யதார்த்த மாயை அல்லது மாயையின் யதார்த்தம் அரங்கநாதன் கதைகள் ஒரு வாசிப்பு. – பகுதி:3

பகுதி –1

பகுதி - 2

நகரம் என்பது ஒரு களமாக அல்லது இடமாக இல்லாமல் ஒரு குறிப்பிட்டவகை கால-வெளிப் பண்பாக உள்ளது. அல்லது இந்நகரத்தில் இருக்கும் மனிதர்கள் முற்றிலும் வரலாறு அற்ற அடிப்படைகள் அற்ற உதிரிகளாக, ஏதொ ஒரு வயிற்று பிழைப்பில் வாழ்பவர்களாக, தன்னலம் மட்டுமேகொண்டதால் சகமனித உறவற்றவர்களாக உள்ளனர். தங்கள் ஊருக்கு திரும்பும் எண்ணம் கொண்டவர்கள் அல்ல. கிராமத்தில் குடும்பத்தைவிட்டு வெளியெற்றப்பட்டவர்கள், வெளியேறியவர்கள், கலப்புத்திருமணம் செய்தவர்கள். இவர்கள் தங்களை சமூகவயமாக்கிக் கொள்வது நகரத்தில்தான். நகர் என்ற புலத்தில் அடையாளமற்று இயங்கமுடிகிறது. அரணை, வெள்ளைக் கண்ணாடி, அறிமுகம், பூசலார், ஆதல், ஜங்ஷன், அலுப்பு, மீதி, பெருநகர்த் தடம், பொய், அமையாது உலகு, தாங்கல், ஒரு வாக்குமூலம், தேட்டை, பூங்குன்றனே காரணம், தில்லைவாழ் அந்தணன் – இக்கதைகள் நகரத்தை களமாகவும், நகரமாதலை புலமாகவும் கொண்ட கதைகள். நகரத்தை எப்படி எதிர்கொள்வது, அதற்குள் தன்னை எப்படி ஒரு துகளாக எப்படி மாற்றிக்கொள்வது என்பதே இக்கதைகளின் அடிப்படை. ”அரணை” என்கிற கதையில், நகர்வாழ்வில், வாடைகைக் குடியிருப்பின் பிரச்சனைப்பாடுகளில் நசியும் ஒருவன் அரணையாகுதலே கதையாடல். அரணயைாகுதல் என்பது மறத்தலும், மறத்தலால் ஏற்படும் இருத்தலுமே. இக்கதையில் அரணை என்கிற சொல்லை தலைப்பாக மட்டுமே கொண்டுவிட்டு கதைநெடுகிலும் அது என்பதாக எடுத்துரைக்கப்படுகிறது. நகர்புறமயமாதல் என்பது ஒருவகையில் அரணையாகுதலே என்று இதனை வாசிக்கலாம். ”ஆதல்” என்ற கதையிலும், நகர்மயமாதல் என்பதில், இரண்டு வேறுபட்ட களங்களில் சகுனத்திற்காக வரும் இரு சிறுவர்கள் இறந்து போகிறார்கள். இங்கு வரும் காட்சி உத்தி, வேறு மொழி பேசும் நிலத்திலும், சாதல் ஒன்றுதான் என்பதையும், செம்பருத்தி இரண்டு இடங்களிலும் சிவப்பாகவே பூக்கிறது என்கிறது கதையாடல். ”வெள்ளைக் கண்ணாடி”யில் மருத்துவத்துறையோடு தன்னை தகவமைத்துக்கொள்ள முடியாமையை சொல்லும்போதே, மருத்துவம் வியபாரமாகி உள்ளதை சொல்லிவிடுகிறது. ”அறிமுகத்தில்” நகரத்தின் நரம்போடும் ஸ்டேஷனில் பேச்சே ஒரு மனிதனின் அறிமுமகமாக மாறி தனது மகனின் வேலைவிஷயமாக துப்பு கிடைப்பதும், அதை மற்றவரிடம் மூச்சுவிடக்கூடாது என எண்ணுவதுமான நடுத்தரவர்க்க மனிதனை ஒரு பிச்சைக்காரனாக்குதலாக மாற்றிவிடுகிறது. இப்படி ஆதல் என்பது மாசிலன் ஆதல் என்பதாக இல்லாமல் மாசுகளுடன் ஆதலாக மாறுதலே நகர்ப்புலத்தின் மனித துகள்கனின் இயக்கமாக உள்ளது. இந்த நகர்சார் கதைகளில் எல்லாம் மனித விழுமியம் என்பது அவலமாகவும், ஒருவித எதிர்மன உணர்வாகவும் நடித்துக் காட்டப்பட்டுள்ளது.

