1
நாடுகள் அற்றுப்போன
அடர்ந்த காட்டினூடே
எனது பயணம்.
பேச்சுத் துணைக்கு -
இலையுதிர்த்து
மரம் பிணைவுறும் சத்தம்
பாடசாலைகால -
தங்கையைப்போல
பார்த்துப் பழக
எப்பொழுதெனும்
தரையில் வரைபடும்
சூரிய ரேகைகளின்
மரக்கிளை ஓவியங்கள்.
இறக்கைகளை சிலுப்பிய
குருவிக் கூட்டமும் -
உறுமித் திரியும் மிருகக் கூட்டமும்
காட்டை எப்பொழுதும்
காடாகவே காப்பாற்றி வந்தன.
இருட்டை ஒரு பொருட்டாக
மதியாது
விழிகள் பழகின
வெளிச்சத்தில் கூச.
பாட்டி சொன்ன
பழங்கதைகள் நினைவாட -
மரத்தை அணைத்தப்படி
தூங்கிப் போயிருக்கிறேன்
உரிந்தும், உரியாமலும்
ஒட்டிக் கொண்டிருக்கும்
ஒரு மரப்பட்டையைப்போல
2
காடுகளில் வாழ்வது ஒன்றும்
அத்துனைக் கடினமில்லை
நாகரீகமா? அது எதற்கு?
உடைத்தப்போடு அந்த சாக்கடையில்.
பசி எடுத்தால் இலைகளைத் தின்னலாம்
பாடத் தோணினால் பறவையாய் அலையலாம்.
மரங்களுடன் நடனப்பயிற்சி.
மிருகங்கள் கற்றுத்தரும்
கவின்மிகு சண்டைகள் -
காயம் பட்டால்
இருக்கவே இருக்கிறது
காட்டுப்பச்சிலைகள்
காடுகளில் வாழ்வது ஒன்றும்
அத்துனைக் கடினமில்லை
சோற்றுக்காய் அண்ணாந்து பார்க்க வேண்டாம்.
குண்டுகளால் துளைத்துவிட்டு -
செஞ்சிலவைச் சங்கங்களை அனுப்ப
ஆட்கள் இல்லை அங்கு.
கத்தியால் குத்திவிட்டு
காயத்துக்கு மருந்து அனுப்ப
ஆட்கள் இல்லை அங்கு.
மனித ரத்தம் புசிக்கும்
மகான்களோ,
தீர்க்கதரிசிகளோ இல்லை.
கண்ணீர்திரை விரித்த
முகாம்களில் அடைபட வேண்டியதில்லை.
சகோதரிகளின் குறிகளைக் கிழிக்கும்
துப்பாக்கிகள் இல்லை.
உயிருடன் வாழ
யாசிக்க வேண்டியதி்ல்லை.
முக்கியமாய் -
காட்டு மிருகங்களால்
அகதியாக்கப்படப் போவதி்ல்லை.
பின் என்ன?
காடுகளில் வாழ்வது ஒன்றும்
அத்துனைக் கடினமில்லை.
-ஜமாலன் (1996)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஜமாலன். Blogger இயக்குவது.
16 comments:
கான்கிரீட் காடுகளில் கருணையையும், மனித நேயத்தையும் வேகமான கணங்களில் கரைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு(நமக்கு) இவை காதில் விழப்போவதில்லை...
நல்ல கவிதை.. நன்று
வேதனை புரிகிறது.
இயற்கையை நேசிப்பவர்களுக்கு
வேண்டுமானால், காடுகள் உற்சாகமான இடங்களாகத் தோன்றலாம்.
ஆனால், மனிதர்களை நேசிப்பவர்களுக்கு?..
நன்றி மாயன்.
வாங்க ஜீவி
காடு என்பது உற்சாகமான இடமல்ல..
கவிதை -1 ல் காடு ஒரு குறியீடு. நாடோடித்தன்மையைக் குறிப்பது.
கவிதை-2-ல் காடு என்பது காடுதான்.
