தமிழ்ச்சிறுகதையில் புதுமைப்பித்தன், மௌனி என்ற இரு எழுத்தியக்கங்களுக்கு பிந்தைய காலத்தில் உருவான சிறுகதைப் போக்குகளில் ஒன்று மா. அரங்கநாதன் கதைகள். எழுத்தாளன் காரணராகவும், எழுத்து ஆசிரியனின் தனிச்சொத்தாகவும் மாறிவிட்ட இன்றைய நவீன சமூகத்தில், இக்கதைகளை மா. அரங்கநாதன் என்கிற இலக்கிய ஆசிரியரின் படைப்பாக்கமாக கருதுவதும், அதன் ஆழ, அகலங்கள் மற்றும் நீள, உயரங்களை அந்த ஆசிரியரை வைத்து மதிப்பிடுவதும் இயல்பானதாக கருதப்படுகிறது. கதைகளின் வழி படைப்பாசிரியனை[i] மதிப்பிடுவதற்கு மாறாக, ஆசிரியன்வழி கதையை மதிப்பிடும் போக்கு முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. இது 17-ஆம் நூற்றாண்டிற்கு பிறகு உருவான சொத்துரிமை மற்றும் காப்புரிமை சார்ந்து உருவானதே. செவ்வியல்கால சமூகங்களில் தனிப்பட்ட படைப்பாசிரியன் எந்த ஒரு படைப்பின் உரிமையாளனாகவும் இருந்திருக்கவில்லை. ஆனால், நவீனசமூகம் படைப்பை ஆசிரியனின் உரிமையாக மாற்றிவிட்டது. அந்த உரிமை படைப்பாசிரியனின் பரிசாகவும், தண்டனையாகவும் மாறிவிட்டது. அதனால் ஆசிரியனை தனது சொல்லாடல்கள் வழி கட்டுப்படுத்துவதாகியது. அதாவது ஆசிரியனை செவ்வியல்-சமூக அங்கத்திலிருந்து விடுவித்தது, அதேநேரம் நவீன அரசு உருவாக்கிய கருத்தியல் மற்றும் சொல்லாடல்களம் வழியாக நவீன-சமூகம் என்கிற பேரமைப்பின் அங்கமாக மாற்றியது.
இந்நிகழ்வை பிரஞ்சு சிந்தனையாளர் மிஷல் பூக்கோ தனது ”படைப்பாசிரியன் என்றால் என்ன?”[ii] என்ற கட்டுரையில் விரிவாக விவாதிக்கிறார். ”படைப்பாசிரியன்” என்ற குறிச்சொல் கருத்துக்களின் வரலாற்றில், அறிவு, இலக்கியம், தத்துவம் மற்றும் அறிவியல் என்று தனித்துவமாக்கப்பட்டதோடு உருவான ஒன்று என்கிறார். இப்படி எழுத்தை சொத்தாக கருதி படைப்பாசிரியனின் உரிமையாக மாற்றியதன்மூலம், அந்த படைப்பாசிரியனை அதிகாரம் தன்வயப்படுத்திக் கொள்கிறது. அவனை தனது கண்காணிப்பிற்குள் நிறுத்திவிடுகிறது. அவனை அந்தகால சொல்லாடல் வெளிதாண்டி எழுதமுடியாமல் செய்துவிடுகிறது என்கிறார். படைப்பாசிரியனை அக்காலத்தின் சரித்திரவிளைவாக மாற்றிவிடுகிறது என்கிறார்.
அப்படி என்றால் உண்மையில் ஒரு படைப்பில் படைப்பாசிரியனின் பங்குதான் என்ன? படைப்பாசிரியன் தொல்குடி மாந்த்ரீகன் போல “சந்நதம்“ வந்து “தான்“ பிறழ்ந்த நிலையில், மொழி அவன் வழியாக வந்து கதையை எழுதிவிட்டுப் போகிறதா? சமூகஜீவியான ஒரு படைப்பாசிரியன் வெறும் ஊடகம் மட்டுமா? அவனது ரத்தமும் சதையுமான வாழ்விற்கும் அவனது எழுத்திற்கும் தொடர்பில்லையா? பிரஞ்சு சிந்தனையாளர் ரோலான் பார்த் சொன்னதைப்போல படைப்பாசிரியன் உண்மையில் இறந்துதான் போய்விட்டானா? படைப்பு என்பதை பிரதியாக மட்டுமே அணுக வேண்டுமா? பூக்கோ சுட்டிக்காட்டுவதைப்போல படைப்பாசிரியன் என்பவன் அந்தகால சொல்லாடலினால் கட்டுப்படுத்தப்பட்டு வரலாற்றிற்குள் நின்று மட்டுமே வாசிக்க முடியுமா? அல்லது இரத்தமும் சதையுமான எழுத்தாளனின் ஒரு ”மாற்று-தான்” (ஆல்டர்-ஈகோ) தானா?
