புத்தகச்சந்தை-2011 பதிப்பகங்கள் எனும் அறிவின் அதிகாரமையங்கள்

தமிழ்ப் புத்தக சந்தை 2011 அல்லது புத்தக கண்காட்சி-2011 பற்றி எழுத யோசித்தபோது இத்தகைய சந்தைகளின் இயக்க சக்திகளான பதிப்பகங்கள் பற்றிய கருத்துக்களை பகிரலாம் என்று தோன்றியது.

clip_image001[1]புத்தகக் கண்காட்சியை கடைசியாக பார்த்தது 1990-ல். தோழர் பொதியின் சிலிக்குயில் பதிப்பகத்தின் கடையில்தான் நண்பர்களை சந்திப்பது வழக்கம். அப்போது தோழர் பொதியுடன் புத்தக மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு இலக்கிய கூட்டங்கள், சிறிய கண்காட்சிகளில் கடைபோடுவது வழக்கம். 80-களில் தீவிரமாகிய சிறுபத்திரிக்கை இயக்கம், இத்தகைய சிறு பதிப்பக அமைப்புகளால் பரவலாகிக் கொண்டிருந்த காலம். அன்று இலக்கு என்கிற சிறுபத்திரிக்கைகளின் கூட்டமைப்பு ஒன்று இருந்தது. அதன் இலக்கு இலக்கிய எழுத்துக்களின் போக்குகளை பரிசீலிப்பதும், அவற்றை புத்தகங்களாக்கி ஆவணப்படுத்துவதும். இலக்கால் “எண்பதுகளில் கலைஇலக்கியம்“ என்கிற கருத்தரங்கு ஒன்று நடந்தது. அன்று சிறுசூழல் என்கிற ஒரு அமைப்பு இயங்கியது. வளர்ச்சி என்பது “பெரிது“-என்பதில் இருப்பதில்லை “சிறிது“-என்பதில்தான் உள்ளது என்பதை கவனத்தில் கொள்வோம். சிறிதாக உள்ளதே வளரும். வளர்வதற்கான கூறுகளைக் கொண்டது. பெரிது என்பது வளர்ந்து வேர்பரப்பி நிற்பது. எப்போதும் சாராம்சம் என்கிற அடையாள ஆணிவேர் பாவாத சல்லிவேர்களைப் பரப்பிய “சிறிதா“-க உருவாகுதல் என்பது பாசிசமயமாக்கலுக்கு எதிரான ஒரு அரசியல் நிலைபாடும்கூட. இதுதான் இதில் கவனிக்கவேண்டிய அம்சம். பெரும்பான்மையை ஏற்றுக்கொள்ளல், வலியவற்றுடன் அடையாளம் காணுதல் இப்படித்தான் பாசிச மனம் உருவாகுகிறது.

80-களில் வெகுசன பத்திரிக்கைகள் சிறுபத்திரிக்கைகள் என்கிற பிரிவு இருந்தது. இடைநிலை என்கிற “பாலம்“-போடும் பத்திரிக்கைகள் சில தோன்றி தோன்றி மறைந்து கொண்டிருந்தன. சுபமங்களா துவங்கி அந்த போக்கு வளர்ந்தது. பாலச்சந்தர்-கோமல் சுவாமிநாதன் இணைந்து வெளியான ”தண்ணீர் தண்ணீர்” உருவாக்கிய “பிரபல்யம்“ இத்தகைய பத்திரிக்கை ஒன்றின் தேவையை அவருக்கு உருவாக்கியிருக்கலாம். 90-களில் அந்த போக்கு தீவிரப்பட்டது. அன்று சிறுபத்திரிக்கையால் “ஒவ்வாமை“-யாகக் கருதப்பட்ட குமுதம் என்கிற நிறுவனம் வெளியிடும் “தீராநதி“ போன்ற பத்திரிக்கை அளவிற்கு வளர்ந்து வந்துள்ளது. ஒருவகையில் சமூகச்சூழல் வாசிப்பின் பரவலாக்கம், கணிப்பொறியின் எழுத்துரு (யுனிக்கோட்) வசதியால் கிடைத்த தமிழ் தட்டச்சு என இன்றைய போக்கிற்கான ஏற்புடைமையாக இவை வளர்ந்து வந்துள்ள சமூகக் காரணங்களை புரிந்து கொள்ளலாம். இன்றைய அறிவுச்சூழல் சிறுபத்திரிக்கை வட்டத்திலிருந்து இந்த இடைநிலை மற்றும் பெரும் வணிக்கப்பத்திரிக்கை அளவிற்கு விரிவடைந்துவிட்டது. இது தவிர்க்கமுடியாததும்கூட. சிறுபத்திரிக்கைகளின் அறிவை பெரும்பத்திரிக்கைகள் கடன் வாங்கி அல்லது பாதிப்பாக வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலைமாறி, சிறுபத்திரிக்கையை அதன் அறிவை கையகப்படுத்தி அதனை பகடி பண்ணுவதாக பெரும்பத்திரிக்கைகளே அத்தகைய எழுத்துக்களை வெளியிட்டுக்கொண்டு உள்ளன. இதற்கு ஒரு காரணம் வாசிப்பு என்பது வெறும் செய்தி-அறிவாக இருந்த நிலையை தொலைக்காட்சிகளின் தொடர்தாக்குதல்கள் மாற்றியமைத்திருப்பதே. செயதிகளுக்காக பத்திரிக்கைகள் என்கிற நிலைமாறி, செய்தி-ஆய்வாக அல்லது காட்சிக்கு பின் சொல்லப்படாத வர்ணனையாக வாசிப்பு மாறி உள்ளது. இந்த வாசிப்பை தரக்கூடிய எழுத்துக்கள் சிறுபத்திரிக்கை உருவாக்கிய அறிவுச்சூழலால் நிரப்பப்படுகின்றன. இந்த வர்ணனை கற்பனை கலந்ததாக மாற நல்ல கற்பனைத்திறன் கொண்ட எழுத்துமுறை அவசியம். இந்த கற்பனைத்திறன் கிசகிசு பாணியிலான ஒருவகை துப்பறியும் வாசக மூளையின் பரபரப்பிற்கான விளையாட்டுக்களத்தை அமைத்து கொடுப்பதாக இருக்க வேண்டும். துப்பறியும் தன்மை கொண்ட எழுத்தே புனைவின் கற்பைனையின் அதிகபட்ச விளையாட்டு உணர்வை வாசகருக்கு தரத்தக்கவை. இத்தகைய எழுத்துபாணி புரிதலற்று நீர்த்த வடிவில் கிசகிசுவாக மாறிப்போகிறது தமிழ் பத்திரிக்கைகளில். இந்த கிசுகிசு பாணி தமிழின் முக்கிய எழுத்தாளர்களாலும் எழுத்தாளர்களின் பிம்பங்களாலும் பெருக்கித் தள்ளப்படுகிறது.