மாயமாதல் என்பது ஒருவித சைவசித்தாந்தத்தை நிகழ்த்திப்பார்க்கும் புலமாக உள்ளது. இங்கு மனிதர்கள் தத்துவத்தின் துகள்களாக இயக்கம் கொள்கின்றன். முருகன் என்கிற கடவுளும் குறிஞ்சி நிலமும் ஒரு பொதுப்பிம்பமாக இயங்கும் புலங்கள் இது. ஒருவகையில் இதனை அசலான தமிழ்மரபுக்கதையாடல் எனலாம். இத்தகைய கதையாடல்களில். சென்னை போன்ற பெருநகரில்கூட மலையை அடிப்படையாகக் கொண்ட கதையாடலே சாத்தியமாகி உள்ளது. திருநீர் மலை மற்றும் திரிசூல மலைகள்கூட இந்த குறிஞ்சி என்கிற பிம்பத்தை பின்னணியாகக் கொண்டே உருவாகிவிடுகிறது இவரது கதைகளில். இப்புலத்தில் சமகால அரசியலான பெரியாரின் பகுத்தறிவும் நாத்திகமும் பின்னுக்கு தள்ளப்படுவதும், சில இடங்களில் ஒருவிதமான எதிர்ப்பாக பதியவைப்பதும் நடக்கிறது. இங்கு சித்தாந்தத்தின் மாயத்துகளுக்கு எதிர் துகளாக பெரியாரின் பகுத்தறிவு முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் “ஒற்றுமை” என்ற கதையில் மதவாதத்திற்கு எதிராக இந்த பகுத்தறிவுவாதம் முன்வைக்கப்படுகிறது. திருநீர்மலை என்ற கதையில் கருப்பண்ண பெருமாளாக பெயர் மாற்றப்பட்டதுவரை, பெருமரபுக்கு எதிரான சிறுமரபுக் கதையாடல் முன்வைக்கப்படுகிறது. மாயம் அல்லது பூடகமான அறிவால் புரிந்துகொள்ளமுடியாத உணரமுடிந்த விஷயங்களாக உள்ளவற்றை சிறுமரபோடு இணைத்து, அம்மரபிற்கு சைவச்சித்தாந்தம் என்கிற தென்னிந்திய பெருமரைபை முன்வைப்பதுதான் இவ்வகைக் கதையாடல்களின் அடிப்படையாக உள்ளது. மேலோட்டமான வாசிப்பில் இக்கதைகளை பகுத்தறிவிற்கு புறம்பானவை என்பதாக ஒதுக்கிவிடமுடியும். ஆனால், அதற்குள் உள்ள நுட்பமான செய்தி, வாழ்வின் மர்மங்களாக விரித்து வைக்கப்பட்டவற்றை அறிவதற்கான ஒரு முயற்சி என்பதே முக்கியம். தரிசனம் என்ற கதையில் இந்த மாயாவாதம் ஜேகேவை வயல்வெளிகளில் ”இல்லை இல்லை” என்று வெண்முடி பறக்க கனவில் நடக்க வைக்கிறது. மேற்கத்திய பிராய்டும், கீழைத்தேய ஜேகேவும் உரையாடும் கதையாடல் இது. இங்கு தரிசனமாவது சாவு அழகானது, அதனால் தொடர்ச்சிகளை துண்டிப்பது, அதை அனுபவிக்க எண்ணுவது என்பதே.

