சுகுணாவின் உடனடி கேள்விகளும் எனது தாமதமான பதில்களும்.

நண்பர் சுகுணா நான் விடுமுறையில் இந்தியா  சென்றிருந்தபோது என்னிடம் கேட்டகேள்விகளுக்கு உடனடியாக பதில அளிக்க இயலாத buddeathசூழல். திட்டமிட்ட வேலைகள் நண்பர்கள் சந்திப்பு அப்புறம் துக்க விசாரிப்பு திருமண விசாரிப்பு விருந்துகள் நண்பர்களின் பார்ட்டிகள் என 30 நாட்கள் காற்றில் கரைந்ததே போய்விட்டதால் இணையப்பக்கம் வர இயலவில்லை. இடையில் நண்பர் பைத்தியக்காரன் போனில் சுகுணா கேள்விகள் கேட்டிருப்பதைச் சொன்னார். அவரை நேரில் சந்திப்பதற்கு நேரம் வாய்க்காமல் சொநத அலுவல்கள் அதிகமாகிவிட்டது கொஞ்சம் வருத்தமளிக்கும் செயல்தான். 

கேள்விகளுக்கான பதில்கள்.

1. ராமானுஜத்தின் 'காந்தியின் உடல் அரசியல்' விமர்சனக்கட்டுரையில் (தீராநதி)சமணம் இந்துமதத்தின் ஓரங்கமாகவே மாறிப்போனதையும் அதற்கான கூறுகள் அதன் இயல்பிலேயே அமைந்துள்ளதையும் மாற்றத்தை ஏற்காத அதன் தன்மை குறித்தும் விளக்கிக் காந்தியைச் சமணமரபில் பொருத்தி நீங்கள் கூறுவது சரியானது என்றே கருதுகிறேன். அதேபோல் பெரியாரைப் பவுத்தமரபில் பொருத்திச் சொல்ல இயலுமா?

முதலில் மரபு என்பது குறித்த எனது புரிதலை விளக்கி விடுகிறேன். மரபு என்பது வழங்கிவந்த ஒரு பண்டைய சிந்தனைமுறையை அல்லது வழக்கத்தை பின்பற்றுல் என்ற அடிபபடையில் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை பேணுவதாகும். அந்தவகையில் காந்தியை சமணமரபாக பார்ப்பதன் பின்னணி அவர் அந்த மரபை பேனும் ஒரு குடும்பத்தில் பிறந்தார் என்பது மட்டுமின்றி அவரது ஆழ்மனக் கட்டமைப்பில் சமணம் என்பது ஒரு நினைவிலியாக இருந்து செய்லபட்டது என்ற வகையிலும். ஆனால், பெரியார் பவத்த சிந்தனைகள் பலவற்றை எடுத்துக் கொண்டார் என்றாலும், முழுமையாக பவத்த மரபை சேர்ந்தவராக கருதமுடியாது என்பதே எனது நிலைப்பாடு. பவுத்தம் ஒற்றை மரபைக் கொண்டதல்ல. காரணம், பவுத்தம் பல பிரிவுகளைக் கொண்ட ஒன்று. பொதுவானதாக கருதப்படும் பவுத்த மரபுக் கூறுகளான பார்ப்பனீய மேலாண்மை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, வேத மறுப்பு, சமத்தவமின்மைக்கு எதிராக எல்லோரும் சமம் என்பதான அடிப்படை குடியுரிமையை அளித்தல், பெண்களை ஒரு சக உயரியாக கருதி அவர்களை விளிம்பிலிருந்த மையத்திற்கு கொண்டு வந்து அவர்கள் உரிமைகளைப் பேனுதல் குறிப்பாக ஒரு பழங்குடி ஜனநாயகதன்மையிலான குடியாண்மைச் சமூகத்தை (civil society) உருவாக்குதல் போன்றவற்றில் பவுத்த மரபினை பெரியாரிடம் அடையாம் காணலாம். சமூகத்தின் பொதுப்புத்திக்கு எதிரான போராட்டத்தில் பெரியாரை பவுத்த மரபில் வைத்துப்பார்க்கலாம்.