1993-முதல் வெளிநாட்டிலிருந்து இந்தப் போக்குகளை அவதானித்ததில், இன்றைய தமிழ்ச்சூழலின் அதிகார மையம் எப்படியாக மாறி உள்ளது என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்று என்பதை மட்டும் பதியவைப்போம். வெகுசன பத்திரிக்கையில் எழுதுவது இலக்கியமா இல்லையா என்கிற வாதங்கள் வழக்கொழிந்துவிட்டன. இன்றைய “நவீனத்திற்கு பிந்தைய சமூக அமைப்பி“-ல் இத்தகைய வாதங்கள் பொருளற்றவை என்பதே முக்கியம். எழுத்து என்பது ஒரு நிறுவனமாகிவிட்டது என்ற நிலையில், அவற்றின் மதிப்பீடு என்பது எழுத்து எந்திரத்தால் உற்பத்தி செய்யப்பட்ட புத்தகம் உலகுடன் உருவாக்கும் assemblage 1 (இதை எப்படி தமிழில் சொல்வது? இணைவாதல் எனலாமா) எனபதில்தான் பொருள்கொள்கிறது. அசம்பலேஜ் என்பது குறித்து விரிவாக மற்றொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம். புத்தகம் என்கிற கருத்தாக்கம் பற்றியும் உலகில் அது என்னவாக உள்ளது இயக்கம் கொள்கிறது, என்னவித போக்குகளை உற்பத்தி செய்கிறது, எத்தனை வகைகள் உள்ளன, இன்றைய உலக உருவாக்கத்தில் புத்தகங்கள் எப்படி ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன, என்பதை அதில் விரிவாக உரையாடலாம். டெல்யுஸ்-கத்தாரி A Thousand Plateaus என்கிற நூலின் அறிமுகமாக ரைசோம் 2 (rhizome) என்கிற தலைப்பில் புத்தகங்கள் குறித்து விரிவாக எழுதி உள்ளார்கள் என்பதை மட்டும் சொல்லிவைப்போம்.

சமூகத்தில் ஒரு புத்தகம் பல்வேறு பிணைப்புகளையும் கண்ணிகளையும் உருவாக்கக்கூடியதாக, தனக்குள் இப்படி உருவாகுவதற்கான எல்லா கருவிகளையும் கொண்டதாக உள்ளது. அல்லது ஒரு புத்தகம் அசம்பலேஜ் வழியாக சமூகவயமாகிறது. சமூகவயமாதல் என்பதுதான் எந்த ஒன்றினது அடிப்படை இருத்தலாக மாறுகிறது. இநத சமூகவயத்திற்குள்தான் அதிகாரத்தின் அத்துணை கண்ணிகளும் செறிவடைந்துள்ளன.

இந்த 20 ஆண்டுகளில் எந்த புத்தகக் கண்காட்சியையும் காணமுடியாதநிலை. அதிலும் வறண்ட பாலைத்திணை வாழ்க்கை. எனது வேலைமுறையில் டிசம்பர்-ஜனவரி என்பது மூச்சுமுட்டும் காலம். 11 மாத தூக்கத்தை அந்த ஒரு மாதத்தில் கண்விழித்து சமன் செய்யவேண்டும். அதனால் இந்த கண்காட்சியிலும் பார்வையாளராக முடியாதது ஒரு ஏக்கமாகி அப்படியே எந்த எதிர்வினையுமற்ற ஒரு உணர்வாக மாறிவிட்டது. வழக்கம்போல் நண்பர் ஒருவர் எனக்காக புத்தகச் சந்தையில் சில குறிப்பிட்ட புத்தகங்கள் வாங்கி வைக்க ஒப்புக்கொண்டார். அவரது வேலைப்பளுவிற்கு மத்தியில் இந்த பெரும்பணி ஆற்றியமைக்கு இப்பதிவின் வழியாக நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படி சில நண்பர்கள் உதவிதான் நமது வாசிப்பின் நிலைய உயர்த்திக்கொள்ள பயனுள்ளதாக உள்ளது.

1990-களில் புத்தக சந்தையில் பங்குபெற்ற பதிப்பகங்கள் (சிறுபத்திரிக்கை - இலக்கியம் சார்ந்த) எல்லாம் மாறி இன்று பதிப்புத்துறை என்பது பெரும் நிறுவனங்களாக மாறி உள்ளது. இந்த நிறுவனங்கள் இலக்கிய, கலை, அரசியல், வரலாறு என அறிவு உற்பத்தி எந்திரங்களை கையகப்படுத்தி ஒரு அதிகார மையமாக மாறி உள்ளன. அதாவது தமிழில் பதிப்பகம் என்பது ஒரு அறிவுருவாக்க அதிகார மையமாக மாறி உள்ளது. யார் இலக்கியவாதி என்பதை இவைகள்தான் தீர்மானிக்கின்றன. அறிவுலகம் எதை சிந்திக்க வேண்டும் என்பதையும். எதை சிந்திக்கக்கூடாது என்பதையும் கூட. அறிவை உற்பத்தி செய்வதும் பரவலாக்குவதும் இந்த பதிப்பக-எந்திரங்கள்தான். பொதுபுத்திசார்ந்த அறிவை கையகப்படுத்தி தனது அரசியல்சார்ந்த அறிவை உருவாக்குபவையாக உள்ளன. தமிழின் இன்றைய இலக்கிய போக்குகளை தீர்மானிப்பதாகவும், வரலாற்றை எழுதும் எந்திரங்களாகவும் உள்ளன.