மனிதர்கள் மிருகங்களைவிடவும் கேவலமான நிலையில் இனம் நாடு என மக்களை அகதிகளாக்குவதுதான் பிரச்சனை. எந்த மிருகமாவது தனது சக மிருகத்தை காட்டைவிட்டு வெளியேற்றி அகதி ஆக்கியிருக்கிறதா?
நன்றி வாசிப்பிற்கு..
//காடு என்பது காடுதான்.
மனிதர்கள் மிருகங்களைவிடவும் கேவலமான நிலையில் இனம் நாடு என மக்களை அகதிகளாக்குவதுதான் பிரச்சனை. எந்த மிருகமாவது தனது சக மிருகத்தை காட்டைவிட்டு வெளியேற்றி அகதி ஆக்கியிருக்கிறதா?//
அதனால் தான் வேதனை புரிகிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.
அடுத்தது, நமது பொதுவான காடுகளில் வாழமுடியாத இயலாமையைச் சொன்ன புரிதல்.
எனக்குப் பிடித்திருக்கின்றன இக்கவிதைகள் ஜமாலன். "காடுகள்" இதுவரை சலிப்பைத் தந்ததில்லை திரும்பத் திரும்ப போகும்போதும். நானும் "காடுகளை" ஒரு குறியீடாகவே பாவிக்கிறேன்:)) நீங்கள் கவிதைகளும் எழுதுவீர்கள் என இவ்விடுகை மூலம் தெரிந்துகொண்டேன்.
உங்களின் பின்னவீனத்துவ இடுகைகளை வாசிக்கவேண்டும் எனச் சேர்த்துவைத்திருக்கிறேன்.
ஜாலிஜம்பரின் பதிவிலேயே நீங்களும் வவ்வாலும் பின்னவீனத்துவம் குறித்து உரையாடிக்கொண்டிருந்ததைப் பாதிவரை படித்திருந்தேன். நல்ல உரையாடல் அது.
செறிவான விடயங்களும், நிதானமும், அக்கறையும் கொண்ட உங்களின் அணுகுமுறைக்கு நன்றி.
தோழர் ஜீவிக்கு,
//அதனால் தான் வேதனை புரிகிறது என்று குறிப்பிட்டிருந்தேன்.
அடுத்தது, நமது பொதுவான காடுகளில் வாழமுடியாத இயலாமையைச் சொன்ன புரிதல்.//
உங்கள் புரிதலுக்கு நன்றி.
செல்வநாயகிக்கு..
//எனக்குப் பிடித்திருக்கின்றன இக்கவிதைகள் ஜமாலன். "காடுகள்" இதுவரை சலிப்பைத் தந்ததில்லை திரும்பத் திரும்ப போகும்போதும். நானும் "காடுகளை" ஒரு குறியீடாகவே பாவிக்கிறேன்:)) நீங்கள் கவிதைகளும் எழுதுவீர்கள் என இவ்விடுகை மூலம் தெரிந்துகொண்டேன்//
பின்னோட்டத்திற்கு நன்றி.
நான இலக்கிய வாழ்வை கவிஞனாகத்தான துவங்கினேன். இவை எல்லாம் முன்பு எழுதியவை...
//
மனித ரத்தம் புசிக்கும்
மகான்களோ,
தீர்க்கதரிசிகளோ இல்லை.
//
மனித இரத்தம் புசித்த தீர்க்கதரிசி யாரும் எங்கேனும் இருந்துள்ளனரா ?
அனானிக்கு...
என்னடா காணுமே? என்று நினைதத்தேன். வந்திட்டீங்களா? உலகில் மதங்களால் இறந்தவர்கள் எண்ணிக்கைதான் அதிகம். அதற்கு மதங்களை உருவாக்கிய தீர்க்கதரிசிகளும் ஒரு பொறுப்பு. தீர்க்தரிசனமற்ற அவர்களது நிலைபாடுகள் இன்றவரை எண்ணற்ற கொலைகளை செய்துவருவதே வரலாறு.