அதே சமயம் பவுத்தம் முன்வைத்த துக்கம் பற்றிய கருத்தாக்கங்கள், எண்ம நன்னடத்தை விதிகள், நான்கு பெரும் உண்மைகள் மற்றும் மும்மணிகள் எனப்படும் புத்தநிலை என்கிற இறுதி விடுதலை என்கிற முற்றிலுமான விழிப்புநிலை, தர்மம் என்கிற நடைமுறை வாழ்விற்கான போதனைகள், சங்கம் என்கிற வாழ்ந்துகாட்டும் கூட்டமைப்பு முறை ஆகியவற்றை கொண்ட மரபை பெரியாரிடம் அடையாளம் காணமுடியாது. பவுத்தம் ஒரு வாழ்க்கைமுறையை முன்வைத்தது. அது பார்ப்பனீயம் கட்டமைத்துள்ள வாழ்க்கை, அதற்கான உடல் எல்லாவற்றையும் மறுத்து ஒதுக்கியது. மாற்று வாழ்க்கைமுறையை முன்வைத்தது. புத்த அறிதல்முறையும் பெரியாரின் பகுத்தறிதல் முறையும் ஒன்றல்ல. இதன்பொருள் இரண்டும் எதிரானது என்பதல்ல. பெரியாரின் பகுத்தறிவு என்பது இங்கர்சால் துவங்கி வந்த மறமலர்ச்சிக்கால பகுத்தறிவாகும். புத்த அறிதல் என்பது பொருளை அதன் வெறுமையில் அல்லது இயல்பில் அல்லது பார்ப்பவனின் வேட்கை, விருப்பம், ஆசையற்ற நிலையில் புரிந்து கொள்வதற்கான முயற்சியே. புத்தரின் பாதை மத்திமப்பாதை. பொருளுக்கும், புலனுக்கும் உள்ள உறவில் பொருளையோ, புலனையோ முதன்மைப்படுத்தாமல் இரண்டிற்கும் இடையலான உறவில் நிற்பது.

பவுத்தமரபில் மூன்று காரணிகளை நாம் அடையாளப்படுத்தலாம். 1. பவுத்த அரசியல் 2. பவுத்த தத்தவம் 3. பவுத்த நடைமுறை மற்றும் வாழ்க்கை.  இம்மரபில் பெரியாரின் மரபு பவுத்த அரசியல் மரபாகும். மற்ற கூறுகள் பவுத்தம் மதமாக மாறக் காரணமாக பவுத்த மற்றும் பார்ப்பன தத்தவவாதிகளால் விளக்கம் செய்யப்பட்டக் கூறுகள்.  பெரியாரின் கலகத்தன்மைக்கு இந்த தத்துவார்த்தக் கூறுகள் பயனற்றவையே. ஆனால், பவுத்தத்தின் மையமான சிந்தனை என்பது அது முன்வைத்த உலகைப் புரிந்த கொள்வதற்கான அறிதல்முறையும், மனித உடலை ஒரு அதீத விழிப்பு நிலைக்கு கொண்டு சென்று விடுவிப்பது அல்லது நிர்வானத்தை அடைவது என்பதுதான்.  பவுத்தத்தை மதமாக மாற்றியதில் பார்ப்பனிய சக்திகளுக்கு இருந்த பங்கு குறிப்பிடத்தக்கது. அத்வைதம் பேசிய சங்கரரே பவுத்த மரபில் பலவற்றையும் எடுத்துக்கொண்ட ஒரு மறைமுக பவுத்தரே ஆவார். மடம் என்கிற வடிவமே பவுத்த சங்கங்களிலிருந்து எடுக்கப்பட்ட மதம் பரப்பும் நிறுவன வடிவமே. பவுத்தம் குறித்து விரிவாக இங்கு விவாதிக்க வேண்டியதில்லை. பதிவுலகில் அது குறித்து நண்பர் பைத்தியக்காரனின் பதிவு ஒன்றில் விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெரியார் பவுத்த அரசியல் மரபைச் செர்ந்தவர் என்று அடையாளப்டுத்த முடியும். பவுத்தம் குறித்து பெரியாரின் கருத்துக்களை இங்கு படித்து தெரிந்து கொள்ளலாம். பவுத்தம் மதமாக மாற்றப்பட்டதை இதில் பெரியார் வன்மையாக கண்டிக்கிறார். அது ஒரு பார்ப்பனிய சதிவேலை என்பதை முன்வைக்கிறார். அலோசியஸ் அவர்களால் எழுதப்பட்ட பவுத்தமும் பெரியாரும் என்கிற சிறு ஆஙகிலநூல் ஒன்று உள்ளது. அதைப்படித்தபின் இது குறித்து விரிவாக பதிவிடுகிறேன்.   