தமிழ் பதிப்பகங்களின் நிலை பற்றி தினமணியில் ஸமஸ் என்பவர் எழுதிய 10-குறிப்புகள் முக்கியமானவை. இந்த நிலை மாற்றம்கூட முக்கியமானது. சிறுசூழல்கள் தினமணியை விமர்சித்த காலங்கள்போய், தினமணி சிறுசூழலை விமர்சிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளது என்பது தமிழ் இலக்கிய அறிவின் திருகுசுழல் வளர்ச்சியையே காட்டுகிறது. இந்த திருகுசுழலில் அம்புக்குறி மேல்நோக்கி பயணிக்காமல் கீழ்நோக்கி பயணித்திருப்பதே அதைவிடவும் கவலை தரும் விஷயம்.

இந்தியாவில் மதவாதம் ஒரு அரசியல்-நினைவிலியாக எல்லாத் செயல்பாட்டுக்குள்ளும் இறக்கப்பட்டிருப்பது, இந்துத்துவா கருத்தியல் பிராந்திய அரசியலில் ஊடுருவி பிராந்திய அரசியலை மத்திய அரசியலின் தொங்குசதையாக மாற்றியிருப்பது, திராவிடக்கட்சிகள் பார்ப்பனியமயமாகி அதிகாரத்தில் பங்குபெற்றிருப்பது, இந்தியா கார்ப்பரேட்மயமாகி அரசியலில் அதிகாரத்தில் கார்ப்பரேட்கள் நேரடியாக தலையிடும் நிலைக்கு போயிருப்பது, எங்கெங்கு காணினும் வாரிசுகளின் அரசியலும், கட்சிகளும், தலைமையும் என பார்ப்பனிய குலக்கல்வித் திட்டமாக அரசியல் மாற்றப்பட்டும், அது மக்களால் பரவலாக ஏற்கப்பட்டும் உள்ளது. இப்படியாக மாற்றப்பட்டுவிட்ட இந்திய அரசியல் போக்கின் ஓட்டத்தில் இணைந்து கொண்டவைதான் இந்த பதிப்பகங்கள். இவர்கள் இந்திய-மதவாத-கார்ப்பரேட்டிசத்தின் அறிவுருவாக்க காரணியாக மாறாவிட்டால், அழிந்தோ அல்லது அழிக்கவோ பட்டுவிடும் நிலைக்கான அச்சத்தில் மட்டும் செயல்படுவதாக எண்ணிவிட முடியாது. இவை அத்தகைய போக்கில் தங்களை இணைத்துக் கொள்வதற்கான கருத்தியலையும் அரசியலையும் கொண்டவையாக உள்ளன. இவை சந்தைப்போட்டி என்கிற பற்சக்கரத்தில் சிக்கிக்கொண்டதைப் போன்ற பாவனையில், அந்த பற்சக்கரங்களை இயக்குபவையாக உள்ளன என்பதே முக்கியம்.

பதிப்பகங்கள் அரசியல்மயமாகியப் போக்கு கடந்த 10 ஆண்டுகளில்தான் அசுர வளர்ச்சியாகி உள்ளது. குறிப்பாகத் தமிழ்சூழலில் பதிப்பகம் பொதுவானதொரு விற்பனை நிறுவனமாக இல்லை. ஒரு பலசரக்கு கடையாக இவை இருப்பதில்கூட ஒரு வியபார நியாயம் உள்ளது. முதலீடு பற்றிய அச்சம் உள்ளது எனலாம். ஆனால். இவை அறிவு-முதலீடாக தங்களை நிர்ணயித்துக்கொண்டு செயல்படுவதாக உள்ளது. அறிவை கொள்முதல் செய்வதும், அவற்றை பரவலாக்குவதுமான தோற்றத்தை இவை உருவாக்கி தங்களை ஒரு அதிகார மையமாக கட்டிக்கொண்டு உள்ளன. இப்படி அதிகார மையமாக மாற அவைகளுக்குள் கருத்தியல் அரசியல் மற்றும் தனிமனித விருப்பு வெறுப்பு நிலைபாடுகளைக் கொண்டதாக அவை இயங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டும் தள்ளிக்கொண்டும் தள்ளப்பட்டதாக நியாயப்படுத்திக் கொண்டும் உள்ளன. பதிப்பகங்கள் “எழுத்தாளர்“-களாக கட்டமைக்கப்பட்ட சில பிம்பங்களுடன் இணைந்தே தங்களை வெளிப்படுத்திக்கொண்டு உள்ளன. பதிப்பாளர் உற்பத்தியாளராகவும், எழுத்தாளர்கள் முகவர்களாகவும், வாசகர்கள் நுகர்வாளர்களாகவும் மாற்றப்பட்ட இந்த சந்தைவிதிக்குள் தமிழ் அறிவுச்சூழல் சிக்கிக் கொண்டு உள்ளது என்பதே பேரவலம். இதுதான் பதிப்பகங்களின் அரசியலாக மாறி உள்ளது. ஒவ்வொரு புத்தகச் சந்தையும் பதிப்பகங்களின் அரசியலை மென்மேலும் மறுஉருவாக்கம் செய்து, கொழுக்க வைத்து தங்களது வரலாற்றுப் பணியை செவ்வனே செய்துவருகின்றன.

