காசில்லதாவனையும் ”கலைப்பிரியமுள்ள கனவானாக” ஆக்கும் கிரிக்கெட்


Image result for baloo cricketer1932-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டாகும். தலித்துகளின் அரசியல் தன்னுணர்வை உருவாக்கிய டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கர் கலந்தகொண்ட, 1931-ல் லண்டனில் நடந்த, இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் பிரித்தானிய காலனிய அரசுதீண்டத்தகாதவர்களாகஒதுக்கப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி தருவதற்கு ஒப்புக்கொண்டது.  1932-ல் புனாவின் எரவாடா சிறையில் இருந்த மகாத்மா காந்தி இத்தனித் தொகுதி முறையை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிக்கிறார். இறுதியில் காந்தியின் உயிரை காப்பாற்றியது அன்று ஏற்பட்ட புனா-ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மூவரின் கையொப்பமே. அந்த மூவரில் ஒருவர் அம்பேத்கர், மற்றொருவர் எம்.சி.ராஜா, மூன்றாமவர் பி. பாலு.   முதல் இருவரும் தலித் சமூக அரசியல் பணிகளில் நாடறிந்த தலைவர்கள். ஆனால், பல்வன்கர் பாலு எனப்படும் பி. பாலு எந்த சமூகப் பணிகளிலும், அரசியல் பணிகளிலும் அடையாளப்படுத்தப் படாதவர். வரலாற்றில் யார் என்று சொல்லப்படாமல் விடுபட்டவரான இவர் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். “தாழ்த்தப்பட்ட ஒருவர் கிரிக்கெட் பந்துவீச்சாளராக புகழ் அடைந்திருப்பதற்காக நான் பெருமை அடைகிறேன்என்று அம்பேத்கரால் புகழப்பட்டவர்


33 ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆட்டங்களில் 179 விக்கெட்களைப் பெற்று இந்திய மக்களிடம் கிரிக்கெட்டில் நாயக அந்தஸ்து பெற்ற இவர், சாமர் என்கிற சக்கிலிய இனத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்”இந்து கிரிக்கெட்”- அணியின் முதுகெலும்பாக இருந்து, பிரித்தானிய காலனிய அணியை தோற்கடித்தவர். இந்திய மக்களிடம் காலனிய எதிர்ப்பிற்கான மனோபலத்தை தந்தவர். வெள்ளையர்களை வீழ்த்த முடியும் என்று காட்டியவர். இவரது வெற்றியை அன்றைய பத்திரிக்கைகள் காந்தியின் சுயராஜ்யக் கொள்கையின் வெற்றியாக விவரித்தன. தாழ்த்தப்படவர்களை ஒன்றிணைக்காமல் இந்திய விடுதலை சாத்தியமில்லை என்பதற்கு ஒரு சான்றாக இந்த வெற்றி கொண்டாடப்பட்டதுஇவரால் வெற்றியடைந்த இந்து அணி எனப்படும் உயர்சாதி பார்ப்பனர்களைக் கொண்ட கிரிக்கெட் அணி. முதன்முறையாக இந்திய மண்ணில் பெற்ற வெற்றி இது. அந்த வெற்றிக்கு காரணமான பாலு இந்த இடத்தை அடைந்த கதைதான் இந்து உயர்சாதி தீண்டாமை வெறி உருவாக்கிய சோக வரலாறாகும்.
1875-ல் தார்வாட் என்ற ஊரில் பிறந்தார் பாலுஅவரது குடும்பம் புனாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு அவரது இளமை வாழ்க்கை புனாவில் தொடர்ந்தது. அவரது தந்தை காலனிய அரசின் இராணுவத்தில் துப்பாக்கிகளையும் அதன் காட்ரிட்ஜ்களையும் சுத்தம் செய்யும் பணியை செய்து வந்தார்உயர்சாதியினர் தீட்டாக கருதி செய்ய மறுத்ததால், தனது ஒதுக்கப்பட்ட சாதிய பின்புலத்தால் பாலுவின் தந்தை இப்பணியை செய்து வந்தார். வெள்ளைக்காரர்களால் விளையாடப்படும் கிரிக்கெட்டில் தோலால் செய்யப்பட்ட பந்தை எடுத்துப்போடும் அந்ததீட்டா“-ன பணியை பாலு செய்து வந்தபோதுதான் கிரிக்கெட் பந்துவீச்சில்அவர் சிறந்த பயிற்சியைப் பெற முடிந்தது. ட்ரோஸ் என்கிற ஆங்கில அதிகாரிதான் பாலுவிற்கு பந்தவீச்சைக் கற்றுக் கொடுத்தார். இவரது பந்துவீச்சில் பயிற்சி பெற்றவரே ஜே. கிரீக் என்கிற புகழ்பெற்ற ஆங்கில பேட்ஸ்மென். ஆங்கிலேய கிரிக்கெட் வீரர்கள் பாலுவிற்கு இந்த பயிற்சிகளை தந்தாலும் அவரை தங்களுடன் விளையாட அனுமதிக்கவில்லை, காரணம் காலனிய மேட்டிமைத்தனமே.
பிரித்தானிய கிரிக்கெட் வீரர்களின் பயிற்சிகளில் பந்து வீச்சாளராக இருந்ததால், பரவலாக எல்லா கிரிக்கெட் அணிகளிடமும் ரசிகர்களிடமும் புகழடைந்தார். அவரை தங்களது அணியில் சேர்த்துக் கொள்ள பார்ப்பன உயர்சாதி அணி தயாராக இல்லை என்றாலும் சில தெலுங்கு ஆட்டக்காரர்கள் தாங்கள் வெற்றிப்பெற அவர் அவசியம் என்றவகையில் பேசி அவரை சேர்த்துக் கொண்டனர்ஆனாலும், கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு சடங்கான தேநீர் இடைவேளையின் போது அவர் ஆட்ட மைதானத்திற்கு வெளியே போய்விடவேண்டும். உயர்சாதி கிரிக்கெட் வீரர்களுடன் அவர் சேர்ந்து நிற்கக் கூடாதுஅவருக்கு அருந்திவிட்டு உடனே எறிந்து விடும் வண்ணம் மட்கலயத்தில் உணவும் தேநீரும் தரப்பட்டது. அதாவது இன்றும் சில இடங்களில் வழங்கி வரும் இரட்டைக் குவளை முறைப்போலஒரு நட்சத்திர ஆட்ட நாயகனுக்கே சாதியம் முன்வைக்கும் நிலை இதுதான்.
