கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டு உள்ள ஆர். முத்துக்குமார் எழுதிய திராவிட இயக்க வரலாறு படித்துக்கொண்டு உள்ளேன். முதல்பாகம் திமுக வரலாறும், இரண்டாம் பாகம் அதிமுக துவகத்துடன் ஜெயலலிதா வரை எழுதப்பட்டு உள்ளது. எம்ஜியார் ரசிகனாக அரசியலில் ஈடுபடத் துவங்கியவன் என்ற முறையில் சுவராஸ்யமான நாவலைப் படிப்பதைப்போல உள்ளது. அப்படி சொல்வதைவிட பரபரப்பான ஆந்திர அரசியல் படங்களைப் பார்ப்பதைப்போல உள்ளது என்று சொல்லலாம். ”இருவர்” என்ற Digital Fact-Fiction ஒன்றை மணிரத்னம் ”உருவாக்கி” வெளியிட்டார். எதிர்கால விஷீவல் பார்வையாளர்களுக்காக. அதில் மோகன்லால், பிரகாஷ்ராஜ் நடிப்பும், தமிழ்சினிமா இசைவரலாற்றை நிகழ்த்திக்காட்டிய ரகுமானின் பாடல்கள் அருமையாக இருக்கும். அபப்படத்தில் மணிரத்னம் உள்ளர்த்தமாக பலவேலைகள் செய்து உள்ளார் என்பதும் அதன் அரசியலும் பேச நிறைய உள்ளது. அது ஒருபுறமிருக்கட்டும்.
நான் நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது முதன்முதலாக எம்ஜியாருக்காக திமுக கொடிபிடித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளேன். என்ன கழக கட்சிக்காரர்கள் அங்கங்கு சிறுவர்கள் எங்களை நிறுத்தி மிட்டாய் தருவார்கள். ஈழப்போராட்டம் 83-ல் தமிழகத்தில் நிகழ்த்திய அரசியல் சுணாமியில், அரசியல், தத்துவம், சிந்தனை எல்லாம் மாறி சுழற்றி அடித்துவிட்டது. இன்றோ தமாம் விமான நிலையத்தில் கிடைத்த 3 மணிநேர இடைவெளியில் இந்நூல் படிக்க மிகவும் ருசிகரமாக போனது. ஊரில் விளையாடும் “கள்ளா கள்ளா தாப்பட்டி” என்று ஒரு ஆட்டத்தைப்போல ஒருவர் கையில் ஒருவர் ”திராவிடத்தை” மாற்றி மாற்றி தந்தபடி உள்ளனர்.
இந்த ஆட்டம் சிறுவர்கள் சிறுமிகள் சேர்ந்து விளையாடும் ஒன்று. ஒருவர் கையில் ஒரு சிறு கல் வைத்திருப்பார். அவரை மற்றொருவர் துரத்துவார். ஆட்டத்தில் உள்ள மற்றவர்கள் இரண்டு வரிசையாக எதிரெதிராக அமர்ந்திருப்பார்கள். கல்லை வைத்திருப்பவர், சுற்றி சுற்றி ஓடுவார். அமர்ந்திருப்பவர்கள் தங்கள் கையை பின்புறம் வைத்திருப்பார்கள். கல் வைத்திருப்பவர், தன்னை பிடித்துவிடலாம் என்கிற நேரத்தில் கல்லை அமர்ந்திருப்பவர் யாரிடமாவது தந்துவிடுவார். அவர் ஓடுவார், இப்படியே ஆட்டம் தொடரும் பிடிபடும்வரை. அவர்களை பிடிக்கவே முடியாது. காரணம் யார் எப்போ ஆட்டநாயகனாக மாறுவார் என்பதை கையில் உள்ள கல்லே தீர்மாணிக்கும். பார்பனியத்திற்கு எதிராக உருவான திராவிட இயக்கம், பார்பனரின் தலைமையில் வெற்றிபெரும் அளவிற்கு வளர்ந்துவந்து உள்ளது என்றால் எல்லாம் அந்த கைக்குள் மறைத்து வைத்துள்ள கல்லின் மஹிமைதான். ஆட்டக்காரர்கள்தான் மாறுவார்கள். கை மாறும் கல் மாறாது.
