திருட்டுப்போன காதல்கதை அல்லது வடபோச்சே வடிவேலு.


சலிப்போடு நாளிதழின் கள்ளக்காதல்களை புரட்டிக்கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில் சலியாது சந்தேகங்களை கிளப்பும் சந்தேகச் சாம்பிராணியிடமிருந்து ஒரு போன்கால். என்னய்யா ஆளைக்காணோம் நீண்டநாளாய் என்றேன். புத்தகக்கண்காட்சியில் ரொம்ப பிஸி, ஓகோ, நான் சில குறிப்புகளை தருகிறேன் அதை உங்கள் பிளாக்கில் வெளியிட்டு பேஸ்புக்கில் பகிர்ந்து டுவிட்டரில் துப்பிவைக்க முடியுமா? என்றார். நானும் நீண்டகால நண்பர் என்பதால் சரி சொல்லுங்கள் என்றேன். அவர் சொல்ல சொல்ல எழுதப்பட்டது. அடைப்புக்குறியில் உள்ளவையும், அடிக்கோடிட்டவையும் என்னுடையவை. அதற்கு சந்தேகம் பொறுப்பல்ல. மற்றவற்றிற்கு சந்தேகமே பொறுப்பு.

ம்ஹ்ஹ்…. (சந்தேகத்தின் செருமல். பேசத்துவங்கியது.)

2013 ஆம் ஆண்டு சென்னை புத்தகச் சந்தையில் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழக தல்ஸ்தோய் எழுதுவதாக பறைசாற்றிய பத்தாயிரம்பக்க நாவல் திருட்டுப் போய்விட்டது. பாழாய்ப்போன பதிப்பகம் வாஸ்துபிரகாரம் சமையல்கட்டு வைக்க வேண்டிய அக்னி மூலையில் தனது கடையை வைத்ததே காரணம் என்பது ஒருவிதமாக புரிந்துவிட்டது அவருக்கு. தமிழகத்தில் கடைபோட்டு வடைசுடும் பதிப்பகங்களும், வடைசுட்டதால் கடைபோடும் பதிப்பகங்களும் என இரண்டுவகைப் பதிப்பகங்கள் உண்டு. இந்த சதிவேலைக்கு காரணம் தமிழகத்தின் பிராபல்ய போட்டி பதிப்பகமே. என்னை என்ன ஆப்ப சோப்பை என்று நினைத்தார்களா? நான் கற்பனை பிரதேசங்களை காற்சட்டைப் பைக்குள் காத்திரமாக வைத்திருப்பவன். நினைத்தால் ஆயிரம் பக்கம் கதையை ஒரு நொடியில் அப்படியே எழுதிவிடுவேன் என்று கர்ஜித்தபடி திரிந்தார் அந்த எழுத்தாளச்சிகாமணி.

என்றாலும் இத்தகைய கதை திருட்டுகளை கண்டுபிடிப்பதற்கென்று ஒரு தனித் துப்பறியும் துறை உம்ப்ர்த்தோ எக்கோவின் ஃபுகோஸ் பெண்டலுமில் உள்ள நைட்ஸ் டெம்பளார்களைப் பின்பற்றி இழந்த இலக்கிய உச்சத்தை மீட்டெடுக்க உலகெங்கும் ரகசிய சங்கமாக விரவியிருந்தது. அவர்களாக இந்திய உச்ச நீதிமன்றம் பொதுநல வழக்காக எடுத்து வாதாடி தண்டனைத் தருவதை முன்னுதாரணமாகக் கொண்டு எழுத்தாளச் சிங்கத்தின் நாவலை ரகசியமாகத் தேடத்துவங்கினார்கள். அதற்கு எழுத்தாளர் ஒத்துழைக்க வேண்டும் என்று பணிவன்போடும் ரகசியமாகவும் கேட்டுக் கொண்டார்கள்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய? நாவலின் பெயர், நாயக, நாயகியின் பெயர், வில்லன்கள், திருப்புமுனை சம்பங்கள், உச்சங்கள். எச்சங்கள், பட்சணங்கள், பாத்திரங்கள், கண்ணீர் மிகும் உணர்ச்சிமிக்க காட்சிகள் எழுதப்பட்ட இடங்கள், பொன்மொழிகள், அறிவுரைகள் இப்படி எதாவது குறிச்சொற்கள் இருந்தால் கணிப்பொறியின் கண்காணிப்பு எந்திரம் வழியாக கண்டுபிடித்துவிடலாம் என்றார்கள்.