புத்தகங்கள் என்றால் என்ன? அது எழுத்தை அச்சில் பதிப்பிக்கப்பட்ட காகிதத்தால் ஆன ஒரு பொருளோ, பண்டமோ அல்ல. ஒரு புத்தகம் என்பது பன்முக அர்த்தங்களைக் கொண்டது. பன்மையான சூழலை உருவாக்கக் கூடியது. பல நிலப்பகுதிகளை இணைக்கும் கண்ணியாக உள்ளது. உலக வரலாறுகள் பயணநூலில்தான் துவங்குகின்றன. யுவான்சுவாங் மற்றும் மார்கோபோலோவின் பயணக் குறிப்புகளை3 வாசிப்பவர்கள், முற்றிலும் அந்நிய “கிரகங்களாக“ உள்ள இரண்டு நிலப்பகுதிகள் எப்படி இந்த பயணக் குறிப்புகளின் வழி ஒற்றைக் கண்ணியில் இணைக்கப்படுகின்றன என்பதையும் ஒரு நிலம் ஒரு ஆசிரியனின், பார்வையாளனின் அறிவால் பெயர்த்து எடுக்கப்பட்டு மற்றொரு நிலத்துடன் பிணைக்கப்படுவதையும் காணலாம். உலகில் புனைவிலக்கியங்கள் துவங்கி ஆய்வுகள் வரை உலகை அறிவை உருவாக்கியவை பரவலாக்கியவை புத்தகங்கள்தான். ஒருவகையில் உலக அறிவை கட்டமைத்தவை புத்தகங்கள்தான். அதனால்தான் தமிழில் “நூல்“ என்கிற கட்டுதல் என்கிற வினையுடன் உள்ள சொல் பயனபடுத்தப்படுகிறதோ? எழுதுதல் என்கிற செயல்தான் உலகை உருவாக்கியது என்பது மிகைக்கூற்றாகாது. அதன் வழியாகத்தான் அறிவுருவாக்கம் நிகழ்கிறது என்பதும் இதன் நீட்சிதான். இந்த நீட்சி மீட்சிக்கு வழிவகுக்குமா தமிழில் என்கிற கேளிவியும் ஏனோ தவிர்க்க முடியவில்லை.

குறிப்புகள்

1. Assemblage –இது டெல்யுஸ்-கத்தாரியால்உ“Capitalism and Schizophrenia” என்கிற இரண்டு பகுதிகளைக் கொண்ட நூலில் இரண்டாவது நூலான A Thousand Plateaus ல் எழுதப்பட்ட ஒரு கருத்தாக்கம். இது பிரஞ்சில் agencement and dispositif என்ற இருபொருளைக்கொண்ட சொல். நேர்ப்பொருளில் ஆங்கிலத்தில் சொற்கள் இல்லாத நிலையில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. டெல்யுஸ்-கத்தாரியின் ஆங்கில மொழிப்பெயர்ப்பாளர் Brian Massumi ன் கருத்துப்படி Anti-Oedipus என்கிற நூலில் பயன்படுத்தப்பட்ட desiring machine என்கிற சொல் அகநிலைக் கருத்தாக்கமாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதால் அதற்கு பகரமாக அடுத்த நூலில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது அவர்களால். டிசையரிங் மெஷின் என்பதற்கு முன்பு வேட்கை எந்திரம் என்கிற மொழிபெயர்ப்ப்பே பயன்படுத்தப்பட்டது. எம். ஜி. சுரேஷ் எழுதி வெளிவந்துள்ள தெலூஸ்-கத்தாரி என்கிற சுருக்க அறிமுக நூலில் விருப்ப எந்திரம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிஜந்தன் அவர்கள் Anti-Oedipus நூலின் முதல் அத்தியாத்தை மந்திரச்சிமிழ் இதழ்-5-6ல் (அக்டோபர் 2010 – மார்ச் 2011) மொழிபெயர்த்துள்ளார். அதில் அவர் விருப்ப எந்திரம் என்கிற சொல்லையே பயன்படுத்துகிறார். வேட்கை என்பதில் உள்ள செவ்வியல் மற்றும் சாராம்சவாத உள்ளர்த்தம் விருப்பம் என்பதில் இல்லை என்பதால் விருப்ப எந்திரம் என்பதே பொறுத்தமான சொல்லாகப்படுகிறது. மந்திரச்சிமிழ்-5-6 ல் இந்த விருப்ப எந்திரம் பற்றிய அத்தியாயம் வெளிவந்துள்ளது. மேலதிக புரிதல் வேண்டுபவர்கள் அதை வாசிக்கலாம்.

2. Rhizome – என்கிற Capitalism and Schizophrenia நூலில் உள்ள அறிமுக அத்தியாயத்தை நண்பர் எஸ். சண்முகம் மொழிபெயர்த்துள்ளார். அது இதுவரை எந்த பத்திரிக்கையில் வெளிவரவில்லை. வரப்போகும் ஒரு சிற்றிதழில் வெளிவரும் என்றார். இதுவரையிலான மரம் சார்ந்த ஆணிவேர்பரவி நிற்கும் தோற்றவியல் சாராம்சவாத சிந்தனைக்கு எதிராக டெல்யுஸ்-கத்தாரியால் முன்வைக்கப்பட்ட கருத்தாக்கமாகும். பல இடங்களில் பற்றிப்படரும் சல்லிவேர்களைக்கொண்ட ஒரு உருவகமாக சொல்லப்பட்ட பன்மைத்துவமாக சிந்திக்கும் முறை. பல திறப்புகளைக் கொண்டதாக எழுதப்படும் புத்தகங்கள், பன்முக சாத்தியப்பாட்டைக்கொண்ட ஜனநாயக அரசியல், பன்மை வாழ்நிலைகள், எந்த புள்ளியைப்பற்றியும் வளரும் சிந்தனைப்போக்கு உள்ளிட்ட பலவற்றையும் குறிக்கும் ஒரு கருத்தாக்கம். தோற்றவியல் சார்ந்த பழகிய தத்துவ முறைக்கு எதிராக முன்வைக்கப்படும் ஒரு வரைபடவியல் கருத்தாக்கமாகும். இது இணையத்தின் ஹைபர்-டெக்ஸ்ட் (மீ-எழுத்து எனலாமா?) எனப்படும் ஒருவகை எழுத்துமுறைபோன்று பல இணைப்பு கண்ணிகளையும், அதே நேரத்தில் தனித்துவமிக்கதாவும் உள்ள ஒரு வகை புத்தகம் அல்லது எழுதுதல் எனலாம். இந்த முறையை பயன்படுத்தியே அவர்கள் தங்களது இரண்டாவது நூலான A Thousand Plateaus என்பதை எழுதி உள்ளனர். மேலதிகமாக இது குறித்த அறிமுகத்தை வாய்ப்புள்ளபோது பதிவாக எழுதலாம்.

