காவியத்தலைவன் பாதிப்பு சந்தேக சாம்பிராணிக்கு இன்னும் தீர்ந்தபாடில்லை. யாரோ முகநூலில் அதற்கு இந்த ஆண்டிற்கான தேசிய விருது நிச்சயம் எனக் கூறிவிட்டார்களாம். ’காவி’-யத் தலைவன் அல்லவா தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கும் என்று தாங்கவியலா மனக்கிலேசத்துடன் காணப்பட்ட சந்தேகச் சாம்பிராணி கீழ்கண்ட குறிப்பை பதிவிடும்படி தந்தார்.
’நான்தான் சரியா பாக்கலியோ என உங்குழாயில் தேடினால் விசயகாந்த காவியத் தலைவனாக வருகிறராம். (youtube-ற்கு தமிழில் மொழிபெயர்ப்புகளை அள்ளி விசிறிக் கொணடிருக்கும் அன்பர்கள்போல் அல்லாமல், குத்துமதிப்பாக மொழித் தெறிக்கும் கூகுல் மொழிபெயர்ப்பாக இல்லாமல், உன் குழாய் என்று தமிழில் மொழிபெயர்த்தால் நாகரீகமாக இல்லை என்பதால் இப்படி மருவுவதற்கு முனபே உங்குழாய் என்ற மருவி விட்டார் ச.சா. கேட்டால் எதிர்காலத்தில் மொழியியல் அறிஞர்கள் தங்களது வெற்றிலை செல்லத்திலிருந்து மென்றது போக மீதி நேரத்தில் ஆராய்ந்து இதை உன் + குழாய் என்று கண்ணை கசக்கி கண்டுபிடித்து ”பச்சடி” (அதாவது பி.எச்.டி. யாம்) வாங்கி முனைவர் ஆனா ரூனா ஆவன்னாவாக ஆகட்டும் என்கிறார்.) அப்பவே உங்குழாயக்கு தெரிந்துவிட்டது தமிழ் அரசியல் எதிர்காலத்தில் இவர்தான் காவித்தலைவனாக ஆவார் என்று.
மனிரத்ணம் ’இருவர்’ எடுத்ததைப்போல கமல்-ரஜனியை வைத்து காவியத் தலைவனை காவியிருக்கிறார்கள். இருவரையும் இருபதிற்கு (வயசும் வருடமும்) கொண்டுபோய் அவர்களது கதையை படமாக்கியிருக்கிறார்களோ என்று ஒரு சந்தேகம் வலுக்கிறது. ஒரு குருவிற்கு இரண்டு சிஷ்யர்கள். ஒருவர் குருவிடம் அடையாளத்துடன் (பிள்ளைமார் என்று) ஒப்படைக்கப்பட்டவர். மற்றவர் சாலையில் கண்டு எடுக்கப்பட்டவர். இருவரும் வளருகிறார்கள். கர்ணமோட்சம் நாடகத்தில் கர்ணனைக் கொன்ற அருச்சனன் ஒரு புலம்பு புலம்பி கர்ணனை ஓவர் டேக் செய்துவிடுகிறார். அதன்பின் நடிப்பதில் போட்டியாகி முதலாமவரை இரண்டாமவர் ஓவரடித்து விடுகிறார். தான் உலகமெல்லாம் சுற்றி சேர்த்துவைத்த உலக்கைநாயகன் பெயரை தட்டிப்பறித்து தேசத்தியாகி ஆகிவிடுகிறார் மற்றவர். அப்பப்போ நடிக்கிறார் நாடகத்திலும்.
தான் இந்த அளவு நடிக்க அவர்தான் காரணம் என்று தனது மானசீகத்தை வேறு கடைசியில் முன்வைக்கிறார். உன் தலையில் நீயே வாரிப் போட்டுக் கொண்ட மண்தான் நான் என்று. அதைக் கேட்டு முதலாமவர் குருகுரு என வரும் குற்ற உணர்ச்சியில் மருகிவிடுகிறார். கொலை செய்வதா? வேண்டாமா? என்ற குழுப்பத்தில் இயக்குநர் இருண்டுபேரும் துப்பாக்கியை இழுத்து பிடிக்க, என்னைக் கொல்லு கொல்லு என்று நம்மை கொல்கிறார்கள். கடைசியில் இரண்டாமவர் செத்து (நாட்டுக்காக அல்ல, கவனிக்கவும் நண்பனுக்காக) தியாகியாகி, முதலாமவர் காசிக்கு போய் கங்கையில் தனது நண்பனின் அஸ்தியுடன் ஜலசமாதி அடைகிறார். இதற்கு பேக்டிராப்தான் வெள்ளகை்காரன், காந்தி, சங்கரதாஸ் சுவாமிகள், ஏ.ஆர் ரகுமான், தமிழின் நெம்பர் ஒன் நாலாசிரியர், அப்புறம் டப்பாங்குத்து (வண்டிக்குத்து வண்டியில் ஏறி குத்துவதால்), கதாநாயகி உடலில் மூக்கை உரசி உரசிப் பாடும் டூயட் எல்லாம்.
