அலைதலில் கிளைத்த குறிப்புகள்.

பதிவு எழுதுவதற்காக பழைய குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்தபோது... சில முக்கியமான கடிதங்களும், கட்டுரைகள் எழுதவென குறித்து வைத்த குறிப்புகளும், கையெழுத்தப்படியாக சில கட்டுரைகளும், கவிதைகளும் தூசி தட்டி எடுத்தேன். அவற்றில் பொருத்தமுள்ள இவற்றை பதிவில் வெளியிடுகிறேன். இவை 1998-வாக்கில் நண்பர்களுக்கு கடிதங்களாகவும் எனது குறிப்பேட்டிலும் குறித்து வைக்கப்பட்டவை. ஆரம்பிச்சிட்டான்ய்யா குப்பையை கிளற... என்று எண்ணாதீர்கள. இன்னும் இக்குப்பைகள் கிளறப்படாமலே இருக்கிறது. அதாவது, இக்குறிப்புகளை விளக்கக்கூடிய கட்டுரைகள்தான் இன்னும் எழுதப்படவில்லை. பதிவுலகம் போன்ற ஒரு வாய்பபு இல்லாத நிலையில் எழுதும் ஆர்வமற்று இக்குறிப்புகளை விரித்து எழுத வாய்க்கவில்லை. பதிவுலக நண்பர்கள்... இவற்றை விளக்கியோ மறுத்தோ எழுதலாம் என்பதால் இங்கு வெளியிடப்படுகிறது. தொடர்ந்து இவைகளை எனது பதிவுகளில் எழுதும் உத்தேசமும் உண்டு. நீங்கள் பின்னோட்டம் போடும் முன்பு ஒரு முன்னோட்டமாக இருக்கட்டுமே என்றுதான்.

1. 'கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோண்றிய மூத்தக்குடி' 'தமிழ் மண்ணுக்கே இயல்பாய் அமைந்துள்ள குணங்களில் ஒன்று அநீதியைக் கண்டு வெகுண்டெழுவது.' ஏதொ ஒரு தலையங்கத்திலோ அல்லது பேருரையிலோ அல்லது பேருந்தின் பேச்சிலோ எதிர்கொண்ட வாசகங்கள் இவை. இது போன்ற வாக்கியங்கள் தமிழில் இன்னும் எழுதப்பட்டு வருவது கவலைக்கிடமான விடயம்தான். இந்த வாக்கியம் தமிழ் பெருமித உணர்வையும், தமிழ் உயர்-தேசீய உணர்வையும், தமிழ்-அதிகார உணர்வையும் சொல்லும் ஒருவகை பாசிச-பெருமிதமாகும். இவ் வாக்கியங்கள் உண்மையா? அம்பட்டமான பொய்தானே? இந்த கோயபல்ஸ்வகை பொய்யை பலரும், ஒரு மொண்ணையான அர்த்தத்தில் பயன்படுத்திதான் வருகிறோம். இதுபோன்ற வாக்கியங்களை எழுதுவதை தவிர்க்கலாம் என்று படுகிறது. இப்பார்வை வரலாற்றை தேர்வு செய்யும் நமது அரசியலின் பார்வை. அதனால்தான் மன்னர்கள் நெருக்கடிக்கு ஆளானதைக் கண்டு வெகுண்டெழும் மக்கள் கூட்டம் என்பதாக ஒரு பொய்யை வரலாற்றின் பக்கங்களாக படித்துக் கொண்டே இருக்கிறோம். நமது கனவும், நமது உடலும் அரசிறையால் (அரசு மற்றும் இறையால்) உருவமைக்கப்பட்டது. அந்த அரசிறையயும் தமிழ்ச்சினிமாவின் ராஜராஜ சோழன்களால், கனவுக் கதாநாயகர்களால், வரலாற்றின் கதைகூறல்களால் உருவமைக்கப்பட்டது. இதிலிருந்து விடுபடுவது, நாம் உருவாக்கும் இத்தகைய போலிப்பெருமித வாக்கியங்களை தவிர்ப்பதும், அதை உணர்வுபூர்வமாக உணர்வதிலிருந்துமே சாத்தியம்.

2. மதங்களும், குறிப்பாக இந்திய பெரும் தத்துவங்களும், இஸ்லாம், இந்துமதம், கிறி்த்துவம், யூதம் போன்ற எல்லா பெருமதமும் மக்களை அதிகமாகவே கொன்று குவித்துவிட்டன. அதற்கு மாற்றாக சிறுமத வளர்ச்சி சிறுதெய்வ வழிபாடு போன்றவற்றை, பகுத்தறிவிற்கு புறம்பான, தொண்ம அடிப்படையில் முன் கொண்டு வருவது ஒரு மாற்றாக இருக்குமா? என்பதும் யோசிக்கத்தக்கது. எனக்கு தெரிந்து வைணவம், சூஃபியிஸம், சித்தர்கள், தாந்ரீகம், பௌத்தம் போன்றவை காதலைப் பேசிய மதங்கள். ஆத்மாவால் ஒடுக்கப்பட்ட உடலைப் புணிதப் படுத்த காதலை முன்வைத்தவை, பெருமதங்களின் ஒடுக்கமுறைகளிலிருந்து தப்பிச் செல்லும் வழியை அம்மதத்தின் தர்க்க அமைப்பிற்குள்ளேயே கண்டடைந்தவை.. காமசாஸ்திரம், கொக்கோகம், ஆணந்த ரங்கா, வள்ளுவரின் காமத்துப்பால் போன்ற நூல்கள் உடலை அதன் விஞ்ஞான அடிப்படையில் அனுகிய நூல்கள். இந்தியப் பாலியல் குறித்த சொல்லாடலில் இவற்றின் பங்கு தீவிரமான ஆய்விற்கு உரியவை. மதவாத பாசிசத்தினை சிதைப்பதற்கு, கருத்தியல் அளவில், இதுபோன்ற நுண்கூறுகளைப் பற்றிய ஆய்வும் விவாதமும் அவசியம்.

3. வரலாற்றை மறுப்பதும் அதற்கு பொறுப்பேற்பதிலிருந்து விலகுவதும், செயலின்மையை வலியுறுத்துவதும், அல்லது செயலற்ற போக்கிற்கு தள்ளுவதும், ஸ்தூலமற்ற மோழியில் பேசுவதும், தர்க்க சுகத்தில் திளைப்பதும், வர்க்கப் போராட்டத்தை மறுப்பதும் என பின்நவீனத்துவத்தை ஒருவகை அத்வைதமாக கானும் மரபு மார்க்சியர்கள்கூட மாவோவின் பண்-முரண்பாடு என்கிற அமைப்பியலாளர்களின், குறிப்பாக அல்தூஸரின் கருத்தாக்கத்தை, அடிப்படையாகக் கொள்கிறார்கள். பின்நவீனத்துவம் என்கிற 'பிராண்டை' தவிர்த்துப் பார்த்தால், தெல்யூஸ்-கொத்தாரி போன்றவர்கள் முன்வைக்கும், மொழி என்பது ஒரு சமூக நிறுவனம். அது ஒருவகை குழுப் பேச்சாக (collective utterance தமிழில் குழுப் பேச்சு என்று சொல்லலாமா? தெரியவில்லை. speech என்பதற்கு பேச்சு என்றால் utterance –என்பதை எப்படிச் சொல்வது? utterance -என்பது பேச்சின் ஒருவகை வன்முறையான வெளிப்பாடாகக் கொள்ளலாம்.) வெளிப்படுகிறது. பேச்சு எல்லாம் முழக்கம் (slogan) என்கிறார்கள், அதாவது அரசியலற்ற, வன்முறையற்ற, திணிப்பற்ற பேச்சு சாத்தியமில்லை என்கிறார்கள். பேச்சின் அடிப்படை செயல்களில் ஒன்று அதன் territorialization- தான் என்றும், இலக்கியங்கள் எப்படி இந்த 'இடமாக்கலை' நிகழ்த்துகின்றன என்றெல்லாம் செல்கிறது இவர்களது ஆய்வு. இடமாக்கலும், நாடும் அரசியலின் அடிப்படை. இதையெல்லாம், லெனினின் முழக்கம் பற்றிய வரையறைகள், வர்க்கநலனில் வெளிப்படும் பேச்சு ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்க முடியும். "ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அதற்கான வர்க்கத்தின் முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறது" என்பதை இந்நோக்கில் வளர்த்தெடுக்க வேண்டும்.

