டெல்லியில் கொடும் பாலியல் வதைக்கு ஆளாக்கப்பட்டு, இரும்பு கம்பிகளால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துவிட்ட சகோதரிக்கு அஞ்சலியை தெரிவித்துக் கொள்வோம். ஆனால், இந்த சம்பவம் ஊடகங்களால் பெருக்கப்படுவதன் அரசியல் ஒருபுறம் இருக்கிறது. பிரதமர் துவங்கி குடியரசுத்தலைவர்வரை, தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டிய தேவை பற்றி பேசுகிறார்கள். ஒருபடி மேலாக, இந்தியாவின் வீரமகள் என்று வர்ணிக்கிறார் குடியரசுத்தலைவர். எதிர்கட்சியான பாரதிய ஜனதா, அந்த இறந்த பெண்ணை மையமாக வைத்து ஒரு பெரும் அரசியல் எதிர்ப்பலையை உருவாக்கும் பணியில் இறங்கி உள்ளது. இறந்த பெண்ணிற்கு இந்திய அரசின் வீரத்திற்கு வழங்கப்படும் உயர்விருதான ‘அசோக் சக்ரா” விருது வழுங்க வேண்டும் என்கிறார் டெல்லி பிஜேபி தலைவர். காங்கிரஸின் சசிதருர் அப்பெண்ணின் பெயரில் புதிய சட்டம் இயற்றவேண்டும் என்கிறார்.
வன்முறையில் ஈடுபட்ட அந்த ஆறுபேருக்கும் தூக்கு தண்டனை தரவேண்டும் என்கிற கோரிக்கையை பரவலான மக்கள் முன்வைப்பதாக ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா ரசாயணமுறையில் ஆண்மை நீக்கம் செய்யவேண்டும் என்கிறார். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது துவங்கி கண்ணுக்குகண் தண்டனைமுறையை பின்பற்றவேண்டும் என்பதுவரை இந்திய அரசியல் அல்லது நீதிபரிபாலன அமைப்பின் அதிகாரத்தை மறுஅமைப்பாக்கம் செய்யும் உரையாடல்களே பரவலாக்கப்படுகிறது. இஸ்லாமிய நாடுகளின் தண்டணைமுறைகளைப்பற்றியும், அதை நடைமுறைப்படுத்துவதற்கான மதவாத வேட்கையையும் வெளிப்படுத்துவதாக பேச்சுக்கள் நிகழ்த்தப்படுகின்றன.
சட்டங்களை கடுமையாக்குவதால் இத்தகைய பிரச்சனைகள் தீர்ந்துவிடாது என்பது அனைவரும் அறிந்ததே. இது சமூக பண்பாட்டு நடைமுறைகளின் விளைவாக ஒருவான ஒன்று. சமூகவயமாகிவிட்ட மனித உடலிற்குள், பாலின்பம் என்பது மையமானதாக கட்டப்பட்டு உள்ளது. (இந்த கட்டடமைப்பிறற்கும் முதலாளித்துவ வளர்ச்சிக்கும் உள்ள உறவுபற்றி பிரஞ்சு சிந்தனையாளரர் மிஃஷல் பூஃக்கோ தனது “பாலியல் வரலாறு” என்கிற நூலில் விரிவாகப் பேசுகிறார்.) அவ்வின்பம் தடைபடும், அல்லது தடைப்படுத்தப்படும்போது, அது வன்முறையாக வெளிப்பாடு கொள்கிறது. மனித வேட்கைகளை அல்லது மன வக்ரங்களை சட்டம் சரிபடுத்தாது. அது ஆழமாக வேரோடி, தருணம் பார்த்து வன்முறையாகவும், வக்ரமாகவும் வெளிப்படும் வண்ணம் மனதில் ஆழ்தளத்த்திற்கே தள்ளும். அப்படியே சட்டங்கள் போடப்பட்டாலும், அது பாரபட்சமற்று, அரசியலற்று, சமமாகவும் சரியாகவும் நடைமுறைக்கு உட்படுத்தப்படுகிறதா? என்று கண்காணிப்பது அவசியம். மக்கள் சட்டத்தை கண்காணிப்பதற்கு மாறாக, சட்டம் மக்களை கண்காணிப்பதாக உள்ளது என்பதே இன்றைய நிலை. சட்டத்தின்மீதும், நீதியின்மீதும் மக்களுக்கு ஒரு நம்பகத் தன்மையை உருவாக்குவது அவசியம். அப்படி ஒன்றை உருவாக்கமுடியாதது மட்டுமின்றி உருவாக்குவதற்கான அடிப்படைகள் அற்றதாகவே உள்ளது இன்றைய அதிகார முதலாளித்துவ சமூக அமைப்பும் அதன் ஏற்றத்தாழ்வான குழுசார் சிந்தனைமுறைகளும்.