கட்டகடைசியில் திராவிடம் தமிழினத்துக்கு எதிரானது என்று சீமான் போன்றவர்கள் முழ(ழு)ங்கும் அளவிற்கு திராவிடம் தனக்குள் பிளந்தும் பிணைந்தும் விரிவடைந்து வந்து உள்ளது. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என “சொந்தங்களை“ நோக்கி முழங்கும் சீமான் வரை இவ்வரலாறு தொடரும் போலிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் “தம்பி” வேலுப்பிள்ளை பிரபாகரனை ஆதரித்த “தம்பி” சீமான், பிரபாகரனுக்குபின் ஜெயலலிதாவை ஆதரிப்பதும், காங்கிரஸை எதிர்ப்பதாக சொல்வதும், இந்த நூலின் அடுக்கப்படும் சம்பவங்களை தொடர்பு படுத்தி கோஞ்சம் யோசித்தால் காரணம் புரிந்துவிடும். விடுதலைப்புலிகளின் வளர்ச்சியும், எம்ஜியார், அவருக்குபின் ஜெயலலிதா வளர்ச்சியும், திமுக வீழ்ச்சியும் நிகழ்ந்ததை தற்செயலாக அல்லாமல் தொடர்புபடுத்தி சிந்திக்கும்படி தகவல்வரிசைகள் இந்நூலில் அடுக்கப்பட்டிருப்பது அல்லது சம்பவங்கள் கோர்வையாக நடந்திருப்பது தற்செயலா எனத் தெரியவில்லை. அநேகமாக நண்பர் 3-வது பாகம் எழுதினால், இன்னும் சுவராஸ்யங்கள் கூடலாம். திராவிடத்தில் துவங்கி அது மதவாதமாக, சாதியமாக உருமாறி, எதை படிக்கத் துவங்கினோம் எந்த வரலாறை படிக்கிறோம் என்பதே குழம்பிவிடலாம். திராவிட வரலாற்றைப்போல ஜாலயதார்த்தம் (மதிப்பிற்குரிய எழுத்தளார் பிரேமிளின் மாஜிக்கல் ரியலிசத்திற்கான மொழிபெயர்ப்பு) கொண்ட ஒரு அரசியல் சமூக வரலாறு மற்றொன்று இருக்கமுடியுமா தெரியவில்லை. பல தகவல்கள் இந்நூலில் ஆச்சர்யம் ஊட்டக்கூடியதாக உள்ளது. அசம்பலேஜ் செய்து பல அர்த்தங்களை உருவாக்கலாம்.
எஸ். ராமகிருஷ்ணனின் ராமசாமிகள் வம்ச சரித்திரம் என்கிற கதை திராவிட மற்றும் தமிழ் இலக்கிய ராமசாமிகள் பற்றி பேசும் அருமையான கதை. அக்கதையும் இப்படித்தான் வரலாற்றில் ராமசாமிகள் பல வடிவங்களில் வந்துபோவதை சொல்லும். ஈ.வே.ராமசாமி துவங்கி சுந்தரராமசாமி மற்றும் சோ. ராமசாமி வரை..எத்தனை ராமசாமிகள். பற்றாக்குறைக்கு பாபர் மசூதி ராமசாமி வேறு.
தமிழவனின் சரித்திரத்தில் படிந்த நிழல்கள் என்கிற நாவல், இந்த திராவிடக்கதையாடலை புனைவாக்கி வரலாற்றை உள்ளோடும் ஒழுங்காக வைத்து எழுதப்பட்டுள்ளது. அதில் பாக்கியத்தாய், பச்சைராஜன், கருணாகரத் தொண்டைமான், மலைமேல் ஒளி, அம்மிக்குழவி என வரும் பாத்திரங்கள் பார்பர் ஒருவனின் வருகையால் மாறும் கதை… இப்படி போகும். இந்நாவல் குறித்த விரிவான விமர்சனத்தை எனது நூலில் வாய்ப்புள்ளவர்கள் வாசிக்கலாம்.
சரி இந்த நூலில் அச்சில் ஏற்பட்ட ஒரு சுவராஸ்யத்தை சுட்டவே இப்பதிவை எழுதினேன். ஜனரஞ்சகமாக பத்திரிக்கைகளின் பத்தி எழுத்து நடையில் எழுதப்பட்டிருந்தாலும் தேதிகள் வாரியாக வரலாற்றை தொகுத்து உள்ளார். அந்நூலில் சமூகநீதி என்கிற 36 வது அத்தியாயத்தில் பக்.265க்குப்பிறகு 42-ம் 43ம் அதன்பின் 268, 269 அதன்பின் 46, 47 என்றும் 273 ற்குபின் 50, 51 அதன்பின் 276, 277ம் தொடர்ந்து 54, 55, 280 என்று உள்ளது. அதாவது பக்கம் இப்படி தொடர்கிறது 265, 42, 43, 268, 269, 46, 47, 272, 273, 50, 51, 276, 277, 54, 55, 280. அச்சே இப்படித்தான் ஆகியுள்ளது. விஷயங்களும் இப்படி தாறுமாறாக நாவல் படிப்பதைப்போல. முந்தைய அத்தியாயங்களில் இறந்துபோன எம்ஜியார் ஜெயலலிதா ஆட்சியில் வந்து திமுகவிற்கு எதிராக தீர்மானம் போடுகிறார். மண்டல் கமிஷன் போராட்டத்தின் தொடர்ச்சியாக பாபர்மசூதி விஷயத்தில் ஜெயலலிதா கோவில் கட்டவேண்டும் என்று பேசிய உடன் எம்ஜியார் தனிக்கட்சி ஆரம்பிக்க யோசிக்கிறார். இப்படியே ஒரு நான்லீனியர் நாவலைப்போல இருக்கிறது. கிழுக்கு பதிப்பகம் இந்த குழப்பத்தை (அல்லது நான் வாஙகிய நூலில் மட்டும் அப்படி உள்ளதா?) அடுத்த பதிவிலாவது சரி செய்வார்களா? அல்லது முழு நூலையும் இப்படி ராண்டமாக மாற்றி இன்னும் சுவராஸ்யமான நான-லினியர் fact-fiction வகை நூலாக வெளியிடுவார்களா? அப்படி வெளியிட்டால் முன்வெளியீட்டு திட்டத்தில் ஒன்றை இப்பவே பதிவு செய்துவிடலாம் என உள்ளேன். ))
-ஜமாலன் – 05-12-2011.
0 comments:
கருத்துரையிடுக