3. யுவான்சுவாங் இந்தியப்பயணம் – தமிழில் பொன்.சின்னத்தம்பி முருகேசன் – புதுமைப்பித்தன் பதிப்பகம் 2009.  மார்க்கோபோலோ பயணக்குறிப்புகள் – தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன் – அகல் பதிப்பகம்- 2007.

-ஜமாலன் (16-01-2011)

18 comments:

MatureDurai சொன்னது…

"எங்கெங்கு காணினும் வாரிசுகளின் அரசியலும், கட்சிகளும், தலைமையும் என பார்ப்பனிய குலக்கல்வித் திட்டமாக அரசியல் மாற்றப்பட்டும், அது மக்களால் பரவலாக ஏற்கப்பட்டும் உள்ளது."
மிகச்சரியான கணிப்பு!தங்களின் அரசியல்
அறிவிற்குத் தலை வணங்குகிறேன்!

ஜமாலன் சொன்னது…

@maturedurai
//மிகச்சரியான கணிப்பு!தங்களின் அரசியல்
அறிவிற்குத் தலை வணங்குகிறேன்!//

அப்படியா? என்ன வஞ்சப்புகழ்ச்சியா இல்ல வஞ்சகமான புகழ்ச்சியா? எது என்றாலும் சரிதான். :) :) நன்றி.

பெயரில்லா சொன்னது…

மிகவும் நல்லக் கட்டுரை, கூடுதலாக இந்தச் சந்தையில் அண்ணாதுரை பற்றிய நூல்களைக் காண முடிந்தது. அரசாங்க ஆர்டரில் அதற்கு தனி இடம் என்றார்கள். மற்றபடி ஒரு நூலை வாங்கிப் படிக்கும் ஆசையை விலையைக் கேட்டால் போய் விடுகிறது. சூழ்ச்சி, வஞ்சகம், வசவுகள், ஜால்ராக்கள், குழு அடையாளங்கள் என்று என் எல்லாமே நடக்கிறது. கையில் பணமில்லாமல் பதிப்பக உரிமையாளர்களை இல்லை, சிறு பத்திரிகை அதிபர்களைச் சார்ந்து பொழுது போக்க அல்லது காசு வாங்கி குடித்துக் கதைக்கும் நண்பர்களை இப்போதெல்லாம் காணவே முடிவதில்லை. அவர்கள் இப்போது இந்த சந்தையில் தேவைப் படாதவருகளும்தானே?

டி.அருள் எழிலன்.

ஜமாலன் சொன்னது…

நன்றி அருள் எழிலன்.

உங்கள் அவதானம் தந்போதைய நிலையை சுட்டுவதாக உள்ளது.

ஜோதிஜி சொன்னது…

இப்போது மற்றொரு லாபி உண்டு. ரூபாய் அறுநூறு என்றாலும் எவரும் பணத்தைப் பார்ப்பதில்லை. அதன் வடிவமைப்பைக் கண்டு மயங்கி தழுவி முகர்ந்து அப்படியே எடுத்துக் கொண்டு போகின்றார்கள் என்று விஸ்தாரமாக விவரிப்பு வேறு. மனதிற்குள் ஆச்சரியம்.

WordsBeyondBorders சொன்னது…

நல்ல கட்டுரை ஜமாலன். சிறு பத்திரிக்கை/பதிப்பகம் என்பது அதிகாரத்திற்கு எதிரான ஒன்று என்ற பொது மன கட்டமைப்பை கலைத்து போடுகின்றது இந்த பதிவு. இப்போதெல்லாம் பல சிறு பதிப்பகங்களின் அரசியல் மற்ற எதற்கும் சளைக்காமல் உள்ளது. மேலும் சில எழுத்தாளர்கள் ஒரு brandஆக சிறு பதிப்பகங்களால் உருவாக்கப்படுகிறார்கள். வாசிப்பையே குருகச்செய்யும் சூழல் பெருகி, ஒரு சில பதிபகங்களுக்கே அதிகாரம் ஏற்படுவதாக தான் உள்ளது இன்றைய சூழல்.

அஜய்

ஜமாலன் சொன்னது…

பிளாகர் ஜோதிஜி கூறியது...

நன்றி ஜோதிஜி. அப்படியா?

ஜமாலன் சொன்னது…

நன்றி அஜய்.

//மேலும் சில எழுத்தாளர்கள் ஒரு brandஆக சிறு பதிப்பகங்களால் உருவாக்கப்படுகிறார்கள். //

இது முக்கியமான அவதானம். ஆம் பிராண்டுகள்-நுகர்வு-என உள்ளது இந்தத சந்தை.

