யதார்த்த மாயை அல்லது மாயையின் யதார்த்தம் அரங்கநாதன் கதைகள் ஒரு வாசிப்பு. – பகுதி:2

பகுதி –1

சமூகத்தின் மீதும், அதன் அரசியல் மற்றும் அதிகார அமைப்பின்மீதும், சமகால வாழ்வின் அரசியல் நெறிமுறைகள் மீதும், கலாச்சார நடைமுறைகள் மீதும் குறிப்பாக சமூகம் என்கிற ஒரு பொது அமைப்பின் மீதும் தாங்கமுடியாத ஒவ்வாமையை வெளிப்படுத்தி, தனது படைப்பு என்பது கலையின் உன்னத சிகரம்தான், தன்னுணர்வு அற்ற வெளிப்பாடுதான், அதற்கு சமூகத்தை மாற்றும் நோக்கமோ, பிரச்சாரம் செய்வதோ, உபதேசம் அளிப்பதோ பணியல்ல என்று செவ்வியல்-கால கடவுளின் இடத்தை நவீன-கால படைப்பாசிரியன் பெற்றுவிட துடிப்பதை மறைத்து கூறியபோதிலும், பிரதி நெசவில் தனக்கான சமூக குரலை, அரசியலை, சார்புநிலையை, அதற்கான தத்துவத்தை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. இலக்கிய படைப்பாளிகள் எப்போதும் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த விமர்சனங்களின் மீது ஒருவகை ”ஒவ்வாமை” கொண்டவர்களாக உள்ளனர் என்பதால் விரிவாக இதனை சொல்லவேண்டி உள்ளது.

ஆக, படைப்பாசிரியனை பிரதியின் நெசவில் கண்டுகொள்வது வாசகனின் அல்லது விமர்சகனின் தவிர்க்க இயலாத செயல்பாடாகும். “படைப்பை பார் பாடைப்பாளியை பார்க்காதே“ என்பது படைப்பாசிரியனின் மரணத்தை அறிவித்து விட்டு தப்பிச் சென்றுவிடும் ஒன்றாக ஆகிவிடாது. படைப்பாசிரியன் படைப்பிற்கு வெளியில் இல்லை, படைப்பிற்குள்தான் இருக்கிறான் எனும்போது மா. அரங்கநாதனின் இக்கதைகளில் படைப்பாசிரியனை அல்லது கதைப்புலத்தில் தோன்றி மறைந்து திருவிளையாடும் முத்துக்கருப்பனைக் கண்டடைவதன் வழியாக அவரது கதைகளின் சமூக-அரசியலை புரிந்துகொள்ள முயலலாம். இதன்பொருள் மா. அரங்கநாதனின் கலை உன்னத வெளிப்பாடுகள், சிறுகதை நுட்பங்கள், செய்நேர்த்திகள், நுண்விபரங்கள், வடிவஉத்திகள் எல்லாம் க.நா.சு, சா. கந்தசாமி, அசோகமித்திரன், தமிழவன் உள்ளிட்ட தமிழின் சிறந்த விமர்சகர்கள் மற்றும் படைப்பாளிகளால், ருத்ரையா[i] போன்ற தமிழின் குறிப்பிடத்தகுந்த கலை இயக்குநராலும் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதால், சொல்லப்படாத மற்றொரு கோணத்தில் கதைகளை வாசிக்க முயற்சிப்போம்.