பாலியல் வன்கொடுமை என்பது இந்தியாவில் தினமும் நிகழும் நிகழ்வுகள்தான். வெளிப்படுபவைதான் குறைவு. அதிலும் இப்படி ஊடக வெளிச்சமும், மெருகும் ஏற்றப்பட்டு இந்திய தேசியப்பிரச்சனையாக ஆக்கப்படுபவை அரிதிலும் அரிது. அப்படி ஆக்கப்படுவதும், இந்நிகழ்வு ஆக்கப்பட்டிருப்பதும், கட்சிகளின் அரசியல் நடவடிக்கையோ எனத்தோன்றும்படி உள்ளன. ஆதிவாசிப்பெண்கள், சிறுபான்மையினப்பெண்கள். தாழ்த்தப்பட்ட பெண்கள் துவங்கி நடுத்தரவரக்க மேல்தட்டு பெண்கள் வரையும் அவர்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்கள், காவல்துறை, இராணுவம் துவங்கி அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் அவர்களது பிள்ளைகள், உறவினர்கள் என பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் உள்ளன. அதிகாரத்தில் நேரடியாக பங்குபெறாத ஆறுபேர் ஈடுபட்ட ஒரு பாலியல் வன்முறையே இது. டெல்லி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மிகவும் சாதரணமான அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதாலோ என்னவோ, அதீத முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது. அதிகாரத்தில் உள்வர்கள் செய்யும் பாலியல் வன்முறைபற்றி மத்தியதரவர்க் மனோபாவம் அதிகம் அச்சமோ கவலையோ கொள்வதில்லை என்றும் இதை புரிந்துகொள்ளலாம். அவர்கள் தண்டிக்கப்பட்ட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அவர்கள் இத்தனை கடுமையான வன்முறையில் ஈடுபட்டும் அந்த பெண்ணையும் அவரது நண்பரையும் கொலை செய்யாமல் விட்டுப்போனதும், அவர்கள் ஆறுபேரின் எந்த வாக்குமூலமும் வெளிப்படாததும், அந்த நண்பர் பற்றிய எந்த தகவலும் ஊடகங்களில் வெளிப்படாத்தும்தான் இதன்மீது பல அய்யங்களை எழுப்புவதாக உள்ளது. ஆனால், ஊடகங்கள் அளவுக்கதிகமான முக்கியத்துவம் தருவதும், இதை ஒரு தேசியப்பிரச்சனையாக மாற்றியிருப்பதும்தான் கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது.
