மையநீரோட்ட அரசியலில் 3 போக்குகள் கொண்ட கட்சிகளே உள்ளன. 1. தீவிர வலதுசாரிகள்.
2. வலதுசாரிகள் 3. வலதுசாரியை நோக்கி நகர்பவர்கள். உண்மையில் இடதுசாரி இயக்கம் இந்தியாவில்
காலவதியாகிவிட்டது என்று சொல்வதை தவிர வேறுவழியற்று உள்ளது. இடதுசாரிகளாக இருப்பவர்கள் சிந்தனைத்துறை, மற்றும்
மாவோயிஸம் பேசும் அமைப்புகள், தலித்தியம், பெண்ணியம், மார்க்சியம் பேசும் தனிப்பட்ட
குழுக்கள் என சிதறுண்டு உள்ளது. இவர்கள் ஒரு தேசிய இயக்கமாக பிரதிநித்துவம் செய்வதற்கான
வாய்ப்பற்றவர்கள். இந்நிலையில் ஆம் ஆத்மி போன்ற அமைப்புகள் மத்தியதரவர்க்க கோபங்களுக்கான
ஒரு தற்காலிக தீர்வாக அமைகின்றன. அதிலும்
புதுதில்லியில் மட்டும். இது மற்ற மாநில நகரங்களுக்கு நகருமா? என்பது கேள்விக்குறியே.
பொதுவாக ஆம்-ஆத்மி மனநிலைக் கொண்ட எண்ணற்ற ஊடக மற்றும் அறிவுத்துறை அறிவுஜீவி ஆமாஞ்சாமி
அரசியல்வாதிகள் உருவாகிக் கொண்டு உள்ளார்கள் இப்போது. இத்தகையவர்கள வைத்து ஒரு கண்காணா
(virtual) அரசியல் இயக்கம் ஒன்று நடத்தலாம். ஆனால், அது தேர்தலை எந்த அளவிற்கு பாதிக்கும்
என்பதை பொறுத்திருந்தே பார்க்க முடியும்.
உண்மையில் அரசியல்வாதிகளை நம்பலாம். ஆனால் அரசியலற்றதாக கூறும் நடுநிலைவாதிகள்
மிகவும் ஆபத்தானவர்கள். குறிப்பாக ஆம் ஆத்மி போன்ற கட்சிகள்.
காரணம்.
உலகில் உருவாகிவரும் பேரரசு என்கிற அரசியல் அமைப்பின் முக்கியமான முகவர்களாக உள்ள என்.ஜி.ஓ.க்கள் அமைப்பின் ஒரு அங்கம்தான் ஆம் ஆத்மி. இவர்கள் உலகெங்கும்
சிவில் சொஷைட்டி எனப்படும் குடியாண்மை சமூகத்தை, நல்லதொரு உலகக் குடிமகனை உருவாக்கும்
நோக்கம் கோண்டவர்களாக காட்டிக்கொண்டு, உள்ளுரில் சரியான இடதுசாரி அமைப்புகள் உருவாகவிடாமல் தடுப்பவர்கள். இவர்கள்
ஒரு மாற்று கிடையாது. மாற்றுகளை இல்லாமல் செய்பவர்கள். இவர்களது நோக்கம் மக்கள் நலன்
அல்ல. ஒரு சர்வதேச முதலாண்மை நிறுவனங்களின் ஆளுகைக்கும், உள்ளுர் மக்களுக்கும் ஒரு
பாலமாக அமைவது மட்டுமே. நுட்பமாக சொன்னால்,
சர்வதேச கருத்தியல் பண்டங்களை இறக்குமதி செய்து அதை பரவலாக மக்களிடம் விநியோகம் செய்வது.
ஊழற்ற அரசியல், ஜனநாயகம், மனித உரிமை, மனிதநேயம், நாகரீகம், சார்பின்மை, நடுநிலமை,
மக்கள் நலன் உள்ளிட்ட பலவற்றை. இது குறித்து ஏற்கனவே அடவி இதழில் 3 கட்டுரைகள் எழுதி
உள்ளேன் என்பதால் விரிவை தவிர்க்கிறேன். தற்போதைய என்ஜிவோ வலைப்பின்னல் விரிவாக்கம்
ஆம் ஆத்மி வழியாக சொல்லும் புதிய செய்திகள் பற்றிய விரிவாக மற்றொரு கட்டுரையில் விவாதிக்கலாம்.
சரி இந்த குறிப்பை எழுதக் காரணம் - ஆம் ஆத்மி வழியாக உலக என்ஜிவோ
நிறுவனம் ஒரு புதிய செய்தியை சொல்கிறது என்பதுவே. அரேபிய வசந்தம் எனப்படும் உள்ளுர்
கலகங்கள் வழியாக புரட்சிப் புயலை வீசிய என்ஜிவோக்கள், இந்தியா போன்ற நாடுகளில் அரசியலில்
நேரடியாக ஈடுபடும் நிலைக்கு மாறுகிறார்கள் என்பதுதான். உலகப் பேரரசின் முகவர்களின்
முதல் தேர்தல் பங்கேற்பு என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்த வெற்றி
என்பது ஒரு பெரும் தோல்விக்கு நம்மைத் தள்ளிச் சென்றுவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை
அவசியம்.
-
ஜமாலன்
10-12-2013 jamalan.tamil@gmail.com
0 comments:
கருத்துரையிடுக