இவரது கதைகள் மிகை உணர்ச்சிகள் அற்றவை. சிறுகதைக்கான ஆரம்பம்-உச்சம்-முடிவு அல்லது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஏற்படும் திருப்புமுனை போன்ற வழக்கமான அம்சங்களும் குறைவு. யதார்த்த கதையாடல்களாக சொல்லப்பட்டவற்றில் கற்பணார்த்தம் குறைந்த இயல்புநவிற்சி என்பதை உத்தியாகக் கொண்ட நடப்பியல் சார்ந்த கதைகளே பெரும்பாலானவை. பாத்திரங்களின் வார்ப்பில்கூட அதன் இயல்தன்மைக்கு மேலாக எந்த ஆசிரியத்துவத்தின் சுமைகளும் ஏற்றப்படுவதில்லை. பெரும்பாலான கதைகள் நேர்க்கோட்டுக் கதையாடலைக் கொண்டவை. ஒரேவிதமான உத்தியடிப்படையில் சென்னைக்கு குடியேறும் தென்தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் பிரச்சனைப்பாடுகளை மையமாக்கொண்டவை, மதம் மற்றும் சாதிமாறிய திருமணங்கள் (சிறிய புஷ்பத்தின் நாணம், ஜங்ஷன், எங்கேயோ போதல், ஞானக்கூத்து, பயணம், விடுதலைப்போரில் அப்பரின் பங்கு) கிராமங்களை விட்டு வெளியேறுதல், கிராமங்களின் சாதிய இறுக்கம், தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்ட தலித்துகள் சார்ந்தவை, தத்துவங்களைப்பேசும் மாயத்தன்மைக்கொண்டவை (கண்ணோட்டம், அம்மே நாராயணி, முதற்தீ எரிந்த காடு, ஒரு பிற்பகல் நேரம்) ஜாதகங்கள் அடிப்படையிலான பகுத்தறிவிற்கு எதிரானவை (தொலைவிலுணர்தல், அழல் குட்டம், துக்கிரி), இலக்கிய-பூடகத்தன்மை கொண்டவை எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில கதைகளும் உள்ளன. இவ்வாறு, குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒருசில கதைகளில் (மைலாப்பூர், அழல் குட்டம், மோனலிசாவும் ஒரு கருப்புக் குட்டியும், அசலம், உவரி, கச்சிப்பேடு, செட்டி வளாகம், ஜேம்ஸ் டீனும் செண்பகராமன் புதூர்க்காரரும், ஆற்றோடு போயிற்று, தாங்கல்) நவீனத்திற்கு பிந்தையதான கூறுகளையும் காணமுடிகிறது.

இவரது கதைகள் இரண்டு களங்களுக்குள் இயங்குபவையாக, அக்களங்களால் உற்பத்தி் செய்யப்பட்ட பதிவுகளாக உள்ளன. ஒன்று நகரவாழ்வை முன்வைத்து உருவான நவீனத்துவக் களம். இன்றைய நகரங்கள் உருவாக காரணமான மத்தியதரவர்க்க வாழ்வின் பல இடர்பாடுகள், நகரில் தகவமைப்பதற்கான பிரச்சனைபாடுகள், நகரை தனக்குள் இடப்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகள், நகரை தனக்கான இயங்குபுலமாக வரைந்துகொள்வதற்கான எத்தனங்கள் எனலாம். இங்கு நகரத்திற்குள் ஒரு குடும்பத்தை இடப்படுத்தும் தன்மையைவிட, ஒரு தனிமனிதனாக நகரை எதிர்கொள்வது மையமான பிரச்சனையாக உள்ளது. ஒரு தனித்த உடல் நகரம் என்ற அங்ககத்திற்குள் தன்னை இருத்த முனைவதும், தனது புலன்களை நகரின் புலன்களாக மாற்ற முனைவதுமே. கதைகளில் குடும்பம், மனைவி குழந்தை என்கிற நிறுவனம்சார்ந்த உறவுகள் அதிகம் இல்லை. எல்லாம் ஒரு தனிமனிதனாக பதியவைக்கப்பட்ட மன உணர்வுகளே. ஆக, மத்தியதரவரக்க மனசாட்சியை உருவாக்கும் நவீனத்துவ சொல்லாடலால் உற்பத்திச் செய்யப்பட்ட கதைகள் இவை எனலாம்.

இரண்டாவது, கீழ்திசை மரபுகளாக அறியப்பட்ட கடவுள் நம்பிக்கை, சைவம், சித்தாந்தம், வேதாந்தம் உள்ளிட்டவற்றை விசாரணை செய்யும் மற்றும் விசாரமாக சஞ்சரிக்கும் கதைகள். இத்தகைய கதைகளை தனது உரை ஒன்றில் மிகச்சரியாக அடையாளம் காட்டுகிறார் தமிழின் குறிப்பிடத்தகுந்த விமர்சன முன்னொடியான க. நா. சு அவர்கள். அவரது விரிவான உரையை இங்கு அப்படியே தருகிறேன் உரையாடலை முன்வைத்து செல்ல.