நாவலின் பெயர் கண்ணீர்க்காடு. இந்த பெயரிலும், இதற்கு நெருக்கமான பெயரிலும் தேடுபொறி ஆயிரம் தமிழ் நாவல்களை முன்வைத்தது. கண்ணீர்க்கோடு, கண்ணீர்தேசம், கண்ணீர்உணவு. கண்ணீர்கலை, கண்ணீர்கொலை துவங்கி கண்ணீர் கால்சராய், கண்ணீர்வடை, கண்ணீர்இட்லி.. இப்படி தமிழின் அத்துனை சொற்களோடும் கண்ணீரின் நெகிழ்ச்சி கரைபுரண்டோடியது.

காதல்கதை என்றார் தத (தமிழ் தல்ஸ்தோய் சுருக்கம்). காதல்கதை என்று அடித்தால் தேடுபொறி நிற்காமல் சுற்றிக்கொண்டே இருந்தது. ஒன்றா இரண்டா உடனே தேடி தள்ளிவிட, திணறிக்கொண்டிருந்தது தேடுபொறி. இரகு (இலக்கியஉச்ச ரகசியக் குழு) இது வேலைக்காகாது என்றது. காதல் இல்லாத கதை தமிழில் உண்டா. மாதத்திற்கு 3 சினிமாக்கள். 30 நாவல்கள். 300 சிறுகதைகள். 3000 கவிதைகள் வருகிறது. பற்றாக்குறைக்கு பிளாக்கில் புலம்பவது, பேஸ்புக்கில் சலம்புவது, டுவிட்ரில் தும்முவது என அது கிடக்கு ஒருகோடி. அப்பறம் மதிப்புரை என்ற பெயரில் எழுதப்படும் காதல் கடிதங்கள் ஒருபக்கம் என்றால், சொற்சித்திரங்களாக சுண்டிவிடப்படுபவை பலபக்கங்கள். முகநூலில் காதல்வலை விரித்து காத்திருப்போரோ எண்ணிலடங்கா. இப்படி காதலை வைத்து எதையாவது கண்டுபிடிக்கமுடியுமா? வேண்டுமானால் மரத்தை வெட்டுவதற்கு பதிலாக காதலர்களை வெட்டி அரசியல் பண்ணி ஆச்சியைப் பிடிக்க அலையலாம்.

தனித்துவமான கற்பனைக் காட்சி எதாவது? நாயகியின் பொட்டை பார்த்து நாயகனுக்கு காதல் பொங்கி வழியும் தமிழில் இப்படி ஒரு அற்புதக்கற்பனை யாராலும் எழுதப்பட்டதில்லை என்றார் தத. இது ஒரு பழம் இலக்கியக் கோட்பாடு இதை வைத்து எல்லாம் கண்டுபிடிக்க முடியாது. நாயகியின் எதையாவது ஒன்றைப்பார்த்து எதையாவது ஒன்றை வழியவிடுவதே உயர்ந்த ரசனை என்கிறது இவ்விலக்கியக் கோட்பாடு.  அது தமிழ் நாவல்களின் நாயகபாவமும்கூட என்று ஜெர்மானிய அறிஞர் முக்காமுல் 3025 பக்கங்களுக்கு ஆய்வை சமர்பித்து உலகெங்கிலும் தமிழ்க்காதலை காற்றைப்போல பரவவிட்டுவிட்டார். பொட்டில் துவங்கி கட்டிலுக்கு அழைப்பதே காதல் பாவத்தின் (இது பாவம் அல்ல சமஸ்கிருதம் அழுத்தி உச்சரிக்கும் பாவம்) உச்சம். அதை வைத்து ஒன்றும் செய்யமுடியாது. கப்பலில் துவங்கி கண்தெரியாதவர்வரை தமிழ்க்காதல் பிரபலம்.