மைலாப்பூர் என்கிற இக்கதை முற்றிலும் நவீனத்தன்மைகொண்ட கதையாக எழுதப்பட்டு உள்ளது. சுனாமி போன்ற ஒரு இயற்கை பேரிடரால் அழிந்துவிட்ட மைலாப்பூரில் நடக்கும் முத்துக்கருப்பன் காயத்ரி உரையாடல். மிக எளிமையான உரையாடலில் எழுதப்பட்டிருந்தாலும் இக்கதை வாசிப்பின் வழியாக ஒரு அமானுஷ்யத்தன்மையை வழங்கிவிடுகிறது. புதுமைபித்தனின் காஞ்சனைக் கதைப்போன்று. இது சிவ சக்தி உரையாடலாகவும், உலகின் நிலையற்ற தன்மையை, ஊழிக்கூத்தை அடியமைப்பாகவும், மேலமைப்பாக ஆண் பெண் என்கிற இரு சாதாரண மனிதர்களின் எதிர்கொள்ளல் உரையாடலாக எழுதப்பட்டு உள்ளது. வழக்கமாக கதை தலைப்பு கதைக்குள் வராமல் எழுதும் அரங்கநாதனின் உத்தியடிப்டையில் இதன் தலைப்பான மைலாப்பூர் அந்த கதையின் ஊரை நமக்கு சொல்வதாகிறது. சென்னையின் சுனாமி தாக்குதலை முன் அனுமானித்துவிட்ட இக்கதை, ஊர் என்பது என்ன என்ற கேள்வியை முன்வைத்துவிட்டு நகர்கிறது. மாயப்புலத்திற்குள் இரண்டு துகள்களாக சிவ-சக்தி ஊடாட்டம் நிகழ்வதின் ஒரு ‘சிமிலேட்டேட்’ புலமாக இருப்பதே இக்கதைப்புலம். அசலம் என்ற கதையில் ராமன் வருகிறான். புதுமைப்பித்தனின் கந்தசாமிப்பிள்ளையைக் காணவந்த கடவுளைப்போல. இந்த ராமன் புதுமைபித்தனின் நாரத ராமாயணத்திலிருந்து வந்த ராமன். இந்துத்துவா முன்வைக்கும் ராமன் அல்ல. குப்பத்து மக்களின் மதமாற்றம் பற்றி பேசும் ராமன், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துவது என்பது இக்கதையின் ஒரு முக்கிய அரசியல் சரடு எனலாம். குப்பத்து மக்களை இப்படி தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருப்பதே இறக்கி வைக்கப்படாத பெருஞ்சுமை என்பதாக செல்லும் கதையாடல், இவரது பல தலித் அரசியல் சார்ந்த கதையாடல்களில் (மகத்தான ஜலதாரை, உவரி, மண்டேலாவை நேசிக்கிறேன், ஞானக்கூத்து, காடன்மலை, பனை, ஒரு நாஞ்சில் வட்டாரக் கதை, மீட்சி, மூடு, வரைந்து பெய்யும், மனத்துக்கண்) முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குரலாக கடவுளின் குரலாக ஒலிக்கிறது. காந்தி முனவைத்த ஹரிஜனங்கள் என்கிற ஹரியின் புதல்வர்கள் என்கிற பிம்பத்தின் பிரதிமையாக ராமன் வந்துபோவதாக எழுதப்பட்டு உள்ளது.

வீடுபேறு என்ற கதை ஒரு முக்கியமான கதையாக விமர்சகர்களால் அடையாளம் காட்டப்பெற்ற கதை. தனது தாய் தூக்கில் தொங்கி இறந்த அறையைக்காண வருபவர் கதைநெடுகிலும், அந்த வீட்டின் தற்போதைய குடியிருப்பவரான முத்துக்கருப்பனுடன் உரையாடிவிட்டு ஊரை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியில் அந்த அறையை பார்க்காமல் போய்விடுகிறார். கதை அவர் ஏன் பார்க்காமல் போகிறார்? என்ற கேள்வியை வாசிப்பவரிடம் விட்டுவிட்டு முடிந்துவிடுகிறது. தாய் என்கிற தான்சார்ந்த உறவு தாய்மை என்கிற சமூகம் சார்ந்த உறவாக வளர்வதே இக்கதையாடல். தாய் என்பவளிடம் சமூகத்தின் தாய்மையை உதாரக்குணத்தை காண்பதே வீடுபேறு என்பதை சொல்லாமல் சொல்லும் கதையாடல். கதைப்புலம் என்பது மோட்சம் என்பது தாயிலிருந்து தாய்மையை அடைவதே. உலகெங்கிலும் தாய்மையை கண்டுவிட்டபின் தாயை காணவேண்டியதில்லை என்பதே. உயிரியல் தாய்மையிலிருந்து கலாச்சாரத் தாய்மைக்கு நகரும் வீடுடுபேற்றை அடைந்ததால் அவர் தாயின் அறையை காணாமலே சென்றுவிடுகிறார் போலும்.