4. வரலாற்றை இன்னும் மன்னர்களின் மானியச் சொத்தாகவே பாவிப்பதைவிட்டு வரலாறு மக்களுக்கானதாக அதாவது வரலாற்றை ஒடுக்கப்பட்ட மக்களின் வழியாக உருவாக்குவதுதான் தேவை. தலித்துகள், பெண்கள் போன்று காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலை அடையாளங்கண்டு அவர்களது வரலாற்றை எழுதவேண்டும். அல்லது இதுவரை வரலாறாக சொல்லப்பட்ட வீர சாகசக் கதைகளை, 'குயிக்ஜோட்' போல் தலைகீழாக்க வேண்டும். மன்னர்களை வேடிக்கை பொருட்களாக்குவது. நாட்டுப்புற நகைச்சுவை அல்லது நையாண்டி மூலம் மன்னர்களை பகடி பண்ணுவதன மூலம் வரலாற்றை செயலிழக்கச் செய்வதுதான் இனியான மக்களின் வரலாறாக இருக்க முடியும். அதனை நாட்டுப்புற நகைச்சுவை என்கிற நாட்டார் ஆய்வுகளிலிருந்து கட்டமைக்க வேண்டும். அதனால், இனியாவது வரலாறு இடிப்பதற்கும், தோண்டவதற்கும் அல்ல மக்களுக்கானது என்பதை மனதில் வைத்து கவனம் செலுத்து வேண்டும்.

5. வானம் பொய்த்துவிட்டது என்பதைப்போல மார்க்சியம் பொய்த்துவிட்டது என்கிற தவளைக் கூச்சலில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், ஒடுக்குமுறையும் இருக்கும்வரை மார்க்சியத்தின் இருப்பு என்பது தவிர்க்க முடியாதது. உண்மையில் சோவியத், சீன அனுபவங்கள் மார்க்சியத்தின் தளத்தை விரிவடையத்தான் செய்துள்ளன. அமைப்பியல் முதல் சீஸோ-லிங்கவிஸ்டிக் வரை அல்தூஸர் முதல் பூஃக்கோ, தெல்யூஸ் கொத்தாரி வரை மார்க்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதிலிருந்து வளர்ச்சியடைந்தவர்கள்தான். பண்ணாட்டு முதலாளியமாக வளர்ந்துள்ள ஏகாதிபத்தியம் ஏற்படுத்தியிருக்கும் அரைக்காலணீய பண்பாட்டுச் சூழலில் நாம் பழையவகையில், இன்றைய பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாது. அதனால்தான் பாலியல் சொல்லாடல்கள், தேசிய இனப்பிரச்சனைகள், பெண்ணியம், பாலினமாக்கல் பற்றியெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிய நோக்கிலிருந்து பேச வேண்டியுள்ளது.

6. இன்றைய தமிழர்கள் குறிப்பாக புலம் பெயர் தமிழர்கள் (ஈழத்தினர்) உலக சிந்தனையின் அனைத்து முன்னொடி துறைகளைப் பற்றியும் பேசுகிறார்கள். அவர்கள் வழியாக தமிழின் ஆய்வுக்களம் விரிவடைந்துள்ளது. மார்க்சியம் அதன் தளத்தில் இச்சிந்தனைகளளுடாக ஒரு உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மார்க்ஸ் தன்னளவில் ஒரு ஐரோப்பிய மையவதாப் பார்வையைக் கொண்டிருப்பதான விமர்சனங்கள் இருந்தபோதிலும், மனித விடுதலை பற்றிய கனவினை முறையான செயல்திட்டத்துடன் அனுகியது மார்க்சியம் மட்டுமே. அதேசமயம் மார்க்சீய வாதிகளிலேயே மொழியை நுணுக்கமாக புரிந்து கொள்ள முயன்ற ஸ்டாலினின் மொழிகுறித்த சிந்தனைகள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை.

7. 'ஆசிரியன் இறந்து விட்டதான' கருத்தாக்கம், விமர்சகனிடமிருந்து படைப்பாளி தப்பிச் செல்வதற்கான உத்தியாகிவிடாது. படைப்புடன் உயிர் பெற்று படைப்புடன் இறந்துவிடும் ஆசிரியன், வாசிப்பின் வழியாக உயிர்ப்பிக்கப் படுகிறான். ஆசிரியன் படைப்பின் ஒரு நிலையான புள்ளி இல்லை, படைப்பினூடே வந்து வந்து மறைபவன் என்பதுதான். இந்த ஆசிரியன் ஒரு எழுத்துருதான் (word-being) அல்லது ஒரு பிம்பம். இந்த பிம்பம் வாசகனால் கட்டமைக்கப்படுவது. எழுதும் ஆசிரியனின் வர்க்க, பாலியல் தன்னிலை என்பது எழுத்தினை வழிநடத்துவதாக இருக்கிறது. இல்லாவிட்டால் படைப்பில் ஒலிக்கும் பொதுக்குரலை எப்படி அடையாளம் காணமுடியும். படைப்பு என்பது இத்தகைய பல குரல்களின் ஒரு போராட்டக்களமாக இருக்கிறது. ஆசிரியன் தனது ஒறைக்குரலால் பிற குரல்களை ஒடுக்குவதை, ஆய்வுகள் வழியாக வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. விமர்சனம் படைப்பை அனுகுவதற்கான வழியை திறப்பதற்கு பதிலாக படைப்பை கலைத்துப்போடுவதாக இருக்க வேண்டும். வாசகன் தன்போக்கில் அதனை கோர்த்து தனது வாசிப்பை நிகழ்த்திக் கொள்ள ஏதுவாகும்.

8. ஒரு கதையில் எழுதப்படும் வர்ணனைகளே கதையின் சொல்லப்படாத மௌணிக்கும் பகுதிகளுக்கான தடயம். இதனை புது விமர்சனத்தில் தடம் (trace) என்பார்கள், Physco-Linguastic-ல் எச்சம் (remainder) என்பார்கள். பேசியதில் உள்ள பேசப்படாததின் எச்சம். இவ்வர்ணணைகளிலும், அதற்கான தேர்வுகளிலும், பேச்சை உருவமைப்பதிலும், அவற்றை வரிசைப்படுத்துவதிலுமே படைப்பின் வர்க்க, பாலியல், சாதீய, மத தன்னிலை வெளிப்பாடு கொள்ளும். கதைவாசிப்பில் இவ்விடைவெளிகளை வாசகன் தனது அடையாளமாக கொண்டு படைப்பின் பரபப்பிற்குள் குடியேறுகிறான். படைப்பை மையமற்றதாக சிதைப்பதன்மூலம் இந்நிலப்பரப்பை சிதைத்து வாசகன் தனக்கான பிரதியை உருவாக்கிக் கொள்ளச் செய்வதன் மூலம் வாசிப்பாளனை கொண்டாட்ட மனநிலைக்கு அல்லது வாசிப்பாளனை படைப்பூக்கமிக்கவனாக மாற்றுவது படைப்பாளியின் பொறுப்பாகிறது. விமர்சகன் அப்படைப்பி்ல் உள்ள ஆசிரியன் என்கிற எழுத்துருவின் தன்னிலை அடையாள அடிப்படைகளை வெளிப்படுத்திக்காட்டுகிறான். இவ்வாறாக விமர்சனம் தீர்ப்பளிக்கும் நீதிமன்ற தீர்ப்பாக ஆகாமல் பிறிதொரு படைப்புச் செயலாக ஆகிறது.

9. "அப்பாவித் தமிழன்" போன்ற சொல்லாடல்கள். இன்னும் மனிதர்களை நல்லவர், வல்லவர், அப்பாவி, கள்ளன் என்று வகைப்படுத்துவது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. வகைபடுத்ததல் என்பது தாவரவியலில் லிண்ணேயஸால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த வகைப்பாட்டியலை மனித சமூகத்திற்குள் பிரயோகித்து இனங்களாக, நிறங்களாக மனிதன் வகைப்படுத்தப்பட்டு எண்ணி கணக்கிடப்பட்டு அரசின் புள்ளிவிபரங்களாக மாற்றப்படுகிறான். அதன்பின் அவை குழு அடையாளங்களாக மாற்றப்பட்டு, வரலாற்றின் கதையாடல்கள் வழியாக உயர்ந்தவை, தாழ்ந்தவை என்கிற படிநிலையாக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. இதன் அதிகபட்ச அரசியல் வெளிப்பாடுதான் பாசிசம் அல்லது இனத்தூய்மை அல்லது வலிமை அல்லது திறமை மட்டுமே வாழ்வதற்கான காரணி என்பது. இவ்வாறாக, அறிவு வகைப்படுத்துதல் வழியாக ஒரு அதிகார தொழில் நுட்பமாக உருவமைக்கப்பட்டது. மேலும் வகைப்படுத்துதல் ஒருபடித்தானவர்களாக மனிதர்களை (Same X Other, Male X Female, Eastern X Western, Black X White, Indian X Pakistan, Sinkala X Tamilian, Ariyan X Dravidian...etc...) கட்டமைப்பதற்கான ஒரு காலணீய தொழில் நுட்பம். அது இப்படித்தான் துவங்கும். அப்பாவி, வளர்ச்சியற்றவன், காட்டுமிராண்டி, மூடநம்பிக்கையாளன் என்பதாக.