”முத்துக்கருப்பன் எண்பது” (முத்துக்கருப்பன் என்பது… என்கிற தலைப்பு பொருத்தமானதாக இருந்திருக்கும்) என்கிற மா. அரங்கநாதனின் எண்பது கதைகளையும் ஒருசேர வாசிக்கும்போது எழும் கேள்விகளே இவை. மா. அரங்கநாதனின் எழுத்தாளர் என்கிற மாற்று-தானின் ஒரு மாற்று-தானாக வருகிறது இக்கதைகளில் முத்துக்கருப்பன் என்கிற பெயரடையாளம். மகாபாரதத்தை எழுதிய (அல்லது தொகுத்த) வியாசர், அவரே அதில் ஒரு பிரதான பாத்திரமாக (கௌரவர்கள், பாண்டவர்கள் எல்லோருக்கும் உயிரியல் தந்தையாக) கதையாடலை நிகழத்தியதைப்போல, இதில் முத்துக்கருப்பன் என்கிற பெயரடையாளம் கொண்ட பாத்திரம் ஒவ்வொரு கதையிலும் ஒருவிதமாக வெளிப்பட்டு நிற்கிறது. இது ஒரு உத்திசார்ந்த நுட்பம் என்றபோதிலும், இதற்குள் இந்த படைப்பாசிரியன் என்கிற கருத்தாக்கம் முத்துக்கருப்பன் வழியாக தனது இருப்பை பிரதிக்குள் காட்டியபடியே உள்ளது. முத்துக்கருப்பன் குறைந்தது ஒரு பெயர்ப்பலகையாக (கதை தேட்டை) வந்து அக்கதையாடலின் பிதுரார்ஜிதமாகவாவது இருப்பை வெளிப்படுத்தும் வண்ணம் கதையின் உத்திகள் பின்னப்பட்டு உள்ளன. ஆக, படைப்பாசிரியனின் இருப்பு என்பதுதான், இக்கதையாடலின் மையசரடாக இருப்பதால், ஒருவகையில் முத்துக்கருப்பனின் பலரூபங்களின் வெளிப்பாடாக அமையும் ஒருவகை சைவமதம் முன்வைக்கும் “திருவிளையாடல்” இறை-தத்துவமே இதன் அடிப்படையாக உள்ளது எனலாம்.
அவதாரம் என்பது வைணவ மதத்தின் இறை-வெளிப்பாட்டு-உத்தி என்றால், திருவிளையாடல் என்பது சைவமதத்தின் இறை-வெளிப்பாட்டு-உத்தி. சைவசித்தாங்களினால் இக்கதையாடல்கள் வழிநடத்தப்படுவதற்கான ஒரு வடிவ உத்தியே இந்த முத்துக்கருப்பன். அல்லது பிரபஞ்ச தோற்றம் என்பது சித்தினால் மாயை வழி உருவாக்கப்பட்ட சடத்தின் பலவடிவமும் அதன் அலகிலா விளையாட்டும் என்கிற மாயாவாதத்தின் செயல் உத்தியாக இக்கதையாடல்களை வாசிக்கலாம். அதாவது ஒருமை பன்மையாகிறது. ஒருவகையில் ஒருமையும் பன்மையும் ஒன்றுதான். ஒருமையை பன்மையாக பார்ப்பது மாயை. மாயை ஒரு ஆற்றல். அந்த ஆற்றலினால் பன்மையான இந்த உலகை, மறைப்பால் (மலத்தால்) இருமையாக்குவதில் உள்ள தத்துவத்தை மறுப்பது அவசியமாகிறது இக்கதையாடல்களுக்கு. இது சைவ தத்துவமரபின் மையசரடு என்றுகூட சொல்லலாம். இருமை என்பது பன்மை அல்ல. அதனால் இருமையான உலக யதார்த்தம் என்பதை மறுதலிக்கும் இக்கதையாடல்கள் நன்மை-தீமை என்கிற நவீனத்துவ இருமை விளையாட்டிலிருந்து விலகி நின்று பார்ப்பதாக உள்ளது. காரணமற்ற உலகின் காரணங்களை காணமுனைகிறது. அதாவது காரணத்தை மறுக்கவேண்டிய காரணத்தை கண்டடைய முனையும் கதையாடல்கள். அக்காரணராக தோன்றி மறையும் எழுத்துருவே முத்துக்கருப்பன்.