உவரி, செட்டி வளாகம், ஜேம்ஸ் டீனும் செண்பகராமன் புதூர்க்காரரும், துக்கிரி போன்ற கதைகள் உலக வரலாறு மற்றும் உலகத்திரைப்படங்கள் வெட்டிச் செல்லும் கதையாடல்கள். துக்கிரி என்பது ஓமன் என்கிற படத்தின் தீச்சகுனமாக வரும், தலையில் உருவாகும் ஆறு என்கிற எண்ணை, கீழைத்தேய எண்கணித சோதிடத்துடன் இணைத்து பேசுகிறது. ஒருவிதமான அமானுஷ்யம், சோதிடம் போன்று பகுத்தறிவிற்கு புறம்பானவை என்பது உலகப்பொதுவான மனித அமைவு சார்ந்தவை என்பதான ஒரு வாசிப்பை தரும் கதைகள்.

அழல்குட்டம் புறநானூற்றின் ”மறந்தன்ன் கொல்லோ” என்கிற கூடலூர் கிழாரின் பாடலை கதையாக மாற்றி எழுதப்பட்டு உள்ளது. இக்கதையில் கூடலூர்கிழாரே ஒரு பாத்திரமாக வருகிறார். புறநானூற்றுப்பாடலில் சேரமான் இரும்பொறை, பங்குனியில் வீழும் நட்சத்திரத்தினால் ஒரு வாரத்தில் இறந்து போய்விடுவதை சொல்லும் பாடல். கூடலூர்கிழார் ஒரு வானியல் நிபுணராக இருந்த்தையும், அவரால் பாடப்பெற்ற இப்பாடலில் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்துபடுவதை எச்சரிப்பதையும, முத்துக்கருப்பனின் சோதிட அறிவுடன் இணைத்து பேசுகிறது இக்கதை. சேரமன்னனாக முத்துக்கருப்பனை வைத்து எழுதப்பட்ட ஒரு புனைவு. இது ஒருவிதமான பழம்மரபின் புராணிகத்தை நவீன எழுத்தில் வைத்து பார்க்கும் கதையாடல்.

அன்று இரவு மூவர் உறங்கவில்லை என்கிற புதுமைபித்தனின் அகலிகை கதையின் வாசகத்துடன் எழுதப்பட்டு உள்ள கச்சிப்பேடு, காஞ்சிபுரம் உருவான வரலாற்றை ஒருவித அழித்தெழுதும் பிரதியாக (பாலிம்செஸ்ட்டாக) எழுதி பார்க்கப்பட்ட கதை. புதுமைபித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையை நினைவுட்டினாலும், கதையில் முருகன் மாங்கனியுடன் வந்து சித்தம் தெளிவிக்கிறான். முற்றிலும் காதல், துணையாதல், கணவனாதல் போன்றவற்றை வைத்து தத்துவ உரையாடலாக எழுதிப்பார்க்கப்பட்ட கதை.