அதன்பின் புனே அணியிலிருந்துபம்பாய் அணிக்கு அவரும், அவரது தம்பிகளான சிவ்ராம், கண்பத் மற்றும் விதால் ஆகியோரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பாலு சகோதரர்கள் என்கிற இந்த நான்கு தாழ்த்தப்பட்ட இளைஞர்களும் இந்திய கிரிக்கெட்டின் புகழ் பெற்ற ஆட்டக்காரர்கள் ஆவார்கள்.  1906-ஆம் ஆண்டு நடந்த பிரித்தானியருக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இச்சகோதரர்கள் முக்கிய பங்காற்றி இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர்.  “இந்தியன் சொஷியல் ரிஃபார்மர்“- என்கிற இதழ் இந்த வெற்றியை இந்தி தேசிய ஒற்றுமைக்கான சாதியத்தை மீறிய சமவாய்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் ஒன்றாக எழுதியதுஇதன் மற்றொரு விளைவாக இந்திய தேசியம் எனும் வளர்ந்து வரும் கருத்தாக்கத்தின் ஒரு உதாரணமாக இது கொள்ளப்பட்டது. இந்திய தேசியத்தின் கட்டமைப்பில் மட்டுமல்ல அதை இன்றுவரை காத்துவரும் பணியையும் செய்கிறது கிரிக்கெட். ஆனாலும், அன்றும் சாதி இந்துக்கள் தீண்டத்தகாதவர்களின் தலைமையில் ஆடுவதற்கு மட்டும் தயாரில்லைஇன்று திறமைதான் முக்கியம் என்று பேசும் உயர்சாதி பார்ப்பனர்கள்அன்று இத்தனை திறமை இருந்தும் பாலுவை கேப்டனாக நியமிக்கத் தயாரில்லைமற்ற ஆட்டங்களைவிட கிரிக்கெட்டிற்கு கேப்டனின் தலைமைப் பொறுப்பு ரொம்பவும் முக்கியமானது. அப்பொறுப்பை தந்து தாழ்த்தப்பட்ட ஒருவரின் தலைமையின்கீழ் விளையாடத் தயாராக இல்லை.
1910 முதல் 1920 வரை ஒவ்வொரு ஆண்டும் பாலுவை கேப்டனாக நியமிக்க கோரி போராட்டம் நடந்ததுஆனால் புதிதாக சேர்ந்த உயர்சாதி பார்ப்பனர்களுக்குக்கூட அந்த வாய்ப்பு வழங்கப்பட்டதே ஒழிய அனுபவம் மிக்க திறமையான தாழ்த்தப்பட்ட ஆட்டக்காரர்களுக்குத் தரப்படவில்லைஒரு இளம் பார்ப்பனருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டதை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து பாலு சகோதரர்கள் கிரிக்கெட்டை விட்டு வெளியேறினார்கள்.   சாதியரீதியான பாகுபாடு நிலவுவதையும் விளையாட்டுக்கான திறமைகள் பார்க்கப்படுவதில்லை என்பதையும் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். வெகுமக்களிடம் ஓரளவு அவர்களுக்கு ஆதரவு பெருகியது. அதன்பின் 1920-ல் காந்தி இந்திய தேசியத்தின் தலைவராக ஆனபோது அவரது தீண்டாமை எதிர்ப்பின் விளைவாக திரும்பவும் பாலு சகோதரர்கள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டு பாலுவிற்கு முதலில் உதவி கேப்டன் பதவியும், அவருக்கு பின் அவரது தம்பி விதால் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இச்சகோதரர்களின் திறமையான நிர்வாகத்தால் கிரிக்கெட் அணி தொடர் வெற்றிகளைப் பெற்று வந்ததுஇந்த கிரிக்கெட் வெற்றிகள் காந்தியின் சுயராஜ்ய கொள்கையின் நடப்பு உதாரணங்களாக கொள்ளப்பட்டன். தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு சம அந்தஸ்து தந்தால் இந்தியா வெற்றிக் கொள்வது நிச்சயம் என்பதை இவை மெய்ப்பிப்பதாக பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது. பொதுமக்கள் ஒவ்வொரு கிரிக்கெட் வெற்றிக்குப் பிறகுகேப்டன் விதால் வாழ்க! இந்துக்களே சாதி ஏற்றத்தாழ்வை மறப்போம்! மகாத்மா காந்திக்கு ஜே!” என்றும் கோஷமிட்டு கொண்டாடினர். இது நமக்கு சொல்லும் செய்தி கிரிக்கெட் அதன் ஆடுகளத்தையும் தாண்டி மக்களின் பொதுவெளியில் கட்டமைக்கும் மன அமைப்பையே.  அதிகாரம் நிரம்பிய காலனிய ஏகாதிபத்திய வெள்ளையின அணியை எதிர்த்து கிடைத்த இந்த வெற்றி மக்களின் மனத்தளத்தில் ஏற்படுத்தியிருக்கம் நம்பிக்கை என்பது எண்ணிப் பார்க்த்தக்கதுபாலு சகொதரர்களின் கதை என்பது இந்திய கிரிக்கெட் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாற்றில் ஒரு மைல்கல் மட்டுமல்ல இந்திய தேசிய கட்டமைப்பின் வெகுசன உளவியலை கட்டமைத்த ஒரு முன்மாதிரியும்கூட.
ஆனால் இத்தகைய வரலாற்றின் குறிப்பிடத் தகுந்த வீரரான பாலு இந்துமகாசபையின் ஆதரவாளராக மாற்றப்பட்டு பின்னாளில் இந்துமகாசபை மற்றும் காங்கிரஸின் கருத்தியலுக்கு பலியாகி புனா ஒப்பந்தம் ஏற்பட வழிவகை செய்து அம்பேத்கருக்கு எதிராக மாறினார். 1933-ல் நடந்த தேர்தலில் இந்துமகாசபை பம்பாய் நகராட்சிக்கு இவரை வேட்பாளராக அறிவித்ததுஆனால் எதிர்த்து நின்ற உயர்சாதி வேட்பாளரிடம் தோற்றுப்போனார். இந்திய தேர்தலில் இந்துமகாசபையானலும் சரி எந்த மகாசபையானாலும் சரி சாதி என்பது ஒரு தீர்மானகரமான காரணிதானே. அதன்பின் அம்பேத்கருக்கு எதிராக இவரை ஒரு தலித் உட்கட்சி தலைவராக காங்கிரஸ் பயன்படுத்த துவங்கியது.  1937-ல் தாழ்த்தப்பட்வர்களுக்கான தனித்தொகுதியான பம்பாய் சட்டமன்றத் தொகுதியில் அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸால் இவர் நிறுத்தப்பட்டார். அதில் அம்பேத்கரால் தோற்கடிக்கப்பட்டார். எந்த உயர்சாதியால் எந்த மதத்தால் புறக்கணிக்கப் பட்டாரோ அவர்களுக்கே இறுதியில் ஆயதமாக பயன்பட்டார் என்கிற இவரது வரலாற்றில் உள்ள அந்த முரண், இன்றுவரையில் திரும்ப திரும்ப நிகழும் ஒரு தீர்க்க இயலாத முரணாக நிலவி வருவது கண்கூடு.