இதற்கு முன்பு இதுபோன்ற பாலியல் வன்முறை எதுவும் நிகழாமல், புண்ணிய பாரத பூமி தனது பண்பாட்டில் வேரூண்றி இருந்ததைப் போலவும், இப்போ புதிதாக இது நிகழ்ந்திருப்பதைப்போலவும், ஒரு பெரும் பரபரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அரசியல் துவங்கி டெல்லியில் ஆட்சியை பிடிக்க துடிக்கும் கட்சிகளின் அரசியல் உட்பட இதற்கு பின்ணியாக பல காரணங்கள் இருந்திருக்க்கலாமோ என்கிற சந்தேகத்தை இவை உருவாக்குகின்றன. என்றாலும், பாலியல்பற்றி, பெண் உடல்பற்றி, குடும்பம் மற்றும் பொதுத்தளங்களில் நிகழும் பாலியல் வன்முறைகள் பற்றி ஒரு சொல்லாடல் உருவாக்கத்த்திற்கான களத்தைத் திறந்து உள்ளது என்பதே முக்கியம்
வாச்சாத்தி துவங்கி சிதம்பரம் காவல்நிலையம் பத்மினி உட்பட எண்ணற்ற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, தாழ்த்திக்கொள்ளும்படி செய்யப்பட்ட சகோதரிகள் பலரும் பாலியல் வன்கொடுமைக்கும், வன்புணர்ச்சிக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் அஸ்ஸாமில் பாலியல் வன்கொடுமையை தனது இனமல்லாத மற்றொரு இன உடலின் மீது நிகழ்த்தி, ஒரு பெரும் இனஅழிப்பு அவலம் நிகழ்ந்தபோதும், அரசு எந்திரம் பாலியல் வன்கொடுமை பற்றி கவலைக் கொண்டதாக தெரியவில்லை. மத்தியதரவர்க் மனசாட்சியை அது தொட;டுக்கூட பார்க்கவில்லை.
குழந்தைகள், சிறுமிகள் துவங்கி முதிர்ந்த பெண்கள் வரை இதற்கு ஆளாகிக்கொண்டு உள்ளனர். பலமுறை நிகழ்ந்துவிட்ட, நிகழ்ந்து கொண்டிருக்கிற இந்நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் இந்த அளவிற்கு ஊடகங்களும், அரசும், எதிர்கட்சிகளும், பரவலான மக்களும் கொந்தளிக்கவில்லை என்பது ஏன் என்கிற கேள்வி உள்ளது. என்றாலும், இன்றாவது இப்படி ஒரு போராட்டமும், அதை ஒட்டிய விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே. இச்சூழலில் நிதானமாக சிந்திப்பதும், பிரச்சனையை சமூக அடிப்படையில் நோக்குவதும் அவசியம்.
- டெல்லி பாலியல் வன்முறை மதுவால் நடைபெற்றது அல்லது நடைபெறுகிறது என்பது மிகவும் சாதரணமான பொதுமனநிலை சார்ந்த ஒரு கருத்தாகவே படுகிறது. இது வழக்கம்போல் குடியால் வந்த கேடாக எண்ணி, குற்றவாளிகளின் குற்ற மனோவியலை தவிர்க்கும் அல்லது காணாமல்விடும் செயலாகவே முடியும்.
- பாலியல் வன்முறை, தற்கொலை போன்று நவீன சமூகத்தின் ஒருவகை முதலாளித்துவ பரோனியா. இப்பரோனியாவை பெருக்குவதன்வழியாக, அதிகாரம் என்பது பரவலாக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதனிடமும் திடப்படுத்தப்படுகிறது. ஒருபுறம் இந்தியப் பண்பாடு, பழமை என்று ஒரு கட்டுப்பெட்டித் தனத்தை போதிப்பதும், மறுபுறும் தன்னடையாளத்திற்குள் வராத ஒன்றை பாலியல் வன்முறைக்கொண்டு கொன்றொழிப்பது வீரம் என்றும் போதிக்கும் இரண்டக மனதை உருவாக்குவதே இந்த பரோனியாவின் அடிப்படை. டெல்லி வன்முறையில் ஈடுபட்ட ஒருவன், இந்தியப்பண்பாட்டை போதிப்பதன் அடிப்படை இதுவே.
- மாவோயிஸ்டுகள் மீதான, பழங்குடிகள் மீதான மற்றும் பஞ்சாப், ஒரிஸா, அஸ்ஸாம், குஜராத் உள்ளிட்ட பல கலவரங்களில் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை கண்டுகொள்ளாத இந்த அரசு எந்திரம், இத்தகைய நிகழ்வுகள் வழியாக மத்தியதரவர்க்கத்திற்கும், அடித்தட்டு மக்களுக்கும் இடையில் ஒருவித அச்சத்தை பரப்பி தனது இறையாண்மையை உறுதிப்படுத்திக் கொள்கிறது.
- சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட பெண் உடல்கள்மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் பற்றிய எந்த எதிர்ப்பும், தண்டணையும் தராது மௌனிக்கும் இந்த அரசு எந்திரம், இத்தகைய நிகழ்வுகளில் கவனம் செலுத்துவதாக காட்ட முனைவது என்பது, பேரும்பான்மை மத்தியதரவர்க்க மனோபாவத்தை தனக்கு முதலீடாக்க்கிக்கொள்ளவே.
- பரவலாக பெண் உடைகள் பற்றியும், இந்தியப்பண்பாடு என்று பெண்களின் பொதுவெளிகளுக்கான சுந்திரம் மறுக்கப்படுவதும் இந்த சொல்லாடலில் முக்கியமானதாக ஆக்கப்படுகிறது. இது மதவாதங்களின் பெண்பற்றிய சிந்தனையை மறுஉருவாக்கம் செய்கிறது. மதவாதகட்சிகளின் பெண் ஒடுக்குமுறை மனோபாவம் மீளாக்கம் செய்யப்படுவதன் வழியாக அக்கட்சிகள் தங்களது ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்கான ஒரு சடங்காக இதை மாற்றுகின்றன.
- தூக்கு உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் பற்றிய மக்களின் ஒப்ப்புதல் மனநிலையை அல்லது மனசாட்சியை உற்பத்தி செய்யும் ஒன்றாக இச்சம்பவம் மாற்றப்படுகிறது. அதாவது இராணுவ அல்லது சரிவாதிகார ஆட்சி வேண்டும் என்கிற பாசிச மனோபாவத்தை கட்டமைப்பதற்கான மனத்தளத்தை இச்சம்பவம் பற்றிய பெருக்கப்பட்ட சொல்லாடல்கள் ஊடகங்கள் வழியாக உற்பத்தி செய்து தள்ளுகின்றன.
- இந்தியாவில் பாசிச மனநிலைக்கான மனசாட்சி உருவாக்கப்படுவதால், மதவாத கட்சிகள் வரும் தேர்தலை இந்த சம்பவத்தின் பின்விளைவாக மாற்ற முயற்சிக்கின்றன. இந்த பாலியல் வன்முறை மதவாதத்திற்கு கிடைத்த வெற்றியாக மாற்றப்படுகிறது.
உயிர் மற்றும் உடல் இரண்டும் அதிகாரத்தின் நுகர்வுப்பொருளாக மாற்றப்பட்டு, அவற்றின்மீதான முற்றுமுழுதான அதிகாரத்தை எடுதத்துக்கொண்டதின் ஒரு முதலாளித்துவ எந்திரவியலோடு உறவு கொண்டவை இவை. இந்த எந்திரவியல், ஒவ்வொரு மனித உடலையும் ஒரு குறிப்பிட்டவகை அடையாளத்திற்குள் திணிக்கிறது. பாலியல், இன, மத, சாதி உள்ளிட்ட பல அடையாளங்களில் இயங்கும் உடல்களாக, அவற்றின் அடையாளக் கருத்தியல் அடிப்படையில் உருவாகிவிட்ட இறுகிய மன அமைப்புகளாக மாற்றிவிடுகிறது. தாழ்த்தப்பட்டப் பெண்உடல்களை பொதுஉடலாக கருதி அரசு எந்திரமும், ஆணாதிக்க சாதிய அதிகாரமும் தாறுமாறாக, வன்முறைகொண்டு சிதைத்து அழித்தபோதெல்லாம் மெளனம்காத்த நமது இறுகிய ஆதிகாரவர்க்க்க ஆணாதிக் மணோபாவமே இன்று டெல்லி வன்கொடுமை நிகழ்விற்கான அடிப்படையாக அமைந்து உள்ளது.
