எதிர்கொள்ளலும் எதிர்கொல்லுதலும்.

வேளச்சேரி சம்பவம் குறித்து தோழர் அ. மார்க்ஸ், எம்.டி.எம், ஜெயமோகன் மற்றும் பல பதிவர்களும் முகநூலர்களும் எழுதி உள்ளனர். தமிழின் முக்கிய எழுத்தாளராக கருதப்படும் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய   (தமிழ் சினிமாக்களில் சிலர் கேள்வி கேட்டால் ஒரு பாட்டையே பாடி முடிப்பார்கள். குறிப்பாக டி ராஜேந்தர் படங்களில் இத்தகைய பாடல்கள் உண்டு.) கட்டுரைக்கு நண்பர் ராஜன்குறை டேக்-1, டேக்-2 மற்றும் டேக்-3 என்று தொடராக ஒரு மறுப்பு எழுதி உள்ளார். அம்மறுப்பை ஒட்டி எனக்கு ஏற்பட்ட சில கருத்துக்களை பகிரவே இப்பதிவு.

இலக்கியவாதி என்கிற எழுத்தாளன் எப்படி கொம்பு முளைத்த சாமியராக இருக்கிறான் என்றும், அவனை கொம்பு முளைக்காமல் திரியும் ஆட்டுக்கிடா களப்பணியாளர்கள், விமர்சகர்களிடம் ஒப்பிட்டு எப்படி நீ கேட்கப்போச்சு இந்த கேள்விய என்று ஒரு பெரிய பாட்டு பாடி உள்ளார் ஜெயமோகன். நான் இலக்கியவாதி அரசியலைக்கூட இலக்கியம் வழியாகத்தான் பேசுவேன் என்று கூறிவிட்டு அத்தோடு அடுத்து இந்த உண்மை என் மனசாட்சிய உறுத்தியவுடன் படைப்பாக உள்ளே கருவுற்று பிள்ளையாக பிறந்து பதிவில் தவழ்நது பின் அச்சில் அரங்கேறி வரும் அப்போ பார் என்று கூறி கட்டுரையை முடிப்பதே சரி. அதன் பிறகு கதை ஒன்று நீளமாக எதற்கு? எல்லாம் ஏகாம்பரேஸ்வரர் பலன்தான். என்ன இருந்தாலும் என்னை எப்படி எல்லாம் திட்டுவார்கள் பார் என் ரசிகனே என்று முன்னுணர்வுடன் தனது இலக்கிய ஆளுமையை நிலைநாட்டியிருப்பதுதான் முக்கியமான தொழில் ரகசியம். அதனால் நான் அதிகம் எழுதினாலும் அந்த “எலிப்பொறி” வாக்கியத்திற்குள் சிக்கி சின்னாபின்னமாகிவிடுவேன். எங்க எழுத்தாளர் “வசைபாடிகள்“ என்று முன்பே உன்னை சொல்லிவிட்டார் என்று ”துதிபாடிகள்” கூறிவிட்டால். எதற்கு வம்பு?

பன்முகப்பார்வை என்றால் மூன்று மறுபக்கத்தை (பாலுமகேந்திராவின் மறுபக்கத்தை மூன்றுமறை பார்ப்பதல்ல) பார்த்துவிட்டு பிறகு முதல் பக்கத்தை பார்ப்பதுதான் போலிருக்கிறது. ஒற்றைதிசைவழியில் ஒடுங்கித் திரியும் அற்ப களப்பணியாள அரசியல் விமர்சகளுக்கு எப்படி தெரியும். எண்திசைகளில் ஒரே வீச்சில் பார்த்து ஒரே வெட்டில் வீழ்த்தும் இலக்கிய பிரம்மரகசியம்.