10. தமிழரது பாலியல் அறிவு குறித்து அல்லது தமிழ் பாலியல் என்கிற கருத்தாக்கம் குறித்து பேசப்பட வேண்டும். சங்ககாலத்தில் வேலன் வெறியாட்டம் மற்றும் நெய்யணி மயக்கம் எல்லாம் உடல்களை பொதுக்களத்தில் அலையவிட்டு அவற்றை கலப்பதுதான். சங்ககால மகளிர் மது அருந்திவிட்டு இரவுகளில் ஆட்டம் போடுவார்கள் என்கிறது சங்ககால தமிழர் வரலாறு (Pre-Ariyan Tamil Cullture - P.T.S.Iyangar). உடன்போக்கு, மடலேற்றம் துவங்கி அகத்திணை இலக்கியங்களை ஒரு பாலியல் வாசிப்பிற்கே உட்படுத்தலாம். காதலியின் வாயில் ஊறும் நீரின் இனிமைக்கு இணையான நீர் உலகில் இல்லை என்கிறது வள்ளுவம். அது அன்று ஆணால் இன்றுள்ள தமிழன் என்றுகூறி தப்பிக்கலாம். அதற்கு தமிழ் மாத இதழான 'செக்ஸ் லைப்'-பின் அனுபவ பகுதியில் இருந்துதான் உதாரணம் காட்ட வேண்டி வரும். பாலியல் கட்டுமானம் எப்படி மிகைப்படுத்தப்பட்டு மையமான பேசுப்பொருளாக ஆக்கப்பட்டது வரலாற்றில் என்பதையும் இந்தியப் பாலியலின் குறிப்பாக தமிழ் பாலியலின் கலாச்சாரக் கட்டுமானங்கள் எப்படி காலணீயத்தால் உருவமைக்கப்பட்டது என்பதும் ஒரு முக்கிய ஆய்வுப்புள்ளியாகும். இந்த கலாச்சார ஏகாதிபத்தியத்தை கண்டடைந்து உடைத்துப் போடுவது அவசியம்.

11. மக்கள் தொகை பெருக்கம் உலகை அச்சுறுத்துவதாக கட்டமைக்கப்படும் சொல்லாடல்கள் மற்றும் தனது பயத்தை உலக பயமாக்குவது ஆகியன ஒரு ஐரோப்பிய தொழில் நுட்பம்தான். மாவோ கூறினார், 'மனிதன் பிறக்கும்போதே இரண்டு கைகளுடன் பிறக்கிறான்' என்று. மால்த்தூஸியன் பூதம் உலகை விட்டகன்றாலும், இன்னும் இந்த வெள்ளை, ஆணாதிக்க, மத்தியதர வர்க்க மேட்டிமையினரை (elite) விட்டகலவில்லை. அதனால்தான் தனது அச்சத்தை உலக அச்சமாக சித்தரிக்கிறார்கள். மக்கள்தொகை பெருக்கம் பற்றிய சொல்லாடல்கள் மக்களை ஒரு உழைப்புச்சக்தியாக கருதாதின் விளைவே. மக்களின் வாழ்வாதரங்களை நோக்கியதான தொழில்நுட்பங்களை வளர்க்காமல் நுகர்வு அடிப்படையிலான தொழில்களை வளர்த்து, அதற்கான நுகர்வுப் பண்பாட்டை கட்டமைத்துள்ளனர். இதுவே கவனமாக எதிர்க்கப்பட வேணடியது.

12. உலகத்தின் மையமாக மனிதன் தன்னை கருதிக்கொள்ளும் மனிதமுதல்வாதம் என்கிற 'ஹோமோ செண்டரிஸம்' தான் உச்சமாக பாசிச கருத்தியலாக வளர்ந்தது. ஐரோப்பா மனிதனை மையமாக வைத்துக் கொண்டே தனது தத்துவார்த்த அறிதலை துவங்கிறது. Politics of Humanisam பற்றி பேசப்படவேண்டும். மனித நேயம் பேசிய முதலாளித்தும்தான், மனித அழிவை அதிகப்படுத்தியது, அழகுபடுத்தியது. மனிதன் ஒரு பதிணெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பிய கண்டுபிடிப்பு என்கிற பூஃக்கோவின் மனித உடலிற்குள்ளான அதிகார செறித்தல்கள் பற்றிய ஆய்வு இதனை அம்பலப்படுத்தகிறது. மனிதநேயம் என்பது ஏழை எளிய மக்களுக்காக வருந்தி உதவி செய்வதோ அல்லது பிச்சைக்காரர்களுக்கு காசுபோடுவதோ, குளிருக்கு போர்வை தருவதோ அல்ல என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

13. மகிழ்வு, வெட்கை போன்ற உணர்வுகள் எப்படி அதிகார உறவுகளால் ஒரு உடலுக்குள் நுட்பமாக பின்னலாக்கப்பட்டு, அதனை அடைவதற்கான பாய்விற்கு உடல்கள் முடுக்கப்படுகின்றன என்கிற வேட்கைகளி்ன் அரசியல் பற்றியது மற்றொரு ஆய்வு. 'சுயம்', 'ஆத்மா' போன்ற தத்துவார்த்த கூறுகளையே தொழில் நுட்பங்களாக, செய்தி பரிமாற்ற வினையாக கருதி நகரும் மொழியாய்வுகள்... அறிதல் என்கிற அடிப்படை செயலையே கேள்விக்குள்ளாக்கி விட்டுள்ளது இந்த நூற்றாண்டில். புனைவுகளால் புனையப்பட்ட ஒரு புனைவாக வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கும் உலகில் வாழ்க்கை விசித்திரமாக தெரிவதும், இலக்கிய உலகம், இலக்கிய பிறப்பு எல்லாம் விசித்திரமாக தெரிவதும் நமது அரசியல் மற்றம் அறிதலின் பிரச்சனைதான். நமது மகிழ்விற்கான வேதியில் எப்படி அதிகார வினைகளால் இயக்கப்படுகிறது என்பதும் இவ்வாய்வின் தொடர்ச்சியாகும்.
14. புலம் பெயர்ந்த நிலையில் உருவாகும் எழுத்தின் அடையாளம் மற்றும் அரசியல் பற்றிய விவாதம் தேவை. காலணீயம் உருவாக்கிய கலப்பின அடையாளம் (Hybrid Identity) பற்றிய ஆய்வுகள் இன்று அவசியப்படுகின்றன. பின்காலணீயச்சூழலில் இக்கலப்பின அடையாளத்தின் இயக்கத்தை புரிந்தகொள்வது அவசியம். இந்திய மனிதன் என்பவன் சிந்திப்பதில் வெள்ளையனாகவும், நடைமுறையில் கருப்பனாகவும் (இந்தியனாகவும்) இருப்பதே கண்கூடு.

எதையும் சொல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு பரப்பில் சொல்லப்படும் விஷயங்கள் ஏணோ தாணோ என்று இருக்கக்கூடாது என்கிற எழுத்தின் பொறுப்புணர்வுபற்றி அதிகம் அக்கறையும் யோசனைகளும் கொண்டவன் என்பதால், இன்று பெரும் அளவில் விவாதத்திற்கரியதான இக்குறிப்புகள் ஆதாரபூர்வமாக விளக்கப்பட வேண்டியவையா? அல்லது விவாதத்தின் மூலம் நிராகரிக்கப்பட வேண்டியவையா?... என்கிற பிரச்சனையை முன்வைத்து இவற்றை பதிவுலக நண்பர்கள் பேசுப்பொருளாக கொண்டு ஒரு விவாதத்தை உருவாக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் முடிக்கிறேன்.

அடுத்து, மருத்துவம் சார்ந்த துறைகள் பற்றிய பதிவுடன் சந்திப்போம்.

பின்குறிப்பு: பிழையில்லாமல் எழுத இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்பதால்.. திருத்திப் படித்துக் கொள்ளவும். வாய்ப்புள்ள நண்பர்கள் சுட்டினால், திருத்த அல்லது திருந்த வாய்ப்பாக இருக்கும்.

-ஜமாலன்.

27 comments:

பெயரில்லா சொன்னது…

//எதையும் சொல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு பரப்பில் சொல்லப்படும் விஷயங்கள் ஏணோ தாணோ என்று இருக்கக்கூடாது என்கிற எழுத்தின் பொறுப்புணர்வுபற்றி அதிகம் அக்கறையும் யோசனைகளும் கொண்டவன//

இந்த அக்கறையும் பொறுப்புணர்வும் இன்னுமின்னும் தமிழ்ச்சூழலில் பரவுவது மிகுந்த பயனளிக்கும்; சினிமா, கிரிக்கெட், கட்சி அரசியல் என்ற வட்டங்களிற்கு வெளியேயும் தமிழர் சிந்திக்கவும் செயற்படவும் உதவும்.

உங்கள் எழுத்து ந்டையும் "ஏனோ தானோ" என்றில்லாமல் நன்கு வளம்பெற வாழ்த்துக்கள்.

உங்கள் எழுத்துக்களை இப்பொழுதுதான் வாசிக்கத் தொடங்குகின்றேன்.

பல இடங்களில் உங்களுடன் ஒத்து அதிர முடிகிறது. மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தோழரே.