vasu சொன்னது…

இலக்கியம், தத்துவம் போன்ற புண்ணாக்கள் வேண்டாம்.வேண்டியது புகழ்,பணம்.ஒன்று சினிமாவுக்கு போவது மற்றொன்று பெரிய பதிப்பகத்தின் காலில் விழுவது.இன்னொன்றும் உண்டு, அதாவது இணையத்தளத்தில் எதையாவது கிறுக்கி ( மாவோசியம் பற்றி,எதையும் புரிந்து கொள்ளாமால் பின் நவீனத்தும் போலி என்ற கிண்டல், லத்தின் அமெரிக்க உலரள்,இத்தியாதிகள்...)அல்லது இடைநிலை பத்திரிக்கை ஒன்றை துவங்கி வெகுஜன சினிமா என்ற கொசுவை டெல்லூஸ் கத்தாரி,லக்கான் போன்ற புல்லட்களால் திரையை துளையாக்கி,திரையில் வரும் பிம்ப ஹீரோக்களை மறுத்து, இதோ பார் நான் தான் ஹீரோ( எழுதியவர்கள்)என்ற மற்றொரு அறிவு ஜீவி பிம்பங்கள் பயமுறுத்துவது படித்த ஆழமான வாசகர்க‌ளை அல்ல மாறாக கோடம்பாக்கத்தில் நுழைவுச்சீட்டு பெறுவதற்கு.இன்னும் கோடம்பாக்கத்தில் அல்லது அண்ணா சாலை கோவிலுக்கு நுழைவதற்கு மற்றொரு வழி ஒரு இடைநிலை பத்திரிக்கை‍__பரவலான கவிதைகள் ( கவிதைகள் நுட்பமாகவும்,நுணுக்கமாகவும் எலி,பறவை,செடி பற்றி மிக மிக எளிமையாக இருக்கவேண்டும்)ஒரு சிறுகதை ( கதை_ மனித உறவுகளின் அவநம்பிக்கையை பற்றி பேசவேண்டும்)ஒரு கட்டுரை ( ஜார்கண்டில் நடப்பது என்ன? அல்லது மணிரத்தனம்,கமலஹாசன் படத்தை மிக ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்வது).இப்பத்திரிக்கையை பெண் அரசியல்வாதிகள்/தொழிலதிபர்கள் மூலம் வெளியிடுவது.... மகா கேவலமாக இருக்கிறது...இதைப்பற்றி விரிவாக கோட்பாடு ரீதியாக எழுதிக்கொண்டிருக்கிறேன் (excreesance, branding)...பார்க்கலாம்...நல்லவேளை நீங்கள் தப்பித்தீர்கள்..செந்தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு பார்க்கும் திசைதோரும் புத்தகங்களாக தெரிகிறது...புதிய சட்டமன்றமே திருக்குறளின் நகலை அடுக்கி கட்டப்பட்டிருக்கோமோ..

ஜமாலன் சொன்னது…

வாங்க வாசு

நான் கூட டெல்யுஸ் கத்தாரி லக்கான் போன்றவர்ளை பயன்படுத்தி சினிமா துவங்கி இன்னும் பலவற்றை எழுதியும் எழுதலாம் என உள்ளேன். நீங்கள் இப்படி தாக்குகிறீர்களே.

ஏனிந்த கொலைவெறி?

கருத்திற்கு நன்றி.

vasu சொன்னது…

ஜமாலன்,
கொலை வெறியெல்லாம் ஒன்றுமில்லை.நேற்றுதான் ஒரு நண்பரை சந்தித்து ஃபூக்கோ,லகான்,இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருக்கையில் ஒரு பிரபல திரைப்பட இயக்குநர் வந்தார். இயக்குநர் வந்தபின் நமது நண்பரின் பவ்யம்,பல்லிளிப்பு,பரவசத்தை சகிக்கமுடியவில்லை.உடனடியாக அங்கிருந்து வெளியேறி வீட்டில் இணயத்தளத்தில் உங்கள் கட்டுரையை வாசித்து சம்பவத்தின் தாக்கத்தில் மறுமொழியை இட்டேன். மேற்கத்திய கோட்பாடுகளை கொண்டு எதைப்பற்றி எப்படி எழுதுகிறோம் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன்.ஏனெனில் நம்மிடையே உதாரணங்கள் உண்டு. மிக எளிதாக ஃபூக்கோவை அடையாள அரசியல் என்ற கண்ணியில் அடைத்தாயிற்று. ஃபூக்கோவின் பல பங்களிப்புகளை தமிழில் உதாசீனப்படுத்துகிறோம்.ஃபூக்கோவை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்தாயிற்று.இம்மாதிரி டெல்லூஸ்‍_கத்தாரி, போத்திரியார் போன்றவர்களின் பங்களிப்பை நாம் ஏன் வெகுஜன கலாச்சாரம்/அரசியலுக்கு மட்டும் எடுக்கிறோம்? இவர்களின் கோட்பாடுகளை ஆய்வு பூர்வமாக இலக்கியப்பிரதிகளை ஆராயவேண்டும். இதனால்தான் அதிமுக்கிய சிந்தானாவாதிகள் பெயர்களின் உச்சரிப்பு மட்டும் எல்லா மட்டத்திலும் உலா வருகிறது. தத்துவமும் கோட்பாடும் சினிமா அரசியலுக்கு மட்டுமல்ல என்பதை நாம் உணரவேண்டும். இதனால்தான் சினிமா,அரசியல்,இலக்கியம்,தத்துவம் என்ற வரையறுப்பு நொறுங்கி ஒரு குழப்பமான சூழலில் சிக்கியுள்ளோம்.இந்த ரசமாற்றத்தால் சிறுபத்திரிக்கை உலகம் வெகுஜன சினிமா,அரசியலுக்கு ஆட்களை தயார்படுத்தி அனுப்பும் தொழிற்சாலையாக மாறிவிட்டது. இதற்கு பொருளாதார,இணைய தொழில்நுட்பங்களின் பங்கையும் மறுக்கமுடியாது. இணையத்தளத்தின் வழியாக வரும் புதிய நுகர்வோர்க்காக (consumer, NOT READER ) புத்தகங்களின் scale of production நம்மை பயமுறுத்துகிறது....

ஜமாலன் சொன்னது…

வாசு..