செட்டிவளாகம் இவரது கதைகளில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒன்று. காரணம் அமேரிக்காவில் மருத்துவம் படித்து மருத்துவரான முத்துக்கருப்ப செட்டியாரை, ஆபத்தான தருணங்களில் முருகனின் வாகனமான மயில் வந்து காக்கிறது. மனித-மிருக உரையாடலை மனித-கடவுள் உரையாடலாக மாற்றி வைக்கும் கதையாடல். அமேரிக்காவில் அவரை கொல்வதற்கான இனவெறி தாக்குதல் நிகழ, அதிலிருந்து தப்ப ஒரு டெலிபோன் பூத்தில் ஒழிந்திருக்கும் அவரை, மயில் மூலம் அறிந்த ஒரு வெள்ளையினமாது காக்கிறார். அவரை அவளே திருமணமும் செய்துகொள்கிறார். இப்படி அவரது மரணத்திற்கான தருணங்களில் எல்லாம் அந்த மயில் வந்துவிடும் ஒருவித பாரா-சைக்காலாஜிக்கல் அதாவது புலன்மீறிய உளவியல் சார்ந்த ஒரு தோற்றமாயை வந்து போகிறது. இங்கு உடலும் மனமும் ஒன்றாகிய நிலையில் உருவாகும் அதீத புலனின் ஆட்படலால், புலன்மீறியதான ஒருநிலை கதையில் பேசப்படுகிறது. இதனை கடவுள் பக்தி எனலாம் அல்லது காஸ்மிக் விசை ஈர்ப்பு எனலாம். ஆனாலும், அது செட்டிவளாகத்தை தாண்டவில்லை என்பதே இக்கதையாடல். அதவாது, தமிழ் குறிஞ்சிநிலக் கடவுளை தாண்டவில்லை என்பதும், புலன் உணர்வு என்பதும், உடலின் இயக்க புலத்தை சார்ந்தே அமைவதை சொல்கிறது. அவரை மயில் வந்து அறிவறுத்தியிருக்கலாம் அல்லது அறிவறுத்தும் அனைத்தும் அவருக்கு மயலாக தோற்றம் தருலாம். முத்துக்கருப்பனாகிய தமிழ் உடல் என்பது இந்த எல்லைகளை தாண்டமுடியாததாக உள்ளது என்பதே. அல்லது சைவ-உடலே தமிழ்உடலாதலாக முன்வைக்கப்படும் கதை.

வளர்ந்துவரும் இந்துத்துவ பயங்கரவாதத்தை நேரடியாக முன்வைத்து எழுதப்பட்ட கதைகள் ரோபோ, ஒற்றுமை, எலி. தமிழில் இத்தகைய கதைப்பதிவுகள் அபூர்வமானவை என்றே தோன்றுகிறது. இந்துத்துவம் என்பது எப்படி பெருமத-பெருந்தேசிய உணர்வை அடிப்படையாகக் கொண்டு சிறுதெய்வங்களை, சிறுதேசியங்களை ஒடுக்குகிறது என்பதை வெளிப்படுத்தும் கதைகள். “பாசாங்குகள் புத்திசாலித்தனமாக – நெறிமுறைகளாக – மாற்றப்படுகிறதே – அது வன்முறையின் ஆரம்பமென்று எண்ணினார் முத்துக்கருப்பன்.” (பக். 176) எனக்கூறும் எலி கதையில் எலி சிறுபான்மையினருக்கான ஒரு குறியீடாகவும், எலியே கணேசனின் வாகனம் என்பதால் விநாயக சதுர்த்தி எப்படி வடநாட்டிலிருந்து இறக்குமதியாகி இங்கு பெரும் கலவரங்களை உருவாக்குவதாக உள்ளது என்பதை சொல்கிறது. ரோபோ கதையில் ஒருவிதமான ஆர்.எஸ்.எஸ். சாகா போன்ற ஒரு பயிற்சி நிலையத்தில் இணைகிறான் முத்துக்கருப்பன். மதவாத எந்திரங்களாக (ரோபோக்களாக) மனிதர்களை கருத்தியல்-குளோனிங் செய்து தள்ளும் அந்த நிறுவனத்தில் வேதம் சார்ந்த, மந்திரங்கள் சார்ந்த வழிபாட்டால், சிறுதெய்வ அம்மன் வழிபாடு, கிராமங்களின் சாமியாடுதல் போன்றவை நிரகரிக்கப்படுவதையும், அதிலிருந்து சிறுதெய்வ மரபுகொண்ட இடைச்சாதி மற்றும் தலித்துகள் வெளியேறுவதே விடுதலை என்பதை சொல்லுவதாக இதனை வாசிக்கலாம். சிறுதெய்வமான அம்மனை இணைப்பதன் வழி இந்துத்துவத்தில் கருணையை உருவாக்கிவிட முடியாது என்பதையும் கடவுளரின் வேதமயமாக்கல் என்கிற மேல்நிலையாக்கத்தையும் பல கதைகளில் எள்ளலாகவும், எதிர்ப்பாகவும் முன் வைக்கப்பட்டு உள்ளது இக்கதையாடல்களில். தற்போதைய அரசியல் சூழலில் இது தமிழில் வந்த சிறுகதைகளில் முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று.