18-ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான் கிரிக்கெட் இந்தியாவிற்கு பிரித்தானிய மாலுமிகளாலும், படைவீரர்களாலும் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் இந்திய அணி பம்பாயில் பொருளியல் ஆதிக்கம் வகித்தவந்த படித்த மேட்டிமை வர்க்கத்தைச் சேர்ந்த பார்சிகளால் உருவாக்கப்பட்டது. பார்சிகள் தங்களை பிரித்தானிய குடியேறிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவும் தங்களது உயர் வர்க்க அடையாளத்தைக் காக்கவும் முதன்முதலாக கிரிக்கெட்டைப் பயன்படுத்தினர். பார்சிகளுக்கு இயல்பிலேயே இந்திய மண்ணில் "வந்தேறிகள்" என்கிற ஒரு அடையாள நெருக்கடி இருந்து வந்ததால் அவர்கள் இந்த புதிய அடையாளத்தை கட்டமைக்க முயன்றனர்.  30-ற்கும் மேற்பட்ட பார்சி கிளப்புகள் ரோமானிய கடவுளின் பெயரால் 1850-60 களில் உருவாக்கப்பட்டது. இதில் வெளிப்படையாகவே தெரிவது பிரித்தானிய அடையாளத்தைப் பெறுவதற்கான முயற்சியேபார்சிகள் கிரிக்கெட் வழியாக ஆங்கிலேய உடைகளை உடுத்த துவங்கினர்அதன்பின் இந்துக்கள் தங்களுக்கான அணிகளையும், முஸ்லிம்கள் தங்களுக்கான அணிகளையும் உருவாக்கினர். குஜராத்தி, மராத்தி, தெலுங்கு போன்ற இனரீதியான அணிகளும் உருவாயின. ஆக, கிரிக்கெட் என்பதன் தொடக்கமே வகுப்புவாத தன்மை கொண்டதாக இருந்தது. இவர்களை அணிகளாக மோதவிடுவதன்மூலம் சமூகத்திற்குள் ஒரு வகுப்புப் பதற்றத்திற்கான மனநிலையை பிரித்தானிய காலனிய அரசாலும், மத அமைப்புகளாலும் கட்டமைக்க முடிந்தது.
இது 1930-ற்குப்பிறகு உச்சநிலையை அடைந்தது. இந்து அணி, பார்சி அணி, சீக்கிய அணி, முஸ்லிம் அணி, கிறித்துவ அணி என்பதாக பிரிந்து இந்து முஸ்லிம் மக்களிடையே இரு தேசக்கோட்பாடடிற்கு வலு சேர்ப்பதாக இந்திய வகுப்புவாத சக்திகளின் கருத்தியலுக்குள் ஆட்பட்டது.    இன்று இந்திய முதன்மை லீக் (IPL) ஆட்டத்தில் ஒரு அடிமை-வியபாரத்தைப் போல ஏலம் எடுக்கப்பட்ட ஆட்டக்காரர்களால் கலவையாக அமைக்கப்பட்ட சென்னை அணி, மும்பாய் அணி என்கிற பிராந்திய பெயர் கொண்ட அணிகள் எப்படி வெறும் பெயரைக் கொண்டே பிராந்திய வெறியை ஊட்டுகின்றனவோ அதைப்போல ஒவ்வொரு கிரிக்கெட் வெற்றிக்குப் பிறகும் வகுப்பவாத அணிகாளால் வகுப்பு பதற்றங்களை உருவாக்கி வகுப்புவாத உணர்வை ஆறாமல் காக்க முடிந்தது.  இன்னொருபுறம் இது ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை தேச அளவில் ஒருங்கிணைந்த அடையாளத்திற்குள் கொண்டு வந்ததுஇன்று இந்தியா ஆடும்போது எல்லோரும் இந்திய குடிமகன் என்கிற உணர்வு மீள்கட்டமைப்பு செய்யப்படுவதைப்போல, வகுப்பு ரீதியான அடையாளத்தை உருவாக்கி வகுப்பு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியதுஇது மத துருவமயமாதலுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
கிரிக்கெட்டை பிரித்தானிய ஏகாதிபத்தியம் அறிமுகப்படுத்தியதே குடியெறிகளுக்கும், குடிமக்களுக்கும் இடையில் ஒரு ஒற்றுமையை உருவாக்கவும், ஒரு கலப்பின அடையாளத்தை பேணவும்தான். இவ்வாறு ஒரு கலப்பின வர்க்கமாக இந்திய மத்திதர வர்க்கத்தின் தோற்றத்திற்கான ஒரு பண்பாட்டு அடையாளமாக கிரிக்கெட் இருந்தது. இன்று இந்த அடையாளம் மத்தியதரவர்க்கம் தாண்டி அடிமட்ட அளவிலான மக்களிடமும் இறக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய உணர்வாக அறியப்படுகிறது. கிரிக்கெட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது கனவான்களின் ஆட்டமாகத்தான் அறிமுகமானது. இந்திய மக்களை காலனிய குடிமக்களாக கட்டமைத்ததில் மெக்காலேயின் கல்விக்குப் பிறகு ஒரு கனிசமான பாத்திரத்தை கிரிக்கெட் ஆற்றியது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது எல்லாக் காலனி நாடுகளிலும் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியதின் நோக்கம் காலனிய உடலை கட்டமைக்கும் ஒரு எந்திரமாக அது இருந்ததுதான். சான்றாக பிரித்தானிய காலனிய நாடான ஆஸ்திரேலியாவில்ஆங்கிலத்தனம்” (englishness) என்கிற ஒரு குணாம்சத்தை கிரிக்கெட்தான் கட்டமைத்தது. கிரிக்கெட் என்பது பிரித்தானிய காலனிய எஜமானர்களைப் 'போலச் செய்யும்' (mimic) ஒரு பண்பை காலனிய குடிமக்களிடம் உருவாக்கியது. அல்லது பிரித்தானிய பண்பாட்டை தனது காலனி நாடுகளில் விதைத்ததுகிரிக்கெட்டின் உடை அமைப்பு என்பது இந்திய உடையமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
இன்றுவரை கிரிக்கெட் இந்த காலனிய சேவையை மிகச்சிறப்பாக செய்துவருவது கண்கூடுஇன்றைய கிரிக்கெட் ஆட்டத்திலும் காலனிய மேலாண்மை என்பது ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக உள்ளது.  சான்றாக, ஒரு பார்ப்பனக் குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவரும், இந்திய கிரிக்கெட்டை பரவலாக்கியவரும், உலக அளவில் பெயர் வாங்கி தந்தவருமான சுனில் கவாஸ்கர் இந்தியா இங்கிலாந்துடன் ஆடும்போது அவர்களுக்கு உயர்தரமான ஓய்வு அறையும், உணவுகளும், இந்தியர்களுக்கு மோசமான ஓய்வு அறையும், உணவுகளும் தந்த காலனிய எஜமான மணோபாவத்தை எதிர்த்து கேள்விக்கேட்டு இந்திய ஆட்டக்காரர்களுக்கு சம அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பது காலனிய மேலான்மை மனநிலையின் தற்கால நீட்சியையே காட்டுகிறது. காலனியத்தின் ஆதிக்க மணோபாவத்தை எதிர்த்து முதன்முதலாக குரல் எழுப்பியவர் என்ற பெருமை கவாஸ்கருக்கு உண்டு. அதேபோல் இந்தியா இங்கிலாந்து ஆடும் ஆட்டங்களில், இந்தியா பெறும் வெற்றியை இங்கிலாந்து மக்களால் ஏற்க முடியாத மனநிலை வெளிப்படுவதைக் காணலாம். காலனிய மேலான்மையின் எச்சமாக இன்றும் கிரிக்கெட்டில் நிலவிவரும் இந்த மனப்போக்கு கவனிக்கத்தக்கது.