கண்ணீர் மிகும் இடங்கள் எதாவது சொல்லுங்கள் என்றனர். முழு நாவலும் தேம்பி தேம்பி அழுதபடி எழுதப்பட்டதுதான். பக்கத்திற்கு பக்கம் கண்ணீரால் புரட்டும்படி உள்ளதால் சிறப்பான காட்சியாக எதையும் அவரால் சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீர் அருவியாக வழிந்தது.

கள்ளகாதல் உண்டா? ஒரேயொரு கள்ளக்காதல் காட்சி உண்டு. அதில் பண்ணையார்  பஞ்சாயத்திற்கு வந்த வேலைக்காரியுடன் பம்பு செட்டில்… ஹீ ஹீ…. அதற்கு மேல் அவரால் சொல்ல முடியவில்லை. பம்புசெட் அனுபவம் ஏற்படுத்திய பரவசத்தில் மூழ்கிவிட்டார் போலிருக்கிறது.

யார்மீதாவது சந்தேகம்? லத்தின் அமேரிக்க போலி பாஸ்போட்டில் உலவும், போர்ஹெ ஆவியடித்தாக சொல்லி, போர்ஹெவை தனது கற்பனைக்கத்திகளால் கொன்று குவிக்கும் தமிழக போர்ஹேஸ்களாக இருக்கலாம். ஆனால், தபோ (தமிழக போர்ஹேஸ்கள்) இதை திருடி எழுதவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வார்த்தைகளை கண்ணீரில் நனைத்தே நாவல் படைப்பவர்கள். அன்பை அப்படியே ஆறாக ஒடவிட்டு உள்ளங்களை மிதக்கவிடுபவர்கள். அன்பிற்கு உண்டோ அடைக்கும் மதகு. தத வைவிட அதிக கண்ணீர் தேசங்களை உருவாக்கி தமிழக குடிமக்களை கண்ணீரில் தவிக்க விட்டவர்கள். அவரிடம் தத வின் உன்னத மனிதர்கள் எல்லாம் ஓரமாக நின்று தேம்பி தேம்பிதான் அழவேண்டும். கண்ணீரை கட்டியான திரவமாக்கி பால்போல் எழுதும் மற்ற எழத்தாளர்கள் எல்லாம் இந்த உள்ளுர் சமாச்சாரங்களில் அதிகம் அக்கறைக் கொள்வதில்லை. அவர்களுக்கு அநேக ஃபாரின் சரக்குகள் உள்ளன. பாரிலிருந்தபடி அள்ளிவிடலாம் அதுகளை. இடுப்பிற்கு மேலும் கீழும் எதுவும் அவர்களால் எழுதப்படுவதில்லை என்பதோடு அதற்குமேல் மனித உருப்புகளே வேஸ்ட் என எண்ணுவதால் அவர்களை காரணமாக ஆக்கமுடியாது. கண்ணீரா தண்ணீரா என கண்டுணரமுடியாத திட-திரவ-ஆவி எழுத்தில் விகசிக்கும் புதிர்நடையில் எண்ணற்ற கதைக்கோடுகளுக்குள் சிறைப்பட்ட மாயக்கம்பளத்தின் கிளிமூக்கு பயணிகளின் குறிப்புகளில் அடைபடாத உப்பு யாத்ரீகனால் ரசவாதமற்ற அந்த எழுத்தை ரசக்குளிகைக்குள் அடக்கியிருக்க முடியாது.
    