2. தலித்திலக்கியத்தைப் போல் ஏன் சிறுபான்மையினர் இலக்கியம் என்ற வகையினம் உருவாக முடியவில்லை? முஸ்லிம் இலக்கியம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறித்து...

இக்கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. இதுபோன்ற இலக்கிய வரலாறு சம்பந்தமான கேள்விகள் ஆய்வாளர்களிடம் கேட்கப்பட வேண்டியவை. எனது வாசிப்பு மிகவும் குறைவானது என்பதால் இதில் ஒரு காத்திரமான கருத்தை என்னால் சொல்ல இயலாது. சிறுபான்மையினர் இலக்கியம் என்கிற வடிவில் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய இலக்கியம் என்று அடையாளப்படுத்தப்பட்ட சில இலக்கியங்கள் இருக்கலாம். இதில் எனக்குள்ள சிக்கல். ஒரு இஸ்லாமியர் எழுதுவதால் அதனை இஸ்லாமிய இலக்கியம் என்று அறுதியிட முடியாது என்பதே. தன்னை இஸ்லாமியான உணர்ந்து இஸ்லாமிய வாழ்வை பதியவைக்கவோ அதன் சிக்கல்களைச் சொல்லவோஆன ஒரு இலக்கியம் தமிழில் இருப்பதை அறிந்த கொள்ளும் அளவிற்கு எனக்கு விரிவான வாசிப்பு இல்லை.

இஸ்லாமியர்கள் இலக்கியம் என்பது சீறாப்புராணத்திலிருந்து துவங்கி குணங்குடியார் போன்ற சூஃபி மரபினரால் எழுதப்பட்டுள்ளது. அதேபோல் சித்தி ஜினைதா என்பவரால் ஒரு 1928-ல் ஒரு நாவல் எழதப்பட்டள்ளது. முதல் இஸ்லாமிய பெண் நாவலாசிரியர் இவர். இவருக்க தமிழறிஞர் உ.வே. சாமிநாதைய்யர் மதிப்புரை ஒன்று எழதி உள்ளார்.  இந்நாவல்கூட இஸ்லாமிய வாழ்வியல் பற்றியதல்ல. இஸ்லாமிர்கள் எழுதியுள்ள இலக்கியங்கள் உள்ளது. இஸ்லாமியர்களைப்பற்றிய இஸ்லாமிய இலக்கியம் என்பது அரிதானதாவே உள்ளது. தோப்பில் முகமது மிரானின் ”கடலோரக் கிராமத்தின் கதை” ஒடு்க்கப்பட்ட இஸ்லாமியரின் மீனவ வாழ்வைச் சொல்லும் கதை. சமீபத்தில் வந்த சல்மா அவர்களின் ”இரண்டாம் சாமங்களின் கதை” மத்தியதரவர்க்க இஸ்லாமியர்களின் நவீன வாழ்வியல் பிரச்சனைகளையும், குறிப்பா இஸ்லாமிய பெண்களின் பாலியல் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகிறது.  இந்திய இஸ்லாமியர்களுக்கு என்று தனியான பாலியல் பிரச்சனை என்று ஒன்று இல்லை என்றாலும் இந்நாவல் அதுகுறித்த ஒரு உரையாடலை முன்வைக்கிறது. இந்நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக உலக கவனத்தை பெறும்படி செய்யப்பட்டுள்ளது. இது தவிர்த்து இஸ்லாமிய வாழ்வியல் பற்றி சொல்லும் இலக்கியங்கள் எனது அறிமுக எல்லைக்குள் இல்லை. கவிதைகளில் இஸ்லாமியப் பிரச்சனைகளைப் பேசும் ஹெச்.ஜி. ரசூல் சில குறிப்பிடத்தக்க கவிதைகளைப் படைத்துள்ளார். நண்பர் ஆபிதீன் இஸ்லாமிய வாழ்வியல் குறித்து நுட்பமான விஷயங்களை பகடியுடன் முன்வைத்துள்ளார் தனது கதைகளில். கவிஞர் நாகூர்ரூமி மற்றும் அபி ஆகியொர் சூஃபி மரபின் மறைபொருள் படிமங்களை தஙகளது கவிதைகளில் பயிற்சித்தவர்கள். இன்குலாப், மேத்தா, அப்புதுல் ரகுமான் மற்றும் தமிழன்பன் கவிதைகளை இஸ்லாமிய இலக்கிய வகைமைக்குள் வைத்துப்பார்க்க முடியாது. நிஜந்தன், கீரனூர் ஜாகிர்ராஜா போன்றவர்களின் படைப்புகள் நான் படித்தில்லை. எனக்குத் தெரியாத பல இஸ்லாமிய இலக்கிங்கள் இருக்கலாம்.  அதனால் இதில் மேலதிக கருத்து சொல்ல வாய்க்கவில்லை. வாய்ப்புகளைப் பொறுத்தவரை வெளிச்சமாக ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. இஸ்லாமியர்கள் பரவலாக படிகத் துவங்கியதே சமீப காலங்களில்தானே.