உங்கள் கருத்து மிக முக்கியமான ஒன்று. சூழல் அப்படித்தான் உள்ளது. இங்கு “வெகுசனம்“ என்கிற ஒன்று பாமராத்தனமாக அறிவற்ற ஒரு கூட்டம் என்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மிகவும் சிகக்லான பலவற்றையும் சிந்தித்து பிரித்து ஒவ்வொன்றையும் அதன“ நுட்பதிட்பங்களுடன் அனுகவேண்டி உள்ளது. எழுதுவதற்கான ஆர்வமற்ற சூழல்தான்.

//இந்த ரசமாற்றத்தால் சிறுபத்திரிக்கை உலகம் வெகுஜன சினிமா,அரசியலுக்கு ஆட்களை தயார்படுத்தி அனுப்பும் தொழிற்சாலையாக மாறிவிட்டது.//

அருமையாக சொன்னீர்கள். அப்படித்தான் ஆகிவிட்டது. இலக்கியத்தில் மட்டுமல்ல எதிலும் இங்கு எந்த கொட்பாடுகளும் வளர்சியடையவில்லை. அவை எல்லாம் ஒரு பேஷன் மற்றும் அப்பளையன்ஸ் என்கிற அளவில்தான் உள்ளன. உங்களின் இந்த சீற்றத்தை நானும் பகிர்ந்துகொள்கிறேன்.

விரிவான கருத்திற்கு நன்றி.

MatureDurai சொன்னது…

"அப்படியா? என்ன வஞ்சப்புகழ்ச்சியா இல்ல வஞ்சகமான புகழ்ச்சியா? எது என்றாலும் சரிதான். :) :) நன்றி"
நண்பர் திரு ஜமாலன் அவர்களே!
இது வஞ்சப்புகழ்ச்சியோ அல்லது வஞ்சகமான புகழ்ச்சியோ அல்ல!என் உள்ளத்திலிருந்து வரும் உண்மையான
வார்த்தைகள்!
இதுவரை என்னைப்பற்றித் தங்களிடம் நான் அறிமுகம் செய்து கொள்ளவில்லை.ஆகவே உங்களுக்கு அப்படி நினைக்கத் தோன்றுகிறது போலும்!
நான் ஓய்வுபெற்ற உயர்அரசு அலுவலர்(தமிழ்நாடுஅரசு கல்வித்துறை)
பதின்மவயதில் திராவிட அரசியலில் கவனம் செலுத்தி,அறிஞர் அண்ணாவின் எழுத்துக்களை "நம்நாடு" பத்திரிகையில் ஒன்று விடாமல் படித்து,தமிழில் புலமை பெற்றேன்.
மூதறிஞர் ராஜாஜி குலக்கல்வித்திட்டத்தினைக் கொண்டுவந்தபோது நான் தொடக்கப்
பள்ளியில் பயின்றுகொண்டு இருந்தேன்.அப்போது என் தந்தையார்
எனக்கு ஒரு கடிதம் எழுதியது எனக்கு
இன்னும் நினைவில் இருக்கிறது:"நீ இனிமேல் உன் பள்ளிப்படிப்புடன் நம்
குலத்தொழிலான தறித்தொழிலையும்
கற்க வேண்டி வரும்!"
ஆக,இதைக் குறித்து நான் அநுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
எனவே,கோவிலில் 'அவாள்'மட்டுமே ஆட்சிசெய்ய முடியும் என்பதைப்போல இந்நாட்டிலும் இனிமேல் 'தலை'வரும் அவர்தம் வழிவந்தவரும் மட்டுமே ஆட்சிசெய்ய முடியும்என்று தந்திரமாக மாற்றப்பட்ட விதத்தினை தாங்கள் எடுத்துக்காட்டியவுடன்,தங்களைப் பாராட்டவேண்டும்போலத் தோன்றியது.
எனவே பாராட்டினேன்.உள்நோக்கம்
ஒன்றுமில்லை!

ஜமாலன் சொன்னது…

maturedurai கூறியது...

//நண்பர் திரு ஜமாலன் அவர்களே!
இது வஞ்சப்புகழ்ச்சியோ அல்லது வஞ்சகமான புகழ்ச்சியோ அல்ல!என் உள்ளத்திலிருந்து வரும் உண்மையான
வார்த்தைகள்!//

நண்பரே மன்னிக்கவும். பொதுவாக அனானிகள் இப்படிதான் எதாவது எழுதி நம்மை குழப்பபுவார்கள். அதனால்தான் அப்படி எழதினேன். நீங்கள் சுட்டிய வரிகள்தான் அந்த கட்டுரையில் விரிவாக பேசப்படவேண்டிய வரிகள். அதை சரியாக சுட்டி உள்ளீர்கள். “தலைவணங்ககிறேன்” என்ற வார்த்தை ஏற்படுத்திய அதிர்ச்சிதான் அப்படி எழுதக்காரணம். இதுபோன்ற வார்த்தைகள் சுயமாரியாதை சார்ந்த குற்றஉணர்வை உருவாக்கக்கூடியவை. அம்பேத்கர் சொன்னதுபோல “நாம் யாருக்கும் அடிமை இல்லை. யாரும் நமக்கு அடிமை இல்லை” இதுதான் இன்று ஒவ்வொரு தனிமனிதனும் உணரவேண்டிய அரசியல். உங்களை புரியாமல் வெளியிட்ட எனது கருத்திற்கு வருந்துகிறேன்.

உங்கள் அனுபவங்கள் விளக்கங்கள் அருமையாக உள்ளது. உங்கள்மீது ஒரு நன்மதிப்பை உருவாக்கிவிட்டது. உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் மதிப்பு மிக்கவை. காரணம் திராவிட இயக்கங்களின் தற்போதைய நிலை என்பது குறித்த உங்களைப் போன்றவர்களின் வாக்கமூலங்கள் முக்கியமானவை. எனது எழுத்து அறிமுகப்படுத்தும் உங்களைப் போன்றவர்கள்தான் அதன் நோக்கத்தை சரியாக கொண்டு சேர்க்கிறது.