ஜெயமோகன் அவர்கள் இப்படி முடிக்கிறார் ”இலக்கியத்தில் முழுமையான தர்க்கங்களுடன், உணர்ச்சிக் கூர்மையுடன் சொல்லப்பட்ட விஷயங்களையேகூட நம்முடைய பொத்தாம்பொது வாசகர்கள் அவர்கள் ஏற்கனவே பேசிக்கொண்டிருக்கும் ஒற்றைப்படை அரசியலை நோக்கி இழுத்துச்சென்று மடத்தனமாக விவாதிப்பதே இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.” உண்மையில் பொத்தாம் பொதவான வாசகர்கள் என்ன பேசுகிறார்கள் என்றால் ”திருடினார்கள் கொன்றார்கள். இப்படி கொன்றால்தான் புத்திவரும். இது ஒரு பாடமாகட்டும்” என்று திருவிளையாடல் சிவாஜி போன்றும் ஜெயமோகனின் இக்கட்டுரைப்போன்றும் வசனம் பேசித் திரிகிறார்கள். இந்த என்கவுண்டர் கொலையில் மத்தியதரவர்க்க மனோபாவத்தை அப்படியே பிரதிபலிக்கும் பன்முகப்பார்வையில் உண்மையின் ஒளிக்கீற்றை காணமுயலும் ஜெயமோகனின் முரண் இதுதான். பொதுக்கருத்தை இப்படி இலக்கிய தத்துவ உலகப்பின்புலத்தில் பட்டை தீட்டித் தருகிறார். அதனால் பொதுபுத்திக்கு தத்துவம் கிடைத்த குஷியில் ஆளாய் பறக்கிறார்கள் “ஆபத்பாந்தவர்களாக” அவரது ரசிகசிகமணிகள். இடைக்கிடையே இலக்கியவாதி பொதுபுத்தியில் உள்ளதை பேசுபவன் அல்ல என்றும் கூறிக்கொள்கிறார். என்னே இந்த முரண்? எல்லாம் இவரிடம் மோச்சமடைந்த அந்த மாடன்களுக்கே வெளிச்சம்.

ஜெயமோகன் அவர்களின் இப்பதில் வழக்கம்போல் கொஞ்சம் விமர்சனம், கொஞ்சம் வசை, கொஞ்சம் கதைகள்,  கொஞ்சம் தத்துவ பிழியல், நிறைய அறவொழுக்கம், நேரடியான அரசு ஆதரவு, நிறைய இலக்கியம், ரஷ்ய செவ்வியல் இலக்கியங்களின் அறப்பார்வை அடியோட்டமாக வெளித்தெறியாமல் துக்குனியோண்டு, அப்புறம் சுயம்புவான அனுபவம் இப்படி போகிறது. போகிறபோக்கில் ”மாநிலங்கள் தனி நாடுகளாகவே செயல்படும் இந்தியாவில்” என்ற பெரும் வருத்தம். ஒற்றை இந்தியாவை தத்துவ முடிச்சிக்கயிற்றால் கட்ட முடியாமல் போனதின் வருத்தம் போலிருக்கிறது. கட்டுரையில் ”அதாவது பிகாரி கொள்ளையர்களை தண்டிக்கவேண்டுமென்றால் சுட்டுக்கொலைசெய்யவேண்டும், வேறு எதுவுமே நடைமுறையில் சாத்தியமல்ல. இதுவே யதார்த்தம்”  என்ற உண்மையை இடையில் ஒரு பாராவில் சொல்லிவிட்டு இறுதி பாராவில் இலக்கிய நுண்ணர்வு வழியாக இனிதான் உண்மையை கண்டுபிடிப்பாராம். பார்ரா அநியாயத்த… சரி காத்திருப்போம் அந்த பேருண்மைக்காக. நிற்க.

ராஜன்குறை ”ஐயம் வலுப்பெற, வலுப்பெற சுட்டுக்கொன்றுவிட்டார்கள் என்ற அனுமானம் பிரத்யட்சமாகவே கருதப் படுகிறது.”  என்று தனது டேக்-3 ல் ஜெயமோகனை விமர்சித்து எழுதி உள்ளார். இந்த வாக்கியம் தர்க்கமுரணாக உள்ளது. கொன்றது பிரதட்சயம். சந்தேகம் அனுமானம் ஆகாது. அனுமானம் என்பதில் ஓரளவு தர்க்கவிதிமுறைகள் உள்ளது. புகை நெருப்பை அனுமானிக்க உதவும். அதனால் அனுமானம் ஒரு குறைந்தபட்ச உண்மைமேல் எழுப்பப்படுவது. இது சந்தேகம் மட்டுமே. சந்தேகம் உள்நோக்கம் கொண்டது. அனுமானத்தை திசைவழிப்படுத்துவது. எந்த அடிப்படைகளுமற்ற, அல்லது ஆதாரங்களை ஆராயாதா? அல்லது தர்க்க அடிப்படியில் அனுமானித்துக் கொள்ளாத சந்தேகம் மட்டுமே இச்சம்பவத்தின் அடிப்படை. ஒருவேளை ஜெயமோகனைப் போன்ற தத்துவநடைப் பகடியா இது. இல்லை வாக்கியத்தை நான்தான் தவறாக வாசிக்கிறேனா? எனது டிகோடர் (சிதைச்சங்கேதி) பிரச்சனையாக இருக்கலாம். போகட்டும்.