RATHNESH சொன்னது…

அடேஏஏஏஏஏஏங்கப்பங்கப்பா! இவ்வளவு கனமான விஷயங்களை இவ்வளவு அதிகமாக ஒரே பதிவில் போட்டீர்கள் என்றால் பின்னூட்டம் அடுத்த வார விடுமுறைக்கப்புறம் தான் போட இயலும் ஜமாலன் சார்.

ஜமாலன் சொன்னது…

அணாணிக்கு...

//பல இடங்களில் உங்களுடன் ஒத்து அதிர முடிகிறது. மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தோழரே.//

மகிழ்ச்சி. ஏன் உங்கள் பெயரை மறைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அது உங்கள் உரிமை. ஒத்ததிரும் உணர்வுள்ளவர்கள் என்பதால் இந்த அதிகப்படி உரிமை.

ஜமாலன் சொன்னது…

ஹலோ ரத்ணேஷ்...

இவயெல்லாம் ஒவவொன்றாக ஆதாரத்துடன் எழுத வேண்டும் என்று யோசித்து வைத்த பலநாள் புராஜக்ட்.

பதிவுலகில் இனி இதை தொடர வேண்டியதுதான்.
உங்கள் பின்னோட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

முரளிகண்ணன் சொன்னது…

மிக கணமான விஷயங்கள். வெள்ளி இரவு அல்லது சனிக்கிழமைகளில் எழுதினால் ஆற அமர படிக்கமுடியும். அதிக வாசகர்களை சென்றடையும்

மாயன் சொன்னது…

ஏதேது.. பதிவுலகத்தை அடுத்த தளத்துக்கு நகர்த்தாமல் விட மாட்டீர்கள் போல இருக்கிறதே...

கே.என்.சிவராமன் சொன்னது…

உரையாடலுக்கான நல்ல பதிவு ஜமாலன். நட்சத்திர பதிவுகள் களைகட்டுகின்றன. ஆனால், தவறாக நினைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சில விஷயங்கள்.

1. குறிப்புகள் என்பவை, குறிப்பு எடுத்தவரின் அறிதல், வாசிப்பு, புரிதல், தொடர்பானவை. அதில் மறைந்திருக்கும் சொல்லாடல்களும், எழுதாமல் விட்ட செய்திகளும் குறிப்பு எடுத்தவர்களுக்கு மட்டுமே புரியக் கூடியவை. தன் நினைவில் இருப்பதை அவர் குறிக்கமாட்டார். அவர் நினைவில் இருப்பது குறிப்பை வாசிப்பவர்களுக்கு தெரியாது. குறித்த சொல்லாடல் எந்த விளக்கத்துக்கானது என்பது குறிப்பு எடுத்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் அல்லவா?

2. உண்மையிலேயே இன்று பாலியல் இருக்கிறதா? பிம்பங்களை மட்டுமே புணரும்படி அதிகாரம் நம்மை நிர்பந்தித்துள்ள நிலையில் பிம்பங்களின் வன்முறை குறித்த ஆய்வுகள் நம்மை சிதைக்குமா? சேர்க்குமா? சங்க கால பாலியல் சொல்லாடல்கள் ஒருபக்கம் இருக்கட்டும். இன்றைய காலகட்டத்தில் பாலியல் சொல்லாடல்கள் எதை உணர்த்துகின்றன அல்லது எதை விமர்சிக்கின்றன? இவைகளில் புதைந்துள்ள ஆற்றாமைகள் எதை விளக்குகின்றன அல்லது எதை எதிர்க்கின்றன?

3. உருவாகும் ஒவ்வொரு சொல்லையும் அரசும், அதிகாரமும் தங்களது உடமைகளாக மாற்றும்போது, அதற்கு எதிரான சொல்லையும், சொல்லாடல்களையும் உற்பத்தி செய்ய வேண்டிய பொறுப்பு மாற்றுக்கு இருக்கிறது. அந்தவகையில் அதிகாரத்தால் விளிம்புக்கு தள்ளப்பட்ட விஷயங்களை மொழி வழியாக மாற்று கையில் எடுக்கும்போது அதுவும் அமைப்பாகுமா? அமைப்புக்கான அதிகாரம் மாற்றுக்கும் வந்து சேருமா?

உரையாடுவோம்.

ஜமாலன் சொன்னது…

முரளி கண்ணன் said...

//மிக கணமான விஷயங்கள். வெள்ளி இரவு அல்லது சனிக்கிழமைகளில் எழுதினால் ஆற அமர படிக்கமுடியும். அதிக வாசகர்களை சென்றடையும்//

உங்கள் ஆலோசனை சரிதான். நன்றி.

ஜமாலன் சொன்னது…

மாயன் said...
//ஏதேது.. பதிவுலகத்தை அடுத்த தளத்துக்கு நகர்த்தாமல் விட மாட்டீர்கள் போல இருக்கிறதே...//

எல்லாம் உங்களைப்போன்ற கனமான வாசிப்பாளர்களின் உபயம்தான். நன்றி

ஜமாலன் சொன்னது…

பைத்தியக்காரன் said...

//உரையாடலுக்கான நல்ல பதிவு//

உங்கள் பின்னோட்டம் சரியான திசையில் பிரச்சனைகளை எடுத்தச் செல்கிறது. இவை விரிவாக விவாதிக்கப்படும் போதுதான் நமக்குள் அல்லது எனக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் பூனைக்குட்டிகள் வெளிக்கிளம்பும். என்னுடன் எனது தளத்தில் பயணிக்கிறது உங்களது குறிப்புகள் மற்றும் சிந்தனையும். விவாதத்தை தொடர்வோம்.

//1. குறிப்புகள் என்பவை, குறிப்பு எடுத்தவரின் அறிதல், வாசிப்பு, புரிதல், தொடர்பானவை. அதில் மறைந்திருக்கும் சொல்லாடல்களும், எழுதாமல் விட்ட செய்திகளும் குறிப்பு எடுத்தவர்களுக்கு மட்டுமே புரியக் கூடியவை. தன் நினைவில் இருப்பதை அவர் குறிக்கமாட்டார். அவர் நினைவில் இருப்பது குறிப்பை வாசிப்பவர்களுக்கு தெரியாது. குறித்த சொல்லாடல் எந்த விளக்கத்துக்கானது என்பது குறிப்பு எடுத்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் அல்லவா?//

1. குறிப்புகள் என்பது நினைவு மற்றும் மறதி அல்லது தன்னிலைகளின் கண்காணிப்பு தணிக்கையுடன் உறவு கொண்டதுதான். அவ்வகையில் இக்குறிப்புகள் முழுமுதலானவை அல்ல.. எனது உடல் அரசியலுடன் உறவுகொண்டவையே. நம்மையே சிதைவாக்கம் செய்து கொள்வதற்கான ஒரு யத்தனமாகவே இவை முன்வைக்கப்படுகின்றன. ஒரு உளச்சிகிச்சை மருத்துவர் தனது பணி துவங்குவதற்கு முன்பு தன்னையே உளப்பகுப்பாய்வு செய்து கொள்வதும், அவரது தன்னிலை குறித்து ஆய்வடிப்படையிலான ஒரு முடிவிற்கு வருவது அடிப்படை அறம். இல்லாவி்ட்டால் அவரது தன்னிலை நோயாளியின் (?) வரலாற்றில் நுழைந்நதுவிடும் அபாயம் உள்ளது. அதைப்போல எழுத்தாளர்கள் அல்லது விமர்சகர்களும் அப்படித்தான். முதலில் தனது தன்னிலை குறித்த கவனமும் சுயவிமர்சனமும், அவர்களது எழுத்துப்பணிக்கான முன்நிபந்தனை என்று கருதுபவன் நான். அவ்வகையில் இக்குறிப்புகளில் எனது சுயதன்னிலை ஆதிக்கம் இருக்கவே செய்கிறது. அதனை தவிர்க்க முயல்வது என்பது ஒரு நீண்ட process...

//2. உண்மையிலேயே இன்று பாலியல் இருக்கிறதா? பிம்பங்களை மட்டுமே புணரும்படி அதிகாரம் நம்மை நிர்பந்தித்துள்ள நிலையில் பிம்பங்களின் வன்முறை குறித்த ஆய்வுகள் நம்மை சிதைக்குமா? சேர்க்குமா? சங்க கால பாலியல் சொல்லாடல்கள் ஒருபக்கம் இருக்கட்டும். இன்றைய காலகட்டத்தில் பாலியல் சொல்லாடல்கள் எதை உணர்த்துகின்றன அல்லது எதை விமர்சிக்கின்றன? இவைகளில் புதைந்துள்ள ஆற்றாமைகள் எதை விளக்குகின்றன அல்லது எதை எதிர்க்கின்றன?//

பாலியல் இன்று மட்டும் அல்ல என்றுமே இருந்ததில்லை. சரியாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். பூஃக்கோவின் அடிப்படை ஆய்வே.. பாலியல் என்பது வரலாற்றில் எப்படி ஒரு சொல்லாடலாக அல்லது பேசுப்பொருளாக கட்டமைக்கப்பட்டது என்றும் அதனை கட்டமைக்க எப்படி தன்பால் புணர்சசியாளர்கள் ஒரு இனவகையாக மாற்றப்பட்டார்கள் என்றும் விவரிக்கிறார். என்னைவிட நீங்கள் இதனை அதிகம் வாசித்திருக்ககூடும். உங்கள் காதல் பற்றிய பதிவில் இச்சிந்தனை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் கேள்விகள் ஆழமான அடுத்தகட்ட உரையாடலுக்கானவை. வாய்ப்பிருப்பின் அதனை தனிப்பதிவாக அல்லது கூட்டுப்பதிவாக வெளியிடலாம்.