3. ஆங்கிலம் தெரிந்தால்தான் பின்நவீனத்தைப் புரிந்துகொள்ள இயலுமா?

என்னவச்சி காமெடி கீமெடி பன்னலியே. காரணம் இந்த கேள்விகள் பின்நவீனத்தவம் படித்தவர்களிடம் கேட்கவேண்டும். நான் ”அங்கொட்டுக் கொஞ்சம் இங்கிட்டுக் கொஞ்சம்னு” படிச்சிருக்கேன். பெரும்பாலும் எனது வாசிப்பு தமிழில்தான். பின்நவீனத்தவத்தை புரிந்துகொள்ள புரிதல் திறன்தான்தேவையே தவிர ஆங்கிலம் தேவை இல்லை. ஆனால், பின்நவீனத்தவம் பற்றி தமிழில் வந்துள்ள நூல்கள் குறைவு. அவற்றிலும் நேரடி மொழிபெயர்ப்புகள் குறைவு. அடையாளம் வெளியிட்டுள்ள சில மொழிபெயர்ப்பு நூல்கள், அச்சில் உள்ள நண்பர் பிரேமின் பின்நவீனத்தவம் பற்றிய ஒரு மொழி பெயர்ப்புநூல் (சென்ற மாதம்வரை வெளிவரவில்லை) ஆகியன ஆங்கில நூல்களை நேரடி தமிழில் தந்துள்ளன.  தவிர சாகித்ய அகாடமியின் ஒரு பெருநூல் உருதிலிருந்து தமிழில் நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கோபிசந்த் நாரங் என்பவரின் அந்நூல் அமைப்பியல் துவங்கி பின் அமைப்பியல் பின்நவீனத்தவம் மற்றும் மார்கிசியத்துடன் ஆன உரையாடல் இப்படியாக சமீபத்திய பிரடரிக் ஜேம்சன்வரை அறிமுகப்படுத்துகிறது தமிழில். நூல் பெயர் “அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றம் கீழைக்காவியஇயல்” என நினைக்கிறேன், நினைவில் இல்லை.  சில கருத்தாக்கங்கள் புரிந்துகொள்ள ஆங்கிலப் பரிச்சயம் தேவைப்படலாம். தமிழில் சில வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கும் ஆங்கிலம் தேவைப்படலாம். அதே நேரத்தில் ஆங்கிலம் தெரிந்ததால் மட்டுமெ ஒன்றை அல்லது பின்நவீனத்துவத்தை புரிந்து கொண்டுவிடலாம் என சொல்லமுடியாது. மொழி என்பது பிம்பமாக, படிமமாக இருப்பதால் புரிதல் என்பது பரிச்சயம் சார்ந்தே வருகிறது. சில பின்நவீனத்துவ வார்த்தைகளை சிலநேரம் ஆங்கிலத்திலேயே புரிந்துகொள்ள முடியாது என்பது வேறு? உதாரணமாக habitués என்பது போத்ரியாரால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு கருத்தாக்கம். இதனை தமிழில் எப்படி சொல்வது என்பத சிக்கலான விஷயம்தான். இப்படி சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது.

 
4. 'சாரு தன் பக்கத்தில் என் வலைப்பூ பற்றிக் குறிப்பிட்டதால் 10 கோடி ஹிட்ஸ் வந்தன' என்று புல்லரிக்கும் பதிவர்கள் குறித்து...

இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல. 10 கோடி ஹிட்ஸ் வருமா? தமிழர்களே 7 கொடியைத்தான் தொடுகிறார்கள். உலக அளவில் ஓட்டளிப்பதுபோல எல்லாத் தமிழனும் படித்தே தீருவேன் என்று மூச்சு விடுவதுபோல ஒரு கடமையாக செய்தால்கூட 10 கோடி ஹிட்டு வருமா? இதில் என்ன புல்லரிப்பு. சுருளிராஜன் கூறுவதுபொல ”போர்வை இருந்தா போட்டு மூட சொல்லுங்க மாடு கீடு மேஞ்சிறப்போவது.” தவிரவும் இந்தமாதிரியான முடிச்சுக் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். நான் ரொம்ப நல்லவன்...... :)

கேள்வி கேட்டது அன்று நல்ல (??????) பதிலும் கிடைத்தது என்ற பழைய பாட்டைப்போல பதில் சொல்ல வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி.

தொடர்ந்து சாட்டில் இன்று காலை வரைவந்து பதில் கேட்டு அதை படித்தே தீருவேன் என்று தீவிரமாக உள்ள நண்பர் பாரி. அரசின் கொலைவெறித் தாக்குதலுக்கு பதிலாக அவரிடம் 4 கேள்விகள். 1 கேள்வி அவருக்கு சாய்ஸ்.

1. ஆரிய திராவிட முரணின் அரசியல் பின்னணி என்ன?

2. தமிழ் தேசியம் என்கிற கருத்தாக்கம் தமிழர்கள் வாழ்வில் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது?

3. தொடர்ந்து இடஒதுக்கீட்டை பார்ப்பனியம் எதிர்ப்பது ஏன்?

4.  தமிழ்மக்களின் சினிமா மோகத்தை விலக்க உங்களது ஆலோசனைகள் என்ன?

5. சமீபத்தில் நீங்கள் படித்த நூல் பற்றி சொல்லமுடியுமா?

இனி அவர் பார்த்துப்பார் யாரிடம் கேட்பது என்று.

நன்றி.

image: புத்தரின் மரணம் பற்றிய ஓவியம்.

21 comments:

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வினாக்களுக்கான விடைகள் நன்று!
என் மீது ஏனிந்த கொலவெறி? :))

முபாரக் சொன்னது…

பதிலைப்படிக்க ஆவலாயிருந்தவர்களில் நானும் ஒருவன்.

பவுத்தம்/பெரியார் பற்றிய விரிவான பதில், மேலும் இதுபற்றி வாசிக்க ஆவலாயிருக்கிறது.

//போர்வை இருந்தா போட்டு மூட சொல்லுங்க மாடு கீடு மேஞ்சிறப்போவது//

:-)))

ஜமாலன் சொன்னது…

பாரி.அரசு said...

//வினாக்களுக்கான விடைகள் நன்று!
என் மீது ஏனிந்த கொலவெறி? :))//

நான்தான் சொன்னேன்ல நான் ரொம்ப நல்லவன் என்று..

இதெல்லாம் கொலைவெறி அல்ல. தொடர்ந்து நீங்கள் வாசித்தும் எழுதியும் வருவது சார்ந்த கேள்விகள்தான்.

ஜமாலன் சொன்னது…

முபாரக் said...

//பதிலைப்படிக்க ஆவலாயிருந்தவர்களில் நானும் ஒருவன்.//

அப்படியா? சொல்லவே இல்ல..

//பவுத்தம்/பெரியார் பற்றிய விரிவான பதில், மேலும் இதுபற்றி வாசிக்க ஆவலாயிருக்கிறது.//

பவுத்தம் குறித்து முழுமையாக சொல்வதோ எழதுவதோ சாத்தியமற்றது. அது ஒரு கடல்போல. பல உரையாடல்களை உள்ளடக்கியது. தொடர்வாசிப்பு மட்டமே சாத்தியம். பௌத்தத்தின் இயங்கியலே அதுதான். தேங்காமல் தேடி ஓடிக்கொண்டேயிருக்கும் ஒரு நதிபோன்றது... அது ஒரு வற்றாத கடலில் வீழாத ஒரு நதி..

லக்கிலுக் சொன்னது…

லேட்டான பதிலாக இருந்தாலும் லேட்டஸ்டாக இருக்கு. குறிப்பாக பவுத்தமும், பெரியாரும் குறித்த விளக்கங்கள் அருமை.

முபாரக் சொன்னது…

//அப்படியா? சொல்லவே இல்ல..//

சுகுணாவோட கேள்விய படிச்சதும் போன் போட்டு சொன்னேன், அப்ப ஊர்ல இருந்தீங்க, நம்ம நினைப்பு எங்க வந்திருக்கப்போவுது :-)

ஜமாலன் சொன்னது…

லக்கிலுக் said...