சித்தி என்ற கதை ஓட்டபந்தய வீரனை முன்வைத்து எழுதப்பட்டாலும், கதையாடலின் மையம் ‘காரியமே முக்கியம் விளைவு அல்ல’ என்கிற கீதை உபதேசமே. விளையாட்டு என்பதை இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டது கவனிக்க வேண்டிய அம்சம். காரணம் வெற்றி தோல்வி அடிப்படையில் நிர்ணயிணிக்கப்படுவது உண்மையில் விளையாட்டு அல்ல. சித்தி என்கிற சித்தியடைதல் என்பது விளையாடிக்கொண்டிருப்பதில்தான் உள்ளது. அதன் வெற்றி தோல்வியில் அல்ல. இதனை கிரிக்கெட் போன்ற தேசவெறி ஊட்டும் இன்றைய ஆட்டத்தில் உருவாக்கப்படும் வன்முறையான மனோவியலோடு ஒப்பிட்டு பார்க்கலாம். தேசப்பற்று என்பது விளையாட்டின் வெற்றி தோல்வி உணர்வுடன் தேசவெறியாக மாற்றப்பட்டு உள்ளது என்பதை, இந்திய பாரம்பரியமாக பெருமிதப்படும் கீதையின் உபதேசம் கொண்டு எதிர்கொள்கிறது இக்கதையாடல். உண்மையில் கீதையைக்கூட பின்பற்றாத ஒரு அதிகாரமே இங்கு கீதையை பிரச்சாரம் செய்கிறது என்கிற கருத்தாக்கமாக இதை வாசிக்கலாம்.

பிராமணர்களின் அதிகார உருவாக்கத்தை பதியவைக்கும் இரவச்சம், ஒரு நாஞ்சில் வட்டாரக் கதை, ஆற்றோடு போயிற்று ஆகிய கதைகள் ஒரு புதிய அரசியல் பதிவை உருவாக்குவதாக உள்ளது. இரவச்சம் கதையில் ஒருகாலத்தில் பிராமணர்களுக்கு உணவளித்தவர்களாக இருந்த கிராமத்தினர் (கதையில் தேவர்கள்), நவீனகாலத்தின் குறிப்பாக காலனியத்திற்கு பிறகு, பிராமணர்கள் கிராமத்தினருக்கு உணவளிக்கும் முறையாக மாறிய சத்துணவ பற்றிய பதிவே அது. இது ஒரு நிகழ்கால அரசியல் நிகழ்வை வரலாற்றில் வைத்து பார்க்கிறது. நகரம் பிராமணர்களை அதிகார வர்க்கமாக உள்வாங்கியவிதமும், கிராமத்து ஆதிக்க சக்திகள் கொசு மருந்தடித்தல் போன்ற சாதரண உடல்-உழைப்பு பணிகளுக்கு மாறிவிட்ட தலைகீழ் நிலையை சொல்லிச் செல்லும் கதை. இரவச்சம் என்கிற இந்த சொல்லாட்சிக்கான விளக்கத்தை இக்கதையாடல் நாலடியாரிலிருந்தும், திருக்குறளில் இருந்தும் பெற்றிருக்கலாம். இரப்பதற்கு அஞ்சுதல் அறமாக முன்வைக்கப்படுகிறது இச்செய்யுள்களில். ஆனால், இரப்பதை சட்டமாக மாற்றியுள்ளது இன்றைய அரசுகள் என்கிற விமர்சனம் இதில் தொனிக்கிறது. கதையில் முத்துக்கருப்பதேவர் பணியிலிருந்து நீக்கப்படுவதற்கான காரணம் சொல்லப்படுவதில்லை மர்மமாக விடப்படுகிறது. அந்த இடைவெளியில் நாம் இந்த வரலாற்றை பொருத்தி வாசிக்கும்படி விடப்பட்டு உள்ளது. பிரகதீஷ்வரன், கிராமத்தில் தனது தந்தையை கோவிலின் அன்னதானத்தில் உணவருந்த அழைத்து செல்கிறான் முதல் பகுதியில். இரண்டாவது பகுதியில் அவன் மாவட்ட ஆட்சியராகி சென்னையில் வேதபாடசாலையில் உரையாற்றுகிறான். கிராமத்தில் உணவளித்த முத்துக்கருப்ப தேவரின் பரம்பரை நகரத்தில் கொசுமருந்து அடிக்கிறது. இந்த முரண் வாசகங்களாக மாறி வேலை போய்விடுவதை மர்மமாக்கிவிடுகிறது கதை. வரலாற்றின் இருண்மை இப்படித்தான் பல மௌனங்களைக் கொண்டது என்பதைப்போல. இக்கதையின் எதிர்பிரதியாக எழுதப்பட்ட கதையே ஒரு நாஞ்சில் வட்டாரக்கதை. இக்கதையில் நிலமை தலைகீழாகிறது. பார்ப்பனர் மகன் தோல்வியடைகிறான், வண்ணானின் மகன் வெற்றியடைகிறான். இக்கதை முற்றிலும் எள்ளல் உணர்வை வெளிப்படுத்தும் வண்ணம் எழுதப்பட்டு உள்ளது.