//3. உருவாகும் ஒவ்வொரு சொல்லையும் அரசும், அதிகாரமும் தங்களது உடமைகளாக மாற்றும்போது, அதற்கு எதிரான சொல்லையும், சொல்லாடல்களையும் உற்பத்தி செய்ய வேண்டிய பொறுப்பு மாற்றுக்கு இருக்கிறது. அந்தவகையில் அதிகாரத்தால் விளிம்புக்கு தள்ளப்பட்ட விஷயங்களை மொழி வழியாக மாற்று கையில் எடுக்கும்போது அதுவும் அமைப்பாகுமா? அமைப்புக்கான அதிகாரம் மாற்றுக்கும் வந்து சேருமா?//

மாற்று என்பது Alternative தானே அல்லது Other ஆ. அதை மற்றமை என்ற கூறுவொம் என்றாலும், ஒரு பரிதலுக்காக.. இது ஒரு சிக்கலான பிரச்சனைதான். Alternative என்ற பொருளில் அதனை கையாள்கிறேன். அதிகாரம் சிதைக்கப்பட வேண்டும். மாற்று கையில் எடுப்பதல்ல நோக்கம். அதிகாரம் பற்றிய சொல்லாடலில் இதுநாள்வரை அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதுதான் மையமான பிரச்சனையாக இருந்தது, இருந்த வருகிறது. மார்க்சீயம் உட்பட. அதிகாரத்தை சிதைப்பது என்பதுதான் இதன் அடுத்த கட்ட வளர்ச்சி. மார்க்சிய வழிமுறை அதிகாரத்தை அடைந்து அதை இல்லாதொழிப்பது. பின்அமைப்பியல் நிலை தகர்ப்பமைப்பு மூலம் அதிகார மற்ற ஒரு நிலை அல்லது இயக்கத்தில் இயக்கத்தில். தெல்லஸ்-கொத்தாரி நாடோடித்தன்னிலை என்பதை முன்வைக்கிறார்கள். physco-analysis -ற்கு மாற்றாக sizo-analysis என்பதை முன்வைக்கிறார்கள். மார்க்சியத்தின் இயங்கியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதத்திற்கு பதிலாக லிபிடனல் பொருள்முதல்வாதம் என்பதை முன்வைக்கிறார்கள். இங்கு மாற்று என்பது Other ஆக இயக்கம் கொள்கிறது எனலாம். கூட்டுத்தன்னிலையாக மாறுகிறது. இவ்வாறாக தனிமனிதன் தனிமனித தன்னிலை ஆத்மா போன்ற சொற்கள் காலாவதியாகிவிடுகின்றன. முடிந்தால் சுயம், ஆத்மா குறித்து வேட்கைகளின் அரசியல் என்பதாக ஒருபதிவிடும் எண்ணம் உள்ளது. பார்க்கலாம்.

நன்றி
அன்புடன்
ஜமாலன்.

Ayyanar Viswanath சொன்னது…

/ இன்றைய காலகட்டத்தில் பாலியல் சொல்லாடல்கள் எதை உணர்த்துகின்றன அல்லது எதை விமர்சிக்கின்றன? இவைகளில் புதைந்துள்ள ஆற்றாமைகள் எதை விளக்குகின்றன அல்லது எதை எதிர்க்கின்றன?//

அவள் தன் ப்ராவின் ஊக்குகளை கழட்டும்போதே எனக்கான உச்சம் நடந்துவிடுகிறதென சில இடங்களில் என்னால எழுதமுடிந்தது இந்த பிம்ப புணர்ச்சியின் மீதிருக்கும் ஆற்றாமையே...
புணர்ச்சி பேச்சுக்களாய் மட்டுமே நிறைந்திருக்கும் வெளியில்தான் நமது பால்யங்களும் இளமைகளும் தொலைந்து போயிருக்கின்றன..ஃபோர்னோகிராபி க்கு பதிலாய் பிராக்டிகல் ஃபோர்னோ எனத் தொடங்கினாலாவது புணர்ச்சியை மூளையிலிருந்து உடலுக்கு கடத்திவிடமுடியுமா என பார்ப்போம்..

இந்த பாலியல் சொல்லாடல்கள் உடலின் மீதான ரகசிய கிளர்வுகளை ஆடை அவிழ்த்துப் பார்க்கிறது.மேலும் புணர்ச்சி என்பது உடலின் எல்லா பாகங்களும் ஈடுபடக்கூடிய மிக இயல்பான செயல் என்பதை தெரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கலாம்.புனிதங்கள் மிகுந்திருக்கும் நமது பரப்பில் வெட்கங்களாலும் கூச்சங்களாலும் பயங்களாலும் மூடியிருக்கும் உடலின் கதவை கொஞ்சம் சொற்களின் கை கொண்டுதான் தட்டிப் பார்க்கலாமே என்ற நோக்கில்தான் எழுதப்படுகின்றன....(இது என் கருத்து மட்டுமே / எனக்கான பிலாக்கணம் இதுதான்)

ஜமாலன் சொன்னது…

அய்யனார் வாங்க...டார்ச்ர் நம்பர் 2 உடன் வருவீர்கள் என எதிர்பார்த்தேன். 1-ற்கு எனது விளக்கம் பற்றி ஒரு பதிலும் இல்லை.
"என்ன நான் சரியாதான பேசுறன்" (வடிவேலு வாய்ஸில்). மெளளனம் சம்மதம் என்பதற்கு பெண்பார்க்கும் படலம் அல்ல இது.

இந்த பின்னோட்ட பிலாக்கணமும் நன்றாகத்தான் உள்ளது. பாலியலை உடலின் அனைத்த உணர்வுப் பொட்டுக்கானதாக மாற்ற விழைவது என்பதன் பின் உள்ள உடல் பற்றிய மர்மம் பேசப்பட வேண்டிய ஒன்றுதான். பிம்பங்களற்ற உடலிருப்பு சாத்தியமா? என்பது இதன் தொடர் கேள்வி.
ரமேஷ்-பிரேமின் ஆத்மார்த்தி அதீதன் அரூபதர்சினி புணர்ச்சிகள் இதற்கான தேடுதல் தான். அவை ஒரு வேதிவினைப்போல புணரப்படுகிறது படிமங்கள் வழியாக..

அடுத்த டார்ச்ருக்காக...
அன்புடன்
ஜமாலன்.

Ayyanar Viswanath சொன்னது…

#1 டார்ச்சருக்கான விளக்கம் எனக்கு போதலிங்க ஜமாலன்..:)

மார்க்சியம் மட்டும்தான் தனிமனித சிந்தனையிலிருந்து தோன்றியது மத்ததுக்கு பின்புலம் இருக்கு ன்னு (அதாவது பழமையை அடியொற்றி வந்தது)நீங்க சொல்வது எனக்கு புதுசா இருக்கு..புதிதாய் ஒன்று முளைப்பதற்கான விதைகள் ஏற்கனவே தூவப்பட்டிருக்கலாம் அப்படிங்கிறதுதான் என்னோட நிலைப்பாடு..
ஒருவேளை பழமையை அடியொற்றாம மனிதர்களை முன்வைத்து சித்தாந்தங்களை புரிஞ்சிக்க நீங்க விரும்பறீங்களோ?.. அப்படி இருந்தா அதுக்கு ஏன் மார்க்சிய எல்லைகளை புகுத்தனும்?.

அர்ப்பணிப்பு எனக்கு பிடித்த மாதிரி இருந்ததால நோ டார்ச்சர் ..இந்த குறிப்புகளும் உங்க தனிப்பட்ட சிந்தனைகள் அப்படிங்கிறதால இதில டார்ச்சருக்கு இடமே இல்ல..எழுதுங்க காத்திருக்கேன் :)

கே.என்.சிவராமன் சொன்னது…

தங்கள் பதிலுக்கு நன்றி ஜமாலன். கூட்டுப் பதிவில் எனக்கும் விருப்பம் உண்டு. 'நான்' என்பதையே அடுத்தவர்கள் தீர்மானிக்கும்போது தன்னிலை அற்ற உயிராகத்தான் நடமாடிக் கொண்டிருக்கிறேன். விநாடிதோறும் சிதைவதில் தெறிக்கும் எச்சங்களையே பாழாய்ப் போன சொற்களுக்குள் அடக்குகிறேன். அப்படியும் தோல்வியே கிடைக்கிறது. என்றாலும் மனப்பிறழ்வுடன் வாழ்வது அதிகாரங்களை சிதைக்க உதவுகிறது.