//லேட்டான பதிலாக இருந்தாலும் லேட்டஸ்டாக இருக்கு. குறிப்பாக பவுத்தமும், பெரியாரும் குறித்த விளக்கங்கள் அருமை.//

நன்றி லக்கிலுக்.

ஜமாலன் சொன்னது…

முபாரக் said...

//சுகுணாவோட கேள்விய படிச்சதும் போன் போட்டு சொன்னேன், அப்ப ஊர்ல இருந்தீங்க, நம்ம நினைப்பு எங்க வந்திருக்கப்போவுது :-)//

மன்னிக்கவும் மறந்துவிட்டேன். நினைவுட்டியமைக்கு நன்றி.

கையேடு சொன்னது…

வணக்கம் திரு. ஜமாலன்,

தங்கள் பயணம் சிறப்பாக முடிந்ததா?

திரு. சுகுணா திவாகர் அவர்களின் பதிவில் உங்களுக்கான கேள்விகளைப் படித்ததும், அடடா.. இந்த நேரத்தில் இவர் விடுமுறையில் சென்றுவிட்டாரே என்று தோன்றியது (சிறிது அதீதமான சுயநலம் தான், இருந்தாலும் தோன்றியது). ஆனால், திரும்பியவுடன் மறவாமல் உங்களுக்கே உரிய நேர்த்தியுடனும், செறிவுடனும் பதிலளித்துள்ளீர்கள்.

manjoorraja சொன்னது…

நல்ல பதில்கள்.

உங்கள் கேள்விகளும் நன்றாக இருக்கின்றன.


பாரியார் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.

கே.என்.சிவராமன் சொன்னது…

ஜமாலன்...

தங்களுக்கு பின்னூட்டம் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது.. (தங்கள் பதிவுகளை படித்தும்...) சென்னைக்கு நீங்கள் வந்தபோதும் அதிகம் பேச முடியவில்லை.

சுகுணாவின் கேள்விக்கான பதில் வழக்கம்போல் உரையாடலுக்கு வழிவகுக்கும் வகையில் இருக்கிறது. செறிவான வாசிப்பு, வாக்கியங்களில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

நண்பர் பாரி. அரசுவின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தமிழன்-கறுப்பி... சொன்னது…

பலநாட்கள் காத்திருந்தாலும் பதில்கள் திருப்பதியாயிருக்கிறது...

தமிழன்-கறுப்பி... சொன்னது…

பலநாட்கள் காத்திருந்தாலும் பதில்கள் திருப்தியாயிருக்கிறது...

கூத்தன் சொன்னது…

அனைத்து கருத்தாக்கங்களுக்கு பின்னாலும் ஒரு அரசியல் அதுவும் சாதி சார்ந்த அரசியல் இருப்பதான் பார்வை மிக வித்தியாசமாக இருந்தது..உங்கள் நுண்ணுனர்வும் வாசிப்பு அனுபவமும் பிரமிக்கவைகிறது

ஜமாலன் சொன்னது…

கையேடு said...
வணக்கம் திரு. ஜமாலன்,

தங்கள் பயணம் சிறப்பாக முடிந்ததா?

//திரு. சுகுணா திவாகர் அவர்களின் பதிவில் உங்களுக்கான கேள்விகளைப் படித்ததும், அடடா.. இந்த நேரத்தில் இவர் விடுமுறையில் சென்றுவிட்டாரே என்று தோன்றியது (சிறிது அதீதமான சுயநலம் தான், ருந்தாலும் தோன்றியது). ஆனால், திரும்பியவுடன் மறவாமல் உங்களுக்கே உரிய நேர்த்தியுடனும், செறிவுடனும் பதிலளித்துள்ளீர்கள்.//

நன்றி நண்பர் கையேடிற்கு... இதில என்ன சுயநலம்... ???? ஏற்கனவே 30 நாளும் காற்றில் கரைந்தபோகிறது? சிக்கிரம்தான் வந்தோட்டம்ல..

ஜமாலன் சொன்னது…

மஞ்சூர் ராசா said...

//நல்ல பதில்கள்.

உங்கள் கேள்விகளும் நன்றாக இருக்கின்றன.//

நன்றி.

//பாரியார் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.//

நானும் காத்திருக்கிறேன்.

ஜமாலன் சொன்னது…

பைத்தியக்காரன் said...