அரங்கநாதன் தனது படைப்புகள் பற்றிய ஒரு வாக்குமூலமாக நகுலனின் ”நான் எழுதி முடித்த பின்பே எனக்கு என்ன எழுதினேன்னு தெரியும்.” என்ற வாசகத்தை தனது செவ்விகளில் குறிப்பிடுகிறார். இதை அவரது இலக்கிய கோட்பாடாகக்கூடக் கொள்ளலாம். காரணம், அதே செவ்வியில் கூறுகிறார் ”காரண காரியங்களோடு இருக்கும் எந்தப் பொருளும் நிலைப்பது கிடையாது. அன்பு என்று நாம் உணர்வதிலே நோக்கமோ எந்தவித காரண காரியங்களோ இல்லை.” (இது “அஞ்சலி“ கதையில் முத்துக்கருப்பனின் விமர்சனக்கட்டுரையில் ஒரு வாசகமாக எழுதப்பட்டு உள்ளது.) இதனை அவரது சித்தாந்தம் அல்லது தத்துவம் அல்லது நவீனமொழியில் சொன்னால் உலகக் கண்ணோட்டம் எனலாம். அதாவது படைப்பு ஒரு ஆழ்மன வெளிப்பாடு, அது நினைவற்றநிலையில் நிகழும் ஒன்று என்பதே. அதற்கு காரண காரியங்கள் இல்லை. அதை படைப்பாசிரியனின் “தான்“ என்கிற நினைவுநிலையிலான ஒரு உடலின் சமூக வாழ்வு கட்டுப்படுத்தாது. எனவே, சமூகத்தில் புழங்கும் ஒரு எழுத்தாளனை, ஒரு படைப்பின் படைப்பாசிரியனாக கருதிவிட முடியாது. அல்லது படைப்பு என்பது காரணங்கள் நோங்கங்கள் அற்றது என்பதே. ஆனால், படைப்பு ஒரு எழுத்தாளனை படைப்பாசிரியனாக உற்பத்தி செய்வதன் மூலம்தான் பிரதியாகிறது.
அதாவது ஒரு இலக்கிய படைப்பாசிரியன் படைப்பில் தோன்றி படைப்பில் வாழ்ந்து படைப்போடு மறைகிறான். அல்லது படைப்பாசிரியன் படைப்பிற்கு முன்னும் பின்னும் படைப்பாசிரியனாக இருப்பதில்லை. படைப்பில் மிஞ்சுவது பிரதியே. பிரதியில் படைப்பாசிரியன் மறையும் இடத்தில் வாசகன் வெளிப்படுகிறான். வாசகன் தன்னுருவாக்க வினையாக பிரதியை கட்டுகிறான். அதற்கு எழுத்தாளனின் உயிரியல் சார்ந்த சமூக வாழ்க்கை எந்த உதவியும் செய்வதில்லை. அதாவது படைப்பாசிரியன் யார் என்று அறியாமலே ஒரு படைப்பை வாசிக்க முடியும் எனும்போது, படைப்பாசிரியனின் வாழ்வு பற்றிய விபரங்களும், வினைபாடுகளும் வாசகனுக்கு தேவையற்றது என்பதே. ஆனால், படைப்பாசிரியன் படைப்பிற்கு வெளியில்தான் இல்லை. படைப்பிற்குள் அவன் உயிர்ப்புடன் உள்ளானா? இல்லையா? என்பதை வாசிப்பாளன் கண்டடைவான். படைப்பாசிரியன் நினைவற்றநிலையில் படைக்கலாம், ஆனால் வாசிப்பாளன் சமூகநினைவுடன்தான் வாசிக்கிறான். அல்லது வாசிப்பாளன் படைப்பாளனை உற்பத்தி செய்வது பிரதியின் ஒரு வாசிப்பு செயல்பாடாக ஆகிறது. வாசிப்பு அப்படைப்பாளனை பிரதிக்குள் உயிர்ப்பிக்கிறது. அதாவது, காரணமற்ற படைப்பு காரணமாவது வாசிப்பில். அரங்கநாதனால் காரணமற்று படைக்கப்பட்ட இவை ஒரு காரணத்தின் பொருட்டே வாசிக்கப்படுகிறது என்பதை சொல்லவே இந்த நீண்ட உசாவல்.