//முடிந்தால் சுயம், ஆத்மா குறித்து வேட்கைகளின் அரசியல் என்பதாக ஒரு பதிவிடும் எண்ணம் உள்ளது.//

காத்திருக்கிறோம்.

தறுதலை சொன்னது…

நீங்கள் கொடுத்திருக்கும் குறிப்புகள் ஒவ்வொன்றைப் பற்றியும் இன்னும் விரிவாக எழுத வேண்டும் (நீங்கள்தான்).

மேலும் வெறும் கருத்துகள் மட்டுமின்றி அதை அன்றாட பிரச்சனைகளுடன் தொடர்பு படுத்திச் சொன்னால் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும் (எனக்கு).

---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

கே.என்.சிவராமன் சொன்னது…

//புனிதங்கள் மிகுந்திருக்கும் நமது பரப்பில் வெட்கங்களாலும் கூச்சங்களாலும் பயங்களாலும் மூடியிருக்கும் உடலின் கதவை கொஞ்சம் சொற்களின் கை கொண்டுதான் தட்டிப் பார்க்கலாமே என்ற நோக்கில்தான் எழுதப்படுகின்றன....(இது என் கருத்து மட்டுமே / எனக்கான பிலாக்கணம் இதுதான்)//

உண்மை அய்யனார். வாக்கியங்களை கலைத்து, உருவகங்களை சிதைத்து, சொல்லாடல்களை அமைத்து... தொடர்ந்து அதிகாரத்துடன் போராடி வரும் உங்களால் மிகச்சிறந்த புனைவு ஒன்றை எழுத முடியும். அது 21ம் நூற்றாண்டு இளைஞனின் வரலாறாக அமையும்.

எழுதுங்களேன்?

Unknown சொன்னது…

சொல்லப்படும் விஷயங்கள் ஏணோ தாணோ என்று இல்லாமலும், பதிவுக்கு வரும் பின்னூட்டங்களும்,(பின்னுட்டமா? அல்லது விவாதமா? என்பது வேறு விஷயம்) பதிவுலகத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச்செல்லும் மிகச்சிறந்த முயற்சி. ஜமாலன் ஜமாயுங்கள்.

ஜமாலன் சொன்னது…

அய்யனார் said...

//#1 டார்ச்சருக்கான விளக்கம் எனக்கு போதலிங்க ஜமாலன்..:)

மார்க்சியம் மட்டும்தான் தனிமனித சிந்தனையிலிருந்து தோன்றியது மத்ததுக்கு பின்புலம் இருக்கு ன்னு (அதாவது பழமையை அடியொற்றி வந்தது)நீங்க சொல்வது எனக்கு புதுசா இருக்கு..புதிதாய் ஒன்று முளைப்பதற்கான விதைகள் ஏற்கனவே தூவப்பட்டிருக்கலாம் அப்படிங்கிறதுதான் என்னோட நிலைப்பாடு..//

எனது முந்தைய பின்னோட்டத்திலிருந்து...

//மார்க்சியம் மட்டுமே பண்டைய மரபான பார்வைகள் இன்றி உருவான ஒரு சமூக விஞ்ஞானம். அதனால்தான் அதில் ஐரோப்பிய மையவாதம் இருப்பதாக விமர்சிக்கின்றனர். டார்வினின் பரிணாமம், பிராய்டின் உளப்புகுப்பாய்வு, நியூட்டன்-ஐன்ஸ்டின் நவீன இயற்பியல் போன்று. //

தவறான புரிதல் ஏற்படாமல் இருக்க..
மார்க்சியம் ஒரு Paradigm Sift. மற்ற விஞ்ஞான கருதுகோள்கள் போல். மற்றவை அப்படி அல்ல. மார்கசிய எல்லை என்பது சமூக மாற்றம் என்கிற எல்லைதான். "இதுநாள்வரை தத்துவங்கள் உலகை விளக்கின.. பிரச்சனை அதை எப்படி மாற்றுவது என்பதுதான்." இது மார்க்ஸின் புகழ்பெற்ற வாசங்களில் ஒன்று. பின்-அமைப்பியல், பின்நவீனத்துவம், பின்காலணீயம் ஆகியவற்றின் அடிப்படைகளையும் முறைகளையும் கொண்டு மார்க்சீயம் முன்வைக்குகும் சமூக மாற்றத்தை எப்படி கொண்டுவருவது என்பதான சிந்தனைதான். முரண்பாடுகள் இருக்கலாம். விளக்கம் இதுதான் தவறான புரிதலுக்கு போகாமல் இருக்கவே.

//ஒருவேளை பழமையை அடியொற்றாம மனிதர்களை முன்வைத்து சித்தாந்தங்களை புரிஞ்சிக்க நீங்க விரும்பறீங்களோ?.. அப்படி இருந்தா அதுக்கு ஏன் மார்க்சிய எல்லைகளை புகுத்தனும்?.//

இல்லை. எனது பின்னொட்டம் இத்தகைய தவறான புரிதலை உருவாக்கிவிடக்கூடாது என்பதற்குதான் மேலே ஒரு விளக்கம் தந்துள்ளேன். மார்க்சீயம்தான் முதலில் அமைப்புரீதியான (நிறுவனம் கட்சி அல்ல)சிந்தனையை முன்வைத்தது. மார்க்சீயர்கள் எந்த சிந்தனையையும் தனிமனித சிந்தனையாக பார்க்கமாட்டார்கள். வாழ்நிலைதான் சிந்தனைகளை தீர்மானிக்கிறது என்பதுவே மார்கசீயத்தின் அடிப்படை. இந்த அடிப்படைகள் மேற்கண்ட அனைத்த சிந்தனைகளுக்குள்ளும் ஒரு முன்நிபந்தனையாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். மேற்கண்ட சிந்தனையாளர்களில் சிலர் மார்கசியத்தை எதிர்ப்பது அதில் மொத்தத்துவச் சிந்தனை இருப்பதாகக் கூறித்தான். அடிப்படை மார்கசியத்தை அவர்கள் எதிர்ப்பதாக எனக்குத் தெரியவில்லை.எனது வாசிப்பும் அந்த அளவிற்கு விசாலமானது இல்லை.

//அர்ப்பணிப்பு எனக்கு பிடித்த மாதிரி இருந்ததால நோ டார்ச்சர் ..//

காத்திருப்புக்கு நன்றி.

ஜமாலன் சொன்னது…

Tharuthalai said...

வாங்க.. நன்றி

//நீங்கள் கொடுத்திருக்கும் குறிப்புகள் ஒவ்வொன்றைப் பற்றியும் இன்னும் விரிவாக எழுத வேண்டும் (நீங்கள்தான்).//

நான் மட்டுமல்ல.. நாமெல்லாம் எழுத முயல்வோம்..

//மேலும் வெறும் கருத்துகள் மட்டுமின்றி அதை அன்றாட பிரச்சனைகளுடன் தொடர்பு படுத்திச் சொன்னால் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும் (எனக்கு).//

சரியாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். முயற்சி செய்வோம். பிரச்சனைகளுடன் ஒட்டி இக்கறிப்பகள விரிவுபடுத்த.

ஜமாலன் சொன்னது…

தாமோதர் சந்துரு said...

//பதிவுலகத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச்செல்லும் மிகச்சிறந்த முயற்சி.//

கருத்துக்கு நன்றி..

பெயரில்லா சொன்னது…

பைத்தியக்கரன்

உங்களைப் போன்ற நண்பர்களின் பகிர்வுகள் சுதந்திரமாய் செயல்பட உத்வேகமளிக்கிறது.அன்பிற்கு நன்றிகள்..

ஜமாலன்

மார்க்சிய சிந்தனைகள் பற்றிய விரிவான வாசிப்பிற்கு உங்களின் பதில்கள் தூண்டுகோலாயிருந்தது..நன்றி

பெயரில்லா சொன்னது…

பைத்தியக்கரன்

உங்களைப் போன்ற நண்பர்களின் பகிர்வுகள் சுதந்திரமாய் செயல்பட உத்வேகமளிக்கிறது.அன்பிற்கு நன்றிகள்..

ஜமாலன்

மார்க்சிய சிந்தனைகள் பற்றிய விரிவான வாசிப்பிற்கு உங்களின் பதில்கள் தூண்டுகோலாயிருந்தது..நன்றி

ஜமாலன் சொன்னது…

அய்யனார் said...

//பைத்தியக்கரன்

உங்களைப் போன்ற நண்பர்களின் பகிர்வுகள் சுதந்திரமாய் செயல்பட உத்வேகமளிக்கிறது.அன்பிற்கு நன்றிகள்..