சரி கதையின் சுருக்கம் என்ன? கதையைத்தான் திருடுவார்கள் நினைவை திருட முடியுமா என்று தனது நினைவிலிருந்து அந்த நாவலின் சுருக்கத்தை திரும்ப மூவாயிரம் பக்கங்களுக்கு எழுத துவங்கினார் தமிழக தல்ஸ்தோய்.  அடுத்த புத்தக சந்தையில் அது கடவுச்சொல் மற்றும் காவல்துறை பாதகாப்புடன் வெளியிடப்படும். வாஸ்து பார்த்து நீர்மூலையில் அல்லது குபேரமூலையில் வைத்து வெளியிடுவதால் வளம்கொழிக்க தமிழகத்தில் இலக்கியம் உச்ச வளர்ச்சியைத்தொடும் என்ற நம்பிக்கை நகரத்தில் பரவுவதாக வட்ட-சதுர ரசிகமணிகளால் செய்திகள் வந்தபடி இருந்தன.

பத்து ஆண்டுகளாக தான் எழுதிய கதை காணாமல் போனதைவிட கதைக்குள்ளிலிருந்து காணாமல் பொன ஸ்வேதாவைத் தேடித்தான் அதிகம் அலையவேண்டியதாகிவிட்டது. ஒரு புணர்ச்சிகரமான காட்சியல் உணர்ச்சிவசப்பட்டு அந்த சிறுபெண்ணை காணாமல் அடித்துவிட்டேன். நாவலின் எந்தப்பக்கத்தில் ஒளிந்தால் என்றே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளைத்தேட என நாவலில் அவளைப்போல பல துப்பறியும் முன்-அறிப் பேண்களை (pre-cog females என்பதன் செந்தமிழ்ச் பெயர்ப்பு. யார் இவர்கள் என்பதை அறிய ஸ்பீல்பர்க்கின் “மைனாரிட்டி ரிப்போர்ட்“ என்கிற அறி-புனை (இதுவும் ஸயின்ஸ்பிக்ஷன் என்பதற்கு விஞ்ஞான பதிவர்கள்கண்ட செந்தமிழ் பெயர்ப்பு) படத்தை பார்க்கவும்.) அழையவிட்டேன். நாவல் முழுவதும் ஸ்வேதாவின் பல ரூபங்களில் அந்த பெண்களே அலைந்தனர். இப்படி தீவிரமாகத் தேடத் துவங்கிய காரணம் ஸ்வேதா எனது இதயங்கவர்ந்த காதலி. நான் பெற்ற செல்வம். நானே பெற்று நானே காதலித்த செல்வம் அவள். ஸ்வேதா முதன்முதலாக புத்தியிர்ப்பு நாவலில் வரும் நீண்ட பயணத்திற்கிடையில் படர்ந்திருந்த ரஷ்ய ஏழைக்குடியானவனின் கொதுமை வயிலில்தான் பிறந்தாள். அவள் தாயை கற்பழித்த அந்த வக்கீல் நாயகனால் பிறந்தவள் அவள். அவளது ரஷிய முகத்தை கொண்டு வரமுடியாமல் எனது கிராமத்தின் நெற்கதிர்கள் மண்டிய பசும் வயல்வெளியில் பிறந்தாள் ரஷியமுகத்துடன். பம்புசெட் பண்ணையாரின் கள்ளக்காதலை, கோதுமை வயல்களிலிருந்து, நெல்வயல்களுக்கு மாற்ற ஐநூறு பக்கங்கள் நடக்க வேணடியதாகிவிட்டது. ஸ்வேதா என்றபெயர் நடாஷா என்பதைப்போல இனிமையாக இருந்தாலும், தமிழ்மொழிக்குள் ஷ ஸ இல்லாமல் சிக்கித் தவித்தது. ச்வேதா, நடாசா என்பது ஏதோ புதிதாக தொலைக்காட்சியில் பழைய பலகாரத்தை கலரடித்து காட்டும் சமையற் குறிப்பிற்காக கேமராமேனால் இடப்பட்ட புதிய பெயர்போல இருந்தது.