இடையில் எம்ஜியார் போல் அல்லது தமிழ் காதல் சினிமாவின் எம்ஜியாரைசேஷன் (இந்த பதம் நண்பர் அபுல்கலாம் ஆசாத்திடம் இருந்து கடன் பெற்றது நன்றியுடன்) சூத்திரங்களைப்போல, சிப்பாயாக இருந்தால் இளவரசியை காதலி, கண்டக்டராக இருந்தால் பஸ் ஓனர் மகளை காதலி என்பதாக நாடக நடிகர் இளவரசியை காதலித்து, நள்ளிரவில் கையை காலை ஆட்டி (அதுவும் எம்ஜியார் போல செய்ய முயன்று வருமா மற்றவர்களுக்கு அது.) தேவ் ஆனந்தை காப்பியடித்து கையை பின்னால் கட்டிக் கொண்டு காலை எக்ஸ் வடிவில் முன்னே பின்னே வைத்து ஆட்டியே தமிழகத்தில் நாயகனாக ஓட்டிய ரவிச்சந்திரன் போல காதல் பாடல் காட்சிகளில் சித்தார்த் முயன்றிருக்கிறார். மீசையுள்ள ரவிச்சந்திரன் மீசையில்லா எம்ஜியார் வேஷம் போட்டதைப் பொலிருக்கிறது.
ஆறுதல் தருவது வழக்கம்போல் உத்தம வில்லனாக வரும் பிரிதிவிராஜ். அவர் தனது பாத்திரத்தை சரியாக செய்து உள்ளார். ஆனாலும் அவருக்கு ஸ்ரீபார்ட் தந்திருப்பது நடிகை ராதிகாவை வைத்து இப்போ அலைகள் ஓய்தில்லை எடுத்தால் அதில் வரும் ஸவீட் சிக்ஸ்டி ராதாவாக ராதிகா வேடமிட்டதைப்போல உள்ளது. (அவர் இப்போ சின்னத்திரையில் வாணி ராணியாக இப்படித்தான் போட்டு பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறார். ஜீன்ஸ் பட ராதிகாவாக ஒரு கிராமத்து அப்புராணி வேடம். அது ராணியா? வாணியா? என் தங்கையிடம்தான் கெட்டு சொல்லவேண்டும். அவருக்குத்தான் டீவி சீரியல்கள் அத்துப்படி. சரியாகத் தெரியவில்லை. சகிப்பின் உச்சத்திற்கு கொண்டு போகிறார் நம்மை.)
இரண்டாவதாக வந்து முதலாவதாக ஆன காவிய…த் தலைவன் சித்தார்த் காந்தி குல்லா போட்டு தேசத்திற்காக பாட்டாக பாடித் தள்ளுகிறார். எல்லாம் ஏ. ஆர் ரகுமான் ஏற்கனவே அடித்த வீரசாகசப் பாடல் வகைதான். அவர் உச்சரிக்கும் வந்தே மாதரம் என்பது தமிழ் போலவே இல்லை. சவுகார் பேட்டை சேட்டு பேசும் தமிழ் ”வந்த்ததே மாத்தரம்” போல உள்ளது. அதென்ன இந்தியன் படத்தில் சுகன்யா எரித்த அதே ஊர் மைய கொடிகம்பத்தில்தான் இவரும் அந்நிய துணிகளை எரிக்கிறாராம். ஒருவேளை சுகன்யா அந்த கூட்டத்தில்கூட நின்றிருக்கலாம் நமது கண்ணிற்குதான் சரியாகத் தெரியவில்லை. திருட்டு விசிடி ஆன்லைனில் அந்த அளவு தெரிவதே அபூர்வம்.