ஜமாலன்

மார்க்சிய சிந்தனைகள் பற்றிய விரிவான வாசிப்பிற்கு உங்களின் பதில்கள் தூண்டுகோலாயிருந்தது..நன்றி //

சுதந்திரமான சிந்தனை சுதந்திரமான எழுத்து இவைகளுக்கு 100 சதவீதம் எங்கள் ஆதரவு உண்டு. நீங்கள் உங்கள் எழுத்துக்களின் மூலம் சிறக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். போதம் சிதைந்த மையமற்ற எழுத்தியக்கம் சட்டென்று யாருக்கும் கூடாது. அது உங்களால் முடியும். கலக்குங்கள்... உங்கள் புதிய படைப்புகளுக்காக காத்திருக்கிறோம்.

அன்புடன்-
ஜமாலன்

மாயன் சொன்னது…

நேர்மையா ஒண்ணு சொல்லவா?... நீங்க பேசறது எதுவும் புரியலை.. என்னை ரிலேட் பண்ணிக்க முடியலை.. அதுக்காக விட்டுட்டு போக மனம் இல்லை...

உங்களை அடிப்படைகளை விளக்க சொன்னால் அது அநியாயம்...(என் போன்றவர்களுக்கு அது தான் ஆசை அது பேராசையாக இருந்தாலும் கூட)

(அடிப்படைகள் என்று நான் குறிப்பிடுவது... பொதுவுடமை, மார்க்சியம் இவை மற்றும் இவை சார்ந்த சித்தாந்தங்கள், தத்துவ அடிப்படைகள், மொழியியல் அடிப்படைகள், மொழி சார்ந்த, நீங்கள் கூறும் உடல் அரசியல் சார்ந்த விடயங்களின் அடிப்படைகள்)...

ஒரு நாள் என்னாலும் இவை குறித்த ஆழமான கருத்துச் செறிவு மிக்க விவாதங்களை நிகழ்த்த முடியும் என்று எனக்கு நானே சமாதான படுத்திக் கொண்டு....

ஜமாலன் சார் மனசு கேட்க மாட்டேங்குது... மார்க்சியத்தை மட்டுமாவது அடைப்படையிலிருந்து விளக்குங்களேன்...

ஜமாலன் சொன்னது…

மாயன் நன்றி...

மனம் இருந்தால் மார்க்கமுண்டு. உங்களால் முடியும். உங்கள் விவாதங்களில் அது வெளிப்பட்டது.

மார்க்சிய அறிமுகம் சில பதிவுகளில் உள்ளது. சில அடிப்படைநூல்கள் உள்ளனன. புதுபதிப்பாகவும் வந்துள்ளது.
1.ஜார்ஜ் புலிடசர் - மார்கசிய மெய்ஞானம்
2. ஜார்ஜ் தாம்சனின் 3 புத்தகங்கள் =
மனித சமூகசாரம், முதலாளித்தவமும் அதன் பிறகும், மாக்சு முதல் மாசேதுங்வரை. இம்மூன்று புத்தங்களும் மார்க்சின் 3 முக்கிய கோட்பாடுகளான இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மற்றும் அரசியல் பொருளாதாரவாதம்.
3. மார்க்ஸ் பிறந்தார் - சோவியத் நூல் தமிழில் உள்ளது. மார்கசின் ஆளமை வளர்ச்சிபற்றி கூறும் நூல்.

இவைகளை வாசிக்கத்துவங்கினால்.. இவை உங்களை மற்ற நூல்கள நோக்கி நகர்த்திவிடும்.

வாய்ப்பிருந்தால் ஒரு அறிமுகப்பதிவு போட முயல்கிறேன்.. அதைவிட தாங்களே படிப்பதே சிறந்தது.

RATHNESH சொன்னது…

1. //'தமிழ் மண்ணுக்கே இயல்பாய் அமைந்துள்ள குணங்களில் ஒன்று அநீதியைக் கண்டு வெகுண்டெழுவது.//

மானம் ரோஷம் என்கிற விஷயத்திற்காகவே அடிபட்டு மாண்ட இனம் ஒன்று இருக்குமென்றால் அது தமிழினம் தான் என்று மு.வ. அவர்கள் கூட ஒரு நூலில் சொல்லி இருப்பார். இது சங்க இலக்கியப்புறப்பாடல்களில் நிறையவே தென்படும் விஷயம். துரோகத்தால் எவரும் மரித்ததாக இல்லை; (வெட்டி) ரோஷத்தால் தான் அழிந்திருக்கிறாகள்.


//இத்தகைய போலிப்பெருமித வாக்கியங்களை தவிர்ப்பதும், அதை உணர்வுபூர்வமாக உணர்வதிலிருந்துமே சாத்தியம்//

இவை தான் நம் தலைவர்கள் என்கிற பலூன்களுக்கு உருவம் தந்திருக்கும் உள்காற்று. அதை வெளியேற்ற நினைக்கிறீர்களே!

தங்கள் எண்ணம் சரியே. மானம் அது இது என்று வசனம் பேசிய வைகோ பேச்சினை நம்பி தீக்குளித்த தொண்டர்களின் கல்லறை ஈரம் காயும் முன் அண்ணன் தம்பி உறவு கொண்டாடச் சென்ற அயோக்கியத்தனத்தை அடிமட்ட தொண்டர்கள் உணர்ந்தால் தான் அவர்களுக்கு நல்லது.

2.//எனக்கு தெரிந்து வைணவம், சூஃபியிஸம், சித்தர்கள், தாந்ரீகம், பௌத்தம் போன்றவை காதலைப் பேசிய மதங்கள். ஆத்மாவால் ஒடுக்கப்பட்ட உடலைப் புணிதப் படுத்த காதலை முன்வைத்தவை//

சித்தர்கள்? காதல்? உடலைப் புனிதப் படுத்தியவை? முரணாகத் தோன்றுகிறது சார். விவாதம் ஆரம்பியுங்கள், தனிப்பதிவாக.

3. பின்நவீனத்துவம் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ளும் உத்தேசமும் இப்போது இல்லை.//"ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அதற்கான வர்க்கத்தின் முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறது"// என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய பொதுமைக் கருத்து.

4. வரலாறு பற்றிய தங்கள் பார்வை சரியே. அது மக்களுடையதான கோணத்தில் மறுபார்வைக்கு உள்ளாக வேண்டும். அதிலும், தலித்துகள் பெண்கள் மீதான அடக்கு முறை பற்றி எழுதுகையில் உணர்ச்சி வசப்பட்டால் அது அரசபுகழ்ச்சி போலவே போலியானதாக ஆகி விடும் அபாயமும் மறுப்பதற்கில்லை.

5,6. இங்கே சொல்லப்பட்ட கருத்தை விட்டு சொன்னவனைத் தாக்குவதும் தாங்குவதுமே எளிது என்று உணரப்பட்டதால் தவளைக் கூச்சல்களுக்குக் குறைவு கிடையாது. புரிதலில் ஏற்படும் முனகல்கள் அந்தக் கூச்சலில் வெளிக் கேட்பதில்லை. எனவே புரிய வைக முயல்பவருக்குப் பொறுப்பும் பொறுமையும் அதிஅகமாகத் தேவைப்படும் விஷயங்கள் ஆகி விட்டன.

//பண்ணாட்டு முதலாளியமாக வளர்ந்துள்ள ஏகாதிபத்தியம் ஏற்படுத்தியிருக்கும் அரைக்காலணீய பண்பாட்டுச் சூழலில் நாம் பழையவகையில், இன்றைய பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாது. அதனால்தான் பாலியல் சொல்லாடல்கள், தேசிய இனப்பிரச்சனைகள், பெண்ணியம், பாலினமாக்கல் பற்றியெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிய நோக்கிலிருந்து பேச வேண்டியுள்ளது// என்பன போன்ற வாக்கியங்கள் என் போன்ற ஆரம்ப வாசகனுக்குள் ஏற்படுத்தும் அடிப்படைக் கேள்வி, "மார்க்ஸ், பாலினம் பெண்ணியம் பற்றி எல்லாம் பேசி இருக்கிறாரா?" என்பது தான். விளக்க வேண்டிய பொறுப்பை யார் ஏற்பார்கள்?

7,8. இது குறித்து காஞ்சனை கதையின் பின்னூட்டத்தில் எழுதி இருக்கிறேன். கூடுதலாக ஒன்று சொல்ல நினைக்கிறேன். ஆசிரியன் பெயர் தெரிந்த மாத்திரத்தில் ஓரளவுக்கு அவனைக் குறித்த பிம்பபத்தினுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கொண்டோ அல்லது அவனை கற்பனையாக எதிரே உட்கார வைத்துக் கொண்டோ படிப்பது தவிர்க்க இயலாதது என்று தோன்றுகிறது. ஆசிரியர் பெயர் மறைத்து நான் ஒரு சிறுகதை தருகிறேன். அதனை இதே மாதிரி பிரித்து ஆய்வு செய்து விளக்குவீர்களா?