சங்கப்பாடல்களின் எந்த படைப்பாசிரியரையும் நமக்கு தெரியாது. படைப்பாசிரியரை நாம்தான் உருவாக்குகிறோம் அவரது பிரதியிலிருந்து. சான்றாக காக்கை பாடினியார் என்ற பெயர் நாம் பிரதியிலிருந்து உற்பத்தி செய்த படைப்பாசிரியரின் பெயர்தானே தவிர அப்பிரதியை எழுதியவரின் பெயரல்ல. ஆக, பிரதிக்குரிய படைப்பாசிரியனின் பெயர் என்பது தனிச்சொத்தை அடிப்படையாகக்கொண்ட முதலாளியத்தின் விளைவாக உருவானதே. இங்கு எழும் கேள்வி படைப்பாசிரியனாக உள்ள ஒரு எழுத்தாளனின் சமூக வாழ்வு படைப்பில் அல்லது பிரதியில் என்ன வகிபாகத்தை வகிக்கிறது என்பதே? இதற்கான பதிலை மொழிக்கும் படைப்பிற்குமான உறவிலிருந்தே பெறமுடியும். ஒரு படைப்பை கட்டுவது மொழி என்றால், மொழியை கட்டுவது சமூகம். ஆக, சமூகம் மொழியாக படைப்பாசிரியனின் ஆழ்மனமாக கட்டமைந்து உள்ளது எனலாம். படைப்பாசிரியனும், வாசகனும், பிரதியும், சமூகமும் தொடர்புறுவது மொழிவழியாகவே. சமூகவயமாகிவிட்ட மொழியால் வெளிப்படுத்தப்படும் படைப்பானது, படைப்பாசிரியனின் ஆழ்மனக்கட்டுமானத்தின் வழியாக வெளிப்படுகிறது. அதாவது பிரதி என்பது சமூகம், படைப்பாசிரியன், வாசகன் என்கிற மொழி-நெசவில் நெய்யப்படும் பொருளே. இதன்பொருள், ஒவ்வொரு சமூகத்திலும் பிரதி ஒவ்வொருவிதமாக நெய்யப்படும். பிரதி என்பது முற்றுமுழுதான பொருள் அல்ல. செயலில் உருவாகும் இயக்கத்தில் இருக்கும் ஒன்று. ஆக, பிரதியை கட்டுவதும் கலைப்பதும் வாசிப்பே.
(…. இன்னும் வரும்..)
- ஜமாலன் 23-10-2012 (jamalan.tamil@gmail.com)
இக்கட்டுரை காக்கைச்சிறகினிலே (மே-2013) இதழிலும், சிற்றேடு (ஜீலை செம்படம்பர் இணைப்பு) இதழ்களிலும் வெளிவந்து உள்ளது. கட்டுரையின் நீளம் கருதி பகுதியாக வெளியிடப்படுகிறது.
குறிப்புகள்.
[i] Author என்ற ஆங்கிலச்சொல்லிற்கு இணையாக தமிழில் ஆசிரியன் என்ற சொல் புழக்கத்தில் உள்ளது என்றாலும், அது அதற்கான சரியான சொல்லாட்சியாக கருதமுடியவில்லை என்பதால், படைப்பாசிரியன் என்ற சொல்லை அதற்கு பகரமாக பாவிக்கிறேன் கட்டுரை நெடுகிலும்.
[ii] பூக்கோ ”படைப்பாசிரியன்” என்று பயன்படுத்தும் சொல் அந்தந்த கால வரலாற்றின் ஒரு குறிப்பிட்டவகை சொல்லாடலை உருவாக்கிவிடுபவர்களையும் குறிப்பதாக உள்ளது. உதாரணமாக பிராய்ட் மற்றும் மார்க்ஸ் போன்றவர்களை சொல்லலாம். இவர்களை சொல்லாடலை உற்பத்தி செய்யும் ஆசிரியர்கள் என்கிறார். ஆனால், இலக்கிய படைப்பாசிரியன் என்பவன் அக்கால வரலாற்று சொல்லாடலால் கட்டுப்படுத்தப்படுகிறான் என்கிறார். படைப்பாசிரியன் என்பதைவிட படைப்பாசிரியத்துவ செயல்பாடு ("author function") என்பதை முக்கியப்படுத்துகிறார். எல்லா பிரதிகளையும் ஒன்றுபொல் வாசிக்கமுடியாது செய்வது இந்த செயல்பாடே. விரிவாக அறிய மூலக்கட்டுரையை வாசிக்கவும். What is an author? – Michal Foucault.
0 comments:
கருத்துரையிடுக