சரி,
நாளை உங்களைப் பெரியார் கொள்கையாளர் என்ற காரணத்திற்காக கொல்ல வருபவர்களை நீங்கள் முடித்துவிட்டீர்கள் என வைப்போம். பெரியார் அவர்களையும் இரத்தம் குடித்தவராக்கி விடுவீரா ?
//நாளை உங்களைப் பெரியார் கொள்கையாளர் என்ற காரணத்திற்காக கொல்ல வருபவர்களை நீங்கள் முடித்துவிட்டீர்கள் என வைப்போம். பெரியார் அவர்களையும் இரத்தம் குடித்தவராக்கி விடுவீரா ?//
1. நீங்கள் முடித்தவிட்டீர்கள் என்பதன் அர்த்தம் என்ன? புரியவில்லை.
2. கொலையைத்தூண்டும் எல்லாக் கொள்கைகளும் தவறானவைதான்.
3. பெரியாரின் கொள்கை கொலையைத்தூண்டும் ஒன்றல்ல. குறிப்பாக பெரியார் பற்றாளர்கள் யாரையும் கொள்கைக்காக கொன்றதில்லை.
4. கவிதை ஏற்கனவே இருந்தவர்களைப்பற்றியதல்ல.. அப்படிப்பட்டவர்கள் யாரும் இல்லை என்பதைத்தான் சொல்கிறது.
5. மதங்களின் பிறமத வெறுப்ப என்பதன் தர்க்கம் என்ன? என்பதே பிரச்சனை.
கொலையைத் தூண்டுவதப் பற்றி நானும் பேசவில்லை. பெரியாரியமும் சொல்வதாக நானும் கூறவில்லை. நானும் அவர் மீது மதிப்பு வைத்திருப்பவன் தான்.
கொலைவெறியால் தூண்டப்பட்டவர்கள் பற்றியே பேசினேன். அந்த கொலை வெறி பிடித்தவனின் செயலிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்பவன் பற்றி பேசினேன். அவன் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக நிகழ்ந்த கொலைவெறியாளனின் மரணம் கொலையாகாது நண்பரே.
கொலையுண்டு போவதுதான் சிறந்தது எனக் கூறுகிறீரா ?
நான் கொலையுண்டு போக விருப்பப் படாமல் கொலையாளியைக் கொன்றால், நான் பின்பற்றும் தீர்க்க தரிசி இரத்தம் புசித்தவராகி விடுவாரா ? என்னைக் கொள்ள வருபவனைக் குள்ளுவதற்காக நான் எடுக்கும் முயற்சி தவறா ?
இத்தகைய கொலையை கொலைஎன்று கூறுவதா ? புத்தரின் 'கொல்லாமை'க்கூட என்னை கொலை செய்ய வருபவனை நோக்கி விடுக்கப்பட்டது தான் நண்பரே. கொலையுற போகும் என்னை நோக்கியல்ல.
நீங்கள் தீர்க்கதரிசிகளின் வரலாறுகளிலும் அவர்கள் செய்த கொலைகளும் இத்தகையவைகள் தான் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா ? 'மூலதனம்' போன்ற பெரிய புத்தகங்களைப் படித்திருக்கும் நீங்கள் சுமார் 100 முதல் 200 பக்கங்களைக் கொண்ட ஒரு தீர்க்கதரிசியின் (முகம்மதுவின்) வரலாற்றையும் படித்திருபீர்கள் என நம்புகிறேன். முதலில் இவர்கள் கொலையுறாமல் இருக்க ஓடினார்கள். ஆனால் ஓட ஓட விரட்டப் பட்டார்கள். வேறு நாடுகளுக்குக் கூட சென்று வாழ முயற்சித்தார்கள். இறுதியில் தான் அங்கும் படையெடுத்துத் தன்னை கொல்ல வருபவனை கொன்றார்கள்.
அவரது (முகம்மதுவின்) நண்பர்களின் ஆட்சியும் அவ்வாறாகத் தான் இருந்தது. பாரசீகம் இவர்களால் படையெடுக்கப் பட்டு வெல்லப் பட்டதா ? இல்லை. பைஸான்டியம் ? எகிப்து ? இதுவும் இல்லை. மக்களால் தெர்ந்தெடுக்கப் பட்ட இஸ்லாமிய ஆட்சி எதுவும் தானாக மதத்தின் காரணத்திற்காக்ப் படையெடுத்ததில்லை. வரலாற்றினைப் புரட்டிப் பார்க்க.