ஆற்றோடு போயிற்று கதை நேரடியாக சைவமத-வைணவ மதமுரண்பாட்டை வெளிப்படுத்துகிற ஒரு கதையாடல். சைவக்குரவர்களின் பழஞ்சுவடிகள் ஆற்றை எதிர்த்து வந்ததைப்போல வைணவ சூத்திரங்களால் முடியாமல் போகிறது என்கிறது கதையாடல். வரலாற்றில் இது ஒருவித பழிவாங்கும் பரோனியா மனநிலை எனலாம். இக்கதையாடலில் அம்மனநிலையே முன்வைக்கப்படுகிறது. பொதுவாக சைவமதச்சார்பின் அடிப்படையில் இயங்கும் இவ்வாசிரியரின் பல கதையாடல்களில் இது ஒரு உச்சம் எனலாம். பல கதைகளில் மர்மமாக விடப்பட்ட பகுதிகளில் இந்த சைவமதச் சார்பு மனநிலை ஒருவகையாக மறைவாக்கமாக செயல்படுகிறது.

இக்கதைகள் முதல் வாசிப்பில் மேலோட்டமாகவே தெரியும், இரண்டாவது வாசிப்பில்தான் ஆழப்படும் பல நுட்பமான சொற்கள் வாக்கியங்கள் பேச்சுகள் நிகழ்ச்சிகள் என கட்டமைக்கப்பட்டு உள்ளது. கதையை எழுதும்போதே வாசித்துவிடும் வாசகராக மாறிவிடுகிறார் இதன் ஆசிரியர். அதனால் அவரது நிலைக்கு வாசகனை தேடுகிறார் (கச்சிப்பேடு). அந்த வாசகன் அவரைப்போல தத்தவ நுட்பங்கள் கொண்டவனாக இருந்தால் அவரோடு பயணிக்க முடியும்.

இஸ்லாமியர்கள் என்றால் செய்கு தம்பி பாவலர் போன்ற சூஃபி சார்ந்த வழிப்பாட்டுமுறையே இக்கதைகளில் ஏற்கப்பட்டுள்ளது. தலித்துகள், ஆதிவாசிகள் போன்ற சிறுபான்மையினரை பற்றிய குறிப்பிடத்தக்க கதையாடல்கள் உள்ளன. அவை எல்லாம் அன்பால் அவர்களை அரவணைப்பதற்கான அதிகாரத்தை பேசுவதாக உள்ளது. அவர்கள்மீதான கிராமத்தையே கொளுத்துதல் உள்ளிட்ட மனிதநேயமற்ற ஒடுக்கமுறைகளுக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழும் தன்மானத்தை சாபமாக பதியவைத்து உள்ளது குறிப்பிடத்தகுந்த அம்சம். குறிப்பாக “வரைந்துபெய்யும்“ கதையில் தலித்துகளின் சாபமாக ஒரு கிராமம் விவசாயம் குன்றி வளமிழந்து போவதை தொன்மமாக மாற்றி சொல்கிறது. கிறித்துவர்கள் பற்றிய பார்வையில், மதமாற்றம் என்பது அங்கங்கே தொடப்படுகிறது. அத்தகைய மாற்றங்கள் இன்றைய இந்துமதவாத ஏற்றத்தாழ்வுகளின் பின்னணியில்தான் நடைபெறுகிறது என்பதையும், அத்தகைய மாற்றங்களை ஏற்பது அவசியமானது தவிர்க்க முடியாதது என்பதையும் சொல்கிறது.