”தன்னுடைய பர்சனாலிட்டியை பாதித்துக் கொள்வதற்காகவோ, தனக்குள்ளேயே ஒரு முக்கியம் ஏற்படுத்திக் கொள்வதற்காகவோ சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று பொதுவாகச் சொல்லலாம். ஆனால் வாசகன் எதிர்கொண்டு, இந்த கதையைப் படிக்கிற வாசகன் மனதில் தன்னைப் பற்றி, அதாவது அந்த வாசகனைப் பற்றி ஓர் உருவத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று சொல்லவேண்டும். இதை மிகவும் சிறப்பாக சமீப காலத்தில் செய்திருப்பவர் என்று லத்தின் அமெரிக்காவில் உள்ள ‘ஜார்ஜ் லூயி போர்ஹே’ என்ற ஓர் ஆசிரியரைப் பற்றி, அவர் ஓர் அறிவுதளத்தில் நின்று எழுதுகிறார் என்கிற அளவில் சொல்லுகிறார்கள். அவருக்கு உலகம் பூராவும் புகழ் பரவியிருக்கிறது என்பது உண்மை. ஆனால் தமிழில் இருக்கிற ரசனை என்னவென்றால் ஓரளவிற்கு தமிழரிடையே கூட தரமான சிறுகதைகள் என்றால் பாராட்டப்படுவதில்லை என்ற ஒரு வழக்கம் ஏற்பட்டுவிட்டது. அரங்கநாதன் எழுதியிருக்கிற கதைகள் போர்ஹே எழுதிய கதைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து மோனாலிசா, நசிகேதனும் யமனும் – அப்புறம் இன்னொரு தலைப்பு – இந்த மாதிரி எல்லாம் பார்க்கும் போது ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து, நமது பண்பாட்டின் பல அம்சங்களை நாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு இவர் எழுதியிருக்கிறார் என்று மிகவும் நன்றாகத் தெரிகிறது.[ii]

“முத்துக்கருப்பன் எண்பது“ என்கிற தொகுப்பிற்கு தமிழவன் எழுதிய முன்னுரையிலும், மா. அரங்கநாதன் கதைகளை வாசிக்கும்போது போர்ஹே கதைகள் நினைவிற்கு வருவதை சுட்டிக்காட்டுகிறார்[iii].

போர்ஹேவுடன் மா. அரங்நாதனை ஒப்பிடுவது நம் நோக்கமல்ல. ஒப்பீடு என்பது அடிப்படையில் நீதியியல் சார்ந்த மதிப்பீட்டு சொல்லாடல். அதனால், போர்ஹேவின் சாத்தியங்களை தமிழில் இவர் முயன்றிருப்பது என்று சொல்லப்படுவதை, கீழ்திசை கதைசார் உத்தியுடன் போர்ஹே கொண்டிருந்த உறவோடு அடையாளப்படுத்தியே காணமுடியம். போர்ஹேவின் கதைதளங்கள் பன்முகத்தன்மை வாய்ந்தவை என்றால், அது ஒருவித உலகப்பொதுவான சமூகக்கதையாடலாக அல்லது நவீன சமூகத்தில் ஒரு கதைபரப்பிற்கான தொன்மமாக்கலை செய்கிறது. அவரது கதைகளில் உலகின் பல தொன்மங்கள், வரலாறுகள், இலக்கிய நுட்பங்கள், தத்துவங்கள் ஆகியவை நவீன கதைவடிவம் எடுத்து வெளிப்பாடு கொள்வதைக் காணலாம். காரணம், போர்ஹே கீழ்திசை கதைசொல்லும் மரபை தனது உத்தியாக எடுத்துக்கொண்டு சமகால வரலாறு அரசியல் ஆகியவற்றை ஊடாடச் செய்தவர். அவரது கலைக்களஞ்சிய அறிவும், அரேபிய இரவுகள் உள்ளிட்ட அவர் வாசித்த கீழ்திசைக் கதைமரபுகளும் அவரது எழுத்தின் வழியாக நவீன தொன்மங்களை படைத்தன எனலாம்.