இத்தகைய வன்முறையில் ஈடுபடுபவர்கள் நம்பும் கருத்தியல்களும், பெண் உடல் பற்றியும், காமம் பற்றியம், மிகைப்படுத்தப்பட்ட, பெருக்கப்பட்ட புனைவுகள் எல்லாம் இணைந்த ஒரு கலாச்சார பிரச்சனையே பாலியல் பலாத்காரம் உருவாகும் அடிப்படை மன அமைப்பு ஆகும். தாங்கள் செய்யும் வன்முறைகளை இழிவுகளை, வன்மங்களை போதை என்ற ஒன்றிற்குள் வைத்து பேசுவது குற்றவாளியின் மனவக்ரத்தை மறப்பதற்கு வசதியானது என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை. மேற்குலக நாடுகளில் மது என்பது ஒரு உணவுப்பொருளாக பாவிக்கப்படுகிறது. அங்கு அரைகுறை ஆடைகள் என்று நமது கலாச்சார காவலர்கள் அலறும் உடைகளும், காமம் பற்றிய வெளிப்படையான மர்மமற்ற உணர்வுகளும் நிலவுகிறது. அங்கு இப்படிப்பட்ட பாலியல் வன்முறைகள் குறைவு.
உண்மையில் இந்தியாவை புண்ணியபாரத பூமியாக கருதும், பாரத தாய் என்கிற உருவகத்தை வைத்து அரசியல் பண்ணும் மதவாதக் கட்சிகளும், மதஅடிப்படைவாதம் பேசும் இஸ்லாமிய மதவாத அமைப்புகளுமே இத்தகைய பாலியல் வன்முறைக்கான மன அமைப்பை உருவாக்கி தருகின்றன. பெண் உடலை மர்மப்படுத்தி, வெறும் புனைவின்பமாக மாற்றுவதன் வழியாகவும், பெண்ணை இரண்டாம்பட்சமாக மாற்றி ஆணாதிக்கத்தை வளர்த்து, பெண்வெறுப்பு மனநிலையை உருவாக்குவதும் இத்தகைய அமைப்புகளே. மதவாதகட்சிகள் வீரம், விவேகம், சுயப்பெரிமிதம், மேலாண்மை போன்ற கருத்தியல்களின் அடிப்படையில் ஆழத்தில் ஒழித்து வைத்திருப்பது பெண்வெறுப்பு என்கிற, பால்-வெறுப்பு மனோவியலையே. தனது அடையாள அரசியலுக்கு வெளியில் உள்ளவை, தனது அதிகாரத்திற்கு உரியது என்கிற மனோபாவத்தில், அவற்றின்மீது வன்முறை செலுத்துவதை தனது அரசியல் வெற்றியாக இவை கருதுகின்றன. போர், கலவரங்கள், இனமோதல்கள், சாதி மோதல்கள் உள்ளிட்டவற்றிலும் பெண் உடலுக்கு எதிரான பாலியல் வன்முறை என்பது எழுதாக்கிளவியாகவே உள்ளது. காரணம் பெண் உடலை தனது உரிமைக்கான களமாக கட்டமைத்திருக்கும் ஆணாதிக்க மனோபாவமே. அதிகாரவெறிகொண்ட ஆணுடல் தன்னை ஒரு ஆயுதமாக கட்டமைத்திருப்பதே காரணம். ஆண்மை, வீரம், விவேகம், தேசப்பற்று, மதப்பற்று, மொழிப்பற்று என்று பல கருத்தியல் பண்டங்களை நுகரச்செய்வதன் வழியாக இந்த கட்டமைப்பு நிகழ்த்தப்படுகிறது. இவற்றை எல்லாம் பேசாது இத்தகைய பாலியல் வன்முறைகள் பற்றிய ஒரு உரையாடலை நிகழ்த்த முடியாது. திறந்த இத்தகைய உரையாடல்களை நிகழ்த்தி ஒரு பண்பாட்டு விழிப்புணர்ச்சியை உருவாக்காமல் சட்டங்களாலும், தண்டணையாலும் மட்டுமே இவற்றை ஒழித்துவிட முடியாது.
- ஜமாலன் (04-01-2013)
0 comments:
கருத்துரையிடுக