இதில் வரும் முத்துக்கருப்பன் – சாமியாடி மகன் – பல சாதி அடையாளம் கொண்டவன் – மத்தியதர வர்க்கத்தவன் – ஓய்வு பெற்றவன் – காதலன் - கணவன்- சாமியார் என பல அடையாளங்களில் வருகிறான். அடையாளம் என்று குறிப்பிடக்காரணம் அவன் எல்லா அடையாளங்களிலும் சைவசித்தாந்தியாகவே இருக்கிறான் என்பதால். தேவராக, தலித்தாக, பார்ப்பனராக, சாமியாடியாக எப்படி கதையில் வந்தாலும், சைவத்தை மட்டும் அவனால் விடமுடியாத ‘ஒரு விடாது கருப்பாக’ தொடர்கிறது அது. இதனால் அவன் பெயரால் ஒருவனா வேறு வேறா? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.

பெரும்பாலான கதைகள் பகுதிகளாக சிதைக்கப்பட்டு இரண்டு வேறுபட்ட காலங்களில் வெளிப்படுவதாக அமைக்கப்பட்டு உள்ளது, (கதைகள் பட்டினத்து சாமி தீவட்டி, துக்கிரி, தில்லைவாழ் அந்தணன்) இவை காரணங்கள் பற்றிய கேள்வியை வாசிப்பாளரின் மனதில் எழுப்பவே என எண்ணத் தோன்றுகிறது. முதல் பகுதியில் சாதரணமாக உள்ளவன் இரண்டாவது பகுதியில் அதிகாரமாக வளர்ந்துவிடுகிறான். முதலும் முடிவும் உள்ள இக்கதைகளில் நடுப்பகுதி என்கிற வளர்ச்சிப்பகுதி மௌனிக்கப்படுகிறது. அல்லது அந்த வளர்ச்சிப்பகுதியை மற்றொரு கதைவழி கொண்டுகூட்டி பொருள் கொண்டுவிடலாம்.

இக்கதையாடல்கள் யதார்த்தம் மற்றும் நடப்பியல் வேறுபாடுகளை ஒருவிமாக புரிந்தோ புரியாமலோ எழுதப்பட்டு உள்ளது எனலாம். யதார்த்தம் என்பது சொல்லாடல் உற்பத்தி – நடப்பியல் என்பது யதார்த்த அமைப்பிற்குள்ளான நடவடிக்கைகள் அல்லது இயல்பாக உணரக்கூடியது. சைவமதம் உருவாக்கிய உலகே யதார்த்த புலமாகவும், அதில் இயங்கும் தினவாழ்வின் துகள்களாக மனிதர்கள் இயங்குவதுமே இக்கதையாடல்கள். அவ்வகையில் இக்கதையாடல்கள் பன்முக புலங்களில் பன்முக மனிதர்களை சைவம் உருவாக்கிய சடத்தின் ஒருமையாக முன்வைக்கிறது. அதனால்தான் முத்துக்கருப்பன் பல வடிவங்களில், உருக்களில் கதைகளில் வந்து மறைந்தபடி உள்ளான். முத்துக்கருப்பன் பல ஆளுமைகள் கொண்டவன் இல்லை. பல வடிவங்கள் கொண்டவன் சைவம் என்கிற ஒற்றை ஆளுமை கொண்டவன் என்பதே இக்கதைகள் சொல்பவையாக உள்ளது. தமிழ் மரபு என்று சைவத்தை முன்வைத்த எழுதப்பட்ட இக்கதையாடல்கள், பெரியாரியத்திற்கு தமிழவன் சொல்வதைப்போல ஒரு சவாலை முன்வைத்து உள்ளது. பகுத்தறிவால் மரபுகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டால், வாழ்வின் பூடகத்தளங்களின் அதன் மர்மத்தை அது தரும் இன்பத்தை என்ன செய்யப்போகிறோம்? என்பதே அது. இது மற்றொரு விரிவான ஆய்விற்கு உரியது என்று சொல்லி முடிக்கலாம்.

- ஜமாலன் 23-10-2012 (jamalan.tamil@gmail.com)

இக்கட்டுரை காக்கைச்சிறகினிலே (மே-2013) இதழிலும், சிற்றேடு (ஜீலை செம்படம்பர் இணைப்பு) இதழ்களிலும் வெளிவந்து உள்ளது.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.