9. சர்வ சாதாரணமாக ஒருவரை வகைப்படுத்தி நாம் உபயோகிக்கும் வார்த்தைகளின் பின்னணியில் இப்படி ஒரு விஷயம் நம்மையும் அறியாமல் நம்முள் ஊற வைக்கப்பட்டிருக்கிறது என்பது ஆச்சர்யத்தையும் லேசான அதிர்வையும் உண்டாக்குகிறது. புதிய செய்தி. ஆழ்ந்து யோசிக்க வெண்டிய ஒன்று.

10. பாலியல் குறித்த தங்களின் //இந்த கலாச்சார ஏகாதிபத்தியத்தை கண்டடைந்து உடைத்துப் போடுவது அவசியம்// இந்தப்பார்வை பற்றிய பிரக்ஞை இப்போது வளர்ந்திருப்பதாகவே எண்ணுகிறேன். சரியான வழிகாட்டுதல்களே காலத்தின் கட்டாயம்.

11. //மக்கள்தொகை பெருக்கம் பற்றிய சொல்லாடல்கள் மக்களை ஒரு உழைப்புச்சக்தியாக கருதாதின் விளைவே. மக்களின் வாழ்வாதரங்களை நோக்கியதான தொழில்நுட்பங்களை வளர்க்காமல் நுகர்வு அடிப்படையிலான தொழில்களை வளர்த்து, அதற்கான நுகர்வுப் பண்பாட்டை கட்டமைத்துள்ளனர்// இது ஒரு மாறுபட்ட கோணம். விவாதிக்க வேண்டியது. உழைப்பை, சக்தியாகவே பார்த்தாலும், தேவைக்கு அதிக சக்தியும் வீண்தானே என்றொரு கோணம் இருக்கிறதல்லவா? வாகனங்களின் எண்ணிக்கையை வளர்ச்சி என்று கருதும் போது எண்ணெயின் உற்பத்தி குறைவது உலகத்தை மிரட்டுகிறது அல்லவா? அதிகம் பேசப்பட வேண்டிய பொருள்.

12. //மனிதநேயம் என்பது ஏழை எளிய மக்களுக்காக வருந்தி உதவி செய்வதோ அல்லது பிச்சைக்காரர்களுக்கு காசுபோடுவதோ, குளிருக்கு போர்வை தருவதோ அல்ல என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்//

உண்மை. அப்படியானால் எது என்பதையும் விளக்க வேண்டுமே.

13. நமக்கு மகிழ்ச்சி எது என்பதைப் புறவிஷயங்கள் தான் தீர்மானிக்கும் அளவுக்கு உள்பார்வை அர்றவர்களாக இருக்கிறோம் என்பது மறுக்க இயலாத உண்மை. ஊருடன் ஒத்து வாழ் என்பதற்காக மட்டுமே பண்டிகை கொண்டாடும் அளவுக்குத் தெளிவு இருந்தால் தினந்தோறும் இல்லாவிட்டாலும் அடிக்கடியாவது தீபாவளி கொண்டாடும் மனநிலை நமக்கு வளர்ந்திருக்கும். காலண்டர் பார்த்துத் தானே நம் சந்தோஷத்தைத் தீர்மானிக்கும் அளவுக்கு மெக்கானிக்கலாக ஆகிவிட்டோம். எனவே //நமது மகிழ்விற்கான வேதியில் எப்படி அதிகார வினைகளால் இயக்கப்படுகிறது// இதுவும் உணர வேண்டிய விஷயமே.

14. புலம் பெயர்தலோ புதிய இடம் காண்பதோ தெளிந்த சிந்தனையில் உலகளாவிய பார்வையை மட்டுமே ஏற்படுத்த வேண்டும். சிந்திப்பதில் வெள்ளையனாகவும் நடைமுறையில் கறுப்பனாகவும் ஒருவன் இருந்தால் அவனுடைய சிந்தனை போலி. இனம் கண்டு ஒதுக்கப்பட்டு விடுவான்.

ஜமாலன் சார், தங்களுக்கு ஒரு வேண்டுகோள்:

பல தீவிர சிந்தனைகளின் தொகுப்பாக இருக்கிறீர்கள். உங்கள் தளம் எது என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். இவற்றைப் புரிந்து கொண்டுள்ள (அல்லது புரிந்தது போல் பாசாங்கு செய்கின்ற) சிலருடன் மட்டும் பகிர்ந்து கொள்வதா அடுத்த நிலையில் இருப்பவர்களின் சிந்தனையைத் தூண்டி அவர்களில் ஆர்வம் உல்ள சிலரையும் உங்கள் தளத்துக்கு எடுத்துச் செல்வதா என்று முடிவு செய்து கொல்ளுங்கள். முதலாவது எளிது. அடுத்ததற்குப் பொறுமையும் பொறுப்பும் அவசியம். மழலைகளுக்கு PLAY SCHOOL நடத்துவது போல். பிள்ளைகள் ஒழுங்காக வர மாட்டார்கள்; அடம் பிடிப்பார்கள். பொறுமை காட்டி அவர்களுக்குப் படிப்பதன் முக்கியத்துவம் சொல்லித் தந்து படிக்கத் தயார் செய்யும் பணி.

உங்கள் தீர்மானத்தின் அடிப்படையில் எளிதாக ஆரம்பியுங்கள். இலக்கியங்களில் இருக்கும் ஆன்மீக விஷயங்களை ராகவன், கேஆர்எஸ், குமரன் போன்றோர் எழுதுகின்ற விதமாக மார்க்ஸியம், உடலியல், பின்நவீனத்துவம் போன்ற விஷயங்களின் பைபிளாக உங்கள் தளம் விளங்கட்டும்.

இந்தப் பதிவில் உள்ள விஷயங்களே ஒவ்வொன்றாக இன்னும் விரிவாக எழுதி மீள்பதிவு செய்யப்பட விஷயம் நிறைய இருக்கிறது என்பது என் கருத்து.

நன்றியுடனும், வாழ்த்துக்களுடனும்,

RATHNESH

ஜமாலன் சொன்னது…

நண்பர் ரத்ணேஷ்..

உங்களது நீண்ட பின்னோட்டம் ஆறுதலாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. உங்களது ஸின்ஸியாரிட்டிக்குப் பாராட்டுக்கள். பலர் எழுதுவதாக கூறிவிட்டு பின் பல பிரச்சனைகளால் எழுதாமல் விட்டுவிடுவார்கள். உங்களின் இப்பண்ப கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

உங்களது நீண்ட பின்னோட்டம் தரும் பல எச்சரிக்கைள் பயனுள்ள ஆலோசனைகளாக இருந்தன. நிச்சயம் பின்பற்றப்பட வேண்டிய பலவற்றை சுடடிக்காட்டியுள்ளீர்கள். அதற்கு நன்றி. பதிவுலகில் கிடைத்த உங்கள் நட்பு அபூர்வமானது. மனதிற்கு இதமானது. உங்கள் ஆளுமையும்கூட வித்தியாசமானது.. அடிப்படை ஜனநாயகத்தன்மைக் கொண்டது.

//இந்தப் பதிவில் உள்ள விஷயங்களே ஒவ்வொன்றாக இன்னும் விரிவாக எழுதி மீள்பதிவு செய்யப்பட விஷயம் நிறைய இருக்கிறது என்பது என் கருத்து. //

நிச்சயமாக தாங்கள் கூறியது போல ஒவ்வொன்றிற்கும் விரிவாக தனிப்பதிவாகவோ அல்லது உங்களது பின்னோட்ட விவதாமாகவோ எனக்கு தெரிந்ததை சொல்ல முயல்கிறேன்.

ஓவ்வொரு நாளும் ஒரு பதிலாக தொடர்ச்சியாக இதனை விவாதிக்கலாம். அவை எல்லாம் குறிப்புகள்தான். அவற்றில் ஏற்கவும் நிராகரிக்கவுமான சில பிரச்சனைகள் உள்ளன. அவற்றை விரிவான விவதாமாக எடுத்துச் செலல்வோம். தாங்கள் கூறியபடி.. கூடுதல் பொறுப்புணர்வுடன் இதனை அனுக வேண்டும். சிலரின் புரிதலுக்காக எழுதப்பட்டவையாக இல்லாமல் தெளிவுடனும் அதிக பொறுப்புபுடனும் புரிதலுடனும் எழுதப்பட வேண்டும் என்பதை உணர்கிறேன். தொடர்வோம்..

பதிவை பயனுள்ள முறையில் பயன்படுத்தும் ஒரு சிலரில் நீங்கள் ஒருவர் என்ற முறையில் உங்கள் மீதான மதிப்பை இவை இன்னும் கூட்டுகிறது.

ஒரு குறிப்பு: இதனை ஒரு சிறுபத்திரிக்கையில் மறுவெளியீடு செய்ய அனுமதி கேட்டுள்ளார்கள். இது பொறுப்பின் சுமையை கூடுதலாக்கும் ஒன்று.

நன்றியுடனும், வாழ்த்துக்களுடனும்,

என்றும் அன்புடன்
ஜமாலன்.

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.