//எனவே,கோவிலில் 'அவாள்'மட்டுமே ஆட்சிசெய்ய முடியும் என்பதைப்போல இந்நாட்டிலும் இனிமேல் 'தலை'வரும் அவர்தம் வழிவந்தவரும் மட்டுமே ஆட்சிசெய்ய முடியும்என்று தந்திரமாக மாற்றப்பட்ட விதத்தினை தாங்கள் எடுத்துக்காட்டியவுடன், தங்களைப் பாராட்டவேண்டும்போலத் தோன்றியது. எனவே பாராட்டினேன். உள்நோக்கம் ஒன்றுமில்லை!//

ஆம் அதான் நடக்கிறது இங்கு. இது ராஜராஜ சோழனை பகடி பண்ணும் திராவிட அரசியலின் தமிழ் என்கிற தேசியவாத வேரில் உள்ளது இதன் சிக்கல். இந்த வேர் “அவாளி“ன் “பொன்னியின் செல்வன்” (காவேரி மைந்தன்) என்கிற நாவலாக, கதையாக அன்றே பார்ப்பனியர்களால் வரைந்து தரப்பட்டுள்ளது. மீண்டும் அது குடும்ப வாரிசுகளால் பார்ப்பனிய-இந்துத்துவ-கூட்டணியால் திரைப்படமாக வர உள்ளது. அது குறித்தும் விரிவாக எழதனும்.

உங்கள் கருத்திற்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

தீராநதியில் தொடர்ந்து எழுதுவது யார் ?.அ.மார்க்ஸ் தமிழவன்.நீங்களும் ஒரு தொடர் எழுதினீர்கள். அப்போது தீராநதி பற்றி நீங்கள் இப்படி எழுதவில்லையே- ஏன்?உங்களுடைய பிரச்சினை என்ன- தமிழில் தரமான நூல்கள் இல்லை என்பதா அல்லது சில பதிப்பகங்கள் குறுகிய காலத்தில் புத்தக விற்பனை/தயாரிப்பில் ஏராளமான நூற்களை வெளியிட்டுத்தள்ளுகின்றன என்பதா.

அடையாளம்,விடியல் போன்ற பதிப்பகங்களும் இயங்குகின்றன.
அவற்றின் நூற்களையும் காசு கொடுத்து வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.தலையணை அளவு நூற்களை அவையும் வெளியிடுகின்றன. இங்கு அனைவருக்கும இடம் இருக்கிறது, சந்தையில் இடம் இருக்கிறது.

இன்று தமிழில் பலதரப்பு நூற்கள் கிடைக்கின்றன.ஏராளமான மொழிபெயர்ப்புகள்,அபுனைவு நூல்கள்
வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஐரோம் ஷ்ர்மிளா, ராம் குகா, நந்திதாக ஹஸ்கர் நூற்களை மொழிபெயர்ப்பில் கொண்டுவந்துள்ளது யார் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
உங்களுடைய பிரச்சினை கிழக்கு, காலச்சுவடு, உயிர்மை போன்ற வெளியீட்டு நிறுவனங்கள் பெரிய அளவில் செயல்படுவது என்பது என்று தோன்றுகிறது. அதை வெளிப்படையாக எழுதலாம்.கோட்பாட்டுப் பூச்சாண்டிகள் தேவையில்லை.

பெயரில்லா சொன்னது…

’அருமையாக சொன்னீர்கள். அப்படித்தான் ஆகிவிட்டது. இலக்கியத்தில் மட்டுமல்ல எதிலும் இங்கு எந்த கொட்பாடுகளும் வளர்சியடையவில்லை. அவை எல்லாம் ஒரு பேஷன் மற்றும் அப்பளையன்ஸ் என்கிற அளவில்தான் உள்ளன. உங்களின் இந்த சீற்றத்தை நானும் பகிர்ந்துகொள்கிறேன்.’

இதற்கு காரணம் யார் யார் என்பதையும் சொல்லுங்களேன்.
பூக்கோவை அப்படி அடையாள அரசியல் கண்ணியில் அடைத்தது யார் யார்/ எந்த குழு என்பதை வாசுவோ, நீங்களோ சொல்லலாமே.
20 ஆண்டுகளாக பூக்கோ பூக்கோ என்று பேசியும்,எழுதியும் உண்மை இதுதான் என்றால் விமர்சனத்தை அங்கிருந்து துவங்கலாமா. ஏன் இப்படியாயிற்று என்று கேட்கலாமா.

ஜமாலன் சொன்னது…

நன்றி.


அதே பெயரில்லா நண்பரா? அல்லது மற்றொரு பெயரில்லா நண்பரா தெரியவில்லை என்றாலும் கருத்திற்கு நன்றி.

//இதற்கு காரணம் யார் யார் என்பதையும் சொல்லுங்களேன்.
பூக்கோவை அப்படி அடையாள அரசியல் கண்ணியில் அடைத்தது யார் யார்/ எந்த குழு என்பதை வாசுவோ, நீங்களோ சொல்லலாமே.
20 ஆண்டுகளாக பூக்கோ பூக்கோ என்று பேசியும்,எழுதியும் உண்மை இதுதான் என்றால் விமர்சனத்தை அங்கிருந்து துவங்கலாமா. ஏன் இப்படியாயிற்று என்று கேட்கலாமா.//

நியாயமான கேள்வி. 20 ஆண்டுகால விரிவான ஆய்விற்கான கேள்வி. யார் யார் அடைத்தார்கள் என்பது தொடர்ந்து வாசிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு தெரியாதிருக்க நியாயமில்லை. இது குறித்து ஒரு முறையான உரையாடல் களத்தை ஆய்வை செய்வதற்கான நிறுவனங்களோ இயக்கமோ குழுவோ இல்லை. இப்படி இல்லாமல் போனதற்கான காரணத்தை ஆராய முனைவதுதான் இந்த பதிவு. இப்படி ஆராயக்கூடிய சிறு சூழல் அமைப்புகள் இல்லாது ஒழித்தவை எது என்பதே இப்பதிவில் உரையாடலாக துவக்கப்பட்டுள்ளது.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
நன்றி.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.