நன்றி.
நீண்ட பின்னொட்டம் இட்ட அணாணிக்க நன்றி.
நான் யூகித்தவற்றைத்தான் பேசியுள்ளீர்கள். கொலையின் அரசியல் குறித்த விவாதமாக இதனை வளர்த்த வேண்டாம்.
எதிர்வன்முறை குறித்து நான் பேசவில்லை. பொதுவாக மதங்களின் தர்க்கம் பிறமதத்தினரை ஒரு மனிதனாக பார்ப்பது இல்லை என்பதுதான்.
//நீங்கள் சுமார் 100 முதல் 200 பக்கங்களைக் கொண்ட ஒரு தீர்க்கதரிசியின் (முகம்மதுவின்) வரலாற்றையும் படித்திருபீர்கள் என நம்புகிறேன்.//
நண்பரே... நான் 'ரஹீஹ்' என்கிற அங்கீகரிக்கப்பட்ட முகமது நபின் வாழ்க்கை வரலாறு துவங்கி இஸ்லாம் குறித்து குரான், ஹதீஸ் என சமீப காலங்களில்தான் படிக்கத் துவங்கியுள்ளேன்.
எனது பார்வை பொதுவாக மதங்கள் தனக்குள் கொலைவெறிக்கான மூர்க்கத்தைக் கொண்டுள்ளன. இல்லாவிட்டால் ஏன் இத்தனை கொலைவெறி தாண்டவங்கள். எப்பொழுதோ கிடைக்கப்போகிற மறுமை வாழ்விற்கான இன்று அழிக்கப்படும் வாழ்வு எந்த வகையில் நியாயம். உங்களைத்தாக்க வந்தவனை நீங்கள் தாக்குவது என்பதைதான் உங்கள் எதிரியும் கூறுவான். யார் துவங்கினார்கள் என்பதல்ல பிரச்சனை, இவற்றை எப்படி நிறுத்துவது எங்கு நிறுத்துவது என்பதுதான்.
தீர்க்கதரிசி அவரைப்பின்பற்றுபவரின் தவறான பாதைக்கு பொறுப்பெடுக்க மாட்டார் என்கிறீர்கள். நான் கூறவருவது.. தீர்க்கதரிசனம் என்பதில் இந்த கொலைக்கான மனோபாவம் ஏன் உள்வாங்கப்படவில்லை. 'லக்கம் தீனக்கம் வலியதீன்' என்பது முழமையாக பின்பற்றப்படுகிறதா? எல்லோரையும் நேசி என்று சொல்வதால் நேசிப்பு நிகழ்ந்துவிடுவதில்லை. அது மனித மனத்தை மாற்ற வேண்டும்.
விவாதம் வேறுதளத்திற்கு செல்வதை தவிர்க்கும்பொருட்டு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தீர்கக்தரிசிகள் உருவாக்கிய மதங்களின் இன்றைய இரத்தப்பசிதான் இங்கு கவிதையில் சொல்லப்படும் விஷயம்.
மற்றபடி வன்முறை-எதிர்வன்முறை என்பதல்ல. அதேசமயம், இன்றைய இஸ்லாம் மத எல்லையைத்தாண்டி அரசியலாக ஆக்கப்பட்டிருக்கிறது அமேரிக்க மற்றும் மேற்கத்திய ஊடகங்களால். இந்த தற்காப்பு நிலையிலிருந்து நீங்கள் பேசுகிறீர்கள். அது வேறு தளத்திலான விவாதம்.
மீண்டும் ஒரு முறை படித்தேன். சில நேரம் ஆறுதல் நாடி எழுதுவது உண்டு அதே ஒன்றை உங்கள் கவிதையை படித்து பெற்றுக்கொண்டேன். நன்றிகள்
நன்றி நர்மதா.
கருத்துரையிடுக