அதனை சாந்தி என்று தமிழ் சத்தத்தில் எனக்குள் உச்சரித்தபோது இதயம் உள்ளே அழுது புரண்டது. பண்பாடு பண்பாடு. என்னே ஒரு பண்பாட்டுப் புதுமை இது. எனது உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்திய தத்துவமரபில் சாந்தி என்பது சாதரண ஒரு சொல் அல்ல. மந்திரம். அது எனக்குள் பொறிதட்டி விழித்து புரண்டு படுத்ததுதான் இந்த நாவலின் படிமமாக மாறியது. அவளுக்கு பொட்டு வைத்தபோது கண்களில் காதல் கசிந்துவிட்டது எனக்கு. என்னால் அவளை காதலிக்காமல் இருக்கமுடியாது. “சான்ஸே இல்ல” என்ற குரல் எனக்குள் ஒலித்தபோது கல்லூரி மாணவனாக பங்க் வைத்து காதில் ஒற்றைக்கடுக்கன், உள்ஜட்டி வெளித்தெரிய பின்புறம் தொங்கும் நீளக்காலசராய் தொப்புளை மறைத்தும் மறைக்காமலும் உள்ள டீசர்ட் என ஒரு நாயகனின் தோற்றம் உள்ளே ஓடியது. பண்பட்ட பாரததாயின் புதல்வன் என்பதால், அவனுக்கு வேட்டியை கட்டிவிட்டேன்.

நானே காதலிக்கத் துவங்கிவிட்டால் எப்படி கதையின் நாயகனுக்கு அவளை காதலியாக்க முடியும். அதனால் நானே நாயகனாக மாறி ஒரு கிராமத்தின் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து தொலைக்க வேண்டியதாகிவிட்டது. மலன்கொவ் என்ற பெயர் பொருத்தமற்று இருந்ததால் மாதொருபாகன் என்று பெயரை சூட்டிக்கொண்டபோது ஸ்டெப்பி பச்சைப் புள்வெளிகள் எனது மலக்காடாய் கிடந்த ஊர்குளத்தின் கரைகளில் பரவி பசுமையில் பளிச்சிட்டது. சூரியனின் கதிர்கள் பட்டு அப்புள்வெளியின் ஈரமினுமினுப்பில் பசுமை ஒரு ஆவியாக பரவியது. நீராவியின் மென்படலத்தில் சிரித்தது அந்த பொட்டு வைத்த வட்டநிலா. சாந்தியை வர்ணித்து வர்ணித்து மூர்ச்சையாகி சாந்தியற்றுப்போன மாதொருபாகனான மலன்கோவ் இப்போ காதலிப்பதற்கான உத்தியை தயாரிக்க வேண்டும். இதுவரை எழுதப்பட்ட எந்த காதலும் இல்லாத புதுக்காதலாக இது இருக்கவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் காதல் இல்லை. இருந்தாலும் ஒட்ட வெட்டவேன் என்று அரிவாளோட அலைகிறார் ஒரு அரசியல் பெரியவர். அவரே கண்ணீர்விட்டு கசிந்துருகி எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி காதலித்து களவும் கற்புமான நாடு என சொல்லும்படி எழுதியிருந்தேன் அந்த இடத்தில்.

காதல் உத்தியை நவீனமாக தீட்டவென தீவிர சிந்தனையில் ஆலமரத்தின் அடியில் படுத்திருந்த மாதொருபாகனுக்கு பட்ஷிபாஷைகள் தெரியுமாதலால், மரத்தின் மேலே ஆசுவாசமாக வந்த அமர்ந்து இரண்டு அண்டரண்ட பஷிகளின் பேச்சு காதில் நுழைந்து கபாலத்தை தொலைத்து இதயத்தில் விழந்தது. ”காதல் காதல் காதல் காதல்போயின் காதல்போயின் சாதல் சாதல்.”

பின்குறிப்பு – கட்டக்கடைசியில் கதையின் 9120 பக்கங்களை கண்டுபிடித்த இரகு-வினர். கீழ்கண்ட குறிப்பை எழுதிவைத்துவிட்டு தங்கள் ரகசியக்குழுவை கலைத்துவிட்டு மறைந்தனர் திசைக்கொருவராக.