ஆனால், தமிழில் இக்கீழ்திசை மரபு என்பது நவீன சிறுகதை உத்திகளில் மிகவும் குறைவாகவே வெளிப்பட்டு உள்ளது. அதாவது போர்ஹேவின் சிறுகதைகளில் tale எனப்படும் கதைகட்டுதல் என்பது முக்கியமானது. ஆனால் நவீன சிறுகதைகளில் யதார்த்த்தவாதமும், இயல்புவாதமும் ஓங்கியதால், கதைகட்டுதல்களை விட்டு நடப்பியல் சித்தரிப்புகளையும் சம்பவங்களையும் கொண்டு வரலாறு மற்றும் சமூக பதிவுகளான story எனப்படும் Hi-story சார்ந்த கதையாடல்களே ஆதிக்கம் வகிக்கத் துவங்கின. இன்புறுப் புனைவுகளைக் (பேண்டஸி வகை) கொண்ட கதைகளைவிட, நடப்பியலை முன்வைக்கும் சம்பவக்கூறுகளே கதைகளாயின. அவ்வகையில் மா. அரங்கநாதனின் கதைதளங்கள் இவ்விரண்டு தளங்களில் இயங்கினாலும். அதிகம் கதைகட்டுதல்(‘டேல்’)களைவிட தன்வரலாற்றுப் பதிவுகளான கதை(ஸ்டோரி)களைக் கொண்டவையாக உள்ளன எனலாம்.

அரங்கநாதனின் கதைத்தளங்களைவிட கதைப்புலங்கள் நுட்பமாக கவனிக்கத்தக்கவையாக உள்ளன. அதாவது களம் என்பது இடத்தை குறிக்கிறது என்றால் புலம் என்பது கால-வெளியைக் குறிப்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலவெளியில் அல்லது புலத்தில் இயங்கும் மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட வகையாக ஆதல் என்பதே இக்தையாடல்களின் உத்தியாக உள்ளது. அதாவது ”ஆதல்” என்பது ஒரு தத்துவார்த்த உத்தியாக வெளிப்படுகிறது பெரும்பாலான கதைகளில். முத்துகருப்பன் ஒவ்வொரு கதையிலும் ஒன்றாக தோன்றி ஒன்றாக ஆதலே இந்த உத்தியின் அடிப்படையாக உள்ளது. ஆதல் என்பதை அதுவாக ஆதல் என்பதன்மூலம், மற்றொன்றாக ஆகாதிருத்தல் என்கிற தத்துவமாக மாறுகிறது. எல்லாம் மற்றதாக ஆதல் மூலமே மற்றதை இல்லாததாக்க முடியும். அதுவாக “ஆதல்“ “அதை“யும் “இதை“யும் இல்லாதாக்கிவிடும் என்பதே. தன்னை ஒரு சித்தாந்தியாக பல கதைகளில் பல களங்களில் பல தோற்றங்களில் முன்வைக்க முனையும் முத்துக்கருப்பன், இந்த உத்தி வழியாக சித்தாந்தம் பேசும் வேதாந்தியாகிவிடும்[iv] நிலை உருவாகிவிடுவதை கதையின் உள்ளார்ந்த அமைப்பில் வாசிக்க முடிகிறது.

(…. இன்னும் வரும்..)

- ஜமாலன் 23-10-2012 (jamalan.tamil@gmail.com)

இக்கட்டுரை காக்கைச்சிறகினிலே (மே-2013) இதழிலும், சிற்றேடு (ஜீலை செம்படம்பர் இணைப்பு) இதழ்களிலும் வெளிவந்து உள்ளது. கட்டுரையின் நீளம் கருதி பகுதியாக வெளியிடப்படுகிறது.

குறிப்புகள்.


[i] http://www.maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=115:2012-01-12-07-14-17&catid=17:2012-01-11-07-14-11&Itemid=36

[ii] http://www.maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=116&Itemid=41

[iii] பக்கம் VIII - முத்துக்கருப்பன் எண்பது – மா. அரங்கநாதன் – காவ்யா 2011.

[iv] சித்தாந்தம், வேதாந்தம் இரண்டும் இருவேறுபட்ட செல்நெறிகளாக இருப்பதால், வேதத்தையும் அதன அந்தமான உப-நிஷத்தையும் அடிப்படையாகக்கொண்ட தத்துவுமான வேதாந்தமே இங்கு குறிக்கப்படுகிறது.

*****************

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.