கிரிக்கெட்டின் அடிப்படையே காலனிய ஆளும் தன்னிலைகளும், ஆளப்படும் தன்னிலைகளும் ஒருங்கிணைவதற்கான ஒரு புள்ளியை உருவாக்கி ஆளப்படும் தன்னிலைக்குள், ஆளும் தன்னிலையை உயர்ந்ததாக கட்டமைக்கும் படிநிலைப் பண்புதான். அது ஒரு சக்திவாய்ந்த ஒன்றினைக்கும் விசையாகவும், மேட்டிமையின் குறியீடாகவும் இருந்தது. இநதியாவை ஒரு தேசமாக கட்டமைக்கும் முக்கிய காரணியாக இன்று செயல்படுவது கிரிக்கெட்தான். இந்திய தேசியம் என்பது கிரிக்கெட்டின் ஆடுகளப் பரப்பு தவிர வெறொன்றுமில்லை. இந்திய உடல்கள் கிரிக்கெட்டை காண்பதன் மூலம் கலைப்பிரியர்களாகவும் பேசுவதன்மூலம் கனவான்களாகவும் குறியிடப்படுகிறது. ஒரு கிரிக்கெட் வரலாற்றாளர் கூறியதுபோல கிரிக்கெட் எல்லா வர்க்கப் பார்வையாளர்களையும்கலைப்பிரியரான கனவான்களாக குறியிட்டது.”  ("the mark of an amateur gentleman" from any class). அந்த கனவான்களின் ஒரு உச்சக்கட்ட கொண்டாட்டமே இன்றைய கிரிக்கெட்டில் வெளிப்படுகிறது.  
கிரிக்கெட் மிடில்-ஸ்டெம்ப் ஆண்குறி மற்றும் சாதிய மேலாண்மை - சில குறிப்புகள்.
“இந்திய விளையாட்டான கிரிக்கெட் விபத்தாக பிரிட்டனின் விளையாட்டாகிவிட்டது“ என்று கூறும் உளவியல் அறிஞரான அஸிஸ் நந்தி தனது பேட்டி ஒன்றில் இந்திய மக்கள் கிரிக்கெட்டை விரும்ப  3 காரணங்களை சுட்டிக் காட்டுகிறார். 1. முற்றிலும் நவீனமயமாகாத இந்தியாவில் கிரிக்கெட்டின் கொண்டாட்ட மனநிலை என்பது தொழிற்சமூகத்திற்கு முந்தைய அதாவது நவீன சமூகத்திற்கு முந்தைய மதிப்பீட்டைக் கொண்டதாக உள்ளது. 2. கிரிக்கெட் யாராலும் கட்டுப்படுத்த முடியாத பல்வேறு காரணிகளை, எண்ணற்ற மாறிலிகளையும் கொண்டுள்ளது. 3. எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதாக உள்ளது. எண்ணற்ற மக்களால் கருத்து சொல்லக்கூடியதாக, அதாவது விதி அல்லது தலையெழுத்து போன்ற மர்மத்தன்மைக் கொண்டதாக உள்ளது. உண்மையில் கிரிக்கெட் விளையாடுபவர் எதிர் அணியுடன் விளையாடுவதில்லை தனது விதியுடன் அல்லது தலையெழுத்துடன்தான் விளையாடுகிறார் என்கிறார் நந்தி. இந்த காரணங்களின் அடிப்படையாக இருப்பது இந்திய மக்களின் கூட்டுமனநிலைக் கொண்டாட்டத்தை கிரிக்கெட் மீளுருவாக்கம் செய்வதே. பண்டைய நிலவுடமை மதிப்பீடுகளான விதி அல்லது தலையெழுத்துப் போன்ற எதிர்பாராதா நமக்கு வெளியே உள்ள சக்தியால் தீர்மாணிப்பது போன்ற ஒரு மர்மத்தன்மை இதில் நிலவுகிறது.   