இதற்கு ராஜபார்ட் ரங்கதுரை எவ்வளவோ தேவலாம். நடிகர் திலகம் தேம்பி தேம்பி அழவைத்து அம்மம்மா என்று புலம்பினாலும், தோல்வியடைந்த ராஜபார்ட் காலம் ’ஜின்ஜினுக்கா பச்சேக்கிழி சிரிக்கும்..” என்ற பாடலில் கோமாளியாக மாறியதை சித்தரித்திருப்பார்.
நாடக நடிகர்கள் தமிழ் சினிமாவை உருவாக்கினார்கள். தமிழ் சினிமா நாடக நடிகர்களை உருகுலைக்கிறது. அதான். தற்போதைய காவியத் தலைவன். நாடகத்தில் வரும் அபிநயம் என்பதை கை விரல்களை மடக்கி மடக்கி கொழுக்கட்டடைப் பிடித்து காட்டுகிறார்கள். பவளக்கொடி அருகில் அர்ச்சுணனைப் பார்த்தால் லாரல் ஹார்டி நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை.
இறுதிக்காட்சியில் பகத் சிங் நாடகம். அப்படி ஒரு நாடகம் கெள்விப்பட்டதேயில்லை இதுவரை. அதில் நாடகத் துப்பாக்கியுடன் காவல் அதிகாரியாக வேடமிட்ட பிரித்திவிராஜ் என்கிற கோமதிநாயகம் என்கிற ராஜபார்ட் பிள்ளைவாள் நண்பனை அந்த துப்பாக்கியால் சுடுகிறார். பாரேன் நாடகத் துப்பாக்கி நிஜக்குண்டை கக்கி நாயகனை வீழ்த்தி காவியம் படைக்கிறது.
காவிய சோகம் என்னவென்றால், வண்ணக்கோகிலம் வடிவாம்பாள். (கொடுமுடிக் கொகிலம் கே.பி.எஸ் நல்லவேளை இல்லை.) அடிக்கும் கூத்துகள் இதை எல்லாம் மிஞ்சியவை. (ஆனாலும் வடிவாக நடித்த நடிகை வடிவாத்தான் உள்ளார். இருந்தாலும் அந்த இளவரசியாக நடித்த நடிகை மழலைப் பேசுவது குழந்தைக் காதலை ஊக்குவிப்பதைப்போல உள்ளது.) அவர் தீவிரமாக காளியப்ப பாகவதரை காதலிக்கிறார். பாய்ஸ் கம்பெனியில் இருந்த ஒரே கேர்ள்ஸ் அவர்தான். அவரை வண்ணக் கோகிலம் வடிவாம்பளாக உலகப் புகழ்பெற வைத்த கோமதிநாயகத்தை பிடிக்காமல் காளியப்ப பாகவதரை காதலிலோ காதலி என்று காதலிக்கிறார். காதலின் நோக்கம் திருமணம் ஆகாகமலே காதலனிடம் குழந்தையை பெற்றுக் கொண்டு காளியப்ப பாகவதர் என்ற நடிகனின் வாரிசை உருவாக்கி அந்த மகாநடிகனை (மகாநடிகன் சத்யராஜ் அல்ல) அவனது நடிப்பை இந்த உலகில் தலைமுறைத் தலைமுறையாக காப்பதுதான் அவளது கடமையாம். இந்த சோகத்தை எந்த காவியத்தில் சொல்லி அழுவது. அது எப்படித்தான் இந்த சீரியஸ் இயக்கநர்களுக்கு இப்படி எல்லாம் நகைச்சுவையாக சிந்திக்க தெரியுமோ. அந்த கடல் காக்கும் கன்னியாகுமரி அம்மனுக்கே வெளிச்சம்.
இப்படியாகாத்தானே இந்த நூற்றாண்டுக்கால தமிழ் நாடக வரலாற்றை நறுக்கென்று மூன்று மணிநேரத்தில் எடுத்து, அதில் தமிழ் சினிமா “காவிய….த் தலைவர்கள்” கதையையும் கலந்து நமக்கு தந்து, அதில் குருவாகப்பட்டவர் யார் என்று நீங்களே ஊகித்தறியும் விளையாட்டையும் வைத்து, நமது அறிவை விசாலிக்கவும் விகசிக்கவும் வைத்த காவியத் தலைவன் குழவினருக்கு… கும்பிடுறேஞ் சாமியோவ்!!!
-சந்தேக சாம்பிராணி
2 comments:
சந்தேக சாம்பிராணியின் ரகளையான விமர்சனம். (விமர்சனமா?!?).
நன்றி மஞ்சூர்ராஜா...
கருத்துரையிடுக