இந்திய தத்துவ சிந்தனையில் உள்ள அனுமானம், பிரதட்சயம், பிரமாணம் என்பதில் பிரமாணத்திற்கு பதிலாக தர்க்கம் என்பதை இணைத்து உள்ளார் ராஜன்குறை. தர்க்கம் என்பது சிந்தனையாக மற செய்யப்படும் தர்க்கித்தலே ஆகும். அதைதான் ஜெயமோகன் கட்டுரை தனது உள்முரண்களுடன் தர்க்கித்து  “உரிமையா? திருட்டா“ என்று எண்கவுண்டர் கொலைகளுக்கான ஆப்தவாக்கிய பிரமாணங்களை உருவாக்கி தள்ளுகிறது பேருண்மைகளாக. அனுமானத்தின் (அல்லது சந்தேகத்தின்) பேரில் நடந்த பிரதட்சயக் கொலைகளுக்கான பிரமாண (ஆப்தவாக்கிய) தயாரிப்பே அக்கட்டுரை. இலக்கிய எந்திரங்கள் தான் நம்பும் ”அற”வழிநின்று இயங்கத் துவங்கினால், விளைபொருள்கள் இப்படித்தான் ”திட்டு திட்டா”க வந்து விழும். தினவாழ்வின் ஒழுக்க நியதிகளை (மாரல்ஸ்) மானுட அறமாக (எத்திக்ஸ்) கருதிக்கொள்வதின் விளைவு இது. (எம்டிஎம் இது குறித்த குறிப்பு ஒன்றை தருகிறார் இங்கு.) திருட்டு தினவாழ்வு சார்ந்த சமூகப்பிரச்சனை. அதனை மானுட அறமாக மாற்றி பேசுவதினால் ஏற்படும் மயக்கமே இது. மனித உயிரும் உடலும் இயற்கையாக அன்றி செயற்கையாக கொல்லப்படுவது அறம் சார்ந்த பிரச்சனை. ஒழுக்க விதிகளை அறவிதிகளாக மாற்றி வைத்து, கொலை என்கிற அறமற்ற செயலை அறமாக முன்வைக்கிறது அதிகாரமும் அதன் அடிதாங்கிகளும். ஒழுக்கம் என்பது சமூகத்தின் சட்ட நடத்தை விதிகள்பாற்பட்டது. அறத்தை அப்படி சமூக சட்ட நடத்தை விதியாக சுருக்கிவிட முடியாது.

திருட்டு என்பது குறித்து சரியா தவறா? எதற்காக எந்த நோக்கத்தில் செய்யப்படுகிறது என்றெல்லாம் பல கேள்விகள் உள்ளன. வங்கிகளின் பணத்தை கோடிகளில் பெற்று பங்குசந்தையி்ல் விட்டு பலகோடிகள் லாபம் பண்ணும் பெருவணிக நிறுவனங்கள் செய்வது திருட்டு அல்ல என்பதும் வியபார அறம்தானே? சாதரண மனிதன் பசிக்காக திருடினால் அவனை கொல்வதும் அறம்தானே?? ஏனெனில் திருட்டு என்பது அறமாக மாற்றப்படுவதால் அறத்தின் பொருட்டு கொலை செய்வதும் சரிதானே???.