அஸிஸ் நந்தியின் மேற்கண்ட கருத்து கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டாக நிகழ்ந்ததை சொல்கிறது. ஆனால்தற்காலத்தி்ல் கிரிக்கெட் விளையாட்டு என்கிற நிலையை தாண்டி ஆணாதிக்க தேசிய அரசியலை கட்டமைக்கும் ஒரு ஊடகப்-புனைவு வெளியால் ஆடப்படுகிறது.  90-களுக்கு பிறகு தொலைக்காட்சியால் கிரிக்கெட் கேட்கும் வெளியிலிருந்து (வாணொலியிலிருந்து) பார்க்கும் வெளிக்கு (தொலைக்காட்சிக்கு) மாற்றப்பட்டது. இம்மாற்றம் இந்திய அணி கபில்தேவ் தலைமையில் கோப்பையை வென்ற 1983-ல் துவங்கியது. 90-களுக்குப்பிறகு செயற்கைக்கோள் மற்றும் கேபிள் நெட்வொர்க் ஆகியவற்றால் இந்தியாவெங்கும் விரிக்கப்பட்டது,
சில வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் ஒரு சூதாட்டம் என்று உலகமே அறிந்து பரப்பரப்பானது. சூதாட்டத்தின் முன் ஆடுபவரின் தேசபக்தி சுருண்டு படுத்து விட்டதுடன் பார்த்தவர்களின் தேசபக்தியும்கூட கேலிக்குட்படுத்தப்பட்டதாக உணரப்பட்டது. இந்த சூதாட்டம் என்பத கிரிக்கெட் தோன்றி ஒரு பார்வையாளர் ஆட்டமாக மாறிய 1920-களிலேயே ஒரு கருப்புச் சந்தைக்கான பொருளாதாரத்தைக் கொண்டதாக மாறியது. அன்றே பந்தயம் மற்றும் அனுமதிச் சீட்டில் போலி அனுமதிச்சீட்டுகளை வழங்குதல் என்பதாக ஒரு சூதாட்டக்களமாக மாறியதுஅன்றே மரங்களில் ஏறியும், ஒரு சிறிய இடைவெளிக்கூட இல்லாமல் அமர்ந்தும் பார்க்கும் அளவிற்கு ஒரு வெகுமக்கள் விளையாட்டாக மாற்றப்பட்டதுகுறிப்பாக 90-களுக்குப் பிறகு இந்த ஆட்டம் பெரு வளர்சசிக் கண்டது. நகர மக்களின் பார்வைத் தளங்களிலிருந்து கிராம மக்களின் பார்வைத் தளத்திற்கு விரிவடைந்ததுஇன்று அது ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக வளர்ந்து விட்டது. உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஜீரம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரவி வந்தது. அதற்கு இடையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையாக 20க்கு20 உலகக்கோப்பை நடத்தப்படுகிறது.
கிரிக்கெட்டில் உருவாக்கப்படும்தேசபக்தி“ போன்ற உணர்வுகள் உண்மையில் ஒருவகைதேசவெறி“-யையே கட்டமைக்கின்றன. இந்த தேசவெறி இன்றைய அரசியல் சூழலுக்கான தேவையை நிறைவு செய்கிறது. இன்னும் குறிப்பாகக் கூறினால் ஒருவன் தன்னை இந்தியனாக உணர்வதற்கான வெளியாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. தேசபக்தி போர்க்காலச் சூழலிலேயே ஒரு குடிமகனுக்கு வெறியாக மாறும். கிரிக்கெட் என்பது ஒரு போராக அதிலும் தொலைக்காட்சி கட்டமைக்கும் ஊடகவெளியில் நிகழும் ஒன்றாக மாறி உள்ளது. உளவியல்ரீதியாக ஒரு போர்பதற்றமே இதனால் பரவலாக்கப்படுகிறது. அதனால்தான் இந்தியாவின் தோல்வியை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளாது, தனது நாட்டை இழந்த ஒருவரின் கையறு மனநிலையாக குடிமகனின் மனம் பதற்றமடைகிறது. இவ்வாறாக, ஒரு எண்மவெளிப் போராக (digitalized war) மாற்றப்பட்டுள்ள கிரிக்கெட் என்கிற விளையாட்டை ஏன் இந்திய அரசும், ஊடகங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் பிரதானப்படுத்துகின்றன என்பதற்கு முன்வைக்கப்படும் ஒரே வாதம் கிரிக்கெட்டை எல்லோரும் பார்க்கிறார்கள் விரும்புகிறார்கள் என்பதுதான். இதனை கொஞ்சம் தெளிவுபடுத்தி்க் கொள்வோம்.
உண்மையில் எல்லோரும் பார்க்கிறார்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு எந்த புள்ளிவிபரங்களும் கிடையாது. பாப்புலராக உள்ளது என்பதன் பொருள் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதல்ல. இது தகவல் தொழி்ல்நுட்பகாலம். இங்கு ஆதிக்கம் செய்வது தொலைக்காட்சி. பெர்ணாட்ஷாவின் புகழ் பெற்ற இந்த வாசகம் நமக்குத் தெரியும் '11 முட்டாளகள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள் பார்க்கிறார்கள்.' அவர் இதோடு இனைந்து மற்றொன்றையும் சொன்னார். அது தொலைக்காட்சி என்பது 'முட்டாள்கள் பெட்டி (இடியட் பாக்ஸ் idiot box)' என்பதுதான். தொலைக்காட்சிதான் கிரிக்கெட்டை பெரிய விளையாட்டாக மாற்றி அதன் விளையாட்டுத்தனத்தை எல்லாம் வியபார உத்தியாக்கி இதனை ஒரு அரசியல் சார்ந்ததாக கட்டமைத்துள்ளது. இக்கட்டமைப்பிற்கு அடிப்படையாக அமைந்தது அதன் சாதியச் சார்பு, பொருளாதார ஆதிக்கம், வெகுசன உளவியலில் ஆதிக்க கருத்தியலைக் கட்டமைத்தல் ஆகியனவாகும். கிரிக்கெட் துவங்கியதிலிருந்து இன்றுவரை ஆதிக்கம் செலுத்தும் சாதி பார்ப்பனர்கள்தான். இந்திய ஊடக உலகம் 80-சதவீதம் பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதிகள் (அதாவது நவ பார்ப்பனர்கள்) கையில் உள்ளது. இதுவே கிரிக்கெட்டை இன்று ஒரு ஆதிக்க விளையாட்டாக கட்டமைத்துள்ளது.