//தங்களுக்கு பின்னூட்டம் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது.. (தங்கள் பதிவுகளை படித்தும்...) சென்னைக்கு நீங்கள் வந்தபோதும் அதிகம் பேச முடியவில்லை. //

ஆம். சென்னையில் இம்முறை நேரத்தை ஒழங்கமைக்க இயலவி்ல்லை. எனது சொந்த வீடு சாரந்த பணிகள்கூட முடிக்க இயலவில்லை. நமக்கெல்லாம் 1 மாதம் போதாது..?

//சுகுணாவின் கேள்விக்கான பதில் வழக்கம்போல் உரையாடலுக்கு வழிவகுக்கும் வகையில் இருக்கிறது. செறிவான வாசிப்பு, வாக்கியங்களில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.//

நன்றி

//நண்பர் பாரி. அரசுவின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.//

நானும்தான்.

ஜமாலன் சொன்னது…

தமிழன்... said...

//பலநாட்கள் காத்திருந்தாலும் பதில்கள் திருப்பதியாயிருக்கிறது...//

பலநாட்கள் காத்திரந்தீர்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. பணிகளால் உடனடியாக பதில் அளிக்க இயலவில்லை. இன்னும்கூட பெரியார் பவுத்தம் உறவு குறித்த விரிவாக எழுதும் எண்ணம் உள்ளது. கொஞ்சம் அலுவலகப்பணி என்பதால் முடியவில்லை. சீக்கிரத்தில்..

நன்றி.

ஜமாலன் சொன்னது…

ottakuththar said...

//அனைத்து கருத்தாக்கங்களுக்கு பின்னாலும் ஒரு அரசியல் அதுவும் சாதி சார்ந்த அரசியல் இருப்பதான் பார்வை மிக வித்தியாசமாக இருந்தது..உங்கள் நுண்ணுனர்வும் வாசிப்பு அனுபவமும் பிரமிக்கவைகிறது//

”ஒவ்வொரு செயலுக்கும் சொற்களுக்கும் பின்னால் அதற்கான முத்திரை குத்தப்பட்டுள்ளது” என்பது லெனினின் புகழ்பெற்ற வாக்கியம். மார்கசியர்கள் அதனை வர்க்கம் என்பார்கள். இந்தியாவில் அது சாதியாக உள்ளது. அதனால் அரசியலற்ற இருப்போ பேச்சோ சாத்தயிமில்லை நவீன நாலத்தில். இது விரிவாக உரையாடி புரிந்துகொள்ள வேண்டிய விடயம். அரிஸ்டாட்டில் துவக்கி வைத்தார். மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று. அதனால் அரசியல் என்பது தீரமானகரமானதாக உள்ளது.

உங்கள் பார்வைக்கு நன்றி.

sukan சொன்னது…

//தலித்திலக்கியத்தைப் போல் ஏன் சிறுபான்மையினர் இலக்கியம் என்ற வகையினம் உருவாக முடியவில்லை? முஸ்லிம் இலக்கியம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறித்து... //

இவைகுறித்த உங்கள் பதில் நன்று.

இவ்வாறான ஒப்பீட்டு கேள்வி அடிப்படையில் சரியானதா?

ஜமாலன் சொன்னது…

நர்மதா said...

//தலித்திலக்கியத்தைப் போல் ஏன் சிறுபான்மையினர் இலக்கியம் என்ற வகையினம் உருவாக முடியவில்லை? முஸ்லிம் இலக்கியம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறித்து... //

//இவைகுறித்த உங்கள் பதில் நன்று.

இவ்வாறான ஒப்பீட்டு கேள்வி அடிப்படையில் சரியானதா?//

நன்றி நர்மதா... நீங்கள் கூறுவது சரிதான். இந்த ஒப்பீடே அடிப்படையில் சரியில்லைதான். அதனால்தான் முதலில் இதை ஏன் என்னிடம் கேட்பதாகச் சொன்னேன். தலித் இலக்கியம் என்பது முற்றிலும் வேறானது? அதன் அரசியலும்கூட. இஸ்லாமிய இலக்கியம் என்பது அடிப்படையில் மதம் சார்ந்தே அமையும் வாய்ப்பிருப்பதால் அதனை எப்படி பார்ப்பது என்து முக்கியமான கேள்வியாகும்.

உங்கள் அவதானிப்பும் வாசிப்பும் சரியானதே.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.