தமிழ் சமூகத்தில் சங்ககாலத்தில் களவு (ஆநிறைக்கவர்தல்) இருந்தது. ஒரு நாடு மற்ற நாட்டின்மீது படையெடுப்பது அவர்கள் சொத்தை களவெடுக்கத்தான். களவு என்பது போரில் அறமானதுதானே?. ஆகவே களவு (திருட்டு) போன்றவற்றை அறம் சார்ந்து பார்க்க முடியாது. தனிமனிதர்களை அடிப்படை அலகாக கொண்டுவிட்ட நமது சமூகத்தில் அது ஒழுக்கம் சார்ந்த ஒன்றே. அதனால் ஒழுக்கத்தை கற்க, சீர்திருத்த சிறைக்கூடம், நீதிமன்றம் பள்ளிக்கூடம் எல்லாம் உள்ளன. அதைமீறி அதை ஒரு அறப்பிரச்சனையாக மாற்றுவதன்மூலம் அதிகார நிறுவனங்களின் கொலையை நியாயப்படுத்துவதன் மூலம், அதற்கு உடந்தையாக பொதுபுத்தியில் உருவாகி உள்ள கருத்தை மீட்டுருவாக்கம் செய்வதன்மூலம ஒரு கொலைமனநிலையை, கொலைக்கான மனசாட்சியை உருவாக்கும் செயலையே செய்கின்றனர். வரலாற்றால் உள்ளிருத்தப்பட்ட மனித மனதின் வன்முறையை இப்படி “அறம்” பேசி நியாயப்படுத்துவதன்மூலம், பாசிச மன அமைப்பை கட்டும் பணியை இந்த இலக்கிய எழுத்தாளர்கள் மிகச்சிறப்பாக நிறைவேற்றுகிறார்கள். இப்படித்தான் எழுத்து எந்திரம் அதிகார வன்முறை எந்திரத்தைவிட கொடுரமானதாக மாறிவிடுகிறது.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று மனித உரிமை என்பதைவிட நீதித்துறை என்கிற இறையாண்மை சாதனம் ஒன்றை உருவாக்கி, எல்லாம் நீதிபபடி நடக்கும் என்று எழுதாவிதி ஒன்றை எழுதி வைத்து, அந்த நீதித்துறையையே நக்கலடிக்கும் விதமாக, அதனை சந்தேகித்து அதன் செயலை அவமதிக்கும் விதமாக நடத்தப்படுவதே என்கவுண்டர் (தமிழில் இதனை ”எதிர்கொள்ளல்” எனலாமா? அல்லது ”எதிர்கொல்லுதல்” எனலாமா). உண்மையில் நீதிமன்றத்தை அவமதித்தவர்கள் இவர்கள். எல்லா வழிகளிலும் அவர்களை பிடித்து நீதியின் முன் நிறுத்தமுடியும் என்ற நிலையில் இச்சம்பவம் நடத்தப்படுவது நீதித்துறை செயலற்றதாக ஆக்கப்படுவதன் வழியாக மக்களின் மனசாட்சியில் நீதிபரிபாலன அமைப்பை கேலிக்குரியதாகவும், வன்முறை எந்திரமான போலிஸ் இராணுவம் ஆகியவற்றின் துப்பாக்கியை நீதிதேவதையின் கையில் தராசுக்கு பதிலாக கொடுக்கும் பணியை செய்கிறார்கள். மக்களிடம் என்ன எதிர்வினை உருவாகுகிறது என்பதைக்கொண்டு நீதித்துறையை முடக்கி, எதேச்சதிகார ஆட்சியை நிர்ணயிக்கும் மனநிலையை கட்ட முனைகிறார்கள். பாசிச-காவல்-துறையின் காட்டாச்சிமுறையை வெளிப்படுத்தி மற்றவர்களை பயமுறுத்தி தனது பேரதிகாரத்தை காட்ட முயல்கிறார்கள்.

எல்லாவற்றிலும் கலாச்சார தேசியவாதம பேசும் தனது பாசக்கயிறால் இமயம் முதல் குமரிவரை பயணித்து கட்டி காக்கும் ”ஒற்றை-இந்தியர்கள்” இதில் பீகாரிகள் தமிழர்கள் என்று பிரித்து தங்கள் “அ(ர)றத்தை“ வைத்து தர்மசங்கடத்தில் ஆழ்ந்திருப்பது வினோதமே. உண்மையில் இவ்வளவு பெரிய கட்டுரை எதற்கு? உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம். நியாயமான நீதிவிசாரணைக்கு உத்தரவிடவேண்டும். தப்பு யார் செய்தாலும் உப்பை தின்னு தண்ணீ குடிக்கட்டும் என்று இலக்கியரீதியான நடுநிலை அறம் பேசியிருந்தால்கூட முடிந்திருக்கும் கதை. அவர்களால் அப்படி பேசமுடியாது காரணம். இலககியம் என்பதை அறம்போதிக்கும் “மடப்“பள்ளியாக நினைத்தால் இப்படித்தான் இலக்கியம் உள்ளே பொங்கி பொங்கி “மடப்பள்ளி” பிரசாதமாக பிரவகிக்கும்.

இப்போ இந்த இலக்கியவாதிகளின் ஊற்றுக்கண் எந்த ”அறத்திலிருந்து” பீறிடுகிறது என்பது புரிந்திருக்கும். அது அதிகாரத்தின் அறம். அதிகாரத்தை உருவாக்கும் அறம். அதிகாரத்தை பங்கிட்டக்கொள்ளும் அறம். அதிகாரத்திற்கான மனசாட்சிகளை உருவாக்கும் அறம். மானுட அறத்தின் அடிப்படை ஒரு உயிர் மண்ணில் தழைத்து செழிப்பதற்கான சமூகத்தை உருவாக்குவதே. அச்சமூகத்தில் அச்சமற்ற வாழ்வதற்கான பாதுகாப்பை தருவதே. உயிர்களை கொன்று தனது அதிகார வாழ்வை நிலைநிறுத்திக் கொள்வது அல்ல. கொலைகளின் வழியாக ஒரு பேரச்சத்தை உயிர்களிடம் உருவாக்குவது அல்ல.

- ஜமாலன் 18-03-2012

ஜமாலன். Blogger இயக்குவது.