மற்ற விளையாட்டுகளைப்போல உடற்பயிற்சிக்காக கிரிக்கெட் ஆடப்படுவதில்லை. கிரிக்கெட்டே ஒரு ஸாப்ட் கேம் (மென் விளையாட்டு) எனப் பெயர் பெற்றது. “கிரிக்கெட் உடலைத் தொட்டு விளையாடாத ஒரு விளையாட்டாகும் என்பதால் இத பார்ப்பனியர்களை கவரும் விளையாட்டாக உள்ளது. மேலும், இதற்கு மிகையான உடல் வலு அவசியமில்லைஎன்கிறார் இந்திய கிரிக்கெட் வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா.  ஆக, இந்திய சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள உடல் உழைப்பற்ற உயர்சாதிகள் எப்படி பெரும்பான்மையாக உள்ள பிறர்மீது அதிகாரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அது அப்படியே கிரிக்கெட் அணியிலும் அதைவிட கூடுதலாக பிரதிபலிக்கிறது. இங்கு எழும் கேள்வி விளையாட்டை சாதி அடிப்படையில் பார்க்கலாமா? திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுவே விளையாட்டுக்குத் தேவை? என்பதுவே. இதில் 'திறமை' என்கிற வழக்கமாக பயன்படுத்தப்படும் பார்ப்பன மற்றும் உயர்சாதி மேலாதிக்க கருத்தியலே செயல்படுகிறது. மற்ற விளையாட்டுகளில் திறமையானவர்கள் இருந்தாலும் அது கிரிக்கெட்டின் அளவிற்கு பிரபலமானதாக இல்லை. அதற்கு அரசும் எந்தவித முக்கியத்துவம் தந்து ஊக்கப்படுத்தி முன்னேற்றுவதும் இல்லை. இந்த 'திறமை' என்பது ஒரு சார்பியலான கருத்தாக்கமே. மேலும் இது சமூக மதிப்பீட்டின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. தவிரவும் 'திறமை'-யானவர்கள் கண்டடைவதற்கான முயற்சிகள் கிரிக்கெட்டில் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வருவதன் விளைவுதான் இன்றுவரை அணியின் பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட சாதியை அதுவும் பார்ப்பன மற்றம் உயர்சாதியை சேர்ந்தவராகவுமே இருக்கின்றனர்.
கிரிக்கெட் என்கிற விளையாட்டு அமைப்பே இந்தவகை உயர்சாதியின் 'திறமை' என்கிற கருத்தியல் ஆதிக்கத்திற்குள் சிக்கியிருப்பதையே இது காட்டுகிறது. இங்கு அசாருதீன் மற்றும் கபில்தேவ் போன்ற சிலரை சுட்டிக்காட்டக்கூடும். இவை ஒரு தவிர்க்க இயலா நிகழ்வுகளாக விதிவிலக்காக அமைந்தவையே. பெரும்பான்மை இன்றும்கூட உயர்சாதி மற்றும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருப்பதையே பார்க்கிறோம். இது ஒருபுறம் இருக்க கிரிக்கெட் என்கிற ஆட்டம் மற்றும் அதன் அடிப்படையில் இயங்கும் கோட்பாடு் இன்று அது இந்திய மக்களை ஆட்கொண்டிருக்கும்விதம் ஆகியவையே இங்கு நாம் அவதானிக்க வேண்டியதாக உள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு என்கிற நிலை கடந்துவிட்டது அது ஒரு காட்சிகாண் மகிழ்வின் அரசியலாக மாறிவிட்டது. அதன் அடிப்படை இன்று மக்களை மந்தைகளாக மாற்றுவதுதான். இல்லாவிட்டால் சிறப்பு யாகம், பூஜை செய்வதும், தீக்குளிப்பதும்,  'ஹார்ட் அட்டாக்'- வந்து சாவதும் எதனால்? தோல்லி அடைந்தால் கிரிகெட் விளையாடுபவர்களின் வீட்டை அடிப்பதும், வெற்றி பெற்றால் யானை மீதேறி கொண்டாடுவதும் எதனால்? சமூக நலலிணக்கத்திற்காக பாடுபடும் லலிதா ராமதாஸ் என்பரால் சுட்டிக்காட்டப்டும் கருத்தாக்கம் கிரிக்கெட்டின் அரசியலை நமக்கு அம்பலுப்படுத்துவதாக உள்ளது.  2003-ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மார்ச், 1 2003-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆட இருந்ததுபிப்ரவரி 27- 2003-ல் கோத்ரா ரயில் எரிப்பும் அதை ஒட்டிய கலவரமும் நடந்து ஒராண்டுகிறதுஇறந்துபோன அப்பாவி முஸ்லிம்கள் பற்றியோ அவர்களது இறப்பு பற்றியோ எந்த பத்திரிக்கையும் எழுதவில்லை, அதற்கு பதிலாக குஜராத் தினசரி ஒன்று நாளை நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் விளையாடும் இந்திய வீரர்கள் கையில் மட்டைக்குப் பதிலாக கலாஷ்னிகோவ் துப்பாக்கியுடன் பாகிஸ்தான் வீரர்களை எதிர்கொள்வது போன்ற கனிப்பொறியில் வடிவமைக்கப்பட்ட படத்தை வெளியிட்டு மத மற்றும் தேச வெறியை தூண்டுகிறது. இதுதான் ஊடகங்கள் கிரிக்கெட்டை முன்வைத்து நடத்த விரும்பும் அரசியல்.
இது ஒருவகை பைத்திய நிலைக்கு மக்களை ஆழ்த்துகிறது. இதனால் பிற விளையாட்டுகள் வளர்ச்சியற்றதாக மாறி உள்ளன. சமீபத்தில் உலக அளவில் ஒரு பொட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணி அரசால் கண்டு கொள்ளப்படவில்லை என்பதால் அனைவரும் உண்ணாவிரதம் இருந்தனர். அதன்பின் அரசு அவர்களுக்கு சில உதவிகளை செய்தது. நாளையே மீடியாக்கள் கிரிகெட்டிற்கு பதிலாக கில்லியை தொடர்ந்து காட்டத் துவங்கினால் அதையும் வாயைப் பிளந்த பார்த்துவிட்டு.. இப்படித்தான் அதன் கட்டமைப்பு விதியால் வெறி கொண்டு திரிவோம். ஆக, இன்று மீடியாக்கள்தான் உண்மைகளை உருவாக்கி மக்களை அதில் மூழ்கடித்துக் கொண்டுள்ளன. 20 வருடங்களுக்கு முன்பாக கிரிகெட் இத்தனை பிரபலம் அடையவில்லையே ஏன்? காரணம், தொலைக்காட்சிகள் இந்த அளவிற்கு பரவலாக ஆகவில்லை. இலவச பாடபுத்தகங்களுக்கு சமமாக இலவச தொலைக்காட்சிகள் தரும் நிலைக்கு அரசானது இன்று தள்ளப்பட்டிருக்கிறது என்றால் தொலைக்காட்சியின் ஆதிக்கத்தை உணரலாம். தொலைக்காட்சிகள் இன்றைய சராசரி வாழ்வை மாற்றி அதனால் முன்வைக்கப்படும் ஒளிர்திரை வாழ்விற்கு சமூகத்தை தள்ளி உள்ளது. எது உண்மை? எது பொய்? என்பதெல்லாம் அவற்றால்தான் கட்டமைக்கப் படுகிறது.