“எங்களால் கடுமையான உழைப்பிற்கும், படிப்பிற்கும் இடையில் கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன அந்த 10000 பக்க கதையில் 9120 பக்கங்களை கண்டுபிடித்துவிட்டோம். அப்பக்கங்களை மிகவும் கடினமான உழைப்பில் படித்து முடித்தோம். முதல் 30 பக்கங்களே அடுத்தடுத்து வெவ்வேறு தலைப்புகளில் 9020 பக்கங்களுக்கும் பிரதிசெய்யப்பட்டிருந்ததைக்கண்டு தாங்கவியலா மன உளைச்சலுக்கு ஆளாகி குழுவை கலைத்துவிட்டோம் என்பதை அறிவிக்கிறோம். எஞ்சிய 80 பக்கங்களும் முந்தைய நாவலாசிரியர்களின் கல்லறையிலிருந்து பிறதொரு காலத்தில் கண்டெடுக்கப்படலாம். நன்றி.“ -இரகு

- ஜமாலன் (12-01-2013)

4 comments:

ஆபிதீன் சொன்னது…

//அதற்கு சந்தேகம் பொறுப்பல்ல. மற்றவற்றிற்கு சந்தேகமே பொறுப்பு//
:-)

ஜமாலன் சொன்னது…

நன்றி ஆபிதீன்

முகமது சாதிக் சொன்னது…

குருவி உட்கார பனம் பழம் விழுமா? நம்பமுடியல,சார்ஜா மெகா மாலில் தாங்களுடன் உரையாடும் போது எளிமை குறித்து கேட்டேன்,வட போச்சே வடிவேலு நல்ல பகடி,தஞ்சை மாவட்ட நக்கல் நல்லா இருக்கு.சந்தோசமாக உள்ளது.படிச்சு சிரிப்பு தாங்க முடியல.இது போல் எழுதுவது ரொம்பா நல்லா இருக்கு,இப்படியும் தாங்கள் எழுதுவீர்கள் என்று நம்பமுடியல,இது போல தொடர வேண்டும்.என்பது என் போன்றவர்களின் அவா. //பின்குறிப்பு கட்டக்கடைசியில் கதையின் 9120 பக்கங்களை கண்டுபிடித்த இரகு-வினர். கீழ்கண்ட குறிப்பை எழுதிவைத்துவிட்டு தங்கள் ரகசியக்குழுவை கலைத்துவிட்டு மறைந்தனர் திசைக்கொருவராக.

“எங்களால் கடுமையான உழைப்பிற்கும், படிப்பிற்கும் இடையில் கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன அந்த 10000 பக்க கதையில் 9120 பக்கங்களை கண்டுபிடித்துவிட்டோம். அப்பக்கங்களை மிகவும் கடினமான உழைப்பில் படித்து முடித்தோம். முதல் 30 பக்கங்களே அடுத்தடுத்து வெவ்வேறு தலைப்புகளில் 9020 பக்கங்களுக்கும் பிரதிசெய்யப்பட்டிருந்ததைக்கண்டு தாங்கவியலா மன உளைச்சலுக்கு ஆளாகி குழுவை கலைத்துவிட்டோம் என்பதை அறிவிக்கிறோம். எஞ்சிய 80 பக்கங்களும் முந்தைய நாவலாசிரியர்களின் கல்லறையிலிருந்து பிறதொரு காலத்தில் கண்டெடுக்கப்படலாம்ன்பது என் போன்றவர்களின் அவா//,
இதை பத்து தடவை மேல் படித்திருப்பேன்.வச்சிக்கிட்டு வாசகனை வஞ்சிக்காதிர்கள்,இந்த எழுத்து பல நூறு பேரை சென்றடையும்,வனம் காடச்சே. காடு பொட்டல் காடச்சே
பொங்கல் வாழ்த்துகள்

ஜமாலன் சொன்னது…

@முகமது சாதிக். உங்கள் விரிவான கருத்திற்கு நன்றி. நான் இதுபோல் சிலவற்றை எழுதி உள்ளேன். இது எளிமைக்காக எழுதப்படுவது அல்ல. சிலவற்றை இப்படித்தான் சொல்லமுடியும் என்பதால்.

அவ்வப்போது இப்படியும் எழுதுலாம்... )))

ஜமாலன். Blogger இயக்குவது.