கிரிகெட் கடந்த 20 ஆண்டுகாலமாக இப்படித்தான் ஒரு இந்திய மக்களின் பார்வையின்ப விளையாட்டாகவும், ஒரு உலக விளையாட்டாகவும் மாற்றப்பட்டுள்ளது. இன்றும்கூட உலகை ஆளும் விளயாட்டு அல்லது உலக நாடுகள் அதிகம் பங்கு பெற்றுள்ள விளையாட்டு கால்பந்துதான். கிரிகெட் ஒரு உலக விளையாட்டு என்பதும் உலக கோப்பைக்கான விளையாட்டு என்பதும் நமது எண்ணிக்கை சார்ந்த 'அதிக' நாடுகள் கணக்கின்படி உலக விளையாட்டே அல்ல. எண்ணிக்கையில் அதிகமாக பார்க்ப்படுவதும்கூட கால்பந்துதான். இருப்பினும் மினி தொடங்கி மெகாவரை பல உலகக்கோப்பைக்கான ஆட்டங்கள் கிரிக்கெட்டில் நடத்துப்படுகிறது.
கிரிக்கெட் இன்று ஒரு சின்ன இடம் கிடைத்தால்கூட கற்பனையாக ஆடுகளனை உருவாக்கி விளையாடப்படும் ஒன்றாக மாறி உள்ளது. பள்ளிகளில் துவங்கி தெருக்கள் ஏன் சிறிய திண்ணைகளில்கூட விளையாடப்படுகிறது. இங்கு பரவலாக கிரிக்கெட்டை மக்கள் விரும்பி ஏற்க காரணம் என்ன? என்பது குறித்து கிரிக்கெட்டை பிராய்டிய உளவியலில் ஆய்வு செய்த ஆய்வாளர் தி.கு. இரவிச்சந்திரன் சில விளக்கங்களை அளிக்கிறார். பிராய்டிய உளவியல் என்பது இன்றைய அதிகார அமைப்புகளுக்கான ஆதிக்க தன்னிலையை கட்டமைப்பதற்கான தொழில்நுட்ப சொல்லாடலாக மாறியுள்ளது மற்றும் அதன் ஓடிபல் உறவு குறித்த சொல்லாடல் இன்று விமர்சனத்திற்கு உள்ளாக்கப் பட்டுள்ளது என்றபோதிலும் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய ஆர்வமூட்டும் அவரது கருத்துக்களை இங்கு தருகிறேன்.
அதாவது 'கிரிக்கெட் எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் நடந்து வந்த ஒருவகை மட்டைப்-பந்து விளையாட்டு கடல்கடந்து பிராண்ஸ் வழியாக இங்கிலாந்தை அடைந்திருக்கலாம். காரணம் cricket என்பது பிரஞ்சு சொல்லான criquet என்பதன் திரிபாகும். டச்சுமொழியில் குச்சியை krick என்றும் பழைய ஆங்கிலத்தில் குச்சியை Cricc என்ற சொல்லால் குறிப்பது வழக்கம். இதன் மற்றொரு பரிணாமம் ”கில்லி-தண்டா” எனப்படும் இந்திய நாட்டுப்புற விளையாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் உள்ள ஒற்றுமை. இந்த ஒற்றுமையே எளிமையாக இவ்விளையாட்டு இந்திய மக்களால் புரிந்து அதிலும் கிராம அளவில் உள்ளவர்கள் வரை ஏற்றுக்கொள்ள ஒரு காரணம் ஆகும். கிரிக்கெட் ஆணிலை பார்வையின்ப அடிப்படையிலான ஒரு ஆண்மைய விளையாட்டு என்பது மற்றோரு முக்கிய காரணமாகும். அதில் குச்சியை காத்தல் என்பது ஆண்குறியை காப்பது என்கிற காயடிப்புச் சிக்கலுடன் உறவு கொண்டது. காயடிப்பு சிக்கல் என்கிற பிராய்டிய கருத்தாக்கத்தின்படி ஆண் குழந்தையானது பெண் குழந்தையுடன் தன்னை ஒப்பிட்டு தனக்கு ஆண்குறி இருப்பதையும் பெண்ணிற்கு அது இல்லாமல் இருப்பதையும் வித்தியாசப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்நிலையில் தனது ஆண்குறியும் கண்டிக்கப்படலாம் என்கிற பதற்றத்திற்கு ஆளாகிறது. இப்பதற்றத்தால் தனது ஆண்குறியை தந்தையிடமிருந்து காக்க சமூக விதிகளை ஏற்று பெரியவர்களின் விதிமுறைகளை எதிர்க்காமல் பின்பற்றும் மனநிலையை அடைகிறது. தனக்கு உள்ள ஆண்குறி பெண்ணிற்கு இல்லை என்பதால் தான் பெண்ணைவிட உயர்ந்தவனான ஒரு ஆழ்மனப் படிமம் வந்துவிடுகிறது. இதன் விளைவே பெண்ணை இரண்டாம் இடத்தில் தனக்கு கீழாக வைத்து கானும் நிலையாகும். மேலே சொன்ன இந்த ஆணகுறியை இழந்துவிடக் கூடிய பதற்றமே காயடிப்புச் சிக்கல் எனப்படுகிறது.
கிரிக்கெட்டில் உள்ள ஸ்டெம்ப் என்கிற குச்சி இங்கு ஆட்டக்காரனின் ஆண்குறி மையமாக செயல்படுகிறது. இக்குச்சியை இழத்தல் என்பதே ஆட்டமிழப்பு அதாவது ஆட்டக்காரனின் இருப்பின்மையை உருவாக்குகிறது. குச்சிதான் அவனது இருப்பு. இது ஒரு லிங்கமையவாத (அதாவது ஆண்குறிமையவாத) ஆழ்மனக் கட்டமைப்பாகும். குச்சியைக் காத்தல் என்பதே ஆட்டத்தின் பிரதான விதியாகும். இவ்வாறாக குச்சியை இழந்து ஆட்டமிழப்பது என்பது மற்ற ஆட்ட இழப்பைவிட ஒரு அவமானகரமான ஒன்றாக கருதப்படுவதும் இதனால்தான். குச்சியை இழப்பதனால் ஆட்டக்காரன் ஒரு பெண்ணாக மாற்றப்படுகிறான். இங்கு ஆண்மை தோல்வியடைகிறது. இதே நிலைதான் பார்வையார்களின் உணர்வு நிலையும். கிரிகெட்டை பார்ப்பது என்பது தனது ஆண்மையை நிரூபித்துக் கொள்ளும் ஒரு உளவியல் செயல்பாடாக அடையாளம் காணப்படுவதால்தான் வெகுமக்கள் அதன்மீது தீவிர ஈடுபாடு காட்டுகின்றனர். தனது ஆண்மை தோற்கடிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏற்படும் வருத்தம் எதிரியை தாக்கும் மூர்க்கமாக வெளிப்படுகிறது. கிரிக்கெட் தோல்வி ஆட்டக்காரர்கள் மீதான் தாக்குதலாக மாறுவதற்கு இதுவே காரணம். இரு நாடுகளுக்கிடையில் நடைபெறும் போட்டி என்பது ஒரு உயர்வகைப்படத்தப்பட்ட போராக நிகழ்கிறது. (விரிவாக இவ்வாய்வை படிக்க ஃப்ராய்ட் யூங் லக்கான் -அறிமுகமும் நெறிமுகமும் - தி.கு. இரவிச்சந்திரன் நூலைப்பார்க்கவும்.)
கிரிக்கெட் விளம்பரங்களால் காசை அள்ளித்தரும் ஒன்று. அதனால் அதன் பிரபல்யத்திற்காக எதுவும் செய்யப்படும். இதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று இதில் புரளும் பொருளாதாரம். மற்றொன்று.. இதன்மூலம் மக்களை சிந்திக்கிவிடாமல் தொடர்ந்து போதையில் ஆழ்த்துவது. மக்களின் பேச்சுக் களத்தை இதை சுற்றியே பின்னுவதுஅப்படி பின்னுவதால் அணு ஒப்பந்தமோ அல்லது மக்களுக்கு எதிரான சட்டங்களோ பேசுப் பொருளாக மாறாது. இன்று மக்கள் எதை சிந்திக்க வேண்டும்? எதை பேச வேண்டும? எப்படி படுக்க வேண்டும்? எப்படி சிரிக்க வேண்டும்? எதற்கு சிரிக்க வேண்டும்? இப்படியாக எல்லாக் கூறுகளையும் இந்த ஊடகங்கள்தான் கட்டமைத்து தந்துள்ளன. சுருக்கமாக மக்களுக்கான தினவாழ்வை (daily life) இவைதான் தீர்மாணிக்கின்றன. அதனால் இன்று ஊடகங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர்களது கருத்தியலே ஆதிக்க கருத்தியலாக உள்ளது. 80-சதவீத ஊடகங்கள் யார் கையில் உள்ளது என்பது சொல்லவே வேணடியதில்லை. உயர்சாதி மற்றும் பார்ப்பனர்கள் கையில்தான் உள்ளது அல்லது உயர்சாதிய கருத்தியலில் வழி நடத்தப் படுகிறது
இது மக்களிடம் உள்ள மலர்ச்சியான பண்புகளை சாகடிக்கும் ஒன்றாக உள்ளது. விளையாட்டின் விதி வெற்றிக்கான உந்துதலே தவிர வெற்றியடைந்தே தீர்வேன் என்கிற வெறி அல்ல. காரணம் வெற்றி என்பது ஏற்படுத்தும் மகிழ்வு என்பது மதிப்பு மிக்கதாக கட்டமைக்கப்பட்ட சமூக விதியால் வருவதேஒன்றை வெல்லுதல் அல்லது வெற்றிக்கொள்ளுதல் என்பதும், அது ஏற்படுத்தும் பரவசமும் ஒரு ஆதிக்கச் சொல்லாடல் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. வெற்றி என்பதை எப்படி அளவிடுவது? தனக்கு மகிழ்வை தராத வெற்றியின் பொருள் என்ன? கிரிகெட்டில் கிடைக்கும் வெற்றி என்பது எது? அது யாருக்கு சாதகாமானது? அதில் யார் பயனடைகிறார்கள்? அதுதரும் மகழ்வின் எச்சமாக நமது மன அமைப்பில் கட்டப்படும் அரசியல் எது? என்கிற கேள்விகள் எஞ்சியுள்ளன. பிரச்சனை வெற்றி என்பதை மையமாகக் கொண்ட  செயல்கள்தான் மனிதனின் அடிப்படை வன்முறைக்கு காரணம். வெற்றி என்பது விரைப்புநிலை உணர்வு. இந்த உணர்வை பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய கிரிகெட் ஆட்டமும். சவுத் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாவே மற்றும் கென்யா ஆகியோரின் ஆட்டங்களில் காணலாம். இவற்றில் நிறவெறி மதவெறி போன்றவை ஒரு நுண்ணரசியலாக செயல்படுகிறது என்பது அறிந்ததே. கிரிக்கெட் ஆடப்படும் களத்தை தாண்டி சமூகப் பரப்பிற்குள் நுழைந்து மக்களின் மனப் பரப்புகளில் ஆட்டத்தை தொடர்ந்து, இன்று தேசத்தை தனது ஆண்மைய ஆடுகளப் பரப்பிற்குள் சுருக்கி வைத்துள்ளது என்றால் மிகையாகாது.
- ஜமாலன் (13-05-2008)  - jamalan.tamil@gmail.com (தீராநதியில் வெளிவந்த கட்டுரை) - புலம் பதிப்பகம் வெளியிட்ட எனது ’நவீனத் தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும்’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: ஆண்குறி, தந்தை, காயடிப்பச்சிக்கல் போன்றவை உளவியல்ரீதியான குறியீட்டு அடிப்படையிலான கருத்தாக்கங்களே. அது பெளதீகரீதியான ஆண்குறியையோ நபர்களையோ குறிப்பது அல்ல.
உதவிய கட்டுரைகள்.
1. Tales of Cricket - Asis Nandy - Interview - http://catalogue.ausport.gov.au
2. Cricket's home moves closer to the money - By Raja M - http://www.atimes.com
3. Bowling for Democracy - by Orlando Patterson and Jason Kaufman - The New York Times - May1, 2005.
4. Cricket And Politics In Colonial India - Ramachndra Guha - 1998-Oxford Univercity Press.
5. The Politics of Cricket and  Some Reflections - by Lalita Ramdos - http://www.sacw.net/2002/lramdasmarch03.html
6. ஃப்ராய்ட் யூங் லக்கான் -அறிமுகமும் நெறிமுகமும் - தி.கு. இரவிச்சந்திரன்.-
7.China plans to take on the world at the 'noble game' of cricket - David Eimer-Independent Newspapers.



Share |
ஜமாலன். Blogger இயக்குவது.